Headlines News :

காணொளி

ஜனாதிபதி விருது

ஜனாதிபதி விருது
நமது மலையகத்துக்கு

சுவடி

மாவலியும் களனியும் - தெளிவத்தை ஜோசப்


கிளிநொச்சிப் பிரதேசத்திலுள்ள நண்பர்கள் சிலர் ஒன்று சேர்ந்து கலை, இலக்கியம், அறிவியல் ஆகிய முத்துறை சார்ந்த கனமான இலக்கிய ஏடு ஒன்றினை வெளியிட உத்தேசித்த உழைத்து வந்தனர். ஒரு காலாண்டு சஞ்சிகையை ‘மாவலி’ என்ற பெயரில் வெளியிடத் தீர்மானித்தனர். இலக்கிய நண்பர்களின் கூட்டு முயற்சி இது என்பதால் சஞ்சிகைக்கான பெயர் தெரிவும் நண்பர்களின் கலந்தாலோசிப்பின் பின்பே ஏற்றுக் கொள்ளப்பட்டது. 

மாவலி என்ற பெயர் ஒத்துக் கொள்ளப்பட்டவுடன் அதற்கான ஆரம்ப வேலைகள் மேற்கொள்ளப்பட்டன.  மாவலிக்கென விஷயங்கள் பெறப்பட்டன.  விளம்பரங்கள் தேடப்பட்டன கடிதங்கள் தயாராகின. முதல் இதழின் முன் அட்டைக்கான ‘புளக்’ இத்தியாதிகள் செய்யப்பட்டன. மாவலி வரப்போவதாகப் பத்திரிகைகளில் செய்தியும் வந்துவிட்டது. 

இது இப்படியிருக்க மலையகத்தின் முன்னோடி இலக்கியவாதியும், ஈழத்தின் முதுபெரும் எழுத்தாளருமான திரு சி.வி. வேலுப்பிள்ளை அவர்கள் தன்னுடைய தொழிலாளர் தேசிய சங்கத்தின் உத்தியோகபபூர்வ ஏடாக மாவலி என்கிற பெயரில் ஒரு மாத சஞ்சிகையை வெளியிட்டார். 

சி.வி.யின் “மாவலி” கிளிநொச்சி நண்பர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கும் என்பதைக் கூறத் தேவையில்லை.  அந்த அதிர்ச்சி அவர்களைச் சோர்வடையச் செய்யவில்லை. மாறாக தீவிரமடையவே செய்தது. நமது மண்ணின் கலை கலாசார அறுவடைக்கு மாவலியும் வேண்டும்.  களனியும் வேண்டும் என்பதை ஒத்துக்கொண்டார்கள். கிளிநொச்சி மக்கள் கலாசாரப் பேரவையின் வெளியீடாகக் களனி வெளிவரத் தொடங்கியது.

“நூறு சிந்தனை மலரட்டும்
நாறும் கீழ்மைகள் தகரட்டும்”
என்பதே களனியின் பத்திரிகைச் சுலோகமாக இருந்தது.

ஒரு நாட்டின் வளர்ச்சி ஆரோக்கியமானதாக இருக்க, அந்த நாட்டின் கலாசாரமும் வளமுள்ளதாக இருக்க வேண்டும்.  கலாசாரத்தின் வீழ்ச்சி ஒரு நாட்டின் வீழ்ச்சி.  அந்த நாட்டு மக்களின் வீழ்ச்சி  என்பதில் அசையாத நம்பிக்கை கொண்டிருந்த களனி,  கலாசாரச் செழுமைக்காக ஓயாது உழைக்கவென தங்களை அர்ப்பணித்துக் கொண்டிருந்தனர் களனிக் குழுவினர்.களனியின் ஆறாவது இதழின் தலையங்கம் இந்தக் கலாசார சீர்குலைவு பற்றிப் பேசுகிறது (செப்டம்பர் 1979)

‘இன்று எமது அரசாங்கமும் அதன் ஊதுகுழல் பத்திரிகைகளும் தார்மீகம் பற்றி ஓலமிடுகின்றன.  தார்மீகக் கலாசாரம் பற்றி ஓயாமல் பிரசாரம் செய்யப்படுகின்றது. ஆனால் இந்தத் திரைமறைவில் நாட்டின் எதிர்காலம் பணயம் வைக்கப்படுகின்றது.  கலாசாரத்தின் எதிர்காலம் பணயம் வைக்கப்படுகிறது. இறக்குமதிச் சுதந்திரம் உள்ளுர் உற்பத்திகளுக்கு மட்டுமல்லாது, நாட்டின் கலாசாரத்துக்கும் சவாலாக அமைந்துவிட்டது. பாலுணர்வைத் தூண்டும் சஞ்சிகைகள், எழுத்துக்கள், ஹொலிவூட் திரைப்படங்கள் தாராளமாக இறக்குமதியாகின்றன.  இவை தார்மீகம் பேசுவோரின் பணப்பையை நிர்புவதோடு இந்நாட்டு இளம் உள்ளங்களை கொடும் விஷத்தாலும் நிரப்பிவிடுகின்றன.  கலை இலக்கியத்துறையின் ஆரோக்கியமான வளர்ச்சி குழி தோண்டிப் புதைக்கப்படுகின்றது.
உலகிலேயே உல்லாசப் பயணத்துக்கு ஏற்ற இடம் இலங்கைதான் என்று உல்லாசப் பிரயாணிகளைக் கவர்ந்திழுக்கும் வகையில் பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இத்துறை மூலம் பெறப்படும் வருமானம் பற்றி புள்ளி விபரங்கள் காட்டப்படுகின்றன. ஆனாலும் இந்த வருமானமெல்லாம் அந்த உல்லாசப்பயணிகள் நாடுகளுக்கே ஏதோ வழியில் திரும்பிச் சென்றுவிடுகின்றன.  இவ்வுல்லாசப் பயணிகள் நாட்டுக்குள் கொண்டுவரும் போதைப் பொருட்களும், பழக்கவழக்கங்களும், பொழுது போக்குகளும் எமது கலாசாரப் பாரம்பரியத்தைக் குழிதோண்டிப் புதைக்கின்றன என்னும் உண்மை மறைக்கப்படுகின்றது.  அரசின் இறக்குமதிச் சுதந்திர்மும், உல்லாசப் பயணிகளின் ஊக்குவிப்பும் எந்த அளவுக்கு நமது கலாசாரத்தைப் பண்பாட்டை சேதமுறச் செய்கிறது’

 என்பதை வெளிச்சத்துக்கு கொண்டுவர களனி பெரிதாகக் குரல் கொடுத்தது.  சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் குறிப்பாக சீனத்துக்  கவிதைகள் ஆகியவற்றுடன் அறிவியல் விஞ்ஞானக் கட்டுரைகளையும் களனி முக்கியத்துவத்துடன் பிரசுரித்து வந்தது.

செப்டம்பர் 11 ஆம் திகதி பார்தியின் நினைவு தினம்.  அன்னிய ஏகாபத்தியத்தினை நொறுக்கிட இடக்கப்பட்டவர்களின் இதயங்களின் சுதந்திர்க்கனலை, சுதந்திரத் தாகத்தை மூட்டிவிட்டவன் பாரதி.  சாதிப்பகைமைக்கும், பெண்ணடிமைத் தனங்களுக்கும் ஜனநாயகம் நசுக்கப்படுதலுக்கும் எதிராகச் சுடுகவிதைச் சரங்கள் தொடுத்தவர் என்னும் குறிப்புடன் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தர்ம் பாரதி பற்றிப் பாடிய பாடலை மறுபிரசுரம் செய்துள்ளது களனி (இதழ் 06)

விஞ்ஞானத்தில் புதியதொரு சகாப்தத்தை தொடக்கி வைத்தவர் அல்பெட் ஐன்ஸ்டீன்.  இவ்வருடம் (1979) அவர் பிறந்த நூற்றாண்டாகக் கொண்டாடப்படுகிறது என்னும் குறிப்புடன் அல்பெட் ஐன்ஸ்டீன் பற்றியதொரு அருமையான கட்டுரையும் இதழில் பிரசுரம் கொண்டுள்ளது. ஐன்ஸ்டீன் (1879- 1955)  மாபெரும் விஞ்ஞானி, தத்துவவியல் அணுகுமுறை கொண்ட தலைமையான சிந்தனையாளர் மட்டுமல்ல, நேர்மையும், சமுதாயப் பொறுப்பும் நிறைந்த மனிதர்.

ஆக்கிரமிப்பு யுத்தங்களுக்கும். இராணுவவாதம், பாசிஸம், தேசிய ஒடுக்குமுறை, இன ரீதியான பாகுபாடு என்பவற்றிற்கும் எதிரானவர் என்பது போன்ற குறிப்புகளுடன் ஐன்ஸ்டீன்  பற்றிய கட்டுரை இந்த ஆறாவது இதழில் வெளியாகி இருக்கிறது.  ஆறாவது இதழின் (ஜூலை- செப்டம்பர் 1979) அட்டையில் ஒரு சீனக் கவிதை (லூசுன்)  இருக்கிறது.

கடைசிப் பக்கத்தில் சீன நிலத்தின் மீது பனிமழை பெய்கிறது என்கின்ற சீனக் கவிஞர் “அய்பிங்”கின் கவிதை இருக்கிறது.
அய்பிங்கின் கவிதையை அ.யேசுராசா மொழி பெயர்த்திருக்கின்றார்.
“இது போன்ற குளிர்ந்த இர்வில்
கணக்கற்ற முதிய தாய்மார்
நாளையின் சக்கரம் தம்மை 
எங்கு எடுத்துச் செல்லும் என்பதறியாது
தமக்குச் சொந்தமான வீடுகளில்
அன்னியர் போல் கூனிக்குறுகி
ஒடுங்கி இருந்தனர்….
ஓ சீனா விளக்கற்ற இவ்விரவில்
எனது பலவீன வரிகள்
உனக்குச் சிறு
உயிர்ப்பினைத் தருமா?
சீன நிலத்தின் மீது
பனி மழை பெய்கிறது
குளிர் சினாவைச் சூழ்கிறது……

என்று ஆரம்பிக்கும் இக்கவிதை 1937ஆம் ஆண்டு எழுதப்பட்டது. ஜப்பானியரால் சீனா ஆக்கிரமிக்கப்பட்டிருந்த பொது எழுதப்பட்ட கவிதை இது.  தேச விடுதலை பற்றிய செயற்பாடுகளுக்காக சிறையில் அடைக்கப்பட்ட கவிஞர் இவர். சீனச்சார்பும் ரஷ்ய எதிர்ப்பும் களனியின் படைப்புகளில் துல்லியமாகவே மேலெழுந்து நிற்கின்றன.

எழுபதுகளின் ஆரம்பத்தில் “தொழிலாளர் தேசிய சங்கம்” என்கின்ற தொழிற்சங்கத்தின் வெளியீடாக கொழும்பிலிருந்து வெளிவந்த ஏடு மாவலி. வெறுமனே தொழிற்சங்கப் பிரசார்த்துக்காகவும், தலைவர்களின் சுயபுராணங்களுக்கும், விளம்பரங்களுக்குமாகவும் செயற்படாமல் மலையக மக்களில் விழிப்புணர்வுக்கும் கலாசார வளர்ச்சிக்குமான பங்களிப்பினை முனைப்புடன் செயலாற்றியமையாலேயே மாவலி பற்றியும் பேசப்பட வேண்டிய ஒரு நிர்ப்பந்தத்தை வேண்டி நிற்கிறது.

“உழவுக்கும் தொழிலுக்கும்
வந்தனை செய்வோம்”
என்னும் பாரதி வாக்கே மாவலியின் பத்திரிகை வாக்காகவும் இருந்தது.

உதவித் தொழில் ஆணையாளராக இருந்து ஓய்வுபெற்ற ஜி.ஏ.ஞானமுத்து எழுதிவந்த “சட்டத்தைத் தெரிந்து கொள்ளுங்கள்” என்னும் கட்டுரை ஒவ்வொரு இதழிலும் இடம் பெற்றது. இலங்கையில் குடியேறும்படி இந்தியத் தொழிலாளர்களை ஊக்குவிக்கவும், இந்திய அரசு அவர்களின் வருகையை கட்டுப்படுத்த எடுத்த முயற்சிகளை முறியடிக்கவுமாக 1923 இல் இயற்றப்பட்ட தொழிலாளர் குடியேற்றச் சட்டத்திலிருந்து இக்கட்டுரை தொடங்குகிறது.
 தொழில் ஆணையாளர் லக்ஷ்மன் த.மெல் எழுதிய  “தேயிலைத் தொழிற்துறை” என்னும் கட்டுரையும் தொடராக வந்தது. கங்காணி முறையும், குலவாதிக்கமும், தலைமைக்கங்காணி, சம்பளமுறைமை என்பது போன்ற உப தலைப்புக்களுடன் எழுதப்பட்ட கட்டுரை இது.

பாரதி காட்டும் பாதை, இனவிடுதலைக்காகப் பாடிய இன்னிசைக் குரலோன் போல்றொப்சன், இன்று நமக்கு வேண்டிய கலைகள், இருபதாம் நூற்றாண்டின் தமிழினத் தலைமகன் அண்ணாத்துரை, சுற்றுப்புறச் சூழ்நிலை, மலைநாட்டார் சரித்திரம், பரிபூர்ணாகாந்தத்தில் திளைக்கும் பரம புருஷர் - ஜீட்டு கிருஷ்ணமூர்த்தி,  புதுமை இலக்கியம் ஆகியவை மாவலி தந்த சில கட்டுரைத் தலைப்புக்கள்.

மாவலியின் பிரதம ஆசிரியராகத் திகழ்ந்தவர் மக்கள் கவிமணி சி.வி. வேலுப்பிள்ளை என்பதுவும் கூட மாவலியின் சிறப்புக்கும் முக்கியத்துவத்துக்குமான ஒரு காரணம் என்பதும் ஏற்றுக்கொள்ளக் கூடியதே.
மலையக இலக்கிய வர்லாறு எழுத முனைந்தவர்களுக்கும், முன்வந்தவர்களுக்கும் ஒரு கைநூல் போல் விளங்கியது மாவலியில் சி.வி. வேலுப்பிள்ளை எழுதிய புதுமை இலக்கியம் என்னும் கட்டுரை.  சக்தீ பால- ஐயா, ஏ.எஸ்.வடிவேல், சாரல் நாடன் ஆகியோரின் படைப்புகளும் மாவலியை அலங்கரித்துள்ளன.

ஓவியப் போட்டி ஒன்றை நடத்தி வெற்றிபெற்ற ஓவியத்தை அட்டையில் பிரசுரித்து ஓவியக்கலையின் முக்கியத்துவத்தை உயர்த்தவும் செயற்பட்டது மாவலி. களனியினதும் மாவலியினதும் மறைவு கலை இலக்கியத்துறைக்கு ஏற்பட்ட மாபெரும் இழப்பேயாகும்.

(மீண்டும் ‘மாவலி’(2014 மார்ச்) - வெளிவருவதோடு தெளிவத்தையின் ‘இருபதாம் நூற்றாண்டின் ஈழத்து இதழியலும் இலக்கியமும்’ எனும் ஆய்வு கட்டுரையின் இந்த பகுதியினை நன்றியுடன் பிரசுரித்துள்ளது).

செங்கொடி சங்கத்தின் ஸ்தாபகர் றொசாரியோ பெர்னாண்டோ காலமானார்

றொசாரியோ பெர்னாண்டோ
இலங்கைத் தோட்டத் தொழிலாளர் செங்கொடி சங்கத்தின் ஸ்தாபகரும் பிரபல இடதுசாரி தொழிற்சங்க வாதியுமான தோழர் றொசாரியோ பெர்னாண்டோ, சனிக்கிழமை (29) காலமானார். கடந்த சில மாதங்களாக அன்னார் நோய்வாய்ப்பட்டு இருந்தார். 

