நாட்டில் தற்போது 2 கோடி யே 23 இலட்சம் மக்கள் வாழ்கின்றனர். இதில் 87 வீதமானவர்கள் சிங்களவர்களாவும், 7.4 வீதம் முஸ்லிம்களும், 5 வீதம் இலங்கைத் தமிழர்களும், 4.6 வீதம் மலையக தமிழர்களும் வாழ்கின்றனர் என புள்ளிவிபரங்கள் குறிப்பிடுகின்றன. இதில் மலையக தமிழர்களில் பெரும்பாலானோர் தொகைமதிப்பிட்டின் போது தங்களை இலங்கைத் தமிழர் என குறிப்பிட்டமையே இந்த விகிதாசார குறைவுக்கு காரணமாகும்.
எதிர்வரும் ஜனவரி 08ஆம் திகதி ஏழாவது ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. இலங்கையில் 1978ஆம் ஆண்டு இரண்டாவது குடியரசு அரசியலமைப்பின் மூலம் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது. அதிலிருந்து ஆறு ஜனாதிபதி தேர்தல்கள் நடந்து முடிந்திருந்தன. இதில் ஜே.ஆர். ஜயவர்த்தன, சந்திரிக்கா பண்டாரநாயக்க, தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ ஆகிய மூவரும் இரண்டு தவணைக்கால பதவிகளை முடித்துக்கொண்டவர்கள் பிரேமதாஸ ஒருமுறை தெரிவு செய்யப்பட்டு பதவி வகிக்கும் போது படுகொலை செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து இடைக்கால ஜனாதிபதியாக டி.பி. விஜேதுங்க கடமையாற்றினாலும் அவர் தமது முழுமையான பதவிக்கால த்தை நிறைவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி தேர்தலைப் பொறுத்தவரை இலங்கையின் சட்டத்தின்படி அளிக்கப்பட்ட மொத்த செல்லுப்படியான வாக்கு களில் 50 வீதத்திற்கு மேல் பெற்றவர்களே வெற்றிப்பெற முடியும். இதன்படி பார்ப்பின் பெரும்பான்மை மக்களின் வாக்குகள் பெரும்பான்மை கட்சிகளுக்கிடையே பிரிந்து செல்வதால் 40 வீதமான வாக்குகளே இந்தகட்சிகளால் பெற முடியும். எஞ்சிய பத்து வீதத்திற்கும் அதிகமான வாக்குகளை சிறுபான்மை கட்சிகளிடமே பெற்றுக்கொள்ள வேண்டிய தேவை காணப்படுகின்றது. இதனை கருத்திற்கொண்டு சிறுபான்மை சக்திகள் இதில் பேரம்பேசி தமக்கான உரிமைசார் அபிலாஷைகளை பெற்றுக்கொள்கின்றன. இதன் கீழ் மலையக மக்கள் பெற்றுக்கொண்ட சில விடயங்களை பார்ப்பது சிறந்ததாகும்.
ஜனாதிபதி ஜே.ஆர் காலத்தில் இவ்வரசியல் அமைப்பினால் இந்திய வம்சாவளி மக்களின் பிரஜா உரிமை பிரச்சினைக்கு ஒரு தீர்வு எட்டப்பட்டது. குறிப்பாக அதுவரை காலம் பிரஜா மற்றும் ஆட்கள் எனும் பதங்களின் கீழ் ஆளப்பட்ட மக்களும் இச்சட்டத்தின் கீழ் பத்து வருடங்கள் தொடர்ந்து இலங்கையில் வாழும் போது இலங்கை பிரஜா உரிமையை பெற்றுக்கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது.
பின்னர் ஜனாதிபதி பிரேமதாஸ காலத்தில் மலையக மக்கள் மத்தியில் தொழில் ரீதியாக ஒரு மாற்றம் ஏற்படுத்தப்பட்டது. குறிப்பாக அதுவரை காலமும் தோட்டத் தொழில் அல்லது தோட்டங்களுக்கு அப்பால் உள்ள கொழும்பு போன்ற நகரப்பகுதிகளில் தொழிலுக்காக செல்லும் நிலையே காணப்பட்டது. இதனை மாற்றியமைத்து தோட்ட தொழிலாளர் பிள்ளைகளுக்கும் ஆடைத் தொழிற்சாலைகளில் தொழில் செய்யக்கூடிய வகையில் பெருந்தோட்ட மக்கள் வாழும் மாவட்டங்களை மையப்படுத்தி ஆடைத்தொழிற்சாலைகள் ஆரம்பிக்கப்பட்டன. அதேபோன்று மத்திய மாகாணத்தில் கல்வி அமைச்சு இரண்டாக பிரிக்கப்பட்டு தனியான தமிழ் கல்வி அமைச்சு தாபிக்கப்பட்டமையும் இக்காலக்கட்டத்திலேயே நிகழ்ந்தது.
இதனைத் தொடர்ந்து 1994ஆம் ஆண்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிக்கொண்ட ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தமது ஆட்சி அமைவதற்கு மிகவும் முக்கிய பங்கு வகித்த அமரர் சந்திரசேகரனுக்கு கௌரவமளிக்கும் வகையில் தனியானதொரு அமைச்சை உருவாக்கி கொடுத்து தமது கடமையை செய்திருந்தார். இதனைத் தொடர்ந்து 1995ஆம் ஆண்டுகளில் மலையக மக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்துவதற்காக பத்தாண்டு தேசிய வேலைத்திட்டம் ஒன்றை (ten year national plan of action) தயார்படுத்தி அதில் மலையக மக்களுக்கு பல்வேறு உட்கட்டமைப்பு மற்றும் வாழ்வாதார முறைகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. எனினும் இது நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதையும் கருத்திற்கொள்ளல் வேண்டும்.
இதன்பின்னர் 2005ஆம் ஆண்டில் இருந்து இன்றுவரை ஆட்சியில் இருக்கும் தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ ஆட்சிக்காலத்தில் மலையக மக்களு க்கு செய்யப்பட்ட சேவைகளை மதிப்பீடு செய்வது காலத்தின் தேவையாகும். ஏனெ னில் ஏனைய ஆட்சியாளர்கள் அனைவ ரும் இரண்டு தவணை முறைகளோடு தமது ஆட்சிக்காலத்தை முடித்துக்கொண் டனர். எனினும் தற்போதைய நிலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தமது மூன் றாவது பதவிக்காலத்திற்கான முன்னெண்ணத்தை வெளியிட்டுள்ளதோடு அதற் கான தேர்தல் ஜனவரி 8ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இந்த நிலையில் எமது அரசியல் தலைமைகளின் ஆதரவுகளும் அதற்கான நிபந்தனைகளையும் ஆராய வேண்டியது எமது கடமையாகும். கடந்த 2005 ஆம் ஆண்டில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவு தெரிவித்திருந்தது. மஹிந்த ராஜபக் ஷவுக்கு ஆதரவு வழங்கவில்லை. பின்னர் அதிஷ்டவசமாக அவர் வெற்றிப்பெற்றதும் உடனடியா கவே அவருடன் ஒட்டிக்கொண்டு இன்றுவரை அவருக்கு ஆதரவாக செயற்படுகின்றனர்.
மறுபுறம் தொழிலாளர் தேசிய சங்கம் 2010ஆம் ஆண்டு தேர்தலில் எதிரணி பொது வேட்பாளர் சரத் பொன்சேகாவை ஆதரித்தது. பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்டு ஒரு ஆசனத்தையும் வெற்றிக்கொண்டது. இக்காலக்கட்டத்தில் தொழிலாளர்களுக்கான கூட்டு ஒப்பந்தம் நடைபெற்றது. இதில் தமது கருத்துக்கு ஐக்கிய தேசிய கட்சி செவிசாய்க்கவில்லை எனும் காரணத்தைக் காட்டி ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து செயற்பட்டது.
மலையக மக்கள் முன்னணி கடந்த காலங்களில் பாராளுமன்றத்தில் தமது பிரதிநிதித்துவத்தை இழந்திருந்தது. தற்போது பாராளுமன்ற உறுப்பினர் இராதாகிருஷ்ணனின் வருகையோடு ஒரு பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொண்டுள்ளது. அவரின் முயற்சியில் ஒரு பிரதி அமைச்சைப் பெற் றுக்கொண்டது. பின்னர் அந்த பிரதியமை ச்சர் பதவியையும் இந்த வாரத்தில் இராஜி னாமா செய்துள்ளது. 2010ஆம் ஆண்டு முதல் அரசாங்கத்தின் பங்காளிக்கட்சியாகவே ம.ம.மு தொடர்ந்து செயற்பட்டு வந் தது.
இந்த பின்னணியில் 2005 மஹிந்த சிந்தனை மற்றும் 2010 மஹிந்த சிந்தனை தொலைநோக்கு என்பவற்றில் மலையக மக்களுக்கு வழங்கப்பட்ட உறுதிமொழிகளையும் அதன் நிறைவேற்றம் பற்றியும் பார்ப்பது முக்கியமானதாகும். 2005ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தன்னுடைய தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஜன செவன திட்டம் என்ற ஒன்றின் மூலம் யாவருக்கும் வீடு என அறிவித்திருந்தாலும் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை. இந்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் 100,000 வீட்டுத்திட்டம் என அது குறிப்பிடப்பட்டுள்ளது. அத்தோடு குறைந்த வருமானம் பெறுகின்ற நகரை அண்டிவாழும் மக்களுக்காகவும் இரண்டு பேர்ச்சஸ் நிலம் எவ்வித கட்டணங்களும் இன்றி வழங்கப்படும் என எழுதப்பட்டுள்ளமையும் குறிப்பிட்டு காட்ட வேண்டியதோடு இதில் வேண்டுமென்றெ பெருந்தோட்டத் தொழிலாளர் குடியிருப்புக்களை உள்ளடக்கவில்லை என்றே எண்ணத்தோன்றுகின்றது.
அதேபோன்று 2010 ஆம் ஆண்டு அவருடைய மஹிந்த சிந்தனை தொலைநோக்கில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான நிலவுரிமை தொடர்பில் மிகத் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. I will provide a plot of land to each plantation workers.... என தொடங்குகின்றது. அதாவது ஒவ்வொரு பெருந்தோட்ட தொழிலாளருக்கும் ஒரு பகுதி நிலம் வழங்கப்படும். இதில் அவர்கள் விரும்பிய விடயங்களை (உற்பத்திகளை) செய்து கொள்வதற்கு ஏனைய பிரஜைகளுக்கு உள்ளவாறான உரிமையினை பெற்றுக்கொடுப்பேன் எனவும் குறிப்பிட்டுள்ளது.
மேலும், அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது பெருந்தோட்டங்களில் தற்காலிக குடியிருப்புக்களில் வாழ்கின்றவர்களுக்கான தனியான வீட்டுத்திட்டம் ஒன்று ஜன செவன திட்டத்தின் கீழ் உருவாக்கப்படும். இதன் கீழ் சுமார் 50,000 வீடுகள் கட்டித்தரப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அதில் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்காக உள்ள திட்டத்தின்படி இருபது வருடங்களின் பின்னர் ஏழு பேர்ச்சஸ் இலவச நிலம் உரித்தாகும். எவ்வாறாயினும் இவ்வாறு வழங்கப்படுகின்ற நிலங்களை அவர்களின் உரிமையாக்குவேன் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு அப்பால் கடந்த வருடம் நடைபெற்ற மத்திய மாகாணசபை தேர்தலின்போது ஜனாதிபதியை ஹட்டன் மற்றும் தலவாக்கலை நகரங்களுக்கு அழைத்து வந்து முக்கியமான வாக்குறுதி ஒன்றினை ஜனாதிபதியின் வாயினாலேயே இருவரும் சொல்ல வைத்தனர். அதாவது லயன் வாழ்க்கைக்கு முடிவு கட்டி தனி வீடுகளை மலையக மக்களுக்கு பெற்றுக்கொடுப்பேன். என்பதே அது. தேர்தல் முடிந்து ஓராண்டு பூர்த்தியாகியுள்ள நிலையில் இதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
அதேபோல் 2013ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட முன்மொழிவினை வாசிக்கும்போது ஜனாதிபதி மலையகத்தில் சுமார் 38000 ஹெக்டேயர் பயிரிடப்படாத நிலங்கள் காணப்படுவதாகவும் அதனை பகிர்ந்தளிக்கப்போவதாகவும் குறிப்பிட்டார். பின்னர் அதனை மலையகத்தில் வாழும் வேலையற்ற இளைஞர் யுவதிகளுக்கு கொடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின எனினும் அதன்பின்னர் இரண்டு வரவு –செலவு திட்டங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் இன்றுவரை நடைபெறவில்லை
மேலும் 2014ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் மலையக மக்களுக்காக 50,000 தொடர்மாடி மனைகள் அமை த்துக் கொடுக்கப்படும் என முன்மொழியப்பட்டபோதும் இதுவரை இதற்கான எந்த நிதி ஒதுக்கீடும் செய்யப்படவில்லை. அதேபோல் இம்முறை சமர்ப்பிக்கப்பட்டுள்ள 2015ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டில் வீட்டுத் திட்டம் பற்றி எதுவும் குறிப்பிடப்படாமல் அதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, மேற்குறிப்பிட்ட வாக்குறுதிகள் அனைத்தும் இந்த 10 வருட காலத்தில் நிறைவேற்றப்படவில்லை என்பது யாவரும் அறிந்த உண்மையாகும். எதிர்வரும் காலத்திலும் இதுவே தொடரும். பத்து வருடமாக செய்ய முடியாததையா அடுத்த நான்கு வருடத்தில் செய்து முடி க்க முடியுமா? நான்கு வருடங்கள் என குறிப்பிடக் காரணம் இன்று ஜனாதிபதியின் பதவிக்காலம் யாப்பினால் அன்றி மறைமுகமாக நான்கு வருடங்களாக்கப்பட்டுள்ளன. இதனை நடைமுறை எமக்கு காட்டுகின்றது.
இந்த பின்னணியில் 2015ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் மலையகத்தை பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் செய்யும் அனைத்து தரப்புக ளும் ஜனாதிபதியை ஆதரிக்கும் தீர்மானத்தில் இருந்தன. குறிப்பாக இ.தொ.கா. நிபந்தனையற்ற ஆதரவு என்றும் தொ. தே.ச. ஏழு பேர்ச் காணியை மக்களுக்கு வழங்க உடன்படுகின்றாரோ அவருக்கே எமது ஆதரவு என்றும் ம.ம.மு மலையக மக்களுக்கு ஏழு பேர்ச் காணி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்தன. எனினும் தொ.தே.ச., ம.ம. மு என்பன தமது ஆதரவை விலக்கிக் கொண்ட நிலையில் சாணக்கியமான தொரு ஆதரவினை இ.தொ.கா. முன்வைத்துள்ளது என்பது கணிப்பு. அதாவது தேவையெனில் அரசாங்கத்தை விட்டு வெளியேறுவதற்கு எந்த கடப்பாட்டையும் இவர்கள் கொண்டிருக்கவில்லை.
வீரகேசரி - 14.12.2014
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...