இன்று ஜனாதிபதி தேர்தல் என்றுமில்லாத அளவுக்கு சூடுபிடித்துள்ளது. ஆளும், எதிர்கட்சிகளிலிருந்து கட்சி தாவல்களுடன் ஆரம்பித்த தேர்தல்களம் இன்று போர்களமாக காணப்படுகின்றது.வழமையான ஜனாதிபதி தேர்தல்கள் போல் அல்லாமல் பல்வேறு சர்சைகளுக்கு உட்பட்டதால் ஜனாதிபதி தேர்தல் விமர்சனங்களுக்குட்பட்டதாக உள்ளதை காணக்கூடியதாகவிருக்கிறது.
1977 ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் 4/5 பெரும்பான்மையைப் பெற்று ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிபீடம் ஏறியது.1978 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவினால் கொண்டுவந்த அரசியல்யாப்பின் பிரகாரம் ஜனாதிபதி ஆட்சி முறையும் விகிதாசாரத் தேர்தல் முறையும் அமுலுக்குக் கொண்டுவரப்பட்டன. இவ்வாட்சி முறையின் கீழ் ஜனாதிபதியும் பாராளுமன்ற உறுப்பினர்களும் வெவ்வேறு தேர்தல்களின் மூலம் வெவ்வேறு காலங்களில் தெரிவு செய்யப்படுவதைக் காணக்கூடியதாகவுள்ளது,
ஜனாதிபதி தனது அதிகாரக் கதிரையில் அமர்ந்தபடி பாராளுமன்றத்துக்கான தேர்தல்களை நடத்துகின்றார். தனது கட்சியைச் சேர்ந்தவர்களையே பாராளுமன்றத்திற்கும் தெரிவு செய்யுமாறு இவர் நாட்டுமக்களை கேட்டுக்கொள்கின்றார்.. ஜனாதிபதியுடன் ஒத்துப்போய் ஏதாவது நன்மைகளைப் பெறவேண்டுமாயின் பாராளுமன்றத்திலும் அவரது கட்சிக்காரர்களே இருக்க வேண்டுமென்று எண்ணி மக்களும் ஜனாதிபதியின் கட்சிக்கே வாக்களிக்கின்றனர். மறு பக்கம் பாராளுமன்றம் உறுதியான அதிகாரத்துடன் இருக்கும்போது ஜனாதிபதித் தேர்தலை நடத்துகின்றனர்,
அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் தமது கட்சியைச் சேர்ந்த ஜனாதிபதி வேட்பாளருக்கு வாக்களிக்கும்படி வாக்காளரைக் கோருகின்றனர். பாராளுமன்றத்துடன் ஒத்துப்போகும் ஜனாதிபதி இருந்தால்தான் நாட்டில் ஸ்திரத்தன்மையும் அபிவிருத்தியும் ஏற்படுமென்று எண்ணி மக்களும் ஆளும் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருக்கே வாக்களிக்கின்றனர். இன்றுவரை இந்த நடைமுறையை பின்பற்றிவருவதை நாம் அவதானிக்கலாம். இவ்வாறு ஒரே கட்சி தொடர்ந்தும் நீண்டகாலத்திற்கு ஆட்சியில் இருக்க முற்படும்போது ஜனநாயகத்தின் இருப்பு கேள்விகுறியாகுகின்றது,
நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி ஆட்சி முறைமை நடைமுறையில் இருந்தால் நாட்டின் அரசியல் நிலைமை ஸ்திரமாக இருக்கும். சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளை இலகுவாகத் தீர்த்து வைக்க முடியும் என்றெல்லாம் சிலர் வாதிடுகின்றனர். முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன 1978 இல் இருந்து 1988 வரையும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாகவும் பாராளுமன்றத்தில் 4/5 பெரும்பான்மையைக் கொண்டவராகவும் ஆட்சி நடத்தியபோதும் என்னென்ன பிரச்சினைகளைத் தீர்த்துவைத்தார்? வேலையில்லாப் பிரச்சினை, பொருளாதாரப் பிரச்சினை எதையுமே தீர்த்து வைக்கவில்லை,
1983 ஜூலை இன படுகொலைகளை தடுத்து நிறுத்த முயற்சிக்காமல் ’தமிழ்மக்களுக்குயுத்தம் என்றால் யுத்தம் சமாதானம் என்றால் சமாதானம்’ என்று அறிக்கை விட்டு இனப்பிரச்சினையை மேலும் சிக்கலான கட்டத்திற்குத் தள்ளிவிட்டார். என்பதை எந்தத் தமிழ் மக்கள் மறந்து விட மாட்டார்கள்.இக்கலவரத்தினால் அதிகளவில் பாதிக்கப்பட்டவர்கள் மலையக தமிழர்களே என்பதையும் மறுப்பதற்கில்லை .முன்னாள் ஜனாதிபதி ஆர்.பிரேமதாஸ வின் மறைவுக்கு பின் அதிர்ஷ்ட்டவசமாக ஜனாதிபதி பதவிக்கு வந்த டி.பி.விஜேதுங்க ”பெறும்பான்மை மக்கள் பெரும் விருட்சம்.அதில் சுற்றிபடரும் கொடிகளே சிறுபான்மை மக்கள்” எனும் சாணக்கியமற்ற அப்பட்டமான இனவாதப்பேச்சினால்,சிறுபான்மை மக்களும், ஜேவிபி யினரை கொடூரமாக அடக்கி சிங்கள இளைஞர்களை ஆயிரக்கணக்கில் கொன்றதால் சிங்கள மக்களும் ஐதேக அரசாங்கத்தில் அதிருப்தி கொண்டிருந்தனர்,
1994 ஆம் ஆண்டில் ஐக்கிய தேசியக் கட்சியின் அராஜகத்தைக் கூண்டோடு அழிப்பதாகக் கூறித் தேர்தலில் நின்ற சந்திரிகா அம்மையார் தமிழ் மக்களின் ஒட்டுமொத்த வாக்குகளைப் பெற்று 62 சதவீத வாக்குகளுடன் வெற்றிவாகை சூடி ஜனாதிபதியானார். 62 சதவீத வாக்கு என்பது இதுவரையில் யாரும் பெறாத வாக்குகளாகும். இவரும் இனப்பிரச்சினையைத் தீர்த்து வைக்க எதுவும் செய்யாததோடு, ஆட்சிக்கு வந்த ஒருவரிடத்திலேயே யாழ். குடாநாட்டை முற்றுகையிட்டு மக்களை அகதிகளாக வெளியேற்றினார். இவ்வாறு தமிழ் மக்களின் வாக்குகளை அமோகமாகப் பெற்றுக்கொண்டு பின் அவர்கள் பக்கமே திரும்பி பார்க்காத கைங்கரியத்தையே ஜனாதிபதிகள் எப்போதும் செய்துவந்திருக்கின்றனர். 2005 ஆம் ஆண்டுத் தேர்தலில் வென்று ஜனாதிபதியாக வந்த மகிந்த ராஜபக்ஷ வும் சிறுபான்மை மக்களுக்கு எதனை கொடுத்தார் என்பதனை நாடே அறியும்,
விடுதலை புலிகளை போரில் வென்றதாக கூறி அந்த ரத்தம் காயும் முன்பே தன்பதவிகாலத்தை நீடித்துக்கொள்ள வழி தேடினார்.அதற்காக தான் போரில் வெற்றியடைய காரணமான தன் படைதளபதி சரத்பொன்சேகாவையே உள்ளே தள்ளியவர்.பொதுவாகவே எதிர்கட்சிகளிடமும்,மக்களிடமும் ஒரு போக்கு காணப்பட்டது.என்ன இரண்டு முறைதானே ஆள முடியும்,ஆட்டம் காட்டமுடியும் பிறகு வீட்டுக்கு போய்தானே ஆகவேண்டும்? எனும் எண்ணம் தான் அது.அனைவருக்கும் ஞாபகமிருக்ககூடும்,
முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன மரணித்தபோது தேசிய துக்க தினமாகவோ, அரசவிடுமுறையாகவோ,ஏன் அரச ஊடகங்களில் மரண ஊர்வலம் நேரடியாக காட்டக்கூடவோ இல்லை. ஷான் விக்ரமசிங்ஹவின் டி.என்.எல் மட்டுமே ஒளிபரப்பியது. ஆகவே இரண்டுமுறை ஆட்சி என்பதில் யாரும் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் வாய்புக்காக காத்திருந்தனர். ஆனால் மஹிந்த அதற்கும் வைத்தார் ஆப்பு.விடுதலை புலிகளை வெற்றிகொண்டதை தன் குடும்ப வெற்றியாக காட்டி அதன் மூலம் அரசியல் இலாபம் தேட முனைகிறார்.தானும் தன்னை சார்ந்தவர்களுமே தொடர்ந்து பதவியில் இருக்க வேண்டும் என்பதற்காகவே, இலங்கை அரசியலமைப்பின் 18ஆவது சீர்திருத்தத்தை மஹிந்த கொண்டுவந்தார்,
இலங்கை அரசியலமைப்பின் 18ஆவது சீர்திருத்தம் இலங்கையை ஆளும் மகிந்த இராசபக்சதலமையிலான அரசினால் முன்மொழியப்பட்ட ஒரு அரசியல் சீர்திருத்தமாகும். இந்தச் சீர்திருத்தம் மூலம் அரச அதிபரின் அதிகாரங்கள் மேலும் அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அரசியல் சீர்திருத்தம் மூலம் அரச அதிபர் தேர்தலில் இரண்டு முறை மட்டுமே ஒருவர் போட்டியிடாலாம் என்ற நிலை நீக்கப்பட்டு ஒருவர் எத்தனை தடவையும் போட்டியிடும் அனுமதி வழங்கபடும். இதேவேளை சுயாதீன ஆணைக்குழுக்கள் இந்ந திருத்தம் மூலம் அரச அதிபரின் கட்டுப்பாட்டிற்குள் வருகின்றது. மேலும் தேர்தல் ஆணையாளரின் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்படுவதுடன் அரச சொத்துக்களை தேரதல் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்துவதை கட்டுப்படுத்தும் உரிமையையும் தேர்தல் ஆணையாளர் இழக்கின்றார். தேர்தல் காலங்களில் தனியார் ஊடங்கள் செயற்படுவதற்கான விசேட கட்டுப்பாட்டு முறையும் இந்த அரசியலமைப்பு சீர்திருத்தம் மூலம் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது முழுக்க முழுக்க தன்னையும் தன் குடும்ப ஆட்சியையும் நிலைநிறுத்திக்கொள்ள கொண்டுவந்த ஓர் சட்டமாகும்,
தன் செல்வாக்கால் உயர்நீதிமன்றத்தை வளைத்துப்போடக்கூடிய மஹிந்த
இந்த அரசியலமைப்புச் சீர்திருத்தத்தை நிறைவேற்ற பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு தேவை பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவை பெற்றால் மட்டும் போதும் என்றும் பொது சன வாக்கெடுப்பு தேவையில்லை என்றும் உச்ச நீதிமன்றத்தை அறிவிக்க வைப்பதில் வெற்றிகண்டுள்ளார்,
மஹிந்தவுக்கு பின் ஜனாதிபதியாகும் கனவிலுள்ள கட்சிகாரர்களுக்கும், எதிர்கட்சிகாரர்களுக்கும் இது பெருத்த அடியாகும். மஹிந்தவுக்கு எதிராக கிளம்பியிருக்கும் கூட்டு இந்த அடிப்படையில் இணைந்த ஒன்றாகவே கருத வேண்டியுள்ளது
எது எப்படியாயினும். மஹிந்தவும், பொதுவேட்பாளர் அணியும் வெற்றி பெற்றே ஆகவேண்டிய நிர்பந்தத்திலுள்ளார்கள் அதற்கான காரணம் தான் என்ன?
சின்னையா இரவிந்திரன்
செயலாளர்
புதிய மலையகம்
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...