ஜனநாயகத் தொழிலாளர் காங்கிரஸில் காலஞ்சென்ற அஸீஸுடன் பணிபுரிந்த தோழர் றொசாரியோ, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் அறிவுறுத்தலின் பேரில் காலஞ்சென்ற தோழர் சண்முகதாசனுடன் இணைந்து மலையகத்தில் 1960களில் செங்கொடி சங்கத்தினை ஸ்தாபித்தவர் ஆவார். மலையக தொழிலாளர் மத்தியில் அக்காலத்தில் மிகவும் பிரபலமாக இருந்த செங்கொடி சங்கத்தின் சார்பில் கீனாகொல்லை, மடகும்பர முதலிய முக்கிய தோட்டத் தொழிலாளர் போராட்டங்களை தோழர் றொசாரியோ மிக வெற்றிகரமாக நடத்தியதோடு தனது தொழிற்சங்க ஈடுபாட்டின் காரணமாக பலமுறை சிறைவாசமும் அனுபவித்தார். 

1970களில் மலையகத் தோட்டத் தொழிலாளர் மத்தியிலும் மலையகத்தின் இளம் புத்தி ஜீவிகள் மத்தியிலும் இடதுசாரி சிந்தனைகள் ஆழமாக வேரூன்றுவதற்கும் தோட்டத் தொழிலாளர் மத்தியில் போராட்ட உணர்வு வளர்வதற்கும் தோழர் றொசாரியோவின் கடும் உழைப்பும் அர்ப்பணிப்பும் மாக்சிய சிந்தனையின் மீது அவருக்கு இருந்த அசைக்க முடியாத நம்பிக்கையும் காரணமாக அமைந்தன. 

அத்துடன் தேசிய இடதுசாரி போராட்டங்களிலும் ஆர்வம் கொண்டிருந்த தோழர் றொசாரியோ 1960களில் யாழ்ப்பாணத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சங்கானையில் மேற்கொள்ளப்பட்ட சாதி எதிர்ப்பு போராட்டத்தில் தோழர் கார்த்திகேசன், நீர்வை பொன்னையன் போன்றவர்களோடு தோளோடு தோள் நின்று போராடினார். 

1983 ஆடிக் கலவரத்தில் தோழர் றொசாரியோவும் அவரது குடும்பமும் பெரிதும் பாதிக்கப்பட்ட காரணத்தினால் அவர் தமிழ் நாட்டுக்கு குடிபெயர்ந்தார். தமிழ் நாட்டிலும் கூட குடிபெயர்ந்த தோட்டத் தொழிலாளர் நலன்களில் அவர் அக்கறை செலுத்தினார். 1999இல் திரும்பவும் இலங்கைக்கு திரும்பிய தோழர் றொசாரியோ, தனது உடல் நிலை காரணமாக தொழிற்சங்க இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள முடியாத காரணத்தினால் மிகவும் மனம் வருந்தியவராக காணப்பட்டார். 

தோழர் றொசாரியோவின் பூதவுடல் 31.03.2014 திங்கட்கிழமை காலை 08.00 மணி முதல் பிற்பகல் 04.00 மணிவரை பொரளை ஜயரட்ண மலர்சாலையில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கும்.

நன்றி - http://tamil.dailymirror.lk/

சிறைச்சாலை குறிப்புகள் - பொகவந்தலாவ ப.விஜயகாந்தன்


போகம்பறை சிறைச்சாலை பற்றியும் அதன் வரலாறு மற்றும் இன்னோரன்ன விடயங்கள் பற்றி கடந்த சில தினங்களாக தாராளமாக இலத்திரணியல் மற்றும் அச்சு ஊடகங்களில் செய்திகள் வெளிவந்து விட்டன.

சிறைச்சாலையில் நான் பார்த்த சில விடயங்களை இங்கு பதிவு செய்ய விரும்புகின்றேன்.

பிரதான நுழைவாயிலின் அருகில் வைத்திருந்த சிறைச்சாலை மாதிரி அமைப்புப்படம் புதிதாக பார்க்க வந்தவர்களுக்கு ஒரு முழுமையான பௌதீக சூழலை விளக்குகின்றது. உள்ளே பலவிதமான உற்பத்தி நடவடிக்கைகளை அவதானிக்க முடிந்தது. அத்தனையும் சிறைக்கைதிகளின் உற்பத்திகளே. தளபாடங்கள், இரும்புப்பொருட்கள், அலங்கார கைப்பணிப்பொருட்கள், கயிறு திரித்தல் என்பன அவற்றுக்கு எடுத்துக்காட்டுக்களாகும்.

சுற்றுவட்டாரங்களை அவதானித்தப்பின்னர் கைதிகளுக்கான சிறைக்கூடங்களை பார்வையிடுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. மனம் படபடக்க தொடங்கியது. சாதாரண குற்றவாளிகள், பாரிய குற்றவாளிகள், சிறப்பு பாதுகாப்பிற்குரிய குற்றவாளிகள், மரணதண்டனைக்குரிய குற்றவாளிகள் என தனித்தனியான சிறைக்கூடங்கள் வகைப்படுத்தப்பட்டிருந்தன. சிறிய அறை காற்றோட்டத்திற்காக மிகச்சிறிய யன்னல், மொத்தமான பலகையினாலான கதவுகள் நடுவில் ஒரு கண்ணால் பார்க்கக்கூடியவகையிலான மிகச்சிறிய துவாரம் அதிகூடிய தனிமை உணர்வினை தரக்கூடிய உட்புற சூழல்  என சொல்லிக்கொண்டே போகலாம். மனிதனாக பிறந்து சூழ்நிலை வசத்தால் குற்றம் புரிந்த குடும்ப உறுப்பினர்கள், குடும்பங்களில் சந்தோஷத்துடன் வாழ்ந்தவர்கள், குற்றம் செய்யாது - குற்றவாளி என பெயர்பெற்று - சென்றவர்கள் பொலிஸ் என்ற சொல்லை கேட்டால் கட்டிலுக்கு கீழே சென்று ஒளிந்துக்கொள்ளும் சுபாவம் உடையவர்கள் என எத்தனை மனிதர்கள் அந்த மினி நரகங்களில் தனிமையில் தவித்திருப்பார்கள். உண்மையாகவே மனம் மடங்கி விரிகின்றது.

கைதிக்கூடு - 34
இதில் என்ன விசேஷம் என்கின்றீர்களா? ஒரு படைப்பு அது அர்த்தமுள்ள படைப்பு. இளைஞர்களின் புரட்சித்தலைவன் சேகுவேராவின் உருவப்படத்தை ஒரு கைதி ஓவியமாக்கியிருந்தார். பார்த்தவுடன் மெய்சிலிர்த்து போனேன். மின்னல் வெட்டைப்போல் இப்போதும் அந்த கைதிக்கூடு என்முன் தோன்றுகிறது. பல கூடுகள் பார்க்க சகிக்காத நிலைமையில் இருந்தன .ஆனால் சில கூடுகள் கோயிலாக காட்சியளித்தன. ஒருபோராளிக்கு சிறைச்சாலைதான் ஓய்வெடுப்பதற்கான சிறந்த களம் என வீரவசனம் கேள்விபட்டிருக்கின்றேன். போகம்பறையில் பலர் ஓய்வெடுத்து சென்றுள்தை உள்ளத்தில் ஊகித்துக்கொண்டேன்.

தூக்குமேடை
தூக்குதண்டனை கைதிகளுக்கென தனியான பகுதி அமைந்திருந்தது.  தூக்குதண்டனை நிறைவேற்றப்படுவதற்கென குறிக்கப்பட்ட நாளுக்கு ஒருவாரத்திற்கு முதல் கைதி தூக்குமேடைக்கு அருகில் உள்ள கூட்டுக்கு அழைத்து வரப்படுவார். அங்கு  ஆறு அறைகள்  உள்ளன. அறைகளின் இலக்கங்கள் இரங்குவரிசையில் அமையும் வண்ணம் கைதி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அறைக்கு மாற்றப்படுகின்றார். ஒவ்வொரு நாளும் முடிய முடிய வீக்கம் பெறும் கைதியின் மனநிலைமையை எவ்வாறு விபரிப்பது. இறுதிநாள் கைதி தூக்கு மேடைக்கு அழைத்து வரப்பட்டு தண்டனை நிறைவேற்றப்படுகின்றது.  

தூக்குமேடைக்கு செல்லும் கடைசிநாட்களில் தங்கியிருக்கும் அறையின் சுவரில் "All The Beings Be Happy" என எழுதிய வைக்கபட்டுள்ளது. இது ஒரு கைதியால் எழுதப்பட்டிருக்கலாம் என நினைக்கின்றேன். துன்பம் வரும் வேளையில் எப்படிதான் அந்த ஜீவனுக்கு சிரிக்க முடிந்ததோ? எல்லோரும் சந்தோசமாக இருப்போம் என மரணவாயிலில் நின்று சொல்ல முடியுமா? உள்ளத்திலே அதற்கென ஒரு ஆத்மபலம் வேண்டாமா?

பொழுதுபோக்காக பார்வையிடச்சென்ற பார்வையாளர்களுக்கே மரணபயத்தை தரும் அவ்விடம் மரணதண்டனையை பெற்ற கைதிகளுக்கு எவற்றையெல்லாம் புகட்டியிருக்கும்...? பார்த்தவர்கள் பதைத்தவர்கள் மனதிற்குள் குமுறியவர்கள் நிச்சயமாக குற்றம் செய்ய விளையமாட்டார்கள்.மூன்று மலையக நூல்களின் அறிமுகம் 06.04.2014

டென்மார்க் வயன் நகரில் மலையக மூன்று நூல்களின் அறிமுகம் 06.04.2014 ஞாயிற்றுக் கிழமை பி.பகல் 13.30 மணியளவில் நடைபெறுகிறது.

திருச்செந்தூரன் ஞாபகார்த்த சிறுகதை, கவிதை போட்டி

மலைநாட்டு எழுத்தாளர் மன்றம்
கனடாவிலிருந்து வெளிவரும் தாய்வீடு மாத இதழுடன் இணைந்து நடாத்தும் அமரர் திருச்செந்தூரன் ஞாபகார்த்த சிறுகதை, கவிதை போட்டி

வட்டுக்கோட்டை தீர்மானம் போல் அமைந்த ஹட்டன் தீர்மானமும் சி.எஸ்.சி மண்டபமும் - மல்லியப்புசந்தி திலகர்


சுமார்  இரண்டு வருடங்களுக்கு முன்பு கொழும்புத் தமிழச் சங்கத்தில் மலைநாட்டு எழுத்தாளர்  மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த திருமதி. கிறிஷ்டி வில்சன் எழுதி, இரா.சடகோபன் தமிழாக்கம் செய்த ‘கசந்த கோப்பி’ நாவல் வெளியீட்டின்போது கருத்துரை வழங்குவோரின் பட்டியலில் என்னோடு அமர்ந்திருந்தவர்  நண்பர்  சுதர்ம மகாராஜன். அதற்கு முன்னர்  அவருடைய பெயரைக் கேள்விப்பட்டிருந்தாலும் அன்றுதான் முதல் அறிமுகம். வவுனியா - மலையகம் என இரண்டு பிரதேசங்களை இணைத்துப் பிறந்து, கண்டியில் வாழும், வளமான சிறுகதை எழுத்தாளர் , ஓவியர் , இலக்கிய செயற்பாட்டாளர் சுதர்ம மகாராஜன். கிடைக்கும் அறிமுகங்களை இலக்கிய செயற்பாடுகளுக்காகப் பயன்படுத்திக்கொள்பவர்.

அறிமுகம் முதல் அடிக்கடி தொலைபேசியில் உரையாடும் நண்பர்  சுதர்மன் ஒருமுறை ‘இளைஞர்கள் நாங்கள் ஒன்றுகூடி இலக்கிய செயற்பாடுகளை முன்னெடுக்க ஒரு களம் தேவை, தொடர்ச்சியாகவும் குறைந்த செலவிலும் ஒரு இடம் ஒன்றை ஹட்டனில் அறிமுகப்படுத்த முடியுமா..?’ எனும் வேண்டுகோளை முன்வைத்தார். அவரது நோக்கம் எனக்கு பிடித்திருந்தது. ஹட்டன் எனக்கு புகுந்த வீடு. மயில்வாகனம் திலகராஜாவாக மடகொம்பரையில் பிறந்து உயர்தரம் படிக்கவென்று ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரிக்கு வந்து சேர்ந்து, பின்னர்  மல்லியப்பு நகரில் (லோயல்) கல்வியகம் நடாத்தி, அங்கிருந்தே இலக்கிய பிரவேசமும் செய்து ‘மல்லியப்புசந்தி திலகர்’ ஆனவன் நான். எனவே ஹட்டனில் அதிகம் அறிமுகம் இருந்தது, இருக்கிறது.
சுதர்மனின் வேண்டுகோளுக்கு ஏற்றாற்போல் எனக்கு மனக்கண்ணில் வந்தது ஹட்டன் சி.எஸ்.சி மண்டபம். ஹட்டன் புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள அந்த கட்டடம் மதம்சார்  சமூக சேவை நிறுவனமாயினும் மலையக சமூகம் சார்ந்து பல்வேறு சந்திப்புகளையும் கூட்டங்களையும் நடாத்திய வரலாற்றுக் களம். தமிழ்நாட்டில் -மலையக மக்கள் மறுவாழ்வு மன்றம் -அமைத்து செயற்படுவதற்கு  அருட்பணி. அல்போன்ஸ் , இர.சிவலிங்கம், திருச்செந்தூரன் போன்றோருக்கு  ஆரம்ப களமாக இருந்த இடம் இந்த மண்டபம்.

 வட்டுக்கோட்டை தீர்மானம் எந்தளவுக்கு வடக்கு கிழக்கு அரசியலுக்கு முக்கியமானதோ அந்தளவுக்கு மலையக அரசியலில் ‘ஹட்டன் தீர்மானம்’ முக்கியமானது. ஆனால் அது பற்றி இன்னும் பெரிதாக பேசப்படவில்லை.

மலையக மக்கள் தொடர்ச்சியாக இனவாத துன்புறுத்தலுக்கு உள்ளாகி வந்தபோது அவர்கள் தொடர்ந்தும் மலையகத்திலேயே இருப்பதா? அல்லது தமிழகத்துக்கு (தாயகம்) மீளவும் திரும்பி செல்வதா? எனும் மிக முக்கிய கேள்வியை முன்னிறுத்தி ஹட்டனில் நடந்த மலையக அறிவு ஜீவிகளின் மாநாடு நடைபெற்ற களம் இந்த மண்டபம் என அறியமுடிகின்றது. அதில் எடுக்கப்பட்ட தீர்மானம்: ‘நூற்றியைம்பது வருடங்களுக்கு மேலாக இந்த நாட்டிற்காக உழைத்து இலங்கையை வளமான ஏற்றுமதி நாடாக மாற்றிய, உழைப்பாளர்களாகிய நாம் இந்த மண்ணையே நமது மண்ணாகக் கொள்ள வேண்டும். மலையக மண்ணிலேயே வாழ்வோம். யாரும் அடித்தால் திருப்பி அடிப்போம்’ என்பதாக அந்த ‘ஹட்டன் தீர்மானம்’ அமைந்ததாக மு.சிவலிங்கம் அவர் கள், வி.டி.தர்மலிங்கம் அவர்களின் ‘மலையகம் எழுகிறது’ நூல் வெளியீட்டில் தலைமையுரை ஆற்றியபோது கூறியது நினைவுக்கு வருகிறது. இந்த முன்மொழிவைச் செய்தவர்  தற்பொது பத்தனை ஸ்ரீபாத கல்வியியல் கல்லூரியில் உபபீடாதிபதியாக விளங்கும் வி.செல்வராஜா (எனது ஆசிரியர் ) எனவும் மு.சிவலிங்கம் அவர்கள் கூறியதாக நினைவு.

