இலங்கையின் வரலாற்றில் முதன் முறையாக இராணுவ நீதிமன்றம் அமைக்கப்பட்டது இந்த 1915 கலவரத்தின் போது தான். மக்களுக்கு நீதி வழங்க வேண்டிய அரச இயந்திரம் அநீதியிழைத்து “இராணுவ நீதிமன்றமொன்றின்” தவறான முன்னுதாரணமாக வரலாற்றில் பதிய வைத்தது இந்த நீதிமன்றம். கலவரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் என்று சந்தேகிக்கப்பட்டவர்களை வேகமாக விசாரணை செய்து தண்டனை வழங்குவதற்காக இராணுவச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டது இந்த இராணுவ நீதிமன்றம்.
இராணுவச் சட்டமும், இந்த இராணுவ நீதிமன்றமும் இலங்கைக்கு பழக்கப்பட்ட ஒன்றல்ல. அப்படிப்பட்ட இராணுவ நீதிமன்றம் பற்றியும் (Court Martial), “மாஸ்லோ” என்று பேச்சு வழக்கில் அன்று மக்களால் அழைக்கப்பட்ட இராணுவச் சட்டம் (Martial Law) என்பவற்றைப் பற்றி சில படித்தவர்கள் மட்டுமே பத்திரிகைகள், நூல்கள் வாயிலாக அறிந்திருந்தார்கள். சாதாரண பிரஜைகள் இராணுவ அதிகாரிகளால் நீதி விசாரணைக்கு உட்படுத்தப்படும் ஒரு நிலைமையை அதற்கு முன்னர் கற்பனையில் கூட நினைத்துப் பார்த்திருக்கமாட்டார்கள். அப்படிப்பட்ட ஒரு நீதிமன்றம் பற்றிய கலக்கமும், பீதியும் மக்களுக்கு உண்டானதில் ஆச்சரியப்படுவதற்கில்லை.
சாதாரண நீதிமன்றங்கள் கலவரம் நிகழ்ந்த வாரம் கூட எந்த தங்கு தடையுமின்றி இயங்கிக் கொண்டு தான் இருந்தன. அது மட்டுமன்றி கலவரம் நிகழ்ந்து முடிந்த பின்னர் கூட கலவரத்துடன் சம்பந்தப்பட்டவர்களாக கருதப்பட்ட ஆயிரகனக்கானவர்களின் வழக்குகள் சிவில் நீதிமன்றங்களில் நிகழ்ந்தன. கலவரம் குறித்து தொடரப்பட்ட 8428 வழக்குகளில் 8016 வழக்குகள் சாதாரண சிவில் நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டன. அதாவது 95 வீத வழக்குகள் விசாரிக்கப்பட்ட நிலையில் எஞ்சிய 412 வழக்குகளை விசாரிக்கும் தகுதி அந்த சிவில் நீதிமன்றங்களுக்கு இருந்த நிலையில் ஒரு இராணுவ அதிகாரிகளைக் கொண்ட நீதிமன்றத்தின் தேவை ஏன் உருவானது.
1915 கலவரம் இலங்கையின் நீதி நிர்வாகத்தைப் பாதிக்கும் அளவுக்கு நிகழவில்லை என்பது வெளிப்படை. அதுமட்டுமன்றி இராணுவ சட்டமும், இராணுவ நீதிமன்றமும் அநாவசியமாக அனைத்தும் நிகழ்ந்துமுடிந்த பின்னர் பயன்படுத்தப்பட்டன. சாதாரண சிவில் மக்களுக்கு கலவரத்தை விட பீதி தந்ததாக அமைந்தது இந்த இராணுவ சட்டம் தான்.
இராணுவ நீதிமன்றத்தின் முதலாவது அமர்விலேயே அதன் கடும் போக்கின் காரணமாக பீதியையும் கலக்கத்தையும் உருவாக்கினர். கடுமையான தீர்ப்புகளினால் ஐரோப்பியர்கள் கூட அதிர்ச்சியடைந்தனர். கலவரம் நிகழ்ந்து முடிந்து 12 நாட்களின் பின்னர் ஜூன் மாதம் 17 அன்று “தேசத் துரோகம்”, சொத்துக்களை சேதப்படுத்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு 9 பேருக்கு எதிராக இராணுவ நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவர்களில் எவரும் எந்த கொலைக் குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்படாத போதும் நீதிமன்றம் இவர்களுக்கு மரண தண்டனை வழங்கியது. இவர்களில் 6 பேரின் மரண தண்டனையை உறுதி செய்தவர் ஆளுநர் சாமஸ். அந்த 9 பெரும் தூக்கிலிட்டு கொல்லப்பட்டார்கள். அதே நீதிமன்றத்தில் மேலும் 7 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.
கொழும்பில் தொடரப்பட்ட இன்னொரு வழக்கில் அதே வகை குற்றச்சாட்டின் பேரில் 13 பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. இந்த 13 பேரில் ஒருவர் எந்த குற்றமும் இழைக்காத இளம் நகர பாதுகாப்புப் படையைச் சேர்ந்த படித்த, சமூக செல்வாக்குள்ள எட்வர்ட் ஹென்றி பேதிரிஸ். அவர் பற்றி இந்த தொடரில் ஏற்கெனவே விரிவாகப் பார்த்தோம். ஒரு மரண தண்டனையை உறுதி செய்யும் பொறுப்பும் அதிகாரமும் ஆளுநரிடமே இருந்தது. ஆனால் ஹென்றி பேதிரிசின் விடயத்தில் அப்படி ஆளுநரின் எந்த அனுமதியும் பெறப்படவில்லை. ஹென்றி பேதிரிஸ் மரண தண்டனைக்கு உள்ளக்கப்பட்டதன் அடுத்த நாள் காலை காலனித்துவ செயலகத்துக்கு கடிதமொன்றின் மூலம் “இந்த தண்டனை குறித்து என்னிடம் அபிப்பிராயம் கோரப்பட்டிருக்கவேண்டும்” என்று தெரிவித்திருந்தார். ஆனால் அதற்கு பதிலளித்த பிரிகேடியர் ஜெனரல் மல்கம் (Brigadier General H. H. L. Malcolm) சற்றும் சளைக்கவில்லை. “தண்டனை நிறைவேற்றப்பட்டது.” என்று திமிராகவே ஆளுனருக்கே பதிலளித்தார். இந்த இராணுவ சட்ட காலத்தில் இந்த இருவருக்கு இடையில் ஒரு அதிகாரப் போட்டி நிகழ்ந்து கொண்டிருந்ததாக குமாரி ஜெயவர்தனா “இலங்கையில் தொழிலாளர் வர்க்கத்தின் எழுச்சி” என்கிற நூலில் விளக்குகிறார். இந்த இருவருமே இறுதியில் பதவி துறக்கப்பட்டு திருப்பியழைக்கப்பட்டார்கள் என்பது தனிக்கதை.
ஆனாலும் இதன்போது ஆளுநரின் அனுமதிபெறாமல் நீதிமன்ற தண்டனை நிறைவேற்றப்பட்ட ஒரே தண்டனை இது தான். அதற்கான காரணம் ஹென்றி பேதிரிஸ் ஒரு இராணுவ வீரர் என்பதால் அவரை விசாரித்து தண்டனை வாங்கும் அதிகாரம் இயல்பாகவே இராணுவ நீதிமன்றத்திடம் இருந்தது ஒரு காரணமாக இருக்கலாம். அதேவேளை நீதிமன்றத்தில் விசாரிக்கப்படாமல் நேரடியாக கண்ட இடத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவங்கள் இவற்றில் அடங்காது.
1915 ஜூன் 3ஆம் திகதியன்று இன்ஸ்பெக்டர் ஜெனரல் டவ்பிகின் (H. L. Dowbiggin) ஆயுதம் தாங்கிய பஞ்சாப் படையினரையும் அழைத்துக் கொண்டு கண்டியில் இருந்து கொழும்பை நோக்கி ரயிலில் புறப்பட்டு வந்தார். எப்போது மீரிகமைக்கும் வேயங்கோடவுக்கும் இடைப்பட்ட பகுதியில் தெருவோரோத்தில் இருந்து குழுமி நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த அப்பாவி கிராமவாசிகள் மீதி கண்மூடித்தனமாக துப்பாக்கி பிரயோகம் செய்ததில் பலர் கொல்லப்பட்டனர்.
உத்தியோகபூர்வமாக அரசாங்கம் எதனையும் இது குறித்து வெளியிடவில்லை. ஆனால் ஜூன் 5 வெளியான சிலோன் மோர்னிங் லீடர் (Ceylon Morning Leader) பத்திரிகையில் ரயிலில் டவ்பிகின்னோடு 28 பஞ்சாப் படையினர் இருந்தார்கள் என்றும் சுற்றிவர கண்மூடித்தனமாக மேகொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 35 அப்பாவி கிராமவாசிகள் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டதாகவும், பலர் காயப்பட்டதாகவும் அந்த செய்தியில் இருந்தது. அதுமட்டுமன்றி கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை அதைவிட மேலதிகமாக இருக்கக்கூடுமென்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஜூலை 18 அன்று ஹங்வெல்ல பிரதேசத்தில் நடந்த இராணுவ நீதிமன்ற விசாரணையின் போது தேசத்துரோகம், சொத்துக்களை சேதப்படுத்தல், கொள்ளையடித்தல் போன்ற குற்றச்சாட்டுக்களின் பேரில் 13 பேருக்கு எதிரான வழக்கில் 11 பேருக்கு தூக்கிலிட்டு மரண தண்டனையளித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆயுள் தண்டனையளிக்கப்பட்ட எஞ்சிய இருவரும் முஸ்லிம்கள் ஆவர். இவ்வாறு இராணுவ நீதிமன்றம் மட்டும் 83 மரண தண்டனைகளை வழங்கியது. 60 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கியது. இதில் உள்ள வேதனை மிகுந்த வேடிக்கை என்னவென்றால் இவர்களில் பலர் இந்த கலவரத்தில் பாதிப்பட்டவர்களாகவோ, தப்பி வந்து தஞ்சம் கோரியவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தவர்களாகவோ இருந்தது தான்.
இந்தளவு நீதிவழங்கும் நிறுவனம் அநீதியிழைத்து அப்பாவிகளை படுகொலை செய்யும் அரசு இயந்திரமாக ஆனது பற்றி சமூகத் தலைவர்கள் பலர் சட்டசபை உறுப்பினர்களுக்கு ஊடாக ஆளுனரை சந்தித்து முறையிட்டனர். அவை எதுவும் சாத்தியப்படவில்லை. இந்த இராணுவ நீதிமன்றத்தைக் கலைத்துவிட்டு சாதாரண சிவில் நீதிமன்றங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட நீதிபதிகளையும், ஜூரி சபையையும் கொண்ட விசேட நீதிமன்றத்தை உருவாக்கி வழக்குகளை விசாரிக்கும்படி கோரிக்கை விடுக்கப்பட்டன. சேர்.பொன் இராமநாதன் இது குறித்து தொடர்ச்சியாக குரல் கொடுத்தார். ஆனால் அவை எதுவும் கணக்கிலெடுக்கப்படவில்லை. மாறாக இராணுவ நீதிமன்றம் 1915ஆம் ஆண்டு ஓகஸ்ட் 20 வரை இயங்கியது.
இராணுவ நீதிமன்றத்தில் நடந்த வழக்குகள் அத்தனையும் எதேச்சதாதிகாரத்துக்கு சிறந்த உதாரணங்களாக விளங்கின. அவரவர் விரும்பியபடி முறையிடும் வாய்ப்புகள் இருந்தன. அவற்றை தீர விசாரிப்பதற்கான எந்த பொறிமுறையையும் அவர்கள் கையாளவில்லை. வெறும் முறைப்பாடுகளின் அடிப்படையில் உடனடி தீர்ப்பு வழங்கும் அராஜக நீதிமன்றங்களாகவே அவை செயல்பட்டன. எனவே தனி நபர்களுக்கு எதிரான பழிவாங்கல் நிறையவே நிகழ்ந்தன என்பதை ஆர்மண்ட் டி சூசா, பொன்னம்பலம் இராமநாதன், ஈ.டபிள்யு பெரேரா போன்றோர் இக்கலவரம் குறித்து எழுதிய நூல்களில் விளக்குகின்றனர். இராணுவ நீதிமன்றம் வழங்கிய எந்தத் தீர்ப்புகளையும் எதிர்த்து மேன்முறையீடு செய்யமுடியாது. மரண தண்டனை உள்ளிட்ட தீர்ப்புகள் உடனடியாகவே வழங்கப்பட்டு, வேகமாக நிறைவேற்றப்பட்டன.
இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் அனைவரும் சுயேட்சையாக இராணுவத்தில் இணைத்துக்கொண்ட இராணுவத்தினர். நீதித்துறையின் செயற்பாடுகள் குறித்து எந்த அனுபவமும் அற்றவர்கள். ஆர்மண்ட் டி சூசா இப்படி குறிப்பிடுகிறார்.
“இந்த வழக்குகளில் சாட்சியமளித்தவர்களில் பெரும்பாலானோர் முஸ்லிம்கள். இலக்கு வைக்கப்பட்ட சில சிங்களவர்களுக்கு எதிராக பாடம்படிப்பிக்கும் நோக்குடன் சாதாரண அப்பாவிகள் பலரை மாட்டிவிட்டனர். நீதிபதிகள் தம்மீதான அனுதாபத்தை வென்றெடுக்க முயன்றனர்.”
இராணுவ நீதிமன்ற வழக்குகளில் கலந்துகொண்ட அர்ட்லி நோர்டன் தான் கண்டதை இப்படி எழுதினார்.
“நியாயம் வழங்கும் எந்த நீதிமன்றமும் ஏற்றுக்கொள்ள முடியாத சாட்சிகளால் அப்பாவிகள் குற்றவாளிகளாக்கப்பட்டதை நான் நேரடியாகக் கண்டேன்.
நான் அறிந்தளவில் இந்தியாவில் அடிக்கடி கலகங்கள் வெடிக்கும், அந்த கலகங்கள் பெரும்பாலும் இரத்தம் சிந்துவதில் தான் போய் முடிந்திருக்கின்றன. சில சந்தர்ப்பங்களில் அந்த கலகக் காரர்களை அடக்குவதற்காக சுடக்கூடிய படையை வரவழைப்பது உண்டு. ஆனால் ஒருபோதும் இராணுவம் தம்மிஷ்டப்படி நடந்துகொள்ள அனுமதித்து விட்டு நீதித்துறை தமது கைகளை கழுவிக்கொல்வதில்லை.
சாட்சிகளின் நம்பகத்தன்மையை போதிய விசாரணைக்குட்படுத்தகூடிய பயிற்சியோ அனுபவமோ இந்த நீதிமன்றத்துக்கு கிஞ்சித்தும் இல்லை. அடிப்படையில் இராணுவ நீதிமன்றத்திற்கு குற்றம் சாட்டப்பட்டவர்கள் நிறுத்தப்படுவதே அவரின் சிவில் உரிமையை விலங்கிடுவதற்கு சமம். ஏனெனில் இவர்கள் எவருக்கும் அநீதியான தீர்ப்பை எதிர்த்து முறையிடும் உரிமை மறுக்கப்பட்டிருந்தது. சாதாரண நீதிமன்றங்களில் குற்றம் சுமத்தப்பட்டவர் சார்பிலும், சாட்சிகளை உரிய வகையில் விசாரிப்பதற்காகவும் வழக்கறிஞர்கள் நியமிக்கப்படுவார்கள். ஆனால் இங்கு எதுவும் கணக்கில் எடுக்கப்படவில்லை...”
களுத்துறையில் நிகழ்ந்த வழக்கில் ஆதர் டயஸ் என்பவருக்கு எதிரான வழக்கு இப்பேர்பட்ட அநீதி இழைக்கப்பட்ட உதாரணங்களில் ஒன்று. அந்த வழக்கில் சட்ட உரிமைகளை எடுத்துகூறியபோது “வழக்கறிஞர்கள் ஒவ்வொருவரும் எழுந்து ஏனைய நீதிபதிகள் எப்படி நடந்துகொள்வார்கள் என்பது பற்றி எங்களுக்கு சொல்லித்தர முற்படுகிறார்கள். வேறு நீதிபதிகளின் அணுகுமுறைகள் பற்றி நாங்கள் கொஞ்சமும் மதிக்கப்போவதில்லை.” என்று அவர்களுக்கு பதிலளிக்கப்பட்டது. வழமையாக நீதிபதிகள் பெற்றுக்கொள்ளவேண்டிய சட்ட பரிந்துரைகளை அவர்கள் கணக்கிலெடுக்கவில்லை.
சட்டசபையில் இவை குறித்து கேள்வி எழுப்பப்பட்டவேளை, ஆளுநர் சாமஸ் ஒரு உறுதிமொழி கொடுத்தார்.
“இராணுவ நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டவர்கள் அனைவரும் கலவரத்துக்கு தலைமை தாங்கியவர்கள் மட்டுமே. அதுவும் நன்றாக விசாரணை செய்து விசேட ஆணையாளரால் பரிந்துரைக்கப்பட்டு நீதிபதியால் உறுதிசெய்யப்பட்டவர்கள்.”
ஆனால் ஆளுநர் கூறியது அனைத்தும் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை என்பது வெளிப்படை.
கலவரத்தின் போது சிங்களவர்கள் தம்மை எப்படி பாதுகாத்தனர் என்று முஸ்லிம்கள் கூறிய சந்தர்ப்பங்களும் பதிவாகின. அதேவேளை தமது சொந்தப் பழிவாங்களுக்காக சில சிங்களவர்களை சோடனையாக முறைப்பாடு செய்த சந்தர்ப்பங்கள் பலவற்றையும் காணலாம். ஆதர் டயஸ் வழக்கில் இராணுவ நீதிமன்றம் எப்படி நடந்து கொண்டது என்பது ஒரு சிறந்த உதாரணம். அடுத்த வாரம் அதனைப் பார்ப்போம்.
தொடரும்...
நன்றி - தினக்குரல்