நீலமலை மாவட்ட, குன்னூர் த மு எ ச கிளை நடத்தும் "இலக்கிய மாலை" மே மாத நிகழ்வில், நீலகிரி மலையக மக்கள் மறுவாழ்வு மன்றமும் மதுரை அயோத்திதாசர் ஆய்வு நடுவம் அமைப்பும் இணைந்து ஆவணப்படத் திரையிடலையும் புத்தக வெளியீட்டையும் நடத்தின.
தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் அவலமான வாழ்வியல் அனுபவங்களைப் பதிவுசெய்துள்ள எரியும் பனிக்காடு என்ற மொழிபெயர்ப்பு நாவலை எழுத்தாளர் எஸ்.வி. ராஜதுரை வெளியிட அதை மலையக மக்கள் மறு வாழ்வு மன்றத் தலைவர் மதிவாகனம் பெற்றுக்கொண்டார். எரியும் பனிக்காடு நாவல் குறித்து எஸ்.வி. ராஜதுரை நீண்ட மதிப்புரை வழங்கினார். அதைத் தொடர்ந்து 'க. அயோத்திதாசர்' ஆவணப்படம் திரையிடப்பட்டது.
சாதி எதிர்ப்பு, சமூக சீர்திருத்தம், வேத பிராமணிய மறுப்பு, பகுத்தறிவு, தமிழியல் உணர்வு, பிரதிநிதித்துவ அரசியல் போன்ற கொள்கைகளைத் தமிழன் இதழ்கள் மூலம் உரையாடியவர் அயோத்திதாசர். அவரது அனைத்து நூல்களை நாட்டுடமையாக்கியமைக்காகத் தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. அதே வேளையில் சென்றாண்டு பட்ஜெட் தாக்கலின்போது அயோத்திதாசரின் தமிழன் இதழ் நூற்றாண்டு விழாவைத் தமிழக அரசு கொண்டாடும் என அறிவித்தும் அது குறித்து யாரும் கேள்விகூட எழுப்பவில்லையே ஏன் எனும் கேள்வி எழுந்தது.
இந்நிகழ்வை நீலமலை மாவட்ட த மு எ ச தலைவர் பத்ரி ஒருங்கிணைத்தார். 'க. அயோத்திதாசர்' ஆவணப்படத்தின் இயக்குநர் பாரி. செழியனும் பார்வையாளர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
அயோத்திதாசரின் பேரன் அசோகன் தன்னுடைய நன்றியுரையில் "பண்டிதர் அயோத்திதாசர் வாழ்ந்த இல்லம் ஊட்டி குரும்பாடி, காந்தள் பகுதியில் குட்டிச் சுவராகச் சிதிலமடைந்துள்ளது. அவர் தொடங்கிய 'துளசி மாடம்' இன்று இந்துத்துவவாதிகளிடம் இருக்கிறது. தமிழக அரசு அதை மீட்டு, அயோத்திதாசரின் நினைவுச் சின்னமாக அறிவிக்க வேண்டுமெனத் தமிழக அரசுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்தார்.
நன்றி - காலச்சுவடு
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...