Headlines News :
முகப்பு » , » இலங்கையில் உலகமயமாக்கலின் ஊடுருவலும் தேசிய இனப் பிரச்சனையும் பற்றி கைலாசபதி - லெனின் மதிவானம்

இலங்கையில் உலகமயமாக்கலின் ஊடுருவலும் தேசிய இனப் பிரச்சனையும் பற்றி கைலாசபதி - லெனின் மதிவானம்

(இன்று பேராசிரியர் க. கைலாசபதியின் 34 வது நினைவுத் தினம். 
இதனை முன்னிட்டு இக்கட்டுரை பிரசுரமாகின்றது )

கைலாசபதி பற்றி இதுவரை வெளிவந்த ஆய்வுகள், அறிமுகக் குறிப்புகள், மதிப்பீடுகள் என்பனவற்றை ஒப்பு நோக்குகின்ற போது ஒரு உண்மை புலனாகாமல் போகாது.  கைலாசபதியின் தமிழியல் துறைசார்ந்த பங்களிப்புகள் வெளிக்கொணரப்பட்ட அளவிற்கு அவரது அரசியல் துறைசார்ந்த பங்களிப்புகள் வெளிக் கொணரப்படவில்லை என்றே கூறவேண்டும். அவர் செம்பதாகை, றெட்பனர் முதலிய பத்திரிகையில் சர்வதேச விவகாரங்களை ஒரு பக்கத்தில் தொடர்ச்சியாக எழுதி வந்தது போன்றே வேறொரு பக்கத்தில்; இலங்கை விவகாரத்தை எழுதி வந்திருக்கின்றார். அன்னாரின் சர்வதேச அரசியல் விவகாரங்கள் பற்றிய கட்டுரைகள் தொகுக்கப்பட்டு ‘சர்வதேச அரசியல் நிகழ்வுகள் பற்றி 1979-1982’(வெளியீடு: புதிய ப+மி வெளியீட்டகத்துடன் இணைந்து சவுத் ஏசியன் புக்ஸ்) வெளிவந்தது. இதுபோன்று இலங்கை அரசியல் விவகாரங்கள் பற்றிய கட்டுரைகள் தொகுக்கப்படாமை துரதிஸ்டமானதொன்றே. இன்று அன்னாரின் சர்வதேச விவகாரங்கள் பற்றி அறிய முடிந்நதளவிற்கு உள் விவகாரங்கள் பற்றி அறிய முடியாதுள்ளது. குறிப்பாக அவரது தமிழத்; தேசியம் பற்றிய பார்வையை அறிய முடியாத நிலையில் கைலாசபதி முற்று முழுதாக தமிழத்; தேசியத்தை நிராகரித்தார் என்ற தவறான நிலைப்பாடு தொடர்வதற்கான சூழலை ஏற்படுத்தியுள்ளது. எனவே அக்கட்டுரைகள் யாவும் தொகுக்கப்பட்டு வெளி வர வேண்டியது காலத்தின் தேவையாகும். அவை வெளிவராத வரையில் இது தொடர்பிலான மயக்க நிலை நீடிக்கவே செய்யும். அத் தொகுப்பு முயற்சி கைலாசபதியை மதிப்பிடுவதற்காக மட்டுமன்று, தமிழ் தேசியத்தின் இரு வழிப்பாதைகள் இடையான மோதுகையின் தோற்றமும், எழுச்சியும்- வீழ்ச்சியும் பற்றி அறிந்து கொள்ளவும் அது அவசியமாகும்.   

 இக்கட்டுரையில் கவனத்தில் கொள்ளப்படும் கட்டுரைகள் எவையும் 1979-1982 காலப்பகுதியில் செம்பதாகையில் வந்தவையாகும்.றெட்பனரில் வெளிவந்த கட்டுரைகள் யாவும் எனது பார்வைக்குக் கிடைக்காமையால் அவைப்பற்றி எவ்வித கருத்தும் கூற முடியாதுள்ளது. இனிவரும் காலங்களில் அவை தொடர்பிலும் கவனம் செலுத்துவதன் மூலம் இத்துறையில் காத்திரமான ஆய்வுகளை வெளிக் கொணர முடியும் என்பதையும் இவ்விடத்தில் எடுத்துக் கூறுவது அவசியமாகும்.

இலங்கையில் 1956 ஆம் ஆண்டு திரு. எஸ்.டபிள்ய+. ஆர்.டி. பண்டாரநாயக்கா தலைமையிலான மக்கள் ஐக்கிய முன்னணி தேர்தலிலே போட்டியிட்டு வெற்றிபெற்றதிலிருந்து தேசிய முதலாளித்துவம் இந்நாட்டில் நிலைகொள்ளத் தொடங்கியது. இவ்வம்சம் இலங்கை அரசியல் வரலாற்றில்  மிக முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்தியது. தேசிய முதலாளித்துவம் வரலாற்று அரங்கில் பிரவேசிக்கின்ற போது அது தன்னகத்தே சில முற்போக்கான பண்புகளைக் கொண்டிருக்கும் என்பதை வரலாறு புதிய படிப்பினையாக எமக்கு தந்துள்ளது. அந்நிய முதலீட்டின் பிடிப்பும் அதன் தாக்கமும் தமக்குப் பாதகமாக இருப்பதனைத் தேசிய முதலாளிகள் இனங்கண்டனர். இதற்குமாறாகத் தேசிய முதலாளித்துவம் தத்தமது நாட்டில் கைத்தொழில் துறையினையும் வர்த்தக அபிவிருத்தியினையும் மேற்கொண்டது. இது தமது நாட்டினை அபிவிருத்தி செய்வதாக அமைந்நிருந்தது. அதேசமயம் தமது நாட்டினைக் காலனித்துவ ஆட்சிக்குட்படுத்தி அதனூடாக நாட்டையும் நாட்டு மக்களையும் கொள்ளையடித்துக் கொண்டிருந்த குடியேற்ற ஆதிக்கத்திற்கு எதிராக இருந்த அதேசமயம் நவீன கொள்ளைக்காரர்களான ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும் அது செயற்பட்டமை அதன் பிரதானமான அம்சமாகும். இதன் தாக்கத்தை நாம் இலங்கையிலும் காணக்கூடிதாக இருந்தது. 

 இலங்கை அரசியல் வரலாற்றில் மக்கள் ஐக்கிய முன்னணி அரசாங்கம் தவிர்க்க முடியாத வகையில் முன்னணிக்கு வந்தபோது ஏகாதிபத்தியம் எனும் சர்வதேச முதலாளித்துவத்திற்கு எதிராகப் பேராட்டத்தை அது முன்னெடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. எனவே அவ்வரசாங்கம்; சர்வதேச முதலாளித்துவத்திற்கு எதிராக, அதற்கு எதிரான சகலரையும் அணிதிரட்டிக் கொண்டது. தொழிலாளர்கள் விவசாயிகள் மற்றும் மத்தியதர வர்க்கத்தினரையும் அவ்வியக்கம் தன்னுள் வரித்திருந்தது. இலங்கையில் மூன்று தசாப்த காலமாக இடதுசாரிகள் மேற்கொண்டிருந்த ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வும் இவ்வியக்கத்திற்கு மேலும் வலுவூட்டின. இந்தப் பின்னணியில் உருவானதே மக்கன் ஐக்கிய முன்னணிக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையிலான முரண்பாடாகும்.

 இந்நாட்டில், தேசிய முதலாளித்துவம் தமது இருப்பை நிலைநிறுத்திய பின் அது தமது அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யக் கூடிய வர்க்கநலன் காரணமாகச் சர்வதேச முதலாளித்துவத்துடன் கைகோர்த்துக் கொண்டது. மேலும் அது தொழிலாள வர்க்கத்தின் எழுச்சியையும் அதன் போர்க்குணத்தையும் கண்டு  அஞ்சியது. தேசிய முதலாளித்துவம் என்பது “வெகுசனங்கள் மாறுதல் விரும்பாது இருக்கும் பொழுது அவர்களின் மூடத்தனத்தைக் கண்டு முதலாளித்துவ வர்க்கம் கவலை கொள்கின்றது: அவர்கள் புரட்சிகர உணர்வு பெறுங் காலத்தில் அவர்களது நுண்ணறிவுத் திறனைக் கண்டு பேரச்சம் கொள்கின்றது”(காரல் மார்க்ஸ்). இந்தவகையில் இலங்கை அரசியல் வரலாற்றில் தேசிய முதலாளித்துவம் ஏற்படுத்திய தமது வர்க்க நலனை வெளிப்படுத்திய போது அது மக்கள் நலனிலிருந்து அந்நியப்பட்டதாக இருந்தது.


  மேலும், 1977 ஆம் ஆண்டு காலப்பகுதியில் முன்னர் பதவிலியிருந்த ஐக்கிய முன்னணி அரசு மேற் கொண்ட மக்கள் விரோதச் செயற்பாடுகளை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்திய ஜக்கிய தேசியக் கட்சி சுதேச விதேச பிற்போக்குச் சக்திகளின் ஆதரவுடன் ஆட்சி பீடமேறியது. இக்காலச் சூழலில் உலகமயப் பொருளாதாரத்தை அமுலாக்கம் செய்வதற்கான முயற்சிகள் மிகத் திட்டமிடப்பட்டவகையில் முன்னெடுக்கப்பட்டன. விவசாய நிலங்கள் கைவிடப்பட்டு சுதந்திர வர்த்தக வலயங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இம் முயற்சிகள் யாவும் வெளிநாட்டு, உள்நாட்டு உயர்வர்க்கத்தினரின் அபிலாஷைகளைப் ப+ர்த்தி செய்வதாக அமைந்திருந்தன. இவ்விடயம் தொடர்பில் கைலாசபதியின் பின்வரும் கூற்று அவதானத்திற்குரியது:

 “சுதந்திர வர்த்தக வலயம் ஒன்றை இந்நாட்டில் ஸ்தாபிப்பதற்காக- பெரும் முதலாளிகளைக் கைத்தூக்கி விடுவதற்காக சுதந்திர வர்த்தக வலயத்திற்கெனப் புறம்பான சட்டமே தயாரித்துத் தொழிலாளர்களின் உரிமைகளை நசுக்கி வருகின்ற இவர்( ஜனாதிபதி ஜே. ஆர். ஜயவர்தனா- கட்டுரையாசிரியர்) முதலாளித்துவத்தில் நம்பிக்கை இல்லை எனக் கூறுவது விந்தைக் குரியதொன்றாகும். ‘நாம் இனிமேல் எந்தவொரு கம்பனியையோ அல்லது ஸ்தாபனத்தையோ தேசியமயமாக்கப் போவதில்லை’ யென்றும் ஜனாதிபதி கூறியுள்ளார். இது உண்மையில் அவரதும் யூ. என். பி. யினதும் வெளிநாட்டு, உள்நாட்டு முதலாளித்துவ நண்பர்களை வாழ வைப்பதற்கேயாகும். மாறாக அவர் கூறும் தொழிலாள விவசாய நண்பர்களும் அல்ல. யூ. என். பி. கடந்த இரண்டரை வருடங்களுக்கு மேல் ஆட்சி செய்துள்ளது. இக்காலத்தில் யூ. என்.பி. யும் ஜனாதிபதியும் செய்த சகல வேலைகளும்- நடவடிக்கைகளும் முதலாளித்துவத்தில் நம்பிக்கை வைத்து முதலாளித்துவத்தையே வளர்த்துள்ளது. மாறாக இந்நாட்டில் தொழிலாள- விவசாயிகளை அடக்கி ஒடுக்கி வருகின்றது.”(சித்திரை-வைகாசி 1980) 

 முதலாளித்து அரசியல்வாதிகள், அதிகாரவர்க்கத்தினர் ஒரு வலைப்பின்னலாகத் தம்மைப் பலப்படுத்திக் கொண்டு  செயற்படுகின்றனர். இவர்களின் முயற்சிகள், செயற்பாடுகள் யாவும் அந்நிய முதலாளிக்ளுக்கான கொள்ளைக் காடாக நமது நாட்டைத் தாரை வார்த்துக் கொடுப்பதற்கானவையாகவே உள்ளன. அவர்களுடைய கவனத்தைப் பெறவும் அவர்களிடமிருந்து சலுகைகளைப் பெறவும் ஆளும் மேட்டுக் குடியினர் தன்மானமிழந்து, கூனிக் குறுகி அவர்கள் முன் நிற்கின்ற நிலைமையைக் கைலாசபதி சிறப்பாகவே அடையாளம் காட்டியுள்ளார். 

 பொதுத்துறை நிறுவனங்களை இல்லாதொழித்து தனியார் மயப்படுத்தல் யூ.என் பி. யின் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்றாகும் என்பதை யாவரும் நன்கு அறிவர். இதற்காக அவர்கள் பல்வேறுபட்ட மக்கள் விரோத தந்திரோhயங்களைக் கையாண்டுள்ளனர். அவற்றில் பிரதானமானது, பொதுத்துறை நிறுவனங்கள் பெரும் நட்டத்தில் செயற்படுகின்றன எனப் பொது மக்களிடத்தில் எடுத்துக் காட்டுவதற்காக அத்துறை சார்ந்த நிறுவனங்களில் ஊழல்களை அதிகரிக்கச் செய்தன. பின் தனியார் துறையின் சிறப்புகள் மக்கள் மத்தியில் பிரச்சாரப்படுத்தப்பட்டன. இவ்வாறாகப் பொதுத்துறை நிறுவனங்கள் பற்றிய அவ நம்பிக்கையை ஏற்படுத்திய பின்னர் தனியார்மயமாக்கத்தை மேற்கொண்டனர். அன்றைய சூழலில் இலங்கையில் ஜே. ஆர். ஆட்சி தனியார் துறையின் சொர்க்கமாக விளங்கிய அமெரிக்காவையும் விஞ்சி தனியார் துறை நிறுவனங்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்ற வெறியில் செயற்பட்ட நிலையினை கைலாசபதி இவ்வகையில் வெளிப்படுத்தியிருந்தார்: 

“இதற்கு(தனியார் மயத்திற்கு-கட்டுரையாசிரியர்) ஆயத்தம் செய்வது போல இ.போ.ச.வை தனியார் நிறுவனமாக்க முயற்சிகள் எடுக்கப்படுகின்றனவாம். இ.போ.ச. நட்டத்தில் இயங்குகின்றது என்ற கோஷத்தை முன் வைத்து தனிப்பட்டவர்கள் அதனை வாங்கி அல்லது பொறுப்பேற்று நடாத்த விட அரசாங்கம் யோசித்து வருகின்றது. ஏற்கனவே இ.போ.ச. வில் உள்ள சிலரக ஊழியர்களுக்கு அனுப்பட்டிருக்கும் கடிதத்தில் வேறு நிறுவனங்களுக்கு வேலை மாறிச் செல்லும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றதாம்.

தனியார் பஸ்களையும் வான்களையும் வரையறையின்றி ஓட அனுமதித்த வேளையிலேயே இ.போ.ச. வருமானத்தை இழக்க நேரிடும் என்பது அரசாங்கத்திற்கு தெரிந்ததுதானே. தனியார் துறையினர் கொள்ளை இலாபம் சம்பாதிக்கும் பொழுது இ.பொ.ச. நட்டத்தில் ஓடுகின்றது என்ற காரணத்தைக் காட்டி அதனையும் தனியார் நிறுவனமாக்கத் திட்டமிடுகின்றது அரசாங்கம். முதலாளித்துவ அமைப்பை உறுதிப்படுத்துவதுடன் தொழிலாளர்களை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதற்கும் இம்முறை வசதியாயிருக்கும் என்று அரசாங்கம் கருதுகின்றது. இதில் விசேடம் என்னவென்றால் உள்@ர் முதலாளிகளிலும் பார்;க்க அந்நிய மூலதனக்காரரே இது விடயத்தில் அதிக அக்கறை காட்டி வருகின்றார்கள். யப்பானிய நிறுவனம் ஒன்று இலங்கையின் போக்குவரத்துச் சேவைகளைப் பொறுப்பேற்று நடாத்த முன்வந்திருப்பதாக வதந்திகள் அடிபடுகின்றன. யப்பானியக் கம்பனி இவ்வாறு முன்வருவது இலங்கை மக்களுக்கு நல்ல போக்குவரத்துச் சேவையை வழங்க வேண்டும் என்ற கருணையுணர்ச்சியினால் அல்ல. யப்பானிய பஸ்களையும் ஏற்றுமதி செய்து கோடிக் கணக்கில் சம்பாதிக்கலாம் என்பதனாலேயே”(1980 ஐப்பசி).

இவ்வாறாக இலங்கையில் தனியார் மயமாக்கத்தின்; பின்னணி அதன் நோக்கம் என்பனவற்றைச் சிறப்பாக எடுத்துக் காட்டிய கைலாசபதி, பொது மக்களின் போக்குவரத்துச் சேவைகளை மாத்திரமன்றி, அவை எவ்வாறு சில்லறை முதலாளிகளைக் கட்டுப்படுத்தும் என்பதையும் வெளிப்படுத்தத் தவறவில்லை. இவ்வாறான சந்தர்ப்பத்தில் யப்பானிய எஜமான்களின் கட்டளையை தலைமேல் தூக்கி வைத்துக் கொண்டு நடக்கும் மேல் மட்ட அதிகார வர்க்கத்தினர் மீதும் இவை எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையும் அதே கட்டுரையில் சுட்டிக் காட்டியுள்ளமை சிறப்பானதொரு அம்சமாகும்.  

அந்நிய மூலதனத்தின் பெரும் தாக்குதல் காரணமாகப் பொது மக்கள் பெரும் தாக்குதல்களை எதிர்நோக்கி வருகின்றனர். இத்தாக்குதல்களில் ஒன்று தான் இந்நாட்டின் இராணுவத் துறைக்கான முதலீடாகும். மக்களுக்கு விரோதமான புதிய புதிய சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அவை அந்நிய நாட்டுக் கம்பெனிகளுக்குப் ப+ரண திருப்தியளிப்பனவாக அமைந்திருந்ததுடன் தொழிலாளவர்க்கத்தின் மீது கடும் தாக்குதல்களையும் நடத்தி வந்துள்ளன. அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்;தனா அரசாங்கம் இராணுவத்தையும் பொலிஸையும் தமது கையில் வைத்திருக்கும் முகமாக சம்பள உயர்வு, உத்தியோக உயர்வு, இன்னும் பிற சலுகைகளை இராணுவத்தையும் பொலிஸையும் மையமாக வைத்தே மேற்கொண்டுள்ள அம்சங்கள் இவற்றிற்குத் தக்க எடுத்துக்காட்டுகளாகும். இது குறித்து கைலாசபதி“ பாசிசப் பிசாசின் முழுமைத்தோற்றம்” என்ற கட்டுரையில் மிகத் தெளிவாக அம்பலப்படுத்தியுள்ளார். மேலும் பாசிசத்தின் பரிணாமம் பற்றியும் தமிழ்க் காவலர்களின் சந்தாப்;பபவாத அரசியல் பற்றியும் அவர் சுட்டிக்காட்டத் தவறவில்லை. 
       
“பாசிசத்தின் முக்கியமான சில பண்புகள் பின்வருமாறு: மக்களைப் பிரதநிதித்துவப்படுத்துவதாகக் கூறிக் கொண்டு மக்களின் உரிமைகள் பலவற்றைப் பறித்தல்; எதிர்க்கருத்துள்ளவர்களை அடக்கி ஒடுக்குதல்; பொலிஸ்-இராணுவம் இரகசிய சேவைகள் ஆகியவற்றை தமது அதிகாரத்திற்கும், செல்வாக்கிற்கும் பயன்படுத்தல்; அப்பட்டமான பொய்ப் பிரச்சாரங்களில் ஈடுபடுதல்; வரலாற்றை வேண்டியபடி திரித்தல்; போலிக் கலாசார வைபவங்களிலும் கொண்டாட்டங்களிலும் மக்களின் கவனத்தைத் திருப்பி விட முயல்தல்; முதலாளித்துவச் சுரண்டல் முறையைப் பாதுகாத்து அதற்கு உத்தரவாதம் அளித்தல். ஹிட்லர் முதல் தென்கொரிய சர்வாதிகாரி கிம்டாய் யுங் வரையில் இந்தப் பண்புகளைக் கொண்டவர்களாய் இருக்கக் காண்கின்றோம். யூ.என்.பி. யும் தமிழர் வியாபாரக் கூட்டணியும் இப்பண்புகளை வெட்கமும் தயக்கமும் இன்றி வெளிப்படையாகவே காட்டிக் கொள்வதைக் காண்கின்றோம். அமிர்தலிங்கம் தனது பிறந்த தின களியாட்ட விழாவையே பலத்த பொலிஸ் பந்தோபஸ்துடன் நடாத்தியது இதனைத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது. சர்வதிகாரிகள் நடந்து கொள்வதைப் போல மெய்க் காப்பாளர்களுடனேயே இப்பொழுது அமிர் பிரயாணம் செய்வதாகக் கூறப்படுகின்றது”( ஐப்பசி-1980).

உலகமயம் மூன்றாம் உலக நாடுகளை அடிமைப்படுத்துவதற்காக அது மேற் கொள்கின்ற தந்திரோபாயங்களில் ஒன்றுதான் அந்நியப் பொருளுதவியாகும். அதனை இரண்டு விதங்களில் சாதிக்கின்றன.  ஓன்று, அதிகார சக்திகள் தமது இருப்பையும் அது சார்ந்த நிறுவனங்களையும் பாதுகாப்பதற்காகப் பொருளுதவி என்ற பெயரில் அந்நாடுகளில் நுழைகின்றன. அவ்வாறு நுழைந்த பின்னர் அவர்கள் அந்நாடுகளைத் தமது கட்டுப்பாட்டிற்குள் வைத்து மக்களைச் சுரண்டுவதற்கும் அவர்களைத் தமது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதற்காகவும் அந்நாடுகளில்  இனம், மதம், மொழி, சாதி சார்ந்த முரண்பாடுகளையும் மோதல்களையும் தோற்றுவிக்கின்றனர். இதற்கான பணத்தைத் தாம் கொள்ளையடித்த பணத்திலிருந்தே செலவு செய்கின்றனர். இன்னொன்று, கல்வி, சுகாதார மற்றும் சமூக அபிவிருத்தி என்ற பெயரில் ஏகாதிபத்திய நாடுகளினால் வழங்கப்படுகின்ற கடன்கள்-பண உதவிகள், சரியாக சொல்லப் போனால் அப்பணம் வெகு விரைவாகக் கடன் கொடுத்த நாடுகளுக்கே திரும்பிச் சென்று விடுகின்றது. அந்நிய மூலதனக்காரர்கள் எவ்வித வரியும் செலுத்தாமல் கொள்ளை இலாபம் சம்பாதிப்பதால் வெளியேறும் மூலதனத்தைப் போலவே அந்நிய உதவியும் உடனே அந்நாடுகளுக்குத் திரும்பி விடுகின்றன. “அந்நிய நிபுணருக்கு 60 ஆயிரம் சம்பளம்- இதுதான் அபிவிருத்தி” என்ற கட்டுரையில் கைலாசபதி மகாவலி செயற்றிட்ட அமுலாக்கத்தில் அந்நிய பொறியியல் நிபுணர்களும் மற்றும் ஏனைய வெளிநாட்டு ஊழியர்களும் எத்தகைய ஊதியத்தைப் பெற்றார்கள் என்பதைத் தெளிவாக வெளிப்படுத்தியிருக்கின்றார். 

இவ்விடத்தில் முக்கியமாக வலியுறுத்திக் கூற வேண்டிய விடயம் யாதெனில், ஏகாதிபத்திய நாடுகள் தமது சுரண்டலுக்குச் சாதகமான கும்பலை உள்ளாட்டிலே உருவாக்கிக் கொள்கின்றது. அத்துடன் தாம் கடனாக வழங்கிய பணத்தை நிபுணர்களின் உதவி, பயிற்சி என்ற பெயரில் உடனே திருப்பி எடுத்துக் கொள்கின்றது. ஆனால் கடன் மட்டும் தொடந்து செலுத்தப்படாமல் இருக்கும். அக்கடனை அந்நாடுகள் திருப்பிச் செலுத்தாத வகையில் வைத்துக் கொள்வதற்காக விஷேட பயிற்சியளிக்கப்பட்ட பொருளாதார அடியாட்கள் ஏகாதிபத்திய நாடுகளினால் நியமிக்கப்படுகின்றனர். ஏகாதிபத்திய நாடுகள் இக்கடன் தொகையைக் காரணம் காட்டி தொடர்ந்தும் மூன்றாம் உலக நாடுகளை தமது ஆதிக்கத்தில் வைத்திருக்கின்றனர். அந்த வகையில் மூன்றாம் உலக நாடுகளை ஆளுவது பாராளுமன்றம் அல்ல் ஏகாதிபத்தியவாதிகளே என்பதை கைலாசபதி சிறப்பாகவே உணர்த்தியிருக்கின்றார்.

மேலும், ஏகாதிபத்திய நாடுகளின் ஆதிக்கத்தை தொடர்ந்து இந்நாட்டில் நிலை நிறுத்தி வைப்பது தொடர்பில் உள்நாட்டுத் தரகர்களுக்கான சலுகைகள் வெளிநாட்டு புலமைப் பரிசில்களை எதற்காக வழங்குகின்றார்கள் என்பதையும் கைலாசபதி அம்பலப்படுத்தத் தவறவில்லை. இது தொடர்பில் அவரது பின்வரும் கருத்து கவனத்தில் கொள்ளத்தக்கது:

“கடந்த மாத முற்பகுதியில் அமெரிக்க குடியரசுக் கட்சி செனட்டர் பெரிய கோல்ட்வாட்டர் தாய்வானுக்கு விஜயம் செய்தார். தாய்வான் வர்த்தக சம்மேளனத்தின் அழைப்பின் பேரில், குடும்பத்துடன் விடுமுறையைக் கழிப்பதற்கு அழைக்கப்பட்டிருந்த கோல்ட்வாட்டர் அங்கு சீனாவிற்கு எதிரான பேச்சுகளிலும் சூழ்ச்சிகளிலும் ஈடுப்பட்டது மட்டுமன்றி, தாய்வானே ‘சுதந்திர சீனா’என்றும் வருணித்தார். உலகின் பெரும் பகுதி மக்களும், அமெரிக்க மக்களில் கணிசமான பகுதியினரும் இன்று மக்கள் சீனத்தின் ஒருமைப்பாட்டை ஆதரிக்கையில், கோல்ட்வாட்டர் போன்ற சில கம்ய+னிச விரோதிகள் கன்னா பின்னா என்று விமர்சிப்பதை வியாதியாய்க் கொண்டிருக்கின்றார்கள். இது உலக ரீதியான உண்மை. கம்ய+னிச விரோதிகளுக்கும் அதிதீவிர வலதுசாரிகளுக்கும் இக்காலத்தில் தாய்வான் தகுந்த பயிற்சிக் களமாகவும் சூழ்ச்சிக்களமாகவும் இருந்து வருவதை யாவரும் அறிவர்.

“யூலைமாத முற்பகுதியில் அமெரிக்காவில் இடம்பெற இருக்கும் மற்றொரு தமாஷாவிற்குச் சென்றுள்ள தளபதி அமிர்தலிங்கத்தார், சென்ற வருடம் தாய்வான் போய்வந்தது பலருக்கு நினைவிருக்கலாம். தம்பதி சமேதரராய் தாய்வான் தீவில் விடுமுறையைக் கழித்துவிட்டுத் திரும்பிய அமிர்தலிங்கத்தார் திடீரென சற்று ஓங்கிய குரலில் சில விஷயங்களை ஒலிக்கத் துவங்கியதும் பலருக்கு நினைவில் இருக்கத்தான் செய்யும். இரு அம்சங்கள் கூர்மையாகத் தென்படலாயின. மூர்க்கத்தனமாக- பாமரத்தனமாக- தமிழர் மத்தியிலும், நாட்டிலும் உள்ள இடதுசாரி சக்திகள் மீதும் குறிப்பாக தேசபக்த சக்திகள் மீதும் அவர் கணைகள் தொடுக்க ஆரம்பித்தார். அது ஒரு அம்சம். கூடுதலாக- வெளிப்படையாகவே- முன்னெப்போதும் இருந்ததைவிட அமெரிக்கச் சார்பை அவர் பல நடவடிக்கைகளிலும் தெரியப்படுத்திக் கொண்டார். இது இரண்டாவது அம்சம்.”

மேற்குறித்த வெளிநாட்டுப் பிரயாணங்கள் மூலமாக ஏகாதிபத்திய சார்பும் முற்போக்கு மார்க்சிய விரோத பிரச்சாரங்களும் முன்னொடுக்கப்படுகின்றன என்பதை இவ்வரிகள் சிறப்பாகவே தெளிவுபடுத்துகின்றன. அமிர்தலிங்கம் போன்ற பிற்போக்குச் சக்திகள் தமது ஏகாதிபத்திய சார்பினை பல்கலைக்கழககாலம் முதலாகவே வெளிப்படுத்தி  வந்திருப்பினும்- அதுவே அவரின் அரசியல் வாழ்க்கைக்கு ஆதாரமாக இருந்து வந்திருப்பினும் இத்தகைய வெளிநாட்டுப் பயணங்கள் அத்தகைய வர்க்கச்சார்பை எவ்வாறு வளர்த்தெடுக்கின்றன என்பதைத் தெளிபடுத்தும் கைலாசபதி ஹிட்லர், முசோலினி முதற் கொண்டு அமிதலிங்கம் போன்ற சில்லறைச் சர்வாதிகாரிகளும்- ஜனாதிபதி தாஸர்களும் வரலாற்றில் மக்களால் எவ்வாறு தூக்யெறியப்படுவார்கள் என்பதையும் அதே கட்டுரையில் சுட்டிக்காட்டியுள்ளார். 


இந்தப்பி;ன்னணியில் அத்தகைய அரசியல் போக்குகளின் விளைபொருளே தமிழத்; தேசிய போராட்டமாகும். தமிழ்த் தேசியவாதப் போராட்டத்திற்கான முக்கிய காரணியாக அமைந்தது இலங்கை அரசால் 1970களில் கொண்டு வரப்பட்ட தரப்படுத்தல் முறையாகும். கல்வியின் மீதான  ஆர்வமும், அதனூடான சமூகப்பெயர்ச்சியில் நம்பிக்கையும் கொண்டிருந்த யாழ்பாண இளைஞர்களின் பல்கலைக்கழக அனுமதியை தரப்படுத்தல் முறை வெகுவாகப் பாதித்தது. அத்துடன் இனவாத அடிப்படையில் காலங்காலமாக மேற்கொள்ளப்பட்டு வந்த அடக்கு முறைகள், யாழ். நூல எரிப்பு, இன்னும் இது போன்ற அம்சங்கள், இந்நாட்டில் வாழ்ந்த தமிழர் சமூகத்தை வெகுவாக பாதித்திருந்தது. இப்பின்னணியில் தீயாய், கனலாய் மூண்ட உணர்வின் வெளிப்பாடே தமிழ்த் தேசிய இயக்கங்களாகும். இவ்வுணர்வை தமிழ் முதலாளித்துவ சக்திகள் தமது வர்க்க நலனுக்காக தமிழ் இனவாதத்தினுள் அமிழ்த்திச் சென்றனர். 1960களில் தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்கம் ஏற்படுத்தியிருந்த போராட்ட உணர்வுகளை இச் சக்திகள் குறுகிய தமிழ்த் தேசிவாத அரசியலுக்குப் பயன்படுத்திக் கொண்டன. இடதுசாரிகள் அன்று சிங்கள மக்களுடன் ஐக்கியப்படுதல் என்பதன் அடுத்த பக்கமாகச் சிங்களப் பேரினவாதத்திற்கு எதிராகப் போராடுதல் என்ற அம்சத்தினையும் கவனத்தில் கொண்டு தமது போராட்டங்களை முன்னெடுத்திருப்பார்களாயின் தமிழ் ஜனநாயக சக்தியின் ஒரு பகுதியினரை வென்றெடுத்திருக்க முடியும். 

இவ்விடத்தில் பிறிதொரு விடயத்தினையும் சற்று அழுத்திக் கூற வேண்டியுள்ளது. அதாவது அன்றைய காலச் சூழலில் இடதுசாரிகள்  தமிழ் தேசியம் குறித்த தெளிவான பார்வையைக் கொண்டிருக்கவில்லை என்கின்ற அதே நேரத்தில் தமிழத்; தேசியவாதப் போராட்டத்தின் சிதைவிற்கு, அதன் பிழையான பக்கத்திற்குக் காரணமாக அமைந்தவர்கள் அமிர்தலிங்கம் போன்ற பிற்போக்குத் தலைமைகளே என்பதை வரலாறு எண்பித்திருக்கின்றது என்பதும் இலகவில் மறந்தவிடத்தக்க ஒன்றல்ல. 

இந்தப் பின்னணியில் மூண்ட இளைஞர்களின் கோபத்தைத் தமது அரசியலுக்குச் சார்பாகத் தமிழர் கூட்டணியினர்; பயன்படுத்திக் கொண்டனர். மறுபுறத்தில் இந்த இளைஞர்களின் கோப உணர்ச்சிக்கு அப்பால் தமது பாரளுமன்றப் பதவிகளையும் சலுகைகளையும் பாதுகாத்துக் கொள்வதிலும் மிகக் கவனமாக இருந்தனர். இந்தப் பின்னணியில், 1977 ஆம் ஆண்டுத் தேர்தலுக்கான செயற்பாடாக இனக்கலவரத்தைக் கட்டவிழ்த்துவிட்ட வேளையில் அதன் அதிர்வு உலகின் கவனத்தை ஈர்ப்பதாக அமைந்தது. அன்றைய சூழலில் தமிழ் ஈழம் கேட்ட தமிழத்; தலைவர்களைப் பேட்டி காணுவதற்காக இலங்கை வந்த பத்திரிகை நிருபர் கொழும்பில் கொள்ளுப்பிட்டியிலுள்ள பிரபலமான ஹோட்டல் ஒன்றில் அமிர்தலிங்கத்தாரைப் பேட்டி எடுத்துள்ளார். அதனை விசித்திரமான பேட்டி என்றும் தமது பத்திரிகையில் விவரித்திருக்கின்றார். இது பற்றிக் கைலாசபதியின் பின்வரும் வரிகள் நமது கவனத்தை ஈர்க்கின்றன:

“உண்மையான போராட்டத்தை அறியாத பத்திரிகை அறிக்கை தள(ர்)பதிகளையும், செயலாளர் நாயகங்களையும், காரிலும் ஜீப்பிலும் ஓடித்திரியும் மாண்புமிகு எதிர்க் கட்சித் தலைவர்களையும் ஹோட்டல்களில் குஷியான சூழ்நிலைகளில் பேட்டிக்காணாமல் வேறெங்குதான் பேட்டி காண முடியும்? 

“விடுதலைக்காகப் போராடும் உண்மையான தலைவர்களுக்கு,  போராளிகளுக்குப் பிரயாணம் செய்வதே கஷ்டமான காரியம். சில நாடுகளுக்கு அவர்கள் விஸா பெறுவதே வில்லங்கமானதாயிருக்கும். ஆனால் தமிழீழ தள(ர்)பதிக்கோ எதிhக்;கட்சித் தலைவர் என்ற முறையில் எங்கும் இராஜாங்க சலுகை; சுங்கப்பகுதிகூட சோதனைப்போடுவதில்லை. உலகில் பலருக்கு இதனைப் புரிந்து கொள்வது கஷ்டமாயிருக்கும். அரசாங்கமே தமது அமைச்சர் ஒருவரை ‘எதிhக்; கட்சித் தலைவராக’ ஆக்கி வைத்தது போல இருக்கிறது. அமிர்தலிங்கம் எதிhக்; கட்சித் தலைவராகவும், தமிழீழத் தலைவராகவும் இருப்பது இரண்டில் ஒன்று தான் உண்மையாக இருக்க முடியும்! சினிமா நட்சத்திரங்கள் போல ஊருக்கு ஊர், இடத்திற்கு இடம் உடைகளை மாற்றிக் கொண்டு, உலகம் சுற்றும் போது (இயக்கத்திற்கு பிறர் வழங்கிய நிதியில்) ‘அசல்’ எதிர்க்; கட்சி தலைவராகவும், ஆளும் வர்க்கத்தில் ஒருவராகவுமே அமிர்தலிங்கம் தோற்றமளிப்பதாக உலகின் பல பகுதிகளில் அனுபவமிக்க அவதானிகளும் அரசியல் நிருபர்களும் குறிப்பிட்டிருக்கின்றனர்”(1981 ஆவணி).

அமெரிக்காவில் வாஷிங்டனில் உலக வங்கியாளர்களிடமும் அது சாந்த நிறுவனங்களுடனும் பேரம் பேசுகின்ற போது இலங்கையில் தோன்றியுள்ள ஏகாதிபத்தியச் சார்பு அரசாங்கத்திற்கான விசுவாசியான தமிழ்த் தலைவர்கள் இலங்கையிலும்- யாழ்ப்பாணத்திலும்- தமிழ்நாட்டுப் பத்திரிகைகளுக்கான பேட்டியின் போதும் தமிழக்; காவலர்களாக இரட்டை வேடம் அளித்திருந்தனர் என்பதை மேற்குறித்த பந்தி வெளிப்படுத்தியிருக்கின்றது. இவ் வேடமாற்றங்கள் தனிநபர்களைப் பாதிப்பதாக அல்லாமல் ஒரு இனத்தையே அழிப்பதாக அமைந்திருந்தமை நாம் கவனத்திலெடுக்க வேண்டிய அம்சமாகும்.            

இவ்வகையில் நோக்குகின்ற போது, தமிழர் கூட்டணியானது தமக்குப் போட்டியாகவும் தமது ஊழல்களை மக்கள் மத்தியில் பரப்பக் கூடிய சக்தியாகவும் இருந்த முற்போக்கு சக்திகளையும் தேசிய முதலாளித்துவ சக்திகளையும் மொழியையும் இனவொடுக்குதலையும் கேடயமாகக் கொண்டு இலங்கையின் அரசியல் அரங்கிலிருந்து அப்புறப்படுத்த முயன்றனர். அதில் ஒரளவு வெற்றியும் கண்டனர் என்றே கூறவேண்டும். அமெரிக்க ஏகாதிபத்தியம் தமது அரசியலை இருப்பை இலங்கையில் நிலைநிறுத்துவதற்கு ஜே.ஆர். அரசாங்கத்தை பயன்படுத்திக் கொண்டது போன்று தமிழர் மத்தியில் எழக் கூடிய போராட்டங்களைத் திசைதிருப்பி மக்களை அமைதிப்படுத்துவதற்கு தமிழ்த் தளபதியார் அமிர்தலிங்கத்தைப் பயன்படுத்திக்கொண்டது. ஜே.ஆரும் அமிர்தலிங்கத்தாரும் அடிப்படையில் கம்ய+னிச விரோதி- பொதுவுடமைத் துரோகி- என்பதை நன்கு அறிந்திருந்த அமெரிக்கா ய+.என.பி. காலத்தில் பிரச்சனையை பிரதேசமயப்படுத்திப் பாராளுமன்ற மாயை விஸ்தரித்து சிங்கள தமிழ் மக்களை ஏமாற்ற மட்டுமன்று அவர்களை ஓட்டாண்டியாக நடுரோட்டில் நிறுத்துவதற்கும் பயன்படுத்திக் கொண்டது என்பதைக் கைலாசபதி “தமிழர் விடுதலைக் கூட்டணி ஒரு விடுதலை இயக்கமா? அமிர்தலிங்கம் விடுதலை இயக்கத்தின் தலைவரா?” என்ற தலைப்பிலான கட்டுரையில் சிறப்பாகத் தெளிவுபடுத்தியிருக்கின்றார். மேலும் அதே கட்டுரையில் முன்னர் ஆட்சியிருந்த சுதந்திரக் கட்சியின் மக்கள் சார்பான பக்கத்தைச் சிதைக்கும் வகையிலும் குறிப்பாக தமிழ் மக்களை நசுக்கும் ய+.என்.பி. அரசாங்கத்தை அபிவிருத்தியின் பேரில் அரவனைத்து தமது வர்க்க சமரசத்தைத் தமிழர் கூட்டணியினர் செய்து வருகின்றனர் என்பதையும் அவர் விளக்கியிருக்கின்றார். 

இத்தகைய அரசியல் போக்குகள் ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவாக தமிழ் இளைஞர்கள் மத்தியில் அவர்களின் அரசியல் சார்ந்த இயக்கங்கள் தோற்றம் பெறலாயின. அவ்வியக்கங்கள் பிரதானமாக இரு நிலைப்பட்ட அரசியல் தளங்களை வெளிப்படுத்தி நின்றன. வரலாற்றிலிருந்தும் மக்களிலிருந்தும் தம்மை அந்நியப்படுத்திய அரசியல் போக்கானது  குறுந் தமிழ் தேசியமாக அமைந்தது அதன் முதலாவது போக்காகும். மறுபுறத்தில் தமிழ் மக்களின் பிரச்சனைகளை இனவாதத்திற்குள் அமிழ்த்திச் செல்லாது சிங்கள பேரினவாதத்திற்கு எதிரான அரசியலை நிலைநிறுத்தியது அதன் இரண்டாவது அரசியல் போக்காகும். காலப்போக்கிலே இவ்வியக்கங்களானது சிதைந்து சின்னாபின்னமாகியிருப்பினும் குறைந்தபட்சம் மக்களிடம் செல்ல வேண்டும் என்ற உணர்வு இவர்களிடத்தில் முனைப்புற்றிருந்தது முற்போக்கான அம்சமாகும்.  கைலாசபதி இந்த இரண்டாவது போக்கை ஆதரித்திருந்தார் என்பதை அவரது செம்பதாகை எழுத்துக்களின் ஊடாக அறிய முடிகின்றது.        

 மேலும், இலங்கை அரசியல் வரலாற்றில் இடதுசாரி அடையாளங்களுடன் தம்மை அடையாளப்படுத்திக் கொண்டவர்கள் சிலர் மக்கள் மத்தியில் செல்வாக்கைப் பெறுவதற்கும் தமது அந்தஸ்தை உயர்த்திக் கொள்வதற்கும் அத்தத்துவத்தைப் பயன்படுத்திக்கொண்டனர்;. தமது சமூக அந்தஸ்தை உயர்த்திக் கொண்ட பின்னர்; பிற்போக்கான வியாபார நோக்கங்களுடன் தம்மை இணைத்துக் கொண்டது மட்டுமன்று ஒரு காலத்தில் தாங்கள் எந்த வர்க்கத்திற்கெதிராகப் போராடினார்களோ அந்த வர்க்கத்தினருடன் சமரசம் செய்து கொண்டு கூடிக் குலாவுவது மாத்திரமன்று, அந்த வர்க்கத்தினருக்குச் சாமரை வீசி சேவகம் செய்து வந்துள்ளதையும் நாம் இலங்கை இடதுசாரி வரலாற்றில் காணக்கூடியதாக உள்ளது. இத்தகைய சிதைவுகள் குறித்து கைலாசபதி எழுதிய கட்டுரையில் கூறுகின்ற பின்வரும் வரிகள் முக்கியமானவை:

  “இந்த நாட்டில் தொழிலாளர் இயக்கமும் மார்க்சிய இயக்கமும் முளைவிடத் தொடங்கிய காலம் முதல் ரொட்சியவாதம் உடன்பிறந்தே கொல்லும் வியாதிபோல் இடதுசாரி இயக்கத்தின் ஏகோபித்த வளர்ச்சிக்கும் ஒற்றுமைக்கும் குந்தகம் ஏற்படுத்திக் கொண்டே வந்திருக்கின்றது. ரொட்சியவாதத்தை அதன் பிறப்பிலேயே நன்கு அறிந்த ஸ்டாலின் அது இடதுசாரி இயக்கத்திற்குள் ஊடுருவியுள்ள முதலாளித்துவக் கண்ணோட்டத்தின் வெளிப்பாடு என்று சரியாகக் குறிப்பிட்டார். பிலிப் குணவர்த்தனா முதல் கொல்வின் ஆர். டி. சில்வா வரை ரொட்சிசவாதிகள் இலங்கையில் நமக்குக் காட்டி வந்து நிற்கும் ‘சாதனை’ என்ன? பேச்சில் அதிதீவிரவாதமும் நடைமுறையில் படுமோசமான சரணாகதியுமாகும்”(1982). 

 இவ்வகையில் இலங்கை இடதுசாரி வரலாற்றில் நவீன திரிபுவாதமாக அமைந்த ரொட்;ஸ்கிய வாதத்தின் பாராளுமன்ற சந்தர்ப்பவாதம் குறித்தும் அதன் வர்க்கத்தன்மை, விளைவுகள் குறித்தும் கைலாசபதி சுட்டிக்காட்டத் தவறவில்லை.

 இன்று தமிழ் மக்கள் மத்தியிலே போர்காலச் சூழலில் இலைமறைகாயாக மறைந்திருந்த சாதிய உணர்வு என்பது பல வடிவங்களில் முனைப்படைந்து வருகின்றன. மறுபுறத்தில் இனவாதமும் பௌத்த மேலாதிக்கவாதமும் பல முனைகளில் வளர்த்தெடுக்கப்படுகின்றன. அந்தவகையில், இன்றைய சூழலில் தமிழர்களின் வாழ்வு என்பது பல்வேறுபட்ட முரண்பாடுகளுக்கும் நம்பிக்கையீனத்திற்குள்ளும் சுழன்று கொண்டிருக்கின்றது. இந்தச் சந்தர்ப்பத்தில் தமிழ்த் தேசியத்தின் தவறை இயக்கச் செல்நெறியில் ஏற்பட்ட விமர்சன ரீதியாக அணுகி, அதன் சாதக, பாதகங்கள் குறித்து தெளிவான, தீட்சண்யமான பார்வையை வளர்த்துக் கொள்ள வேண்டியது காலத்தின் தேவையாகும். வரலாற்றிலிருந்து கற்றுக் கொண்டு முன்னேற முடியும் என்ற வகையில் தமிழ்த் தேசியத்திற்கு நிகழ்ந்தது என்ன என்பதை நேர்மையோடு கற்க முனைகின்ற போது கைலாசபதியின் இலங்கையின் அரசியல் நிகழ்வுகள் பற்றிய  எழுத்துக்கள் முக்கியத்துவம் மிக்கவையாகத் திகழ்கின்றன. 

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates