ஜனரஞ்சகத் தலைவர் எனும் பேரோடும் புகழோடும் வலம் வந்தவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ. அவர் இப்போது எல்லாப் புகழையும் கிட்டத்தட்ட இழந்துவிட்டார் என்றே கூறவேண்டியுள்ளது.
தவறான அணுகுமுறைகள், தான்தோன்றித்தனமான முன்னெடுப்புகள் எதேச்சதிகாரமான போக்குகள், சர்வாதிகார தீர்மானங்கள் போன்ற காரணங்கள் இவ்வாறு அரசியல் தலைவர் ஒருவரின் பெயரையும் புகழையும் இழக்க செய்வதற்கு வலுவுடையவை எனலாம். இன்று மஹிந்த ராஜபக் ஷ எனும் நபர் நாட்டு மக்களால் குறிப்பாக தமிழ் பேசும் மக்களால் புறக்கணிக்கப்பட்டவராகிவிட்டார். தமிழ் பேசும் மக்களின் புறக்கணிப்புக்கு ஆளான ஒரே காரணத்தினாலேயே அவர் அந்தஸ்த்தை இழந்தார். பதவியிழந்தார். பரிவாரங்களை இழந்தார். இறுதியில் பல்வேறுபட்ட தோல்விகளையும் சந்தித்தார்.
இந் நாட்டின் ஆட்சியையும் அரசியல் தலைவர்களையும் அவர்களது தலைவிதிகளையும் தீர்மானிக்கின்ற சமூகமாகத்தான் தமிழ் பேசும் சமூகம் திகழ்ந்து வருகிறது. இது கசப்பாகவே இருந்தாலும் இன்றைய சிங்களத் தலைவர்கள் இதனை புரிந்து கொண்டேயாக வேண்டும்.
ஆயிரமாயிரம் கதைகள் கூறினாலும் அரசியல் என்பது சந்தர்ப்பவாதம் என்பது அவ்வப்போது நிரூபணமாகி வருகின்றது. இந்நாட்டில் மட்டுமல்லாது சர்வதேச அரசியலும் சர்வதேச அரசியல் தலைமைகளும் இந்த வகைக்குள் அடங்குகின்றனர்.
இப்படி இருக்கையில் எம் நாட்டு அரசியல் வாதிகள் மட்டும் விதிவிலக்காகி விட முடியுமா என்ன?
சம காலத்து அரசியல் களத்தை எடுத்துக் கொண்டாலும் கூட தேசிய கட்சிகள் என்றும் தேசிய அரசாங்கம் என்றும் காதார கதை பேசினாலும் இங்கும் ஒரு விதமான இருட்டடிப்பு இடம்பெற்றுத் தான் இருக்கின்றது.
அந்த இருட்டடிப்பானது அப்பாவித் தமிழர்களுக்கு குறிப்பாக இந்திய வம்சாவளித் தமிழர்களுக்கே நிகழ்ந்துள்ளது.பாராளுமன்றத் தேர்தலுக்கான பிரசார களத்தில் இனவாதமும் மதவாதமும் பிரதேச வாதமும் விதைக்கப்பட்ட நிலையில், பிரசாரிகளாகவும் அரசியல் விபசாரிகளாகவும் செயற்பட்ட பேரினவாத அரசியல் வாதிகள் இன்று தேசிய அரசாங்கம் எனும் பொறிமுறைக்குள் ஒன்றுபட்டுள்ளனர்.
நாடு என்ற ரீதியிலும் மக்கள் என்ற ரீதியிலும் இவ்வாறான ஒன்றுபட்ட புரிந்துணர்வு இணக்கச் செயற்பாடு மிகவும் வேண்டப்பட்டவை என்றாலும் அவ்விணக்கப்பாட்டு செயற்பாட்டில். அனைத்து அரசியல் கட்சிகளினதும் மக்களினதும் இணக்கப்பாடுகளுக்கு மதிப்பளிப்பது இன்றியமையாததாகும். பாராளுமன்றத்தைப் பிரதிநிதித் துவப்படுத்தும் வகையில் ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு) மற்றும் மக்கள் விடுதலை முன்னணி என்ற நான்கு கட்சிகள் இருந்து வருகின்றன. இந் நான்கு கட்சிகளும் இணைந்தால் மாத்திரமே இந் நாட்டில் தேசிய அரசாங்கம் என்ற வரையறைக்குள் வரமுடியும். ஆனால் இங்கு இரண்டு பிரதான தேசியக் கட்சிகளே இணைந்துள்ளன. அதிலும் தேர்தலில் களமிறங்கிய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி முழுமையாக அல்லாது அதில் அங்கம் கொண்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் மாத்திரமே இணைந்துள்ளனர்.
இவ்விரு தேசியக் கட்சிகளைப் பொறுத்தவரையில் ஏனைய சிறுகட்சிகள் குறித்தோ அல்லது சிறுபான்மை கட்சிகள் குறித்தோ சிந்தனை கிடையாது. கடந்த பாராளுமன்றத்தில் 20 ஆவது திருத்தம் என்ற பேரில் தேர்தல் முறையை மாற்றியமைப்பதான சட்டம் ஒன்று கொண்டுவரப்பட்டமையும் இதன் அடிப்படையிலேயே எனலாம்.
எப்படி இருப்பினும் இன்று மலர்ந்திருப்பது நல்லாட்சிக்கான காலகட்டம் என்றாலும் நாட்டு மக்கள் நிம்மதி பெருமூச்சொன்றை விட்டாலும் மலையக சமூகம் திருப்தி கொள்ள முடியாத அளவிற்கு மன உளைச்சலுக்குள் தள்ளப்பட்டுள்ளமை கவலை மிக்க விடயமாகும்.
மலையகத்தைப் பொறுத்தவரையில் இந்திய வம்சாவளித் தமிழர்கள் சுமார் 20 இலட்சம் பேர் வரையில் இந்நாட்டில் உள்ளனர். இவர்களில் இம்முறை கணிசமானோர் அக்கறையோடு வாக்களித்துள்ளனர். அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளின் அடிப்படையில் சுமார் ஏழு வீதமானோர் அமையவிருக்கும் தேசிய அரசாங்கம் சார்பில் வாக்களித்திருக்கின்றனர்.
எனினும் தேசிய அரசாங்கம் அமைப்பதற்கு வாக்களித்த இந்திய வம்சாவளியினர் தேசியப் பட்டியல் விடயத்தில் புறக்கணிக்கப்பட்டு விட்டனர். ஐக்கிய தேசிய கட்சியும் சரி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் சரி இவ்விரு தேசிய கட்சிகளுமே மலைய சமூகத்தின்பால் திரும்பிப் பார்க்கத் தவறியுள்ளன.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைப் பொறுத்தவரையில் அது நுவரெலியா, மாத்தளை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் தோட்டத் தொழிலாளர்கள் உள்ளிட்ட இந்திய வம்சாவளியினரின் வாக்குகளைப் பெற்றுள்ளது.
மறுபுறத்தில் ஐக்கிய தேசிய கட்சியானது மொனராகலை, பதுளை, நுவரெலியா, கண்டி, மாத்தளை, இரத்தினபுரி, கேகாலை, கொழும்பு, களுத்துறை,காலி, மாத்தறை ஆகிய மலையகம் சார்ந்த அனைத்து மாவட்டங்களிலும் இந்திய வம்சாவளியினரது வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது. இதனை இன்னும் விஷேஷித்துக் கூறுவோமானால் இந்திய வம்சாவளியினரின் வாக்குகள் ஐக்கிய தேசியக் கட்சிக்கு கணிசமான வெற்றியைத் தேடித்தந்துள்ளன என்று கூறினாலும் மிகையில்லை.
ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியவற்றுக்கு தேசியப்பட்டியலில் இடம் ஒதுக்கிய ஐக்கிய தேசியக்கட்சி 6 ஆசனங்களைப் பெற்றுக் கொடுத்த தமிழ் முற் போக்கு கூட்டணிக்கு தேசியப் பட்டியல் புறக்கணிப்பு செய்ததா அல்லது கூட்டணி அதற்கு வழிவகுத்ததா என்பது புதிராக இருக்கிறது. எது எப்படியோ இங்கு தேசியப் பட்டியலில் ஒன்று இல்லாது செய்யப்பட்டிருக்கிறது.
இந்த விவகாரம் தொடர்பில் தமிழ் முற்போக்கு முன்னணி அளித்துள்ள விளக்கத்தில், தேசியப் பட்டியல் நியமனத்திற்கு பதிலாகவே பதுளை, கொழும்பு மாவட்டங்களில் வேட்பளர் நியமனங்கள் வழங்கப்பட்டன. இது கட்சித் தலைவர்கள் கலந்துரையாடி எடுத்த முடிவு என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றியில் மட்டுமல்லாது பல தோல்விகளைக் கண்டு வாடி நின்ற சந்தர்ப்பங்களில் எல்லாம் தோள் கொடுத்து நின்றவரான முன்னாள் இராஜாங்க அமைச்சர் கே.வேலாயுதத்தின் பெயர் தேசியப்பட்டியலில் உள்வாங்கப்பட்டிருந்த போதிலும் அவருக்கும் புறக்கணிப்பு செய்யப்பட்டிருக்கின்றது.
அதுமாத்திரமன்றி இம்முறை நடந்து முடிந்த தேர்தல் வேலாயுதத்தின் பொறுப்பில் உள்ள பசறை தேர்தல் தொகுதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் வசமாவதற்கு பணியாற்றியுள்ளார்.
கூட்டு ஒப்பந்தத்தின் பங்குதாரியாக செயற்பட்டுவரும் வேலாயுதம் 100 நாள் நல்லாட்சி அரசாங்கத்தில் பெருந்தோட்ட இராஜாங்க அமைச்சராக பொறுப்பேற்று தோட்டத் தொழிலாளர்களின் 200 வருடகால கனவை நனவாக்கும் விதமாக தொழிலாளர் குடும்பங்களுக்கு முகவரியைப் பெற்றுக் கொடுப்பதற்கான அரிய வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக ஆரம்பித்து வைத்து மக்கள் மனதில் இடத்தைப் பிடித்தவராக இருக்கின்றார்.
மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்றவராக இருந்த வேலாயுதத்தை தேர்தலில் போட்டியிடச் செய்யாது தேசியப்பட்டியலில் இடமளிப்பதாகக் கூறி பின்னர் அவரைப் புறக்கணித்திருப்பது மலையக மக்களுக்கு குறிப்பாக பதுளை மாவட்ட மக்களுக்கு பெரும் இழப்பாகவே கருத வேண்டி உள்ளது.
சுதந்திரக் கட்சியை நிலை நிறுத்தும் நோக்கில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்பட்ட விதத்தை நோக்கினால் தேர்தலில் தோல்வியடைந்த சுதந்திரக் கட்சியினரைக் கண்டறிந்து அவர்களை தேசியப் பட்டியலினூடாக உள்வாங்கியுள்ளார்.
மறுபுறத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தனது கட்சி பற்றியே சிந்தித்து இங்கு செயலாற்றியுள்ளார். மொத்தத்தில் இங்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகிய இருவருமே இந்திய வம்சாவளித் தமிழர்கள் தொடர்பில் சிறிதேனும் சிந்தித்தவர்களாக செயற்பட தவறிவிட்டனர். வாக்குகளைப் பெற்றுக் கொண்டு வாக்காளர்களை ஏமாற்றியுள்ளனர்.
தேசிய அரசாங்கம் எனும் பெயரில் இணைந்துள்ள ஜனாதிபதியும் பிரதமரும் அரசாங்கம் அமைப்பதற்கு முன்பதாகவே தமது நிலைப்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளனரா என்பது குறித்தும் சந்தேகம் எழுந்துள்ளது.
எதிர்ப்புவாத அரசியல், நிர்ப்பந்த ரீதியிலான அரசியல் மற்றும் இனவாத, மதவாத அரசியல் ஆகியவற்றுக்கு தலைசாய்க்கும் தேசியக் கட்சிகள் நாட்டின் ஜனநாயகத்தின் பிரகாரம் சட்டம் ஒழுங்குகளைக் கடைப்பிடித்து ஒழுகும் சமூகம் தொடர்பில் அலட்டிக் கொள்வதாக தெரியவில்லை.
நல்லாட்சிக்கான தேசிய அரசாங்கத்தின் ஆரம்பப் படியே இவ்வாறு இருக்குமானால் மலையக மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக பிரசார மேடைகளில் வழங்கிய வாக்குறுதிகளின் நிலை என்ன தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு விடயம், தனி வீட்டுத்திட்டம், காணி உரிமை, மலையகத்துக்கு ஐம்பதாயிரம் வேலை வாய்ப்புகள் எல்லாமே எந்த ரீதியில் சாத்தியமாகப் போகின்றன என்பது பாரிய கேள்விகளாகியுள்ளன.
தேசிய அரசாங்கம் எனும் போது அடுத்து வரும் காலங்களில் மக்கள் பணிகளையும் வேலைத்திட்டங்களையும் முன்னெடுப்பதில் மைத்திரி அணியா ரணில் அணியா என்ற நிலைப்பாடு தோன்றினாலும் ஐயமில்லை.
ஏனெனில் தேசிய அரசாங்கம் என்ற தொரு பொறிமுறையை தோற்றுவிப்பதற்கே சரியானதொரு இணக்கப்பாடு எட்டப்படாத நிலையில் அமைச்சுப்பதவிகளுக்கும் குடுமிச் சண்டை தொடரும் நிலை காணப்பட்டு வருகிறது.தேசிய அரசாங்கம் எனும் போர்வையில் ஐக்கிய தேசியக் கட்சியை வளர்ப்பதற்கு பிரதமர் ரணிலும் சுதந்திரக் கட்சியை கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதி மைத்திரியும் பாடுபடப் போகின்றனர் என்பது மாத்திரமே உறுதி.
இவ்வாறு இரு தரப்பினரும் தங்களது கட்சிகளை ஆழமாக வேரூன்றச் செய்வார்களேயானால் தற்போதுள்ள விகிதாசார தேர்தல் முறையை மாற்றியமைத்து தொகுதி முறை அறிமுகப்படுத்தப்படும் பட்சத்தில் அதன் அறுவடைகளை மேற்படி இருதரப்பினர் மாத்திரமே அனுபவிக்கப் போகின்றனர். அந்த சந்தர்ப்பத்தில் சிறு கட்சிகளோ சிறுபான்மைக் கட்சிகளோ மேற்படி இரு தரப்பினருக்கும் தேவைப்படப் போவதில்லை.
பதுளை மாவட்டத்தில் இரு தமிழ் உறுப்பினர்களைப் பெற்றுக் கொண்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சி அம்மாவட்டத்திற்காக மேலும் ஒரு தமிழ் உறுப்பினர் தேவையில்லை என்று சிந்திப்பதானது உண்மையில் அது இனவாத அடிப்படையிலாகும்.மலையக மக்களைப் பொறுத்தவரையில் இந்நாட்டை ஆண்டு வருகின்ற அரசாங்கங்கள் பெரிதாக இந்திய வம்சாவளித் தமிழ் மக்கள் தொடர்பில் அலட்டிக் கொண்டதில்லை. இரண்டாம் தரப்பிரஜைகளாகவே மலையக மக்கள் மேற்கண்டவர்களால் இது வரையில் கணிக்கப்பட்டு வந்துள்ளனர். வருகின்றனர்.
அந்த வகையில் தமது இருப்புக்களை தக்க வைத்துக் கொள்ளும் வகையில் இன்று செயற்பட்டு வரும் அரசியல் களத்திலுள்ளோர் எதிர்வரும் ஐந்து வருடகாலங்களில் எவ்வாறு செயற்படப் போகின்றார் என்பது அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.தேசியப் பட்டியலில் ஏமாற்றமடைந்துள்ள இந்திய வம்சாவளித் தமிழ் மக்கள் தேசிய அரசாங்கத்தில் ஏமாற்றப்படமாட்டார்கள் என்பது நிச்சயமில்லை. ஏனெனில் இலங்கையில் அரசியல் வரலாற்றில் இப்படியான நிலைமை நீடித்து வருகிறது. முன்னைய அரசாங்கங்கள் அரசியல் தலைமைகள் உண்மையாகவே செயற்பட்டிருந்தால் மலையகம் இன்றைய அளவில் பின் தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது.
200 வருட காலமாக வைக்கப் பட்டு தோட்டத் தொழிலாளர்களை தொடர்ந்தும் அப்படியே வைத்திருக்க நினைப்பது பயங்கரமான விளைவுகளை ஏற்படுத்தும். உண்மையான மனித உரிமை மீறல் என்றால் அது மலையக மக்களுக்கே இடம்பெற்று வருகிறது.200 வருடகாலமாக கூலித் தொழிலில் ஈடுபடுத்தி அடிப்படைவசதியற்ற லயக் காம்பிராக்களில் வாழ வைக்கப்பட்டு வரும் தோட்டத் தொழிலாளர்களின்பால் நல்லாட்சிக்கான அரசாங்கம் கருணைக்கண் காட்டவில்லையெனில் இவ்விவகாரமும் சர்வதேச விசாரணை ஒன்றுக்குள் தள்ளப்படும் நிலை நிச்சயமாக எதிர்காலத்தில் உருவாகும்.
இன்று இணைந்துள்ள தலைமைகளும் அவர்களது பேரும் புகழும் நிலைத்திருக்கும் வகையில் செயற்படுவார்களேயானால் அது எதிர்காலத்தில் அவர்களுக்கு சிறப்பாக அமையும். இல்லையேல் இவர்களும் பிற்காலத்தில் மக்களின் வெறுப்புக்கு ஆளாகுவர் என்பதிலும் சந்தேகமில்லை.
நன்றி - வீரகேசரி