Headlines News :

காணொளி

ஜனாதிபதி விருது

ஜனாதிபதி விருது
நமது மலையகத்துக்கு

சுவடி

நாடு கடத்தப்பட்ட அவலம் பற்றி - பேரா.மு..நித்தியானந்தனின் உரை


பேராசிரியர் மு.நித்தியானந்தன் 1989ஆம் ஆண்டு டிசம்பர் 24-25 திகதிகளில் பேர்லினில் நிகழ்ந்த 6வது இலக்கிய சந்திப்பில் "மலையக மக்கள் இங்கும் அங்கும்" என்கிற தலைப்பில் ஆற்றிய உரை. தோட்டத்தொழிலாளர்கள் நாடு கடத்தப்பட்ட அந்த அவலக் கதையை விபரங்களோடு உணர்வுபூர்வமாக விபரிக்கிறார். எந்தவொரு கையெழுத்து பிரதியுமில்லாமல் கதையாக அவர் விபரித்திருந்தார். இந்த ஒலிப்பதிவை பத்திரப்படுத்தி பகிர்ந்த நண்பர் சுசீந்திரனுக்கு நன்றி.
 

தமிழகம் அனுப்பப்பட்ட தோட்டத்தொழிலாளர்களின் அவலம்

19ஆம் நூற்றாண்டில் எடுக்கப்பட்ட புகைப்படம்
இலங்கையின் மலையகப் பகுதிகளில் இருந்து இலங்கை – இந்திய அரசுகளின் ஒப்பந்தத்தின் அடிப்படையில் திருப்பி அனுப்பப்பட்ட மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்நிலை இன்றும் மிகவும் மோசமாக உள்ளதாக ஹிந்து பத்திரிகை தெரிவிக்கின்றது. தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கூட்டுத்தாபனத்தால் நிரந்தர வேலை வழங்கப்பட்டோரில் 3850 பேருக்கு வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டது. வரிசையாகக் கட்டப்பட்டுள்ள 400 சதுர அடி பரப்பையே கொண்ட இவ்வீடுகள் லையன்கள் ஆகவே உள்ளன. இவ்வீடுகள் தற்போது குடியிருக்க முடியாத அளவுக்கு சீரழிந்தும் உள்ளதாக அப்பத்திரிகைச் செய்தி தெரிவிக்கின்றது. இவ்வீடுகளுக்கு கடந்த 10 ஆண்டுகளாக மின்சாரம் இல்லாது உள்ளதாகவும் அச்செய்தி தெரிவிக்கின்றது.
இலங்கையில் இருந்து வருகின்ற தேயிலைத் தோட்டப் பணியாளர்களை மீளக் குடியமர்த்துவதற்காக 1975இல் உருவாக்கப்பட்ட தமிழ் நாடு தேயிலைத் தோட்டக் கூட்டுத்தாபனம் நீலகிரி மாவட்டத்தில் 8 பிரிவுகளில் 2513 இலங்கையில் இருந்து திரும்பிய குடும்பங்களை குடியமர்த்தி உள்ளது. இவர்களின் வீடுகளின் நிலை மட்டுமல்ல தொழில் நிலைமைகளும் கடினமானதாகவே உள்ளது.
இவர்கள் இன்னமும் தினக் கூலிகளாகவே உள்ளனர். இதுவரை இவர்கள் புடுங்குகின்ற தேயிலையின் நிறைக்கு ஏற்பவே கூலி வழங்கப்பட்டு வந்தது. தற்போது இவர்களுக்கு குறைந்தபட்ச தினக் கூலி 78 ரூபாய் உம் மேலதிக கொடுப்பனவாக 67 ரூபாய் உம் ஆக 145 ரூபாய் கூலி வழங்கப்படுகிறது. 
இலங்கை பிரித்தானியாவின் காலனி ஆதிக்கத்துக்கு உட்பட்டு இருந்த காலத்தில் 1870க்களில் இந்தியத் தமிழர்கள் மலையகத் தேயிலைத் தோட்டங்களில் பணிபுரிவதற்காகக் கொண்டு வரப்பட்டனர். இவர்கள் அன்றைய காலகட்டத்தில் அடிமைகளாகக் கொண்டு வரப்பட்ட போது மோசமான கஸ்டங்களை எதிர்கொண்டதுடன் ஆயிரக் கணக்கில் உயிரிழந்தனர்.
1948இல் சுதந்திர இலங்கையின் ஆட்சியைக் கைப்பற்றிய டி எஸ் செனநாயக்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஜிஜி பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் கொங்கிரஸ் ஆதரவளித்தது. ஜிஜி பொன்னம்பலம் அந்த அரசாங்கத்தில் அமைச்சராக்கப்பட்டார்.
மலையகத்தில் இருந்து கூடுதலான இடதுசாரிகள் பாராளுமன்றம் சென்றதனைத் தொடர்ந்து அதனைத் தடுக்கவும்; இனவாத அடிப்படையிலும் மலையகத் தமிழரின் பிரஜாவுரிமை பறிக்கப்பட்டது. 1948இல் கொண்டுவரப்பட்ட பிரஜாவுரிமைச் சட்டம், 1949இல் கொண்டுவரப்பட்ட இந்திய – பாகிஸ்தான் பிரஜாவுரிமைச் சட்டம் என்பவற்றின் கீழ் மலையகத் தமிழர்களின் பிரஜாவுரிமை பறிக்கப்பட்டு; அவர்கள் நாடற்றவர்கள் ஆக்கப்பட்டனர். இப்பிரஜாவுரிமையைப் பறித்த அரசாங்கத்தில் அமைச்சராக ஜிஜி பொன்னம்பலம் (கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் பேரன்)இருந்தார்.
மலையகத் தமிழரின் வாக்குரிமையைப் பறிக்க தமிழ் கொங்கிரஸின் தலைவர் ஜிஜி பொன்னம்பலம் அதரவளித்தமையே எஸ் ஜே வி செல்வநாயகம் தமிழ் கொங்கிரஸில் இருந்து வெளியேறி தமிழரசுக் கட்சியை உருவாக்கக் காரணமாய் இருந்தது.
ஆனால் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தீபம் தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டி ஒன்றில் தமிழ் கொங்கிரஸ் மலையகத் தமிழர்களின் பிரஜாவுரிமையைப் பெற்றுக் கொடுக்க போராடியதாகவும் அவர்களில் குறிப்பிடத்தக்க அளவினருக்கு அவர்கள் பிரஜாவுரிமையைப் பெற்றுக்கொடுத்ததாகவும் உண்மைக்குப் புறம்பாகத் தெரிவித்து இருந்தார்.
1964, 1974 ஆகிய ஆண்டுகளில் இலங்கையும் இந்தியாவும் செய்து கொண்ட இரு நாட்டு உடன்படிக்கைக்கு அமைய 10 இலட்சம் மலையகத் தமிழர்கள் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டவர்கள் இன்றும் கடினமான வாழ்வை எதிர்கொள்கின்றனர்.
நன்றி. தேசம்நெட்

தோட்டக் காணிகள் பகிர்வில் தொழிலாளர் புறக்கணிக்கப்படலாம் என்று அச்சம்


இலங்கையின் மலையகத்தில் தோட்ட தரிசு நிலக் காணிகளை பகிரும் போது அவை மலையக தமிழ் தோட்டத் தொழிலாளர்களுக்கும் சென்றடைவதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என்று முன்னாள் நீதி மற்றும் சட்ட உருவாக்க துணை அமைச்சரான புத்திரசிகாமணி கோரிக்கை விடுத்துள்ளார்.
குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் அனைவரும் அரசாங்க ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்களே தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கும் நிலையில் அவர்கள் இந்தக் காணிகள் தமிழ் தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட உரிய நடவடிக்கைகளை முன்கூட்டியே எடுக்க வேண்டும் என்றும் புத்திரசிகாமணி கூறியுள்ளார்.
இதற்கு முன்னர் மலையக தோட்டக் காணிகள் பகிரப்பட்டபோது அவை தோட்டத் தொழிலாளர்களுக்கு அல்லாமல், வெளியாருக்கு வழங்கப்பட்ட சம்பவங்கள் நிறைய நடந்திருப்பதாகக் கூறும் புத்திரசிகாமணி, 1975 ஆம் ஆண்டில் இப்படியான ஒரு முயற்சி, மலையகத் தலைவர்கள் கட்சி பேதமின்றி போராடியதால் தடுக்கப்பட்டதாகவும் குறிப்பிடுகிறார்.
கடந்த வரவு செலவுத்திட்டத்தில் இதற்கான திட்டம் அறிவிக்கப்பட்டதாகவும், தற்போது பல தோட்டங்களில் தரிசு நிலங்கள் பற்றிய தகவல்கள் அரசாங்க தரப்பினரால் பெறப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த நிலையில் மலையக அரசியல் தலைவர்கள், கல்விமான்கள் உட்பட அனைவரும் கட்சி பேதமின்றி இணைந்து இதற்காக நடவடிக்கைகளை எடுக்க முன்வரவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சந்தியில் நடந்த கதை

18ஆம் நூற்றாண்டில் தொட்டதொழிலாளர்கள்.

இது!
சந்தியில் நடந்த கதை
சந்தியே சிரிந்த கதை.

கடலைக்கடந்து ‍ நாங்க‌
சிலோனுக்கு வந்த கதை,
மேடுபள்ளம் ஏறி நாங்க‌
வியர்வை சிந்தி உழைத்த கதை!

அரை வயிறு நிறையாம்
அல்லல்பட்டு வாழ்ந்த கதை,
இருட்டிலேயே எங்க வாழ்வு
இன்னும் இருக்கும் கதை.

துரைமார் எச்சரிக்க,
கங்காணி நச்சரிக்க வாழ்ந்த கதை,
குழந்தை அழும் சத்தம் கேட்கையிலும்
குலையாமல் உழைத்த கதை.

தேயிலை நட்டு வைத்து
தேகமெல்லாம் நொந்த கதை,
தேசம் உயர்ந்தாலும்
வேதனைகள் நிறைந்த கதை.

தலைவர் என்று சொன்னாலே
தலை சொறிந்து நின்ற கதை,
தண்ணியில மிதந்து
தத்தளித்து வாழ்த்த கதை.

அப்பன் ஆத்தா செத்த பின்னும்
அயராது உழைத்த கதை,
உறவுகளை புதைத்த மண்ணில்
ஏறி நாங்க மிதித்த கதை.

இந்தியாவுக்குத் தெரியாது
நாம் இங்கிருந்து சாகும் கதை,
இந்த இலட்சணத்தில்
இந்திய தமிழன் என்று சொன்ன கதை.

ஓட்டுப்போட்டு ஓட்டுப்போட்டு
ஓடாகிப்போன கதை,
தலைவணங்கித் தலை வணங்கித்
தலைமுறையாய் நடந்த கதை.

விலைபோகா மனிதர் நாம்
வீதியிலே நின்ற கதை,
உழைப்பெல்லாம் உணர்வாக்கி
வீராப்பாய் இருந்த கதை.

லயம் லயமாய் மக்கள் வெள்ளம்
சந்தியிலே சேர்ந்த கதை,
சம்பளத்தை கூட்டச்சொல்லி
சத்தியாக்கிரகம் இருந்த கதை.

உறவுகள் பசித்திருக்க‌
உறுதியாய் நின்ற கதை,
உரிமை என்று கேட்டதை
உலகமே அறிஞ்ச கதை.

சம்பளத்தை எதிர்பார்த்து
சனமே வீதியில நின்ற கதை,
ஒத்த ரூபா சம்பளத்தை உயர்த்திவிட்டு
தலைவர்கள் கோசம்(வேசம்) போட்ட கதை.

கிம்பளத்தை வாங்கிக்கிட்டு
சம்பளமே இல்லனு சாமிங்க சொன்ன கதை,
சரித்திரமே வாய்விட்டு அழுத போதும்
சரிங்க சாமி போட்ட கதை.

மல்லியப்பூச் சந்தியிலே
மக்கள் வெள்ளம் திரண்ட கதை,
தேசம் வளர்த்தவங்க தேகம் நொந்து
பரம்பரையாய்ச் செத்த கதை.

இது
சந்தியிலே நடந்த கதை
சந்தியே சிரிச்ச கதை,
சாமி எல்லாம் சேர்ந்து
நமக்கு சமாதி செஞ்ச கதை.


-திரு.மை.பன்னீர்செல்வம்
நன்றி
நூல்- சில முகங்களும் பல முகமூடிகளும்.

தொழிலாளர் - நிர்வாகம் முறுகல் நிலைக்குக் காரணம் என்ன?


அண்மைக்காலமாக பெருந்தோட்டப்பகுதிகளில் தொழிலாளர்களுக்கும் தோட்ட நிர்வாகங்களுக்குமிடையிலான உறவு முறை திருப்தி படக்கூடியதாக இல்லை என்பதை உணரக்கூடியதாகவுள்ளது.

கூட்டு ஒப்பந்தத்தை மீறும் பல செயற்பாடுகள் ஆங்காங்கே இடம்பெற்று வருவதை கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட தொழிற்சங்கங்களே ஏற்றுக்கொள்கின்றன. இந்நிலையில் தொழிற்சங்கங்களின் நேரடி தலையீடு இல்லாத காரணத்தினால் பல நிர்வாகங்கள் தொழிலாளர்கள் மீது கெடுபிடிகளை அதிகரித்து வருகின்றன.

இதில் குறிப்பிட்டு கூற வேண்டிய முக்கியமான விடயம் என்னவென்றால் ஒரு சில தோட்டங்களில் இடம்பெறும் தொழிலாளர்களுக்கு எதிரான அக்கிரமங்கள் தோட்டக்கம்பனிகளின் உரிமையாளர்களுக்கே தெரிவதில்லை என்பதாகும். அப்படியாயின் சில தோட்டங்களுக்குள் என்ன தான் இடம்பெறுகின்றன? உண்மையைக்கூறப்போனால் ஒரு சில தோட்ட முகாமையாளர்கள் அதிகாரத்தை தமது கைக்குள் எடுத்துக்கொண்டு தொழிலாளர்களை படுத்தும்பாடு மிகவும் மோசமாக உள்ளது.

ஒரு சில தோட்டங்களில் இவர்கள் செய்யும் அக்கிரமங்களை பார்த்தால் ஆங்கிலேயர் யுகத்திற்கு தோட்டங்கள் சென்று விட்டனவோ என்று தான் கூற வேண்டியுள்ளது. தமது தனிப்பட்ட அதிகாரங்களை தொழிலாளர்கள் மீது திணித்து அதில் இன்பம் காண்பதில் அக்காலத்தில் பல ஆங்கிலேய துரைமார்கள் தான் பெயர் பெற்றிருந்தனர்.

இக்காலத்திலும் இவர்கள் இவ்வாறு செயற்படுவது தொழிலாளர்களை ஆத்திரத்தின் விளம்பிற்கே கொண்டு சென்றிருப்பதை மறுக்க முடியாதுள்ளது. இதன் காரணமாகவே வேலை மற்றும் சம்பள புறுக்கணிப்பு, ஆர்ப்பாட்டங்கள், தோட்ட முகாமையாளரை அறைக்குள் வைத்து பூட்டுதல் என இன்னோரன்ன செயற்பாடுகளில் தொழிலாளர்கள் இறங்குகின்றனர்.

பிரதான பிரச்சினைகள் தான் என்ன?

தோட்ட முகாமையாளருக்கும் தொழிலாளர்களுக்குமிடையே நிலவும் பிரதான பிரச்சினையாக அதிக எடை கொழுந்து எடுக்கும்படி தொழிலாளர்களை நிர்பந்திக்கும் விடயத்தை கூறலாம். எனினும் இது கூட்டு ஒப்பந்தத்தோடு தொடர்புடைய விடயமாகையால் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட தொழிற்சங்கங்களும் இதில் நேரடியாக சம்பந்தப்படுகின்றன.

குறிப்பிட்ட தோட்டத்தில் அந்த மாதத்திற்கு எடுக்க வேண்டிய அளவு கொழுந்து குறைந்தால் (சராசரி) அதிக கிலோ கொழுந்து பறிக்கும் படி தொழிலாளர்களை நிர்வாகங்கள் கோறுவது வழமையான ஒரு விடயம்.

இது பல தோட்டங்களில் இடம்பெறும் சம்பவமாகும். கூட்டு ஒப்பந்தத்தில் கூட இப்படியான சூழ்நிலைகளுக்கு தீர்வுகள் கூறப்பட்டுள்ளன. கூடுதல் கொழுந்து எடுக்கப்படும் விடயத்தை நிர்வாகம் தோட்ட கமிட்டி தலைவர்களுடன் பேசி ஒரு முடிவுக்கு வரலாம். மேலும் கூடுதலாக எடுக்கப்படும் கொழுந்திற்கு ஒரு தொகை பணம் வழங்கப்படுகிறது.

எனினும் கொழுந்து இல்லாத பருவத்தில் அதிக எடை கொழுந்துகள் பறிக்கும் படி தொழிலாளர்களை கோருவது நியாயமில்லாத செயல். இதன் காரணமாகவே முறுகல் நிலை எழுகின்றது. அண்மையில் அட்டன் எபோட்ஸ்லி தோட்ட மொண்டிபெயார் தோட்டத்திலும் வெளிஓயா தோட்டத்திலும் இப்பிரச்சினைகள் எழுந்தன.

மொண்டிபெயார் பிரிவு தொழிலாளர்கள் எதிப்பை காட்ட அனைவருக்கும் நிர்வாகத்தால் வேலை நிறுத்தப்பட்டது. குறிப்பிட்ட முகாமையாளர் சம்பளம் கொடுக்க வந்ததையும் தொழிலாளர்கள் நிராகரித்தனர். எனினும் வெளியா தோட்டத்தில் சுமார் இரண்டாயிரம் தொழிலாளர்கள் நேரடியாகவே வேலை நிறுத்தத்தில் குதித்தனர். இதற்குக் காரணம் வேலை செய்யாவிடின் இராணுவத்தினரை வரவழைப்போம் என தோட்ட நிர்வாகம் கூறியதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அனுபவம் இல்லாத முகாமையாளர்கள்

இதே வேளை புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் இளம் வயது தோட்ட முகாமையாளர்களுக்கு தொழிலாளர்களை கையாள்வதிலும் வேலை வாங்கும் அணுகு முறைகளிலும் அனுபவம் இல்லை என தொழிலாளர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

அட்டன் பகுதியில் ஒரு தோட்டத்தில் தேயிலைச்செடிகளுக்கு மத்தியில் வளரும் புற்கள் விரைவாக அழிய மருந்து கலவையுடன் பெற்றோலை கலந்து அடிக்க வேண்டும் என ஒரு முகாமையாளர் தொழிலாளர்களுக்கு அழுத்தம் கொடுத்துள்ளார்.

இது தொடர்பில் குறிப்பிட்ட தொழிலாளர்கள் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்துள்ளனர். மற்றுமொரு தோட்டத்தில் தேயிலைச்செடிகளுக்கு தடை செய்யப்பட்ட மருந்தை முகாமையாளர் தெளிக்கச்சொன்னதால் பல ஹெக்டயர் தேயிலைச்செடிகள் கருகி விட்டன.

இதற்கான ஆதாரங்களை காட்டுவதற்கும் குறிப்பிட்ட தோட்டத்தொழிலாளர்கள் தயங்கவில்லை. மேலும் கவ்வாத்து வெட்டுதல் ,கன்றுகளை நட குழி போடுதல், அகழி அமைத்தல் போன்ற மிக முக்கியமான விடயங்களில் அடிப்படை அறிவு இல்லாத முகாமையாளர்களினாலேயே முறுகல்கள் இடம்பெறுவதாக இத்தொழிலில் அனுபவம் உள்ள தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதே வேளை இப்போதுள்ள இளம் முகாமையாளர்கள் இத்தொழிலில் உள்ள சூட்சுமங்களை கற்றுக்கொள்வதில் அக்கறை காட்டுவதில்லை என பல சிரேஷ்ட ஓய்வு பெற்ற தோட்ட முகாமையாளர்களே கருத்துத் தெரிவிக்கின்றனர்.

தொழிற்சங்கங்களின் நிலை என்ன?

நிர்வாகங்களுக்கும் தொழிலாளர்களுக்குமிடையிலான பிரச்சிகளை தீர்த்து வைக்கும் நியாயம் கூறும் பிரதான கடப்பாடு தொழிற்சங்கங்களுக்கு உண்டு ,காரணம் அதற்காகத்தான் சந்தாப்பணம் அறவிடப்படுகிறது.

பிரதான தொழிற்சங்கங்கள் பல பிரச்சினைகளை சுமூகமாக தீர்த்தும் வைத்துள்ளன. எனினும் அண்மைக்காலமாக தொழிலாளர்களை தொழிற்சங்கங்கள் கண்டு கொள்வதில்லையோ என்ற சந்தேகமும் நிலவுவதில் ஆச்சரியம் இல்லை. பல தொழிற்சங்கங்கள் இன்று அரசியல் நீரோட்டத்தில் இணைந்துள்ளதால் அவர்களுக்கு வேலைப்பளு அதிகமாக இருக்கும் என்றும் கூறலாம்.

எனினும் பல தொழிற்சங்கங்களின் பிராண வாயுவாக இருக்கும் தொழிலாளர்களின் பிரச்சினைகளை அதிக அக்கறை கொண்டு பார்த்தல் அவசியம். தொழிலுறவு அதிகாரிகளும் தொழிற்சங்க காரியாலயங்களும் இப்பணியை செய்து வருகின்றனர்.

ஒரு சில சந்தர்ப்பங்களில் தோட்ட நிர்வாகத்திற்கு சார்பாக பேசும் அதிகாரிகளும் இல்லாமலில்லை.இதற்குக் காரணம் இவர்கள் தமது நாட்காலியை காப்பாற்றிக்கொள்ள வேண்டுமே? பல சந்தர்ப்பங்களில் இவ்வாறு தோட்ட நிர்வாகத்திற்கு சார்பாக செயற்படும் நிலை ஏற்பட்டதால் தான் பல தொழிலாளர்கள் தமது பாரம்பரிய தொழிற்சங்கங்களை விடுத்து ஏனைய தொழிற்சங்கங்களை நாடுகின்றனர்.

இது ஒன்றும் இரகசியமான விடயமல்ல. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ளும் சில பேரினவாத தொழிற்சங்கங்கள் இலகுவாக தோட்டப்பகுதிகளுக்குள் ஊடுறுவுகின்றன. விளைவு ? தொழிற்சங்க அங்கத்துவம் சின்னா பின்னமாகி போகின்றது. ஏற்கனவே குறித்த தோட்டத்திற்கு திட்ட மிடப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் பழைய தொழிற்சங்கத்தால் நிறுத்தப்படுகின்றன. ஒதுக்கப்பட்ட நிதிகளும் தான்.

நட்புறவுடன் பழகும் நிர்வாகங்கள்

பெருந்தோட்டப்பகுதிகளில் எல்லா நிர்வாகங்களும் தொழிலாளர்களை தமது அதிகார அழுத்தங்களால் ஆள்கின்றன என்று கூற முடியாது.ஒரு சில கம்பனிகளுக்கு கீழ் வரும் நிர்வாகங்கள் சிறந்த நட்பை தொழிலாளர்களிடத்தே பேணி வருகின்றன.

இவ்வாறான தோட்டப்பகுதிக்குள் அதிக எடை கொழுந்து பறித்தல் என்பது ஒரு பிரச்சினையே இல்லை. இங்கு தொழிற்சங்கங்களுக்கும் அதிக வேலை இராது.கூறப்போனால் இங்குள்ள தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களை கண்டு கொள்வதேயில்லை எனலாம்.

எனினும் தற்போதைய சூழ்நிலைகளில் தேயிலை தொழிற்றுரையானது அபாயத்தை எதிர்நோக்கியுள்ளது எனலாம். பல தோட்டங்கள் சிறு சிறு துண்டுகளாகப்பிரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அந்த நிலங்களில் தேயிலை அல்லாத மாற்று பயிர்ச்செய்கை திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

நஷ்டத்தை காரணங்காட்டி பல தோட்டங்கள் இன்று மூடப்பட்டு வருகின்றன. இது ஒரு பாரதூரமான விளைவை தரப்போகின்றது. அதாவது பெருந்தோட்டப்பகுதி வருமானத்தில் தங்கியிருத்தல் என்ற விடயம் கொஞ்சம் கொஞ்சமாக அற்றுப்போகப்போகின்றது.

ஒரு கட்டத்தில் இந்த தொழிலாளர்கள் வர்க்கம் எமக்கு தேவையில்லை தேயிலை தொழிலில் நாம் தங்கியிருக்கவில்லை என அரசாங்கமே கூறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஆகவே இந்த எதிர்கால அபாயத்தை கருத்திற்கொண்டு சரி தொழிலாளர்களும் ,தொழிற்சங்கங்களும் ,அசியல் கட்சிகளும் ஒரு உடன்பாட்டுக்கு வருதல் காலத்தின் தேவை. நிர்வாகத்துடனான முறுகல்களை குறைக்கும் வகையில் திட்டங்களையும் செயற்பாடுகளையும் முன்னெடுத்தல் தொழிற்சங்க பிரமுகர்களின் கடமையாகும்.



18 வருடங்களில் 50 தேயிலை இறப்பர் தொழிற்சாலைகள் மூடப்பட்டன

கடந்த 18 வருடகாலத்தில், தனியார் மயப்படுத்தப்பட்ட 50 இற்கும் மேற்பட்ட தேயிலை மற்றும் இறப்பர் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அனுப்பிய கடிதமொன்றில் இலங்கை தோட்ட சேவைகள் சங்கம் தெரிவித்துள்ளது.
சங்கத்தின் தலைவர் தம்மிக ஜயவர்தன மற்றும் செயலாளர் நாத் அமரசிங்க ஆகியோர் கையெழுத்திட்டுள்ள இக்கடிதத்தில் தோட்ட நிர்வாகங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றி விபரிக்கப்பட்டுள்ளது.

உத்தியோகஸ்தர்களின் சம்பள பாகுபாடு, தோட்டங்களில் தங்குமிட வசதியின்மை, உத்தியோகஸ்தர்களுக்குரிய கொடுப்பனவுகள் வழங்கப்படாமை, உத்தியோகஸ்தர்களின் வீடுகள் புனரமைக்கப்படாமை, தோட்டத்துறைக்கான முறையான விவசாய கொள்கைகள் வகுக்கப்படாமை போன்றன தோட்டத்துறை உத்தியோகஸ்தர்கள் எதிர்நோக்கும் சில பிரச்சினைகளாக குறிப்பிடப்பட்டுள்ளன.

பல தடவைகள் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளபோதிலும் தோட்ட உத்தியோகஸ்தர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தோட்டங்களின் உரிமையாளர்கள் தவறியுள்ளதாக தம்மிக ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

18 வருடங்களுக்குமுன் தோட்டங்களை தனியார் மயப்படுத்தும்போது முறையான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும் எனவும் அவர்கூறியுள்ளார்.
பெருந்தோட்டத்துறையான சீரழிவு கட்டத்தை அடைந்துள்ளதாகவும் இவ்விவகாரம் உடனடியாக தீர்க்கப்பட வேண்டும் எனவும் தம்மிக ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

நன்றி- வீரகேசரி

இரத்தபுரியான இரத்தினபுரி!-2


வேவல்வத்தை பகுதியில்...
விஸ்வநாதன் (20 வயது) இளைஞன்முதலில் 8ஆம் திகதி இரவு ஒன்பது மணியளவில் கொலை நடந்ததாக கேள் விப்பட்டிருந்த போதிலும் எங்களுக்கு அடுத்த நாள் காலையில் தான் உறுதியாகத் தெரிந்தது. பந்துவின் சடலத்தை பார்த்து விட்டு இந்த வழியால் வரும் சிங்களவர்கள் பலர் எமது லயன்களைப் பார்த்து தூஷணங்களால் திட்டித் திட்டிச் சென்றார்கள். "தீ வைப்போம்", "இரவு பார்த்துக் கொள்கிறோம்", "இன்று ஒருவரும் மிஞ்ச மாட்டீர்கள்", "இன்று உதைபட தயாராயிருங்கள்" என கத்திக் கொண்டே சென்றார்கள். சிறிது நேரத்துக்குப் பின்னர் தான் அசித்தவும் கொல்லப்பட்டிருக்கிறான் என்ற சேதி வந்தது என்று கூறினார். இதன்பின் மேலும் நிலமை மோசமானது.அதனால் தான் மத்தியானம் 12 மணிக்கெல்லாம் நாம் தேயிலை ஸ்டோருக்குச் சென்று விட்டோம். அங்கு புஞ்சி மாத்தையாவிடம் (நாணயக்கார பத்மசிறி) நாங்கள் விடயத்தை எடுத்துக் கூறியதும் அவர் எல்லோரையும் அழைத்து வரும்படி கூறி ஏறத்தாழ 900க்கும் மேற்பட்டோரை ஸ்டோருக்கு அழைத்து அங்கு புகலிடம் அளித்தார். அவரை அடிக்க அன்று எவ்வளவோ முயற்சி செய்தார்கள். இன்னமும் அவர் மீது பலருக்கு கோபமுண்டு.

அன்று இரவு 7 மணியளவில் தாக்கத் தொடங்கிவிட்டார்கள். இங்கு இரவு நடந்தவை ஒன்றும் எங்களுக்குத் தெரியாது.இது எங்களுக்கு புதிய ஒரு 1996 ஒக்டோபர் 10 அன்றும் இதே போன்று தான் இந்த வேவல்வத்தை லயம் மீது ஏறத்தாழ 400க்கும் மேற்பட்டோர் வந்து தாக்கினர். தமிழ்க் கடைகள் அனைத்தையும் தீயிட்டுக் கொளுத்தினர். பலரைத் தாக்கிவிட்டு, அவர்களது உடமைகளை சேதப்படுத்தி விட்டுச் சென்றனர். ஆனாலும் இந்த அளவு மோசமாக அப்போது நாம் பாதிக்கப்படவில்லை. அந்த முறையும் இப்படித் தான் அரசாங்கம் 2000 ரூபா நட்டஈடு கொடுத்து விட்டுப் போனது. ஆனால் நட்டஈட்டால் எங்களின் எதிர்காலத்தை உத்தரவாதப்படுத்த முடியவில்லை.

அது போல கடந்த இரு வருடங்களுக்கு முன்னரும் நெல்சன் எனும் சிங்கள சமூகத்தைச் சேர்ந்த கசிப்பு வியாபாரி பணம் வசூலிக்கச் சென்ற இடத்தில் சண்டித்தனம் செய்த போது தோட்ட இளைஞர்கள் தாக்கியுள்ளனர். அதில் நெல்சன் கண்ணை இழந்தார். அதனைத் தொடர்ந்து 3 லயன்கள் எரிக்கப்பட்டு நாசமாக்கப்பட்டன. அப்போதும் இவ்வளவு மோசமாக நாம் பாதிப்படையவில்லை.தற்போது கொல்லப்பட்டவரின் சகோதரர் இங்குள்ள ஒருவரைக் கொல்ல வந்த போது முந்திக்கொண்ட இங்குள்ள தமிழ் இளைஞர்கள் அவரைக் கொன்றுவிட்டார்கள். அதனைத் தொடர்ந்தே எல்லோரும் திரண்டு வந்து எங்கள் குடியிருப்பை நாசமாக்கினார்கள்.

எஸ்.உதயகுமார் (28வயது)
இரவு 7 மணியளவில் பஸ், லொறி, வான்கள், என்பவற்றில் வந்திறங்கிய நூற்றுக்கணக்கானோர் திமுதிமுவென வந்து வேகமாக இறங்கி எமது லயன்களை நொறுக்கித் தள்ளினர். கண்ணுக்கெட்டிய வரை வாகனங்கள் தான் தெரிந்தது. வெளியில் பார்த்தால் ஓவென சத்தங்கள் நெருங்கிக் கொண்டிருந்தன. எல்லோரது கைகளிலும் ஏதாவது ஆயுதங்கள் இருந்தன. இரும்புக் கம்பிகள், கத்திகள், கம்புகள், கோடறிகள், துவக்குகள் கூட இருந்தன. பெற்றோல் குண்டுகள் கொண்டு தான் பல வீடுகள் தாக்கப்பட்டுள்ளன. அது வெடிக்கும் சத்தத்தை தொடர்ந்தும் கேட்க முடிந்தது. ஒரு காம்பராவுக்குள் மாத்திரம் 25 பேரளவில் போயிருப்பார்கள். அந்தளவு கூட்டம் வந்திருந்தது. இங்குள்ள ஒரு வீடு மிச்சமில்லாமல் அழிக்கப்பட்டது.நாம் 83இல் கூட இந்தளவு பாதிக்கப்படவில்லை. கொள்ளையடிக்கப்பட்டோம், தான், தாக்கப்பட்டோம் ஆனால் எங்களைத் தவிர அனைத்தும் அழிக்கப்பட்டது இந்தத் தடவை தான்.பெக்டரியிலும் நாங்கள் தொடர்ந்து இருக்கவில்லை. அங்கும் மிரட்டிச் சென்றார்கள். எனவே அங்கிருப்பதும் ஆபத்தென்று பாங்கொடைக்கும் காடுகளை நோக்கியும் சென்றோம். எனது குடும்பத்தினர், மூன்று தினங்களுக்குப் பின்னர் தான் உண்ண ஆகாரமின்றி, பட்டியினியுடன் வந்து சேர்ந்தனர். இன்னமும் பலர் வந்து சேரவில்லை. எவரெவர் இருக்கின்றனர்- இல்லை என்பது கூட வந்து சேர்ந்ததன் பின் தான் தெரியும்.

சின்னத்துரை (56வயது)
எங்களைத் தொடர்ந்தும் இம்சித்து வருகின்றனர். பஸ்களில் போக முடிவதில்லை. தாக்கப்படுகிறோம். எங்கள் பெண் பிள்ளைகளை தொடர்ந்து இம்சிக்கின்றனர். இதனாலேயே பல சிறுமிகள் படிப்பை இடைநிறுத்தி விடுகின்றனர். பஸ்ஸில் உட்கார்ந்திருந்தால் இழுத்துவிட்டு மற்றவருக்கு இடம் கொடுக்கின்றனர். இடையிலேயே வலுக்கட்டாயமாக இறக்கிவிட்டுச் செல்கின்றனர். எங்களை கேலி செய்கின்றனர். பஸ்காரர்களும் இதனைத் தட்டிக் கேட்பதில்லை. அவர்களும் கூடச் சேர்ந்து சிரித்து மகிழ்வது வழக்கமான ஒன்று. இவ்வளவையும் பொறுத்துக்கொண்டு தான் வாழ்க்கை நடத்தி வருகிறோம். ஒரு போதும் இதனை எதிர்த்தது கிடையாது. எதிர்க்கவும் முடியாது. எதிர்த்து விட்டு நாங்கள் நிம்மதியாக இருந்து விடவும் முடியாது. அப்படிப்பட்ட எங்களுக்குத் தான் இன்று...

இனிமேலும் எங்களுக்கு இதே கதி தொடரத்தான் போகிறது. அரசாங்கம் பாதுகாப்புக் கொடுத்தாலும் அது எந்தளவு, எத்தனை தூரம் தாக்குப் பிடிக்கும் என்பது தெரியாது.நான்கு பெண்கள் இருந்த வீடொன்றில் ஒரு பெண்ணை பாலியல் வல்லுறவு புரிந்து கடும் வதைக்குள்ளாகினார். அவர் பின்னர் இரத்தினபுரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இறந்து போனார்.முன்கூட்டியே பலர் தப்பிப் போய் விட்டதால் பல உயிர்ச்சேதங்கள் தவிர்க்கப்பட்டன

கே.பாலகிருஷ்ணன்
(சிங்களப் பெண்ணை மணமுடித்திருக்கும்- தமிழில் பேசவராத ஒரு பெட்டிக் கடை வைத்திருக்கும் இளைஞர்) இவரது கடை முற்றாக அழிக்கப்பட்டுவிட்டது.அன்றாடம் ஒரு வேளை உணவுக்குக் கூட கஷ்டப்படும் ஒன்றுமறியாத அப்பாவித் தொழிலாளர்களின் சொத்துக்கள் தான் இப்படி அழிக்கப்பட்டுள்ளன என்பதை நாங்கள் அறிய வேண்டும்.இங்கிருந்து தப்பி அலுப்பொல போனால் அங்குள்ளவர்கள் அடித்து விரட்டுகின்றனர். அங்கிருந்து ராசகல்ல போனால் அங்கிருந்து அடித்து விரட்டுகின்றனர். இந்தப் பக்கத்தால் போக வழியேயில்லை. அமுனுதென்ன பக்கம் தான் போகமுடியும். அங்கு போனால் அங்கும் அடித்து விரட்டுகின்றனர். முழுக்க முழுக்க சுற்றி வளைத்து சிறைப்படுத்தப்பட்ட ஒரு மூடுண்ட பிரதேசமாக இருக்கிறது. ஒரு வகையில் இது ஒரு திறந்த வெளி சிறைக்கூடம் தான். சம்ப தினத்தன்று உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு தப்பிச் சென்று கொண்டிருந்த போது கையிலிருந்த குழந்தையைப் பறித்து ஆற்றில் போட்ட சம்பவமும் இங்க தானுங்க நடந்தது.

பின்னர் குழந்தையைக் காப்பாற்றி விட்டார்கள்.மூன்ற நாட்களாக வெளியில் வரவில்லை. தெருவுக்கு வந்தால் அடி விழும் என்ற பயத்தில் பட்டினியோடு இருந்தோம்.இத்தனை வெறித்தனத்தையும் செய்து விட்டுச் சென்றவர் கூட கைது செய்யப்படவில்லை.... இங்கு ஆஸ்பத்திரியில் குழந்தை பிறந்தால் "வேவல்வத்தை புலி பிறந்து விட்டது" என்று தான் கூறுகின்றனர். வேவல்வத்தையைச் சேர்ந்தவர்களென்றாலே புலிகள் என்று தான் பார்க்கிறார்கள். பாதைகளில் எங்களை புலி... புலி என்று அழைக்கிறார்கள். இன்று பல புலிகளை தயாராக்கி விட்டுள்ளார்கள். இது தான் உண்மை. 
'அவுப்பே'வில்காட்டுக்குள் ஒளிந்திருந்த பொது குளிரினால் ஒரு வயது குழந்தையொன்று இறந்து போனது அதனைப் பார்க்க நானும் சென்றிருந்தேன். 11ஆம் திகதி பஸ்ஸில் தப்பிப் போன தமிழர்களை ஜட்டியுடன் இறக்கிவிட்டனர.

வள்ளியம்மா பெண் தொழிலாளி (ஒரு தாயார்)
சிங்களவர்களுக்கு பல வேலைகளையும் செய்து கொடுக்கப் போவது நாங்கள் தான். காலையில் வேலை வாங்கியவர்கள் மாலையில் எங்களைத் தாக்குகின்றனர். எங்களைத் தாக்கியவர்கள் வேறு யாரும் அல்ல எங்களை நன்றாக அறிந்தவர்களே!இனிமேல் நாங்கள் அவர்களின் வேலைக்குப் போகக் கூடாது என்று பேசிக் கொண்டுள்ளோம்.சம்பவம் நடக்கும் போது 12 பொலிஸார் இருந்தனர். அவர்கள் இதனைத் தடுத்து நிறுத்த ஒன்றும் செய்யவில்லை. இங்குள்ள 13 கடைகளை நெருப்பிலிட்டு விட்டார்கள். ஒன்று கூட மிச்சமில்லை. ஒவ்வொரு வீட்டிலும் நிச்சயமாக ஒரு லட்சத்துக்கும் மேல் பெறுமதியான சாமான்கள் இருந்தன. அவையனைத்தும் பல வருட கடும் உழைப்பால் சேர்க்கப்பட்டவை. ஆண்கள் இல்லாத வீட்டில் வந்து அதிக சேட்டைகள் புரிந்துள்ளனர். முடிந்தால் அவர்களின் உஷாரை "அங்க" (வடக்கிலே) காட்டனுங்க.

ஐயன் பெருமாள் வீரய்யா (38 வயது)
எங்களது சகல பொருட்களையும் ஒரு இடத்தில் வைத்து நொருக்கி அதிலேயே தீமூட்டிக் கொளுத்தியுள்ளனர். ஒன்றும் மிச்சமில்லை. பணம் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு விட்டன... ஆனால் இனி இந்தத் தோட்டமே வேண்டாம். பேசாமல் இந்தியாவை நோக்கிப் போய்விடலாம். ஆனால் அதற்கு இந்த அரசியல்வாதிகள் விட மாட்டார்கள். நாங்கள் இல்லாவிட்டால் இவர்களுக்கு வேலை செய்ய எவருமில்லை என்ற பிரச்சினை, எங்களின் தலைவர்களுக்கோ எங்களைக் காட்டி அரசியல் செய்யவும், சந்தா எடுக்க முடியாத பிரச்சினை. எங்களின் தலைவர்களை பாதுகாக்க நாங்கள் உதைவாங்கிக் கொண்டு இருக்க வேண்டும். அவர்கள் எங்களைக் காட்டி பாதுகாப்பாக பஜிரோக்களில் திரியட்டும். இதனை எத்தனை நாள் தொடர்ந்து பொறுத்துக் கொண்டிருப்பது. பொலிஸார், பவித்ரா, பந்துல போன்ற அரசியல் தலைவர்களின் முன்னிலையில் தான் இவை நடந்தன. பின் யாரிடம் நாங்கள் போய் தீர்வு கேட்பது. எல்லா அரசியற் தலைவர்களும் வந்தார்கள் ஆனால் எவராலாவது இனி இது நடக்காது என்ற உத்தரவாதத்தைத் தர முடியுமா?எஸ்டேட்டில் வேலை இல்லாத சில நாட்களில், அவர்களின் தோட்டத்தில் தேயிலைக் கொழுந்து எடுத்து, புல் வெட்டி, அவர்கள் கூறும் அத்தனை வேலைகளையும் செய்ததன் பின்னர் அவர்களின் குண்டி கழுவாத ஒரு குறையாக நாங்கள் சகலதையும் அவர்களுக்கு செய்து விட்டு வருகிறோம். காலையில் இவ்வளவையும் செய்து விட்டு இரவு எங்களை தாக்குகிறான் என்றால் அவன் என்ன மனிதன் கூறுங்கள். அவர்கள் எங்களை என்ன செய்தாலும் நாங்கள் அதனைத் தாங்கிக் கொண்டிருக்கிறோம் என்கின்ற தைரியம் தானே.

இந்தியாவுக்குப் போய்விட்டால் நாங்கள் பசி பட்டினியுடன் இருக்க நேர்ந்தாலும் உயிருக்கும் உடமைகளுக்கும் இப்படியொரு ஆபத்து நேராதே...! எங்களை ஒரு நாய் போல அவர்கள் வைத்திருந்தாலும் பரவாயில்லை. "வெல்லவல"வில் போய் எனது மனைவி பிள்ளைகள் மறைந்திருந்தார்கள். அன்று இரவு அங்கு வந்து அடித்தார்கள் அங்கிருந்து ஓட்டம் எடுத்தனர். அங்கிருந்து கொழும்புகம (நிவித்திகலவில்) எனும் இடத்தில் இருக்கும் எங்களது சகோதரியின் வீட்டுக்கு கால்நடையாகவே போய் சேர்ந்த போது அங்குள்ள சிங்களவர்கள் வந்து வேவல்வத்தையைச் சேர்ந்தவர்கள் இங்கிருக்கிறார்களா எனக் கூறி, கூடி வந்து அடித்துள்ளனர். எனது மைத்துனர் போய் அப்புகஸ்தன்ன எனும் இடத்திலுள்ள தனது வீட்டுக்கு கூட்டிச் செல்ல முனைந்த போது அவரையும் அடித்து விரட்டியுள்ளனர். அங்கிருந்து மீண்டும் நிவித்திகலைக்கு வந்து சேர்ந்த போது சிறிது நிலமை தணிந்திருந்தது. ஆனாலும் உயிரைக் கையில் பிடித்தபடி மறைவாக இருந்து விட்டு இப்போது இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் வீடு வந்து சேர்ந்தனர். நாங்கள் மிச்சம் பிடித்து சேகரிப்பவையும், எமது பிள்கைளின் கல்வி வளர்ச்சியையு; அவர்களால் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை. நாங்கள் கொஞ்சம் நன்றாக உடுத்து திரிவதை சகித்துக்கொள்ள முடியவில்லை. இவர்களை எங்களை மீறிவிடுவார்களோ என்ற சந்தேகமும், பயமுமே எரிச்சலுமே எங்களின் மீது வெறித்தனமாக நடந்து கொள்ள வைத்திருக்கிறது. இவர்கள் என்றைக்குமே தங்களின் அடிமைகளாக இருக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்துவதற்காகத் தான் 3 வருடத்துக்கும், 5 வருடத்துக்கும் ஒரு முறை நாங்கள் இப்படி தட்டிவிடப்பட்டுக் கொண்டிருக்கிறோம். பொலிஸாரில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. இத்தனை அநியாயங்களையம் புரிந்தவர்களோடு தான் இரவு வேளைகளில் ஒன்றாக சேர்ந்து குடித்து கும்மாளமிடுகிறார்கள். பொலிஸாரின் அனுசரணையுடன் மேலும் எதுவும் நடக்கலாம்.

அலுப்பொல பகுதியில்,விஜயா இரு குழந்தைகளின் தாய்வேவல்வத்தையைச் செர்ந்த மூன்று பேரை நாங்கள் வைத்திருந்ததாகக் கூறியே இதனை வந்து தாக்கினர். அழித்து விட்டுச் சென்றுவிட்டனர். இவ்வளவு காலம் வீட்டோடு இருந்த நான் தற்போது வேலைக்கு போகத் தொடங்கியிருக்கிறேன். ஒன்றும் மிச்சம் வைக்கவில்லை.ஓரு மாணவியும்(இவர்கள் எதிர்த்து நின்றிருக்கிறார்கள்)அன்று இரவு 7.30 மணியிருக்கும் 200க்கும் மேற்பட்ட வர்கள் பல வாகனங் களில் வந்து சேர்ந்தார் கள். நானம் அப்பாவும் தான் இருந்தோம். வந்த வேகத்தில் தாக்கத் தொடங்கினர். அப்பா வும் தாக்கினார். என்னை எரிப்பதற்காக பெற்றோல் ஊற்றி எரிக்க முற்படுகையில் அப்பா அதனைத் தடுத்து நிறுத்தி சண்டையிட்டார். ... பஸ்ஸில் எல்லாம் சுதந்திரமாக போக முடிவதில்லை. போக முடிந்தால் நானும் பாடசாலை போய் தொடர்ந்து கற்றிருப்பேன்.மாணவியின் தகப்பனார்என்னங்க 1957இலிருந்து தொடர்ந்து அடி வாங்கிக்கொண்டிருக்கிறோம். இனி ஓட ஏலாது. எப்படிப் பொறுத்துக் கொள்வது.இரும்புக் கம்பிகள், பொல் லுகள், பெற்றோல், மண்ணெண்ணெய், எல்லாவற்றையும் கொண்டு வந்து தாக்கினர். அருகிலிருந்தவர்கள் எல்லோரும் ஓடி விட்டிருந்தனர். என்னை கம்பியால் தலையில் தாக்கினர். பின்னர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றேன். இத்தனை நாள் வேறெங்கும் போக முடியவில்லை. இன்று தான் பலாங்கொடைக்குப் போய் வந்தேன்.

வீரப்பன் (34)
முதலில் வந்து தீயிட்டுக் கொளுத்தி விட்டு போனதன் பின்னர் நாங்கள் அதனை அனைத்துக் கொண்டிருந்த போது மீண்டும் 8.30க்கு வந்து தியிட்டுக் கொளுத்தினர். அனைய, அனைய சூழ உள்ளவர்கள் வந்து திரும்பத் திரும்ப தீயிட்டனர்.

ஏக்கஸ்லேன் லேன்ராமையா குமரன் (30) (ஏக்கஸ்லேன்-மரத்தோட்டம்- 
இ.தொ.கா.வின் தோட்டத் தலைவரொருவர்)இங்கு அடித்தவர்களில் பலர் வேறு யாருமல்ல இவர்களைத் தெரிந்த சிங்களவர்கள் தான். சூழ உள்ளவர்கள் தான். ஊர் முழுக்க அடிபட்டுக் கொண்டிருந்த போது நாங்கள் உடனேயே அறிவிக்க வேண்டிய இடங்களுக்கு அறிவித்துவிட்டு சில சிங்களவர்களின் அதரவுடன் தோட்டத்துக்கு காவல் நின்று பாதுகாத்துக் கொண்டோம்.

வீரய்யா (ஏக்கஸ்லேன் லோவர் டிவிஷன் இ.தொ.கா. தலைவர்)
எங்கள் லயன்களும் வேவல்வத்தைக்காரர்களை பாதுகாத்திருக்கிறோம் என்று தான் 9ஆத் திகதி இரவு தாக்கப்பட்டோம். இங்கிருக்கும் 77 வீடுகளில் 57 வீடுகள் முற்றாக நாசமாக்கப்பட்டு விட்டன. வேவல்வத்தைக்காரர்களுக்கு பாதுகாப்பு அளிக்கக்கூடாது என்று அன்று மத்தியானமே எங்களுக்கு துரையிடமிருந்து உதத்தரவு வந்துவிட்டது. அன்று நாங்கள் தோட்டத் தலைவர்மார் கூட்டமொன்றுக்குப் போய்விட்டு வரும் வழியில் இங்கு தாக்கப்பட்டுக் கொண்டிருப்பதைக் கேள்விபட்டோம். தூரத்திலேயே நெருப்பைக் கண்டோம். ஒரே கதறல் சத்தமும் ஓட்டமும், நெருப்புமாக ஒரே கலவரமாக இருந்தது. கண்ணில் கண்டவர்களை அடித்தனர். எல்லோரும் ஓடினர். பெண் பிள்ளைகளை உடனேயே ஒரு இடத்துக்கு அழைத்து காப்பாற்றினோம். ஆனால் கல்லால் எறிந்து காயப்படுத்தினார்கள். இங்குள்ள ஆண்கள் பலரை கத்தியால் வெட்டிக் காயப்படுத்தினார்கள்...பஸ்களில் எங்களால் பயணம் செய்ய முடிவதில்லை. எங்களை கேலி செய்து, இருக்கையிலிருந்து இழுத்துப்போட்டு "தெமலா" என திட்டிப் பேசுவது, தூஷனத்தால் எமது பெண் பிள்ளைகளை ஏசுவது என்பன இங்கு சகஜமான ஒன்று.ஒரு இளைஞரிடம்இதனை பொறுத்துக்கொண்டு எப்படி இருந்தீர்கள் என வினவியபோது. தொண்டமானும் கூட நீங்கள் ஏன் திருப்பித் தாக்கவில்லை என்று எங்கிளிடம் கேட்டார். திருப்பி எதையாவது செய்திருந்தால், அவர்கள் மிச்சம் வைத்துவிட்டுப் போனது எங்கள் உயிர் ஒன்றை தான், அதையும் இழக்க நேரிட்டிருக்கும்.

கே.சண்முகராஜா (38)
அந்த டிவிஷனிலேயே பெரிய கடை வைத்திருந்தவர் தற்போது இவருக்கு எஞ்சியிருப்பது இவர் ஓடும் போது அணிந்திருந்த உள் பனியனும், சரமும் தான்."பணத்தையோ எனது ஆவணங்களையோ, உடுதுணிகளையோ எத....னையும் எடுக்கவில்லை. உயிர் ஒன்றை காப்பாற்றுவது தான் ஒரே நோக்கமாக இருந்தது.... பேசாம நம்ம ஊரைப் பாத்து போறது தானுங்க சரி. இனிமேல் இங்க இருக்க முடியாதுங்க...."இந்தியாவை அவ்வளவு நம்புறீங்களா?"வேறென்னங்க இங்க தமிழருக்கு ஏதாச்சுன்னா, அவங்க அங்க மறியல் செய்யிறாங்கல்ல... அது அந்த அக்கறையினால தானுங்களே... அந்த துடிப்பினால தானுங்களே... நாங்க யாரை நம்புறதுங்க... உசுர மட்டுமாவது காப்பாத்திக்க வேணாமுங்களா...?"

தர்மதாச. இ.ரஞ்சித், தபிராஜா (படையிலிருந்து தப்பியவர், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்) ஆகிய இந்த டிவிசனைச் சேர்ந்த சிங்களவர்கள் இதில் சம்பந்தப்பட்டிருந்தார்கள் என்பதை பலரிடமிருந்து அறியக்கிடைத்தது.
திக்குமுக்குலானஒரு இளைஞன்.9ஆம் திகதி இரவு 8.00 மணியிருக்கும், பல வாகனங்களில் இருந்து 400க்கும் மேற்பட்டவர்கள் வந்திறங்கி ஓடி வந்தனர். அவர்கள் சுற்றி வளைத்து வந்தனர். அவர்களைக் கண்டவுடன் ஓடினோம். இதில் ஈடுபட்டவர்களில் பெரும்பாலானவர்கள் இப்பிரதேசத்தைச் சூழ உள்ள சிங்களவர்களே. முதலில் பல வாகனங்களில் வந்தவர்கள் தாக்கி சின்னாபின்னப்டுத்திவிட்டுப் போனதன் பின்னர் அடுத்த அணி வந்து மிகுதியை கொள்ளையடித்துவிட்டு இருந்ததை நாசம் செய்து விட்டுப் போயுள்ளது. எல்லோரும் தப்பியோடி மலைக் காடுகளில் மறைந்திருந்திருந்து தங்களின் குடியிருப்புகள் நாசமாவதை பார்த்துக் கொண்டிருந்திருக்கின்றனர். இங்கு ஏறத்தாழ 40 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

பழனியம்மாள்
வேவல்வத்தையில் கொலை செய்த நபரை என் தம்பி லாசர் தான் அழைத்து வந்ததாக ஒரு கதையைப் பரப்பி 8.30 அளவில் இங்கு வந்து பரையும் தாக்கி லாசரைத் தேடிர். லாசரிடமே வந்து யார் லாசர் என்று கேட்டனர். லாசரை முந்திக் கொண்டு நானும், லாசர் இந்த வழியால் போனார் என்றோம். வெளியில் வந்தவுடன் லாசர் தப்பிப் போனார். பின்னர் தான் இங்கு எல்லோரும் தான் தாக்கப்பட்டோம். உண்மையில் எனது தம்பியிடம் ஒரு வான் உள்ளது. ஆனால் அவர்கள் கூறும் எந்த நபரையும் என் தம்பி கூட்டிவரவில்லை. இங்குள்ள கணக்குப்பிள்ளை தான் இந்த பகுதியில் நடந்த தாக்குதலுக்கு வழிகாட்டியுள்ளார்.

தேவநேசம் (27)
வான் அன்று வெளியில் எடுக்கப்படவே இல்லை. பொலிஸார் வந்து இப்போது வானையும் கொண்டு போய்விட்டனர். கணக்குப்பிள்ளை ஜெயசேன தான் இங்கு தாக்கப்பட வெண்டிய வீடுகளை குறித்துக் கொடுத்துள்ளார். முதலில் வசதியான வீடுகள் தான் தாக்கப்பட்டன. பின்னர் தான் ஏனையவையும் தாக்கப்பட்டன.இந்த வெறியாட்டத்தில் ஈடுபட்டவர்களில் அடையாளம் காணப்பட்டவர்கள் பலரது விபரங்களடங்கிய பட்டியலொன்றையே சரிநிகருக்குக் கொடுத்தனர் தொழிலாளர்கள். இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் வந்த வாகனங்களில் சிலவற்றின் வாகன இலக்கங்களையும் எம்மிடம் கொடுத்தனர். (சுபேஸ் முதலாளியின் வாகனம் 58-6157)

இராசகல்ல யோகநாதன் (25)(தேசிய தொழிலாளர் காங்கிரசின் தோட்டத் தலைவர்)
200க்கும் மேற்பட்டவர்கள் அன்று இரவு 8.30 மணியளவில் வந்து எல்லோரையும் தாக்கினர். எல்லாமாக 39 காம்பராக்கள் அத்தனையும் நொறுக்கப்பட்டுள்ளன.சந்தனமேரி (38)துவக்குகள், வாள்கள் என்பவற்றைக் கொண்டு வந்தனர். என் கனவரைத் தாக்கினர், தலையில் வாளால், தாக்கியதில் இதோ பாருங்கள் தையல் போட்டிருக்கிறது. அன்று இரவு நாங்கள் எல்லோரும் காடுகளுக்குள் ஒடி ஒளிந்து பின்னர் இரண்டவது நாள் துரை எங்களை அழைத்து ஸ்டோரின் வைத்திருந்தார். நான்கு நாட்களின் பின்னர் தான் வெளியில் வந்தோம்.

சரிநிகர் - ஒக்டோபர் 1998 - இதழ் - 156

வீரகேசரி ஆசிரியர் தேவராஜாவை TNA ஊடகத்துறையில் இருந்து வெளியேற்றியது

- த ஜெயபாலன்


வீரகேசரி பத்திரிகையின் ஊடகத்துறையில் 25 ஆண்டுகள் சேவையாற்றி இலங்கையின் முதல்தர பத்திரிகை ஆசிரியராக இருந்த வி தேவராஜா பத்திரிகையின் ஊடகப் பகுதியில் இருந்து நிர்வாகப் பிரிவுக்கு மாற்ற நிர்ப்பந்திக்கப்பட்டு உள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்திய தூதரகத்தினூடாகவும் வீரகேசரி இயக்குநர்கள் அவைக்கூடாகவும் வழங்கிய அழுத்தங்களை அடுத்து வி தேவராஜா அவரது ஆசிரியர் பொறுப்பில் இருந்து வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டு உள்ளார்
யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் உதயன் பத்திரிகையின் நிறுவனருமான பா உ சரவணபவனின் மைத்துனர் சு வித்தியாதரன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் ஆகியோரே வி தேவராஜாவை வீரகேசரியின் ஆசிரியர் பதவியில் இருந்து வெளியேற்றுவதில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். சு வித்தியாதரன் யாழ் உதயன் பத்திரிகையின் ஆசிரியராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவரும் இந்தியத் தூதரக அதிகாரிகளைச் சந்தித்து வி தேவராஜாவை ஆசிரியர் பீடத்தில் இருந்து வெளியேற்ற வற்புறுத்தி உள்ளனர். இந்த அழுத்தம் வீரகேசரி இயக்குனர் அவைக்கு இந்தியத் தூதரகத்தால் வழங்கப்பட்டு உள்ளது. அதுமட்டுமல்லாமல் சு வித்தியாதரனும் இரா சம்பந்தனும் வீரகேசரியின் இயக்குநர் அவையினருடன் பேசி வி தேவராஜாவின் வெளியேற்றத்தை உறுதிப்படுத்தி உள்ளனர்.
வீரகேசரி பத்திரிகையின் பிரதம ஆசிரியர்கள்; வீரகேசரி தினசரி பத்திரிகைகளுக்கும், வாரமலருக்கும், வீரகேசரியின் வார வெளியீடுகளுக்கும் பொறுப்பாக இருந்தனர். ஆனால் வி தேவராஜா பிரதம ஆசிரியராக நியமிக்கப்பட்ட போது வீரகேசரியின் தினசரி பதிப்புக்கு பிரபாகரன் என்பவர் ஆசிரியராக நியமிக்கப்பட்டார். வீரகேசரியின் வாரமலர் மெற்றோ மித்திரன் உட்பட்ட 5 சஞ்சிகைகளுக்கு வி தேவராஜா பிரதம ஆசிரியராக நியமிக்கப்பட்டார். இந்த வேலைப் பகிர்வு என்பதும் பிரித்தாளும் நோக்குடனேயே மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
செப்ரம்பர் முற்பகுதியில் இருந்து வீரகேசரியின் தினசரி பத்திரிகைக்கு பொறுப்பாக இருந்த பிரபாகரன் வீரகேசரியின் வாரமலர் உட்பட வீரகேசரியின் சஞ்சிகைகளுக்கு பொறுப்பாக நியமிக்கப்பட உள்ளார். வி தேவராஜா பதவி உயர்வு என்ற பெயரில் ஊடகத்துறையில் இருந்து நீக்கப்பட்டு நிர்வாகப் பகுதிக்கு மாற்றப்பட உள்ளார்.
வி தேவராஜா இலங்கையில் உள்ள தமிழ் பத்திரிகையாளர்கள் மத்தியில் மிகுந்த கல்வித் தரமும் திறமையும் மிக்கவர் அவர் ஆசிரியராகக் கடமையாற்றிய காலத்திலேயே வீரகேசரி கூடுதல் வாசகர்களைக் கொண்டு திகழ்ந்தது. மேலும் “வி தேவராஜா தான் ஏற்றுக்கொண்ட, நம்புகின்ற கருத்துக்களை ஆணித்தரமாக எழுதத் தயங்காதவர்” என்கிறார் ஆய்வாளர் மு நித்தியானந்தன். ”இதுவே அவரை ஊடகத்துறையில் இருந்து வெளியேற்ற நிர்ப்பந்தித்தது” என்றும் “வி தேவராஜா வின் மலையகப் பின்னணியும் அதற்குக் காரணமாக அமைந்திருக்கலாம்” எனவும் மு நித்தியானந்தன் தேசம்நெற் க்கு தெரிவித்தார். மலையகத்தை பூர்வீகமாகக் கொண்ட மு நித்தியானந்தன் வி தேவராஜாவின் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.
வி தேவராஜா ஊடகத்துறையில் இருந்து வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டதன் பின்னணி:
வி தேவராஜா தமிழீழ விடுதலைப் புலிகள் மீது மிகுந்த மென்போக்கு உடையவர். அன்றைய கால கட்டத்தில் அவருக்கு மிகுந்த அச்சுறுத்தல் இருந்த போதும் அவர் தொடர்ந்தும் தனது ஊடகத்துறையில் தனக்கு நியாயம் எனப்பட்டதை ஆணித்தரமாக எழுதி வந்தார்.
2009 மே 18இற்குப் பின்னும் தேவராஜா தொடர்ந்தும் அரசுக்கு எதிரான தனது நிலைப்பாட்டில் மிக உறுதியாகவே கருத்துக்களைப் பதிவு செய்து வந்தார். 2010 இல் லண்டனில் இடம்பெற்ற சர்வதேச தமிழ் பத்திரிகையாளர் ஒன்றியத்தின் மாநாட்டில் இலங்கை அரசு மீதான காட்டசாட்டமான விமர்சனத்தை வைத்திருந்தார். சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான ஊடகவியலாளர் அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
மே 2009 இற்குப் பின்னரும் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான மென்போக்குடனேயே வி தேவராஜா காணப்பட்டார். “அவர் தீவிர தமிழ் தேசியவாதிகள் மீது குறிப்பாக கஜேந்திரகுமார் குழுவினருடன் கருத்தியல் நட்பு உடையவர்” எனத் தேசம்நெற்க்கு தெரிவிக்கிறார் ஆய்வாளர் இதயச்சந்திரன். வீரகேசரியில் பத்தி எழுதி வருகின்ற இதயச்சந்திரன் வி தேவராஜாவுடன் மிக நெருக்கமானவர். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரனின் தலைமை மீது மிகுந்த மதிப்புடைய இதயச்சந்திரன் “மகிந்த அரசுக்கு எவ்விதத்திலும் குறையாத ஊடக அடக்குமுறையை தமிழ் தலைமைகள் கொண்டிருப்பதை இச்செயல் காட்டுகின்றது” எனத் தெரிவித்தார்.
வி தேவராஜா தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக மிகக் கடுமையான விமர்சனங்களை கொண்டவர் என்றும் தமிழரசுக் கட்சி மற்றும் தமிழ் கட்சிகளின் தலைமைகள் தமிழ் மக்களை ஏமாற்றுகின்றனர் என அவர் நம்புவதாகவும் அதனையே வி தேவராஜா தனது பத்தியில் எழுதி வருவதாகவும் இதயச்சந்திரன் குறிப்பிட்டார். இதற்காகவே தேவராஜாவை வீரகேசரியின் ஊடகப் பகுதியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்பதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு குறியாக இருந்ததாக இதயச்சந்திரன் சுட்டிக்காட்டினார்.
இதனை உறுதிப்படுத்திய மு நித்தியானந்தன் அரசாங்கத்துடன் என்ன பேசுகின்றோம் என்பதை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெளியிட வேண்டும்; தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் வேலைத்திட்டத்தை வெளியிட வேண்டும்; காலம் காலமாக தமிழரசுக் கட்சியினர் மேற்கொள்ளும் ஏமாற்று அரசியலை அனுமதிக்க முடியாது போன்ற தீவிரமான அரசியல் கருத்துக்களை வி தேவராஜா எழுதி வந்துள்ளார் எனத் தெரவித்தார். மு நித்தியானந்தன் மேலும் தெரிவிக்கையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் ஒரு பிரிவினர் மகிந்த ராஜபக்ச அரசுடன் மிக நெருக்கமாக இருப்பது போன்ற இரகசியங்களை வி தேவராஜா அறிந்து வைத்திருந்தமை போன்ற விடயங்களும் அவரை வெளியேற்ற வேண்டும் என்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டுக்கு காரணமாக இருக்கலாம் எனத் தெரிவித்தார்.
 “சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரசிங்கவை வெளியேற்ற முடியாமல் போனதால் அவர் சுட்டுக்கொல்லப்பட்டார். வி தேவராஜாவை வெளியேற்ற முடிந்ததால் அவர் சுட்டுக் கொல்லப்படவில்லை” எனத் தெரிவித்த மு நித்தியானந்தன் இருவருமே அதிகார சக்திகளால் தாங்கள் நேசித்த ஊடகத்துறையில் இருந்து வெளியேற்றப்பட்டனர் எனத் தெரிவித்தார். வி தேவராஜா வுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இந்த அநீதிக்கு எதிராக இலங்கை ஊடகங்கள் குரல் எழுப்பாதது வேதனையானது என்றும் மு நித்தியானந்தன் தெரிவித்தார்.

நன்றி - தேசம்நெட்

மலையக வேலைநிறுத்தப் போராட்டம்! துயர் கதை முடியவில்லை!

"..பிற்போக்குக் காரர்களால்பின்தள்ளப்பட்டீர்கள்முற்போக்குக்காரர் நாம்முறியடிப்போம் இன்னல் என்றார்எப்போக்குக்காரர் வந்தும்இன்னல் களையவில்லை-துன்பம் தொலையவில்லைதுயர்கதையோ முடியவில்லை...."
"...எத்தனையோ பேர்கள் வந்தார்கள்எதையெதையோ சொன்னார்கள்.மெத்தையிலே உன்னை வைத்துமேன்மையுறச் செய்வோமென்றுஅத்தனையும் நம்பியுள்ளம்ஆசையுடன் தொலையவில்லை..."
"...மண்ணதிர விண்ணதிர வாய்ச்சிலம்பமாடிமாண்டொழிந்த பழமையினை இன்னுமிங்குக் கூறிகண்ணெதிரே கொடுமை கண்டும்கற்சிலையாய் மாறிகாரேறிப் பவணிவரும் கனவான்கள் கூட்டம்உன்னுதிரம் உறிஞ்சியுடல் உப்புகின்றதை நீஓர் நிமிடம் சிந்தித்தால் உன் வாழ்வு மலரும்புன்னதனில் வேல் பாய்ச்சப் பொறுத்திருப்பதோடா?பொங்கியொழு சிங்கமென எந்தன் மலைத்தோழா!..."-குறிஞ்சித் தென்னவன் கவிதை ("ஒரு கனவு நினைவாகிறது"இலிருந்து)
மலையகத் தொழிலாளர்களின் பொங்கியெழுகின்ற போராட்டங்களின் போதெல்லாம், கூடச் சேர்ந்து தலைமைக் கொடுப்பதாகக் கூறிக் கொண்டு சென்று, இடையில் பிரேக் போட்டு நிறுத்தி நகர விடாது செய்கின்ற பாத்திரத்தை காலாகாலமாக மலையக தொழிற் சங்கங்கள் செய்து வந்திருக்கின்றன. அப்படியான தொழிற்சங்கங்களில் இலங்கை தொழிலாளர் காங்கிரசுக்கும் அதன் தலைவர் தொண்டாமானுக்கும் நிறையவே பங்குண்டு.ஏப். 22ம் திகதியிலிருந்து ஏப்.27ம் திகதி வரை நடந்த அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தின் போதும் இதுவே நடந்தது. தொழிலாளர்களின் கோரிக்கைகள் தொடர்பாக இறுதிவரை தோட்டக் கம்பனிகள் உடன்படாத போதும் வேலை நிறுத்தத்தை அநாயாசமாக கைவிட்டன தொழிற்சங்கங்கள். உண்மையிலேயே 'செத்தவனுக்கு தான் சுடுகாடு தெரியும்' என்பது போல இத்தனை காலமும் துன்பப்பட்ட தொழிலாளர்களுக்கே இப்போராட்டத்தின் வலிமை தெரியும்.வேலை நிறுத்தத்தின் இறுதி நாளான்று பல தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தை தொடரும்படி தொழிற் சங்கங்களை நோக்கிப் படையெடுத்த போதும் அவை நழுவிச் சென்றன. இறுதியில் போராட்டம் தெழிலாளர்களின் பலத்தைக் காட்ட மட்டுமே பயன்பட்டதேயொழிய தமது கோரிக்கைகளை வென்றெடுக்க முடியவில்லை. உண்மையில் இதன் மூலம் வெற்றி பெற்றது ஆளும் வர்க்கமும் கம்பனி முதலாளிமார்களுமே என்பது தான் உண்மை. இப்போராட்டத்தை ஆரம்பத்திலிருந்தே மீள்பார்வையொன்றை செலுத்துவது இங்கு பொருத்தமானது.போராட்டத்தின் பின்னணி:இலங்கையில் ஏனைய துறைகளை விட தோட்டத் தொழிற்துறையைச் சார்ந்த தொழிலாளர்களே கடந்த பல வருடங்களாக குறைந்த சம்பளத்தைப் பெற்று வந்திருக்கிறார்கள்.அதற்காகப் போராடியும் வந்திருக்கிறார்கள். 1984 இலும் இதற்காகவே 12நாள் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்பட்டது. குறிப்பாக சம்பள உயர்வு குறித்தும் சம சம்பள உயர்வு குறித்தும், இவ்வேலை நிறுத்தப் போராட்டம் நடந்திருக்கின்றது. அன்று ஆட்சியிலிருந்த ஜே.ஆர். அரசாங்கம் "கிழமைக்கு ஆறு நாள் வேலையையும், தோட்டத்துறை ஆண் தொழிலாளர்களுக்கும், பெண் தொழிலாளர்களுக்குமான சம சம்பளமாக 23.74 சதத்தையும்" வழங்குவதாக ஒப்புக் கொண்டது.அதன் பின்னர் அவ்வப்போது தொழிலாளர்களின் நிறைவேற்றப்படாத கோரிக்கைகளுக்காகவும் சம்பள உயர்வு குறித்தும் போராட்டங்கள் நடத்தி, ஒரு சில உரிமைகளை மாத்திரம் பெற்;றுக் கொண்டார்கள்.1987 ஆம் ஆண்டின் போதும் ஜே.வி.பி. யின் தொழிற் சங்கம்: தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் மாதச் சம்பளமாக ஆக்க வேண்டுமென்றும்,அது 2500 ரூபாவாக இருக்க வேண்டுமென்றும், அப்போது கோரிக்கை விடுத்துமிருந்தது.1992ஆம் ஆண்டின் வரவு-செலவுத் திட்டத்தின் போது அரசாங்க ஊழியர்களுக்கு 20 வீதம் சம்பள உயர்வு வழங்கிய போது தோட்டக் தொழிலாளர்களுக்கும் 20ரூபா சம்பள உயர்வு வழங்கப்பட்டது. அதன்படி முதற் கட்டமாக ஜனவரியிலிருந்து 12ரூபா வழங்கப்பட்டதுடன், 1993 ஜீலையிலிருந்து மிகுதி எட்டு ரூபாவையும் சேர்த்து கொடுப்பதாக அன்றைய பிரேமதாச அரசாங்கம் ஒப்புக் கொண்டது. எனினும் இன்று வரை இந்த எட்டு ரூபா வழங்கப்படவில்லை. அதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று தோட்டத்துறை தனியார் மயமாக்கப்பட்டதே 1992 {லையில் அரச கம்பனிகளில் பல தனியார் மயமாக்கப்பட்டு அரசுக்கும் கம்பனி துரைமார்களுக்குமிடையில் ஏற்பட்ட சமரச உடன்பாடுகளின் விளைவே தொழிலாளர்களின் வயிற்றில் ஏற்பட்ட இந்த அடி. அன்றைய அந்த 8 ரூபாவுக்கு போராடியவர்களே இன்றும் அதைத் தொடர்கிறார்கள். இன்று 1996ம் ஆண்டு நடந்து கொண்டிருக்கிறது. வருடாந்தம் சகல துறையினருக்கும் வருடாந்த சம்பள உயர்வு வழங்கப்படுகின்றது. வாழ்க்கைச் செலவுப்புள்ளி மாதாமாதம் உயர்ந்து கொண்டுதான் சென்றிருக்கின்றன. ஆனால் இவ்வப்பாவி தொழிலாளர்கள் 1993ஆம் ஆண்டின் போது கேட்டிருந்த 8 ரூபாவையே இன்றும் கேட்கின்றனர். 1994இன் சம்பள உயர்வையோ 1995ன் சம்பள உயர்வையோ 1996இனதோ அல்லது நியாயமாக அத்தனை வருடங்களினதோ சம்பள உயர்வை கேட்கவில்லை அவர்கள். ஆனால் அந்த 8 ரூபாவைக் கூட வழங்க மறுத்து விட்டன கம்பனிகள். 8 ரூபா என்ன 3 ரூபாவைக்கூட தற மறுத்துவிட்ட நிலையில் தொழிலாளர்களின் போராட்டத்தையும் தொழிற்சங்கங்கள் இடைநிறுத்தி விட்டன. மலையக மக்கள் முன்னணியோ இன்னும் ஒருபடி மேலே போய் "அரசு, ரூபா 2.76சதம் தருவதாக ஒத்துக் கொண்டு விட்டது. இன்னும் என்ன?" என்று சிங்கள் பேரினவாத அரசு கேள்வி எழுப்புவது போல் கேட்டுள்ளது. ஆரம்பித்தது எப்படி?தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்திற்கு உந்து சக்தியாக இருந்தது மார்ச் மாதம் ப+ண்டுலோயா சீன், மடகும்புர, வட்டகொட ஆகிய தோட்டங்களில் தொழிலாளர் மேற்கொண்ட போராட்டமே. அவ்வேலை நிறுத்தம் சில தொழிற் சங்கங்களினால் காட்டிக்கொடுப்பிற்கு உள்ளாக்கப்பட்ட தோட்டக் கமிட்டி தலைவர்கள் பலர் முன் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டனர். நீதி கோரி கிளர்ந்தெழுந்த இத் தொழிலாளர்களின் பிரச்சினையைத் தொடர்ந்தே ஏனைய தொழிலாளர்களும் தன்னிச்சையாகவே வேலை நிறுத்தத்தில் ஈடுபட காரணமாகியது. இதைத் தொடர்ந்தே மார்ச் மாதம் 18 திகதி இ.தொ.கா. உத்தியோகத்தர் சபை கூடி ஏப் 22-27 வரை அடையாள வேலைநிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்தது. பிரதானமாக,ஃ 8ரூபா சம்பள உயர்வுஃ வருடத்தில் 300 நாள் வேலைஆகிய கோரிக்கைகளை முன் வைத்தது. அதனைத் தொடர்ந்து மார்ச் 26ம் திகதியன்று "தொழிற்சங்கங்களின் கூட்டான "பெருந்தோட்டத் தொழிலாளர் கூட்டுக் கமிட்டி" கூடி இ.தொ.கா. முன்வைத்த அதே கோரிக்கைகளையை முன்வைத்ததுடன் அவ்விரு கோரிக்கைகளையோ அல்லது தொழிலாளர்களுக்கு மாதாந்த சம்பளமாக 2000 ரூபாவை வழங்கும் படியும் கோரியது. ஒன்றிணைந்த போராட்டமாக நடத்த வேண்டும் எனக்கூறி இ.தொ.கா. அறிவித்த அதே திகதியில் தாமும் வேலைநிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்தது. கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக காலவரையறையற்ற வேலை நிறுத்தம் என அறிவித்தாலும் முதலில் பின்னர் அதிலிருந்து பின்வாங்கி இ.தொ.கா. போன்றே '27ம் திகதி வரை' அடையாள வேலைநிறுத்தம் என அறிவித்தது.இதற்கிடையில் போராட்டத்துக்காக ஓரணியில் திரள முன்வராத இ.தொ.கா. கூட்டுக் கமிட்டி தாம் அறிவித்திருந்த 22ம் திகதியை தேர்ந்தெடுத்தற்காக கண்டித்தது. வேலைநிறுத்தத்தின் வெற்றி தமக்கு மட்டுமே சொந்தமானது என உரிமை கோருவதற்காகவே இதிலும் தனது சந்தர்ப்பவாதத்தைக் காட்டியது. இவ்வேலை நிறுத்த அறிவித்தலைத் தொடர்ந்து அரசாங்கம் தொழிற் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஆசைகளைக் காட்டி விலைபேசியது. ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தையை தொடர்ந்து, சில தொழிற் சங்கங்கள் அரசிடம் சரணடைந்தன. காட்டிக் கொடுத்தன.அதைத் தொடர்ந்து ஸ்ரீலங்கா மக்கள் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் சூரியப்பெரும இப்படித் தெரிவித்தார்."எமது ஜனாதிபதி சிறுபான்மை இனங்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக அரசியல் தீர்வொன்றை ஏற்; படுத்த முயற்சி செய்து வரும் இவ்வேளை வேலை நிறுத்தம் செய்வது முறையல்ல.... இதனால் இந்த அரசாங்கத்திற்கு அபகீர்த்தியை ஏற்படுத்த மேற்கொள்ளும் இந்த நடவடிக்கையை நாங்கள் எதிர்க்கிறோம். நாங்கள் இதில் பங்குபற்ற மாட்டோம்"மலையக மக்கள் முன்னனியோ "நாங்கள் தொழிலாளர்களை வேலை நிறுத்தத்தில் ஈடுபடச் சொல்லவுமில்லை. ஈடுபட வேண்டாமென்றும் சொல்லவுமில்லை". என்று நழுவி;யது. அக் கூற்றை மலையக மக்கள் முன்னணித் தலைவர் சந்திரசேகரன் கூறியிருந்த அதே நேரம் அதன் செயலாளர் காதர் தொழிலாளர்களிடமிருந்து அறிக்கைக்கு எதிராக கேள்வி எழுப்பப்பட்டதனைத் தொடர்ந்து" தொழிலாளர் அல்லாத ஏனையோரையும் பங்குகொள்ளச் செய்து அதனை ஒரு அரசியல் போராட்டமாகவே மாற்றப் போகின்றோம். 22ம் திகதி நடக்கவிருந்த வேலைநிறுத்தத்தில் முழு வீச்சுடனும் ம.ம.மு. ஈடுபடும்.. அரசியல் கேரிக்கைகளை முன்வைத்து முழு மலையக மக்களையும் அணிதிரட்டி அரசியல் போராட்டமாக மலையகமெங்கும் நடத்தும்" என்று அறிக்கை விடுத்தார்.ஆனால், மீண்டும் சந்திரசேகரன் "லங்காதீப பத்திரிகைக்கு போடியளித்த போது ஏற்கெனவே தாம் சொன்னதைத் திருப்பிச் சொன்னதைத் திருப்பிச் சொன்னதன் மூலம் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு வெளியில் தாம் இருக்கப் போவதை உறுதியாக நிரூபித்தார். மலையக மக்கள் முன்னணி துரோகமிழைக்கப் போகிறது என்ற அச்சம் பரவலாகப் பரவியது.அப்போதுதான் சில தொழிற் சங்கங்கள் அத்தியட்சகர் பதவிக்கு மலையக மக்கள் முன்னணி, அமைச்சர் பதவிக்கு விலை போய் விட்டதாக கதைகள் பரவின. அவர்கள் விட்ட சுத்துமாத்து கதைகள் உண்மையிலேயே விi போய்விட்டனவோ என சிந்திக்கச் செய்தது.இவ்வேலை நிறுத்தத்திற்கு இடது சாரிக் கட்சிகளான கம்ய+னிஸ்ட் கட்சி, லங்கா சமசமாஜக்கட்சி, நவ சமசமாஜக்கட்சி என்பவை ஆதரவு வழங்கி அறிக்கை வெளியிட்டதுடன், தொழிற்சங்க நடவடிக்கையை முறியடிக்க அவசரகால சட்டம் பயன்படுத்தப்படக்கூடாது என அரசைக் கோரியன.ஈ.பி.டி.பி., ,ஈ.பி.ஆர்.எல்.எப்.,புளொட், ரெலோ, ஈரோஸ், ஆகிய ஐந்து தமிழ் இயக்கங்களும் கூட்டாக இப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தன.ஏப்.11ம்திகதி ஜனாதிபதிக்கும் இ.தொ.கா.வுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடந்தது. இறுதியில் 16ம் திகதி கம்பனிகளுடன் கதைத்துவிட்டு பதில் சொல்வதாக தொண்டமானுக்கு உறுதியளிக்கப்பட்டது.இதேவேளை 23 கம்பனிகளை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற முதலாளிமார் சம்மேளனமும் சமரசத்துக்கு அழைத்துப் பேசியது. சிறிதுகூட விட்டுக்கொடுக்க கம்பனிகள் தயாரில்லாத நிலையில் தொழிற்சங்கங்கள் தமது முடிவில் உறுதியாக இருந்தன.எனவே அரசு 14 அம்ச திட்டமொன்றை முன்வைத்தது.அத்தீர்வுத் திட்டத்தில் கூறப்பட்டவை எதுவுமே தொழிலாளர்களின் கோரிக்கைகளோடு முழுதும் தொடர்பு பட்டவையல்ல அக்கோரிக்கைகளோடு முழுதும் தொடர்புபட்டவையல்ல அக்கோரிக்கைகளில் எல்லாமே பொதுஜன முன்னணி அரசாங்கம் பதவிக்கு வருவதற்கு முன்னர் தேர்தலின் போது முன்வைத்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் "மலையகத் தொழிலாளர்" என்கிற தலைப்பின் கீழ் சொல்லப்பட்டவையே. (பார்க்க பெட்டிச் செய்தி) அதைப் புதிதாக வழங்கப்படும் மேலதிக சலுகையாகக் காட்ட அரசு முயற்சித்தது. அதைவிட அவை அம்மக்களின் உரிமைகள், சலுகைகள் அல்ல.இப் 14ஆம் அம்சத்திட்டத்தை எதிர்த்து புதிய ஜனநாயகக் கட்சியின் தேசிய அமைப்பாளர் தம்பையா வெளியிட்டிருந்த அறிக்கையில் "பெருந்தோட்டத் தொழில் அமைச்சினால் முன்வைக்கப்பட்டுள்ள 14 அம்சத்திட்டம் பற்றி பேசி முடிவெடுக்க முன் நிபந்தனையாக வேலை நிறுத்தத்தை கைவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அத்திட்டத்தில் கூறப்பட்டுள்ள விடயங்கள் பற்றி பேச வேண்டிய அவசியமில்லை. அவற்றையாவது நடைமுறைப்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும். அவற்றில் கூறப்பட்டுள்ள வேலைவாய்ப்பு, அரசாங்க உத்தியோகம் என்பன மலையக மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய உரிமைகள். பிச்சைகள் அல்ல...!" எனத் தெரிவித்தார்.இந்த 14 அம்சக் கேரிக்கையில் 13 ஆவது பிரிவானது முற்றிலும் தீர்வல்ல. "நிபந்தனை", "மிரட்டல்" என்பது தான் உண்மை.இதற்கிடையில் அவசரகால சட்டத்தைப் பயன்படுத்தி பொலிஸ் இராணுவத்தை அழையுங்கள் என துரைமார் சம்மேளனம் அரசைக் கோரியது. வேலை நிறுத்தத்தின் மூன்றாவது நாளன்று மலையகத் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் முகமாக தெற்கில் களுத்துறை, காலி, மாத்தறை பகுதிகளைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளர்களும் வேலை நிறுத்தத்தில் இறங்கினார்கள். போராட்டம் ஆரம்பமானது.திட்டமிட்டபடி தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் 22ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. சுமார் 7 இலட்சம் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்தார்கள். எவரும் வேலைக்குச் செல்லவில்லை. வீட்டிலேயே இருந்தார்கள். பல இடங்களில் போராட்ட சுலோகங்கள் தாங்கிய பதாகைகளை தாங்கிக் கொண்டு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். 13ஆம் திகதியே டில்லி செல்வதாக புறப்பட்டு சென்ற தொண்டமான் தனது பேரனும் இ.தொ.க.வின் பொதுச் செயலாளருமான ஆறுமுகம் தொண்டமானை தலைமைத்தாங்க செய்திருந்தார் என்ற போதும் முக்கிய தீர்மானங்களை எடுப்பதற்கு முதல், தொண்டமானுடன் தொலை பேசி மூலம் அனுமதி பெறப்பட்டுக் கொண்டிருந்தது.தொடர்ந்து 23,24 ஆம் திகதிகளில் சாத்தியமாக நடத்தப்பட்டன. இடையில் ஒரு சில தோட்டங்களில் வெளி இடங்களிலிருந்து தொழிலாளர்களைக் கொண்டு வந்து வேலையில் கம்பனிகள் ஈடுபடுத்திய போதும், இரண்டாம், மூன்றாம் நாட்களில் அது அற்றுப்போனது அல்லது மிகக் குறைந்தது.மூன்றாவது நாள் 24ஆம் திகதி முக்கிய திருப்பங்கள் ஏற்பட்டன. அந்நாள் தான் மலையக மக்கள் முன்னணி வேலை நிறுத்தத்திலிருந்து வாபஸ் வாங்கியது. மலையக மக்கள் முன்னணியின் துரோகத்தனம்:மலையக மக்கள் முன்னணியின் தலைவர் சந்திரசேகரன் தொலைக் காட்சிக்குப் பேட்டி கொடுத்தார். அரசு சந்திரசேகரின் வாபஸ் வாங்களை வானொலிச் செய்தியிலும் அறிவித்ததுடன் வானொலியிலும் பேட்டியை ஒலிபரப்பியது."ஆறுமுகம் தொண்டமானுக்கு பிரதியமைச்சர் பதவி வழங்குவதற்கு நாங்கள் ஏன் வேலைநிறுத்தம் செய்ய வேண்டும்....அரசாங்கத்துக்கு இதைவிட நல்ல தீர்ப்பு வழங்க முடியாது. தோட்டத்தொழிற் துறையும் வீழ்ச்சியடைந்துள்ளது."எனப் பேட்டியளித்திருந்தார்.அதே தினத்தில் ம.ம.மு.வினால் பத்திரிகைகளுக்கு விடுக்கப்பட்ட அறிக்கையில்...."நடைமுறைச் சாத்தியமான வேலைத் திட்டம் ஒன்றை அரசு முன்வைத்துள்ளது. அரசின் வேண்டுகோளுக்கு மதிப்பளித்து சில காலம் அவகாசம் வழங்குவோம். தாம் முன்வைத்த கோரிக்கைகளில் பெரும்பாலானவை ஏற்கப்பட்டிருக்கும் நிலையில் வேலை நிறுத்தத்திற்கு நாம் வழங்கிய ஆதரவை நிறுத்திக் கொள்வது எனத் தீர்மானித்துள்ளோம்." எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது பற்றி மலையக மக்கள் முன்னணியினருடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட போது அதன் முக்கியஸ்தர் ஒருவர் இப்படிக் கூறினார்."இந்தத் தொழிலாளர் வேலை நிறுத்தத்தின் மூலம் இ.தொ.கா.வும் ஏனைய தொழிற்சங்கங்களுமே இலாபம் அடைகின்றன. அவற்;றின் உள் நோக்கங்களே இவ்வேலை நிறுத்தத்திற்கு காரணம். ஆனாலும் தொழலாளர்களின் போராட்டத்தில் நாங்களும் கலந்து கொண்டோம். முதல் மூன்று நாளும் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு வழங்கினோம்.ஆனால் அரசு எங்களது கோரிக்கைகளுக்கு செவி சாய்த்ததாலேயே நாங்கள் வாபஸ் வாங்கினோம். எங்களின் பேச்சுவார்த்தைக்குப் பின்தான் 14 அம்சக் கோரிக்கையை எங்களுடன் கதைத்து அரசு முன்வைத்தது. மேலும் அமைச்சர் ரத்னசிறி விக்கிரமநாயக்க நல்லவர். அவர் ஒத்துக் கொண்டால் செய்கிற ஆள். இதற்கு முன்னர் கூட தீபாவளி முற்பணம் 1000 ரூபாவை வழங்குதாக வாக்குறுதியளித்து நிறைவேற்றினார். அரசாங்கம் தான் 2.76 சதமாக சம்பளத்தை உயர்த்தியிருக்கிறதே! பின் என்ன? மேலும் அடையாள வேலைநிறுத்தம் என்றால் என்ன? ஒரு நாள் நடத்தினால் போதாதா? ஏன் ஏழு நாட்கள்?..." இப்படியாக இழுத்துக் கொண்டே போனார்."அப்படியென்றால் 14 அம்சத் தீர்வுத் திட்டத்தில் நீங்களே கூறியிருந்ததைப் போல் "அரசியல் தோரிக்கைகள்" எதுவுமுண்டா? அது என்னவென்பதையும் சொல்வீர்களா...?" இது எமது கோள்வி."சமுர்த்தி நியமனம், கிராம சேவகர் நியமனம்...." என்றெல்லாம் இருக்கிறதே என கூறிக் கொண்டே சென்ற போது, அடுத்த கேள்வியை கேட்பதற்குள்" தான் முக்கிய வேலையொன்றுக்காக வெளியில் செல்வதாகவும் இன்னொரு வேளை கதைப்போம்" என்றும் கூறி விடைபெற்றார்.உண்மையில் இவர் என்ன சொல்கிறார்? தொழிலாளர் தற்போது எதிர்நோக்கும் பாரிய பொருளாதார நெருக்கடியையும் நியாயமான சம்பளத்துக்காகவும் தொழிலாளர்களுடன் நின்று போராட நீங்கள் தயாரில்லையா? நீங்கள் அரசியல் கோரிக்கையாகவும் அரசியல் போராட்டமாகவும் முன்னெடுக்கவேண்டும் என்கிறீர்களே. இந்த 14 அம்சத் தீர்வில் என்ன அரசியல் தீர்வுகள் இருக்கின்றன? சரி, நீங்கள் அரசியல் கோரிக்கைகளைகத் தான் இந்த சந்தர்ப்பத்தில் முன்னெடுக்க வேண்டுமாயின் கிராம சேவகர் நியமனமும் சமுர்த்தி நியமனமும் எப்படி அரசியல் கோரிக்கைகளாகும்? அப்படியென்றால் நிங்கள் அரசுடன் இணையும் போது முன்வைத்த 6 அம்ச கோரிக்கை என்னவானது? ("லங்கா தீப" வுக்கு அளித்த பேட்டியில் அப்படி எந்த நிபந்தனையும் விதிக்காமலேயே அரசுடன் இணைந்ததற்காக கதை விட்டிருக்கிறார்கள் என்பது வேறுகதை) நீங்கள் அரசியலமைப்பு சீர்த்திருத்தக் குழுவுக்கு முன்வைத்த பிராந்தியங்கள் உள்ளிட்ட அரசியல் கோரிக்கைகளுக்கு இன்று என்ன ஆனது? ஏன் உங்கள் ஆலோசனையின் பேரில் உருவாக்கப்பட்ட 14 அம்சத் தீர்வில் அவை உள்ளடக்கப்படவில்லை? அவை உள்ளடங்காத தீர்வை அரசியல் தீர்வாக ஏற்க எப்படி உங்களால் முடிந்தது?நிச்சயமாகத் தெரியும் இவைபற்றி எல்லாம் இப்போது பேச மாட்டார்கள் என்று. ஆனால் இ,தொ.கா எந்நேரமும் வேலை நிறுத்தத்தை கைவிடக்கூடும் என்று அச்சமுற்றுக் கொண்டிருந்த எல்லோருக்குமே ம.ம.மு முந்தி;க்கொண்டு செய்தது என்னவோ கன்னத்தில் பளீர் என அறைந்தது போல் தான் இருந்தது.உண்மையில் ம.ம.முவினரின் இந் நடவடிக்கை தொண்டமானே கூறியது போல "எரிகிற வீட்டில் பிடுங்குவது லாபம் என்பது போல அரசாங்கத்திடம் நல்ல பேரெடுப்பவர்கள்" என்பது தான் உண்மை இவர்கள் இ.தொ.காவிடமிருந்து தான் கற்றுக் கொண்டிருப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.மலையக மக்கள் முண்ணனி வாபஸ் பெற்ற அதே ஏப்,24ம் திகதி தான் பெருந் தோட்டத்துறை அமைச்சர் ரத்னசிறி விக்ரமநாயக்க இப்படி மிரட்டல் செய்திருந்தார்."2.76 சதம் சம்பள உயர்வும் 300நாள் வேலையும் தரப்படும். ஏற்றுக் கொள்ளுங்கள். கொடுப்பதை ஏற்றுக் கொள்ளாமல் வேலைநிறுத்தம் தொடருமாயிருந்தால் கிடைப்பதையும் இழக்க நேரிடும்" என்றார் அதே தினத்தில் தோட்டத் துறைமார்கள் சம்மேளனத்தின் பிரதித் தலைவர் மகேந்திர அமரசூரிய விரகேசரிக்கு அளித்த பேட்டியில்..,"ஒரு வார வேலை நிறுத்தத்தினால் 50கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படும் தொழிலாளர்கள் கோருகின்ற 8ரூபா சம்பளம் ஒருபோதும் சாத்தியப்படாது" என்றார்.இதே வேலை இவ்வேலை நிறுத்தம் தொடர்பாக சிங்கள பத்திரிகைகளும் இனவாத அடிப்படையில் நோக்கின "லங்கா தீப", "திவயின", ஆகிய இரு பத்திரிகைகள் தொழிலாளர்களின் கோரிக்கைகளை இனவாத கோரிக்கைகளாகவே பிரச்சாரம் செய்தன. தொழிலாளர்களின் கோரிக்கைகளில் எவ்வித நியாயமும் இல்லையென்றும் இது தொண்டமான், யுத்த காலத்தில் புலிகளுக்கு வால் பிடிப்பதற்காகவும் அரசாங்கத்திற்கு நேருக்கடி கொடுப்பதற்காகவும் ஏற்படுத்திய ஒன்றே தவிர வேறென்றுமில்லை என்பதனை குறிப்பிட்டு கட்டுரைகளை வெளியிட்டன. தொண்டமானை புலியாக வரைந்து கார்ட்டுனும் வெளியிட்டிருந்தனர். தோட்டத் தொழிலாளர்கள் வசதியாக இருக்கின்றார்கள். தோட்டத் துறை தான் நஷ்டமடைந்திருக்கிறது என்பதை நிறுபிப்பதற்கான மிகுந்த பிரயத்தனம் செய்து பொய்யான ஆதாரங்களுடன் கட்டுரைகளை வெளியிட்ட ஏப்25ம் திகதிய இதழில் திவியன பத்திரிகை இப்படி கூறியது "தோட்டத் தொழிலாளர்களுக்கென்று இது வரை எல்லாச் சலுகைகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கென்று ஈ.பீ.எப், ஈ.டீ.எப் என்பவற்றுடன் 72ரூபா ஒருநாள் சம்பளத்துடன் வீடு வசதி, போக்குவரத்து வசதி, இலவச சுகாதார மருத்துவ வசதி என்பவற்றுடன் இலவசமாக பாலும் வழங்கப்பட்டு வருகிறது விடுமுறை கொடுப்பனவு எல்லாம் வழங்கப்பட்டு வருகிறது. இதே போன்ற சலுகைகளை தோட்டத் தொழிலாளர்கள் தவிர்ந்த வேறெந்த தொழிலாளர்களும் பெற்றதில்லை. மறுபக்கம் இப்படியான சலுகைகள் அற்ற மற்ற தொழிலாளர்களது உரிமை பற்றிப் பேச ஒரு அரசியல் வாதியுமில்லை."எவ்வாறிருந்த போதும் இறுதியில் 3ரூபாய் சம்பள் உயர்வு 300நாள் வேலை என்பதற்கப்பால் இறங்கி வர அரசு தயாராக இல்லாத நிலையில் 27ம் திகதி வரை போராட்டம் நடந்து முற்றுப் பெற்றது. இறுதி நாளன்று போராட்டத்தை நீடிக்க கோரி தொழிலாளர்கள் படையெடுத்த போதும் தொழிற் சங்கங்கள் அதை ஏற்க மறுத்தன.தொழிலாளர்களின் கோரிக்கைகள் வெற்றியளிக்கவில்லை. மாறாக வழமையாக 16 தொடக்கம் 18 கிலோ கொழுந்து பறிக்கும் தொழிலாளர்கள், 22 கிலோ கொழுந்து பறிக்க நிர்ப்பந்திக்கப் பட்டார்கள். ஏப்24ம் திகதியன்று கொட்டகலையிலுள்ள ஆறுமுகம் தொண்டமானின் வீட்டில் இ.தொ.கா தலைவர்கள், கூடி உரையாடியபோது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் மேலும் ஒரு மாதம் வேலை நிறுத்தத்தை நீடிக்கும் ஆலோசனை ஒரு சில தலைமை உறுப்பினர்களால் முன் வைக்கப்பட்டிருந்தது. உடனே இந்தியாவிலிருந்த தொண்டமானுடன் தொலைபேசியின் மூலம் தொடர்பு கொண்டு, அதுபற்றி கேட்ட போது, 28ஆம் திகதி தாம் வந்ததன் பின் அதனைப் பற்றிக் கதைப்போம் என்று பதில் கூறப்பட்டது. ஆக தொழிலாளர்களின் உண்மையான பிரச்சினைகளை முன்னெடுப்பதற்குப் பதிலாக பெரும்பான்மையான தொழிற் சங்கங்களும் தொழிற்சங்கவாதிகளும் தமது சந்தர்ப்பவாத இருப்புக்காகவே வேலை நிறுத்தத்தையும் கையாள முயன்றிருக்கின்றனர்.தொழிலாளர்களின் கதி....?அவர்களது போராட்டம்...!?அவர்களது கோரிக்கைகள்....!?அவர்களது நம்பிக்கைகள்....!?எல்லாமே வெறும் கேள்விக் குறிகளாய் எழுந்து நிற்கின்றன.துன்பம் தெரியவில்லை.தொடர் கதையோ முடியவில்லை!
பொ.ஐ.மு.வின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் மலையக மக்கள் பற்றிய வாக்குறுதிகள்
  • 1. மலையகத்தில் தொழில் புரிகின்ற தொழிலாள மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கும் சூழல் மற்றும் சுகாதார அபிவிருத்திக்காகவும் விசேட செயற்திட்டங்கள் நடைமுறைப்புடுத்தப்படும்.
  • 2. மலையகத்தில் ஏற்பட்டுள்ள இருப்பிடப் பிரச்சினை நிலையான வீட்டுத் திட்டம் உருவாக்கப்படும்.
  • 3. மலையகத்தின் கல்வி நிலையை உயர்த்துவதற்காக விசேட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
  • 4. மலையகத்தில் வீடுகளுக்கு மின்சாரம், நீர் வழங்கள், பாதை வசதிகள் அமைப்பதற்கான செயற்திட்டங்கள் உடனடியாக நடைமுறைப்படுத்தப்படும்.
  • 5. மலையகத் தொழிலாளர்களுக்கான நிலையான மாதாந்த வருமானத்தை உறுதிப்படுத்துவதற்கான உறுதியான வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
  • 6. மலையகத்தில் தாய்மார்களுக்கும் குழந்தைகளுக்குமான பராமரிப்பு வசதிகள் அளிக்கக்கூடிய செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
  • 7. இந்திய வம்சாவழி சிறபான்மையினம் என அவர்கள் கருதப்பட்டு வருவதால், மலையகத்தில் தமிழ் மக்களுக்கு ஏற்பட்டு வரும் விசேட பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அவசியமான சகல நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
  • 8. சகல பிரஜைகளும் சாதாரண பிரஜைகளாக கருதப்படக்கூடிய வகையிலான சட்டத்திட்டங்கள் உருவாக்கப்படும்.
  • 9. மலையகத் தொழிலாளர்கள் வாழும் இருப்பிடங்கள் பிரதேசசபை ஆட்சிக்குள் கொண்டுவரப்படும்.
  • 10. மலையகத் தொழிலாளர்களின் தொழிற்சங்கங்கள் உரிமைகளையும் நலன்புரி வசதிகளையும் பாதுகாப்பதற்கும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

வெஞ்சர் தோட்டத்தில் பொலிஸ் காடைத்தனம்!

பொலிஸார்-நிர்வாகம் சேர்ந்து நடத்திய காடைத்தனம்:"நாங்க என்னத்தத்தான் அவங் களுக்கு செஞ்சோம். அவங்களுக்கு ஒன்னுமே செய்யலியே. நியாயத்த தானே கேக்கப் போனோம். அதுக்கு போயி ஏனுங்க இத்தனை பெரிய கொடுமை."ஜனவரி.3ம் திகதியன்று நோர்வூட்-வெஞ்சர் தோட்ட நிர்வாகம் அத்தோட் டத்தின் தொழிலாளர்கள் மீது பொலி ஸாரை ஏவி கொடுரமாகத் தாக்கி விரட்டடியதுமல்லாமல் அவர்கள் மீது கண்ணீர்ப் புகைக் குண்டை எறிந்து நடத்திய அட்டுழியங்களைப் பற்றி ஒரு அப்பாவி தொழிலாளர் இவ்வாறு குறிப்பிட்டார்.தோட்டங்கள் தனியார் மயமாக்க ப்பட்டதன் பின் ஏற்கெனவே அடிமை நிலைக்குள் தள்ளப்பட்டு இலங்கையிலேயே பின்தங்கிய வாழ்க்கைத் தரத்தை அனுபவித்து வந்த மலையகத் தொழிலாளர்கள், மேலும் மோசமாக கீழே தள்ளப்பட்டு விட்டார்கள். நாளுக்கு நாள் அதிகார வர்க்கத்தினாலும் தம்மை நேரடியாக ஆதிக்கம் செலுத்தி வரும் கம்பனிகளாலும் மேற்கொள்ளப்ப ட்டுவரும் அநியாயங்கள் அடக்கு முறைகள் என்பவற்றினால் மிகச் சோகத்துக்குரிய அவலத்தை அனுபவித்து வருகிறார்கள். இதற்கு வெஞ்சர் தோட்டத்தில் கம்பனி முதலாளிகளும் கூலிப்படையினரும் கூட்டாக நடத்திய காடைத்தனம் ஒரு சிறந்த சான்று. எவ்வித எதிர்ப்பு நடவடிக்கையோ, போராட்டமோ நடத்தாது தமக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து நியாயம் கேட்கச் சென்றதற்கே இப்படியான அடக்கு முறையென்றால் அங்கு நிலவுகின்ற சூழலை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இந்த அவலத்தை தட்டிக் கேட்க இதுவரை எந்தவொரு சரியான தலைமையும் இல்லாதது அம்மக்களின் அவலத்தின் உச்ச மென்றே சொல்லலாம். இந்த வெஞ்சர் தோட்ட சம்பவத்தைப் பொறுத்தளவில் உண்மை நிலையைக் கண்டறியச் சென்ற எமக்கு, மலையகத்தின் பலம்பொருந்திய அமைப்பான இ.தொ.கா கூட கம்பனியின் நடவடிக்கைக்கு துணைபோகின்ற நிலையை காணக் கிடைத்தது.ஆரம்பம்:முழு நாள் வேலை.அரை நாள் கூலி!கடந்த ஜனவரி 2ம் திகதியன்று வழமைபோல் தொழிலாளர்கள் தமது வேலையைச் செய்தனர். பெண் தொழிலாளர்கள் எல்லோரும் தாம் பறித்த கொழுந்தை கொண்டு சென்று போட்டதன் பின் அவர்களில் 21 பேருக்கு அரைநாட் சம்பளமே போட்டனர். அத்தொழிலாளர்கள் 'இது அநியாயம் இவ்வளவு நேரமும் வேண்டா வெய்யிலில் வேலை செய்தும் அரைபேர் (அரை நாள் சம்பளம்) போடுவது அநியாயம் என்று கெஞ்சினர். ஆனால் நிர்வாகம் அதனை ஒரு பொருட்டா கவே எடுக்கவில்லை. சில மணிநேரம் காத்திருந்து கெஞ்சியும் அன்று முடிவாகவே கூறிவிட்டனர்."இவ்வளவு நேரம் வேல செஞ்சும் இவ்வளவு கொழுந்து தான் பிச்சிங்களா?"என்னங்க புரியாம பேசுரீங்களே! கொழுந்து இருந்தா தானுங்களே பிக்கிறதுக்கு..""அதெல்லாம் எனக்குத் தெரியாது அரைநாள் போட்டது போட்டது தான்.!"அன்று தொழிலாளர்கள் அனைவ ரும் வீடு திரும்பியதன் பின் அத்தோட்ட த்தைச் சேர்ந்த தொழிற்சங்கத் தலைவர்கள் கூடி கதைத்தனர். காலையில் துரையிடம் சென்று இது பற்றி கதைப்பது என்றும் கூடவே தொழிலாளர்களுக்குக் கிடைக்க வேண்டிய 10 வீத லாபத்தையும் கேட்பது என்றும் தீர்மானித்தனர்.அடுத்த நாள் ஜனவரி 3ம் திகதி காலை 8 மணியளவில் ஏறத்தாழ 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தொழிற்சாலையின் அருகில் கூடினர். தோட்ட அதிகாரிகள் முன்னிலையில் அவர்கள் தமது கோரிக்கைகளான 21 பெண் தொழிலாளர்களுக்கும் முழுநாள் சம்பளத்தைப் பெறுவது, மற்றும் லாபத் தில் 10 வீதத்தை பெறுவது ஆகியவற் றைக் கோரினர். கூட்டத்தினர் மீது அதிகாரிகள் மோசமான வார்த்தைக ளால் திட்டியுள்ளனர். அதற்கிடையில் தோட்ட (சுப்பிரின்டன்ட்) அதிகாரிக்கு இத்தகவல் ஏனைய அதிகாரிகளால் அனுப்பப்பட்டிருந்தது.யாருக்காக பொலிஸ்?சரியாக மணி 11.00 ஐ நெருங்கிக் கொண்டிருந்தது. அவ்விடத்துக்கு தோட்ட அதிகாரியின் வாகனமும் அதன் பின்னால் பொலிஸார் நிறைந்த வாகனமும் வந்து சேர்ந்தது. தோட்ட அதிகாரி வரும் வழியில் நோர்வ+ட் பொலிஸாரைச் சரி செய்து கூடவே அழைத்து வந்திருப்பதை தொழிலாள ர்கள் தெரிந்து கொண்டனர். வந்திறங் கிய அதிகாரி ஏனைய அதிகாரிகளுட னும் பொலிஸாருடனும் கூடிக் கதைத் தார். தொழிலாளர்கள் தூரத்தே நின்று அவதானித்துக் கொண்டிருந்தனர்.அதிகாரி வந்து கூறினார், "எதையும் ஏற்க முடியாது. இடத்தை விட்டு போங்கள்... இன்னும் கொஞ்ச நேரத்தில் உங்களுக்கு காட்டுகிறேன் விளையாட்டு. நான் பதில் சொல்லப் போவதில்லை. பொலிஸார் பதில் சொல்வார்கள்.!" என கத்தினார்.தொழிலாளர்கள் ஏற்கெனவே பதட்டமடைந்திருந்தனர். நாங்கள் என்னத்தை பண்ணிபோட்டோம்? ஏன் பொலிஸாரை இவர்கள் அழைத்து வந்திருக்கிறார்கள். அப்படி வந்நதா லும் எங்களது நியாயத்தின் தரப்பிலல் லவா அவர்களும் இருக்க வேண்டும்? ஏன் எங்களின் நியாயத்தைக் கூட கேட்காது அவர்களுடன் ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள்?" என கலவரம டைந்திருந்தனர்.அடித்து நொறுக்கப்பட்ட தொழிலாளர்கள்கொஞ்ச நேரத்தில் பொலிஸாரின் திசையை நோக்கி சைகை காட்டப் பட்டது.தொழிற்சாலையின் வாசலில் இருந்த தொழிலாளர்களை நோக்கி "எல்லோரும் ஓடுங்கள்" என சத்தமிட் டுக்கொண்டே எட்டுப் பொலிஸார் தடியடிப் பிரயோகம் செய்தனர். ஆண், பெண் தொழிலாளர்கள் அத்தனை பேரின் மீதும் கடும் தாக்குதல் நடத்தப்பட்டது. கண்மண் தெரியாமல் அடித்து நொருக்கினர். எதிர்பாராத தாக்குதலை சமாளிக்க முடியாத நிலையில் தொழிலாளர்கள் ஓட்டமெடு த்தனர். தொழிற்சாலையின் வாசலைத் தாண்டியதும் வாசற் கதவை இறுக்கி மூடிக் கொண்டனர்.தொழிற்சங்க தலைவர்கள் தொழி லாளர்களை நோக்கி அனைவரையும் போய்விட வேண்டாம் என அறிவுறுத்தி னர். பலர் காயப்பட்ட நிலையில் வாயிற் கதவுக்கு வெளியில் ஆங்காங்கு அமர்ந்திருந்திருந்தனர். தங்கள் மீது திட்டமிட்டே தாக்குதல் நடத்தப்பட் டதை உணர்ந்து கொண்டனர். சில தொழிலாளர்கள் உரக்க சத்தமிட்டுத் திட்டினர். சில பெண் தொழிலாளர்கள்; பாதையோரத்தில் உட்கார்ந்தபடி சாபமிட்டனர்.பொலிஸ்-நிர்வாகம்:கூட்டாக காடைத்தனம்!கொஞ்ச நேரத்தில் திடீரென உள்ளேயிருந்த பொலிஸ் வாகனம் வெளியே வந்தது. அதில் நோர்வூட் பொலிஸ் ஸ்தானாதிகாரி (ழுஐஊ) உட்பட ஏனைய எட்டுப் பொலிஸாரும் இருந்த னர். பொலிஸ் வாகனம் அங்கிருந்து போவதாக நினைத்த தொழிலாளர்க ளுக்கு ஆச்சரியமாக இருந்தது. ஏனெனில் தொழிற்சாலை வாயிலிலி ருந்து ஏறத்தாழ 30 மீற்றர் தொலைவில் வாகனம் நிறுதப்பட்டது. நிறுத்தப்பட்ட தும் வாகனத்திலிருந்து பொலிஸார் அனைவரும் இறங்கினர். அவர்களில் இருவர் கண்ணீர்ப்புகைக்குண்டு எறியும் துப்பாக்கியை ஏந்தியபடியிருந்தனர்.தோட்ட அதிகாரி சைகை செய்வதை தொழிலாளர்கள் பார்த்தார் கள். அவர்கள் சுதாகரிப்பதற்குள் முதலாவது கண்ணீர்ப்புகைக்குண்டு வந்து வேலு என்பவரின் வயிற்றில் விழுந்தது. அவர் அதிலேயே கதிறிக் கொண்டு சுருண்டு விழுந்தார். அதே நேரம் ஏனையோர் கண்களைக் கசக்கிக் கொண்டு ஓடுமிடம் தெரியாது கலவரமடைந்த நிலையில் ஒருவர் மீது ஒருவர் இடித்துக்கொண்டு கதறினர். இந்த ஓலத்தின் மத்தியில் இன்னுமொரு குண்டு வந்து விழுந்தது. அந்த இடத்தில் பல பெண் தொழிலாளர்கள் இருந்தனர். கதறிக் கொண்டே தடுமாறி ஓடினர். அவர்களில் வயது முதிர்ந்த பெண் தொழிலாளர்கள் உட்பட பலர் தடுமாறி விழுந்தனர். விழுந்தெழும்பிய சிலரால் ஓடமுடிந்தது. சிலர் விரைவாக ஓட முடியாது தவித்தனர். பொலிஸாரும் சில நிமிடங்களில் இடத்தை விட்டு அகன்றனர். காயப்பட்ட தொழிலாளர் கள் ஏனைய தொழிலாளர்களின் உதவியுடன் உடனடியாகப் பொகவந்த லாவ ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லப்ப ட்டனர். முதல் கண்ணீர்ப் புகைக்குண்டு வந்து விழுந்த பழனியப் பன் வேலு (வயது-51) அத்தோட்டத்தின் தொழிற்சங்கத் தலைவர்களில் ஒருவர் (அஸீஸ் ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ்).வயிற்றில் விழுந்த காயம்!சம்பவம் நடந்து 20 நாட்களின் பின் சரிநிகர் அவரை அவரது வீட்டுக்கு சென்று சந்தித்த போது அவர் அப்போதும் படுக்கையிலேயே காணப்ப ட்டார். ஆஸ்பத்திரிக்கு மருந்து எடுக்கச் செல்வதற்காக அவருடன் துணைக்குச் செல்ல இன்னும் சில தொழிலாளர்களும் அங்கு வந்திருந் தனர். அவர் சரிநிகரிடம் கருத்து தெரிவிக்கையில்,"நாங்கள் அவர்களிடம் சண்டை பிடிக்கப் போகவில்லை. ஆனால் எம்மீது அநியாயமாக தாக்கினார்கள். பொலி ஸார் கூட எங்களது நியாயத்துக் காகப் பேச முன்வரவில்லை. தோட்ட அதிகாரி தனது அதிகாரத்தையும் பலத்தையும் செல்வாக்கையும் பயன்படுத்தி பொலிஸாரை தனக்கு வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டார். பொலிஸார் அந்த இடத்தில் எங்கள் தரப்பு நியாயத்தை அறிவதில் அக்கறை காட்டவே இல்லை. நாங்களாக பேசியும் கூட அதனை அசட்டை செய்தனர்." என்றார்.இவரின் வயிற்றில் விழுந்த குண்டினால் ஏற்பட்ட புண்காயங்கள் அப்படியே இருந்தன. குனிய, எழும்ப மிகவும் கஷ்டப்படுகிறார். அந்த இடத்தில் ஒரு கட்டியொன்று காணப்ப டுவதாகவும் எமது கையை பிடித்து வயிற்றில் வைத்துக் காட்டினார்.இச்சம்பவத்தின் போது 6 பெண் தொழிலாளர்கள் கடுமையான பாதிப்பு க்குள்ளாகியிந்தனர்.பெண் தொழிலாளர்களின் கதை!வீ.கந்தையா லெச்சுமி (வயது.47), கே.பார்வதி (வயது.38), செல்லத்துரை வள்ளியம்மா (வயது.38), மாரியாயி (வயது.35), புஸ்பராணி (வயது.32) ஆகிய ஆறு பேரே பாதிக்கப்பட்ட வர்கள். இவர்கள் ஒவ்வொருவரும் குறைந்தது ஏழு நாட்களும் கூடியது 9 நாட்களும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றிருந் தார்கள். கந்தையா லெச்சுமி இப்படிக் கூறினார்."அன்றைக்கு நாங்கள் பறித்த கொழுந்து போதாது என்கிறார்கள். கொழுந்து இருந்தால் தானே பிய்க்கலாம். முடிந்தவரை நாங்கள் சேகரித்துச் சென்ற கொழுந்தை பறித்துவிட்டு அரைநாள் போட்டு விட்டார்கள். நான் ஆஸ்பத்திரியில் மொத்தம் 9 நாள் இருந்தேன்.ஆஸ்பத்திரியும் எம்மீது அலட்சியம்ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இரு நாட்களில் என்னை வீட்டுக்குத் திருப்பி அனுப்பிவிட்டார்கள். எனக்குப் பூரண சுகமாகாத நிலையில் என்னை ஏன் அனுப்பினார்கள் என்று முதலில் தெரியவில்லை. பின்னர் தான் நாங்கள் ஆஸ்பத்திரியில் தொடர்ச்சியாக இருப்பது பொலிஸாருக்கு நெருக் கடியை ஏற்படுத்தும் என்பதால் பொலிஸார் எங்களை உடனடியாக அனுப்பிவிடும்படி ஆஸ்பத்திரிக்கு தெரிவித்திருப்பது தெரியவந்தது. இது தவிர எமக்கு நட்டஈடு தரவேண்டியி ருக்கும் என்பதால் எமக்கு பெரிசாக ஒன்றுமே ஆகவில்லை என காட்ட வேண்டிய தேவை தோட்ட அதிகாரிக் கும் இருந்தது. தோட்ட அதிகாரியும் பொலிஸாருக்கு இது பற்றி சொன்ன தாக பேசிக் கொள்கிறார்கள். இரண்டா வது நாளே எங்களை அவசர அவசரமாக வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள். வீட்டுக்கு வந்ததன்பின் அத்தனை பேருக்கும் மீண்டும் வலி, காய்ச்சல், வாந்தியெடுப்பு என தொடர்ச்சியாக வருத்தம் எடுத்தத னால் தொழிற்சங்க தலைவர்கள் எங்களை திரும்பவும் ஆஸ்பத்திரியில் கொண்டு போய் சேர்த்தார்கள். அதன் பின்பு சிகிச்சை பெற்று மொத்தம் 9நாட்களின் பின் குணப்படுத்தப்பட்டு வீடு வந்து சேர்ந்தேன். நாங்கள் ஆஸ்பத்திரியில் இருந்த அத்தனை நாளும் ஏனைய நோயாளிகளுக்கு கொடுக்கப்பட்ட உணவு கூட எங்களுக்கு வழங்கப்பட வில்லை. ஒரு வேளை கிடைத்தால், இரு வேளை கிடைக்காது. எங்களை மிகவும் அலட்சியமாகவே ஆஸ்பத்திரியிலும் நடத்தினர். இன்னும் எனக்கு வலது கண் தெரியவில்லை. நெஞ்சரிப்பு போகவில்லை. விழுந்ததில் பட்ட காயத்தின் வலி தீரவில்லை." என்றார். இவர் தொழிற்சங்க மொன்றின் (இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்) தோட்டத் தலைவியும் கூட.கே.பார்வதி என்பவர் இப்படி தெரிவித்தார்."அன்று அடித்து விரட்டிய போது தலை தெறிக்க ஓடியதில் இடுப்பில் பலத்த அடிபட்டு இன்னும் வருத்தம். ஆஸ்பத்திரியில் 9 நாள் இருந்தேன். இன்னும் நடக்க கஷ்ரமாக இருக்கிறது. கண்கள் கலங்கிய வண்ணமே உள்ளது. ஆனாலும் என்ன செய்ய வேலைக்கு போகாவிட்டால் வயித்துப் பாட்டுக்கு என்ன தம்பி செய்ய" என்றார்.திருமதி.செல்வம் என்பவர் இப்படி சொன்னார்."இங்கே பாருங்கள் அன்றைய குண்டுவீச்சால் வாயெல்லாம் வெந்து போய் உள்ளது. சாப்பிடக் கூட கஷ்டம். இடுப்பு வலி இன்னும் இருக்கிறது. இங்கே பாருங்கள் கால் கூட வீக்கம் வற்றவில்லை. நான் ஆஸ்பத்திரியில் ஏழு நாட்கள் இருந்தேன்" என்றார்.வள்ளியம்மாள் என்பவர் இப்படிக் கூறினார்."அன்று பொலிஸ் விரட்டிக் கொண்டே வந்தது. நான் ஓடியும் கூட கட்டைக் கம்பால் அடித்த அடி முதுகில் பலமாக பட்டது. நெஞ்சு இன்னமும் வலிக்கிறது. எனது ஒரு வயது கூட ஆகாத குழந்தைக்கு பால் கொடுக்கக் கூட முடியவில்லை சாமி. நான் ஏழு நாள் ஆஸ்பத்திரியில் இருந்தேன்." என்றார்.ஆரம்பத்தில் இந்த தொழிலாளர் களை ஆஸ்பத்திரியில் அழைத்து சென்று அவர்களை கவனித்தது தொடக்கம். ஆஸ்பத்திரி அலட்சிய நிலை காரணமாக தொழிலாளர்களை தனியார் மருத்துவமனையொன்றிற்கு அழைத்துச் சென்று சிகிச்சை செய்ததெல்லாம் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத் தொண்டர்களே என்பது தெரிவந்தது.டொக்டர் சாந்தகுமார்அத்தொழிலாளர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை செய்திருப்பவர் புதிய ஜனநாயக முன்னணியின் மத்திய குழு உறுப்பினரும் அண்மையில் விடுதலை செய்யப்பட்டவருமான (சந்தேகத்தின் பேரில் கைது செய்யப் பட்டு இரண்டு வருடங்களுக்குப் பின் விடுதலை செய்யப்பட்ட) ஹோமியோ பதி டொக்டர்.சாந்தகுமார் அவர்களே.அவர் இது பற்றி கருத்து தெரிவிக் கையில் "தோட்டத் தொழிலாளர்கள் மீது தொடர்ச்சியாக இத்தகைய தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. எமது மக்களுக்காகக் குரல் கொடுக்க எந்த தலைமையும் இல்லை. அதிகார வர்க்கமும் தோட்ட முதலாளிகளும் கூட்டுச் சேர்ந்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை மூர்க்கமாக அடக்க முடியும் என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம். இத்தொழிலாளர்களுக் காக குரல் கொடுக்க எவரும் முன்வராத பட்சத்தில் காலப்போக்கில் அவர்களே அவர்களின் எதிர்காலத் தை தீர்மானித்துக் கொள்வார்கள் என்பது மட்டும் உறுதி!" என்றார்.சம்பவம் நடந்த நாளிலிருந்து இத் தொழிலாளர்கள் தமது வேலை நிறுத்தத்தைத் தொடர்ந்தனர். அவ் வேலை நிறுத்தத்தின் போது தமது பிரதான கோரிக்கைகளாக பின்வருவ னற்றை முன்வைத்தனர்.தொழிலாளர்களின் கோரிக்கைகள்1.தனியார் மயமாக்கல் ஒப்பந்தத்தி ன்படி லாபத்தில் 10 வீதத்தை சகல தொழிலாளர்களுக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும்.2. இருபத்தொரு பெண் தொழிலாளர் களுக்கும் முழு பேர் போடப்பட வேண்டும்.3. நடந்தசம்பவம் குறித்து பூரண விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.4. எமது பிள்ளைகளை பெயர் பதிய வேண்டும்.5. சம்பவத்துக்கு காரணமான தோட்ட அதிகாரி நீக்கப்படவேண்டும்.முதலாவது கோரிக்கையின் படி 1996ம் ஆண்டில் பெற்ற லாபத்தில் 10 வீதத்தையே தொழிலாளர்கள் கேட்டனர். ஆனால் இது வரை லாபம் ஒன்றுமே இல்லை. நட்டத்திலேயே இயங்குவதாக நிர்வாகம் கணக்கு காட்டி வருகின்றது. இது பற்றி வெங்சர் தோட்ட இ.தொ.கா தொழிற்சங்கத் உப தலைவர் எஸ்.கந்தையா தெரிவிக் கையில்,"லாபம் இல்லை என்பதை எங்களால் நம்ப முடியவில்லை. இவர்கள் வழமயாகவே "லாபமில்லை" என்பதை கூறியே எங்கள் வயிற்றில் அடித்து வந்துள்ளனர். எங்கள் தோட்டத்தில் ஒருவருக்கு நாள் சம்பளம் 83 ரூபா. எல்லாம் கழிக்கப்பட்டு கைக்கு வந்து சேரும் போது ஒண்ணும் மிச்சமிருக்காது.நட்டத்துக்கு காரணம் யார்?சரி, லாபம் இல்லையென கூறுவோமே லாபமில்லாததற்கு யார் காரணம் தொழிலாளர்களா? அதிகாரி களா? ஏற்கெனவே தோட்டத் துறை, அதிகாரிகளின் லஞ்ச ஊழல் என்பவற்றால் மோசமாக பாதிக்கப்பட்டு ள்ளது. அவர்கள் சுரண்டி எடுத்துவிட்டு பழியை எங்கள் மீது போட்டு விடுகிறார்கள். தொழிலாளர்கள் தங்களது வேலையை சரியாக செய்து வருகிறார்கள். அன்றும் சரி இன்றும் சரி எந்தவித தொழில் நுட்ப கருவிகளு மின்றி தமது உடலுழைப்பாலேயே கொடுக்கப் பட்ட வேலையை சரியாக முடிக்கிறா ர்கள். உதாரணத்திற்கு 35 பேருக்கு ஒரு ஹெக்டேர் கவ்வாத்து வெட்ட கொடுக்கப்பட்டால் 35 பேரைவிட அதிக தொழிலாளர்கள் அதில் ஈடபடுத்தப்பட் டாலோ அல்லது ஒரு ஹெக்டேரை விட குறைந்த பரப்பில் கவ்வாத்து வெட்டப்ப ட்டாலோ நாங்கள் குற்றத்தை ஏற்போம். ஆனால் அப்படி நடப்பதில்லையே. அப்படியெ ன்றால் எங்கு பிழை தோட்டம் நஷ்டமைடைவதைக்காட்டி தொழிலா ளர்களின் சலுகைகளையும், அவர்க ளின் வசதிகளையும் குறைப்ப தையும் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்." என்றார்.நான்காவது கோரிக்கையான பெயர் பதிவது என்பது முக்கியமானது. 1993இல் பிரேமதாச ஆட்சியின் போது தோட்டங் கள் தனியார் மயமாக்க ப்படுவது தொடங்கப்பட்டது. அன்றிலி ருந்து இன்றுவரை காலியிடங்களுக்கு பதிலாக புதியவர்கள் சேர்;த்துக் கொள்ளப்பட வில்லை. இன்னமும் வேலையில்லாமல் தமது பிள்ளைகள் நான்கு வருடங்களாக இருப்பதாக இவர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் இறப்பு, விலகல், ஓய்வு பெறுதல், வேலை நீக்கம், என்பவற்றினால் இந்த நான்கா ண்டில் தொழிலாளர்கள் குறைந்துள் ளனர், அவர்களின் இடத்துக்குப் பதிலாக புதியவர்களை அமர்த்துவத ற்குப் பதிலாக குறைந்த தொழிலார்க ளைக் கொண்டு கூடிய உற்பத்தியைப் பெற முயற்சி செய்யப்படுகிறது. அவ்வாறு உற்பத்தி தரப்படாத போது அவர்களின் மீது நடவடிக்கை எடுக்கப் படுகிறது.தோட்டத்துறையைப் பொறுத்த வரை 1992-1995க்குமிடையில் 14 வீதத்தவர் தமது தொழில் வாய்ப்பை இப்படி இழந்துள்ளனர் எனத் தெரிகிறது.'மீண்டும் ஏமாற்றப்பட்டோம்!"ஜனவரி 6ம் திகதி தொழிலாளர் திணைக்கள-ஹட்டன் பிரதேச பொறுப்பான உதவி ஆணையாளர் வேலை நிறுத்தம் தொடர்பாக சமரசம் செய்ய வந்தார்.இவர் கூறியது இது தான் "சம்பவம் பற்றிய விசாரணையை மேற் கொள்கி றோம். அதுவரை தோட்ட அதிகாரி இடைநீக்கம் செய்யப்படுவார். 21 பெண் தொழிலாளர்ளுக்கும் முழு பேர் போடப்படும். ஏனைய கோரிக்கைகள் தொடர்பாக ஆராய்கிறோம். எனவே வேலை நிறுத்தத்தை கைவிடுங்கள்."தொழிலாளர்கள் பெரிய எதிர்ப்பு எதுவுமின்றி மீண்டும் வேலைக்குப் போனார்கள்.ஆனால் ஒரு மாதமாகிவிட்ட நிலையில் இன்னும் எதுவித முன்னேற்ற முமில்லை. பழைய அதிகாரிக்குப் பதிலாக, புதிய அதிகாரி. மாறியது "அதிகாரி" ஒருவர் தான். அதிகாரம் அப்படியே இருக்கிறது. அதே நடை முறை அதே போக்கு. வழமைபோல் தொழிலாளர்கள் இம்முறையும் ஏமாற்றப்படடனர்.இதற்கிடையில் தோட்டக்கம்பனி அதிகாரியின் வேண்டுதலின் பேரில் இடை நீக்கம் செய்யப்பட்ட தோட்ட அதிகாரியை மீண்டும் நியமிப்பதற்கான முயற்சிகள் நடந்து வருவதாகவும் வெஞ்சர் தோட்டத்து இ.தொ.கா. தொழிற்சங்க தலைவர்கள் இதற்காக கொழும்பிலுள்ள இ.தொ.கா. தலைமை யின் செல்வாக்கைப் பயன்படுத்த முயற்சித்து வருவதாகவும் பேசப்படுகி றது.பலமான முதலாளித்துவ சக்திகள். அதனை பாதுகாப்பதற்கான பலமான ஆட்சியதிகார கட்டமைப்பு, பலவீன மான தலைமைகள், பிழியப்பட்டு, பிழியப்பட்டே நலிந்து போன தொழிலாளர் படை. இது தான் மொத்த மலையகத்தினது நிலை.இலங்கையின் மொத்த பயிர்ச் செய்கை நிலப்பரப்பில் 40 வீதம் பெருந்தோட்டம். இலங்கையின் மொத்த ஊழியர்களில் ஆறில் ஒரு பகுதியினர் தோட்டத் தொழிலாளர்கள். இலங்கைக் கான மொத்த ஏற்றுமதி வருமானத்தில் மூன்றில் ஒரு பகுதி பெருந்தோட்டத் துறையிலிருந்தே பெறப்படுகிறது. தேசிய வருமானத்தில் 15 தொடக்கம் 20 வீதம் வரை இவர்களின் உழைப்பிலிருந்தே பெறப்படுகிறது.21ம் நூற்றாண்டுக்கும் அடிமைகளே!தனியார்மயத்தின் பின் கடுமையான முறையில் மலையகத் தொழிலாளர்க ளின் உழைப்பு உறிஞ்சப்பட்டு வருகின்ற போதும் அவர்களின் நலனில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாத அதே வேளை இருந்த நலன்களும் பறிபோய்க ;கொண்டிருக்கும் நிலையே அங்கு உள்ளது.ஒரு இடது சாரி இயக்க சிங்கள இளைஞர் ஒருவர் அண்மையில் இப்படிக் குறிப்பிட்டார்."இங்கு தோட்டங்கள் மாத்திரம் விற்கப்படவில்லை. கூடவே ஒரு சமூக த்தையும் சேர்த்தே ஒரு சில முதலாளிக ளுக்கு விற்று விட்டுள்ளனர்...."உண்மையிலும் உண்மை. இவர்கள் மாறி மாறி விற்கப்பட்டுக் கொண்டி ருக்கும் நவீன அடிமைகளே தான். 21ம் நூற்றாண்டுக்கும் இழுத்துச் செல்லப் படும் அடிமைகளே தான்.
(பெப்ரவரி.06.இதழ்-115)

இரத்தபுரியான இரத்தினபுரி! - என்.சரவணன்


சம்பவம் நடந்த இடம்:சம்பவத்துக்கு உடனடிக் காரணமாக இருந்த இரண்டு கொலைகள் இங்கு தான் நடந்துள்ளன. கொலை செய்ததாகக் கூறப்படும் முகுந்தன் இந்த லயனைச் சேர்ந்தவர். இந்த லயனை குட்டி யாழ்ப்பாணம் எனக் கூறுவார்களாம்.சேதங்கள்-இழப்புகள்:15 லயன்கள் பாதிக்கப்பட்டுள்ளது. (ஒவ்வொரு லயன்களிலும் ஏறத்தாழ 10 தொடக்கம் 20 காம்பராக்கள்-வீடுகள்) எல்லாமே பெரும்பாலானவை தரைமட்டமாக்கப்பட்டுவிட்டன.
மொத்தம் 226 லயன்களின் உடமைகள் அனைத்தும் உடைத்து நொருக்கப்பட்டு, கொளுத்தப்பட்டுள்ளன. இந்தப் பகுதியைப் பொறுத்தவரை பலர் சம்பவம் நடக்க முன்னமேயே பாதுகாப்பாக ஸ்டோரில் இருத்தப்பட்டதனால் உயிர்ச் சேதம் இல்லை. ஆனால், அவ்வாறு போய் பதுங்குவதற்கு முன்னர் அகப்பட்டுக் கொண்டவர்கள் பலர் தாக்கப்பட்டுள்ளனர்.
பெண்கள் மீது பாலியல் சேட்டைகள் புரியப்பட்டிருக்கின்றன. 22 தமிழ் இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ராஜேந்திரன் நிர்மலா எனும் 16 வயது அங்கவீனச் சிறுமி தலையிலும் மற்றும் ஐந்து இடங்களில் வாளால் வெட்டப்பட்டு இன்னமும் கொழும்பு பெரியாஸ்பத்திரியில் அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்து வருகிறார்.உடுத்த உடுப்புகளைத் தவிர எதுவும் மிச்சமில்லை. ஏறத்தாழ 150 வருடங்களுக்கும் மேலாக சிறுகச், சிறுக சேமித்து பாதுகாத்த அத்தனையும் சில நிமிடங்களில் வேற்றோரால் அழிக்கப்பட்டு விட்டன. உடுதுணிகள், வீட்டுப் பொருட்கள், முக்கிய தஸ்தாவேஜூக்கள் (பிறப்பு அத்தாட்சி, வீட்டு ஆவணங்கள், பாடசாலைக் கடிதங்கள், தொழில் சம்பந்தப்பட்ட ஆவணங்கள்) என எல்லாமே அழிக்கப்பட்டுவிட்டன.
ஏறத்தாழ 250க்கும் மேற்பட்ட லயன் காம்பராக்கள் உள்ள இந்தத் தமிழ்க் குடியிருப்பில், ஒரேயொரு சிங்களக் கடையைத் தவிர அதனைச் சூழ்ந்துள்ள அத்தனையும் அழிக்கப்பட்டுள்ளன. சில காம்பராக்கள் தரைமட்டமாகாத நிலையில் இருக்கின்றன. அதுவும் அவற்றின் கூரைகள் இரும்பினால் அமைக்கப்பட்டிருந்ததால் அவ்வீடுகள் தரைமட்டமாகியிருக்கவில்லை

சம்பவத்துக்கான பின்னணிக் காரணம்:
காரணத்தைக் கூற தயங்குகின்றனர். கூறுவதிலிருந்து தவிர்த்துக் கொள்கின்றனர். வெல்ஹேனகே பந்துசேன (38), அப்பகுதி "பிரகத்தி தொழிற்சங்க"த்தின் தலைவர். கடந்த யூன் மாதம் 17ஆம் திகதி ஸ்டோரில் ஏற்பட்ட தகராறில் பந்துசேனவால் தொழிலாளர்கள் சிலர் தாக்கப்பட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து தோட்ட அதிகாரியால் திட்டப்பட்டுள்ளார். அதிலிருந்து பந்துசேன தொழிலுக்குச் செல்வதில்லை. அவர் முன்னர் சிறிய அளவில் செய்து வந்த கசிப்பு வியாபாரத்தைத் தொடர்ந்தும் சுதந்திரமாகச் செய்து வந்துள்ளார். அவரது அடாவடித்தனங்கள் கசிப்பு வாடிக்கை யாளர்களிடம் மாத்திரமன்றி, வாடிக்கையாளர்களிடம் பணம் வசூலிக்கச் செல்லும் போது அவர்களின் வீட்டில் உள்ள பெண்களின் மீதும் காட்டப்படுவது வழக்கம். சம்பவ தினத்தன்றும் பழைய கோபத்தில் முகுந்தன் என்று அழைக்கப்படுபவரை தேடிச் சென்ற இடத்தில் பந்துசேனவும், அவரது சகாவான அசித்தகுமாரவும் (வயது24) முகுந்தனின் வீட்டிலுள்ள பெண்களை பலாத்காரம் புரிய முற்பட்டதன் விளைவாகத் தான் 8ஆம் திகதி இரவு அவர்கள் இருவரும் கொல்லப்பட்டுள்ளனர். கொலை நடந்த தினத்துக்கு முன்னைய தினம் தொடக்கம் பந்துசேனவுக்கும் கொலை புரிந்த இளைஞருக்கும் இடையில் சண்டை நடந்துள்ளது. சில தொழிலாளர்கள் தெரிவித்த கருத்தின்படி பந்துசேன, முகுந்தனைக் கொல்லத் தான்போனான். ஆனால் அவனை முந்திக் கொண்டு விட்டனர் என்கின்றனர்.
இந்தக் கொலையில் ஈடுபட்டதாகக் கூறப்படுபவர்களில் இருவர் திலிப்குமார், கருணாநிதி ஆகியோர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். நீலமேகம் உட்பட இன்னும் சிலர் இன்னமும் தலைமறைவாகியுள்ளனர்.சிங்களப் பிரதேசங்கள் சூழசிங்களப் பிரதேசங்கள் சூழ உள்ள தோட்டம் இது. சூழ உள்ள பிரதேசங்களில் சிங்களவர்கள் பலர் இங்கு குடியேறி அருகிலுள்ள காணிகளை ஆக்கிரமித்து அதில் தோட்டம் செய்து வருகின்றனர். இவர்களது தேயிலைத் தோட்டங்களுக்கு இந்த தமிழ்த் தொழிலாளர்களே பணிக்கமர்த்தப்படுகின்றனர்.
தோட்டத் தொழிலாளர்களும் இவர்களிடம் நாட் கூலிக்கு (கிட்டத்தட்ட நாளைக்கு 75 ரூபா தொடக்கம் 100 வரையான கூலி) வேலை செய்கின்றனர். வேல்வத்தை தமிழ் மகா வித்தியாலத்துக்கே இங்குள்ள மாணவர்கள் கல்வி கற்கச் செல்கின்றனர். இந்தப் பாடசாலை உட்பட ஏறத்தாழ 15 பாடசாலைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. தமிழ்ப் பிரதேசங்களுக்கிடையில் எந்தவிதத் தொடர்பும் இல்லை. இரத்தினபுரி பகுதியில் பல தோட்டக் குடியிருப்புகள் தள்ளித் தள்ளியே உள்ளன. ஏறத்தாழ 10, 15 கிலோ மீற்றர் தொலைவிலேயே அடுத்தடுத்த தோட்டங்கள் உள்ளன. எனவே இவற்றுக்கிடையில் நிலத்தொடர்ச்சியோ அல்லது வலைப்பின்னலோ இல்லை.இவ்வாறு சிங்களமய சூழலில் வாழும் தமிழ்த் தோட்டத் தொழிலாளர்கள் சிங்கள மயமாகி இருப்பதற்கான வாய்ப்புகள் இருந்த போதும் அவ்வாறு நடக்கவில்லை. தமிழ் பாடசாலைகள் அப்படியே இயங்கி வருகின்றன. தமிழ்க் கோயில்கள் அப்படியே இயங்குகின்றன. அவர்கள் பண்பாட்டளவில் அவ்வாறான மாற்றத்துக்குள்ளாகவில்லை. கலப்புகளும் நிகழ்ந்தில்லை. அதற்கான முக்கிய காரணம் அவர்களை அவர்களாக இருத்தி வைப்பதிலேயே கூடிய கவனம் செலுத்தப்பட்டு வந்திருப்பதே. இதனை மீறி கலப்பு ஏதேனும் நிகழ்ந்தால் அதன் விளைவு இன்னொரு கலவரமாக இருக்குமோ என்கின்ற அச்சத்தை இனங்காணக் கூடியதாக இருந்தது.

கொலை செய்யப்பட்டவர் -பின்னணி
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவு பிரகத்தி தொழிற்சங்கத்தின் தலைவர். அப்பகுதியின் சண்டியர். தனது சகாக்களுடன் அப்பகுதி பெண்களின் மீது பாலியல் வன்முறைகளில் ஈடுபட்டு வருபவர். அரசாங்கத்தின் அமைச்சரவையிலுள்ள அம்மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சரின் முக்கிய ஆதரவாளர். இரத்தினபுரி பிரதேச சபைத் தலைவர் பந்துல கரவிட்டவின் வலது கரம். (இந்த பந்துல கரவிட்ட 1994 பொதுத் தேர்தலுக்கு முன்னர் தோட்டத்துக்கு அனுப்பப்படும் நீர் தாங்கிக்குள் விஷம் கலந்தவரென எல்லோராலும் பேசப்படுபவர். அந்த விஷம் கலந்த நீரை அருந்தியிருந்தால் அன்று பெரிய ஒரு விபரீதம் ஏற்பட்டிருக்கும். ஆனால் உடனே கண்டுபிடிக்கப்பட்டு அந் நீர் சுத்தப்படுத்தப்பட்ட கதை அங்கு சகலரும் அறிந்த விடயம்) இச் செல்வாக்கினைப் பயன்படுத்தி தடையின்றி கசிப்பு வியாபாரத்தை நடத்தி வருபவர்.

கொலைஞர்-
முகுந்தன் அப்பகுதியில் எந்தச் சண்டையென்றாலும் அதனை அடக்கச் செல்பவர். அப்பகுதி தமிழ் வீடுகளில் சண்டைகள் நடந்தால் தீர்க்கச் செல்பவர். வெளியிலிருந்து சிங்கள சமூகத்தைச் சேர்ந்தவர்களால் இழைக்கப்படும் சண்டித்தனங்களை முறியடிப்பவர். வன்முறைக்குத் தயங்காதவர்.


சரிநிகர் - ஒக்டோபர் 1998 - இதழ் - 156
 

இணைந்திருங்கள்


Followers

Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates