Headlines News :

காணொளி

ஜனாதிபதி விருது

ஜனாதிபதி விருது
நமது மலையகத்துக்கு

சுவடி

இலங்கையில் கோவிட்19 தொற்றி இறந்தவர்களை எரிப்பதை எதிர்த்து பெண்கள் சந்திப்பின் அறிக்கை

இலங்கையில் கோவிட்19 தொற்றுதலுக்கு உள்ளாகி இறந்த உடல்களைப் பலவந்தமாக எரிப்பது குறித்து பெண்கள் சந்திப்பின் அறிக்கை

இலங்கையில் சிறுபான்மை மதங்களின் உரிமைகளை மறுத்து, கோவிட்-19 பெருந்தொற்றுக்குள்ளாகி அல்லது தொற்றுக்குள்ளாகியதாகக் கருதப்பட்டு மரணிக்கும்உடல்களை எரிக்கும் பேரினவாத அரசின் மனிதநேயமற்ற செயலை, ‘பெண்கள் சந்திப்பு’வன்மையாகக் கண்டிக்கிறது.

முஸ்லிம் மக்களின் மத நம்பிக்கையை மீறி பலவந்தமாக அவர்களின் ஜனாஸாக்கள் எரியூட்டப்படுவதை எதிர்த்து நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் வெள்ளைத்துணிகளைக் கட்டி (கஃபான் (Kafan)) அடையாளப் போராட்டத்தில் நாமும் இணைந்து எமது பூரணஆதரவை வழங்குகிறோம்.

கோவிட்-19 பெருந்தொற்றுக்குள்ளாகி அல்லது தொற்றுக்குள்ளாகியதாகக் கருதப்பட்டு இறக்கும் மதச்சிறுபான்மையினரின் உடல்கள் அவர்களின் மத நம்பிக்கைகளுக்கு மாறாக, புதைக்கவிடாது பலவந்தமாக எரிக்கப்படுவது, இலங்கை அரசினால் சிறுபான்மை மதங்கள் மீது திட்டமிட்டமுறையில் நடத்தப்படும் மனிதவுரிமை மீறலே. 

இதுவரை இறந்தவர்களின் மொத்தத் தொகையில் எண்பதிற்கு மேற்பட்ட முஸ்லிம்களின் உடல்கள் பலவந்தமாக எரிக்கப்பட்டுள்ளன. பிறந்து சிலநாட்களில் மரணமான இரு குழந்தைகளின் உடல்கள் அவர்களின் பெற்றோரின் ஒப்புதலின்றி எரிக்கப்பட்டிருப்பது அம்மக்கள் மத்தியில் பெருந்துயரையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.

உலக சுகாதார அமைப்பான WHO மற்றும் சர்வதேசஅமைப்பான Centres for Disease Control and Prevention வெளியிட்டுள்ள வழிகாட்டிகளில் (Standard Operating Procedure in disposing dead bodies) ,கோவிட் தொற்றுக்குள்ளாகி இறக்கும் உடல்களை எரிக்கவோ அல்லது புதைக்கவோ முடியுமெனஅறிவுறுத்துவதோடு, வரையறுக்கப்பட்டிருக்கும் சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றி இறந்தவர்களின் உறவினர்கள் மரணச் சடங்குகளை மேற்கொள்ளலாமெனவும், இறந்த உடலின் மூலமாக நோய் பரவுவதற்கான வாய்ப்புகள் இல்லையெனவும் உறுதிப்படுத்துகின்றன. 

இவற்றை உதாசீனப்படுத்தி எந்தவித விஞ்ஞானபூர்வமான ஆதாரமுமின்றி உடல்கள் எரிக்கப்படுவது, இலங்கைப் பேரினவாத அரசின் முஸ்லிம் மக்களுக்கெதிரான இனவாத அரசியலையே புலப்படுத்துகிறது.

 சர்வதேச மனிதவுரிமை நிறுவனங்களும், ஐக்கிய நாடுகளின் ஸ்தாபனத்தின் வதிவிடப் பிரதிநிதியும்(Resident Coordinator ), மதச்சுதந்திரம், கலாசாரம் சார்ந்த விசேட நிபுணர்களும்(special Rapporteur) இலங்கை அரசினால் விஞ்ஞான நம்பகத்தன்மையின்றி பலவந்தமாக உடல்கள் எரியூட்டப்படுவதை, சிறுபான்மையினத்தவருக்கு எதிரான அடிப்படை மனிதவுரிமை மீறலெனச் சுட்டிக்காட்டியுள்ளன. 

இறந்த உடல்களை புதைக்கும் தமது அடிப்படை உரிமையைக் கோரித் தாக்கல் செய்யப்பட்ட பதினொரு மனுக்களையும் இலங்கை உச்ச நீதிமன்றம் தகுந்த காரணங்களின்றி நிராகரித்துள்ளது. 

இலங்கையில் சமீபகால நடவடிக்கைகளிலிருந்து நோக்கும் போது, நீதித்துறை துரிதமாக அரசியல்மயப்படுத்தப்பட்டுக் கொண்டிருப்பதற்குச் சாட்சியமாக விளங்குகிறது.

இலங்கை அரசியல் அமைப்பின் பிரகாரம்,பௌத்த மதத்திற்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டுமென்று வலியுறுத்தப்பட்டிருப்பது போலவே,ஏனைய மதங்களுக்கும் மதிப்பளிக்கவேண்டுமெனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

எனினும், இலங்கை அரசின் இவ்விதமான இனவாதஅரசியற்கொள்கைச் செயற்பாடுகள், பல்லினங்கள் வாழும் ஒரு நாட்டில் இனங்களுக்கிடையிலான நல்லுறவிற்குப் பாதகம் விளைவிக்கின்றன. 

இந்தப் பெருந்தொற்றுக் காலத்தில் அரசு தனது நாட்டில் வாழும் சிறுபான்மையினத்தவரின் அடிப்படைஉரிமைகளுக்கு மதிப்பளிக்காமல், அவர்களை அநாதரவாகக் கைவிட்டுள்ளது. 

தமது உறவினர்களின் இறப்பிற்குப் பின், தங்களது மதநம்பிக்கைகளுக்கு இணங்க இறுதிக் கடமைகளைச் செய்யமுடியாமல் தவிக்கும் எமது சகோதரர்களின் துயரில் நாமும் பங்கேற்போம்.

• இலங்கையில் வாழும் சிறுபான்மையினத்தவரின் மதச்சடங்குகளுக்கான உரிமைகளை அவர்களுக்கு வழங்கி, இறந்த உடல்களைப் புதைப்பதற்கு அனுமதிக்கும்படி இலங்கை அரசைக்கோருகிறோம்.

• சிறுபான்மை இனமக்களை ஒடுக்குமுறைக்குள்ளாக்கும் நடவடிக்கைகள் மூலம் அவர்களைப் புறக்கணித்து, தனிமைப்படுத்தாமல் அவர்களின மனிதவுரிமைகளுக்குப் பாரபட்சமின்றி மதிப்பளிக்கும்படி இலங்கை அரசைக் கோருகிறோம். 

சிங்களம், தமிழ், மலையகத்தமிழ்,முஸ்லிம், பறங்கியர், மலே என்ற பல்லின இலங்கையரான நாம் ஒருநாட்டின் குடிமக்களாக ஒருவர் வலியை ஒருவர் உணர்ந்து, ஒற்றுமையாக சக இனத்தவர் மீதானஅடக்குமுறைக்கு எதிராகக் குரல் கொடுப்போம்.

பெண்கள் சந்திப்பு

புதிய அரசியலமைப்பு திருத்தமும் மலையக தேசியமும் - அருள்கார்க்கி

இலங்கையில் கடைசியாக 1978 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அரசியல் யாப்பு இன்று பலரும் இதையொரு யாப்பாக ஏற்றுக் கொள்ளாமல் இதனை ஒரு மாத சஞ்சிகையாகக் கருதுகின்றனர். இதற்கான முக்கிய காரணம் இந்த யாப்பின் மீது 20 திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டமையே. அதில் முக்கியமாக 20 ஆம் திருத்தத்திற்கு மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பாராளுமன்ற அங்கத்தவர்கள் இந்த நாட்டின் ஜனநாயகத்திற்கு எதிராக சர்வாதிகார ஆட்சிமுறைமைக்கு ஆதரவாக வாக்களித்தமையே. அப்படியானால் பாராளுமன்ற அங்கத்தவர்கள் உண்மையாக மக்களுக்கான சேவை நோக்கில் செயற்படுகின்றனரா அல்லது தமது சுயநலம், பணம், அதிகாரம், பதவி என்பவற்றை தக்கவைத்துக் கொள்வதற்காக செயற்படுகிறார்களா என்பது எம் முன்னே எழும் வினா.

அத்தோடு குற்றம் செய்தவர்கள், ஊழல் புரிந்தவர்கள், வன்முறையில் ஈடுபட்டவர்கள், அதிகாரத்தை து~;பிரயோகம் செய்தவர்கள் போன்றோர் பாராளுமன்றத்தில் அங்கத்தவர்காளாக இருப்பது இந்த நாட்டிற்கு மிகவும் வெட்கக் கேடானதொரு விடயமாகும். ஆனால் இனிவரும் காலங்களில் பாராளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்படுபவர்கள் படித்தவர்களாகவும் சுயநலமற்றவர்களாகவும் அதேவேளை எல்லா சமூகத்தினரையும் இணைத்துக்கொண்டு செயற்படக்கூடிய தொண்டர்களாக இருக்க வேண்டும். அவர்களுக்கு பாரிய சம்பளம், ஓய்வூதியம், விசேட சலுகைகள் என்பன மறுக்கப்பட வேண்டும். அவர்களுடைய அமைச்சில் அவர்களின் உறவினர்கள் எவரும் நிர்வாக சேவையில் அமர்த்துதலை தடைசெய்ய வேண்டும். அத்தோடு அவர்களின் தேர்தல் கால பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களுக்கு பொதுத் துறையில் வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பது மறைமுகமாக பொதுமக்களாகிய எமது வரிப்பணத்தை மேலும் மேலும் அதிகரிப்பதாவே அமையும். இதனால் இன்று 17 பேருக்கு 01 பொதுத்துறை சேவையாளர் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. 

அதாவது 2005ஆம் ஆண்டு ஐந்து இலட்சமாக இருந்த பொதுத்துறை இன்று பதினைந்து இலட்சமாக அதிகரித்திருக்கின்றது. உ-ம் இலங்கை போக்குவரத்து சபையை எடுத்துக் கொண்டால் ஒரு பஸ்வண்டிக்கு 07 ஊழியர்கள் என்ற விதத்தில் காணப்படுகின்றனர். இலங்கை மீன்பிடித் துறைமுகக் கூட்டுத்தாபணம் 2009ஆம் ஆண்டு 800 ஊழியர்களை மட்டுமே கொண்டிருந்ததோடு அதில் எந்தவிதமான விருத்திகளையும் மேற்கொள்ளாது 2015ஆம் ஆண்டு 1800 ஊழியர்களாக அதிகரிக்கப்பட்டது. இதனால் பொதுத்துறை நிர்வாகம் மிகவும் நட்டத்தில் இயங்குவதாக பொதுத்துறை நிர்வாகத்தின் அறிக்கை செய்தி வெளியிட்டிருக்கின்றது. எமது நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டுமென்றால் இவ்வாறான குறைகள் களையப்படல் வேண்டும். 

ஆங்கிலேயர் 1815ஆம் முழு இலங்கையையும் கைப்பற்றியதன் பின்னர் தனித்தனி இராச்சியங்களாக இருந்த இந்நாட்டில் தங்களுடைய நிர்வாக அபிலாஷைகளுக்காக 1833ஆம் ஆண்டு ஒன்றாக்கினர். இதுவே இன்றைய எமது நாட்டினுடைய பிரச்சினைக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. 

இதைவிடவும் மோசமான செயற்பாடு 1824ஆம் ஆண்டுக்குப் பின் இந்நாட்டில் தங்களுடைய அபிலாஷைகளை நிறைவேற்றக்கூடிய மக்கள் தொகை இல்லாத காரணத்தால் அவர்களின் ஆட்சியில் இருந்த இன்றைய இந்தியா, பாக்கிஸ்தான், பங்களாதேஸ் போன்ற நாடுகளில் இருந்து தங்களுடைய பணப்பயிர்ச்செய்கை, நகர சுத்திகரிப்பு, புகைவண்டிப் பாதையமைத்தல், துறைமுகம் அமைத்தல் மற்றும் புதிய பாதைகள் அமைத்தல் போன்ற தங்களின் வியாபார நோக்கங்களுக்காக அரை அடிமைகளாக மக்களை இறக்குமதி செய்தனர். ஆனால் சுதந்திரம் கொடுத்தபொழுது பெரும்பான்மை இன அரசியல் தலைவர்களிடம் கையளித்த பின் இந்த மக்களுடைய பிரஜாவுரிமை குறித்த பிரச்சினை 1927ஆம் ஆண்டு தொடக்கம் 2003 ஆம் ஆண்டு வரை இழுபறியாய் இருந்தது. இதற்கு ஆங்கிலேயரும் பொறுப்பாவர். ஏனெனில் சோல்n;பறி யாப்பில் பிரஜாவுரிமை பற்றிய சரத்துக்கள் உள்ளடக்கப்படாமையாகும். 

1972ம் ஆண்டு யாப்பும், 1978ம் ஆண்டு யாப்பும் பெரும்பான்மை அரசியல்வாதிகளால் உருவாக்கப்பட்டு சிறுபான்மையினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அவர்கள் அந்த எதிர்ப்பை மீறி பெரும்பான்மை அரசியல்வாதிகளால் அங்கீகரிக்கப்பட்டது. அதே நிலைமை புதிய யாப்பில் உருவாகாமல் இருக்க சகல மக்களுடைய கருத்துக்களையும் கேட்டறிவது மிகவும் முக்கியமானதாகும். யாப்பு என்பது ஒரு நாட்டின் இதயத்துடிப்பு. இந்த யாப்பு சரியாக அமைக்கப்பட்டால்தான் நாட்டில் இனவாதம் வன்செயல்கள், தொடராமல் நாட்டினுடைய எதிர்கால சமூக அரசியல் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும். எமது நாடு வறிய நாடல்ல. ஆனால் சுதந்திரம் அடைந்த நிலையிலும் பார்க்க இன்று ஏனைய நாடுகளையும் விட பின்தள்ளப்பட்டுள்ளோம். இதற்கு காரணம் எமது நாட்டினுடைய கொள்கைகளும் செயற்பாடுகளும்தான். இந்த நிலை தொடராமல் இருக்க புதிய யாப்பு எல்லா இன மக்களுடைய அபிலாசைகளையும் நிறைவேற்றக் கூடியதாகவும், யாப்பில் கூறப்பட்டவை நடைமுறைப்படுத்தக் கூடியதாகவும் இருக்க வேண்டும். அந்தவகையில் மலையக தேசியத்தை அரசியலமைப்பு ரீதியாக மீள நிறுவுவதற்கு பின்வரும் ஏற்பாடுகள் மற்றும் திருத்தங்கள் உள்வாங்கப்பட வேண்டும்.

01. தேசிய இன அடையாளம் 

  • இந்திய வம்சாவளி மக்களை அரசியல் யாப்பு ரீதியாக மலையக தமிழர் என்ற பெயரில் அங்கீகாரம் வழங்க வேண்டும். அத்துடன் இச்சமூகத்தை வம்சாவளி பிரஜைகளாக ஏற்று கொள்வதுடன் இம்மக்களுக்காக பிரித்தானியரால் உருவாக்கப்பட்டு இன்றுவரை நடைமுறையிலுள்ள ஐனெயைn ழுசனiயெசல டுழற இல்லாதொழிக்கப்பட வேண்டும்.
  • சகல இனங்களும் தேசிய இனங்களாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.
  • இந்நாட்டில் பிறந்த ஒவ்வொருவரையும் இந்நாட்டின் வம்சாவளிப் பிரஜைகளாக ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்.
  • அண்மைக் காலமாக மலையகத் தமிழர் என்ற பதம் பாவிக்கப்பட்டு வருகின்றதொரு சூழலில் அதனை அநேகரும் ஏற்றுக்கொண்டுள்ளனர். எனவே அந்தப் பதம் யாப்பினூடாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.

02. மொழி உரிமை

இலங்கையில் தொடர்ச்சியாக மொழி பிரச்சினைகள் இருப்பதன் காரணமாக இலங்கை அரசியல் யாப்பில் சிங்களம், தமிழ் ஆகிய மொழிகள் அரசகரும மொழிகளாக  அங்கீகரிக்கப்பட்டுள்ளன.  ஆகவே நாம் முன்மொழிவது ஆங்கிலத்தை கரும மொழியாக (றுழுசுமுஐNபு டுயுNபுருயுபுநு) கொண்டு வருவதனூடாக சிங்களமும் தமிழும் நடைமுறை மொழிகளாக இருப்பின் மொழி ரீதியான பிரச்சினைக்கு தீர்வு காணலாம். அரச சுற்று நிரூபங்கள், தேசிய அடையாள அட்டை, பிறப்புச் சான்றிதழ், மரணச் சான்றிதழ் மற்றும் விவாகச் சான்றிதழ் என்பன மும்மொழிகளிலும் இருத்தல் வேண்டும். கடந்த அரசாங்கத்தில் 44 பிரதேச செயலகப் பிரிவுகளை இருமொழி பிரதேச செயலகங்களாக பிரகடனப்படுத்தியுள்ளார். இதனை முறையாக அமுலாக்குவதற்கு தமிழ் உத்தியோகஸ்தர்கள் நியமிக்கப்பட வேண்டும். 

03. மலையக தமிழருக்கான ஒதுக்கீட்டு முறைமை

இலங்கையில் 200 வருடங்களாக இச்சமூகம் வாழ்ந்து வருகின்றது. ஆனால் இன்று வரையிலும் முழுமையான தேசிய நீரோட்டத்தில் இச்சமூகம்  இணைக்கப்படாமை கவலைக்குரிய விடயமாகும். இதனால் குறிப்பிடப்பட்ட காலங்களுக்கு தொழில் வாய்ப்புகளின்போது விசேட ஒதுக்கீட்டு முறைமைகளை பின்வரும் விடயங்களில் நடைமுறைபடுத்தப்பட வேண்டும். சிறுபான்மை மக்களுக்கு எல்லா மட்டத்திலும் ஆகக் குறைந்தது 30 சதவீதம் ஒதுக்கப்பட வேண்டும். பிரதிநிதித்துவ அரசியல்,  அரச தொழில், நிதி, பொருளாதாரம், உட்கட்டமைப்பு, அபிவிருத்தி என்பவை பிரதானமானவையாகும். 

04. மத சார்பற்ற அரசு

அரசு குறிப்பிட்ட மதத்தை முன்னுரிமைப்படுத்தி யாப்பு ரீதியாக வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை மாற்றி அனைத்து மதத்திற்கும் சமனான அந்தஸ்;து வழங்கக் கூடியதான மத சார்பற்ற அரசு என யாப்பில் குறிப்பிடப்பட வேண்டியதுடன் அனைத்து மதங்களுக்கும் சமனான அந்தஸ்;து வழங்க வேண்டும். எமது நாடு ஏனைய நாடுகளைப்போல (இந்தியா, நேபாளம்) மதச் சார்பற்ற நாடாக மாறவேண்டும். அதேநேரம் எல்லா சமயமும் சமத்துவமாக கணிக்கப்பட வேண்டும் அரசு எந்தவொரு சமய நடைமுறையிலும் கைவைக்கக்கூடாது. ஆனால் எல்லா சமயங்களும் இந்நாட்டின் சட்டங்களை மதித்து நடக்க வேண்டும். அதனை மீறும்பொழுது சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். 

05. அதிகார பகிர்வு

1972ம் ஆண்டு யாப்பில் உருவாக்கப்பட்ட ஒற்றையாட்சி முறை மாற்றப்பட்டு அதிகாரப் பரவலாக்கல் மூலம் விசேடமாக சமூகத்தில் கீழ்மட்டத்தில் காணப்படும் மலையகத் தமிழ் மக்களும் ஏனைய சமூகத்தவர்போல வாழ்வதற்கான சம வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும். நிறைவேற்று அதிகாரம் கொண்ட பாராளுமன்றம் அமைக்கப்படுவதுடன் பாராளுமன்றத்திற்கு வகைக் கூறக் கூடிய ஜனாதிபதி முறையை அறிமுகப்படுத்த வேண்டும். அதேபோல் தேர்தலில் தோல்வியுற்ற ஒருவரை தேசிய பட்டியலில் இணைத்துகொள்வது அவருக்கு அமைச்சு பதவிகள் கொடுப்பது போன்றவை மக்களது இறைமையை உதாசினப்படுத்துவது ஆகும்.

மலையக தமிழருக்கு தேசிய பட்டியலில் இடம் ஒதுக்கப்படுவது அவசியம் என்பதுடன் பெண்களுக்கும் ஒதுக்கீட்டு இடம் வழங்கப்படல் வேண்டும். சிறுபான்மை மக்களுக்கான சட்டவாக்கம் - யாப்பில் குறிப்பிடபட்டுள்ள சிறுபான்மை மக்கள் தொடர்பான விடயங்களில் மாற்றங்கள் திருத்தங்கள் வரும்போது சிறுபான்மை மக்களின் கருத்துக்களை கருத்தில் கொண்டு மாற்றம் செய்யப்பட வேண்டும். அதேபோல் மலையக மக்களுக்கான அதிகாரப்பகிர்வு என்ற விடயம் அம்மக்களின் éர்வீக வாழிடம் மற்றும் இன விகிதாசாரம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கப்பட வேண்டும்.

அரசு 

இச்சிறிய நாட்டிற்கு 4 தேர்தல்கள் தேவையா? 225 பாராளுமன்ற அங்கத்தவர்கள் தேவையா? அமைச்சரவையில் ஆகக்கூடியது 25 அமைச்சர்களும், 25 பிரதி அமைச்சர்களும்தான் உள்ளடங்க வேண்டும். அமைச்சர்கள் (அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள்) கூடுவதால் வரிச்சுமையும் அரச செலவீனமும் மக்களின் மீது  சுமத்தப்படுகின்றது. அரசியல்வாதிகளுக்கு ஓய்வூதியம் கொடுப்பதாக இருந்தால் அது 60 வயதிற்கு பிறகு ஒரு சாதாரண அளவில் கொடுக்கப்பட வேண்டும். அரசியல்வாதிகள் யாராவது தேர்தலுக்குப் பின் கட்சி மாறினால் அதனால் தன்னுடைய பாராளுமன்ற அங்கத்துவத்தை இழக்கவேண்டும். மேலும் கடந்த காலங்களில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்களில் வெஸ்ட் மினிஸ்டர் முறையிலும், விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையிலும் சிறுபான்மையினர் 20 சதவீதங்கூட அடையவில்லை. அவர்களுடைய பிரதிநிதித்துவம் 30 வீதமாக உயர்த்தப்பட்டு அதில் பெண்களின் வீதம் 25 ஆகக் காணப்படுவதை உறுதிசெய்ய வேண்டும்.

மாகாண சபைகளுக்கு முழுமையான அதிகாரம் கொடுக்கப்பட வேண்டும். விசேடமாக காணி பொலிஸ் அதிகாரங்கள் 13 வது அரசியலமைப்பு திருத்தத்திற்குட்பட்டும் சிறுபான்மையினரின் சமகால தேவைகளை கவனத்திற் கொண்டும் மாகாண சபை முறைமை வலுப்படுத்தப்பட வேண்டும். சிறுபான்மையினருக்கு எதிராக கொண்டுவரப்படும் சட்டங்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இவர்களுக்கான ஒரு பாதுகாப்பு வலை உருவாக்கப்பட வேண்டும். சோல்பரி அரசியல் திட்டத்தில் இத்தகைய ஒரு முறை காணப்பட்டது.செனட் சபையொன்று உருவாக்கப்பட வேண்டும். அதில் 51 வீதம் சிறுபான்மை மக்களை கொண்டிருக்க வேண்டும்.

தொழிலின் நிமித்தம் வெளிநாடுகளில் வாழும் இலங்கை வாக்குரிமை பெற்றவர்களுக்கு வாக்களிக்கும் வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும்.புதிய அரசியலமைப்புச் சீர்த்திருத்தம் குடியரசுக் கோட்பாடுகள், மதச்சார்பின்மை, அரசியல் பன்மைத்துவம், அரசியலமைப்பின் உயர் ஆதிக்கம், சட்டத்தின் ஆதிபத்தியம், அதிகாரப் பங்கீடு, என்னும் கோட்பாடுகள் உருவாக்கப்பட வேண்டும். அரசியலமைப்பு ரீதியிலான உரிமைகள், நல்லாட்சி, பன்மைத்துவம் மற்றும் அதிகாரப் பகிர்வு தொடர்பான உரிய சட்டரீதியான பாதுகாப்புடன்,சட்டவாக்கச் சபைக்கு நிறைவேற்றுத்துறையின் அரசியல் வகைப்பொறுப்பை உறுதிசெய்யும் முழுமையான வெஸ்ட் மினிஸ்டர் முறைக்கு மீண்டும் செல்ல வேண்டும்.

பன்மைத்துவ சமூகத்தில் சரியான ஜனநாயகப் பிரதிநிதித்துவத்திற்கு, மிக முக்கியத்துவம் வாய்ந்த அனைத்தையும் உள்ளடக்குகின்ற விகிதாசாரப்பிரதிநிதித்துவ முறையை பாதுகாக்கின்ற அதேசமயம் தொகுதிவாரியான தேர்தல் முறையின் நல்லம்சங்களை ஒன்றிணைக்கும், கலப்பு பிரதிநிதித்துவ விகிதாசார முறையை அமுல்படுத்துவது அவசியம். நீதிமன்றம் அரசியலமைப்பின் உயர் ஆதிக்கத்தன்மை பற்;றிய அடிப்படைக்கோட்பாட்டின் பொறுப்பான அதியுயர் நிறுவனம் ஆக வேண்டும். பௌதீக அலகுகளுக்கிடையே கூட்டுறவைப் போதிக்கும் சட்டவாக்க ரீதியிலான ஆழ்ந்தாராய்வை அதிகரிக்கும் இரண்டாவது சபையை உருவாக்கி இதற்கு உறுப்பினர்களாக அரசியலமைப்பு சபைமூலம் நியமிக்கப்படக்கூடியதும், மாகாண நிதியச்சட்டவாக்க சபைகளில் இருந்தும் தெரிவுசெய்யப்படும் உயர்ந்த ஆற்றல்களைக் கொண்டவர்களாக அமைய வேண்டும். மேலும் சட்டவாக்க சீர்த்திருத்தங்கள், பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்பட்டு அதற்கு பதிலீடான தேசிய பாதுகாப்புச் சட்டம் என்பன உருவாக்கப்பட வேண்டும்.

அரச கடன்

அரசாங்கம் வெளிநாடுகளில் கடன் பெறும் போது நாட்டின் வருமானத்திற்கு ஏற்ப பெறப்படும் கடன் பாராளுமன்ற அங்கீகாரத்தை பெற்றதன் பின்னர் கடன் பெறப்படுதல் வேண்டும். ஏனெனில் 2012ஆம் ஆண்டு மட்டும் வெளிநாட்டு படுகடன் 3709 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். இதனால் ஒவ்வொரு தனிநபரும் சுமார் ஐந்து இலட்சத்துக்கும் மேலான கடனாளியாக்கப்பட்டுள்ளனர். இவ்வாறான கொள்கைகள் வறுமையை வளர்க்குமே ஒழிய ஒருபோதும் குறைக்காது. 

மனிதவுரிமை மீறல் வழக்குகள்

இலங்கை கைச்சாத்திட்ட ஐ.நா சமவாய்ப்புகள் யாவும் அடிப்படை உரிமையில் சேர்க்கப்பட வேண்டும். இதில் சிறுபான்மையினர் தொடர்பில் சட்டங்கள் உருவாக்கப்பட்டால் அவர்களின் கருத்துக்களும் கேட்டறியப்படல் வேண்டும். தற்போதைய நிலையில் மனித உரிமை மீறலுக்கு உட்பட்ட ஒருவர் உயர் நீதிமன்றத்திலே வழக்குத் தாக்கல் செய்யப்பட வேண்டும். இது சாதாரண குடிமகனுக்கு செய்ய முடியாதுள்ளதால் புதிய யாப்பில் மாவட்;ட நீதிமன்றங்களில் வழக்குத் தொடர வாய்ப்பளிக்கப்பட வேண்டும்.

கல்வி

அரசு சர்வதேச பாடசாலைகளையும் தனியார் பாடசாலைகளையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொணர்ந்து அவற்றை நெறிப்படுத்த வேண்டும். தொட்டிலில் தொடங்கி தொழில் வரையிலும் ஒவ்வொரு பிள்ளைகளும் சரியான, முறையான கல்வியைக் கற்கக்கூடிய நிலை உருவாக்கப்பட வேண்டும்.  விசேடமாக மலையகத்தில் அமைந்துள்ள சகல தோட்டங்களிலும் அதன் பிரிவுகளிலும் முறையான முன்பள்ளிகள் அமைக்கப்பட வேண்டியதோடு அவை பிரதேச சபைக்குள் உள்வாங்கப்பட வேண்டும். இலங்கையின் உயர்கல்வியை வலுபடுத்த ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு பல்கலைக்கழகம் உருவாக்கப்பட வேண்டும். விசேடமாக மலையக மாணவர்கள் சந்திக்கும் வெட்டுப்புள்ளி குறித்த பிரச்சினைகளுக்கு அவர்களை ஏனைய சமூகத்துடன் ஒப்பிடாது வெட்டுப்புள்ளிகள் மீதான விசேட சலுகை வழங்கப்பட வேண்டும். இன்றைய நாட்களில் இலவசமாக வழங்கப்படும் பாடப்புத்தகங்கள் யாவும் சிங்கள மொழிகளில் தயாரிக்கப்பட்டு அதுவே தமிழாக்கம் செய்யப்படுகிறது. இதில்; 05ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட மகாவம்சத்தில் கூறப்பட்டுள்ள வரலாறுகளே சரித்திரப் பாடத் திட்டமாக அமைகிறது. இதனால் ஆராய்ச்சி செய்து எழுதப்பட்ட ஏனைய இனங்களின் உண்மையான வரலாறு மறைக்கப்பட்டுள்ளது. எனவே ஏனைய தேசிய இனங்களின் இனத்துவ மற்றும் மொழி வரலாறுகள் திரிபு படுத்தப்படாமல் பதிவு செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

விவசாயம் மற்றும் பெருந்தோட்டப் பயிர்ச்செய்கை 

இலங்கை சுதந்திரம் அடைந்தபோது இலங்கை ஒரு விவசாய நாடாக இருந்தது. படிப்படியாக அதன் நிலைமைகள் குறைக்கப்பட்டு இன்று அத்தியாவசிய உணவுப் பொருட்களைக்கூட இறக்குமதி செய்யவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. தோட்டத் தொழிலாளர்கள் இந்நாட்டின் பயிர்ச்செய்கைக்கு இன்றியமையாத பங்களிப்பை செய்தவராவர். எனவே தோட்டத் தொழிலாளர்கள் என்ற பதம் மாற்றப்பட்டு அவர்களையும் விவசாயிகள் என்ற பதத்திற்குள் உள்வாங்கப்பட வேண்டும். இதற்காக இவர்களுக்கு 20 பேர்ச் காணி அளந்து வரைபடத்துடன் சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட காணியுறுதியுடன் கொடுக்கப்பட வேண்டும். இது இவர்களின் வீடு, வீட்டுத் தோட்டம் மற்றும் சுயதொழில் என்பவற்றுக்கு பயன்படுத்தப்படுவதற்கு அரச மானியம் வழங்கப்பட வேண்டும். தேயிலை, இறப்பர், தென்னை, நெல் ஆகியவற்றுக்கான கவர்ச்சிகரமான விவசாயக் கொள்கை உருவாக்கப்பட வேண்டும். கொவிட் - 19 காரணமாக நாடு எதிர்நோக்கியுள்ள உணவுத்தட்டுப்பாடு, உற்பத்தி வீழ்ச்சி போன்ற சவால்களை எதிர்கொள்வதற்கு எமக்குள்ள ஒரே வழிமுறை உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதே ஆகும். எனவே விவசாயம் மற்றும் பெருந்தோட்டப்பயிர்ச்செய்கையை பிரத்தியேகமான அமைச்சின் கீழ் உள்ளடக்க வேண்டும். அந்த தொழில் துறையில் ஈடுபடுபவர்களுக்கான ஊதியம் மற்றும் சலுகைகளை அரசு நிர்ணயிக்க வேண்டும்.

மெகாசிட்டி 

நகரமயமாக்கல் மூலமாக பல நாடுகள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்கின்றன. இது கிராம மக்களையும் நகரத்தை நோக்கி செல்லது தூண்டுகிறது. இதனால் கிராமங்கள் அபிவிருத்தி அடையாததோடு எமக்கான உணவு உற்பத்தியிலும் தன்னிறைவு காணமுடியாதுள்ளது. உதாரணமாக கடந்த காலங்களில் அந்நிய செலாவணியை ஈட்டித் தருவதில் முதலிடத்தை வகித்த பணப்பயிர்கள் இன்று நான்காம் இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கின்றன. ஆனால் இந்தப் பகுதிகளில் எந்தவிதமான அபிவிருத்தித் திட்டங்களோ வேலைவாய்ப்புகளோ உருவாக்கப்படாததால் இளைஞர் யுவதிகள் நகரங்கள் மற்றும் வெளிநாடுகளை நோக்கி செல்லத் தூண்டப்படுகின்றர். இது குடும்ப ரீதியாக மட்டுமின்றி சமூக மற்றும் கலாசார ரீதியான பிரச்சினைகளையும் உருவாக்குகின்றது. இந்நிலை மாற்றப்பட வேண்டும்.

பொருளாதார கொள்கை 

இலங்கையின் பொருளாதார கொள்கை வறிய மக்கள் சார்பாக உருவாக்கப்பட வேண்டும். எமது நாட்டில் இன்று நேர்முக வரி மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 12 சதவீதமாகவே இருக்கின்றது. இதுவே ஏனைய நாடுகளில் 20 வீதம் தொடக்கம் 25 சதவீதமாக இருக்கின்றது. ஆனால் எமது நாட்டில் மறைமுக வரி 40 சதவீதத்திற்கு மேலுள்ளது. இதனால் பொருட்;களின் விலை அன்றாடம் அதிகரித்துச் செல்லும் நிலை காணப்படுகிறது. இது உணவு பாதுகாப்பு உரிமையை மறுதளிக்கின்றது. இலங்கை நாணயத்தின் பெறுமதி நாளாந்தம் குறைந்துகொண்டே செல்வதால் இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரித்துக்கொண்டே போகிறது. இது உணவு பாதுகாப்பின்மையை தோற்றுவிக்கின்றது. எனவே கொவிட்டுக்கு பின்னரான (Pழளவ உழஎனை)  பொருளாதாரக் கொள்கைகள் குடும்ப பொருளாதாரத்தையும் கிராமியப் பொருளாதாரத்தையும் மையப்படுத்தியதாக அமைய வேண்டும்.

கடந்த 2016 ம் ஆண்டும் அரசியலமைப்பு சீர்த்திருத்ததிற்காக மக்களின் கருத்துக்களை அறியும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஆட்சி மாற்றத்துடன் அப்பணி கிடப்பில் போடப்பட்டது. மீண்டும் தற்போதுள்ள அரசாங்கம் அரசியலமைப்பு திருத்தமொன்றிற்கான முயற்சியை மேற்கொண்டுள்ளது. அந்தவகையில் மலையக தேசியம் சார்ந்து மேற்குறிப்பிட்ட அடிப்படை திருத்தங்கள் உள்வாங்கப்பட வேண்டும். இதன் அடுத்த கட்டமாக சிவில் சமூக ரீதியாகவும் பாராளுமன்றிலும் இவ்விடயங்கள் விவாதப் பொருளாக வேண்டும்.

நன்றி - தினக்குரல்

அருந்ததியர் சமூகத்தின் ஆவணப் பெட்டகம், தலித்தின் குறிப்புக்கள் | நிலாந்தி சசிகுமார்

இலங்கையின் வரலாற்றில் அருந்ததியினர் சமூகம் பற்றி வெளிவரும் முதல் நூல் இதுவாகும்.90 களில் சரிநிகரில் வெளிவந்த தொடர் பத்தி தலித்தின் குறிப்புகளாக நூல் வடிவம் பெற்றிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது.

உரிமைகள் மறுக்கப்பட்ட விளிம்புநிலை மக்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகள் வரலாற்றில் எப்போதுமே பேசாப் பொருளாகவே வைக்கப்படுகின்றன. ஆனால் சரவணன் அவர்கள் எப்போதும் பேசாப் பொருளை பேச விழைவதில் மிகுந்த ஆர்வம் காட்டுபவர். அதே போல் அவர் எழுதும் கட்டுரைகளையும் நூல்களையும் தேடி வாசிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவளாக நான் இருப்பதன் காரணம் அவரது கட்டுரைகளில் உள்ள உண்மைத் தன்மைகள் மற்றும் ஆதாரங்களின் வலு என்பனவேயாகும்.

வர்க்கப் போராட்டம், தமிழ் தேசியப் போராட்டம், பெண்ணியம், சூழலியல், சாதியத்திற்கு எதிரான போராட்டம் என பல தளங்களில் பணியாற்றி வரும் இவரின் எழுத்துப் பணியும் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கக் கூடியதே.

எப்போதுமே சாதியம் சார்ந்த நூல்களை எழுதுவதிலும் அது குறித்துப் பேசுவதிலும் பின் நிற்கும் மக்களின் முன் தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதோடு மட்டுமன்றி முகத்திற்கு நேராகக் கேள்விக் கணைகளை அள்ளி வீசிச் சென்றிருக்கிறார். யாரும் பதில் சொல்ல முடியாது திக்கித் திணறிக் கொண்டிருக்கையில் தான் அவர் வெற்றி காண்கிறார்.

அருந்ததியருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காக குரல் கொடுத்ததுடன் ஒட்டுமொத்த அருந்ததிய சமூகத்தவர்களின் நிலைக்காகவும் பேசுகிறார். அவர்களுக்கு மறுக்கப்பட்ட நீதி, அடிப்படை வசதி வாய்ப்புகள் என அவர் அடுக்கிக் கொண்டு போகும் போது மனது வலிக்கத்தான் செய்தது. மொத்தத்தில் 32 கட்டுரைகளை உள்ளடக்கிய இந்நூல் அருந்ததியர் சமூகத்தின் வாழ்க்கையை கூறும் ஓர் ஆவணப் பெட்டகம்.

தலித்தின் குறிப்புகள்இலங்கைச் சூழலில் தலித்_ தலித்தியம் என்ற சொல்லாடலைக் கூட அறிமுகம் செய்து வைத்த பெருமையைக் கொண்டது இந்நூல் என்பதை குறிப்பிட்டேயாக வேண்டும். அதேவேளை அருந்ததியர் சமூகத்தவர்கள் மட்டுமே தலித்துக்கள் என்பதில் அடங்கவில்லை என்பதையும் தெளிவு படுத்த வேண்டிய தேவையை உணர்ந்தவராக இந்நூலை வடிவமைத்துள்ளார்.உண்மையில் புரட்சிகர சமூக மாற்றமானது தலித் விடுதலையிலும் தங்கியுள்ளதை மறுக்க முடியாது

இந்திய வம்சாவளி மக்களின் எண்ணிக்கையில் பெரும்பாலானவர்கள் தலித் மக்களாவர். அங்கிருந்து வந்தது மக்கள் மட்டுமல்ல சாதிக் கட்டமைப்பும் தான். 1965 இல் ஆரம்பிக்கப்பட்ட நகரசபைகள் மூலம் நகர சுத்திக்கென தமிழகத்தில் இருந்து கொண்டு வரப்பட்டவர்களே அருந்ததியர் சமூகத்தவர்கள். இந்திய வம்சாவளியினரான மலையகத்தவர்களுக்கு வழங்கப்பட்ட வசதிகள் கூட மறுக்கப்பட்டவர்களாகவும் அவர்களுடன் எந்தவொரு சம்பந்தமும் வைத்துக் கொள்ள முடியாது ஒதுக்கப்பட்டவர்களாகவும் அருந்ததியினர் இருந்தார்கள். இதனாலேயே அகமணமுறை மூலமாக தமது சமூகத்திற்குள் சுழன்று கொண்டு இருக்க நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

அவர்கள் கேள்வி கேட்கும் உரிமை மறுக்கப்பட்டவர்களாக இருந்தமையால் யார் வேண்டுமானாலும் அவர்களை ஆள முடியும் என்றானது. இவர்கள் வசித்த பிரதேசங்கள் கூட இவர்களுக்கு சொந்தமில்லை என்றானது அதேவேளை அவ்விடத்தில் இருந்து வேறு பிரதேசங்களுக்கோ வீடுகள் வசதி வாய்ப்புக்களைப் பெருக்கிக் கொள்ளவோ உரிமையற்றவர்களாக வைக்கப்பட்டிருந்தனர். இந்திய வம்சாவளியினர் எனப் பொதுவாக அழைப்பதில் அருந்ததியினரும் அடங்கி விடக் கூடும் என்ற அச்சத்தில் "மலையக மக்கள் " பதம் உருவாக்கப்பட்டிருக்கலாம்.

சுத்திகரிப்புத் தொழில் செய்பவர்கள் என்ற ரீதியில் அவர்களுக்கு வழங்கப்பட்ட இடங்கள்;அத்தொழிலை விட்டால் பறிக்கப்படும் அச்சுறுத்தல் இருந்தமையால் இத்தொழிலை விடவோ, வேறு தொழிலுக்குச் செல்லவோ முடியாத இக்கட்டான சூழ்நிலையில் வாழ வேண்டியவர்களானார்கள். "நமக்குத் தாழ்ந்தவர்கள் இருக்கிறார்கள் என்று எண்ணுவதே அடிமை மனப்பான்மைக்கு அஸ்திவாரம்…." என்ற பெரியாரின் கருத்து எவ்வளவு உண்மை. அத்தகைய போதையிலே தம்மை நிலைப்படுத்திக் கொண்டு வன்முறைக்கும் அடக்குமுறைகளுக்கும் துணை போகும் சமூகங்களுக்கு மத்தியில் தானே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆதிக்க சமூகக் கட்டமைப்பிற்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ சாதியத்தின் இருப்பு தேவைப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றது.

ஒருவரையோ அல்லது ஒரு சமூகத்தையோ சொல்லால் கூடியபட்சம் புண்படுத்த வேண்டுமெனில் உச்ச ஆயுதமாக சாதிய வசவுகள் இருக்கின்றன. மேல்சாதி ஆண்மனம் என்பது மேலதிகமாக பெண்பாலுறுப்பை அல்லது பெண்பாலுறவைச் சாடுகின்ற தூசணத்தையும் சாதிய வசவுடன் இணைத்துக் கூறுகையில் மேலதிக பலம் கிடைப்பதாக நம்புகிறது. இதுவே ஒரு ஆணைத் திட்டுவதாக இருப்பினும் அவனைச் சார்ந்த குடும்ப பெண் உறுப்பினர்களை இழுத்து வசவு பாடல் இடம் பெறுவதைக் காணலாம். நவீன சாதியம் இந்த சாதி வசவுகள், சாதியச் சாடல்கள், அகமணமுறை, சாதியப் பெருமிதம் போன்ற வடிவங்களில் தான் இயங்கிக் கொண்டிருக்கிறது எனக் குறிப்பிடும் சரவணன் சாதியத்தின் இந்த நுண்ணரசியலை மிகத் தெளிவாக புரிந்து கொள்பவர்களால் மாத்திரமே பிரக்ஞைபூர்வமாக சாதியத்தின் கோரப் பிடியில் இருந்து விடுபட முடியும் என ஆணித்தரமாக கூறுகிறார்.

"கற்பழிப்பு"எனும் பதம் பாலியல் வல்லுறவு என மாற்றப்பட்டது போல சாதிய வசவை உரையாடல் களத்திற்கு கொண்டு வந்து அதற்கெதிராக மனித உரிமை மீறல் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்ற சரவணனின் கோரிக்கையுடன் கை கோர்க்கலாம் என்றே தோன்றுகிறது. ஒருவரை திட்டும் போது சாதிய வசவு கூறப்படுவதை தவறு என யாரும் சொல்வதில்லை அந்தச் சாதியைச் சொல்லி என்னை ஏன் திட்டினாய்? நானும் அவனும் ஒன்றா என்ற கருத்திலேயே வாய்த்தர்க்கம் எழுகிறது என்பதைத் தான் சகிக்க முடியவில்லை.

 வர்க்கத்தில் சமமாய் அல்லது உயர்வாய் ஒருவர் வருகையில் அங்கே சாதியம் தலை தூக்குவதை மிக இலகுவாக இனங்காண முடியும்.ஆதிக்க சாதியினர் தமது சாதியத் தூய்மைவாதப் பெருமிதத்திற்காக இந்த அகமணமுறையைப் பேணுகின்றனர் என்றும் அதேவேளை தலித் சமூகம் அதே அர்த்தத்தில் அகமணமுறையைப் பேணவில்லை என்பதையும் தெளிவு படுத்துகிறார். இவ்வாறான  திருமணங்களால் பரம்பரை நோய்கள் வந்து அதிகம் பாதிக்கப்படுபவர்களாகவும் தலித் சமூகமே இருப்பது தான் கொடுமை.

சாதியத்திற்கு எதிராகக் குரல் கொடுப்பவர்கள் கூட திருமணத்தில் சாதியைப் பார்ப்பவர்களாக இருக்கிறார்கள். சாதி மாற்றித் திருமணம் செய்பவர்கள் தமது உறவுகளை விட்டு விலகி விடுவதும் உண்டு. எது எப்படியோ அவர்கள் இழப்பதற்கென்றே இருப்பவர்கள் போலவே இவ்வாதிக்க சமூகத்தினால் கட்டமைக்கப்பட்டிருக்கின்றனர்.

இன்று மனு சாஸ்திரத்தை எரிப்போம் எனக் குரல் கொடுக்கின்றனர். குறிப்பாக பெண்களை அடிமைப்படுத்தும் விதமாக அதில் இருப்பது மட்டுமன்றி சாதியம் பற்றிய குறிப்புகளும் ஒரு காரணம். "சாதி" என்பது வெறும் சொல் மட்டுமல்ல அடக்குமுறை வடிவத்தின் "பொருள்" , பாரபட்சத்தினதும் ,சமூக அநீதியினதும்,அநியாயத்தினதும் குறியீடு. நமது மொழிவழக்கிலிருந்தும் சாதியைச் சுயநீக்கம் செய்ய வேண்டும் என நம்மை இந்நூலினூடே அழைக்கிறார் சரவணன்.

தலித்தியம் பற்றிப் பேசுபவர்களைக் கூட பேச விடாது வெவ்வேறு வழிகளில் தாக்கி, ஒதுக்கி, அவமானப்படுத்தி, தனிமைப்படுத்தும் கைங்கரியங்களும் நடைபெறாமல் இல்லை. இதனாலேயே பலர் அது குறித்துப் பேச பின் நிற்பதும்,அதே போல் ஆதிக்க சாதியப் பிண்ணனி கொண்டவர்களும் சாதியம் பற்றிப் பேசினால் தம்மையும் தலித்தாகப் பார்ப்பார்களோ எனப் பயம் கொள்வதும் உண்டு.இதுவும் ஒருவித அரசியல் தானே.

இலங்கையில் வர்க்க, பாலின, சாதியப் போராட்டங்களை பின்தள்ளி விட்டு இனத்துவ தேசப் போராட்டம் முன்னிலையில் நிற்பதாக குற்றம் சாட்டுகின்றார். அதுவே உண்மையாகவும் இருக்கின்றதை உணரக் கூடியதாகவும் உள்ளது.உயர்த்திக் கொண்ட சாதியினர் தமது வர்க்க மற்றும் ஒடுக்கும் நலனுக்காகத் தம்மை நிறுவனப்படுத்திக் கொள்கையில் ஒடுக்கப்பட்ட சாதியினரோ தம் மீதான ஒடுக்குமுறைகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ள தம்மை நிறுவனப்படுத்திக் கொண்டனர். இது எவ்வளவு பெரிய வேறுபாடு.

ஒரு கட்டத்தில் ஒடுக்கப்பட்ட சாதியினர் தமக்கு மறுக்கப்படும் அடிப்படை உரிமைகள் வசதி வாய்ப்புக்களை பெறுவதற்காக தமது சாதிய அடையாளங்களை மறைக்க எத்தனித்தனர். இதனை "அடையாளங்களை தற்கொலை செய்தல்" என்ற கட்டுரை மூலமாக விளக்கம் அளித்துள்ளார். உதாரணமாக, உறவினர்களுடனான உறவைத் துண்டிப்பது, தனித்து வாழ்வது, சிங்கள முஸ்லிம் மக்களுடன் திருமண உறவைப் பேணல் போன்றவை இவற்றுள் அடக்கம். அதாவது சுயத்தை இழத்தல் அல்லது மறைத்தல் என்றும் அர்த்தப்படுத்தலாம். குறிப்பாக தமக்குரிய குலதெய்வ வழிபாடுகளைக் கூட இதற்காகத் தியாகம் செய்து விடும் நிலைக்கு நிர்ப்பந்திக்கப்பட்டனர். அத்துடன் அதிக மதமாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்ட சமூகமாகவும் இந்த அருந்ததியர் சமூகம் இருந்தது.

அடையாளங்களை மறைப்பதில் நியாயம் கற்பிப்போரை ஏற்க மறுக்கும் சரவணன் அதனை எதிர் கொண்டு விடுதலைக்கான வழியைக் காண்பதே சிறந்த பணி என்கிறார். இந்நூலில் தலித் பெண்கள் பற்றிய கட்டுரை மிக முக்கியமானது. பெண்கள் என வரும்போது உயர்த்திக் கொண்ட சாதிப் பெண்கள் அவர்களின் சாதியைச் சேர்ந்த ஆண்களால் ஒடுக்கப்படுகின்றனர். அதே ஒரு பெண் தாழ்த்தப்பட்ட சாதியாக, கறுப்பு நிறத்தவளாக, கல்வியறிவு அற்றவளாக இருந்து விட்டாள் அவளது நிலை குறித்து நீங்கள் கற்பனை செய்து பாருங்கள்.

சாதியின் பெயரால் ஒடுக்குமுறைகளை மேற்கொள்ளக் கூடிய அல்லது அதற்கு துணை போகக் கூடிய அனைவரையும் நிற்க வைத்து உச்சியில் குட்டு வைத்திருக்கிறது இந்த தலித்தின் குறிப்புகள் என்றால் மிகையல்ல. அதற்கு சிறந்த உதாரணம் "வெள்ளைத் திமிரும் வெள்ளாளத் திமிரும்" எனும் கட்டுரையைக் குறிப்பிடலாம்.

இந்நூலில் ஒருசில கட்டுரைகளில் தனது வாழ்வில் நிகழ்ந்த சம்பவங்களையும், அனுபவக் குறிப்புகளையும் இணைத்திருப்பதால் மிகவும் உணர்வு ரீதியில் பாதிப்பை ஏற்படுத்திய நூலாகவும் இது அமைந்திருந்தது. அதேவேளை தனது அனுபவங்களின் மூலமாக அருந்ததியர் சமூகம் படும் சொல்லொனாத் துன்பியல் வாழ்வைக் குறிப்பிடவும் அது ஏதோவொரு விதத்தில் தலித் விடுதலைக்கு வழிகோலும் என்ற நப்பாசையிலுமே தவிர எந்தவொரு அனுதாபத்தையும் எதிர்பார்த்தல்ல என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியும்.

ஆதவன் தீட்சண்யா குறிப்பிட்டது போல, மனமானது "பல நூற்றாண்டுகளுக்கு முன்பு என் மீது சுமத்திய அழுக்கு மூட்டைகளை இறக்கித் தொலையுங்கடா பாவிகளே" எனக் கூக்குரல் எழுப்பி ஓலமிடுகிறது. மேலும், சாதி சார்ந்த தொழில்,தொழில் சார்ந்த இழிவு, இழிவு சார்ந்த சமூகப் புறக்கணிப்பு, சமூகப் புறக்கணிப்பால் ஆளுமைச் சிதைவு, உள ரீதியாகவும், உடல்ரீதியாகவும் தொடர் பாதிப்புக்கள், சமகால வாழ்வை எட்டிப் பிடிப்பதில் உள்ள இடர்ப்பாடுகள், வாய்ப்புகளில் பாரபட்சம் என்று சரவணன் காட்டிச் செல்லும் அருந்ததியர் வாழ்வின் பொருட்டு தமிழ்சமூகம் வெட்கித் தலைகுனிய வேண்டும் என்கிறார்.

அனைவரும் அறிய வேண்டியதும், பேச வேண்டியதும், சிந்திக்க வேண்டியதுமான விடயங்களை உள்ளடக்கிய இக்கட்டுரைத் தொகுப்பைத் தந்த சரவணன் அவர்களிற்கு நன்றியும் பாராட்டுக்களும்..

நிலாந்தி சசிகுமார்

நன்றி - http://www.arayampathy.lk/

 

இணைந்திருங்கள்


Followers

Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates