பாரம்பரியக் கலைகள் சடங்குகள் சடங்குசார் கலைகள் என்பவை மக்களை நிகழ்காலத்தில் ஒன்றிணைப்பவை ஆகவும் கடந்தகாலங்களை மீட்டுவருபவைஆகவும் மக்கள் எதிர்காலத்தை எதிர்கொள்ளத்தக்கவகையிலுமே வடிவமைக்கப்பட்டு இயங்கிவருவதை அவதானிக்கமுடியும்.
பாரம்பரியக் கலைகளை சடங்குகளைப் புரிந்துகொள்ளும் ஒருவர் அது எந்தளவிற்கு மனிதர்களுக்கு நெருக்கமானதாகவும் சூழலுடன் இணைந்ததாகவும் இருந்துவருவதையும் அது இயங்கிவரும் முறையினையும் கண்டுகொள்ளமுடியும்.
ஆனால் காலனித்துவம் கட்டமைத்த நவீன அறிவு இவற்றை மூடநம்பிக்கையென நம்பவும் நாகரிகமற்றவை என விலக்கவும் பார்க்கவும் வைத்திருக்கிறதே தவிர அவற்றின் இயல்புநிலைமு ழுமையையும் பார்ப்பதற்கும் புரிந்துகொள்வதற்கும் இடங்கொடுக்கவில்லை.
மாறாக காலனித்துவ நோக்குநிலைப்பட்ட கல்வி வழி நின்றுஅதற்குத் தகவடிவமைப்பதும் விளக்குவதும் வியாக்கியானிப்பதுமே நிகழ்ந்து வந்திருக்கின்றது. பாரம்பரியக் கலைவிழாக்கள் கருத்தரங்குகள் மாநாடுகள் இத்தன்மை கொண்டே நடத்தப்படுகின்றமை யதார்த்தமாகும்.
இந்தப் பின்னணியிலேயே பாரம்பரியக் கலைகள் சடங்குகள் என்பவற்றின் சமகாலச் சமூகப் பங்களிப்பையும் அவைசார்ந்து முன்னெடுக்கப்படவேண்டிய உரையாடல்களையும் செயற்பாடுகளையும் உள்ளூர் அறிவுத்திறன் செயற்பாடுகளுக்கான மூன்றாவதுகண் நண்பர்கள் குழு கடந்தபதினைந்து வருடங்களாக முன்னெடுத்து வருகின்றது.
இச் செயற்பாட்டுடன் மீரியபெத்தை தோட்ட மண்சரிவு ஏற்படுத்தியிருக்கின்ற மனித அவலத்துடன் தொடர்புபடுத்தி அம்மனிதர்களின் பண்பாட்டுவிழாவான பொன்னர் - சங்கர் அல்லதுஅண்ணன்மார் சடங்குவிழாபற்றியும் சிந்திக்கவேண்டி இருக்கின்றது.
வறுமையுடனெனினும் வாழ்ந்துவந்தமனிதர் கூட்டமொன்று மண்மூடிப் போக எஞ்சியவர்களின் வாழ்க்கைபற்றிய உணர்தலும் விளக்கமும் முக்கியமானதாகும். ஏனெனில் மண்சரிவு அனர்த்தத்தில் இருந்து தப்பிப்பிழைத்தவர்கள் மீளவும் இயல்புவாழ்க்கைக்கு வருவது முக்கியமானது.
அந்தவகையில் குடியேற்றப்பட்ட இடங்களில் அவர்களது சமூகமயப்பட்ட சடங்குகள் விழாக்கள் முன்னெடுக்கப்படுவதற்கான சூழ்நிலைகளை ஏற்படுத்துவது கவனத்திற்குரியதாகும். மீரியபெத்தைமக்களின் வாழ்வியல் அம்சமாக இருந்துவந்த பொன்னர் - சங்கர் அல்லது அண்ணன்மார் சடங்குவிழாவை மீளவும் உரியபருவத்தில் நிகழ்த்த முனைவது தேவையானதொருவிடயமாகும்.
இது புதிய இடத்தில் அவர்களை வேர்கொள்ளவும் ஒன்றிணையவும் வலுப்படுத்தவுமான வழிமுறையாகும். சமூகநிலைப்பட்ட நிலையில் பாதிப்புக்களிலிருந்து விடுவிக்கவும் புதியவாழ்க் கையை உருவாக்கவுமான சமூகப் பண்பாட்டு பொறிமுறையாக இச் செயற்பாடு அமையும்.
சமூகமயப்பட்ட அனர்த்தங்களுக்கு ஆளானவர்கள் தனியாள் உளவியல் சிகிச்சை அளிப்புக்களில் ஆற்றுப்படுத்துவதன் மட்டுப்பாடுகளை உளவியலாளர்களும் குறிப்பிடுகின்றனர். அவர்களுக்கு சமூகமயப்பட்ட சடங்குகள் விழாக்களின் பொருத்தப்பாட்டினைமு க்கியப்படுத்துகின்றனர்.
எனவே மீரிபெத்தையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களிலிருந்து பிழைத்துவந்த மக்கள் தழைத்தெழும்ப அவர்களது சமூகப் பண்பாட்டுவரலாற்று தொடர்ச்சியை முன்னெடுக்க பொன்னர் - சங்கர் அல்லது அண்ணன்மார் சடங்குவிழாவின் முன்னெடுப்பு பொருத்தமானதாக அமையும்.
அவர்கள் அவர்களுக்குரியவகையில் அவர்களை மீளவும் கட்டியெழுப்புவதற்கான அவர்களிடமுள்ள பண்பாட்டு பொறிமுறையை அவர்கள் கையாளுவதற்கான அக - புறச் சூழ்நிலைகளை உருவாக்குவதற்கான ஏற்பாடுகளே தேவையானதாகும்.
பொன்னர் -சங்கர் அல்லது அண்ணன்மார் சடங்குவிழா என்பது சொர்க்கம் நரகம் பற்றிப் போதிப்பதல்ல. அது ஒரு சமூகம் எதிர் கொண்ட சவால்களுக்கு முகம்கொடுத்து எவ்வாறு தனது இருப்பை பேணி வருகின்றது எவ்வாறு பேணிவர வேண்டும் என்ற செயல்முறை மூலமான படிப்பினையை வருடாவருடம் நினைவுறுத்துவதாகவே அமைந்து காணப்படுகிறது.
எனவே மீரியபெத்தை மக்களது மீள்குடியேற்றம் என்பது வெறுமனே புறக்கட்டுமானங்களால் அமைக்கப்படுவதல்ல. ஏலவே அல்லது பிறரால் தீர்மானிக்கப்பட்டதை அவர்களுக்கு வழங்குவதுமல்ல. அது அவர்களது தீர்மானங்களாக அமையும் வகையிலான சமூகப் பங்குபற்றலூடான முன்னெடுப்புக்களுடன் தொடர்புடையது.
தங்களுக்கு தாங்களே தீர்மானிக்கவும் சமூகப் பண்பாட்டுத் தொடர்ச்சியைப; பேணவும் பொன்னர் - சங்கர் சடங்குவிழாவின் நிகழ்த்துகை பற்றிய உரையாடல்களும் தயார்படுத்தல்களும் இன்றைய தேவையாக இருக்கின்றது.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...