Headlines News :
முகப்பு » , , , » ஒப்பந்தங்களின் பாடங்கள் - என்.சரவணன்

ஒப்பந்தங்களின் பாடங்கள் - என்.சரவணன்


ஜனாதிபதித் தேர்தலில் தமிழர்களின் அரசியல் உரிமை குறித்து எந்த சிங்கள சக்தி வாய் திறந்தாலும் அவர்கள் சார்ந்த தரப்பு; சிங்கள வாக்குகளை இழக்க நேரிடும் என்கிற நிலை தோன்றியுள்ளது. அதைவிட கொடுமை தமிழர் நலன் குறித்து தமிழர்களே வாய் திறந்தாலும் அவர்கள் சார்ந்த தரப்பு தோற்றுவிடும் என்கிற பீதி தான்.

தமது அரசியல் உரிமைகளை கொல்லைப்புறமாக பேசுவதுகூட “உஷ்ஷ்.... சத்தம் போடாதே” என்கிற எச்சரிக்கைக்கு தள்ளப்பட்டிருக்கிறது ஒட்டுமொத்த சிறுபான்மை அரசியல். இது உணர்த்தும் செய்தி என்ன? யார் அடக்குகிறார்கள்? யார் அமைதிகாக்கிறார்கள்? யார் வாய் திறந்தால் யாருக்கு ஆபத்து நேரும்? வாய் திறக்காவிட்டால் யாருக்கு பலன் கிடைக்கும்? விளைவை அனுபவிக்கப்போவது யார், வினையை அனுபவிக்கப்போவது யார் என்கிற கேள்விகளே இன்று சிறுபான்மை மக்களிடம் எஞ்சியிருக்கிறது.
“தமிழர்களின் போராட்டத்தை தோற்கடித்தது நீயா நானா? எஞ்சிய அதிகாரங்களையும் பிடுங்கியது நீயா நானா? இனியும் ஒடுக்குவதற்கான திட்டம் உன்னிடம் இருக்கிறதா என்னிடம் இருக்கிறதா? போர்குற்றவாளிகளை பாதுகாக்கபோவது நீயா நானா?  என்பதே இன்றைய ஜனாதிபதித் தேர்தல் களத்தில் நம்மைக் குறித்து இரு பிரதான அணிகளும் மாறி மாறி எறியப்படும் பந்துகள்.
இலங்கையின் அரசியல் வரலாற்றில் எந்தவொரு பிரதான தேர்தலிலும் தனிக்கட்சி தேர்தலில் நின்றதில்லை. சுதந்திரத்துக்கு முன்னர் இருந்தே கூட்டணிகளை நம்பித்தான் பிரதான கட்சிகள் போட்டியிட்டிருக்கின்றன, ஆட்சியமைத்திருக்கின்றன.

1947 சோல்பரி அரசியலமைப்பின் முதல் தேர்தலில் தனியாக ஆட்சியமைக்கும் தகுதி எவற்றிற்கும் கிடைக்காததால் தமிழ் காங்கிரஸ், தொழிற்கட்சி போன்ற கட்சியின் துணையுடன் தான் ஐ.தே.க ஆட்சியமைத்தது. “சுதந்திர” இலங்கையின் முதல் அரசாங்கம் அப்படித்தான் அமைக்கப்பட்டது. இத்தனைக்கும் அப்போதைய ஐ.தே.க கூட இலங்கை தேசிய காங்கிரஸ், சிங்கள மகா சபை, முஸ்லிம் லீக் என்பவற்றின் கூட்டு தான். அதன் பின்னர் அமைந்த அனைத்து அரசாங்கங்களும் ஏனைய கட்சிகளை கூட்டு சேர்த்துக்கொண்டு தான் ஆட்சியமைத்துள்ளன. அது போலவே அக்கட்சிகள் தமக்கிடையில் உடன்பாடுகளையும் செய்து கொண்டிருக்கின்றன. எனவே தேர்தலுக்கான கூட்டுகளும், அரசாங்கம் அமைப்பதற்கான கூட்டணிகளும் இலங்கை அரசியலில் ஆரம்பம் தொட்டே பழக்கப்பட்டது தான். இதற்கான ஒப்பந்தங்களும் புதியதல்லவே. அதுபோல ஒப்பந்த மீறல்களும் புதியதல்ல என்பது வரலாறு நெடுகிலும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

தமிழர்களைப் பொறுத்தளவில் 1919இல் இலங்கை தேசிய காங்கிரஸ் அமைக்கப்பட்ட போது, சேர் பொன் அருணாசலத்தோடு மேல்மாகாண தமிழர் பிரதிநிதித்துவம் குறித்து செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கை மீறப்பட்டதிலிருந்து தொடங்குகிறது நம்பிக்கை துரோக வரலாறு. 

அதன் பின்னரும் கூட தமிழர் தரப்பில் தமது அரசியல் உரிமைகளுக்காக மீண்டும் மீண்டும் நம்பி உடன்படிக்கைகள் செய்துகொள்ளப்பட்டிருக்கிறது, அதேபோல தமிழர்களுக்கு ஒன்றையும் கொடுத்துவிடக்கூடாது  என்று இனவாத தரப்பு ஒப்பந்தங்கள் செய்துகொள்வதும் கூட ஏக காலத்தில் நிகழ்ந்தே வந்திருக்கிறது. ஆக; தமிழர் அரசியல் வரலாறு என்பது துரோகங்களால் களைத்துப்போன வரலாறாகவும், சிங்கள அரசியல் வரலாறு தமிழர்களை ஏமாற்றியும், தோற்கடித்தும் புளங்காங்கிதம் அடைந்த வரலாறாகவும் ஆக்கப்பட்டிருக்கிறது. இதையெல்லாம் விரிவாக தகவல்பூர்வமாக நிரூபிக்கலாம்.

கடந்த 30 வருட போர்க்காலத்தில் “வடக்கு-கிழக்கு தமிழர் அரசியல்” மட்டுமல்ல, முஸ்லிம், மலையக அரசியல் விவகாரங்கள் கூட தேர்தல் காலத்தில் முதன்மை பேசுபொருளாக ஆகியிருக்கிறது. ஒப்பந்தங்கள், உடன்பாடுகள், வாக்குறுதிகள், மேடை முழக்கங்கள் என முக்கியத்துவம் பெற்று வந்திருக்கிறது. ஆனால் யுத்தம் முடிந்ததன் பின்னர் தேர்தல் நிகழ்ச்சி நிரல்களிலிருந்து மெதுமெதுவாக ஓரங்கட்டப்பட்டுவந்த சிறுபான்மை அரசியல் இன்றைய ஜனாதிபதித் தேர்தலில் பிரதான தரப்புகளால் சுத்தமாக துடைத்தெரியப்பட்டுள்ளன.

“புலிகளுக்கு போர், தமிழர்களுக்கு தீர்வு” என்கிற முழக்கம் போர் முடியுமட்டுமே தேவைப்பட்டது. பேரம் பேசும் ஆற்றலை பலவீனப்படுத்தும் வரை மட்டுமே அது அவசியப்பட்டது. இன்று பிரதான தேர்தல் ஒன்றில் தமிழர் அரசியல் பிரதான சக்திகளால் மாத்திரமன்றி தமிழர் தரப்பால் கூட பேச முடியாத நிலை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால் அதேவளை தமிழர்களிடமிருந்து இருப்பதையும் பறி என்கிற நிகழ்ச்சிநிரலில் உறுதியாகவே இருக்கிறது பேரினவாத தரப்பு.

இந்த நிலைக்கு கொணர்வதில் பாரிய பாத்திரம் ஆற்றியது பிரதான எதிர்கட்சிகள் அல்ல. அது ஜாதிக ஹெல உறுமய. சரியாக 20 வருடங்களுக்கு முன்னர் 94ஆம் ஆண்டு அது ஜனதா மித்துரோ என்கிற பெயரில் இயங்கிய போது “17ஆண்டு ஐ,தே,க காட்டாட்சியை ஒழிப்போம் ஊழலை ஒழிப்போம், ஜனநாயகத்தை நிலைநாட்டுவோம், மாற்றத்தை ஏற்படுத்துவோம்” என்கிற இன்று இருக்கிற அதே முழக்கங்களுடன் சந்திரிகாவை ஆதரித்தார்கள். ஜே.வி.பி அதன் தலைமறைவு அரசியலின் பின் அப்போது தான் தேர்தலின் மூலம் மீண்டும் களமிறங்கியது. “ஜே.வி.பி துரோகம் செய்கிறது அது ஐ.தே.க. வின் வால்.” என்று துண்டுபிரசுரங்கள் வெளியிட்டது இன்று போலவே. இன்று அதே காட்சி. அதே களம் அதே முழக்கம். அந்த தேர்தலில் வெற்றி பெற்ற சந்திரிகா முன்னெடுத்த அரசியல் தீர்வு யோசனைகளையும், பேச்சுவார்த்தையையும் முறியடிப்பதற்கான சித்தாந்த தளத்தை உருவாக்கி பலப்படுத்தியத்தில் இவர்களே பின்னணியில் இருந்தார்கள் என்பதை மறந்துவிடமுடியாது.

சரியாக 10 வருடங்களுக்கு முன்னர் 2004ஆம் ஆண்டு மார்ச் 2 அன்று ஆயிரக்கணக்கான பிக்குமார்கள் அணிவகுக்க கண்டி தலதா மாளிகையின் பத்திரிப்புவவில் (என்கோண மண்டபம்) வைத்து அவர்களின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் மீது உறுதிமொழி எடுத்தார்கள். அந்த விஞ்ஞாபனம் தமிழர்களின் அரசியல் எதிர்காலத்தை கூண்டோடு அழிக்கும் அம்சங்களையே உள்ளடக்கமாக கொண்டிருந்தது. அன்றைய தினத்தை தெரிவு செய்தததற்கு ஒரு வரலாற்று நிகழ்வு காரணமாக இருந்தது. இலங்கையை ஆங்கிலேயர்களுக்கு தாரை வார்த்த கண்டி ஒப்பந்தம் 02.03.1815 அன்று தான் செய்துகொள்ளப்பட்டது. அதுபோல உறுதிமொழி எடுத்துக்கொண்ட அந்த இடத்தில் தான் ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடியதால் தேசத்துரோக குற்றம் சுமத்தப்பட்டு 1948ஆம் ஆண்டு ஓகஸ்ட் 26 அன்று ‘குடாபொல ஹிமி’ எனும் பிக்குவுக்கு மரணதண்டனை அளிக்கப்பட்டது. இந்த விஞ்ஞாபனம் “பயங்கரவாத” ஒழிப்பு, சிங்கள பௌத்த ராஜ்ஜியம், ஒற்றையாட்சி, சிங்கள பௌத்தத்துக்கு முன்னுரிமை போன்றவற்றை உள்ளடக்கியிருந்தது. இந்த விஞாபனத்துடன் முதற்தடவையாக பாராளுமன்ற தேர்தல் களத்தில் தனித்து இறங்கிய ஜாதிக ஹெல உறுமய மொத்தம் 9 ஆசனங்களைப் பெற்றுக்கொண்டது. அதன் பின்னர் சில காலம் ஜே.வி.பி யோடு சேர்ந்து கைகோர்த்து இனவாத நிகழ்ச்சிநிரலை முன்னெடுத்தது.

அந்த பலத்துடன் அடுத்த ஆண்டே 2005இல் ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவை ஆதரிப்பது தொடர்பாக தமது விஞ்ஞாபனத்தை அடிப்படையாகக் கொண்ட உடன்படிக்கையில் கையெழுத்து வாங்கிக்கொண்டது. சுனாமி கட்டமைப்பை நீதிமன்றம் சென்று இல்லாது செய்தது, வடக்கு கிழக்கை நீதிமன்றம் சென்று பிரித்தது, புலிகளுடனான மீண்டும் யுத்தத்தை தொடங்கியது, சமாதானத்துக்கு ஆதரவான வெளிநாடுகளை பகைக்க செய்து தூர விலக்கியது என அத்தனையும் செய்து முடித்து தமது நிகழ்ச்சிநிரலில் வெற்றிகண்டார்கள்.

இவர்கள் பிரதான தேர்தல்களில் வெல்லப்போகின்ற பக்கம் நின்று; ஒப்பந்தங்கள் போட்டு தமது இலக்கை கச்சிதமாக அடைவதில் வெற்றிகண்டவர்கள். இம்முறையும் அதே வழியில் இதுவரை அவர்களின் அரசியல் எதிரிகளாக இருந்தவர்களோடு பிரேத்தியேக ஒப்பந்தம் போட்டிருக்கிறார்கள். கடந்த 2005, 2010 தேர்தல்களில் ஜேவிபியும் ஜாதிக ஹெல உறுமயவும் செய்துகொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் போது ஆளுங்கட்சி சார்பாக கைச்சாத்திட்டதும் இதே மைத்திரிபால தான் என்பதும் இங்கு கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. 

இப்போது ஜாதிக ஹெல உறுமயவின் “சிங்கள பௌத்த தனத்தின்” மீது அவர்களே வளர்த்தெடுத்த சிங்கள பௌத்த சக்திகள் கேள்விதொடுக்க தொடங்கியிருக்கின்றன. கடுமையான தாக்குதல்களையும் அவர்கள் செய்துவருகிறார்கள்.
"புலிகளோடு சேர்ந்துவிட்டாய், என்.ஜீ.ஓ உங்களையும் வாங்கிவிட்டது, டயஸ்போரா சதிக்கு இலக்காகிவிட்டீர்கள், மேற்கின் சதிக்குள் விழுந்துவிட்டீர்கள், ரணில் சந்திரிகா வலையில் விழுந்து விட்டீர்கள், அவர்கள் சமஷ்டி போன்றவற்றை தமிழர்களுக்கு கொடுக்க மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்,  மனோகணேசன், அசாத் சாலி போறோர் இருக்கும் அணியுடன் எப்படி சேர முடிந்தது...”
இப்படி அடுக்கிக் கொண்டே போகிறது அந்த கேள்விகள்.

ஜாதிக ஹெல உறுமய சமூக ஊடகங்களை தமது பிரச்சாரங்களுக்காக  பாரிய அளவில் பயன்படுத்திவரும் ஒரு கட்சி. கடந்த 5ஆம் திகதியன்று முன்னரே ஒழுங்கு செய்தபடி சம்பிக்க, தனது டுவிட்டர், முகநூல் போன்றவற்றுக்கூடாக ஆயிரக்கணக்கானவர்களுக்கு பதிளித்தார். அதில் பலர் கடுமையாக சாடியதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. அவற்றுக்கு பதிலளிக்கவென தமது காரியாலயத்தில் கட்சியின் இளம் ஆதரவாளர்களான கணினித்துறை வல்லுனர்கள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தார்கள். சம்பிகவோடு உதய கம்மன்பிலவும் சேர்ந்து பொறுமையாக பதிலளித்திருந்தார்கள். சில கேள்விகளுக்கு தொகுப்பாக இப்படி பதிலளிக்கிறார்.
“மகிந்த புலிகளுக்கு சாதகமாகவே இருந்தார். ஆனால் நாங்கள் தான் மாவிலாறு சென்று போராடி யுத்தத்திற்கு வழி திறந்துவிட்டோம்.
ரணில்-சந்திரிகா-தமிழ் கூட்டமைப்பு-முஸ்லிம் காங்கிரஸ் போன்றவை சமஷ்டி அர்த்தத்தில் யோசனைகள் முன்வைத்தால் அதற்கு எமது எதிர்ப்பை காட்டுவோம். மைத்திரிபாலவுடன் நாங்கள் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி ஒற்றையாட்சி, பௌத்த மத்தத்துக்கு முன்னுரிமை போன்றவை குறித்து எதுவும் பேச கூடாது என குறிப்பிட்டிருக்கிறோம்....”
ஜாதிக ஹெல உறுமயவின் பிரதிச் செயலாளரான உதய கம்மன்பில 11ஆம் திகதி எதிரணியிலிருந்து விலகி ஆளுங்கட்சிக்கு தாவி மகிந்தவை ஆதரிப்பதாக ஊடக மாநாட்டில் தெரிவித்தார். அவரது பேச்சில் கவனிக்கப்பட வேண்டிய பல விடயங்கள் உண்டு.

“...சிலவேளை மைத்திரிபால வென்றுவிடுவாரோ என்று பயப்படுகிறேன். நிறைவேற்று அதிகாரமுறை நீக்கப்பட்டால் தற்போதிருக்கிற 13வது திருத்தச் சட்டம் அப்படியே பேணப்பட்டு, நாடு பிளவுபடும். இதனை எஸ்.எல்.குணசேகர, தயான் ஜயதிலக போன்ற புத்திஜீவிகளும் கூட கூறிவருகிறார்கள்.
டிசம்பர் மாதம் 1ஆம் திகதி காலை 10மணிக்கு மைத்திரிபால எதிரணிகளுடன் 100 நாட்களில் ஜனாதிபதிமுறையை நீக்குவதாக ஒப்பந்தம் செய்துகொண்டார்.  அதே தினம் 12.45க்கு ஜாதிக ஹெல உறுமயவுடன் ஜனாதிபதிமுறையில் உரிய மாற்றங்களை கொணர்வதாக கையெழுத்திட்டார். ஒருசில மணிநேரத்தில் இப்படி வேறுபட்ட உடன்பாடுகளை செய்துகொள்ள எப்படி முடிந்தது. ஜனாதிபதிமுறையை ஒழிப்பதாக அவர் ஏனையோருக்கு வாக்குறுதியளித்திருந்தால் அவர் எங்களையும் பிக்குமார்களையும் ஏமாற்றியிருக்கிறார். அவர் மாற்றங்கள் மட்டும் செய்வதாக எங்களுக்கு கொடுத்த வாக்குறுதி உண்மையானால் அவர் பல கட்சிகளை ஏமாற்றியிருக்கிறார்.
100 நாட்களின் பின்னர் இந்த பஸ்சிலிருந்து ஹெல உறுமய வெளியேறிவிடும். ஆனால் அதன் பின்னர் இவர்கள் சேர்ந்து யாழ்ப்பாணம் என்கிற பதாகையை விலக்கிவிட்டு அதற்க்கு தமிழீழம் என்று பெயரிட்டுவிட்டால் நாங்கள் என்ன செய்வது. “நாங்கள் இப்போது அதில் இல்லை 100நாட்களில் அப்போதே வெளியேறிவிட்டோம்” என்று அப்போது கூறுவதில் அர்த்தமில்லை”
ஆக சாராம்சத்தில், மகிந்தவையும் நிறைவேற்று அதிகார முறைமையையும் ஆதரிப்பதற்கூடாக 13வது திருத்தச்சட்டத்தை ஒழிக்க முடியும் என்பதற்காகவே மீண்டும் அரசாங்கத்துடன் இணைந்திருக்கிறார் என்கிற தகவல் முக்கியமானது. அதுபோல எதிரணியில் ஜாதிக ஹெல உறுமய ஒற்றையாட்சியை பேணுவது, பௌத்த மதத்துக்கு முன்னுரிமை, நிறைவேற்று அதிகாரமுறையில் மாற்றம் (நீக்கம் அல்ல) போன்றவற்றை கையெழுத்தில் வாங்கியிருக்கிறது. ஆக இரண்டு பிரதான அணிகளையும் தமிழர்களுக்கு எதிரான வழிநடத்திக் கொண்டிருக்கின்றன இந்த சக்திகள்.
அப்படி இருக்கும் போது தமிழர் தரப்பில் தமது நியாயபூர்வமான கோரிக்கைகளை பேசுவதற்கு எங்குமே களமில்லை என்கிற நிலை உருவாகியிருக்கிறது. இதுவரை சிறுபான்மை இனங்களின் உரிமைகளுக்காக குரல்கொடுத்த இடதுசாரிசக்திகளும், கலைஞர்களும், புத்திஜீவிகளும் கூட இந்த விடயத்தில் அழுத்தம் தெரிவிக்காதது ஏமாற்றமளிக்கிறது. வென்றபின் அனைத்தையும் சரிசெய்துவிடலாம் என்று நம்பும் சக்திகள் தம்மைவிட பேரினவாத சக்திகள் கையோங்கியிருப்பதை ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள் போல் தெரிகிறது. சிறுபான்மை தரப்பின் பலத்தை அதிகரிப்பதும், ஒரு சக்தியாக இணைந்து சில உடன்பாடுகளை எட்டி விஞ்ஞாபனத்தில் அவற்றை உள்ளடக்குவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவாவது முடியுமா என்பதே இன்றைய கேள்வி.

உடன்பாடுகள், வாக்குறுதிகள் மட்டும் பெற்றுவிட்டால் அனைத்தும் நடந்துவிடும் என்பதல்ல இதன் அர்த்தம். நமக்கு வரலாறு அத்தகைய நம்பிக்கையையும் அளித்ததில்லை. ஆனால் குறைந்தபட்சம் இந்த இடைவெளிகளையும் களமாக ஆக்கவேண்டியிருகிறது.

நன்றி - தினக்குரல் 14.12.2014
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates