Headlines News :

காணொளி

ஜனாதிபதி விருது

ஜனாதிபதி விருது
நமது மலையகத்துக்கு

சுவடி

மகாவம்சத்தில் கோட்டபாயவும்! கோட்டபாயவின் மகாவம்சமும் - என்.சரவணன்


10.11.2019 அன்று மகாவம்சத்தின் இறுதிப் பாகம் பூரணப்படுத்தப்பட்டு பெரிய விழாவொன்றில் அது வெளியிட்டுவைக்கப்பட்டது. பௌத்த பிக்குகளால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வுக்கு தலைமை தாங்க அழைக்கப்பட்டிருந்தவர் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபாய. சரியாக ஜனாதிபதித் தேர்தலுக்கு ஒருவாரத்துக்கு முன்னர் தான் இது நிகழ்ந்தது. இலங்கையிலேயே பெரிய இனவாதக் கோட்டை என்று கருதப்படும் கிரிபத்கொட என்கிற பிரதேசத்தில் இது நிகழ்ந்தது. அங்கு தான் களனி பன்சலையும் இருக்கிறது. புத்தரின் மூன்றாவது இலங்கை விஜயம் இந்த களனியில் நிகழ்ந்ததாக மகாவம்சம் சொல்கிறது. 

அரசுக்கு வெளியில்; வெவ்வேறு நபர்களால் உரையெழுதப்பட்ட மகாவம்சப் பிரதிகள் சந்தையில் உண்டு. இது கிரிபத்கொட ஞானானந்த தேரர் முதலாவது தொகுதியை மூன்று பகுதிகளாக எளிமையான சிங்கள விளக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். 

பௌத்த விகாரைகளுக்கும், பாடசாலைகளுக்கும், நூலகங்களுக்கும் இதை இலவசமாக விநியோகிப்பதாக விளம்பரம் செய்து வருகிறார்கள். “சிங்களவர்களே மீண்டும் எழுங்கள்” என்கிற சுலோகத்துடன் அந்த விளம்பரங்கள் உள்ளன. 

மேற்படி மகாவம்ச வெளியீடு குறித்து தமிழில் இந்த முக்கிய நிகழ்வு குறித்து செய்தியாகக் கூட எந்த ஊடகங்களிலும் வெளிவரவில்லை என்பது இன்னொரு கதை. 

இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்த கிரிபத்கொட ஞானானந்த தேரரின் உரையில் இப்படி குறிப்பிடுகிறார். 
“சிங்கள இனமின்றி பௌத்தமும் இல்லை. பௌத்தமின்றி சிங்கள இனமுமில்லை. இதனை தெளிவாக்குகின்ற நூலே மகாவம்சம்.” 
இனத்தின் ஆதிக்கமும், மதத்தின் ஆதிக்கமும் ஒரு சேர கோலோச்சும் மரபுக்கு மகாவம்சத்தையே அவர்கள் மூலமாகக் கொள்வதை அறிந்திருப்பீர்கள். 

முதல் பிரதியை கோட்டபாயவின் கரங்களில் ஒப்படைத்துவிட்டு ஞானானந்த தேரர் மீண்டும் இப்படி கூறுகிறார். 
“துட்டகைமுனு எல்லாளனுடன் போர் புரிவதற்கு புறப்பட்ட போது மூன்று முக்கிய பௌத்த மந்திரங்களை உச்சாடனம் செய்துகொண்டு சென்றார். இந்த மந்திரங்களை உச்சாடனம் செய்துகொண்டு தான் துட்டகைமுனு எல்லாளனுடனான போரில் வென்றார். இப்போது நாம் எல்லோரும் அந்த உச்சாடனத்தை கோட்டாபய அவர்களின் தலைமையில் செய்யப்போகிறோம். சகல எதிரிகளையும் வீழ்த்தி அரசை அமைப்பதற்கு பௌத்த முப்பீடங்களின் ஆசீர்வாதம் கிடைக்கும்.” 
நன்றாகக் கவனியுங்கள் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்த இறுதிவாரத்தில் இந்த மந்திரங்களை ஓதச்சொல்கிறார். 

இதனைத் தொடர்ந்து அத்தேரர் அம்மந்திரங்களைக் கூறக் கூற கோட்டபாய மீளக் கூறுகிறார். 

பின்னர் மகாவம்சத்தின் உள்ளடக்க கதைகளைப் பற்றி அவர் அரை மணித்தியாலத்துக்கும் மேல் ஒரு உரையை ஆற்றுகிறார். அதில் தொடர்ச்சியாக தமிழ் ஆக்கிரமிப்பாளர்களைப் பற்றியும் அவர்களை சிங்கள அரசர்கள் எப்பேர்பட்ட வீரத்துடன் போரிட்டு விரட்டியடித்தார்கள் என்பதைப் பற்றியும் விளக்குகிறார். அப்படியே ஓரிடத்தில் “இலங்கை – இந்திய உடன்படிக்கை செய்துகொண்ட போது திருகோணமலை சீன துறைமுகத்தில் இருந்த பௌத்த விகாரையின் விகாராதிபதி; அந்த ஒப்பந்தத்தை எதிர்த்து கோசம் எழுப்பிய சிங்களவர்களை தணிக்க முயற்சித்த வேளை; இந்தியப் படைகளை எதிர்க்க தூண்டினார் என்று சந்தேகித்து அத்தேரரை அங்கேயே சுட்டுக்கொன்றனர்” என்று ஒரு புழுகை உணர்ச்சிபொங்க அவிழ்த்துவிடுகிறார். தலையை மேலும் கீழும் ஆட்டியபடி அதனை கோட்டபாய ஆமோதிப்பதை காணொளி காட்டுகிறது. 

இதில் உள்ள வேடிக்கை என்னவென்றால் இந்திய இலங்கை ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டவேளை இந்திய அமைதி காக்கும்படை இலங்கைக்கு வந்திருக்கவில்லை என்பது தான்.  (1)

இதன்மூலம் அவர் கூற வருவது என்னவெனில் அமெரிக்காவுடனான மில்லேனியம் செலேன்ஜ் கொப்பரேஷன் (MCC) உடன்படிக்கையை இரத்து செய்யவேண்டும் என்றும் இலங்கை இந்திய ஒப்பந்தத்தை விட மோசமான ஒப்பந்தம் இது என்றும் கூறுகிறார். கோட்டபாய அதற்கும் தலை அசைக்கிறார். இப்போது கோட்டபாயவின் ஆட்சி அமைக்கப்பட்டுள்ள நிலையில் தென்-மத்திய ஆசியப் பிராந்தியப் பொறுப்பாளரான எலிஸ் ஜே.சார்ல்ஸ் அந்த ஒப்பந்தம் எந்தவித தடையுமின்றி நடைமுறைப்படுத்தப்படும் என்று நவம்பர் 25 அன்று தெரிவித்திருந்தார். 

கோத்தபாயவின் தேர்தல் வெற்றிக்கான வேலைத்திட்டத்தில் பிக்குமார் பல்வேறு முனைகளின் பங்கெடுத்திருந்தார்கள். அப்பேர்ப்பட்ட ஒரு கூட்டம் தான் மேற்படி மகாவம்ச நூல் வெளியீட்டுக் கூட்டம். 

கோத்தபாயவின் வெற்றிக்காக இம்முறை பன்சலைகளை மையப்படுத்திய ஆதரவுத் திரட்டல் எப்படி நிகழ்ந்தது என்பது பற்றி தனியாக விபரிக்கலாம். அங்கிருந்தே சிங்கள பௌத்த வாக்குகளை முழுமையாகக் கைப்பற்றுவதற்கான வலைப்பின்னல் கட்டமைக்கப்பட்டது. உள்ளூராட்சி சபை உறுப்பினர்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து அவர்களின் மூலம் அடிமட்ட மக்களிடம் போய் சேர்த்தார்கள், பணத்தாலும் நம்பிக்கையாலும், அமைப்பாளர்களை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து களத்தில் இறக்கினார்கள். இவற்றுக்கெல்லாம் “சிங்கள பௌத்தத்தைப் பாதுகாக்க இருக்கும் ஒரே தலைவர்”, “இறுதி சந்தர்ப்பம்” என்றெல்லாம் தான் பிரச்சாரங்கள் முடுக்கிவிடப்பட்டன. 

மகாவம்சத்தில் கோட்டாபய 
கோட்டாபய என்கிற பெயர் சிங்களத்தில் மிகவும் அரிது. இந்தப் பெயரின் மூலத்தைப் பற்றி அறிகிற போது மகாவம்சத்தில் வரும் முக்கிய பாத்திரமாக அப்பெயர் இருப்பதை அறிய முடிகிறது. 

துட்டகைமுனுவின் தந்தை தான் காவன்திஸ்ஸ (தமிழில் பல இடங்களில் காக்கவண்ணதீசன் என்றும் அழைக்கப்படுகிறார்). காவன்திஸ்ஸவின் தகப்பனின் பெயர் தான் கோட்டபாய. அதாவது துட்டகைமுனுவின் பாட்டனார் தான் கோட்டபாய. 

அந்தக் காலப்பகுதியில் அரசன் காவன்திஸ்ஸ தமிழ் அரசனுக்கு திறை செலுத்திவந்தான்” என்று “ராஜாவலிய” கூறுகிறது. (2)

மகாநாம தேரர் எழுதிய மகாவம்சத்தின் முதலாவது மூலத் தொகுதியில் அதிகப்படியான இடங்கள் துட்டகைமுனுவை நாயகனாகக் கொண்ட கதைகள் இருப்பதைக் காணமுடியும். பல சாகசவாதக் கதைகள் நிரம்பிய அந்த பாத்திரத்தின் பிரதான மையக் கதை தமிழ் மன்னன் எல்லாளனைத் தோற்கடிப்பதே. எல்லாளனைத் தோற்கடிப்பதற்காக துட்டகைமுனு மேற்கொள்ளுகிற போர்த் தயாரிப்புகள் குறித்தே அதிகம் நிறைய கூறப்படுகின்றன. மொத்த 37 அத்தியாயங்களில் 15-32 வரையான 16 அத்தியாயங்களைக் கொண்டது அப்பகுதி. 
மகாவம்சத்தின் 23வது அத்தியாயம் துட்டகைமுனுவின் படையில் இருந்த அதி முக்கிய பத்து இராட்சச மல்லர்கள் பற்றிய பின்னணி குறித்து 103 செய்யுள்களில் விபரிக்கப்படுகிறது. சிங்களத்தில் இவர்களை “தச மகா யோதயோ” என்று அழைப்பார்கள்.(3)  இவர்களை மன்னர் காவன்திஸ்ஸ ஒவ்வொருவராக அடையாளம் கண்டு அவர்களை துட்டகைமுனுவிடம் எப்படி சேர்க்கிறார் என்பது பற்றித் தான் அந்த 23வது அத்தியாயம் விபரிக்கிறது. மேலும் அவர்கள் ஒவ்வொருவரையும் சிறந்த பத்துப் போர்வீரர்களைத் தெரிந்து சேகரிக்குமாறு பணிக்கிறார் காவந்திஸ்ஸ. இப்படி அந்த நூறு பேரும் மேலும் பத்து போர் வீரர்களைத் தெரிவு செய்கிறார்கள். இந்த வழிமுறையின் மூலம் இறுதியில் பதினோராயிரத்து நூற்றுப்பத்து வீரர்களைக் கொண்ட சேனையை உருகுனுவில் கட்டியெழுப்பியதாக மகாவம்சம் கூறுகிறது (அத்தியாயம் 23இல் 98-100வரையான செய்யுள்கள்). காவந்திஸ்ஸவின் இந்த ஆட்சேர்ப்பு உத்தியை அவருக்கு முன்னர் அவரது தகப்பன் கோட்டபாயவும் இதே போன்று பத்து இராட்சச மல்லர்களைப் போர்த் தளபதிகளாக வைத்துக்கொண்டு தான் உருகுணு ராஜ்ஜியத்தைப் பாதுகாத்தார் என்கிறது மகாவம்சம். 

இந்த பிரதான இராட்சத மல்லர்கலான நந்தமித்ர, வேலுசுமன, மகாசோன, கோட்டைம்பர, லுஸ்ஸதேவ, லப்பியவசப, கஞ்சதேவ, தேரபுத்தாபய, சுரநிமலஹரன ஆகிய இந்த பத்து பேரின் பெருமைகளையும், வீரப்பிரதாபங்களையும் அந்த அத்தியாயம் விபரிக்கிறது. இதை மேலும் விரிவாக்கி “தசமகா யோதயோ” என்கிற தலைப்பில் பல நூல்கள் சிங்களத்தில் வெளியிடப்பட்டிருக்கின்றன. இவர்களைப் பற்றி தனித்தனியாக சிறுவர்களுக்கான சித்திரக் கதைகளாகவும் பல சிறு நூல்கள் உள்ளன. கல்வி அமைச்சின் பாடத்திட்டத்திலும் இவர்கள் பற்றிய விபரங்கள் சிங்களத்தில் உள்ளன. 

மேற்படி 23வது அத்தியாயத்தில் 55-63வது வரையான செய்யுள்கள் கோட்டபாய சேர்க்கப்பட்ட விபரம் காணப்படுகிறது. 

“கிரி எனும் பிரதேசத்தில் வித்திக என்கிற கிராமத்தில் மகாநாக என்பவனின் மகனொருவன் பத்து யானைகளின் பலத்தைக் கொண்டிருந்தான். குள்ளமான உருவத்தை அவன் கொண்டிருந்ததால் கோதக என்று அவனை அழைத்தார்கள். அவனது ஆறு சகோதரர்களும் அவனைக் கேலி செய்வது வழக்கம். (இன்றைய கோட்டபாய சகோதர்களும் 6 பேரைக் கொண்டவர்கள் என்பதும் வியப்புதான்.) ஒருமுறை பயிரிடுவதற்காக சென்றிருந்தவேளை அவன் செய்யவேண்டிய பகுதியை விட்டுவிட்டு வந்திருப்பதாகக் கூறினார்கள். உடனே அங்கு சென்ற கோதகன் அங்கு இருந்த “இம்பர” மரங்களைப் பிடுங்கி எறிந்து தரையை மட்டப்படுத்திவிட்டு வந்தான். 

அவன் செய்த அதிசய வேலையைப் பார்த்து வியந்த சகோதரர்கள் அவனைப் புகழ்ந்தனர். இதனால் அவனுக்கு “கோதைம்பர” என்கிற பெயர் கொண்டு அழைத்தனர். கோத்தபாய என்றும் அவன் அழைக்கப்பட்டான். கோத்தபாயாவைப் பற்றி கேள்வியுற்ற அரசன் அவனை அழைத்து கெமுனுவுடன் (துட்டகைமுனு என்கிற பெயர் பின்னர் தான் வருகிறது.) இருக்குமாறு கட்டளையிட்டான். 

மகாவம்சத்தின்படி எல்லாளனுடனான போரில் முக்கியமான சமர் விஜிதபுரத்தில் நான்கு மாதம் நடக்கிறது. நான்குமாதங்கள் முற்றுகையில் இருந்த இந்த நகரம் மூன்று அகழிகளாலும், பெரும் சுவரினாலும் பாதுகாக்கப்பட்டிருந்தது. தெற்குவாயிலைக் பாதுகாத்து வந்தவன் எல்லாளனின் படையில் இருந்த இராட்சச உருவத்தைக் கொண்ட சீர்ஷகுண்ட என்கிற தமிழன். அவனை எதிர்கொள்ள கோட்டபாயவை துட்டகைமுனு அனுப்புகிறான். கோட்டபாய இரண்டு ஆளுயரத்துக்கு மேலே பறந்து தனது வாளால் சீர்ஷகுண்டனின் தலையை சீவி வேறாக்கி பறக்கவிடுகிறான். விஜிதபுரத்தை வெற்றி கொள்வது அதன்பின்னர் தான் சாத்தியமாகின்றது. ஒரு மரத்தைப் பிடுங்கி சுழற்றி சுழற்றி வீசியடித்து எல்லாளனின் படையை துவம்சம் செய்தானாம் கோட்டபாய. 

போர் வெற்றியின் பின்னர் துட்டகைமுனு பல பரிசுகளையும் நிலங்களையும் கோட்டபாயவுக்கு வழங்குகிறான். கோட்டபாய பாரிய அளவு விவசாயத்தில் ஈடுபடுகிறான். அவனே கட்டிய குளத்துக்கு “கோட்டைம்பர குளம்” என்று அழைக்கப்பட்டது. பிற்காலத்தில் அங்கே கோட்டபாயவை சிறுதெய்வமாக வழிபட்டனர் அங்கிருந்த மக்கள். 

தனது அழகிய மனைவியை அடைய முற்பட்ட ஒரு அரக்கக் குல தலைவனைச் சண்டைக்கு வரவழைத்து அவனைக் கொன்றுபோட்ட கோட்டபாய பின்னர் அந்த வெற்றியைக் களிப்பதற்காக மதுவருந்திவிட்டு தனது சகாக்களுடன் துட்டகைமுனுவைக் காணவந்தபோது தூரத்திலிருந்தே அவனின் வரவை தடுத்து திருப்பியனுப்பி விட்டான் துட்டகைமுனு. அப்படி விரட்டப்பட்டதால் மனம் நொந்து அன்றைய தினமே நாகதீபத்துக்குச் சென்று அங்கிருந்து இந்தியாவிலுள்ள காவேரிப்பட்டினத்துக்குச் சென்று பின்னர் இமாலய அடிவாரத்துக்குச் சென்று துறவியாக மாறியதாக தூபவம்சம் குறிப்பிடுகிறது. 

ஆக கோட்டபாய என்கிற பெயருக்குப் பின்னால் இருந்த சரித்திர முக்கியத்துவமும், மகாவம்ச வரலாற்றுப் பாத்திரத்தின் ஒப்புமையும் இன்றைய கோத்தபாயவுடன் ஒப்பிடுகிறது சிங்கள பௌத்த தரப்பு. எல்லாளனையும் 32 தமிழ் மன்னர்களையும் தோற்கடித்து இலங்கையைச் சிங்கள பௌத்த குடையின் கீழ் ஒன்றுபடுத்திய துட்டகைமுனுவுக்குப் பின்னர் பிரபாகரனைத் தோற்கடித்து இலங்கையை ஐக்கியப்படுத்திய தலைவனாக கோத்தபாயவைக் கொண்டாடுகிறது சிங்களத் தரப்பு. 

கோட்டபாயவின் மகாவம்சம் 
துட்டகைமுனு தனது வெற்றியின் பின் எந்த அனுராதபுரத்துக்கு பெரும் படைகளுடனும், மக்கள் கூட்டத்துடனும் வந்து கொண்டாட்டத்துடன் முடிசூட்டிக்கொண்டானோ அதே அனுராதபுரத்தில் துட்டகைமுனுவால் கட்டப்பட்ட ருவன்வெலிசாய தூபம் அமைந்துள்ள பகுதியில் தேர்தல் வெற்றியுடன் சென்ற கோத்தபாய அங்கே பெருமளவு ஆதரவாளர்கள் புடைசூழ தனது சத்தியப்பிரமாணத்தை செய்துகொண்டது தற்செயல் நிகழ்வல்ல என்பதை நாம் கவனிக்கவேண்டும். (4)  

அதே சத்தியப்பிரமாண உரையில் தான் சிங்கள பௌத்த வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டவன் என்று கோத்தபாய வெளியிட்ட கருத்தும்கூட இனிவரும் காலத்தைப் பற்றிய நாசூக்காக ஆரூடம் சொல்லும் குறியீட்டுக் வெளிப்பாடு தான். 

பதவிக்கு வந்ததுமே நவம்பர் மாத இறுதியில் தனது முதலாவது வெளிநாட்டு விஜயமாக இந்தியாவுக்குச் சென்றிருந்த போது அங்கு தி ஹிந்து பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில் (5) “சிங்கள மக்களின் விருப்பமின்றி அதிகாரப் பகிர்வு கிடையாது” என்றும் “13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தப்போவதில்லை என்றும் அது பெரும்பான்மை (சிங்கள) மக்களின் விருப்புக்கு எதிரானது” என்றும் குறிப்பாக “பொலிஸ் அதிகாரத்தை வழங்குவது போன்றவற்றைச் செய்யவே முடியாது” என்றும் அவர் தெரிவித்திருந்தார். தமிழர்களுக்குக் குறைந்தபட்ச சொற்பத் தீர்வைக் கூட வழங்கமாட்டேன் என்கிற இந்த அறிவிப்பை அவர் சிங்களத்தில் செய்யவில்லை ஆங்கிலத்தில் செய்திருக்கிறார். அதன் மூலம் உலகுக்குத் துணிச்சலாக சொல்லியிருக்கிறார். அவர் இலங்கையில் கூறவில்லை எந்த இந்தியா அந்த அதிகாரத்தை வழங்கவேண்டும் என்று உடன்பாடு பெற்றிருந்ததோ அதே இந்தியாவிடம், இந்தியாவில் வைத்து அதுவும் பிரதமர் மோடி அதிகாரப்பரவலாக்கம் குறித்து உரையாடிய கையோடு வந்து கூறியிருப்பதைக் கவனிக்க வேண்டும். இது சிங்கள பௌத்த வாக்குகள் கொடுத்த தைரியம் என்பதை நினைவிற் கொள்ள வேண்டும்.  (6)

என்று இந்திய ஊடகமான “Headlines Today” என்கிற தொலைக்காட்சிக்கும் (11.08.2011) பகிரங்கமாக நேர்காணல் கொடுத்திருந்தார். 

சிங்கள பௌத்த சக்திகள் இப்போது பகிரங்கமாகக் கூறும் ஒரு கதையுண்டு. அதாவது 
“உலகிலேயே தோற்கடிக்க முடியாத புலிகள் இயக்கத்துடன் போர் செய்து வெற்றி பெற முடியாது பேச்சுவார்த்தை நடத்துங்கள் என்று அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட பல நாடுகள் எங்களுக்கு எச்சரிக்கை செய்தபோது அவர்களையெல்லாம் கணக்கிற்கொள்ளாமல் யுத்தத்தை முன்னெடுத்து அவர்களை முழுமையாக அழித்துக் கட்டினோம். அது போலத் தான் சிறுபான்மை இனங்களின் ஆதரவின்றி இலங்கையின் அரச தலைவர் தெரிவாக முடியாது என்று சொல்லிக்கொண்டிருந்ததை உடைத்துத் தனிச் சிங்கள பௌத்த மக்களால் இலங்கையின் தலைவரை தெரிவு செய்ய முடியும் என்பதையும் நிரூபித்துக் காட்டியிருக்கிறோம்”
என்கிறார்கள். 

இந்த துணிச்சலுடன் தான் தற்போது கோத்தபாய தனது சிங்கள பௌத்த நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றத் தொடங்கியிருக்கிறார். 

2015 ஆம் ஆண்டுக்கு முன்னர் இருந்த கோத்தபாய அல்ல இப்போதிருக்கும் கோத்தபாய. இந்த ஐந்து வருடங்களுக்குள் எதிரியைப் பற்றியும், தனக்கெதிராக வளர்ந்தெழுந்திருந்த கருத்துக்களைப் பற்றியும் அறிந்தும், கற்றும் வியூகங்களை மாற்றியமைத்துக்கொண்டு களமிறங்கிய கோத்தபாயவே இன்றைய கோத்தபாய. இப்போது அவரால் ஒரு செயற்கைப் புன்னகையைப் பேணியபடி வளம் வர முடிகிறது. கண்டபடி வாயிலிருந்து ஆத்திரங்களோ, ராஜதந்திரமற்ற கருத்துக்களோ வெளியிடப்படுவதில்லை. கூலிக்கமர்த்தப்பட்ட தேர்ந்த கலைஞர்களால் உடல்மொழி கட்டமைக்கப்படுகிறது. 

ஆனால் இந்த புறத்தோற்றத்துக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் கோத்தபாயவின் சிங்கள பௌத்த அராஜக அகத் தோற்றத்தை நாம் அவரால் நடைமுறைப்படுத்தப்படுகின்றவற்றைக் கொண்டு தான் காண்கிறோம். எனவே தான் பெருவாரி சிங்கள பெளத்தர்களைக் கொண்ட (முஸ்லிம்கள் அற்ற) அமைச்சரவை, தனிச்சிங்கள தேசிய கீத அறிவிப்பு, இராணுவமயப்படுத்தும் வேலைத்திட்டம் அனைத்தும் கோத்தபாயவின் நிர்வாகத்தில் நிகழ்கிறது. கோத்தபாய இது குறித்து நேரடியாக எல்லாம் கருத்து கூறி அம்பலப்படமாட்டார். 

கோத்தபாயவின் அராஜக நடவடிக்கைகளுக்கு விளக்கம் கூறுவதைப் பௌத்த பீடங்கள் கேயேற்றுள்ளதைக் கவனிக்க வேண்டும். சுவிஸ் தூதுவராலய ஊழியர் விவகாரத்துக்கும் பௌத்த பிக்குகள் தான் சுவிஸ் தூதுவராலயத்தை கடிந்து கண்டனம் வெளியிடுவார்கள். 

தேர்தலுக்கு முன்னர் அமெரிக்க MCC ஒப்பந்தத்தை எதிர்த்து பிரச்சாரம் செய்த அதே பிக்குகள் தேர்தலுக்குப் பின்னர் அதைப் பூசி மெழுகி நியாயப்படுத்தி அதன் அவசியத்தை வலியுறுத்தி கோத்தபாய அதைச் செய்தல் சரியாகத் தான் இருக்கும் என்று ஊடகப் பிரச்சாரங்களை முன்னெடுக்கிறார்கள். 

சிங்கள பௌத்த சித்தாந்தத்துக்கு கடந்த மூன்று தசாப்தகாலமாக தலைமையேற்று புலிகளையும் தோற்கடிப்பதில் பெரும் பங்கு வகித்த சம்பிக்க ரணவக்கவின் கைதைக் கூட அவரால் வளர்த்தெடுக்கப்பட்ட சிங்கள பௌத்த பிக்கு தரப்பு நைசாக விலகிக் கொள்வதும், அக்கைதை நியாயப்படுத்துவதையும் இந்த மகாவம்சப் பிறழ்வைக் கொண்ட பிக்குகள் தான் செய்கிறார்கள். இன்னொருவகையில் கோத்தபாய இன்று ஏறி நிற்கும் தளத்துக்கான அத்திவாரத்தை அன்றே இட்டுக்கொடுத்தது சம்பிக்க தான் என்று கூட கூறலாம்.

பிக்குமாரே கோத்தபாயவைப் பாதுகாக்கவும், நியாயப்படுத்தவும், போராடவும் முன்னணி படையாக பிக்குகள் இன்று களத்தில் இறக்கிவிடப்பட்டுள்ளனர் அன்றைய மகாவம்சத்தைப் போல.

டிசம்பர் 10ஆம் திகதியன்று வெளியிடப்பட்ட வர்த்தமானிப் பத்திரிகையின் மூலம் அரச நிறுவனங்கள் அனைத்தும் பல்வேறு அமைச்சரவைகளுக்குப் பிரிக்கப்பட்டன. (7) அப்படிப் பிரிக்கப்பட்டவற்றுள் 168 நிறுவனங்களை ராஜபக்ச குடும்பத்தின் கீழ் கொண்டுவந்தனர். 12 அமைச்சர்களுக்குப் பகிரப்படவேண்டிய 290 நிறுவனங்களில் மகிந்தவுக்கு 88, சமல் ராஜபக்சவுக்கு 39, கோத்தபாயவுக்கு 31 என மொத்தம் 168ஐயும் பிரித்துக்கொண்டனர். இத்தகைய அராஜங்ககள் மீண்டும் அரங்கேறியபோது கூட அவர்களைப் பாதுகாப்பது கோத்தபாய “ஹிட்லராகி இந்த நாட்டை ஆளவேண்டும்” என்று கருத்து வெளியிட்ட அதே பௌத்த பிக்குச் சமூகம் தான். (8)

மகாவம்சம் குறித்து மாற்று கருத்துக்கள் வைத்ததால் முன்னாள் முதலைச்சர் விக்னேஸ்வரனுக்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டிருக்கின்றன. அவருக்கு எதிரான ஊடக சந்திப்புகள், பத்திரிகைக் கண்டனங்கள், கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், கொடும்பாவி எரிப்பு, எல்லாம் அரங்கேறுகின்றன. இவை அனைத்துமே “மகாவம்சத்தின் இன்றைய நாயகன்” கோத்தபாயவின் ஆசீர்வாதத்தில் நிகழ்பவை. 

சகல இன இலங்கையர்களும் தம்மை சக இலங்கையர்களாகக் கருதிக்கொள்வதற்கு மகாவம்ச முட்டுக்கட்டையின் விபாகத்தைக் குறைத்து மதிப்பிட்டுவிடமுடியாது. மகாவம்ச புனிதக் கற்பிதங்கள் கொலோச்சும்வரை கோத்தபாயக்கள் அவற்றில் குளிர்காயவே செய்வார்கள். 

நன்றி - தினக்குரல்

அடிக்குறிப்புகள்
 1. 29.07.1987 அன்று தான் இலங்கை இந்திய ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது. அடுத்த நாள் 30ஆம் திகதியே இந்திய படையின் ஒரு பகுதியினர் (54வது படைப்பிரிவு) பலாலி விமானத்தளத்தில் வந்திறங்கியது என்பதும் உண்மை தான். ஆனால் அவர்கள் அவ்வளவு விரைவாக தமது படைகளை சகல இடங்களுக்கும் விரிவுபடுத்தவுமில்லை அடாவடித்தனங்களையும் அந்தளவு வேகமாக ஆரம்பித்திருக்கவில்லை.
 2. ஏ.வீ.சுரவீர தொகுத்த –“ராஜாவலிய”. சிங்கள மூலம் . (ப.175) – கல்வி வெளியீட்டுத் திணைக்களம் – 1976.
 3. கலாநிதி சிறி நிஸ்ஸங்க பெரேரா – “දසමහා යෝධයෝ” - (தச மகா யோதயோ - பத்து இராட்சதர்கள்) - சரசவி பதிப்பகம் - 2006 - இந்த நூல் பாடசாலைகளுக்கான நூலக நூலாக கல்வி அமைச்சு சான்றிதழ் வழங்கிய நூல் என்கிற அறிவித்தலுடன் வெளியிடப்பட்ட நூல்.
 4. ருவன்வெலிசாய என்பது, அநுராதபுரத்தில் அமைந்துள்ள மிகப்பெரியபௌத்த தாதுகோபமாகும். புத்தரின் நினைவாக மகத்தான தாதுக்கொபுரமொன்றை கட்டுவது என்பது துட்டகைமுனுவின் பெருங்கனவு. அதன்படி அத் தாதுக்கோபுரத்தை ஸ்தாபிக்கும் பணிகள் துட்டகாமினியால் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால், இதன் கட்டுமானத் திட்டம், துட்டகைமுனுவின் காலத்துக்குப் பல நூற்றாண்டுகள் முன்னரே, மஹிந்த தேரரால், தேவநம்பியதீசனுக்கு உரைக்கப்பட்டிருப்பதாக, கல்வெட்டு ஆதாரங்களை, சில வரலாற்றாய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். ருவன்வெலிசாயவைக் கட்டுவதற்காக, மன்னன் துட்டகைமுனு, தனது இராச்சியத்தில் 1,000க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து, ஆதரவைத் திரட்டியதாக மகாவம்சம் கூறுகிறது. ஒட்டுமொத்த இராச்சியமும் ருவன்வெலிசாயவின் கட்டுமானத்தில் பங்கேற்றது. ஆனால், ருவன்வெலிசாயவின் கட்டுமானப்பணிகளை நிறைவுசெய்வதற்குள் துட்டகைமுனுவின் உயிர் பிரிந்தது. துட்டகைமுனுவுக்குப் பின் பதவியேற்ற துட்டகைமுனுவின் தம்பி சதாதிஸ்ஸவால் ருவன்வெலிசாயவின் கட்டுமானப் பணிகள் நிறைவுசெய்யப்பட்டன.
 5. “Will be frank with New Delhi to avoid misunderstandings: Gotabaya Rajapaksa” – The Hindu – 30.11.2019
 6. இப்படித்தான் இதுபோலவே இதற்கு முன்னர் கோத்தபாய பாதுகாப்பு செயலாளராக இருந்த போது யுத்தத்தை முடித்த ஒன்றரை வருடத்தில் “இனி தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு கிடையாது” என்று இந்திய ஊடகமான “Headlines Today” என்கிற தொலைக்காட்சிக்கும் (11.08.2011) பகிரங்கமாக நேர்காணல் கொடுத்திருந்தார்.
 7. 10.12.2019 அன்று வெளியான 2153/12 ஆம் இழக்க வர்த்தமானிப் பத்திரிகையில் வெளியான இந்த அறிவிப்பில் அரசியலமைப்பின் 46 (1) ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தின் பேரில் இது மேற்கொள்ளப்பட்டதாக அந்த வர்த்தமானிப் பத்திரிகை அறிவித்தது.
 8. 20.06.2018 அன்று கோத்தபாயவின் பிறந்தநாளையிட்டு அவருக்கு பௌத்த ஆசீர்வாதம் வழங்கும் நிகழ்வும் அன்னதான நிகழ்வும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்வுக்கு ராஜபக்ச குடும்பத்தினர் அனைவரும் கலந்துகொண்டிருந்தனர். அங்கு பௌத்த ஆசீர்வாதம் வழங்கவென வந்திருந்த வெண்டறுவே உபாலி தேரர் “சிலர் உங்களை ஹிட்லர் என்று வர்ணிக்கிறார்கள். ஆனால் நீங்கள் ஹிட்லராக ஆகியேனும் நீங்கள் இந்த நாட்டை ஆளவேண்டும் என்பதே மகாசங்கத்தினரின் விருப்பம்” என்று தனது ஆசீர்வாத உரையில் தெரிவித்திருந்தார்.

ஜனவரி 10 : மலையகத் தியாகிகள் தினமாகப் பிரகடனம்

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 10ஆம் திகதியை மலையக தியாகிகள் தினமாக பிரகடனப்படுத்துவோம்!!!
டெவோன் தோட்டத்தில் சிவனு லெட்சுமணனின் கல்லறையில் நாளை அதற்கான நிகழ்வு ஏற்பாடு!!
மலையக தியாகிகளை நினைவுக்கூறுவதை எமது சமூகத்தின் மத்தியில் வளர்க்கும் நோக்கில் மலையக உரிமைக்குரல் அமைப்பு சில முயற்சிகளை எடுத்துள்ளது.
பேரினவாதிகள் தோட்ட நிலங்களை கூறுபோட முற்பட்டதை எதிர்த்து களமாடி நெஞ்சை நிமிர்த்தி துப்பாக்கி சன்னங்களை தனது மார்பங்களில் தாங்கி டெவோன் தோட்டத்திலே மாண்டுபோன ‘மாவீரன்’ ‘மலையக தியாகி’ சிவனு லெட்சுமணனின் கல்லறையில் நாளை (15.12.2019) காலை 10 மணிக்கு மலையகத்துக்கான தமது இன்னுயிரை நீர்த்த மலையக தியாகிகளை நினைவுக்கூறும் தினத்தை பிரகடனப்படுத்தவுள்ளோம்.
1940ஆம் ஆண்டு முல்லோயா தோட்டத்தில் தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்கு (40 சதம்) போராடி உயிர்நீத்த மலையக தியாகியாகிய முல்லோயா கோவிந்தனின் நினைவுதினம் எதிர்வரும் ஜனவரி 10ஆம் திகதி அனுஸ்டிக்கப்படவுள்ளது. அதன் நிமித்தமே நாளைய நிகழ்வு டெவோன் தோட்டத்தில் சிவனு லெட்சுமணனின் கல்லறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முல்லோயா கோவிந்தனின் நினைவுதினமான ஜனவரி 10ஆம் திகதியை 'மலையக தியாகிகள்' தினமாக நாளை பிரகடனப்படுத்தி அதனை ஒவ்வொரு ஆண்டும் அனுஷ்டிக்க உள்ளோம்.
இந்த புரட்சிகரமான நிகழ்வில் மலையக இளைஞர்களை கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுப்பதுடன்,
மலையக உரிமைக் குரலின் தலைவர் ஆர்.சனத் ராமசந்திரனின் பாரிய முயற்சியால் இந்த வரலாற்று நாள் உதயமாகியுள்ளதென்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்……….
ஊடகவியாளர் ஆர்.சனத் இன் கட்டுரை கீழ் இணைக்கப்பட்டுள்ளது...............
உண்மை என்றுமே மரணிக்காது. என்றாவது ஒரு நாள் தனக்கே உரிய பாணியில் அது வீறுகொண்டெழும். அப்போது போலிகளெல்லாம் புறமுதுகு காட்டி தலைதெறிக்க ஓடும். அந்த கண்கொள்ளா காட்சியே கால மாற்றமென விளிக்கப்படுகின்றது.

அதேபோல்தான் மக்களையும் எந்நாளும் ஏமாற்றி அடக்கி ஆள முடியாது. என்றாவது ஒருநாள் அநீதிக்கு எதிராக பொங்கியெழுந்து – நீதிக்காகவும், உரிமைக்காகவும் ஓரணியில் திரண்டு விண்ணதிர கோஷம் எழுப்புவார்கள். இதுவே சமூக மாற்றத்துக்கான ஆரம்பப் புள்ளியாக பார்க்கப்படுகின்றது.

இதன்படி எமது மலை மண்ணிலும் மக்கள் எழுச்சிக்கான அறிகுறிகள் பிரகாசமாகத் தென்படுகின்றன. வெகு விரைவிலேயே அது வெற்றிநடைபோடும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. அது சமூக விடுதலைக்கான பயணமாகவும் அமையலாம்.

இன்று மட்டுமல்ல இதற்கு முன்னரும் மலையக மக்களின் விடுதலைக்காக – விடிவுக்காக போராடுவதற்கு பலரும் முன்வந்தார்கள். ஆனால், சிற்றின்ப அரசியலுக்காக, திட்டமிட்ட அடிப்படையில் போராளிகள் திசைதிருப்பட்டனர்.

ஏன்…! மலையக மக்களின் உரிமைகளுக்காக போராடி உயர்நீத்தவர்களைக்கூட இன்று எவரும் நினைவு கூருவதில்லை. மலையகப் போராளிகளில் ஓரிருவரைக்கூட பெரும்பாலானவர்களுக்கு தெரியாது.

இன்று காணி உரிமை தொடர்பில் பிரமாண்டமான அறிவிப்புகள் விடுக்கப்பட்டுவருகின்றன. ஆனால், காணி உரிமைக்காக போராடி வீரமரணடைந்த சிவனு லெட்சுமணனை உங்களில் எத்தனைப் பேருக்கு தெரியும்?

தேயிலை நிலங்கள் சுவீகரிப்பு – 1977

1977 ஆம் ஆண்டில் மலைநாட்டில் தேயிலை நிலங்களை சுவீகரித்து, சிங்களக் குடியேற்றங்களை அரங்கேற்றுவதற்கு அப்போதைய ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி பிள்ளையார் சுழிபோட்டது.

1974 ஆம் ஆண்டில் ஏற்பட்ட பஞ்சம் உட்பட மேலும் சில காரணங்களால் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் ஆட்சிமீது நாட்டு மக்கள் கடும் அதிருப்தியில் இருந்தனர். இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் 1977 ஆம் ஆண்டு ஜுலை 21 ஆம் திகதி பொதுத்தேர்தலுக்கான அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

எனவே, தேர்தலுக்கு முன்னர் காணிகளை சுவீகரிப்பதில் சுதந்திரக்கட்சி அரசு, கங்கணம் கட்டி செயற்பட்டது. இதற்கமையவே 1977 இல் மஸ்கெலிய தேர்தல் தொகுதியில் சுமார் 7 ஆயிரம் ஏக்கர் காணி சுவீகரிப்பதற்கு திட்டமிடப்பட்டது. அளவீட்டுப் பணியும் ஆரம்பமானது.

குறித்த பகுதியில் புதிய குடியேற்றங்கள் உருவாகினால் 10 ஆயிரம் குடும்பங்களுக்கு வேலைபறிபோகும் அபாயம் ஏற்பட்டது. எனவே, இதற்கு எதிராக தொழிலாளர்கள் கிளர்ந்தெழுந்தனர். மக்களை ஓரணியில் திரட்டி போராட்டத்துக்கான தலைமைத்துவத்தை தொழிலாளர் தேசிய சங்கம் வழங்கியது.

ஆனாலும், இது விடயத்தில் முன்வைத்த காலை பின்வாங்குவதற்கு சு.க. அரசு, ஆரம்பத்தில் மறுத்தது. தொழிலாளர்களின் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் காணி சுவீகரிப்பு வேட்டையில் தீவிரமாக இறங்கினர் காணி சீர்திருத்த ஆணைக்குழு அதிகாரிகள். நுவரெலியா மாவட்டத்தில் பிரதான தோட்டங்கள்மீது அவர்களின் பார்வை திரும்பியது.

இதனால், மே முதலாம் திகதி முதல் நுவரெலிய மாவட்டத்தில் பல இடங்களிலும் தொழிலாளர் புரட்சி வெடித்தது. தொழிற்சங்கங்களும் பக்கபலமாக இருந்தன.

விரைவில் பொதுத்தேர்தல் நடக்கவிருப்பதால் இப்பிரச்சினையானது சுதந்திரக்கட்சி அரசுக்கு பெரும் நெருக்கடியை கொடுத்தது. வேறுவழியின்றி, தொழிலாளர்களின் போராட்டங்களுக்கு அடிபணிந்து மே 11 ஆம் திகதி தொழிற்சங்கங்களை அழைத்து பேச்சு நடத்துவதற்கு சு.க. அரசு தீர்மானித்திருந்தது.

சிவனு லெட்சுமண்

குறித்த சந்திப்பில் தொழில் ஆணையாளர், காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் அதிகாரிகள், தொழில்சங்கப் பிரதிநிதிகள் என முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர். தேயிலைக் காணிகளை சுவீகரிப்பதைக் கைவிடுவதற்கு அரசாங்கம் பச்சைக்கொடி காட்டியது.

சந்திப்பு முடிவடைந்ததும், மகிழ்ச்சிகரமான செய்தியை தொழிலாளர்களுக்கு அறிவிப்பதற்காக தொழிற்சங்கப் பிரதிநிதிகள் புறப்பட்டனர்.

அரச பிரதிநிதிகளுடன் சந்திப்பு நடைபெறும் தினத்தில், காணி சுவீகரிப்பு கைவிடப்படும் என்ற செய்தியை காணி சுவீகரிப்பு அதிகாரிகள் அறிந்து வைத்திருக்காததால், வழமைபோல் மே 11 ஆம் திகதி காலை பத்தனை, டெவன் தோட்டத்தில் காணியை சுவீகரிக்கச் சென்றனர்.

இதற்கு தொழிலாளர்கள் இடமளிக்கவில்லை. தொடர்ந்தும் போராட்டத்தில் குதித்தனர். இதையடுத்து பொலிஸார் களமிறக்கப்பட்டனர்.

டெவன் தோட்டத்தில் ஏதோ குழப்பம், தொழிலாளர்களுக்கு பிரச்சினை என்பதை அறிந்த வட்டகொடை தோட்ட மக்கள், பத்தனையை நோக்கி நடையைக்கட்டினர். சம்பவ இடத்துக்கு வந்து தொழிலாளர் பலத்துக்கு வலுசேர்த்தனர் . இதையடுத்து பொலிஸாருக்கும், மக்களுக்குமிடையில் சொற்போர் மூண்டது.

மோதல் உச்சம்தொட, தொழிலாளர்கள்மீது சூடு நடத்துவதற்கு பத்தனை பொலிஸார் முற்பட்டனர். அதை கண்ணுற்ற லெட்சுமணன், முன்னே பாய்ந்து – தொழிலாளர்களை நோக்கி பாய்ந்த துப்பாக்கி சின்னங்களை தன் மார்பில் வாங்கி மலையக தியாகினார்.

1. 1942 இல் முல்லோயா தோட்டப் போராட்டத்தில் உயிர் நீத்த கோவிந்தன்
2. 1942 இல் புப்புரஸ்ஸ கந்தா தோட்டப் போராட்டத்தில் உயிர் நீத்த வேலாயுதம், வீரசாமி ஆகியோர்
3. 1950 மார்ச் 02 ஆம் திகதி டெவன் தோட்டப் போராட்டத்தில் உயிர் நீத்த வைத்திலிங்கம்
4. 1953 இல் என்சாவெல தெபுவான தோட்டப் போராட்டத்தில் உயிர் நீத்த எட்லின் நோனா
5. 1953 இல் நெபொட லேங்டேல் தோட்டப் போராட்டத்தில் உயிர் நீத்த தேவன்
6. 1953 நவம்பரில் கல்தோணி தோட்டப் போராட்டத்தில் உயிர் நீத்த பீ.வெள்ளையன்
7. 1956 இல் மஸ்கெலியா நல்லதண்ணி தோட்ட போராட்டத்தில் உயிர் நீத்த காருமலை
8. 1956 மே 08 ஆம் திகதி டயகம தோட்டப் போராட்டத்தில் உயிர் நீத்த அல்விஸ் அப்புஹாமி ஆப்ரஹாம் சிங்கோ
9. 1957 ஜுலை 15 ஆம் திகதி உடபுஸ்ஸலாவை போராட்டத்தில் உயிர் நீத்த எனிக் தோட்டத்தை சேர்ந்த பொன்னையன் மற்றும் கொம்பாடி ஆகியோர்.
10. 1958 இல் இரத்தினபுரி ஹேய்ஸ் தோட்டப் போராட்டத்தில் உயிர் நீத்த நடேசன்.
11. 1958 மார்ச் 30 ஆம் திகதி பொகவந்தலாவை பேராட்டத்தில் உயிர் நீத்த பிரான்சிஸ், ஐயாவு ஆகியோர்
12. எட்டியாந்தொட்ட வெற்றிலையூர் பம்பேசும தோட்ட போராட்டத்தில், உயிர் நீத்த மாமுண்டு
13. 1959 இல் மாத்தளை மாதென்ன தோட்டப் போராட்டத்தில் உயிர் நீத்த கே.முத்துசாமி
14. 1960 இல் ரக்வானை மூக்களாந்சேனை தோட்டப் போராட்டத்தில் உயிர்நீத்த தங்கவேலு
15. 1960 இல் நிட்டம்புவ மல்வான தோட்டப் போராட்டத்தில் உயிர் நீத்த சிதம்பரம்
16. 1961 நவம்பரில் நாலப்பிட்டி மொண்டிசிரஸ்டோ (லெட்சுமி தோட்டம்) தோட்டப் போராட்டத்தில் உயிர் நீத்த ஆராயி, நடேசன், செல்லையா, மாரியப்பன் ஆகியோர்.
17. 1964 மே 28 ஆம் திகதி மாத்தளை கந்தநுவர தோட்டப் போராட்டத்தில் உயிர் நீத்த அழகர், ரெங்கசாமி ஆகியோர்
18. 1967 நவம்பர் 08 ஆம் திகதி மடுல்கெல சின்ன கிளாப்போக்கு தோட்டப் போராட்டத்தில் உயிர் நீத்த சோனை
19. 1968 ஒக்டோபர் 27 ஆம் திகதி இரத்தினபுரி மயிலிட்டியா தோட்டப் போராட்டத்தில் உயிர் நீத்த சின்னப்பன் அந்தோனிசாமி
20. 1970 செப்டெம்பரில் பதுளை சீனாகொல தோட்டப் போராட்டத்தில் உயிர்நீத்த அழகர்சாமி, ராமையா ஆகியோர்.
21. 1970 டிசம்பர் 31 ஆம் திகதி மாத்தளை கருங்காலி தோட்டப் போராட்டத்தில் உயிர் நீத்த பார்வதி, கந்தையா, ஆறுமுகம், ராமசாமி ஆகியோர்
22. 1977 மே 11 ஆம் திகதி தலவாக்கலை டெவன் தோட்டப் போராட்டத்தில் உயிர் நீத்த சிவனு லட்சுமணன்
23. 1980 இல் கண்டி பள்ளேகல தோட்டப் போராட்டத்தில் உயிர் நீத்த பழனிவேல்

-நிசாந்தன்

“கள்ளத்தோணி” - என்.சரவணன்


இலங்கையில் “கள்ளத்தோணி” என்கிற என்கிற கருத்தாக்கம் சிறுபான்மை இனங்களுக்கு எதிராக பேரினவாதத்தின் பிரபலமான சொல்லாடலாக ஜனரஞ்சகமயப்பட்டிருக்கிறது. அதிகமாக இந்திய வம்சாவழித் தமிழர்களுக்கு எதிராகவே இந்த சொல் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

அதுமட்டுமன்றி இலங்கைவாழ் தமிழர்கள் அனைவருமே கள்ளத்தோணிகள் என்கிற நம்பிக்கை இன்றும் பல சிங்களவர்களிடையே இருக்கிறது. முஸ்லிம்களுக்கு எதிராகவும் கூட “மரக்கலயா” என்று அழைக்கப்படுவதன் நேரடி அர்த்தம் “மரக் களங்களில் வந்த அந்நியரே” என்பது தான்.

இலங்கை ஒரு தீவு என்கிற ரீதியில் இந்த கள்ளத் தோணி கருத்தாக்கத்துக்கான வழிகளை திறந்தே வைத்திருகிறது. சிங்கள மொழியைச் சேர்ந்தவர்கள் திட்டுவதற்கும், அவதூறு செய்வதற்கும் பிரபலமாக பயன்படுத்தப்படும் இந்தச் சொல் தமிழ் உச்சரிப்பைக் கொண்டு தான் பிரயோகிக்கப்படுகிறது.

இலங்கை ஒரு தீவு, இங்கு வாணிபம் செய்ய வருபவர்களும், பண்பாட்டு பரிமாற்றங்களுக்கும், ஆக்கிரமிப்புகளுக்கும், அரசியல் ராஜதந்திரங்களுக்கும் என வந்தவர்கள் விமானம் வருமுன் இந்தத் தீவுக்கு வந்தவர்கள் கடல் மார்க்கமாகத் தான் வந்திறங்கினார்கள். படகுகளிலும், கப்பல்களிலும் தான் வந்து சேர்ந்தார்கள்.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பாரம்பரிய பண்பாட்டு, வாணிப, அரசியல் பரிமாற்றமும் தொடர்பும் கடல்வழியாக தோணிகளாலும், படகுகளாலும் கட்டியெழுப்பப்பட்டது தான்.

இந்தக் கள்ளத்தோணி கருத்தாக்கத்தை வளர்த்தெடுக்கக மூல காரணியாக இருந்த ஜே ஆரின் மூதாதையர் தம்பி முதியான்சேவும், எஸ்.டபிள்யு.ஆர்.டீ.பண்டாரநாயக்கவின் மூதாதையர் நீலப்பெருமாள் பண்டாரனாயகமும் இந்தியக் “கள்ளத்தோணிகள்” தான்.

கள்ளத்தோணியின் பூர்வீகம்
கள்ளத்தோணி என்பது சட்டவிரோத படகு என்பதே தவறான அர்த்தம் கள்ளத்தோணி என்பது ஒரு வகையான படகே. ஆரம்ப காலத்தில் மரங்களை இணைத்துக் கட்டிப் படகு செய்வதில் தமிழர்கள் தலைசிறந்து விளங்கியிருந்தார்கள். அதனால் தான் கட்டுமரம் என்ற தமிழ்ச்சொல் பல மொழிகளிலும் அதனை ஒத்த சொற்களிற்கான “மூலமாக” அமைந்தது (Catamaran) இவ்வாறு கட்டுமரமாகத் தோன்றிய படகு கட்டும் தொழில் கடல் வணிகம் விரிவடையும்போது தோணிகளாக மாறியது. அத்தகைய தோணிகளில் ஒரு வகையே கள்ளத்தோணி ஆகும்.
`Origin and Spread of the Tamils` நூலில் இருந்து
கள்ளத்தோணி குறித்து வி.ஆர்.இராமச்சந்திர தீட்சிதர் எழுதிய `Origin and Spread of the Tamils` என்ற நூலில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

“கள்ளத்தோணியில் இரு முனையிலும் கண் உருவம் செதுக்கப்படுகின்றது; தாய்த்தெய்வ உருவமும், நற்பேற்றுக்காக `உ` என்ற குறியும், குதிரை வடிவமும் அமைக்கப்படுகின்றன. இத்தகைய ஒரு தோணி வகையே கள்ளத்தோணி எனப்படும்.”
மேலே வி.ஆர்.இராமச்சந்திர தீட்சிதர் குரிப்புடிகிற 5ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அஜந்தா குகையில் உள்ள ஓவியம்.
கள்ளத்தோணியினை ஆங்கிலத்தில் `Clandestine board` என்கிறார்கள். பாய் மரத்தினால் காற்றின் துணையுடன் இத் தோணி செயற்படும். கடலாய்வாளர் ஒரிசா பாலு இத்தகைய கள்ளத்தோணி ஆமையின் வழித்தடங்களைப் பின்பற்றி நீரோட்டங்களில் மிதந்து செல்லும் நுட்பத்தினையும் பயன்படுத்தியதாககவும், அத்தகைய நுட்பத்தை சங்க காலத்தில் பயன்படுத்திய ஒரே இனம் தமிழர்களே எனவும் கூறுகின்றார். கள்ளத்தோணி என்ற சொல்லின் முன்னொட்டான `கள்ள` என்பதற்கான பொருள் கூட தமிழர்கள் பயன்படுத்திய நுட்பத்தைக் குறிக்கிறது. யாருமறியாத வகையில் எதிரிகளை உளவுபார்த்து வரும் தமிழ்க்குடி வகையினை கள்ளர் என அழைத்ததும் இங்கு ஒப்பிட்டுப்பார்க்கத் தக்கது. Clandestine என்ற ஆங்கிலச் சொல்லும் kept secret or done secretively என்ற பொருள் இருப்பதையும் கவனிக்க.

கள்ளத்தோணி என்ற ஒரு வகையான தமிழர்களின் தனித்துவமான படகுவகை ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்திலேயே சட்டத்திற்குப் புறம்பான படகு என்ற பொருளினைப் பெறுகின்றது. ஆங்கிலேயர்கள் தமது நீராவிப்படகு தவிர்ந்த ஏனைய படகுகளை அழிப்பதற்காகச் செய்த செயலே அதுவாகும். ஆங்கிலேயர்கள் உளளூர் படகு கட்டும் தொழிலினை நசுக்குவதற்கு மேற்கொண்ட நடவடிக்கைகளிற்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாக மறைந்த வ. உ. சிதம்பரனார் வாழ்க்கை, 1789 இல் இந்திய தொழில்நுட்பவியலாளர் கப்பற்தொழிலில் ஈடுபடத்தடை விதித்து அரசிதழ் (கசற்) வெளியிட்டமை போன்றவற்றைக் கூறலாம். இந்த வரிசையில் நசுக்கப்பட்டதே, தமிழர்களின் கள்ளத்தோணி வகையுமாகும் (இது பற்றிய மேலதிக செய்திகளை கருத்து 3 இல் காண்க). இதன்போதே கள்ளத்தோணிகளின் போக்குவரத்து சட்டத்திற்குப் புறம்பானது என அறிவிக்கப்பட்டது (பொதுவான அற ரீதியான சட்டத்திற்கு புறம்பாக தமிழர் நிலங்களைக் கைப்பற்றிய ஆங்கிலேயர்கள், தமிழர்களின் தோணிகளை (Clandestine boards) கள்ளத்தோணிகள் (illegal boards) என மாற்றியமை வேடிக்கையானதே). (கள்ளத்தோணியின் பூர்வீகம் குறித்து எழுத்தாளர் இலங்கநாதன் குகநாதன் வெளியிட்டிருந்த பதிவில் இருந்தும் இந்தக் தகவல்கள் பெற்றுக்கொள்ளப்பட்டன.) 
அனால் இலங்கையில் கள்ளத்தோணிகள் என்று “திருட்டு குடியேற்றவாசிகளை”த் தான் அழைக்கிறார்கள்.
 • “அவர்களா... எங்கேயோ போகிற கள்ளத்தோணிகள்....!” -‘කොහෙද යන කල්ලතෝනියෙක්,
 • இவன் கள்ளத்தோணியாக இருக்கவேண்டும்” -  මේකා කල්ලතෝනියෙක්ද කොහෙද,
 • அவன் கட்டியிருக்கிற பொம்பிள கள்ளதோணியா தெரியல - අර මිනිහා බැඳලා ඉන්න ගෑණි කල්ලතෝනිද මන්දා,
 • ஏன் கள்ளத்தோணிகளோட சகவாசம் வைச்சிருக்கிறாய் - මොකට යනවද ඔය කල්ලතෝනිත් එක්ක ගනුදෙනු කරන්න’,
சிங்கள பேச்சு வழக்கில் இப்படியான உரையாடல்களை நிறைய காண முடியும்.

இந்திய வம்சாவளியினரே இலக்கு
ஆங்கிலேயர்கள் இந்தியாவிலிருந்து தென்னிந்தியாவிலிருந்து ஏராளமான தமிழர்களை தோட்டத் தொழிலுக்காக இறக்குமதி செய்தனர். அவர்களை இந்தியாவிலிருந்து சற்று பெரிய படகுகள் மூலம் தான் இலங்கைக்கு இறக்குமதி செய்தார்கள். அதேவேளை அவர்கள் தனிப்பட்ட தமிழ் முகவர்களின் மூலமும் இலங்கைக்கு கூலித் தொழிலாளர்களை தருவித்தார்கள். அப்படி வந்தவர்கள் சிறிய வள்ளங்களிலும் வந்திருக்கிறார்கள்.

தேயிலை, கோப்பி, இறப்பர், போன்ற உற்பத்திகளின் அதிகரிப்புக்காக ஆங்கிலேயர்களுக்கு குறைந்த ஊதியத்தில் கூடிய உழைப்பைப் பெறுவதற்காக மேலும் மேலும் தமிழகத்திலிருந்து கூலி உழைப்பாளர்களை இறக்குமதி செய்தார்கள். ஆங்கிலேயர்கள் நாட்டை விட்டு போவதற்கான சமிக்ஞைகள் தெரிந்தபோது இலங்கையின் சிங்களத் தலைவர்கள் இந்திய வம்சாவளித் தமிழர்களை நாட்டை விட்டு துரத்த படாத பாடுபடுத்தினர்.

ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கு அழுத்தம், இந்தியத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை என மேற்கொண்டனர். போதாக் குறைக்கு இலங்கையில் வாக்குரிமையைப் பறிப்பது, குடியுரிமையை இல்லாது செய்வது, அவர்களின் இருப்பிடங்களை விட்டு வெளியேற்றுவது, சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்வது, அவர்களின் வருமான வழிகளை அடைப்பது என பல்வேறு நெருக்கடிகளைக் கொடுத்தனர். நூற்றாண்டுக்கும் மேலாக வாழ்ந்த அவர்களின் அடுத்த தலைமுறைக்கு இந்தியா என்பது அந்நிய நாடாக ஆகியிருந்தது.

இலங்கையில் ஒரு கட்டத்தில் இலங்கை வாழ் தமிழர்களை விட அதிக எண்ணிக்கை இந்திய வம்சாவளியினராக இருந்ததும் அவர்களின் எரிச்சலுக்கு காரணமாயின. அத்தோடு அவர்களின் பிரதிநிதித்துவம் பாராளுமன்ற தீர்மானங்களில் செல்வாக்கு செலுத்தின. இதனால் கொதிப்படைந்த சிங்களத் தலைமைகள் இந்திய வம்சாவளியினருக்கு எதிரான வெறுப்புணர்ச்சியை எங்கெங்கும் பரப்பின. அந்த வெறுப்புணர்ச்சியை கட்டியெழுப்ப பயன்படுத்தப்பட்ட கருத்தாக்கமே “கள்ளத்தோணி.

1953 இலங்கை அரச குடித்தொகை புள்ளிவிபரப்படி பத்து லட்சத்துக்கு கிட்டிய இந்திய வம்சாவளியினர் இலங்கை பிரஜையல்லாதவர்களாக இருந்திருக்கிறார்கள். நாடற்றவர்களாக ஆக்கப்பட்டிருந்த மலையக மக்களே அவர்கள் என்பது சொல்லத் தேவையில்லை. இந்தத் தொகை "இலங்கைத் தமிழர்களின்" எண்ணிக்கையை விட அதிகம் என்பதை இந்த புள்ளிவிபரத்தில் காணலாம். 1953 அரச குடித்தொகை மதிப்பீடு இது.

சார்ல்ஸ் கந்தர அறிக்கை
சிறிமாவோ பண்டாரநாயக்கவின் காலத்தில் “கள்ளத்தோணி”களைக் கட்டுப்படுத்துவதற்கு என்று பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. வடக்கு பகுதியில் கள்ளத்தோணிகள் வருகையைப் பற்றி ஆராய்வதற்காக சார்ல்ஸ் கந்தர என்பவரை நியமித்தது சிறிமா அரசு. சார்ல்ஸ் கந்தர வடக்கில் ஓராண்டு தங்கியிருந்து இரகசியமாக ஆராய்ந்த தகவல்களைக் கொண்டு தயாரித்த அறிக்கையை 19.12.196 பிரதமர் சிறிமா பண்டாரநாயக்கவிடம் ஒப்படைத்திருக்கிறார் (திவயின 01.10.2012). ஒரு ரூபாய்க்கு கச்சத்தீவில் கொண்டு போய் விடுவதற்கு தோணிகள் அங்குள்ளன என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டார். இந்தியாவிலிருந்து கடத்தல், சட்டவிரோத குயேற்றம், சட்டவிரோத வணிகம் என கள்ளத்தோணிகள் மூலம் இடம்பெறுவதாக அவர் அவ்வறிக்கையில் வெளியிட்டார். அக்காலத்தில் சிங்கள பத்திரிகைகளில் வெளியான இந்த விபரங்கள் சலசலப்பை உருவாக்கியது. அடுத்த ஆண்டே சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தத்தின் மூலம் 525,000 மலையகத்த்வர்களையும் அவர்களுடைய இயற்கையான அதிகரிப்பையும் சேர்த்து, இந்தியாவுக்குத் திருப்பி அனுப்ப ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.

இலங்கையில் 1968ஆம் ஆண்டின் 31ஆம் இழக்க ஆட்களை பதிவு செய்யும் சட்டம் கொண்டுவரப்பட்டதும் கூட இந்திய வம்சாவளியினரைக் கட்டுப்படுத்துவதற்காகத் தான். இச் சட்டத்தின் மூலம் தான் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் ஆளடையாள அட்டை அறிமுகப்படுத்தப்பட்டது.

என்டன் ஜோன்ஸ்
சிங்களத்தில் “கள்ளத்தோணி” பற்றிய பல ஐதீகங்கள், புனைவுகள், புனைகதைகள், பழமொழிகள் என உண்டு. இவை சாதாரண மக்கள் மத்தியில் “கள்ளத்தோணிகள்” பற்றிய வெறுப்புணர்ச்சியையும், காழ்ப்பையும், எதிர்ப்பையும் ஏற்படுத்தி நாளடைவில் அவர்களுக்கு எதிரான அரசியலாகவே வேரூன்றிவிட்டது.

இந்த வெறுப்பை ஜனரஞ்சகப்படுத்தி இந்திய வம்சாவளியினருக்கு எதிரான மிகவும் மோசமான ஒரு பாடல் சிங்கள சமூகத்தில் 80-90களில் பிரபலமாக இருந்தது. இப்போதும் அப்பாடலுக்கு இருக்கும் மவுசு குறையவில்லை என்றே கூறவேண்டும்.மலையக மக்களுக்கு எதிரான வெறுப்புணர்ச்சி மிகுந்த ஒரு பாடல் இதை விட வரலாற்றில் இருக்க முடியாது.

இந்தப் பாட்டை இயற்றிப் பாடியவர் பிரபல பொப் பாடகர் என்டன் ஜோன். அவரின் பாடல்கள் அத்தனையும் சமூகக் கதைகளைப் பேசும் பாடல்கள் என்பதால் சிங்களப் பாடகர்களில் தனித்த இடம் அவருக்கு உண்டு. லுமும்பா, மனம்பேரி, இந்திரா காந்தி, ஹிட்லர், கொப்பேகடுவ போன்றவர்களைப் பற்றியும் பாடல்கள் பாடியிருக்கிறார்.

அவரின் மேடைகளில் எல்லாம் ஒலித்த; கரகோஷம் பெற்ற புகழ் பெற்ற பாடல் “கள்ளத்தோணி” பாடல். வானொலி, சீடிக்கள், கசட்டுகள் என கலக்கிய பாடல் இது. ஆனால் இதுவரை இதன் உள்ளடக்கம் தமிழ்ச் சூழலில் பேசப்பட்டதில்லை. இதைவிட வெறுப்பின் உச்சத்தை உமிழ்ந்த வேறெந்த சிங்கள ஜனரஞ்சக பாடலையும் கேட்டிருக்க முடியாது. இத்தனைக்கும் இதன் சொந்தக்காரர் என்டன் ஜோன் ஒரு பறங்கி இனத்தைச் சேர்ந்தவர். போர்த்துக்கேய வம்சாவளியினரான அவர் தனது மூதாதையரும் இலங்கைக்கு கப்பல்களில் அத்துமீறி வந்து நாட்டை சூறையாடி, கைப்பற்றி அடிமைப்படுத்திய கூட்டத்தைச் சேர்ந்தவர் தான் என்பதை அவரும் மறந்து போனார். சிங்கள பேரினவாத கூட்டு மனநிலையின் நினைவுகளையும் உலுப்பியிருக்காது.
சமீபத்தில் ரோஹீங்கியா அகதிகளை இலங்கையில் இருந்து விரட்டுவதற்காக எடுக்கப்பட்ட இனவாத பிரச்சாரங்களின் போதும் இப்பாடல் பயன்படுத்தப்பட்டது. (யூடியுப் சானலில் Allaganna Anton Jones) என்று தேடிப்பாருங்கள் இந்தப் பாடலை கேட்க முடியும். முதலில் பாடலைப் பாருங்கள். 

பிடிச்சுடு - அதோ பாய்ஞ்சு வாறார்கள் கள்ளத்தோணிகள்
பிடிப்பது எப்படி? ஒளிந்திருக்கிறார்கள்!
நல்லதம்பி - மொளகதண்ணி - சாம்பிராணிகள்
நமது எதிர்கால முதலாளிகள்!

தாரா போன்ற வெளிர்நிற கட்டழகானவர்கள்
கடலில் குதித்து வழியைக் கண்டார்கள்
வழியில் போராடி  இக்கரைக்கு வந்தவர்கள் - பின்னர்
நாங்களே பிரஜைகளென முரண்டு பிடிப்பவர்கள்!

தின்ன வழியின்றி இந்தியாவில் இருந்த அண்ணன்மார்
தோணிகளில் கள்ளத்தனமாக ஒளிந்து வந்தவர்கள்
இப்போ சுரண்டிவிட்டு
எங்கள் தோளைத் தட்டிப் போகிறார்கள் - இனி
எங்கள் நாட்டில் இருக்கிறார்கள் -ஐயகோ
கள்ளத் தோணிகள்

வரும்போது இரண்டு மூன்று, நான்காக வளைந்து வருகிறார்கள்
போகும்போது எங்கள் காதுகளையும் திருகிவிட்டு போகிறார்கள்
பதவிகளையும், வசதிகளையும் கொடுத்து
அவர்களைக் கெடுத்தது எங்கள் அண்ணன்மார்களே

வெட்கித் தலைகுனிந்து தலையில் பெட்டிகளுடன் வந்தவர்கள்
போத்தல் மூடிகளையும் கடதாசிகளையும் மலிவாக பெற்று - பின்னர்
சாக்கு உரிமையாளர்கள் ஆகிறார்கள் கள்ளத்தோணிகள்

உடுக்கவும் தின்னவும் குறைவாக செலவழிக்கிறார்கள்
எங்கு தங்குவதற்கும் தயார்.
பொழுது போக்கே பணம் சம்பாதித்தல் - இறுதியில்
அவர்கள் பிரஜைகள் - நாங்கள் கள்ளத்தோணிகள்

பெற்றோர், உறவுகள், நட்புகளை கைவிட்டுவிட்டு
லங்காவை பார்த்தபின்னர் அதுவே சொர்க்கம்!
அந்தக் கனாவுடன் - நாட்டைவிட்டு தப்பி
உறுதியுடன் வந்து சேர்கிறார்கள் - இந்த
கள்ளத்தோணிகளால் பெரும் பிரச்சினை

ஜனத்தொகையைப் பெருக்கும் - புதுவகைத் திருடர்கள்
கிடைக்கும் நிவாரணத்தையும் இழக்கும்
எங்களுக்கு பெரும் கவலை

நாட்டை அழிக்கும் கள்ளத்தோணிகள்
நாட்டுக்கு பெரும் சுமை
லங்கா எங்கள் நாடு - இப்படி ஆகலாமா

எவ்வளவு இருக்கிறார்களோ -அத்தனை
கள்ளத்தோணிகளையும் சேர்த்து பிடித்து - பட்டினிபோட்டு
உயரமான ஒரு மலையுச்சிக்கு கொண்டு சென்று
கழுத்தை நெறித்து தள்ளிவிடுவோம்
யாரும் கேட்டால் சொல்வோம்
பாய்ந்து செத்துப் போனார்கள் என்று...!
“கள்ளத்தோணி” பீதி
“...இது சிங்கள பௌத்த நாடு, ஏனையோர் வந்தேறுகுடிகள், தமிழர்கள் நாட்டைத் துண்டாடி அபகரிக்கப் பார்க்கின்றார்கள், தமிழ்நாட்டோடு இணைத்து எதிர்காலத்தில் பரந்த தமிழ்நாடாக முழு இலங்கையையும் ஆக்கப்போகிறார்கள், தமிழர்களுக்கு நாடு உண்டு, சிங்களவர்களுக்கு உலகில் எந்த நாடும் இல்லை. மிச்சமுள்ள இதனை சூறையாட விடக்கூடாது, சிங்களவர்களை சுரண்ட இனியும் அனுமதியோம், இந்திய வம்சாவழி எனும் ”கள்ளத்தோணிகள்” நாட்டின் செல்வத்தை சுரண்டுபவர்கள், அதில் பலர் சிங்களவரை சுரண்டி இந்தியாவுக்கு சொத்துக்களை கொண்டுபோய் குவிப்பவர்கள். இவர்கள் எல்லோரும் கணக்கு வழக்கில்லாமல் பிள்ளைகளைப்பெற்று தம்மினத்தைப் பெருக்கிக் கொண்டிருக்கிறார்கள், சிங்களவர்கள் மீது திட்டமிட்டு மலட்டுத்தனத்தை உருவாக்குகிறார்கள். சகல அரசாங்க தொழிலையும் கைப்பற்றி இருக்கிறார்கள். இவர்களுக்காக சிங்களவரின் சொத்துக்கள் முழுதும் அரசால் செலவளிக்கப்படுகிறது....”

இப்படி கட்டமைக்கப்பட்டு, பரப்பப்பட்டு, நம்பவைக்கப்பட்டிருக்கிற கருத்தாக்கத்தின் பலத்துடன் தான் “கள்ளத்தோணி” சொல்லாடல் ஜனரஞ்சகப்படுத்தப்பட்டிருக்கிறது.

 • இந்திய விஸ்தரிப்புவாத பீதி
 • இந்திய வர்த்தகர்களுடனான உள்ளூர் முதலாளிகளின் போட்டியும் எதிர்ப்புணர்வும்
 • இந்திய வம்சாவளியினரின் தொகை பற்றிய பீதி
 • வருமானத்தை இந்தியாவுக்கு கொண்டு போய் சேர்க்கிறார்கள் என்கிற குற்றச்சாட்டு
 • அரசியலில் தாக்கம் செலுத்திய பிரதிநிதித்துவம் குறித்த பயம்
இப்பேர்பட்ட பேரச்ச வெருண்ட உணர்வுவின் (phobia) விளைவாக இந்தியவர்களை நாட்டை விட்டு விரட்ட வேண்டும் என்கிற எண்ணம் 1920களில் தலைதூக்கியது. அநகாரிக்க தர்மபால உட்பட, ஏ.ஈ.குணசிங்க அதன் பின்னர் இலங்கையின் தேசியத் தலைவர்கள் என்று அழைக்கப்பட்ட டீ.எஸ்.சேனநாயக்க, டட்லி, கொத்தலாவல, பண்டாரநாயக்க, சிறிமா என தொடர்ச்சியாக பல தலைவர்கள் இந்திய வம்சாவளியினர் இலங்கைக்கு தேவையற்றவர்கள் என்கிற முடிவுக்கு வந்தார்கள். ஆனால் அப்படி அவர்கள் அந்த முடிவுக்கு வந்த வேளை அதற்கு முந்திய ஒரு நூற்றாண்டாக இலங்கைக்கு செல்வத்தைக் குவித்து, இலங்கையை வளப்படுத்த இந்திய வம்சாவளியினரின் உழைப்பே காரணமாக இருந்தது. இலங்கை மக்களுக்கான வாழ்வாதார வளங்களை திரட்டிக் கொடுப்பவர்களாக இருந்தார்கள்.

இந்திய வம்சாவளியினர் சிங்களவர்களின் வேலைவாய்ப்பை பறிக்கவில்லை. மாறாக வேலைவாய்ப்புக்கான புதிய துறையை உருவாக்கினார்கள். சிங்களவர்கள் பணி புரிய முடியாது என்று புறக்கணித்ததால் தான் இந்தியாவில் இருந்து இந்தியவம்சாவளியினர் இறக்கப்பட்டார்கள் என்பதை நினைவிற்கொள்ள வேண்டும்.

அதுபோல சிங்களவர்களின் வளங்களை அவர்கள் சுரண்டவில்லை.ஏற்கெனவே பயன்பாடற்று கிடந்த காடுகளைத் தான் தமது கடின உழைப்பின் மூலம் பணமீட்டும் வளங்களாக மாற்றினார்கள். அப்பணப்பயிரே சிங்களவரையும் சேர்த்து வாழவைத்தது.

சிங்களவர்கள் மத்தியில் பலப்படுத்தப்பட்ட “மண்ணின் மைந்தர்கள்” சித்தாந்தத்துக்கு “மற்றவர்களெல்லாம் அந்நியர்” என்கிற கருத்தாக்கத்தை வளர்த்தெடுப்பது அவசியப்பட்டது. சிங்கள பௌத்தர்கள் அல்லாதவர்கள் மீது பல அடைமொழி கொண்ட சொற்கள் பேச்சு வழக்கில் ஜனரஞ்சகமாக பரப்பப்பட்டிருக்கிறது. பற தெமலா (பிர தமிழன்), தோட்டக்காட்டான், தம்பியா,  சோனி, போன்ற வரிசையில் கள்ளத்தோணியும் பிரபலமான ஒன்று. சிறுபான்மை இனங்களுக்கு எதிரான இனவெறுப்புணர்ச்சி (ethnophaulisms) பட்டைத் தீட்டப்பட்டு களத்தில் இறக்கப்பட்டமைக்கு “கள்ளத்தோணி”, “பறத் தமிழன்” போன்ற சொல்லாடல்களுக்கு பெரிய பங்குண்டு.

எது அந்நியம்? யார் அந்நியர்?
இதில் உள்ள முரண்நகை என்னவென்றால் இன்றைய நிலையில் இலங்கையில் எதையுமே தமது சுதேசம் என்று கூறிக்கொள்ள முடியாது என்பது தான்.

இலங்கை சிங்கள பௌத்தர்களின் நாடு என்றும் ஏனையோர் வந்தேறு குடிகள், அந்நியர் (பறயா), கள்ளத் தோணிகள் என்றெல்லாம் நிறுவப்பட்டுள்ள ஐதீகத்தை இன்று தர்க்க ரீதியில் கேள்விக்குள்ளாக்க வேண்டியிருக்கிறது.

அந்நியர்களை “பற தேசீன்” என்று சிங்களத்தில் அழைப்பார்கள். அதே “பற” (பிறர்) என்கிற அடைமொழியுடன் சேர்த்து “சுத்தா” (அந்நிய வெள்ளையர்களே) என்றவர்கள் பின்னர் காலப்போக்கில் "பற தெமலா", "பற ஹம்பயா"  என தமிழர்களையும் முஸ்லிம்களையும் பார்த்து வெறுப்புமிழ்வதை கண்டிருக்கிறோம். “பற” என்கிற பதத்தின்  பூர்வீகத்துக்கு உண்மையான சொந்தக்காரர்கள் “சிங்கள” + “பௌத்தர்கள்” தான் என்று சிங்கள பௌத்தர்களே தமது புனித வரலாற்றுக் காவியமாக  போற்றும் மகாவம்சம் தருகிறது ஆதாரம். அப்படி இருக்க அந்தத் தர்க்கம் உண்மையானால் “பற சிங்களயா” என்று தமக்குத் தாமே சுய அடையாளம் சூட்டவேண்டியவர்கள் அவர்களே. சுய வெறுப்பும் அங்கிருந்து தொடங்க வேண்டும்.

எந்த சிங்கள பௌத்தத்தின் பேரால் ஏனையோரை அந்நியர்கள் என்கிறார்களோ அந்த சிங்களத்துக்கும் பௌத்தத்துக்கும் இலங்கையின் எந்தவித பூர்விகத் தொடர்புமில்லை. பௌத்தமும் இந்தியாவில் இருந்து தான் வந்தது. சிங்கள மொழியின் உருவாக்கத்தின் உள்ளடக்கமாக இருக்கும் பாளி, சமஸ்கிருதமும் இந்தியாவில் இருந்து தான் வந்தது. சிங்கள இனமும் இந்தியாவில் இருந்து தான் வந்தது என்பதை சிங்கள பௌத்த பௌத்த புனித வரலாற்று நூலிகளில் இருந்தே ஆதாரங்களை முன்வைக்க முடியும்.

அவுஸ்திரேலியாவுக்குச் சென்ற பிரித்தானியர்கள் எபெர்ஜீன்களை விரட்டிவிட்டு அந்த நாடு அவர்களது என்றார்கள். மெக்சிக்கோவுக்கு சென்று செவ்விந்தியர்களை விரட்டிவிட்ட பிரித்தானியர்கள் கூறினார்கள் அதுவும் பிரித்தனியர்களது தான் என்று.

அந்நியர்களிடம் இருந்தே அத்தனையும்
இன்று சிங்கள பௌத்த பண்பாட்டு அம்சங்கள் என்று சொல்லக்கூடிய அனைத்தும் இலங்கையின் பூர்வீகம் தான்என்றோ, இலங்கையின் பாரம்பரிய முதுசம் தான் என்றோ எவராவது சொல்வாராயின் அது கேலிக்குரிய ஒன்றாகத் தான் எஞ்சும். இலங்கையில் “தூய்மையான சிங்கள பௌத்த பண்பாடு” என்கிற ஒன்று கிடையாது.

நமது நாட்டுக்குள் இந்தியாவில் இருந்து கொண்டு வந்து சேர்த்தது தான் பிரதான மதங்கள், பண்பாடு, கலை, கலாசாரம், உணவு, உடை சடங்கு, சம்பிரதாயங்கள், பழக்க வழக்கங்கள் அனைத்துமே இலங்கைக்கு வெளியில் இருந்து கொண்டு வரப்பட்டவற்றால் தான் நிறுவப்பட்டிருக்கிறது.

இன்றைய சிங்கள பௌத்தர்கள் பலரின் பெயர்களில் அதிகமாக கலந்திருப்பது போர்த்துக்கேய, ஒல்லாந்துப் பெயர்கள் தான் (பெர்னாண்டோ, பெரேரா, மென்டிஸ், பொன்சேகா, ரொட்ரிகோ, அல்மேதா போன்றவை உதாரணங்கள் ) என்பதையும் இங்கு சுட்டிக்காட்டவேண்டும்.

விஜயன்: முதல் கள்ளத்தோணி
விஜயன் தொடக்கம் பல்வேறு ஆக்கிரமிப்பாளர்கள் காலத்துக்கு காலம் இந்தியாவிலிருந்து வந்திருக்கிறார்கள். அதன் பின் மன்னர்கள் பலர் இந்தியாவில் பெண் எடுத்து, மணம் முடித்து வந்திருக்கிறார்கள். இவற்றின் போதெல்லாம் பல்லாயிரக்கணக்கானவர்கள் வந்து சேர்ந்திருக்கிறார்கள். பின்னர் காலனித்துவ காலத்திலும் இந்திய வம்சாவழி மக்களின் மூலம் நிறையவே பண்பாட்டு பரிமாற்றம் நிகழ்ந்திருக்கிறது. இன்றைய சமகாலத்தை எடுத்துக் கொண்டால், இலங்கைத் தொலைக்காட்சிகளையும், திரைப்பட அரங்குகளையும் ஆக்கிரமித்திருக்கும் திரைப்படங்கள், தொடர் நாடகங்கள், விளம்பரங்கள், என்பனவற்றுடன் இந்திய நாட்டு நடப்புகளும், அரசியலும் கூட வந்து கருத்தாதிக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. 

சிங்கள இனம் தோன்றி 2500 வருடங்களை முன்னிட்டு; விஜயன் கரையிறங்கிய போது குவேனியை சந்திப்பதை சித்தரிக்கும் ஓவியத்தைக் கொண்ட  மூன்று சத அஞ்சல் முத்திரை, 23/05/1956 இலங்கையில் வெளியிடப்பட்டது. இது ஒரு வகையில் முதலாவது கள்ளத்தோணி என்பதை நிறுவி விடும் என்று நினைத்தார்களே என்னவோ 01/10/1966 அன்று அந்த முத்திரை வாபஸ் பெறப்பட்டு நிறுத்தப்பட்டது.

இந்தியாவிலிருந்து நாடுகடத்தப்பட்டு அகதித் தஞ்சம் தேடி இலங்கையில் குடியேறிய "சட்டவிரோத குடியேற்றவாசியாக" விஜயனையும் கூட வந்த குற்றவாளிக் கூட்டாளிகளையும் தான் கூற முடியும். தஞ்சம் கொடுத்த இந்தத் தீவின் ஆதிவாசிகளைக் கொன்று சிம்மாசனம் ஏறிய விஜயன் குவேனியையும் கைவிட்டு தனக்கும் தனது கூட்டாளிகளுக்குமாக பாண்டிய நாட்டிலிருந்து பெண்ணெடுத்து வந்து தளைத்தது தானே சிங்கள இனம். (விஜயனுக்கும் பாண்டிய இளவரசிக்கும் பிள்ளைகள் பிறக்கவில்லை என்கிறது மகாவம்சம்) ஆக இதில் எங்கே சுதேசியம் இருக்கிறது. மகாவம்சம் தரும் தகவல்களைக் கொண்டு பார்த்தால் இலங்கையின் முதல் கள்ளத் தோணிகள் சிங்களவர் என்றல்லவா தர்கிக்க முடிகிறது.

இலங்கையில் உள்ள சிங்கள பௌத்தர்கள் தவிர்ந்தவர்கள் அனைவரும் வந்தேறிகள், கள்ளத்தோணிகள் என்றால் தாமே இந்தியாவில் இருந்து வந்த மூத்த கள்ளத்தோணிகள் என்பதை அவர்களின் புனித நூல் மகாவம்சம் சொல்லவில்லையா. விஜயன் முதலாவது சட்டவிரோத கள்ளதோணி இல்லையா? ஒரு தர்க்கத்துக்கு எடுத்துக்கொண்டால் ஒரு வகையில் சிங்களமும் பௌத்தமும் இலங்கை மீதான ஆக்கிரமிப்பின் எச்சங்கள் தான்.

பிற்காலத்தில் இலங்கையில் இருந்து தஞ்சம் கோரி நாட்டை விட்டு வெளியேறி வள்ளங்களில் வேறு நாடுகளுக்கு சட்டவிரோத குடியேற்றவசிகளாக நுழைந்தவர்கள் தமிழர்கள் மாத்திரமல்ல சிங்களவர்களும் தான். இத்தாலி, அவுஸ்திரேலியா என்று இன்றும் பல வள்ளங்களில் வேறுநாடுகளில் நுழையத் தான் செய்கிறார்கள்.

இன்று தமிழர்களைத் திட்டுவதற்கு “கள்ளத்தோணி” என்கிற பதத்தை அதிகமாக பயன்படுத்திவருபவர் இன்றைய இலங்கையில் முன்னணி இனவாதியாக அறியப்படும் ஞானசார தேரர். இரண்டு மாதங்களுக்கு முன்னர் கூட கள்ளத்தோணிகள் அனைவரையும் நாட்டை விட்டு விரட்ட வேண்டும் என்று கர்ஜித்திருந்தார்.

இனத் தூய்மை என்பது இன்றைய உலகில் சாத்தியந்தானா என்கிற கேள்வி வலுவாக இருக்கும் போது இனப் புனிதத்தன்மைக்கு என்ன உத்தரவாதம் எஞ்சியிருக்கிறது.

சிங்களவர்கள் முதல் கள்ளத்தோணிகள் என்றால் இந்தியவம்சாவளித் தமிழர் அவர்களுக்கு பின் வந்த கள்ளத்தோணிகளே. ஆக, கொஞ்சம் முன் பின் வித்தியாசம் மாத்திரமே. 

எனவே இந்த கள்ளத்தோணி ஐதீகத்தை தமது இனத்துவ பெருமிதத்துக்காகவும், இனத் தூய்மைக்காகவும் கையிலெடுப்பதில் எந்த அர்த்தமும் இல்லை என்பதை “சிங்கள பௌத்தத் தனத்தின் அவசரம்” அறிய விடுவதில்லை.

இலங்கைக்கான பூர்வீக பண்பாட்டு அடையாள மூலங்கள் எங்கே போனது. அவற்றை இல்லாதொழித்தவர் யார்? அந்த முதுசங்களுக்கு அந்நியத்தை பிரதியீடு செய்ய அனுமதித்தது யார்? என்கிற கேள்விகளை விஞ்ஞான பூர்வமாக எழுப்ப ஏதோ தடைசெய்கிறதே. அது எது என்கிற கேள்விக்கே பதில் தேட வேண்டும். அந்த பதிலே இன்றைய சிறந்த மனிதத்துவ பண்பாட்டு எச்சமாக இருக்க முடியும்.

நன்றி - காக்கைச் சிறகினிலே - டிசம்பர் 2019


“தோட்டக்காட்டான்” விவகாரம்: நமக்குள்ளிருக்கும் அதாவுல்லாக்களை களையெடுப்பது! - என்.சரவணன்


சக்தி தொலைக்காட்சியில் கடந்த நவம்பர் 24 அன்று நிகழ்ந்த விவாதத்தில் அதாவுல்லா “தோட்டக்காட்டான்” என்று குறிப்பிட்டுப் பேசிய சர்ச்சையே கடந்தவார பேசுபொருளாக ஆகியிருந்தது. அந்த சூடு இன்னமும் தணியவில்லை. அதாவுல்லா இன்னமும் அது குறித்து எதுவித வருத்தமும் தெரிவிக்காததும் அதற்குக் காரணம். இந்த விவாதத்தில் முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் அதாவுல்லா அப்படியான வார்த்தைப் பயன்படுத்தியது தவறு என்றும் அதனை திரும்பப்பெறுமாறும் கூறி ஆத்திரப்பட்டு எழுந்து தனது கிளாசில் இருந்த தண்ணீரை அவரின் மீது எறிந்ததையும் சக்தி தொலைக்காட்சி வெளியிட்டது. இத்தகைய தொலைக்காட்சிகளைப் பொறுத்தளவில் இந்தக் காட்சிகளையெல்லாம் காட்டுவதன் மூலம் அதிகளவு பார்வையாளர்களை ஈர்க்கச் செய்யும் வஞ்சக உத்தி தான். 

ஆனால் இந்த பிரச்சினையின் உட்கிடக்கை என்பது அவ்வளவு சாதாரணமாகக் கடந்து போகக் கூடிய ஒன்றல்ல. இந்தப் பிரச்சினையை மலையகத்தோடு மாத்திரம் குறுக்காமல் பொதுத்தளத்தில் இத்தகைய நிந்தனைச் சொற்களின் பரிமாணம் எத்தகையது என்று பார்ப்பதே இக்கட்டுரையின் நோக்கம். 

ஒருவரை அல்லது, ஒரு குழுமத்தைச் சொற்களால் காயப்படுத்துவதற்கும், ஏளனம் செய்து இழிவுணர்வுக்குத் தள்ளுவதற்கும் அந்தந்த பண்பாடுகளைப் பொறுத்து பல சொற்கள் உலகம் முழுவதும் பேச்சுவழக்கில் உள்ளன. 

நிந்தனை 
இன - சாதி - மத - வர்க்க - பால் - நிறம், அங்கவீனம் என அனைத்து பிரிவினரையும் நிந்திக்கும் சொற்கள் புழக்கத்தில் இருக்கவே செய்கின்றன. நமது எதிர்ப்பு என்பது இந்த அத்தனை நிந்தனைகளுக்கும் எதிராகத் தான் இருக்க வேண்டும். சக மனிதனை வேறு கடும் சொற்களால் நிந்திப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் ஒருவர் தனக்கு எதிராக அப்பேர்பட்ட நிந்தனையைப் புரியும்போது மாத்திரம் வெகுண்டெழுவதில் எந்தவிதத் தார்மீகமும் இல்லை. நம் கண் முன் காண்கின்ற, கேட்கின்ற சகல நிந்தனைச் சொற்களையும் எதிர்த்து நிற்பதன் மூலமே அனைவரும் அந்தத் தார்மீகத்தைக் கைவரப் பெறுகின்றனர். மற்றும்படி வேற்று சுயநல கோஷமாகக் குறுகிவிடும். 

உதாரணத்துக்கு சாதியை எடுத்துக் கொள்வோம். ஆயிரக்கணக்கான சாதிகளைக் கொண்ட சாதிய படிநிலை அடுக்கில் மேலே உள்ள சாதி x கீழே உள்ள சாதி என்பதைத் தவிர மிச்சம் எல்லாமே இடை நிலைச் சாதிகள் தான். ஆகப் பெருமளவான இந்த இடைநிலைச் சாதியினர் அத்தனையுமே தமக்கு மேலே இருக்கிற ஒரு சாதி தன்னை ஒடுக்குவதாகப் பதறிக்கொண்டு குத்துதே, குடையுதே, இடிக்குதே, உதைக்குதே என்று புலம்புமாம். அதே வேளை தனக்குக் கீழே உள்ள சாதியினரை இடித்துக் கொண்டும், மிதித்துக் கொண்டும், உதைத்துக் கொண்டும் இருக்குமாம். ஆக இத்தகைய சாதியினர் தனக்குக் கீழ் உள்ளோரை ஒடுக்கிக்கொண்டே மேலிருப்போர் ஒடுக்கிறார்கள் என்று புலம்ப என்ன யோக்கியம் இருக்க முடியும்? என்ன தார்மீகம் இருக்க முடியும்? இத்தகைய சமூக நீதி குறித்த கோஷம் சகல ஒடுக்குமுறைகளுக்கும் எதிராக இருத்தல் அவசியம். 

காயப்படுத்தும் ஆயுதம் “நிந்தனை” 
ஒரு கட்டுரையொன்றுக்காகப் பல வருடங்களுக்கு முன்னர் சமூகத்தில் புழக்கத்திலுள்ள சகல தூசனங்களையும் பட்டியலிட்டு ஆராய முற்பட்டேன். அப்போது ஒன்றை இனங்காண முடிந்தது பெரும்பாலும் அத்தனை தூஷண சொற்களுமே பெண்களுக்கு எதிரானதாகத் தான் இருக்கிறது. ஒரு ஆணைத் திட்டுவதற்குப் பயன்படுத்தும் தூசனம் கூட அந்த ஆணுக்கு நெருக்கமான பெண்ணின் பாலியலையோ, பாலுறுப்பையோ, பாலியல் நடத்தயையோ சாடும் ஒன்றாக அமைவதை அவதானிக்கலாம். ஒருவரை வார்த்தையால் காயப்படுத்த வேண்டுமெனில் அவருக்கு நெருக்கமான பெண்ணை இகழ்ந்துவிட்டால் அதி உச்ச மனக்காயங்களுக்கும், ஆத்திரத்துக்கும் உள்ளாக்கி விடலாம் என்கிற நம்பிக்கை புழக்கத்தில் உள்ளது. பெண்கள் பற்றிப் புனையப்பட்டுள்ள புனிதம், தூய்மை, கற்பு, போன்ற சமூக பண்பாட்டு ஐதீகங்களே காலப்போக்கில் அவற்றுக்கு நேரெதிரான நிந்தனைகளைப் பிரயோகிப்பதன் மூலம் இந்த உயர் எதிர்ப்பையும், வெறுப்பையும் வெளிப்படுத்தி விட வழி செய்திருக்கிறது. 

“தோட்டக்காட்டான்” 
மலையக மக்களுக்கு எதிரான நிந்தனைச் சொல்லாக “தோட்டக்காட்டான்” மட்டுமல்ல “கள்ளத்தோணி” போன்ற சொற்களும் ஏற்கெனவே புழக்கத்தில் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கின்றன. இன்றும் இவை புழக்கத்தில் உள்ளன. “தோட்டக்காட்டான்” தமிழ் மொழிச் சமூகத்திலும், “கள்ளத்தோணி” என்கிற சொல் சிங்கள சமூகத்திலும் மலயகத்தவருக்கு எதிராக அதிகம் பயன்படுத்தப்படும் சொற்கள். சிங்களவர்களைப் பொறுத்தளவில் இந்திய வம்சாவளிச் சமூகத்தினரை அந்நிய ஆக்கிரமிப்பாளராக பார்க்கும் பொறுப்புணர்ச்சியின் பால் இருந்து “கள்ளத் தோணிகள்” என்கின்றனர். 

அப்படி என்றால் தோட்டக்காட்டான் என்று தமிழ் மொழிச் சமூகங்கள் மத்தியில் பயன்படுத்தப்படுவதன் அர்த்தமென்ன? “காட்டான்” என்கிற சொல்லுக்குப் பின்னால், காட்டில் வசிப்பவன், நாகரிகமாகப் பழகும் இயல்பு இல்லாதவன்; முரட்டுத்தனமாக நடந்துகொள்பவன், அறிவற்றவன் என அகராதிகள் வரைவிலக்கணப்படுத்துகின்றன. அப்படி என்றால் “தோட்டக்காட்டான்” என்கிற நிந்தனைக்குப் அடித்தளமாக எத்தகைய ஐதீகம் கட்டமைக்கப்பட்டு இதுவரை காலம் கடத்தப்பட்டிருக்கிறது என்பதையே நாம் கவனிக்க வேண்டும். 

ஆக “தோட்டக்காட்டான்” என்பது வெறும் நிந்திக்கிற வசவுச் சொல் மாத்திரமல்ல. அச்சமூகம் எழ விடாதபடி புனைந்து, ஐதீகமாகப் பரப்பி, நிறுவி வரப்பட்ட சொல் அது. அப்படிப்பட்ட ஒரு ஐதீகத்தை தக்கவைப்பதன் மூலம் லாபமடையும் ஆழும் வர்க்க அதிகாரத்துவ கூட்டு இருக்கவே செய்கிறது. பலமான தடைகளை மீறி எழுந்து வரும் இன்றைய மலையகம் இதையும் தகர்த்துக் கொண்டு தான் நிமிர்ந்துகொண்டிருக்கிறது. அப்பேர்பட்ட சூழலில் எவராவது இனியும் “தோட்டக்காட்டான்” என்று அழைப்பதை இந்த தலைமுறை வன்மையாக எதிர்த்து நிற்கிறது. அந்த மலையக கூட்டு மனநிலையைத் தான் மனோ கணேசனும் பிரதிபலித்தார்.

அடையாளம் 
காலனித்துவத்தின் பெரும்பகுதி காலத்தில் இலங்கை வாழ் தமிழர்களை ஒட்டுமொத்தமாக “மலபாரிகள்” (Malabars) என்றே அழைத்தார்கள். ஆண்டுதோறும் இலங்கை பற்றிய விபரங்களை வெளியிட்டுவந்த “தி ப்ளூ புக்” (The Blue books of Ceylon) 1880 வரை தமிழர்களை அப்படித்தான் குறிப்பட்டது. இந்தியாவிலிருந்து தமிழர்கள் தோட்டத் தொழிலுக்காக இறக்குமதி செய்த காலத்தில் அவர்களை அடையாளப்படுத்த “மலபார் கூலிகள்” (Malabar Coolies) என்று அழைத்தார்கள்.  தோட்டத் தொழிலைத் தவிர துறைமுகம், இரயில் சேவை, சுத்திகரிப்புத் தொழில் போன்ற பணிகளுக்கும் இந்தியர்கள் இறக்கப்பட்டதனால் “இந்தியக் கூலிகள்” என்றே பொதுவாக அனைவரையும் அழைத்தார்கள். தோட்டத் தொழிலாளர்களும் அதே அடையாளத்தில் தான் குறிக்கப்பட்டார்கள். அவர்கள் இயற்றிய சட்டங்கள் கூட “கூலிச் சட்டங்களாகத் தான் இருந்தன” உதாரணத்திற்கு
 • Indian Coolies' Bill, 1909,
 • Report of a meeting to discuss Coolie Emigration to the Colonies, Revenue and Agriculture Department, 1882,
 • Coolie conditions on arrival, medical?, Estates, vital statistics/births/deaths - Administration Reports 1869 – 1924,
 • Cooly Immigration 1907 - Sessional Paper
1881 இல் வெளியான குடித்தொகை கணக்கெடுப்பு அறிக்கையில் இந்தியாவில் பிறந்த தமிழர்களை “இந்தியத் தமிழர்” என்று பதிவு செய்தனர். 

இந்திய வம்சாவழித் தமிழர்களின் சனத்தொகை இலங்கை வாழ் சனத்தொகையை விட அதிகரித்த காலத்தில் தான் இந்தியர்களுக்கான பிரதிநிதித்துவமும் அறிமுகமானது அப்போது தான் அவர்கள் “இந்தியர்கள்” என்று தரம் பிரித்தார்கள். ஒரு நூற்றாண்டும் கடந்து வாழ்ந்துவந்த காலத்தில் தான் “இந்திய வம்சாவளியினர்” என்கிற பெயரைப் பெறமுடிந்தது. அரச ஆவணங்களிலும், குடித்தொகை விபரங்களிலும் “இந்தியத் தமிழர்” என்கிற அறிமுகத்தைப் பெற்றார்கள். சுதந்திரத்துக்குப் பின்னர் இந்தியப் பின்னணியைக் காரணம் காட்டி உரிமைகளைப் பறித்து, நாட்டை விட்டும் துரத்தும் அநியாயம் நிறைவேறிய போது தான் இந்தியாவுக்கும் எங்களுக்கும் இனி எந்தவிதத் தொடர்பும் இல்லையென்று உரத்துக் கூறி “மலையகத் தமிழர்” என்கிற அடையாளத்தை நிறுவிக் கொண்டார்கள். 

இலங்கையில் சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்களைப் போல “மலையக மக்களும் தனியான தேசிய இனம்” என்கிற கருத்தாக்கம் கால் நூற்றாண்டாகப் பேசுபொருளாக இருக்கிறது. துரதிர்ஷ்டவசமாக வடக்கில் போர் உக்கிரமம் பெற்றுக்கொண்டிருந்த காலத்தில்  இத்தகைய அடையாளங்களை முன்னிறுத்துவதை “பயங்கரவாதக் கோரிக்கையின்” அங்கமாகப் பேரினவாதம் பார்க்கத் தொடங்கிய போது. இந்த “மலையக தேசியத்துக்கான” அடையாளமும் பின் வாங்கப்பட்டது என்றே கூற வேண்டும். 

ஒவ்வொரு இனமும் தன்னை எப்படி அழைக்க வேண்டும் எப்படி அழைக்கப்படக் கூடாது என்பதை அறிவிக்கும் இறைமையைக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் நிந்திப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டு வந்த சொல்லொன்றை வெறுப்பதற்கும், நிராகரிப்பதற்குமான உரிமையைக் கொண்டிருக்கிறது. 


சட்டமுண்டா?
நிந்தனைக்கு எதிரான சட்டங்கள் இலங்கையில் அத்தனை வலுவாக இல்லை. இன்னும் சொல்லப்போனால் இந்தியா, பாகிஸ்தான் போன்ற நம் அண்டைய நாடுகளில் கூட மத நிந்தனைகளுக்கு எதிரான சட்டங்களாவது உண்டு. 

அப்படி இயற்றும் போது எது நிந்தனை என்பது குறித்து வரைவிலக்கணப்படுத்துவதோ, பட்டியலிடுவதோ ஒரு சிக்கல் உண்டு. சட்டவாக்க நிபுணர்கள் தான் இதற்கான சரியான வரையறைகளை வகுக்க முடியும். 

இலங்கையைப் பொறுத்தளவில் பொலிசார் அளவுக்கு நிந்தனைச் சொற்களையும், தூசன சொற்களையும் பயன்படுத்துவது வேறு யாருமில்லை என்றே கூற வேண்டும். எனவே இப்படியான சட்டங்கள் அதிகாரத்துவ மட்டங்களில் உள்ளவர்களையும் வழிக்குக் கொண்டுவர வழிவகுக்கும். 

இலங்கையில் அவதூறு, நிந்தனை என்பவற்றுக்கு எதிரான வழக்குகளுக்கு அரசியலமைப்பின் மூன்றாவது அத்தியாயமான அடிப்படை உரிமைகள் பகுதியிலுள்ள 11, 12வது உறுப்புரை கூறுகின்ற “சட்டத்தின் முன் அனைவரும் சமம்”, “இழிவுபடுத்துதல் தண்டனைக்குரிய குற்றம்” போன்ற ஏற்பாடுகள் தான் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அரசியலமைப்பே நாட்டின் உயரிய சட்டம் என்கிற அளவில் அதில் இதற்குத் தீர்வு சொல்லப்பட்டிருந்தாலும் நிந்தனைகள் குறித்த தெளிவான வரைவிலக்கணங்களையும், அதன் வரையறைகளையும், அவற்றின் வித்தியாசங்களையும் தன்மைக்கேற்ப அவற்றுக்கான தண்டனைகளையும் வரையறுக்க பிரேத்தியக சட்டத்தால் தான் இயலும். இலங்கையில் அது இன்னமும் இல்லை. அப்படி ஒரு சட்டத்தை இயற்ற நிர்ப்பந்திக்கிற ஒரு சம்பவமாக “அதாவுல்லா சர்ச்சையை” எடுத்துக்கொள்ள வேண்டும். 

அத்தாவுல்லாக்களைக் களைவது. 
முஸ்லிம்களுக்கும் மலையக சமூகத்துக்கும் இடையில் ஒரு முறுகல் நிலையைக் கொண்டுவர இந்த ஒரு வாரம் பல்வேறு சக்திகள் முயன்றும் தோற்று போயின. இன்றைய தலைமுறையினர் பரஸ்பர புரிதலுடனும், நிதானத்துடனும் அணுகியதைக் காண முடிந்தது. 

இன்றும் கூட அங்கவீனர்களைச் செவிடன், நொண்டி, குருடன் போன்ற இன்னோரன்ன சொற்களால் அழைப்பது சாதாரண பேச்சு வழக்கில் அங்கீகாரம் பெற்றுள்ளது ஒரு சாபக் கேடு. 

இன்றும் மற்றவர்களைத் திட்டச் சாதிப்பெயர்களைப் பயன்படுத்துவது சமூகத்தில் வழக்கமாக உள்ளது. அத் திட்டலுக்கு ஆளாபவர் எந்த சாதியாக இருந்தாலும் அந்த வசவு குறிப்பிட்ட அந்த சாதிச் சமூகத்தினரை இழிவாகப் புனைந்து பரப்பி நிலைபெறச்செய்யக் காரணமாகி விடுகிறோம். இப்படி நாமறியாமலேயே நம் தலைகளில் ஏறிக் குந்திக்கொண்டிருக்கிற ஆதிக்க நிந்தனைச் சொற்கள் ஏராளம். சக மனிதரைத் தூற்றுவதும், தூற்றுவதை வேடிக்கைப் பார்ப்பதையும் செய்துவந்த நாம் நாளை அதே நிந்தனைகள் நம் வீட்டு வாசலைத் தட்டும் போது மட்டும் நமக்கு ஏன் ஆத்திரம் மேலிடவேண்டும்? 

"சகல விதமான நிந்தனைச் சொற்களையும் எதிர்ப்போம்" என்கிற கோஷத்தை தூக்கியெழுப்ப இந்த சூழலை சந்தர்ப்பமாக ஆக்கிக்கொள்வோம்! 

சகல விதமான ஒடுக்குமுறைகளை வலுப்படுத்தும் ஆதிக்க சித்தாந்தங்கள் நிருவனமயப்பட்டுள்ள ஒரு சமூக அமைப்பில் இத்தகைய நிந்தனைச் சொற்களுக்கான வாய்ப்புகள் திறந்தே இருக்கிறது. நவீன உலகில் சுதந்திரம், சமத்துவம், ஜனநாயகம் போன்றவை குறித்து தெளிவுபெறுகிற சமூகம் இன்று வளர்ந்து வருகிறது. இவற்றை விளங்கப்படுத்துவதும் அதனால் சாத்தியம் கண்டுள்ளது. ஆனால் அந்த இடத்தில் இருந்து அடுத்த மட்டத்திற்கு வளர்த்தெடுக்க பிரக்ஞை பூர்வமான அகக்களையெடுப்பு அவசியமாகிறது. அதன் மூலம் மட்டுமே பண்பாடுமிக்க சமூகத்தைக் கட்டியெழுப்ப நம்மால் முடியும். 

நமக்குள் இருக்கும் நூற்றுக்கணக்கான அக-அத்தாவுல்லாக்களை களைவதன் மூலம் மட்டுமே பிற- அத்தாவுல்லாக்களை விமர்சிக்கும் தகுதியைப் பெறுகிறோம். எதிர்ப்பதற்கான தார்மீகத்தைப் பெறுகிறோம். நமது கடமையைச் செய்யாது உரிமையை மட்டுமே எதிர்பார்ப்பது என்ன வகை நீதியாக இருக்க முடியும்? 

பின்னிணைப்பு

என்டன் ஜோன்ஸ்
சிங்களத்தில் “கள்ளத்தோணி” பற்றிய பல ஐதீகங்கள், புனைவுகள், புனைகதைகள், பழமொழிகள் என உண்டு. இவை சாதாரண மக்கள் மத்தியில் “கள்ளத்தோணிகள்” பற்றிய வெறுப்புணர்ச்சியையும், காழ்ப்பையும், எதிர்ப்பையும் ஏற்படுத்தி நாளடைவில் அவர்களுக்கு எதிரான அரசியலாகவே வேரூன்றிவிட்டது.

இந்த வெறுப்பை ஜனரஞ்சகப்படுத்தி இந்திய வம்சாவளியினருக்கு எதிரான மிகவும் மோசமான ஒரு பாடல் சிங்கள சமூகத்தில் 80-90களில் பிரபலமாக இருந்தது. இப்போதும் அப்பாடலுக்கு இருக்கும் மவுசு குறையவில்லை என்றே கூறவேண்டும்.மலையக மக்களுக்கு எதிரான வெறுப்புணர்ச்சி மிகுந்த ஒரு பாடல் இதை விட வரலாற்றில் இருக்க முடியாது.
இந்தப் பாட்டை இயற்றிப் பாடியவர் பிரபல பொப் பாடகர் என்டன் ஜோன். அவரின் பாடல்கள் அத்தனையும் சமூகக் கதைகளைப் பேசும் பாடல்கள் என்பதால் சிங்களப் பாடகர்களில் தனித்த இடம் அவருக்கு உண்டு. லுமும்பா, மனம்பேரி, இந்திரா காந்தி, ஹிட்லர், கொப்பேகடுவ போன்றவர்களைப் பற்றியும் பாடல்கள் பாடியிருக்கிறார்.

அவரின் மேடைகளில் எல்லாம் ஒலித்த; கரகோஷம் பெற்ற புகழ் பெற்ற பாடல் “கள்ளத்தோணி” பாடல். வானொலி, சீடிக்கள், கசட்டுகள் என கலக்கிய பாடல் இது. ஆனால் இதுவரை இதன் உள்ளடக்கம் தமிழ்ச் சூழலில் பேசப்பட்டதில்லை. இதைவிட வெறுப்பின் உச்சத்தை உமிழ்ந்த வேறெந்த சிங்கள ஜனரஞ்சக பாடலையும் கேட்டிருக்க முடியாது. இத்தனைக்கும் இதன் சொந்தக்காரர் என்டன் ஜோன் ஒரு பறங்கி இனத்தைச் சேர்ந்தவர். போர்த்துக்கேய வம்சாவளியினரான அவர் தனது மூதாதையரும் இலங்கைக்கு கப்பல்களில் அத்துமீறி வந்து நாட்டை சூறையாடி, கைப்பற்றி அடிமைப்படுத்திய கூட்டத்தைச் சேர்ந்தவர் தான் என்பதை அவரும் மறந்து போனார். சிங்கள பேரினவாத கூட்டு மனநிலையின் நினைவுகளையும் உலுப்பியிருக்காது.

சமீபத்தில் ரோஹீங்கியா அகதிகளளை இலங்கையில் இருந்து விரட்டுவதற்காக எடுக்கப்பட்ட இனவாத பிரச்சாரங்களின் போதும் இப்பாடல் பயன்படுத்தப்பட்டது. (யூடியுப் சானலில் Allaganna Anton Jones) என்று தேடிப்பாருங்கள் இந்தப் பாடலை கேட்க முடியும். முதலில் பாடலைப் பாருங்கள்.

பிடிச்சுடு - அதோ பாய்ஞ்சு வாறார்கள் கள்ளத்தோணிகள்
பிடிப்பது எப்படி? ஒளிந்திருக்கிறார்கள்!
நல்லதம்பி - மொளகதண்ணி - சாம்பிராணிகள்
நமது எதிர்கால முதலாளிகள்!

தாரா போன்ற வெளிர்நிற கட்டழகானவர்கள்
கடலில் குதித்து வழியைக் கண்டார்கள்
வழியில் போராடி  இக்கரைக்கு வந்தவர்கள் - பின்னர்
நாங்களே பிரஜைகளென முரண்டு பிடிப்பவர்கள்!

தின்ன வழியின்றி இந்தியாவில் இருந்த அண்ணன்மார்
தோணிகளில் கள்ளத்தனமாக ஒளிந்து வந்தவர்கள்
இப்போ சுரண்டிவிட்டு
எங்கள் தோளைத் தட்டிப் போகிறார்கள் - இனி
எங்கள் நாட்டில் இருக்கிறார்கள் -ஐயகோ
கள்ளத் தோணிகள்
வரும்போது இரண்டு மூன்று, நான்காக வளைந்து வருகிறார்கள்
போகும்போது எங்கள் காதுகளையும் திருகிவிட்டு போகிறார்கள்
பதவிகளையும், வசதிகளையும் கொடுத்து
அவர்களைக் கெடுத்தது எங்கள் அண்ணன்மார்களே

வெட்கித் தலைகுனிந்து தலையில் பெட்டிகளுடன் வந்தவர்கள்
போத்தல் மூடிகளையும் கடதாசிகளையும் மலிவாக பெற்று - பின்னர்
சாக்கு உரிமையாளர்கள் ஆகிறார்கள் கள்ளத்தோணிகள்

உடுக்கவும் தின்னவும் குறைவாக செலவழிக்கிறார்கள்
எங்கு தங்குவதற்கும் தயார்.
பொழுது போக்கே பணம் சம்பாதித்தல் - இறுதியில்
அவர்கள் பிரஜைகள் - நாங்கள் கள்ளத்தோணிகள்

பெற்றோர், உறவுகள், நட்புகளை கைவிட்டுவிட்டு
லங்காவை பார்த்தபின்னர் அதுவே சொர்க்கம்!
அந்தக் கனாவுடன் - நாட்டைவிட்டு தப்பி
உறுதியுடன் வந்து சேர்கிறார்கள் - இந்த
கள்ளத்தோணிகளால் பெரும் பிரச்சினை

ஜனத்தொகையைப் பெருக்கும் - புதுவகைத் திருடர்கள்
கிடைக்கும் நிவாரணத்தையும் இழக்கும்
எங்களுக்கு பெரும் கவலை

நாட்டை அழிக்கும் கள்ளத்தோணிகள்
நாட்டுக்கு பெரும் சுமை
லங்கா எங்கள் நாடு - இப்படி ஆகலாமா

எவ்வளவு இருக்கிறார்களோ -அத்தனை
கள்ளத்தோணிகளையும் சேர்த்து பிடித்து - பட்டினிபோட்டு
உயரமான ஒரு மலையுச்சிக்கு கொண்டு சென்று
கழுத்தை நெறித்து தள்ளிவிடுவோம்
யாரும் கேட்டால் சொல்வோம்
பாய்ந்து செத்துப் போனார்கள் என்று...!


கோட்டாவின் வெற்றி: பாசிசத்துடனான பேரினவாதத்தின் சமரசம் : என்.சரவணன்

"இந்த வெற்றியைத் தரப்போகிறவர்கள் இந்தநாட்டின் பெரும்பான்மை சிங்களவர்களே என்பதை ஆரம்பத்திலேயே நாங்கள் அறிந்து வைத்திருந்தோம்!... "
கோட்டபாயவின் பதவிப் பிரமாணத்தின் போது ஆற்றிய உரையில் கோட்டா அப்படித் தான் தெரிவித்திருந்தார்.

சிறுபான்மையினரின் வாக்குகள் இன்றியே நாங்கள் யுத்தத்தில் வெற்றி பெறுவோம் என்று கோட்டாவுக்கு பின்னர் இருந்த சிங்கள சக்திகள் தேர்தல் காலத்தில் கர்ஜித்துக்கொண்டிருந்தார்கள்.

எல்லாளனைக் கொன்று யுத்தத்தை முடித்துவைத்ததாக கூறிய துட்டகைமுனு கட்டிய அனுராதபுர "ருவன்வெளிசேய"வை கோட்டபாய பதவிப் பிரமாணத்துக்கு தெரிவு செய்தது தற்செயல் அல்ல. துட்டகைமுனுவின் இடத்தில் இருந்து இதைச் செய்வதில் பெருமைகொள்வதாக பேச்சின் ஆரம்பத்தில் கோட்டா தெரிவித்திருந்தார். கோட்டபாய முதலில் துட்டகைமுனுவின் சிலைக்கு வணக்கம் செலுத்தி கூடியிருந்த சிங்கள பௌத்தர்களின் ஆரவாரமான ஆர்ப்பரிப்புகளுடன் தான் பதவிப் பிரமாணத்துக்கு வந்தார்.

அழிக்கவே முடியாது என்று கூறப்பட்ட விடுதலைப் புலிகளை அழித்துக் காட்டியதாக ஆரவாரமாக கொண்டாடியதற்கு கிட்டத்தட்ட நிகரானதே; சிறுபான்மையினரின் ஆதரவின்றி ஜனாதிபாதியொருவர தெரிவாக முடியாது என்கிற வாதத்தை உடைத்து சுக்குநூறாக்கியது என்கின்றனர் சிங்கள சக்திகள்.

இவை இரண்டுமே கனவு என்றும், கற்பனை மட்டுமே செய்ய முடியும் என்று கூறிக்கொண்டிருந்தவர்களுக்கு அது சாத்தியம் என்பதை சிங்கள பௌத்த பேரினவாதத் தரப்பு நிறுவியிருக்கிறது.

பேரம் தேவையில்லை இனி
ராஜபக்சக்களின் அமெரிக்க விசுவாசத்தை இன்னமும் குறைத்து மதிப்பிடுகின்றன இலங்கையின் மரபு இடதுசாரிகள். அமெரிக்க எதிர்ப்புவாதத்தை இடதுசாரிகளை விட அதிக அளவு தூக்கிப்பிடித்து வந்த சிங்கள பௌத்த தேசியவாதம் ஒரு அமெரிக்கரை தெரிவு செய்ய துணிந்திருக்கிறதென்றால் மறுபுறம் அது தமிழ் முஸ்லிம் மக்களுக்கு எதிரான உணர்வின் உச்ச வெளிப்பாடாகவே புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.

இதுவரையான தேர்தலிலேயே அதிகளவு வாக்களிப்பு வீதம் இத்தேர்தலில் நிகழ்ந்திருக்கிறது. சிங்கள தேசியவாதத்துக்கும் சிறுபான்மை இனங்களுக்கும் இடையிலான தெளிவான இடைவெளியை முடிவுகள் உறுதி செய்திருக்கிறது. சிங்களப் பிரதேசங்களில் வாக்களிப்பு வீதம் குறைந்திருந்தும் தமிழ்ப்  பிரதேசங்களில் வாக்களிப்பு வீதம் அதிகரித்திருந்தும் கூட இதுவரையான வாக்குவீத சமநிலையை பேண முடியவில்லை.

இனி சிறுபான்மை இனங்களோடு பேரம் பேசத் தேவையில்லை, அவர்களின் அபிலைஷகளை நிறைவேற்றாததால் பாதகமில்லை என்கிற நற்செய்தியை பேரினவாதத்துக்கு அறிவித்திருக்கிறது இத் தேர்தல். வரலாற்றில் சிறுபான்மை இனங்களால் முழுமையாக நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதியாக கோட்டா ஆனார்.

இந்த வெற்றியில் பேரினவாத நிகழ்ச்சிநிரல் திட்டமிட்டு நிறைவேற்றப்பட்டது. முழு பேரினவாத சக்திகளும் ஓரணியில் திரண்டிருந்தார்கள். 

தமிழ் முஸ்லிம் சக்திகள் அப்படி ஒரு சக்தியின் கீழோ, அல்லது தேசியவாதத்தின் கீழோ, அல்லது வேறொரு திட்டமிட்ட நிகழ்ச்சிநிரலின் கீழோ அணிதிரண்டிருக்கவில்லை. தன்னியல்பான அரசியல் அபிலாஷையையே சிறுபான்மை மக்கள் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். ஆனால் சிங்கள பௌத்த சக்திகள் அமைப்புகளாக இன்றி சித்தாந்தமாக ஒன்றுபட்டு வென்றிருக்கிறார்கள். எகேனவே நிறுவனமயப்பட்ட  சிங்கள பௌத்த பேரினவாத அமைப்புமுறைக்கு தனித்தனியாக வழிகாட்டத் தேவையில்லை. அதன் சித்தாந்தம் வழிகாட்டிகொண்டே இருக்கும். இப்போது பகிரங்கமாகவே பல இனவாத சக்திகள் களத்தில் இறங்கத் தொடங்கியுள்ளன.

"கோட்டபாய 17ஆம் திகதி வென்றதுமே நாங்கள் "தம்பி"களுக்கும், தெமலாக்களுக்கும் சரியான பாடம் புகட்டுவோம்... சிங்களவர் யார் என்பதை 17ஆம் திகதிக்குப் பின் காட்டுவோம்..." இப்படி இரு நாட்களுக்கு முன் டான் பிரசாத் முகநூலில் அறிவித்திருந்த மிரட்டலை சாதாரணமாக எடுப்பதற்கில்லை. இனி வரும் காலம் அப்படித்தான் இருக்கப் போகிறது. டான் பிரசாத் ஒரு பேரினவாத காலச் சண்டியன். சமீபகால பல இனவாத வன்முறைகளுக்கும், சம்பவங்களுக்கும் தலைமை தாங்கிய ஆபத்தானவன். 

பொதுபல சேனா
கடந்த சில வருடங்களாக சிங்கள பௌத்த பேரினவாதத்தின் களப் போராளிகளாக இருந்து வந்த பொதுபல சேனா, சிங்கள இராவணா போன்ற சக்திகள் தமது அமைப்புகளை கலைக்கப் போவதாக அறிவித்திருக்கிறார்கள். 

இலங்கையின் வரலாற்றில் சிங்கள பௌத்த சக்திகள் கலைந்து போயிருக்கின்றனவே தவிர சிங்கள பேரினவாத நிகழ்ச்சிநிரலும், அதன் சித்தாந்தமும் கலைந்தது கிடையாது.

கோட்டாவின் வருகையுடன் புதிய வடிவத்தில் புதிய இனவாத சக்திகள் அந்த இடத்தை நிச்சயம் நிரப்பும். புதிய தலைமைகளும், புதிய நிகழ்ச்சிநிரலும் அமுலுக்கு வரும்.

27.09.2014 ஐந்து வருடங்களுக்கு முன்னர் கொழும்பு சுகததாச உள்ளரங்கில் நடத்திய மாபெரும் மாநாடு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய மாநாடு. அந்த மாநாட்டில் உலகின் மோசமான பௌத்த பயங்கரவாதி என்று அழைக்கப்படும் விறாத்து தேரர் மியான்மாரில் இருந்து வருவிக்கப்பட்டிருந்தார். அதே ஆண்டு தான் அளுத்கம கலவரமும் நடந்து முடிந்தது. அந்த மாநாட்டில் ஞானசாரரின் பேச்சின்போது

““சிங்கள தேசிய விடுதலை போராட்டம்”. அந்த போராட்டம் ஒரு சித்தாந்த போராட்டம். அந்த கருத்து போராட்டத்தில் நாம் முதலில் வெற்றியடைய வேண்டும்.” என்றார். கூடவே அனைத்து சிங்களவர்களும் ஒரே நிகழ்ச்சிநிரலின் கீழ் அணிதிரண்டு ஒரே சிங்கள பௌத்த தலைவரை நாட்டின் தலைமைக்கு கொண்டுவரவேண்டும். சிறுபான்மையினரின் தயவின்றி அது நிறைவேற வேண்டும் என்றார்.

அது இப்போது நிறைவேறியிருக்கிறது. பொதுபல சேனாவின் பிரதான இலக்கின் ஒரு அங்கம் நிறைவேறியிருக்கிறது என்று ஞானசாரர் இப்போது கூறியிருக்கிறார். உண்மை தான் இது அவர்கள் இதுவரை நிறைவேற்றிவந்த நிகழ்ச்சிநிரலின் வெற்றி தான்.

கூடவே ஞானசார தேரர் இன்னொன்றையும் கூறினார். இது எப்படி நிறைவேற்றப்படவேண்டும் என்பது குறித்தது அது. அதற்கு அவர் சொன்ன வழிகளில் ஒன்று. நாட்டின் பௌத்த பன்சலைகளை மையப்படுத்தி சிங்கள பௌத்தர்கள் அணிதிரப்பட்டப்பட்டால் அந்த இலக்கு சாத்தியம் என்றார். இம்முறை கோட்டபாயவின் வெற்றிக்காக பல பன்சலைகள்  நாடளாவிய ரீதியில் பகிரங்கமாகவும் இரகசிமாகவும் கூட்டங்கள் நடத்தப்பட்டன என்பதைக் கவனிக்க வேண்டும்.

சிங்கள பௌத்த பேரினவாதத்தின் இயங்கு திசையும், பண்பும், அளவும், அடர்த்தியும் கோட்டபாய அதிகாரத்தின் கீழ் புதிய வடிவத்தை எடுக்கப் போகின்றன என்பதை தற்போதைய சூழல் வெளிப்படுத்தியிருக்கிறது.

இனவாத வழித்தடம்
90களில் சம்பிக்க ரணவக்க சிங்கள வீர விதான இயக்கத்தைத் தொடங்கிய போது நேரடியாக களப் பணிகளை மேற்கொள்ள முன்னணி அமைப்புகளை தொடங்கினார். அதேவேளை கூடவே பேரினவாதமயப்படுத்தலின் போது கட்டமைப்பு மாற்றங்களை செய்வதற்கும், சித்தாந்த மேலாதிக்கத்தை நிலைநாட்டுவதற்கும் பல முக்கிய இனவாத கருத்துருவாக்க நபர்களை ஒன்றிணைத்து களத்தில் இறக்கினார். அவை நேரடியாகவும் மறைமுகவும் இயங்கின.

2000ங்களின் பின்னர் நேரடி பிரதிநிதித்துவ அரசியலில் சம்பிக்க தரப்பினர் இறங்கிய பிரதான அரசியல் களத்தில் முக்கிய அங்கமாக படிபடிப்படியாகவும், வேகமாகவும் ஆக்கிக்கொண்டனர். தமிழ் மக்களுக்கு எதிரான போராட்டத்தை வழிநடத்தும் சித்தாந்த வழிகாட்டிகளாக அவர்கள் தான் இயங்கினர். இன்னொரு வகையில் கூறப்போனால் அவர்களுக்குப் பின்னால் தான் அரசாங்கமும், ஜே.வி.பி மற்றும் ஏனைய சிங்கள தேசியவாத சக்திகள் அணிதிரண்டன எனலாம். அந்தளவு சித்தாந்தப் பலத்தை கட்டியெழுப்பியிருந்தார்கள்.

யுத்தத்துக்கான நியாயங்களை சிங்கள மக்கள் மத்தியில் பலப்படுத்திய அதே வேளை, அரசை இனவாத கருத்துக்களால் கட்டுப்படுத்தியும் அடிபணிய வைத்தும் இருந்தனர். யுத்தத்துக்கான வழிப்பாதையை ஏற்படுத்தியும் கொடுத்தனர்.

அதே சம்பிக்க மைத்திரி - ரணில் ஆட்சியில் ஒரு சிறந்த அமைச்சராக காணப்பட்டார். ஆனால் அமைச்சரவையில் பேரினவாதத்தின் நிகழ்ச்சிநிரலுக்குள் கட்டுப்படுத்தி வைத்திருக்க காரணமாக இருந்தார். மறைமுகமாகவும், திரைமறைவிலும் இயங்குகிற பேரினவாத வடிவம் தான் பேராபத்தை விளைவிக்கக் கூடியவை. அப்பேர்பட்ட வடிவத்தின் அடுத்த கட்டத்தை கோட்டபாய அரசு இப்போது தொடக்கியிருக்கிறது. கோட்டபாய எதிரிகளை தாக்குவதற்கு தனது வாயைப் பயன்படுத்துவதில்லை.

“செயல் அதுவே சிறந்த சொல்” என்றார் ஹொசே மார்த்தி என்னும் கியூப தத்துவஞானி. இலங்கையின் தேர்தல் வரலாற்றில் போட்டியாளரை தனிப்பட குறைசொல்லி பிரச்சாரம் செய்யாத ஒரே ஒரு பிரதான போட்டியாளர் கோட்டபாய தான். கோட்டாவை குறை கண்டுபிடிப்பவர்கள் பலர் இப்போதும் கோட்டாவின் அன்றைய வாய் வார்த்தைகளைக் கொண்ட காணொளிகளையும், குரல் பதிவுகளையும் நிறையவே பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். கோட்டா அவற்றில் இருந்தெல்லாம் பாடம் கற்றுக்கொண்டிருகிறார். கோட்டாவிடம் இருந்து அப்படியான ஆதாரங்களை இனி நீங்கள் பெற முடியாது.

இனவாத செயற்திட்டங்கள் செயலில் மட்டும் தான் நாம் காண முடியும். அந்தளவு அது தன்னை நவீனமயப்படுத்தியிருக்கிறது. வரலாற்றுப் பாடங்களில் இருந்து திறமையாக தகவமைத்துக்கொண்டு களத்தில் இறங்கியிருக்கிறது.

அமெரிக்க குடிமகன்
"பின்வரும் அறிக்கையை நான் உண்மையானது என்று அறிவிக்கிறேன். நான் வேறு நாட்டுடன் நான் கொண்டிருந்த பந்தம், உறவு, விசுவாசம் என்பவற்றை இத்தால் முற்றிலும் கைவிடுவதோடு அமெரிக்க அரசியலமைப்பை மேலும் ஆதரிப்பேன், அதன் விதிகளை மதிக்கிறேன். அவருக்கு எதிராக எழுந்து நின்று அமெரிக்காவைப் பாதுகாத்து அவ்விதிகளை மதித்து தேவைப்படும்போதும் அமெரிக்காவிலும் வெளியிலும் அமெரிக்காவுக்காக ஆயுதம் தாங்குவேன். படை நடவடிக்கைகலோடோ தொடர்பில்லாத இராணுவச் சேவைகளிலும் தேவையேற்படும் வேளை ஈடுபடுவேன் என்று உறுதியளிக்கிறேன். இதனை சுயவிருப்புடனும், எந்த மனக்குழப்பமுமின்றியும் அறிவித்துக்கொள்கிறேன். கடவுள் உதவுவாராக”
இப்படித்தான் தான் கோட்டபாய அமெரிக்க குடியுரிமை பெற்றபோது அங்கு அவர் செய்துகொடுத்த சத்தியப்பிரமானம். இதற்கு முன்னர் ஒரு இலங்கையனாக அவர் இராணுவத்தில் பல தடவைகள் இந்த நாட்டின் இறைமையையும் பாதுகாப்பையும் உறுதிபடுத்த பாடுபடுவதாக சத்தியப்பிரமாணம் செய்திருக்கிறார் கோட்டா. அதே கோட்டா 25 வருடங்களின் பின்னர் இலங்கையின் ஜனாதிபதியாக பதவியேற்கும் போது அந்த விசுவாசங்களை கைவிட்டுவிட்டு மீண்டும் இப்படி சத்தியப்பிரமாணம் செய்கிறார்.

இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பு
*ஏழாம் அட்டவணை
157அ(7) உறுப்புரையும் 161 (ஈXiii) ஆம் உறுப்புரையும்
“................. ஆகிய நான் இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பை உறுதியாகப் போற்றிக் காப்பேன் என்றும், இலங்கையின் ஆட்புலத்துக்குள்ளாகத் தனி அரசொன்று தாபிக்கப்படுவதற்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ இலங்கையிலோ அல்லது இலங்கைக்கு வெளியிலோ ஆதரவு அளிக்கவோ, ஆக்கமளிக்கவோ, ஊக்குவிப்பு அளிக்கவோ, நிதி உதவவோ, ஊக்குவிக்கவோ, பரிந்துரைக்கவோ மாட்டேன் என்றும் பயபக்தியுடன் வெளிப்படுத்தி உறுதிசெய்கிறேன் ; சத்தியஞ்செய்கின்றேன்.”


கோட்டபாய 1971 ஆம் ஆண்டு இராணுவத்தில் இணைந்து 1972 இல் லெப்டினென்ட் ஆக கடமையாற்றியவர். சிங்க ரெஜிமென்ட், ரஜரட்ட, கஜபா ரெஜிமன்ட் ஆகியவற்றில் பணிபுரிந்து பின்னர் 1992 இல் லெப்டினன்ட் கேர்னல் பதவிக்கு உயர்த்தப்பட்டார். வடக்கில் ஒப்பரேஷன் லிபரேஷன், ஸ்ட்ரைக் ஹார்ட், திரவிட பலய ஆகிய படை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறார். 

2012 ஆம் ஆண்டு மாத்தளையில் கட்டுமானப் பணியொன்றின் போது கண்டு பிடிக்கப்பட்ட இலங்கையின் இரண்டாவது பெரிய மனிதப் புதைகுழி பற்றிய சர்ச்சை நினைவிருக்கலாம். கிட்டத்தட்ட 150 மனித உடல்களின் எலும்புக் கூடுகள் அங்கே கண்டு பிடிக்கப்பட்டன. இது 1986 – 1990 ஜே.வி.பியை நசுக்குவதற்குமேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் போது கொள்ளப்பட்ட சிங்கள இளைஞர்களின் சடலங்கள் என சந்தேகிக்கின்றனர். இந்தக் காலப்பகுதியில் மாத்தளையின் இராணுவ இணைப்பாளராக கடமையாற்றியவர் கோட்டபாய என்பது குறிப்பிடத்தக்கது.

1990 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்திய அமைதி காக்கும்படை நாட்டை விட்டு வெளியேறியதும் இரண்டாம் ஈழ யுத்தம் தொடங்கியது. யுத்த நிலைமை தீவிரம் பெற்ற போது குடும்பத்தின் நெருக்குவாரம் காரணமாக இராணுவத்தை விட்டு விலகினார். 1991 நவம்பர் 1 கோட்டபாய இராஜினாமா செய்வதற்கு சில மாதங்களுக்கு முன்னர் தான் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் விஜேரத்ன 1991 மார்ச் 2 அன்று கொழும்பில் புலிகளால் தற்கொலைத் தாக்குதலில் கொல்லப்பட்டார். அதற்கு அவர் உளவியல் சிக்கலைக் காரணம் காட்டித்தான் இராஜினாமவைக் கொடுத்துவிட்டு இராணுவத்தை விட்டோடி அமெரிக்காவில் சரணடைந்தார் என்கிறார் பீல் மார்ஷல் சரத் பொன்சேகா.

2005 ஆம் ஆண்டு தனது சகோதரர் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியானவுடன் தான் அமெரிக்காவிலிருந்து வந்திறங்கினார் கோட்டபாய. அமெரிக்க குடியுரிமையைக் கைவிடாமலேயே அவர் இலங்கையின் பாதுகாப்பு செயலாளராக ஆக்கப்பட்டார். மகிந்த அரசாங்கத்தின் அதீத அதிகாரங்களைக் கொண்டவராக இருந்த இந்தக் காலத்தில் நிகழ்ந்த பல்வேறு காணாமல் போதல், ஊடகவியலார்கள் கொலை, வெள்ளை வேன் கடத்தல் போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு காரணமானார். கோட்டபாயவைப் பார்த்து நாடே நடுநடுங்கும் நிலை உருவானது.

கடந்த 35 ஆண்டுகளில் இனப் பிரச்சினைக்கான தீர்வு குறித்து விஞாபனங்களில் இடம்பெறாத, முக்கியத்துவம் பெறாத தேர்தல் இது. அதுபோல ஜனாதிபதியொருவரின் பதவிப்பிரமான உரையில் இனப்பிரச்சினை குறித்த எந்த குறிப்பும் இடம்பெறாத உரையும் இது தான்.

தேசிய பிரச்சினைக்கு தீர்வைக் கூறாமலேயே வென்ற ஜனாதிபதி. அதுபோல சத்தியப்பிரமானத்தன்று நிகழ்த்திய உரையில் தேசியப் பிரச்சினை குறித்து அலட்சியமாக எதுவும் சொல்லாமல் விட்ட ஜனாதிபதியும் இவர் தான். இலங்கையின் தேசிய உடையை இதுவரை தவிர்த்து வந்திருக்கிற முதல் அரச தலைவரும் இவர் தான்.

வெற்றிபெற்றதன் பின்னர் கூட சர்வ மத பிரார்த்தனைகளுக்கு இடம் கொடாமல் பௌத்த பிக்குமார்களின் ஆசீர்வாதங்களுடன் மட்டுமே பதவியேற்புகளை மேற்கொண்டார்கள். கடந்த அரசாங்கத்தில் குறைந்தபட்சம் சகல நிகழ்வுகளிலும் சர்வ மதத் தலைவர்களுக்கும் இடம் கொடுக்கப்பட்டது.

மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன போன்றோர் இந்த ஆட்சியில் முக்கிய இடம் பிடிக்கின்றனர்.
“இனப்பிரச்சினை தீர்வு என்கிற பேரில் புதிய அரசியலமைப்பை ஆதரிப்பவர்கள் தேசத்துரோகிகள். அவர்களுக்கு மரணதண்டனை அளிக்கவேண்டும். 6 அடி உயரத்தில் அத்தகைய தேசத்துரோகிகளின் பிணங்களை தூக்கிச்செல்லவும் விடக்கூடாது. அப்பிணங்களை கயிற்றால் கட்டி தரையில் இழுத்துச்செல்லவேண்டும்.”
என்று கோட்டாபயவை வெல்ல வைப்பதற்காக தொடங்கப்பட்டிருந்த “வியத்மக” இயக்கத்தின் கூட்டத்தில் சில மாதங்களுக்கு முன் அப்படி உரையாற்றியிருந்தார். இறுதியுத்தம் பற்றி “நந்திக் கடலுக்கான போர்ப்பாதை” என்கிற நூல் உள்ளிட்ட முக்கிய போர்க்கால நூல்களை எழுதியவர். பிரபாகரனின் மரணத்தை முதன் முதலில் அறிவித்தவர். இப்போது அவருக்கு பாதுகாப்பு செயலாளராக பதவி வழங்கப்பட்டிருக்கிறது.

இலங்கையின் தேசியவாதம் என்பது சிங்கள பௌத்த தேசியவாதமாகவும், பின்னர் இனவாதமாகவும், பேரினவாதமாகவும் வளர்ச்சியடைந்து ஈற்றில் பாசிசமாக அவ்வப்போது தலைதூக்கி வந்திருப்பதை நாமறிவோம். அப்பேர்பட்ட புதிய சிங்கள பௌத்த நவபாசிச போக்கின் நவநாயகனாக கோட்டா இன்று தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். எனவே தான் பாசிசத்துடனான பேரினவாதத்தின் சமரசத்துக்கு கிடைத்த வெற்றி என்கிறோம்.

இந்த வெற்றி சிங்கள - பௌத்த - வலதுசாரி - சாதியாதிக்க - ஆணாதிக்க கூட்டின் வெற்றி இது.

நன்றி - தினக்குரல்

 

இணைந்திருங்கள்


Followers

Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates