Headlines News :

காணொளி

ஜனாதிபதி விருது

ஜனாதிபதி விருது
நமது மலையகத்துக்கு

சுவடி

தலைவர்கள் தீர்மானித்தது அன்று! மக்கள் தீர்மானிப்பது இன்று! - இரா சந்திரமோகன்


இலங்கை அரசியலில் எப்போதும் எதுவும் ஏற்படலாம் என்ற நிலையே இப்போது காணப்படுகின்றது. குறிப்பாக அரசாங்கத்திலிருந்து எதிர்க்கட்சிக்கும் எதிர்க் கட்சியிலிருந்து அரசாங்கத்திற்குமான கட்சித் தாவல்கள் பற்றிய செய்திகளை ஒவ்வொரு நாளும் பத்திரிகைகள் மூலம் அறியக் கூடியதாக உள்ளன.

இதில் ஆளுங்கட்சியிலுள்ள சிறுபான்மை கட்சி உறுப்பினர்கள் பல்வேறு நிபந்தனைகளை வைத்து கட்சித் தாவல்களை செய்கின்றனர். 2014.12.11 ஆம் திகதி மலையகத்தின் இரு பிரதான கட்சிகளான தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் மலையக மக்கள் முன்னணி ஆகியவை மலையக மக்களின் அபிலாசைகளை வெற்றி கொள்வதற்காக எதிர்க்கட்சி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்க தீர்மானித்திருப்பதாக அறிவித்து விட்டு ஆளுந்தரப்பிலிருந்து வெளியேறியுள்ளன.

இவர்களின் இந்த முடிவினால் மத்திய மாகாண சபையில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இதன் மூலம் மத்திய மாகாணத்தின் ஆளுங்கட்சி தரப்பில் நான்கு ஆசனங்கள் குறைவடைகின்றன. இதனால் அரசாங்கத்திற்கு பெரும் சங்கடமொன்றை இவர்கள் ஏற்படுத்தி இருக்கின்றனர்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸைப் பொறுத்தமட்டில் மத்திய அரசுக்கு பெரும் சவாலான நிலையினை எடுக்கக் கூடிய பாரிய பலத்தைக் கொண்டிருக்கிறது. குறிப் பாக மத்திய அரசில் இரண்டு உறுப்பினர்கள் அமைச்சராகவும், பிரதி அமைச்சராகவும் பதவி வகிப்பதோடு மத்திய மாகாணத்தில் சுமார் 08 உறுப்பினர்களும் ஊவா மாகாண சபையில் மூன்று உறுப்பினர்களும் சப்ரகமுவ மாகாணத்தில் 2 உறுப்பினர்களும் என சுமார் 13 மாகாண சபை உறுப்பினர்களையும் பிரதேச சபைகளை பொறுத்தமட்டில் அம்பகமுவ, நுவரெலியா, கொத்மலை, நுவரெலியா மாநகர சபை, தலவாக்கலை லிந்துலை நகரசபை, பதுளை மாவட்டத்தில் சில பிரதேச சபைகளில் இவர்கள் பலமிக்கவர்களாக இருக்கின்றனர்.

எனவே, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆட்சி அதிகாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருக்கிறது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை எனலாம்.

வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள சிறுபான்மை கட்சிகள் தம்முடைய பலத்தினை அந்த சமூகம் சார்ந்து பயன்படுத்தியுள்ளமையை வரலாற்றில் காணலாம். அது வெற்றியளித்ததாகவோ அல்லது தோல்வியடைந்தாகவோ இருக்கலாம். ஆனால் அவர்களின் நிலைப்பாடு அந்த சமூகம் சார்ந்ததாகவே இருந்தது. இருக்கும். குறிப்பாக 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் அவர்கள் தற்போதைய ஜனாதிபதிக்கு எதிராகவே தமது வாக்குகளை பயன்படுத்தியிருந்தனர். எனினும் அவர்கள் செல்வாக்கு குறையவில்லை. குறிப்பாக இன்று வரையும் இலங்கை அரசாங்கம் அவர்களை தமது அரசாங்கத்தின் பங்காளியாக்கிக்கொள்ள பாரிய முயற்சிகளை எடுத்து வருகின்றது என்பதோடு யுத்தத்திற்கு பின்னர் வடக்கு, கிழக்கு மாகாண அபிவிருத்திக்காக சுமார் 6,800 கோடி ரூபாக்களை செலவிட்டுள்ளது. எனினும் இவர்கள் ஆளுங்கட்சியில் இல்லை. 1978 ஆம் ஆண்டு முதல் இன்று வரை எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கிறார்கள் என்பது முக்கியமானது.

ஆனால், மலையகத்தின் அரசியல் இதற்கு எதிர்த்திசையிலே உள்ளது. குறிப்பாக 1972 ஆம் ஆண்டு முதல் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் எந்தக் கட்சி ஆட்சி அமைக்கிறதோ அதனோடு ஒட்டிக்கொண்டு அரசியல் நடத்தி வருவதோடு, கட்சி மாறுதல்களையும் செய்து வருகின்றது. இது மலையகத்தின் ஏனைய கட்சிகளுக்கும் பொருந்தும். அவர்களும் இதே பாணியையே பின்பற்றுகின்றமையை காணலாம்.

இதற்கு இவர்கள் சொல்லும் காரணம் என்னவெனில், அரசாங்கத்ததோடு இருந்தால் மாத்திரமே மலையக மக்களுக்கு அபிவிருத்திகளை செய்ய முடியும் என்பதாகும்.

தற்போதைய நிலையில் மலையக மக்கள் முன்னணி தொழிலாளர் தேசிய சங்கம் என்பன ஆளுங்கட்சியில் இருந்து எதிர்க்கட்சிக்குத் தாவி தற்போது அரசாங்கத்தை தூற்றத் தொடங்கி விட்டன.

அதேநேரம் மலையக மக்கள் முண்ணனியின் தலைவர் திருமதி சாந்தினிதேவி யார் எதிர்த்தாலும் தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கே ஆதரவு வழங்கப்போவதாக 19.12.2014 அன்று அறிவித்துள்ளார். இவருக்கு பலம் இருக்கிறதா இல்லையா என்பது வேறு விடயம். அமரர் சந்திரசேகரனின் மறைவுக்குப் பின்னர் அவரை கெளரவப்படுத்தும் முகமாகவே இவருக்கு கட்சி தலைவர் பதவி வழங்கப்பட்டது. அவ்வேளையில் கட்சி அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கியதால் ஜனாதிபதியின் ஆலோசகராக அவருக்கு பதவி வழங்கப்பட்டு சில சலுகைகளும் வழங்கப்பட்டன. வழங்கப்படுகின்றன. இதனை இழக்க இவர் விருப்பம் இல்லாதவராகவே காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

மறுப்புறம் தொழிலாளர் தேசிய சங்கத்திற்கு திடீர் ஞானம் பிறந்தது. முந்தியவாரம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஹவுக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்து விட்டு அடுத்த வாரம் எதிரணிக்கு ஆதரவு வழங்குவதாக கூறி கட்சித் தாவல் செய்து இருக்கிறார்கள். எனினும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இதுவரை மஹிந்த ராஜபக்ஷவுக்கே ஆதரவு வழங்குவதாக குறிப்பிட்டுள்ளதோடு மக்கள் மத்தியில் பாரிய பிரச்சாரங்கள் எதனையும் மேற்கொள்ளாமல் மோட்டார் சைக்கிள் பவனிகளை மட்டும் முன்னெடுத்து வருகின்றது.

மலையக மக்கள் முன்னணியும் தொழிலாளர் தேசிய சங்கமும் மலையக மக்களுக்கு காணி மற்றும் வீட்டுரிமை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற தமது கோரிக்கையை எதிரணி ஏற்றுக்கொண்டுள்ளது. இதனால் எதிரணி பொது வேட்பாளருக்கு ஆதரவை வழங்க முன்வந்தோம் என குறிப்பிட்டமையை ஊடகங்கள் வெளிப்படுத்தியிருந்தன. சரியோ தவறோ ஒப்பீட்டளவில் மலையகத்தில் தமக்கு இருக்கும் செல்வாக்கை பயன்படுத்தியுள்ளனர்.

ஆனால் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பலத்தினை பார்த்தால் மூன்று மாகாண சபைகளையும் (மத்திய ஊவா சப்பிரகமுவா) 05 வரையான உள்ளூராட்சி கபைகளினதும் ஆட்சி அதிகாரத்தை தீர்மானிக்கும் சக்தி காணப்படுகிறது என்பது மேலுள்ள அட்டவணையை அவதானிக்கும் போது தெளிவாகும். இந்நிலையில் அரசாங்கம் எதிர்கொள்ளும் சவாலுக்கு இவர்கள் பிரதமர் பதவியை கேட்டாலும் கொடுக்கக்கூடிய நிலையே காணப்படுகின்றது. இவர்களின் முடிவு அரசாங்கத்தின் எதிர்காலத்தையே ஆட்டிப்படைக்கும் அளவுக்கு வலுவானது என்பதை இவர்களும் நன்கு அறிவார்கள். ஆனால் இவர்கள் அரசாங்கத்திற்கு எவ்வித நிபந்தனைகளும் இன்றி ஆதரவளிப்பானது மக்களின் நலன் மீது அக்கறை கொள்ளவில்லை என்பதையே காட்டுகிறது.

அது மட்டுமின்றி எந்த கட்சி ஆட்சி அமைத்தாலும் அவர்கள் பக்கம் சார்ந்து தொழிற்படுவது இவர்களின் எழுதப்படாத சட்டமாகவும் உள்ளது. இதற்கு கடந்த காலம் சான்று பகரும். எனவே மக்களை பகடைக்காய்களாக பயன்படுத்தும் இந்நிலை மாறவேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும். தேர்தலுக்கு இன்னும் இரண்டு வாரங்கள் இருப்பதால் மக்கள் நலனில் அக்கறை கொண்டு மலையக மக்களின் உரிமை சார்ந்த விடயங்களுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலான நிபந்தனைகளை முன்வைக்க முடியும்.

2014 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் மலையக இளைஞர் யுவதிகளுக்கு ஆசிரியர் உதவியாளர் தொழிலை பெற்றுக்கொடுப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டதோடு அதற்கான பரீட்சைகளை 28.12.2014 அன்று நடத்தவுள்ளதாக தெரிய வருகிறது. இதுவும் ஒரு அரசியல் நாடகமா என்றே கேட்க தோன்றுகிறது. ஏனெனில் அடுத்த வருட வரவு செலவு திட்டத்தில் 50000 ஆசிரியர் உதவியாளர்களை சேர்த்துக்கொள்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதோடு அவர்களுக்கு மாதாந்தம் 9500 மாதாந்த கொடுப்பனவாக வழங்கப்படவும் முன்மொழியப்பட்டுள்ளது. எனினும் மலையக இளைஞர் யுவதிகளுக்கு வெறும் 6000 கொடுப்பனவாக வழங்ப்பட உள்ளது என்பதை கருத்திற் கொள்ள வேண்டும்.

இதன்மூலம் எமது இளைஞர், யுவதிகளை குறைந்த ஊதியத்திற்கு உழைப்புச் சுரண்டலை செய்ய இவர்கள் முற்படுகின்றார்கள். மேலும் தற்போதைய ஜனாதிபதி தோல்வியடைந்தால் இந்த தொழில்வாய்ப்பு எமக்கு கிடைக்காது என்ற பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது.

அண்மையில் நடந்த கருத்தரங்குகளில் இதனை வலியுறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. எனினும் இது பெரும் தவறான கூற்று. காரணம் ஜனாதிபதி பதவி விலகினாலும் பாராளுமன்றம் தொடர்ந்தும் இரண்டு வருடங்களுக்கு செயற்பட உள்ளதோடு வரவுசெலவு திட்டத்தை பாராளுமன்றமே ஏற்றுக்கொண்டுள்ளதே தவிர ஜனாதிபதி அல்ல என்பதை இளைஞர் யுவதிகளும் புரிந்து கொள்ள வேண்டும்.

மேலும் தற்போதைய நிலையில் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள மொத்த வாக்குகளில் 1.5 மில்லியன் வாக்குகளை ம.ம.மு. மற்றும் தொ.தே.ச. உள்ளிட்ட ஏனைய சிறுபான்மைக் கட்சிகள் கொண்டுள்ளதோடு நடுநிலையான வாக்குகள் என்று சுமார் 50000 வரை காணப்படுகின்றது. இந்நிலையில் நுவரெலியா மாவட்டத்தில் பொது எதிரணி வேட்பாளருக்கு அதிகளவிலான வாக்குகள் கிடைக்கக்கூடிய சாத்தியக்கூறுகளே காணப்படுவதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதேவேளை சில மலையகத் தலைமைகள் மக்களை மிகவும் கீழ்த்தரமாக பேசுவதோடு எதிர்த்தரப்பு கட்சித் தலைமைகளையும் தகாத வார்த்தைகளால் விமர்ச்சிக்கின்ற போக்கையே கடைப்பிடிக்கின்றன.

இது மலையக மக்களின் நாகரீக அரசியலுக்கு பெரும் பின்னடைவையே ஏற்படுத்தும். எதிர்காலத்தில் இவ்வாறான தலைமைகளை வெளியேற்றவும் மக்கள் தயங்கமாட்டார்கள் என்பதையும் இங்கு குறிப்பிடுவது பொருத்தமாகும்.
இரா சந்திரமோகன்.


தரம் 6 9 வரையான வகுப்பு மாணவர்களின் இடைவிலகல்களுக்குக் காரணம் என்ன? - இரா. சிவலிங்கம்


பெருந்தோட்ட பிரதேச பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களின் புலமைப் பரிசில் பரீட்சைக்குப் பின் வருகின்ற தரம் 6  9 வரையான வகுப்புக்களில் இவர்களின் கற்றல் நடவடிக்கைகளானது மந்த நிலையில் செல்வதைக் காணலாம். இதன் காரணமாக தரம் 11இல் நடைபெறுகின்ற க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற முடியாதுள்ளனர். அநேகமான மாணவர்கள் தாய் மொழியில் கூட சித்தியடையத் தவறி விடுகின்றனர். சிலர் அனைத்துப் பாடங்களிலும் சித்தி பெறத் தவறி விடுவதை பல பாடசாலைகளிலும் காணலாம். 2013 ஆம் ஆண்டு பரீட்சைப் பெறுபேறுகளின்படி 11,000 மாணவர்கள் கணித பாடத்தில் சித்தியடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு பல்வேறு மட்டங்களிலிருந்தும் பல காரணங்கள் வருடாந்தம் சுட்டிக் காட்டப்படுகின்றன.

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கு மிகவும் கரிசனையுடனும் அர்ப்பணிப்புடனும் மாணவர்களை தயார்படுத்தும் ஆரம்ப பிரிவு ஆசிரியர்களின் சேவையானது பாராட்டத்தக்கது. இன்றைய கால கட்டத்தில் பெரும்பாலும் இந்த ஆசிரியர்களை பல்வேறு மட்டங்களிலிருந்தும் ( பாடசாலை, பெற்றோர்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள், அரசியல் பிரதிநிதிகள், சமூக நலன் விரும்பிகள், சங்கங்கள், மன்றங்கள், வங்கிகள், பழைய மாணவர்கள்) பாராட்டப்படுகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

புலமைப் பரிசில் பரீட்சைக்குப் பின்னர் இம் மாணவர்கள் தரம் 6 – 9 வகுப்புக்களில் ஆரம்பத்தில் இருந்த கவனிப்பும், ஊக்குவிப்பும், தயார்படுத்தும் நடவடிக்கைகளும் சகல பாடசாலைகளிலும் தொடர்ச்சியாக நடைபெறுகின்றதா? எனப் பார்த்தால் இதில் பல குறைபாடுகளும், தவறுகளும் பல்வேறு மட்டங்களிலும் காணப்படுகின்றன என்பதை அவதானிக்கலாம்.

இவ்வகுப்பு மாணவர்களிடம் இக்காலத்தில் இயல்பாக ஏற்படுகின்ற பருவ மாற்றங்கள், உடலியல் மாற்றங்கள் போன்றன இவர்களை புதிய உலகிற்கு இட்டுச் செல்கின்றன. இவ்வாறான சூழ்நிலையில் தான் கவனிப்பும், பாதுகாப்பும், வழிகாட்டல் ஆலோசனையும் மிக அதிகமாகத் தேவைப்படுகின்றன. எனவே இவ்வகுப்பு மாணவர்களின் நடத்தை பிறழ்வாக அமையாதபடி ஆலோசனை, வழிகாட்டல் வழங்க வேண்டியது பெற்றோர்களினதும் ஆசிரியர்களினதும் கடமையாகும்.

இப்பருவத்திலேயே அதிகமான சகபாடிகள் தொடர்பும் சினிமா, தொலைக்காட்சி, வானொலி, எதிர்பாலர் கவர்ச்சி, புதிய விடயங்களில் ஈடுபாடு, இணையப் பாவனை, முகப்புத்தகப் பாவனை போன்றன ஏற்படுகின்றன. இதனால் இவர்களை கல்வி சார் செயற்பாடுகளுக்கு கொண்டு வருவது சற்று கடினமான காரியமாகும்.

இன்றைய வாழ்க்கைச் செலவு போராட்டத்தில் பெருந்தோட்டப் பெற்றோர்களே மிக அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இவர்களிடம் பொதுவாகக் காணப்படும் பிரச்சினைகளை பின்வருமாறு வரையறுக்கலாம்.
வறுமை, பொருளாதாரப் பிரச்சினை, மேலதிக வருமானம் இன்மை, வீட்டு வசதியின்மை வீட்டுச் சூழல் (லயன்  அமைப்பு முறை) மின்சார வசதியின்மை, போக்குவரத்துப் பிரச்சினை, சிறந்த ஆலோசனை வழிகாட்டல் இன்மை, கற்றலில் போட்டியின்மை, வறுமை காரணமாகப் பிள்ளைகளை வீட்டு வேலைக்கு அனுப்புதல், குறிப்பாக பெண் பிள்ளைகளை பிள்ளைப் பராமரிப்பிலும், வீட்டு வேலைகளிலும் ஈடுபடச் செய்தல், பூப்பெய்தும் காலத்தில் நீண்ட நாட்களுக்கு பாடசாலைக்கு அனுப்பாத நிலை, இதனால் பாடசாலை வரவு குறைவுறுதல், பிள்ளைகளின் மந்தப்போசணைக் குறைபாடு, சுயமாக பிள்ளைகளைப் படிப்பதற்குத் தூண்டாமை, சிறுவர்களின் அடிப்படை உரிமைகள் பெற்றோர்களாலும், ஆசிரியர்களாலும் மீறப்படுகின்றமை ஆசிரியர்களின் கற்பித்தல் குறைபாடுகள் போன்ற பல பிரச்சினைகளை முன் வைக்கலாம்.

இருப்பினும் இவற்றில் இம்மாணவர்களை மீட்டெடுக்க வேண்டும். இது ஆசிரியர்களினதும் பெற்றோர்களினதும் கைகளிலேயே தங்கியுள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது. பெற்றோர்களுடைய கவனிப்பு மிக அதிகமாக இப் பருவத்திலேயே தேவைப்படுகின்றது. பிள்ளைகளைத் தொடர்ச்சியாக கவனிக்க வேண்டும்.

பாட ஆசிரியர்களோடு தொடர்புகளை வைத்துக் கொள்ள வேண்டும். அவர்களுக்கு கற்றலில் ஈடுபாடு அதிகரிக்கக் கூடிய வகையிலான செயற்பாடுகளை பாட ஆசிரியர்களும், வீடுகளிலும் வழங்க வேண்டும். உதாரணமாக சுய ஆக்கச் செயற்பாடு, விளையாட்டு, கணினி, வரைதல், கலை நிகழ்ச்சி, இசை, எழுத்து வாசிப்பு, ஓவியம், பொழுது போக்கு, வீட்டுத் தோட்டம் அமைத்தல், அலங்காரத் தாவரங்கள் வளர்த்தல், செல்லப்பிராணிகள் வளர்த்தல் போன்ற துறைகளில் ஈடுபடச் செய்வது மிகச் சிறந்ததாகும். இம் மாணவர்களின் இடை விலகளுக்கு மாணவர்களிடத்திலும் சில குறைபாடுகள் காணப்படுகின்றன.

உதாரணமாக தேடுதல் குறைவு, கற்றலில் ஆர்வமும் முயற்சியும் குறைவு, வீட்டுக்கும் பாடசாலைக்குமிடையிலான அதிக தூரம், வீட்டுச் சூழல் பெற்றோர்கள் வெளிநாட்டில் இருத்தல், போட்டியான ஒரு சூழல் தோட்டப் பிரதேசத்தில் இன்மை, பெற்றோர்களின் வறுமை நிலை, போசணைக் குறைபாடு, தேவையான கற்றல் உபகரணங்கள் கிடைக்காமை, பாடசாலை வரவு குறைவு, வீட்டில் தொடர்ந்து படிக்காமை, பாடத்திற்கான துறைசார் ஆசிரியர் பற்றாக்குறை, வகுப்பில் பாடத்தில் கவனமின்மை, பாடசாலை கவர்ச்சிகரமாக இன்மை, வகுப்பறை சூழல் போன்ற விடயங்களை மாணவர்கள் பக்கம் குறிப்பிடலாம்.

தரம் 6–9 வரையான காலப்பகுதியில் மாணவர்களின் இடைவிலகல்களுக்கான காரணங்களை அனைத்துப் பக்கமும் பார்க்க வேண்டும். குறிப்பாக மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், பாடசாலைச் சூழல், வகுப்பறைச் சூழல் என வகுத்து நோக்க முடியும். பெற்றோர்கள், மாணவர்கள் பற்றியும் ஏற்கனவே குறிப்பிடப்பட்டுள்ளதால் இங்கு ஆசிரியர்கள் பற்றி குறிப்பிட வேண்டும்.

புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தயார்படுத்தும் ஆசிரியர்களுக்கும் க.பொ.த சாதாரண தரம், க.பொ.த உயர்தரம் போன்ற வகுப்புக்களில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்குப் பெற்றோர்கள் மத்தியிலும் சமூகத்திலும் ஓர் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. உதாரணமாக புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தயார்படுத்தும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடைபெறுகின்றது. இதேபோல் தரம் 11 தரம் 13 வகுப்பாசிரியர்களுக்கும் ஏதோ ஒருவகையில் பாராட்டுக்களும் ஊக்குவிப்புக்களும் வழங்கப்படுகின்றன.

ஆனால் தரம் 6–9 வரையான வகுப்புக்களில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு இக்காலப்பகுதியில் அங்கீகாரம் வழங்கக் கூடிய திட்டமெதுவும் இதுவரை காலமும் காணப்படாமை ஒரு பாரிய குறைபாடாக உள்ளது.

தரம் 6–9 வரையான வகுப்புகளுக்கு அரசாங்க பொதுப் பரீட்சைகள் எதுவும் நடத்தப்படுவதில்லை. இதுவும் மாணவர்களின் அடைவு மட்டப் பரீட்சைக்கு ஒரு காரணமாகும். எனவே தேசிய ரீதியில் ஒரு பொது பரீட்சை நடத்தப்பட்டு சகல பாடங்களிலும் 40 க்கு மேற்பட்ட புள்ளிகளை பெறும் மாணவர்களை தெரிவு செய்து மேல் வகுப்புக்களுக்கு அனுமதிக்க வேண்டும். மாணவர்களின் இடைவிலகல்களைக் குறைக்கக் கூடிய வேலைத் திட்டங்களை முன்னெடுப்பதற்கு ஆசிரியர்களின் வழிகாட்டல், ஆலோசனைகளை மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் வழங்க வேண்டும். வகுப்பறைச் சூழலானது மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளுக்கு ஏற்றதாக இருக்க வேண்டும். 6–9 வரையான வகுப்புக்கள் அநேக பாடசாலைகளில் ஒரு திறந்த வகுப்பறையாக உள்ளது. இதனால் ஆசிரியர்கள் கற்பிக்கும் போது பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியுள்ளது.

ஆசிரியர்கள் எதிர்கால தேவையை உணர்ந்து தியாக சிந்தனையோடு வேலை செய்ய முன்வர வேண்டும். இடைவிலகும் மாணவர்கள் மீண்டும் இச்சமூகத்திற்கே செல்வதால் இச்சமூகமானது பின்தள்ளப்படுவதற்கு இது ஒரு காரணமாக அமைந்து விடுகின்றது. இவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமையாமைக்கு இந்தக் குறிப்பிட்ட வகுப்புக்களில் விடும் தவறுகளும் பிழைகளும் கூட வாய்ப்பாக அமைந்து விடலாம்.

ஆர்வத்தோடு வந்து கற்கக்கூடியவாறு பாடசாலைச் சூழல் அமைய வேண்டும். ஆசிரியர்களின் திறமைக்கேற்ப ஊக்குவிக்க வேண்டும்.

ஆசிரியர் தொழிலுக்கான அங்கீகாரமும், சலுகைகளும், ஊக்குவிப்புக்களும் வழங்கப்படும் போது ஆசிரியர்களது சேவையானது மிகப் புனிதத் தன்மையாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஓர் ஆசிரியரால் உருவாக்கப்பட்ட பலர் இன்று பொருளாதார ரீதியாக நல்ல நிலையிலும் மிக உயர்ந்த தொழில்களிலும் இருக்கின்றார்கள்.குறிப்பிட்ட ஆசிரியர் மட்டும் தொடர்ந்து அதே நிலையில் இருப்பது வேதனைக்குரிய விடயமாகும்.
நன்றி - வீரகேசரி - 28-12-2014

''சமூகத்துக்கு தலைமை தாங்க புத்திஜீவிகள் முன்வர வேண்டும்" - மு.சிவானந்தன்


இலங்கை அரசியலில் தற்போதைய நிலையில் சிறுபான்மைத் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் முக்கிய பாத்திரம் வகிக்கின்ற தேவை இருக்கின்றதென்றால் யாரும் இக்கருத்துக்கு முரண்பட முடியாதவர்களாகத்தான் இருக்க முடியும்.

இந்த வகையில் மலையக மக்களும் இலங்கை அரசியலில் ஜனாதிபதியை தெரிவு செய்வதில் பிரதானமான பாத்திரம் வகிக்கின்ற நிலைமை தோன்றியுள்ளமை அண்மைய கால அரசியல் நகர்வுகள் தெளிவுபடுத்துவதனை காண முடிகின்றது.

செருப்பினை வைத்தாலும் மலையக மக்கள் வாக்களிப்பார்கள் என்ற ஒரு நகைப்புக்கிடமான எண்ணம் ஆரம்ப காலத்தில் அம் மக்கள் பற்றிய ஒரு தவறான கருத்து இருந்தமை வரலாற்றில் கறைபடிந்த ஒரு சான்றாகும்.
காலம் செல்லச் செல்ல அம் மக்கள் விழிப்புணர்வு பெற்று தற்போது தாங்களாகவே போராடுகின்ற முடிவுகள் எடுக்கின்ற நிலைக்கு வந்துள்ளமையானது அம்மக்களுடைய அரசியல் முதிர்ச்சியினையும் அவர்களின் சந்ததியினரின் எதிர்காலம் பற்றி சிந்திக்கின்ற தன்மையும் இன்று வெளிச்சத்திற்கு வந்திருக்கின்றது. அண்மையில் கட்சி தாவிய இரண்டு முன்னாள் பிரதி அமைச்சர்களின் நிலைமை இதற்கு சான்று பகர்கின்றது.

இங்கு எதனை கோடிட்டு காட்டலாம் என்றால் மக்கள் தன்னிச்சையாக எடுத்த ஏகோபித்த முடிவானது அவர்களின் எதிர்கால அரசியலை சிந்திக்க வைத்துள்ளமையை குறிப்பிடலாம்.

மலையக மக்களை அடகு வைத்து அரசியல் செய்கின்ற காலம் செய்த காலம் இன்று மலையேறி விட்டது. பணத்திற்காக சோரம் போனவர்களையும் மலையக மக்கள் தண்டிக்கத்தான் செய்வார்கள். இதற்கு காலம் தொலைவில் இல்லை.

தெரிந்தோ தெரியாமலோ இன்று தொடர்பு சாதனங்களினூடாக தங்களுடைய அரசியல் இருப்பு தொடர்பாகவும் தங்களுடைய வாழ்வியல் தேவைகள் தொடர்பாகவும் உணரத் தலைப்பட்டுள்ளார்கள் என்பதை அண்மைய வெகுஜன போராட்டங்கள் நிரூபிக்கின்றன.

இன்று மலையக மக்கள் மத்தியில் தொடர்பு சாதனங்களின் பயன்பாடு அவர்களின் வாழ்க்கை மேம்பாடு தொடர்பாக சிந்திக்க வைத்துள்ளது என்றால் அதனை யாரும் மறுக்க முடியாது. பொருளாதாரத்தில் பின்னடைவுகளை சந்தித்தாலும் தம்முடைய எதிர்கால சந்ததியினரைப் பற்றி சிந்திக்கின்ற தார்மீக கடமையும் எண்ணமும் இன்று வீச்சுப் பெற்று வருகின்ற நிலைமை வரவேற்கத்தக்க விடயமாகும்.

எமது மக்களின் ஏமாந்த நிலையினை ஒரு பலவீனமாக கண்டு தலைவர்களாக நினைப்பவர்கள் அவர்களை இன்னும் ஏமாற்ற நினைக்கலாமா? மாடி லயன் குடிமனைத் திட்டம் என்பது மேலும் அவர்களை ஒரு இருண்ட யுகத்திற்கு அழைத்துச் செல்லும். 7 பேர்ச் காணியில் 7 குடும்பங்களுக்கு ஒரே தொடர் மாடியில் 7 மாடி வீடுகள் கட்டப்பட்டுள்ளதனை நாம் காணலாம். அதன்படி ஒரு குடும்பத்திற்கு 1 பேர்ச் காணி அளவே ஒதுக்கப்பட்டுள்ளது. ஆக ஒரே தடவையில் 7 பேருக்கு 7 பேர்ச் காணியே 7 குடும்பங்களுக்கும் போதுமானதாக நினைத்து மாடி வீட்டு லயன் அமைக்கப்பட்டுள்ளமை புலனாகின்றது. தற்போதைய நிலையில் நினைவாலயம் கட்டுவதற்கு கூட 1 பேர்ச் பயன்படுத்துவதில்லை.

மலையக மக்களை ஏன் இவர்கள் இப்படி ஏமாற்ற வேண்டும்? இப்படி ஏமாற்றுவதன் நோக்கம் தான் என்ன? என்பது ஒரு புரியாத புதிராக இருக்கின்றது.
ஒவ்வொரு தோட்டத் தொழிலாளியும் ஒரு மாதத்திற்கு தமது வேதனத்தில் 150 ரூபாவை சந்தாப்பணமாக செலுத்துகின்றார். ஆக ஒரு தொழிலாளி ஒரு வருடத்திற்கு ரூபா 1800 ரூபா சந்தாவாக செலுத்துகின்றார். எனவே ஒரு தொழிற்சங்கத்தில் ஆக குறைந்தது 10000 பேர் இருந்தால் ஒரு வருடத்திற்கு 1 கோடியே 80 இலட்சம் ரூபா தொழிற்சங்கத்தின் வருமானம் ஆகும். எனவே தொழிற்சங்கங்கள் பிழைப்பு நடத்துவதற்கு இவர்களுடைய பங்கு எவ்வளவு அளப்பரியது என இந்த பணத்தொகை நிரூபிக்கின்றது அல்லவா.

மலையக வாழ் புத்திஜீவிகள் ஒரு சிவில் அமைப்பினை உருவாக்கி பாரம்பரிய அரசியலினை உடைத்தெறிந்து சிறந்த தலைமையினை வழங்குவதற்கு முன்வர வேண்டும். இன்றைய புத்திஜீவிகள் பலருக்கு மலையகம் பாரிய பங்களிப்புச் செய்துள்ளமையை அவர்கள் மறுக்க முடியாது. ஏனென்றால், மலையக மக்களுடைய வாழ்வியல் முறைமை பற்றிய ஆய்வுகள் தொடர்பான விடயங்கள் அவர்களை ஒரு உயரிய நிலைக்கு கொண்டு சென்றிருக்கலாம். புத்திஜீவிகளும் ஆய்வுகளுடன் கட்டுரைகளை எழுதி அவர்களின் அடை மட்டத்திற்கு அதனை ஒரு ஆதாரமாகவும் வரலாற்றில் அவர்களுடைய பெயர் பதிவிற்காக மட்டும் வாழ்ந்து விட்டுப்போகக் கூடாது.

இன்று மலையகத்தில் வெகுஜனப் போராட்டத்திற்கு அடித்தளமாக மீரியபெத்த மண் சரிவில் உயிர் நீத்தவர்கள் உயிரூட்டியுள்ளார்கள். அவர்களின் ஆத்ம சாந்திக்காக ஒவ்வொரு மலையக மைந்தனும் தனக்குள் ஒரு சபதம் எடுத்து மலையக மக்களின் வாழ்வில் ஒரு மறுமலர்ச்சியினை தோற்றுவிக்க பங்களிப்பு செலுத்த வேண்டும்.

எம்மைப் பயன்படுத்தி சுகபோக வாழ்க்கை வாழ்பவர்களுக்கு உரிய பாடம் படிப்பிக்க வேண்டும். எம் மக்களுடைய வரலாறு தெரியாத, பிரச்சினைகள் தெரியாத எம் சமூகத்திற்கு பொருத்தமில்லாத ஒருவர் எம்மை வைத்து பிழைப்பு நடத்துவதற்கு உடன்படுவது எம்மை நாமே தற்கொலை செய்து கொள்வதற்கு சமனாகும்.

நாம் ஒற்றுமைப்பட்டவர்களாக எதற்கும் விலை போகாதவர்களாக வாழ வேண்டும். எம்மை நாம் இன்னும் சரியாக அடையாளப்படுத்த முடியாத கையாலாகாத சமூகமாகவே இருக்கின்றோம். மலையக மக்களா? இந்திய வம்சாவளி மக்களா? இலங்கைத் தமிழர்களா? மலையக மக்கள் ஒரு தேசிய இனமா? என்று எதனைத் தெரிவு செய்து படிவங்களில் நிரப்புவது என்பது இன்னும் ஒரு கேள்வி குறியாகத்தான் இருக்கின்றது.

இன்னும் தகரத்திற்கும் கதிரைகளுக்கும் இசைக்கருவிகளுக்கும் கோயில் பொருட்களுக்குமே அதிகமான பாராளுமன்ற மாகாண சபை உறுப்பினர்களும் தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதிகளிலிருந்து நிதியினை ஒதுக்குகின்றனர். இதுதான் மலையக அரசியலா? தேர்தல் காலம் என்றால் அப்பாவி இளைஞர்கள் கலர் கலர் கட்சி உடைகளுக்கு மயங்கி ஏமாந்து ஒரு உதவி (துணை) திரைப்பட நடிகர்களாக மாறி விடுகிறார்கள். அரசியல் தெளிவு முதிர்ச்சியில்லாத தலைமைத்துவமே இன்று மலையகத்தில் இருக்கின்றது. எனவே தலைமைத்துவம் வெற்றிடமாக இருக்கின்ற நிலைமையினையே இது புலப்படுத்துகின்றது.

படித்த சிவில் சமூகம் ஏன் பின்வாங்குகின்றது என்பது தெரியவில்லை. தான் உயர்ந்து வருவதற்கு அடித்தளமாக இருந்த மலையக மண்ணுக்கு சேவை செய்வதில் அரசியல் தீர்மானம் எடுப்பதற்கு ஏன் பின்வாங்க வேண்டும் ? எத்தனையோ தேவைகள் இன்று இருக்கின்றன என்பதனை மலையக மக்கள் உணர தலைப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு தலைமை கொடுப்பதற்கு தகுந்தவர்கள் இன்று இல்லாமையே ஒரு குறையாக இருக்கின்றது. எனவே காலத்தின் தேவை கருதி படித்தவர்களை நமது சமூகத்திலிருந்து பாராளுமன்றம் அனுப்ப வேண்டும்.

அரசியல் மக்கள் பிரச்சினைகள் தெரிந்தவர்களை நாம் தெரிவு செய்ய வேண்டும். அப்போதுதான் மலையகத்தில் மறுமலர்ச்சி ஏற்படும். எம்மை வைத்து பேரம் பேசுபவர்களின் காலம் ஓய்ந்து போய் விட்டது. தன்னை தலைவர்களாக நினைப்பவர்களின் நிகழ்காலம் இன்று அவர்களின் எதிர்காலத்தின் அரசியலில் கேள்விக் குறியாகி விட்டிருப்பதனை அறிவார்கள். எனவே, மலையக மக்கள் இந்த ஜனாதிபதி தேர்தலில் யாரைத் தெரிவு செய்ய வேண்டும் என்ற ஒரு முக்கியமான கால கட்டத்திற்கு வந்திருக்கின்றார்கள். அவர்களுக்கு இப்போது எந்த தொழிற்சங்கமும் வழி காட்ட வேண்டிய தேவையில்லை. இந்த தேர்தல் கால நகர்வுகள் எல்லோருக்கும் நல்ல தெளிவினை ஏற்படுத்தியிருக்கின்றது. தங்களை யாரும் இனி சவாரிக்காக பயன்படுத்துவதற்கு தாங்கள் தயாரில்லை என்பதனை இந்த தற்துணிவு பதிலாக எல்லோருக்கும் கிடைத்திருக்கின்றது.

நன்றி - வீரகேசரி - 28.12.2014

வடக்கு – கிழக்கு நில ஆக்கிரமிப்பில் சிங்கள பௌத்த சக்திகள் - என்.சரவணன்

“பிள்ளையான் என்னை கொல்ல விரட்டிக்கொண்டு வந்தார்.... தமிழ் தேசிய முன்னணி மூலம் எனக்கு கொலை அச்சுறுத்தல் இருக்கிறது”
இப்படி கூறியிருப்பவர் அம்பிடியே சுமனரதன தேரோ என்கிற பௌத்த பிக்கு. இவர் சமீப காலமாக சிங்கள ஊடகங்களில் ஒரு சிங்கள ஹீரோவாக ஆக்கப்பட்டுள்ளார்.

கடந்த 19 அன்று மட்டகளப்பில் ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்திற்காக ஜனாதிபதி மகிந்த சென்றிருந்தபோது சுமனரதன தேரோ சிங்களவர்களை அழைத்துக் கொண்டு சென்று கூட்டம் நடந்த இடத்துக்கு வெளியில் பெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தினார். அந்த ஆர்ப்பாட்டத்தை கலைக்க போலீசார் எடுத்த முயற்சி இறுதியில் கைகலப்பில் முடிந்தது. ஆர்ப்பாட்டாத்தில் ஈடுபட்ட ஒருவரை கட்டுபடுத்த எடுத்த முயற்சியில் அவரது உள்ளாடைகள் களைந்தது. இவை அனைத்தையும் வீடியோ எடுக்கும்படி கத்திக்கொண்டு நாளா திசைகளிலும் சுமனரதன தேரர் ஓடுகின்ற காணொளி தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தின் பதாகைகளில் சில இப்படி இருந்தன.
  • “கூட்டமைப்பின் மரண அச்சுறுத்தலுக்கு பயந்தா நீங்களும் அமைதி காக்கின்றீர்கள்”
  • “வாக்குரிமை இல்லை, நிலவுரிமை இல்லை! சிங்களவர்கள் நாங்கள் கள்ளத்தோணிகளா”
  • “நாட்டை காப்பாற்றிய ஜனாதிபதியே உங்களுக்கு வாக்களிக்க எங்களுக்கு சந்தர்ப்பம் கொடுங்கள்”
இந்த சம்பவம் குறித்து அவர் 21ஆம் திகதி நடத்திய பத்திகையாளர் மாநாட்டில் அழுதழுது உணர்வுபூர்வமாக பேட்டியளித்தார். இந்த ஊடக சந்திப்பை ஏற்பாடு செய்தது ஜாதிக ஹெல உறுமய என்பது குறிப்பிடத்தக்கது.
“ஜனாதிபதி சென்றதன் பின்னர் பிள்ளையான் என்னை கொலை செய்வதற்காக என் பின்னால் துரத்திகொண்டு வந்தார். பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்களை இந்த கூட்டத்திற்கு கொண்டு வந்திருந்தார்கள் அவர்கள் எல்லோர் முன்னிலையில் சிங்களவர்களின் ஆடைகளை களைத்த பொலிசாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும். அம்பாறையிலிருந்து மட்டகளப்பு வரை ஒரு சிங்களவரும் இல்லை. வெலிகந்தையிலிருந்து மட்டகளப்பு வரை சிங்களவர் இல்லை. நாங்கள் அதனை செய்கிறோம். எனவே இது யாரின் நிலம், யுத்தத்தோடு தொடர்புண்டா? முன்னர் எங்கிருந்தார்கள்? போன்ற கேள்விகள் எங்களுக்கு அவசியமில்லை.” என்றார்
இவர் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரால் தனக்கு மரண அச்சுறுத்தல் இருப்பதாக சென்ற மாதம் பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு ஒன்றையும் செய்திருந்தார்.

இந்த குடியேற்றத்திற்கு வறுமையிலுள்ள சாதாரண அப்பாவி சிங்கள மக்களே பயன்படுத்தப்பட்டுள்ளனர். இதன் மூலம் இது ஒரு மனிதாபிமான பிரச்சினையாக புனைந்து இதன் உள்ளார்ந்த அரசியலை திசைதிருப்பும் கைங்கரியம் நடக்கிறது. இதனாலேயே பலரால் வாய்திறந்து கதைக்க முடியாதபடி பேணுகின்றனர். மட்டகளப்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்திலும் பெண்கள், குழந்தைகள், வயோதிபர்களை பயன்படித்தி இதனை ஒரு உணர்வுபூர்வமான ஒன்றாக காட்டவே முனைந்தனர். அந்த காணொளியையும் புகைப்படங்களையும் பார்க்கும் எவருக்கும் கூட அவர்களுக்காக பரிந்துபேசவே முனைவார்கள். பேரினவாததத்தின் இந்த கபட அணுகுமுறையால் அரசியல் உள்ளர்த்தம் அடிபட்டுபோகும் என்பதே நோக்கம்.

யார் இந்த சுமனரதன தேரோ
1990ஆம் ஆண்டு மட்டக்களப்பு மங்களாராம விகாரைக்கு அவர் பொறுப்பேற்றார். சிங்கள குடியேற்றங்களை செய்கிறார் என்கிற குற்றச்சாட்டில் விடுதலைப் புலிகளால் வாகரைக்கு அழைக்கப்பட்டு எச்சரிக்கை செய்யப்பட்டிருந்தார். இன்று இவரால் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் மட்டக்களப்பில் மாத்திரம் குடியேற்றப்பட்டிருக்கிறார்கள். கிழக்கில் நில ஆக்கிரமிப்பை முன்னின்று நடத்துபவர் அவர்.

யுத்தம் முடிந்தபின் 2008ஆம் ஆண்டு கிழக்கில் பட்டிப்பளை பிரதேசத்தில் பல சிங்கள மக்களை கொண்டு வந்து பலாத்காரமாக குடியேற்றினார். அவர்களுக்கு அடையாள அட்டைகளையும், வாக்கட்டைகளையும் வழங்கும்படி அந்த பிரதேசத்து கிராமசேவகரிடம் சண்டையிட்டிருக்கிறார். சட்டவிரோதமாக குடியேற்றப்பட்டவர்களுக்கு இந்த ஆவணங்களை வழங்க முடியாது என்று மறுத்திருக்கிறார் கிராமசேவகர். சுமணரதன தேரர் விடாப்பிடியாக பிரதேசசபை, அரசியல் தலைவர்கள் போன்றவர்களையும் அனுகியிருந்தும் சாத்தியப்படவில்லை. ஆனாலும் குடியிருப்பை விஸ்தரிப்பது, பௌத்த விகாரை கட்டுவது என அவரது குடியேற்ற நடவடிக்கை தொடர்ந்தது. சமீபத்தில் மத்தியகிழக்கில் இயங்கும் சிங்கள அமைப்பான “ஹெலபிம இயக்க”த்தின் உதவியுடன் புதிய வீடுகளும், ஏனைய வசதிகளும் கட்டிக்கொடுக்கப்பட்டதாகவும் அதுபோல, கெவிலியாமடுவ, கொஸ்கொல்ல, போன்ற இடங்களிலும் பல வீடுகள் தடைகளுக்கு மத்தியில் புதிதாக அமைக்கப்பட்டதாகவும் சுமனரதன தேரர் தெரிவித்திருந்தார்.

இந்த இடைவெளியில் தமது குடியேற்றத்துக்கு சட்ட அங்கீகாரம் கோரி சகல முயற்சிகளையும் மேற்கொண்டு வந்தார். குடியேற்றப்பட்டவர்கள் அனைவரும் யுத்தத்திற்கு முன்னர் அங்கு வாழ்ந்தவர்கள் என்றும் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்தவர்கள் என்றும் காரணங்களை அடுக்கியபோதும் அவரால் போதிய ஆதாரங்களை முன்வைக்க முடியவில்லை. யுத்தத்தின் பின்னர் நிகழ்த்தப்படும் சகல திட்டமிட்ட குடியேற்றங்களுக்கும் இதே காரணத்தைத் தான் முன்வைத்து வருகிறார்கள் என்பது தெரிந்ததே. இப்போது இந்த பிரதேசங்களுக்கு பாடசாலையும், புதிய வீதிகளையும் அமைத்து தரும்படியும் கேட்டிருக்கிறார்.

இவர் பின்னர் தமக்கு ஆதரவு தேடி ஜாதிக ஹெல உறுமயவின் தயவை நாடினார். பின்னர் பொதுபல சேனாவின் அமைப்பாளராக ஆனார். 
சமீபத்தில் இந்த வீடுகளுக்கு சட்டவிரோதமாக மின்சாரம் களவாடி பொருத்தியதற்கு எதிராக நடவடிக்கை  எடுக்க அதிகாரிகள் பொலிசார் சகிதம் சென்றிருந்த போது சுமனதேரர் அந்த அதிகாரிகளையும் தாக்கி, மோசமான தூசன வார்த்தைகளால் சகலரையும் திட்டியதுடன், மின்வலு சக்தி அமைச்சர் பவித்ரா வன்னி ஆராச்சியையும் மோசமான தூசன வார்த்தைகளால் திட்டிய காணொளி பல இணையத்தளங்களிலும் சமூக ஊடகங்களிலும் வெளியாகியிருந்தது.

பொதுபல சேனாவின் ஞானசார தேரர்  ஊடக சந்திப்பொன்றில்
“இது இலகுவாக தீர்க்கப்படக்கூடிய விடயம் ஆனால் இந்த அதிகாரிகள் அதை செய்யவில்லை. சுமனதேரர் எப்படிப்பட்ட மோசமான வார்த்தைகள் பிரயோகித்தாலும் அது தகும். நானாக இருந்தால் அதைவிட மோசமாக நடந்துகொண்டிருப்பேன்.” என்றார்.
சிங்களவர்களின் நிலங்களை தமிழர்கள் கொள்ளையடிக்கிறார்கள் என்று கூறி 14.02.2012 அன்று சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தார் சுமனரதன தேரர். கருணா அம்மான் தலையிட்ட பின் அதே நாள்  அது கைவிடப்பட்டது.
சுமனரதன தேரர் மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரிவோரிடம் நிதி சேகரிப்புக்காக 2008 செப்டம்பரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தபோது அளித்த பேட்டியொன்றில் இப்படி தெரிவித்திருந்தார்.
“தமிழர்கள் தங்கள் கிராம சேவகர்களையும், அவர்களின் இனத்தை
சேர்ந்த அதிகாரிகளையும் கைக்குள் வைத்துக்கொண்டு சிங்களவர்களின் நிலங்களை தங்கள் பெயர்களுக்கு மாற்றியுள்ளனர். நாங்கள் சிங்களவர்களை குடியேற்றும்போது; கருணா அம்மானும் சில தமிழர்களை அங்கு குடியேற்றினார். நான் அவர்களையெல்லாம் அடித்துத் துரத்தினேன். இது சிங்கள பிரதேசம். அதுமட்டுமல்ல சிங்களவர்களைக் கொன்ற புலிகளின் புகைப்படங்களை தனது அலுவலக சுவரில் சுற்றிவர வைத்து விளக்கு கொளுத்துகிறார் பிள்ளையான்.”.
இப்படிப்பட்ட ஒருவர் சிங்கள பேரினவாதம் தலையில் தூக்கி கொண்டாடும் ஒரு ஹீரோ தான். ஒருபுறம் முஸ்லிம்கள் தமது சொந்த இடங்களுக்கு மீள குடியேறிய போது பொதுபல சேனா போன்ற அமைப்புகள் எப்பேர்பட்ட களேபரங்களை உண்டாக்கியிருந்தது என்பது நாடே அறியும். வில்பத்து சம்பவம் ஒரு உதாரணம் மட்டும் தான்.

சம்பிக்கவின் பாத்திரம்
“வடக்கில் இருந்து இடம்பெயர்ந்த சிங்களவர்களின் கூட்டமைப்பு” என்கிற ஒரு அமைப்பு 06.10.2014  நடத்திய கூட்டத்தில் சம்பிக்க ரணவக்க பிரதான உரையாற்றினார். இனவாதத்தை தூண்டக்கூடிய அவரது வழமையான திரிபுபடுத்தப்பட்ட கவர்ச்சிகரமான நீண்ட நேர உரை சிங்கள குடியேற்றங்களுக்கான அவசியத்தை இப்படி வலியுறுத்துகிறார்.

“71இல் யாழ்ப்பாணத்தில் 20,402 குடும்பங்கள் வாழ்ந்தனர். ஆனால் பத்தாயிரம் அளவில் மட்டுமே வாழ்ந்த முஸ்லிம்கள் இன்று முஸ்லிம் தூதுவராலயங்களை கூட்டி யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்களை மீல்குடிஎற்றுவது குறித்து கதைக்கிறார்கள். வெளிநாட்டு உதவியுடன் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் மீள குடியேற்றப்பட்டு வருகின்றனர். ஆனால் இன்று சிங்களவர்களால் இயலாமல் போயிருக்கிறது. யுத்தத்தில் நாட்டை வென்றாலும் நம்மால் நம் நாட்டில் வாழ முடியவில்லை என்பது வெட்கப்பட வேண்டிய ஒன்று. சிலர் அப்படி குடியேற்றப்பட்டபோதும் உட்கட்டமைப்பு இல்லாததால் மீண்டும் திரும்பி வர நேரிட்டிருக்கிறது. ஆனால் புதுமாத்தளினிலும், முல்லிவாய்க்காலிலும் சிங்களவர்களின் வரியில் அபிவிருத்தி செய்யப்படுகிறது. சிங்களவராக பிறந்ததினால் இன்று நந்திக்கடலில் ஒரு சிங்களவனுக்கு இறால் பிடிக்க கூட அனுமதியில்லை. இந்த இடங்களில் நமது உரிமையை நிலைநாட்டவும், நம் பிரதேசங்களை மீட்கவும் நமது மக்கள் குடியேற வேண்டும். இதற்கு அரசின் ஆதரவு அவசியம். 
கிழக்கில் திருக்கோவில் போன்ற சிங்கள பிரதேசங்களில் வன்னியசிங்கம் தமிழ் குடியேற்றத்தை ஏற்படுத்தினார். இந்தியாவுக்கு நாடுகடத்தப்பட இருந்த இந்த நாட்டுக்கு சொந்தமில்லாத ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இந்திய வம்சாவழி தமிழர்களை  வன்னியில் போய் குடியிருத்தின காந்தியம், தமிழர் புனர்வாழ்வுக் கலக்கல் போன்ற தமிழ் அமைப்புகள். எங்கள் மக்களை அங்கு வாழ விடா விட்டால் உங்கள் சொந்தங்களையும் தெற்கில் வாழ விடமாட்டோம் என்பதை கூட்டமைப்பு தலைவர்களை எச்சரிக்கிறோம்”
சிங்கள குடியேற்றங்களை ஏற்படுத்துவதற்கான சித்தாந்த பலத்தை கொடுப்பதில் கடந்த இரண்டு தசாப்தங்களாக தலைமை பாத்திரத்தை ஆற்றிவருபவர் சம்பிக்க ரணவக்க.

இன அழிப்பின் அங்கம் 
இலங்கையின் இன அரசியலைப் பொறுத்தளவில் “திட்டமிட்ட குடியேற்றம்” என்பது தமிழர்களை ஒடுக்குகின்ற ஒரு ஆயுதமாகவே காலங்காலமாக சிங்கள அரசாங்கங்களாலும், பேரினவாத தரப்பாலும் பாவிக்கப்பட்டு வந்திருக்கிறது.

யுத்தம் முடிவுக்கு கொண்டுவந்ததன் பின்னர் தமிழின அழிப்பை பேரினவாதம் வேறுபல வடிவங்களில் கட்டமைத்திருக்கிறது. முக்கியமாக அரசியல் பலத்தை சிதைக்கச் செய்வதற்கான வழிமுறைகளை முன்னெப்போதும் இல்லாத அளவு மேற்கொள்ள போதிய வாய்ப்புகள் திறந்துவிடப்பட்டிருக்கின்றன. அரசியல் பிரதிநிதித்துவத்தை குறைப்பது, சிதைப்பது, பலவீனப்படுத்துவது உட்பட அரசியல் நிகழ்ச்சிநிரலையும் திசைவழியையும் திசைதிருப்புவது வரை வெற்றிகரமாக முன்னேறி வந்திருக்கிறது. இதனை பல நிகழ்வுப் போக்குக்கூடாக அவதானித்து வந்திருக்கிறோம். பேரினவாதத்தின் இன அழிப்பு நடவடிக்கையின்  அங்கமான திட்டமிட்ட குடியேற்றங்களும் வரலாறு காணாத அளவுக்கு பல முனைகளில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த திட்டமிட்ட குடியேற்ற நடவடிக்கைகளில் இராணுவம், அரச அதிகாரிகள், அரசியல்வாதிகள், சிங்கள பௌத்த நிறுவனங்கள், பௌத்த பிக்குகள் என அனைத்து தரப்பினரும் களத்தில் இறக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு இடையில் ஒரு ஒருங்கிணைப்பு இருக்கவேண்டும் என்கிற அவசியம் கிடையாது. ஏனென்றால் பேரினவாதம் என்பது நிறுவனமயப்பட்டது. முழு அரச அதிகாரத்தையும் கொண்டிருக்கிறது. அரச அனுசரணை, ஆதரவு, ஆசீர்வாதம் அதற்கு தடையின்றி கிடைக்கிறது. எனவே அந்தந்த அங்கங்கள் அவரவர் வழியில் இந்த குடியேற்றங்களை மேற்கொள்ள முடிகிறது.

வடக்கு கிழக்கில் 247 நிரந்தர இராணுவ முகாம்கள் இருக்கின்றன. அவை பாதுகாப்பு வலயங்களாக ஆக்கப்பட்டுள்ளன. அதற்காக பலாத்காரமாக தமிழ் மக்களின் காணிகள் பறிக்கப்பட்டுள்ளன. இராணுவ முகாம் ஒன்று ஏற்படுத்தப்படுவதன் பேரில் பெரிய குடியிருப்பே நிறுவப்பட்டுவிடுகிறது. நிரந்த இராணுவ முகாம் என்பதால் அதற்கான உட்கட்டமைப்பு அனைத்தும் அத்தியாவசியமாகிவிடும். பாடசாலை, பௌத்த விகாரை உட்பட அவர்களின் அலுவல்களை கவனிக்கவென சிங்கள அரச அதிகாரிகளின் நியமனங்கள் மற்றும் அவர்களுக்கான இருப்பிட மற்றும் மேலும் உட்கட்டமைப்பு என ஒரு சங்கிலிபோல் தொடர் நிகழ்வாக ஆகிவிட்டிருக்கிறது. தமிழ் மக்கள் தமது சொந்த பிரதேசங்களில் தமது தேவைகளுக்காக தமிழில் அரச கருமங்களை பெற்றுக்கொள்வதற்கே ஒருபுறம் போராடிக்கொண்டிருக்கையில் எந்தவித சிக்கலுமின்றி திட்டமிட்டு குடியேற்றப்பட்டவர்களுக்கு எந்த தங்குதடையுமின்றி கிடைப்பது நம்மெல்லோருக்கும் தெரிந்த விடயம்.

இவற்றை சிங்கள பௌத்த பேரினவாத இயக்கங்களும், பௌத்த பிக்குகளும் நேரடியாக களத்தில் இறங்கி இந்த குடியேற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது தமிழ், முஸ்லிம் மக்களுக்கும், அதிகாரிகளுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் பெரும் தலையிடியாக ஆகியிருக்கிறது.

காவி உடை, பௌத்த மதம், பௌத்த மத ஸ்தலங்கள் என்பவற்றின் பேரால் இந்த குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படும் போது இந்த சட்டவிரோத குடியேற்றங்களையும், சட்டத்தை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் குடியேற்றங்களையும் எதிர்த்து நிற்பது என்பது இன-மத முறுகளுக்கு தூண்டிவிடப்பட்டுவிடுகிறது. இறுதியில் பேரினவாதிகளால் புலிகளாக சித்திரிக்கப்படுவதும், தனித் தமிழ் ஈழ முயற்சி என்றும், சிங்கள நாட்டில் சிங்களவர்களுக்கு வாழ வழியில்லை என்றும் பெரும் பிரச்சாரமாக முடுக்கிவிடப்படுகிறது. இதற்குப் பயந்தே அனைத்து தமிழ் முஸ்லிம் சக்திகளும் பின் வாங்கி பதுங்கும் போக்கை காண்கிறோம்.

சமீப காலமாக தமிழ் பிரதேசங்களில் அகழ்வாராய்ச்சி என்கிற பெயரில் அவை சிங்கள பிரதேசங்கள் தான் என்று நிறுவுவதற்கு பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. அதுபோல பல தமிழ் பிரதேசங்களின் பெயர்கள் மாற்றப்பட்டுவருகின்றன. வடக்கில் சிங்கள குடியேற்றங்களை நிறுவி அதற்கு “நாமல் கம” என்று ஜனாதிபதியின் மகனின் பெயரை இட்டது குறித்து பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவ விஜேசிங்க சமீபத்தில் கண்டித்திருந்தார். குடியேற்றங்களில் தலையிடுவது என்பது தமிழரசியல் நிகழ்ச்சிநிரலிளிருந்து எட்டாத்தூரத்துக்கு போய்க்கொண்டிருகிறது. இதன் விளைவு எப்பேர்பட்டது என்பது வரலாறு ஏற்கெனவே கற்றுத்தந்து விட்டது. இனியும் வேண்டாம்.

இயற்கையின் சீற்றம் தொடர்கின்றது; 9,37,671 பேர் பாதிப்பு


நாடளாவிய ரீதியில் நிலவும் சீரற்ற கால நிலை காரணமாக 8 மாகாணங்களின் 18 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 23 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த வாரத்துக்குள் மட்டும் வெள்ளப் பெருக்கு, மண்சரிவு ஆகிய அனர்த்தங்களினால் இந்த 23 பேர் உயிரிழந்துள்ளதுடன் நேற்று மாலை வரை 9 இலட்சத்து 37 ஆயிரத்து 671 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். அத்துடன் 4182 வீடுகள் முற்றாகவும் 13037 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. வெள்ள அனர்த்தம் அல்லது நீரில் அடித்துச் செல்லப்பட்டு ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதுடன் மண்சரிவால் 14 பேர் நேற்று மாலைவரை உயிரிழந்துள்ளனர்.

மண்சரிவால் பதுளை மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் வெள்ளம் காரணமாக கிழக்கு மாகாணத்துக்கு அதிகளவான பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.பதுளை மாவட்டத்தில் மண்சரிவு காரண மாக 11 பேர் உயிரிழந்துள்ளதுடன் 1179 குடும்பங்களை சேர்ந்த 4297 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். பதுளை மாவட்டம் முழுவதும் நேற்று சீரற்ற கால நிலை காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, வெள்ளம் காரணமாக கிழக்கில் மட்டும் ஐந்து மரணங்கள் பதிவாகியுள்ளதுடன் பல இடங்களுக்கான போக்கு வரத்துக்களும் துண்டிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் எம்பிலிபிட்டிய பிரதேசத்தில் மூன்று மரணங்களும் புத்தளத்தில் ஒரு மரணமும் கண்டி மாவட்டத்தில் மூன்று மரணங்களும் பதிவாகியுள்ளன. கண்டி மாவட்டத்தில் பதிவான மூன்று மரணங்களும் மண் சரிவினால் ஏற்பட்டவையாகும்.

இதனைவிட நேற்று வரை அனர்த்தங்கள் காரணமாக 8 பேர் காயமடைந்துள்ளதாகவும் மேலும் இருவர் காணாமல் போயுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டது.

நேற்று மாலைவரை பாதிக்கப்பட்டிருந்த 6,69,557 பேரில் 17,459 குடும்பங்களை சேர்ந்த 60,414 பேர் 315 நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு தேவையான உலர் உணவுகளை அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சின் ஊடாக வழங்கிவருவதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் ஊடகப் பேச்சாளர் சரத் லால் குமார குறிப்பிட்டார்.

மேல் மாகாணத்தில் தலை நகர் கொழும்பு, கம்பஹா, களுத்துறையும் வடக்கின் யாழ்ப்பாணம்,வவுனியா, கிளிநொச்சி, முல்லை தீவு,மன்னார் மாவட்டங்களும், கிழக்கின் திருகோணமலை, மட்டக்களப்பு , அம்பாறை மாவட்டங்களும் வடமத்திய மாகாணத்தின் அனுராதபுரம், பொலன்னறுவை மாவட்டங்களும், வடமேல் மாகாணத்தின் குருணாகல், புத்தளம் ஆகிய மாவட்டங்களும் மத்திய மாகாணத்தின் கண்டி, நுவரெலியா மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களும் சப்ரகமுவ மாகாணத்தின் கேகாலையிலும் அடை மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினாலும் ஊவா மாகாணத்தின் பதுளை மாவட்டம் மண்சரிவு அச்சுறுத்தலாலும் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டது.

இந்த அடைமழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் கிழக்கிற்கே அதிக பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.

கிழக்கு நிலைவரம்
கிழக்கை பொறுத்தவரை நேற்றும் அடை மழையுடன் கூடிய கால நிலை நீடித்தது. .இதனால் வெள்ளம் காரணமாக திருகோணமலையில் 11291 குடும்பங்களைச் சேர்ந்த 40632 பேரும் மட்டக்களப்பில் 124524 குடும்பங்களை சேர்ந்த 443112 பேரும் அம்பாறையில்20493 குடும்பங்களை சேர்ந்த 77062 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். கிழக்கை பொறுத்தவரை மொத்தமாக 560806 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களில் 8643 குடும்பங்களை சேர்ந்த 30037 பேர் 109 நலன்புரி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளம் காரணமாக கிழக்கில் ஐந்து மரணங்கள் பதிவாகியுள்ளன.
வெள்ளம் காரணமாக கிழக்கில் 3442 வீடுகள் முற்றாகவும் 7184 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிடுகின்றது.

கிழக்கு மாகாணத்தின் பெரும்பாலான விளை நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் அந்த மாகாண மக்களின் இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது. சுமார் 50 ஏக்கர் விளை நிலம் இவ்வாறு வெள்ளத்தால் பாதிக்கப்ப்ட்டுள்ளன.

அனுராதபுரம்
அனுராதபுரம் மாவட்டத்தில் அதிகமான பகுதி நீரில் மூழ்கியுள்ள நிலையில் அந்த நகரத்தின் வழமையான நடவடிக்கைகள் நேற்றும் பாதிக்கப்பட்டுள்ளன.
அத்துடன் திஸ்ஸமஹராம உள்ளிட்ட அனுராதபுர குளங்கள் நிரம்பி வழியும் நிலையில் தொடர்ந்தும் மல்வத்து ஓயாவின் நீர்மட்டம் உயர்ந்து அந்த ஆறு பெருக்கெடுத்துள்ளது.

அனுராதபுரம் பிரதேசத்தில் 6224 குடும்பங்களை சேர்ந்த 20884 பேர் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அங்கு ஒருவர் காணாமல் போயுள்ளதா கவும் குறிப்பிட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் பாதிக்கப்பட்டவர்களில் 908 குடும்பங்களை சேர்ந்த 3000 பேர் 26 நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் ஏனையோர் உறவினர் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டனர்.

பொலன்னறுவை
பொலன்னறுவை மாவட்டத்திலும் வெள்ள அச்சுறுத்தல் தொடர்கின்றது. பொலன்னறுவையை பொறுத்தவரை அங்கு பெரும்பாலான குளங்கள் நிரம்பியுள்ளதாகவும் இதனால் பல குளங்களின் வான் கதவுகள் நேற்றும் திறக்கப்பட்டிருந்ததாகவும் நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்தது.பொலன்னறுவை மாவட்டத்தை பொறுத்தவரை 3579 குடும்பங்களை சேர்ந்த 142571 பேர் மழை வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இப்பிரதேசத்தின் ஊடான போக்கு வரத்து பெரும்பாலும் தடை பட்டுள்ள நிலையில் மகாபராக்கிரமபாகு, கவுடுல வாவி, மின்னேரிய குளம், ஆகியனவும் பெருக்கெடுத்துள்ளன. இதன் காரணமாக ஆயிரக் கணக்கான பயிர் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

வடக்கு நிலைவரம்
இதேவேளை நிலவும் சீரற்ற கால நிலையால் வடக்கின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத் தீவு மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்கள் பாதிப்புக்களை சந்தித்துள்ளன. யாழ்ப்பாணத்தில் 4656 பேரும் வவுனியாவில் 12299 பேரும், கிளிநொச்சியில் 16294 பேரும், முல்லை தீவில் 9715 பேரும் மன்னாரில் 9385 பேரும் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டது.

இதனை விட வடக்கில் 80வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன் 3465 வீடுகள் பகுதியளவான பாதிப்புக்களுக்கு உள்ளாகியுள்ளன.

மலையகம்
மலையகப் பகுதியில் மாத்தளை, கண்டி, மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்தும் அடைமழை பெய்து வரும் நிலையில் வெள்ளத்தினால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் குறிப்பிடுகின்றது. மாத்தளையில் 1298 பேர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் நுவரெலியாவில் 845 பேரும் கண்டியில்3548 பேரும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் நேற்றும் மலையகத்தில் பெய்த அடை மழை காரணமாக பிரதேசங்கள் பலவற்றினதும் நீர் நிலைகள் நிரம்ப ஆரம்பித்துள்ளன.
அத்துடன் கண்டி, நுவரெலியா, கேகாலை மற்றும் பதுளை உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கான மண் சரிவு அபாய எச்சரிக்கை அடுத்த 24 மணி நேரத்துக்கு நீடிக்கப்பட்டுள்ளது. பதுளை மாவட்டத்தில் மட்டும் மண் சரிவு காரணமாக நேற்ரு மட்டும் 9 மரணங்கள் பதிவாகின. பதுளை மாவட்டம் முழுதும் மண் சரிவு அபாயம் மிக்க பிரதேசமாக அனர்த்த முகாமைத்துவ மஹ்திய நிலையத்தினால் அறிவிக்கப்ப்ட்டுள்ளது. இதனைவிட அங்கு பெய்து வரும் அடை மழை காரணமாக மண் சரிவு எச்சரிக்கை குரித்து மிகுந்த அவதானம் செலுத்துமாறு ஆலோசனை வழங்கப்ப்ட்டுள்ளது.

வடமேல் மாகாணம்
மழை வெள்ளம் காரணமாக வடமேல் மாகாணத்தின் புத்தளம், குருணாகல் ஆகிய மவட்டங்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. புத்தளம் மாவட்டத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் புத்தளத்தில் 15540 பேரும் குருணாகலில் 1549 பேரும் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டது. புத்தளத்தில் நேற்று பெய்த அடை மழை காரணமாக அனுராதபுரம் வீதியும் மன்னார் வீதியும் போக்கு வரத்துப் பாதிப்புக்களுக்கு உள்ளானது. அத்துடன் புத்தளம் கருவலகஸ்வெவ பிரதேசத்தின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டிருந்ததுடன் குறித்த பகுதியில் மட்டும் 6000 பேர் வரையில் பாதிக்கப்பட்டிருந்தனர். குறித்த கிராம மக்கள் படகு மூலமாக பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

சப்ரகமுவ மாகாணம்
இதேவேளை சபரகமுவ மாகாணத்தின் கேகாலை மாவட்டித்திலும் அதிகளவன மழைவீழ்ச்சி பதிவகியுள்ளன. அத்துடன் அம் மாவட்டத்துக்கு மண்சரிவு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளன.

மேல் மாகாணம்
இதேவேளை நேற்று முன் தினம் முதல் மேல் மகாணத்தின் பல பிரதேசங்களிலும் தொடர்ச்சியான மழை வீழ்ச்சி காணப்பட்டது. இதன் காரணமாக தலை நகர் கொழும்பின் பல வீதிகள் தற்காலிகமாக வெள்ளத்தில் மூழ்கின. இதனைவிட பலத்த காற்றும் வீசி வரும் நிலையில் கொழும்பை விட கம்பஹா, களுத்துறை மாவட்டங்களிலும் அதிக மழை வீழ்ச்சி பதிவாகி வருகின்றது.

மழை வெள்ளம் காரணமாக புத்தளம், அனுராதபுரம் ஊடான வடக்கை நோக்கிய போக்குவரத்து பாதையும் ஹபரண, பொலன்னறுவை ஊடான ிலும் அதிகளவன மழைவீழ்ச்சி பதிவகியுள்ளன. அத்துடன் அம் மாவட்டத்துக்கு மண்சரிவு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளன.

மேல் மாகாணம்
இதேவேளை நேற்று முன் தினம் முதல் மேல் மகாணத்தின் பல பிரதேசங்களிலும் தொடர்ச்சியான மழை வீழ்ச்சி காணப்பட்டது. இதன் காரணமாக தலை நகர் கொழும்பின் பல வீதிகள் தற்காலிகமாக வெள்ளத்தில் மூழ்கின. இதனைவிட பலத்த காற்றும் வீசி வரும் நிலையில் கொழும்பை விட கம்பஹா, களுத்துறை மாவட்டங்களிலும் அதிக மழை வீழ்ச்சி பதிவாகி வருகின்றது.

மழை வெள்ளம் காரணமாக புத்தளம், அனுராதபுரம் ஊடான வடக்கை நோக்கிய போக்குவரத்து பாதையும் ஹபரண, பொலன்னறுவை ஊடான கிழக்கை நோக்கிய போக்கு வரத்தும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனை விட மலையகத்தின் மண்சரிவு அபாயம் காரணமாக பதுளை மஹியங்கனை வீதியிலும் போக்கு வரத்து குறைந்துள்ளன. அத்துடன் குருணாகல், பாதெனிய ஊடான வடக்கு நோக்கிய போக்கு வரத்தும் முற்றாக தடை பட்டுள்ளன.

நன்றி - வீரகேசரி

மலையகத்தில் தொடர்கிறது அடை மழை


கண்டி, கம்பளையில் 265 குடும்பங்களைச் சேர்ந்த 962பேர் பாதிப்பு; மூவர் மரணம், போக்குவரத்தும் ஸ்தம்பிதம் 


நாடு முழுவதும் நிலவி வரும் சீரற்ற காலநிலை மலையகத்தை பெரிதும் பாதித்துள்ளது. பதுளை, மொனராகலை, நுவரெலியா, மாத்தளை, கண்டி, இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய ஏழு மாவட்டங்களிலும் பெய்து வரும் அடை மழை காரணமாக இதுவரையில் கண்டி, டெல்மார் மற்றும் கம்பளை ஆகிய பகுதிகளில் மாத்திரம் 265 குடும்பங்களைச் சேர்ந்த 965பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை பேராதனை பிரதேசத்தில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் 44 வயது நிரம்பிய ஒருவர் மண்ணில் புதையுண்டு பலியானதுடன் இதுவரை இவ்வாறு சீரற்ற காலநிலையால் மூவர் மரணித்துள்ளதாக கண்டி அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. சிறுவர்கள் இருவர் காயமடைந்துள்ளனர். நுவரெலியா மாவட்டத்தில் பெய்து வரும் அடை மழை காரணமாக இங்கு அதிகரித்துள்ள குளிர்நிலை மற்றும் சீரற்ற தன்மை காரணமாக இயல்பு நிலை முற்றாக பாதித்துள்ளது.

மரக்கறி பயிர்ச்செய்கை முற்றாக பாதித்துள்ள அதேவேளை நாட்கூலித் தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மண்சரிவு அபாயங்கள், போக்குவரத்து தடைகள், வெள்ளப்பெருக்கு ஆகியவற்றுடன் அணைக்கட்டுக்கள் திறந்து விடும் தேவையும் ஏற்பட்டுள்ளது. சீரற்ற காலநிலை நீடித்துக் கொண்டிருப்பதால் பொது மக்கள் அவதானமாக செயற்படுமாறும் எந்த நேரத்திலும் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் கோரப்பட்டுள்ளது. பெய்து வரும் மழையினால் பதுளை, நுவரெலியா மாவட்டங்களின் பல பகுதிகளில் ஆங்காங்கே ஏற்பட்டுள்ள மண் சரிவு காரணமாக புகையிரத வீதிப் போக்குவரத்துக்கள் பாதிப்படைந்துள்ளன.

தியத்தலாைவ –பண்டாரவளை புகையிரத வீதியில் உள்ள சுரங்கம் ஒன்றிற்கு அருகில் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக புகையிரத போக்குவரத்து தடைப்பட்டதோடு இரவு நேர ரயில் தடம் பாய்ந்துள்ளது. இதன் காரணமாக நேற்று வியாழக்கிழமை அதிகாலை கொழும்பு நோக்கி செல்லவிருந்த புகையிரதம் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டது.
அத்தோடு நுவரெலியா – பதுளை பிரதான வீதியில் ஹக்கலை பூங்காவிற்கு அருகில் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக போக்குவரத்து பல மணி நேரம் தாமதம் ஏற்பட்டிருந்தது. மேலும் இவ்வீதியில் மண் அகற்றும் பணி நடைபெற்று வருவதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் டி.பி.ஜி. குமாரசிறி தெரிவித்தார்.

பதுளை மாவட்டத்தில் பல பகுதிகளில் மண்சரிவு, வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் குடியிருக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும் மண்சரிவு அபாயம் உள்ளதாக அடையாளங்காணப்பட்ட இடங்களைச் சேர்ந்த மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் அடை மழையினால் பதுளை  கொழும்பு பிரதான வீதியில் அப்புத்தளையிலிருந்து ஹல்தும்முல்லை மரங்காவளை வரை வீதியில் பல இடங்களில் ஆங்காங்கே சிறிய அளவிலான மண் சரிவுகள் ஏற்பட்டுள்ளன. அத்தோடு பெரகலை – கொஸ்லந்தை வீதியிலும் சிறிய அளவிலான மண் சரிவுகள் ஏற்பட்டுள்ளன. எனினும் மழை நீடித்தால் பாரிய அளவிலான மண்சரிவுகள் ஏற்படலாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. மேக மூட்டம் பரவிக் காணப்படுவதால் பகல் வேளைகளிலும் வாகனங்களின் மின் விளக்குகளை ஒளிரவிடுமாறும் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதேவேளை காகொல்ல – தியத்தலாவை வீதியில் பள்ளிவாசலுக்கு அருகிலும் கொஸ்லந்தை  – தியத்தலாவை வீதியிலும் பண்டாரவளை   – பூனாகலை வீதியிலும் தெல்தென – மஹியங்கனை வீதியிலும் மண் சரிவுகள் ஏற்பட்டுள்ளன. அத்துடன் பண்டாரவளை – பூனாகலை வீதியில் ஏற்பட்ட மண் சரிவில் வேன் ஒன்று முற்றாக மூடப்பட்டுள்ளது.

பசறை, ஹொப்டன், லுணுகலை, நமுனுகுல, பதுளை ஆகிய பகுதிகளிலும் பண்டாரவளை, ஹப்புத்தளை, பெரகலை, கொஸ்லந்தை, தியத்தலாவை உள்ளிட்ட பிரதேசங்களிலும் தொடர்ந்தும் அடை மழை பெய்து வருவதால் இயல்பு நிலை முற்றாக பாதித்துள்ளது. அத்துடன் இப்பகுதிகளில் குளிர்நிலை மிகவும் அதிகரித்துக் காணப்படுகிறது.

இதேவேளை கண்டி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் அடை மழையினால் 173 குடும்பங்களை சேர்ந்த 590 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அலுவலகம் தெரிவித்துள்ளது. கண்டி மாவட்டத்தில் அமைந்துள்ள 17 பிரதேச செயலகப் பிரிவுகளை சேர்ந்த குடும்பங்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளன. இதன்படி கம்பளையில் 34 குடும்பங்களைச் சேர்ந்த 104 பேரும் உடதும்பர பிரதேசத்தில் 40 குடும்பங்களைச் சேர்ந்த 103 பேரும் மற்றும் உடுநுவர ,யட்டிநுவர, பூஜாபிட்டிய,மினிப்பே ஆகிய பகுதிகளையும் சேர்ந்த மொத்தமாக 590 பேர்பாதிக்கப்பட் டுள்ளனர். இதேவேளை பூஜாபிட்டிய, மினிப்பே, யட்டிநுவர போன்ற பகுதிகளில் நான்கு வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன் 63 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

கண்டி மாவட்டத்தில் இடை விடாது பெய்து வரும் கடும் மழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் விவசாயிகள், அன்றாட வேலை செய்வோர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை பன்வில,  ரங்கல, தெல்தெனிய , கலஹா போன்ற பிரதேசங்களில் அமைந்துள்ள தோட்டப்பகுதிகளில் மலையடி வாரங்களிலும் தாழ்வான பகுதிகளிலும் வசித்து வரும் மக்கள் மண் சரிவுகள் ஏற்படலாம் என்ற அச்சத்திலிருந்து வருகின்றனர்.

இரவு வேளைகளில் இவர்களில் குழந்தைகள், வயோதிபர்களை பொது இடங்களில் தங்க வைத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை கண்டி யாழ்ப்பாணம் ஏ  9 வீதியில் அக்குறணை ஆறாம் மைல்கல் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு எட்டு மணி அளவில் நீரில் மூழ்கின. இதன் காரணமாக ஏ  9 வீதியில் வாகன போக்குவரத்து தடைப்பட்டதுடன் நூற்றுக்கணக்கான வியாபார நிலையங்களும் நீரிழ் மூழ்கிக்காணப்பட்டன. அக்குறணை பிரதேச சபை மற்றும் பிரதேச செயலகம், அலவத்துகொடை பொலிஸார் உட்பட அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் இணைந்து நிவாரணப் பணிகளை மேற்கொண்டனர்.
இது இவ்வாறிருக்க மலையகத்தில் பெய்யும் கன மழையினால் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் 3 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இதனால் அதன் அண்மையில் உள்ள மக்களை மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு நுவரெலியா மாவட்ட செயலாளர் டீ.பீ.ஜீ. குமாரசிறி தெரிவித்துள்ளார்.

அதிக மழை காரணமாக சென்கிளாயர் நீர்வீழ்ச்சியில் நீரின் மட்டம் அதிகரித்துள்ளது.

மலையகத்தில் உள்ள ஏனைய நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அட்டன் – கொழும்பு பிரதான வீதியிலும் அட்டன் – நுவரெலியா பிரதான வீதியிலும் மண்சரிவு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் இவ்வீதி வழுக்குவதற்கான அபாயம் இருப்பதாகவும் இதனால் வாகன சாரதிகளை அவதானமாக வாகனங்களை செலுத்துமாறும் பொலிஸார் கேட்டுக்கொள்கின்றனர்.

காசல்ரீ நீர்த்தேக்கத்திலும் நீரின் மட்டம் உயர்ந்துள்ளது. அட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் சென்கிளாயர் பகுதியில் நேற்றுக்காலை 6 மணியளவில் பாரிய மரத்தின் கிளை ஒன்று முறிந்து வீழந்ததால் போக்குவரத்து தடைப்பட்டிருந்தது.இதேவேளை உடபுஸ்சல்லாவை – டெல்மார் தோட்ட கீழ்பிரிவு பகுதியில் லயன் குடியிருப்பு பகுதியில் நிலம் தாழ் இறங்கியுள்ளமையினால் அங்கு வசித்த 20 குடும்பங்கள் சூரியபத்தன தமிழ் வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளன.

எலமுள்ள கபரகல தோட்ட பகுதியிலுள்ள 4 லயன் குடியிருப்பு பகுதிகளில் ஆற்று நீர் உட்புகுந்துள்ளதால் அம்மக்கள் கபரகல தோட்ட தொழிற்சாலையிலும் சிறுவர் பராமரிப்பு நிலையத்திலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இராகலை டியனல்ல கீழ் பிரிவு பகுதியில் நிலம் தாழிறங்கியுள்ளமையால் அத்தோட்ட லயன் குடியிருப்புக்களில் வசித்து வந்த 100 க்கும் மேற்பட்ட மக்கள் அரஸ்பெத்த தமிழ் வித்தியாலயத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.

கண்டி, தெல்தோட்டை பிரதேச செயலா ளர் பிரிவுக்குட்பட்ட தெல்தோட்டை பட்டியகம மேற்பிரிவு பகுதியில் லயன் குடியிருப்புப் பகுதிகளில் நீர் உட்புகுந்து ள்ளதால் அம்மக்கள் தெல்தோட்டை மலைமகள் இந்து மத்திய கல்லூரியில் தஞ் சமடைந்துள்ளனர்.
மேலும் ஹங்குராங்கெத்த பிரதேச செயலாளர் பிரிவின் கடுகஸ்ஹின்ன அதிகாரிகம பகுதிகளில் வீதி அபிவிருத்தி சபையினரால் மண் குவியல்கள் அகற்ற ப்பட்டு வருகின்றன.
நன்றி - தமிழ்வின்

பதுளையில் மண்சரிவு; 19 பேர் பலி



பதுளையில் இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஏற்பட்ட மண்சரிவில் குறைந்தது 35 பேர் பலியானார்கள்

இலங்கையில் கடந்த சில நாட்களாக நிலவும் மோசமான காலநிலை காரணமாக மழை வெள்ளத்திலும் மண்சரிவுகளிலும் சிக்கி இதுவரை குறைந்தது 24 பேர் உயிரிழந்துள்ளனர்.
பதுளை மாவட்டத்தில் பல இடங்களில் மண்சரிவுகளில் சிக்கி, 19 பேர் உயிரிழந்துள்ளதாக பதுளை மாவட்ட பேரிடர் முகாமைத்துவ நிலையத்தின் துணை இயக்குநர் ஈ.எல்.எம். உதயகுமார பிபிசி தமிழோசையிடம் கூறினார்.
இவர்களில் 11 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் 8 பேரின் சடலங்களை மீட்கமுடியாத நிலை உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பதுளை, லுனுகலை, பண்டாரவளை, ஊவ பரணகம, பசறை, ஹாலிஎல ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் பல இடங்களில் இந்த மண்சரிவு அழிவுகள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

பதுளை மாவட்டத்தில், இரண்டு மாதங்களுக்கு முன்னர் நடந்த மண்சரிவில் மீரியாபெத்தை தேயிலைத் தோட்டக் குடியிருப்பு புதையுண்டு போனது.
அங்கு புதையுண்டவர்களில் 12 பேரின் சடலங்களே மீட்கப்பட்டனர். 19 பேரின் சடலங்கள் மீட்கப்படாமல் கைவிடப்பட்டன.

அதற்கு மேலதிகமாக, அந்தப் பிரதேசத்தில் வசித்தவர்கள் என்று நம்பப்பட்ட 44 பேர் தொடர்பான தகவல்கள் ஏதுமில்லை என்று பேரிடர் முகாமைத்துவ அதிகாரிகள் கூறியிருந்தனர்.

பதுளை, நுவரெலியா, கண்டி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மலையக மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் இருப்பதாக கடந்த சில தினங்களாகவே அதிகாரிகள் மக்களை எச்சரித்துவந்திருந்தனர்.

பல இடங்களில் ரயில் பாதைகளில் மண்மேடுகள் சரிந்து விழுந்துள்ளதால், கொழும்பு- பதுளை ரயில் போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது.
கொழும்பு- பதுளை நெடுஞ்சாலையிலும் போக்குவரத்து மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் செய்தியாளர்கள் கூறுகின்றனர்.

வடக்கு கிழக்கு உட்பட நாடெங்கிலும் 17 மாவட்டங்களில் சுமார் ஏழு லட்சம் மக்கள் இந்த மோசமான காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கரையோரங்களை அண்டி வாழும் மக்களை அவதானத்துடன் இருக்குமாறும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் வானிலை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
நன்றி - பி.பி.சி

வடக்கின் குறுந்தேசியவாதம்! தெற்கின் பேரினவாதம்! மலையகத்தின் சுயநலவாதம்! - தேசியன்


ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளரில் பொது எதிரணி வேட்பாளரான மைத்திரிபால சிறிசேன தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டு விட்டார். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நேற்று தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டுள்ளார். மைத்திரி வெளியிட்டுள்ள விஞ்ஞாபனத்தில் 100 நாட்களில் 100 வேலைத் திட்டங்கள் என்ற அடிப்படையில் பிரதானமாக அரசியலமைப்பு மறுசீரமைப்பு,பொருளாதாரம்,பண்பாடுள்ள சமூகம் ,பாதுகாப்பான உணவு என்ற அம்சங்கள் உள்ளடங்கியுள்ளன. மறந்தும் கூட இலங்கையின் இனப்பிரச்சினை தீர்வு பற்றியோ அல்லது சிறுபான்மை சமூகங்கள் பற்றியோ ஒரு வசனமும் இடம்பெறவில்லை. இது ஆச்சரியமளிக்கும் விடயமல்ல, காரணம் தென்னிலங்கையின் பேரினவாத சக்திகள் அதற்கு இடமளிக்கப்போவதில்லை. பேரினவாதத்தின் வாக்குகளிலேயே மைத்திரியும் மகிந்தவும் தங்கியுள்ளனர் என்பது அனைவரும் அறிந்த ஒரு விடயம்.

மகிந்தவும் அப்படியே
இதே வேளை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தேர்தல் விஞ்ஞாபனத்திலும் சிறுபான்மை சமூகங்கள் பற்றிய எந்த வசனமும் இடம்பெற்றிருக்கவில்லை என்பது கண்கூடு. என்னதான் நிறைவற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இருந்தாலும் கூட அவர் தென்னிலங்கையின் பேரினவாதத்திற்கு பதில் அளிக்க வேண்டும். தேர்தல் மேடையில் அவர் நான் பெந்தர நதிக்கரைக்கு அப்பால் பிறந்தவன், கோழை போல எங்கும் ஓடிப்போய்விட மாட்டேன் என மைத்திரிக்கு சவால் விடலாம் ஆனால் சிறுபான்மை மக்களை அடக்கி ஒடுக்கி ஆள நினைக்கும் மனோபாவத்தில் ஊறிப்போன பேரினவாத சக்திகளுக்கு முன் அவர் பெட்டிப்பாம்பாகவே இருக்க வேண்டியுள்ளது. இதை பேரினவாத சக்திகளும் நன்கு பயன்படுத்திக்கொண்டு வருகின்றன. அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவித்தது மட்டுமல்லாது மிகவும் பாரதூரமான இனத்துவேஷங்களை அவிழ்த்து விட்டு வந்த ஹெல உறுமயவினர், தமது கொள்கைகளை மகிந்த ஏற்றுக்கொள்ள வில்லை என வெளியேறினாலும் கட்சியின் முக்கியஸ்த்தரான உதய கம்மன்பில சில சகாக்களுடன் மீண்டும் ஆளுந்தரப்பில் இணைந்து கொண்டார். இதற்கு பேரினவாத நிகழ்ச்சி நிரலே அரசாங்கத்திற்கு உதவியது. ஆகவே தென்னிலங்கையில் இந்த பேரினவாதம் இருக்கும் வரை எந்த வேட்பாளர் ஜனாதிபதியானாலும் சிறுபான்மை மக்களின் பிரச்சினைகள் தீரப்போவதில்லை அதை தீர்க்கும் வழிவகைகளை எவரும் சொல்லப்போவதுமில்லை.

வடக்கின் மயக்கம்
தென்னிலங்கையைப் பொறுத்த வரை தமிழ் தேசிய கூட்டமைப்பினரை துப்பாக்கி ஏந்தாத புலிகள் என்ற அடிப்படையிலேயே எல்லோரும் பார்க்கின்றனர். ஆனால் அதற்கு ஏற்றாற்போல் காய் நகர்த்தல்களை தான் அவர்களும் செய்து வருகின்றனர். வடக்குவாழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகளாக இருக்கும் கூட்டமைப்பினர் இது வரை யாருக்கு ஆதரவு என்ற விடயத்தை வெளிப்படுத்தவில்லை. ஆனால் மக்கள் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்று அறிவித்து விட்டார்கள். அப்படியானால் நீங்கள் விரும்பும் ஒருவருக்கு வாக்களியுங்கள் என்று தான் அர்த்தம். வடக்கு வாழ் மக்களின் பெரும்பான்மையான வாக்குகள் நிச்சியமாக மகிந்தவுக்கு கிடைக்காது என்பது நிதர்சன உண்மை. ஆனால் பொது வேட்பாளர் மைத்திரிக்கு வாக்களியுங்கள் என வாய் திறந்து கூறும் தைரியம் கூட்டமைப்பினருக்கு இல்லை. ஏனெனில் மைத்திரியும் சுதந்திர கட்சியை சேர்ந்தவர் கூறப்போனால் யுத்த வெற்றியின் பங்குதாரர்.யுத்த காலகட்டத்தில் பாதுகாப்பு அமைச்சராக இருந்தவர். இறுதி யுத்தத்தின் நாயகனாக போற்றப்படும் சரத் பொன்சேக்காவை தற்போது அருகில் வைத்திருக்கிறார். புலிகளின் இலக்காக இருந்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவும் அவருக்கு ஆதரவாக இருக்கின்றார். ஏன் மைத்திரிபாலவும் ஐந்து தடவைகள் புலிகளின் தாக்குதலுக்கு இலக்கானவர் தான். அதிகார பரவலாக்கம் குறித்து பேசி வரும் தமிழ் தேசிய கூட்டமைப்பினரை ஆரம்பத்திலேயே அதிர்ச்சிக்குள்ளாக்கியவர் மைத்திரி. ஆம் சமஷ்டிக்கு இடமில்லை ஒற்றையாட்சியே ஒரே வழி என்று தேர்தல் மேடைகளில் கூறி விட்டார். மேலும் நாட்டை பிளவு படுத்த இடமளியேன் புலிகளை தலைதூக்க விடமாட்டேன் என்றும் கூறிவிட்டார். இவ்வாறு இருக்கையில் மக்களிடம் கிராமம் கிராமமாக சென்று அவர்களிடம் பேசியே முடிவு எடுப்போம் என கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர். ஆனால் உண்மையில் நடந்தது என்னவென்றால் இவர்கள் விரும்பாத எதிர்ப்பார்க்காத ஒருவர் பொது வேட்பாளரானதுதான் நடந்த சம்பவம். இறுதி யுத்த காலகட்டத்தில் யுத்த களத்தில் செயற்பட்ட சரத் பொன்சேக்கா பொது வேட்பாளராக போட்டியிட்ட போது அவருக்கே ஆதரவு அளிக்க அவர்கள் முன்வந்ததற்குக்காரணம் மகிந்தவை தோற்கடிக்க வேண்டும் என்பதே. ஆனால் தற்போதும் இவர்களுக்கு மகிந்தவை தோற்கடிக்க வேண்டும் என்ற அவா இருந்தாலும் கூட மைத்திரிக்கு வெளிப்படையான ஆதரவு கொடுக்க தயங்குவதற்குக்காரணம் சில வேளைகளில் மைத்திரி வெற்றி பெற்று தேசிய அரசாங்கம் ஒன்று அமையும் பட்சத்தில் இவர்களும் அதில் பங்கெடுக்க வேண்டும். அப்படியான சந்தர்ப்பத்தில் இவர்கள் நினைத்தபடி அரசியல் செய்ய முடியாது. ஆகவே இந்த குறுகிய தேசியவாத கொள்கைகளை இவர்கள் என்று விட்டொழிக்கின்றனரோ அன்றுதான் வடக்கு கிழக்கு வாழ் தமிழர்கள் 16 இலட்சம் பேருக்கு விமோசனம் கிடைக்கும்.

மலையகத்தலைமைகளின் சுயநலம்
யார் எப்படி போனாலும் என்ன கிடைப்பதை பிடித்துக்கொண்டு அரசியல் செய்வோம் இராமன் ஆண்டால் என்ன இராவணன் ஆண்டால் என்ன நாம் தொழிலாளர்களை ஆள்வோம் அப்படி இல்லாவிட்டால் எங்களையே நாங்கள் ஆண்டுக்கொள்கிறோம் என்ற சுயநல போக்கில்தான் இன்று மலையக அரசியல் இருந்து வருகிறது. இரண்டு வருடங்களுக்கு முன்பு ஜனாதிபதி மகிந்தவால் வரவு செலவு திட்டத்தில் முன்மொழியப்பட்ட50 ஆயிரம் வீட்டுத்திட்டத்திற்கு இப்போது தான் அவசர அவசரமாக அடிக்கல் நாட்டப்படுகிறது. அதுவும் வீடமைப்பு அமைச்சர் விமல் வீரவன்ச இல்லாமலேயே இது முன்னெடுக்கப்படுகிறது. எல்லாவற்றையும் விட கொடுமை மலையகத்திற்கு சற்றிலும் பொருந்தாத மாடி வீட்டுத்திட்டமாகவே இது முன்னெடுக்கப்படுகிறது. இது மாடி லயங்கள் என்பதே உண்மை.ஆனால் 2005 ஆம் ஆண்டு மகிந்த சிந்தனையில் கூறப்பட்ட தொழிலாளர்களின் கௌரவமான வாழ்க்கை குறித்த சரத்துக்கள் பற்றி எந்த மலையக அரசியல்வாதிகளுக்கும் தெரியாதுள்ளது. தொழிலாளர்களின் காணி உரிமை பற்றி எவருமே வாய்திறக்கவில்லை. மீரியபெத்த அனர்த்தம் பற்றி பேச விரும்பாத இந்த பிரதிநிதிகள் தேர்தல் கால காய் நகர்த்தல்களை கச்சிதமாக செய்து வருகின்றனர். மலையகம் பற்றி அறிந்தும் தெரிந்தும் வைத்திராத பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய வீட்டுத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட வருகிறார். தேயிலை செடிகளுக்கு மத்தியில் நின்று அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கிறார் அமைச்சர் ஆறுமுகன். மறுபக்கம் ஏழு பேர்ச் காணி விவகாரத்தை நாம்தான் ஆரம்பித்தோம். புதிய அரசாங்கத்தின் ஆட்சியில் அது அமுல்படுத்தப்படும் என்று தெரிந்து இன்று அவசர அவசரமாக அடிக்கல் நாட்டப்பட்டு வருகின்றது என முழங்குகிறார்கள் திகாம்பரமும் இராதா கிருஷ்ணனும். குடியிருப்பு விவகாரத்திலும் கட்சி தாவல்விடயங்களிலும் தொழிலாளர்களின் அபிலாஷைகளை புறந்தள்ளி ஒதுக்கி சுயநல அரசியல் செய்யும் இவ்வாறான பிரதிநிதிகள் இருக்கும் வரை மலையகம் எவ்வாறு உருப்படும்? ஆக தென்னிலங்கையின் பேரினவாதமும் வடக்கின் குறுந்தேசியவாதமும் மலையகத்தின் சுயநலவாத போக்கும் இருக்கும் வரை இந்த நாட்டில் தமிழர்களுக்கு விடிவு என்பதே கிடையாது. இதில் யார் ஆட்சிக்கு வந்தால் என்ன வராவிட்டால் என்ன?


நன்றி - சூரியகாந்தி

பதுளை மாவட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவினால் 10 பேர் உயிரிழப்பு


பதுளை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டுள்ள மண்சரிவு அனர்த்தங்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.

இதற்கமைய கல்கந்த பகுதியில் வீடொன்றின் மீது, மற்றுமொரு வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிககப்படுவதுடன், ஹெகொட பகுதியில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில், இருவர் உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.


மேலும், பஹலகம பகுதியில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் இன்னுமொரு பெண்ணும், பதுளை மகியங்கனை வீதியின், சிறிகெத்த பகுதியில் மண்மேடு சரிந்து விழுந்ததில் மற்றுமொரு பெண்ணும் உயிரிழந்துள்ளதாக அப்பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, வேவல்ஹிண்ண ரில்பொல மெதகம பகுதியில் ஏற்பட்ட மண்சரிவினால் சில வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இந்த அனர்த்தத்தில் பலர் காணாமற்போயுள்ளதாக குறிப்பிடும், பதுளை பொலிஸார் காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறினர்.



மலையகத்திற்கு தேவை தனி மனித முன்னேற்றமல்ல சமூக விடுதலையே - விண்மணி


எவ்வளவு மோசமான சமூகப் பகுதியினராக இருந்தாலும் மிகக் குறைந்த வீதத்தில் ஒரு குறிப்பிட்ட அளவானோர் கல்வி கற்று உயர் தொழில் பெற்று அல்லது வர்த்தகத்தில் ஈடுபட்டு நல்ல வாழ்க்கை வாழ்வதையும் செல்வந்தர்களாய் வாழ்வதையும் காண்கிறோம். இப்படி முன்னேறியவர்கள் பாராட்டப்பட வேண்டியவர்களாவார்கள். இவ்வாறு விதி விலக்காக சிலர் முன்னேறுவது இச்சமூக அமைப்பின் நியதியேயாகும்.

இவ்வாறு சிலர் முன்னேறியிருப்பதனால் ஒரு சமூகமே அபிவிருத்தி அடைந்து விட்டதாகக் கருதி விட முடியாது. இவ்வாறு முன்னேறிய சிலரும் கூட பல்வேறு காரணிகளினால் மீண்டும் தாம் இருந்த மோசமான நிலைக்கு இழுத்து விடப்படக்கூடிய ஆபத்தும் இந்த சமூக அமைப்பிலேயே அடங்கியுள்ளது.

தமது சமூகத்திற்குத் தலைமை தாங்கி வழி நடத்திச் செல்ல வேண்டிய பொறுப்பும் கடமையும் இவ்வாறு முன்னேறியவர்களுக்கே உண்டு. இதற்காக அவர்கள் தமது சமூகம் பின்னடைவு கண்டுள்ளதற்கான உண்மையான காரணங்களைப் புரிந்து கொண்டு அவற்றை நீக்குவதற்கான வேலைத்திட்டங்களுக்குத் தமது பங்களிப்பை வழங்க வேண்டும்.

ஆனால் இவ்வாறு முன்னேறியவர்களில் மிகப் பெரும்பாலானோர் தமது சமூகத்தின் உண்மையான பிரச்சினைகளைப் புரிந்து கொள்ளாது அவற்றை நீக்குவதற்கான வழி வகைகளை ஆராயாது விதிவிலக்காகத் தாம் முன்னேறியுள்ள தால் ஏனையவர்களும் இவ்வாறு முன்னேறுதல் சாத்தியமென்றும் அக்கறையும் ஆர்வமும் முயற்சியின்மையும் சோம்பலுமே ஏனையோர் முன்னேறாதிருப்பதற்கான காரணம் என்றும் மத்திய தர வர்க்கக் கருத்துக்களை வெளியிட்டு ஏனையோருக்கு அறிவுரை கூற முற்படுகின்றார்கள்.

மலையகத்தில் இன்று நடந்து கொண்டிருப்பது இதுவேதான். தனி மனித முன்னேற்றம் சமூக விடுதலைக்குக் காரண மாகாது என்கிற சமூக விஞ்ஞான உண் மையை இவர்கள் புரிந்து கொள்வதேயில்லை. அல்லது புரிந்து கொள்ள மறுக்கின்றார்கள். மலையக சமூகத்தை மோசமாக்கி வைத்திருக்கின்ற ஆதிக்க சக்திகளுக்கு இவர்கள் துணை போகின்றார்கள். விசுவாசமான ஊழியர்களாயிருக்கிறார்கள்.

ஒப்பீட்டளவில் ஏனைய சமூகங்களைப் போன்று போதுமான அளவில் மலையகத்தில் மனித வள அபிவிருத்தி ஏற்படாமைக்குக் காரணமே மலையக சமூகம் பின்னடைவு கண்ட ஒரு சமூகமாயிருப்பது தான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த பின்னடைவு கண்ட நிலையினை ஒரு சமூக மாற்றத்தினால் போக்க முடியுமே தவிர தனி மனித முன்னேற்றத்தினால் அல்ல. கால் நூற்றாண்டுக்கு முன்பு இந்த சமூகம் எப்படியிருந்தது? இன்று தனி மனிதர்கள் சிலர் முன்னேறியிருக்கின்றார்கள். சமூகத்தில் அடிப்படை மாற்றங்களேதும் ஏற்படவில்லை. சமூக மாற்றம் ஒன்று ஏற்படாவிட்டால் இன்னும் கால்நூற்றாண்டு காலத்திற்குப் பின்னும் இச் சமூகத்தின் நிலை இவ்வாறேதான் தொடரும். தனி மனிதர்கள் சிலர் முன்னேறியிருப்பார்கள் சமூகத்தில் அடிப்படை மாற்றங்களேதையும் காணக் கிடைக்காது.

தனி மனிதர்கள் முயன்று முன்னேறலாம் என்ற கிளிப்பிள்ளை பாடத்தை இச் சமூகத்தை நோக்கி இச்சமூகத்திலிருந்து வந்தவர்களே கற்றுக்கொடுக்க முயலும் போது ஒன்று மட்டும் தெளிவாகின்றது. அவர்கள் இச் சமூகத்தின் பிரச்சினைகளை ஒரு போதும் புரிந்து கொண்டவர்கள் அல்லர் என்பது தான் அது.

ஆகவே இந்த சமூகத்தின் அடிப்படைப் பிரச்சினைகள் என்னவென்று பார்ப்போம்.

அன்றைக்கும் இன்றைக்கும் இலங்கையில் ஒப்பீட்டளவில் மிகக் குறைவான வருவாய் பெறுவோர் பெருந்தோட்டத்துறைத் தொழிலாளர்களேயாவார்கள். தம்மை போஷித்துக் கொள்வதற்கும் பராமரித்துக் கொள்வதற்கும் போதுமான வருவாயை இவர்கள் ஒரு போதும் பெறுவதில்லை.

இதன் காரணமாக இவர்களிடையே போஷாக்கின்மை அதிகரித்துக் காணப்படுகின்றது. போஷாக்கின்மையினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளில் மிக அதிகளவானோர் காணப்படுவது பெருந்தோட்டத் துறையிலேயே என்பது சமீப கால புள்ளிவிபரங்களிலிருந்தும் தெரிய வந்துள்ளது.

இதனால் இவர்கள் ஆரோக்கியமான உடல் உள வளர்ச்சி உடையவர்களாய் இருப்பதில்லை. பல்வேறு உடற்குறைபாடுகள் உடையவர்களாகவும் அடிக்கடி நோயினால் பாதிக்கப்படுகிறவர்களாகவும் இருக்கின்றார்கள். போதியளவான மருத்துவ வசதிகள் இன்மையினாலும் பொருளாதார வசதியின்மையினாலும் முறையான சிகிச்சை பெற்றுக்கொள்வது இவர்களுக்கு சாத்தியமாவதில்லை.

போஷாக்கின்மை குழந்தைகளுக்குப் பார்வை குறைவு நரம்புத் தொகுதி சீர்கேடுகள்,மூளை வளர்ச்சி குறைவு, இன்னோரன்ன குறைபாடுகளை ஏற்படுத்துகின்றது. இதனால் ஏனைய சமூகப் பகுதியினரைச் சேர்ந்த குழந்தைகள் போல் இவர்களால் இயல்பாகக் கற்றல் செயற்பாடுகளில் ஈடுபட முடிவதில்லை. கல்வியில் பின்தங்கியவர்களாக இச் சமூகப் பகுதியினர் உள்ளமைக்கு இது பிரதான காரணமாகின்றது.

இந்தக் குழந்தைகளின் உண்மையான பிரச்சினைகளை உணர்ந்து மாற்றத்திற்காகத் திட்டமிடுவோர் யார்? ஒரு வகையில் ஏனைய சமூகப் பகுதியினரோடு இவர்களின் கல்வி நிலையை ஒப்பிட்டுப் பார்ப்பதே அபத்தமானது.

கல்வி கலை கலாசாரம் இலக்கியம் வர்த்தகம் ஆகிய இன்னோரன்ன துறைகளிலும் ஈடுபட்டு வளர்ச்சி காண முடியாது தமது உழைப்பையெல்லாம் தமது உணவுத் தேவைகளுக்காகவே செலவிட வேண்டிய நிலையிலுள்ள உடல் உள ஆரோக்கியம் குன்றிய நாளுக்கு நாள் கடன் சுமை ஏறி வருகின்ற சேமிப்புக்கு வாய்ப்பு வசதியற்ற ஒரு சமூகமாக இச் சமூகம் ஆக்கி வைக்கப்பட்டிருக்கின்றது.
உண்பதும் உடுப்பதும் உறங்குவதும் என மனித வாழ்வின் மகோன்னதங்கள் எதையும் காணாமலே இவர்கள் வாழ்வு கழிந்து போய் விடுகின்றது.

இந்த நிலையை மாற்றி இவர்கள் நல் வாழ்வு காண முறையான சமூக மாற்றத் திற்குத் திட்டமிட வேண்டுமே தவிர தனி மனிதர்களின் முன்னேற்றம் பயனேதும் கிடைத்துவிடப் போவதில்லை.
ஒரு கால கட்டத்தில் ஒப்பீட்டளவில் கல்வித் துறையில் பின் தங்கியிருந்த நமது சகோதர முஸ்லிம் சமூகம் இன்று முன்னேறிய சமூகமாக மாறியிருப்பதற் கான காரணம் அச்சமூகத்தினரிடையே ஏற்பட்ட தனி மனித முன்னேற்றமல்ல. அவர்கள் சமூக ரீதியாகச் சிந்தித்து செயற் பட்டதே என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.

நன்றி - வீரகேசரி
வீரகேசரி
 

இணைந்திருங்கள்


Followers

Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates