மு.நித்தியானந்தன் எழுதிய "கூலித் தமிழ்" நூலில் வெளிவந்த கட்டுரைகளில் பிரதான கட்டுரையாகக் கொள்ளப்படும் "கூலித் தமிழ்" பற்றிய கட்டுரையை மூன்று பாகங்களாக பிரித்து உங்கள் வாசிப்புக்கு முன் வைக்கப்படுகின்றன. இது இரண்டாவது பாகம். முதலாவது பாகம் இந்த இணைப்பில்
துரைமார் உலகம்
ஆயிரக்கணக்கில், கறுத்த, அகுசியான, அருவருப்பூட்டும், "பெரளி பண்ணப் பார்க்கிற, வேலைசெய்யாமல் ஏமாற்ற முனைகிற, காட்டுமிராண்டிகள் போன்ற கூட்டம் ஒன்று தன்னைச் சுற்றிலும் நிற்கும் அச்சம் கலந்த தனது கற்பனாவுலகில் ஒரு தோட்டத் துரை சஞ்சரிக்கிறான். தனது வெள்ளைத் தோலின் நிறமொன்றி னாலேயே அந்தக் காட்டுமிராண்டிகளைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண் டிருப்பதாகவும் அவன் எண்ணங்கொள்கிறான். ஒவ்வொரு நாளும் வேலைத் தளத்தில் ஒடுக்கப்படும் அந்தக் கூட்டத்தின் வெஞ்சினத்தின் வாடை அவனுக்கு வீசவே செய்கிறது.
உள்ளூர் சிங்களவர்களும் அவன்மீது வெறுப்பைக் கக்குகிறார்கள்.
லண்டன்வாசிகளோ இந்தத் தோட்டத்துரைமார்களைக் கணக்கில் எடுப்பதேயில்லை.
யாழ்ப்பாணத்தில் ஒரு மகாராஜாபோல, கலெக்டர் பதவியிலிருந்து சகல உயர் பதவிகளிலும் 40 ஆண்டு காலம் தனிக்காட்டு ராஜாவாக, கேள்வி கேட் பார் எதுவுமின்றிக் காலந்தள்ளியவர் பெர்சிவல் டைக் என்ற பிரிட்டிஷ் உய ரதிகாரி. இங்கிலாந்திற்குச் சென்றபோது, விக்டோரியா ரயில் நிலையத்தில் இறங்கி, ஒரு மோட்டார் வாகனத்தில் ஏறும்போது அந்த வாகன சாரதி அவ ருடன் கடுமையாக நடந்ததில் கடுஞ்சினமுற்ற டைக் விரைவிலேயே யாழ்ப் பாணம் திரும்பிவிட்டதுடன் அதற்குப் பிறகு இங்கிலாந்துப் பக்கம் தலை காட்டவேயில்லை.
“சிங்கப்பூர் வீழ்ச்சியுற்றபோது, தோட்டத் துரைமாரைப் பற்றி மிகவும் மோசமாகப் பேசப்பட்டது. அப்போது வீசி எறியப்பட்ட சேறு, இப்போதும் மேலில் ஒட்டிக்கொண்டிருப்பது போலவே இவ்வளவு காலத்திற்குப் பிறகும் எனக்குப் படுகிறது. இலங்கையின் தேயிலை, றப்பர் தோட்டத் துரைமார்க ளாயிருப்பவர்கள் பூரணமான பிரிட்டிஷ் தீவுகளைச் சேர்ந்த மக்களின் அப் பட்டமான வார்ப்புத்தான். அவர்கள்மீது குற்றம் சுமத்துபவர்கள் பிரிட்டிஷ் சமூக அமைப்பின் சகல பிரிவினரையுமே குற்றத்திற்கு இலக்காக்குகிறார்கள்” என்று லண்டன்வாழ் ஆங்கிலேயர் தம்மீது காட்டும் அலட்சிய, குற்றஞ்சாட்டும் மனோபாவத்தைப் பற்றி எரிச்சலோடு பேசுகிறார் ஒரு தோட்டத் துரை. “எந்த மக்களை அவர்களின் சீரழிவிலிருந்தும், கேவலமான நிலையிலிருந்தும் மீட் டெடுக்க அவன் எவ்வளவெல்லாம் கஷ்டப்பட்டிருப்பானோஅவர்களே அவனை இழிவாக நிந்தித்துப் பேசினர். அவனது சொந்த ரத்தமும் சதையுமானவர்களே அவனைக் கேவலமாகக் கருதினார்கள்’ என்று, அவரே வேதனையுறுமளவிற்கே 'சீமையில் அவரது ரத்தத்தின் ரத்தங்கள் கருத்துக் கொண்டிருந்தன.
கடுமையான வெம்மையும், குரூரமான தனிமையும் ஒரு புறமிருக்க, தன் மொழி பேசும் ஒருவனை இலங்கையின் தோட்டப் பகுதிகளில் அவன் வாரக் கணக்கில்கூடக் காண்பதற்கில்லை. நித்திய பிரம்மச்சாரியாக வாழ்ந்தாக வேண் டிய "வெள்ளையின நிர்ப்பந்தம். குடி, குடி மட்டுமே அவனுடைய ஒரே புகலிடமாய் இருந்தது. மனநோய்க் கூறுகளின் சகல தாக்கங்களுக்கும் அவன் இலக்கானான். அவனுடைய மூச்சு, வாழ்வு, இருப்பு அனைத்துமே தோட்ட மாகவே இருந்தது. அவனது தொழில் என்பது சாராம்சத்தில் தொழிலாளர் களைப் பிழிந்தெடுப்பதாகவே அமைந்தது. அவனது சகல மனஉபாதைகளின் வெளிப்பாடும் தொழிலாளர்களின் மீதே பூரண வலிமையோடு பிரயோகிக்கப் பட்டது.
பதினெட்டு அல்லது இருபது வயதில் வெறும் பாடசாலைப் படிப்போடு தேயிலைத் தோட்டத்திற்கு "கிரீப்பராகத் (Creeper) தொழில் பழக ஆரம்பிக்கும் "சின்னத் துரை ஐந்து வருடம் வேலை அனுபவம்பெற வேண்டியிருந்தது. ஐந்து வருடத்திற்குப் பிறகு ஆறு மாதச் சம்பளத்துடன்கூடிய விடுமுறையில் அவன் "சீமை" போய்வரலாம். ஐந்து வருடத்திற்குப் பிறகு, அவன் "சீனியர் அஸிஸ்டென்ட் பதவிக்கு உயர்த்தப்படுகிறான். இதில் பொறுப்புகள் சற்று அதிகமெனி னும் பெருஞ் சலுகைகளை அவன் இப்பதவியில் அனுபவிக்க முடியும். தோட்ட மனேஜர் விடுமுறையில் போனால், இந்தக் கட்டத்தில் அவருக்குப் பதிலாகக் கடமை புரியும் அந்தஸ்தைப் பெறுகிறான். பின்னர், ஒரு தோட்டத்து மனேஜ ராகப் பதவி உயர்த்தப்படுவான். திறமை காட்டுபவனாக இருந்தால், 'விஸிட் டிங் ஏஜண்ட்" என்ற உயர்ந்த பதவிக்கு அமர்த்தப்படுவான். பல்வேறு தோட் டங்களையும் சுற்றிப்பார்த்து கம்பெனிகளுக்கு அறிக்கை அனுப்புவதை முக்கியக் கடமையாகக் கொண்ட இந்த உயர்பதவி மிகச் சிலருக்கே கிடைத்தது. தோட்டத் துரைமார்கள் என்று ஆயிரம் பேர்வரை தேயிலைத் தோட்டங்களில் இருந்தனர்.
இந்தப் பதவி அமைப்புமுறை அத்துணை உற்சாகத்தைத் தோட்டத் துரை மார் மத்தியில் எழுப்பாத நிலையில், அவர்களின் உடனடிக் கவனிப்பிற்கும் கிரகிப்பிற்கும் உரியதாகக் கூலிகளின் தொழில் நடவடிக்கைகளே அமைந்தன. கூலிகளைக் கட்டுப்பாட்டில் வைத்து, அவர்களிடம் ஒழுங்காய் வேலை வாங்கு வதே அவனுடைய ஒரே குறியாக இருந்தது. தொழிலாளர்களைக் கண்டிப்பாய் நடத்தி, அவர்களிடம் ஒழுங்காய் வேலைவாங்க முதல் வழியாக அந்தக் கூலி களின் மொழியைப் புரிந்துகொள்வது அவனுக்கு அவசியமாகவிருந்தது.
அபர்டீன்தமிழ் வகுப்பு
"Tamil to be taught
Course for those going east
Aberdeen class arranged."
"தமிழ் போதிக்கப்படும்!
கிழக்கு நாடுகளை நோக்கிச் செல்பவர்களுக்கான பயிற்சி!
அபர்டீன் வகுப்பு தயார்”
என்ற அபர்டீன் பத்திரிகைத் தலைப்புச் செய்திகள் (15) "கூலித் தமிழ் பயிலும் அவசியத்தை அக்காலத்தில் வெளிப்படுத்தியுள்ளன. ஸ்கொட்லாந்தின் அபர்டீன் நகரிலிருந்து பெருந்தொகை வெள்ளையர்கள் மலாயா, இலங்கை போன்ற கிழக்கு நாடுகளுக்குத் தொழில் நிமித்தம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலப்பகுதியில் புலம்பெயர்ந்துகொண்டிருந்தனர்.
அவர்களுக்குத் தமிழ் போதிப்பதற்கான வகுப்புகள், ஸ்கொட்லாந்தின் மேற்குக் கரையில் அமைந்துள்ளதுறைமுக நகரான அபர்டீனிலேயே ஆரம்பிக்கப்பட்டன.
அபர்டீன் பத்திரிகைச் செய்தியை முழுமையாகப் பார்க்கலாம்.
“இலங்கையிலும் மலாயாவிலும் தொழில் பார்ப்பதற்காக இந்நாட்டை விட்டு வெளியேறும் தோட்டத் துரைமார், தோட்டத்து எஞ்சினியர்கள் மற்றும் சிவில் எஞ்சினியர்கள் ஆகியோரைப் பெரிதும் அச்சுறுத்தி வரும் கூலி மொழியில் போதுமான பயிற்சி இல்லாத குறை இனிமேல் அபர்டீனில் நிவர்த்தி செய்யப்பட்டுவிடும்.
அபர்டீன் கல்வி கமிட்டியின் மாலை வகுப்புகளில் கூலித் தமிழ் போதனை விரைவில் ஆரம்பமாகவிருக்கிறது. வட ஸ்கொட்லாந்தின் விவசாயக் கல்லூரியில் தோட்டத்துறை போன்ற பயிற்சி நெறிகளை மேற்கொண்டு, வெளிநாடு செல்ல விருக்கும் மாணவர்களுக்காகவே இந்த வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
வெற்றிகரமாக அமையும் என்று கருதப்படும் இந்தக் கூலித் தமிழ் வகுப்பு களை, 19 ஆண்டு காலம் தோட்டத்து நிர்வாகியாக வெளிநாட்டில் சேவை யாற்றி அனுபவங்கொண்ட திரு. ஜோர்ஜ் வோக்கர்நடத்தவிருக்கிறார்.
குறைந்தது 35 பேரைக் கொண்டதாக இந்த வகுப்புகள் அமையவுள்ளன. விவசாயக் கல்லூரியில் பயிலும் மாணவர்களே பிரதானமாக இந்த வகுப்புகளில் கலந்துகொள்ள உள்ளனர். மலாயா அல்லது இலங்கைக்குத் தோட்டத் துரை மாராகவோ, எஞ்சினியர்களாகவோ அல்லாமல் வேறு தொழில்களுக்காகவோ செல்லும் இளைஞர்களும் இந்த வகுப்பில் சேர்ந்து பயன் பெறலாம்.
மலாயாவிற்கும் இலங்கைக்கும் செல்லுகின்ற இளைஞர்களுக்குக் கூலித்தமிழ் பற்றிய அறிவு இல்லாமல் இருப்பது அவர்களுக்குப் பெருந்தடையாக உள்ளது" என்று இந்த மாலை நேர வகுப்புகளின் அமைப்பாளர் திரு. பிராங்க் ஸ்கோர்ஜி எமது"Press and Journal'நிருபரிடம் தெரிவித்துள்ளார். அவர்களின் இந்த மொழித் தேவையை இந்த வகுப்புகள் நிறைவேற்றும்.
விவசாயக் கல்லூரியில் போதிக்கப்படும் தோட்டத்துறை சார்ந்த பயிற்சி நெறிக்குத் துணையாக இந்த மொழி போதனை அமையும். மலாயாவிற்கும் இலங்கைக்கும் செல்லும் தோட்டத் துரைமாரும் எஞ்சினியர்களும் அங்கு சென்றதும் இந்த மொழியைப் படித்தேயாக வேண்டும்.
மலாயாவின் தோட்டத் துரைமார் சங்கத்தின் விதிகளின்படி, இவர்கள் அம் மொழியில் பரீட்சைக்குத் தோற்றி, சித்தி அடைய வேண்டும். அப்பரீட்சையை இங்கிலாந்திலேயே நடத்துவதற்கான ஒழுங்குகளையும் மேற்கொள்வது சாத்தியமே.
வெளிநாடுகளுக்குச் சென்று, கூலிகளை நிர்வகிக்கும் பொறுப்பு ஒப்படைக் கப்படும் பட்சத்தில், கூலித் தமிழைப் பேச முடியாதவர்கள் பெருந்தடைகளை எதிர்கொள்கின்றனர்.
இத்தகைய கூலித் தமிழ் வகுப்பு அபர்டீனைவிட, இங்கிலாந்தில் வேறெங்காவது போதிக்கப்படுகிறதா என்று தனக்குத் தெரியாது என்று திரு. ஸ்கோர்ஜி கூறுகிறார்.
எனினும், கூலித்தமிழுக்கான எந்தவிதமான பாடப்புத்தகங்களும் இந்நாட்டில் தற்போது பாவனைக்கு இல்லையாயினும், வெளிநாட்டிலிருந்து கூலித் தமிழ்ப் பாடநூல்களைப் பெறுவதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
Aberdeen Press and Journal
(23 November 1938)
கஷ்டமான காரியம்
"தமிழ்த் தொழிலாளர்களை வெற்றிகரமாகக் கையாள முதலில் அவர்க ளுடைய பாஷையைப் பேசப் பழக வேண்டும். இது உண்மையில் அவ்வளவு லேசான காரியமில்லை. முன்பின் தமிழ் மொழியோடு ஒரு பரிச்சயமும் இல்லா தவர்களுக்கு, இம்மொழியை யாராவது பேசுவதை முதலில் கேட்கும்போது, தண்ணிர் டாங்கியிலிருந்து குளிப்பதற்குத் தண்ணீர் பாய்கிற சத்தம் மாதிரித்தான் கேட்கும்.
"எனக்குத் தமிழில் ஒரு வார்த்தையுமே பேசத் தெரியாது. புதிதாகத் தமிழைப் பேச முயற்சிப்பவர்களுடன் தொழிலாளர்கள் தயவாயும் சிநேகயூர்வமாயும் இருப்பது மனசைத் தொடுவதாயிருக்கும். துரை எதையாவது பிழையாய்ச் சொல்லும்போது, அவருடைய மனதில் எந்த சங்கடத்தையும் ஏற்படுத்தாத வகையில் அவர் பிழையாகச் சொன்னதைத் தாங்கள் நினைவில் வைத்துக் கொண்டு, பிறகு அந்த வார்த்தை வரும்போது தாங்கள் அதைச் சரியாகச் சொல்லிக்காட்டி, துரை அது சரி என்று தெரிந்து கொள்ளுமளவிற்கும் அவர்கள் அதில் பிரயாசையாய் இருப்பார்கள். இது மிகவும் சிநேகயூர்வமான உதவி யெனினும், நீண்ட நோக்கில் இதில் அவ்வளவு பிரயோசனம் இருப்பதில்லை.
"துரைமார் அநேகமாகத் தமிழை எழுதப் படிப்பதில்லை. ஏனென்றால், தோட்டத்தில் வேலை பார்க்கும் பெருந்தொகைத் தொழிலாளர்கள் கல்வியறிவே இல்லாதவர்கள். அவர்கள் தமிழ் எழுத்துகளை ஒருபோதும் பாவிப்பதில்லை. கணக்கப்பிள்ளை மற்றும் மலைக்கங்காணிகள் பெருமளவில் இலக்கங்களோடு தான் புழங்குவார்கள். அவர்களுக்கு மிக அரிதாகவே எழுதுகின்ற தேவை வரும். அவர்களில் பலர் எழுதிக்கொள்ளக்கூடியவர்களே. கணக்கப்பிள்ளைக் கும் துரைமாருக்குமிடையிலான தொடர்புகள் வாய்ப்பேச்சு மூலமாகவே நடை பெறும்.
"தமிழ் எழுத்து மிகவும் கஷ்டம். தமிழ் மொழி, மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகளுக்கு மிகவும் நெருக்கமானது. ஆனால், கூலிகள் இலக்கணமேயில்லாத அல்லது ஒரளவு இலக்கணத்தோடுகூடிய ஒரு வட்டார வழக்கை வைத்திருக்கின்றனர். அவர்கள் பேசுவதை எழுதுவது பெருங்கவுடம்.
"தமிழ்மொழியைப் படிப்பதும் பெருங்கவுடமான காரியந்தான். உயர்தமிழ் என்பது இலக்கணம், வசன அமைப்பு அனைத்தும் கொண்டதே. இது ஒன்று மில்லாமல் கூலிகள் பேசும் பாஷை "கொக்னி தமிழ் மாதிரி" (cockney: கிழக்கு லண்டனில் கீழ்மட்ட மக்களின் வழக்குமொழி) என்று பதுளையில் தோட்டத் துரையாயிருந்த ஹரி வில்லியம்ஸ் கூறுகிறார்.
தோட்டத் துரைமார்கள் தமிழ் படிப்பதற்கு அல்லது "கூலிகளின் தமிழைப் புரிந்துகொள்வதற்கு "INGEVA', 'COOLY TAMIL’ என்ற இரு முக்கிய நூல்கள் பெருமளவில் பயன்படுத்தப்பட்டுவந்துள்ளன. இந்நூல்கள் முழுதும் ஆங்கிலத்தி லேயே அமைந்தன. தமிழ் எழுத்துகள் எதுவுமே காணப்பட மாட்டாது. முதலில் ஆங்கில வாக்கியத்தை எழுதி, அதனை எவ்வாறு தொழிலாளர்கள் பேசுவார் களோ அந்தப் பேச்சு மொழியை அப்படியே ஆங்கிலத்தில் எழுதிவைத்து, பேசுவதற்குத் துணைபுரிவதாகவே இவை அமைந்துள்ளன.
உதாரணம்:
Send her to the lines. - Layathukku poha sollu.
Silent - Pesamal iru, vay mudu.
இக்கூலித் தமிழ்ப் போதினிகள் எவ்வளவிற்குத் துரைமாருக்குத் தொழி லாளர்களின் பேச்சுவழக்கைப் புரிந்துகொள்ள உதவின என்பது நம் அக்கறைக்கு உரியதொன்றல்ல. இந்தத் தமிழ்ப் போதினிகள், தோட்டத் துரைத்தனத்தின் ஒடுக்குமுறை, தொழிலாளர்களின் எதிர்ப்புணர்வு ஆகியவற்றை எவ்வளவு தூரம் வெளிப்படுத்துகின்றன என்பதே நம் ஆய்வின் அக்கறைக்கு உரியதாகும்.
இங்கே வா!
"INGE VA’ or the “Sinnadurai's Pocket Tamil Guide' என்பது இந்நூலின் தலைப்பு.
இந்நூல் ரோயல் ஏசியாட்டிக் சொஸைட்டியின் அங்கத்தவரான ஏ. எம். பேர்குஸனால் (ஜூனியர்) எழுதப்பட்டது. இந்நூலின் திருத்தப்பட்ட மூன்றா வது பதிப்பு 1892இல் வெளியிடப்பட்டது.
"அநாமதேயமாக இருக்க விரும்பிய ஒரு பெரும் மொழியியல் நண்பர் இந்நூலின் தயாரிப்பில் எனக்குப் பேருதவி புரிந்திருக்கிறார். இந்நூல் சாதாரண மக்கள் மத்தியிலே காணப்படும் பேச்சு வழக்கினையே கொண்டிருக்க வேண்டும் என்று பெரும்பாலானோர் விரும்பியதற்கிணங்கவே இந்நூலை ஆக்கியுள்ளேன். எனவே, சிறாப்பர்மாரும் பண்டிதர்களும் இந்நூல் அவர்களுக்கானதல்ல என் றும், தற்போதைய சின்னத் துரைமார் கூட்டத்தாருக்குரியது என்றும் அன்புடன் நினைவுகொள்ள வேண்டுகிறேன். தோட்டத்துச் சின்னத் துரைமார்கள் அவர் களின் முன்னையோரைப் போலவே தாமும் இந்நூலுக்குப் பெருமளவில் ஆதரவு வழங்குவார்கள் என நம்புகிறேன்’ என்று ஏ.எம். பேர்குஸன் (ஜூனியர்) தன் உரையில் தெரிவிக்கிறார். (16)
ஒரு மொழியைப் புதிதாகப் பேச விரும்பும் ஒருவருக்கு இலகு வழிகாட்டியாக ஒரு நூலை எழுதும் எவரும் அந்நூலுக்கு இங்கே வா! என்று தலைப்பிட மாட்டார்கள். ஒரு மொழிப் போதனை நூலும் காலதேச வர்த்தமானங்களுக்கு இயைந்தது என்பதற்கு இந்நூலே நல்ல சான்றாகும். துரைத்தனத்தின் அதிகாரப் பிரயோகத்தை - ஒரு கூலிக்கு ஆணையிடும் தன்மையை இந்நூலின் தலைப்பு பறைசாற்றுகிறது.
தலைப்பு மட்டுமன்று, நூலில் காணப்படும் பெருவாரியான வாக்கியங்கள் தொழிலாளருக்கு ஆணை பிறப்பிக்கும் ஏவல் வாக்கியங்களாகவே அமைந்திருப் பதைக் காணலாம். தப்பு அடி, சங்கு ஊது, வாய் பொத்து, பேசாமல் இரு போன்ற வாக்கியங்கள் இதனைப் புலப்படுத்துவன.
இந்நூலின் மூன்றாவது வாக்கியம்: "கூப்பிட்டதுக்கு கேக்கலையா?
தோட்டத் துரைத்தனத்தின் ஒடுக்குமுறையை எதிர்க்க முனையும் தொழி லாளியின் மனோபாவத்தை இது உணர்த்துகிறது. வேலைத் தளத்தில் ஒவ்வொரு நிமிஷமும் இக்கொடூரச் சுரண்டலை எதிர்கொள்ளும் தொழிலாளி தனக்குச் சாத்தியமான சகல வகை எதிர்ப்புகளையும் தெரிவிக்க முனைகிறான்.
ஜேம்ஸ் ஸ்கொற் என்பவரின் Weapons of the Weak (17) என்ற நூல் இத்தகைய தொழிலாளர் எதிர்ப்பு நடவடிக்கைகளை நன்கு விபரிக்கிறது. இங்கு, தோட்டத் துரை ஏதோ வேலையைப் பணிக்கும்போது அல்லது இங்கே வா’ என்று கூப்பிடும்பொழுது, அவன் அதனை விளங்கிக்கொண்டாலும், தெரியாததுபோல் பாவனைபண்ணி அதனை மறுதலிக்க முனைகிறான். சூக்குமமாக துரைத்தனத் தின் சுரண்டலுக்கு அவன் காட்ட முடிந்த முதல் எதிர்ப்பு இதுவே. அதனால் தான், சின்னத் துரைமாருக்கான இத்தமிழ்ப் போதினியின் மூன்றாவது வாக்கியத்திலேயே இந்த நிலைமையை எதிர்கொள்வதற்கான தயாரிப்பில் துரைமாரை ஈடுபடுத்த இந்நூல் முனைகிறது.
இந்நூலின் நான்காவது வாக்கியம்:
"ஒழுங்கா இருங்க' (Stand properly)
பெரட்டுக்களத்தில் இடப்படும் கட்டளை இது என்பதை நாம் இலகுவில் அனுமானித்துக்கொள்ள முடியும்.
பெரட்டுக்களம் என்பது என்ன? "தனது இராணுவத் துருப்புகளுக்கு முன் னால் ஒரு கொமாண்டிங் ஒபீஸர் தோற்றுவதுபோல், ஒரு தோட்டத் துரை சடாரென்று தோன்றி மேற்கொள்ளும் வீம்புத்தனமான ஒரு டம்பமான நோட்டமிடல்தான்' என்று வலண்டைன் டேனியல் (18) தெரிவிக்கிறார்.
இராணுவப் பின்னணியிலேயே அனுபவப்பட்டிருந்த பல தோட்டத் துரைமார்கள், இராணுவத் துருப்புக்களிடம் அணிவகுப்பின்போது எதிர்பார்க் கப்படுவதுபோல ஒழுங்காய், விறைத்து நேராய் நிற்கும் தன்மையைத் தோட் டத் தொழிலாளர்களிடம் எதிர்பார்க்கிறார்கள். கேள்வி எதுவுமின்றி கடமைப் பாட்டையும் இது கூடவே சூசகமாக உணர்த்துகிறது. ஒரு இராணுவக் கட்டமைப்பு வாழ்க்கைக்குப் பழக்கப்படாத தொழிலாளர்கள் மிக்க இயல்பாக சாவகாசமாக துரைமார் முன் நிற்கிறார்கள். அது வேளையில் கட்டுப்பாடிமையை உருவாக்கிவிடக்கூடும் என்று துரைத்தனம் கருதுகிறது. தனக்கு முன்னால் நிற்கும்போது, பட்டாளத்துக்காரன் ஒருவன் உயரதிகாரியின் முன்னால் நிற்பதுபோல அவர்கள் நிற்க வேண்டும் என்பதை எதிர்பார்க்கும் இராணுவ மனோபாவத்தின் வெளிப்பாடே இந்தக் கட்டளையில் மிளிர்கிறது.
'சிரிக்கிறது யார்?' - Who is laughing?
இந்நூலின் ஐந்தாவது வாக்கியம்:
தோட்டத் துரைமாரின் பகட்டுத்தனமான நடத்தையையும் கட்டளையை யும் பார்த்துப் பெரட்டுக்களத்தில் நின்றுகொண்டிருக்கும் தொழிலாளர்களுக்குச் சிரிப்பு வருகிறது. சிலவேளை அவர்களின் கண்களில் தோட்டத் துரை ஒரு கோமாளி மாதிரியும் தெரிந்திருக்கக்கூடும். எந்த மலைக்குப் போக வேண்டும் என்று தங்களுக்கு ஏற்கெனவே தெரிந்த விஷயமொன்றிற்குப் பெரட்டைக் கூட்டி வைத்துக்கொண்டு, அநாவசியமான ஆர்ப்பாட்டம் பண்ணிக்கொண் டிருப்பதைப் பார்த்து அவர்கள் சிரித்திருக்கிறார்கள். இது சகல தோட்டங்களிலும் இயல்பாக நடந்திருப்பதை ஊகிக்க முடிகிறது.
இந்நூலின் ஆறாவது வாக்கியம்:
"லயத்துக்கு போகச் சொல்லு' (Send her to the lines.)
ஒரு பெண்ணின் சிரிப்பின் விலை இது. ஒருநாள் பேர் போய்விட்டது. அப் பெண்ணுடைய சிரிப்புதங்களின் துரைமார் ராஜ்யத்தின் அழிவிற்கான முதற்படி என்பது துரைமார் அகராதியில் தெளிவாய் இருந்திருக்கிறது.
நாங்க என்ன வேலைக்கு போக வேணும்?
இது துரை பெரட்டுக்களத்தில் தொழிலாளர்களை நோக்கிக் கேட்கும் கேள்வி. துரைமார்களைவிட மறுநாள் மலையில் என்னென்ன செய்ய வேண்டும் என்று தொழிலாளர்களுக்கு நன்கு தெரியும் என்பது துரைத்தனத்திற்குத் தெரியும். தோட்டத் துரையின் வேலை தெரிந்துகொள்ளாத-பலவீனமான நிலையைத் துலாம்பரப்படுத்தும் கேள்வி இது. வேலை தெரியாத துரைமாரும் தங்களுக்கு எல்லாம் தெரியும் என்று காட்டிக்கொள்ளும் தன்மையைப் பிரதிபலிக்கும் போக்கின் ஒரு அம்சமே இது.
இதற்கடுத்த கேள்வி:
'உன் மம்பட்டி எங்கே?
தான் வேலையில் கவனமாய் இருப்பதாயும், தொழிலாளி மண்வெட்டி இல் லாமல் வந்திருப்பதைத் தான் கண்டுபிடித்துவிட்டதாகவும் காட்டிக்கொள்ளும் முனைப்பு இது. சதா நேரமும் வேலையிலேயே கண்ணும்கருத்துமாக இருக்க வேண்டும் என்று தொழிலாளிக்கு உணர்த்துவதற்கு துரைத்தனத்திற்கு அவசியப் படும் கேள்வி இது. அந்த அர்த்தத்தில் இது வெறும் கூலித் தமிழ்ப் போதினியாக இல்லாமல், தொழிலாளரைக் கட்டுப்படுத்தும் 'முகாமைக் கைநூல்' ஆகவும் திகழ்வதை அவதானிக்கலாம்.
'உன்னைக் கூப்பிடேல்லை" என்றொரு வாக்கியம்.
தன்னை எதுவும் கூப்பிட்டுவிட்டாரோ என்று பவ்வியமாகத் துரையிடம் போகும் ஒரு தொழிலாளியை, அப்படியே எட்டத்தில் வைத்துவிடப் பண்ணும் அலட்சியம் நிறைந்த வாக்கியம் இது. நின்ற இடத்திலேயே தொழிலாளியை நிற்கவைக்கும் பாசாங்குத்தனத்திற்குரிய வார்த்தைகள் துரைமாருக்குத் தேவைப் பட்டிருக்கிறது.
பேசாதே!
இந்நூலில் ஒரு சம்பாஷணை இடம்பெறுகிறது:
முத்துசாமி கங்காணி எங்கே?
அந்தா தெரியுது. கீழ் ரோட்டிலே வாரது.
ஏன் இவ்வளவு நேரம் செண்டு பெரட்டுக்கு வந்தாய்?
ராத்திரி தூக்கம் சுத்தமா கெடயாது அல்லது ராத்திரியிலே எனக்கு தூக்கம் இல்லே.
அதெப்படி? ரொம்ப சாராயம் குடிச்சியா? தண்ணி மிச்சம் குடிச்சியா?
தொரைக்கு பொய் சொல்ல ஏலாது; நான் கொஞ்சமெண்டாலும் குடிக்க இல்லே.
பிந்திவந்ததற்கு அவன் என்னென்னகாரணங்களைச்சொல்லக்கூடும் என்பதும் அவர்களது அகராதியில் பதிவாகியிருக்கிறது.
ஆண்டி சரியா சங்கு ஊத இல்லை.
சோறு ஆக்கவும்கூட நேரம் இல்லை.
தோட்டத் துரைமாருக்கு விளக்கம் அல்லது பதில் சொல்லிக்கொண்டிருக்கக் கூடாது; அது துரைக்கு முன்னால் நின்று அவரை எதிர்த்துப் பேசுவதற்குச்
சமமாகும.
பதில்துரையிடமிருந்து வருகிறது.
பேசாமல் வேலைக்கி போ.
மேலும் ஒரு வேலை சொல்லப்படுகிறது:
ரெங்கன், நாகசேனைக்கு போயிட்டு ஆறு கோடாலி, பன்னண்டு மம்பட்டி கொண்டா."
ஒரு ஆள் ஆறு கோடரிகளையும் பன்னிரண்டு மண்வெட்டிகளையும் தனியே தூக்கிக்கொண்டு வந்துவிடலாம் என்று அவ்வளவு துல்லியமாகக் கணக்கிடப் பட்டிருக்கிறது.
இன்னுமொரு உரையாடல்:
"பெரிய பங்களாவுக்கு கொண்டு போகவா?
ஆமா, வந்தவுடனே சொல்லு,
அடுத்து என்ன செய்வதென்று தெரியாத நிலையில் தொழிலாளியின் நேரம் வீணாகிப்போய்விடக்கூடும் என்று மிகுந்த அவதானத்தோடு இந்தக் கட்டளை பிறக்கிறது.
எதிர்ப்புணர்வு
"சோமாரிக்காரன், தப்பின பழம் எடுக்க உன்னை மூணு தரம் கூப்பிட்டேன்."
உரையாடல் கோப்பிக் காலத்தை உணர்த்துகிறது. ஏதோ கீழே விழுந்துவிட்டபழத்தைப் பொறுக்கி எடுக்கத் தோட்டத் துரை, தொழிலாளியை மூன்று முறை கூப்பிட்டிருக்கிறான். ஆனால், மூன்று முறை கூப்பிட்டாலும் தொழிலாளி பேசாமல் இருப்பான் என்று துரைமார்கள் அனுமானித்திருக்கிறார்கள். கேட்டாலும் கேட்காதது போல தொழிலாளி பாவனைபண்ணுவதும் தொழிலாளியின் எதிர்ப் புணர்வைத் தெரிவிக்கும் ஒருவித யுக்திதான்.
ஒரு பழத்தைப் பொறுக்காமல் விட்டுவிட்டுப் போனாலும், அவனது லாபத் தில் உதைக்கும் விஷயம் அது. எனவேதான், இதற்கு மறுமுனையில்,
கோணக்கோணமலையேறி
கோப்பிப் பழம் பிக்கையிலே
ஒருபழம் தப்பிச்சுன்னு
ஒதச்சாண்டி சின்னத்தொரை
என்று பெண் தொழிலாளியின் பாடல் எழ நேர்ந்தது.
துரை மூன்று முறை கூப்பிட்டும் வராமலிருந்ததற்குத் தொழிலாளி ஏதேனும் காரணம் கூற முற்பட்டிருக்க வேண்டும். அந்தக் காரணங்கள் விளங்கிக்கொள்ள துரைக்கு அதற்கான தமிழறிவோ அவசியமோ அநாவசியமானது. ஆனால், அத் தொழிலாளியின் பதிலுக்கு என்ன சொல்ல வேண்டுமென்று இந்தத்தமிழ்போதினி வழிகாட்டுகிறது:
சீ! வாய் பொத்து!
இதையடுத்து, இருட்டி போறது என்று தமிழில் சொல்லத் துரைக்குக் கற்றுக்கொடுக்கப்படுகிறது. இது இருட்டும்வரை துரை, தோட்டத்தில் நின்று தொழிலாளியிடம் வேலைவாங்கும் வழக்கத்தைக் குறிக்கிறது.
நீ எவ்வளவு நேரம் அங்கே இருந்தாய்?
ராத்திரி பன்னெண்டு மணி மட்டும் அங்கே இருந்தேன்."
இரவு பன்னிரண்டு மணிவரையும்கூட வேலைத்தளத்தில் சாதாரணமாக நின்று வேலைசெய்வதை இது எடுத்துக்காட்டுகிறது.
தேசப் பிரஷ்டங்கள்
இன்னுமொரு முக்கிய உரையாடல் இந்நூலில் வருகிறது:
"நேத்து சாயந்தரம் முத்துசாமி லயத்திலே நடந்த சண்டை என்ன?
"சின்னப்பயல் பொன்னனை ஏசினதால் (இவனுடைய அண்ணன்) முத்துசாமி அவனுக்கு ஒரு அடி அடித்தான்."
பழனியாண்டி ஏன் லயத்துலே இருக்கிறான்?
அவன் இங்கே இல்லை’ ஆமா, இருக்கிறான். கள்ளன் போல காட்டுக்கு ஓடிப்போறதை நான் இப் போதான் கண்டேன்."
பழனியாண்டி என்ற தொழிலாளி லயத்துக்கு வரக் கூடாதென்று, துரையின் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த உத்தரவை மீறி பழனியாண்டி லயத்திற்கு வந்து போய்க்கொண்டிருக்கிறான். திடீரென்று துரை ஒருமுறை லயப் பக்கமாய் வருகையில் அவன் லயத்தை விட்டு காட்டுப் பக்கமாய் ஒடுவதைப் பார்க்கிறான்.
இந்த அனுமானத்தில்தான் மேற்கூறிய தமிழ்ப்போதினி உரையாடல் நடை பெறுகிறது.
இம்மாதிரி "தேசப் பிரஷ்டங்கள் எல்லாம் அந்நாளில் எவ்வளவு சாதாரண மாய் இருந்ததென்பதை இது எடுத்துக்காட்டுகிறது.
ஸி.வி. வேலுப்பிள்ளையின் "வீடற்றவன் (19) நாவலில் ஒரு பகுதி.
"உன் தம்பிப்பயல் எங்கே?
தலவாக்கொல்லையில் வேலை செய்ரானுங்க” அவன் பொம்பளே அடிச்சாச் பத்சீட் கொடுத்தாச் உனக்குத் தெரியும்’
தெரியும் தொரைகளே’
இப்ப தோட்டம் வர்றதா? நம்ம தோட்டம் வர்றதா?
வரப் போகத்தானே இருக்கானுங்க” அவன் இங்கே வரக்கூடாத். வந்தா ஒனக் பத்சீட் தெரியும்’
'எனக்கு பத்துச்சீட்டு வேண்டாமுங்க தொரைகளே. பழனியப்பன் சொக மில்லாத தாயே பாக்க வந்தா எனக்கு என்னத்துக் பத்துச்சீட்டுங்க?"
'பேச வேண்டாம் மன்சன்'
துரை சொல்வதை மறுத்து, தன் பக்க நியாயத்தை வலியுறுத்தும் தொழிலாளியின் குரல் எப்போதுமே துரைத்தனத்திற்கு எரிச்சலூட்டுவது; அச்சந்தருவது. எதிராளியின் வாயை என்றென்றைக்குமாக மூடிவிடுவதே உகந்தது.
Silent - பேசாமல் இரு. வாய் மூடு. வாய் பொத்து என்று துரைமாருக்கு இந்தத் தமிழ்ப்போதினி நிறைய உதவுகிறது.
Here என்பதற்கு இங்கே, இஞ்சை, இவ்விடம், இங்காட்டி, இங்காலே என்ற தமிழ்ப் பதங்கள் இந்நூலில் பாவிக்கப்படுகின்றன. தோட்டத் தொழிலாளர்களின் வழக்கில் இங்காலே" என்ற பதம் பாவிக்கப்படுவதில்லை. இது யாழ்ப்பாணத்தில் பயிலும் வழக்காகும்.
அதேபோல், "கொஞ்சமெண்டாலும் குடிக்க இல்லே’ என்பதிலும் யாழ்ப்பாண வழக்கு பிரதிபலிக்கிறது. "கொஞ்சோண்டு", "கொஞ்சமும்", "கொஞ்சுனூன்டு’ ஆகிய பதங்களே தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் பயிலும் வழக்காகும்.
இங்கே வா!" என்ற இந்நூலின் தயாரிப்பில் அநாமதேயமாக இருக்க விரும் பிய பெரும் மொழியியல் நண்பர் யாழ்ப்பாணப் பேச்சு வழக்கிலும் பரிச்சய முள்ளவராயிருக்க வேண்டும் என்று ஊகிக்க முடிகிறது.
"(தமிழில்) பேச்சுவிதிகள் என்று மிக அரிதாகவே காணப்படுகிறது. தோட்டத் துரைமாருக்கு (கிறீப்பருக்கு) இதுகாலவரை வெளியானதில் மிகவும் பயனுள்ள நூலான இ. மார்ஷ் ஸ்மித்தின் இங்கே வா!' என்ற நூல் மலைக்காட்டில் பாவிக்கப்படும் வாக்கியங்களைப் பெருமளவில் உதாரணங்களாகக் காட்டும் சொற்றொகுதி வடிவிலேயே அமைந்துள்ளது” என்று ஹரி வில்லியம்ஸ் குறிப் பிடுகிறார். (20)
ஹரி வில்லியம்ஸின் கூற்றிலே தவறுள்ளது. இங்கே வா!" என்ற நூலை ஆக்கியவர் இ. மார்ஷ் ஸ்மித் என்று பிழையாக எழுதியிருக்கிறார். அந்நூலை ஆக்கியவர் எம்.எம். பேர்குஸன் (ஜூனியர்) ஆவார். மார்ஷ் ஸ்மித் எழுதிய "கூலித் தமிழ் அகராதி, கொழும்பு டைம்ஸ் ஒப் சிலோன் வெளியீடாக அறிவு (Arivu) என்ற தலைப்பிலேயே வெளியானது. இந்நூலின் முதற்பதிப்பு அனைத்துமே விற்று முடிந்துபோனதாக டைம்ஸ் ஒப் சிலோன் பத்திரிகை விளம்பரமொன்று தெரிவிக்கிறது. (21)
அடிக்குறிப்புகள் :
15. Aberdeen Press and journal, 23 November 1938
16. A.M. Ferguson. 1892. "INGE VÄ!"or, The Sinna Dorai's Pocket Tamil Guide. Colombo: A.M.and J. Ferguson.
17. 'James C. Scott. 1987. Weapons of the weak. Everyday Forms of Peasant Resistance. New Haven: Yale University Press.
18. Valentine E. Daniel. 1993. Tea Talk: Violent Measures in the Discourse of Sri Lanka's Estate
19. ஸி.வி. வேலுப்பிள்ளை. 1981. வீடற்றவன், யாழ்ப்பாணம் வைகறை.
20. Harry Williams. 1956. Ceylon - Pearl of the East. London: Robert Hale.
21. Times of Ceylon, 26 March 1925.