Headlines News :

காணொளி

ஜனாதிபதி விருது

ஜனாதிபதி விருது
நமது மலையகத்துக்கு

சுவடி

ஹென்றி பேதிரிஸ்: மரணத்தின் பின் விடுதலை! (1915 கண்டி கலகம் –26) - என்.சரவணன்


மரண தண்டனையை நிறுத்துமாறு இங்கிலாந்திலிருந்து ஆணை பிரபித்ததன் பின்னரும் அந்த கட்டளையை தலைகீழாக விளங்கிக்கொண்டு ஹென்றியை குறித்த தினத்துக்கு முன்பாகவே சுட்டுக் கொன்று மரண தண்டையை நிறைவேற்றும் தீர்மானம் எடுக்கப்பட்டது.

27 வயதுடைய தனவந்த குடும்பத்தை சேர்ந்த குடும்பத்தின் ஒரேயொரு வாரிசான ஹென்றியின் படுகொலையில் சதி மட்டுமல்ல, விதியும் சேர்ந்து தான் விளையாடியிருந்தது. தன் தரப்பு வாதங்களை முன்வைக்கவோ, குற்றச்சாட்டையும், தீர்ப்பையும் எதிர்த்து முறையீடு செய்ய எந்த வாய்ப்பும் ஹென்றிக்கு வழங்கப்படவில்லை. இராணுவச் சட்டத்தின் பேரால் இப்படிப் பலர் கொல்லப்பட்டார்கள்.

07.07.1915 காலை ஹென்றி முகச்சவரம் செய்து, முகம் கழுவி, தனது கப்டன் சீருடையை அணிந்து தயாராகியிருந்த விதத்தைப் பார்த்தால் மரணத்துக்கல்ல, தன் கடமைக்கு தயாராக வெளிக்கிளம்புவதைப் போல இருந்தது.

குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னரே தயாராக இருந்த ஹென்றியின் சீருடையில்; தான் அதுவரை பெற்ற வர்ண பதக்கங்களும், நட்சத்திரங்களும் மட்டுமே காணப்படவில்லை. மரணத்துக்கு பயந்த எந்த அறிகுறியும் ஹென்றியிடம் காணப்படவில்லை.

வெலிக்கடை சிறைச்சாலை அதிகாரி டீ.சீ.தேவேந்திர அங்கு கூடியிருந்த சிறைச்சாலை அதிகாரிகள், வைத்தியர், பிக்குமார் உள்ளிட்ட பலர் முன்னிலையில் ஹென்றியை சுட்டுக்கொல்லும் இராணுவ நீதிமன்றத் தீர்ப்பை மறுபடியும் வாசித்துக் காட்டினார்.

ஹென்றி அங்கிருந்தவர்களுக்கு வணக்கம் செலுத்தி விடைபெற்று செல்லும் போது சிறைச்சாலை வைத்தியர் மேர்ல்லிடம் “நான் எந்தவித குற்றமும் புரியாத நிரபராதி” என்று மட்டும் கூறினார். மேர்ல் கொலன்னாவ பிரதேசத்தில் அரசாங்க வைத்தியசாலையில் கடமையாற்றியவர். சிறையில் இருந்த சிங்களத் தலைவர்களுக்காக விசேட உணவுகளை தயாரித்து கொண்டு வந்து கொடுப்பவர் அவர்.

அதிகாலை 6 மணிக்கு தண்டனை நிறைவேற்ற தீர்மானிக்கப்பட்டிருந்தது. பஞ்சாப் படையினரின் பலத்த பாதுகாப்பு மத்தியில் ஹென்றி சிறைச்சாலைக்கு வெளியே உள்ள வெளிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். சிறைக் கைதிகள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் சிறைகளைத் தாண்டியே அழைத்து செல்லப்பட்ட ஹென்றி தனது ஒன்றுவிட்ட சகோதரரான எல்பட் விஜேசேகரவுக்கு வணக்கம் செலுத்திக்கொண்டே ஏனைய கைதிகளுக்கும் தனது கண்களால் விடைபெற்றபடி கடந்து சென்று திறந்த வெளியை அடைந்தார். அந்த வெளி இன்று பொரல்லையில் அரசாங்க அச்சகம் அமைந்துள்ள கட்டடத்துக்கு பின்னால் அமைந்துள்ளது.

நான்கு பஞ்சாப் படையினர் சூழ இருந்த ஹென்றி அங்கு நிறுத்தபட்டிருந்த கதிரையில் அமருமாறு கூறிக்கொண்டே கறுப்புத் துணியொன்றைக் கொண்டு ஹென்றியின் கண்களை மூட எத்தனித்த போது,
“எனது கண்களை மூட வேண்டாம்!
நீங்கள் என்னை சுடுவதை நான் காண வேண்டும்”
என்றார்.
ஆனால் இது தண்டனையளிக்கும் வழிமுறை என்றும் அதற்கு குறுக்கிட வேண்டாம் என்றும் அதிகாரி கேட்டுக்கொண்டபோது அந்த விதிகளுக்கு கட்டுப்பட்டு தனது காற்சட்டைக்குள் இருந்த தனது கைக்குட்டையை எடுத்து தானே தனது கண்களைக் கட்டிக்கொண்ட ஹென்றி..

“ஆம்... நான் தயார்... உங்கள் கடமையை நிறைவேற்றுங்கள்” என்று உரத்த குரலில் கூறினார்.

பொலிஸ் மா அதிபர் ஹெர்பர்ட் டவ்பிகின் (Herbert Layard Dowbiggin) தனது தலைக்கவசத்தை அசைத்து சுடுவதற்கான சமிக்ஞையைச் செய்தார். ஆரம்பத்திலிருந்தே ஹென்றியை கொன்றே ஆவது என்பதில் திடமாக இருந்தவர் டவ்பிகின்.

பஞ்சாப் படையினரே தன்னை சுட்டுக்கொல்ல வேண்டும் என்பது ஹென்றியின் இறுதி ஆசைகளில் ஒன்று. பஞ்சாப் படையினர் கத்தோலிக்கர் அல்லாதவர்கள், ஆசியர்கள் என்பது அதற்கான காரணம்.

பஞ்சாப் படையினனின் துப்பாக்கியிலிருந்து புறப்பட்ட ரவை வேகமாகச் சென்று ஹென்றியின் நெஞ்சைத் துளைத்தது. ஹென்றியின் உயிரைப் பறிக்க அந்த ரவை போதுமானதாக இருக்கவில்லை. அங்கிருந்த பிரித்தானிய படையதிகாரியொருவர் தனது கைத்துப்பாக்கியை எடுத்துக்கொண்டு சென்று ஹென்றியின் நெஞ்சை நோக்கி மீண்டும் சுட்டதில் ஹென்றியின் தலை சிறிது சிறிதாகத் தொங்கி உயிர் பிரிந்தது.

அந்த வெடிச்சத்தங்கள் அந்த சிறைச்சாலையில் இருந்த அனைவரையும் ஒரு கணம் அதிர வைத்தது.

இரண்டு நிமிடங்களின் பின்னர் ஹென்றியின் உயிர் பிறந்துவிட்டதை அதிகாரியொருவர் உறுதிசெய்தார்.

அன்றைய தினம் ஹென்றியை சுட்டுக்கொல்லவிருப்பதை முன்கூட்டியே அறிந்திருந்த பலர் சிறைச்சாலைக்கு வெளியில் குழுமியிருந்தனர். அந்த சிறைச்சாலைக்கு வெளியில் இருந்த மிகப்பெரிய மரங்களின் கிளைகளில் ஏறி இருந்தபடி அங்கு நடக்கும் அசைவுகளைக் காண முயற்சித்துக் கொண்டிருந்தனர் பலர். அப்படி அந்த கிளைகளில் ஏறியிருந்த இளைஞர்களில் ஒருவர் பிற்காலத்தில் இலங்கையின் ஜனாதிபதியாக ஆன ஜே.ஆர்.ஜெயவர்த்தன.

ஹென்றியைக் கொல்லும்போது அமர்ந்திருந்த கதிரை இரத்தத்தால் தோய்ந்திருந்தது. அதனை எடுத்துச் சென்ற சிறையதிகாரிகள் அதிர்ச்சியுடனும், சோகத்துடனும் அங்கு இருந்த சிங்களத் தலைவர்களுக்கு அக் கதிரையைக் காண்பித்து..

“அடுத்து... உங்களுக்கும் இதே கதி தான்...” என்று சத்தமிட்டனர். சிங்களத் தலைவர்களுக்கு எச்சரிக்கையும், பீதியையும் ஏற்படுத்துவது அவர்களின் நோக்கமாக இருந்தது.

அங்கு சிறை வைக்கப்பட்டிருந்த எப்.ஆர்.சேனநாயக்க இப்படி உரத்த குரலில் கத்தினார்.
“...ஹென்றியின் இரத்தத்தைக் காண்பித்து எங்களை பயமுறுத்தலாம் என்று நினைத்தால் அது உங்கள் மடமை. இந்த அந்நிய வெள்ளையர்களுக்கு நான் தகுந்த பாடம் கற்பிப்பேன். என் முழு சொத்தையும் இழந்தாவது, எனது கடைசி கோர்ட்டை விற்றாவது, சிரட்டை ஏந்தி பிச்சை எடுக்க நேரிட்டாலும் கூட நான் போராடுவேன்...” அவருடன் அருகில் இருந்த ஏனையோரும் அவருடன் கோஷமிட்டனர்.
நிரபராதி தீர்ப்பு
ஹென்றியின் பேரில் பிரித்தானியாவில் உள்ள பிரபல லொய்ட் காப்புறுதி கம்பனியில் ஆயுத காப்புறுதியை அவரது தந்தை 1907 இலிருந்து செய்து வைத்திருந்தார். அந்த காப்புறுதிப் பணத்தைக் பெற்றுக்கொள்ள ஹென்றியின் தந்தை விண்ணப்பித்தார்.

ஹென்றி தேசத்துரோக குற்றமிழைத்ததின் பேரில் கொல்லப்பட்டவர் என்பதால் அந்த நட்ட ஈட்டுதொகையைத் தரமுடியாது என்று அந்த விண்ணப்பத்தை நிராகரித்தது பிரித்தானிய காப்புறுதிக் கம்பனி.

ஆனால் ஹென்றி கொல்லப்படுவதற்கு முன்னரே ஹென்றி நிரபராதியெனக் கூறி அவரை விடுவிக்கும்படி இராணியின் ஆணை பிறப்பிக்கப்பட்டுவிட்டது. தந்தியை பிழையாகப் புரிந்துகொண்டதனால் ஆளுனரால் தவறுதலாக அந்த தண்டனை நிறைவேற்றப்பட்டிருந்தது.

ஹென்றியை விடுவிக்கும் ஆணையின் பிரதி ஈ.டபிள்யு.பெரராவின் மூலம் ஹென்றியின் தந்தைக்கு கிடைத்திருந்தது. அதனைக் கொண்டு அவர் காப்புறுதிக் கம்பனிக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். ஹென்றிக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை நிராகரித்த இராணி ஹென்றியை விடுவிக்கும்படி கட்டளையிட்டிருப்பதை சுட்டிக்காட்டியிருந்தார். வழக்கை விசாரித்த பிரித்தானிய நீதிமன்றம் எட்வர்ட் ஹென்றி தேசத்துரோகி இல்லையென்று தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பின் மூலமும் ஹென்றி தேசத்துரோக குற்றச்சாட்டிலிருந்து சட்டபூர்வமாக விடுவிக்கப்பட்டார்.

மிகப்பெரிய தனவந்தரான அவருக்கு இந்த பணம் முக்கியமாக இருக்கவில்லை. ஹென்றியின் தந்தை இந்த வழக்கின் மூலம் இரண்டு விடயங்களைச் சாதித்தார். இந்த வழக்கில் வெற்றி பெற்ற ஹென்றியின் தந்தைக்கு காப்புறுதி நிறுவனம் அன்றைய காலத்தில் மூன்று லட்சம் பணத்தை வழங்கியது. காப்புறுதித் திட்டம் அத்தனை விரிவாகியிராத அந்த காலத்தில் இப்படிப்பட்ட தொகையைப் பெற்ற முதலாவது இலங்கையர் ஹென்றியின் தந்தை டீ.டீ.பேதிரிஸ். இந்தப் பணம் அத்தனையையும் அவர் ஹென்றியின் பேரில் பல நல்லுதவிகளை செய்தார். பெரும்பாலும் விகாரைகளை சீர்திருத்துவதற்கும் அப்பணத்தைச் செலவிட்டார்.

பிரேத இரகசியம்
தனது பிரேதத்தை குடும்ப புதைகுழியில் புதைக்க வேண்டும் என்பது ஹென்றியின் இறுதி ஆசைகளில் ஒன்று. பிரேதத்தை வைப்பதற்காக விலையுயர்ந்த ஒக் மரத்தில் செய்யப்பட்ட பிரேதப்பெட்டியை ஹென்றியின் தந்தை சிறைச்சாலைக்கு அனுப்பிவைத்தார். ஆனால் அதனை சிறைச்சாலை அதிகாரிகள் நிராகரித்தனர். அதுமட்டுமன்றி பிரேதத்தையும் குடும்பத்திடம் ஒப்படைக்காது இரகசியமாக எங்கேயோ புதைத்துவிட்டனர். ஹென்றியின் தந்தை எவ்வளவோ அழுது மன்றாடியும் எங்கே இருக்கிறது என்பதை இறுதி வரை கூறவில்லை.

ஊரடங்கு சட்டம் பிறப்பித்தே அந்த பிரேதத்தை வெளியே கொண்டு சென்றிருந்தனர். ஹென்றியின் பிரேதத்தைக் கொண்டு ஆங்கில அரசுக்கு தலையிடி கொடுக்க நேரிடும் என்று எண்ணியிருக்கலாம். அல்லது இதையும் ஒரு பாடம் புகட்டும் நோக்கமாக இருந்திருக்கலாம். அந்த பிரேதம் சிறைச்சாலைக்குள்ளேயே ஓரிடத்தில் இரகசியமாக புதைக்கபட்டிருகிறது என்றும் நம்பப்பட்டது. ஜூலை 07 இரவு 11 மணியளவில் கொழுப்பு கனத்தை மயானத்தில் புதைக்கப்பட்டதாக ஒரு அதிகாரி பின்னர் கூறியபோதும் அது எங்கே என்பது குறித்து தகவல் வெளியிட மறுத்தார்.

மயானத்தில் எங்கே புதைக்கப்பட்டிருக்கிறது என்பதை அறிய ஹென்றியி ன் தந்தை தனது இறுதிக் காலம் வரை பெரும் முயற்சிகளை மேற்கொண்ட போதும் பலனளிக்கவில்லை. சிறைச்சாலையில் புதைக்கப்பட்ட செய்தி உண்மையாக இருக்கலாம் என்றும் ஹென்றியின் குடும்பம் நம்பியது. தனது மகனின் உடலை உரிய முறையில் இறுதிக் கடமைகள் செய்து புதைப்பதற்கு இடம்தருமாறு ஹென்றியின் தாயார் கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தபோதும் அந்த கோரிக்கை நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது.

ஹென்றியின் பெற்றோர்கள் இறுதியில் இறந்தும் போனார்கள். ஆனால் ஹென்றியின் குடும்பத்தினர் அவரது உடலைத் தேடும் பணியை நிறுத்தவில்லை. இலங்கையின் சுதந்திரத்தின் பின்னர். வெலிக்கடை சிறைச்சாலையின் பழைய ஆவணங்களில் இருந்து ஒரு செய்தி கிடைத்தது.

07.07.1915 அன்று பெயர் குறிப்பிடாத ஒரு சடலம் பொரல்லை கனத்தையில் 3/HLK/23/24 என்கிற இலக்கத்தை கொண்ட பகுதியில் புதைக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது. டீ.டீபேதிரிஸ் கனத்தையில் தமது குடும்பத்தினருக்காக வாங்கியிருந்த 1186 என்கிற பகுதியில் அதுவரை எவரையும் புதைத்தது இல்லை. ஹென்றியின் உடலை இராணுவ மரியாதையுடன் இந்தியத் தொழிலாளர்களின் உதவியுடன் நள்ளிரவு ஹென்றியின் விருப்பப்படி அவரது குடும்பத்துக்கு உரிய புதைகுழியில் புதைக்கப்பட்டிருகிறது. 

மயானத்திற்கு அன்று பொறுப்பாக இருந்த அதிகாரி ஈ.எல்.ஹேர்ட்ஸ் இராணுவத்தின் கட்டளைக்கிணங்க அந்த இரகசியத்தை பாதுகாத்து வந்தார். ஆனால் இந்த பல ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த இரகசியம் கசிந்ததும் 1987 இல் பொரல்லை கனத்தையில் அந்தக் குழியை தோண்டிய போது அங்கு ஒக் மரத்தினாலான பழுதடைந்த பெட்டியில் இராணுவ சீருடைக்குரிய பொத்தன்களும் சப்பாத்தின் எச்சங்களும் கண்டுபிடிக்கப்பட்டன. எலும்பு எச்சங்களை வெளியில் எடுத்து பரிசோதனை செய்த பேராசிரியர் கோத்தாகொட அந்த உடல் 5 அடி இரண்டு அங்குலமுள்ள 27-30 வயதுக்குரிய ஆணுடைது என்று அறிக்கை வெளியிட்டார். இறுதியின் அது ஹென்றியின் உடல் தான் என்கிற முடிவுக்கு வந்தனர். மீண்டும் அந்த பாகங்களை உரிய சடங்குகளுடன் அதே இடத்தில் புதைத்து வீரருக்குரிய ஸ்தூபி ஒன்றையும் நிறுவினர் ஹென்றியின் குடும்பத்தினர்.


ஹென்றியின் பேரில் கொழும்பு ஹெவ்லொக் பகுதியில் இசிபத்தானராமய விகாரையை உருவாக்கி வழங்கினர். அதன் அருகில் அமைக்கப்பட்ட ஹெவ்லொக் மைதானத்தை பிற்காலத்தில் புனரமைத்த போது 07.07.1978இல் அதற்கு ஹென்றி பேதிரிஸ் மைதானம் என்று பிரேமதாச பெயர் சூட்டியதுடன் அங்கு ஹென்றியின் சிலையையும் நிறுவினார். 08.07.1971இல் ஹென்றியின் உருவப்படத்துடன் முத்திரையும் வெளியிடப்பட்டது. 1992 இல் ஹென்றி பிறந்த காலியிலும் பிரதான தபால் கந்தோரின் முன்னாள் ஹென்றிக்கு உருவச் சிலையை நிறுவினார் பிரேமதாச. ஹென்றி பேதிரிஸ் பெயரில் காலியில் வீதியொன்றுக்கு பெயரும் சூட்டப்பட்டது. ஹென்றியின் தந்தை தனது இறுதிக்காலத்தில் பொதுச் சேவைகளை செய்து காலம் கழித்தார். ஆனால் மகனின் அநீதியான சாவை ஜீரணிக்க முடியாத தாயார் மலினோ பேதிரிஸ் அனைத்தையும் துறந்து பிக்குணியாக ஆனார். தனது மகனின் பேரில் அநுராதபுரவில் எட்டு ஏக்கர் காணியில் மடாலயம் ஒன்றை அவர் அமைத்துக் கொடுத்திருந்தார். இன்றும் யாத்திரிகர்கள் பலருக்கு இரவு தங்குமிடமிடமாக அது திகழ்கிறது.

ஹென்றி கைது செய்யப்பட்ட அவரது இல்லமான விமல் வில்லாவை பின்னர் அவரது தந்தை விற்றுவிட்டார். “Wimal villa” அன்று Turret Road இல் இருந்தது. பின்னர் அந்த வீதி  தர்மபால மாவத்தை என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.ஹென்றியின் நினைவாக 2015இல் ஹென்றி நினைவு மன்றத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட நினைவு நிகழ்வுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனதலைமை தாங்கி “எட்வர்ட் ஹென்றி பேதிரிஸ்: தேசத்தை விழித்தெழச் செய்த வீரர்” (Edward Henry Pedris – National Hero who awakened a nation)என்கிற நூலையும் வெளியிட்டு வைத்தார். இந்த நிகழ்வில் மறைந்த மாதுலுவாவே சோபித்த தேரரும் பிரதம விருந்தினராக கலந்து கொண்டிருந்தார்.

1915 ஆம் ஆண்டு கலவரம் குறித்து ஆராயும் போது ஹென்றியின் கொலை பல வகையில் முக்கியத்துவமுடையது. ஹென்றி ஒரு குறியீடு. மேலும் ஹென்றியின் வர்க்கப் பின்னணி ஹென்றி குறித்த பதிவை வரலாற்றில் உறுதியாக பதியவைக்க வாய்ப்பாகிப் போனதையும் இங்கு சுட்ட வேண்டும்.

கலவரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் பலர் சாதாரண லும்பன் கோஷ்டியாக இருந்தபோதும் அவர்கள் அனைவரும் தப்பிவிட்டனர். ஆனால் தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டவர்களில் பலர் நிரபராதிகள் என்று தெரிந்திருந்தும் உறுதியுடன் ஆங்கிலேயர் அநீதியிழைக்க துணிந்ததன் காரணம் இலங்கையர்களுக்கு தெளிவான அரசியல் எச்சரிக்கையை வழங்குவதற்காகவே.

தொடரும்...உசாத்துணையாக பயன்பட்டவை
 1. EDWARD HENRY PEDRIS : "National hero who awakened a nation" - Charnika Imbulana - (Sarasavi  publications - 2015)
 2. Memorandum upon recent disturbances in Ceylon - Perera, Edward Walter – (London, E. Hughes & co., 1915)
 3. Riots and Martial Law in Ceylon - 1915 Hardcover – P. Ramanathan (St.Martins Press, 15 Craven Street, Strand, 1916)
 4. “කුලය හා සිංහල අන්තවාදය”- කුසල් පෙරේරා (Ravaya 20.09.2015)
 5. “Execution of 27-year-old henry pedris 100 years ago in colonial Ceylon”  - T.V. Antony Raj
 6. A History of Sri Lanka - K. M. De Silva – (University of California Press - 1981)
 7. The Rise of the Labor Movement in Ceylon - Kumari Jayawardena - Duke University Press, 1972
 8. Hundred days in ceylon under martial law 1915 - Armand de Souza (The Ceylon Morning Leader - 1916)
 9. “Hobgoblins, Low-Country Sinhalese Plotters or Local Elite Chauvinists?: Directions and Patterns in the 1915 Communal Riots”, Roberts, Michael (Sri Lanka Journal of the Social Sciences 1981)
 10. “The Rev.A.G.Fraser and the Riots of 1915”, James Rutnam,  (Ceylon Journal of Historical and Social Studies, Vol.1 No. 2 (July-December 1971))
 11. “අනගාරික ධර්මපාල” - ඩේවිඩ් කරුණාරත්න (M.D.Gunasena & Co. (Pvt.) Ltd, 2012)
 12. ධර්මපාල ලිපි අනගාරික ධර්මපාලතුමාගේ ලිපි සංග්‍රහයකි ආචාර්ය ආනන්ද ඩබ්ලිව්. පී. ගුරුගේ සංඥාපනය –(Department Of Government Printing-1991)
 13. ශ්‍රී ලංකාවේ ගැටුම් නිරාකරණය සහ සාමය ගොඩනැංවීම : බෞද්ධ පර්යාලෝකය - Nirmanee Circle (Social scientists Association, 2008)

நன்றி - தினக்குரல்காற்புள்ளி மாற்றிய தலையெழுத்து (1915 கண்டி கலகம் –25) - என்.சரவணன்


1915 பற்றி ஆராய்பவர்கள் எட்வர்ட் ஹென்றி பேதிரிசை (Edward Henry Pedris) தவிர்த்து விட்டு ஆராய முடியாது. "எடி" என்று செல்லமாக அழைக்கப்படும் ஹென்றியின் கைதுக்குப் பின்னால் இருந்த சதியும் ஆங்கில அரசின் மிலேச்சத்தனத்தையும், கடந்த வாரம் பார்த்தோம்.

ஹென்றியைத் தொடர்ந்து ஜூன் 2ஆம் திகதி பல சிங்கள அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டது சிறையில் அடைக்கப்பட்டார்கள். வெலிக்கடை சிறைச்சாலையின் எல் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இவர்களுடன் ஹென்றியும் ஒன்றாக தடுத்து வைக்கப்பட்டிருந்த போதும் ஹென்றி பற்றிய விடயத்தில் தீர்க்கமான முடிவுடன் ஆங்கில அரசு இருந்ததால் அவரை வேறு சிறைக்கூட்டுக்குள் மாற்றினர். 

ஹென்றியை விடுதலை செய்வதற்காக உள்ளூர் வெளியூர் மட்டங்களில் தீவிரமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. சிங்கள, தமிழ் தலைவர்கள், வெளிநாட்டு நண்பர்கள், கத்தோலிக்க ,பௌத்த மதத் தலைவர்களும் ஈடுபட்டார்கள். ஹென்றியின் விடுதலை வேண்டி அந்த மத ஸ்தலங்களில் விசேட பூஜை நிகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டன. ஹென்றி கற்ற கொழும்பு ரோயல் கல்லூரி மாணவர்கள் ஆங்கில அரசுக்கு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் தமது கைகளில் கறுப்புப் பட்டிகளை கட்டிக்கொண்டு பாடசாலைக்குச் சென்றனர்.

அதேவளை ஹென்றியின் விடுவிப்பதற்கும், தண்டனைக் குறைப்புக்கும் எதிரான நிலைப்பாட்டில் ஆங்கில அதிகாரிகள் உறுதியாக இருந்தனர்.
"மகா முதலியார்" சொலமன் டயஸ் பண்டாரநாயக்கா
அதுபோல ஹென்றியை விடுவிக்கக் கூடாது என்று ஆளுநர் சார்மசுக்கு அழுத்தம் கொடுத்தவர்களின்  கண்டி திரித்துவ கல்லூரியின் கல்லூரியின் (Trinity College, Kandy) அதிபராக இருந்த பாதிரியார் ஏ.ஜே பிரேசர் (Alec Garden Fraser), மற்றும் "மகா முதலியார்" சொலமன் டயஸ் பண்டாரநாயக்கவும் முக்கியமானவர்கள். இவர் பிற்காலத்தில் இலங்கையின் பிரதமராக ஆன எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்கவின் தந்தையார். சொலமன் டயஸ் பண்டாரநாயக்க ஆங்கிலேயர்களின் விசுவாசி. ஆளுநரின் பிரதான மொழிபெயர்ப்பாளர், ஆலோசகர். அதற்காகவே ஆங்கில அரசின் விசேட பட்டங்களையும், உயர் பதவிகளையும் வசதிகளையும் அடைந்தவர். அவர் பேதிரிஸ் குடும்பத்தினர் மீது கொண்டிருந்த பொறாமையும் ஹென்றி மீது பழி தீர்க்கச் செய்தது என்கிற கருத்துக்களை பலர் எழுதியிருக்கிறார்கள். ஹென்றியின் மீது ராஜதுரோக குற்றம் சுமத்தி பதவியை பறித்து, கைது செய்யப்படுவதற்கு சொலமன் பண்டாரநாயக்காவின் அபாண்டமான குற்றச்சாட்டும் காரணமாகியிருந்தது.
ஏ.ஜே பிரேசர்
பாதிரியார் ஏ.ஜே.பிரேசர் கலவரத்தை கடுமையாக அடக்கும் பொறுப்பை இராணுவத்திடம் ஒப்படைக்கும்படி ஆளுநருக்கு அழுத்தம் கொடுத்தவர்.

இது இப்படி இருக்கையில் இலங்கையின் பிரபல வழக்கறிஞரும், அரசியல் தலைவருமான இருந்த ஈ.டபிள்யு.பெரேரா இங்கிலாந்துக்கு விரைந்தார். அது ஒரு சுவாரசியமும், சாகசமும்  நிறைந்த வரலாற்று பயணமாக வரலாற்றில் பொறிக்கப்பட்டது.

சப்பாத்துக்கடியில் இரகசியம்
அரசியல் தலைவர்கள் பலர் இலங்கையில் நிகழ்ந்துவரும் அநீதியை இங்கிலாந்து மகாராணியிடம் முறைப்பாடு செய்வதற்கு தீர்மானம் எடுத்தார்கள். ஈ.டபிள்யு.பெரேராவின் வீட்டில் சேர்.பொன்.இராமநாதன் , சேர் ஜேம்ஸ் பீரிஸ் ஆகியோரால் இது திட்டமிடப்பட்டது.

ஈ.டபிள்யு.பெரேராவை அதற்காக அனுப்புவதற்கு தீர்மானித்தார்கள். இங்கிலாந்துக்கு ஒரு ஆய்வின் நிமித்தம் இந்த பயணத்தை பெரேரா மேற்கொள்வதாக ஆங்கில அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டது. முறைப்பாட்டுக்கு தேவையான சில ஆவணங்கள் ஆங்கிலேய அதிகாரிகளிடம் சிக்கினால் இந்த காரியமும் தடைப்படும், ஆபத்தான நிலைமையையும் எதிர்கொள்ள நேரிடும்.
1915 யூன் 3. நள்ளிரவு எப்.ஆர்.சேனநாயக்க குருனாகலையை சேர்ந்த தேர்ந்த செருப்பு தைக்கும் ஒரு இளைஞரை கொள்ளுபிட்டியிலிருந்த அவரது மும்தாஜ் மகால் இல்லத்துக்கு அழைத்து வந்தார்.  முறைப்பாடுகள் அடங்கிய அந்த இரகசிய ஆவணங்களை அந்த சப்பாத்தின் அடிப்பாகத்துக்குள் வெளித்தெரியாதபடி பாதுகாப்பாக மறைத்து வைத்து தைக்கப்பட்டது.
ஈ.டபிள்யு.பெரேரா
முதலாம் உலக யுத்தம் நடந்துகொண்டிருந்த அந்த காலகட்டத்தில் கடல் பயணம் அவ்வளவு பாதுகாப்பாக இருக்கவில்லை. ஜேர்மன் நீர்மூழ்கிக் கப்பல்கள் நேச நாட்டு கப்பல்களை தாக்கியழித்து வந்தன. சிக்கல் நிறைந்த கடல் பயணத்தைக் கடந்து இங்கிலாந்தை அடைந்த ஈ.டபிள்யு.பெரேரா இங்கிலாந்து பாராளுமன்றத்தில் அதனை சேர்ப்பிக்கும் பணியை வெற்றிகரமாக நிறைவேற்றினார். அதுபோல சேர் பொன் இராமநாதனும் இங்கிலாந்து வந்தடைந்து இன்னொருபுறம் தமது முறைப்பாடுகளையும், முன்மொழிவுகளையும் முன்வைத்தார்.

இதே வேளை ஈ.டபிள்யு.பெரேரா இங்கிலாந்துக்கு விரைந்த அதே சந்தர்ப்பத்தில் பாதிரியார் ஏ.ஜே பிரேசரும் அங்கு சென்றடைந்தார். ஹென்றி பேதிரிஸ் கிளர்ச்சியாளர்களுக்கு தலைமை தாங்கிய சதிகாரர் என்று ஒரு சிறி கைநூலையும் தயார் செய்து இங்கிலாந்தில் உள்ள அதிகாரிகளுக்கு விநியோகித்தார். அதில் ஹென்றிக்கு சாதகமான எந்தவித முடிவையும் எடுக்கக்கூடாது என்று கோரிக்கை வைத்தார்.
சேர் ஹெக்டர்
சேர் பொன் ராமநாதனை சுட முயற்சி
ஹென்றியை காப்பாற்றுவதற்காக சேர் ஹெக்டர் வென்கியுலேன்பேர்க் (Sir Hector Van Cuylenburg) அன்றைய பிரிகேடியர் ஜெனரல் மெல்கமை சந்தித்து உரையாடினார். ஏற்கெனவே களுத்துறையில் கலவரக்காரர்கள் என்று சந்தேகிக்கப்பட்ட சாதாரண மக்களையும், பிக்குமார்களையும் கசையடிகொடுத்து தண்டித்த ஒரு சந்தர்ப்பத்தின் போதும் இது போன்றதொரு ஒரு சந்திப்பு இவர்களுக்கு இடையில் நிகழ்ந்திருந்தது. இப்படிப்பட்ட மனிதாபிமானமற்ற செயல்கள் நிறுத்தப்படாவிட்டால் தி இண்டிபெண்டன்ட் (The Independent) பத்திரிகையில் அவற்றை வெளியிடுவதாக ஹெக்டர் எச்சரித்த வேளை தமது பரிபாலனத்துக்கு எதிராக அப்படி எதேனும் வெளியிட்டால் எந்த தகுதியையும் பாராது சுட்டுக்கொல்வேன் என்று மெல்கம் எச்சரித்திருந்தார். இப்பேர்\பட்ட நிலையிலேயே ஹெக்டர் மீண்டும் மெல்கமை சந்திக்க சென்றிருந்தார்.

இந்த சந்திப்பின் போது ஹெக்டருடன், சேர் பொன் இராமநாதனும், டக்லஸ் டி சேரம் ஆகியோரும் இணைந்திருந்தனர். பஞ்சாப் படையினரின் பாதுகாப்புடன் நடந்த இந்த சந்திப்பில் நகர பாதுகாப்பு படையின் கேப்டன் வேண்டேர் ஸ்ட்ராடனும் (Vander Straaten) இருந்தார். களனி பாலத்தினருகில் கலகக்காரர்களுக்கு ஹென்றி ஒத்துழைத்ததை தனது கண்களால் பார்த்ததாக வேண்டேர் ஸ்ட்ராடன் அந்த சந்திப்பில் கூறிக்கொண்டிருந்தார். இந்தப் பொய்யை மறுத்து பொன்னம்பலம் இராமநாதனும், டக்லஸ் சேரமும் சற்று ஆவேசமுற்று மறுத்தனர். அதனால் கோபமுற்ற மெல்கம் பஞ்சாப் படையினரைக் கொண்டு இராமநாதனையும், டக்லஸ் டி சேரத்தையும் துப்பாக்கியால் சுட எத்தனித்தார். அவர்கள் அத்தோடு வெளியேறிச் சென்றனர்.

ஹென்றியின் எடைக்குத் தங்கம்

இவர்கள் மூவரும் சளைக்காது ஆளுநர் சார்மசை சந்திக்கச் சென்றனர். அதன் போது ஹென்றியின் தகப்பனார் டீ.டீ.பீரிசும் கலந்துகொண்டார். ஹென்றியின் தந்தை வெறும் கையுடன் செல்லவில்லை. அவர்கள் சென்ற வாகனத்தில் மூடை மூடையாக பணக்கட்டுகளை எடுத்துச் சென்றனர். அன்றைய காலத்தில் அது மூன்று லட்சம். இந்த பணத்தை அபராதப்பணமாக செலுத்தி மகனை மீட்பதற்கு அவர் முயற்சி செய்தார்.

ஏற்கெனவே இராணுவ நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து பேதிரிஸ் குடும்பம் பிரிவிக் கவுன்சிலில் மேற்கொண்ட மேன்முறையீடு செய்திருந்தனர். பிரிவுக் கவுன்சில் தனது பதிலைத தரும் வரையாவது தண்டனையை ஒத்தி வைக்கும்படி தகப்பனாக அவர் கோரிக்கை வைத்தார். இதையே இராமநாதன், ஹெக்டர், டக்லஸ் போன்றோரும் முன்வைத்திருந்தனர். ஆனால் ஆளுநர் சார்மஸ் சிங்களத் தலைவர்களுக்கு ஒரு பாடம் கற்பிக்க இந்த மரண தண்டனை முக்கியம் என்று உறுதியாக இருந்தார்.

எனவே சார்ம்ஸ் மிகவும் சூட்சுமமாக ஒரு பதிலை அளித்தார். இராணுவ ஜெனெரல் மெல்கமிடமிருந்து சாதகமாக பதிலைப் பெற்று வரும்படி அவர்களை அனுப்பிவைத்தார். மெல்கம் அப்படியான மன்னிப்பு வழங்கும் அதிகாரி அல்ல என்பதை சார்ம்ஸ் நன்றாகவே அறிந்திருந்தார்.

ஹென்றியின் தந்தை இந்த முடிவுகளால் சோர்ந்து போயிருந்தார். ஹென்றியின் விடுதலைக்காக 3000 றாத்தல் தங்கத்தை தர அவர் முன்வந்திருந்தார். அதாவது ஹென்றியின் உடல் நிறையை விட சில மடங்குகள் அதிகமாக தங்கத்தை வழங்க அவர் தயாராக இருந்தார். ஆனால் சார்மசின் பதிலால் முழு நம்பிக்கையும் இழந்திருந்தார் அவர்.

ஆனால் வேறு சில சந்தர்ப்பங்களில் அரசியல் தலைவர்களை விடுவிப்பதற்காக லஞ்சம் பெறுவதற்கு தயாராகவும் ஆங்கில அதிகாரிகள் இருந்தார்கள். தம்மை விடுவிப்பதற்காக வெள்ளையர்களுக்கு  எந்த லஞ்சமும் வழங்கக்கூடாது என்று சிறையிலிருந்த தலைவர்கள் தமது ஆதரவாளர்களிடம் தெரிவித்தார்கள். ஹென்றியும் இதே கருத்தை வெளியிட்டிருந்தார்.

ஹென்றி தனது தந்தைக்கு எழுதிய கடிதத்தில் தான் நிரபராதி என்றும் மிகவும் தூய்மையுடனேயே தனது இராணுவக் கடமையை நிறைவேற்றியதாகவும் மற்றும்படி குற்றச்சாட்டுக்கள் அத்தனையும் பொய்யென்றும் தனது விடுதலைக்காக வெள்ளையர்களிடம் கெஞ்சவோ, லஞ்சம் கொடுக்கோ வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டிருந்தார்.

சகல தரப்பு முயற்சியும் தோற்றுப்போன நிலையில் சிறைச்சாலையில் ஹென்றி எப்பேர்பட்ட நிலையில் இருந்தார் என்பதை அங்கு சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஹென்றியின் ஒன்று விட்ட சகோதரர்கள் (விஜேசேகர சகோதரர்கள்) சாட்சி கூறினர். இவர்கள் இருவரும் பின்னர் மரணதண்டனைக்கு உள்ளாக்கப்பட்டனர். பேதிரிஸ் குடும்பம் அதன் படி மூவரை பலிகொடுத்த குடும்பம் என்று கூறுவார்.

ஹென்றியின் இறுதி ஆசை
ஜூலை 8 ஆம் திகதி ஹென்றிக்கு மரண தண்டனை நிறைவேற்ற தீர்மானிக்கப்பட்டிருந்தது. தனது இறுதிப்பயனத்துக்கு தயாராக இருந்த ஹென்றி தனது மரணத்துக்கு முன்னரும் பின்னரும் மேற்கொள்ளப்பட வேண்டிய விடயங்களை ஐந்து கோரிக்கைகளாக முன்வைத்தார்.
 1. தன்னை பெற்றெடுத்து ஆளாக்கிய தமது பெற்றோரை வணங்கி விடைபெற அனுமதிக்க வேண்டும்.
 2. தான் நெருக்கமாக பழகிய இசிபதனாராம விகாரையின் மதகுரு தங்கெதர சரணபால தேரரின் பௌத்த நல்லாசி மதப் போதனையைக்  (பன) கேட்டு அவர்களுக்கு வணக்கம் செலுத்தி ஆசி பெற வேண்டும்.
 3. தன்னோடு சேவை புரிந்த நகர பாதுகாப்பு படையை சேர்ந்த நண்பர்களுடன் தேனீர் அருந்தி விடைபெற வேண்டும்.
 4. பஞ்சாப் படையினரைக் கொண்டு தன்னைச் சுட வேண்டும்.
 5. தனது உடலை புதைக்கும்போது மயானத்திலுள்ள தனது குடும்பத்துக்கு உரிய புதைகுழியில் புதைக்க வேண்டும்.

அதன்படி தனது தாயையும் தந்தையும் சந்தித்து விடைபெற்ற சந்தர்ப்பம் மிகவும் உணர்ச்சிபூர்வமாக இருந்தது. ஒரு சந்தர்ப்பத்தில் தாயார் மயக்கம் போட்டு விழுந்துவிட்டார். தனது நண்பர்களையும் சந்தித்து தேநீர் அருந்தி மகிழ்ச்சியாக உரையாடினார்.

ஜுலை 6 அன்று தங்கெதர சரணபால தேரரின் ஆசி நிகழ்ந்தது. "எதற்கும் அஞ்சாதீர்கள். என்றாகிலும் நாம் அனைவரும் மரணத்தை எதிர்கொண்டாக வேண்டும்." என்று அவர் தொடர்ந்த போது, ஹென்றி அவரைப் பார்த்து.'

"ஹாமதுருவே! நான் இந்த துப்பாக்கிக்கு அஞ்சவில்லை. இதன் பின்னர் உங்களைப் போன்றவர்களை சந்தித்து உங்கள் போன்றவர்களிடமிருந்து மதப்போதனைகளைப் பெறமுடியாது என்பதே எனது கவலை" என்று கூறியிருக்கிறார்.

இது ஒரு புறமிருக்க இன்னொருபுறம் ஹென்றியின் விடுதலைக்காக இங்கிலாந்தில் ஈ.டபிள்யு.பெரேராவின் முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டுக் கொண்டிருந்தன. தன்னால் முடிந்த தரப்புகளிடமெல்லாம் முயன்று சாதகமான பதில் கிடைக்காத நிலையில் அவர் அரசியை சந்திப்பதற்கு எத்தனித்திக்கொண்டிருந்தார். அவருக்கான செலவுகள் அத்தனையும் பேதிரிஸ் மேற்கொண்டார்.
சார்மஸ்
பெரேராவின் முயற்சிகள் தக்க பலனளிக்கும் சமிக்ஞைகள் தெரிந்தன. ஆனால் திருத்துவக் கல்லூரி பாதிரியார் பிரேசர் இந்த முயற்சியை தடுத்து நிறுத்தும் நோக்கில் சர்மசுக்கு அங்கிருக்கும் நிலைமைகளை அவ்வப்போது அறிவித்துக்கொண்டிருந்தார். "ஹென்றியின் விடுதலைக்காண வாய்ப்புகள் உள்ளதென்றும் ஆளுநர் சார்மசுக்கு அறிவித்தார்.

ஹென்றி விடுதலையடைந்தால் சிங்களத் தலைவர்களுக்கு பயம் விட்டுப்போகும், அவர்கள் மேலும் பலமடைவார்கள் என்று கருதிய ஆளுநர் சார்ம்ஸ் ஜெனெரல் மெல்கம் மற்றும் இன்னும் பல அதிகாரிகளை வரவழைத்து ஆலோசனை கூட்டம் நடத்தினார். 

காற்புள்ளி மாற்றிய தலையெழுத்து
இந்த நிலைமையில் ஆளுநர் சார்மசுக்கு பிரித்தானிய காலனித்துவ காரியாலயத்திலிருந்து ஒரு தந்தி வந்தடைந்தது. அந்த தந்தியில் "Kill him, not let him go" அதாவது "கொல், அவனை விட்டுவிடாதே" என்று இருந்தது. தமது முடிவை வழிமொழிந்து காலனித்துவ காரியாலயத்திலிருந்தே அனுமதி வந்துவிட்டதை அறிந்து மகிழ்ச்சியடைந்த சார்மஸ், ஹென்றிக்கு தண்டனை நிறைவேற்ற நியமித்திருந்த 8ஆம் திகதியை ஒரு நாளைக்கு முன் கூட்டியே நிறைவேற்றிவிடலாம் என்கிற முடிவில் 7 ஆம் திகதி சுட்டுக்கொல்ல ஆணை பிறப்பித்தார்.

ஆனால் உண்மை அதுவல்ல. மிகப் பெரிய அநீதி இங்கு நிகழ்த்தப்பட்டது. இவர்களுக்கு அனுப்பப்பட்ட தந்தி பிழையாக அனுப்பட்டிருக்கிறது.

"Kill him not, let him go" 

"கொல்ல வேண்டாம், அவனை விட்டுவிடுங்கள்" என்பதே உண்மையான செய்தி. பெரேராவின் முயற்சியால் ஹென்றியை விடுவிக்கும் ஆணையை மகாராணி லண்டனிலிருந்து பிறப்பித்திருந்தார். அந்த செய்தி கப்பல் மூலம் வந்தடைவதற்கு மேலும் ஒரு சில நாட்கள் எடுத்திருக்கும். அதற்குள் அந்த ஆணை தந்தியாக சார்மசுக்கு தலைகீழான அர்த்தத்தில் கிடைத்திருந்தது. ஒரே ஒரு காற்புள்ளி இடம் மாறியதில் ஒரு பாரதூரமான முடிவு எடுக்கப்பட்டது. ஒரு அப்பாவியின் உயிர் பறிக்கப்பட்டது.

எவ்வாறிருந்தபோதும் ஹென்றிக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவமானது ஆங்கில பழிதீர்ப்பு, அநீதியான தண்டனை என்பவை மட்டுமல்ல. ஹென்றி வரலாற்றுப் பதிவாகவும், விடுதலை வீரராகவும் சித்திரிக்கப்படுவதற்குப் பின்னால் ஹென்றியின் வர்க்கச் செல்வாக்கு பிரதான பங்கு வகித்திருப்பத்தையும் இனங்காணலாம்,
தொடரும்...

உசாத்துணைக்குப் பயன்பட்டவை...
 1. EDWARD HENRY PEDRIS : "National hero who awakened a nation" - Charnika Imbulana - (Sarasavi  publications - 2015)
 2. Memorandum upon recent disturbances in Ceylon - Perera, Edward Walter – (London, E. Hughes & co., 1915)
 3. Riots and Martial Law in Ceylon - 1915 Hardcover – P. Ramanathan (St.Martins Press, 15 Craven Street, Strand, 1916)
 4. A History of Sri Lanka - K. M. De Silva – (University of California Press - 1981)
 5. The Rise of the Labor Movement in Ceylon - Kumari Jayawardena - Duke University Press, 1972
 6. Hundred days in ceylon under martial law 1915 - Armand de Souza (The Ceylon Morning Leader - 1916)
 7. “Hobgoblins, Low-Country Sinhalese Plotters or Local Elite Chauvinists?: Directions and Patterns in the 1915 Communal Riots”, Roberts, Michael (Sri Lanka Journal of the Social Sciences 1981)
 8. “The Rev.A.G.Fraser and the Riots of 1915”, James Rutnam,  (Ceylon Journal of Historical and Social Studies, Vol.1 No. 2 (July-December 1971))
 9. “අනගාරික ධර්මපාල” - ඩේවිඩ් කරුණාරත්න (M.D.Gunasena & Co. (Pvt.) Ltd, 2012)
 10. ධර්මපාල ලිපි අනගාරික ධර්මපාලතුමාගේ ලිපි සංග්‍රහයකි ආචාර්ය ආනන්ද ඩබ්ලිව්. පී. ගුරුගේ සංඥාපනය –(Department Of Government Printing-1991)
 11. ශ්‍රී ලංකාවේ ගැටුම් නිරාකරණය සහ සාමය ගොඩනැංවීම : බෞද්ධ පර්යාලෝකය - Nirmanee Circle (Social scientists Association, 2008)

எட்வர்ட் ஹென்றி பேதிரிஸின் மரண தண்டனை (1915 கண்டி கலகம் –24) - என்.சரவணன்"என் கண்களைக் கட்டாதீர்கள்
என்னை சுடுபவர்களை நான் பார்க்க வேண்டும்"

எட்வர்ட் ஹென்றி பேதிரிசுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டபோது இப்படித் தான் ஆங்கில அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டார்.

இராணுவச் சட்டத்தைப் பயன்படுத்தி ஆங்கில அரசு செய்த பழிவாங்கள்கள் படுகொலைகளாக தொடர்ந்தன. இலங்கையில் மதுவொழிப்பு இயக்கத்தின் எழுச்சியை ஆங்கிலேயர்களுக்கு எதிரான எழுச்சியாகவே நோக்கிய ஆங்கில ஆட்சியாளர்கள் அந்த இயக்கத்தின் முன்னோடிகளை வேட்டையாடினார்கள். இந்த கலவரத்தை சாதமாகப் பயன்படுத்திக்கொண்டார்கள். இந்த கலவரமும் அந்த இயக்கத்தை சேர்ந்தவர்களால் ஆங்கிலேயர்களுக்கு எதிராக திசைதிருப்பி சதி செய்கிறார்கள் என்று குற்றம் சுமத்தி வீண் பழி சுமத்தினார்கள். கலவரத்துடன் சம்பந்தப்படாத பலர் இப்படி இராணுவ நீதிமன்ற விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டார்கள்.

1915 ஜூன் 2 அன்று அன்றைய பிரபல தொழிற்சங்கத் தலைவரான எ.ஈ.குனசிங்கவைக் கைது செய்தது அதனைத் தொடர்ந்து டீ.பீ.ஜயதிலக்க, டபிள்யு.ஏ.டீ.சில்வா, எப்.ஆர்.சேனநாயக்க, டீ.எஸ்.சேனநாயக்க, டீ.சீ.சேனநாயக்க,டாக்டர், சீ.ஏ.ஹேவாவிதாரண (அநகாரிக்க தர்மபாலாவின் சகோதரர்), ஜோன் டீ.சில்வா, ஈ.ஏ.விஜேரத்ன, ஏ.டபிள்யு.பீ.ஜயதிலக்க, சைமன் விஜேசேகர, பியதாச சிறிசேன, எல்பட் விஜேசேகர, ஆதர்.வீ.தியேஸ், ஹேரி தியேஸ், ரிச்சர்ட் சல்காது, ஏ.எச்.மொலமூரே, டயஸ் பண்டாரநாயக்க, வோல்டர் சல்காது, பீ.சீ.எச்.தியேஸ் மற்றும் பௌத்த மதகுருவான பத்தரமுல்ல சுபூதி தேரர் ஊள்ளிட்ட 80 க்கும் மேற்பட்ட தலைவர்களைக் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

இவர்கள் முதலில் மருதானை போலிஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர் வெலிக்கடை சிறையில் அடைக்கப்பட்டார்கள். இவர்களை கைது செய்யும் நடவடிக்கையை மேற்கொண்டவர்கள் போலிஸ் ஆணையாளரான ஆர்.டபிள்யு.பேர்ட் மற்றும், ஏ.சீ.எல்னட் ஆகியோரே.

இவர்கள் அனைவரும் வெலிக்கடை சிறையின் எல் பிரிவில் (எல் வார்டு என்றும் அழைக்கப்படும்) அடைக்கப்பட்டார்கள். கொலை, கொள்ளை போன்ற மிகவும் மோசமான குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை அடைக்கும் பிரிவு இது. பலத்த பாதுகாப்பு கூடிய இந்த பிரிவில் தம்மை நாயை விடக் கேவலமாக நடத்தினார்கள் என்று பின்னர் அந்தத் தலைவர்கள் தெரிவித்தார்கள்.


பேதிரிஸ் குடும்பம்
பிரபல தொழிலதிபரான டீ.டீபேதிரிஸுக்குப் பிறந்த ஐந்து பேரில் கடைசி மகன் ஹென்றி பேதிரிஸ். பேதிரிஸ் இலங்கையில் பிரபல வர்த்தக செல்வந்த நிலச்சுவாந்திர பரம்பரையச் சேர்ந்தவர். டீ.டீ.திரிசின் மூத்த மகளை திருமணம் முடித்தவர் சீ.ஜே.மேதிவ் (இவர் பிற்காலத்தில் பிரபல இனவாதியாக அறியப்பட்ட சிறில் மெதியுவின் பாட்டனார்) காலியிலும் கொழும்பிலும் கப்பல் போக்குவரத்தோடு சார்ந்த தொழிலில் ஏகபோக வர்த்தகராக அறியப்பட்டவர். மேலும் பல வித வர்த்தகங்களில் அன்று கொடிகட்டிப் பறந்த நபர். நிலக்கரி, காரியம், மாணிக்கக்கல் அகழ்வு போன்ற வியாபரங்களிலும் ஈடுபட்ட இவர் ஜெர்மனுக்கு காரீய ஏற்றுமதியையும் செய்து வந்திருக்கிறார். 1916 ஆம் ஆண்டு மட்டும் இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட மொத்த 33.41 தொன் காரீயத்தின் பெறுமதி 220 லட்சம் ரூபாய். இதில் பெருமளவு பங்கு காரீயம் பேதிரிஸ் கம்பனியுடையது.  ஆங்கிலேயர்கள் பேதிரிஸ் குடும்பத்தின் மீது பகை கொள்வதற்கு இந்த ஜேர்மன் உறவும் முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

அது போல அவர் மதுவொழிப்பு இயக்கத்தின் செயற்பாட்டாளராகவும் இருந்தார். தனது சொத்துக்களைக் கொண்டு பல்வேறு சமூக நல காரியங்களிலும் ஈடுபட்டவர். அவரது குடும்பத்தினர் பலர் இலங்கையின் சுதந்திரத்துக்காக பின்புலத்தில் பணியாற்றியவர்கள். 1915 கலவரத்தின் போது பேதிரிசுக்கு சொந்தமான சொத்துக்களும் சேதத்துக்கு உள்ளாகின.

இலங்கையின் சுதந்திரத்துக்கான இரகசிய கூட்டங்களை எப்.ஆர்.சேனநாயக்க நடத்திய வேளைகளில் அதில் ஹென்றியும் கலந்து கொண்டுள்ளார். 

ஹென்றி பேதிரிஸ் 1886 ஓகஸ்ட் 16 காலியில் பிறந்தார்.  ஹென்றி புனித தோமஸ் கல்லூரியிலும் பின்னர்  பிரபல ரோயல் கல்லூரியிலும் கற்ற காலத்தில் விளையாட்டுத் துறையில் திறமையானவராக மிளிர்ந்தார். ஹென்றியிடம் அழகானதொரு குதிரை இருந்தது. ஒரு முறை ரஷ்யாவிலிருந்து இலங்கைக்கு விஜயம் செய்த இளவரசி தன்னுடன் கொண்டு வந்த குதிரைகளைக் கண்ட ஹென்றி தகப்பனின் செல்வாக்குக்கு ஊடாக அந்த குதிரையை பெரு விலைக்கு வாங்கியிருந்தார். அந்த குதிரையுடன் மிடுக்குடன் வலம்வரும் இளைஞர் ஹென்றியை பார்க்க அப்போது வீதிகளில் பலர் கூடுவார்களாம். ஜே.ஆர்.ஜெயவர்த்தனா ஒரு முறை இது குறித்து விபரித்த போது ஹென்றி குதிரையில் செல்வதை தனது தாயார் தன்னை அழைத்து அடிக்கடி காண்பிப்பாராம். பிற் காலத்தில் சேர் ஜோன் கொத்தலாவலவும் தனது நண்பர்களிடம். ஹென்றியை ஒரு முன்மாதிரியாகக் கொண்டு அவர் போல இருக்கவேண்டும் என்று விரும்பினாராம்.

ஹென்றியின் நண்பர்களில் பலர் வெள்ளையினத்தை சேர்ந்தவராக இருந்திருக்கின்றனர். ஒரு முறை தியேட்டருக்கு படம் பார்க்க சென்றிருந்த வேளை அங்கு வந்த வெள்ளையினத்தைச் சேர்ந்த இளைஞர்கள் ஹென்றியைப் பார்த்து இந்த இடம் பிரித்தானியர்களுக்காக ஒதுக்கப்பட்டதென்றும் உடனடியாக எழுந்துச் செல்லும்படியும் அதட்டியிருக்கிறார்கள். அன்றைய காலகட்டத்தில் பல இடங்களில் இப்படி ஆங்கிலேயர்களுக்கு என்று பிரேத்தியேக ஆசனங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. ஹென்றி அந்த இளைஞர்களிடம் உன்னைப்போல் நானும் பணம் கட்டி படம் பார்க்க வந்திருக்கிறேன். உனக்கு இருக்கும் அதேயுரிமை எனக்கும் இருக்கிறது என்று கூறவே அந்த இளைஞர்கள் கோபத்துடன் வெளியேறிய சம்பவமும் பதிவாகியிருக்கிறது.

அது போல இன்னொரு சம்பவம். வெள்ளவத்தை வழியாக தனது குதிரையில் ஒரு பாலத்தைக் கடந்து செல்லும் போது எதிரே வந்த காரில் இருந்த ஆங்கிலேயர் ஒருவர் ஹென்றியை அந்த பாதையில் பின்னால் சென்று வழிவிடும்படி கத்தியிருக்கிறார். "என்னுடைய குதிரையில் ரிவர்ஸ் கிடையாது உன்னுடைய வாகனத்தை நீ ரிவர்சில் செலுத்து. அல்லது பாலத்தை பெரிதாக்குமாறு உனது ஆட்சியாளர்களிடம் போய் சொல்". என்று கூறியிருக்கிறார்.

தனது வழியில்  தனது மகனும் தனது வர்த்தகத்தை அடுத்த தலைமுறைக்கு கடத்துவார் என்று எதிர்பார்த்தார் டீ.டீ.பேதிரிஸ். ஆனால் முதலாவது உலக யுத்த காலப்பகுதியில் இராணுவத்திற்கு ஆட் சேர்ப்பதற்காக ஆங்கிலேயர்கள் "இலங்கை பாதுகாப்பு படை"  (Ceylon Defence Force) என்கிற இராணுவத்தை உருவாக்கியது. அதுபோல கொழும்பைப் பாதுகாப்பதற்காக கொழும்பு நகர பாதுகாப்புப் படை ( CTG - Colombo Town Guard) என்கிற ஒன்றையும் உருவாக்கியது. இந்த இராணுவத்தில் இணைந்த முதலாவது இலங்கையர் ஹென்றி.

கொழும்பு பாதுகாப்பு படையிலும் சிறந்த துப்பாக்கிச் சூட்டு வீரராக இருந்தார் ஹென்றி. தனது ஆங்கில அறிவாலும், ஆற்றலாலும் ஹென்றி வேகமாக பல பதக்கங்களையும், பதவியுயர்வுகளும் பெற்றுக்கொண்டார். ஒரே வருடத்தில் கேப்டன் பதவியும் கிடைத்தது. ஹென்றியின் செல்வாக்கும், வசதிகளும் பலரையும் பொறாமைகொள்ளச் செய்தது.

1915 கலவரத்தை அடக்குவதற்காக இராணுவச் சட்டத்தை மிலேச்சனமாக அமுல்படுத்துவதற்காக பயன்படுத்திய இராணுவத்துக்கு துணையாக  இந்திய பஞ்சாப் இராணுவத்தைப் பயன்படுத்தியது ஆங்கிலேயே அரசு. பஞ்சாப் படையினர் மேலும் மோசமான ஈவிரக்கமற்ற இராணுவதினராக இருந்தார்கள். அவர்கள் இராணுவ ஒழுக்கங்கலையோ, மனிதாபிமானமோ இல்லாதவர்களாக இருந்தார்கள் என்பதை பல்வேறு வெளியீடுகள் ஒப்புவித்துள்ளன.

ஹென்றிக்கு எதிரான சதி
கோட்டையிலும், பேலியகொடையிலும் இருந்த பேதிருசுக்கு சொந்தமான சொத்துக்கள் முஸ்லிம்களால் சேதப்படுத்தப்பட்டு கொள்ளையிடப்படுகின்றன என்கிற வதந்தி பரவியது. பேலியகோடையை நோக்கி பல சிங்களவர்கள் கூட்டமாக சென்றுகொண்டிருந்தனர். இந்த நிலைமையைப் பற்றி கேள்விப்பட்ட நகர பாதுகாப்பு படையின் கேப்டனாக இருந்த ஹென்றி பேதிரிஸ் தலைமையிலான அணி அதனைக் கட்டுப்படுத்த அங்கு அனுப்பப்பட்டது. விக்டோரியா பாலத்தின் அருகில் கூட்டத்தை தடுத்து நிறுத்திய  ஹென்றி; பரப்பட்டிருப்பது வெறும் வதந்தி என்றும் அதில் எந்தவித உண்மையும் இல்லை என்றும் களைந்து சென்றுவிடும்படியும் கட்டளையிட்டிருக்கிறார். ஆனால் அதனை செவிசாய்க்காத சிலர் களனி ஆற்றுக்குள் நீந்தி கடந்து வருவதற்காக ஆற்றில் பாய்ந்துள்ளனர். இதனைக் கட்டுபடுத்துவதற்காக நகர பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலர் காயமடைந்தத்துடன் ஒருவர் கொல்லப்பட்டார். அதுபோல கோட்டையில் நடந்த கலவரத்தின் போது முஸ்லிம் இனத்தைச் சேர்ந்த ஒருவரும் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அதுபோல கொழும்பு கோட்டை கெய்சர் வீதியிலுள்ள முஸ்லிம் ஒருவருக்கு சொந்தமான கிறிஸ்டல் பேலஸ் என்கிற கடையை தாக்கியதைத் தடுக்காது அங்கே குழுமியிருந்த முஸ்லிம்களை நோக்கி சுட்டதாக ஹென்றி பேதிரிஸ் மீது குற்றம் சாட்டப்பட்டதன் விளைவாக ஹென்றி பேதிரிஸ் கைது செய்யப்பட்டார். ஹென்றியின் மீது மேற்கொள்ளப்பட்ட குற்றச்சாட்டுக்கள் சதி என்பது பின்னர் உறுதிசெய்யப்பட போதும், ஹென்றி இந்த குற்றச்சாட்டுக்கள் அபாண்டமானவை என்று வாதிட்டும் பயனளிக்கவில்லை. மேலும் அங்கு வந்த சிங்களவர்களை புறக்கோட்டை நோக்கி திசைதிருப்பி அனுப்பினார் என்றும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. உண்மையில் அந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர்கள் அந்த படையணியில் இருந்த வெறும் இருவரே. அந்த கலவரக்காரர்களைக் கலைத்து விரட்டியது கூட ஹென்றி தான் என்று வெறும் சிலர் சாட்சி கூறினர்.

ஜேர்மன் நாசி இராணுவத்திற்கு தேவையான பொருட்களையும், உளவுச் சேவைகளையும் பேதிரிஸ் குடும்பம் வழங்கியது என்று சந்தேகப்பட்டது ஆங்கிலேய அரசு. அதற்கான ஆவணங்கள், ஆதாரங்கள் ஏதும் உள்ளனவா என்பதை ஆராய்வதற்காக ஹென்றியின் கைதைப் பயன்படுத்திக்கொண்டது அரசு. பேதிரிசுக்குச் சொந்தமான வீடுகள், வியாபார நிலையங்கள் என்பவற்றிற்குள் புகுந்து அனைத்தையும் விழுத்தி சோதனை செய்தனர். அப்படி எதுவும் அவர்களுக்கு கிட்டவில்லை.

ஆனாலும் முன்னைய குற்றச்ச்காட்டுக்களை முன்வைத்து ஹென்றியை வெலிக்கடைச் சிறைக்குள் தள்ளினர். ஹென்றியை கைது செய்வதற்காக அவரது வீட்டுக்கு பெருமளவு இராணுவத்தை அனுப்பியிருந்ததுடன், வெலிக்கடை சிறைச்சாலைக்கு வெளியிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

மூன்று நீதிபதிகளைக் கொண்ட இராணுவ நீதிமன்றத்தில் ஹென்றிக்கு எதிராக நான்கு பிரதான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. அவை தேசத்துரோகம், முஸ்லிம்களின் சொத்துக்களை நாசமாக்கியது, அவர்களுக்கு சொந்தமான சொத்துக்களை கொள்ளையடித்தது, கொலை செய்யும் நோக்கத்துடன் பலரை காயப்படுத்தியது.

இந்த குற்றச்சாட்டுக்கள் குறித்து எந்த விசாரணைக்கும் இடம் கொடுக்கவில்லை. குறைந்தபட்சம் குற்றம் சாட்டப்பட்டவரின் தரப்பில் பதில் கூறவும் விடவில்லை. ஏற்கெனவே எடுக்கப்பட்ட தீர்ப்பை வழங்குவதற்காக கூட்டப்பட்ட ஒரு நீதிமன்றமாகவே அது காணப்பட்டது. அதன் படி 1915  ஜூலை முதலாம் திகதி ஹென்றி குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு அதற்கு தண்டனையாக சுட்டுக் கொல்லும்படி தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்தத் தீர்ப்பு ஜெனெரல் எச்.எல்.எல் மெல்கம் என்பவரால் உறுதி செய்யப்பட்டது. தான் குற்றவாளி அல்ல என்று ஹென்றி இயன்றவரை கூறியும் எதுவும் கணக்கிற்கொள்ளப்படவில்லை.

இந்தத் தீர்ப்பு ஒரு திட்டமிடப்பட்ட சதி என்பதை பெருமளவு நூல்களும் கட்டுரைகளும் வெளிப்படுத்தியுள்ளன.

வெலிக்கடை சிறைச்சாலையில் ஹென்றியை சங்கிலியிட்டு கட்டி நித்திரை கொள்ளக்கூட வசதியில்லாதபடி வைத்திருக்குமளவுக்கு ஈவிரக்கமின்றியே சிறைச்சாலை அதிகாரிகள் நடந்து கொண்டார்கள்.

ஹென்றியை விடுவிப்பதற்காக சேர்.பொன்.இராமநாதன் உள்ளிட்ட பலர் முயற்சி செய்தார்கள் அதேவேளை ஹென்றியைக் கொல்வதற்காக ஆங்கில அரசுக்கு உதவி புரிந்த உள்ளூர் அரசியல்வாதிகளும் இருந்தார்கள். அடுத்த இதழில் பார்ப்போம்.

தொடரும்
 • EDWARD HENRY PEDRIS : "National hero who awakened a nation" - Charnika Imbulana - (Sarasavi  publications - 2015)
 • Memorandum upon recent disturbances in Ceylon - Perera, Edward Walter – (London, E. Hughes & co., 1915)
 • Riots and Martial Law in Ceylon - 1915 Hardcover – P. Ramanathan (St.Martins Press, 15 Craven Street, Strand, 1916)
 • A History of Sri Lanka - K. M. De Silva – (University of California Press - 1981)
 • The Rise of the Labor Movement in Ceylon - Kumari Jayawardena - Duke University Press, 1972
 • Hundred days in ceylon under martial law 1915 - Armand de Souza (The Ceylon Morning Leader - 1916)
 • “Hobgoblins, Low-Country Sinhalese Plotters or Local Elite Chauvinists?: Directions and Patterns in the 1915 Communal Riots”, Roberts, Michael (Sri Lanka Journal of the Social Sciences 1981)
 • “The Rev.A.G.Fraser and the Riots of 1915”, James Rutnam,  (Ceylon Journal of Historical and Social Studies, Vol.1 No. 2 (July-December 1971))
 • “අනගාරික ධර්මපාල” - ඩේවිඩ් කරුණාරත්න (M.D.Gunasena & Co. (Pvt.) Ltd, 2012)
 • ධර්මපාල ලිපි අනගාරික ධර්මපාලතුමාගේ ලිපි සංග්‍රහයකි ආචාර්ය ආනන්ද ඩබ්ලිව්. පී. ගුරුගේ සංඥාපනය –(Department Of Government Printing-1991)
 • ශ්‍රී ලංකාවේ ගැටුම් නිරාකරණය සහ සාමය ගොඩනැංවීම : බෞද්ධ පර්යාලෝකය - Nirmanee Circle (Social scientists Association, 2008)

நன்றி - தினக்குரல்

நாட்டை உலுக்கிய இராணுவச் சட்டம் (1915 கண்டி கலகம் –23) - என்.சரவணன்

கலவரம் பரவிய இடங்கள்
100 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த இந்த கலவரத்தை 100 நாட்கள் இராணுவச் சட்டத்தினை அமுல்படுத்தி நசுக்கியது. ஆனால் கலவரம் நடந்தது என்னவோ ஒரு சில வாரங்கள் மாத்திரமே. கலவரத்தை அரும்பிலேயே கட்டுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் இருந்தும் அதை வளர விட்டு, பின்னர் இரும்புக் கரம் கொண்டு நசுக்கிய விதம் உலகையே திரும்பிப் பார்க்கவைத்த ஒரு அடக்குமுறை.

கண்டியில் 1915 மே 28 தொடங்கிய கலவரம்   மே 30 இல் முடிந்தது. ஆனால் 31 இலிருந்து கொழும்பு உள்ளிட்ட ஏனைய பிரதேசங்களுக்கும் பரவியது. ஜூன் 2 அன்று இராணுவச் சட்டம் அமுலுக்கு கொண்டுவரப்பட்டது. அது ஓகஸ்ட் 30 வரை நீடித்தது.

யூன் 2ஆம் திகதி கண்டியில் இருந்தபடி முதலில் கொழும்புக்கான இராணுவச்சட்டத்தை  நிறைவேற்றிய ஆளுநர் இராணுவத்துக்கு அதிக அதிகாரங்களை வழங்கினார். இந்த நிலைமை குறித்து ஜெனெரல் மல்கம் (Henry Huntly Leith Malcolm) “பூரண அதிகாரங்களை இராணுவத்துக்கு வழங்குவது அசாதாரணமான நிகழ்வு.” என்றார். ஊரடங்குச் சட்டத்தை பிறப்பித்து எந்தவித விசாரணையுமின்றி சுட்டுத்தள்ளும்படி உத்தரவிட்டவரும் இவர் தான். இதனை அடக்குவதற்கு இந்தியாவில் இருந்து படைகளை கொண்டுவருவோமா என்று ஆளுநர் சால்மஸ் பிரிகேடியர் மெல்கொம்மிடம் கேட்டபோது அவர் அதற்கான அவசியமில்லை என்றார். ஆனால் பின்னர் அவர் இலங்கையில் இருந்த இந்திய பஞ்சாப் படைகளைத் தான் இந்த ஈவிரக்கமற்ற அடக்குமுறையை பிரயோகிக்க பயன்படுத்திக்கொண்டார்.

சேர் ரெஜினோல்ட் ஸ்டப்ஸ் (Reginald Edward Stubbs)
இந்த கலவரத்தின் போது கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 25. காயப்பட்டவர்கள் 189. 4 பாலியல் வல்லுறவு சம்பவங்கள் பதிவாகின. இலங்கை நிர்வாக அறிக்கையின் பிரகாரம் 4075 முஸ்லிம்களின் கடைகள் சேதத்துக்குள்ளாகின. 250 வீடுகள் தீயிடப்பட்டும், தாக்குதல்களுக்கும் உள்ளாயின. இராணுவ நீதிமன்றத்துக்கு ஊடாக மரணதண்டனை வழங்கப்பட்டவர்கள் 10 மாத்திரமே. இதில் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் எண்ணிக்கை 49. கலவரம் குறித்து கொழும்பு உள்ளிட்ட மேல்மாகாணத்துக்குள் மாத்திரம் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 1102. இதில் அரசுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளும் உள்ளடக்கம். இதில் 210 வழக்குகள் வீடுகள் சேதப்படுத்தப்பட்டவை பற்றியது.  17 பள்ளிவாசல்கள் தீயிடப்பட்டன.  86 பள்ளிவாசல்கள் சேதப்படுத்தப்பட்டன.

இலங்கையில் சிங்கள தேசியத் தலைவர்களாக கருத்தப்பட்ட மித வாதத் தலைவர்கள் ஆங்கிலேய அரசுக்கு எதிராக சதி புரிவதை நினைத்தும் பார்த்திருக்க்கமாட்டார்கள். அவர்கள் இலங்கைக்கான சுதந்திரக் கோரிக்கைகளை முன்வைப்பதற்குப் பதிலாக சீர்திருத்தங்களை மாத்திரம் கோரிப் பெற்றுக்கொண்டவர்களாயிற்றே.  பலருக்கு எதிராக “முடிக்கு எதிரான ராஜதுரோக” குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு இராணுவ நீதிமன்றத்தில் வழக்குகள் நடந்தன. பலர் மரண தண்டனைக்கும், சிறைத்தண்டனைக்கும் உள்ளாக்கப்பட்டனர். சுட்டுக்கொல்லும் படி இருவருக்கு தீர்ப்பு வழங்கப்பட்டது. பலருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டன. இராணுவ நீதிமன்றத்தில் 412 பேருக்கெதிராக விசாரிக்கப்பட்ட துரித வழக்குகளில் 358 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டது. இவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனைகள் குறித்து எழுதிய பிரித்தானிய ஆங்கில பத்திரிகைகள் அவை மோசமான மிலேச்சத்தனமான தண்டனைகள் என்று வர்ணித்தன.

இராணுவச் சட்டம்
இராணுவச் சட்டத்தின் விளைவாக இராணுவத்தினரும், பொலிசாரும் மாத்திரமல்ல சிவில் அதிகாரிகளும், ஆங்கிலேய தோட்ட உரிமையாளர்களும் கூட தாம் விரும்பியபடி தண்டனையளிக்கும் பணிகளில் ஈடுபட்டார்கள். கலவரம் அடங்கிய பின்னரும் கூட கலவரத்தில் சம்பந்தப்பட்டதாக சந்தேகிக்கக்கப்பட்டவர்கள் கூட எந்த விசாரணையுமின்றி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவங்கள் பல நிகழ்ந்தன. 1915 ஓகஸ்ட் வெளியிடப்பட்ட அரச ஆணையின் பிரகாரம் இப்படி சட்டவிரோதமான துப்பாக்கிச் சூடுகளில் ஈடுபட்டவர்கள் குற்றங்களில் இருந்து விடுவிக்கப்பட்டார்கள்.

ஐரோப்பியர்கள் தவிர்ந்த அனைவரும் தம்மிடமுள்ள துப்பாக்கி உள்ளிட்ட அனைத்துவித வித ஆயுதங்களையும் அரசிடம் கையளிக்க வேண்டும் என ஆணை பிறப்பிக்கப்பட்டது. கையளிக்கப்பட வேண்டிய ஆயுதங்கள் பட்டியலில் சாதாரண சமையலறையில் பயன்படுத்தப்படும் தேங்காய் துருவி கூட இருந்ததாக ஆர்மண்ட் டி சூசா தனது நூலில் விளக்குகிறார்.

கலவரப் பாதிப்புகள் குறித்து வெளியிடப்பட்ட ஆணையின் பிரகாரம் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு நட்ட ஈடு வழங்குமாறு சிங்களவர்களுக்கு கட்டளையிடப்பட்டது. வலுக்கட்டாயமாக அந்த நட்ட ஈடுகள் சிங்களவர்களிடம் பெறப்பட்டுமிருக்கின்றன.

முதலாவது உலக யுத்தத்தின் காரணமாக பிரித்தானியா தமக்கெதிரான சதிகள் தமது எதிரி நாடான ஜேர்மனியினால் தமது காலனித்துவ நாடுகளில் மேற்கொள்ளக்கூடும் என்கிற பீதி நிலவியது. இலங்கையில் அப்போது ஆங்கிலேய-கத்தோலிக்க எதிர்ப்பை மும்முரமாக முன்னெடுத்த மதுவொழிப்பு இயக்கத்திற்கும் அதனை தலைமை தாங்கிய அனகாரிக்க தர்மபாலவுக்கும் பின்னணியில் ஜெர்மனியின் சதி இருக்கிறது என்று ஆங்கிலேய அரசு நம்பியது. ஜெர்மன் நாட்டுத் தலைவருடன் தர்மபால இருக்கும் புகைப்படம் இருக்கும் ஒரு துண்டுபிரசுரம் விநியோகிக்கப்பட்டிருப்பதாகவும் வதந்திகள் பரவியிருந்தன.

இத்தகைய முக்கியத்துவமற்ற, ஆதாரமற்ற வதந்திகளை பெரிய அளவில் முக்கியத்துவம் பெறாவிட்டாலும் இந்த கலவரம் ஜெர்மனியின் சதியாக இருக்க வாய்ப்புண்டு என்று அதிகாரபூர்வ அறிக்கையில் கூட குறிப்பிடப்பட்டிருந்தது. ஏற்கெனவே பிரித்தானிய காலனித்துவ நாடுகள் பலவற்றில் ஜேர்மன் உளவாளிகள் செயற்பட்டு வருவதாக நம்பப்பட்டு வந்தது. பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக இந்தியாவில் இயங்கிவந்த சக்திகளுக்கு ஜெர்மன் உதவிகளை வழங்கி வந்தது என்று திடமாக நம்பப்பட்டது. பிரித்தானியாவுக்கு எதிரான கருத்து கொண்டோர் என்கிற சந்தேகத்தின் பேரில் அப்போது இலங்கையில் இருந்த சில ஜெர்மன் நாட்டைச் சேர்ந்தவர்கள் நாடு கடத்தப்பட்டார்கள்.

ஆனால் இத்தகைய பீதிகளிலும், அனுமானங்களிலும் எந்தவித உண்மையும் இருக்கவில்லை என்பதை பிற்காலங்களில் வெளிவந்த சகல ஆய்வுகளிலும், அறிக்கைகளிலும் தெளிவாகத் தெரியவந்தது. இது உள்நாட்டில் ஏற்பட்ட இரு சமூகங்களுக்கு இடையில் திட்டமிடப்படாமல் தொடங்கப்பட்ட திடீர் கலவரம். அதை அடுத்த கட்டத்துக்கு வளர்த்துச் சென்றது கொள்ளையடிப்பவர்களும், சண்டியர்களுமே. அதை மேலும் மோசமான படுகொலைகளுடன் முடிவுக்கு கொண்டுவந்தது பிரித்தானிய அரசே. எல்லாவற்றையும் விட இந்த கலவரம் எந்த விதத்திலும் ஆங்கிலேயர்களுக்கு எதிரானதாக இருக்கவே இல்லை. இது அரசுக்கு எதிரான கலவரம் என்கிற கதை படு முட்டாள்தனமானது என்று இராமநாதன் அரசசபையிலும் தனது நூலிலும் இன்னும் பல இடங்களில் வெளிப்படுத்தியிருந்தார்.

இலங்கை சட்ட சபையில் ஐரோப்பிய பிரதிநிதியாக இருந்த ஹர்ரி க்ரீசி (Harry Creasy) “மிகவும் நம்பிக்கையுடன் கூறுகிறேன் பிரித்தானிய அரசாட்சியில் சிங்களவர்கள் அளவுக்கு சட்டத்தை மதிக்கும் நம்பிக்கையான மக்களை காண முடியாது” என்று அரசவையில் உரையாற்றினார்.

அதேவேளை கலவரம் நிகழ்ந்த பகுதிகளுக்கு சென்று விசாரணை நடத்திவிட்டு வந்த அதிகாரிகள் இந்த கலவரம் முஸ்லிம்களுக்கு எதிரானது மாத்திரமல்ல ஐரோப்பியர்களுக்கு எதிரானதும் கூட என்று நம்புவதாக இலங்கை கட்டளைத் தளபதியாக கடமையாற்றிய கேப்டன் நோர்த்கோட் அறிக்கையிட்டார். தேசத்துரோக நடவடிக்கைகள் மேலும் பரவாமல் தடுப்பதற்கு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வெளியிட்டிருந்த அறிக்கையும் இத்தகைய இராணுவச் சட்டம் கொண்டுவருவதற்கு ஏதுவாக இருந்தது.

இந்த கலவரம் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட விசேட ஆணையாளரின் சில ரகசிய அறிக்கைகளிலும் இதனை “தேசத்துரோக சதி”  என்றே குறித்திருந்தது. நாடு முழுவது கலவரத்தை ஏற்படுத்துவதற்காக நன்கு திட்டமிட்ட நிகழ்ச்சி இது என்று கேகாலை அறிக்கையிலும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. சிங்கள – மரக்கல (கரையோர முஸ்லிம்கள்) சமூகங்களுக்கு இடையில் இருந்த விரிசலை பிரித்தானியாவுக்கு எதிராக திசைதிருப்பி விடும் இலக்குடன் இது நகர்ந்தது என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அன்றைய சூழலில் இலங்கையில் இருந்த அரச அதிகாரிகளுக்கு இடையில் நிலவிய பாரிய முரண்பாடுகளும் இப்படி முன்னுக்குப் பின் முரணான குழப்பகரமான அறிக்கைகளுக்கு காரணம் என்று குமாரி ஜெயவர்த்தன எழுதிய “இலங்கை தொழிலாளர் இயக்கத்தின் எழுச்சி” என்கிற நூலில் விளக்குகிறார்.

ஆன்றைய ஆள்பதி சார்மஸ் தலைமையிலான சிவில் அதிகாரிகள் கொண்ட குழு கூட்டங்களில் பல முரண்பாடுகள் விவாதிக்கப்பட்டுள்ளன. ஆனால் இறுதியில் முடிவு எடுக்கும் அதிகாரம் அன்றைய காலனித்துவ செயலாளர் சேர் ரெஜினோல்ட் ஸ்டப்ஸ் (Reginald Edward Stubbs) இடமே இருந்தது, கலவரம் குறித்து சார்மசுக்கும் ஸ்டப்சுக்கும் இடையில் பரிமாறப்பட்ட இரகசிய கடிதமொன்றில் “தேசாதிபதியின் கணிப்பை விட நிலைமை மோசமாகத் தான் இருக்கிறது. இந்த நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான ஒரே வழி இராணுவச் சட்டத்தை கொண்டு வருவதே. அதுபோல இதனை அடக்குவதற்கான பொறுப்பை இராணுவத்திடம் ஒப்படைக்கவேண்டும்” என்றும் அறிவித்திருக்கிறார். தேசாதிபதி இதனை செய்யத் தவறியிருக்கிறார் என்றும் நிலைமை குறித்த அவரது அறிக்கை உண்மை நிலையை விபரிக்கத் தவறியுள்ளன என்றும் காலனித்துவ நடவடிக்கைகளுக்கான அலுவலகத்துக்கு அவர் அறிவித்திருக்கிறார்.

ஸ்டப்ஸ் இன் கருத்துக்கள் மிகவும் வேடிக்கையாகவே இருந்தது என்று குமாரி ஜெயவர்த்தன குறிப்பிடுகிறார். ஸ்டப்ஸ் காலனித்துவ காரியாலயத்தைச் சேர்ந்த ஏ.ஈ.கொலின்ஸ் க்கு அனுப்பிய கடிதமொன்றில் இப்படித் தெரிவிக்கிறார்.

“கலகக்காரர்கள் கூடியிருந்த இடங்களில் இராணுவத்தினர் சென்று துப்பாக்கியால் அவர்களை சுட்டுகொன்றர்கள். இதில் மதுவொழிப்பு இயக்கத்தின் தலைவர் மிரண்டோ கொல்லப்பட்டது தற்செயல் நிகழ்வு தான். ஆனால் அது தேவ சித்தத்தினால் சரியாகத் தான் நடந்திருக்கிறது. ஆரம்பத்தில் மிரண்டோ அந்த கும்பலைத் தூண்டிவிட்டு களைந்து சென்றுவிட்டு பின்னர் மீண்டும் அந்த இடத்துக்கு விளைவுகளை பார்வையிட வந்திருந்தார் என்பதற்கான சாட்சிகள் உள்ளன. ஆனால் அதன் போது அவர் தற்செயலாகவே கொல்லப்பட்டார். அதன் மூலம் சரியான ஒருவரை கொல்லக்கூடியதாக இருந்திருக்கிறது.”

கலவரம் பற்றி 1916 இல் நூல்களாக எழுதிய சேர்.பொன்,இராமநாதன், ஆர்மண்ட் டி சூசா, ஈ,டபிள்யு பெரேரா போன்றோர் இந்த கருத்திலிருந்து வேறுபடுவதை காண முடிகிறது. அவர்கள் குறிப்பிடும்போது “கொட்டாரோட்டில் சம்பவம் நடந்த இடத்திலிருந்து 150 யார் தூரத்திலேயே மிரண்டோவின் இல்லம் இருந்தது. அவர் தனது வீட்டிலிருந்து வெளியே வந்தபோது இராணுவம் அவரை சுட்டுக்கொன்றது” என்றே குறிப்பிட்டுள்ளனர்.

ஸ்டப்ஸ் 1913 - 1919 காலப்பகுதியில் இலங்கைக்கான காலனித்துவ செயலாளராக கடமையாற்றியாவர். அதன் பின்னர் மீண்டும் இலங்கைக்கான 27வது ஆள்பதியாக 1933 – 1937 காலப்பகுதியில்  ஆட்சிபுரிந்தவர். கறைபடிந்த முக்கிய சம்பவங்கள் அவரது காலத்தில் பதிவாகியுள்ளன. அவுஸ்திரேலிய பிரஜையும் லங்கா சமசமாஜ கட்சியின் செயற்பாட்டாளருமான பிரஸ்கேடிலை (Bracegirdle) நாடுகடுத்தும் ஆணையை பிறப்பித்த பிரதான சூத்திரதாரியும் இவர் தான். அந்த வழக்கில் ஸ்டப்ஸ் தோற்றுப்போனார். உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி பிரஸ்கேடிலுக்கு ஆதரவாக அந்த வழக்கு அமைந்தது நமக்கு நினைவிருக்கலாம்.

ஆள்பதிக்கும் காலனித்துவ செயலாளருக்கும் இடையில் இருந்த பனிப்போரும், முரண்பாடுகளும் இந்த சம்பவத்தில் பல சிக்கல்களைக் கொண்டுவந்திருந்தன டீ.ஏ.பேத்திரிஸ் மரணதண்டனை சம்பவம் இந்த முரண்பாட்டை விளக்க நல்ல உதாரணம். அது மட்டுமன்றி பேதிரிஸ் தேசத்துக்காக உயிர் துறந்த தியாகியாக இன்றும் சிங்களவர்கள் மத்தியில் போற்றப்படுகிறார். சென்ற ஆண்டு கண்டி கலவரம் குறித்து இலங்கையில் நிகழ்ந்த ஒரே குறிப்படத்தக்க நிகழ்வு, பேதிரிஸ் நினைவு தினத்தை பெரிய அளவில் கொண்டாடியது தான். அந்த நிகழ்வின்போது கண்டி கலவரத்தின் போது பேதிருசுக்கு நிகழ்ந்தது என்ன என்பதை விபரிக்கும் 155 பக்கங்களைக் கொண்ட ஒரு நூலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் வெளியிடப்பட்டது. எட்வர்ட் ஹென்றி பேதிரிசுக்கு கொழும்பு ஹெவ்லொக் சந்தியில் பல ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு சிலையும் நிறுவப்பட்டுள்ளது. பேதிரிஸ் குறித்து விரிவாக அடுத்த இதழில் பார்க்கலாம்.

தொடரும்

இக்கட்டுரையாக்கத்துக்கு உசாத்துணைக்கு பயன்பட்டவை

 • Memorandum upon recent disturbances in Ceylon - Perera, Edward Walter – (London, E. Hughes & co., 1915)
 • Riots and Martial Law in Ceylon - 1915 Hardcover – P. Ramanathan (St.Martins Press, 15 Craven Street, Strand, 1916)
 • A History of Sri Lanka - K. M. De Silva – (University of California Press - 1981)
 • The Rise of the Labor Movement in Ceylon - Kumari Jayawardena - Duke University Press, 1972
 • Hundred days in ceylon under martial law 1915 - Armand de Souza (The Ceylon Morning Leader - 1916)
 • “Hobgoblins, Low-Country Sinhalese Plotters or Local Elite Chauvinists?: Directions and Patterns in the 1915 Communal Riots”, Roberts, Michael (Sri Lanka Journal of the Social Sciences 1981)
 • “The Rev.A.G.Fraser and the Riots of 1915”, James Rutnam,  (Ceylon Journal of Historical and Social Studies, Vol.1 No. 2 (July-December 1971))
 • “අනගාරික ධර්මපාල” - ඩේවිඩ් කරුණාරත්න (M.D.Gunasena & Co. (Pvt.) Ltd, 2012)
 • ධර්මපාල ලිපි අනගාරික ධර්මපාලතුමාගේ ලිපි සංග්‍රහයකි ආචාර්ය ආනන්ද ඩබ්ලිව්. පී. ගුරුගේ සංඥාපනය –(Department Of Government Printing-1991)
 • ශ්‍රී ලංකාවේ ගැටුම් නිරාකරණය සහ සාමය ගොඩනැංවීම : බෞද්ධ පර්යාලෝකය - Nirmanee Circle (Social scientists Association, 2008)

நன்றி - தினக்குரல்

மலையகத் தமிழர்கள் என்ற நாமம் எமது அடையாளமாகும் - நிசாந்தன்இலங்கையில் இந்தியத் தமிழர்கள் குடியமர்த்தப்பட்டது முதல் மலையகத் தமிழர்கள் என்ற நாமத்திலேயே அழைக்கப்பட்டு வந்தனர்  வருகின்றனர்.  ஆனால், தற்போது மலையகத் தமிழர்கள் என்று அழைக்கப்படும்  பெயர் நாமம் விவாதிக்கும் கருபொருளாக மாறியுள்ளது. 

ஆங்கிலேயக் காலனித்துவத்தில் பெருந்தோட்டங்களில் குடியமர்த்தப்பட்ட இந்தியத் வம்சாவளித் தமிழர்களை இதுவரை காலமும் மலையகத் தமிழர்கள் என்றே அழைத்துவந்தனர். ஆனால், கடந்த வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட சபை ஒத்திவைப்பு பிரேரணையின் போது மலையக மக்களை மலையகத் தமிழர்கள் என்று அழைக்கப்படுவதை மாற்றியமைத்து ஏனையவர்கள்போல் தமிழர்கள் என்று அழைக்கப்பட வேண்டுமமென தேசிய சகவாழ்வு மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்திருந்தார். 

இந்த நாட்டில் மலையகத் தமிழர்களுக்கென்றொரு பாரம்பரியம் இருக்கின்றது. அதனை முறையாக மக்களிடம் கலந்துரையாடாமல் எவ்வாறு அமைச்சர் அந்தக் கருத்தை நாடாளுமன்றத்தில் பதிவுசெய்ய முடியும். வரலாற்றில் பல சந்தர்ப்பகளில் இலங்கையில் அரசமைப்பு உருவாக்கப்பட்டிருந்தது. ஆனால், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மலையகத் தலைமைகள் மலையகத் தமிழர்கள் என்ற நாமத்தை மாற்ற வேண்டுமென  அரசுக்கு கோரிக்கை விடுக்கவும் இல்லை. எவ்வாறு மக்களுக்குத் தெரிவிக்கவும் இல்லை. 

பெருந்தோட்ட மக்களின் அடிப்படைப் பிரச்சினையான சம்பளப் பிரச்சினையை தீர்மானிக்கும் கூட்டு ஒப்பந்தம் காலாவதியாகி ஒரு வருடம் கடக்கவுள்ள நிலையில், இது தொடர்பில் தமிழ் முற்போக்குக் கூட்டணியோ அல்லது, இலங்கைத் தொழிலாளர் காங்கிரசோ இதுவரை ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எதனையும் மேற்கொள்ளவில்லை. வெறுமனே பேச்சுகளுக்கு அழைத்தால் மாத்திரம் 1, 000ரூபா என்ற கோஷத்தை எழுப்புகின்றனர்.

கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடும்வரை அடிப்படை சம்பளத்துடன், 100 ரூபா அதிகரித்து தருவதாகக் கூறிய அரச தொழில் மற்றும் தொழிற்சங்க அமைச்சர் ஜோன் செனவிரத்த 4 மாதமாகியும் தமது வாக்குறுதிக் குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.   தற்போது தனியார் துறைக்கு அதிகரிக்க உள்ள 2,500ரூபா சம்பள அதிகரிப்பில் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளமும் அதிகரிக்கப்பட வேண்டும் என்ற கருத்தை முன்வை வருகிறார். இவை தொடர்பில் சில மலையக முக்கிய அமைச்சர்கள் மக்களுக்குத் தெளிவான கருத்தைத் தெரிவிக்கவும் இல்லை. அதனைத் தீர்ப்பதற்கு ஆக்கப்பூர்வமான எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. 

இவ்வாறானப் பிரச்சினை இருக்கும் சூழலில்  அடையாளமகவுள்ள மலையகத் தமிழர்கள் என்று அழைக்கப்படும் நாமத்தை மாற்ற வேண்டும் என்று தெரிவிக்கின்றனர். இது பாரிய சிக்கல் வாய்ந்த விடயம் என்பதை குறிப்பிடுபவர்கள் தெரிந்துவைத்துள்ளார்களா என்பது கேள்விக்குறியே மலையகத்தில் போற்றதகு இருந்த தலைவர்களான சி.பி வேலுப்பிள்ளை மற்றும் சௌமிய மூர்த்தி தொண்டமான் போன்றோர் மலையகத் தமிழர்களின் தனியான அடையாளம் குறித்து பல முறை தமது கருத்துகளைப் பதிவுசெய்துள்ளனர். 

1964ஆம் ஆண்டு சிறிமா  சாஸ்திரி ஒப்பந்தம் மற்றும் இலங்கையில் இடம்பெற்ற இனக் கலவரங்களின் போது மலையகத் தமிழர்கள் இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்கள் என்ற அடையாளம் இருந்தமையால் பெரும்பாலானர்கள் தப்பிச் சென்றனர். இல்லாவிடின் அன்று சிங்களவர்கள் மத்தியில் சிக்கியிருந்தால் மலையகத் தமிழர்களின் நிலை என்னவென்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். உலகில் தமிழர்கள் எங்கு வாழ்ந்தாலும் தமிழர்கள் தமிழர்கள்தான் ஆனால், வாழும் இடத்தில் அவர்களுக்கென்று ஒரு அடையாளம் இருப்பதே சிறந்த பாதுகாப்பு. இல்லாவிடின் அவர்களின் பாரம்பரியம், பண்பாடு, கலாசாரம் என்பன சிதைக்கப்பட்டுவிடும்.

புதிய அரசமைப்புக்குத் தீர்த்திட்டம் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு  ஆராயும் ஸ்கொட்லாந்தை எடுத்துக்கொண்டால் அது ஐக்கிய இராச்சியத்தின் ஒரு பகுதி அங்கும் வெள்ளையர்கள்தான் வாழ்கின்றனர். ஆனால், அவர்கள் ஸ்கொடிசாகத்தான் வாழ்கின்றனர். அவர்கள் ஐக்கிய இராச்சியத்தினர் என்றாலும், தமது பண்பாடு, கலாசாரம் மற்றும் மொழி அடிப்படையில் வேறுப்பட்டவர்கள் என்தால் அவர்களுக்கு ஸ்கொட்லாந்தினர் என்ற நாமம் உள்ளது.

மலையகத் தமிழர்கள் என்ற நாமம் இருக்கும்வரைதான் ஏதும் அநீதியிழைக்கப்பட்டால் இந்தியாவிடம் கூற முடியும் இல்லாவிடின் அதற்கான வாய்ப்பு மறுக்கப்படும் என்பது நிதர்சம். மலையகத் தமிழர்கள் என்றாலே, இந்தியாவில் இருந்து ஆங்கிலேயர் காலத்தில் இலங்கையில் குடியமர்த்தப்பட்டவர்கள் என்ற விடயம் உலகலாவிய ரீதியில் தெரிந்த விடயம் அதனை மாற்றியமைப்பது கண்டிப்பாக விவாதத்திற்கு உட்படுத்தப்பட வேண்டும். என்பதுடன், இது சிக்கலான விடயம். 

மலையத்தில் உள்ள பெரும்பாலான புத்திஜீவிகள் மலையகத் தமிழர்கள் என்ற நாமத்தை மாற்றியமைப்பதற்கு எதிரானவர்கள். புதிய அரசமைப்பில் மலையக மக்களின் தீர்வுத் திட்டம் குறித்து தமிழ் முற்போக்கு கூட்டணி வலியுறுத்தியதில் முதலில் இருத்த விடயம்தான் மலையகத் தமிழர்கள் என்ற நாமம். ஆனால், தற்போது மாறுப்பட்ட கருத்தை தெரிவிக்கின்றனர். இது மக்களையும் குழப்பும் செயற்பாடாகும். 

இலங்கை என்பது இனவாதத்தில் புரையோடிப் போயுள்ள நாடுகளின் பட்டியிலில் முன்னிலையில் உள்ளது. மாற்றம் இடம்பெற ஆரம்பித்து ஒரு வருடம்தான் கடந்துள்ளது. ஆனால், இன்னமும் இலங்கையில் இனவாதத்தின் வேர் அருக்கப்பட வில்லை. அதற்கிடையில் எமக்கான அடையாளத்தை மாற்றியமைப்பது எமது மக்களின் எதர்காலத்தை கேள்விக்குறியாக்கிவிடும். இலங்கையில் சகல இனங்களும் சமாதானமாக வாழ்வதற்கு சமஷ்டி அரசமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்ற கருத்து வலுப்பெற்றுவரும் சூழலில் இலங்கையின் தற்போதைய அரசு சமஷ்டி என்ற பெயருக்கே இடமில்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவிதுள்ளது. 

எனவே, மலையகத் மக்களின் பாரம்பரியம், கலாசாரம் மற்றும் அடையாளத்தைப் பாதுகாத்துவரும் மலையகத் தமிழர்கள் என்ற நாமத்தை வெறுமனே அமைச்சர்கள் நினைப்பதால் மாற்றியமைக்க முடியாது. அது மலையக மட்டத்தில் தீர்க்கமாக கலந்துரையாடப்பட வேண்டும். அது ஒட்டுமொத்தமான மலையகத் தமிழர்களின் உரிமையின் அடையாளம். இலங்கையில் நிலையான சமாதானமும், நல்லிணக்கமும் ஏற்படவில்லை. அதற்கான அரசரமைப்பு பற்றி இதுவரை தெரியாதுள்ளது. 

மலையகத் தமிழர்கள் என்ற நாமத்துடன், இலங்கையின் தேசிய நீரோட்டத்தில் வாழ்வதில் எவ்வித சிக்கலும் ஏற்பட போவதில்லை. பல சமூகங்கள் வாழும் நாடுகளில் நல்லிணக்கம் ஏற்படுத்தப்பட்ட பின்னரும் அந்தச் சமூகங்கள் தங்களுடைய அடையத்தில்தான் வாழ்கின்றன. இதற்குத் தக்க உதாரணமாக தென்னாபிரிக்க, இந்தியா, ஐக்கிய அமெரிக்கா போன்ற நாடுகளில் ஒரு மொழி பேசும் இனங்களாயினும் சமூக அடிப்படையில் தமது அடையாளத்தை பேணிகாக்கும் வகையிலேயே வாழ்கின்றனர்.

தற்போதைய சூழலில் தேர்தல் முறை மாற்றம் என்ற உடன் மலையகத் தமிழர்களின் பிரதிநிதித்துவம் பற்றி பேசுகிறோம். ஆனால், அந்த அடையாளம் இல்லாமல் செய்யப்பட்டால் எவ்வாறு அதற்கானக் கோரிக்கையை முன்வைப்பது. எனவே, இந்த விடயம் ஆளமாக விவாதிக்கப்பட வேண்டும். மலையக மக்களின் பிரதிநிதிகள் என்ற காரணத்திற்கான மக்களிடம் பேச்சுகள் நடத்தாமல் மக்களின் அடையாளத்தை மாற்றியமைக்க முடியாது என்பது தெளிவான விடயமாகும். 

மதத்தைக்கடந்து மலையகத்தை நேசித்த சிந்தனையாளர் ! அருட்திரு. கீத பொன்கலன் - திலகர் எம்பிதான் ஒரு மதகுருவானபோதும், மலையகத்தவர் அல்லாதபோதும் மலையக மக்கள் குறித்த அக்கறையாளராகவும் ஆய்வாளராகவம் திகழ்ந்த அருட்திரு.கீத பொன்கலனின் மறைவு மலையக அரசியல், சமூக ஆய்வுப்பரப்பில் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் மதத்தைக் கடந்து மலையகத்தை நேசித்த சிந்தனையாளர். அன்னாருக்கு மலையக மக்கள் சார்பில் எனது அஞ்சலிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் விடுத்திருக்கும் அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். 

பண்டாரவளை லியோ மார்கா ஆச்சிரமத்தைச் சேர்ந்த அருட்தந்தை கீத பொன்கலன் திருகோணமலை கடலில் நீராடச் சென்ற வேளை நீரில் மூழ்கி மரணமானார். இவரது இழப்பு குறித்து அனுதாபச் செய்தியொன்றை வெளிளியட்டிருக்கும் நுவரெலியா மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் மேலும் தெரிவித்திருப்பதாவது, 

யாழ்ப்பாணத்தில் பிறந்து, அங்கு ஆரம்ப கல்வியை கற்று, கண்டி குருநிலைக்கல்லூரியில் மறையியல் பட்டம்பெற்று பின்னர் பெல்ஜியம் லுவேன் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் பட்டம் பெற்றவரான சந்தியாப்பிள்ளை கீத பொன்கலன் மதகுருவாக மலையகப்பகுதிகளில் கடந்த நாற்பது ஆண்டுகாலமாக வாழ்ந்தவர். இதனால் மலையக மக்கள் தொடர்பான பல்வேறு ஆய்வு முயற்சிகளை மேற்கொண்டு பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். மலையக மக்களின் கல்வி முன்னேற்றம் கருதியும் தொழில்நுட்ப கல்வி, ஆசிரியப்பயிற்சி என பல்வேறு செயற்றிட்டங்களையும் அறிமுகப்படுத்தியவர். பத்திரிகைகளில் பல்வேறு கட்டுரைகளை தனது ஆய்வின் மூலம் எழுதி வந்தார். ஆங்கிலம், தமிழ் என இரண்டு மொழிகளிலும் புலமையாளரான இவர் எழுதிய நூல்கள் பல்வேறு விஞ்ஞானபூர்வ அணுகுமுறைகளை; கொண்டதாக அமைந்துள்ளமை சிறப்பு. ‘மலையகத்தமிழரும் அரசியலும்’ எனும் இவரது நூல் காலனித்துவ காலம் முதல் 1990 கள் வரையான மலையக மக்களின் அரசியல் வரலாற்றை ஆய்வு செய்துள்ள வரலாற்று ஆவணமாகும். 

தனியே ஆய்வாளராக மாத்திரமல்லாது மலையக சிவில் சமூகங்களுடன் கலந்துரையாடல்கள் சந்திப்புகளில் பங்குபற்றி வந்த இவர் மலையக மக்களின் சுபீட்சத்துக்காக பல்வேறு பணிகளில் ஈடுபட்டார். மலையகப் பெருந்தோட்ட மக்களின் அபிவிருத்தியை முன்னிலைப்படுத்தி தயாரிக்கப்பட்ட பத்து ஆண்டு திட்டத்தயாரிப்புகளின் போதும் இப்போது முன்வைக்கப்படவுள்ள ஐந்து ஆண்டு திட்டத் தயாரிப்புகளின்போதும் தனது கருத்துக்கள் மூலம் பங்களிப்பு செய்தவர். ‘பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிறுவகம்’ (Trust) குறித்த அவரது ஆங்கில ஆய்வு நூல் மலையக மக்களுக்கான தனியான அதிகார சபை ஒன்றின் அவசியத்தை வலியுறுத்துவதாக உள்ளது. 

மலையகப் பூர்விகம் அல்லாதவர்கள் மலையக இலக்கியத்திற்கு அதிகளவு பங்களிப்பு செய்திருக்கும்போதும் கூட ஆய்வு மற்றும் செயற்பாட்டு பக்கங்களில் மிகக்குறைந்தளவினரே பங்களிப்பு நல்கியுள்ளனர். அந்த வகையில் பேராசிரியர் பஸ்தியாம்பிள்ளை, பாலசிங்கம், ஞானமுத்து போன்றவர்களின் வரிசையில் மலையக மக்களுடன் தொடர்புடைய ஆய்வு முயற்சிகளில் பங்கேற்ற பெருமை அருட்திரு.கீத பொன்கலன் அவர்களுக்கு உண்டு. மலையக தேசியம் குறித்த தெளிவான சிந்தனையைக் கொண்டிருந்த அன்னாரின் மறைவு மலையக ஆய்வு முயற்சிகளில் ஏற்பட்ட ஓர் இழப்பாகும். அன்னாரின் இழப்புக்கு மலையக மக்களின் சார்பாக எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றேன் எனவும் தெரிவித்துள்ளார். 

அருட்தந்தை பொன்கலனின் மறைவு மலையக சமூகத்திற்கு பேரிழப்பு


திருகோணமலை, நகர சபைக்கு அருகிலுள்ள கடற்கரையில் நீராடச் சென்ற அருட்தந்தை பொன்கலன், கடலில் மூழ்கி திங்கட்கிழமை (29/02/2016) இரவு உயிரிழந்தார்.

யாழ் மண்ணில் மலர்ந்து வளர்ந்து ஆரம்பக் கல்வியைப் பயின்று, பெல்ஜியத்தில் தனது உயர் கல்வியைக் கற்று மலையகத்தில் சமூகப் பணிக்காக தனது வாழ்க்கையை அர்பணித்த திருப்பணியாளர் சந்தியாப்பிள்ளை கீத பொன்கலன் அடிகளார் 29-02-2016 அன்று அகால மரணமடைந்தார். அடிகளார் மலையகச் சமூகம் சார்ந்த ஒரு சிறந்த ஆய்வாளரும், பதுளையில் உஸ்கொட் என்ற சமூக நிறுவனத்தையும், பண்டாரவளையில் லியோதா மார்ங்கா ஆச்சிரமத்தையும் அமைத்து அவற்றில் தனது இறுதி காலம் வரை சமூகக் களப்பணியாற்றிய சேவையாளருமாவார்.

மலையக ஆய்வாளரான இவர் 20க்கு மேற்பட்ட மலையக நூல்களை தமிழிலும், ஆங்கிலத்திலும் வெளியிட்டுள்ளதுடன் முதுமாணிப் பட்டத்தையும் பெற்றவராவார்.

மலையகத்தில் ஏற்பட்ட முக்கிய அரசியல், சமூக நிகழ்வுகளில் போதெல்லாம் தனது காத்திரமான கருத்துக்களை துணிச்சலுடன் முன்வைத்து வந்தவர். மலையகம் குறித்து தெளிவான தூர நோக்கு பார்வையைக் கொண்ட  ஒரு புத்திஜீவி. மலையகத்தைப் பொருத்தவரையில் ஒரு பேரிழப்பு .

அவரின் பிரிவால்  துயருறும் அனைவருடனும் "நமது மலையகம்" இந்த வேளை துயரைப் பகிர்ந்துகொள்கிறது.மலையகத் தமிழர்களின் அரசியல் எதிர் காலத்திற்காக புதிய அரசியல் யாப்பிற்கான முன்மொழிவுகள்


அறிமுகம்

இவ் ஆவணம் மலையக மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கான அரசியல் தீர்வு தொடர்பில் அடிப்படைக் கொள்கைகளையும், யாப்பு ஏற்பாடுகளையும் முன் வைக்கின்றது. 

“மலையகத் தமிழர்கள்” சுமார் 200 வருடங்களுக்கு மேலாக இலங்கைத் தீவில் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பான்மையோர் மத்திய மலைநாட்டிலும் ஏனையோர் மற்றைய மாகாணங்களிலும் வசிக்கின்றனர். காடாக இருந்த மலையக மண்ணை தேயிலை, இறப்பர் செழிந்தோங்கும் பூமியாக மாற்றியவர்கள் இவர்களேயாவர். இதனூடாக இலங்கைக்கான தேசிய வருமானத்தை முதல் நிலையில் பெற்றுக் கொடுத்தனர்.

மலையக மக்களின் கடந்த காலம் கசப்பான வரலாற்றினைக் கொண்டது. மனித குலம் சகிக்க முடியாத கொத்தடிமைகளாக சுதந்திரத்தின் முன்னர் பிரித்தானிய ஆட்சியாளர்களாலும,; சுதந்திரத்தின் பின்னர் இலங்கை ஆட்சியாளர்களினாலும் இம்மக்கள் நடாத்தப்பட்டனர். சொந்தமாக நிலமோ, வீடோ இல்லாமல் உலகில் வாழும் பெருங்கூட்டம் மலையக மக்கள் தான். இலங்கைத் தீவுக்குள்ளே இன்னோர் இருண்ட தீவாக மலையகம் இருந்தது.

உலகமே தலை குனியும் மனிதாபிமானத்திற்கு எதிரான சட்டங்கள் அவர்கள் மீது ஏவப்பட்டன. பிரஜாவுரிமைச் சட்டம,;; தேர்தல்கள் திருத்தச் சட்டம் என்பவை இவற்றில் முக்கியமானவை. இவற்றினூடாக பிரஜாவுரிமையும் வாக்குரிமையும் பறிக்கப்பட்டன. இவர்களின் சம்மதமில்லாமல் சிறிமா-சாஸ்திரி, சிறிமா-இந்திரா ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டு இவர்களில் பெரும் பிரிவினர் இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டனர். இந்தியாவிலும் அவர்களது வாழ்வு சிறப்பாக உள்ளது எனக் கூற முடியாது. கூட்டாக வாழ்ந்த மக்களை இந்திய அரசாங்கம் பல பிரதேசங்களிலும் சிதற விட்டுள்ளது.

மிக நீண்ட காலமாக தேசிய நீரோட்டத்தில் அவர்கள் இணைக்கப்படவில்லை. அண்மைக் காலமாக மலையகத் தமிழர்கள் தேசிய நீரோட்டத்தில் சிறிது சிறிதாக உள்வாங்கப்படுகின்றனர். அதுவும் இன்னமும் முற்றுப்பெறவில்லை. உள்ள+ராட்சிச் சபைகள் பெருந்தோட்ட மக்களுக்கு உதவ முடியாத நிலை இன்றும் உள்ளது.

மேற்கூறியவாறு வரலாற்று ரீதியாக பல்வேறு ஒடுக்குமுறைகளுக்கு இம்மக்கள் முகம் கொடுத்தாலும் அதனூடாக இன்று ஒரு தேசிய இனமாக வளர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களது தேசிய இன அடையாளம் தொடர்ந்து சிதைக்கப்படுகின்றது. இது ஒருவகை இன அழிப்பாகும். இதுவே மலையக மக்கள் எதிர்நோக்கும் அரசியல் பிரச்சினையாகும். எனவே மலையக மக்களுக்கான அரசியல் தீர்வு, யாப்பு ஏற்பாடுகள் என்பன இந்த அடையாளச் சிதைப்பிலிருந்து அவர்களைப் பாதுகாப்பதாக இருத்தல் வேண்டும்.
அடையாளம்

01. இலங்கையில் சிங்களவர்கள், இலங்கைத்தமிழர்கள், முஸ்லிம்கள், மலையகத் தமிழர்கள் என நான்கு தேசிய இனத்தவர்கள் தனித்துவ அடையாளத்துடன் வாழ்கின்றனர். ஏனைய இனங்களைப் போன்று மலையகத் தமிழர்களும் இலங்கைத் தீவின் தனித்துவமான தேசிய இனத்தவராவர்.
இவர்களுடன் வேடுவர், பறங்கியர், மலாயர், ஆபிரிக்கர், ஆகியோரும் இலங்கைத் தீவில் வசிக்கின்றனர்.
02. மலையக மக்கள் ‘மலையகத் தமிழர்’ என்ற பெயரினால் அழைக்கப்படல் வேண்டும். ‘இந்திய வம்சாவழித் தமிழர்’ என்ற பெயரினால் அழைக்கப்படக் கூடாது. (இது மலையக மண்ணிலிருந்து அவர்களை அந்நியப்படுத்துவதுடன் மலையகத்தை தாயகமென மலையக மக்களால் கூறமுடியாத நிலையை ஏற்படுத்துகின்றது). 
03. மலையகத் தேசிய இனத்தை தாங்கும் தூண்களாக இருப்பவை நிலம், தமிழ்மொழி, பெருந்தோட்டத் துறைப் பொருளாதாரம், மரபு ரீதியான மலையக மக்களின் கலாசாரம் என்பனவாகும். இவை யாப்பு ரீதியாக பாதுகாக்கப்படல் வேண்டும்.

அரசு

01. இலங்கை அரசு பல்லினத் தன்மையை பேணும் வகையில் அனைத்து தேசிய இனங்களுக்கும் நியாயமான இடத்தைக் கொடுக்கும் பன்மைத்துவ அரசாக (சமஸ்டி அரசாக) இருக்க வேண்டும். அதாவது மாநில அரசுகளின் ஒன்றியமாக இருக்க வேண்டும்.
02. மாநில அரசுகளில் ஒன்றாக மலையகமும் இருக்க வேண்டும். இதற்கு மத்திய, ஊவா, சப்ரகமுவ மாகாணங்களில் மலையக மக்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களை இணைத்து மலையக மக்களுக்கான அதிகார அலகு ஒன்று உருவாக்கப்படுதல் வேண்டும். அது நிலத்தொடர்ச்சியற்றதாகவும் இருக்கலாம் (பாண்டிச்சேரி போன்று).
03. ஏனைய பிரதேசங்களில் வாழும் மலையக வம்சாவழியினரின் நலன் பேணும் வகையில் சமூக அதிகார அலகு உருவாக்கப்படல் வேண்டும் (பெல்ஜியம் மாதிரி).

இறைமை

01. இறைமை பிரிக்க முடியாததாக மக்களிடமும், தேசிய இனங்களிடமும் இருக்கும். இவ் இறைமை வாக்குரிமை, மனித உரிமைகள் என்பவற்றையும் உள்ளடக்கியிருக்கும்.
02. மக்களினது சட்டவாக்க அதிகாரங்கள் மக்கள் சார்பாக மத்திய அரசினாலும், மாநில அரசுகளினாலும் யாப்பின்படி அவற்றினுடைய அதிகார எல்லைக்குள் பிரயோகிக்கப்படும்.
03. மக்களது நிறைவேற்று அதிகாரங்கள் யாப்பின்படி மக்களின் சார்பாக மத்திய அரசினாலும் மாநில அரசுகளினாலும் அவற்றினுடைய அதிகார எல்லைக்குள் பிரயோகிக்கப்படும்.
04. மக்களது நீதி அதிகாரங்கள் யாப்பின் படி மக்கள் சார்பாக மத்திய அரசின் நீதிமன்றங்களினாலும், மாநில அரசுகளின் நீதிமன்றங்களினாலும் அவற்றின் அதிகார எல்லைக்குள் பிரயோகிக்கப்படும். இவற்றிற்கேற்ப இலங்கையின் நீதித்துறை மத்திய அரசின் நீதித்துறை, மாநில அரசுகளின் நீதித்துறை என இரு வகைகளாக பிரிக்கப்பட வேண்டும். 
05. நீதித்துறைச் சுதந்திரத்திற்கான ஏற்பாடுகள் உள்வாங்கப்படல் வேண்டும். அரசியல்யாப்பு விவகாரங்களைக் கையாள்வதற்கு அரசியல்யாப்பு நீதிமன்றம் ஒன்றும் உருவாக்கப்படல் வேண்டும்.

மொழி

01. சிங்களமும், தமிழும் இலங்கையின் அரசகரும மொழிகளாகவும், தேசிய மொழிகளாகவும் இருத்தல் வேண்டும். ஆங்கிலம் இணைப்பு மொழியாக இருத்தல் வேண்டும்.
02. பிரஜைகள் எவரும் சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் அரச கருமங்கள் ஆற்றங்கூடிய நிலையிருத்தல் வேண்டும்.
03. வட-கிழக்கு மாநில அரசிலும், மலையக மாநில அரசிலும் தமிழ்மொழி அரச கருமமொழியாக இருத்தல் வேண்டும். ஏனைய மாநிலங்களில் சிங்கள மொழி அரச கரும மொழியாகவும் இருத்தல் வேண்டும். எனினும் எல்லா மாநிலங்களிலும் மூன்று மொழிகளிலும் தொடர்பாடல்களை மேற்கொள்ளக்கூடியாத இருத்தல் வேண்டும்.
04. வட-கிழக்கு மாநில அரசிலும், மலையக மாநில அரசிலும் தமிழ்மொழி நீதிமன்ற மொழியாக இருத்தல் வேண்டும். ஏனைய மாநில அரசுகளில் சிங்கள் மொழி நீதிமன்ற மொழியாக இருத்தல் வேண்டும். எனினும் அனைத்து நீதிமன்றங்களிலும் மூன்று மொழிகளிலும் தொடர்பாடலை மேற்கொள்ளக்கூடிய நிலை இருத்தல் வேண்டும்.
05. சிங்களமும், தமிழும் நாட்டின் சட்டவாக்கமொழியாக இருக்கவேண்டும். ஒவ்வொரு சட்டமும் ஆங்கில மொழியிலும் மொழிபெயர்க்கப்படல் வேண்டும். 
06. அரச கரும மொழிக் கொள்கையின் அமுலாக்கலை மேற்பார்வை செய்ய தேசிய அரச கரும மொழி ஆணைக்குழுவும், மாநிலங்களின் அரச கரும மொழி ஆணைக் குழுக்களும் உருவாக்கப்படல் வேண்டும்.

தாய்மொழி கல்வி
இலங்கையில் அனைத்து மாணவா;களும் தமது ஆரம்பக் கல்வியை தாய்மொழியில் கற்பதை உறுதிப்படுத்தும் வகையில் அரச மற்றும் தனியார் பாடசாலைகளுக்கான கல்விக் கொள்கை வகுக்கப்படல் வேண்டும்.
மேலும், அரச அங்கீகாரம் பெற்ற அனைத்து உயா;கல்வி நிறுவனங்களிலும் உள்வாங்கப்படும் மாணவா;கள் தமது தாய்மொழியிலோ அல்லது தாம் விரும்பும் இலங்கையில் பயன்பாட்டிலுள்ள வேறெந்த மொழியிலோ கற்பதற்கான வாய்ப்புக்களை உறுதிப்படுத்தல் வேண்டும்.


மத சார்பற்ற அரசு

1) இலங்கை மத சார்பற்ற அரசாக இருத்தல் வேண்டும். அனைத்து மதங்களின் சுதந்திரங்களும் உறுதிப்படுத்தப்படல் வேண்டும்.
2) மதங்களுக்கிடையே ஐக்கியத்தையும், புரிந்துணர்வையும் வளர்க்கும் வகையில் சமய சுதந்திரத்திற்கான ஆணைக்குழு ஒன்று உருவாக்கப்படல் வேண்டும். 

அரசியல் யாப்பு

1) அரசியல் யாப்பு அனைத்து தேசிய இனங்களையும் பொறுத்தவரை ஒரு நடுநிலையாளனாக இருக்க வேண்டும்.
2) அரசியல் யாப்பே நாட்டின் அதியுயர்ந்த சட்டமாகும். மத்திய அரசினதும், மாநில அரசுகளினதும் சகல செயற்பாடுகளும் அரசியல் யாப்பிற்கு அமைவாகவே இருத்தல் வேண்டும்.
3) அரசியல் யாப்புத் திருத்தங்கள் அனைத்தும் மத்திய பாராளுமன்றத்தின் பெரும்பான்மையாலும், ¾ மாநில சட்ட சட்ட மன்றங்களினாலும் நிறைவேற்றப்படல் வேண்டும்.
4) தேசிய இனங்களுடன் தொடர்புடைய விவகாரங்களை பொறுத்தவரை மேற்கூறிய வற்றுடன் சம்பந்தப்பட்ட தேசிய இனத்தின் சட்ட சபையின் 2ஃ3 பெரும்பான்மையுடனும் நிறைவேற்றப்படல் வேண்டும்.
5) அரசியல் யாப்புடன் தொடர்புடைய விடயங்களுக்கு அரசியல் யாப்பு நீதிமன்றம் பொறுப்பாக இருக்கும்.
6) அரசியல் யாப்பு நீதிமன்றத்தின் நீதிபதிகள் சகல தேசிய இனங்களிலிருந்தும் நியமிக்கப்படல் வேண்டும். தேசிய இனங்களின் நீதிபதிகளை அந்தந்த தேசிய இனங்களின் சட்ட சபைகள் சிபார்சு செயதல் வேண்டும். 
7) தேசிய இனங்களின் விவகாரங்கள் தொடர்பான தீர்ப்புகளுக்கு அந்தந்த தேசிய இனங்களின் சட்டசபைகளினது ஒப்புதல் அவசியம்.

வாழ்வதற்கான உரிமை

இலங்கையின் அரசியல் யாப்பில் அனைத்து இனங்களும் தனித்துவத்தோடும், சமத்துவத்தோடும் தமக்கே உhpய அடையாளங்களை பாதுகாத்து, பேணி எதிர்கால சந்ததியினருக்கு நாகாPகமிக்க மனித சமூகத்தை கட்டியெழுப்புவதற்கு ஏற்ற வகையில் வாழும் உரிமையினை உறுதிப்படுத்தி, அங்கீகாpத்து, பாதுகாப்பளித்தல் வேண்டும்.

தேசிய கீதம்

நாட்டின் தேசிய கீதம் இலங்கையின் அரசகரும மொழிகளான சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் பாடக்கூடியவாறு தேசிய கீதத்தின் வாpகள் வகுக்கப்படல் வேண்டும். அத்தோடு இலங்கையில் வாழக்கூடிய ஏனைய இனங்களின் இனத்துவ அடையாளங்களையும் வெளிப்படுத்தும் வகையில் சொற்தொடா;கள் தேசிய கீதத்தில் உள்வாங்கப்படல் வேண்டும். 

தேசிய கொடி

இலங்கையின் தேசிய கொடியானது இலங்கையில் வாழும் அனைத்து இனங்களையும் அடையாளப்படுத்தும் வண்ணமும், சமத்துவ உரிமையை கௌரவப்படுத்தும் விதமாகவும் வடிவமைக்கப்படல் வேண்டும்.

ஒடுக்குமுறைகள்

இன, மத, பால், சாதி, கல்வி, தொழில், பிரதேசம்… ரீதியில் திட்டமிட்ட முறையில் ஒடுக்குதலையும், அழிவுகளையும் மேற்கொள்ளக் கூடிய வார்த்தை பிரயோகங்களையும், செயற்பாடுகளையும் தனிநபா;களோ, அமைப்புகளோ மேற்கொள்ளா வண்ணம் அனைத்து மக்களுக்குமான பாதுகாப்பு ஏற்பாடுகளை யாப்பு ரீதியாக உறுதிப்படுத்தல் வேண்டும்.

மத்திய அரசிற்கும் மாநில அரசுகளுக்குமிடையேயான அதிகாரப் பகிர்வு

1) ஆட்சி அதிகாரங்கள் மத்திய அரசிற்கும் மாநில அரசுகளுக்குமிடையே பங்கிடப்படல் வேண்டும்.
2) அரசின் அதிகாரங்கள் மத்திய பட்டியல், மாநிலப் பட்டியல் என இரு வகைப்படுத்தப்பட்டதாக இருக்கும்.
3) மத்திய பட்டியலில் மத்திய அரசும், மாநிலப் பட்டியலில் மாநில அரசுகளும் அதிகாரம் உடையனவாக இருக்கும்.
4) மத்திய பட்டியல் அனைத்து மாநிலங்களுக்குமான பொதுவான விவகாரங்களைக் கொண்டிருக்கும். மாநில பட்டியல் மாநிலங்களின் தனியான நலன்களைக் கொண்டிருக்கும்.
5) மத்திய பட்டியலிலுள்ள அதிகாரங்களை மாநிலங்களில் மத்திய அரசின் சார்பாக மாநில அரசு நிறைவேற்றிக் கொடுக்கலாம். (சுவிஸ்லாந்து மாதிரி) 
6) மத்திய அரசின் பட்டியலில் தேசிய பாதுகாப்பு, வெளி விவகாரம், குடியகல்வு - குடிவரவு, பணம் அச்சிடல், குடியுரிமை, சுங்கம், தபால், தொலைத்தொடர்பு, சர்வதேச விமான நிலையங்கள், சர்வதேச துறைமுகங்கள், புகையிரத சேவை, தேசிய நெடுஞ்சாலைகள் என்பன உள்ளடங்கியிருக்கும். ஏனையவை அனைத்தும் மாநிலப் பட்டியலுக்கு உரியவையாக இருக்கும்.
7) மாநிலங்களுக்குள்ளேயான புகையிரத, விமான போக்குவரத்து, கடற் போக்குவரத்து, வேறு நீர் நிலைகளினூடான போக்குவரதத்து மாநில அரசுகளின் அதிகாரங்களாக இருக்கும்.
8) மாநிலங்களுக்கிடையேயான ஆறுகள், நீர்நிலைகள் மத்திய அரசின் அதிகாரங்களாக இருக்கும். மாநிலங்களுக்குள்ளேயான ஆறுகள், நீர்நிலைகள் மாநில அரசின் அதிகாரங்களாக இருக்கும். 
9) மத்திய பட்டியலில் அடங்காத அனைத்து விடயங்களும் மாநில அரசுக்குரியதாக இருக்கும்.

மாநில அரசுகள்

1) ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனியான ஒரு அரசியல்யாப்பு இருத்தல் வேண்டும். அவ்யாப்பு மத்திய அரசின் அரசியல்யாப்பிற்கு இணங்க உருவாக்கப்பட வேண்டும். 
2) ஒவ்வவொரு மாநிலத்திற்கும், மத்திய அரசின் பிரதிநிதியாக ஒரு ஆளுநர் இருப்பார். அவர் அம்மாநில மக்களினால் நேரடியாகத் தெரிவு செய்யப்படுவார். (அமெரிக்க மாதிரி)
3) ஆளுநரின் பதவிக் காலம் ஐந்து வருடங்களாகும். இடைக் காலத்தில் லஞ்சம், பெருங்குற்றம், சட்டமீறல் தொடர்பாக குற்றப் பிரேரணை ஒன்று மாநில சட்ட மன்றத்தில் கொண்டு வந்து 2ஃ3 பெரும்பான்மையுடன் நிறைவேற்றினால் ஆளுநர் பதவி நீக்கப்படுவார்.
4) ஆளுநர் பதவி வெற்றிடமானால் மாநில சட்டசபை புதிய ஆளுநர் ஒருவர் தெரிவு செய்யப்படும் வரை தற்காலிக ஆளுநர் ஒருவரை நியமித்தல் வேண்டும்.
5) ஆளுநர் மத்திய அரசிற்கும் மாநில அரசிற்குமிடையே ஒரு பாலமாக இருப்பார்.
6) ஆளுநர் மாநில முதலமைச்சரின் ஆலோசனையின் படியே கருமங்களை ஆற்றுதல் வேண்டும். 

மாநில சட்ட சபை

1) ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு மாநிலச் சட்ட சபையிருக்கும்.
2) சட்ட சபை உறுப்பினர்களின் எண்ணிக்கை மாநில சனத்தொகை, மாநிலத்தின் பல்லின சமூக அமைப்பு, மாநிலத்தின் நிலப்பரப்புக்கு ஏற்ப தீர்மானிக்கப்படும்.
3) மாநில சட்டசபையில் பெண்களுக்கும் சமவாய்ப்பு அளித்தல் வேண்டும்.
4) மாநிலச் சட்டசபையில் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய மக்களின் பிரதிநிதித்துவத்தையும் உறுதிப்படுத்துதல் வேண்டும். 
5) மாநில சட்ட சபையின் உறுப்பினர்கள் எளிய பெரும்பான்மை முறை மூலமும் விகிதாசாரப் பிரதிநிதித்துவமுறை மூலமும் தெரிவு செய்யப்படுவர். 50:50 என்ற விகிதத்தை இதற்கு பயன்படுத்தலாம்.
6) தேர்தல் தொகுதிகள் சனத்தொகை, இன விகிதாசாரம், நிலப்பரப்பு என்பவற்றிற்கு ஏற்ப மாநில தொகுதி நிர்ணய ஆணைக்குழுவினால் தீர்மானிக்கப்படும்.
7) ஒரு பிரதேசத்தில் பல்லினங்கள் செறிந்து வாழுமாயின் அங்கு பல்லின பிரதிநிதித்துவம் உருவாக வாய்ப்புக்கள் வழங்கப்படல் வேண்டும். 
8) விகிதாசார தேர்தலுக்கு தேர்தல் மாவட்டங்கள் ஒரு அலகாக இருக்கும். தேர்தல் மாவட்டங்களையும் மாநில தொகுதி நிர்ணய ஆணைக்குழு தீர்மானிக்கும்.
9) அரசியல் யாப்பினால் வழங்கப்பட்ட எல்லைக்குள் மாநில சட்டமன்றங்கள் சட்டங்களை இயற்றலாம்.
10) மாநில அரசியல்யாப்புத் திருத்தங்கள் மாநில சட்டசபையில் 2ஃ3 பெரும்பான்மையால் நிறைவேற்றப்படல் வேண்டும்.
11) சட்டங்கள் அனைத்தும் சமூகமளித்துள்ளோரில் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்படல் வேண்டும.; சபாநாயகரின் ஒப்புதலுடன் அவை நடைமுறைக்கு வரும்.
12) மாநில சட்ட சபையின் பதவிக் காலம் ஐந்து வருடங்களாகும். இடைக்காலத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றை மாநில சட்டசபையில் நிறைவேற்றுவதன் மூலம் ஆளுநர் மாநிலச்சட்டசபையைக் கலைக்கலாம்.

மாநில அமைச்சரவை

1) மாநில நிர்வாகத்திற்கென ஒரு அமைச்சரவை இருக்கும். இதன் எண்ணிக்கையை மாநில சட்ட சபை ஒரு தீர்மானத்தின் மூலம் முடிவு செய்யலாம். அமைச்சரவையின் அமைவு மாநில பல்லினத் தன்மையைப் பிரதிபலிக்கும்.
2) மாநில அமைச்சரவையில் பெண்களுக்கும் போதிய பிரதிநிதித்துவம் வழங்கப்படல் வேண்டும்.
3) முதலமைச்சர் அமைச்சரவையின் தலைவராக விளங்குவார். சட்ட சபைத் தேர்தலின் பின்னர் அதிக ஆசனங்களைப் பெற்ற கட்சியின் பிரதிநிதியை ஆளுநா;    முதலமைச்சராக நியமிப்பார். பின்னர் முதலமைச்சரின் ஆலோசனையுடன் ஏனைய அமைச்சர்கள் ஆளுநரினால் நியமிக்கப்படுவர். எந்தவொரு கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காவிடின் சட்டமன்றத்தில் அதிக ஆதரவு பெற்ற சட்ட சபை உறுப்பினர் ஒருவரை ஆளுநர் முதலமைச்சராக நியமிப்பார்.
4) அமைச்சரவை மீது நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றினை மாநில சட்ட சபையில் கொண்டு வந்து நிறைவேற்றுவதன் மூலம் அமைச்சரவையை பதவி நீக்கலாம்.
5) அமைச்சர்களுக்குரிய அமைச்சுகளை முதலமைச்சர் தீர்மானிப்பார். அமைச்சர்களுக்கு ஒதுக்கப்படாத துறைகள் முதலமைச்சரின் பொறுப்பில் இருக்கும்.

மாநில நீதித்துறை

1) மாநிலத் நீதித்துறைக்குள் மாநில உயர்நீதி மன்றம், மாவட்ட நீதிமன்றம், நீதவான் நீதிமன்றம், சிறுவர் நீதிமன்றம், தொழில் நீதிமன்றம், பெண்கள் விவகார நீதிமன்றம் என்பன உள்ளடங்கும்.
2) மாநில உயர்நீதிமன்ற நீதிபதிகளை முதலமைச்சர்களின் சிபார்சுடன் மாநில ஆளுநர் நியமிப்பார். ஏனைய நீதிமன்ற நீதிபதிகளை மாநில நீதிச்சேவை ஆணைக்குழுவின் சிபார்சுடன் ஆளுநர் நியமிப்பார்.
3) மாநில நீதித்துறை நீதிபதிகள் மாநில பன்மைத் தன்மைக்கேற்ப நியமிக்கப்படுவர்.
4) ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு மாநில சட்டமாஅதிபர் இருப்பார். அவரை முதலமைச்சரின் சிபார்சுடன் ஆளுநர் நியமிப்பார்.
  வெளிநாட்டு உறவுகளும், உதவிபெறலும் 

மாநிலங்கள் வெளிநாடுகளுடன் நேரடியாக உறவுகளை மேற்கொள்ளவும் உதவிகளைப் பெறவும் வாய்ப்புக்கள் வழங்கப்படல் வேண்டும். இதற்கு வெளிநாடுகளில் செயற்படும் இலங்கைத் தூதுவராலயங்களில் மாநிலப்பிரிவுகளை உருவாக்கலாம்.

தேசியப் பாதுகாப்பு, தேசியப் படைகள்

1) தேசியப் பாதுகாப்பு, தேசியப் படைகள் பற்றிய அதிகாரங்கள் மத்திய அரசிடம் இருக்கும்.
2) தேசியப் படைகளுக்கான ஆட்சேர்ப்பு நாட்டின் இன விகிதாசாரத்திற்கு ஏற்ப மேற்கொள்ளப்படல் வேண்டும்.
3) மாநிலங்களின் பாதுகாப்புப் பொறுப்பை அந்தந்த மாநிலங்களில் சேர்க்கப்பட்ட ஆட்களைக் கொண்ட படைப் பிரிவுகளிடம் வழங்கப்படல் வேண்டும்.

உள்ளுராட்சி சபைகள்

1) உள்ளுராட்சிச் சபைகள் மாநிலங்களின் அதிகாரத்திற்குட்பட்டதாக இருக்கும். தமது கருமங்கள் தொடர்பாக மாநில அரசுகளுக்கு பொறுப்புக் கூற வேண்டும்.
2) சகல உள்ளுராட்சி சபைகளும், அரசியல் யாப்பிற்கிணங்கவும் அவற்றிற்குரிய பாராளுமன்ற சட்டங்களுக்கு இணங்கவும் உபசட்டங்களை இயற்றலாம்.
3) தற்போதுள்ள பிரதேசசபைகளுக்கு பதிலாக பட்டின சபைகள், கிராம சபைகளை (முன்னரைப் போன்று) உருவாக்கப்படல் வேண்டும். இதற்கேற்ற வகையில் பெருந்தோட்டங்களில் மலையகக் கிராமங்களும், பட்டினங்களும் உருவாக்கப்படல் வேண்டும்.

ஆணைக்குழுக்கள்

1) சுதந்திர பொதுச்சேவை ஆணைக்குழு, சுதந்திர  நீதிச்சேவை ஆணைக்குழு, சுதந்திர தேர்தல் ஆணைக்குழு, சுதந்திர மனித உரிமை ஆணைக்குழு போன்ற ஆனைத்து ஆணைக்குழுக்களிலும் மலையக மக்களின் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்படல் வேண்டும். 
2) சுதந்திர ஆணைக்குழுக்களில் மலையக மக்களின் விவகாரங்கள் தொடர்பாக தீர்மானங்கள் எடுக்கப்படும் போது, மலையக மாநில சட்டசபையின் சம்மதத்தினைப் பெறுதல் வேண்டும். 

மலையக சமூக ஆய்வு மையம்
26.01.2016

 

இணைந்திருங்கள்


Followers

Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates