டொனமூர் காலம் வரை இலங்கையில் 4% வீதத்தினருக்கு மாத்திரமே வாக்களிக்கும் உரிமை இருந்தது. படித்த, வசதி படைத்த ஆண்களிடமே அந்த உரிமை இருந்தது.
டொனமூர் அரசியல் திட்டத்தை எதிர்ப்பதற்கு ஆளாளுக்கு வெவ்வேறு காரணங்கள் இருந்தபோதும் சர்வஜன வாக்குரிமைக்கு எதிரான வாக்குகளும் இதில் அடக்கம் என்பது இதில் கவனிக்கத்தக்கது.
01.11.1928 அன்று அரச சபையில் நிகழ்ந்த விவாதத்தின் போது பெண்களுக்கும், படிக்காதவர்களும், வசதிபடைக்காதவர்களுக்கும் வாக்குரிமை அளிப்பது முட்டாள்தனம் என்றார் சேர் பொன் இராமநாதன். அதுமட்டுமன்றி அவர் டொனமூர் கமிஷன் முன் தமிழர் மகா சபை சார்பில் சாட்சியளிக்கையில் இலங்கைக்கு தன்னாட்சி அளிப்பதை தான் எதிர்ப்பதாகக் கூறினார். இலங்கை சுயாட்சியை அனுபவிக்குமளவுக்கு முதிர்ச்சிபெறவில்லை என்றார்.
அதே நாள் விவாதத்தில் ஈ.ஆர்.தம்பிமுத்துவும் படிக்காதவர்களுக்கு வாக்குரிமை அளிக்கப்படக்கூடாது என்று விவாதித்தார்.
இராமநாதன் ஏன் சர்வஜன வாக்குரிமையை எதிர்த்தார் என்பதை நாமறிவோம். அதேவேளை இனவாத தரப்பில் வேறு ஒரு அர்த்தத்தை தொடர்ந்தும் பதிவு செய்து வந்திருப்பதை பல்வேறு நூல்களிலும் காண முடிகிறது. சிங்களத்தில் பல அரசியல் நூல்களை எழுதிய W.A.அபேசிங்க தனது “டொனமூர் அறியலமைப்பு” என்கிற நூலில் இப்படி குறிப்பிடுகிறார்.
“படித்தவர்களுக்கு வாக்குரிமையை மட்டுப்படுத்த வேண்டும் என்று பொன்னம்பலம் கருதியதற்குப் பின்னால் தமிழர்களுக்கு சாதகமான அரசியல் நலனே இருந்திருக்கிறது. ஏனென்றால் தெட்டத்தெளிவாக அன்றைய நிலையில் கல்வியில் சிங்களவர்களை விட முன்னேறிய நிலையிலேயே தமிழர்கள் இருந்தார்கள்.”
அன்றைய சிவில் சேவைத்துறையில் அதிகமாக இருந்த தமிழர்களின் இடத்தை சிங்களவர்கள் பிடித்துவிடுவார்கள் என்கிற பீதியிலேயே அவர் அப்படிச் செய்தார் என்கிற பதிவுகளை பல இனவாத கட்டுரைகளிலும் நூல்களிலும் காண முடிகிறது.
அதேவேளை இராமநாதன் வாக்குரிமையை எதிர்த்து சட்டசபையில் உரையாற்றியதோடு நில்லாமல் கட்டுரைகளை எழுதினர். கூட்டங்களை நடத்தினார். பலரையும் பேசி சரிகட்ட முயற்சித்தார். இறுதியில் டொனமூர் திட்டம் நிறைவேற்றப்பட்டு சர்வஜன வாக்குரிமையும் அதில் அங்கீகரிக்கப்பட்டதனால் அவர் ஏமாற்றமடைந்தார். குடியேற்ற அமைச்சருக்கு மேலதிக அதிகாரம் இருந்ததால் இங்கிலாந்து சென்று முறையிட்டு இதனை மாற்றலாம் என்று நம்பினார். அவர் விரிவாக ஒரு முறைப்பாட்டு அறிக்கையை தயாரித்துக் கொண்டு 10.05.1930 அன்று இங்கிலாந்தை நோக்கிப் புறப்பட்டார். அதனை 27.06.1930 அன்று அங்கு சமர்பித்தார். அந்த அறிக்கையை (Memorandum of Sir Ponnambalam Ramanathan on the recommendations of the Donoughmore Commission) இன்றும் பல அரசியல் விமர்சகர்கள் பயன்படுத்துவதைக் காணலாம்.
“It would be ruinous to introduce Universal Suffrage in Ceylon at that stage.”
“இந்த சமயத்தில் வாக்குரிமையை அறிமுகப்படுத்துவது இலங்கைக்கு கேடு விளைவிக்கும்” என்று அதில் வலியுறுத்தினார்.
தொகுதிவாரி பிரதிநிதித்துவத்துக்காக பெரும்பான்மை சிறுபான்மை கட்சிகளுக்குள் சர்ச்சை தலை தூக்கியிருந்த சமயம் அது.
12.12.1929 அன்று அரச சபையில் இறுதி வாக்கெடுப்பு நிகழ்ந்தபோது நூலிலையில் டொனமூர் திட்டம் தப்பித்தது. டொனமூர் அரசியல் திட்டம் வெறும் 2 வாக்குகள் வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்றது. 19வாக்குகள் ஆதரவாகவும், 17வாக்குகள் எதிராகவும் அளிக்கப்பட்டன. ஆதரவளித்தவர்களில் 13 சிங்களவர்கள் இருந்தார்கள். ஒரே ஒரு தமிழர் தான் ஆதரித்திருந்தார். எதிர்த்த 17 பேரில் இரண்டு சிங்களவர்கள், எட்டு இலங்கைத் தமிழர், இந்தியத் தமிழர் இருவர், மூன்று முஸ்லிம்கள், இரு பறங்கியர் ஆவர்.
12.12.1929 டொனமூர் திட்டத்தின் இறுதி வாக்களிப்பு
எதிர்த்து வாக்களித்த இரு சிங்களவர்களும் சுதேசிகளுக்கு போதிய அதிகாரங்கள் வழங்கப்படவில்லை என்கிற நிலைப்பாட்டில் இருந்து எதிர்த்திருந்தார்கள்.
இலங்கை தேசிய காங்கிரசைச் சேர்ந்த சக உறுப்பினர்கள் இதனை ஆதரித்தார்கள் என்பதற்காக அதன் தலைவர் ஈ.டபிள்யு பெரேரா அதிலிருந்து விலகி All Ceylon Liberal League என்கிற கட்சியைத் தொடங்கினார். அவர் இனவாரி பிரதிநிதித்துவத்தை நீக்கி பிரதேசவாரி பிரதிநிதித்துவத்தை வலியுறுத்தி வந்தார். வாக்களிப்பில் எதிர்த்து வாக்களித்த இன்னொரு சிங்களவரான சீ.டபிள்யு.டபிள்யு.கன்னங்கர டொனமூர் திட்டத்தின் கீழ் உருவான ஆட்சியில் கல்வித்துறைக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டார்.
டொனமூர் பரிந்துரைகளை எதிர்த்து அதிகம் அன்று பேசியவரான சேர் பொன் இராமநாதன் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை எதிர்த்து மணிக்கணக்காக உரையாற்றியிருக்கிறார்.
“நான் 1879இலிருந்து இன்று வரை சட்டசபையில் இருந்து வருகிறேன். இது வரை வகுப்புவாரி பிரதிநிதித்துவம் பாதகமாக இருந்ததில்லை. நான் தமிழ் சைவர்களுக்கும், தமிழ் கிறிஸ்தவர்களுக்கும், சோனகருக்கும், மலாயருக்கும் பிரதிநிதித்துவம் வகித்திருக்கிறேன்” என்றார்.
டொனமூர் பௌத்தர்கள்
காலனித்துவ காலத்தில் கிறிஸ்தவர்களாக மதத்தையும் பெயர்களையும் மாற்றிக்கொண்டவர்கள் அரசியல் பிரமுகர்கள் பலர் சிங்கள பௌத்த சித்தாந்தத்தின் செல்வாக்கு தலைதூக்கியவேளை மீண்டும் இந்தக் காலப்பகுதியில் பௌத்த மதத்துக்கு மாறினார்கள். 1930களில் இந்தப் போக்கை அதிகமாகக் காண முடிந்தது. அவர்களை டொனமூர் பௌத்தர்கள் (Donoughmore Buddhists) என்றும் அரசியல் ஆய்வாளர்கள் பலர் அழைப்பதுண்டு. அப்படி மீண்டும் பௌத்தத்துக்கு மாறியவர்களில் ஒருவர் எ.டபிள்யு.ஆர்.டிண்டாரநாயக்க. காலனித்துவ மொழி – மத -பெயர்களின் அந்தஸ்து செல்வாக்கிழந்து அந்த இடத்தை சிங்கள பௌத்த அடையாளங்களும் பெருமிதங்களும் பிரதியீடு செய்யத் தொடங்கிய வேளை இலங்கையின் அடையாள அரசியலின் முகிழ்ப்புக்கு வலு சேர்ந்தது.
1934ஆம் ஆண்டு வெசாக் பண்டிகையை முன்னிட்டு “சிங்கள பௌத்தயா” பத்திரிகை 80 பக்கங்களில் வெளிவந்தது. அதில் பண்டாரநாயக்கா “நான் ஏன் பௌத்தனானேன்” என்கிற தலைப்பில் கட்டுரை எழுதினார். ஜே.ஆர்.ஜயவர்தனவும் அதே தலைப்பில் எழுதியது கைநூலாக வெளிவந்தது.
ஏற்கெனவே இலங்கையின் பௌத்த மறுமலர்ச்சிக்கு பாரிய பங்கை ஆற்றியவர் ஏ.ஈ.புல்ஜன்ஸ் (A. E. Buultjens 1865 – 1916) 1889இல் இதே தலைப்பில் (Why I Became a Buddhist) ஆற்றிய உரை பின்னர் கைநூலாகவும் வெளியானது.
இவ்வாறு பௌத்தத்துக்கு மாறுவது ஒரு பேஷனாக உருவெடுத்த காலம். கூடவே இனத்துவமும் சாதியமும் வர்க்கமும் சேரும் போது அதற்கான சமூகப்பெறுமதி அதைவிட அதிகம் என்று நம்பினார்கள்.
பண்டாரநாயக்கா டொனமூர் திட்டத்திற்கு எதிர்த்து வாக்களித்தார் என்கிற தொணியில் பல்வேறு சிங்கள கட்டுரைகளைக் கவனிக்கக் கூடியதாக இருக்கிறது. இறுதி வாக்கெடுப்பில் அவர் கலந்துகொள்ளவில்லை என்பது தான் உண்மை. ஆனால் ஆணைக்குழுவை சந்தித்து வாக்குரிமையானது கல்வி, சொத்து, பால்நிலை என்பவற்றின் அடிப்படையில் மட்டுப்படுத்தத் தான் வேண்டும் என்றே கோரிக்கை விடுத்தார்.
டொனமூர் ஆணைக்குழு அறிக்கையின் மீதான விவாதம் தொடர்ந்து பல நாட்கள் பல தலைப்புகளில் அரச சபையில் நிகழ்ந்தன. ஒவ்வொரு தனித் தனி விவாகரங்களின் மீதும் தனித் தனியாக வாக்கெடுப்பு நடத்தப்பட்டன. ஆனால் இடைநடுவில் குறிக்கிட்ட குடியேற்றச் செயலாளர் முர்ச்சிசன் பிளாட்ச்சர் (Murchison Fletcher) அன்றைய குடியேற்ற அமைச்சரின் செய்தியொன்றை அங்கு படித்துக் காட்டினார். அதன் படி
“டொனமூரின் அறிக்கையில் திருத்தங்களோ, மாற்றங்களோ செய்யப்படக்கூடாது என்றும், அதனை முழுமையாக ஏற்றுக்கொள்வதா அல்லது நிராகரிப்பதா என்பது பற்றி மட்டுமே தீர்மானம் எடுக்க வேண்டும்”
என்று ஆணையிடப்பட்டிருந்தது.
அதுவரை ஆராய்ந்து நிறைவேற்றப்பட்ட தீமானங்களை எடுத்துக்காட்டி விளக்கினால் குடியேற்ற அமைச்சர் நிராகரிக்கமாட்டார் என்று சேர் பொன்னம்பலம் இராமநாதன் 05.12.1929 தொடர்ந்தும் வாதிட்டார். இறுதியில் டொனமூர் திட்டத்திற்கு இருந்த எதிர்ப்புகள் குறித்து ஆளுநர் ஸ்டான்லி குடியேற்ற அமைச்சர் பஸ்வீல்ட் பிரபுக்கு (Lord Passfield) தெரிவித்தார். அவற்றை ஆராய்ந்த பஸ்வீல்ட் டொனமூர் திட்டத்தில் சில மாற்றங்களைச் செய்தார்.
அந்த மாற்றங்களின் படி
1. பெண்களின் வாக்குரிமை வயது 30 இலிருந்து 21 ஆக மாற்றப்பட்டது. (ஆண்களுக்கு வழங்கப்பட்டது போலவே)
2. 65 அங்கத்தவர்கள் தெரிவு செய்யப்படலாம் என்பதை மாற்றி 50ஆக குறைத்ததுடன், நியமன உறுப்பினர்கள் 12 பேரின் எண்ணிகையை 8 ஆக குறைத்தார்.
அரசாங்க சபைக் கூட்டங்களை கொழும்பில் மட்டுமன்றி கண்டி மற்றும் யாழ்ப்பாணத்திலும் நடத்தலாம் என்கிற பரிந்துரையை நடைமுறைப்படுத்தலாம் என்று மாற்றினார்.
இதில் மூன்றாவதாகக் கூறிய காரணி முன்னைய இராஜதானிகள் இருந்த இடங்களில் அரசாங்க சபைக் கூட்டங்களைக் கூட்டுவதன் மூலம் இனத்துவ கெடுபிடி நிலைமையை சமநிலைப்படுத்தலாம் என்று அவர் கருதினார் எனலாம்.
டொனமூர் திட்டத்தை எப்படியும் இலங்கையர் தலையில் திணித்துவிடுவதற்கு ஆளுநர் பல்வேறு வழிகளிலும் முயற்சித்தார். அதற்கு இருக்கும் எதிர்ப்பு நிலையை உணர்ந்த அவர் அது தோற்கடிப்பட்டுவிடும் ஆபத்தை உணர்ந்தார். அதற்காக அரசாங்க சபை உறுப்பினர்களை தனிப்பட அழைத்து சந்தித்து நட்புடன் சரிகட்ட முயற்சித்தார். தனது அந்த முயற்சி பலனளிக்கவில்லை என்று குடியேற்ற அமைச்சருக்கும் எழுதினார்.
இந்திய வம்சாவழித் தமிழரின் வாக்குரிமையை கட்டுப்படுத்தினால் சிங்களப் பிரமுகர்கள் சர்வசன வாக்குரிமையுடன் சேர்த்து டொனமூர் திட்டத்தை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருந்தார்கள்.
மனிங் சீர்திருத்தக் காலத்திலேயே இனத்துவ ரீதியில் பிரித்தாளும் சூழ்ச்சியை கச்சிதமாக அரங்கேற்றப்பட்டிருந்தது. சிங்கள, தமிழர், முஸ்லிம்களுக்கு இடையில் மாத்திரமல்ல சிங்களவர்களுக்குள்ளும் கரையோரச் சிங்களவர் – கண்டியச் சிங்களவர் ஆகியோருக்கிடையில் பிரதிநிதித்துவச் சண்டையை மூட்டி அவர்களின் அடையாளங்கள் தூண்டப்படுவதற்கு வழிசமைத்தனர். டொனமூர் ஆணைகுழு விசாரணையில் இதன் விளைவை அப்பட்டமாக காண முடிந்தது.
அதுபோல இந்திய வம்சாவழித் தமிழர்களின் பிரதிநிதித்துவமும் சுதேசிகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தயிருந்தது. சவரஜன வாக்குரிமையின் பலன்களை அவர்களும் அனுபவிக்கப் போகிறார்கள் என்பதை அவர்களால் சகிக்க முடியாதிருந்தது. தொழிற் கட்சியின் தலைவர் ஏ.ஈ.குணசிங்க டொனமூர் திட்டத்தை எதிர்த்து நின்ற போதும் சர்வஜன வாக்குரிமையை ஆதரித்திருந்தார். இலங்கை தேசிய காங்கிரசைச் சேர்ந்தவர்களோ சர்வஜன வாக்குரிமையை எதிர்த்தே நின்றார்கள். பெரும்பாலான சிங்கள உறுப்பினர்கள் இந்திய வம்சாவளியினர் வாக்குரிமை அனுபவிக்க முடியாதபடி செய்தால் சர்வஜன வாக்குரிமையை ஆதரிக்கத் தயாராக இருந்தார்கள் என்பதை பல வரலாற்று ஆய்வாளர்களும் குறிப்பிடவே செய்திருக்கிறார்கள்.
அடையாள அரசியலின் ஆரம்பம் என்றும் கூட இந்தக் காலத்தைக் குறிப்பிடுவது வழக்கம்.
டொனமூர் குழுவினர் இரண்டு மாதங்கள் மட்டுமே இலங்கையில் தங்கியிருந்து விசாரணைகளை முடித்துக்கொண்டு திரும்பினர். டொனமூர் அறிக்கையில் கூறுவது போல
“27.10.1927 அன்று நாங்கள் இங்கிலாந்தை விட்டு புறப்பட்டோம். நவம்பர் 13 அன்று இலங்கையை சென்றடைந்தோம். 18.01.1928 வரை அங்கு தங்கியிருந்த நாங்கள் பெப்ரவரி 04 அன்று இங்கிலாந்து சேர்ந்தோம்.” என்கிறது.
சாட்சிகளைப் பதிவிடும் பணிகள் 34 தடவைகள் நிகழ்ந்திருக்கின்றன. கொழும்பில் அதிகமாகவும் கண்டி, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, காலி மற்றும் மலையகத்திலும் பொதுமக்கள், மற்றும் பொது அமைப்புகளின் சாட்சியங்களைப் பதிவு செய்திருக்கிறார்கள். கூடவே இலங்கையைப் பற்றிய அறிதலுக்காக பல்வேறு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கும் பிரயாணம் செய்ததும் இந்த இரண்டு மாதங்களுக்குள் தான். 12-14 டிசம்பர் 1927 வரையான மூன்று நாட்கள் யாழ்ப்பாணத்தில் இருந்திருக்கிறார்கள். அடுத்த இரு நாட்கள் மட்டக்களப்பில் சந்திப்புகளை நடத்தியிருக்கிறார்கள். தமது பரிந்துரைகளை ஆணைக்குழு அறிக்கையாக ஐந்து மாதங்களின் பின்னர் 26.06.1928 அன்று காலனித்துவ செயலாளரிடம் ஒப்படைத்தார்கள்.
இரண்டே வாக்குகள் வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்ட டொனமூர் திட்டமானது அதனை எதிர்த்த தமிழர்களால் மட்டுமல்ல அதனை வெறுத்த ஏனைய இனத்தவர்களாலும் அதன் நடைமுறைப்படுத்தலை தடுக்க முடியவில்லை.
நன்றி - தினக்குரல்