Headlines News :

காணொளி

ஜனாதிபதி விருது

ஜனாதிபதி விருது
நமது மலையகத்துக்கு

சுவடி

இராவணனை சிங்களத் தலைவனாக ஹைஜாக் (Hijack) செய்வதன் அரசியல்! | என்.சரவணன்


மகாவம்சத்தில் உள்ள இரண்டு வரலாற்றுத் தகவல்கள் சிங்களவர்களுக்கு நெருக்கடிகளைக் கொடுத்துக்கொண்டிருக்கிறது.

1. சிங்களவர்கள் சிங்கத்தின் வழித்தோன்றல் என்பது
2. வங்கத்தில் இருந்து வந்த விஜயனில் தொடங்குகிறது சிங்களவர்களின் வரலாறு என்பது

சிங்கள பௌத்தர்களின் புனித வரலாற்று நூலாக கருதப்படும் மகாவம்சத்தில் சிங்களவர்களின் தோற்றம் பற்றிய கதையின் பிரகாரம் சிங்களவர்களின் பூர்வீகம் சிங்கம் என்கிறது. ஆக மிருகத்தின் வம்சாவளி என்று ஒத்துக்கொள்ள வேண்டிவரும். ஏற்காவிட்டால் மகாவம்சத்தை நிராகரித்ததாக ஆகும். மகாவம்சத்தை நிராகரிப்பது என்பது அவர்களின் இனவரலாற்றுப் பெறுமதியை இழப்பதாகும்.

எனவே விஜயன் சிங்கத்தின் பேரன் அல்ல என்றும், சிங்களவர்கள் சிங்கத்தின் வழித்தோன்றல் அல்லர் என்றும் அறிவிக்க வேண்டிய நிர்ப்பந்தமும் சிங்கள பௌத்தர்கள் மத்தியில் தோன்றியுள்ளது. ஆகவே தாம் சிங்கத்தின் வம்சம் அல்ல, அதற்கும் முந்திய இராவண வம்சம் என்கிற இன்னொரு கதையை கட்டியெழுப்ப நேரிடுகிறது.

ஐயாயிரம் வருடங்களுக்கு முந்திய பூர்வீகக் குடிகள் சிங்களவர் என்கிற புனைவை நிலைநாட்ட இராவணன் இப்போது அவசியப்படுகிறார். இதுவரை தாம் ஆரியர் பரம்பரை என்றும்  கூறி வந்தவர்கள் இப்போது திராவிட பூர்வீகத்தைக் கொண்டவர்கள் என்றும் கூறியாகவேண்டும். ஆனால் அதில் அரசியல் சங்கடங்களும் சர்ச்சைகளும் நிறைந்துள்ளன. தமிழர்களை சிங்கள மொழியில் “திரவிட” (திராவிடர்) என்று தான் பொதுவில் அழைத்து வருவதை நாம் அறிவோம்.

அதைவிட அடுத்த சிக்கல் இக்கதைகளின் பிரகாரம் விஜயன் ஒரு அந்நியனாக இருக்கிறான். அவன் வட இந்தியாவிலிருந்து இன்னும் சொல்லப்போனால் வங்க தேசத்திலிருந்து வந்ததாக ஒத்துக்கொள்ளவேண்டும். தாம் அந்நியர் என்று ஏற்றுக்கொண்டதாக ஆகிவிடும். அது மண்ணின் மைந்தன் கருத்துருவாக்கத்துக்கும் பெருந்தடையாக ஆகிவிடுகிறது. 

எனவே தான், தாம் வங்கத்திலிருந்து வந்த ஆரியர் என்கிற கதைகளையும் புறந்தள்ளி, கைவிட்டுவிட்டு இராவணக் கதைகளுக்கு உயிர்கொடுத்து இராவணனை தமது தலைவனாக ஏற்பதன் மூலம் முழு இலங்கையின் பூர்வீகக் குடிகள் என்கிற இடத்துக்கு வந்து சேருகிறார்கள். இராவணனை ஹைஜாக் (Hijack) செய்வதன் பின்புலம் இதுதான்.

ஒரு கற்பிதக் காவியத்துக்கு வரலாற்றுப் பெறுமதியையும், அரசியல் பெறுமதியையும், இனப்பெருமதியையும், மதப் பெருமையையும் கொடுத்து வெகுஜன அமைதிக்கு இடையூறு விளைவிக்கும் காவியமாக இன்று ஆக்கப்பட்டிருக்கிறது இராமாயணக் கதை. அந்தக் கதைக்கு தொல்பொருள் சான்றில்லாததால், காணக்கிடைக்கிற தொல்பொருள்களையெல்லாம் வலிந்து அவற்றுடன் தொடர்புபடுத்திப் புனைகிற செயற்பாடுகள் இலங்கையில் வெகுவாக வளர்ந்திருக்கிறது.

ஆய்வணுகுமுறையில் இரு வகையுண்டு. முதலாவது கிடைக்கப்பெறும் சான்றுகளைக் கொண்டு முடிவுக்கு வருதல். அடுத்தது எடுத்த முடிவை நிறுவுவதற்கு ஆதாரம் சேர்ப்பது. முற்கற்பித முடிவுகளை நிறுவுவதற்கு வலிந்து ஆதாரம் கோர்க்கும் பணிகளே இலங்கையில் தற்போது நிறைந்துள்ளது. இதில் உள்ள சோகம் என்னவென்றால் நிபுணத்துவம் பெற்ற தொல்பொருள் ஆய்வாளர்கள் இதில் இறங்கியிருப்பது தான். அவர்களின் இனவாத பின்புலம் அவர்களை இப்பணிகளை நோக்கி உந்துகிறது.

2012 ஆம் ஆண்டு ஜனவரி 11 அன்று திவயின பத்திரிகைக்கு வீரசேன அல்கெவத்த என்பவர் எழுதிய “இராவணன் வரலாற்றுப் பாத்திரமா? என்கிற கட்டுரையில் இப்படித் தெரிவிக்கிறார்.
“மகாநாம தேரர் மகாவம்சத்தில் பல தகவல்களை திட்டமிட்டே மறைத்துவிட்டார். விஜயன் வந்திறங்கிய தினத்தில் தான் புத்தரின் இறப்பு நிகழ்ந்திருக்கிறது. அதே வேளை புத்தர் இறப்பதற்கு முன்னர் இலங்கைக்கு வந்திருக்கிறார். அப்போது இயக்கர்களும் நாகர்களும் இருந்திருக்கிறார்கள். அரசர்களுக்கு இடையிலான பிரச்சினைகளைத் தீர்த்திருக்கிறார். அப்படியென்றால் அவர் வரும்போது இந்தத் தீவு வெற்றுத் தீவாக இருக்கவில்லை. அப்படி இருக்கும் போது அதன் பின் பல ஆண்டுகள் கழித்து வந்த விஜயனில் இருந்து தான் சிங்கள இனத்தின் பூர்வீகம் தொடங்கியது என்றது எதற்காக? தனது இந்தியப் பூர்வீக உரிமையை எழுத்தில் நிலைநாட்டவா மாநாம தேரர் முயற்சித்திருக்கிறார்...
இலங்கையில் அதற்கு முன்னர் இருந்தே பண்டைய காலத்தில் வாழ்ந்த ராவண ராஜ்ஜியம் பற்றி இந்தியாவில் இருந்து கூறும்போது நமது வரலாற்றாசிரியர்கள் ஏன் அதைக் கண்டுகொள்ளவில்லை. விஜயன் வரும்போது எந்தக் குடிகளும் வாழவில்லை என்பது ஏன்? மகாவம்சம் இராவணனை இருட்டடிப்பு செய்துவிட்டது”
என்கிறார்.

இராவண உயிர்ப்பு எங்கிருந்து தொடங்கியது?
இராமாயணம் பற்றிய தேடல்கள் இலங்கையில் உயிர்த்த காலம் 19ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் தான். ஆங்கிலேய அறிஞர்கள்களின் இலக்கிய-வரலாற்றுத் தேடல்களின் மூலம் அது நிகழ்ந்தது எனலாம். ராஜரீக ஆசியக் கழகத்தின் இலங்கைக் கிளையின் சஞ்சிகையில் இது பற்றிய பல விவாதங்கள், ஆய்வுக் கட்டுரைகளின் சமர்ப்பிப்புகளைக் காண முடிகிறது.

இதேவேளை இலங்கையின் பாட நூல்களில் இராமாயணம் பற்றி இந்தியாவில் நிலவுகிற அதே இராமாயணக் கதையின் சுருக்கத்தைத் தான் கற்பித்து வந்தார்கள். ராமனை நாயகனாகவும், சீதையை நாயகியாகவும், சீதையைக் கவர்ந்து கடத்தி வந்து சிறைவைத்து சண்டையிட்ட இராவணனை வில்லனாகவும் சித்திரிக்கிற கதை தான் நெடுங்காலமாக சிங்களப் பாடநூல்களில் இருந்தன. இராவணன் இலங்கையில் வாழ்ந்தான் என்றும் இலங்கைத் தவிர வேறெங்கும் வாழவில்லை என்கிற கருத்தே உறுதிபட அக்கதைகளின் மூலம் மாணவர்களுக்கு போதிக்கப்பட்டது. சிங்கள அரசர்களான விஜயன், துட்டகைமுனு போன்ற வரலாற்றுப் பாத்திரங்களுக்கு முன் இராவணன் ஒரு சிங்கள வீரன் அல்லன். இராவணனுக்கு எந்த மரியாதைப் பெறுமதியும் கொடுக்கப்படவில்லை. ஒரு வகையில், மாற்றான் மனைவியைத் திருடிய திருடனாகவே இராவணன் உருவகப்படுத்தப்பட்டிருந்தான்.

இராவணின் வீரதீரச் செயல்கள் பற்றியோ, இராவணின் இராஜ்ஜியம் பற்றியோ, இராவணின் போர் முறைகள் பற்றியோ, இராவணின் பறக்கும் வானூர்தி பற்றிய கதைகளோ கூட முக்கியத்துவம் பெற்றிருக்கவில்லை. கணக்கில்கொள்ளப்படவில்லை. 

வீரம் செறிந்தவர்களாக இராமனும் அனுமானும் முக்கியப்படுத்தப்பட்டிருந்தனர்.  கதஹ்யின் படி இவர்கள் இராவணனைத் தோற்கடித்துச் சீதையை மீட்டுக்கொண்டனர். சுப்பர்மேன் (Superman) பற்மன் (Batman) ஆகிய இருவரும் செய்கிற தீரச் செயல்களைத் தொலைக்காட்சியில் பார்க்க முடியாத ஒரு காலத்தில் இராவணனின் இராவணனின் பறக்கும் வானூர்தி பற்றிய உருவகம் நிச்சயமாக பலரைக் கவர்ந்திருந்தது. அப்படியான உருவகங்கள் வழியாகத்தான் இராவணன் முற்றுமுழுதாக நீங்காமல் பலரது நினைவில் இருந்தான் என்று நான் நினைக்கின்றேன். சிங்கள இனத்தின் மாவீரனாக இராவணன் உணரப்பட்டதில்லை.

“ஹெல ஹவுல” இயக்கம்
இலங்கையின் மிகப் பிரசித்திபெற்ற சிங்கள மொழிப் பண்டிதராகவும், இலக்கியவாதியாகவும் கருதப்படுபவர் குமாரதுங்க முனிதாச. 1941 ஆம் ஆண்டு ஜனவரி 11 அவரின் தலைமையில் அவரின் வீட்டில் வைத்து உருவாக்கப்பட்ட இயக்கம் தான் “ஹெல ஹவுல” (Hela Havula) என்கிற இயக்கம். ஒரு வகையில் இதை மொழித் தீவிரவாத இயக்கம் என்றும் அழைப்பார்கள். (1)

“ஹெல” என்பதே சிங்கள மொழியின் மூல மொழி என்றும் அதை பலப்படுத்தும் வகையில் தான் “ஹெல ஹவுல” என்று பெயர் வைத்துக்கொண்டார்கள்.

சிங்கள இனத்தை தூயமைப்படுத்தவேண்டும் என்றால் சிங்கள மொழியும் அந்நிய கலப்பில்லாத தூய்மையான சிங்கள மொழியாக இருத்தல் வேண்டும் என்று அந்த இயக்கத்தவர்கள் கூறினார்கள். சிங்களத்தில் கலந்துள்ள பாலி, சமஸ்கிருதம் என்பவற்றின் செல்வாக்கை நீக்க வேண்டும் என்று இயங்கினார்கள். அது மட்டுமன்றி காலனித்துவ போத்துக்கேய, ஒல்லாந்து, ஆங்கிலேயக் கலப்புகள் கூட இல்லாத சிங்களத்தை வளர்த்தெடுக்க வேண்டும் என்கிற இயக்கத்தை முன்னெடுத்தார்கள். ஹெலியோ (The Helio) என்கிற ஒரு சஞ்சிகையும் 1941 இல் தொடக்கி நாடளாவிய ரீதியில் நடத்தினார்கள்.(2) குமாரதுங்க முனிதாச எழுதிய சிங்கள இலக்கணம் குறித்த நூல் ஒரு தலையாய நூலாக திகழ்கிறது.(3)

இந்திய ஆரியவாத செல்வாக்கிலிருந்து சிங்கள மொழியையும், இலக்கியங்களையும் மீட்கவேண்டும் என்று இயங்கியது இவ்வியக்கம். அதுபோல ஒரு இனம் பூரணப்படாமல் மொழி மட்டும் தனித்து எப்படி வாழும் என்றார்கள்.

இலங்கையின் பிரபல நாடகாசிரியர் ஜோன் த சில்வா 1886 இல் முதற் தடவையாக இராமாயணத்தை இலங்கையில் மேடையேற்றினார். அந்த இராமாயண நாடகத்தின் பிரதி பல ஆண்டுகளாக மேடையேற்றப்பட்டு வந்தது. அந்த பிரபலமான இராமாயணக் கதை இலங்கையின் சுயத்துக்கு இழுக்கு என்று “ஹெல ஹவுல” தீர்மானித்தது. இராமாயணத்துக்கு மாற்றாக அவர்கள் “சக்வித்தி ராவண” என்கிற ஒரு நாடகத்தை இயக்கினார்கள். அது 1946முதன் முதலில் மேடையேற்றப்பட்டது. சிங்கள சமூகத்தில் பிரசித்திபெற்ற இந்த நாடகம் இன்றும் ஆயிரக்கணக்கான தடவைகள் மேடையேற்றப்பட்டு வருகிறது. அந்த நாடகத்தில் வரும் “பொம்புளே மேக் பொம்புளே” என்கிற பாடல் தமிழர்கள் பலரும் அறிந்த பிரசித்தமான பாடல்.

ஹெல ஹவுல இயக்க திட்டத்தின் ஓர் அங்கமாக, இதிகாச வாயிலாகக் கூறப்பட்ட சிங்களவர்களின் மூதாதையரான விஜயனின் வருகைக்கும் முற்பட்ட காலத்தைப் பற்றிய கண்ணியமான வரலாறொன்றினை கட்டியெழுப்ப்புவதன் முக்கியத்தை உணர்ந்தார்கள். விஜயனின் வருகைக்கு முன்னரும், அதன் பின்னர் இந்தியச் செல்வாக்குகள் ஊடுருவுவதற்கு முன்னரும், இலங்கையில் தூய்மையான வரலாற்றைக் கொண்ட பாரம்பரியமும் நாகரிகமும் இருந்தன என்பதை வலியுத்தினார்கள்.

இராவணனின் கற்பனைக் கதைக்குப் புத்துயிர்ப்பு அளிக்கும் போது இராவணனை இயக்கன் என்றும் இராட்சத அரசன் என்றும் குறிப்பிடுவது வழக்கம். ஆரம்பத்தில் இயக்கர்களும் (Yakshas), இராட்சதர்களும் (Rakshas) இலங்கையில் வாழ்ந்தனர் என்றும் அவர்கள் மனிதர்கள் அல்லர் என்றுமே சிங்களப் புராணக் கதைகளில் காணப்படுகின்றது. “இயக்கர்', இராட்சதர்'' என்ற பதங்களின் வர்ணனைகளின் மூலம் அவர்கள் மனிதர்களை விழுங்கி தீங்கு விளைவிக்கிற பேய்களைப் போலத்தான் உருவகப்படுத்தப்பட்டுள்ளது. இப்படியான இராவணனின் பேய்த்தோற்றத்தையும், இயக்கர்களின் பேய்த் தோற்றத்தையும் மாற்றி, மானிட உருவம் கொடுத்தது இந்த இயக்கம். 

2002 ஆம் ஆண்டு இங்கிலாந்து இராணி எலிசபத் இராணியாக பதவியேற்று 50 வருட நிறைவைக் கொண்டாடும் முகமாக பக்கின்ஹோம் மாளிகையில் நடத்தப்பட்ட கலை நிகழ்சிகளில் கலந்துகொள்வதற்காக இந்த நாடகமும் தெரிவானது. அந்நாடகத்தை இராணி மிகவும் இரசித்தார் என்கிற பதிவுகளையும் காண முடிகிறது. (4)

இந்த நாடகத்தில் தான் இராவணன் முதற் தடவையாக ஒரு கதாநாயகனாக மாற்றப்படுகிறான். இந்த நாடகம் இராவணனை பற்றி புதிய கோணத்தில் சிந்திக்க வைத்தது. அதுவே இராவணனைப் பற்றிய தேடலையும் தூண்டியது. இராவணன் இலங்கையின் தலைவன் தானே, நமது தலைவன் அல்லவா? சிங்களத் தலைவன் அல்லவா என்கிற முடிவுக்கும் வந்தார்கள்.

இராவணப் புனைவின் முன்னோடி நூல்
இராவணன் பற்றிய புனைவுகளை வரலாற்று உண்மை போல சித்திரிக்கும் வகையில் வெளியான முன்னோடி நூல் ஆரியதாச செனவிரத்ன என்பவர் 1991இல் எழுதிய (ශ්‍රී ලංකා - රාවණ රාජධානිය - ஸ்ரீ லங்கா : இராவண ராஜ்ஜியம்) என்கிற நூல். 

இன்று இராவணனைப் பற்றிய நூற்றுக்கும் மேற்பட்ட சிங்கள நூல்கள் வெளிவந்திருந்தாலும் இராவணனை சிங்களவர்கள் மத்தியில் மீளுயிர்த்ததில் இந்நூலுக்கு முக்கிய பங்குண்டு. அந்த நூல் பின்னர் பல (திருத்திய) பதிப்புகளைக் கண்டது. அந்நூலில் இராவணனின் உயில். (இறுதி ஆசை) என்றெல்லாம் கட்டுக்கதைகள் நிறைந்த அத்தியாயங்கள் உள்ளன. இந்நூல் அப்போதைய ஜனாதிபதி பிரேமதாசவை கௌரவிக்குமுகமாக வெளியிடப்பட்டது. அப்போது இந்தியாவை கடுமையாக எதிர்த்தபடி இருந்தார் பிரேமதாச. 

இராவணன் இந்தியாவிற்கு எதிராகக் கொண்டிருந்த உணர்வலைக்கும், பிரேமதாச கொண்டிருந்த உணர்வலைக்கும் இடையிற் காணப்பட்ட நேரடி ஒருமைப்பாட்டினை இந்நூலில் அவர் விளக்குகின்றார். மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இராவணன் காட்டிய துணிச்சலும், தியாக உணர்வும், உண்மையில் பிரேமதாசவின் வீரத்தை ஒத்திருந்தன என்கிறார்.
"இராவணன் காட்டிய துணிச்சலும், தியாக உணர்வும், பிரேமதாசவின் வீரத்தை ஒத்திருந்ததாக அந்நூலின் முகவுரையில் அவர் குறிப்பிடுகிறார். அப்போது பிரேமதாச துணிச்சலுடன் இந்தியாவை பகைத்துக்கொண்டார். IPKF ஐ வெளியேறச் சொன்னார்.
சமாதானத்தை நிலைநாட்டுவது என்ற பொய்யான போர்வையில், இந்தியாவின் புதிய அவதாரமான இராமரினால் அனுப்பப்பட்ட அந்நியப் படைகளை (IPKF) பிரேமதாச தனது சொற்போரினால் விரட்டியடித்தார்'' 
என்கிறார்.

1995 இல் சசங்க பெரேரா எழுதிய கட்டுயொன்றில்; விஜயன் பற்றி புனைந்து சிங்கள மக்கள் மத்தியில் ஆழமாக வேரூன்றியிருக்கும் மகாவம்சக் கதைகளை இல்லாமல் செய்வதோ இராவண கதைக்கு புத்தியிரப்பளிப்பதோ வெற்றியடையமாட்டாது என்றும் அவர்களின் கற்பனையில் கூட இராவணனின் கதை பதியவில்லை என்றும், அது சாத்தியமில்லை என்றும் குறிப்பிடுகிறார்.(5) ஆனால் சரியாக இப்போது 25 வருடங்கள் ஆகும் போது அந்த கணிப்பு தகர்ந்திருக்கிறது பேரினவாத நிகழ்ச்சிநிரல் என்று தான் கூறவேண்டும். ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் ஒரு பண்பாட்டு ஆக்கிரமிப்பின் மூலம் நில ஆக்கிரமிப்பையும் அதன் வழியாக ஒட்டுமொத்த தமிழர் அபிலாஷைகளை நிறைவுக்கு கொண்டுவரும் நிகழ்ச்சிநிரலின் அங்கமே இந்த இராவணக் கடத்தல் எனலாம்.
வெகுஜனமயப்படுத்தப்படும் இராவணன்
ராவணன் பற்றிய கதைகளும் அல்லது இராவணப் புனைவுகளும் இராமாயணக் காவியம் உருவாக்கப்பட்ட இந்தியாவிலும், இலங்கை வாழ் சிங்கள – தமிழ் மக்கள் மத்தியில் மட்டுமன்றி இந்திய உபகண்ட நாடுகளிலும் தாய்லாந்து, மியான்மார், பாலித்தீவு போன்ற தென் கிழக்காசிய நாடுகளிலும் பாரம்பரிய நாட்டார் கதைகள் மூலமும், இலக்கியங்களின் மூலமும், நம்பிக்கைகளின் மூலமும் செல்வாக்கு செலுத்தி வருகிறது.  மேற்கு நாட்டு நாட்டு அறிஞர்களையும் கலைஞர்களையும் கூட ஈர்க்கிறது, ஏனெனில் இதற்கு ஒரு இலக்கியக் காவியப் பெறுமதி உண்டு என்பது உண்மை. இது மாய, மந்திர, போர், காதல், பழிவாங்குதல் மற்றும் கதாநாயக வழிபாடு என ஈர்க்கிறது.

அந்த வகையில் காவியப் பெறுமதிக்கப்பால் அதற்கென்று ஒரு நம்பகப் பெறுமதி கிடையாது. ஆனால் அக்காவியம் மக்களின் செவி வழிக்கதைகளினூடாகவும், நாடகம், கூத்து என இன்னும் பல கலை இலக்கிய வடிவங்களின் ஊடாகவும் வழிவழியாக வெகுஜன செல்வாக்கை நிறுவியிருக்கிறது.

இராமாயணத்தையும், இராவணனையும் வரலாற்று, தொல்லியல் வழிமூலம் எவரும் நிறுவியது கிடையாது. ஆனால் இன்று வரை இந்தியாவில் இந்துத்துவ பாசிச சக்திகளால் புனிதப்படுத்தப்பட்டு இராமனை தெய்வமாக கோவில் கட்டி வழிபடுவதோடு நிற்காமல் இராமனை இன்றையை இந்துத்துவ போரின் தலைமை வடிவமாகவும் கொண்டு வந்து சேர்த்திருக்கின்றனர். அதே இந்தியாவில் இராவணனின் உருவப்பொம்மையை தீயிட்டு கொளுத்தி இராவணனைக் கொன்ற நாளாகக் கொண்டாடுவதை இந்திய வட மாநிலங்களில் இராமலீலா என்கிற பேரில் பண்டிகையாக நெடுங்காலமாக கொண்டாடப்படுகிறது.

வெகுஜனத் தளத்தில் இராமாயணமும், இராமனும், வட இந்தியாவில் நம்பகமான கதையாக நிறுவப்பட்டுள்ளதோ அதுபோலவே இலங்கையில் இராவணன் சிங்களவர்கள் மத்தியில் சீமீபகாலமாக நம்பகமானதாக நிறுவப்பட்டுவருகிறது. ஆனால் இலங்கையில் சிங்களவர்கள் இராவணனைக் கொண்டாடிய அளவுக்கு இராமாயணத்தை கொண்டாட முற்பட்டதில்லை. ஏனென்றால் இராமாயணத்தில் வில்லன் “சிங்களத் தலைவன் இராவணன்”. ஆனாலும் இராமாயணத்தை தவிர்த்து இராவணக் கதைகளை நிறுவமுடியாததால் இராமாயணத்தை சில சிங்கள தொலைகாட்சி சேனல்கள் வெளியிட்டன. இந்தியாவில் இந்தி மொழியில் வெளியான இராமாயணத் தொடரை சிங்கள டப்பிங்குடன் வெளியிட்டு வந்தார்கள் அவர்கள். அதை மீண்டும் மீண்டும் வெளியிட்டார்கள்.

அதன் பின்னர் 2018இல் இராவணன் பற்றிய மெகா தொலைகாட்சி “உரையாடல்” தொடரொன்றை சிங்கள மொழியில் “ராவண” (රාවණ) என்கிற பெயரில் ஆரம்பிக்கப்பட்டது. இலங்கையின் இனவாத தொலைக்காட்சிச் சேனலாக இயங்கிவரும் “தெரண” என்கிற சேனலில் இந்தத் தொடர் 100 தொடர்களையும் கடந்தது. இராவணன் பற்றிய ஊகங்களையும், புனைவுகளையும், கட்டுக்கதைகளையும் பேச பல சிங்கள வரலாற்றாசிரியர்கள், இலங்கையின் அதி பிரசித்திபெற்ற தொல்பொருள் நிபுணர்கள், பாரம்பரிய கலைஞர்கள் பலர் அழைக்கப்படுகிறார்கள். அவர்கள் இந்தக் கற்பிதங்களை தொழில்சார் நிபுணர்களாக (Professionals) எப்படி இது முடிகிறது என்றே நமக்குத் தோன்றும்.

பின்னர் கடந்த நவம்பரிலிருந்து தொலைகாட்சி நாடகத் தொடராக இன்னொரு “ராவண” என்கிற பேரில் தெரண தொலைக்காட்சிச் சேவையில் ஞாயிறு நாட்களில் 8.30 மணியளவில் காண்பிக்கப்பட்டு வருகிறது. இந்த நேரம் Hi peak என்று சொல்லக்கூடிய அதிக பேர் பார்க்கக் கூடிய நேரம் என்பதால் ஒளிபரப்பு செலவும், விளம்பரக் கட்டணமும் உயர்ந்த நேரம் என்பதும் கவனிக்கத்தக்கது. இம்மாதம் (2020 யூன் மாதம்) அது 21 வாரங்களையும் கடந்து போய்க்கொண்டிருகிறது. துஷார தென்னகோன் என்பவர் இதனை இயக்கிவருகிறார். 100 வாரங்கள் வரை எட்டுவதே தனது இலக்கு என்று அவர் குறிப்பிட்டிருந்தார். அவர் இது பற்றிய ஆய்வுகள் பல நிகழ்த்தியவர் என்கிற செய்தியுடன் தான் அதன் விளம்பரங்களும் வெளியிடப்பட்டன.

இது வெளிவர முக்கிய பாத்திரம் வகித்த “தெரண” தொலைக்காட்சியின் உபதலைவரான லக்சிறி விக்கிரமகே கதையின் மூலத்தைப் பற்றி இப்படி தெரிவிக்கிறார்.
“இராவணன் ஒரு அதிசயிக்கத்தக்க அரசன். அப்பேர்பட்ட ஒரு ஒரு தலைவனைப பற்றிப் பேச வான்மீகியின் இராமாயணத்தை ஒரு “மூலமாக” நாங்கள் பயன்படுத்தவில்லை. வால்மீகியின் இராமாயணத்தில் இராவணன் ஒரு துஷ்டனாக காண்பிக்கப்படுகிறது. ஆனால் உண்மையில் நிகழ்ந்தது பாரதத் தரப்பை அவர் தோற்கடித்தார். அதனால் தான் அவர்கள் இராவணனை துஷ்டனாக காண்பிக்கிறார்கள்.” (6)
இராவணன் தின்கிற திரைப்படமாகத் தயாரிப்பதே ஆரம்பத்தில் இருந்த திட்டம் என்கிறார் மேலும் அவர்.

இதைத் தவிர அரச தொலைக்காட்சி சேவையான ITNஇல் (சுயாதீன தொலைக்காட்சிச் சேவை) “இராவண புராணம்” (ராவண புராணய රාවණ පුරාණය) என்கிற ஆவணப்படத் தொடர் சென்ற ஆண்டு தொடங்கப்பட்டு 21 வாரங்கள் காண்பிக்கப்பட்டன. இத்தொடரில் இராவணன் புலங்கியதாக சொல்லப்படும் இலங்கையின் பல பகுதிகளுக்கு பயணித்து அங்குள்ள குகைகள், மலைகள், காடுகள், நதிகள் என்பவற்றைகே காட்டி பல கதைகளை அவிழ்த்து விடுகிறார்கள். இங்கு உறங்கினார், குளித்தார், சீதையை மறைத்துவைத்திருந்தார், ஐந்து வானூர்திகளை வைத்திருந்தார். இங்கு தான் இறக்கினார், என்றெல்லாம் கதை விடுகிறார்கள். இது ஒரு அரச தொலைக்காட்சியின் சொந்த நிகழ்ச்சி என்பதை கவனிக்க.

இந்த புனைவுகளின் உச்சம் என்னவென்றால் ஒரு இடத்தில் இப்படி குறிப்பிடுகிறார்

“இராவணனின் உடல் இன்னும் பக்குவமாக இருக்கிறது. ஆனால் தயவு செய்து எங்கே இருக்கிறது என்று தேடப்போகாதீர்கள். அது ஆபத்தானது. அப்படிப்பட்ட முயற்சிகளில் இறங்கியவர்களுக்கு என்ன ஆனது என்பதை நாங்கள் அறிவோம் அதனால் தான் கூறுகிறோம்” என்கிறார் இந்த நிகழ்ச்சியின் தயாரிப்பாளரான கயான் சந்தகெலும். இவரின் இன்னொரு காணொளியும் காணக்கிடைத்தது அதன் தலைப்பு “இராவணன் பௌத்தனா? இந்துவா?” அதில் அவர் “புத்தருக்கு முற்பட்ட காலத்து இராவணனை” பௌத்தன் என்று நிறுவ அதிக சிரத்தை எடுக்கிறார். புத்தர் பௌத்தத்தைத் தந்தவர்களில் இடைப்பட்டவர் தான் என்றும் அதற்கு முன்னரே அத்தத்துவத்தை தந்துவிட்டு சென்றவர்கள் இருக்கிறார்கள் என்றும், ஆகவே இராவணன் ஒரு பௌத்தன் தான் என்றும் நிறுவ முற்படுகிறார்.
இந்திரஜித்தின் கிரியோடிஷ்ய (ඉන්ද්‍රජිත්ගේ  ක්‍රියොඩ්ඩිශය) என்கிற தலைப்பிலான சிங்கள நூலொன்றின் விமர்சனத்தை யூடியூப் சேனலில் சமீபத்தில் கண்டேன். இந்த விமர்சனத்தைச் செய்தவர் பேராசிரியர் லீலானந்த விக்கிரமாராச்சி. இராவணனின் மகன் இந்திரஜித் கையாண்ட போர் நுட்பங்கள் பற்றியாதாம் இந்த நூல். இது தேவநாக எழுத்து வடிவத்தில் கிடைக்கப்பெற்ற ஓலைச்சுவடியை சிங்களத்துக்கு மொழிபெயர்த்து அச்சுக்கு கொணரப்பட்ட நூல் என்று அறிமுகம் செய்கிறார். பேராசிரியர் லீலானந்த விக்கிரமாராச்சி பாரம்பரிய சிங்கள தற்காப்புக்கலைகளை கற்றுக் கொடுப்பதில் பிரசித்தி பெற்றவர். இலங்கை இராணுவத்துக்கு சிறப்புப் பயிற்சிகளை அவர் செய்பவர் என்பதை அவரின் இணையத்தள விபரங்களில் இருந்து அறிந்துகொள்ள முடிகிறது.

மேற்படி கூறிய அனைத்து நாடகங்களும், ஆவணப்படங்களும், உரையாடல்களும். நூல் விமர்சனமும் youtube இல் காணக்கிடைக்கிறது. இக்கட்டுரைக்காக அங்கிருந்துதான் அவற்றை ஆதாரத்துக்குப் பயன்படுத்திக்கொண்டேன். இராவணனைப் பற்றி ஒருதொகை வீடியோக்கள் சிங்களத்தில் அங்கு உள்ளன.

மேலும் சிங்களச் சூழலில் இராவணன் பற்றிய அலை மேலெழுந்திருக்கிற இந்தக் காலத்தில்; சிங்களச் சந்தையில் இராவணன் ஒரு பெரும் விற்பனைப் பண்டமாக ஆக்கப்பட்டிருப்பதைத் தான் அவதானிக்க முடிகிறது.

இராணவன் பற்றி சிங்களச் சூழலில் இதுவரையான எனது அவதானிப்பில் கண்டு கொண்ட சில புள்ளிகள்:

இராவணின்  வழித்தோன்றல் தாங்கள் தான் என்று உரிமைகோரி சிங்களக் கிராமங்களே உள்ளன. அதன் தொடர்ச்சியாக இராவணின் உறவுகாரர் தாங்கள் தான் என்று அறிவித்துக்கொண்டு வாழ்வோர் இலங்கையில் உள்ளனர்.

இராவணன் மீண்டும் எழுவார் என்றும் இன்னும் சிலர் இராவணன் வாழ்ந்துகொண்டு தான் இருக்கிறார் என்றும் நம்மைச் சுற்றி இருக்கிறார் என்கிற ஐதீகங்களும் உள்ளன.

இலங்கையின் அதிசயங்களில் ஒன்றாக பார்க்கப்படும் சீகிரிய மலைக் கோட்டையை செய்தது இராவணன் என்கிற நம்பிக்கை உண்டு. அந்த மலையின் மேல் இராவணின் விமானம் இறங்கும் இறங்குதளத்தின் தடங்கல் இருப்பதாக நம்பப்படுகிறது.

சீகிரிய ஓவியத்தில் காணப்படுகிற ஓவியத்தில் இருப்பது இராவணின் மனைவி மண்டோதரியும், மண்டோதரியின் பரிவாரப் பெண்ணும் தான். இதைப்பற்றிய செவிவழிக் கதைகள் இப்போதும் அந்த ஊர்களில் நிலவுகின்றன.

சிகிரியவைச் சுற்றி உள்ள ஊர்களில் கிராமிய மரபுவழிப் பாடல்களாக இன்னும் இப்படி ஒரு பாடல் பாடப்படுவதுண்டு. 
සීගිරි ගලේ විල සැදුවේ      කවුරුන්දෝ
සීගිරි ගලේ රූ ඇන්දේ       කවුරුන්දෝ
සීගිරි රුවෙන් දිස් වන්නේ  කවුරුන්දෝ
මෙතුන් පදේ විසඳන්නේ   කවුරුන්දෝ
පිළිතුර:
සීගිරි ගලේ රාවණ දෙවි විල   සැදුවා
සීගිරි ගලේ විස්කම් සිත්තම් කෙරුවා
සීගිරි රුවෙන් මන්දෝදරී  දිස්වෙනවා
මෙතුන් පදේ නිසි ලෙස මම විසඳනවා
சிகிரியா பாறையின் ஏரியை கட்டியவர் யார்
சிகிரிய ஓவியத்தை வரைந்தவர் யார்
சிகிரிய தோற்றத்தில் இருப்பவர் யார்
இம்முக்கேள்விக்கு விடை தருவார் யார்
பதில்:
ராவணன் கடவுள் சிகிரிய பாறையில் ஏரியைக் கட்டினார்
அவர் சிகிரியா பாறையில் ஓவியம் வரைந்தார்
சிகிரிய உருவத்தில் மண்டோதரி வியப்பூட்டுகிறார்
இம்முக்கேள்விக்கும் விடை தீர்த்தேன் நான். (7)
(இப்பாடல் ஏககாலத்தில் இருந்து தொடரப்பட்டது, யாரால் இயற்றப்பட்டது போன்ற விபரங்களை அறிய முடியவில்லை. ஆனால் இப்பாடலை பல சிங்கள கட்டுரைகளிலும் மேற்கோள் காட்டுகிறார்கள்.)

இராமனையும், இராமாயணத்தையும், அதன் வழியாக வைணவத்தையும் கொண்டாடுவதும், வழிபடுவதும், நீட்சியாக இராவணனைக் கொண்டாடும் வெகுசிலராக தமிழர்கள் குறுகிவிட்ட நிலையில் இராவணன் தமது தலைவனே என்று சிங்களவர்கள் கொண்டாடத் தொடங்கியுள்ளனர். இராவணன் அரக்கர் இனத்தில் இருந்து வந்த“ஹெல” இனத்துத் தலைவன் என்றும், அந்த இராவணின் வழித்தோன்றல் குவேனி என்றும் குவேனியை கரம்பிடித்தவர் விஜயன் என்றும் அவர்கலின் வழித்தோன்றலே சிங்களவர்கள் என்றும் நிறுவுகிற நூல்களை இப்போதெல்லாம் நிறையவே காணக் கிடைக்கின்றன. குறிப்பாக இராவணனைக் கொண்டாடுகின்ற சிங்கள நூல்கள் கடந்த பத்தாண்டுக்குள் மாத்திரம் 500 க்கும் அதிகமான நூல்கள் வெளிவந்திருப்பதாகக் கணிக்க முடிகிறது. ஒரு அரை மணி நேர இணையத் தேடலில் இராவணன் பற்றிய 50க்கும் மேற்பட்ட சிங்கள நூல்களின் அட்டைப் படங்களை தேடியெடுக்க முடிந்தது. உதாரணத்திற்கு 15 நூல்களின் தலைப்புகளை இங்கு தருகிறேன்.  இவை அனைத்தும் 2012க்குப் பின் வெளிவந்தவை தான்.
 • இராவணன் மீள எழுகிறான்
 • இலங்கையில் ராவண அரசனின் பின்னர் தோன்றிய நமது அரச பரம்பரையினர்
 • சிங்களவர்களின் தலைவன் இராவணன்
 • இராவண சக்கரவர்த்தியின் திதுலன பம்பர கோட்டை
 • இராவண நடவடிக்கை (Ravana operation)
 • சிங்களவர்களின் முன்னோடி இராவணன்
 • மகாராஜா இராவணன் கட்டியெழுப்பிய பண்பாடு
 • புனைவற்ற இராவண புராணம்
 • இராவணனின் தளம்
 • இராவணக் கோட்டை
 • இலங்கையில் இராவண இராஜதானியும் சீகிரிய புராணமும்
 • இலங்கையின் இராவண சக்கரவர்த்தியின் கலாசார மரபு
 • இராமாயணம் என்கிற மூவுலகையும் வென்ற நமது தலைவன் இராவணன்
 • சிங்கள வம்சத்தின் இராவணவாதம்
 • ஸ்ரீ லங்கேஷ்வர மகா இராவணன்


இராவணன் பற்றிய விசித்திரமான – வியப்பான சமீப கால சிங்களக் கட்டுரைகளின் தலைப்புகளைப் பாருங்கள்
 • இராவணனின் வரலாற்றை மூடி மறைக்க முடியாது
 • இராவணனின் விமானத் தொழினுட்பமும் பண்டைய விமானமும்
 • வெள்ளையருக்கு முன்னரே இராவணன் மேலே பறந்த இரகசியம்
 • இராவண அரசனின் போர் முறை
 • இராவணனின் இரத்தச் சொந்தங்களைக் காண ஒரு கிராமத்துக்குச் சென்றோம்.
 • இராவண வரலாற்றைப் புதைத்துவிட முடியாது
“வரிக பூர்ணிகா”
இயக்கர்களைப் பற்றிய பல விபரங்களை உள்ளடக்கியதே “வரிக பூர்ணிகா” (වරිග පූර්ණිකාව - Vargapurnikawa அல்லது Wargapurnikawa) என்கிற ஓலைச்சுவடிகள். இது இராவணன் காலத்திலிருந்து வாய்மொழியாகவும், கல்வெட்டுகள், ஓலைச்சுவடிகள் வழியாகவும் இராவணப் பரம்பரை காத்து வந்த தகவல்களை ஒன்றிணைத்து எழுதப்பட்ட ஒன்று நம்பப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால் மகாவம்சத்துக்கும் முந்தியது இது. கண்டி ராஜ்ஜியத்தில் ராஜாதிராஜசிங்கன் ஆட்சியின் போது “மனாபவி அருணவெசி நீலகிரிக போதி வங்க்ஷாபய” என்கிற ஒரு பௌத்த துறவியால் ஓலைச்சுவடிகளாக தொகுக்கப்பட்டது.

இயக்கர்களின் பண்பாடு, பழக்கவழக்கங்கள், சட்டதிட்டங்கள் மட்டுமன்றி பல கதைகளையும் குறிப்பாக இராவணன் பற்றிய கதைகளையும் கொண்டது அது என்கின்றனர். “வரிக பூர்ணிகா” பற்றி எழுதியிருப்பவர்கள்  கௌரான மண்டக்க (කෞරාණ මන්ඨක) என்று அதில் குறிப்பிடப்படுவது இராவணனைத் தான் என்று அடித்துச் சொல்கின்றனர். கௌரான என்பதன் சிங்கள அர்த்தம் “பூரணமானவர்”. “மண்டக்க” என்பதன் அர்த்தம் “அரக்கர்” என்பதாகும். இதன்படி இராவணனை “பூரணத்துவமுடைய அரக்கன்” என்றே அழைத்திருக்கிறார்கள் என்று கொள்ளலாம்.

“வரிக பூர்ணிகா” ஓலைச்சுவடிகள் தற்போது மெனேவே விமலரதன தேரர் வசம் உள்ளது. பரம்பரை பரம்பரையாக இறுகல் பண்டார ரவிஷைலாஷ ராஜகருணா என்கிற வம்சத்தவர்கள் தான் பேணி வந்திருக்கிறார்கள். அந்த வம்சத்தைச் சேர்ந்த பௌத்த பிக்கு தான் மெனேவே விமலரதன தேரர் (මානැවේ විමලරතන හිමි) இவர் வசம் ஏராளமான ஓலைச்சுவடிகள் உள்ளன. அவரால் ஆராயப்பட்ட சில ஓலைச்சுவடிகளை அவர் நூல்களாகவும் வெளிக்கொண்டு வந்திருக்கிறார்.


அப்படி அவர் வெளியிட்ட நூல்களில் ஒன்று தான் “இயக்கர்களின் மொழியும் ரவிஷைலாஷ வம்சத்தின் கதையும்” (යක්ෂ ගෝත්‍රික භාෂාව හා රවිශෛලාශ වංශ කථාව) என்கிற நூல். 2012 இல் முதன் முதலில் வெளியிடப்பட்ட இந்த நூலில் தான் அவர் “வரிக பூர்ணிகா” பற்றிய விபரங்களையும் வெளியிட்டிருந்தார். அதற்கு முன்னர் இந்த விபரங்கள் வெளிவந்ததாகத் தெரியவில்லை.

இந்த நூல் வெளிவந்ததன் பின்னர் தான் இராவணனை சிங்களத் தலைவராக முன்னிருந்தும் பல முனைப் பணிகள் வேகமாக முன்னெடுக்கப்பட்டன. அதுவரை இராவணன் பற்றிய கதைகள் மிக மெல்லியதாகவே இருந்தன. இன்னும் சொல்லப்போனால் 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னர், தமிழர்களின் மீதான நில ஆக்கிரமிப்பை செய்வதற்கும், நிலத் துண்டாடலைப் புரிவதற்குமான பேரினவாத முஸ்தீபுக்கு “சிங்கள இராவண” பிம்பத்தை உயிர்ப்பிப்பது வாய்ப்பாக ஆனது. சிங்களவர்கள் மத்தியில் இராவணப் புனைவை கருத்தேற்றுவதும், தமிழர்கள் மத்தியில் இராவண வழிபாட்டை பறித்தெடுப்பதுமான ஒரு பண்பாட்டு ஆக்கிரமிப்பு அவர்களுக்கு அவசியமாக உள்ளது என்றே கருது வேண்டியிருக்கிறது.

அது மட்டுமன்றி இராவணனின் பெயரில் அமைப்புகள், இணையத்தளங்கள், சமூக வலைத்தளங்கள் அத்தனையும் குறுகிய காலத்தில் ஆயிரக்கணக்கான முன்னெடுப்புகள் நகர்ந்தன. இலங்கையில் இப்போது இயங்கிவரும் சிங்கள பௌத்த பாசிச இயக்கமான “பொதுபல சேனா” இயக்கத்துக்கு நிகராக “ராவண பலய” என்கிற பேரினவாத அமைப்பும் இந்த நூலைத் தொடர்ந்து தான் உருவாக்கப்பட்டது.

இப்போதும் இராவணன் பற்றிய பல முகநூல் பக்கங்களையும், இணையத்தளங்களையும், youtube சேனல்களையும், பல்லாயிரக்கணக்கான கட்டுரைகளையும், ஆய்வுகளையும், விவாதங்களையும், கலைப் பண்பாட்டு படைப்புகளையும் காண முடிகிறது.

“வரிக பூர்ணிகா” 20 பக்கங்களைக் கொண்ட நூல் என்கிறார். அதேவேளை அதன் உப நூல்களாக “ரங்தெலம்பு பெந்தி அனபத்த”  கிரிதெலம்பு பெந்தி அனபத்த (රංතෙලඹු බැදි අණපත, කිරි තෙළඹු බැදි අණපත) என்கிற இரண்டு உள்ளதாகவும் அவை முறையே 500, 300 ஓலைப் பக்கங்களைக் கொண்டதாகவும் குறிப்பிடுகிறார்.

இவற்றில் “ரங்தெலம்பு பெந்தி அனபத்த”  என்பதானது “ரவிஷைலாஷ இயக்கர் மொழி”க்கான வழிகாட்டுவதற்கான அகராதியாக இருப்பது அதன் விசேடத்துவம். கடைசி அத்தியாயத்தில் இலங்கையின் வடக்கு பகுதியில் வாழ்ந்த “கேவேசஷ்ட இயக்கர்” பற்றிய விபரங்கள் உள்ளடங்கியிருகிறது. ஆனால் இவை எதுவும் தமிழ் ஆய்வுகளுக்கு கிட்டாதவை என்பதை இங்கு கூறியாகவேண்டும்.

ஆனால் இராவணனைப் பற்றியும், இயக்கர்களைப் பற்றியும், குவேனியைப் பற்றியும் ஏராளமான விபரங்கள் உள்ளதாக கூறப்படுவதில் எத்தனை தூரம் உண்மை என்று தெரியவில்லை.

“வரிக பூர்ணிகா” வை எழுதியவர் நீலகிரிக போதி வங்க்ஷாபய என்கிற ஸ்ரீ போதி வங்ச விதான என்கிற ஒரு பௌத்த துறவியாவார். கண்டி மன்னன் ராஜாதிராஜசிங்க ஆட்சியின் போது வாழ்ந்த பௌத்த துறவி அவர். ராவணன் காலத்திலிருந்து பல நூற்றாண்டுகளாக பரம்பரையாக பாதுகாக்கப்பட்ட நூல்களைத் தொகுத்தே இந்த நூல் உருவாக்கப்பட்டதென்கிறார் மெனேவே விமலரதன தேரர்.

மெனேவே விமலரதன தேரர் ஒரு “திபிடக பண்டிதராக” உயர் நிலையில் வைத்து போற்றப்படுபவர் என்பது இன்னொரு தகவல்.

இராவணன் உருவாக்கிய சிங்கள ஆயுள்வேத மருத்துவ முறைகள் என்றே பல மருத்துவ முறைகளை அழைத்து வருகிறார்கள். ஆயுள்வேத வைத்தியர்கள் இராவணனை வணங்கிவிட்டு மருத்துவம் செய்யும் மரபும் இருக்கிறது. ஆனால் அது எப்போதிலிருந்து கடைபிடிக்கத் தொடங்கினார்கள் என்பதை அறிதல் வேண்டும்.

சமீபத்தில் மெனேவே விமலரதன தேரர் யூடியுப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் தன்னிடமுள்ள பல ஓலைச்சுவடிகள் குறித்து விபரித்திருந்தார். பல ஓலைச்சுவடிகளில் குறிப்பிடப்பட்டுள்ள ஆயிரகணக்கான குறியீடுகளை தான் இன்னமும் உறுதியாக கண்டுபிடிக்கவில்லை என்கிறார். அந்த நேர்காளில் 26 வது நிமிடத்தில் ஒரு ஓலைச்சுவடியை எடுத்து உதாரணத்துக்கு விளக்குகிறார்.
“இது இயக்கர்கள் பற்றிய ஓலைச்சுவடி இல்லை. ஆனால் இது தமிழில் எழுதப்பட்டிப்பது தெரிகிறது. நாம் அதையிட்டு குழப்பமடையத் தேவையில்லை. எனது தகப்பனார் இவற்றை வாசிக்கக் கூடியவர். என்னால் கூட புரிந்துகொள்ள முடியவில்லை. இதை வாசித்தறியும் அறிவு இன்று இல்லாமல் போய் விட்டது. சில வல்லுனர்களின் உதவியுடன் அவற்றில் சில ஆராயப்பட்டு மொழியாக்கம் செய்யப்பட்டுக்கொண்டிருகின்றன.” 
என்கிறார் அவர்.

மகாவம்சமும் சொல்லாத “வரிக பூர்ணிகா” சொல்லியுள்ள “சிங்களவர் கதை” என்ன என்பதைத் தேடி இன்று வரலாற்று ஆய்வாளர்களும், தொல் பொருள் ஆய்வாளர்களும் கிளம்பிக்கொண்டிருக்கின்றனர். சில மதங்களுக்கு முன்னர் எழுத்தாளர் பிரபாத் அத்தநாயக்க என்பவர் அப்படி ரிட்டிகல என்கிற இடத்தில் இராவணனின் அடிச்சுவட்டைச் தேடிச் சென்றதாக கூறி ஒரு கட்டுரையை எழுதினார். 29.02.2020 அன்று வெளியான அந்தக் கட்டுரையின் தலைப்பு கூட “மகாவம்சத்தில் இல்லாத “வரிக பூர்ணிகா”வில் இருக்கிற இராவணனின் வரலாற்றைத் தேடி ரிட்டிகல பயணம்” என்று இருந்தது.

“வரிக பூர்ணிகா”  புனைவுகளைக் கொண்ட பெரும் திரிபு என்று வாதிடும் ஆய்வாளர்களும் உள்ளார்கள். ஆனால் இதுவரை இராவணன் பற்றி எழுதிய தமிழ் ஆய்வாளர்களின் பார்வைக்கு இந்த விபரங்கள் எட்டியதாகத் தெரியவில்லை.

இராவணனின் தற்காப்புக்கலை !?
அதேவேளை சிங்களவர்களின் தற்காப்புக் கலையாக இன்று போற்றப்படும் “அங்கம்பொற” கலையை கற்பவர்களும், கற்பிப்பவர்களும் இராவணனை வணங்கிவிட்டு தொடருகின்றனர். அது இராவணனின் கலை என்கின்றனர். ஆனால் சமீப காலம் வரை அக்கலை கேரளாவிலிருந்து இலங்கைக்கு வந்த களரி இலங்கைக்கான வடிவமெடுத்தே “அங்கம்பொற” ஆனது என்றே கூறி வந்தனர். 2019 மார்ச் மாதம் இலங்கையின் அமைச்சரவையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் “அங்கம்பொற” கலையை மரபுரிமையாக பிரகடனப்படுத்தும் முடிவை எடுத்தார்கள். அதைத் தொடர்ந்து பெரிய விழாவெடுத்து இலங்கையின் “மரபுரிமையாக” அதை பிரகடனப்படுத்தியதும் நினைவிருக்கலாம்.


இராவணனைப் பற்றி அதிகம் எழுதி அக்கருத்துக்களை வெகுஜனமயப்படுத்தியதில் பேராசிரியர் மிராண்டோ ஒபேசேகரவின் ஆராய்ச்சிகளைப் பற்றி லங்காதீப பத்திரிகையில் “இராவண அரசனின் போர்முறை” என்கிற தலைப்பிலான கட்டுரையில் “அங்கம்பொற” கலையானது இராவணன் நமக்கு விட்டுச் சென்ற தற்காப்புக்கலை என்று நிறுவ முயல்கிறார். இராவணனுக்குப் பின்னர் விபீஷணன் போன்றோர் அக்கலையை முன்னெடுக்காததன் விளைவு அது “அங்கம்பொற” கலையைக் கற்றிருந்த குலமொன்று இந்தியாவுக்குச் சென்று விட்டதென்றும் அவர்கள் தென்னிந்தியாவில் “அகம்படியார்” என்கிற சாதியாக மாறிவிட்டனர் என்றும், இந்த அகம்படியார் சாதியானது இராவணனின் வழித்தோன்றலே என்றும், முதலாவது விஜயபாகு அரசர் அவர்களை மீண்டும் இலங்கைக்கு வரவழைத்து அவர்களுக்கு கிராமங்களை பரிசளித்து குடியேற்றினார் என்றும், அவர்கள் குடியேற்றப்பட்ட வெளிதொட்ட என்கிற பகுதி தான் இப்போது தெற்கில் பலபிட்டிய என்கிற பிரதேசம் என்கிறார்.

இராவணனின் மருத்துவ முறைகளை இவர்கள் “அங்கம்” கலையோடு சேர்த்து பேணி வந்ததாகவும் குறிப்பிடுகிறார். இதைவிட அடுத்த புரட்டு என்னவென்றால்
“இராவணனின் அமைச்சரவையில் இருந்த அமைச்சர் இராவணனைக் காண நான்கு சில்லு பொருத்திய வாகனத்தில் தான் வந்து போனார். இந்த வாகனத்துக்கு என்று அதிசயிக்கத்தக்க எஞ்சின் பொருத்தப்பட்டிருந்ததுடன், அது சூரிய ஒளியில் இயங்கியது. இவை ஓலைச்சுவடிகளிலும், செய்திகளிலும் காணக்கிடைக்கின்றன. இதன்படி சக்கர வண்டிகளின் தோற்றம் இராவண காலத்தில் இருந்தா? இந்த நாற்சக்கர வண்டியை உலகுக்கு அறிமுகப்படுத்தியது இலங்கையா என்கிற கேள்வி புதிய தேடலுக்கு வழிவகுக்கும்”
என்கிறார். (8)

இலங்கையில் இராவணனின் அடையாளங்கள் இருப்பதாக நம்பப்படும் பல இடங்களை குறிப்பிட்டு வருகின்றனர். அவ்வாறான பல இடங்களுக்கு உல்லாசப் பயணங்களையும் மேற்கொண்டு வருகின்றனர். 

குருநாகல் மாவட்டத்தில் வாரியபொல என்கிற ஒரு ஊர் உண்டு. அங்குள்ள ஒரு புறநகர்ப் பகுதியில் ஒரு பலகையின்  அடையாளக்குறிப்பில் “நீங்கள் வாரியபொல நகரினுள் பிரவேசிக்கிறீர்கள். இராவணனின் ஆட்சிக்காலப் பகுதியில் இந்நகரம் காற்றிலும் பார்க்க அதிவேகம் கூடிய வாகனங்கள் தரையிறங்கும் பகுதியாக விளங்கியது” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. அப்பலகை வாரியபொல பிரதேச சபையினால் பல சில தசாப்தங்களாக அங்கு வைக்கப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது.

அந்த நகருக்கு அந்தப் பெயர் வரக் காரணமாக இப்படிச்  சொல்லப்படுகிறது. 'வா' என்பது காற்றையும், ரிய' என்பது வாகனத்தையும், 'பொல' என்பது இடப்பரப்பையும் குறிக்கின்றன. இவ்வாறு . இம்மூன்று கருத்துக்களையும் ஒன்று சேர்க்கையில், இந்த ஊகம் காற்றினால் இயங்கும் அல்லது காற்றின் வேகத்தில் பறக்கும் வாகனங்கள் தறையிரங்கிய இடத்தைக் குறிக்கின்றது எனலாம்.

இராவண கற்பனைக்கதையை வரலாற்றுண்மைகளாக மாற்றியமைப்பதற்கு மேற்கொள்ளப்படுகின்ற பல்வேறு முயற்சிகளில் இதுவும் ஒன்று.

“வன்னி ராஜாவலிய”வும் “மகாசம்மத” மன்னனும்
இராவணன் பற்றிய ஆய்வுக்கட்டுரையொன்றுக்கான தேடல்களின் போது “வன்னி ராஜாவலிய” (වන්නි රාජාවලිය) என்கிற ஓலைச்சுவடி குறித்து பல இடங்களில் அறிய முடிகிறது. தமிழில் தேடினால் அப்படி ஒன்றைப் பற்றிய விபரங்கள் எங்கும் பதிவுசெய்யப்பட்டதாக அறிய முடியவில்லை. சிங்கள ராஜாவலிய என்பது சிங்களவர்களின் அரச வழிமுறை பற்றிய விபரங்களை அடக்கியது என்பதை அறிவீர்கள். பல நூல்களில் உள்ள அடிக்குறிப்புகளின் படி இந்த “வன்னி ராஜாவலிய” ஓலைச்சுவடியை கொழும்பு நூதனசாலையின் நூலகத்தில் இருந்து பயன்படுத்தியிருப்பதாக குறிப்பிட்டுள்ளனர். அவர் இது பற்றி வேறு ஆய்வுக் கட்டுரைகளையும் வெளியிட்டிருக்கிறார். சிங்களத்தில் பேராசிரியர் கணநாத ஒபேசேகர நூலாகவும் வெளியிட்டிருக்கிறார். இந்த நூலில் குறிப்பிடப்படுகின்ற “மகாசம்மத்த” என்கிற அரசன் இராவணனைத் தான் குறிப்பிடுகின்றனர் என்றும், அதன்படி விஜயனுக்கு முன்னர் இருந்தே தமது சிங்கள அரச வம்சாவழி தொடங்கிவிட்டதாகவும் உறுதியாகவும் கூறுகிறார்கள்.

வன்னி பற்றிய விபரங்களை சிங்களத்தில் பேசுபவர்கள் இதைத் தவிர “வன்னி உபத்த” (වන්නි උපත,), “வன்னி வித்திய” (වන්නි විත්ති), “வன்னி கடைய்ம் பொத்” (වන්නි කඩයිම්) போன்ற ஓலைச்சுவடிகளையும் குறிப்பிட்டு வந்துள்ளனர். இந்த ஓலைச்சுவடிகள் பிரிட்டிஷ் நூலகத்தில் இருப்பதாக கூறுகின்றனர். வன்னி உள்ளிட்ட பகுதிகள் சிங்களப் பிரதேசமாக உரிமைகொண்டாடுவதற்கும் இவற்றை பயன்படுத்தி வருகின்றனர்.

தமிழருக்கா சிங்களவருக்கா இராவணன் சொந்தம்
இப்போது உள்ள வாதம் இதுதான்; இராவணனை தமிழர்கள் தான் கொண்டாடி வந்தார்கள். தமிழர்களின் தலைவனாகத் தான் பெருமிதமடைந்து வந்தார்கள். கோவில் கட்டினார்கள். சிலைகள் எழுப்பினார்கள். தொல்பொருள் ஆதாரங்களை தமதேன்றே கூறிவந்தார்கள். குறிப்பாக வடக்கு கிழக்கில் இராவணன் தமது புராண தமிழ் – இந்துத்துவ தலைவனாகவே கொண்டாடி வந்திருக்கிறார்கள்.

இப்போது சிங்களவர்கள் தமது தலைவர்கள் என்று வாதிடத் தொடங்கியிருப்பதுடன், தமது பெரும்பான்மை பலத்துடனும், அரச அதிகாரத்தின் அனுசரணையுடனும் அதை பலமாக நிறுவி வருகிறார்கள். வெகுஜனப் புனைவுப் பரப்புரை தொடக்கம், தொல்பொருள் புனைவுகள் வரை அது நீண்டுவிட்டிருக்கிறது. வடக்கு கிழக்குப் பகுதியில் நில அக்கிரமிப்புக்காகவும், பண்பாட்டு ஆக்கிரமிப்புக்காகவும் தற்போது மேற்கொள்ளப்பட்டு தொல்பொருள் ஆக்கிரமிப்பின் இன்னொரு வடிவமாகவும் இராவணனின் இடங்கள் தான் இவை எனவே இது சிங்களவர்கள் நிலமே என்கிற தர்க்கத்தை முன் வைக்கத் தான் போகிறார்கள். வடக்கு கிழக்குப் பகுதிகளில் ஏற்கெனவே கண்டெடுக்கப்படுகின்ற பௌத்த தொல்பொருள் எச்சங்களை காண்பித்து “பௌத்த எச்சங்கள் ஆகவே இது சிங்கள பௌத்தர்களுக்கு சொந்தமானது” என்று உரிமை கோரத் தொடங்கிவிட்டார்கள். தமிழர்கள் ஒரு காலத்தில் அங்கு பௌத்தர்களாக இருந்தார்கள் என்பதையோ, பௌத்தம் தமிழர்களிடம் தலைத்தோங்கியிருந்தது என்பதையோ கொண்டாடாததன் விளைவு அந்த இடைவெளியை அவர்கள் நிரப்ப தலைப்பட்டிருக்கிறார்கள். அதே கதி தான் இன்று இராவணனுக்கும் ஏற்பட்டிருக்கிறது.

இலங்கையில் வரலாறும், தொன்மம் பற்றிய மரபும், அதன் முதுசமும் இருவேறு மொழிகளில், இரு வேறு வழிகளில், இருவேறு அர்த்தங்களில், இருவேறு வியாக்கியானங்களில் நெடுங்காலமாக பயணித்தபடி இருப்பதை அவதானித்தாக வேண்டும். இப்போதும் தமிழில் பேசப்படுகிற வரலாற்றுத் தொன்மை பற்றி சிங்களவர் அறியார். சிங்களவர் மத்தியில் ஊன்றியிருக்கும் வரலாற்று மரபு குறித்து தமிழர் அறியார். இந்த இரண்டும் தற்செயலாக ஆங்காங்கு சந்தித்துக்கொள்ளும்போது திடுக்கிட்டு வியக்கின்றன. மோதிக்கொள்கின்றன. ஈற்றில் பெருமிதத் தொன்மை பேசி இருப்பைத் தக்கவைக்கும் அவசர நிலைக்குத் தள்ளப்படுகின்றன. இந்த நிலை மிகவும் அபாயகரமானது. குறிப்பாக இனத்துவ முறுகலின் உச்சத்தில்  இருக்கிற இந்த நாட்டில் இந்த துருவமயப் போக்கு ஆபத்தை தக்கவைத்துக்கொண்டிருக்கிறது. ஆபத்தை தூண்டிக் கொண்டிருக்கிறது. வெடித்து வெடித்துத் தணிகிறது.

இப்போது இராவணனை தங்கள் பாரம்பரிய புராதன பண்பாட்டின் நாயகன் என்று பரஸ்பர பகைமையுணர்வு கொண்ட சிங்களவர்களும், தமிழர்களும் கொண்டாடுகின்றனர். புராணக் கதைகளுயும் இதிகாசங்களும் இப்போது அரசியல்வாதிகள், தேசியவாதிகள், இனவாதிகள் அனைவருக்குமே தமது கைகளில் சூழ்நிலைக்கிசைந்த கருவியாக மாறியுள்ளது. இவற்றை இன-மத தேசியவாதத்துடனும் இணைத்து அவற்றின் அரசியல் நிகழ்ச்சிநிரலுக்காக பயன்படுத்திகொள்கின்றனர். புனித மேன்மைக்கு அவற்றைக் கொண்டு வைப்பதன் மூலம் அதற்கு ஒரு ஆன்மீக அந்தஸ்தையும் கொடுத்துவிடுகின்றனர்.

இராவணனை சொந்தம் கொண்டாடுவதில் இன்னமும் இரு இனங்களுக்கும் மத்தியில் இதுவரை சண்டைகள் வெடிக்கவில்லை. ஆனால் அப்படிப்பட்ட நெருக்கடிகளுக்குள் தற்போது இந்த உரிமைகோரல் நெருங்கிக்கொண்டிருப்பதாக அச்சம் கொள்ள முடிகிறது. 

இராவணனை விட்டுக்கொடுப்பதை விட, அல்லது போனால் இராவணனை உரிமை கூறுவதைவிட செய்யவேண்டியது என்னவென்றால் இராவணன் நம் தலைவன் இலங்கையின் தலைவன். நீயும் நானும் வேறல்ல. நாம் இரு சாராருமே மண்ணின் மைந்தர்கள் தான், நாம் இந்தியாவில் இருந்து வந்தவர்கள் அல்ல என ஒப்புக்கொள்வதே இனப்பிரச்சினைக்கு முடிவைக் கட்டும். இனங்களுக்கிடையிலான புரிதலையும் எட்டச் செய்யும். ஈற்றில் இனப்பிரச்சினையும் தீர்க்க உதவும்.

இராவணனை ஹைஜாக் (Hijack) செய்வதன் அரசியல் சூட்சுமத்தை இப்படித்தான் நாம் விளங்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது.

அடிக்குறிப்புகள்
 1. இராவணனை ஹைஜாக் (Hijack) செய்வதன் அரசியல் சூட்சுமத்தை இப்படித்தான் நாம் விளங்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது.
 2. A. Jeyaratnam Wilson - Politics in Sri Lanka, the Republic of Ceylon: A Study in the Making of a New Nation - Macmillan; 1st ed 1st printg edition (9 May 1974)
 3. K. E. O. Dharmadasa, - Language, Religion, and Ethnic Assertiveness: The Growth of Sinhalese Nationalism in Sri Lanka - University of Michigan Press, 1992
 4. Professor of Linguistics James W Gair, - Studies in South Asian Linguistics: Sinhala and Other South Asian Languagesir - Oxford University Press, 1998
 5. ஜினதாச நிவித்திகல - இங்கிலாந்து மகாராணியை மகிழ்வூட்டிய ஹனுமான் – திவயின – 21.04.2019
 6. சசங்க பெரேரா - இராவணன் புத்துயிர் பெறுகின்றான் - தேர்ந்த கட்டுரைகள் தொகுதி - 33 - விடுதலைப் புலிகளின் அரசியல் பிவி வெளியீடு - யூலை 1995
 7. “இலங்கையின் தொலைகாட்சி நாடகத்துறையை உயர் தரத்துக்கு கொணர்வதே எமது இலக்கு” என்கிற தலைப்பில் வெளியான நேர்காணல் http://www.saaravita.lk/ 4 දෙසැම්බර් 2018 (நேர்கண்டவர் – நிதுன் மதுஷிக)
 8. ஹன்சி சந்தமாலி “රාවණාගේ අපරිමිත ප්‍රේමයේ හිමිකාරී, මන්දෝදරී” (இராவணனின் எல்லையில்லாக் காதலுக்கு உரிமைக்காரி மண்டோதரி) - https://roar.media
 9. அசங்க ஆட்டிகல - “இராவண அரசனின் போர்முறை” – லங்காதீப – 09.09.2014
நன்றி : காக்கைச் சிறகினிலே யூலை - 2020

நாடற்றவர் சிக்கலை திருமதி பண்டாரநாயக்கா எவ்வாறு தீர்த்து வைத்தார்? - டபிள்யூ. ரி. ஜயசிங்க

'சண்டே ஒப்சேவர்'  பத்திரிகையில் (Sunday Observer - 30-07-95 ) வெளியான இந்தக் கட்டுரை அதன் பின்னர் 1995ஆம் ஆண்டு யூலையில் வெளியான "தேர்ந்த கட்டுரைகள்" என்கிற விடுதலைப் புலிகளின் சஞ்சிகையில் வெளியாகியிருக்கிறது. "தேர்ந்த கட்டுரைகள்" சஞ்சிகையில் இப்படி பல முக்கிய நல்ல கட்டுரைகள் அப்போது மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டிருகிறது.
பாதுகாப்பு மற்றும் வெளிவிவகார அமைச்சின் முன்னாள் செயலாளரான திரு.டபிள்யூ.ரி.ஜயசிங்க அவர்களினால் தற்போது எழுதப்பட்டு வரும் புத்தகத்தி லிருந்து ஓர் அத்தியாயத்தை வெளியிடுகின்றோம் . இந்த அத்தியா யம், இந்திய இலங்கை உறவுகளில் நீண்ட காலம் பிரச்சினையாக இருந்துவந்த நாடற்ற இந்தியத் தோட்டத் தொழிலபளர்களின் சிக் கல்களில் பிரதம மந்திரி திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்கா கையாண்ட தந்திரோபாயங்கள் பற் றிக் கூறுகின்றது. இந்த எழுத் தாளர் தற்போது ‘எயர்லங்காவின்' தலைவராக இருந்து வருகின்றார். 

'ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டாவது பொதுத் தேர்தலில் சிறிமாவோ பண்டாரநாயக்கா அவர்கள் சிறிலங்கா சுதந்திரக்கட்சியை வெற்றிப்பாதைக்கு இட்டுச்சென்றார் . அந்த ஆண்டு ஜூலை மாதம் பிரதம மந்திரியாக அவர் பொறுப் பேற்றபோது, 1954 ஆம் ஆண்டின் இந்திய இலங்கை ஒப்பந்தம் ஆறு ஆண்டுக்காலமாக நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது. இலங்கையிலுள்ள இந்தியக் குடியேற்றவாசிகளின் குடியுரிமை பற்றியும் அவர்களை இந்தியாவுக்கு அனுப்புவது பற்றியும் பேச்சுவார்த்தைகளை நடத்த, அது தான் உகந்த நேரமாக இருந்தது. 

இந்தக் குடியேற்றவாசிகள், இன்னமும் இந்திய நாட்டவரல்லர் என்ற இந்தியாவின் வாதத்தை இலங்கை ஏற்றுக்கொள்ள வில்லை . 1953 ஆம் ஆண்டில் இலங்கையில் இந்தியத் தூதுவராக இருந்த திரு. தேசாய் அவர்கள், இலங்கைப் பிரதமர் சேர் ஜோன் கொத்தலாவல அவர்களுக்கும், இந்தப் பிரச்சினை பற்றி ஆர்வம் கொண்டிருந்த இலங்கையர் அனைவருக்கும் வியப்பூட்டும் வகையில் முதன் முதலாக இந்தக் கருத்தை வெளி யிட்டார்கள். 1945 ஆம் ஆண்டு புதுடில்லியில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் முட்டுக்கட்டையைத் தவிர்ப்பதற்காக சேர் ஜோன் கொத்தலாவல அவர்களும் பிரதமமந்திரி நேரு அவர்களும், குடியுரிமை வழங்குதல், பதிவு செய்தல் ஆகிய இரு நடை முறைகளையும் இயன்றளவில் துரிதப்படுத்துவதற்கும், இந்தச் சிக்கலான விடயம்பற்றி மேலும் பேச்சுவார்த்தை நடத்துவதைப் பின்தள்ளிப் போடுவதற்கும் உடன்பட்டனர். 

இந்தியர், பாகிஸ்தானியர் குடியுரிமைச் (பிரசாவுரிமை) சட்டத்தின் கீழ் இலங்கைக் குடியுரிமை அளிப்பது இப்போது பெரும்பாலும் முடிவுற்று இருந்த அதேவேளை, அந்தச் சட் டத்தின்கீழ் குடியுரிமை வழங்கப்படாத இந்தியர்கள் 1954ஆம் ஆண்டு உடன்படிக்கையின்கீழ் கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவரகத்தில் தங்களை இந்தியக் குடிமக்களாகப் பதிவு செய்துகொள்ள, ஆறு ஆண்டுக்காலம் இருந்தது . 

குடியேற்ற நாட்டு அரசாங்கத்தால் தோட்டங்களில் வேலை செய்வதற்கென இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட இந்தியக் குடிறேற்றவாசிகளின் பிரச்சினை பற்றி மேலும், பேச்சுவார்த்தைகளை நடத்தி முடிவுக்குக் கொண்டுவருவதற்காகத் தயார் செய்வதற்கும், அதில் ஏற்பட்ட முன்னேற்றங்களை மீளாய்வு செய்யவும் அது தான் உகந்த நேரமாகவிருந்தது . அந்த நேரம், இலங்கைக்கு உகந்ததாகவிருக்கவில்லை என்பதைத் திருமதி பண்டாரநாயக்க உணர்ந்தார். தற்போது கிட்டத்தட்ட பத்து லட்சம் இந்தியர்கள் இலங்கை மண்ணில் இருந்து பாதுகாப்பாகத் தொழில் செய்து வந்ததுடன், அவர்கள் விரைவாகத் தங்கள் இந்தியத் தொடர்புகளையும் இழந்து வந்தனர். 

சிறிமாவோ பண்டாரநாயக்காவும், இலங்கைப் பிரதமர் திரு. டி எஸ். சேனநாயக்கா அவர்களைப்போன்று, இந்தச் சிக்கலைத் தீர்க்க வேண்டும் என்று ஈடுபாடு கொண்டார். கண்டி இராச்சியத்தின் மத்தியில் பிறந்து வளர்ந்த அவர், நிலமின்மையால் பிழைப்பதற்கு வெளியே வழி தேடுகின்ற. பிழைப்பாதாரத்துக்கு மேல் வாழ்க்கை நடத்துவதற்கு வாய்ப்பு 'இன்றியிருந்த கண்டிப் பாமரமக்களினது நெருக்கடி நிலையைக் கூர்மையாக உணர்ந்திருந்தார். 

கண்டிப் பாமரமக்கள் ஆணைக்குழு (Kandyan Peasantry Commission) வினால், கண்டியர்களது - வறுமையை இல்லா தொழிக்க எதுவும் செய்யமுடியவில்லை. தோட்டங்களிலுள்ள கணிசமான இந்தியத் தொழிலாளர்கள் இந்தியாவுக்குத் திரும்பு வார்களானால், அவர்களது இடங்களை இலங்கைத் தொழிலாளர்கள் பிடித்துக்கொள்ள முடியும். இந்தியாவிற்குள் நுழை வதற்கு அனுமதியும், கடவுச்சீட்டும் அவர்கள் வைத்திருக்க வேண்டும் என இந்தியா வற்புறுத்தியபடியால் 1954 ஆம் ஆண்டு முதல் அத்தொழிலாளர்கள் இலங்கையில் தடுத்துவைக்கப்பட் டிருந்தனர். 

தொடக்கத்தில், அவர்கள் அனுமதியின்றியே தோட்டத்திலுள்ள அதிகாரியினால் வழங்கப்பட்ட அடையாள அட்டை யுடன் இந்தியாவிற்குப் பயணம் செய்து வந்தார்கள். அதுவன்றியும், கண்டிய விவசாயிகளை அரசாங்கம் உஷ்ணவலயப் பகுதி களிலுள்ள குடியேற்றத் திட்டங்களில் மீளக் குடியமர்த்த வேண் டியிருந்தது. இந்தக் குடியேற்றத் திட்டங்களை உருவாக்குவதற்கு நீண்டகாலம் எடுத்ததுடன், அதிகளவு நிதியும் தேவைப்பட்டது. 

பிரதம மந்திரி, சம்பந்தப்பட்ட விடயங்களில் அறிவுபடைத்தவராய் இருந்ததோடு, பேச்சுவார்த்தை மேசைகளில் கடைப் பிடிக்கப்பட வேண்டிய தந்திரோபாயங்களுக்குப் புதியவராகவும் இருக்கவில்லை. 1940ஆம், 1941ஆம், 1945ஆம் ஆண்டுகளில் கொழும்பிலும் டில்லியிலும் நடைபெற்ற உயர்மட்டப் பேச்சு வார்த்தைகளின்போது அவரது கணவரான திரு. பண்டாரநாயக்கா முக்கிய பங்கு வகித்துள்ளார். 1957ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் பிரதம மந்திரி என்ற ரீதியில் புதுடில்லி சென்றபோது அவர் பண்டித நேரு அவர்களுடன் இந்த விடயம் பற்றிக் கலந்துரையாடியதுடன், தன்னுடன் அடிக்கடி டில்லிக்குப் பயணம் செய்த மாணவியான சிறிமாவோ பண்டாரநாயக்காவுடனும் தனது கருத்துக்களையும், அனுபவங்களையும் பங்கிட்டுள்ளார். 1945இல் டில்லியில் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு நாற்பது ஆண்டுகளின் பின்னர், எப்படி, காலஞ்சென்ற தனது கணவர் 1945ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் பின்னர் வெளியிடவிருந்த அறிக்கையைத் தயாரிப்பதில் நடுநிசிவரை வேலைசெய்து சோர்வுற்றுப்போன அதிகாரிகளுக்கு உதவினார் என்பதை, அவர் எனக்கு நினைவுபடுத்தினார்.. 

மனிதனின் விலக்க முடியாத முடிவின் வளர்ச்சியில், எதிர் பாராதவற்றினதும் தற்செயல் நிகழ்ச்சியினதும் பங்கை, வர லாறு கற்கும் ஒவ்வொரு மாணவனும் கட்டாயம் இனங்கண்டு கொள்ளவேண்டும் என எச். ஏ. எல். பிஷர் என்பவர் • ஐரோப்பாவின் வரலாறு,' என்ற நூலுக்கு எழுதிய தனது புகழ்சார்ந்த முன்னுரையிற் கூறியுள்ளார். நாடுகளுக்கிடையிலான பிணக்க களை அல்லது சிக்கல்களைத் தீர்ப்பதில் தலைவர்களினது தகுதியும், அவர்களிடையே இருந்துவரும் உறவும், முடிவாக வரவிருக்கும் முடிவில் தீர்க்கமான பங்கை வகிக்கின்றது. 

1964ஆம் ஆண்டில் உருவான இந்திய-இலங்கை உடன் படிக்கைக்கான பல கலந்துரையாடல்களின்போதும், செய்திப் பரிமாற்றங்களின்போதும் இது காணப்பட்டது . இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையிலான கடலெல்லையை வரையறை செய் வது பற்றியும், கச்சதீவுப் பிரச்சினை பற்றியும் 1974/75 ஆம் ஆண்டுகளில் இந்தியாவின் வீறாப்பு மிக்க பிரதம மந்திரியான இந்திரா காந்தியுடன் திருமதி. பண்டாரநாயக்கா கலந்துரையாடியபோதும், தகுதியும் நட்பும் பெரும் பங்கு வகித்தது . 

ஒத்துழைப்பு 
பண்டாரநாயக்கா குடும்பம் நேரு குடும்பத்துடன் நட்புறவு வைத்திருந்தது. திருமதி. பண்டாரநாயக்கா பிரதம மந்திரி யாக வந்தபின், நேரு விடுத்த அழைப்பை ஏற்று அவர் தனது குழந்தைகளுடன் இந்தியாவில் உள்ள புத்தக் கோயில்களுக்குப் புனித யாத்திரை செய்த போது, அவர்களது உறவு புதுப்க்கப்பி பட்டது. பிரதம மந்திரியாக வந்த பின்னர் அவர் வெளிநாடு சென்றமை இதுவே முதற்தடவையாகும். 

1960களில் திருமதி. பண்டாரநாயக்கர் ஓர் உலக அரசி சியல் மேதையாகக் கணிக்கப்பட்டபோது, இந்தியத் தலை வர்களுடனான அவரது மதிப்பு உச்சமடைந்திருந்தது . 1961ஆம் ஆண்டில் பெல்கிரேட் (Belgrade) நகரில் நடைபெற்ற முதலா வது அணிசேரா நாடுகளின் மாநாட்டின் போது அணுஆயு தத்தைக் குறைக்குமாறு வேண்டுகோள் விடுத்ததின் மூலம், அவர் முதன் முறையாக மேடையில் தோன்றினார். நான், பிரதம மந்திரி என்ற முறையில் வேண்டவில்லை ஒரு தாயென்ற முறை யில் வேண்டிக்கொள்கிறேன் என அவர் விடுத்த இந்த வேண்டுகோள், அனைத்துலக மக்களிடையே ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. 1962ஆம் ஆண்டு சீனாவுக்கும் இந்தியாவிற்கு மிடையிலான சிக்கலில் நடுவராகப் பணியாற்றும்படி கேட்டுக் கொண்டபோது, இவரைப்பற்றிய எண்ணம் மேலும் உச்ச மடைந்தது. 

திருமதி. பண்டாரநாயக்கா தனது பதவியை ஏற்றவுட னேயே, தனக்கு முன்னுள்ள பெரும் பணியினை எதிர்கொள்வதற்குத் தீர்மானித்துக் கொண்டார். இந்தியாவின் கண்களில் நாடற்றவர்களாகியுள்ள இந்தியக் குடியேற்றவாசிகளின் பிரச்சினையை இனங்கண்டு கொண்டு, அவர் அதற்கு முன்னுரிமை கொடுத்தார். பாராளுமன்றத் திறப்புவிழாவின்போது 12. 08. 1960 அன்று ஆற்றிய (சிம்மாசன) அரசியாரின் பேச் சில், அந்தப் பிரச்சினையை அரசாங்கம் தனது திட்டத்தில் சேர்த்துக்கொண்டது. “இந்தப் பிரச்சினைக்கு ஒரு திருப்திகரமான தீர்வை எட்டும் நோக்கில். இலங்கையிலுள்ள இந்திய வம்சாவழிப் பிரசைகளின் விடயத்தை எனது பிரதம மந்திரி தனது கவனத்துக்கு எடுத்துக்கொள்வார்'' எனத் தேசாதிபதி வில்லியம் கோபல்லாவ கூறினார். 

தனது தந்திரோபாயத்தின்படி பரந்தளவில் தீர்மானங்களை எடுக்கும் வகையில், பிரதம மந்திரி பல்வேறு விடயங்கள் பற்றிய உண்மையான நிலையைத் தயார்ப்படுத்தி வைத்துக் கொண்டார். 

பேச்சுவார்த்தைகளின்போது அவருடன் இணைந்து பணி யாற்றுவதற்குத் தெரிவு செய்யப்பட்ட குழு, திறமையும், அதற்காகத் தன்னை அர்ப்பணிக்கக் கூடியதாகவுமிருந்தது . அவரது பாராளுமன்றச் செயலாளர் பீலிக்ஸ் ஆர் டயஸ் பண்டார நாயக்கா, நிரந்தரச் செயலாளர் என். கியூ. டயஸ், இந்தியாவிலுள்ள இலங்கைத் தூதுவர் சேர் றிச்சர்ட் அலுவிகார, அவரின் பின்னர் இலங்கைத் தூதுவராகப் பதவியேற்ற எச். எஸ் . அமர சிங்க ஆகியோரே அந்தத் திறமைசாலிகளாவர். 

நாட்டினது அரசியற் சக்திகளின் சமநிலையில் ஏற்படும் இடர்களை உணராமல், இலங்கை ஏற்கனவே இயன்றளவு இந்தியக் குடியேற்ற வாசிகளை ஏற்றுக்கொண்டுள்ளது என்று கண்டியர்களது நலன்களைப் பிரதிநிதிப்படுத்தும் அமைப்புக்களும், மலை நாட்டுப் பாராளுமன்ற உறுப்பினர்களும் கொண்டிருந்த உணர்வை திருமதி. பண்டாரநாயக்கா தனது மனதில் வைத்துக் கொண்டார். அதேநேரம், தோட்டப் பகுதிகளில் கணிசமானளவு அரசியல் மற்றும் பொருண்மிய ஆற்றல் பெற்றிருந்த ஒரேயொரு பெரிய தொழிற்சங்கமான இலங்கைத் தொழிலாலர் கொங்கிறஸ், அவர்களெல்லோரையும் இலங்கைக் குடிமக்களாக ஏற்கவேண்டும் எனப் போராடியது. இன்று வடக்கும் கிழக்கும் இணைக்கப்படவேண்டும் என்ற விடயம்போல், தொடக்கத்திலிருந்தே இவ்விடயமும் உணர்ச்சியைத் தூண்டுவதா யிருந்தது.

அரசியலுக்குப் புதியவராக இருந்தபோதும், இந்த விடயம், கட்சி அரசியலுக்கப்பால் ஒரு தேசியச் சிக்கல் என்ற ரீதியில் கையாளப்பட வேண்டும் என்ற துணிவான, சரியான தீர்மானத்தை அவர் எடுத்தார். அத்துடன் இந்த விடயத்தில் இலங்கையில் பரந்தளவிலான இணக்கம் ஏற்படுவது, இந்தியாவுடனான பேச்சுவார்த்தைகளில் அவரது கரத்தைப் பலப்படுத்துவதாக இருக்கும். இந்த நேரத்தில் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராகத் திரு. டட்லி சேனநாயக்கா அவர்கள் இருந்துவந்தமை இலங்கையின் அதிர்ஷ்டமாகும். அத்துடன், அவர் எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியினது தலைவருமாவார். 

திரு. டட்லி சேனநாயக்கா, சம்பந்தப்பட்ட விடயங்களில் மட்டும் அறிவு படைத்தவராக இருக்கவில்லை. ஆனால், இந்த விடயங்கள் பற்றிய அவரது கருத்துக்கள் கூட, அதிகளவில் பிரதம மந்திரியின் கருத்துக்களுடன் ஒத்திருந்தன. 1953 ஆம் ஆண்டு லண்டனில் திரு. நேரு அவர்களுடன் நடத்திய பேசுச் வார்த்தைகளின்போது ஓர் உடன்பாட்டுக்கு வரத்தவறிய அவர், தற்போது, புதிய பிரதம மந்திரி பேச்சு வார்த்தைகளை நடத்துவதற்குத் தனது முழு ஒத்துழைப்பையும் நல்கினார். 

பேச்சுவார்த்தைகளின் போது கைக்கொள்ளவேண்டிய தந்திரோபாயங்கள் பற்றி பிரதமமந்திரி அவர்கள் சிந்தித்து வகுத்துக் கொண்டிருந்த அதேவேளை, இந்திய - பாகிஸ்தானியர் குடியுரிமைச் சட்டத்தின்கீழ் குடியுரிமை வழங்காதோரின் விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்து, ஓர் ஆண்டுக்குள் குடியுரிமை வழங்கி முடிக்கப்படவேண்டும் எனவும் பணிப்புரை விடுத்தார். குடியுரிமை வழங்குவதற்காக நிறைவேற்றப்பட்ட சிறப்புச் சட்டத்தின்கீழ் அதற்குரிமையுள்ளோர்க்குக் குடியுரிமை வழங்குவதற்கான இலங்கையின் பணி முடிந்து விடும். அதன் பின்னர், நாடற்றவர்களாக இருப்போரின் எண்ணிக்கை தெரியவரும் . இது. பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்குப் பெரிதும் உதவியாகவிருக்கும். 

இந்தியக் குடியேற்றவாசிகளின் குடியுரிமைத் தகுதிபற்றி மூன்னர் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின்போது அவர் கைக் கொண்ட கொள்கையற்ற நிலையிலிருந்து இலங்கை வழுவக் கூடாது எனத் திருமதி. பண்டாரநாயக்கா மிக முக்கியமாகத் தீர்மானித்துக்கொண்டார். இந்தியக் குடியேற்றவாசிகள் அனைவரும் இந்தியக் குடிமக்கள் என்ற அடிப்படையில் அவர்களுக்கு இலங்கையில் நிரந்தரமான அழியாத அக்கறையுண்டு என்ற நோக்கில், குடியுரிமை வழங்குவதற்காகத் திரு. டி. எஸ். சேனநாயக்கா 1949 ஆம் ஆண்டில் இந்திய - பாகிஸ்தானியர் குடியுரிமைச் சட்டத்தை நிறைவேற்றினார். உண்மையில், அவர்கள் இலங்கைக் குடியுரிமை பெறும்போது, இந்தியக் குடியுரிமையைத் துறந்துவிடவேண்டுமெனப் பண்டிதர் நேரு கூறியிருந்தார். ஆனால் இந்தப் பிரச்சினையின் கடைசித் தீர்வுக்கான நடவடிக்கை எனப் புதிய சட்டத்தின்கீழ் இலங்கை தானாகவே குடியுரிமை வழங்கவிருந்ததை 1953 ஆம் ஆண்டு இந்தியா முற்றாகத் தகர்த்துவிட்டது . 

அவர்கள் முன்னர் இந்தியக் குடிமக்களாகவிருந்தாலும், 1950 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26 ஆம் நாளிலிருந்து நடை முறைக்கு வந்த புதிய அரசியல் யாப்பின் பிரகாரம், அவர்கள் பிறப்பினால் இந்தியப் பிரசைகளாகக் கருதப்படுவர் என இந்தியா வாதிட்டது. அதன்படி, அவர்கள் இந்தியாவுக்கு வெளியே சாதாரணமாக வசித்துவருகின்றமையால் , இந்திய அரசியல் யாப்பின் 8வது விதியின்கீழ் இந்தியக் குடிமக்களாகப் பதிவு செய்யப்படுவதற்கு அவர்கள் இப்போது விண்ணப்பிக்க வேண்டியிருந்தது. 

திட்டம் 
இந்தியக் குடிமக்களாகப் பதிவு செய்வதற்கு, 55 வயதை அடையும் வரை அவர்களுக்கு இலங்கையில் வேலைவாய்ப்புண்டு என உறுதி செய்யப்பட வேண்டும் போன்ற பல முன் நிபந்தனைகளை இந்தியா விதித்தது. தனது குடிமக்களின் உரிமையை மறுக்கும் இந்த முயற்சி, இந்தச் சிக்கலுக்கு முற்றிலும் புதிய, எதிர்பாராத பரிணாமத்தைக் கொடுத்ததோடு, முட்டுக்கட்டை நிலை ஒன்றையும் உருவாக்கியது.

இந்தக் குடியேற்றவாசிகள் 1950 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் சாதாரணமாக இந்தியாவில் வசித்து வந்தார்கள் எனக் கணிக்கப்படாவிட்டாலும், அவர்கள் இந்தியாவிலுள்ள தங்களது சொந்த இருப்பிடங்கனை இழக்கவில்லை. ஆகவே  அது, இந்தியாவின் புதிய அரசியல் யாப்பின் கீழும் அவர்கள் இந்தக் குடிமக்களே என இலங்கை வாதாடியது. 

பிரித்தானியாவில், குடியுரிமை விடயத்திலும் சர்வதேசச். சட்டங்களிலும் சிறந்து விளங்கும் அதிகாரிகளுடன் ஆலோசிப் பதற்குப் பிரதம மந்திரி முடிவு செய்தார். இந்த நடவடிக்கை, பேச்சுவார்த்தையின்போது இலங்கைக்கு வலுவூட்டும். அத்துடன், சர்வதேச நீதிமன்றத்தினாலோ அல்லது சபையினாலோ இந்த விடயத்தைத் தீர்த்துவைக்கும் சாத்தியங்கள் பற்றியும் கவனத்தில் எடுக்க, பிரதம மந்திரி விருப்பமில்லாமல் இருக்க வில்லை .

அதேவேளை நாட்டில் நடைபெறுபவற்றையும் திருமதி பண்டாரநாயக்கா கடுமையாக நோக்கினார். 1954ஆம் ஆண்டு உடன்படிக்கையின் கீழ் இந்தியத் தூதரகத்தினால் இந் தியக் குடிமக்களாகப் பதிவு செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை உற்சாகமூட்டுவதாகவில்லை. 40, 000 பேரே பதிவு செய்யப்பட்டிருந்தனர். அவர்களில் அதிகமானவர்களும் தோட்டப்பகுதியைச் சேர்ந்தவர்களாகவே இருந்தனர். இந்தப்பிரச்சினை பற்றி, தொட்டுக்கூடப் பார்க்கப்படாமல் இருந்தது . 

1954ஆம் ஆண்டு நடைபெற்ற பேச்சுவார்தைகளின்போது, இந்தியக் குடிமக்களாகப் பதிவுசெய்யப்பட்டவர்களில் தொழில் பார்ப்பவர்கள் 55 வயதுவரை அதாவது ஓய்வு பெறும்வரை வேலை செய்வதற்கும், அதன் பின்னர் அவர்கள் நாட்டை... விட்டு வெளியேறும்போது நட்டஈடு வழங்குவதற்கும் ஒரு திட் டத்தைக் கொண்டுவர உத்தேசித்துள்ள தாகவும் இலங்கை குறிப்பிட்டது. பதிவுசெய்வதை ஊக்குவிப்பதற்கு, கூடுதல் தூண்டு தல் அளித்தால் அதிகமானோர் பதிவு செயவர் எனக் பிரதம மந்திரி நினைத்தார். அந்த விடயம்பற்றி ஆராய்வதற்கு அவர் ஒரு குழுவையும் நியமித்தார். 

தொழிலாளர் ஓய்வு பெற்று, தாய் நாட்டுக்குத் திரும்பும் போது ஓர் ஊக்குவிப்புப்படி வழங்குமாறு அக்குழு விதந்துரைத்தது. அந்தத் தொழிலாளி, தன்னுடன் பதிவு செய்த வயது குறைந்த தன்னுடைய குழந்தைகளையும் தான் போகும்போது அமைத்துச் செல்ல முடியும். அதனால் தோட்டத்தில் ஏற்படும் வெற்றிடத்தை இலங்கைத் தொழிலாளரைக்கொண்டு நிரப்பி விட முடியும். 

தந்திரோபாயம் 
இந்த ஊக்குவிப்புடன், தோட்டங்களில் இலங்கையர்கள் வேலை செய்வதற்கான ஆக்கபூர்வமான துரித நடவடிக்கைகளைப் பிரதம மந்திரி மேற்கொள்ள வேண்டும். இந்த நாட்டவரல்லாதோர் தோட்டங்களில் வேலை செய்வதைக் கட்டுப்படுத்தும் ஒரு மசோதா 23, 05. 02 அன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. தோட்டங்களில் ஏற்படும் வெற்றிடங்களை நிரப்புவதற்காக தொழிலாளர்களின் எண்ணிக்கையை அமைச்சர் குறிப்பிடுவார். கிராமப்புறத் தொழிலாளர்கள் தோட்டவேலைகளை ஏற்பதற்கு வசதிகள் அளிக்கப்பட வேண்டும். இந்தியாவுடன் நடத்தப்படும் பேச்சுவார்த்தைகள் சுமூகமான முறையில் நடைபெறுவதற்காக இந்த மசோதா வைக்கப்பட்டது . 

பிரதம மந்திரி அதற்கப்பாலும் ஒரு படி சென்றார் . தோட்டங்களை உருவாக்குவதற்காக, குடியேற்ற நாட்டு அரசாங்கம் நிலத்தினை அபகரித்ததை மனதிற் கொண்ட பிரதம மந்திரி, இலங்கையரல்லாதோர் இலங்கையரின் காணிகளைப் பெறுவதைக் கட்டுப்படுத்தும் ஒரு சட்டத்தை இயற்றும்படி பணித்தார். 

இந்த விடயத்திற் காணப்பட்ட சிக்கல் காரணமாக, சட்ட நகலைத் தயாரிப்பதில் தாமதம் ஏற்பட்டது. இலங்கையரல்லாதோரின் சொத்துக்களைச் சுவீகரிப்பதற்கான ஒரு சட்டம் 09. 07. 64 அன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால், நிதிச் சட்டங்களுக்கமையத் திருத்தம் செய்து மீண்டும் சமர்ப்பிப்பதற்காக அது மீண்டும் பெறப்பட்டது . 

திருமதி. பண்டாரநாயக்காவின் தந்திரோபாயங்கள் எப்படி நடைமுறைப்படுத்தப்பட்டன? ஒவ்வொரு கட்டத்திலும் இந்தியாவினுடைய எதிர் நடவடிக்கைகள் எப்படி அமைந்தன? என்பவை பற்றி அடுத்த அத்தியாயங்களிற் கூறப்படும்.

தகவற் குறிப்புகளும் கருத்துருவாக்கமும் - எஸ்.கே.விக்னேஸ்வரன்

ஊடகங்கள் தகவல்களையும் செய்திகளையும் வெளியிடுவதுடன் மட்டும் நின்றுவிடுவதில்லை. அவை செய்திகளையும் தகவல்களையும் தெரிவு செய்தல்,பகுத்தல், தொகுத்தல், ஆய்வுக்குட்படுத்தல், மதிப்பீடு செய்தல் என்ற பல பணிகளையும் பொறுப்புகளையும் கொண்டவை. ஒரு தகவல் செய்தியாவது ஊடகங்களின் நோக்குநிலையைப் பொறுத்தது. ஒரு ஊடகத்தில் செய்தியாக்கப்படும் தகவல் இன்னொரு ஊடகத்தின் கவனத்தில் முக்கியமற்றதாகப் படலாம். 'சந்தியில் இருவர் கைகலப்பு' என்பது ஒரு தகவல். இது மேலதிக விபரங்கள் சேராத வரையில் ஒரு செய்திக்கான முக்கியத்துவம் அற்றதாகி விடுகிறது. மேலதிகமாக அது நடந்த இடம் (உதாரணமாக யாழ் கச்சேரியடியில்) என்று குறிப்பிடப் படும்போது அதற்கு சற்று அதிகமான கவனிப்பு கிடைக்கிறது செய்தியை அறியவிரும்பும் ஆர்வத்தை அது தூண்டுகிறது. அந்தப் பகுதி மக்களின் கவனத்தை இது நிச்சியமாக ஈர்க்கும். இந்தச் செய்தி 'புனர்வாழ்வுக்கான மானியம் வழங்கப்பட்டபோது' என்று சேர்கையில் அது அந்தப் பிரதேசத்தின் அக்கறைக்குள்ளானதாக மாறுகிறது. இன்னும் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. 'விநியோகத்தின் போது நடந்த குழறுபடிகளால் ஏற்பட்ட வாய்த் தகராறு கைகலப்புக்கு இட்டுச் சென்றது' என்று சேரும்போது அது நாடு முழுவதுக்குமான செய்தியாகிவிடுகிறது. செய்தி ஒரு குறிப்பிட்ட விடயம் தொடர்பாக திரட்டப்படும் தகவல்களால் உருவாக்கப்படுகிறது. அந்தச் செய்தியை உருவாக்குபவருக்குள்ள நோக்கம், பார்வை என்பவற்றைப் பொறுத்து அந்தச் செய்தியின் தன்மை அல்லது தொனி வேறுபடுகிறது. சேர்க்கப்படும் அல்லது தவிர்க்கப்படும் தகவல்களைப் பொறுத்து அந்தச் செய்தியின் அர்த்த பரிமாணங்கள் வேறுபடுகின்றன. இதன்போது நடந்த சம்பவத்தைவிட அதற்கு கற்பிக்கப்படும் அர்த்தங்கள் முக்கியமாகிவிடுகின்றன.

கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியாக நடந்துவரும் முகநூல் 'வாதப் பிரதிவாத' குறிப்புக்கள் யாழில் நடந்த ஒரு சம்பவம் பற்றிய தகவல்கள் குறித்துத் தொடங்கியிருப்பது எனக்கு ஒருவகையில் ஆச்சரியமும் மகிழ்ச்சியும். ஏனென்றால் தமிழ் ஊடகங்களில் வரும் தகவல்கள் சரிபார்க்கப் படாமலே பிரதிசெய்யப்படுதல் இலங்கைத் தமிழ் சூழலில் வெகு சாதாரணம் அல்லது வழமை. அப்படியிருக்க இந்தத் தகவல்கள் இப்போது கேள்விக்குள்ளாக்கப் படுகின்றன என்றால் அது வரவேற்கப் படவேண்டியதுதான். ஆனால் தகவல்களுக்கு அரசியல் பரிமாணம் கொடுத்து அர்த்தப்படுத்தும் வேலையயும் அவை செய்யும் போது அவை தகவல்களென்பதற்கு மேலாக, ஒரு செய்தி என்பதற்கு மேலாக ஒரு கருத்துருவாக்கம் என்ற மட்டத்தை நோக்கிச் சென்றுவிடுகிறது.

கருத்துருவாக்கத்தின் போது திட்டவட்டமாக தெரிந்த ஆதாரங்கள் போதியளவு இல்லாதபோது ஒன்றுக்கு மேற்பட்ட கருத்துருவாக்கங்கள் உருவாகும் வாய்ப்பும் ஏற்பட்டுவிடுகிறது. நடந்துகொண்டிருக்கும் மேலே குறிப்பிட்ட சர்ச்சையில் நடப்பது இதுதான். நூலகம் புனர் நிர்மாணம் செய்யப்பட்டபின் திறந்து வைக்கப்பட என மாநகர சபையால் தீர்மானிக்கப்பட்ட திகதியில் அதைத் திறக்க வேண்டாம் என புலிகள் யாழ் மேயரிடம் கூறினார்கள் அல்லது மிரட்டினார்கள் என்பதுதான் தகவல். எதற்காக அந்த முடிவை எடுக்க வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தார்கள் அல்லது மிரட்டினார்கள் என்ற முக்கியமான தகவல் எந்த ஊடகத்தாலும் பதிவு செய்யப்படவில்லை அல்லது அத்தகைய பதிவு எதுவும் தற்போது கிடைக்கவில்லை.

ஆனால் சம்பந்தப்பட்ட நிகழ்வின்போது நேரடியாக களத்தில் நின்ற ஊடகவியலாளர் சோமீதரனும் மாநகரசபை உறுப்பினர் தங்கமுகுந்தனும் புலிகளுக்கு நூலகத்தைத் திறந்துவைப்பதில் உடன்பாடு இல்லை என்று கூறுகிறார்கள். புலிகள் திறக்கக் கூடாது என்று மிரட்டிய்தை எதிர்த்து மேயர் உட்பட அனைத்து உறுப்பினர்களும் தமது பதவியை இராஜினாமா செய்துவிட்டு ஒரு அறிக்கை வெளியிடுகிறார்கள். அந்த அறிக்கையில் மாநகரசபை ஊழியர்கள், மேயர் உட்பட மாநகரசபை உறுப்பினர்கள் அனைவரும் புலிகளின் அரசியற் பிரிவால் தாம் அச்சுறுத்தப்பட்டதாகத் தெரிவிக்கின்றார்கள். அந்த அறிக்கையில் சாதி தொடர்பான எந்தக் காரணமும் தெரிவிக்கப்படவில்லை. அதேவேளை இந்த அறிக்கை வெளியான அதே தினமுரசு இதழில் மேயர் அவர்கள் அளித்த பேட்டியில் தனது சாதி காரணமாக தன்னுடைய பெயர் பொறிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதே புலிகள் திறப்பு விழா நிகழ்வைத் தடை செய்ததற்கான காரணம் என்று கூறுகிறார். அதேவேளை அந்த காரணத்தை புலிகள் வெளிப்படையாகக் குறிப்பிட்டதாக அவர் பேட்டியில் வேறெந்த இடத்திலோ, பெரும் இழப்புகள் நடக்குமென இளம்பருதி மிரட்டியதை விபரித்தபோதோ தெரிவிக்கவில்லை.

எது எப்படி இருப்பினும் இந்தத் தகவலின் அடிப்படையில் இப்போது நடக்கும் விவாதங்கள் இரண்டு விதமான அரசியல் நிலைப்பாடுகள் அல்லது மதிப்பீடுகளிலிருந்து முவைக்கப் படுகின்றன. இரண்டுமே புலிகளின் அரசியல், சாதீயம் பற்றிய கருத்துக்கள் எப்படி இருந்தன என்பதை தத்தம் பின்னணியிலிருந்து விளக்கம் தருபவையாக அமைந்திருக்கின்றன.

ஆனால் இங்கு முக்கியமானது, எந்தக் காரணத்துக்காகவெனினும் நூலகம் திறக்கப்படுவது தடைசெய்ய்ப்பட்டது என்பதே. அது எந்தக் காரணத்துக்காகச் செய்யப்பட்டிருந்தாலும் மிக மோசமான ஒரு தவறென்றே சொல்லவேண்டும்.

நடக்கும் விவாதத்தில் அந்தவிடயம் கணக்கில் எடுக்கப்படவில்லை அல்லது இரண்டாம் பட்ச நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது என்பது கவலைக்குரிய விடயம்.

அதேவேளை இது சாதியக் காரணத்துக்காக தான் நடந்தது என்று கூறும் தரப்பினர் இதற்கு வேறும் ஒரு பக்கம் இருப்பதாகக் கூறுவதை கணக்கிலெடுக்கக் கூடத் தயாராக இல்லை என்பதும் தெரியவந்துள்ளது.

தகவல்களைப் பதிவிடும் ஊடகங்களின் செய்தியாக்கல் பற்றிய பொறுப்பற்ற போக்கு அப்போது இரண்டு விடயங்களைச் செய்திருக்கிறது. ஒன்று முழுக்கமுழுக்க இந்தச் செய்தியை இருட்டடிப்புச் செய்தது. மற்றையது கிடைத்த தகவலை முழுமைப்படுத்தாமல் அப்படியே பதிவுசெய்தது. ஆங்கில ஊடகங்கள் சிலவும் இந்தச் செய்தியை வேறு சரிபார்ப்புக்களெதும் செய்யாமல் அப்படியே வெளியிட்டன. இதுவே இன்றைய நிலமையை இவ்வளவு வாதப்பிரதிவாதங்களுக்கு இட்டுச் சென்றிருக்கிறது.

எவ்வாறாயினும் நமது நாட்டின் கட்சிகள், அரசாங்கங்கள், அரசியல் சூழல், விடுதலைப் புலிகளின் செயற்பாட்டு முறைமை என்பவை பற்றிய தொடர்ச்சியான அவதானிப்பும் புரிதலும் உள்ள எவருக்கும் என்ன நடந்திருக்க வாய்ப்பு அதிகம் என்பதை ஊகிக்க முடியும்.

புலிகள் எந்த அரசியல் ரீதியான முடிபுகளையும் சரி, நிர்வாகரீதியான முடிவுகளையும் சரி ஜனநாயக ரீதியான முறையில் மக்களை வென்றெடுத்து நடைமுறைப் படுத்தியவர்கள் அல்ல. அவர்களது முடிவுகள் சரியானவை, நியாயமானவை, தவறானவை, மிக மோசமானவை என எந்த வகைப்பட்டவையாக இருந்தபோதும் அவர்களது வழிமுறை இப்படித்தான் இருந்தது. ஒரு கதவடைப்புப் போராட்டம் கூட மக்கள் மத்தியில் ஜனநாயபூர்வமான வழியில் பங்கேற்கவைத்துச் செய்யப்பட்டதில்லை. ஜனநாயக வழிமுறைகளைப் புறக்கணித்தமை, அதிகாரத்துவ நடைமுறையை வலியுறுத்தியமை, தவறுகள் சுட்டிக்காட்டப்படும்போது அவற்றை எதிர் நிலையில் அணுகியமை, அமைப்பின் கீழ்மட்ட உறுப்பினர்களின் தவறான நடவடிக்கைகளைக் கூட நியாயபடுத்தியமை என்று பல தவறான பக்கங்களை புலிகள் கொண்டிருந்தனர். அதேவேளை அவர்களிடம் தமிழ் மக்களின் அரசியற்கோரிக்கை சார்ந்து விட்டுக்கொடுக்காத போராடும் இயல்பும் இருந்தது என்பதையும் குறிப்பிடவேண்டும். ஆனால் துயரம் என்னவென்றால் முடிவு வழிமுறையை நியாயப்படுத்தும் என்பதை அவர்கள் உறுதியாக நம்பினர். ஆனால் வழிமுறையே தனக்கேயுரிய விதத்தில் முடிவையும் மாற்றிவிடும் என்பதை அவர்கள் இறுதிவரை தெரிந்து கொள்ளவில்லை. அல்லது அப்படி ஆகும் என நம்பத் தயாராக அவர்கள் இருக்கவில்லை. இதனால் அவர்கள் இந்தச் சர்ச்சையைப் போல் பல அரசியல் நெருக்கடிகளை எதிர்கொள்ளவேண்டியிருந்தது.

அநுராதபுரப் படுகொலைகள்,முஸ்லீம் பள்ளிவாசற் படுகொலைகள், யாழிலிருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டது, ரஜிவ் காந்தி படுகொலை, மாற்று இயக்கங்களையும் அவற்றின் உறுப்பினர்களையும் அழித்தது அல்லது இயங்குவதை ஆயுத பலத்தால் தடை செய்தது போன்ற சில உதாரணங்கள் அவர்களது அரசியல் இருப்புக்கு எவ்வளவு பெரும் நெருக்கடிகளைத் தந்தன என்பது வரலாறு.

இத்தகைய தவறான போக்குகளால் அவர்கள் செய்யாத செயல்களுக்கும் சேர்த்து அநுபவிக்க வேண்டிய நிலை உருவானது. அவற்றில் ஒன்றுதான் இந்தச் சாதி காரணமாகவே திறப்புவிழா தடுக்கப்பட்டது என்றகுற்றச்சாட்டும் கூட. உண்மை முக்கியம் என்பதை விட, அவர்கள் செய்திருக்கலாம் என்று மக்கள் மத்தியில் அபிப்பிராயம் எழுவதற்கான ஒரு நிலை இருக்கவே செய்தது என்பதே, இது பற்றி அந்தக் காலத்தில் யாருமே அலட்டிக் கொள்ளவில்லை என்பதற்கான காரணமும் கூட. அதைப்பற்றிப் பேசியவர்களுக்கும் ஆதாரங்களை விட அனுமானங்களே போதுமாக இருந்தது. கூடவே இந்தத் தகவலைத் தவறென்று அடித்துச் சொல்லவும் யாரும் அக்கறைப்படவுமில்லை, புலிகள் உட்பட.

இப்போது ஊடகவியலாளராக எனக்கு மிகநெருக்கமான நண்பர் சோமீதரன் இந்த நூலகத் திறப்புவிழாபற்றி எழுதப்போக ஊக அடிப்படையில் வரலாறு எழுதியவர்களுக்கு அது ஒரு பெரும் சிக்கலாக வந்திருக்கிறது. அப்படி ஒரு பக்கம் இருக்கிறதா என்று கேட்டு உரையாடும் அளவுக்குக் கூட அவர்களுக்கு பொறுமை இல்லாதிருக்கிறது. தமிழ் சூழலில் இன்றெல்லாம் இப்படி எத்தனையோ கற்பிதமான கதைகள் அரைகுறையாகக் கேள்விப்படும் தகவலை வைத்துக்கொண்டே கட்டியெழுப்பப் படுவது மிகச் சாதாரணமாக நடக்கிறது. அன்மையில் சுமந்திரனின் சிங்கள மொழிப் பேட்டி ஒன்றுக்கு எழுந்த எதிர்வினை இதற்கு நல்லதொரு உதாரணம். இப்போது நடக்கும் சர்ச்சையில் ஆளையாள் தனிப்பட்ட முறையில் குரோதத்துடன் தாக்குவதுப்தொடர்கிறது

தேசிய விடுதலைப் போராட்டம் ஒரு காரணமுமில்லாமல் ஒருசில அரசியல்வாதிகளின் சதிகார நோக்கத்தால் நடந்த ஒன்று என்று முடிவுரை எழுதும் அளவுக்கு வன்மமும், இலங்கையின் சோசலிசப் புரட்சியை அதுவே பின்னோக்கித் தள்ளி விட்டதென்ற கடுங்கோபத்துடன் தமது இன்றைய நிலையை நியாயப்படுத்திக் கொண்டிருப்பவர்களுக்கும் இந்தச் சர்ச்சை ஒரு கொண்டாட்ட மனோநிலையை ஏற்படுத்திவிட்டிருக்கிறது.

ஆனால் சமயங்களில் வரலாறு கற்பிதங்களாலும் புனைவுகளாலும் கட்டப்படுவது அவ்வப்போது நடந்து வந்தாலும் நின்று நிலைப்பதில்லை. உண்மைகள நீண்டகாலத்துக்குப் புனைவுகளால் மறைத்து வைத்திருப்பது சாத்தியமில்லை என்பதையும் அது வெளிப்படுத்தித்தான் வந்திருக்கிறது.

அந்தவகையில் நடந்துகொண்டிருக்கும் இச் சர்ச்சை ஆரம்பத்தில் குறிப்பிட்டதுபோல பலவீனமான தகவல்களால் பின்னப்பட்ட கருத்துருவாக்கத்தை கேள்விக்குள்ளாக்கும் ஒரு சர்ச்சை என்பதில் மகிழ்ச்சியுடன் வரவேற்கத் தக்கதே. ஆனால் சர்ச்சை, தகவல்கள் வரலாறு தொடர்பான விவாதங்கள் என்பவற்றுடன் தொடர்வதற்குப் பதில் தனிமனித தாக்குதல்களாக அமைவது வருத்தத்துக்குரியது மட்டுமல்ல, எத்தகைய பயன்விளைவையும் தரப்போவதில்லை.

உரையாடல்களும் விவாதங்களும் தெளிவுபெறுவதாக அமையட்டும்!

எஸ்.கே.விக்னேஸ்வரன் தனது முகநூலில் எழுதிய பதிவை நன்றியுடன் பகிர்கிறோம்.

ராகவனின் யோக்கியம் - என்.சரவணன்


(ராகவனின் பதிவை இறுதியில் இணைத்திருக்கிறேன்.)

ராகவன் என்மேல் கொண்டுள்ள முன்முடிவுகளுக்கும், புரட்டுக்களுக்கும் சிறந்த எடுத்துக்காட்டு இப்போது அவர் வெளியிட்டுள்ள புனைவு.

அகரமுதல்வனின் கட்டுரைக்கு நான் எழுதியுள்ள அறிமுகவுரை என்று அவர் வெளியிட்டுள்ள அபத்தம் என்னுடையது அல்ல. அக்கட்டுரையின் அடியில் அது எங்கிருந்து மறுபிரசுரம் செய்யப்பட்டுள்ளது என்பதை அதிலேயே வெளியிட்டுள்ளேன்.

அக்கட்டுரையில் எந்தவித எனது கருத்து / தகவல் சேர்ப்புக்களோ, அல்லது தணிக்கைகளோ கூட கிடையாது. நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் நீங்கள் லண்டனில் எனது கட்டுரைக்கு செய்த தணிக்கையைக் கூட நான் செய்வதில்லை. செய்ததில்லை அல்லது எனது கருத்துக்களை தணிக்கை செய்பவர்களோடு நீங்கள் எப்படி உறவு வைத்துக்கொள்ளலாம் என்று உங்கள் பாணியில் கேட்கப்போவதில்லை. அப்படி தணிக்கை செய்பவர், அல்லது விஷமம் பேசுபவர் உங்களைப் பொறுத்தளவில் வேறு பல பணிகள் ஒத்துப்போவதாக இருக்கலாம். அத்தகைய உறவுகளை நான் பிழையாகப் பார்க்கப்போவதில்லை.

உங்கள் அணுகுமுறையின்படி உங்கள் அல்லது நமது நட்பில் உள்ள பலர் ஏதோ ஒரு காலத்தில் செய்த ஒரு சில தவறுகளுக்காக நிராகரிக்கப்பட்டிருக்க வேண்டும். ஏன் உங்கள் சூத்திரத்தின்படி பார்த்தால் விடுதலைப் புலிகளில் நீங்கள் இருந்த காலத்தில் விடப்பட்ட தவறுகளுக்காக நாங்கள் உங்களை எப்போதோ நிராகரித்திருக்க வேண்டும்.

இப்படி நிராகரித்து நிராகரித்தே நாம் தனிமைப்பட்டிருக்கவேண்டும். நமக்கு வெளியில் அனைவரும் குற்றவாளிகளாக மட்டுமே இருப்பார்கள்.

மேலும் இந்த விடயத்தில் அகரமுதல்வனை நீங்கள் நிராகரிப்பதற்கு காரணம் உங்களுக்கு ஒவ்வாததை இப்போது சொல்லிவிட்டார் என்பதைத் தவிர வேறு என்ன இருக்க முடியும் என்பதை புரிந்துகொள்ள பெரிய ஆராய்ச்சிகள் எதுவும் தேவையில்லை ராகவன்.

நான் சொல்லாத புகழாரத்தை சொன்னதாக ராகவன் கூறுவதை “திட்டமிட்டுத் தான் ராகவன் இப்படி புனைகிறார்” என்று நான் சொல்லப்போவதில்லை. எனக்கெதிரான பதிவுகளை அவசர அவசரமாக லைக்கிடுவதில் காட்டிய அதே அவசரத்தை இதே விடயத்தில் காட்டிவிடுகிறார் ராகவன். என்னை நோகடிப்பதில் காட்டிய அவசரத்தில் இந்த விபரங்களைக் கவனிக்கத் தவறிவிடுகிறார்.

பெரிய பேச்சுரிமை, ஜனநாயகம் பேசுகிற ராகவன் இவற்றுக்காக மன்னிப்பு கோரப்போவதில்லை. நான் கோரச் சொல்லப்போவதுமில்லை. ஆனால் ஏன் இந்த cunning ராகவன். உங்களைத் திட்டப் போவதில்லை. ஆனால் எனக்கு இந்த கேள்விகள் உள்ளன.

அகரமுதல்வனை நான் புகழாரம் சூடியதாக சொன்னதே முதல் பொய் பின்னர் அதை வைத்து அதன் பின்னால் எனது “பெண்களின் அரசியல்” நூலையும் என்னையும் கேள்விக்குட்படுத்துவது என்பது அர்த்தமிழந்து போகிறது.

இப்படி இறுதியில் சொல்கிறீர்கள்.
//இவ்வாறான பெண்வெறுப்பும் இனவெறியும் கொண்ட ஒருவரின் படைப்பை ஒற்றைப்பார்வையில் பார்க்காமல் கடந்து போக சொல்கிறார் விளிம்பு நிலை மக்களுக்காகவும் பெண்களின் ஒடுக்கு முறைக்காகவும் குரல் கொடுப்பதாக சொல்லிக்கொண்டு தன்னை பெண்ணிய வாதியாகவும் காட்டிக்கொள்ளும் சரவணன். சரவணன் : கருத்துகளை கருத்துகளால் மோதுங்கள்.//
இந்த மொக்கை தர்க்கத்துக்கு “கருத்து” என்று தான் பெயரிட்டிருக்கிறீர்களா ராகவன்.

சரி... இப்போதென்ன அடுத்ததாக எனது விளிம்பு நிலை முயற்சிகளையும், தலித்திய முயற்சிகளையும், பெண்ணிய முயற்சிகளில் இருந்தும் என்னை தணிக்கச் செய்ய வேண்டும் அது தானே உங்கள் இலக்கு. அதற்கு இந்த Cheap வழிமுறை வேணாமே ராகவன்.

என்னை தலித்திய விரோதியாக, பெண்ணிய விரோதியாக, பாட்டாளி வர்க்க விரோதியாக, அல்லது இன்னோரன்ன விரோதியாக சித்திரிக்கும் முயற்சியில் உயர் சாதிக் கும்பல் elite dominators, academic fascists அரசியல் வங்குறோத்துடையவர்கள், சுயவிமர்சனத்துக்கு அஞ்சும் கோழைகள் அனைவரும் ஒரே நேர்கோட்டில் இணைவதை நான் மட்டுமல்ல அனைவரும் கவனித்துக்கொண்டு தான் இருக்கிறார்கள் ராகவன். போய் வேறு ஏதாவது ஒன்றைத் தேடி எடுத்துக் கொண்டு வாருங்கள்.

“கருத்துகளை கருத்துகளால் மோதுங்கள்” ராகவன். இது உங்கள் வாக்கியம் தான். காழ்ப்புணர்வால் அல்ல.

"பொய்யைச் சொல்லியாவது என்னைக் காயப்படுத்திவிட்டார் அது போதும்" என்கிற பாணியில் ராகவனின் பதிவுக்கு "லைக்"கிட்ட கனவான்களையும் அடையாளம் காணக் கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சி.
ராகவன் எப்படி முகநூலில் வெளியிட்ட பித்தலாட்ட கருத்து இது தான்.

குணாகவியழகனுக்கும் அகரமுதல்வனுக்கும் புகழாரம் சூட்டி அவர்களின் காணொலிகளை சரவணன் தனது முகப்புத்தகத்தில் இணைத்துள்ளார் என்ற எனது பதிவைப்பார்த்து கொதித்தெழுந்த சரவணன் நமது மலையகத்தில் ‘ராகவனின் அளவு கோலின் நீளம்’ என்ற ஒரு கட்டுரையையை எழுதி நான் பொய்யும் புரட்டும் சொல்வதாகவும் சொல்லி எனது பதிவின் சில வரிகளுக்கு ‘ மஞ்சள்’ நிறமும் சூட்டி மகிழ்ந்திருக்கிறார். உண்மையில் நான சரவணனில் எப்போதும் கோபப்பட்டது கிடையாது. ஆனால் அவர் ஏன் இப்படி தறி கெட்டு நடக்கிறார் . தனி நபர்கள் மேலான ஆத்திரத்தில் தான் சொல்லும் கொள்கைகளுக்கே விரோதமாக நடக்கிறார் என்ப து புரியவில்லை.
.
அக்கட்டுரையில் விளிக்கிறார்:
குணா கவியழகன், அகரமுதல்வன் ஆகியோரின் இரு பதிவுகளையும் நான் புகழாராம் சூட வேண்டியதில்லை. ஆனால் அவை இரண்டு தற்போதைய விவாதத்தின் முக்கிய பதிவுகளாக உணர்கிறேன். உண்மைகளை மூடிமறைக்க முயற்சிக்கின்ற திட்டமிட்ட போக்கின் வடிவம் தான் இவர்களின் பதிவுகளை கிடைக்க விடாமல் செய்வதென்பது. ஒரு பதிவு என்கிற அடிப்படையில் அவை முக்கியமானவை.
முதலில் அவரின் அந்த வீடியோக்களுக்கான முன்னுரைகளை பார்ப்போம்
யாழ் நூலக மறுதிறப்பின் அரசியல் பின்புலம் பற்றியும், அரசும் புலிகள் அமைப்பும் இந்த விடயத்தில் நடத்திய அரசியல் காய் நகர்த்தல்கள் பற்றியும் மிகவும் விளக்கமான விபரங்களை வெளிப்படுத்துகிறார் குணா கவியழகன். இந்த விடயத்தில் சம்பந்தப்பட்ட தரப்பில் இருந்து வெளிவரும் முக்கிய (இன்னொரு) அறிக்கையாகவே இதை நோக்குகிறேன். இதை ஒரு சாதிய விவகாரமாக புனைந்தவர்களின் அபத்தம் பற்றியும், முன் கற்பித - சந்தர்ப்பவாத அணுகுமுறைகளையும் போட்டுடைக்கிறார் குணா கவியழகன்.
அகரமுதல்வன் விடியோ பற்றிய அறிமுகத்தில்:
இந்த விவாதமொரு எடுத்துக்காட்டு -தனிமனித தாக்குதல்கள் -வசைகள் ஏதுமற்று நிகழ்த்தப்படும் ஒரு அரசியல் -சமூக -விமர்சன விவாதமாக உருக்கொண்டு நிற்கிறது. ஆகையால் இந்த விவாதம் எல்லோருக்கும் ஒரு எடுத்துக்காட்டு. இங்கே யாரும் யாரையும் காழ்ப்போடும் வசவுகளோடும் சீண்டவில்லை. அப்படி அவதூறுகளால் எழுதப்படும் வசைச்சொற்களை இந்த விவாதம் தூக்கி வீசுகிறது. இங்கே இனியொரு அந்தப் வசைப்பண்பாட்டிற்கு இடமில்லை. அவரவர் தரப்பில் நின்றுகொண்டு மிகப்பிடிவாதமாக கதைத்துக்கொண்டிருக்கின்றனர். இங்கே நிகழ்வது விவாதம். காழ்ப்பின் வேட்டை அல்ல.இந்தச் சம்பவத்தை முன்வைத்து எழுத்தாளர் ஷோபாசக்தி மீது தொடுக்கப்படும் காழ்ப்பையும் – வசவுகளையும் அடியோடு மறுக்கிறேன். நமது உரையாடல் பண்பாட்டின் மீது கறைபடியும் செயல். இதனை எந்தத் தரப்பிலிருந்து யார் நிகழ்த்தினாலும் அதனை கண்டிக்கவேண்டிய பொறுப்பு நாகரீக சக்திகளுக்கு இருக்கிறது. இந்தக் கட்டுரைக்கு எதிர்வினையாக என் மீதும் வசவுகளும் -காழ்ப்புகளும் எழுதிக்குவிக்கப்படும் என்பதை அறிந்தும் நான் இதனைச் சுட்டுகிறேன்.
மேற்கண்ட சரவணனின் அறிமுகவுரைகள் புகழாரம் இல்லை என யாராவது புத்திக்கூர்மையானவர்கள் வந்து அறிவுறுத்தினால் நான் அதனை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறேன்.
இதனை விட என்னை மிகவும் சஞ்சலத்துக்காக்கியது சரவணனின் கீழ்வரும் கூற்று:
அகரமுதல்வனின் இந்தப் பதிவை நிராகரிப்பதற்கு மீண்டும் அவரின் “சாகாள்”ளை தூக்கிக்கொண்டுவருவரும் சூட்சுமத்தில் புரிகிறது அதைத் தவிர அவரை நிராகரிப்பதற்கு வேறொன்றுமில்லை என்பது. இந்த ஒற்றைப் பார்வை தான் வேண்டாம் என்று இத்தனை காலம் நாம் ஐரோப்பாவில் இயங்கினோம். ஒருவரை நிராகரிக்க ஒரே ஒரு படைப்பு போதுமென்றால் அவரை ஆதரிக்க பல படைப்புகள் உள்ளனவே. இதே அளவுகோளை கையில் எடுத்தால் உங்களை நாங்கள் பல தடவைகள் நிராகரித்திருக்க வேண்டும்.
அகரமுதல்வன் சிறுகதை என்ற பெயரில் தமிழினிக்கு மேல் சுமத்திய மோசமான அவதூறை ஒரு படைப்பாகவும் அதனை எழுதியவரை நிராகரிப்பது ஒற்றைப்பார்வை என சொல்பவர்தான் பெண்களின் அரசியலும் அரசியலில் பெண்களும் என புத்தகம் போட்டு ‘ பெண்ணியம்’ பேசிய சரவணன். அந்த புத்தகத்தில் சொல்கிறார்:
பெண்களின் விடுதலைக்கான அரசியல் போராட்டத்தில் ஆணாதிக்கத்தை தனிமைப்புடுத்துதல் அவசியமாகிறது. …. இவை குறித்த அம்பலப்படுத்தல்கள் சமரசமற்றை முறையில் விடாப்பிடியாக தொடர்ச்சியாக செய்யப்படவேண்டியது அவசியம்….
தன்னை பெண்விடுதலைக்கு குரல் கொடுப்பவராக்கவும் பெண்ணிய வாதியாகவும் உருவகப்படுத்து, சரவணன் தமிழீழ போராட்ட வரலாற்றில் ஆளுமை மிக்க பெண்களில் ஒருவரான தமிழினியை மிக மோசமாக வர்ணித்து ‘ கதை’ பின்னிய அகரமுதல்வனின் செயலை நான் ஒற்றைப்பாரவையில் பார்க்கிறேனாம்.
ஒரு கூர்வாளின் நிழலில் நூலில் சரணடைவும் சிறைச்சாலையும் என்ற அத்தியாயத்தில் தனது சிறை அனுபவங்களை சொல்லும் தமிழினி, தான் நேரடியாக ராணுவத்தில் சரணடைந்ததை பத்திரிகைகள் திரித்து தாஅன் விடுதலைப்புலிகள் இருந்ததை மறைத்து வவுனியா நலன்புரி முகாமில் இருந்ததாயும் தன்னை ராணுவம் கைது செய்ததெனவும் எழுதியிருந்தனர் என மனம் வருந்தி சொல்லியிருக்கிறார்( பக்கம் 236). அவர் சயனைட்டை ஏன் அருந்தவில்லை என்ற தமிழ் தேசியக்கூச்சல்களும் வந்ததெங்கிறார், ஒரு பெண் சிறை சென்று மீள்வதென்பது அவமானத்தை ஏற்படுத்தும் விடயமாகவும் விசாரணக்கு அழைத்து சென்றாலே மானமிழந்தவர்களாகவும் கருதும் சமூகம் இது என மனங்கலங்கி எழுதிய இப்பதிவை படு மோசமாக கொச்சைப்படுத்தி ‘சாகாள்’ என்ற ‘ படைப்பை ‘ உருவாக்கி, அதில் தமிழினியின் சொந்த பெயரை பயன்படுத்தி அவரை ராணுவம் தொடர்ச்சியாக பாலியல் வல்லுறவுக்காளாக்கி அவரை எய்ட்ஸ் நங்கி என அழைத்ததாக சொல்லி இறுதியில் அவர் புற்று நோயால் இறந்ததாக முடிகிறது அந்த கதை.
சாகாள் பற்றிய விமர்சனத்தில் அருள்மொழிவர்மன் சொல்கிறார் ( https://arunmozhivarman.com/2016/04/01) : சில பஞ்சாயத்து முறைகளில் பெண்கள் மீது பாலியல் வன்புணர்வு செய்வதை அவர்களுக்கான தண்டனையாக வழங்கும் வழக்கமிருப்பதை செய்திகளில் பார்த்து அதிர்ச்சியடந்திருக்கின்றோம். அவ்வாறான தண்டனையை வழங்கும் அதிகாரம் கைவரப்பெறாத அகரமுதல்வன் தன் எழுத்தினூடாக அந்தத் தண்டனையை சிவகாமி மீதும் சிவகாமியின் பெண்ணுடல் மீதும் நிகழ்த்தியிருப்பதன் விளைவே சாகாள். அதன் உச்சபட்ச விளைவே “எய்ட்ஸ் நங்கி” என்கிற எள்ளிநகையாடல்.
…..
அவர் மன்னிப்புக் கேட்கவேண்டும் என்று எழுந்த குரல், அவர்ப தன் தவறை உணரவேண்டும் எனபதற்காகவே அன்றி அவரை சிறுமைப்படுத்தவேண்டும் என்பதற்கானது அல்ல. துரதிஸ்ரவசமாக அகரமுதல்வன் அதனை உணராமல் இன்னமும் இனவெறியைத்தூண்டும் விதமாகவும் இலக்கியம் என்ற பெயரில் மிகமோசமான வெளிப்பாடுகளுடன் செயற்பட இருப்பதையே அவரது அகங்கார மௌனமும் அவருக்கு வழங்கப்படும் ஆதரவுகளும் காட்டுகின்றன
இவ்வாறான பெண்வெறுப்பும் இனவெறியும் கொண்ட ஒருவரின் படைப்பை ஒற்றைப்பார்வையில் பார்க்காமல் கடந்து போக சொல்கிறார் விளிம்பு நிலை மக்களுக்காகவும் பெண்களின் ஒடுக்கு முறைக்காகவும் குரல் கொடுப்பதாக சொல்லிக்கொண்டு தன்னை பெண்ணிய வாதியாகவும் காட்டிக்கொள்ளும் சரவணன். சரவணன் : கருத்துகளை கருத்துகளால் மோதுங்கள். காழ்ப்புணர்வால் அல்ல.

சாதியத்தின் நிர்ப்பந்தங்களும் நீட்சியும் | என் அனுபவத்திலிருந்து - சிவா சின்னப்பொடி


எனது ஊர் வடமராட்சியில் ஒரு காலத்தில் சாதிய கட்டமைப்பு இறுக்கமாக இருந்த புலோலி தெற்கில் ஒருபகுதியையும் துன்னாலை வடக்கின் ஒரு பகுதியையும் உள்ளடக்கிய வல்லிபுரக்குறிச்சி மற்றும் கொத்திய வத்தையாகும். குறிப்பாக சொல்வதானால் இது சாதிய கட்டமைப்பு இறுக்கமாக இருந்த ஊர்களால் சுற்றிவழைக்கப்பட்டிருந்த ஒரு சிறு கிராமமாகும்.

1974 ல் இந்த இரண்டு ஊர்களுக்கும் பொதுவான பெயராக 'சிங்கை நகர்' என்ற பெயரை பாவிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை நான் கொண்டுவந்தேன். அப்போது எழுத்துலகிலும் ஊடகத்துறையிலும் பிரவேசித்த 'நான் சிங்கைத் திவாகரன்' என்று எனது புனைபெயரை அமைத்துக்கொண்டேன்.1975 என்று நினைக்கிறேன் இந்தப் பெயரில் நான் எழுதிய 'இலட்சியங்கள் சாவதில்லை' என்ற சிறுகதைக்கு தேசிய இளைஞர் சேவை மன்றம் இலங்கை தழுவிய அளவில் நடத்திய சிறுகதைப் போட்டியில் முதற்பரிசு கிடைத்தது. இது எங்கள் ஊருக்கு கிடைத்த முதல் கௌரவமாக கருதப்பட்டது.இன்று கொத்தியவத்தை என்ற பெயர் எனது அண்ணர் தங்கவேலின் தீவிர முயற்சியால் சிங்கை நகர் என்று சட்டரீதியாக மாற்றம் பெற்றுவிட்டது.

1970 காலகட்டத்தில் எங்களுரில் ஏறக்குறைய 82 குடும்பங்கள் இருந்தன. இதில் ஒரு நான்கு குடும்பங்களை தவிர மற்ற அனைவரும் சீவல் தொழிலையே செய்தார்கள். இந்த தொழிலுக்குரிய பனை தென்னைகள் பெரும்பாலும் அயலூரிலுள்ள உயர்சாதியனருக்கு சொந்தமானதாக இருந்தது.அந்தக் காலகட்டத்தில் 20 பேர் வரை தான் ஓஎல் தாண்டிய கல்வியை கற்றிருந்தார்கள். ஏ எல் தாண்டிய கல்வியை கற்றது 5பேர். பட்டப்படிப்பு படித்தது 2 பேர். இதில் அரசு உத்தியோகங்களை பெற்றிருந்தது 12 பேர். அதில் எனது மாமா செல்லத்துரை(தற்போது டென்மார்க்கில் வசிக்கிறார்)தான் உயர் பதவியில் இருந்தவர்.அவர் கொழும்பு மத்திய தபாலகத்தில் தபாலதிபராக இருந்தார்.

ஏமது ஊரில் முதல் கலப்பு திருமணம் செய்தவர் எனது இன்னொரு மாமா பசுபதி.இவர் கொழும்பு பெண்ணை திருமணம் செய்திருந்தார். அவரது பிள்ளகைளும் தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு காத்திரமான பங்களிப்பை செய்திருந்தனர்.

.அடுத்து எனது அண்ணா (பெரிப்பாவின் மகன்)சிவபாதம்.ஆசிரியராக இவர் தமிழீழ தேசித்தலைவரின் இரத்த உறவு முறையான பெண்ணை காதலித்து திருமணம் செய்திருந்தார்..இவர் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முக்கிய பொறுப்பில் இருந்தவர்.இறுதி யுத்தத்தின் போது இராணுவத்iதால் கைது செய்யப்பட்டு காணாமல் போய்விட்டார்.இவரது மகன் அருண் தமிழீழ சட்டவாளராக இருந்தவர் இறுதியுத்தத்தில் எறிகணை வீச்சில் கொல்லப்பட்டு விட்டார். எனது அண்ணியும் ஒரு ஆசிரியை.ஒரு மகள் பாதுகாப்பு காரங்களுக்காக அவர் எந்த நாட்டில் இருக்கிறார் என்பதை நான் இங்கு குறிப்பிடவில்லை.

எனது இன்னொரு அண்ணர் தங்கவேல் அகிம்சைவாதி .தமிழரசுக்கட்சியின் தூண்களில் ஒருவர்.அறவழி போராட்ட குழுவின் முக்கிய செயற்பாட்டாளராக இருந்தவர். பனம்பொருள் அபவிருத்தி சபையின் மூத்த அதிகாரியாகவும் இருந்தவர்.எமது ஊரின் முன்னேற்றத்துக்கு தனது வழியில் பெரும்பங்காற்றியவர். அவரது மனைவியான எனது மூத்த அண்ணி மந்திகை அரசினர் மருத்துவமனையில் மிக நீண்டகாலம் மருத்துவராக இருந்து தற்போது ஓய்வு பெற்றுவிட்டார்.அவர்களுக்கு மூன்று பெண்கள் மூவரும் பட்டதாரிகள்.

எனது மைத்துணர் ஒருவர் தெங்கு பனம்பொருள் கூட்டுறவுச்சங்கத்தின் முகாமையானராக இருந்தவர் தற்போது இறந்துவிட்டார். அவரது மகன் தமிழீழ தேசியத்தலைவரின் மெய் பாதுகாப்பு பிரிவின் முக்கிய உறுப்பினராக இருந்தவர். (பாதுகாப்பு கருதி அவரின் பெயரை நான் இயங்கு குறிப்பிடவில்லை.

எனது அப்பா 1965க்கு முற்பட்ட காலகட்டத்திலும் எனது சித்தப்பா செல்லத்தம்பி 1960-1975 காலகட்டம் வரையிலும் எமது சமூக விடுதலைக்கான காத்திரமான பணிகளை செய்திருக்கிறார்கள்.எனது சித்தப்பாவின் மகன் எம்சி என்று அழைக்கப்படும் லோகநாதன் முதலில் புளொட்டில் இருந்ததவர் பின்னர் தீவிர இடதுசாரி செயற்பாட்டாளராக டென்மாரக்கில் இருந்து இறக்கும் வரை செயற்பட்டவர்.

ரவி நாராயணமூர்த்தி தேவராஜ் பகவத்சிங் இரத்தினமணி செல்லமணி (இன்னும் சிலரது பெயர்கள் விடுபட்டிருந்தால் மன்னிக்கவும் தகவல் தந்தால் இணைத்துக்கொள்கிறேன்) போன்றவர்கள் 1970 களில் எமது ஊர் மற்றும் சமூக முன்னேற்றத்துக்காக உழைத்தவர்கள்.

சாதியும் தீண்டாமையும்
1960 வரை எமது ஊரவர்கள் மீது தீண்டாமை என்பது மிக இறுக்கமாக கடைப்பிடிக்கப்பட்டது.சேட்டு போட முடியாது தோழில் சால்வை போட முடியாது. செருப்பு போட்டு வீதியில் நடக்க முடியாது.பிற்காலத்தில் தோழில் சால்வை பேட முடியும் என்றாலும் உயர்சாதியினர் வீதியில் வந்தால் அதை கக்கத்தில் எடுத்து வைத்துக்கொண்டு கும்பிடு போட்டு ஒதுங்கிச் செல்லவேண்டும்.பிணம் எரிக்க வேண்டும்.வீடுகளில் முற்றம் கூட்டவேண்டும். ஆடு மாட்டுக்கு ஓலை வெட்டிக் கிழித்துக்கொடுக்க வேண்டும், திருமணங்களில் கா காவவேண்டும். பனை தென்மரங்களில் கள்ளிறக்குவதற்கோ பதநீர் இறக்குவதற்கோ பயன்படுத்த வேண்டும் என்றால் ஒன்றவிட்ட ஒருநாள் வருமானத்தை அதாவது மாதத்தில் சரி அரவாசி நாள் வருமானத்தை 'வாரம்' என்ற பெயரில் அவர்களுக்கு கொடுக்க வேண்டும்.உயர் கல்வி கற்க முடியாது. ஆரம்ப பாடசாலைகளிலும் நேரடியாத தீண்டாமை பார்க்கப்பட்டது.எந்தக் கோவில்களுக்கும் உள்ளே சென்று வழிபட முடியாது. போத்தலில் தான் தண்ணீரும் தேநீரும் தரப்பட்டது. தட்டுவத்தில் தான் சாப்பிட வேண்டி இருந்து.பொது போக்குவரத்தில் ஆசனங்களில் அமரமுடியாது.பொது கிணறுகளிலும் தண்ணீர் அள்ள முடியாது.

1970 களில் எங்களது இளமைக்காலத்தில் இந்த நிலை மாறத் தொடங்கியது பிணம் எரிப்பதில்லை ,முற்றம் கூட்டுவதில்லை.நாங்கள் சேட்டுப் போட்டோம் டவுசர் அணிந்தோம்.கூழைக் கும்பிடு போட மறுத்தோம்.போத்திலில் தண்ணீரும் தேநீரும் குடிக்க மறுத்தோம்.தட்டுவத்தில் சாப்பிட மறுத்தோம்.அடக்குமறைகள் இருந்து கல்வியை கற்றோம்.

'நீங்கள் ஊத்தையங்கள்.நீங்கள் மூடர்கள். நீங்கள் அறிவில்லாதவல்கள். நீங்கள் இன்ன தொழிலைத்தான் செய்ய முடியும் மற்ற தொழிலைச் செய்யும் தகுதி உங்களுக்கு இல்லை. சாதி எண்டது பிறப்பால வருவது அது மாத்தேலாது.சாதி அடிப்படையில் நீங்கள் தாழ்ந்தவர்கள் நாங்கள் உயர்ந்தவர்கள். தாழ்ந்தவர்கள் தாழ்ந்தவர்களுக்கு விதிக்கப்பட்ட ஒழுங்கின்படி தான் நடக்க வேண்டும்.' என்ற சாதி வெறியர்களின் சமூக உளவியலை நாங்கள் புரிந்துகொண்டோம்.சாதி என்பது ஒரு சாக்கடை அதற்குள் உழலுவது எந்த மாற்றத்தையும் தராது என்பதையும் நாங்கள் புரிந்து கொண்டோம்.

தேநீர்கடைகளில் இரட்டை டம்ளர் அல்லது போத்திலில் தண்ணிர் தேநீர் தரும் முறையும் தட்டுவத்தில் அல்லது தாமரை இலையில் வெளியில் இருந்தி சாப்பாடு தரும் முறையும் (1965-70) ஒழிக்கப்பட்டது. வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில் சமத்துவத்துவ வழிபாட்டுக்கு அனுதிக்கப்பட்டது.அதன் சுற்றாடலில் இருந்த எல்லா மடங்களுக்குள் செல்லவும் அங்குள்ள எல்லாகிணறுகளிலும் தண்ணீர் அள்ளவும் அனுமதிக்கப்பட்டது.

தீண்டாமைக்கு எதிரான இடதுசாரிகளின் போராட்டம் 'ஒடுக்குபவனின் ஒடுக்குமுறையை ஒடுக்கப்படுபவன் மௌனமாக ஏற்றுக்கொண்டிருக்கும் வரை ஒடுக்குபவன் ஒடுக்கிக்கொண்டே இருப்பான். ஒடுக்கப்படுபவன் தனது ஒடுக்குமுறைக்கு எதிராக போராடுகின்ற பொழுதுதான் ஒடுக்குபவனின் ஒடுக்குமுறையை ஒழிக்க முடியும் என்ற உண்மையை எங்களுக்கு புரிய வைத்தது.அது எங்களுக்கு பெரும் உத்வேகத்தை தந்தது.

ஆனால் 70 களின் ஆரம்பத்தில் இடது சாரி இயக்கத்தின் ஒரு பகுதியினர் பௌத்த சிங்கள பேரினவாதிகளுடனனும் குறிப்பாக சிங்கள உழைக்கும் மக்களை ஒடுக்கும் சிங்கள அதிகார வர்க்கத்திடம் சரணடைந்துவிட, இன்னொரு பகுதியினர் செயலற்று தாங்களாகவே முடங்கிவிட அல்லது தங்களது செயற்பாடுகளை குறுகிய வட்டத்துக்குள் மட்டுப்படுத்திவிட நாங்கள் கைவிடப்பட்டவர்களாக உணர்ந்தோம்.

1983 க்கு பின்னர் ஏற்பட்ட மாற்றங்கள்
தமிழீழ விடுதலைப் போராட்டம் ஆரம்பமாகிய போது அது என்னையொத்த இளைஞர்களுக்கு ஒரு வெளிச்சத்தை தந்தது.ஏனென்றால் பௌத்த சிங்கள பேரினவாதம் என்பது ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும் மட்டுமல்ல சிங்கள உழைக்கும் மக்களுக்கும் எதிராக இருந்தது.சிங்கள அதிகாரவர்க்கம் தமிழ் மக்களுக்கு எதிரான பேரினவாதத்தை சிங்கள மக்களுக்கு ஊட்டி வளர்த்துவிடுவதன் மூலம் தங்களது ஈவிரக்கமற்ற சுரண்டல் அமைப்பையும் சமூக ஒடுக்குமுறையையும் நவீன வடிவத்தில் தக்க வைத்துக்கொண்டது.

இந்த பௌத்த சிங்கள பேரினவாதத்துக்கு எதிரான தமிழீழப் போராட்டம் ஆயுதப் போராட்டமாக உருவெடுத்த போது அதில் பங்கெடுத்த அனைத்து இயக்களுமே 'சேசலிசத்தமிழீழம்' என்ற கொள்கையை முன்வைத்தன.இது எங்களை ஈர்த்தது.

எங்கள் ஊரில் இருந்து நானும் எனது தம்பி எம்.சி.லோகநாதனும் புளொட்இயக்கத்தக்கு சென்றோம்.எனது அண்ணா சிவாபாதம் (அருள் மாஸட்டர்) உட்பட பலர் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு சென்றார்கள்.பாதுகாப்பு காரணங்களுக்காக அவர்களது பெயர்களை இங்கு குறிப்பிடவில்லை. இந்த இரண்டு இயக்கத்தையும் தவிர வேறெந்த இயக்கத்தக்கும் எங்கள் ஊரவர்கள் யாரும் செல்லவில்லை.

புளொட் இயக்கம் (1984) எங்களுரில் வாங்கிய சாப்பாட்டு பார்சலுக்கு நூல் கட்டி அதை ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த அயலூர் போராளிகளுக்கு கொடுத்ததை தவிர எமது ஊருக்கு எதுவும் செய்யவில்லை. இதை தட்டக் கேட்டதற்காக எனது தம்பி லோகநாதன் புளொட் கனவான்களால் அச்சுறுத்தப்பட்டான்.

எமது ஊரில் மிக முக்கியமான பிரச்சனையாக குழுச்சண்டைகள் இருந்தன.அண்ணன் தம்பிகள் தங்களுக்குள் சுடுபட்டு இறந்ததும்,ஆளையாள் வெட்டிக்கொலை செய்தததும் தொடர்கதையாக இருந்து வந்தது.இதை தீண்டாமை ஒழிப் போராட்டத்தால் தடுத்து நிறுத்த முடியவில்லை.

ஆனால் விடுதலைப்புலிகள் இயக்கம் இதை தடுத்துநிறுத்தியது. வெளியிலிருந்து குழுமோதலை தூண்டியிட்டு எமது ஊரை பிளவு படுத்தி அதில் குளிர்காய்ந்தவர்கள் பச்சை மட்டை அடிவாங்கி தப்பி ஓடினார்கள்.

அதேபோல் பனை தென்னை மரங்களை சீவல் தொழிலுக்கு பயன்படுத்தும் போது அதில் கிடைக்கும் வருவாயின் சரி அரைவாசிப்பகுதியை அந்த மரங்களின் உடைமையாளர்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற எழுதா சட்டம் விடுதலைப்புலிகளால் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.மரங்களை குத்தகை அடடிப்படையில் எடுக்கவும் அந்த குத்தகைப்பணம் என்பது அந்த மரங்களின் உற்பத்திப் பொருட்களின் பெறுமதியில் மூன்றில் ஒரு பகுதிக்கு கீழேயே இருக்கவேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

அதேபோல எமது மக்களின் வாழ்க்கையோடு இணைந்து தொங்கு பனம் பொருள் அபிவிருத்திச் சங்ககங்கள் அந்தக்காலகட்டத்தில் ஊழல் நிறைந்ததாக இருந்தது.ஒரு தொழிலாளி ஒரு நாளைக்கு 20 போத்தல் கள்ளை இறக்கி அந்த சங்கத்துக்கு கொடுத்தால் அந்த கள்ளு விற்கப்படாமல் ஊற்றப்பட்டுவிட்டது என்று கணக்கு காட்டி அரைவாசி கள்ளுக்குரிய பணமே வழங்கப்பட்டு வந்தது. அதற்கு பொறுப்பாக இருந்த பலர் அந்த கள்ளை விற்றுவிட்டு எஞ்சிய சொற்ப கள்ளுக்கு தண்ணீர் கலந்து அதன் அளவைக் கூட்டி ஊற்றிட்டு, விற்ற கள்ளின் பெறுமதியை தாங்கள் சுருட்டிக்கொண்டது நீண்டகாலமாக நடந்துவந்தது.இந்த மோசடியை விடுதலைப்புலிகள் தடுத்து நிறுத்தி எமது மக்களின் உழைப்பு எமது மக்களாலேயே சுரண்டப்படுவதை தடுத்து நிறுத்தினார்கள்.இதில் கடற்புலிகளின் தளபதி சூசை நேரடியாக சம்பந்தப்பட்டிருக்கிறார்.

புலம் பெயர்வு
எமது ஊரிலிருந்து வெளிநாடுகளுக்கு புலம் பெயர்வது 1970 களில் ஆரம்பித்துவிட்டாலும் பணப்பிரச்சனை காரணமாக எல்லோராலும் அது முடியமால் இருந்தது.

1983-84 ல் 22 குடும்பங்களை சேர்ந்த 32 பேர் ஐரோப்பிய நாடுகளுக்கு புலம் பெயர்ந்தனர். இதற்கு உதவியவர் அன்று பிரலமான பிரயாண முகவராக இரந்த எனது மாமா திருநாமம்.

சமூக மாற்றம்.
அன்று 82 குடும்பங்களாக இருந்த எமது ஊர் இன்று அங்கு 184 குடும்பங்களும் புலம் பெயர் நாடுகளில் 121 குடும்பங்களுமாக பெருகிவிட்டது.இன்று எமது ஊரில் 4 குடும்பங்களை தவிர மற்ற அனைத்து குடும்பங்களும் புலம்பெயர்நாட்டு தொடர்புடைய குடும்பங்களாக இருக்கின்றன.

முன்பு அயல் கிராமங்களில் நாங்கள் காணி வாங்க முடியாத நிலை இருந்தது.ஆனால் இன்று எமது கிரமத்தை ஒட்டிய எல்லைப்பகுதியில் இருந்த காணிகள் எல்லாம் எம்வர்களால் வாங்கப்பட்டு கிராம எல்லை விரிந்துவிட்டது.

அன்று ஒரு 50 ரூபா பணத்துக்காக உயர் சாதியினரின் வீடுகளுக்குச் சென்று மணிக்கணக்கில் தவமிருந்த நிலை இருந்தது.ஆனால் இன்று ஒரு மணி நேரத்தில் 50 ஆயிரம் ரூபா பணத்தை சுலபமாக புரட்டக் கூடிய அளவுக்கு எம்மவர்களின் பொருளாதார நிலை மாறிவிட்டது.இன்று அயலூரிலுள்ள உயர் சாதியனர் எம்மவர்களிடம் வட்டிக்கு பணம் வாங்குவது இயல்பான ஒன்றாக இருக்கிறது.

அன்று நாங்கள் கல்வி கற்க தடை இருந்தது. நாங்கள் புறக்கணிக்கப்பட்டோம், அவமானப்படுத்தப் பட்டோம்.ஆனால் இன்றைக்கு அந்த நிலைமை இல்லை.பருத்தித்துறை ஹாட்லிக்கல்லாரில் கல்வி கற்ற எங்களுர் சிறுவன் மகேந்திரன் சிவதர்சன் கண்மருத்துவம் மற்றும் எல்இடி தொழில் தொழில் நுட்பத்தில் புதிய கண்டுபிடிப்பொன்றை செய்து இளம் கண்டுபிடிப்பாளருக்கான விருதை பெற்றதுடன் அமெரிக்காவின் பெல்சில்வேனியாவுக்கு அழைத்து கௌரவிக்கப்பட்டிருக்கிறான்.

இலங்கையின் பல்வேறு பல்கலைகழகங்களில் பட்டம் பெற்றது உயர் கல்வி நிறுவனங்களில் டிப்ளோமே பெற்றது உட்பட 41 பேர் உர் கல்வி கற்றிருக்கிறர்கள்.புலம் பெயர் நாடுகளில் 112 பேர் பட்டப்படிப்பை முடித்திருக்கிறர்கள்.13 மருத்துவர்கள் 16 பொறியிலாளர்கள், 3 மருத்துவ விஞ்ஞானிகள் 6 உயர் நிறுவன அதிகாரிகள், 40 வரையிலான தொழில் நுட்பவிலாளர்கள் கல்வியாளர்கள் வழக்கறிஞர்கள் என்று எமது பிள்ளைகள் புதிய உச்சம் தொட்டிருக்கிறார்கள்.

எமது ஊரில் அரச உயரதிகாரிகளாகவும் ஊழியர்களாகவும் தனியார் நிறுவன அதிகாரிகளாகவும் தொழில் முனைவோராகவும் 120 பேர் இருக்கிறர்கள். 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஏஎல் தாண்டியிருக்கிறர்கள். பலர் பல்கலைகழக தெரிவுக்காக காத்திருக்கிறர்கள்.

இதைவிட முக்கியம் இன்று எமது ஊரில் 4 குடும்பங்கள் மட்டும் தான் சீPவல் தொழிலை செய்கின்றன.அதிலும் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் தான் அதை செய்கிறார்கள்.

சாதி எவ்வாறு உயிர் வாழ்கிறது.
எமது அயலூரிலுள்ள உயர் சாதி பெண்களையோ இளைஞர்களையோ எமது பெண்களும் இளைஞர்களும் காதலிக்க முடியாது திருமணம் செய்ய முடியாது. ஆனால் பிற ஊர்களை சேர்ந்த 6 பேரை எமது இளையேர் கலப்பு திருமணம் செய்திருக்கிறர்கள். எமது ஊரைச்சுற்றியுள்ள 5 கோவில் அதிகாரபூர்வமாக திறந்துவிடப்படவில்லை. அவற்றுக்குள் நமது இளைஞர்கள் சர்வசாதாரணமாக சென்றவருவதை சாதியின் பெயரைச் சொல்லி யாரும் தடுப்பதில்லை. அதிகாலையில் கோலுக்குச் சென்று பயபக்தியுடன் சாமி கும்பிட்டு சுண்டல் வாங்கிச் சாப்பிடும் மனநிலையில் நமது இளைய சமூகம் இல்லை.அவர்களது சிந்தனைதளம் விரிவடைந்துவிட்டது. அவர்களது இலக்குகள் வேறாக இருக்கின்றன. எங்களுரில் எங்களுக்கென்று ஒரு கோவில் கட்டப்படவில்லை என்பது ஒரு முக்கியமான விடயம். அதே போல முன்பு எங்களை சோடியம் என்று குறியட்டு பெயர் சொல்லி அழைத்த அதே மனோநிலையில் எங்கள் அயலூர் இளைஞர்கள் இன்று இல்லை. அவர்களில் பலர் எமது இளைஞர்களுடன் நண்பர்களாக இருக்கிறர்கள்.ஆனால் அவர்கள் தங்கள் வீடுகளுக்கு அவர்களை அழைத்துச் சென்று ஒன்றாக இருந்து உணவருந்த முடியாது.

இன்று எமது ஊர் சுற்றுவட்டத்தில் சாதி என்பது கலாச்சாரத்தளத்தில் தான் உயிர் வாழ்கிறது.பொருளாதாரம் மற்றும் சமூக கட்டுமானத்துக்கான பிடியையும் அதிகாரத்தையும் அது இழந்துவிட்டது.

எமது ஊரின் பொருளாதாரமும் அதிகாரமும் எங்கள் சொந்தக்கையிலே இருக்கிறது.எங்களை யாரும் எவரும் சாதியின் பெயரை சொல்லி அடிமைப்படுத்திவிட முடியாது. அரசியல் தளத்தில் கூட எனது அண்ணர் தங்க வேல் தமிழரசுக்கட்சியின் தூண்களில் ஒருவர். ஏற்கனவே அவர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டிருக்கிறர். பல இளைஞர்கள் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தமிழ் தேசிய கூட்டமைப்பு என்வற்றி செயற்பாட்டாளர்களாக இருக்கிறார்கள்.

இன்றைக்கு கிராமசேவகராக இருக்கும் எனது பெறா மகளை 'உன்னை யாரும் சாதிபார்த்து தொழில் ரீதியாக மட்டம் தட்டுவதில்லையா?' என்று கேட்டேன்.
'நான் என்னை சாதி ரீதியாக அடையாளப்படுத்தவில்லை. கல்வி ரீதியாகவே அடையாளப்படுத்துகிறேன். நான் ஒரு இரண்டை பட்தாரி. சட்டம்படித்தவள். சாதிகடந்து நான் எல்லா மக்களுக்காவும் செயற்படுகிறேன். என்னை மட்டம் தட்டுவதற்கு எதுவும் எல்லை. அப்படி யாராவது மட்டம் தட்டினால் அதை தாண்டிச் செல்லும் அறிவும் துணிச்சலும் எனக்கு இருகிறது'
என்று கூறினாள். இது தான் இன்றைய யதார்த்தம்.
பின்குறிப்பு:- ஏதே இந்திய ரேஞ்சுக்கு ஈழத்தில் தீண்டாமையும் சாதியும் இருக்கிறது என்று நிறுவதற்கு லண்டனிலும் பாரிசிலும் இருந்து கொண்டு பூதக்கண்ணாடி வைத்து தேடிக்கொண்டிருப்பவர்கள் எமது ஊருக்கு நேரடியாகச் சென்று கள ஆய்வு செய்யலாம். அப்படி விரும்பினால் அதற்கான தொடர்புகளை நான் ஏற்படுத்தி தருவேன்.
அடுத்து இப்போது இந்த முக நூலில் ஏதோ ஏதெற்கெல்லாம் சலெஞ் வைக்க்pறார்கள, நான் எனது நண்பர்களையும் என்னை நேசிக்கும் இளைய தலைமுறையினரையும் அழைக்கிறேன். வாரம் ஒரு முறை ஒரு ஊர் என்ற அடிப்படையில் உங்கள் ஊரைப்பற்றி எழுதுங்கள்.
எமது வடமராட்சி பிரதேசத்தில் பெரும் பாச்சலுக்கு உள்ளான ஒரு ஊர் கூவில்.அந்த ஊர் தம்பிகளை முதலில் அழைக்கிறேன் அடுத்த வாரம் உங்கள் ஊரைப்பற்றி அது அடைத்திருக்கும் வியத்தகு மாற்றம் பற்றி எழுதுங்கள்.

சிவா சின்னப்பொடி அவர்களின் முகநூல் பதிவிலிருந்து  நன்றியுடன் பகிரப்படுகிறது.
 

இணைந்திருங்கள்


Followers

Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates