வட்டரக்க விஜித தேரோ சமீபகாலமாக அரசியல் அரங்கில் சர்ச்சைக்குளுக்கு இலக்கான முக்கிய பௌத்தத்துறவி. பொதுபல சேனாவை எதிர்த்து பகிரங்கமாக போராடும் ஒரேயொரு பிக்கு எனலாம். அதனால் உயிர் அச்சுறுத்தல்களுக்கும், சரீர தாக்குதல்களுக்கும் இலக்கானவர். அவரை கடத்திசென்று ஆணுறுப்பை சிதைத்து வீதியில் வீசி எறிந்தார்கள். தலைமறைவாக இருக்கும் இடத்திலிருந்து தொலைபேசி மூலம் பெறப்பட்ட நேர்காணல் இது. (28.09.2014 இன்றைய தினக்குரல் வெளியானது)
நேர்காணல் - என் சரவணன்
ஆரம்ப கால “தேசிய ஐக்கிய முன்னணி”யினூடான அரசியல் பிரவேசம் குறித்து
இனத்துவ கட்சி என்றல்லாமல் சிங்கள, தமிழ், முஸ்லிம் இனங்களையும் இணைத்த ஒரு கட்சியை ஆரம்பிப்போம் என்கிற ஆலோசனையை நான் மறந்த அஷ்ரப் அவர்களுக்கு அப்போது முன் வைத்தேன். அதன் படி நாங்கள் இணைந்து தேசிய ஐக்கிய முன்னணியை 1995இல் ஆரம்பித்தோம். அஷ்ரப் அவர்கள் அப்போது முஸ்லிம் காங்கிரசின் தலைவராக இருந்தபடியால் என்னை தலைவராக நியமித்தார்கள். அதன் தலைவராக எனது பெயரை தேர்தல் ஆணைக்குழுவிலும் பதிவு செய்யப்பட்டது. ஆனால் அந்த கட்சியை அவரது துணைவி இறுதியில் சிதைக்க காரணமாகி விட்டார்.
ஆனால் அந்த சமயத்தில் நீங்கள் ஒரு முஸ்லிம் கட்சியின் தலைவர் என்று கங்கொடவில சோம ஹிமி மேடைகளில் பகிரங்கமாக குற்றம் சாட்டினாரே.
அவர் அப்படி பேசிய காணொளிகளை ஞானசார தேரரும் பல இடங்களில் எனக்கு எதிராக உபயோகித்தார். இன்று ஞானசார தேரர் போல 90 களில் சோம தேரரும் இயங்கியிருந்தார். ஏனைய வழிபாட்டு தெய்வங்களை இகழ்ந்ததுடன், மதங்களை நோக்கி அவர் கடுமையாக எதிர்த்து பிரசாரம் செய்தார். அஷ்ரப்போடு சோம ஹிமி நடத்திய தொலைகாட்சி விவாதம் கூட பிரசித்தி பெற்றது. அப்படிபட்ட ஒரு சூழலில் தான் தேசிய ஐக்கிய முன்னணியை கட்டினோம். உண்மையில் சோம ஹிமி எனது விடயத்தை திரிபுபடுத்தியிருந்தார் அப்போது. அவர் “தேசிய ஐக்கிய முன்னணி” என்பதற்குப் பதிலாக. “முஸ்லிம் ஐக்கிய முன்னணி” என்றும், அப்படிப்பட்ட ஒரு முஸ்லிம் கட்சிக்கு எப்படி ஒரு பௌத்த துறவி தலைவர் ஆக முடியும் என்று திரிபுபடுத்தி பிரசாரம் செய்தார். மிகவும் சந்தர்ப்பவாத முனைப்பு அது.
தேசிய ஐக்கிய முன்னணிக்கு என்ன நடந்தது.
அஷ்ரப் அவர்களின் மறைவோடு அந்த கட்சி மறைந்து போனது. ஆனால் அவர் உயிருடன் இருக்கும் போதே அவரது கட்சியில் இருந்த சிலரது சுயநலன் காரணமாக ஒவ்வொருவர் கைகளுக்கு மாறி அவர் காலத்திலேயே அது சிதைவடையத் தொடங்கியிருந்தது. அவரின் மறைவுக்குப் பின்னர் முஸ்லிம் காங்கிரசின் தலைமைத்துவ பிரச்சினை எழுந்தபோது முஸ்லிம் காங்கிரஸ் ஹக்கீம் கைக்கும், தே.ஐ.மு அஷ்ரப் அவர்களின் துணைவி பேரியல் அஷ்ரப் அவர்களின் கைக்கும் சென்றது. இன்றும் ஒரு பதிவு செய்யப்பட்ட கட்சியாக அது தேர்தல் திணைக்களத்தில் உள்ளது. அசாத் சாலி அவர்கள் அந்த கட்சியின் தலைவராக தன்னை வெளிக்காட்டி வந்தபோதும். சட்ட ரீதியில் தேர்தல் திணைக்களத்தால் வேறெவரது கைகளுக்கும் வழங்கியதாக தெரியவில்லை.
பேரியல் அஷ்ரப் அவர்கள் தே.ஐ.மு சார்பில் பாராளுமன்றத்துக்கு சென்றார். பின்னர் அங்கிருந்தும் எறியப்பட்டார் பின்னர் அக்கட்சி இல்லாமலே போனது.
அஷ்ரப் அவர்களின் மறைவோடு நான் கட்சியிலிருந்து முழுமையாக வெளியேறினேன்.
அதன் பின்னர் உங்கள் அரசியல் செயல்பாடுகள்.
மஹியங்கன பிரதேசத்தை சூழ பல்வேறுபட்ட பொதுப்பிரச்சினைகள் எழுந்தன. குறிப்பாக விவசாயிகளின் பிரச்சினை. கூடவே 80களில் மகாவலி திட்டத்தினால் குடிபெயர்க்கப்பட்டவர்கள் பின்னைய காலங்களில் எதிர்நோக்கிய பல்வேறு சிக்கல்கள் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் தலை தூக்கியதால் எனது சேவைகளை அவர்களுக்காக தொடர்ந்து செய்தேன். இவற்றை மேற்கொள்ள அரசியல் அதிகாரம் தேவைப்பட்டது எனவே 2000 ஆண்டில் பிரதேச சபை தேர்தலில் சுயேட்சை குழுவொன்றை போட்டியிடச் செய்தேன். அதில் 102 வாக்குகளால் தோல்வியுற்றேன். அதன் பின்னர் 2011ஆம் ஆண்டு பிரதேச சபை தேர்தலில் ஆளும் கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணிக்காக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் சார்பில் போட்டியிடும் படி அழைப்பு வந்தது.
அந்த தேர்தலில் 3வது அதிக விருப்பு வாக்குகளைப் பெற்று தெரிவாகி இன்று வரை பிரதிநிதித்துவம் செய்துவருகிறேன். ஆனால் எனக்கு ஏற்பட்ட உயிர் அச்சுறுத்தல் காரணமாக பல கூட்டங்களுக்கு கலந்துகொள்ள முடியாமல் போனதால் பதவியை இழக்கும் சந்தர்ப்பம் சில தடவைகள் நிகழ இருந்தது. அந்த கூட்டங்களுக்கு போவதற்காக பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டபோதும்; அதையும் மீறி பொது பல சேனாவை சேர்ந்தவர்கள் அங்கு வந்து தாக்க முற்பட்டதை ஊடகங்களில் கண்டிருப்பீர்கள். இன்று இந்த பயங்கரவாதிகள் பகிரங்கமாக திரிகிறார்கள். அமைதியை விரும்பும் நாங்கள் மறைந்து வாழ்கிறோம்.
பொலிஸ் பாதுகாப்பில் உங்களுக்கு திருப்தி இல்லையா
பொலிசாரின் பாதுகாப்பில் எனக்கு எந்த நம்பிக்கையும் இல்லை. பல சந்தர்ப்பங்களில் அவர்கள் தீயவர்கள் பக்கமே நின்றார்கள். அது தெளிவானது.
உதாரணத்திற்கு 2013 ஓகஸ்ட் 19 அன்று கண்டியில் வைத்து பொது பல சேனாவை சேர்ந்த 30 பேர் எனது வாகனத்தை தாக்கி எனது கழுத்தைக் காயப்படுத்தினார்கள். கொழும்பு ஆஸ்பத்திரியில் எனக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சம்பந்தப்பட்டவர்களில் நான் அடையாளம் கண்ட சிலரது புகைப்படங்களைக் கூட போலிசுக்கு வழங்கினேன். போலீசார் அதில் எவரையும் விசாரணை செய்யவோ கைது செய்யவோ இல்லை.
அதன் பின்னர் ஒரு நாள் ஓகஸ்ட் 31 அன்று வறக்காபொல ரஜமகா விகாரையில் இரவை கழித்தேன். அப்போது அங்காங்கு ஒளிந்து மறைந்து வாழ்த்த நாட்கள். அன்றிரவு ஒரு வேனில் வந்த கூட்டமொன்று சுற்றிவளைத்து என்னை கடத்திக் கொண்டு போக முற்பட்டபோது அவர்களிடமிருந்து தப்பி காட்டுக்குள், இருட்டில் பல தூரம் நடந்து அத்தனகல்ல சென்று பின்னர் ருவன்வெல்ல வந்து காலையில் பஸ்ஸில் ஏறி இறுதியில் மொனராகலையில் உள்ள எனக்கு தெரிந்த ஒரு கிறிஸ்தவ பாதிரியாரிடம் அடைக்கலம் புகுந்தேன். அன்று அந்த தேவாலயத்தில் எனது உடல் சகதியைக் கழுவி, நீராடியபின் அந்த பாதிரியாரின் பாதுகாப்பில் என்னை அவரது வாகனத்தில் கொழும்புக்கு அழைத்துச் சென்றார். இதனை நான் பொலிஸ் நிலையத்தில் முறையீடு செய்யாமல் பொலிஸ் மா அதிபரிடமே முறையீடு செய்தேன். இந்த சம்பவத்தில் சம்பத்தப்பட்ட ஒருவரை அடையாளம் காட்டியிருந்தேன். அவர் வறக்காபொல Food cityயில் பணியாற்றும் போதுபலசேனாவின் கேகாலை மாவட்ட அமைப்பாளர் பிரபாத் தான் பிரதானமானவர் என்று நான் கூறியிருந்தேன்.இது வரை எந்தவித நடவடிக்கையும் இல்லை.
அது போல இந்த வருடம் கொள்ளுபிட்டி தேவாலயமொன்றில் 2014 மே தினமன்று எனது உரையை ஆற்றிவிட்டு திரும்பும் வழியில் என்னை பின்தொடர்ந்த 302-2129 இலக்கமிடப்பட்ட கார் ஒன்று எங்களை போகுமிடமெல்லாம் தொடர்ந்து வந்தது. அப்போது என்னோடு காவலுக்காக பொலிசாரும் என்னோடு இருந்தார்கள். எனது நிலைமையை ஜனாதிபதிக்கு விளக்கியதனால் எனக்கு கிடைக்கப்பெற்ற பொலிஸ் பாதுகாப்பு அது. அந்த பொலிசாரையும் சேர்த்துக்கொண்டு தான் நான் அதே தினம் தெமட்டகொட போலீசில் புகார் செய்தோம். இன்றுவரை அது குறித்த எந்த விசாரணையும் இல்லை. இது போல பல சம்பவங்களை கூறலாம்.
ஜனாதிபதி உங்களுக்கு அளித்த பொலிஸ் பாதுகாப்புக்கு என்ன நடந்தது.
கடந்த ஏப்ரல் 18ம் திகதி பத்தேகம சமித்த தேரோவுடன் சென்று நிலைமையை விளக்கி பாதுகாப்பு கேட்டோம். ஜனாதிபதி தனக்கு இத்தனை நடந்ததும் தெரியாது என்றும் உடனேயே எனக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கும் படியும் ஏற்பாடு செய்தார். ஆனால் இரண்டே மாதங்களில், அதாவது ஜூன் 7ஆம் திகதியன்று காலை போலீசார் ஒன்றுமே கூறாமல் ஆயத்தமாகிக்கொண்டு விடைபெற்றார்கள். சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி காமினி நவரட்ன அவர்களிடம் இது குறித்து வினவியபோது, மன்னியுங்கள் மேலிடத்திலிருந்து வந்த உத்தரவு அது என்று கூறினார். மேலும் ஞானசார பல இடங்களில் ‘சிங்கள பெளத்தர்களுக்காக போராடும் எங்களுக்கு பாதுகாப்பு இல்லை, ஆனால் ‘மொஹமட் வட்டாரக விஜித’வுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என்றார். திரைமறைவில் அவர்கள் எனது பாதுகாப்பை நீக்க அழுத்தம் பிரயோகித்திருக்கலாம்.
அப்படியென்றால் பானந்துரையில் உங்களுக்கு நடந்த விபரீதம் அதற்குப் பின்னர் தான் நடந்ததா..?
ஆம், ஜூன் 19 அன்று அது நடந்தது. அடுத்த நாள் காலை பிரதேச சபை கூட்டத்திற்கு செல்வதற்காக தயாராக இருந்தேன். இரவு 10 மணிக்கு எனக்கு கொண்டுவந்து கொடுத்த கொக்கோகோலாவும் அப்பமும் கொண்டுவந்து தந்தார்கள். அதன் பின்னர் எனக்கு அடுத்த நான் மாலை 4 மணிக்குத்தான் பெரிய ஆஸ்பத்திரியில் வைத்து உணர்வு வந்தது. அதன்போது தான் என் நிலை புரிந்தது. முதல் நாள் இரவு சமீர என்பவரின் வீட்டில் தான் இரவு இருந்தேன் என்பதையும் பொலிசாரிடம் கூறினேன்.
சமீர என்பவர் உங்களுக்கு நம்பகமானவரா?
அவர் எனது உறவினர். ஆனால் அவரது வீட்டுக்கு பின்புறம் அமைந்துள்ள விகாரைக்கு ஞானசார தேரர் உள்ளிட்டவர்கள் வந்து செல்வார்கள் என்றும் அந்த விகாரையை சேர்ந்தவர்கள் BBS செயற்பாட்டாளர்கள். எனவே சமீரவுக்கும் தொடர்புகள் இருந்திருக்கின்றன என்று தற்போது தெரியவந்திருக்கிறது.
இதனை செய்தவர் யார் என்று கூறமுடியுமா..?
அன்று இரவு என்ன நடந்தது என்று எதுவும் எனக்கு தெரியாது. எங்கே கொண்டு சென்றார்கள், என்ன செய்தார்கள், எப்படி காயப்படுத்தினார்கள், எப்படி என்னை கண்டெடுத்தார்கள். ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றது எதுவுமே எனக்கு தெரியாது.
அப்படியென்றால் இதனை செய்தவர்கள் BBS இனர் என்கிற குற்றச்சாட்டு...?
என்னை தொடர்ச்சியாக பல முறை தாக்கியும், அச்சுறுத்தியும் வந்தவர்கள் அவர்கள் தான். அவர்களைத்தான் நான் குற்றம்சாட்ட முடியும். எனக்கு வேறெந்த எதிரியும் இல்லை. நிப்பொன் ஓட்டலில் வைத்து ஞானசார என்னை பார்த்து “உன்னை துண்டுதுண்டாக்கி ஆற்றில் வீசிவிடுவேன்” என்று எச்சரிக்கை செய்த சம்பவம் உலகமறிந்தது.
உங்களை நீங்களே காயப்படுத்திகொண்டதாக பொலிசார் கூறினார்களே.
இலங்கையில் நீதி எப்படி செயல்படுகிறது என்பது உங்களுக்கு தெரியுமல்லவா. அளுத்கம சம்பவத்தில் துப்பாக்கிச்சூட்டுக்கு பலியான இளைஞர்கள்; வெட்டுக்காயங்களுக்கு இலக்காகியே பலியானார்கள் என்று நீதிமன்ற வைத்தியாதிகாரியின் அறிக்கை கூறியது. பின்னர் இப்போது உண்மை நிரூபணமாகியுள்ளது. அளுத்கம சம்பவத்துக்கு காரணமான ஞானசார குறித்து குற்றப்புலனாய்வுப் பிரிவு; கண்துடைப்புக்காக ஒரு நாள் விசாரணை செய்து விட்டுவிட்டது. அத்தோடு முடிந்தது விசாரணை. நிப்பொன் ஓட்டலில் மேற்கொண்ட அடாவடித்தனம், உயிர் அச்சுறுத்தல் குறித்து ஆதாரங்களுடன் முறையீடு செய்தும் எந்தவித வழக்கும் தொடுக்கப்படவில்லை.
என்னைப் பொறுத்தளவில் அரசாங்கம் அவர்களை தங்களது தேவைக்கு பயன்படுத்திக்கொள்கிறது. எனவே அவர்களை சகல இடங்களிலும் பாதுகாக்கிறது. எதை செய்வதற்கும் அனுமதியளித்திருக்கிறது. இது எதிர்கால இன,மத ஐக்கியத்துக்கு விடுக்கப்பட்டிருக்கும் பெரும் சவால்.
எனது சம்பவத்திலும் கூட; அன்று சமுர்த்தி அதிகாரி தன்னை தானே மரத்தில் கட்டிக்கொண்டதைப் போல எனது கதையையும் முடித்துவிட நடந்த சூழ்ச்சி இது. நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கு என்பதால் சில விடயங்களை தற்போதைக்கு வெளிப்படுத்த என்னால் முடியாது.
ஆனால் நீங்கள் தான் அப்படி வாக்குமூலம் அளித்ததாக போலீசார் கூறுகிறார்களே.
ஆஸ்பத்திரியில் எனக்கு ஒருபுறம் எனக்கு சிறுநீர் கழிப்பதற்க்காக குழாய் பொருத்தியிருந்தார்கள், மேலும் செலைன் கொடுக்கப்பட்டுக்கொண்டிருந்தது, அதைவிட கட்டுக்கள் போடப்பட்டிருந்தன. உடல் ரீதியிலும், உலா ரீதியிலும் சோர்ர்வுற்றிருந்தேன். அப்படியிருக்க அன்று குற்றப்புலனாய்வினர் சமீரவின் குழந்தை, தாயார், மற்றும் பலரையும் ஏற்றிக்கொண்டுவந்தார்கள். அவர்கள் எனது உறவினர். அவர்கள் என்னை சுற்றி அழுது கதறினார்கள். சமீரவை சிறைசெய்திருக்கிறார்கள், குழந்தைகள் உணவருந்தவில்லை, மாமாவுக்கு பிரஷர் ஏறிவிட்டது, நாங்கள் சாகப்போகிறோம், மகனை விடுதலை செய்ய ஏதாவது செய்யுங்கள் என்றும் குற்றப்புலனாய்வினர் ஒருபுறம் இருக்கையில் கதறினார்கள். இப்படி இரு நாட்களாக என்னை வற்புறுத்தினார்கள். இறுதியின் நான்; சமீர இதற்கு பொறுப்பில்லை, எனது உறவினர் அவர், அவரில் எனக்கு நம்பிக்கை உள்ளது, அவரை விடுவியுங்கள் தேவைப்பட்டால் என் மீது வழக்கு தொடுங்கள் என்று பொலிசாரிடம் கூறினேன். இதனை சந்தர்ப்பமாக பாவித்து போலீசார் எனக்கு எதிராக முழுமையாக இறங்கினார்கள். ஆனால் நீதிமன்றத்தில் சகல உண்மையையும் வெளியிட்டேன்.
நீங்கள் அரசாங்கத்தின் அரசியல் பிரதிநிதியாக இருந்தும் அரசாங்கம்; அரசாங்கத்துக்கு வெளியில் உள்ள தரப்பை சார்ந்திருகிறார்களா...
நான் பிரதேச சபை உறுப்பினராக இருந்ததற்கென்ன; பேரளவில் ஆளும்கட்சியை சேர்ந்தவனாக இருக்கிறேன். அரசாங்கத்தின் தூதுவனாகவோ அவர்களின் அரசியலை பிரதிநித்துவபடுத்தவோ இல்லை. என்னை விட BBS அரசாங்கத்துக்கு அவசியப்படுபவர்களாக உள்ளார்கள். அதனால் தான் என் தரப்பில் நியாயங்கள் இருந்தும் BBS க்கு எதிராக எந்த சட்ட பூர்வமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசாங்கத்தின் இந்த போக்கு குறித்து எனது எதிர்ப்பையும் வெளிக்காட்டி வந்திருக்கிறேன்.
இந்த BBS பயங்கரவாத உயிர் அச்சுறுத்தல் காரணமாக ஒரு வருடகாலமாக சிங்கள பௌத்த; அதிலும் பிக்கு ஒருவர் நாடெங்கும் ஓடியும் ஒளிந்தும் இருக்க தள்ளப்பட்டிருக்கிறேன்.
உங்களுக்கு ப்ரஹ்ம தண்டயளித்து சங்க சபையிலிருந்து நீக்கி விட்டதாக ஞானசார கூறுகிறாரே.
நான் சியம் நிகாயவை சேர்ந்தவன். 21 பேரைக்கொண்ட சங்க சபையொன்று உள்ளது. ஏதாவது குற்றம் சுமத்தப்பட்ட பிக்குமார்களை விசாரிப்பதும், தீர்ப்பு வழங்குவதும் அங்கு தான். ஒருவரை நீக்குவதும் அங்கு தான். புத்தரின் போதனைகளின் படி இது மிகவும் ஜனநாயக ரீதியில் இது மேற்கொள்ளப்படும். ஆனால் ப்ரஹ்ம தண்டனை என்றெல்லாம் இப்போது அளிக்கப்படுவதில்லை.
ஞானசார ஜூன் 21 அன்று மஹியங்கனையில் ஒரு கூட்டத்தை கூட்டினார். அங்கு சில பிக்குமார் BBS உடன் இணைந்துகொண்டார்கள். இந்த பிக்குமார் மஹியங்கனையில் உள்ள ஒரு நலன்புரி சங்கமொன்றில் உறுப்பினர்கள். ஆக, இலங்கையிலுள்ள பல ஆயிரகணக்கான நலன்புரி சங்கங்களில் இதுவும் ஒன்று. பதுளை மாவட்ட BBS தலைவர் தான் அதன் தலைவர். இவர்கள் கூடி கையெழுத்திட்டது தான் எனக்கு எதிரான ப்ரஹ்ம தண்டனை. இது ஒரு கேலிக்கூத்து இல்லையா. இவர்கள் யார். இவர்களுக்கு யார் இந்த அதிகாரம் வழங்கியது. சங்க சபையில் வழங்கப்படும் பிரஹ்ம தண்டனை கூட இரண்டு அதிகபட்சம் மாதங்கள் தான். இதில் அப்படி எதுவும் சொல்லப்படவில்லை. என்னை அசிங்கப்படுத்துவது தான் இதன் ஒரே நோக்கம்.
BBS இன் அரசியல் போக்கு குறித்து
வரலாற்றில் இதற்கு முன்னரும் இனவாத இயக்கங்கள் தோன்றி மறைத்திருக்கின்றன. ஆனால் BBS போன்ற அரசாங்கத்தின் அதிக ஆதரவுள்ள அதி பயங்கர அமைப்பு இருந்ததில்லை. நாம் 30 வருட யுத்தத்தின் விளைவை கடந்து வந்திருக்கிறோம் அப்படிப்பட்ட நிலையில் தற்போது அழுத்கமையில் பேரவலம் நிகழ்ந்தது. அங்கு ஒரு வருடமாகவே பெட்ரோல் ஊற்றப்பட்டு வந்தது. ஒரு தீப்பொறி ஒன்று மட்டும் தான் தேவைப்பட்டது. ஞானசார அந்த தீப்பொறியை வைத்தார். பொலிசாரும், படையினரும் பார்த்துக்கொண்டிருக்க அது நிகழ்ந்தது. இன்று முஸ்லிம்களுக்கு; நாளை கத்தோலிக்கர்களுக்கு எதிராகவும் தயார்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது.
சிங்கள பௌத்தர்கள் அல்லாதவர்கள் புண்படும் வகையில் சகலதும் நிகழ்கின்றன. அன்று ஆப்கானிஸ்தானில் பாமியன் சிலைகள் தகர்க்கப்பட்டபோது முஸ்லிம் தலைவர்களும், முஸ்லிம் அமைப்புகளும் எம்மோடு கலந்து கொண்டு தமது எதிர்ப்பை வெளியிட்டார்கள். ஆனால் இவர்கள் இன்று பல சிங்கள பௌத்தர்கள் மத்தியில் மோசமான வெறுப்புணர்ச்சியை வளர்த்துவிட்டுள்ளார்கள்.
இலங்கையில் முஸ்லிம் பயங்கவாதம் என்கிற ஒன்று இல்லை. ஆனால் மத்திய கிழக்கிலுள்ள பயங்கரவாத அமைப்புகளுக்கு ஞானசார அழைப்பு விடுக்கிறார். உங்கள் இனத்தை நாங்கள் அழிக்கிறோம், வாருங்கள் அவர்களை விடுதலை செய்யுங்கள் என்று ஞானசார அழைக்கிறார்.
ஞானசார தேரோவின் சமகால அரசியல் பாத்திரம் குறித்து...
நிச்சயமாக நீண்டகால அரசியல் உள்நோக்கத்தோடு இயங்குகிறார்கள். ஆனால் பல பொய்கள் கூறி மக்களை வழிநடத்துகிறார்கள். நிப்பொன் ஓட்டலில் வைத்து அவரது ஐபேட் ஆல் என்னை தாக்க முற்பட்டார். எனது காவியுடையை இழுத்தார். முகத்தை நோக்கி அடிக்க அடிக்க பாய்ந்தார். அப்போது சாராய வாசனை அவரிடமிருந்து வந்தது. மேடைகளில் உணர்ச்சிவசப்பட்ட பேச்சுக்களின் பின்னால் அவரது குடிபோதையும் இருக்குமென்று நம்புகிறேன். ஒரு சாதாரண மனிதன் பேசத் தயங்கும் வார்த்தைகளைக் கூட காவியுடை அணிந்து பேசுகிறார். கௌதம புத்தர் கூறுவார் “புஷ்ப பாணி” என்று. அதாவது பௌத்த துறவிகள் பூவைப் போன்ற மென்மையாக பேசவேண்டும். அதுபோல ஞானசார தேரர் போன்றோர் பேசுவதை “கூத்த பாணி” என்பார். அதாவது “கக்கூஸ் வாய்” என்று எடுத்துக்கொள்ளலாம்.
ஒரு லட்சம் பேரை பிக்குவாக மாற்றுவதாக கூறினார். சாசனத்துக்கு தகுதியற்ற 40 பேரின் காவியுடைகளை கழற்றியாதாக கூறினார். எதுவும் நடக்கவில்லை. அதனை செய்ய இவர்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை. ‘அரசியல் என்பது குப்பை,... சாக்கடை அதற்குள் ஒருபோதும் வரப்போவதில்லை’ என்றார். ஆனால் 28ஆம் திகதி நடத்தப்போகும் மாநாட்டில் “ஜனாதிபதி வேட்பாளரை விதைப்போம்” என்கிறார். பல அரசியல் முன்மொழிவுகளை வெளியிடவிருப்பதாக அறிவித்திருக்கிறார். அது இந்த நாட்டிலுள்ள அனைத்து சிறுபான்மை இனங்களதும் உரிமைகளைப் பறிக்கின்ற, அவர்களை அரசியல் நீக்கம் செய்கின்ற ஒரு திட்டமாகத்தான் நிச்சயமாக இருக்கும். அதனை பார்க்காமலே என்னால் நிராகரிக்கமுடியும். எதிர்கால ஜனாதிபதியை தீர்மானிக்கின்ற பாத்திரத்தை இவர்களால் வகிக்க முடியும் என்று நம்புகிறார்கள்.
நாட்டில் இன்று மக்கள் முகம் கொடுக்கும் முக்கிய பிரச்சினைகள் குறித்து எதுவும் கதைப்பதில்லை.
அவர்கள் மாநாட்டுக்காக 7000 பிக்குமாரை எதிர்பார்க்கிறார்கள். அவ்வளவு பேர் வரமாட்டார்கள் என்பது என் கணிப்பு. கணிசமானோர் இருந்தாலும் காவி நிறத்தை மேற் தோற்றத்தில் பார்த்ததும் பெருமளவு தோன்றும். எவ்வளவு பேர் வந்தாலும் இது சரியான ஒரு போக்கு அல்ல. மகாநாயக்கர்களே கூறினாலும் கூட இதனை நான் இதனை ஏற்றுக்கொள்ளமாட்டேன். மக்களை நாசம் செய்யும் ஔ பயணம் இது. இது நரகத்துக்கு இட்டுச்செல்லும் பாதையை இவர்கள் திறக்கிறார்கள். எப்படி நாசம் செய்வோம் என்பதையும் அழுத்கமையில் ஒத்திகை பார்த்தார்கள்.
தமிழ், முஸ்லிம்கள் இன்று இலங்கை என்கிற தமது நாடு தமக்கு இல்லாமல் போகிறது என்கிற எதிர்கால அச்சத்தை எதிர்நோக்கியிருக்கிறார்கள். எனக்கு தெரியும் சில முஸ்லிம் இனத்தவர்கள் தமது கலாசார ஆடைகளை அச்சம் கருதி தவிர்க்க தொடங்கியிருகிறார்கள். அடையாளத்தை மறைத்து வாழ கற்றுக்கொள்ள தள்ளப்பட்டுள்ளார்கள். பதுளையில் BBS கூட்டம் சமீபத்தில் நடத்தப்பட்டபோது “கடைகளுக்கும், டியுசன்களுக்கும் பெண் பிள்ளைகளை பர்தா அணிந்து செல்ல விடவேண்டாம். வீடுகளிலேயே இருங்கள் என்று அங்குள்ள பள்ளிவாசலில் மௌலவி அறிவித்தார். மிகவும் அவலகரமான நிலை இது.
மஹியங்கனையில் சிங்கள முஸ்லிம் உறவு நன்றாக இருந்தது. சேர்ந்து உழைப்பில் ஈடுபட்டார்கள். ஆனால் அங்கு இவர்கள் இனவாத தீயை மூட்டிவிட்டு வந்தார்கள். இன்று ஆளை ஆள் சந்தேகம் கொண்டு பார்க்கிறார்கள்.
சிங்கள பௌத்த ராஜ்யத்தை உருவாக்குவோம் என்றே மாநாட்டு விளம்பரங்களில் உள்ளது..!!?
ஜனாதிபதி, ஆளும்கட்சி பிரமுகர்கள், பொலிஸ் அதிகாரிகள், பிக்குமார் என்போர் முஸ்லிம்களின் இப்தார் நிகழ்வுகளை நடத்துவதும், அவற்றில் கலந்துகொள்கின்ற செய்திகளையும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கண்டிருப்போம். அவை வெறும் கண்துடைப்பு. இதில் எந்த உண்மையோ பயனோ கிடையாது.. வெறும் நடிப்பு. இன்று முஸ்லிம்களின் பாதுகாப்புக்காக மேற்கொள்ளவேண்டியவை எவ்வளவோ இருக்கிறது.
சகல உயிரினங்களையும் காக்க வேண்டும் என்கிற பௌத்த போதனையை பிக்குமார் ஏற்றுக்கொள்ளும்போது; தமிழ், முஸ்லிம் இனங்களதும் ஒத்துழைப்பின்றி அதனை சாத்தியப்படுத்துவது எவ்வாறு. அதற்க்கு மாறாக சிங்கள பௌத்த மக்களின் தலைகளில் விஷமேற்றி, ஏனைய இனங்கள் மீது வெறுப்புணர்ச்சியையும், எதிர்ப்புணர்வையும் தூண்டி வருகிறார்கள். ஞானசார சமீபத்தில் கூட “தலைக்கு மேலால் பறந்து போய்விடுங்கள் பரவாயில்லை. எங்கள் தலைகளில் வந்து கூடு கட்ட முயல வேண்டாம்” என்று எச்சரித்திருந்தார்.
மகாத்மா காந்தி சொன்னார் ... “இனவாதமென்பது நாட்டையும் மக்களையும் அழிப்பதோடு நில்லாது அதற்கு தூபமிட்ட சக்திகளும் சேர்ந்து தான் அழிந்து போவார்கள்.” என்று.