 இந்த இருவரும் தற்போது மலையக சமூக, கலை இலக்கிய பணிகளில் செய்றபாட்டாளர்கள் என்ற வகையில் ‘ஹட்டன் தீர்மானம்’ பற்றி எழுத்தில் பதிவு செய்வார்கள் எனில் அது இன்றைய மலையக இளைய சமூகத்துக்கு பயனுள்ள பல தகவல்களைத் தரும் என எதிர்பார்க்கலாம். அதற்கான ஆரம்பப் புள்ளியாகவே இந்த பத்தி இடம்பெறவேண்டும் என எண்ணுகிறேன்.

1991-1993 காலத்தில் உயர் தரம் படித்த காலத்தில் இருந்து பின்னாளில் 2000 ஆம் ஆண்டு லோயல் கல்வியகத்தில் இருந்து தலைநகர்  நோக்கி வரும் காலம் வரை எனக்கும் இந்த சி.எஸ்.சி (Centre for Social Concern) நிறுவனத்திற்கும்  தொடர்பு இருந்தது. அப்போது அங்கு பணிப்பாளராக பணியாற்றிய அருட்பணி. மரிய அந்தனி அவர்கள் மலையக சமூகம் சார் ந்து காட்டிவந்த அக்கறை அந்த நிலையத்துடன் எனக்கு தொடர்பை ஏற்படுத்தியிருந்தது. ஸ்ரீ பாத கல்வியியல் கல்லூரியில் நிலவிய உள்ளக இன முரண் பிரச்சினைகள் சமூக பிரச்சினையாக வெளிகிளம்பியபோது நானும் நண்பர் பொன்.பிரபா (புதிய பண்பாட்டு அமைப்பு), Fr.மரிய அந்தனி போன்றோர் களத்தில் நின்று செயற்பட்டிருந்தோம். 

சி.எஸ்.சி.  நிலையத்தின் ஊடாக இந்திய (தமிழக) கல்லூரிகளில் மலையக மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வாய்ப்புப் பெற்றுக் கொடுக்கும் பணி தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இதில் Fr. மரிய அந்தனியின் பங்கு மறக்க முடியாதது. இலங்கையில் பல்கலைக்கழ வாய்ப்பினை இழந்த பல மாணவர்களுக்கு இந்த நிலையம் தமிழகத்தில் அந்த வாய்ப்பினைப் பெற்றுக்கொடுத்து வருகிறது. என்னுடைய  மாணவர் களான பீரிஸ், மகேந்திரன், (தற்போது இருவரும் ஹட்டன் பகுதியில் பிரபல ஆசிரியர்கள்) தனகுமார்  (தற்பொது அரசசார்பற்ற நிறுவனமொன்றில் உயர்  பதவி வகிக்கிறார் ) போன்றோரும் நண்பர் களான ஜூட் மெலிட்டஸ், எம்.முத்துக்குமார் , கிருபாஹரன் போன்றோரும் இந்த நிலையத்தின் ஊடாக புலமைப்பரிசில் பெற்று இன்று பட்டதாரிகளாகவும் உயர்  பதவிகளிலும் இருப்பவர்கள். அருட்பணி. மரியஅந்தனி, முன்னாள் கந்தப்பளை பிரதேச பாடசாலை அதிபர்  திரு.பிலிப் ராமையா போன்றோருடன் கூட எனக்கு தொடர்புகள் ஏற்பட்டது இந்த நிலையத்தின் ஊடாகத்தான்.

இந்த நிலையத்துக்கு இரண்டு வருடங்களுக்கு முன்பு பொறுப்பாக இருந்தவர்  அருட்பணி. பெனி அவர்கள். இவரும் பொகவந்தலாவையில் பிறந்து வளர்ந்து  இந்தியாவில் கல்வி கற்றவர். நான் லோயலில் பணியாற்றிய காலத்தில் சி.எஸ்.சி நிறுவனத்துடன் தொடர்புகளை பேணிவந்த நண்பரும் ஆசிரியருமான முத்துக்குமார்  (ஹட்டன்) அருட்பணி. பெனி அவர்களை அழைத்துவந்து அறிமுகப்படுத்தியிருந்தார். 

வெளியில் இருந்து வரும் ஆளுமைகளை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்துவது. விரிவுரைகளை நடாத்துவது எனும் பண்பாட்டை லோயல் கல்வியகத்தில் பேணிவந்தேன். அவ்வாறு பாளையம்கோட்டை சேவியர்  கல்லூரியில் இருந்து வந்திருந்த  பேராசியர். இமானுவேல் ராஜ்  அவர்களை திரு.பிலிப் ராமையா அவர்கள் அழைத்து வந்தமையும் அவரைக் கொண்டு ஒரு விரிவுரை நடத்தியமையும் கூட நினைவுக்கு வருகிறது. 

கல்வியக பெயர்ப் பலகையைப் பார்த்துவிட்டு உள்ளே நுழைந்த ஒரு ஜப்பானியர், ஒரு பேராசியரியர்  என்பதையும், அவர்  மலையக மக்கள் குறித்த பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டிருக்கிறார்  என்பதையும் தெரிந்து கொண்ட பிறகு அவரைக்கொண்டு ஒரு விரிவுரை நடாத்தியதும் நினைவு இருக்கிறது. அவர் அறிமுகமான அந்த நாளில் நானூறு ரூபா சம்பள உயர்வுக்கான மல்லியப்புசந்தி போராட்டம் நடைபெற்றுக்கொண்டு இருந்தது. அவரை இரவு ஒரு மணிக்கு அழைத்துசென்று போராட்ட இடத்தை ஆய்வு செய்யச்சொன்னேன். புன்னகையுடன் திரும்பி வந்தார். உயரமாக அமைக்கப்பட்ட மேடைக்கு அடியில் திரைப்படக்காட்சியும் சாராய பரிமாறல்களும் நடக்கும். அதுவே ‘மல்லியப்புசந்தி’ என எனது பதிவானது. 

 இன்றுவரை என்னுடன் தொடர்புகளைப் பேணிவரும் ஜப்பானிய பேராசிரியர்.கவாசிமா கொஜி, வரலாற்றுத்துறை சார்ந்து, குறிப்பாக தென்னாசிய, இலங்கை வரலாற்று விடயங்கள் தொடர்பாக பல ஆய்வுகளை மேற்கொண்டு வருபவர். மிக அண்மையில் இலங்கை வந்திருந்தபோது எனது அலுவலகத்தில் நானும் நண்பர்கள் சிவம்.பிரபா, லெனின் மதிவானம் ஆகியோர் அவருடன்  கலந்துரையாடலைச் செய்திருந்தோம்.

அன்று கவிஞராக எனக்கு அறிமுகமான அருட்பனி.பெனி அவர்கள். இன்று ‘சூரியகாந்தி’ பத்திரிகையில்  ‘பெட்டுக்களம்’ எனும் களத்தில் மலையக வாழ்வியல் பத்திகளை எழுதி வருபவர் . இறுக்கமான மதகுருவாக அன்றி சரளமான நண்பனாக பழகும் இன்முகத்தவர் . இலக்கியம், சினிமா, அரசியல், தொழிற்சங்கம், சமூகம் என பல்வேறு விடயங்கள் குறித்தும் சம்பாஷிப்பவர்.  ‘போர்க்களப் பூபாளங்கள்’ (1996) எனும் கவிதைத் தொகுதியை தமிழகத்தில் கல்விகற்கும் காலத்திலேயே வெளியிட்டவர். அவரது கவிதையொன்று தமிழகத்தில் இவ்வாறு ஒலித்திருக்கிறது:

‘இந்தியர்கள் என்று 
ஏற்றுக்கொள்வார்கள் என
எண்ணியன்றோ நாங்கள் வந்தோம்..
இன்றோ.. இன்னும்
அன்னியர்களாகவே
அழைக்கப்படுகின்றோம்….’
இந்தக் கவிதையை வாசிக்கும்போது ‘ஹட்டன் தீர்மானம்’ எவ்வளவு தூரம் யதார்த்தமானது என்பது புரிகிறது. 

மலையக மண் மீது அதிக பாசம் கொண்டவர்  அருட்பணி. (கவிஞர்.) பெனி. தொலைக்காட்சி, வானொலியில் ‘தவக்காலசிந்தனை’ க்காக பேச அழைத்தாலும்கூட அதில் மலையக மண்ணை இணைத்துப் பேசும் மண்வாசனைக்காரர். பொகவந்தலாவை பெட்ராசோ தோட்டத்தில்  சவரிமுத்து - செசலி தம்பதியருக்கு மகனாக பிறந்து, பொகவந்தலாவை ஹொலிரொசரி பாடசாலையில் கல்விகற்று, தமிழகத்தில் உயர்  கல்வியைத் தொடர்ந்து பின்னாளில் குருத்துவ வாழ்வில் இணைந்துகொண்டவர். இன்று ‘பாதர்  பெனி’ என எல்லோராலும் அழைக்கப்படும் சவரிமுத்து பெனடிக். இவரது சகோதரி திருமதி. வயலட்மேரி. தொழிலாளர்  தேசிய சங்கத்தின் உபதலைவர்களுள் ஒருவர். மாதரணி செயலாளர்.

அருட்பணி.பெனி அவர்களின் பொறுப்பில்தான் சி.எஸ்.சி மண்டபம் தற்போது இருக்கிறது என்கின்ற என் நினைவு சுதர்மனின் வேண்டுகோளை யதார்த்தமாக்கியது. சி.எஸ்.சியில் பணியாற்றி பின்னர்  தொழிலாளர்  தேசிய சங்கத்தில் நிர்வாக அதிகாரியாக பணியாற்றிய அரசியல்துறை பட்டதாரியான செ.கிருஸ்ணாவுக்கு அழைப்பெடுத்து Fr. பெனியிடம் பேசி சுதர்மன் குழுவினருக்கு மண்டப ஏற்பாட்டை செய்துகொடுக்குமாறும் இணைந்து செயற்படுமாறும் கோரினேன். எனது முதலாவது வேண்டுகோளை மாத்திரம் செவ்வனே நடைமுறைப்படுத்திய செ. கிருஸ்ணா இலக்கியத்தில் இணைந்து செயற்படவில்லை. அதற்கு அவரது தனிப்பட்ட விடயங்கள் காரணமாகியிருக்கலாம். ஆனால் மலையகம் நல்லதொரு இலக்கிய, அரசியல் ஆய்வாளனை இழந்துகொண்டிருக்கிறது என்பது மட்டும் தெரிகிறது. பதுளையில் ‘சி.வியின் தேயிலைத்தோட்டத்திலே’ கவிதை நூலையும், கொழும்பில் சி.ராமச்சந்திரனின் (கருத்துப்பட ஓவியர் . சந்திரா) ‘கடவுளின் குழந்தைகள்’ நாவலையும் ஆய்வு செய்யுமாறு நான் கேட்ட போது, அதனைத் திறம்பட செய்தவர்  செ.கிருஷ்ணா. ஒரு சில கட்டுரைகளையும் எழுதியுள்ளார் . அதில் ‘வி.கே.வெள்ளையனின் தொழிற்சங்க பணிகள்’ பற்றிய கட்டுரை முக்கியமானது. (நமது மலையகம்.கொம், வீரகேசரி, தினக்குரல்).

அன்று சுதர்மனின் வேண்டுகோளுக்கு இணங்க நான் விடுத்த வேண்டுகோளை நிறைவேற்றித்தந்த செ.கிருஷ்ணா, அருட்பணி.பெனி அகிய இருவரும் பணிநிமித்தம் வெளிநாடு சென்றுவிட்ட சூழ்நிலையில் அந்த மண்டபத்தில் இருபதாவது களத்தினைக் கண்ட (மாதத்திற்கு ஒன்று) ‘பெருவிரல்’ கலை இலக்கிய இயக்கத்தின் இலக்கிய கலந்துரையாடலில் பங்குபற்றும் வாய்ப்பு கிடைத்தது. ஒவ்வொருமுறையும் தவறாமல் அழைப்பிதழ் அனுப்பிவிடும் சுதர்மனின் நன்றி மறவாத மனம் பெரிது. ஆனாலும் இந்த (23.03.2014) முறைதான் அவரது அழைப்பினை ஏற்று கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. 

எனது மாணவனும் அன்புக்குரிய சகோதரனுமான பத்தனை வே.தினகரன் (நானறிந்த வரையில் இவரது முதலாவது கவிதை லோயல் வெளியிட்ட ‘சுவாதி’ இதழில் வந்த ‘நம்மவர்’ என நினைக்கிறேன்), சுதர்ம மகாராஜன்,   ‘சிவப்பு டைனோசர்கள்’-சு.தவச்செல்வன், சண்முகம் சிவகுமார், பெரியசாமி விக்னேஸ்வரன், கீர்த்தியன், பபியான், நேரு கருணாகரன், கிருபாகரன் என பல இளம் இலக்கிய ஆளுமைகள் இணைந்து ‘பெருவிரல் கலை இலக்கிய இயக்கமாக’ இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களது இயக்கத்துக்கு சி.எஸ்.சி மண்டபம் நல்லதொரு களமாக அமைந்துள்ளதை அறியும்போது அதனை ஏற்பாடு செய்தவன் என்றவகையில் மனதுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. நிகழ்வில் அதற்குரிய நன்றியினை ‘பாதர்  பெனி’ அவர் களுக்கும், செ.கிருஸ்ணா வுக்கும் தெரிவித்துக்கொண்டேன். இந்த கலந்துரையாடலில் பங்கு கொண்ட எழுத்தாளர் மு.சிவலிங்கம் அவர்கள் ‘ஹட்டன் தீர்மானத்தை’ மீளவும் நினைவூட்டியுள்ளார். கலந்துரையாடலின் நிகழ்வுகளை தனியான கட்டுரையில் பதிவு செய்யலாம் என நினைக்கிறேன்.

(அருட்பணி)கவிஞர்.பெனியின் ‘போர்க்களப் பூபாளங்கள்’ கவிதைகள் பற்றி குறிப்பொன்றை எழுதியிருக்கும் கவிக்கோ அப்துல் ரகுமான் : 

‘மலையகத் தமிழர்களின் கண்ணீரால் பூத்திருக்கின்றன இளம் கவிஞர்  பெனியின் கவிதைகள். பெனியின் பூபாளத்தில் புதிய யுகம் விழித்தெழட்டும்’  எனக் குறிப்பிட்டுள்ளார் . 

கவிஞரானவர்  மதகுருவாகிவிட்டாலும் பல கவிஞர்கள் எழுத்தாளர் களை உருவாக்கும் களமாக சி.எஸ்.சி மண்டபத்தை ‘பெருவிரல்’ இயக்கத்தினருக்கு வழங்கி, கவிக்கோ. அப்துல் ரகுமானின் ஆசையை தன் பரம்பரையினூடாக நிறைவேற்ற முனைந்திருக்கிறார்  அருட்பணி (கவிஞர் ).பெனி.

 ‘இருபத்தோராம் நூற்றாண்டின் விளிம்பில் தனிமனித வாழ்வும், சமூக வாழ்வும் போர்க்களமாக மாறிவரும் காலச் சூழலில், என் கவிதைகள் மனிதம் மலர பூபாளம் பாடட்டும்’ என தன் ‘போர்க்களப் பூபாளங்கள்’ கவிதை நூலில் குறிப்பிட்டுள்ள கவிஞர்  பெனி. அவர்கள், பாட எண்ணிய பூபாளம் இசைக்கப்படுகின்றது என்றே எண்ணத் தோன்றுகிறது.


ஜெனிவா: வாக்கெடுப்பின் அரசியல் உள்குத்து - என். சரவணன்அன்றொருநாள்

“அன்பாலன்றி, வெறுப்பை வெறுப்பால் துறக்கும் வழியில்லை” தம்மபதம்

பௌத்த அறநூலான தம்மபதத்தின் இந்த போதனைக்கும் ஜெனிவா பிரேரணைக்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா…?

சரி வரலாற்றை மீள நினைவுக்கு கொண்டு வாருங்கள். 06.09.1951ஆம் ஆண்டு சான் பிரான்சிஸ்கோ நகரில் 52 நாடுகள் சமாதான மாநாட்டில் ஒன்று கூடுகின்றனர். இரண்டாம் உலகயுத்தத்தில் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கான இழப்பீட்டை ஜப்பான் வழங்க வேண்டும் என்கிற தீர்மானத்தை கொண்டு வருகின்றனர். அந்தத் தீர்மானத்தின் மீது உரையாற்றுகிறார் இலங்கை பிரதிநிதியாக கலந்துகொண்ட அன்றைய நிதியமைச்சர் ஜே.ஆர்.ஜெயவர்த்தன. அந்த பிரசித்தி பெற்ற உரையின் உள்ளடக்கம் தான் இந்த தம்மபத மேற்கோள்.

ஏற்கனவே, ஹிரோஷிமா, நாகசாகி மீதான அமெரிக்காவின் அணுகுண்டு வீச்சால் சின்னாபின்னமான தேசத்தை அப்போதுதான் மீட்டெடுக்கும் பணியை தொடங்கியிருந்த ஜப்பானுக்கு இந்தப் பிரேரணை இன்னொரு அழிவென பதறியது. அந்த நிலையில், ஜே.ஆரின் அந்த உரை இழப்பீடு குறித்த அந்தத் தீர்மானத்தை அந்த மாநாடு கைவிடுவதற்கு முக்கிய காரணமானது.

ஜப்பானுக்கு ஆதரவாக ஜே.ஆரின் பிரசித்தி பெற்ற சான் பிரான்சிஸ்கோ உரை
இத்தனைக்கும் 2ஆம் உலகப்போரில் ஜப்பானால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இலங்கையும் உள்ளடங்கும். ஜப்பானிய விமானங்களால் கொழும்பு துறைமுகம், இரத்மலானை விமானத்தளம் (05.04.1942), திருகோணமலை துறைமுகம் (09.04.1942) ஆகியன தாக்கப்பட்டிருந்தன.

ஜப்பான் மீண்டு எழுவதற்கு கைகொடுத்த ஜே.ஆரின் இந்த உரை அந்த நாட்டு மக்களுக்கு வரலாற்று நினைவாக ஆக்கியிருக்கிறார்கள். அந்த சம்பவத்தை அவர்கள் “மறு சுதந்திரம்” (“Re-independence”) என்கிற வார்த்தையால் அழைக்கிறார்கள். ஜே.ஆர். ஜெயவர்தனவுக்காக பல பௌத்த விகாரைகளில் நினைவுத்தூபி எழுப்பியிருக்கிறார்கள். அதில் அவரின் பிரசித்திபெற்ற “அன்பாலன்றி, வெறுப்பை வெறுப்பால் துறக்கும் வழியில்லை” தம்மபதம் என்கிற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது.

மிகக்குறுகிய காலத்தில் ஜப்பான் உலகத்தில் ஏனைய வல்லரசுகளுக்கு நிகராக பொருளாதார ரீதியில் வளர்ந்ததும் இலங்கையின் மீது வரலாற்று நன்றிக்காக பல உதவிகளை செய்திருக்கிறது. இன்றும் இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளில் முன்னணி நாடாக ஜப்பான் திகழ்கிறது. சமாதான பேச்சுவார்த்தை காலத்தில் ஜப்பான் சமாதான தூதுவர்களில் ஒன்றாக பாத்திரமாற்றியிருந்தது.

மீண்டும் இன்றைய நடப்புக்கு வருவோம் ஏறத்தாழ 60 வருடங்களுக்கு முன்னர் ஜப்பான் இருந்த நிலையில் இன்று ஜெனிவாவில் இலங்கையும், இலங்கைக்கு தார்மீக ஆதரவு வழங்கும் இடத்தில் ஜப்பானும் மாறியிருப்பதுதான் காலச்சக்கரம் என்பதா. ஆனால், இதுவரை அப்படித்தான் ஜப்பான் இருந்தது. கடந்த தடவைகளில் இலங்கையை ஆதரித்தும் உரையாற்றியிருந்தது ஆனால், இம்முறை வாக்களிப்பில் கூட அது கலந்துகொள்ளாதது ஏன் என்பது ஆராயத்தக்கது.

அன்று தம்மபதத்தை போதனை செய்த அதே ஜே.ஆர். 1983ஆம் ஆண்டு இனப்படுகொலைக்கு தலைமை பாத்திரம் ஏற்று நேர்மாறாக இன்னொரு போதனையையும் எச்சரிக்கையாக விடுத்தார். “போர் என்றால் போர் சமாதானம் என்றால் சமாதானம்” என்பதே அவரின் பிந்திய பிரசித்திபெற்ற உரையாகிப்போனது. அந்த உரை இலங்கையை இனப்படுகொலை அரசாக தொடரச்செய்வதற்கு வழிகோலியது உலகறிந்த வரலாறு. அதன் விளைவு இன்றைய ஜெனிவாவில் உலகு திரண்டிருக்கிறது.

ஜெனிவா வாக்கெடுப்பு

ஜெனீவாவில் நடந்து முடிந்துள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகத்தின் இலங்கைக்கு எதிரான தீர்மானம், அதிகப் படியான வாக்குகளால் நிறைவேற்றப்பட்டதென்னவோ உண்மைதான். இலங்கைக்கு ஆதரவு அளித்த நாடுகளின் பட்டியல் குறித்து இதுபோன்ற அலசலொன்று தேவைப்படுகிறது. இத்தீர்மானத்தில் ஆதரவாக 23 நாடுகள் வாக்களித்துள்ளதுடன், எதிராக 12 நாடுகள் வாக்களித்தன. 12 நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.

இந்தியா கூறுவதில் எது சரி

இதில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து ஆங்காங்கு சிதறிய தகவல்கள் வெளிவந்த நிலையில் அதனை தொகுத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது

2009, 2012 ஆகிய இரண்டு தடவைகளும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்த இந்தியா, இம்முறை வாக்களிப்பில் பங்கேற்காததை இலங்கை அரசை இத்தனை சலசலப்பின் மத்தியிலும் அதிகளவு மகிழ்ச்சியூட்டியிருக்கிறது. இந்தியாவின் இரட்டை நிலைப்பாடு கூர்ந்து கவனிக்கத்தக்கவை.

  • தேசநலன் கருதியே இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா புறக்கணித்தது. தமிழர்களின் நலன் கருதியே இந்தியா இந்த நடவடிக்கையை எடுத்தது – இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் செயலர் சுஜாதாசிங்

  • சர்வதேச விசாரணை நடத்துவது இலங்கையின் இறையாண்மையில் அத்துமீறி தலையிடுவது போன்றதாகும். எனவே, ஓட்டெடுப்பில் இந்தியா கலந்துகொள்ளவில்லை. விசாரணை முன்னெடுப்புகளை இந்தியா ஆதரிக்காது – இந்திய பிரதிநிதி திலீப் சின்ஹா
  • மனித உரிமை ஆணையம் நேரடியாக தலையிடுவதை நாங்கள் அனுமதிப்போமேயானால் நாளை இந்தியாவிலும் ஏதாவது விடயத்தில் மனித உரிமை மீறப்பட்டுள்ளது என தலையிட வாய்ப்புள்ளது. இது இலங்கையின் உள்நாட்டு விவகாரம் – இந்திய வணிக மற்றும் தொழில்துறை துணை அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன்
  • அமெரிக்க தீர்மானத்தை ஆதரிக்கக்கூடாது என்பது அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவல்ல. அதிகாரிகள் மட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு இது. இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரித்திருக்க வேண்டும் – மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம்.
  • சிதம்பரத்தின் அந்தக் கருத்தை காங்கிரஸ் ஏற்கவில்லை, இது அரசின் முடிவுக்கு எதிரான கருத்து – காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் அபிஷேக் சிங்வி
  • இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்கக்கூடாது என இந்தியக் குழுவினருக்கு உத்தரவிட்ட பிரதமர் மன்மோகன் சிங்கை வாழ்த்துகிறேன் – சுப்பிரமணியசாமி

இப்படி இந்திய மத்திய அரசில் உள்ள ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் கருத்து வெளியிட்டிருக்கிறார்கள். சிதம்பரம் வெளியிட்ட கருத்தின்படி இந்த தீர்மானம் அமைச்சரவையின் முடிவுக்கு மாறானது எனத் தெரிகிறது. ஆனால், காங்கிரஸின் பேச்சாளரோ, சிதம்பரத்தின் பேச்சு அரசின் கருத்துக்கு மாறானது என்கிறார். ஆக, இது இறுதி நேரத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் என்பது தெரிகிறது. சரி இதெல்லாம் தெரிந்தது தானே என்கிறீர்களா… அப்படியானால் இம்முறை காங்கிரஸ் வெளியிட்டுள்ள மக்களவை தேர்தல் விஞ்ஞாபனத்தை கொஞ்சம் சரி பாருங்கள்.

“எல்.டி.டி.ஈக்கு எதிரான யுத்தத்தின் இறுதியில் இலங்கை இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல் குறித்து நியாயமானதும், நம்பகமானதுமான விசாரணையை குறிப்பிட்ட கால எல்லைக்குள் நடத்தி முடிப்பதை உறுதிசெய்வதற்காக ஏனைய நாடுகளுடன் இணைந்து அழுத்தம் கொடுப்போம்…”

காங்கிரஸின் தேர்தல் வாக்குறுதி தமிழக மக்களை எமாற்றுவதற்கானது என்பது இதன் மூலம் தெட்டத்தெளிவு. ஆனால், அவர்களின் துரதிர்ஷ்டம் தேர்தல் காலத்தில் ஜெனீவாவில் தமது உண்மை முகத்தை உறுதிசெய்து தேர்தல் விஞ்ஞாபன வாக்குறுதி பொய் என்று அம்பலப்பட வேண்டியதாயிற்று. இந்த விஞ்ஞாபனம் குறித்து தமிழக தமிழ் செயற்பாட்டாளர்கள் கவனித்ததாக இதுவரை தெரியவில்லை. இது முழுமையாக அம்பலப்படுத்தப்பட வேண்டிய ஒன்று.

பாகிஸ்தான் இந்த பிரேரணையை தடுத்து நிறுத்துவதற்காக கொண்டுவந்த ஒத்திவைப்பு பிரேரணையின்போது 25 நாடுகள் இதனை ஒத்திவைக்கக்கூடாது எனவும், 16 நாடுகள் ஒத்திவைக்கவேண்டும் எனவும், வாக்களித்ததுடன் 6 நாடுகள் வாக்களிப்பை தவிர்த்துக்கொண்டன. 10ஆவது ஏற்பாட்டை நீக்கும்படி கொண்டுவந்த ஏற்பாட்டின்போது நீக்கக்கூடாது என்று 23 நாடுகளும், 14 நாடுகள் நீக்கும்படியும், 10 நாடுகள் வாக்களிப்பதை தவிர்த்தும் கொண்டன.

இந்த இரண்டு பிரேரணையின்போதும் இந்தியா பாகிஸ்தானை ஆதரித்தே வாக்களித்தது என்பது இங்கு முக்கியமாக கவனிக்கத்தக்கது. பாகிஸ்தானோடு அத்தனை முறுகல் இருந்தாலும், இந்த நாட்களில் இதே மனித உரிமை பேரவையில் காஷ்மீர் குறித்து பாகிஸ்தானுடன் கடும் சண்டை இருக்கும் நிலையிலும் இந்த பிரேரணை நிதிபற்றாக்குறை காரணமாக ரத்துசெய்யும்படி பாகிஸ்தான் பிரேரணை முன்வைத்தபோது இந்தியா பாகிஸ்தானின் அந்த குள்ளநரித்தந்திரத்தை ஆதரிக்கவே செய்தது.

மொத்தத்தில் இது இந்திய காங்கிரஸ் அரசு தெட்டத் தெளிவாக எடுத்த முடிவென்றே தெரிகிறது. அவர்கள் ஒன்றன்பின் ஒன்றாக பின்னர் வெளியிட்ட அறிக்கைகளிலிருந்து இது உறுதிபட தெரிகிறது.

இலங்கை குறித்த தீர்மானத்தில் இந்தியாவின் நிலை என்பது அதி முக்கியம் வாய்ந்தது என்பது சகல நாடுகளுக்கும் தெரியும். ஒருவேளை இந்தியா இறுதித் தீர்மானத்தில் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு எடுப்பதில் உறுதியாக வேலைசெய்திருந்தால் நிலைமை தலைகீழாகவும் ஆகியிருக்குமென்றும் கருதலாம். ஆனால், இந்தியா தமக்கு எதிராகவே இம்முறையும் வாக்களிக்கும் என்று எண்ணியிருந்த இலங்கைக்கு எதிர்பாராதபடி வயிற்றில் பாலை வார்த்தது இந்தியா.

உடனடியாகவே இதற்கு நன்றி தெரிவிக்குமுகமாக மஹிந்த ராஜபக்‌ஷ 98 தமிழக மீனவர்களையும் 23 படகுகளையும் உடனடியாக விடுவிக்கும்படி உத்தவிட்டார்.

இலங்கைக்கு ஆதரவளித்த நாடுகளின் லட்சணம் குறித்து மேலதிகமாக பார்ப்போம். உலகில் ஜனநாயகம் எந்தளவு பேணப்படுகிறது  என்பது குறித்து பட்டியலிடப்பட்ட நாடுகளில் இந்த 12 நாடுகளும் எந்த நிலையில் இருக்கின்றன என்று கவனிப்போம். Freedomhouse என்பது அமெரிக்காவில் இருந்து இயங்கும் ஒரு நிறுவனம் என்பதற்காக எளிதாக இந்த அறிக்கையை நிராகரிக்கத் தேவையில்லை.


மஹிந்த அரசின், இலங்கை வரலாற்றில் எந்த அரசும் செய்யாத அளவுக்கு முஸ்லிம் மக்களுக்கு எதிரான இனவாத நடவடிக்கைகள், போக்குகள் தொடர்ந்தும் கூட, அரசை இந்தத் தடவை பாதுகாத்த 12 நாடுகளில் 4 நாடுகள் முஸ்லிம் நாடுகள்.

பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, குவைத் ஆகிய நாடுகள் இதற்கு முன்னர் இலங்கையை ஆதரித்த நாடுகளாக இருந்தபோதும் இம்முறை வாக்களிப்பில் கலந்துகொள்வதில் தவிர்த்துக்கொண்டன. இது இலங்கையின் ராஜதந்திர அணுகுமுறையின் தோல்வி என ஜே.வி.பி. குற்றம்சாட்டியிருக்கிறது.

பாகிஸ்தான் அன்றையதினம் காலை பாலஸ்தீனம் குறித்த விடயத்தில் இஸ்ரேல் குறித்த விடயத்தில் வேறு நிலைப்பாடு எடுத்திருந்தது. அந்த உரை உருக்கமானதாகவும் இருந்தது. இலங்கை விவகாரத்தின்போது நிதிபற்றாக்குறை காரணமாக ஒத்திவைக்கும்படி போராடியது அங்கிருந்த ஏனைய நாடுகளின் கவனத்திற்குள்ளானது.

தேசப்பற்றாளர் என்கிற மந்திரச்சொல்

ஐ.நா. சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இலங்கை முற்றாக நிராகரித்து விட்டது. “தீர்மானங்கள் எத்தனையும் நிறைவேற்ற முடியும். நாங்கள் ஏற்றுக்கொள்ளாத பட்சத்தில் விசாரணை எதனையும் நடத்திவிட முடியாது. இதற்கு முன் அப்படி ஏற்றுக்கொள்ளாத நாடுகள் எத்தனையோ இருக்கின்றன. ஒன்றுமே பண்ணமுடியாது…. குழப்பமடையத் தேவையில்லை…” என்கிறார் ஆளுங்கட்சியின் செயாலாளர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த.

அரசைச் சேர்ந்த அனைவருமே இது மேலைத்தேய சதி, என்.ஜீ.ஓ. சதி, புகலிட புலிகளின் சதி, தேசத்துரோகிகளின் சதி, எதிர்கட்சிகளின் சதியென அடுக்கிக்கொண்டே போகின்றனர்.

துரோகி, தேசத்துரோகி என்கிற பதங்கள் கடந்த ஒரு நூற்றாண்டாகவே அதிகளவில் இலங்கையில் பிரயோகப்படுத்திவரும் பதமாக இருந்தாலும், கடந்த மூன்று தசாப்தத்தில் அந்த சொல்லைப்போல பயமுறுத்தும் சொல்லாக வேறொன்றும் இருந்ததில்லை எனலாம். அந்தப் பதத்திற்கு பயந்து பணிந்தவர்களைக் கூட எங்கும் கண்டு வருகிறோம். இலங்கையில் அது ஒரு பயமுறுத்துவதற்கான சொல்லும்தான். அது ஒரு அடிபணிய வைப்பதற்கான சொல்லும்தான்.

இன்றைய மாகாண சபைத் தேர்தல் நேரத்தில் அரசுக்கு அளிக்கப்படும் வாக்கு ஜெனிவா பிரேரணைக்கு எதிரான வாக்கு என்றும், அரசுக்கு எதிராக அளிக்கப்படும் வாக்குகள் தேசத்துரோகமிழைக்கும் வாக்குகள் என்றும் பகிரங்கமாக பிரசாரப்படுத்தப்பட்டது. ஜனாதிபதி மஹிந்த கலந்துகொண்ட ஒரு தேர்தல் கூட்டத்தில். “28இல் தோற்கலாம். ஆனால், 29ஆம் திகதி வெல்ல வேண்டும். வென்று 28ஐ தோற்கடிக்கவேண்டும். எங்களை காலனித்துவப்படுத்த முடியாது என்று காட்ட வேண்டும். தாயை விற்பவர்கள்… தாய் நாட்டை விற்பவர்கள்…” என்று பகிரங்கமாக கூறினார். நாடு எக்கேடுகேட்டும் போகட்டும் தேர்தலில் நான் வெற்றி பெறவேண்டும் என்கிறாரா மஹிந்த என சிங்கள விமர்சகர்கள் விமர்சித்திருக்கிறார்கள்.

ஜெனிவா தீர்மானத்துக்கான “ஆதரவு/ எதிர்” என்பது தேசப்பற்றை அளக்கும் அளவுகோலாக ஆக்கப்பட்டிருக்கிறது. அரசை தோற்கடிக்க பிரயத்தனப்படும் சிங்கள அரசியல் கட்சிகளும், தமிழ் மக்களின் அரசியல் தீர்வில் ஓரளவு அக்கறை காட்டும் கட்சிகள் கூட இது விடயத்தில் ஜெனிவா தீர்மானத்திற்கு தாங்கள் எதிர் என்றே காட்ட விளைகிறது. ஜேவிபி உட்பட. விதிவிலக்கான சக்திகளை இங்கு குறிப்பிட வேண்டியதில்லை.

ஆகவேதான், இந்தத் தேர்தல் நேரத்தில் விமல் வீரவன்ச, அனைத்து கட்சிகளும் தமது நிலைப்பாடுகளை பகிரங்கமாக வெளிப்படுத்த வேண்டும் என்று சவால் விடுத்திருந்தார்.

அதேவேளை, “ஏன் நான் ஜெனிவா தீர்மானத்தை ஆதரிக்கிறேன், தேசப்பற்றாளர்கள் ஏன் ஜெனிவா தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும்” என்று பேராசிரியர் நிர்மல் ரஞ்சித் சிறந்த அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். துணிவான ஒருசிலரே இப்படி அரசிற்கு சவால் விடுக்க எஞ்சியிருக்கிறார்கள் என்பது கவனிக்கத்தக்கது.

நன்றி - மாற்றம் March 29, 2014 

ஆங்கிலவாக்கம் செய்யப்பட மலையக எழுத்தாளரின் முதல் சிறுகதைத் தொகுப்பு - GENESIS - எம்.வாமதேவன்


மலையத்தின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவரான மலரன்பனின் பன்னிரெண்டு கதைகளைக்  கொண்ட தொகுப்பு நூல் ஒன்று ஆங்கிலத்தில் ‘ஜெனசிஸ்’ என்ற தலைப்பில் கொடகே நிறுவனத்தினால் பதிக்கப்பட்டு வெளிவந்துள்ளமை மலையக இலக்கிய வரலாற்றில் ஒரு மைல் கல்லாகும்.

மலையக இலக்கிய படைப்புகள் பிற மொழிகளில் குறிப்பாக ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் வெளிவந்துள்ளமை  மிக குறைவு. இந்த வகையில்  இலங்கை தோட்டப்புறங்களின் சிறுகதைகளாக  16 எழுத்தாளர் களின் 19 சிறுகதைகளை உள்ளடக்கிய Dream Boats என்ற பெயரில் தொகுதி ஒன்று மே 2004 இல் எம்.எஸ் அன்னராஜ் மற்றும் போல் கெஸ்பஸ் ஆகியவர்களால் பதிக்கப்பட்டு ஆங்கில மொழியில் வெளியிடப்பட்டுள்ளது.

மூத்த எழுத்தாளர்  ஏ.வி.பி கோமஸ் அவர் களின் 3 கதைகளும்  பிரபல எழுத்தாளர்  தெளிவத்தை ஜோசப், எம்.சிவலிங்கம், மாத்தளை வடிவேல் ஆகியோரின் கதைகளும் மற்றும் தமிழ் நாட்டில் வாழும் பன்னிர்  செல்வனின் 2 கதைகளும் தமிழ் நாடு சென்று மறைந்த நுவரெலியா சன்முகநாதனின் (மலைச்செல்வன்) கதைகளும் இந் நூலில் உள்ளடக்கப்பட்டுள்ளது. இதை விட எஸ்.ஜி புன்ஜிஹேவா, ஹெக்டர் யாப்பா, புஸ்ஸலாவை  இஸ்மாலிகா  ஆகியவர்களின் தோட்ட மக்கள் சம்மந்தமான கதைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன. 74 பக்கங்களை கொண்ட இந்த தொகுதியில் உள்ளடக்கப்பட்;;ட கதைகள் எந்த ஆண்டில் எங்கு வெளியிடப்பட்டது என்ற விபரங்கள் உள்ளடக்கப்பட வில்லை. இதை விட A LANKAN  MOSAIC என்ற சிங்கள தமிழ் கதைகளின் மொழிப்பெயர்ப்பு ஹெஸ்லி ஹல்பகே, எம்.ஏ நுஃமான், மற்றும் ரஞ்சித் ஒபயசேகர என்பவர் களால் பதிப்பிக்கப்பட்டு வெளியிடப்பட்ட நூலில் மலையக எழுத்தாளர் களில் ஒருவரான  அல்அசுமத் எழுதிய ‘விரக்தி’ என்ற சிறுகதை எஸ்.பத்மநாதன் என்பவரால் மொழிப்பெயர்க்கப்பட்டு உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.மேலும் பேராசிரியர்  .டி.சி.ஆர்.ஏ குணத்திலக அவர்களால் Modern Writing என்ற ஆங்கில நூலில் என்.எஸ்.எம் ராமையாவின் ‘தீ குளிப்பு’ என்ற சிறுகதையும் குறிஞ்சி நாடனின் கவிதை ஒன்றும் வெளிவந்துள்ளன.

சிங்கள மொழியைப் பொறுத்தவரை அதிகமான சிங்கள படைப்புகள் தமிழுக்கு மொழி பெயர்க்கப்பட்டுள்ளதைப் போலே தமிழிலிருந்து சிங்களத்திற்கு மொழிபெயர்க்கப்படவில்லை. எனினும் இலங்கை தொழிலாளர்  காங்கிரஸினது காங்கிரஸ் பத்திரிகையின் சிங்கள மொழியில் சி.கனகமூர்த்தி அவர்களாலும் சில சிறுகதைகள் சிங்களத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. சீ.கனகமூர்த்தி அவர்கள் கதைக்கனிகள் என்ற தொகுப்பிலிருந்து தெரிவு செய்யப்பட்ட தெளிவத்தை ஜோசப், எம்.வாமதேவன் ஆகியோரின் கதைகள் உட்பட 3 சிறுகதைகள் சிங்கள மொழியில் வெளியிட்டுள்ளார்.

  இப்னு அசுமத் அவர்களால் சில சிறுகதைகளை மொழிப்பெயர் க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. அவருடைய ‘காளி முத்துகே புரவசிபாவய’ (காளி முத்துவின் பிரஜா உரிமை – அ.செ.முருகானந்தம்) என்ற சிங்கள நூலில் சில சிறுகதைகள் மலையக கதைகளாக அமைந்திருக்கலாம்.

இதோடு மல்லிகை சி.குமார்  என்பவரது சில சிறுகதைகளும் குறிஞ்சி தென்னவனின் கவிதைகளும் கண்டியிலிருந்து வெளியிடப்பட்ட குரலற்றோரின் குரல் என்ற சிங்கள மொழிபெயர்ப்பில் வெளிவந்துள்ளன என அறியக் கிடக்கின்றது. 

இந்த வகையில் ஜெனசிஸ் என்ற நூலின் வெளியீடானது தமிழ் தெரியாத ஆங்கில வாசகர்களுக்கு மலையக மக்களின் வாழ்வியலை விளக்க உறுதுணை செய்வதாக அமையும். இந்த ஆங்கில சிறுகதைத் தொகுப்பு நூல் ஒரு தனிப்பட்ட எழுத்தாளரின் 12 கதைகளை உள்ளடக்கப்பட்டு வெளிவந்துள்ளமை மிகவும் முக்கியத்துவமான ஒன்றாகும். ஓவ்வொரு கதைகளும் எந்த ஆண்டு, எந்த நூலில் வெளியிடப்பட்டது என்ற விபரங்கள் தரப்பட்டுள்ளன 

மலரன்பன் அறுபதுகளில் இலங்கையின் தேசிய இலக்கிய எழுச்சியில் உருவான மலையக படைப்பிலக்கியவாதிகளில் முதன்மையானவர். தமது எழுத்துக்களுக்குப் பல்வேறு அரச சன்மானங்கள், பாராட்டுக்கள் பெற்றவர். நல்ல பேச்சாளர், சிறந்த பாடலாசிரியர். மனித நேயமிக்கவர்.  தமிழில் வெளிவந்த இவரது ‘பிள்ளையார்  சுழி’, ‘கோடிச்சேலை’ ஆகிய நுhல்களில் இருந்து ஆறு ஆறாக தெரிவு செய்யப் பட்டு பன்னிரெண்டாக தொகுக்கப்பட்டதே ஜெனசிஸ் கதைத் தொகுதியாகும். இவை 1967-2004 வரையிலான காலப் பகுதிகளில் இலங்கையின் தினசரிகளிலும், மலர்களிலும், மாதாந்த சஞ்சிகைகளிலும் வெளிவந்தவையாகும். இக்கதைகளில் சமகால பிரச்சனைகள் வெளிப்படுத்துவதோடு வரலாற்று சம்பவங்களையும் ஆவணப் படுத்துகின்றது.

தலைப்புக் கதையான ‘பிள்ளையார்  சுழி’ (ஜெனசிஸ்) தோட்ட தொழிலாளர்கள் 150 ஆண்டுகளுக்கு முன்னர்  எவ்வாறு இந்திய கிராமங்களின் பட்டினிக் கொடுமையிலிருந்து விடுபடுவதற்காக இலங்கையை நோக்கி மேற்கொண்ட கடும்பயணத்தின் துயர சம்பவங்களை - துன்பக்கேணியை - சித்தரிக்கின்றது. வறிய கிராமத்து மக்கள் எவ்வாறு கங்காணிமார்களால் வஞ்சிக்கப்பட்டு இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதை நினைவுகூர ‘பிள்ளையார்  சுழி’ (ஜெனசிஸ்) தலைப்புக் கதையாக தெரிவு செய்யப்பட்டுள்ளமை பொருத்தமானதே.

 ‘வனவாசம்’ என்ற கதையும் அன்றைய இந்திய கிராமத்து வாழ்க்கையை படம் பிடிக்கின்றன. இக்கதை, சாதிக்கொடுமை, கங்காணிகளின் ஆரம்ப சுரண்டல் போன்றவை மிகவும் துல்லியமாக எடுத்துக்காட்டுகின்றது. மலையகத்தை - குறிப்பாக மாத்தளைப் பிரதேசத்தை களமாக கொண்டவைகள் இக் கதைகளாகும். 

இத் தொகுப்பின் கதைகள் அப்பிரதேச இயல்புகளை - பெருந்தோட்டங்கள் உட்பட தேயிலை, றப்பர் , கொக்கோ பயிரிடப்படும் சிறுத் தோட்டங்களை பிரதிபலிப்பது மாத்திரமல்ல, தமிழ் மக்களோடு பெரும்பான்மையினர்  நெருங்கி வாழுகின்ற பிரதேசமாக இது அமைவதால் அம் மக்களோடு இணைந்த வாழ்க்கையையும் அவ் வாழ்க்கையின் நெளிவு சுழிவுகளை இக் கதைகள் படம் பிடிக்கின்றன.

மலையக சமூகத்தில் இன்னும் பலவீனமான குழுவினராக இருக்கும் பெண்களின் பல்வேறு பிரச்சனைகள் குறிப்பாக பாலியல் கொடுமைகள் பற்றி ‘சாத்தான்கள்’ என்ற கதையில் எடுத்துக் கூறப்படுகின்றது.  இன்றைய இனத்துவ சிக்கல்களை மையமாக கொண்ட கதை ‘தமிழ்ச்சாதி’ ஆகும். ‘மாத்தளை என்றால் என்ன வவுனியா என்றால் என்ன, வெயில் வெயில் தான்!’ என்ற ஆரம்ப வசனத்தையும் இறுதி வசனத்தையும் கொண்ட ‘தமிழ்ச்சாதி’ என்ற கதை, தமிழர்  என்ற அடிப்படையில் மலையகமும் வடகிழக்கும் எதிர் நோக்கும் பிரச்சனையை சுட்டிக்காட்டுகின்றது. 

1956ல் ஆரம்பமாகி 1977ல் - 1983ல் உக்கிரமைடைந்த வன்செயல்கள் மலையகத்தவரை வடக்கிற்கு குடிப்பெயரவைத்தன. அத்தகையோர்  மலையத்தின் சொந்த பந்தங்களோடு தொடர்பு வைத்து கொள்வதில் தற்போது எதிர் நோக்கும் பிரச்சனைகள் ஒரு ரகமானவை.

கோடிச்சேலையின் தொகுப்பிலிருந்து சேர்க்கப்பட்ட 6 கதைகளும் 1967-1989 காலப்பகுதியில் வெளிவந்தவையாகும். தோட்டப்புற வறுமை நிலை, பெண்களுக்கு எதிரான வன்முறை, பெண்கள் ஏமாற்றப்படல் மனித உறவுகள் பொருளாதார நலனை அடிப்படையாக கொண்டவை. தோட்டப்புறத்தே காணப்படும் ஏற்றத்தாழ்வுகள், என்ற கருத்துக்களை வெளிப்படுத்துவதாகவே அமைந்துள்ளன. தோட்ட மக்களின் வாழ்வியல் சித்தரிப்புகள் மலரன்பன் கைவண்ணத்தில், நகைச்சுவை பண்போடு வெளிப்படும் போது மனதைத் தொடுவதாக அமைந்துள்ளன. 

இத் தொகுப்பிற்கு நல்லதோர்  முகவுரையை எம்.பி.மாத்மலுவே என்பவர்  தந்துள்ளார் . தோட்டபுறத்தில் ‘தோட்டராச்சியத்தை’ (Planters Raj)  உருவாக்குவதில் தென்னிந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட தொழிலாளர் களின் பொருளாதார பங்களிப்பினை எடுத்துக் கூறுவதோடு தோட்ட முதலாளிகள்- தேயிலை, றப்பர்  போன்றவற்றை பயிர்  செய்வதற்கு தங்களது சமூகத்தை விட்டு இங்கு வந்து செய்த பங்களிப்புகள் நினைவு கூறப்பட வேண்டும் என சுட்டிக் காட்டுகிறார் .

இந்த வகையில் CHRISTINE WILSON   vOjpa                                                                    எழுதிய BITTER BERRY என்ற நாவலை, இங்கு குறிப்பிடுவது பொருத்தமானது. இந்த நாவல் முழுவதும் தோட்டத்துரைமாரின் வாழ்வியலை சித்தரிக்கின்ற ஒன்றாகும். . இதனை தமிழில் இரா.சடகோபன் நல்ல மொழிப்பெயர்ப்பு நாவலாக தந்திருக்கிறார், என்பதும் மனதில் நிறுத்த வேண்டிய ஒன்றாகும்.
இந்நூலை ஆங்கிலத்தில், நல்ல நடையில் தமிழில் வாசிப்பதை போன்ற உணர் வினை தருகின்ற  வகையில் மொழி பெயர் ப்பு செய்துள்ள ‘பண்ணாமத்து கவிராயர்’   நமது பாராட்டுக்குரியவர் . இவர்  நாடறிந்த கவிஞர். ஆங்கிலத்தில் மொழிப்பெயர்ப்பு செய்வதில் திறமை கொண்டவர் .

  பண்ணாமத்து கவிராயர்  பல கதைகளை  ஆங்கிலத்தில், மொழிப்பெயர்ப்பு செய்துள்ளார் . தமிழிலே வருகின்ற படைப்புகளை, தமிழ் அறியாத சிங்கள மக்களுக்கு சிங்களத்திலோ அல்லது ஆங்கிலத்திலோ கொண்டு செல்வதென்பது ஒரு சீரிய பணியாகும். சமூகங்களிடையே புரிந்துணர்வை ஏற்படுத்துவதற்கும், ஒரு சமூகத்தின் பிரச்சனைகள், அரசியல் ,மற்றும் ஏனைய வழிகளில், ஏனைய சமூகங்களை வெளிப்படுத்துவதிலும் பார்க்க இலக்கியப்படைப்புகள் மன உணர் வுகளோடு ஒன்றி இருப்பதாலும், இதயத்தை தொடுவதாக அமைந்திருக்கின்றது. 

\மலையக மக்களின் வாழ்வியலை சிங்கள இனத்தவர்கள் ஏனையோருக்கு வெளிப்படுத்துவதில், 1960க்கு முன்னர்  ஆங்கில மொழி மூலம் கற்றவர்கள் மலையக மத்தியிலே. சி.வி வேலுப்பிள்ளை  தலாத்து ஓயா கணேஷ், பொன்.கிருஷ்னசாமி, சக்தி பால அய்யா போன்றவர்கள் எழுதியுள்ளனர். இத்தேடலை அகலப்படுத்தினால் இந்தப்பட்டியல் நீள இடமுண்டு. அத்தோடு சிங்கள எழுத்தாளர்களும் இந்த மக்களைப் பற்றி எழுதியுள்ளனர். பந்துபால குருகே என்பவர்  எழுதிய ‘செனஹசின் உபன் தருவோ’ என்பது ஒரு உதாரணம். இதனை உழைப்பால் உயர்ந்தவர்கள் என இரா.சடகோபன் மொழிப்பெயர்த்துள்ளார். இன்னுமொரு உதாரணம் திக்குவல்லை கமாலினால் ‘விடைபெற்ற வசந்தம்’ என்று தமிழில் மொழிப்பெயர்க்கப்பட்ட உப்பாலி லீலாரத்னாவின் ‘பினி வந்தலாவ’ என்ற நாவலாகும்.

மொழிபெயர்ப்புகள் மூலமாக முரண்பட்ட சமூகங்களிடையே நல்லிணக்கம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. ‘மும்மொழி நாடு’ என பிரகடனப்படுத்தப்பட்டு அது இன்னும் பூர்த்தியாகாத நிலையில், ஒரு சமூகம் இன்னொரு சமூகத்தின் வாழ்வியல் பிரச்சனைகளை சரியாக  புரிந்துக்கொள்ள இத்தகைய மொழிப்பெயர்ப்புகள் சிறப்பான பங்களிப்பினை செய்யலாம். இது குறித்து தேசிய மொழிகளும் சமுக ஒருங்கிணைப்பு அமைச்சின் மும்மொழி வேலைத்திட்டத்தில் உள்ளடக்கப்படுவது பொருத்தமான ஒன்றாகும். மலரன்பன், பண்ணாமுத்து கவிராயர்  ஊடாக செய்தபணி மலையகத்தின் ஏனைய மூத்த எழுத்தாளர்களின் படைப்புகளை பொருத்தும் தொடரவேண்டியது காலத்தின் தேவையாகும்.

இரட்டைத் தேசியமும் பண்பாட்டுப் புரட்சியும் நூல் விமர்சனம்

கலாநிதி ந. இரவீந்திரன் எழுதிய ~இரட்டைத் தேசியமும் பண்பாட்டுப் புரட்சியும்| என்ற நூல் விமர்சன நிகழ்வு எதிர்வரும் 06.04.2014 அன்று ஹட்டன் கிறிஸ்தவ தொழிலாளர் பொழில் மண்டபத்தில் நடைபெறும். ஓய்வு பெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு. பி. மரியதாஸ் அவர்களின் தலைமையில் நடைபெறும். இந்நிகழ்வில் வரவேற்புரையை திரு. எம்.எஸ். இங்கர்சால் நிகழ்த்துவார். திரு. லெனின் மதிவானம் விமர்சனவுரையாற்ற திருவாளர்கள் கே. சுப்பையா, வ. செல்வராஜா,  ஆகியோர் கருத்துரைகளை வழங்குவர். ந. இரவீந்திரன் ஏற்புரை வழங்க, திரு. எம். இராமசந்திரன் நன்றியுரை வழங்குவார். இதற்கான ஏற்பாடுகளை புதிய பண்பாட்டுத் தளத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரு இஸ்லாமியரின் பார்வையில் அர்ச்சுனன் தபசு கூத்து பொகவந்தலாவ - ப.விஜயகாந்தன்


கடந்த 15.03.2014 சனிக்கிழமை அன்று பொகவந்தலாவ பெற்றோசோ (பெத்தராசி)  தோட்டத்தில் நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு அர்ச்சுனன் தபசு கூத்து நடாத்தப்பட்டது. இக்கூத்தினை முழுமையாக பார்த்த ஒரு இஸ்லாமியருடனான கலந்துரையாடல் கீழே வழங்கப்படுகின்றது. 
  
உங்களைப்பற்றி?
எனது பெயர் திருமதி மு. பாரூக். நான் தெரேசியா தோட்டத்தில் பிறந்து வளர்ந்தேன். திருமணத்தின் பின் டெவன்போட் (புதுக்காடு) தோட்டத்தில் வசிக்கின்றேன். தற்போது பெற்றோசோ தழிழ் பாடசாலையில் தற்காலிக அதிபராக கடமையாற்றுகின்றேன்.

பொதுவாக எமது பிரதேசத்தில் இஸ்லாமியர்கள் சைவசமய மரபுடைய கலை, கலாசார நிகழ்வுகளில் பங்கெடுப்பது குறைவு. இருந்தப்போதும் நீங்கள் பெற்றோசோ தோட்டத்தில் இடம்பெற்ற கூத்தினை முழுமையாக பார்த்துள்ளீர்கள் இது பற்றி…?

நான் வசிக்கும் இடம் டெவன்போட் தோட்டமாகும். அதற்கு பக்கத்தில் உள்ள தோட்டம் தான் பெற்றோசோ அங்கு கடந்த 15.03.2014 அன்று இரவு அர்ச்சுனன் தபசு கூத்து நடாத்தப்பட்டது. அதனை எனது குடும்பத்தாருடன் இணைந்து முழுமையாக பார்த்தேன். எனது கணவர் (திரு பாரூக்) தான் இந்த நிகழ்ச்சியின் அறிவிப்பாளராக இருந்தார்.
  
நான் இதனை ஒரு மதச்சார்புடைய நிகழ்வாக மாத்திரம் கருதவில்லை. இக்கூத்து ஒரு கலை, மனதிற்கு இனிமைதரும் ஒரு படைப்பு என நான் கருதுகின்றேன். நான் ஒரு இஸ்லாமியராக இருந்தப்போதிலும் நான் வாழும் பிரதேசம் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் நிறைந்த இடமாகும். எனவே நானும் இச்சமூக அங்கத்தவர் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். இம்மக்களின் தனித்துவமான இக்கூத்தினை ஒரு கலை இரசனையோடும் சமூக அங்கத்தவர் என்ற அடிப்படையிலுமே இரசிக்கின்றேன். என் வாழ்நாளில் இது போன்ற மலையக கூத்துக்களை நான் பிறந்த இடத்திலும் இப்போது வசிக்கும் இடத்திலும் இதற்கு முன்பும் பலமுறை பார்த்திருக்கின்றேன்.

நான் வசிக்கும் இடத்தில் பதினைந்து இஸ்லாமிய குடும்பங்கள் வசிக்கின்றன. அனைவரும் இக்கூத்துக்கு தங்களால் முடிந்த பொருளாதார உதவிகளை வழங்குவர். எனவே இஸ்ஸாமியர்களான நாம் அனைவரும் இதனை ஒரு கலை என்ற நோக்கில் இரசிக்கின்றோம்.

இக்கூத்தை இரசித்ததன் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்டது …?

இக்கூத்தானது எமக்கு பலவிதமான படிப்பினைகளை தருகின்றது. சாதாரண தொழிலாளர்களின் கலை ஆர்வம், சமூகத்தின் கூட்டு முயற்சி, ஒற்றுமை, ஒழுக்கம், பொறுப்புணர்ச்சி, பண்பாட்டினை போற்றும் தன்மை, கலையின் தூய்மை என பல படிப்பினைகளை இவை தொடர்ந்து தந்துக்கொண்டிருக்கின்றன.
  
இம்மக்கள் இக்கூத்தினை ஏன் தொடர்ந்து பேணுகின்றார்கள் ?

பரம்பரை பரம்பரையாக ஆடப்பட்டதை நாமும் தொடர்ந்து பேணவேண்டும் என்பது அவர்களது நோக்கம். இக்கூத்து அழிந்து விடக்கூடாது என கருதி பழைய அனுவபசாலிகள் இளைஞர்களை ஊக்கப்படுத்துகின்றார்கள். எதிர்கால சந்ததியினருக்கு கையளிக்க வேண்டும் என நினைக்கிறார்கள்.

நீங்கள் இக்கூத்தினை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

நான் ஏற்கனவே சொன்னதுபோல இது வெறுமனே ஒரு மதம் சார்ந்த விடயம் மாத்திரம் அல்ல.

தொழிலாளர்களின் போராட்ட குணம் இங்கு வெளிப்படுகின்றது. எதையுமே போராடி பெறவேண்டும் என்ற செய்தி வெளிப்படுவதோடு எத்தகைய இக்கட்டான நிலை ஏற்பட்டாலும் வெற்றியை நோக்கி தொடர்ந்து பயணிக்க வேண்டும். கூத்தின் இறுதியில் அர்ச்சுனன் தவசு மரம் ஏறும் காட்சி என்மனதில் இதனை தான் தோற்றுவிக்கின்றது.

இக்கூத்தில் உங்களை கவர்ந்த பகுதி எது?
  
அர்ச்சுனன் தவத்துக்கு செல்லும் வழியில் பேரண்டனுக்கம் அர்ச்சுனனுக்கம் இடையில் நடக்கும் சண்டை காட்சி மிகவும் சுவாரசியமானது. காரணம் இக்காட்சி மிகவும் விருவிருப்பானதாக அமைந்திருந்தது.

“சண்டைக்கு வா சங்குமா…” என்ற பாடலை மிக உயர்ந்த தொனியில் பாடிக்கொண்டு மிக வேகமாகவும் கம்பீரமாகவும் ஆடுவார்கள். சண்டையும் விருவிருப்பாக செல்லும் அந்த சந்தர்ப்பத்தில் அமர்ந்திருப்பவர்கள் கூட எழுந்து உற்சாகமடைவார்கள்.

கூத்தின் எதிர்காலம் பற்றி?

கட்டாயம் தொடர்ச்சியாக வருடம் தோறும் இக்கூத்து ஆடப்படவேண்டும். இக்கூத்து மக்களை ஒற்றுமைப்படுத்தும் என்பது நிச்சயம். மதப்பேதங்களை கடந்த கலையை இரசிக்க வேண்டும். பாடசாலை மாணவர்கள் கட்டாயம் இவற்றை பார்க்க வேண்டும். இதன்மூலம் நேரடியான அனுபவங்களை பெற்றுக்கொள்ளலாம்.

வறுமையை போக்க வௌிநாடு சென்று வாழ்வைத் தொலைத்த விஜயலட்சுமி


எழில் கொஞ்சும் மலையகத்தில், தேயிலைத் தோட்டங்களில் பணி புரிந்து அதன் முலம் கிடைக்கும் வறுமானத்தால் தமது குடும்ப வறுமையை போக்க முடியாத சூழ்நிலையில், சில பெண்கள், மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழில் பெற்று செல்வது அதிகமாகியுள்ளது.

எனினும் இவ்வாறு மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்லும் பெண்களில் எத்தனை பேர் தமது பொருளாதாரத்தை சீர் செய்து வாழ்க்கையில் வெற்றி அடைந்துள்ளார்கள் எனில்.. அது கேள்விக் குறியே. 
இந்த வரிசையில், வௌிநாட்டு வேலைவாய்ப்பு என்ற கனவை நம்பி இன்று தனது வாழ்வைத் தொலைத்துள்ள ஒருவரே, நோட்டன் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட லொனக் தோட்டத்தின் மீனாட்சி பிரிவில் வசிக்கும் விஜயலட்சுமி (வயது 47). 

இரண்டு பிள்ளைகளின் தாயான விஜயலட்சுமியும், இவரது கணவரும் தோட்ட தொழிலையே தமது வாழ்வாதாரமாகக் கொண்டிருந்தனர்.  

இந்தநிலையில் தமது பொருளாதாரத்தை நல்ல நிலைக்கு கொண்டு வரும் எண்ணத்தில், தோட்ட வேலையை விட்டு விட்டு, தமது தோட்டத்தில் உள்ள துணை முகவர் மூலமாக, கொழும்பில் உள்ள பிரதான முகவர் ஒருவரை அணுகி, 2008ம் ஆண்டு, விஜயலட்சுமி சவூதி அரேபியாவுக்கு வீட்டு பணிப் பெண்ணாக சென்றுள்ளார். 

அங்கு மூன்று வருடங்கள் பணிபுரிந்த இவருக்கு முறையாக சம்பளம் கொடுபடாத நிலையில், பெரும் இன்னலுக்கு மத்தியில் நாடு திரும்பியதாக தெரிவித்தார். அதன் பிறகு துணை முகவரின் வற்புறுத்தலின் பெயரில் 2012ஆம் ஆண்டு மீண்டும் சவூதி அரேபியாவிற்கு சென்ற விஜயலட்சுமி அங்கு எதிர்பாராத விபத்து ஒன்றுக்கு முகம் கொடுத்துள்ளார். 2013ம் ஆண்டு 7ம் மாதம் வீட்டு உரிமையாளர்களுடன் காரில் பயணித்த பொழுது ஏற்பட்ட இந்த விபத்தால் வீட்டு உரிமையாளர்கள் இறந்து விட, கை, கால் முறிவால் பாதிக்கப்பட்டு இரண்டரை மாதங்கள் சவூதி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற இவர், மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் அதனை தன் கணவருக்கு அறிவித்துள்ளார். அதன் பிறகே தான் நாடு திரும்பியதாகவும் தனக்கு ஒன்பது மாதங்களுக்கான சம்பளம் கிடைக்கப் பெறவில்லை எனவும் விஜயலட்சுமி குறிப்பிடுகின்றார்.

நாடு திரும்பிய இவர் நேராக கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இரண்டு மாதங்கள் சிகிச்சை பெற்றதாகவும், அதன் பிறகு கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு பின் வீடு திரும்பியதாகவும் தெரிவித்தார். எது எவ்வாறாயினும் அவரது துயரங்கள் இன்னும் முற்றுப் பெறவில்லை.. தற்போது வீட்டில் இருந்து கண்டி வைத்தியசாலைக்கு சென்று வருவதற்கு பெரும் செலவும் ஏற்படுவதாக கூறும் இவர், தோட்ட தொழிலாளியான தனது கணவரின் வருமானத்தில் அதனை ஈடு செய்ய முடியாது உள்ளதாகவும், தமது உணவிற்கே பெரும் சிரமமாக உள்ளதாகவும் கவலை தெரிவித்துள்ளார். அது மாத்திரமன்றி தற்போது சுயமாக தனது வேலைகளை செய்து கொள்ள முடியாத நிலையிலுள்ள இவருக்கு, உயர்தரம் படித்த இவரது மகள் உதவியாக இருப்பதாகவும் அதனால் அவரின் வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் விஜயலட்சுமி குறிப்பிட்டுள்ளார்.  

தனது மனைவிக்கு ஏற்பட்டுள்ள இந்த நிலைமையில் இருந்து தம்மை மீட்பதற்கு எவ்வித உதவியும் இல்லாத நிலையில் தாம் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக இவரின் கணவர் தெரிவித்தார். தமது தந்தை, தாயை கண்டி வைத்தியசாலைக்கு அழைத்து சென்றால், சுமார் 10 நாட்களுக்கு அங்கேயே தங்க நேரிடுவதாகவும், அவ்வாறான சந்தர்ப்பங்களில் தானும் தனது தம்பியும் தனிமையில் வசிப்பதாகவும் அவரது மகள் கூறுகின்றார். அத்துடன் தாய் வைத்தியசாலையில் தங்கியிருக்கும் 10 நாட்களும் தந்தையும் கண்டியில் அறை எடுத்து தங்க வேண்டியுள்ளதாகவும் இதனால் தாம் பெரும் பொருளாதார சிரமத்தை எதிர் நோக்குவதாகவும் அவர் தெரிவித்தார். வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் சென்று முறைப்பாடு செய்த பொழுது மூன்று மாதங்கள் கழித்து வருகை தரும்படி கூறியுள்ளனர். இவருக்கு ஏற்பட்டுள்ள இந்த பாதிப்பு தொடர்பாக துணை முகவரோ பிரதான முகவரோ எவ்விதமான அக்கறையும் செலுத்தாததோடு, இந்த விபத்து தொடர்பாக தமக்கு எதுவும் தெரியாது எனவும் தட்டிக்கழித்துள்ளதாக தெரிகிறது. 

அப்படியானால் துணை மற்றும் பிரதான முகவர்கள் மூலம் வெளிநாட்டு வேலைவாய்ப்பை பெற்று செல்லும் பெருந்தோட்ட பெண்களின் நிலை என்ன? இவர்கள் தொடர்பாக சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்வது எவ்வாறு? இது பற்றி வெளிநாட்டுக்கு செல்பவர்களுக்கு தெளிவுப்படுத்துவது யார்? குடும்பத் தலைவியான விஜயலட்சுமியின் எதிர்கால வாழ்க்கை பெரும் கேள்வி குறியாகியுள்ள நிலையில் அவரது கணவர் மற்றும் இரு பிள்ளைகளின் எதிர்காலம் எவ்வாறு அமையப் போகின்றது? 

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்று சென்ற பல பெருந்தோட்ட பெண்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் தொடர்பான தகவல்கள் வெளிவருவது மிக மிக குறைவாக உள்ளது. 


நன்றி - அததெறன

இருபதாம் நூற்றாண்டின் நவீன அடிமைத்தனம் - பி.ஏ.காதர் (முழுமையான நூல் இங்கே)

பி.ஏ.காதர் ஈரோஸ் அமைப்புக்காக மோகன்ராஜ் எனும் பெயரில் எழுதிய இருபதாம் நூற்றாண்டின் நவீன அடிமைத்துவம் என்கிற இந்த நூல் மலையக மக்கள் குறித்த ஆரம்பகால முக்கிய ஆய்வு நூலக கொள்ளப்படுகிறது. மலையக மக்கள் குறித்து அதன்பின் வெளிவந்த பல நூற்களின் ஆதார நூலாக இதனைக் கொள்ளலாம். இது கிடைக்க அரிதான நூல்களில் ஒன்று. முழுமையான நூலையும் இங்கு வாசிக்கலாம். தரவிறக்கலாம்.

மலையகத்தில் பொகவந்தலாவை பிரதேசத்தை மீண்டும் பாதாளத்திற்கு தள்ளும் மாணிக்கக்கல் அகழ்வு - உதயன்


கடந்தகாலங்களில் பொகவந்தலாவை பிரதேசத்தில் பாரிய சமூக சீரழிவுகளுக்கு வழிவகுத்த மாணிக்கக்கல் அகழுவதற்கான (பத்தல்) அனுமதி மீண்டும் வழங்கப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுவதாக அறியக்கிடைக்கின்றது. சற்று சீரடைந்து வரும் சமூகத்தை மீண்டுமொரு தடவை அதள பாதாளத்தில் தள்ளும் முயற்சியாகவே இது அமையும்.  இதற்கு இன்று சில அரசியல் பிரதிநிதிகளும் தங்களுடைய ஆதரவையும், ஒத்துழைப்பினையும் வழங்கி மாணிக்கக்கல் அகழ்வதற்கான அனுமதியை பெறுவதற்கு முழுமூச்சுடன் செயற்பட்டு வருகின்றனர். 

இந்த மாணிக்கக்கல் அகழ்வு பற்றிய சமூக ஆராய்ச்சி இன்றைய நிலையில் அவசியமானதொன்றாகவே அமைகின்றது. மாணிக்கக்கல் அகழ்வின் நன்மை தீமைகள் சமூக மாற்றத்தில் அதனுடைய செல்வாக்கு என்பதை பற்றியும் அறிந்து தெரிந்து அதன்படி தீர்மானம் எடுத்தல் சாலப்பொருத்தமானதாக அமையும். 

இலங்கையில் மாணிக்கக்கல் என்கின்ற கனிய வளத்திற்கு பெயர்பெற்ற இடமாக சப்ரகமுவை மாகாணத்தில் இரத்தினபுரி மாவட்டம் விளங்குகின்றது. புவியியல் ரீதியில் இரத்தினபுரியின் தொடர்ச்சியாக இருக்கின்ற பொகவந்தலாவை பிரதேசம் நுவரெலியா மாவட்டத்தில் மாணிக்கக்கல் கனிய வளத்திற்கு பெயர்பெற்ற இடமாக விளங்குகின்றது. அதோடு நுவரெலியா மாவட்டத்தில் ஏனைய பல பிரதேசங்களிலும் மாணிக்கக்கல் காணப்படுகின்றது.

2012 ஆம் ஆண்டு மத்திய வங்கியின் அறிக்கையின்படி நாட்டின் பொருளாதாரத்தில் 24 % வேளான்மையின் மூலமாக பொருளாதாரமீட்டப்படுகிறது. அதில் 14 % சதவீதம் தேயிலை உற்பத்தியினூடாக கிடைக்கிப் பெறுகிறது. கனிய வளங்கள் மாணிக்கக்கற்கள் மூலமாக 0.6 % பொருளாதாரமே ஈட்டப்படுகிறது. முறையாக தேயிலை விதை மூலமாக பயிரிடப்படுமானால் நூறு வருட அறுவடை பெறமுடியும். தேயிலை என்கின்ற பல்லாண்டு பயிரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற பெருந்தோட்ட கைத்தொழிலை பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதாரமாக விளங்குகின்ற தேயிலை உற்பத்தியை நிர்மூலமாக்கும் செயலாகவும் இந்த மாணிக்கக்கல் அகழ்விற்கான அனுமதியினை பார்க்க முடியும். 

இரத்தினகற்கள்சார் கைத்தொழிலினூடாக நாட்டின் பொருளாதாரம் உயர்வடைவதும் ஏனைய நாட்டுடனான வியாபார தொடர்புகள் கிடைக்கப்பெறுவதும் வரவேற்ககூடியதாக இருந்தாலும் இதனால் ஏற்படுகின்ற சமூக சீரழிவினையும் கவனத்தில் கொள்ளல் வேண்டும். 

இந்த அகழ்வினால் ஏற்படும் பாதிப்புக்களை இயற்கை வளத்தில் ஏற்படும் பாதிப்புக்கள் சமூகத்தில் மக்களிடையே ஏற்படும் பாதிப்புக்கள் என இருவேறாக நோக்கலாம். 

கடந்த காலங்களில் பொகவந்தலாவையை அண்டிய மோரார், தெரேசியா, வெம்பா, சீனாக்கொலை, கொட்டியாகொலை, கிள்ளார்னி, பிரிட்வெல் போன்ற தோட்டங்களிலும் நோர்வூடை அண்டிய எல்பொடை, கெர்கஸ்வோல்ட், தென்மதுரை, வெஞ்சர் நிவ்வெளி, போன்ற பிரதேசங்களிலும் அனுமதியுடனும் அனுமதியின்றியும் மாணிக்கக்கல் அகழ்வு பரவாலாக இடம்பெற்றன. 

இவ்வாறு ஆழ அகழப்படுகின்ற இடங்கள் அகழ்விற்கு பின் எதுவிதமான பாவணைக்கும்  உதவாத இடமாக, வளங்கள் அனைத்தும் உறிஞ்சப்பட்ட பயனற்ற நிலமாக தற்பொழுதும் காணப்பட்டு வருகின்றது. குறைந்த பட்சம் தேயிலை மீள் உற்பத்திக்குகூட இந்த நிலங்களை பயன்படுத்த முடியாத நிலையே காணப்படுகிறது. இதனால் இந்த பிரதேசங்களில் தேயிலை உற்பத்தியும் குறைவடைந்துள்ளது என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டிய விடயமாகும். 

பொகவந்தலாவை கெசல்கமுவ ஆற்றில் வெள்ளபெருக்கு காரணமாக மண் நிரம்பி மின் உற்பத்தி நிலையங்களின் மின் உற்பத்தி ஆற்றல் குறைவடைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. அதோடு இப்பிரதேச மக்களும் வெள்ளப்பெருக்கு அடைமழை என்பவற்றில் பாதிக்கப்பட்டு நிர்கதிக்குள்ளாகி இருந்ததையும் மீள நினைவூட்டி பார்க்க வேண்டிய நேரம் தற்பொழுது உருவாகியிருக்கின்றது. 

அதிகமாக மழை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதன் விளைவாக இந்த பிரதேசங்களை சுற்றியுள்ள மலை பிரதேசங்களான சிங்காரவத்தை, டம்பாரை போன்ற உயர் பிரதேசங்கள் கீழிறங்கியதாகவும் உல்லாச பிரயாணத்தில் அதிகமாக செல்வாக்கு செலுத்தும் சிவனொளி பாதமலையும் இரண்டரை அடி இறங்கியிருப்பதாகவும் அப்போது மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் சுட்டிகாட்டின. அதேவேளை காலப்போக்கில் மலை பிரதேசங்கள் கீழிறங்குவதால் பாரிய மண்சறிவுகள் ஏற்பட்டு இப்பிரதேச மக்கள் வேறு இடங்களில் இடம்பெயற வேண்டிய சூழ்நிலை உருவாகும் எனவும் எச்சரித்திருந்தது. 

சமூகத்தில் மக்களிடையில் ஏற்படுத்தும் பாதிப்புகள் எனும்போது,

மலையகத்தில் (பொகவந்தலாவை பிரதேசத்தில்) பொதுவாக இரத்தினக்கற்கள் அகழ்விற்கான அனுமதி மீண்டுமொரு தடவை வழங்கப்படுமிடத்து இரத்தினகற்கள் வியாபாரம் செய்யும் முதலாளிமார்களுக்கு பயனுள்ளதாக அமையுமே தவிர பெருந்தோட்ட துறைசார்ந்த அப்பிரதேச மக்களின் வாழ்வாதார உயர்வில் சிறிதேனும் தாக்கம் செலுத்தபோவதில்லை என்பதே உண்மை. முதலாளிகள் பணக்காரர்கள் மேலும் பணம் சம்பாதிப்பார்களேயன்றி சாதாரண தோட்டபுற மக்களின் வாழ்க்கை தரம் உயர்வடையாது. 

மாணிக்கக்கல் அகழ்வின்போது, பலி கொடுத்தல் என்ற மூட நம்பிக்கையின் பேரில் பல அப்பாவி சின்னஞ்சிறார்கள் பலி கொடுக்கப்பட்டமையும், அதன்பொழுது கைது செய்யப்பட்டவர்கள் பின் பணபலத்தால் விடுதலை பெற்றமையும் இதுவரையும்  வெளிச்சத்துக்கு வராத உண்மையாகும்.

ஆனாலும் மலையகத்தில் உள்ள பெருந்தோட்ட மக்களின் மீது அக்கறையுள்ளதாக பாசாங்கு காட்டும் சில அரசியல் தலைமைகள் தோட்டபுற இளைஞர்களுக்கு தொழில்வாய்ப்பு கிடைப்பதாக வெற்று நியாயப்படுத்தலை மேற்கொள்ளலாம். ஆனால் அதன் உண்மைதன்மையினை மக்கள் உணர்தல் அவசியமாகும். தோட்டபுற இளைஞர்களுக்கு தொழில் (நாட்சம்பளம்) வழங்கப்படுமே தவிர பங்கு வழங்கபடாது. நிரந்தரமற்ற தொழில்ளூ தினகூலியாக இவர்களின் உழைப்பு பகலிரவாக உறிஞ்சப்பட்டு வெறுமனே ஐநூறு ஆயிரம் என வழங்கப்படும். அந்த பணமும் அவர்களின் கடின உழைப்புக்கான அன்றைய நாள் செலவீனத்துக்கே போதுமானதாகவிருக்கும். 

பத்தல் என்கின்ற இந்த மாணிக்கக்கல் அகழ்வு இடம்பெற்ற காலங்களில் இந்த பிரதேசங்களில் போதைபொருள் பாவனை, பாலியல் வல்லுறவுகள், சிறுவர் துஷ்பிரயோகங்கள் சந்தேகத்துகிடமான மரணங்கள், திருட்டு, குடும்ப சிதைவுகள் (விவாகரத்து) போன்றன அதிகரித்தன. இதனை வைத்தியசாலை பதிவுகளும் காவல் நிலைய பதிவுகளும் உறுதிபடுத்துகின்றன.

பத்தல் ஆரம்பிக்கப்படுமானால் தோட்டத்தில் தொழில் புரிகின்ற இளைஞர்களும் பெரியோர்களும் தோட்ட தொழிலை விட்டு இந்த அகழ்விற்கு செல்வதனால் ஏற்கனவே நட்டம் என்று சொல்லி இயங்கி வருகின்ற பொகவந்தலாவை பிரதேசத்தில் உள்ள பல தோட்டங்கள் மேலும் நட்டமாக காட்டப்பட்டு பெருந்தோட்ட கம்பனிகள் சில தோட்டங்களை மூடக்கூடிய சாத்தியக்கூறுகளும் நிலவுகின்றன. அதோடு மட்டுமல்லாமல் தோட்டத்தில் தொழிலை இழந்து பத்தல் செல்லும் மக்களுக்கு அவர்களின் முற்பணம், ஆதாய பணம், போனஸ், தீபாவளி முற்பணம் உள்ளடங்கலாக ETF, EPF என்பனவும் குறைந்து மேலும் பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர் கொள்ள வேண்டிய சூழல் ஏற்படும். இதுபோன்றவை கடந்த காலங்களில் ஏற்பட்டும் உள்ளன. 

தோட்ட தொழிலை விட்டு இந்த பத்தல் தொழிலில் ஈடுபடுகின்ற நிலை மாத்திரமல்லாது பாடசாலையிலிருந்தும் மாணவர்கள் இடைவிலகி இந்த பத்தலுக்கு செல்கின்றார்கள். கடந்த காலத்தில் பொகவந்தலாவை பிரதேசத்தில் பத்தல் அனுமதி வழங்கி அனுமதி பெற்ற மாணிக்கக்கல் அகழ்வு இடம்பெற்ற காலத்தில் பொகவந்தலாவை பிரபல கல்லூரியில் மாத்திரம் 2800 – 3000 க்கும் இடைப்பட்டதாக இருந்த மாணவர் தொகை 1800 ஆக வீழ்ச்சி அடைந்தது. இதுபோலவே பல பாடசாலைகளின் மாணவர்கள் வரவு வீதம் குறைவடைந்து இடைவிலகல் அதிகரித்து மாணவர் தொகை வீழ்ச்சியடைந்தது. இது பொகவந்தலாவை பிரதேசத்தின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கும் நிலைமையை தோற்றுவித்தது. இதன் தொடச்சியாகவே பல சமூக குற்ற செயல்களும் அதிகரித்தன. 

பொகவந்தலாவை பிரதேசத்தில் பள்ளி மாணவிகள் சிசு பிரசவித்த வீதம் அதிகரித்தமையும் இந்த காலப்பகுதியிலேயே. இந்த காலகட்டத்தில் 58க்கும் மேற்பட்ட சந்தேகத்திற்கிடமான மரணங்கள் இடம்பெற்றிருக்கின்றன. இவை அனைத்தும் ஏதோவொரு வகையில் இந்த மாணிக்கக்கல் அகழ்வுடன் தொடர்புடையனவே. 

மாணிக்கக்கல் அகழ்வு நிறுத்தப்பட்டதன் பின்பு இப் பிரதேசத்தில் அனுமதியின்றி அகழ்வு இடம்பெற்றமையும் இதனால் பல இளைஞர்கள் கைது செய்யப்பட்டமையும், இதன்பொழுது பல கொலைகள் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது. இதற்கு கெர்கஸ்வோல்ட் மத்தியபிரிவில் இடம்பெற்ற இரண்டு கொலைகளை உதாரணமாக கொள்ளலாம். இந்த அனுமதியுடனான அகழ்வு நிறுத்தப்பட்ட பின் வேறுதொழில் இன்றி இருந்த இளைஞர்களினால் திருட்டுகள் அதிகரித்தன. இதனால் தோட்டபுற மக்கள் பயந்த நிலையில் வாழும் சூழ்நிலை ஏற்பட்டது. 

அது மட்டுமல்லாமல் வெளி பிரதேசங்களில் உள்ளவர்களின் வருகை அதிகரித்து பொகவந்தலாவை பிரதேசத்தில் வெளி பிரதேச மக்களின் பதிவுகளும் அதிகரித்தன. 

இந்த காலப்பகுதியில் பொகவந்தலாவை பிரதேச தோட்டங்களில் மஞ்சக்கா மாலை, மலேரியா, வைரஸ் காய்ச்சல், தைபொயிட் என பல தொற்று நோய்கள் பெருகி இப்பிரதேச மக்களை வலுவிழக்க செய்தமையினையும் அனைவரும் சிந்தித்து பார்த்தல் அவசியமாகும். தைபொயிட் நோய் ஏற்படுமானால் மரணிக்கும்வரை உடம்பில் எலும்பு நுரையீரல் என ஏதாவதொரு இடத்தில் இருந்து உடம்பில் நோய் எதிர்ப்பு சக்திகளை இல்லாமலாக்கும் என்பதையும் வைத்தியர்கள் சுட்டிகாட்டினர். இதன்பொழுது நோய்வாய்பட்டு பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்ட தோட்டபுற மக்களுக்கு அரச நிறுவனங்கள் நிவாரணங்கள் என்ற பெயரில் ஒரு வீட்டுக்கு 500 ரூபா காசு, ஒரு பொலித்தின் பை உலர் உணவு பொருட்கள் வீதம் வழங்கி தப்பித்துக் கொண்டதையும் யாரும் மறந்துவிட முடியாது மறுத்துவிட முடியாது.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக இயற்கை பாதுகாப்பு தொடர்பான நிறுவனம் ஒன்றினால் நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து நீதிமன்றத்தின் மூலமாக மாணிக்கக்கல் அகழ்வு நிறுத்தப்பட்டதையும் இதனை மீள அனுமதி பெற முயற்சிக்கும் அனைத்து தரப்புகளும் அறிந்து செயற்பட வேண்டும். மீண்டும் ஆரம்பிக்கப்படுமானால் அது நீதிமன்ற உத்தரவை மீறும் செயலாகவே அமையும். அப்பாவி இப்பிரதேச மக்களே பாதிப்படைவார்கள்ளூ அவர்களின் இருப்பே கேள்விக்குறியாகும். 

காலனித்துவ காலத்தில் நிலவிய முதலாளித்துவ தன்மையை போன்று தற்பொழுதும் வெறுமனே பொருளாதாரத்தினை மாத்திரம் கருத்திற் கொள்ளாது இப்பிரதேச மக்களின் எதிர்காலத்தினையும் கருத்திற் கொண்டு இதனை முன்னெடுப்பதற்கான முட்டுகட்டைகளாக மலையகத்தின் மீது அக்கறையுள்ளவர்களாக காட்டிக்கொள்பவர்கள் இருக்க வேண்டும். அதைவிடுத்து மீண்டும் ஆரம்பித்தால் தனக்கும் பங்குண்டு என்பதால் சமூகத்தை சீரழிக்கும் நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்க வேண்டாம் எனவும் இந்த கட்டுரையின் மூலமாக சுட்டிக்காட்டப்படுகிறது. மீறியும் ஆரம்பிக்கப்படுமானால் இந்த பிரதேசங்களில் இருக்கின்ற தன்னார்வ குழுக்கள் ஒன்று சேர்ந்து மீண்டும் நீதிமன்றம் செல்லும் நிலைமை ஏற்படாலாம் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இரத்தொட்டையில் ஒரு இலக்கிய நிகழ்வு - எம்.முத்துக்குமார்


பாக்யா பதிப்பகமும் நூலகம் நிறுவனமும் இணைந்து நடாத்திய மலையக ஆவணக மற்றும் நூலறிமுக நிகழ்வுகள் மாத்தளை ரத்தொடடை நகரில் இடம்பெற்றது. ரத்தொட்டை உதயம் சமூக நலன்புரிச் சங்கம்  ஸ்ரீ செல்வவிநாயகர் ஆலய நிர்வாக சபையுடன் இணைந்து நடாத்திய இந்த நிகழ்வில் மலையக நூல்கள் ஆவணங்களை எண்ணிமப்படுத்தல் பற்றியும் அதன் பயன்பாடுகள் பற்றியும் நூலகம் நிறுவனத்தினர் செயலமர்வுகளை நடாத்தினர்.

நூலகம் நிறுவனத்தின் தன்னார்வத் தொண்டாளர் சேரன் நூல்களை எண்ணிம முறையில் ஆவணப்படுத்தப்பட வேண்டியதன் அவசியம் குறித்து கருத்துத் தெரிவித்தார். ஏதொ ஒரு காரணத்திற்காக யாழ்ப்பாண பொதுநூலகம் எரிக்கப்பட்டுவிட்டது. அப்போது எரிந்து சாம்பலான நூல்கள் இப்போது எம்மிடத்தில் இல்லை. ஆனால் இப்போதைய நவீன தொழிநுட்ப வளர்ச்சியினூடாக இணையத்தில் அதனை பாதுகாக்கும் முயற்சியை செய்து வருகிறோம். இதுவரை 13000 க்கும் மெற்பட்ட நூல்கள் ஆவணங்கள் இவ்வாறு இணையத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. அவற்றை நீங்கள் இலவசமாக பயன்பாட்டுக்கு எடுத்துக்கொள்ளலாம் என கூறி நேரடியாக கணிணியினூடாக செயன்முறை விளக்கமும் அளித்தார்.

எண்ணிம ஆவணப்படுத்தல் தொடர்பாக செயன்முறை விளக்கமளித்து உரையாற்றிய தன்னார்வ செயற்பாட்டாளர் மயூரன்  பாடசாலைகளில் ஆலயங்களில்  சமூகத்தளங்களில்  வெளியிடப்படும் சஞ்சிகைகள் கூட இவ்வாறு கணிணியூடாக பத்திரப்படுத்த முடியும். இதன் மூலம் நமது ஆவணங்களைப் பாதுகாக்க முடியும் எனவும் தெரிவித்தார்.

அதேபோன்று இலத்திரணியல் பள்ளிக்கூடம் எனும் முறையினூடாக மாணவர்கள் எவ்வாறு தமது கற்றல் நடவடிக்கைகளை இலகுவாக்கலாம் என்பது தொடர்பாக தன்னார்வ செயற்பாட்டாளர் ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் மாணவர் நந்தகுமார் விளக்கமளித்தார். மாணவர்கள் கடந்த கால வினாத்தாள்கள் உள்ளிட்ட பயிற்சிக்குரிய மாதிரி வினாத்தாள்களை இந்த இணையத்தளத்தில் இலவசமாக பெற்றுக்கொள்ளமுடியும். மாணவர்கள் முகநூல் வலைத்தளம் போன்று இந்தத் தளத்தின் ஊடாக தங்களது பாடவிதானம் தொடர்பான சந்தேகங்களுக்கு தீர்வு காண முடியும் எனவும் செயன்முறையுடன் விளக்கினார்.

இதனுடன் இணைந்த சிறப்பு நிகழ்வாக அல்அஸ்மத் மற்றும் தெளிவத்தை ஜோசப் ஆகியோரின் நூல்கள் அறிமுகம் செய்துவைக்கப்பட்டன. கவிஞர் அல் அஸ்மத் அவர்கள் இரத்தோட்டை தமிழ் வித்தியாலயத்தின் பழைய மாணவர். மாத்தளையை பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் எழுதிய அறுவடைக்கனவுகள் எனும் நாவலை அறிமுகம் செய்து மல்லியப்புசந்தி திலகர் நயப்புரை வழங்கினார்.

ஏற்புரை வழங்கிய கவிஞர்.அல்அஸ்மத் அவர்கள் பல ஆண்டுகளுக்குப்பிறகு வேலாயுதமாகிய அஸ்மத்  பிறந் மண்ணுக்கு வந்திருக்கிறேன். அதுவும் இந்த மண்ணில் எனது நூலை அறிமுகப்படுத்தக் கிடைத்தமை பெரும் பாக்கியமாகும் என தெரிவித்தார்.

‘தெளிவத்தை ஜோசப் சிறுகதைகள்’ நூல் பற்றி கருத்துரை வழங்கிய எழுத்தாளர் மாத்தளை மலரன்பன் தானே சிறந்த இலக்கியவாதி எனும் புலமைச் செருக்குடன் விளங்கிய ஜெயகாந்தனிடம் உங்களுக்கு அடுத்து சிறந்த எழுத்தாளன் என நீங்கள் யாரை குறிப்பிடுவீர்கள் எனக் கெட்டபோது அவர் தனக்குப்பின் ‘ஜெயமோகன்’ தான் சிறந்த எழுத்தாளர் என்றார். அந்த ஜெயமோகனே அழைத்து நமது தெளிவத்தைக்கு விருது வழங்கி ஒரு சிறுகதைத் தொகுப்பையும் தானெ தொகுத்து வெளியிடுகிறார் எனில் அது மலையகத்திற்கும் மலையகத்தில் எழுதிக்கொண்டிருப்போருக்கும் கிடைத்த பெருமையாகும் என தெரிவித்தார். தெளிவத்தையின் சிறுகதைகள் குறித்து அதிகம் பேசலாம். உவமைகளைக் கையாள்வதில் அவருக்கு நிகர் அவரே. நிறைந்த நுட்பங்களுடன் பல்வெறு சிக்கலான விடயங்களையும் கதைக்குள் கொண்டுவந்தவிடும் அவரகது லாவகம் வனப்புவாய்ந்தது. மீன்கள் கூனல் பொன்ற கதைகள் அழகியலுடன் அழமாக மலையக மக்களின் வாழ்வியல் பேசுகின்ற கதைகள் என தெரிவித்தார். 

கலைஞர். மாத்தளை கார்த்திகேசு எம்.எம்.பீர்முகம்மது ஆகியோர் வாழ்த்துரைகளை வழங்கியதுடன் அவர்களுக்கு சிறப்புபிரதிகளும் வழங்கிவைக்கப்பட்டன. பாடசாலை மற்றும் பொது நூலகங்களுக்கு  நூல்கள் வழங்கிவைக்கப்பட்டன. ‘உதயம்’ சமூக நலன்புரிச் சங்கம் சார்பில் ஆசிரியர் பிலிப் சேவியர் நேசன் ஆகியோருக்கும் ஆலயபரிபாலன சபைத் தலைவர் கருப்பையா ராஜா அவர்களுக்கும துரைவி பதிப்பகத்தின் ராஜ் பிரசாத் அவர்களுக்கும்  சிறப்பு பிரதிகள் வழங்கிவைக்கப்பட்டன. மிக நீண்ட இடைவெளிக்குப்பின் சிரேஷ்ட  எழுத்தாளர்கள் பாடசாலை மாணவர்களுடன் ஒன்று கலந்த இலக்கிய நிகழ்வாக விழா அமைந்திருந்தது. 

இணைந்திருங்கள்


Followers

Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates