Headlines News :

காணொளி

ஜனாதிபதி விருது

ஜனாதிபதி விருது
நமது மலையகத்துக்கு

சுவடி

டொமினிக் ஜீவாவுக்கு என் இறுதி அஞ்சலி - எம். ஏ. நுஃமான்

தனது 94ஆவது வயதில் நண்பர் டொமினிக் ஜீவா இன்று மறைந்த செய்தி மனதைச் சஞ்சலப்படுத்துகின்றது. கடந்த சுமார் ஐந்து ஆண்டுகளாக ஜீவா முதுமையின் அரவணைப்பில், நினைவு இழப்பில் வீடு அடங்கியிருந்தார். அந்த நிலையில் ஜீவாவைப் போய்ப் பார்க்கும் மன ஓர்மை எனக்கு இருக்கவில்லை. இன்று அவரது மறைவு அதிலிருந்து அவருக்கு விடுதலை வழங்கியிருக்கிறது. கடந்த சுமார் எழுபது ஆண்டுகால ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாற்றுடன் ஜீவாவும் பின்னிப்பிணைந்து வளர்ந்தவர். தமிழ் உலகு எங்கும் நன்கு அறியப்பட்டவர். வாழ்த்துகளும், பரிசுகளும் பாராட்டுகளும் பெற்றவர். அவருடைய வாழ்வு முழுநிறைவானது. ஒன்பது ஆண்டுகளுக்குமுன் ஜீவாவின் 85ஆவது பிறந்த நாளை ஒட்டி ஞானம் இதழில் நான் எழுதிய கட்டுரையை அவருக்கு என் இறுதி அஞ்சலியாக இங்கு மீள்பதிவு செய்கிறேன்.

…….. …….

டொமினிக் ஜீவாவுக்கு 85 வயதாகிறது. கலை இலக்கிய நண்பர்கள் அவரது எண்பத்தைந்தாவது பிறந்தநாளை கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் 27.06.2011 கொண்டாடினார்கள். 18.06.2011ல் பேராசிரியர் கா. சிவத்தம்பியின் எண்பதாவது பிறந்த நாளை முன்னிட்டு கரவை விக்னேஸ்வரா கல்லூரி பழைய மாணவர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த நூல் வெளியீட்டு விழாவில் ஜீவாவைச் சந்தித்தேன். வழக்கம்போல் அன்போடு விசாரித்தார். மல்லிகை இதழ்களோடு அழகாக அச்சிட்ட ஒரு அழைப்பிதழையும் நீட்டினார். அது அவரது பிறந்த நாள் சந்திப்பு அழைப்பிதழ். எட்டுப் பக்கங்களில், ஒவ்வொரு பக்கத்திலும் ஜீவாவின் வெவ்வேறு முகத் தோற்றத்துடன், ஜீவமொழிகள் பொறிக்கப்பட்ட அழைப்பிதழ். இம்முறை கட்டாயம் இந்நிகழ்வில் கலந்துகொள்ள வேண்டும் என்று நினைத்தேன். எனினும் முடியவில்லை. ஆகையால் இக்குறிப்பை எழுதுகிறேன்.

ஜீவாவுக்கு எண்பத்தைந்து வயது என்பதை நம்பமுடியாது. அவரது ஆரோக்கியம் அப்படி. இன்னும் அதே வெள்ளை நெனல் வேட்டியுடன் கைகளை அகல விரித்து நிமிர்ந்து நடக்கிறார். இளமை மிடுக்கின் சுவடுகள் இன்னும் மறைந்துவிடவில்லை. தீவிர இலக்கியச் செயற்பாட்டாளராக, நான்கு தசாப்தங்களுக்கு மேலாக தொடர்ந்தும் மல்லிகை ஆசிரியராக அர்ப்பணிப்புடன் இயங்குகிறார். நினைவாற்றலும் செயற் துடிப்பும் மங்கிவிடவில்லை. உங்கள் இளமையின் ரகசியம் என்ன என்று வேடிக்கையாக மல்லிகை தூண்டில் பகுதிக்கு ஒரு கேள்வி அனுப்பலாம் என்று சிலவேளை நாங்கள் சில நண்பர்கள் சந்திக்கும் போது  பேசிக்கொண்டதுண்டு. அதற்கு அவர் சொல்லக் கூடிய விடைகளை நினைத்துப் பார்த்துச் சிரித்ததும் உண்டு. ஜீவாவின் ஆரோக்கியத்தின் அடிப்படை அவரது வாழ்க்கை முறைதான் என்று நினைக்கிறேன். அவர் தன் வாழ்க்கையை கட்டுதிட்டமான சில ஒழுங்குமுறைகளுக்குள் அமைத்துக்கொண்டவர். தற்துணிபும் தன்னம்பிக்கையும் அவரை வழிநடத்தின. ஒரு இலக்கியவாதி என்ற வகையில் அவரது வாழ்வு நிறைவானது. இதில் அவருக்கு ஒரு சுயதிருப்தி இருப்பது அவரது ஒவ்வொரு எழுத்திலும் வெளிப்படக் காணலாம்.

நான் ஜீவாவை முதல்முதல் சந்தித்தது 1965 டிசம்பரில் என்று நினைக்கிறேன். அப்போதுதான் நீலாவணனுடன் முதல்முதல் நான் யாழ்ப்பாணம் போயிருந்தேன். அப்போது மல்லிகை வெளிவரத் தொடங்கியிருக்கவில்லை என்று நினைக்கிறேன். கஸ்தூரியார் வீதியில் ஜீவாவின் தொழிலகத்தில் அவரைச் சந்தித்துச் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தேன். என்ன பேசினோம் என்பது இப்போது நினைவில்லை. ஜீவா ஒருவருக்கு சிகையலங்காரம் செய்துகொண்டே என்னுடன் உரையாடியது இன்றும் நினைவிருக்கிறது. அப்போது நான் இலக்கிய உலகுக்குப் புதியவன். ஜீவா என்னைப் பற்றி அதிகம் அறிந்திருக்க முடியாது. 1970களின் தொடக்கத்தில் கைலாசபதியின் தலைமையில் சாகித்திய மண்டல உறுப்பினர்களாகச் செயற்பட்டபோதுதான் நாங்கள் நெருங்கிப் பழகும் சந்தர்ப்பம் கிடைத்தது. நாவலப் பிட்டியிலும் கல்முனையிலும் இலக்கிய விழாக்களை நாம் இணைந்து நடத்தியிருக்கிறோம். அக்காலகட்டத்தில்தான் நான் மல்லிகையில் அடிக்கடி எழுதினேன். 1976ல் நான் யாழ் பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராக இணைந்தபின் மல்லிகை அலுவலகத்திலும், வெளியிலும் அவரை அடிக்கடி சந்திக்கும் வாய்ப்புகள் இருந்தன. மல்லிகையைத் தருவதற்காக என் வீட்டுக்கும் அவர் சில தடவைகள் வந்திருக்கிறார். 1990ல் நான் யாழ்ப்பாணத்தை விட்டுப் புலம்பெயரும்வரை இச் சந்திப்பு நீடித்தது. பின்னர் ஜீவாவும் அநேகரைப்போல் கொழும்புக்குப் புலம்பெயர்ந்தார். அதன்பின் அடிக்கடி இல்லாவிட்டாலும் இடைக்கிடை அவரைச் சந்திக்கும் வாய்ப்புகள் கிடைக்கின்றன.

ஜீவாவுக்கும் எனக்குமிடையே சில ஊமை முரண்பாடுகள் இருந்தபோதும் அவை பகை முரண்பாடுகள் அல்ல, நட்புரீதியான, விமர்சனரீதியான முரண்பாடுகள்தான். நான் நீண்டகாலமாக மல்லிகைக்கு எழுதுவதில்லை என ஜீவாவுக்கு என்மீது வருத்தம் உண்டு. மல்லிகைக்கு மட்டுமல்ல ஏனைய பத்திரிகைகளுக்கும் நான் அதிகம் எழுதுவதில்லை. அதற்கு உள்நோக்கம் எதுவும் இல்லை. நான் இப்போதெல்லாம் அதிகம் எழுதுவதில்லை என்பதுதான் அதற்குரிய ஒரே காரணம். 

ஜீவா கொழும்புக்கு வந்தபின்னர் மல்லிகை அட்டையில் எனது படமும் இடம்பெற வேண்டும் என்று விரும்பினார். கொழும்பில் சந்திக்கும் போதெல்லாம் வற்புறுத்தி எனது படம் ஒன்றை அனுப்பவேண்டும் என்று கேட்பார். நானும் அனுப்புவதாகச் சொல்லிவிட்டுச் செல்வேன், பிறகு மறந்துவிடுவேன். இவ்வாறான விடயங்களில் எனக்கு அதிக ஆர்வம் இருந்ததில்லை என்பதும் அதற்கு ஒரு காரணம். ஒருமுறை கொழும்பில் சந்தித்தபோது எனது படம் மல்லிகை அட்டையில் வராவிட்டால் வரலாறு தன்மீது பழிசுமத்தும் என்று தனக்கே உரிய பாணியில் ஜீவா என்னிடம் கூறினார். ‘வரலாற்றுப் பழியில்’ இருந்து ஜீவாவை விடுவிக்க வேண்டும் என்று நானும் நினைத்தேன். ஆயினும் சொன்னதுபோல் படம் அனுப்பவில்லை. பின்னர் எப்படியோ எனது படம் ஒன்றை எங்கிருந்தோ பெற்று, எனது மாணவன் பிரசாந்தனைக்கொண்டு என்னைப்பற்றி ஒரு நல்ல கட்டுரை எழுதுவித்து ஜூன் 2009 மல்லிகை இதழில் பிரசுரித்தார். ‘வரலாற்றுப் பழியில்’ இருந்து ஜீவா விடுபட்டதில் எனக்குத் திருப்தியே.

மல்லிகையை வெளியிடத் தொடங்கிய பின்னர் ஜீவா தன் சுயதொழிலைக் கைவிட்டு அதனையே தன் முழுநேரத் தொழிலாகவும் இலக்கியப் பணியாகவும் வரித்துக்கொண்டார். சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக எழுத்தை, இலக்கியத்தை மட்டும் நம்பி வாழ்பவர் இலங்கையில் நான் அறிந்தவரை ஜீவா ஒருவர்தான். அவருடைய விடா முயற்சியும், தற்துணிபும், அர்ப்பணிப்பும் அதைச் சாத்தியமாக்கியுள்ளன, மல்லிகையை ஐம்பதாவது ஆண்டை நோக்கிக் கொண்டு செல்கின்றன. இதை ஒரு தனிமனித சாதனையாக நாம் கொண்டாடலாம்.

கடந்த நாற்பது ஆண்டுகால ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் மல்லிகையின் பங்கு என்ன என்ற கேள்வி நம்முன் உள்ளது. 1970க்குப் பின்னர் மல்லிகையில் எழுதி முன்னணிக்குவந்த ஒரு எழுத்தாளர் பரம்பரை இதற்குப் பதில் சொல்லும் என்று நம்புகின்றேன். திக்வல்லை கமால் எனக்கு உடனடியாக நினைவுக்கு வரும் ஓர் இலக்கிய ஆளுமை. இவருடைய கணிசமான படைப்புகள் மல்லிகையிலேயே பிரசுமாயின. 

செங்கையாழியான் தொகுத்த மல்லிகைச் சிறுகதைகள் இரு தொகுதிகளும் மல்லிகையின் இலக்கியப் பங்களிப்பின் அறுவடைகள்தான். தான் வளர்த்த அல்லது தன்னைக் களமாகக் கொண்டு வளர்ந்த இலக்கியப் பரம்பரை பற்றி மல்லிகை பெருமைப்படுவதில் நியாயம் உண்டு. 

முக்கியமான சிங்கள எழுத்தாளர்களையும் அவர்களது படைப்புகளையும் தமிழுக்கு அறிமுகப்படுத்தியதிலும் மற்ற இதழ்களைவிட மல்லிகைக்கு முக்கியமான பங்கு உண்டு. மல்லிகை வெளியிட்ட சிங்களச் சிறுகதைகள் தொகுப்பு இதற்கு ஒரு உதாரணம். 

ஈழத்து இலக்கியம், இலக்கிய விமர்சனம் தொடர்பான திறந்த விவாதங்களுக்கு மல்லிகை எந்த அளவு களமாக அமைந்தது என்ற கேள்வியையும் நாம் கேட்டுப்பார்க்கலாம். இது தொடர்பான கருத்து வேறுபாடுகளுக்கு இடம் உண்டு. எனினும் மல்லிகையில் இடம்பெற்ற விமர்சனங்கள், விவாதங்கள் பல முக்கியமானவை. மார்க்சியம், தேசியம், இலக்கியவடிவங்கள் என்பன தொடர்பான முக்கியமான விமர்சனக் கட்டுரைகள், விவாதங்கள் மல்லிகையில் இடம்பெற்றுள்ளன. கைலாசபதி, சிவத்தம்பி, ஏ. ஜே. கனகரட்னா உட்பட ஈழத்தின் முக்கியமான விமர்சகர்கள் மல்லிகையில் எழுதியுள்ளனர். மல்லிகையில் வெளிவந்த முக்கியமான விமர்சனக் கட்டுரைகள் தொகுக்கப்பட்டு நூலுருவாக்கப்படின் இத்துறையில் மல்லிகையின் பங்களிப்பு வெளிச்சத்துக்கு வரும்.

ஜீவா பிரதானமாக ஒரு படைப்பாளியா, பத்திரிகை ஆசிரியரா என்ற கேள்விக்குப் பதில் சொல்வது சற்றுச் சிக்கலானது. ஜீவா ஒரு படைப்பாளியாக - ஒரு சிறுகதை எழுத்தாளனாகவே தன் இலக்கிய வாழ்வைத் தொடங்கினார். 1950, 60 களில் அதில் தீவிரமாக இயங்கினார். தண்ணீரும் கண்ணீரும், பாதுகை, சாலையின் திருப்பம், வாழ்வின் தரிசனங்கள் ஆகிய நான்கு சிறுகதைத் தொகுதிகளை வெளியிட்டார். பின்னர் இவற்றில் இடம்பெற்ற கதைகளையும் வேறு சில கதைகளையும் சேர்த்து 50 கதைகள் கொண்ட டொமினிக் ஜீவா சிறுகதைகள் ஒரு முழுத் தொகுப்பாக 1996ல் வெளிவந்தது. ஜீவாவின் மிகப் பெரும்பாலான கதைகள் 1950, 60களில் எழுதப்பட்டவைதான். மல்லிகை வெளிவரத் தொடங்கிய பின்னர் மிகக் குறைவான கதைகளையே ஜீவா எழுதியிருக்கிறார். அவ்வகையில் ஜீவா ஒரு சிறுகதை எழத்தாளர் என்பதைவிட மல்லிகை ஆசிரியர் என்ற பிம்பமே இன்று மேலோங்கியுள்ளது.

ஒரு சிறுகதை எழுத்தாளர் என்ற வகையில் 1950, 60 காலகட்டத்துச் சிறுகதை எழுத்தாளராகவே நாம் ஜீவாவை நோக்கவேண்டும். ஈழத்து இலக்கிய வரலாற்றைப் பொறுத்தவரை இக்காலகட்டம் மிக முக்கியமான ஒரு திருப்பு முனையாகும். இலங்கையில் இடதுசாரி, மார்க்சிய அரசியல் சிந்தனையும் முற்போக்கு இலக்கிய இயக்கமும் முன்னணிக்கு வந்த காலகட்டம் இது. சமூகரீதியில் ஒடுக்கப்பட்ட அடிநிலை மக்களின் அரசியல் விழிப்புணர்வும் சமூக எழுச்சியும் இலக்கியத்தில் வெளிப்பாடு பெற்று, சாதாரண மக்களின் பேச்சுமொழி இக்கிய மொழியாக மாற்றமடைந்த காலகட்டமும் இதுவே. வர்க்க, சாதி ஒடுக்குமுறைகளிலிருந்து விடுதலை என்ற குரல் இலக்கியத்தில் தீவிரமாக ஒலிக்கத் தொடங்கிய காலகட்டம் இது.  தாழ்த்தப்பட்ட அடிநிலைச் சமூகங்களைச் சேர்ந்தவர்கள் இக்கால கட்டத்தில்தான் எழுத்தாளர்களாக முன்னணிக்கு வந்தார்கள். டொமினிக் ஜீவா, டானியல், என். கே. ரகுநாதன், எஸ். பொன்னுத்துரை போற்றவர்கள் இவ்வகையில் குறிப்பிடத் தக்கவர்கள். சே. கணேசலிங்கன், நீர்வை பொன்னையன், இளங்கீரன் முதலியோர்  தாழ்த்தப்பட்ட சமூகங்களைச் சார்ந்தோர் அல்ல எனினும் புதிய இலக்கியக் கருத்துநிலையை ஏற்றுக்கொண்டு முற்போக்கு இயக்கத்தின் முக்கிய ஆளுமைகளாக உருவாகினர். கைலாசபதி, சிவத்தம்பி, ஏ.ஜே. கனகரட்னா ஆகியோர் முற்போக்கு இலக்கிய இயக்கத்தின் கருத்துநிலைக் காவலர்களாக முன்னணிக்கு வந்தனர்.

ஜீவாவின் கதைகள் இக்காலகட்டத்து முற்போக்கு இலக்கியக் கோட்பாட்டுக்கு உதாரணங்களாக அமைவன. ஜீவாவின் பெரும்பாலான கதாபாத்திரங்கள் தாழ்த்தப்பட்ட அல்லது அடிநிலை மக்களே. அவர்களது பிரச்சினைகள், துன்பங்கள், ஆசை அபிலாசைகள், அவர்களுக்குள் புதைந்திருக்கும் மனிதத் தன்மை என்பன அவரது கதைப் பொருளாக அமைகின்றன. சாதி ஒடுக்குமுறை என்னும் யாழ்ப்பாணச் சமூக யதார்த்தத்தை, அங்கு நிலவிய வர்க்க முரண்பாட்டை முகத்தில் அறைந்தாற்போல் சொல்லும் கதைகள் அவற்றுட் பல. இக்காலத்தில் எழுதிய டானியல், என். கே. ரகுநாதன், நீர்வை பொன்னையன், செ. கணேசலிங்கள் முதலியோரின் கதைகளிலும் நாம் இப் பொதுப் பண்பைக் காணலாம். 1950, 60களில் இத்தகைய கதைகள் ஈழத்து இலக்கிய உலகில் புதியவை. அரசியல் உணர்வை முனைப்பாகக் கொண்டவை. அதனாலேயே இவை கலை அல்ல பிரச்சாரம் என ஒரு சாராரால் ஒதுக்கப்பட்டன. ஆனால் இதுவே மக்கள் இலக்கியத்தின் அழகியல் என முற்போக்கு விமர்சகர்களும் எழுத்தாளர்களும் வாதிட்டனர். அக்கால கட்டத்தில் இத்தகைய படைப்புகளை முன்னெடுத்துச் செல்லவேண்டிய வாலாற்றுத் தேவை தங்களுக்கு இருந்ததாக ஏ. ஜே. கனகரட்னா இதுபற்றிப் பேசும்போது ஒருமுறை என்னிடம் கூறினார். இப்போது பின்னோக்கிப் பார;க்கும்போது ஏ. ஜே. அப்படிச் சமாதானம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று தோன்றுகின்றது. எக்காலத்துக்கும் பொதுவான, நிலையான கலைமுறை, அழகியல் என்று எதுவும் இல்லை. எல்லாமே மாறுவன, வேறுபடுவன. இந்த வேறுபாடுகளே இலக்கியத்துக்கு ஒரு பன்முகத் தன்மையைத் தருகின்றன. 1950, 60 களில் 70களிலும்கூட முற்போக்கு இலக்கியம் முன்வைத்த அழகியல் தனித்துவமானது, வேறுபட்டது என்ற புரிதல் முற்போக்கு இலக்கியத்தின் அழகில் பிரச்சினைகள் பற்றிய சர்ச்சைகளுக்கு ஒரு தீர்வாக அமையலாம். இச்சர்ச்சைகள் எவ்வாறு இருந்தாலும் ஐம்பது அறுபதுகளில் ஈழத்துச் சிறுகதை வளர்ச்சியில் ஜீவாவும் ஒரு முக்கிய ஆளுமை என்பதை யாரும் மறுக்க முடியாது. மல்லிகைப் பந்தல் மூலமாக ஒரு நூல் வெளியீட்டாளர் என்ற வகையிலும் ஜீவாவின் இலக்கியப் பணி முக்கியமானது.

ஜீவாவின் சுயசரிதை நூல்களை - எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம், அச்சுத் தாளின் ஊடாக ஒரு அனுபவப் பயணம் - படிக்கும் போது அவரது சமூகச் சூழல், குடும்ப வாழ்வின் நெருக்கடி ஆகியவற்றுக்குள் அமிழ்ந்து போகாது ஈழத்து இலக்கிய உலகில் ஒரு முக்கியமான ஆளுமையாக அவர் எழுச்சியடைந்தது ஒரு ஆச்சரியமான நிகழ்வாகவே தோன்றுகின்றது. அவரது தன்னம்பிக்கையும் விடாமுயற்சியுமே இதனைச் சாத்தியமாக்கியது என்று கூறலாம். சவரக் கடையே தன் சர்வகலாசாலை என்றும், நான் சிரைக்கப் பிறந்தவனல்ல சாதிக்கப் பிறந்தவன் என்றும், மண்புழுவாக இருந்து மனிதனானவன் என்றும் ஜீவா தன்னைப் பற்றிக் கூறியிருக்கிறார். தன்னையும் தன் வரலாற்று முக்கியத்துவத்தையும் பற்றி அடிக்கடி குரல் உயர்த்திப் பேசியும் எழுதியும் வந்திருக்கிறார். சிலவேளை இது ஒரு நெருடலாகவும் மிகையான சுய மதிப்பீடாகவும் எனக்குத் தோன்றியதுண்டு. ஆயினும், ஜீவா என்ற மனிதனின், எழுத்தாளனின், பத்திரிகையாளனின் பயணத்தில் தாண்ட வேண்டியிருந்த தடைகளையும், சகிக்க வேண்டியிருந்த அவமானங்களையும், சந்திக்க வேண்டியிருந்த இன்னல்களையும் அறியும்போது ஜீவாவின் உளவியலைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஜீவா சொல்வதுபோல் இறுக்கமான யாழ்ப்பாணச் சாதி அடுக்கை உடைத்துக்கொண்டு ஒரு மண்புழு மனிதனான கதைதான் ஜீவாவின் கதை. அவருடைய சிறுகதைகள் எல்லாவற்றையும் விடச் சிறந்த கதை அது. ஜீவாவின் 85ஆவது பிறந்த நாளை அதனாலேயே நானும் கொண்டாட நினைத்தேன். ஜீவா இன்னும் பல்லாண்டுகள் வாழ்ந்து மல்லிகையையும் மல்லிகைப் பந்தலையும் இன்னும் மணம் கமழச் செய்ய வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

………….           …………….

இதை எழுதி ஒன்பது ஆண்டுகளுக்குப் பின்னர் 

கனத்த மனதுடன் இன்று வழியனுப்புகிறோம். 

நிறை வாழ்வு வாழ்ந்தீர், நிலைக்கும் உம் பணிகள்

மலையக சிறுகதை வழித்தடத்தில் "அப்பாயி" - பிரமிளா பிரதீபன் (நூல் விமர்சனம்)

10.01.2021 அன்று நடைபெற்ற கொடகே வெளியீடான நடேசன் துரைராஜ் அவர்களின் ‘அப்பாயி’ நூல் வெளியீட்டு நிகழ்வு ZOOM வழியில் நடைபெற்றது. அந்த நிகழ்வில் பிரமிளா பிரதீபன் ஆற்றிய விமர்சன உரை சில திருத்தங்களுடன் தரப்பட்டுள்ளது. 

கதை சொல்வதி;ல் மிக நீட்சியான மரபை கடந்து வந்துகொண்டிருப்பவர்கள் நாங்கள். அந்த மரபில் கதை என்பது எமது வாழ்வுடன் மிகவும் நெருக்கமாக கலந்து விட்டிருக்கும் கலை எனும் வகையிலேயே அதனை எம்மால் நோக்க முடிகிறது. 

இந்த கதைசொல்லல் பற்றிய ஆழமான பார்வையினை சமகால நவீன இலக்கிய கோட்பாடுகள் வேகமாக முன்னெடுக்கிறது என்பதுடன் பன்னாட்டு இலக்கிய பரப்பில் பெருமளவில் ஆய்விற்குட்படுத்தும் துறையாகவும் புனைகதை இலக்கியம் வளர்ந்து வருகின்றமையை எம்மால் அவதானிக்க முடிகிறது.  

இத்தகைய நடைமுறை சூழ்நிலைக்கு ஈடுகொடுக்கும் வகையில்  மாற்றுச்சிந்தனைகளுடன் தர்க்கம்புரிதல், புதிய சிந்தனைகளுடன் ஊடாடுதல்;, புத்தாக்கத்திறன்களை விருத்தி செய்துக்கொள்ளல் முதலிய விசேட பண்புகளை எமதாக்கிக்கொண்டவர்களாகவே நாங்கள் இன்று இலக்கியத்தளத்தில் இயங்க வேண்டுமென்பது காலத்தின் கட்டாயத் தேவையாக உள்ளது. 

இந்த குறிப்பிட்ட தேவையின் நிமித்தம் எம்மிடத்தில் நாமே கேட்டுக்கொள்ள வேண்டியதான இரண்டு முக்கிய கேள்விகள் உள்ளன. 

  1. இலங்கை இலக்கியப்பரப்பிற்குள் நாங்கள் எங்கே நிற்கிறோம்?
  2. உலக இலக்கியப்பரப்பு எனும் தளத்தில் எங்களுக்கான வகிபாகம் எவ்வாறானதாக உள்ளது?  

இங்கே நான் ‘நாங்கள்’ என குறிப்பாக சுட்டியது மலையக இலக்கியத்தளத்தினையே. 

இதன்படி மேற்குறிப்பிட்ட கேள்விகளுக்கான விடைகளினூடாக நாம் பெற்றிருக்கும் அந்த இடமும் வரையறையும் இதுதானென எங்களுக்கு தெளிவாக தெரிந்திருக்கும் பட்சத்தில் அதனை விருத்தி செய்ய அல்லது குறைபாடுகளை நிவர்த்தித்துக்கொள்ள நாங்கள் மேற்கொண்டிருக்கும் எத்தனிப்புகள் ஏதேனும் உள்ளதாவென சிந்திக்க வேண்டிய கட்டாயமும் எங்களுக்கு இப்போது ஏற்பட்டிருக்கிறது. 

எங்களிடத்தே சிறுகதைகள் பெருகிய அளவிற்கு அவை பற்றியதான விமர்சனங்கள் பெருகவில்லை. ஆய்வுகளிற்கான தேவை ஏற்படுத்தப்படவில்லை.  அதன் விரிவும் ஆழமும் வளர்ச்சியடையா நிலையில்  எமக்கான சமூக பொறுப்பும், படைப்பொன்று குறித்ததான எச்சரிக்கையுணர்வும் படைப்பாளனிடத்தே சரியான முறையில் விழிப்படையவில்லை.  

ஒரு விமர்சனம் என்பது வெறும் புகழ்ச்சியினை மாத்திரம் மையப்படுத்தியதாகவோ அல்லது ஒரு விளம்பரமாகவோ இருந்துவிட முடியாது. ஒரு படைப்பு குறித்ததான விமர்சனமானது  படைப்பாளர்களை செதுக்க வேண்டும். அவர்களது படைப்புக்களின் நேர்த்தியை செம்மைப்படுத்தத் தூண்டுமொரு உந்தலை அளித்திட வேண்டும். அவர்களின் அடுத்த படைப்பின் மீதான தெளிவிற்கு வித்திட வேண்டும். 

மலையக இலக்கிய பரப்பிற்குள் அந்த நடைமுறை வளர்ந்திருக்கிறதா? 

அதற்கான வாய்ப்புக்களையும் களங்களையும் நாங்கள் விரிவாக்கம் செய்துகொண்டிருக்கிறோமா?

இதுவல்லா வேறுவகையில் சிந்தித்தால்… 

எமது இலக்கியத்தளத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த நாங்கள் எத்தகைய முயற்சிகளை நடைமுறைப்படுத்தியிருக்கிறோம்?

இந்த வினாக்களுக்கான விடைகளை தேடினால் அல்லது அதற்காக இனியேனும் முயற்சித்தால்  எமக்கானதாய் தனித்துவத்துடன் மிளிரும் மலையக இலக்கிய பரப்பில் நேர்மறையான நகர்தலை சாத்தியப்படுத்த முடியுமென்றே எனக்குத் தோன்றுகிறது.

இத்தகையதொரு புரிதலுடன் ‘அப்பாயி’ எனும் நூலின் சிறுகதைகள் பற்றி ஆராய்ந்தால், இதனை பிரதான நான்கு பிரிவுகளுக்கமைவாக தெளிவுப்படுத்தலாம் 

  1. கதைக்களம்
  2. கருப்பொருள்
  3. மொழி  
  4. கதைசொல்லும் முறை 

கதைக்களம் எனும் வகையில், இந்நூலின் எல்லா கதைகளுமே மலையக வாழ்வியலையும் அதன் சூழலையுமே சார்ந்து நிற்கின்றன. நிகழ்வெளிகள் மொத்தமும் சமூகவியல் கோலத்தோடும் புவியியல் வளத்தோடும் ஒன்றிணைந்ததாகவே ஆக்கப்பட்டிருக்கிறது. 

இதற்கமைவாக கதைக்களம் அல்லது நிகழ்வெளி பற்றியதான விபரிப்புக்களினூடாக காண்பியல் உருவாக்கங்களை படைத்திட இந்நூலாசிரியர் முயற்சித்திருக்கும் விதத்தினை ‘எங்களின் மேதினம்’ எனும் கதையில் விபரிக்கப்பட்டிருக்கும் பின்வரும் பகுதியினூடாக தெளியலாம். 

‘…முகத்தையும் உடம்பையும் அடிக்கும் சாரலில் இருந்து காப்பாற்றிக்கொள்ள கொங்காணியாக போட்டிருக்கும் பொலித்தீன் ரெட்டை இரண்டு கைகளாலும் பிடித்துக்கொண்டு கொழுந்து மலைக்கு போய் நிரைப்பிடித்தார்கள். மற்ற ஆண்களும் பெண்களுமாக சேர்ந்து கொழுந்து நிரையில் கொழுந்தைப் பறித்தார்கள். மழை நீரால் கொழுந்து சேகரிக்கும் பொலித்தீன்கள் கூடையின் பாரத்தை அதிகப்படுத்தின…’

இத்தகையதான  களவிபரிப்புகளை அநேகமாக எல்லா கதைகளிலுமே காணக்கூடியதாய் இருப்பதை இங்கே சுட்டிக்காட்டுதல் பொருத்தமாக அமைகிறது.

அடுத்ததாக இந்த சிறுகதைகளின் கருப்பொருள் பற்றி ஆராய்கையில் தனது உளப்பாங்கினையும் கண்ணோட்டத்தினையும் கருத்தியலையும் தாங்கி நிற்க வேண்டும் எனும் வகையில் படைப்பளர் முயற்சித்திருப்பது புலனாகிறது.  

மலையக மக்கள் சார் வாழ்வியல் பிரச்சனைகள், சம்பளப்போராட்டம், அரசியலில் மலையகப் பெண்களது பங்களிப்பு போன்றதான சமகாலத்திற்கு பொருந்திப்போக கூடியதான பாடுபொருள்களையே நூலாசிரியர் பயன்படுத்த துணிந்திருக்கிறார். 

தொடர்ச்சியாக, மொழிப்பிரயோகம் பற்றி நோக்குகையில் வட்டார வழக்கின் இயல்பான பிரயோகத்தை கதைகளினூடே இரசிக்க  முடிகிறது. குறிப்பிட்ட சில வட்டார வழக்குகளினூடாக நிகழ்வெளியும் சமூகத்தின் தனித்துவமும் அடையாளப்படுத்தப் பட்டிருக்கின்றன. அத்துடன் வட்டார வழக்குகள் ஒரு மொழியின் செழுமைக்கும் ஒன்றிணைப்பிற்கும் வலுவூட்டக் கூடியவை எனும் வகையில் தனக்கானதான சமூகவியல் கோலத்தையும் கலாசார மரபுகளையும் தெளிவுப்படுத்தி பதிவு செய்துள்ளமையும் இங்கே நோக்கத்தக்கது.

குறிப்பாக ‘அப்பாயி’ எனும் கதையில் ‘என்ன உன்னோடு சேர்த்துக்கொள்ளு மவராசனே…!’ என்ற ஒரு பகுதி அவளின் நினைவாக குறிப்பிடப்படுகிறது. 

இந்த ஒரு சிறிய வரியை ஆதாரமாக்கி அம்மூதாட்டியின் தனிமையுணர்வை அல்லது அவ்வுணர்வில் தொக்கு நிற்கும் அவர்களது அந்நியோன்னிய வாழ்வை என்று பல்வேறு கோணங்களில் சிந்திக்க தூண்டியிருப்பது சிறப்பு. 

அதற்கடுத்ததாய் இந்நூலின் கதைசொல்லும் முறை அல்லது பயன்படுத்தப்படும் மொழிநடை பற்றியதான தேடலின் போதில்தான் எனதெண்ணத்தில் ஒருசில முரண்பாடுகள் தோன்றுவதை தவிர்க்க முடியாமலிருந்தது.  

கதை சொல்லும் முறையினூடாகவே கதையின் நுகர்வினை அனுபவிப்போர்களாகிய வாசகர்கள் கதையுடன் நேரடியாக தொடர்புப் படுகிறார்கள்.  வாசிப்பின் தொடர்பயண உத்வேகத்தை அடைகிறார்கள்.  

நல்ல வாசகர்கள் கதையை வாசிப்போராக மட்டும் தொழிற்படுவதில்லை. குறித்த இலக்கியப்படைப்போடு இடைவினை கொள்பவர்களாயும் இருக்கின்றார்கள். அவ்வாறான இடைவினைத் தொடர்புக்கு மொழிநடை என்று கொள்ளப்படும் கதைசொல்லல் முறையே பாரிய பங்களிப்பைச் செய்கின்றது. 

ஒரு படைப்பினது காண்பியல் தரிசனத்தை வாசகர்களுக்கு கடத்த மொழியை மாத்திரமே படைப்பாளர்கள் பயன்படுத்துகிறார்கள் எனும் போது கதைசொல்லல் முறையின் முக்கியத்துவம் எத்தகையதென உணரல் அவர்களது கடமையாகவே உள்ளது.

அவ்வகையிலான நோக்கில் இந்நூலை ஆராயும் போது ‘அப்பாயி’ எனும் நூலின் புனைவுமதிப்பானது  மனித பிரச்சனைகளுடனும் உறவுகளுடனும் தொடர்புறும் போதிலான நிகழ்வுகளை சித்தரிப்பதனூடாக வலுப்பெற்றிருப்பதாகவே காணப்படுகிறது.  எனினும் இந்நூலாசிரியர் அதனை   வெளிப்படுத்தத் துணிந்த எடுத்துரைப்பு முறையை ஆராயும் பொழுதுதான் அவர் அதனை இன்னுமொருச்சுற்று செம்மைப்படுத்தலுக்கு உட்படுத்தியிருக்கலாமோவெனும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. 

அவ்வாறான செம்மைப்படுத்தல் நடைபெற்றிருக்குமாயின் இதே கதைகள் புதியதொரு பரிணாமத்துடன் வாசகனை சென்றடையும் வாய்ப்பை நிச்சயமாய் ஏற்படுத்தியிருக்கும்.  மேலும் அத்தகையதொரு செயற்;பாடு படைப்பாளனை மேலும் வலுவடையச் செய்யவும் உதவியிருக்கும்.

இவ்விடயங்களை தவிர இந்த நூல் பற்றி பேசுகையில் கொடகே எனும் இலங்கையின் மிகப்பிரபல்யமான பதிப்பகத்தினூடாகவே இந்நூல் வெளியீடு செய்யப்பட்டிருக்கிறது. ஆகவே இந்நூலை படிக்க ஆரம்பிக்கும் வாசகரது மன உணர்வில் இயல்பாகவே ஒரு நம்பிக்கையும் பூரண திருப்தியும் ஏற்பட்டிருக்கும்.  

எனினும் அத்தகைய நம்பிக்கையுடனான வாசகர்களுக்கு இந்நூலில் இடைக்கிடையே பரவலாக காணக்கிடைக்கின்ற எழுத்துப்பிழைகளாலும் அதனால் ஏற்படுகின்ற கருத்துப்பிழைகளாலும் வாசிப்பு இடர்பாடுகள் ஏற்படுமிடத்து அங்கே அவர்களது நம்பிக்கை சிதைவடையும் நிலை உருவாகிறது.  எனவே இவை போன்ற சிறிய கவனயீனங்களை இனிவரும் காலங்களில் கவனத்தில் கொள்ளப்பட வேண்டுமென்பதையும் இவ்விடத்தில் தாழ்மையுடன் பதிவு செய்யலாமென விரும்புகிறேன்.

அத்துடன் தற்கால நவீன இலக்கியத்தின் புதிய பரிணாமங்கள் வித்தியாசமான பாய்ச்சலுடன் புதிய சிந்தனைகளை எமக்குள் தோற்றுவிக்க முயற்சிப்பதால் இலக்கியத்தின் போக்கு எம்மையொத்தோருக்கு  மிகவும் சாதகமாக அமைந்திருப்பதாகவே எண்ண முடிகிறது.  

அதாவது சமகால நடைமுறையில் மூன்றாம் உலக நாடுகளின் இலக்கியங்கள் முன்னனிக்கு வந்து, விளிம்புநிலை எழுத்துக்களையும் காலங்காலமாய் ஒடுக்கப்பட்ட எழுத்துக்களையும் இருண்டுபோனதாய் ஓரங்கட்டப்பட்ட எழுத்துக்களையும் வெளிக்கொண்டுவரும் புதியவெளிகளை திறந்துவிட்டிருக்கும் நிலையினை வெகுவாக அவதானிக்க முடிகிறது.  

இந்த சூழ்நிலையை சாதகமாக்கி எமது மலையக இலக்கியத்தின் வெளிப்படுத்தல்களையும் தனித்துவத்தையும் நிலைநிறுத்திக்கொள்ள அல்லது உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டுமெனின்…  

  1. மலையக இலக்கியத்து மூத்த ஆளுமைகள் அடுத்த சந்ததியினருக்கான வழிகாட்டல் பற்றி சிந்தித்தல்…
  2. புதிய படைப்பாளர்களின் தகைமைகளை இனங்கான தமது அகவயத்தன்மையினை விடுத்து அவர்களை அணுகுதல்…
  3. ஒரு படைப்பாளனை வெறும் புகழ்ச்சியினால மாத்திரமே அணுகி ஊக்குவிக்கும் பாங்கை இல்லாதொழித்தல்…

முதலிய மிகவும் அத்தியாவசியமான சில நடைமுறைகளை கையாள்வதனூடாக நாம் எம்மை வளர்த்துக்கொண்டு உலக இலக்கியங்களுக்கு ஒப்பான இலக்கிய படைப்புகளை உருவாக்கும் தலைமுறையினரை தோற்றுவிக்க இயலும் என்பதையும் இவ்விடத்தில் பதிவு செய்துக்கொள்கிறேன். 

அத்துடன் புதிதாக இலக்கியவெளிக்குள் பிரவேசித்திருக்கும் படைப்பாளர் நடேசன் துரைராஜ் அவர்கள் மென்மேலும் படைப்புளை சிறந்த முறையில் படைத்து மலையக இலக்கியத்திற்கு வளம் சேர்க்க வேண்டும் எனவும்  விரும்புகிறேன். 

நன்றி.

என்.சரவணனின் "தலித்தின் குறிப்புக்கள்". வாசிப்பு அனுபவப் பகிர்வு - விதுர்ஷா

தலித்தியம் எனும் சொல் இலங்கையில் பரவலான பாவனையில் இல்லை. இலங்கையில் குறித்த சொல்தான் இல்லையே தவிர ஆதிக்க சக்திகள் கட்டமைத்துள்ள ஆதிக்கப்படிநிலையின் விளிம்புநிலையில் உள்ள மக்களும் அவர்களது வாழ்வியல்சார் பிரச்சனைகளும் இல்லாமலில்லை. எனவே தலித்தியம் என்ற சொல்லின் அவசியப்பாடு தவிர்க்கமுடியாத ஒன்றாக உள்ளது.  

என்.சரவணன் "தலித்தியம்" என்ற சொல்லினை , சாதிய கருத்துடைப்பிற்கும்   சாதியத்திற்கு எதிரான கருத்தமைவிற்கும் வேண்டி  "தலித்தின் குறிப்புகள்" என்ற புத்தகத்தில் சமூகமயப்படுத்த முயன்றுள்ளார். 

ஆதிக்க சக்திகளால் சமூகத்தின் விளிம்புநிலையில் வைத்து நோக்கப்படும் தலித்மக்கள்

தம் அடையாளங்களோடு அல்லது அடையாளங்களைக் கருத்துடைத்து வாழத்தலைப்படும் போது சமூகத்தில் எதிர்நோக்கும் உடலியல் உளவியல் சமூகப் பொருளாதார அரசியல் சிக்கல்களை மிக ஆழமான  அனுபவங்களோடு பிரக்ஞை பூர்வமாகப் பகிர்ந்துள்ளார். 

இலங்கையில் தமிழ் சிங்கள மக்கள் மத்தியில் நிலவும் சாதிய முறைகள், ஆதிக்கமனநிலை போன்ற பிரதான விடயங்களே சமூகத்தில் ஓரளவாவது பேசுபொருளாகின்றது.

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட நகரசுத்திகரிப்புத் தொழிலாளர்கள் (அருந்ததியர்கள்) சமூகத்தில் ஆதிக்க மற்றும் இடைநிலை சாதிகளால் எதிர்நோக்கும் பிரச்சனைகள், அவர்களது வாழ்தல் மீதான அச்சுறுத்தல்கள், வசை மொழிகள் பற்றி பெரும்பாலும் யாரும் பேசத் துணிந்ததில்லை.

ஆயினும் என்.சரவணன் ஆதிக்கசக்திகளது படிமுறையில் இறுதியில் வைத்து நோக்கப்படும் அருந்ததியர்களது வாழ்வியலை  தன் அனுபவங்களூடாக முன்வைக்கின்றார்.

90 களில் இருந்து எழுதப்பட்டு வந்த கட்டுரைகள் இலங்கையில் 80 களிலிருந்தே எவ்வாறு சாதியமொழிகள் அச்சு ஊடகங்களூடாக  தன்முனைப்பு பெற்றன,எவ்வாறு சமூகமயமாகின (சாதியூறிய மொழி) போன்ற விடயங்களோடு நவீனகாலச்சாதிய அமைப்பு எவ்வாறு கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதனையும் ஆய்வுக்குட்படுத்துகின்றார். 

இலங்கையின் அனைத்துப் பகுதிகளிலும் சிதறி வாழும் இவர்கள் பெரும் சமூகமாக அல்லாது குறிப்பிட்ட சிறு குழுமமாக இருப்பதால் எந்தவொரு அரசியல்வாதிக்கும் வெற்றிபெறுதற்கு இவர்களது வாக்குத் தேவையில்லாது போகின்றது. இதனால்  மிகச் சுலபமாகவே  இவர்கள் அரசியல் நீக்கம் செய்யப்படுகின்றனர். அரசியல் ரீதியான தீர்வு என்பது இவர்களது வாழ்வியலைப் புரிந்துகொள்ளாத அரசாங்கத்தாலும் அரசியல்வாதிகளாலும் கிடைக்குமென்பது கேள்விக்குறியே என்பது என்.சரவணனின் எழுத்துக்களில் எடுத்துக்காட்டப்படுகின்றது.

"ஏற்கனவே மலையகத்துல டீச்சர்மார்கள் எல்லாம் வீடு கேக்கிறாங்க, தாதிமார் வந்து எங்களுக்கும் வேணுமெங்கிறாங்க... இப்ப நகர சுத்தித் தொழிலாளர்களும் வந்து இப்படிக் கேக்குறீங்க ... அது கஷ்டம்" -அமைச்சர் திகாம்பரம் ("அமைச்சரிடம் நீதி கோரிப் போன கதை.." பக்.9)

நவீன காலத்தில் சாதி தீண்டாமையை அடிப்படையாகக் கொண்டு இருப்பதில்லை மாறாக அவை அகமணமுறைகள் மற்றும் ஊர்காரராக ஒருங்கிணைவது, கோவில்களை ஊர்க்கோவிலாக அடையாளப்படுத்துவது, ஏனையோரையும் இணைத்து வாழ்வது என்ற போலித்தனங்களுடன் தம் சாதிப்பெருமிதத்தை வெளிப்படுத்துவது போன்ற  நவீன வடிவங்கள் பெற்று உள்ளது என்பதனை என்.சரவணன் பல இடங்களில் சுட்டிக்காட்டுகின்றார்.

"எனக்கெண்டா சாதிபாக்கிறது பிடிக்காது. கிட்டடியில் கூட எங்கட சொந்தக்காரப் பிள்ளைக்கு ஒரு வரனைப் பாக்கச் சொன்னாங்க.. நான் எந்த சாதியா இருந்தாலும் பிரச்சனை இல்ல பையன் நல்லவனா இருந்தா சரி எண்டு மட்டும்தான் சொன்னேன். ஆனால் ஆகவும் குறைஞ்ச பள்ளர், பறையர், சக்கிலியர் என்று இல்லாம இருக்கவேணும் என்ன சொல்றீங்க.." 

"நான் ஒரு போதும் சாதி எல்லாம் பார்ப்பதில்லை . உங்களுக்கே தெரியும். ஏன் நீங்கள் எல்லாம் எங்கள் வீட்டுக்கு வருவதில்லையா..? சாப்பிடுவது இல்லையா..?" 

வெள்ளைத் திமிரும் வெள்ளாளத் திமிரும் -1 பக். 112, 113)

ஆதிக்க சாதியம் தன்னை தக்கவைத்துக்கொள்ள அகமணமுறைகளை சமூகத்தின்  வேராகத் திணிக்கின்றது. இதன் மூலம் சாதிக்கலப்பு ஏற்படாமல் தன்னை தற்காத்துக்கொள்கின்றது. இந்த அகமணமுறைகள் ஆதிக்கசாதிகளால்  வலிந்து விரும்பி ஏற்பதாகவும் தலித்சாதிகள் வாழ்வில் திணிக்கப்படும் ஒன்றாகவும் அடையாளப்படுத்துகின்றார். இதனால் ஏற்படும் மரபியல் நோய்களின் பரிமாணத்தினையும் நோய்களைத் தடுப்பதற்கான அல்லது அவற்றிலிருந்து பாதுகாப்புப்பெறுவதற்கான பொருளாதார வசதிகளும் அற்ற நிலையையும்  என்.சரவணன் எடுத்துக்காட்டுகின்றார். 

என்னுடன் கூடப்படிக்கிற ஒருவன்,  "ஜேய் சும்மா எல்லாப் பெட்டையளோடையும்* பழகலாம் கதைக்கலாம் ஆனால் கலியாணம் என்டு வரேக்க வீட்டை சொல்றவளத் தான் கட்டுவன். இல்லாட்டி சீதனமும் இல்லை அப்பாட சொத்தும் இல்லை." 

இதில் எங்குமே சாதி என்ற சொல் பாவிக்கப்படவில்லை. ஆனாலும் இந்த வசனம் முழுவதும் யாழ்ப்பாண சைவ ஆணாதிக்க வேளாள மனநிலையால் கட்டமைக்கப்பட்டுள்ளது. 

இன்றைய சமூகத்தில் வாழும் இளம்தலைமுறையினரது சிந்தனை கூட சாதியூறிய மொழி சாதியூறிய கலாசாரத்தின் பாற்பட்டுத் தான் செயற்படுகின்றது என்பதற்கு எனது அனுபவத்தின் வாயிலான  ஒரு சிறிய எடுத்துக் காட்டு. 

ஆனாலும் பெரும்பாலும் நம் சமூகத்தில் சாதி என்பது எல்லாவற்றையுமே அடையாளப்படுத்தும் ஒரு சொல்லாக எமக்கு பழகிப்போயுள்ளது. நான் கூட சிலவேளை பிரக்ஞை அற்ற நிலையில் "ஏன் ஒரு மாதிரியாக இருக்கிறாய்" என்ற சொல்லுக்குப் பதிலா "ஏன் ஒரு ஜாதியா இருக்காய் " என பாவிப்பது இப்போது நெருடலாய் இருக்கின்றது. ஆனாலும் ஒரு தலித் பெண் என்ற  அடிப்படையில் எனக்கும் சாதி என்ற சொல் வெளியில் யாரேனும் சொல்லிக் கேள்விப்பட்டவுடன் உள்ளூர ஏதோ ஒன்று குத்துவது போன்ற உணர்வை பலதடவை நான் உணர்ந்திருக்கின்றேன். இப்போதெல்லாம் "தலித்தியம்" எனும் சொல்லை எனக்குப் பொருத்தமான அடையாளமாக கொள்ளும் மனோபாவத்தை உணர்கின்றேன். 

"தமிழ் சமூகத்தில் மனைவி கூட பெண்சாதி தான். யாழ்ப்பாண பேச்சு வழக்கில் பொருட்களின் தரநிர்ணயம் கூட சாதியாகத்தான் பார்க்கப்படுகின்றது. " (சாதிய திமிராளர்களின் கடைந்தெடுத்த ஆயுதம்:  சாதியைச் சாடல் பக்.124)

"ஒரு சாதி ஆட்கள் , சாதிப்புத்திய காட்டிட்டினம்" போன்ற சொற்கள் சாதாரண புழக்கத்தில் இருக்கின்றன.  ("வெள்ளைத் திமிரும் வெள்ளாளத் திமிரும் "பக்121)

சாதிய மனநிலை மற்றும் சொற்பிரயோகங்கள் இலங்கையில் மட்டுமல்லாது புகலிடத்தில் எவ்வளவு வீரியமாக வாழ்கின்றது என்பதனை சரவணன் பல நிகழ்வுகள் ஊடாக சுட்டிக்காட்டுகின்றார். 

"புகலிடத்தில் சாதியத்தின் பண்பு மாறவில்லை. அதன் வடிவங்கள் மாறியுள்ளன. குறிப்பாக, அதுவும் சேர்ந்து இன்று நவீனமயப்படுத்தப்பட்டுள்ளது" 

("புகலிடச் சாதியம்" பக்.37)

"நாளைக்கு தமிழீழம் கிடைச்சாப் பிறகுதான் பிரச்சனை இருக்குது. என்னதான் இருந்தாலும் குறைஞ்ச சாதிக்காரரை என்னென்டு நாட்டுத் தலைவரா நாங்க ஏக்கிறது"  (வெள்ளைத் தமிழும் வெள்ளாளத் தமிரும் -1 பக்.113)

"...தனது 3 வயது மகனைக் காட்டி இவன் நாளைக்கு ஒரு வெள்ளைக்காரிச்சியைக் கூட இழுத்துக் கொண்டு வரட்டும். ஆனால்,ஏதாவது கீழ்சாதிப் பெட்டையை மட்டும் இழுத்து வந்துவிடக்கூடாது"  என்றார்"  ("யாழ் சாதி :இரத்தம் கேட்கிறதா? தர மறுக்கிறதா?" பக். 145)

சாதிய நிலைத்திருப்பிற்கு சாதிய வசைச்சொற்கள் காலம் காலமாக உயிர்ப்புக் கொடுக்கின்றன. ஆதிக்க சாதிகள் மட்டுமல்லாது இடைநிலைச் சாதிகளும் இவ் ஆணாதிக்க சாதிய வசைச் சொற்களை கையிலெடுத்து தம் கோபங்களைத் தீர்த்துக்கொள்கின்றனர். இதற்கு ஊடகங்களும் பாடப்புத்தகங்களும் கூட விதிவிலக்கல்ல என்பதனைச் என்.சரவணன் சுட்டிக்காட்டுகின்றார்.   

இவ் வசைச் சொற்கள் மத்தியில் வாழும் ஆதிக்கசக்திகளால் விளிம்புநிலையில் வைத்து நோக்கப்படும் சாதியைச் சேர்ந்தவர்களது உளவியல் சிக்கல்களை தன் அனுபவத்தோடும் தன் தோழர்களின் அனுபவத்தோடும் இணைத்து பகிர்ந்துள்ளார். 

"மேல்சாதி ஆண்மனம் என்பது மேலதிகமாகப் பெண்பாலுறுப்பை, அல்லது பெண் பாலுறவைச் சாடுகின்ற தூஷணத்தையும் இந்தச் சாதியச் சாடலுடன் கோர்த்துச் சொல்லும் போது, அதற்கு மேலதிக பலம் கிடைப்பதாக நம்புகின்றது. அதனையே நிறைவேற்றியும் விடுகிறது" 

(சாதிய வசை பக்.15)

அத்துடன்  ஆதிக்கசக்திகளின் நோக்கில் சமூகத்தில் விளிம்புநிலையில் வைத்துப் பார்க்கப்படுபவர்களின் இறுதியான நிலையில் "தமிழ்த் தொழிலாள தலித்திய பெண்கள் எவ்வாறு நோக்கப்படுகின்றர். என்பது பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.

"ஒடுக்கப்படும் விளிம்பு வர்க்கத்தினர் எல்லோரும் தலித்துக்கள் இல்லை. பெண்கள் எல்லோரும் தலித்துக்கள் இல்லை. தமிழர்கள் எல்லோரும் தலித்துக்கள் இல்லை. ஆனால் இந்த அத்தனை பண்புகளும் இவர்களுக்கு உள்ளமையால் அத்தனை  அடக்குமுறைகளும் தலித் பெண்களுக்கே உண்டு" ("சிவில் சமூகத்தில் நலமடித்தல்! அரசியல்வாதிகள் சக்கிலியர்கள்" பக். 109) 

தமிழ்த் தலித்திய பெண்களது உளவியல் சிக்கல்கள் இங்கு முக்கியத்துவப்படுத்தப்படாவிட்டாலும். "இலங்கையில் தலித்தியப் பெண்களது நிலை - ஆரம்ப கலந்துரையாடல்" என்ற அடிப்படையில் நோக்கமுடிகின்றது.

தலித் பெண்ணியம் தொடர்பான ரூத் மனோரமா ஊடான கலந்துரையாடல் இந்தியாவில் எவ்வாறு தலித் பெண்ணியம் நோக்கப்படுகின்றது என்பதுடன் அவர்களது உளவியல் சிக்கல்களையும் வெளிக்கொணர்ந்து உள்ளது. அத்தோடு இலங்கையிலும் மேலும் பல தலித்கள் தொடர்பான ஆய்வுகளும் செயற்பாடுகளும் அவசியமாக உள்ளன என்பதை தலித்தின் குறிப்புகள் வெளிப்படுதியுள்ளது.

"எவ்வாறு வர்க்கப் பாலின சாதியம் போன்ற அக போராட்டங்களை பின்தள்ளிவிட்டு இனத்துவப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதன் தோல்வி எவ்வாறு கட்டமைக்கப்படுகின்றது.   போராட்டத் தோல்விக்கான அகக்காரணிகளை விட்டுவிட்டு புறக்காரணிகளை மட்டும்  எவ்வாறு ஆதிக்கசக்தி இன்னமும் நொந்துகொண்டுள்ளன" என்பது பற்றிய ஒரு பார்வையை குறிப்பாக "முரண்பாடுகளும் படிநிலையொழுங்கும் தலித்தியமும்" முன்வைக்கின்றது.

"என் குடும்பத்தில் உள்ள அனைவருமே தமிழீழம் கிடைச்சா எங்கபாடு கஸ்ரம்தான்"  என அடிக்கடி சொல்லிக் கேட்டிருக்கன். அதன் உண்மையான பின்னணியாக எம் சாதிய அடையாளம் தான் இருந்துள்ளது."

தலித்துக்களாக சமூகத்தில் பிற்படுத்தப்பட்ட நிலையில் இருப்போர் குறிப்பாக அருந்ததியினர் சமூகத்தவர்கள் பொருளாதார ரீதியிலும் மிகப்பின்தங்கிய நிலையில் தேங்கவைக்கப்படுகின்றனர். குறிப்பாக அவர்களுக்கு போதிய கூலி இன்மை, சொந்த வீடு இன்மை, கல்வி கற்கவசதிகள் இன்மை போன்றவற்றால் தொடர்ந்தும் அவர்கள் அதே நிலையில் இருக்கவும், அதே குறிப்பிட்ட சாதித் தொழில்களை செய்யவும் சமூகத் திணிப்பிற்கு உள்ளாகின்றனர். 

" அண்ணா நான் அட்வான்ஸ் லெவலுக்குப் பாஸாகிட்டேன். பாடசாலையும் கூடக் கிடைத்துவிட்டது. அம்மாவும் அப்பாவும் நான் போவதை விரும்புகிறார்கள். ஆனால் பாடசாலைக்கான ஆரம்பச் செலவுகளைக் கூடச் சமாளிக்க முடியாத நிலையில் உள்ளனர். என்னத்த படிப்பு, சும்மா வீட்டில கிட" என்று சொல்லிவிடுவார்களோ என்று பயமாக இருக்குறது அண்ணா" ("பொறுப்பேற்பது யார்?" பக்.68)

"இந்தத் தொழிலை விட்டு வெளியேற முடியாமைக்கான ஒரு காரணம் தொழிலை இழந்தால் தமக்கு இதுவரை சொந்தமில்லாத குடியிருப்பை இழக்க நேரிடும் என்கிற பீதி தொடர்கிறது." ( "அமைச்சரிடம் நீதி கோரிப் போன கதை.."பக்9)

"அடையாளங்களைத் தற்கொலை செய்தல்.." எனும் தலைப்பில் மூன்று கட்டுரைகளில் அடையாளங்களது தன்மை சாதியத்தினுள் அவை ஏற்படுத்தும் தாக்கங்கள், எவ்வாறு ஒரு ஆதிக்கசக்தி தன் ஆதிக்க சிந்தனையின் பாற்செயற்படும் போது அவற்றோடு இணைந்து தலித்மக்கள் இழிநிலையை தம்மீது சுமத்துவது, சமூகத்திலிருந்து விலத்தி வாழ்வது போன்றவற்றை தம் தெரிவாகக் கொள்வது போன்றவற்றை ஆராய்கின்றார். 

ஆரம்பகாலத்தில் தெலுங்கு பேசி வந்தாலூம் கால ஓட்டத்தில் தாம் வசிக்கும் இடங்களுக்கு ஏற்ப தம் மொழியை மாற்றி தமிழாகவும் சிங்களமாகவும் பேசுவது, தம் கவுச்சி சாமிகள் ஆகம சாமியாவது போன்றவற்றின் ஊடாக எடுத்துக்காட்டுகின்றார். 

சாதிய ஒழிப்பின் படிநிலைகளாக சாதிய கட்டவிழ்ப்பு, கட்டுதல் போன்றவற்றினை முன்வைக்கின்றார். 

"சாதி மறுப்பு, சாதியெதிர்ப்பு, சாதியடைப்பு ஆகிய செயற்பாடுகளின் முன்நிபந்தனைகளாக ஒன்று சாதியக்கட்டமைப்பைக் கட்டவிழ்ப்பது மற்றது கட்டுவது. நமக்கான விடுதலைக் கருத்தமைவை கட்டமைப்பது. கருத்துடைப்பும் கருத்தமைப்பும் இணைந்தே மேற்கொள்வதன் அவசியம் பற்றிக் குறிப்பிடுகின்றார். ("சாதிய வசைபாடல்: அருந்ததியர் சமூகத்தை முன்வைத்து பக்.16)

"அடையாளங்களைத் தற்கொலை செய்தல்" கட்டுரைகளின் இறுதியாக 

"அடையாளங்களை மறுப்பது ஒடுக்கும் சக்திகளின் பண்பாக இருக்கின்றது என்பதற்காக, அடையாளங்களை மறைப்பது ஒடுக்கப்படும் சக்திகளின் போக்காக அமைந்துவிடக்கூடாது. மாறாக அதனை எதிர்கொண்டு விடுதலைக்கான வழிவகைகளைக் காண்பதே சிறந்த பணியாக இருக்க முடியும்" 

(அடையாளங்களைத் தற்கொலை செய்தல் -3 பக். 85)

அனைத்து கட்டுரைகளிலும் அடக்குமுறைக்கு உட்படும் ஆதிக்கசக்திகளால் சமூகத்தின் விளிம்புநிலையில் வைத்து நோக்கப்படும் அருந்ததியர் சமூகத்தின் அரசியல் , பொருளாதார, சமூக, பால்நிலை, கலாசார,புகலிட மனநிலை, நோய்நிலை, தொழிலாளர் ,ஊடகம் போன்ற பல்வேறு பார்வைகளில் ஆராயப்படுகின்றது. சாதியம் தொடர்பான ஒரு காத்திரமான படைப்பாக தலித்தின் குறிப்புக்கள் உள்ளது. 

2020.01.08

விதுர்ஷா தனது முக நூல் பக்கத்தில் பகிர்ந்திருந்த நூலின் வாசிப்பனுபவத்தை நன்றியுடன் பகிர்கிறோம்

விஜயபா கொள்ளை : 500 ஆண்டுகள் | வரலாறு – நாவல் – சினிமா | என்.சரவணன்

இலங்கையின் வரலாற்றை புரட்டிப்போட்ட வரலாற்று நிகழ்வுகளில் ஒன்றாக விஜயபா கொள்ளை நிகழ்வைக் குறிப்பிடுவது வழக்கம். அது நிகழ்ந்து 2021 ஆம் ஆண்டுடன் ஐந்நூறு ஆண்டுகள் ஆகிவிட்டன.

தென்னிலங்கையின் மீதான யாழ்ப்பாணத்தின் ஆக்கிரமிப்பில் இருந்து தற்காத்துக்கொள்ளவே கோட்டை ராஜ்ஜியத்தின் உருவாக்கம் நிகழ்ந்தது எனலாம். யாழ்ப்பாணத்தை அப்போது ஆரியசக்கரவர்த்தி ஆட்சிபுரிந்துவந்தார். தனது படைப்பலத்தால் வடக்கில் இருந்து படிப்படியாக இலங்கையின் நடுப்பகுதியை நோக்கி தனது ஆட்சியை நகர்த்திக்கொண்டு வருவதை உணர்ந்த மூன்றாம் விஜயபாகுவின் தளபதியாக இருந்த அலகக்கோணார அதிலிருந்து தற்காத்துக்கொள்ள ஒரு பெரும் கோட்டையை அமைத்தான். அந்தக் கோட்டை தான் பிற் காலத்தில் கோட்டை ராஜ்ஜியமானது. பின்னர் அதன் ஆட்சியுரிமை 6ஆம் பராக்கிரமபாகுவின் வசமானது.

கி.பி. 1415 ஆம் ஆண்டில் மன்னர் 6ஆம் பரக்கிரமபாகு கோட்டையை தனது ராஜ்யமாகத் தேர்ந்தெடுத்த சந்தர்ப்பத்தில், இலங்கையில் பல பிராந்திய ராஜ்யங்கள் இருந்தன. அதன்படி, ஆரியசக்ரவர்த்தி யாழ்ப்பாணத்தை ஆண்டார், ஜோதியா என்ற நபர் கண்டி ராஜ்ஜியத்தை ஆண்டார். இளவரசர் சபுமல் குமாரயாவை அனுப்பி யாழ்ப்பாணத்தின் ஆரியசக்ரவர்த்தி வம்சத்தை தூக்கியெறிந்த 6ஆம் பராக்கிரமபாகு; இளவரசர் அம்புலுகலவை அனுப்பி, ஜோதிய அரசரையும் தோற்கடித்ததன் மூலம் முழு நாட்டின் பெரும்பகுதி அவரின் ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்டது.

கோட்டை இராச்சியத்தின் பொற்காலம் என்று கருதப்படும் 6ஆம் பராக்கிரமபாகு ஆட்சியின் போது பொருளாதார, சமூக, பண்பாட்டு வளர்ச்சி நிகழ்ந்தது என்று பண்டைய நாளேடுகள் கூறுகின்றன. 6ஆம் பராக்கிரமபாகு கோட்டையை ஒரு சக்திவாய்ந்த ராஜ்யமாக மாற்றினார். 1467 இல் அவரின் மறைவுடன், அந்த ராஜ்யத்தின் வீழ்ச்சி தொடங்கியது.

6 ஆம் விஜயபாகு கோட்டை மன்னரானார்

கி.பி. 1477 ஆம் ஆண்டில், இளவரசர் அம்புலுகல 8 வது வீர பராக்கிரமபாகுவாக கோட்டை இராச்சியத்தின் அரசாட்சியைப் பொறுப்பேற்றார். ஆனால், கி.பி. 1489ஆம் ஆண்டளவில், மன்னர் உடல்நிலை மோசமடைந்ததால் அவரது மகன் தர்ம பரக்ரமாபாகு IX ஆட்சியைப் பொறுப்பேற்றார். போர்த்துக்கேயர் இலங்கைக்கு வந்தபோது கோட்டை மன்னர் வீர பராக்கிரமபாகு VIII ஆட்சி செய்தார் என்று சில மூலாதாரங்களில் கூறபட்டாலும் மேலும் பல ஆதாரங்களின்படி 9வது  பராக்கிரமபாகுவே கோட்டைவை ஆட்சி செய்திருப்பதாகத் தெரிகிறது. இவ்வாறு, 9வது தர்ம பராக்கிரமபாகுவிடம் ராஜ்யம் ஒப்படைக்கப்பட்டபோது, அவருக்கு 4 இளைய சகோதரர்கள் இருந்தனர். அவர்கள் பின்வருமாறு பிராந்தியங்களை ஆட்சி செய்து வந்தனர்

  • இளவரசர் ஸ்ரீ ராஜசிங்க - மெனிக்கடவர
  • சகலகலா வல்லப – உடுகம்பொல
  • தானியவல்லப – மாதம்பே
  • இளவரசர் விஜயபாகு - ரய்கம

அந்த நேரத்தில் மன்னர் 9ஆம் தர்ம பராக்கிரமபாகு இளவரசர் ஸ்ரீ ராஜசிங்கவை அவரது அரியணைக்கு உரியவராக பிரகடனப்படுத்தினார். இருப்பினும், மிகக் குறுகிய காலத்தில் அவர் இறந்ததும் சகலகலா வல்லப இளவரசராக நியமிக்கப்பட்டார். அந்தக் காலகட்டத்தில், கோட்டை இராச்சியம் தொடர்பான பல மோதல்களின் போது இராணுவம் சகலகல வல்லபா மற்றும் தானிய வல்லப ஆகியோரால் வழிநடத்தப்பட்டது. 9 வது தர்ம பராக்கிரமபாகு தனது ஆட்சிக் காலத்தில் இறந்ததால், சகலகல வல்லபாவை அரியணைக்கு நியமிக்க முடிவு செய்யப்பட்டது. இருப்பினும், அந்த நேரத்தில், அனைவரின் இளைய சகோதரரான விஜயபாகு, விஜயபாகு இந்த வேலைக்கு சரியான மனிதர் என்று அறிவித்த பிறகு, ஆறாவது இளவரசர் விஜயபாகு கோட்டையின் அரசாட்சியை ஏற்றுக்கொண்டார்.

விஜயபா கொள்ளை

ஆறாம் விஜயபாகு மன்னரும் அவரது சகோதரன் சக்கிராயுதபாகுவும் ஒரே மனைவியைத் தான் பகிர்ந்துகொண்டனர். சிங்கள சமூகத்தில் ஒரே மனைவியை பல சகோதரர்கள் மனைவியாக ஆக்கிக் கொண்டு வாழும்வழக்கம் நெடுங்காலமாக இருந்து வருகிறது. இதை அவர்கள் ஒரே வீட்டில் புசித்தல் என்று அழைப்பார்கள். “எக கே கேம” (Eka Ge  Kaema - එකගෙයි කෑම) (1) என்கிற அந்த சிங்களச் சொல்லுக்கு தமிழில் “ஒரே வீட்டில் புசித்தல்” என்று அர்த்தம். ஒரு பெண் ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்களை ஒரே சமயத்தில் மணந்து கொள்வதை ஆங்கிலத்தில் பொலியாண்டரி (Polyandry) என்பார்கள். கண்டிய சிங்கள சமூகத்தில் இந்த இரண்டும் வழக்கத்தில் இருந்திருக்கிறது.

ஆக விஜயபாகு – சக்கிராயுதபாகு ஆகியோருக்கு நான்கு ஆண்கள் பிறந்தார்கள். ஒரு மகன் சிறு வயதிலேயே இறந்துபோனார். புவனேகபாகு, ரய்கம் பண்டார, மாயதுன்ன ஆகியோரே ஏனைய மூவர். சக்கிராயுதபாகுவும் மனைவியும் இறந்து போனதன் பின்னர் விஜயபாகு “கீரிவெல்லே குமாரிஹாமி” என்பவரை இரண்டாந்தாரமாக மணமுடிக்கிறார். “கீரிவெல்லே குமாரிஹாமி”யும் ஏற்கெனவே மணமுடித்தவர். அவருக்கு தேவராஜா (தேவராஜசிங்க என்றும் அழைப்பார்கள்) என்கிற ஒரு மகனும் இருக்கிறார். அந்த மகனுடன் தான் கீரிவெல்ல குமாரிஹாமி மன்னரிடம் குடிபுகுந்தார். பின்னர் தனது மகன் தேவராஜாவுக்குத் தான் எதிர்காலத்தில் மன்னருக்குப் பின் சிம்மாசனத்தை ஒப்படைக்கவேண்டும் என்று “கீரிவெல்லே குமாரிஹாமி” மன்னரை நிர்ப்பந்தித்தார். இறுதியில் மன்னர் அந்த நிர்ப்பந்தத்திற்கு அடிபணிகிறார். ஒப்புக்கொள்கிறார்.

அரசர் தனது மனைவியைப் போலவே தேவராஜாவிடமும் அதிக அன்புடையவர். ஆனால் அப்போது தேவராஜா வயதில் சின்னவர். அவரைவிட மூத்த மனைவிக்குப் பிறந்த மூன்று இளவரசர்களும் பெரியவர்களாக வளர்ந்தவர்கள். ஆனால் அரசர் ஏற்கெனவே இளைய தாரத்துக்கு வாக்குறுதி அளித்துவிட்டார்.

தனது மகனுக்கு அரியணை கிடைக்காமல் போய் விடுமோ என்கிற அச்சத்தில் கீரிவெல்லே குமாரிஹாமி இன்னொரு புறம் சதித் திட்டம் தீட்டினார். இளவரசரின் இரண்டு பிரதமர்களான கந்துரே பண்டாரவும் ஏகநாயக்க முதலியும் சேர்ந்து இரண்டாம் கீரிவெல்லே குமாரிஹாமியின் சதித்திட்டத்தை ஆதரித்தனர்.

இளவரசர் தேவராஜாவுக்கு அரியணையை வழங்க மன்னர் இறுதியின் ஒப்புக்கொண்ட நிலையில் மூன்று மகன்களும் அரண்மனையை விட்டு ஆத்திரத்துடன் வெளியேறினர். தமது தூரத்து உறவினரான அப்போதைய கண்டியின் இரண்டாம் மன்னராக இருந்த ஜெயவீர பண்டாரவிடம் மூவரும் போய் சேர்ந்தனர். ஜெயவீரவின் உதவியுடன், மூன்று இளவரசர்களும் தங்கள் தந்தைக்கு எதிராகப் போராட ஒரு படையுடன் வந்து களனியில் முகாமிட்டனர். விஜயபாகு மன்னர் கோட்டையில் தனக்கு சாதகமற்ற நிலை நிலவுவதைக் கண்ட விஜயபாகு பீதியுற்று, தூதரை அனுப்பி தன் மகன்களை சமாளிக்கமுயன்றான். அத்தகைய தூதர்களை அனுப்பி மூன்று இளவரசர்களையும் சிறைபிடிப்பதே மன்னரின் திட்டம். ஆனால் அதற்கு விலையாக தமக்கெதிராக சதி தீட்டிய ஏகநாயக்க, கந்துறை ஆகியோரின் உயிரைக் கேட்டனர் இளவரசர்கள். அதன்படி, அந்த இருவரும் அரச உத்தரவின் பேரில் களனிக்கு அனுப்பப்பட்டனர். ஆனால் ஏகநாயக்க முதலி தப்பி களனி விஹாராவில் ஒளிந்துகொண்டதால் மரணத்திலிருந்து தப்ப முடிந்தது.

ஆனால் மூன்று இளவரசர்களும் கந்துறை பண்டாராவைக் கொன்ற பிறகு, கோட்டை அரண்மனையை ரகசியமாக முற்றுகையிட்டனர். இளவரசர்களைக் பிடித்து கொல்லும் நோக்கத்துடன் மன்னர் விஜயபாகு இப்படி ஒரு சதி வலையை விரித்திருந்தார் என்கிற தகவலை ஏழு வயது இளவரசர் தேவராஜா, இளவரசர் மாயாதுன்னவிடம் அறிவித்துவிட்டார். அத்தகவலை இளவரசர் மாயதுன்ன தனது சகோதரர்களிடம் அறிவித்தார். இதன் விளைவாக கண்டி மன்னர் ஜெயவீரவின் படையின் உதவியோடு அந்நிய கூலிப் படைகளையும் அமர்த்திக்கொண்டு  கோட்டைக்கு படையெடுத்தார்கள் சகோதரர்கள். (3)  அவர்களைத் தயார் படுத்துவதில் விகாரை பிக்கு ஒருவர் முக்கிய பாத்திரம் வகித்தார். நீங்கள் அங்கு கொள்ளையடிப்பதெல்லாம் உங்களுக்கே என்று அறிவித்தார்கள் மாயாதுன்ன சகோதரர்கள். அரண்மனையிலிருந்த விலைமதிக்க முடியாத பொற்காசுகள், பொன், பொருள், பொக்கிசங்கள் அனைத்தும் கொள்ளையடிக்கப்பட்டன. (3)  அரண்மனையை முற்றிலுமாக சூறையாடியதுடன், இறுதியில் சல்மான் என்கிற ஒரு சோனகவீரனை அனுப்பி தனது தந்தையை மாளிகையிலேயே கொலை செய்வித்தனர். (4) கி.பி. 1521 இல் நடந்த இந்த சம்பவமே “விஜயபா கொள்ளை” என்று அழைக்கப்படுகிறது.

கண்டி மன்னருக்கு எப்போதும் தனது ராஜ்ஜியதுக்கு அடுத்துள்ள கோட்டை ராஜ்ஜியத்தின் மீது பெரும் பீதி இருந்துகொண்டே இருந்தது. அதை பலவீனப்படுத்திவிட்டால் அல்லது தனக்கு ஆதரவானவர்களை ஆட்சியில் அமர்த்திவிட்டால் தனது ராஜ்ஜியத்தை நிம்மதியாக ஆளலாம் என்கிற எண்ணமே மேலோங்கியிருந்தது. அதன் விளைவாகவே தந்தையின் ஆட்சிக்கு எதிராக மகன்மார்களின் சதித்திட்டத்துக்கு ஆதரவளித்து கோட்டை ராஜ்ஜியத்தை சின்னாபின்னமாக ஆக்க உதவினார். இதனால் கோட்டை ராஜ்ஜியம் மூன்றாக பிளவு பட்டு ஆட்சி உருவாக்கப்பட்டது.

விஜயபாவைக் கைப்பற்றிய பின்னர், கோட்டை இராச்சியம் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது

விஜயபா சூறையாடலுக்குப் பிறகு இராச்சியம் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது.

  • கோட்டை - மூத்த மகன் புவனேகாபாகு (பிற்காலத்தில் “7ஆம் புவனேகபாகு மன்னர்” என்று அறியப்பட்டவர்)
  • ரய்கம் – பரராஜசிங்க ( பிற்காலத்தில் ரய்கம் பண்டார என்று அழைக்கப்பட்டவர்)
  • சீதாவக்க – மாயாதுன்ன (பிற்காலத்தில் சீதாவாக்க மாயாதுன்ன என்று அழைக்கப்பட்ட ஒரு போர் வீர மன்னனும் கூட)

இந்த நிகழ்வே இலங்கை முதற் தடவையாக காலனித்துவத்தின் பிடியில் இலங்கை வீழ்வதற்கு வழி சமைத்தது எனலாம். பலமாக இருந்த கோட்டை ராஜ்ஜியம் பிளவுபட்டு போனதால் போர்த்துக்கேயர்களால் இலகுவாக ஒவ்வொரு அரசரையும் தனித்தனியாக கையாள வழியேற்பட்டது. அவர்களுக்கு இந்தப் பிளவு வசதியானது.

சகோதர யுத்தம்

போர்த்துகேயர், கோட்டை மன்னர் புவனேகபாகுவின் உதவியுடன், கோட்டை இராச்சியத்தில் தங்கள் அதிகாரத்தை விரிவுபடுத்த முயன்றனர். மன்னர் மாயதுன்ன கோபமடைந்து கோட்டை இராச்சியத்தைத் தாக்கியபோது, புவனேகாபாகு மன்னர் போர்த்துகேயர்களின் உதவியுடன் இளவரசர் மாயதுன்னவின் படைகளைத் தாக்கினார். அந்த நேரத்தில் கள்ளிக்கோட்டையில் வசித்து வந்த மலபார் மன்னர் சமோரின் உதவியுடன் அங்கிருந்து முஸ்லிம் படைகளை அழைத்துவந்து மாயதுன்ன கொழும்பு கோட்டையை முற்றுகையிட்டார். போர்த்துக்கேயரின் இலங்கை மீதான ஆக்கிரமிப்பின் போதெல்லாம் இந்த முஸ்லிம் படைகள் அவர்களுக்கு பல தடவைகள் தொல்லை கொடுத்து கவனத்தை திசை திருப்பும் படைகளாக இருந்துள்ளன என்பதை வரலாற்று நூல்கள் பலவற்றில் இருந்து அறிந்து கொள்ளலாம்.

தனது மற்றைய சகோதரன் ரய்கம் பண்டாரவும் தனது படைகளுடன் மாயாதுன்னவுடன் இணைந்துகொண்டார்.  போர்த்துக்கேயரோ இந்தியாவில் இருந்து கோவாவின் உதவியுடன் இளவரசர் மாயாதுன்னின் படைகளைத் தாக்கி அவர்களை வெளியேற்றினர். இவ்வாறு மன்னர் மாயாதுன்ன கோட்டை ராஜ்யத்தை கைப்பற்ற பல தடவைகள் முயன்றார். கோட்டை ராஜ்ஜியத்துக்கு எதிரான போரை ஒரு வகையில் போர்த்துக்கேயருக்கு எதிரான “காலனித்து எதிர்ப்பு” போராகவும் வரலாற்றில் வியாக்கியானப்படுத்துவது வழக்கம். அது போல மாயதுன்னவுக்கு முஸ்லிம்கள் கொடுத்த ஆதரவை “முஸ்லிம்கள் இலங்கையின் சுதேசியர் பக்கம் நின்ற தரப்பாக” வரலாற்றில் போற்றப்படுவது வழக்கம். மாயாதுன்னவின் அரசவையில் மூன்று முஸ்லிம் அமைச்சர்கள் இருந்திருக்கிறார்கள். மாயாதுன்ன தனது பிரதான ஆலோசகராக முஸ்லிம் ஒருவரைத் தான் அருகில் வைத்திருந்தார்.

கி.பி. 1538 இல் ரய்கம் பண்டாராவின் மரணத்துடன், மன்னர் மாயதுன்ன தனது ராஜ்யத்தை சீதாவக்கவுடன் இணைத்தார், பின்னர் சீதாவக்கவை அந்தக் காலத்தின் மிக சக்திவாய்ந்த ராஜ்யமாக மாற்றினார்.

உள்நாட்டு குழப்பங்கள் வலுக்கின்ற அரசுகள் எல்லாம் அந்நிய ஆக்கிரமிப்புக்குள் இலகுவாக சிக்கிவிட்ட வரலாறை உலகம் முழுவதும் கண்டுள்ளோம். இலங்கை வரலாறு முழுவதும் அப்படிப்பட்ட அந்நிய ஆக்கிரமிப்புக்குள் பல தடவைகள் சிக்கியுள்ளதை அறிவோம். இலங்கையின் உள் முரண்பாடுகளும், நிலையற்ற ஆட்சிகளுமே அந்நியர் ஊடுருவவும், அரசியல் சீரழிவுகளை ஏற்படுத்தவும் ஈற்றில் ஆக்கிரமிக்கவும் ஏதுவாகியுள்ளன. 16 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் போர்த்துகேயர் இலங்கையில் ஆடிய நாடகங்களும், சூழ்ச்சிகளும் சிறந்த உதாரணங்கள்.

1527ஆம் ஆண்டு மாயாதுன்னைக்குச் சார்பாக சமோரினுடைய படைகளும், புவனேகபாகுவிற்குச் சார்பாக போர்த்துக்கேயப் படைகளும் கோட்டையரசின் மீதான உரிமப் போராட்டத்தில் பங்கு கொள்ளத் தொடங்கின. இந்நிலையானது 1539ஆம் ஆண்டு வரைக்கும் நீடித்துச் சென்றது.

நவீன போர்க்கருவிகளைத் தாங்கிய போர்த்துக்கேயருடைய படைகளை எதிர்த்து வெல்வது என்பது மாயாதுன்னைக்கு இயலாத காரியமாகத் தென்பட்டது. இதனால் போர்த்துக்கேயக் கப்பல்கள் கொழும்புத் துறைமுகத்தை விட்டுச் செல்லும் வரை பொறுத்திருந்துவிட்டு, அவை அகன்று சென்றபின், புவனேகபாகுவின் கோட்டை மீது தாக்குதலைத் தொடுக்கும் வழக்கத்தை மாயாதுன்னை பின்பற்றினான். ஆனால் போர்த்துக்கேயர்களது கப்பல்கள் இலங்கையில், கொழும்புத்துறைமுகத்தை வந்தடைந்ததும் மாயாதுன்னை தனது இராச்சியத்திற்கு பின்வாங்கிச் செல்வதுமாகக் காணப்பட்டான். இத்தகையதொரு தொடர்ச்சியான போர்முறையால் புவனேகபாகுவும், போர்த்துக்கேயரும் மிகவும் சலிப்புற்ற நிலையில், 1539ஆம் ஆண்டு போர்த்துக்கேயப் படைகள் மாயாதுன்னையை அவனது சீதாவாக்கை இராச்சியத்தின் எல்லை வரைக்கும் துரத்திச் சென்றன. தப்புவதற்கு வேறு வழியின்றி மாயாதுன்னை போர்த்துக்கேயருடன் ஒருவாறு சமாதானம் செய்து கொண்டதோடு, சமோரினது படைகளை போர்த்துக்கேயரின் வசம் ஒப்படைக்க வேண்டும் என்ற ஒரு நிர்ப்பந்தத்திலிருந்தும் மீளுவதற்காக, சமோரினது படைவீரர் சிலரது தலைகளைக் கொய்து அவற்றைப் போர்த்துக்கேயருக்கு மாயாதுன்னை அனுப்பிவைத்தான். (5)

இந்நிலையில் புவனேகவாகு தான் தொடர்ந்து 25 வருடகாலமாக கோவாவிலிருந்து வந்த போர்த்துக்கேயரின் படையணியினாலேயே தொடர்ந்து காப்பற்றப்பட்டு வந்தமையினை உணர்ந்து கொண்டவனாக போர்த்துக்கேயருக்கு பல விட்டுக்கொடுப்புகளை செய்யத் தொடங்கினான். அவர்களுக்கு படிப்படியாக கொடுத்து வந்த சலுகைகள் ஈற்றில் ராஜ்ஜியத்தையே எழுதி கொடுக்கும் நிலை வரை தொடர்ந்தது.

கோட்டையரசன் புவனேகபாகுவினது நடைமுறைகள் போர்த்துக்கேயருக்கு மிகுந்த நிர்வாக - நடைமுறைச்சிக்கல்களை உருவாக்கியதன் விளைவாக, போர்த்துக்கேயர் 1551 இல் ஒரு போர்த்துக்கேய படையினனைக் கொண்டு களனியில் வைத்து புவனேகபாகு மன்னனின் தலையில் சுட்டுக் கொன்றனர்.

அரச வாரிசான இளவரசன் தர்மபால சிறுவனாக இருந்த காரணத்தினால் அவனது தந்தை வீதிய பண்டார ஆரசனாக பொறுப்பேற்றுக்கொண்டான்.

தர்மபால என்கிற தொன் - ஜூவான்

இலங்கையின் வரலாற்றியலில் தர்மபாலவின் காலம் மிகவும் தனித்துவமானதாக அமைந்தது எனலாம். மிகவும் விசித்திரமான குணாதிசயங்களையும் கொண்டிருந்த தர்மபால மன்னன் போர்த்துக்கேயரின் கைப்பொம்மையாகவே தனது ஆட்சி முறைகளை நடாத்தி வந்திருந்தான். கோட்டையரசில் ஆட்சிபுரிந்த சிங்கள மன்னருடைய முடியுரிமையானது மூத்தசகோதரனிடமிருந்து அடுத்த சகோதரனுக்கே கைமாற்றம் பெற்றுச் சென்றமையைக் காணலாம். ஆனால் தர்மபால விடயத்தில் கோட்டையரசிற்கான முடியுரிமமானது அப்பாரம்பரிய முறைமையை முற்றாக மாற்றியமைத்திருந்தது. அவ்வாறான அரசியல் மாற்றத்தினை தமக்கு சாதகமாக ஏற்படுத்திக் கொடுத்தவர்கள் போர்த்துக்கேயர்களே.

இன்னும் சொல்லபோனால் வழமையான அரசியல் உரிமப்பிரகாரம் புவனேகபாகுவிற்குப்பின் மாயாதுன்னைக்கே கோட்டை இராச்சியம் சென்றிருக்க வேண்டும். அப்படித்தான் ரய்கம் பண்டாராவின் மரணத்துக்குப் பின்னர் ரய்கம் இராச்சியம் மாயாதுன்னவின் வசமானது.

ஆனால் புவனேகபாகு உயிரோடு இருந்த காலத்தில், ரய்கம் பண்டார மரணித்து விட்டமையால், புவனேகபாகு தனது பேரனாகிய தர்மபாலவை கோட்டையரசிற்கு வாரிசாக நியமிப்பதற்கு எண்ணியிருந்தான் எனக் கூறப்படுகிறது. ஆனால் போர்த்துக்கேயரும் அவ்விருப்பத்திற்கு செவிசாய்த்திருந்தனர். ஏனெனில் மாயாதுன்னை கோட்டையரசு முழுவதற்கும் அரசனானால் தமது வியாபாரச் சிறப்புரிமைகள் யாவும் சிதறடிக்கப்பட்டுவிடும் என்பதனை அவர்கள் நன்கறிந்தே இருந்ததனாலாகும். ஆகவே தர்மபாலவின் முடியுரிமத்தை கோட்டையரசில் உறுதி செய்துகொண்டனர்.

1551ஆம் ஆண்டில் புவனேகபாகு கொல்லப்பட்டு இறந்ததும், தர்மபாலவின் தந்தையான வீதிய பண்டார பதிலரசனாக நியமனம் செய்யப்பட்டான். வீதிய பண்டார ஏற்கனவே போர்த்துக்கேயர் மீது அதிவெறுப்புக் கொண்டவனாகக் காணப்பட்டிருந்த காரணத்தினால் கோட்டை இராச்சியத்துடனான கறுவா வியாபாரத்தில் போர்த்துக்கேயருக்குரிய இடத்தினையும், பங்கினையும் கொடுப்பதற்கு மறுத்து விட்டிருந்தான். இவ்வாறான ஒரு பின்னணியில் போர்த்துக்கேயர் வீதிய பண்டாரனுடன் நேரடிச் சமர் செய்தே ஆகவேண்டும் என்கிற முடிவுக்கு வந்தனர். வீதியபண்டாரவை எதிர்த்து நடாத்தப்பட்ட சமரில் போர்த்துக்கேயரின் எதிரியாக அதுவரை இருந்த மாயாதுன்னையும் சேர்ந்து கொண்டான். 

அரச வாரிசான இளவரசன் தர்மபால சிறுவனாக இருந்த காரணத்தினால் அவனது தந்தை வீதிய பண்டார ஆரசனாக பொறுப்பேற்றுக்கொண்டான். பின்னர் தர்மபாலவை கோட்டையரசனாக போர்த்துக்கேயர் நியமித்தனர். ஆனால் கிறிஸ்தவ மதத்திற்கு ஞானஸ்தானம் செய்யப்பட்டு பெயரையும் தொன் ஜூவான் தர்மபால என்கிற பெயரையும் மாற்றிய பின்னரே தர்மபால கோட்டையரசனாகப் போர்த்துக்கேயரால் பிரகடனப்படுத்தப்பட்டான் என்பதையும் இங்கு கவனிக்க வேண்டும். (6) புவனேகபாகுவின் மகள் சமுத்திரா தேவி. சமுத்திராதேவியை மணமுடித்தவர் தான் வீதிய பண்டார. அவர்கள் இருவருக்கும் பிறந்தவர் தான் தர்மபால. (7) கத்தோலிக்க மதத்துக்கு மாறிய இலங்கையின் முதலாது மன்னர் அவர் தொன் - ஜுவான் - தர்மபாலவின் பரிவான அரவணைப்பின் கீழ் போர்த்துக்கேயர் கோட்டையில் சகலவிதமான சலுகைகளையும் அதிகாரங்களையும் அனுபவித்தனர்.

மகாவம்சம் இருட்டடிப்பு செய்தவை

மகாவம்சம் இன்றும் எழுதப்பட்டு வருவதை அறிவீர்கள். இறுதியாக வெளிவந்த 6 வது தொகுதி 1978 -2010 ஆம் ஆண்டு காலப்பகுதியைக் குறிப்பதை அறிவீர்கள். மகாவம்சத்தின் மூலப் பிரதியாக அறியப்படும் மகாநாம தேரரால் எழுதப்பட்ட முதலாவது தொகுதியானது கி.மு. 483 லிருந்து கி.பி. 362 ஆம் ஆண்டு வரையானது மட்டுமே என்பதை நாமறிவோம். சூளவம்சத்தைத் தான் மகாவம்சத்தின் இரண்டாம் தொகுதியாக குறிப்பிடுவது வழக்கம். கி.பி  301 முதல் கி.பி 1815 வரையான காலப்பகுதியை தொகுத்திருக்கிறது அந்த சூளவம்சம். (8) அந்த இரண்டாம் தொகுதி தொகுதியில் தொன் ஜூவான் தர்மபால என்கிற ஒரு அரசனைப் பற்றிய எந்த கதைகளும் கிடையாது என்பதை இங்கு குறிப்பிட வேண்டும். அது மட்டுமல்ல இந்த “விஜயபா கொள்ளை” பற்றிய விபரங்களும் கூட மகாவம்சத்தில் கிடையாது. அதனால் சில வரலாற்றாசிரியர்கள் இந்தக் கதைக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் தவிர்த்தும் வந்துள்ளனர். ஆனால் இந்தக் கதைகளை “ராஜாவலிய” என்கிற முக்கியமான வரலாற்று ஆவணத்தில் விபரிக்கப்பட்டுள்ளது.

இந்த விபரங்கள் வேறு பல வரலாற்று ஆவணங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் 1598 வரை கோட்டை அரசை ஆண்ட இறுதி அரசன் தொன் ஜூவான் தர்மபால. “சிங்கள இலக்கிய வம்சம்” என்கிற நூலை வரலாற்று தொடர் நூல் தொகுதிகளை எழுதிய சன்னஸ்கல புஞ்சிபண்டார இன்னொரு தொகுதியில் தர்மபாலாவின் ஆட்சிக் காலம் 1550 – 1580 என்கிறார். (9)

யாழ் - நல்லூரில் கொல்லப்பட்ட வீதிய பண்டார

1553இல் வீதிய பண்டார சிறையில் இருந்து தப்பி போர்த்துக்கேயருக்கு எதிராக இயங்கி வந்த போது கிறிஸ்தவ மதத்துக்கு மாறுபவர்கள் மீது வெறுப்புற்று அவர்களை ஒடுக்கும் பணிகளிலும் ஈடுபட்டான். சிங்கள அரசின் ஆட்சியதிகாரச் சின்னமாக கருதப்பட்ட புத்தரின் புனித தாதுப்பல்லைக் கவர்ந்துகொண்டு, தன் பட்டாளத்தோடு வடக்கே யாழ்ப்பாணத்துக்கு தப்பிச் சென்றான். 

யாழ்ப்பாணத்தை அன்று ஆண்ட சங்கிலி மன்னன் அந்த நேரத்தில் போர்த்துகேய ஆட்சியை நாட்டிலிருந்து விரட்ட பிரயத்தனப்பட்டுக்கொண்டிருந்த அரசன். தனது பட்டாளம் சகிதம் வந்த வீதிய பண்டாரவை அவர் வரவேற்று பாதுகாத்தார். 

இருவருக்கும் இடையிலான பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து சிங்கள – தமிழர்கள் ஒன்றிணைந்த சுமார் 20,000 துருப்பினரைக் கொண்ட ஒரு படை உருவாக்கப்பட்டது. ஒரு குறிப்பிட்ட நாளொன்றின் போது மாலைவேளை பிரமாணம் எடுக்கும் உற்சவத்துக்காக தமிழ் படையினர் யாழ்ப்பாணம் நல்லூர் கோவிலில் கூடியிருந்தனர்.

வீதிய பண்டாரவும் அவருக்கு நெருக்கமான பல சிங்கள தலைவர்களும் அதில் பங்கேற்றனர். இதற்கிடையில், எதிர்பாராத ஒரு துர்ச்சம்பவம் நிகழ்ந்தது. ஏதோ தவறுதலாக எங்கோ தீப்பற்றி வெடித்துச் சிதறி அத்தீயின் ஒரு பகுதி வீதிய பண்டார இருந்த பகுதிக்கு அண்மையில் இருந்த வெடிமருந்தின் மீது விழுந்து திடீரென தீப்பற்றி எரிந்தது. 

தன்னைக் கொல்வதற்காக திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட சூழ்ச்சியென கருதிக்கொண்ட வீதிய பண்டார உடனேயே தனது வாளை வெளியில் எடுத்தார். உடனேயே அங்கு அவருடன் வந்த சிங்களத் தலைவர்களும் அவரைப் போலவே அவரைச் சூழ்ந்தபடி வாளை வெளியில் எடுத்து சண்டைக்குத் தயாரானார்கள். வீதிய பண்டாரவின் ஆட்கள் தம்மைத் தாக்கத் தயாராக இருப்பதாக எண்ணிக்கொண்ட தமிழ் படைத் தலைவர்களும் தங்கள் வாள்களை உயர்த்தினர்.  (10)

ஒரு கணத்தில் அது இரு தரப்பினருக்கும் இடையிலான கடுமையான போராக மாறியது. பெரும்போர் வீரனான வீதிய பண்டாரவின் வாளுக்கு தமிழ் வீரர்கள் இரையாகி வீழ்ந்தார்கள். இப்படி பலரும் மரணிக்கவே சண்டை முற்றி மேலும் பல தமிழ் வீரர்கள் அவரைச் சூழ்ந்து கொண்டு அவரைத் தாக்கத் தொடங்கினர்.

வீதிய பண்டாரவை எதிர்கொள்ள வழிதேடிய ஒரு படையினன் அங்கிருந்த புளியமரத்தின் மீது ஏறி ஒரு ஈட்டியை வீதிய பண்டாரவின் மீது வேகமாக எறிந்தான். அங்கேயே வீதிய பண்டார இறந்துபோனார். (11) வீதிய பண்டாரவின் இந்தச் சாவை சில சிங்கள வரலாற்றாசிரியர்கள் தமிழர் சூழ்ச்சி செய்து சிங்கள அரசரை கொன்றுவிட்டதாக சித்திரிக்கிற போதும் பல இடங்களில் அதை ஒரு தற்செயல் விபத்தாகவே ஒப்புக்கொள்வதை காணமுடிகிறது.

இலங்கையை அந்நியருக்கு எழுதிக் கொடுத்த சாசனம்

1580 ஓகஸ்ட் 12 அன்று மன்னர் தொன் ஜூவான் தர்மபால போர்த்துக்கேயரின் நிர்பந்தத்தின் விளைவாக கோட்டை ராஜ்ஜியத்தை அவர்களுக்கு பரிசாக அளிப்பதாக உயில் (மரண சாசனம்) எழுதி கொடுத்தான். (12) அந்நியராகிய போர்த்துக்கேயருக்கு இருக்க இடம் கொடுத்து, வியாபாரம் செய்வதற்கு அனுமதி வழங்கி, மதத்தைப் பரப்புவதற்கு உரிமம் வழங்கியதோடு, முடிவில் நாட்டையாட்சி புரியவும், தமது குடியேற்ற நாட்டு பரிபாலனத்தை இங்கு மேற்கொள்ளவும் கோட்டையரசர்கள் சிறந்த சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்து விட்டிருந்தனர். தர்மபாலவுடனான போர்த்துக்கேயர்களின் தொடர்பும் உறவு நிலையும் கோட்டையரசில் ஒரு புதிய அரசியல் யுகத்தினையே தோற்றுவித்து விட்டிருந்தது.

கோட்டையை எழுதிக்கொடுத்த வேகத்தில் போர்த்துகேயர் கொழும்பில் பல இடங்களிலும் தமது தேவாலயங்களை அமைத்தனர். பௌத்தர்களின் பாரம்பரிய விகாரையான களனி விகாரையும் அவர்களுக்கு எழுதிக் கொடுக்கப்பட்டது. அந்த விகாரையில் இருந்து வந்த வருமானத்தையும்சேர்த்து இந்த கத்தோலிக்க தேவாலயங்களின் விரிவாக்கத்துக்கு வழங்கினார்கள்.

1521ஆம் ஆண்டில் கோட்டை இராச்சியமானது மூன்றாகப் பிரிக்கப்பட்ட போது, மாயாதுன்னை சீதாவக்கையைப் பெற்றிருந்தான் என்பது குறிப்பிடத்தக்கது. ரய்கம், கோட்டை ஆகிய இரு ஆட்சிப் புலங்களுக்கிடையே சீதாவாக்கை இராச்சியம் அமைந்து காணப்பட்டது. பாரம்பரிய உணர்வும், வீரமும், தேசாபிமானமும் ஒருங்கே கொண்டிருந்த மாயாதுன்னையும் அவனது மகனான முதலாம் இராஜசிங்கனும் சீதாவக்கை இராச்சியத்தினை பலவழிகளிலும் பலமடையச் செய்து, தனித்துவமான ஒரு பண்பாட்டு நிலைக்களனாக உருவாக்கியிருந்தமை இலங்கை வரலாற்றில் அது பதிவு செய்யப்படுவதற்குக் காரணமாயிற்று. ரய்கம் பண்டார மரணமடைந்தது ரய்கம் இராச்சியத்தையும் சீதாவாக்கையுடன் இணைந்து, விஸ்தரித்ததோடு, இவ்விரு இராச்சியங்களுக்குமான நிலையான பாதுகாப்பினை பெற்றுக் கொடுப்பதற்காக முதலில் யாழ்ப்பாண அரசுடனும், பின்னர் தென்னிந்திய அரசுகளுடனும் தொடர்புகொண்டு, போர்த்துக்கேயரின் தாக்குதல்களிலிருந்து சீதாவாக்கையை மீட்டெடுப்பதற்கு முனைந்திருந்தான். முதலாம் இராஜசிங்கன் அந்த வழிமுறையில் ஒரளவிற்கு வெற்றியும் அடைந்திருந்தான் எனக் குறிப்பிடலாம்.

கோட்டை இராச்சியத்தையும், தொன் ஜூவான் தர்மபாலவையும் பாதுகாத்து, நிர்வகிக்க வேண்டிய பொறுப்பு போர்த்துக்கேயருக்கு ஏற்பட்டுக் கொண்டமை காரணமாக சீதாவாக்கை இராச்சியத்தின் இறைமையில் போர்த்துக்கேயர் கவனம் செலுத்த முடியாமற்போனது. அதே நேரத்தில் இந்தியாவிலுள்ள போர்த்துக்கேயரின் வர்த்தக மையங்களிலும் பண்டகசாலைக் குடியேற்றங்களிலும் 

போர்த்துக்கேயருக்கெதிரான கலகங்கள் ஆங்காங்கு தோற்றம் பெறத் தொடங்கியபோது  கொழும்புத்துறைமுகத்தினையும் கோட்டை இராச்சியத்தினையும் ஏககாலத்தில் பாதுகாப்பது மிகவும் கஷ்டமான காரியம் என்பதனையுணர்ந்த போர்த்துக்கேயர் 1565ஆம் ஆண்டு கோட்டையரசினின்றும் தர்மபாலவுடன் நீங்கி வந்து, கொழும்புத் துறைமுகப் பரப்பில் தமது வாணிப முகாம்களையொட்டி வாசம்செய்யத் தொடங்கினர் இவ்வரிய சந்தர்ப்பத்தை நன்கு பயன்படுத்திக் கொண்ட மாயாதுன்னை கோட்டையையும், அதன் நீண்ட கரையோரப் பரப்பினையும் கைப்பற்றித் தனது சீதாவாக்கை இராச்சியத்துடன் இணைத்துக் கொண்டான். இவ்விணைப்பின் பின்னர் போர்த்துக்கேயரைக் கொழும்புத் துறைமுகப்பரப்பினின்றும் வெளியேற்றுவதற்காக அவன் பல முறைகள் முயன்றும் அது கைகொடுக்க முடியாத காரியமாயிற்று.

விஜயபா கொள்ளை பற்றிய வரலாற்றுத் தகவல்கள்

தொன் ஜூவான் தர்மபாலவின் மூலம் தான் இறுதியில் போர்த்துக்கேயருக்கு கோட்டை இராச்சியத்தை பரிசுப் பத்திரத்தில் எழுதி கொடுக்கப்பட்டது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இதுவே போர்த்துகேயரிடம் இலங்கை மிகவும் எளிமையாக எழுதிக்கொடுத்த கதை. இலங்கை காலனித்துவத்துடம் முதற்தடவையாக பறிபோன கதை. அந்தக் கதைக்கு முத்தாய்ப்பாக அமைந்தது இந்த “விஜயபா கொள்ளை” எனப்படுகிற பிரசித்தி பெற்ற நிகழ்வு. ஆங்கிலத்தில் இதனை “Vijayaba kollaya” (Sack of Vijayabahu) என்றும் சிங்களத்தில் “විජයබා කොල්ලය” என்றும் அழைப்பார்கள்.

“விஜயபா கொள்ளை” என்கிற பெயரிலேயே இலங்கையின் பாடப்புத்தகங்களிலும் இந்த நிகழ்வு கற்றுக்கொடுக்கப்பட்டு வருகிறது. சிங்களத்தில் இதைப் பற்றி பல இலக்கிய படைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. வரலாற்று நூல்களெங்கும் இந்த சம்பவம் நிறைந்துள்ளன. தமிழில் மிகவும் அரிதாகவே இந்த சம்பவம் மிகச் சுருக்கமாகப் பேசப்பட்டுள்ளது எனலாம்.

“விஜயபா கொள்ளை” பற்றிய செய்திகள் மகாவம்சத்தில் இல்லை. "ராஜாவலிய" போன்ற நூல்களில் உள்ளன. அதற்கு வெளியில் அறிய மிகவும் முக்கியமான மூல விபரங்களைக் கொண்ட நூலாக கருதப்படுவது (Conquista Temporal e Espiritual de Ceylão)  “இலங்கையை ஆத்மீக லௌகீக துறையில் வெற்றி பெறல்”என்கிற நூல். இந்த நூல் போர்த்துகேயர் இலங்கையில் இருந்து விரட்டப்பட்டு 12 ஆண்டுகளின் பின்னர் அதாவது 1687 இல் கத்தோலிக்க பாதிரியார் குவைறோஸ் எழுதியது. பெர்னான்டோ டி குவைறோஸ் (Fernão de Queirós, 1617- 1688) இலங்கையில் நெடுங்காலம் தங்கியிருந்த போர்த்துக்கேய மதபோதகர். போர்த்துக்கேய இலங்கை தொடர்பான பல விபரங்களை உள்ளடக்கிய இந்த நூலை போர்த்துக்கேய காலத்து காலனித்துவ ஆட்சி பற்றி எழுதுபவர்கள் அனைவரும் தவறவிடாத / தவறவிடக்கூடாத நூல். 1687இல் அது எழுதி முடிக்கப்பட்டாலும் அது கையெழுத்துப் பிரதியாகவே மூன்று நூற்றாண்டுகளாக கிடப்பில் இருந்தது. பின்னர் அதை இலங்கை அரசு 1913 இல் இருந்ததை இருந்தபடியே கையெழுத்துப் பிரதியாக டச்சு மொழியிலேயே வெளியிட்டது. அதன் பின்னர் இந்த நூலை பிரபல வரலாற்றாசிரியர் எஸ்.ஜி.பெரேரா ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்து மூன்று தொகுதிகளாக The Temporal and Spiritual Conquest of Ceylon என்கிற தலைப்பில் 1930 இல் வெளியிடப்பட்டது. இந்த மொழிபெயர்ப்பின் திருத்திய பதிப்பு 1992 இல் வெளியானது. இந்த மொழிபெயர்ப்பை திருத்திய பதிப்பு 1992 இல் வெளியானது. இந்த நூலில் விஜயபாகு கொள்ளையை “Vigia-Bau-Code” என்று அழைப்பதை கவனிக்கலாம். (13)

இலங்கையில் - தந்தைகொல்லி கதைகள்

நேரடி இரத்த உறவுகளைக் கொன்று சிம்மாசனத்தையும், அதிகாரத்தையும் கைப்பற்றிய செய்திகள் உலகளவில் நிகழ்ந்திருக்கும் கதைகள் தான். இலங்கையின் சரித்திரத்தைப் பொறுத்தளவில் அப்படி ஏராளமான கதைகளைக் காணலாம். சிங்கள எழுத்தாளர்கள் பலர் கூட சிங்கள பௌத்தர்களின் புனித நூலான மகாவம்சத்தை ஆதாரம் காட்டி இதனைப் பட்டியலாகவே சுட்டிக்காட்டியுமுள்ளனர்.

மகாவம்சத்தின் தொடக்கத்திலேயே சிங்கள இனத்தின் தோற்றம் குறித்து கூறப்படுகிறது. சிங்கள இனத்தின் தோற்றம் விஜயனின் இலங்கை வருகையிலிருந்து தொடங்குவதாகக் கூறுகிறது மகாவம்சம். அந்த விஜயனின் தந்தை சிங்கபாகு தனது தந்தையான சிங்கத்தின் தலையைக் கொய்து கொன்ற கதையே இந்த “தந்தை கொல்லி” கதையின் முக்கிய ஆரம்பம் எனலாம்.

இலங்கையின் பழம்பெரும் மன்னர்கள் பற்றிய விபரங்களை மகாவம்சம், சூளவம்சம், தீபவம்சம், ராஜாவலிய போன்ற நூலிகளில் இருந்து தொகுக்கலாம். அதன் படி 194 மன்னர்கள் பற்றிய குறிப்புகள் உள்ளன.

  • அவர்களில் 175 பேர் சிங்கள மன்னர்கள்
  • 19 தமிழர்கள் அல்லது அந்நிய தேசத்து மன்னர்கள்
  • சிங்கள மன்னர்களில்
  • 05 பேர் “தந்தைகொல்லிகள்” என அடையாளப்படுத்தப்பட்டவர்கள். அதாவது தந்தைமாரைக் கொன்று சிம்மாசனத்தைக் கைப்பற்றியவர்கள்.
  • 60 பேர் சிம்மாசனத்துக்கு உரிய பட்டத்து இளவரசர்கள் அரசரைக் கொன்று அரசரானவர்கள்.
  • 53 பேர் தமது சொந்தச் சகோதரர்களைக் கொன்று அரசரானவர்கள்
  • அரசரைக் கொன்று அரசாட்சியைப் பிடித்த தளபதிகள் 30 பேர்
  • அரசரைக் கொன்று ஆட்சியைப் பிடித்த இராணி ஒருவர் 
  • அரசரைக் கொன்று ராஜ்ஜியத்தைக் கைப்பற்றிய ஒரு வாயிற் காவலாளியும் கூட உள்ளார். (14)

இதன் பிரகாரம் உரிய வழியில் இயல்பாக அரியணைக்கு வந்தவர்கள் 25 சிங்கள மன்னர்கள் மட்டுமே உள்ளனர்.

இந்த வழியில் மன்னர் விஜயபாகுவைக் கொன்ற அவரது மூன்று மகன்கள் பற்றிய கதையும் முக்கிய இடத்தை வரலாற்றில் வகிக்கிறது.

நூல்

“விஜயபா கொள்ளை” என்கிற சொற்பதம் பிற்காலத்தில் பிரபல்யம் பெறுவதற்கு காரணமாக அமைந்தது “விஜயபா கொள்ளை” என்கிற பெயரில் 1938 ஆம் ஆண்டு வெளிவந்த நாவல்.

இந்நாவலை இயற்றிய டபிள்யு ஏ சில்வா இலங்கையின் பிரசித்திபெற்ற இலக்கியவாதியாக அறியப்பட்டவர். 1890 இல் பிறந்த அவர் தனது 17 வது வயதிலேயே “சிரியலதா” என்கிற தலைப்பில் தனது முதல் நாவலை எழுதிவிட்டார். அதன் பின்னர் பல சிறு கதைகளும் நாவல்களும் எழுதியிருக்கிறார். 1922 இல் அவர் எழுதிய தமிழ் அரசி ஒருவரின் கதையை “லக்ஷ்மி” என்கிற பேரில் வடித்த நாவல் சிங்கள இலக்கியங்களில் மொழிக் கையாள்கைக்கு முன்னுதாரணங்களில் ஒன்றாக கற்பிக்கப்படும் நாவல். பிரபல சிங்கள பண்டிதரான ஈரியகொல்ல ஓரிடத்தில் குறிப்பிடும் போது டபிள்யு ஏ சில்வாவின் படைப்புகளில் உச்சம் தொட்ட படைப்பாக “லக்ஷ்மி”யைக் குறிப்பிடுகிறார். (15)


67 வயதுவரை வாழ்ந்த அவர் இறக்கும்வரை திருமணம் முடிக்கவில்லை. “நான் இலக்கியத்தை ஏற்கெனவே மணமுடித்தவன் அதற்கு மேல் என்ன?” என்று கேள்வி எழுப்பியவர். (16) கொழும்பில் அவர் வாழ்ந்த வீடு பின்னர் அவரின் நினைவு இல்லமாக ஒரு நூதனசாலையாக இன்றும் இயங்குகிறது. அவரின் பெயரில் கொழும்பில் “டபிள்யு ஏ.டீ.சில்வா மாவத்தை” என்கிற ஒரு பிரதான வீதியும் உண்டு.

இலங்கையில் திரைப்படமாக்கப்பட்ட முதல் நாவல் டபிள்யு ஏ.டீ.சில்வா எழுதிய “கெலே ஹந்த” என்கிற நாவல் தான். 1953 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர் ருக்மணி தேவி. ருக்மணி தேவி இலங்கையின் முதல் திரைப்படமான “கடவுனு பொறந்துவ” என்கிற படத்தின் மூலம் அறிமுகமான இலங்கையின் முதலாவது கதாநாயகி என்பதை அறிந்திருப்பீர்கள். அவர் ஒரு தமிழ்ப் பெண்ணும் கூட. “கெலே ஹந்த” என்கிற இந்த நாவல் பிற் காலத்தில் சிங்களத் தொலைகாட்சி தொடர் நாடகமாகவும் வெளியானது.

இதைத் தவிர சிரியலதா, ஹிங்கன கொல்லா, தெய்யன்கே  ரட்டே, தைவயோகய போன்ற அவரின் நாவல்களும் திரைப்படங்களாக்கப்பட்டன. அவரின் சில படைப்புகள் தமிழில் மொழியாக்கம் பெற்றுள்ளன. பாட நூல்களிலும் அவரைப் பற்றியும் அவரின் படைப்புகள் பற்றியும் கற்பிக்கப்படுகின்றன. அவரின் நினைவில்லத்தைப் பார்வையிட பாடசாலை மாணவர்கள் அழைத்துச் செல்லப்படுகிறார்கள்.

திரைப்படம்

“விஜயபா கொள்ளை” என்கிற அந்த நாவலை அப்படியே ஒரு திரைப்படமாக தயாரித்து 2019 ஓகஸ்ட் மாதம் வெளியிடப்பட்டது. இதை இயக்கியவர் இலங்கையின் புகழ்பெற்ற எழுத்தாளரும், ஆய்வாளருமான பேராசிரியர் சுனில் ஆரியரத்ன. மூலக்கதை டபிள்யு ஏ.டீ.சில்வாவின் நாவலாக இருந்தாலும் அதன் பின்னர் இதை ஒரு திரைக்கதைக்கு உரிய வடிவமாக ஆக்கியிருந்தவர் மறைந்த பிரபல சினிமா இயக்குனரான திஸ்ஸ அபேசேகர. திஸ்ஸ அபேசேகர இறுதியாக எழுதிய திரைக்கதை அது. அவர் அதை திரைப்படமாக்குமுன்னர் மறைந்துவிட்டார்.


பேராசிரியர் சுனில் ஆரியரத்ன 20கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியவர். அது போல 60 திரைப்படங்களுக்கு மேல் திரைக்கதை எழுதியிருக்கிறார். பல நூற்றுக்கணக்கான பாடல்களை இயற்றியிருக்கிறார். நாடகங்களையும் இயற்றியிருக்கிறார். வரலாறு, பண்பாடு, இலக்கியம் சம்பந்தமான ஏராளமான ஆய்வுக் கட்டுரைகளையும் நூல்களையும் எழுதியவர். அவர் எழுதிய “தமிழ் பௌத்தம்” (தெமல பௌத்தயா) என்கிற ஆய்வு நூல் இலங்கையில் தமிழ் பௌத்தத்தின் தோற்றம், வளர்ச்சி, நீட்சி, வீழ்ச்சி பற்றிய விரிவானதொரு நூல். இலங்கையில் தமிழ் பௌத்தம் பற்றி அந்தளவு விரிவான ஒரு நூல் இல்லவே இல்லை எனலாம். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திலும் பேராசிரியராக பணியாற்றிய அனுபவம் உள்ளவர். தனது படைப்புகளின் மூலம் அவர் அளவுக்கு தமிழ் மொழி, தமிழ் பண்பாடு, தமிழர் வரலாறு பற்றி சிங்கள மக்களுக்கு எடுத்துரைத்த ஒருவர் இலங்கையில் இல்லை என்பதை உறுதியாகக் கூறலாம். சிலப்பதிகாரம், மணிமேகலை, கண்ணகி பற்றியெல்லாம் சிங்கள இலக்கியங்களுடன் ஒப்பிட்டு பல கட்டுரைகளை எழுதியிருக்கிறார்.

சமீபகாலமாக அவர் இதிகாசக் கதைகளுக்கு முன்னுரிமை வழங்கி சிங்கள திரைப்படங்களை இயக்குவதை காண முடிகிறது. அவர் இயக்கிய உப்பலவன்னா, குசபபா, பத்தினி (கண்ணகி பற்றியது), பிம்பா தேவி போன்ற திரைப்படங்களின் வரிசையில் 2019 இல் “விஜயபா கொள்ளை” திரைப்படத்தையும் இயக்கினார். அவர் அடுத்ததாக இயக்கிக்கொண்டிருக்கிற திரைப்படம் “கதிர திவ்வியராஜா”. அது தமிழ்க் கடவுளரான முருகன் வள்ளி காதல் உறவு பற்றிய கதை. தெய்வானை பாத்திரத்தில் நடிப்பவர் இந்தி நடிகை சொனாக்ஷி ரவாத். முருகனாக நடிப்பவரும் இந்தி நடிகரான சமர் வெர்மனி. விரைவில் இத்திரைப்படம் திரைக்கு வரவிருக்கிறது.

“விஜயபா கொள்ளை” சுனில் ஆரியரத்ன இயக்கம் 23வது திரைப்படம். அந்தக் கொள்ளை, மற்றும் மன்னர் விஜயபாவை இளவரசர்கள் மூவரும் கொலை செய்வது போன்றவற்றை உள்ளடக்கிய திரைப்படமாக இருந்தாலும் அத்திரைப்படத்தின் உள்ளடக்கம் ஒரு காதல் கதையே. இத்திரைப்படம் இப்போது யூடியுப்பில் பார்க்க முடிகிறது. இக்கட்டுரைக்காக பல காட்சிகளை மீண்டும் மீண்டும் பார்க்க நேரிட்டது.

போர்த்துக்கேயருக்கு எதிராகப் போராடும் இரு தளபதிமார்கள் நயனானந்த – அசங்க ஆகியோர். அவர்கள் இருவரையுமே ஏக காலத்தில் காதலிக்கிறாள் நீலமணி என்கிற பிரபுத்துவ குடும்பத்தைச் சேர்ந்த அழகிய பெண். அந்த இரு வீரர்களும் நீலமணியை நேசிக்கிறார்கள். இந்த முக்கோணக் காதலில் மூவரும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்க இயலாமல் பல சந்தர்ப்பங்களில் தடுமாறுகிறார்கள்.


ஒரு நாள் போர்த்துக்கேயப் படையினர் நீலமணியின் வீட்டை சுற்றி வளைத்து காவலாளிகளையும் தாக்கிவிட்டு அவளின் பெற்றோரை கொல்வதற்கு எத்தனிக்கிறார்கள். அதுவரை அவர்கள் துரோகி எனக் கருதி வந்த நயனானந்த என்கிற வீரன் அவர்களைக் காப்பாற்றுகிறான். இடையில் அசங்க என்கிற அவர்களின் தளபதியும் இணைந்துகொள்கிறான். அசங்கவும் நீலமணியும் திருமணமாகவிருக்கிற காதலர்கள். சண்டையில் காயமடைந்த அவ்வீரனை இரகசியமாக பாதுகாக்கிறாள் நீலமணி. அவர்களுக்கு இடையில் காதல் உருவாகிறது.

அவர்கள் இருவரும் ஏற்கெனவே நயனானந்தவை தேடிக்கொண்டிருக்கிற அசங்கவிடம் மாட்டிக்கொள்கிறார்கள். சண்டையிடுகிறார்கள். நீலமணி தான் நயனானந்தவையும் காதலிப்பதாகக் கூறுகிறாள். நீலமணிக்காக அந்த சண்டை நிற்கிறது. அசங்க கவலையோடு விட்டுக்கொடுக்கும் நிலைக்கு வந்தடைந்தாலும் நீலமணிக்கு அசங்கவை இழக்கத் தயாரில்லை.

இப்படித் தொடர்கிற கதையின் இறுதியில் பறங்கியருடனான நயனானந்த சிறைப்பிடிக்கபடுகிறான். அவனுக்கு ஏதும் நேர்ந்தால் தான் உயிரோடு இருக்க மாட்டேன் என்றும் அவனை காப்பாற்றுமாறும் அசங்கவிடம் மன்றாடுகிறாள் நீலமணி. பறங்கி முகாமில் இருக்கும் பாதிரியாரின் உதவியுடன் பாதிரியாரின் சீருடையில் முகாமுக்கும் போய் நயனானந்தவை மீட்டு அவனை அனுப்பி விட்டு அந்த இடத்தில் அசங்க இருக்கிறான். 

அதற்கு முன்னர் பறங்கியர் முஸ்லிம் வியாபாரிகளின் கப்பல்களைத் தாக்கியளித்து முஸ்லிம் வியாபாரியின் அழகிய மகளை கவர்ந்து வந்து தளபதியின் ஆசை நாயகியாக முகாமில் வைத்திருக்கிறான். அந்த முஸ்லிம் பெண் அசங்கவை இரகசியமாக விடுவிக்கிறாள். இருவரும் சேர்ந்து பறங்கிப் படையினருடன் மோதுகிறார்கள். அசங்க நீலமணி – நயனானந்த இணைவுக்காக தன் காதலுடன் சேர்த்து தன் உயிரையும் இழக்கிறான்.

விஜயபா கொள்ளை காட்சியில் மன்னர் விஜயபாகுவைத் தேடி அரண்மனைக்குள் மாயாதுன்ன நுழைந்ததும் அங்கு கொல்லப்பட்ட நிலையில் விஜயபாகு இருப்பதாகத் தான் காட்சி அமைக்கப்பட்டிக்கிறது. விஜயபா கொள்ளை நடந்த பின்னர் அரண்மனைக்குள் அசங்க பல சடலங்களைக் கடந்து அமைதியாக நுழைகிறான். அங்கே பிரதான பிக்கு காணப்படுகிறார். என்ன சோகம் இது என்று அசங்க வினவ அதற்கு அந்த பிக்கு “இது தான் “விஜயபா கொள்ளை” என்கிறார்.

இத்திரைப்படத்தில் பறங்கி முகாமில் சிங்கள பெண் நடனமாடுகின்ற போர்த்துகேய சிப்பாய்கள் பாடுகின்ற ஒரு பாடல் உண்டு. பேராசிரியர் சுனில் ஆரியரத்ன இயற்றிய “சிங்கலி நோனே” என்கிற அந்த அட்டகாசமான பாடல் எனக்குள் ஏற்படுத்திய பாதிப்பு தான் இக்கட்டுரையை எழுதத் தூண்டியது. 

போர்த்துகேய படைகள், அவர்களின் முகாம், கடலின் தூரத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள கப்பல்கள், குடியும் கும்மாளமுமாக இருக்கிற பறங்கிப் படைகள் என அக்காலத்தை அழகாக கண்முன் நிறுத்தியிருக்கிறார் பேராசிரியர் சுனில் ஆரியரத்ன.

“விஜயபாகு கொள்ளை”யின் 500 வது வருட நினைவில் பல வரலாற்று உண்மைகளை கட்டவிழ்த்து அறிதலையும் சேர்த்தே நாம் செய்ய வேண்டியிருக்கிறது. குறிப்பாக தமிழில் இக்கட்டுரையைத் தவிர வேறெதுவும் விரிவாக இருக்க வாய்ப்பில்லை என்பதை உறுதியாக கூறலாம். அதேவேளை இக் கதையோடு ஒட்டிய உப கதைகள் பலவற்றைக் கொண்ட ஒரு வரலாற்றுக் கட்டுடைப்பை விரிவாக செய்வதையே பரிந்துரைக்கிறேன்.

உசாத்துணை:

  1. என்.சரவணன் – “ஒரே வீட்டில் புசித்தல்” : சிங்கள சமூக அமைப்பில் “பல கணவர் முறை” – “சிங்களப் பண்பாட்டிலிருந்து” – குமரன் இல்லம் - 2020
  2. K. M. De Silva, - History of Sri Lanka - Oxford University Press, 1981 - Sri Lanka
  3. Paul E. Pieris – Ceylon the Portuguese Era – Vollume 1 – Tisara Prakasakayo Ltd - 1913
  4. “ராஜாவலிய” நூலில் தான் சலமன் என்பவனை அனுப்பி விஜயபாகுவைக் கொன்றார்கள் என்று குறிப்பிடப்படுகிறது. ஆனால் 1687 இல் போர்த்துகேய - கத்தோலிக்க பாதிரியார் குவைறோஸ் எழுதிய Temporal and Spiritual Conquest of Ceylon நூலில் மூன்று மகன்களும் சேர்ந்து விஜயபாகுவைக் கொன்றார்கள் என்று குறிப்பிடப்படுகிறது.
  5. செ. கிருஷ்ணராஜா - இலங்கை வரலாறு - பிறைநிலா வெளியீடு - 2005
  6. தொன் ஜூவான் தர்மபாலவின் பெயரை தமிழில் பல நூல்களில் பெரிய பண்டார என்றும் குறிப்பிடுகின்றனர். இதைவிட சிங்களப் பெயர்களை தமிழ் நூல்கள் பலவற்றில் தமிழ்ப்படுத்தி அழைப்பதால் அவர்களை தமிழர்கள் என்று கருதக்கூடிய தவறையும் வரலாற்றாசிரியர்கள் பலர் செய்து வந்திருக்கின்றனர். குறிப்பாக பெயரின் விகுதியில் “ன்”, “ம்” என்பவற்றை சேர்ப்பதன் மூலம் செய்து வந்துள்ளதை அவதானிக்கலாம். உதாரணத்திற்கு தர்மபால - “தர்மபாலன்”, பண்டார - “பண்டாரம் போன்ற உதாரணங்களைச் சொல்லலாம்.
  7. K. M. De Silva, - History of Sri Lanka - Oxford University Press, 1981 - Sri Lanka
  8. என்.சரவணன்- “மகாவம்சம் இன்றும் எழுதப்படுகிறது!” – தினக்குரல் – 2018 ஓகஸ்ட் (பகுதி 1), 28, செப்டம்பர் -2 (பகுதி 2)
  9. සන්නස්ගල පුංචිබණ්ඩාර, සිංහල සාහිත්‍ය වංශය, ලේක් හවුස්, කොළඹ, 1964 – p. 360
  10. H. W. Codrington - Short History of Ceylon - Macmillan and Co, Limited, 1926
  11. Rajavaliya - Edited by B.Gunasekara - George J.A.Skeen, Government Printer, Ceylon - 1900 - p.86
  12. “போர்த்துகேயரின் இலங்கை வருகை” இலங்கையின் அரச கல்வி வெளியீட்டு திணைக்களத்தால் வெளியிடப்பட்ட ஆண்டு 9 க்கான “வரலாறு” பாடத்திட்டத்தில் 3 வது அத்தியாயம்.
  13. Fernao De Queyroz (Author) – Temporal and Spiritual Conquest of Ceylon - Translated From Portuguese By Fr. S.C. Perera. Asian Educational Services – New Delhi - 1992
  14. இந்த பட்டியல் பல கட்டுரைகளில் காணக்கிடைத்த போதும் இது மேலும் அதிகமாக இறுகக் கூடும் என்பது எனது வாசிப்பனுபவத்தில் கருதுகிறேன். அந்த பட்டியலை முறையாக செய்தால் நிச்சயம் இன்னும் அதிகமாக இருக்கக் கூடும்.
  15. குமாரஜித் – “விமர்சகர்கள்; அழுக்கைத தேடும் அதிகாரப்பூர்வ ஈக்கள்” என்கிறார் டபிள்யூ. ஏ. த சில்வா” சிலுமின – 24.11.2018
  16. “மீளப்பிறந்த அறிஞர் டபிள்யூ.ஏ. சில்வா” -தேஷய – 01.06.2019

நன்றி - தாய்வீடு

http://thaiveedu.com/pdf/Thaiveedu_Jan_2021.pdf



 

இணைந்திருங்கள்


Followers

Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates