“மகாவம்சம்” எனும் போதே அது வம்சவிருத்தி பற்றிய கதை என்கிற உள்ளடக்கத்தைக் கொண்டிருப்பதை கண்டிருப்போம். இலங்கையில் இருந்த ஆட்சிகளையும் அதை ஆட்சி செய்தவர்களையும் பற்றிய அந்த விபரங்களின் அடிப்படையிலேயே அது தொகுக்குப்பட்டு வந்திருக்கிறது.
மகாவம்சம் என்றதும் நம்மில் பலர் இன்றும் மகாநாம தேரர் எழுதிய மகாவம்சத்தை மட்டுமே அறிந்து வைத்திருக்கின்றோம். கி.மு 6ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி 3ஆம் நூற்றாண்டு வரையிலான கிட்டத்தட்ட 900ஆம் ஆண்டுகளுக்கிடையில் நிகழ்ந்த நிகழ்வின் தொகுப்பாக கி.பி 5ஆம் நூற்றாண்டில் மகாநாம தேரர் மகாவம்சத்தை எழுதியிருக்கிறார். அதாவது கிட்டத்தட்ட மகாநாம தேரர் அவருக்கு முந்திய 1100 ஆண்டுகால வரலாற்றை எழுதியிருக்கிறார் என்கிற முடிவுக்கு வரலாம். அதுவரை வழிவழியாக எழுதப்பட்டு வந்த பல்வேறு ஓலைச்சுவடிகளையும், வாய்மொழிக் கதைகளையும் கொண்டே அவர் மகாவம்சத்தைப் புனைந்தார் எனலாம்.
மகாவம்சம் அத்தோடு முடிவடையவில்லை. இன்னும் சொல்லப்போனால் மகாவம்சம் இன்றும் எழுதப்படுகிறது. மகாவம்ச வரலாற்று நூலானது 2600 வருட காலப் பதிவுகளைக் கொண்டது. உலகில் ஒரு அரசே பொறுப்பேற்று இவ்வாறு நீண்ட கால வரலாற்றை உத்தியோகபூர்வமாக பதிவு செய்து வருகிற ஒரே நாடாக இலங்கைக் குறிப்பிடலாம். வேறெந்த நாட்டிலும் அப்படி இல்லை என்று இறுதியாக வெளிவந்த 6வது மகாவம்சத் தொகுதியின் முகவுரையில் குறிப்பிடப்படுகிறது.
இந்த வரிசையில் இறுதியாக வெளிவந்த தொகுதி 6வது தொகுதி. கடந்த 2016 ஆம் ஆண்டு அது இலங்கை அரசால் வெளியிடப்பட்டது. “மகாவம்சம்” என்கிற வரலாற்றுக் குறிப்புகளை இன்று அரசே எழுதி வைத்து வருகிறது என்பதை இங்கே முதலில் விளங்கிக்கொள்வோம். கலாசார அமைச்சின் கீழ் அதற்கென ஒரு அரச நிறுவனம் உருவாக்கப்பட்டு தனிச்சிங்கள பௌத்த அணியொன்றின் தலைமையில் அந்தப் பணிகள் அரை நூற்றாண்டுக்கும் மேலாக தொடர்ந்து இயங்கி வருகிறது. பாளி மொழியிலும் சிங்கள மொழியிலும் அது வெளியிடப்பட்டு வருகிறது. தமிழில் வெளியிடப்படுவதுமில்லை. அதை எழுதும் அணியில் எந்த தமிழ் அறிஞர்களும் இருந்ததுமில்லை. இவ்வாறு சிங்களத்தில் எழுதப்பட்டுள்ளதால் இதன் உள்ளடக்கம் பற்றிய விபரங்களும் கூட தமிழர்களால் வெளிக்கொணர முடிந்ததில்லை.
மகாவம்சத்தின் தோற்றம்
கி.மு 6ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி 3ஆம் நூற்றாண்டு வரையிலான கிட்டத்தட்ட 900ஆம் ஆண்டுகளுக்கிடையில் நிகழ்ந்த நிகழ்வின் தொகுப்பாக கி.பி 5ஆம் நூற்றாண்டில் மகாநாம தேரர் எழுதியிருக்கிறார். அதாவது கிட்டத்தட்ட 1100 ஆண்டுகள் வழிவழியாக வாய்மொழியாக பேசப்பட்டு வந்த தகவல்கள் என்கிற போது அதன் நம்பகத் தன்மை எப்படி இருக்கும் என்பதை நாம் உணர முடியும்.
அதில் கூறப்படும் பல கதைகள் விஞ்ஞானத்துக்கு புறம்பான வரலாற்றுக் குளறுபடிகளைக் கொண்ட புனைகதைகள் உள்ளதைப் பற்றிய ஆய்வுகள் பல உள்ளன. அது மட்டுமன்றி ஆட்சிசெய்த அரசர்களின் வயது, ஆட்சி காலம் என்பன பல இடங்களில் நம்பத்தகுந்தவை அல்ல. அவை பற்றி ஏராளமாக எழுதப்பட்டுள்ளன. அதே வேளை மகாவம்சத்தில் உள்ள பல வரலாற்றுத் தகவல்கள் தொல்லியல் ஆய்வுகளைத் தூண்ட பயன்பட்டுள்ளன.
இதை எழுதிய மகாநாம தேரர் அவருக்கு முன்னர் எழுதப்பட்ட தீபவம்சம் என்கிற வரலாற்று நூலைத் தழுவியே எழுதினாலும் கூட மக்களின் வாய்மொழி வரலாறுகளை கேட்டுணர்ந்தே தான் எழுதியதாகவே மகாவம்சத்தில் குறிப்பிடுகிறார். மகாநாம தேரர் இருந்த காலத்தில் வரலாற்றை ஆய்வு ரீதியாக எழுதும் புலமையும் அவருக்கு இருக்கவில்லை, அதற்கான வசதிகளும் அன்று இருக்கவில்லை. இல்லையென்றால் சிங்கத்துக்குப் பிறந்தவர்களே சிங்களவர்கள் என்று சாரப்பட அவர் எழுதியிருக்கமாட்டார்.
இந்த பின்னணியில் வைத்தே மகாவம்சத்தை நாம் காணவேண்டியிருக்கிறது. இலங்கையின் சிங்கள பௌத்த பண்பாட்டு வரலாறு என்பது “மகாவம்ச” புனைவுகளால் கட்டப்பட்டது என்பதை எவரும் அறிவர்.
மகாவம்சத்தின் அரசியல் வகிபாகம்
இலங்கையின் நவீன வரலாற்றாசிரியர்கள் கூட இலங்கையின் புராதன வரலாற்றைப் பற்றி பேசும் போது மகாவம்சத்தில் தங்கியிருக்கிறார்கள். குறைநிறைகளுக்கப்பால் மகாவம்சத்தை அடியாகக் கொண்டே மூலாதாரங்களைத் தேடும்/தொகுக்கும் ஆராய்ச்சி மரபுக்கு ஆட்படாத எந்த வரலாற்றாசிரியரும் இருக்க முடியாது. இதனை அடிப்படையாக வைத்தே இலங்கை வரலாறு தொடர்பான வெகுஜன மட்டத்திலான உரையாடல்களும் நிகழ்த்தப்படுகின்றன. பாடசாலை வரலாற்றுப் பாடங்களும் இதனை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. வெகுஜன சொல்லாடல்களிலும் அரசியல் சொல்லாடல்களிலும் கூட மகாவம்சம் பாத்திரம் செலுத்துகிறது. மகாவம்சம் சித்திரிக்கும் இனவாத கருத்தேற்றப்பட்ட துட்டகைமுனுவின் கதையானது பாடசாலையில் பயன்படுத்தப்படும் சிங்கள மொழிப் பாட நூல்களிலும் பௌத்த சமய பாட நூல்களிலும் சிங்கள நாடக அரங்குகளிலும் ஜனரஞ்சக இலக்கியங்களிலும் பிரயோகிக்கப்படுகின்றன.
சிங்கள பௌத்தத்தின் சித்தாந்த பலத்துக்கு துணையாக அது வைத்திருக்கும் முக்கிய ஆயுதமாக “மகாவம்சம்” என்கிற "புனித" சிங்கள வரலாற்று காவியம் விளங்குகிறது. இந்தியாவில் இந்துத்துவ தீவிரத்தனமைக்கு பயன்படுத்தும் ஆயுதமாக கற்பனாபூர்வமான புனைவுப் புனித காவியமான இராமாயணத்தை எவ்வாறு பயன்படுத்திவருகிறதோ, அது போல இலங்கையில் சிங்கள பௌத்த பேரினவாதமும் தமது உண்மையான வரலாறு என்பது புனைவுக் காவியமான “மகாவம்சம்” இருப்பதாக முழுமையாக நம்புகிறது. தமிழின விரோதப் பிரசாரங்களுக்கு பூடகமாகப் பயன்படுத்தப்பட்டுவரும் வரலாற்று ஆவணமாக மகாவம்சம் பின்புல சித்தாந்தமாக இயக்கப்பட்டு வருகிறது.
மொழியாக்கம்
கி.மு 543ம் ஆண்டு இந்தியாவிலிருந்து விஜயன் என்கிற இளவரசனின் வருகை தொடக்கம், கி.பி 361ம் ஆண்டு மகாசேனனின் காலம் வரையான பதிவுகளை மகாவம்ச மூல நூல் கொண்டிருக்கிறது.
மகாவம்சம் எழுதப்பட்டு 13 நூற்றாண்டுகளாக அது சிங்கள சாதாரண மக்களுக்கு எட்டாத ஒன்றாகவே இருந்தது. மேலும் இன்று கூட மகாவம்சத்தின் முதல் ஆங்கில பிரதி பற்றி குறிப்பிடுகிற போது கெய்கரைத் (Wilhelm Ludwig Geiger) தான் குறிப்பிடுவது வழக்கம். உண்மையில் அதற்கு முன்னரே குறைபாடுகளுடனேனும் மொழியாக்கம் நடந்திருக்கிறது. ஆங்கிலேய ஆட்சியின் போது இலங்கையின் பிரதம நீதியரசராக இருந்த சேர் அலெக்சாண்டர் ஜோன்ஸ்டன் (Sir Alexander Johnston) மகாவம்சத்தின் ஓலைச்சுவடிகளை ஆங்கிலத்தில் வெளியிடுவதற்காக ஐரோப்பாவுக்கு 1809 ஆம் ஆண்டு அனுப்பிவைத்தார். 1826 ஆம் ஆண்டு ஒரு தோராயமான மொழியாக்கம் லத்தீன் மொழியில் யூகேன் பூர்னோப் என்பவரால் (Eugène Burnouf ) வெளியிடப்பட்டது. ஆனால் அதில் பல குறிப்புகளுக்கு பிழையான விளக்கம் கொடுக்கப்பட்டது. உதாரணத்திற்கு புத்தர் இலங்கையில் பிறந்தார் என்று கூட இருந்தது.
இலங்கையின் முதலாவது மதக் கலவரமான கொட்டாஞ்சேனைக் கலவரம் நிகழ்ந்த 1883 இல் தொன் அன்திரிஸ் த சில்வா பட்டுவந்துடாவ (DON ANDRIS DE SILVA BATUWANTUDAWA) என்பவரைக் கொண்டு மொழிபெயர்த்த பிரதியொன்றை அன்றைய ஆங்கிலேய அரசாங்கமே வெளியிட்டிருக்கிறது. அதில் அன்றைய தேசாதிபதி சேர் வில்லியம் ஹென்றி ஜோர்ஜின் ஆணையின் பேரில் வெளியிடப்பட்டதாக குறிப்பு காணப்படுகிறது. ஆனால் அந்தப் பணியை அன்திரிஸ் த சில்வாவிடம் அன்று ஒப்படைத்தவர் அன்றைய ஆளுநர் கிரகெரி.
இவற்றிலெல்லாம் மொழிபெயர்ப்பு குறைபாடுகள் இருந்த நிலையில் ஆங்கிலேயர் ஆட்சியில் சிவில் சேவைத்துறையில் பணியாற்றியவரும் வரலாற்றாசிரியருமான ஜோர்ஜ் டேனர் (George Turnour) என்பவர் முதலியார் எல்.சீ.விஜேசிங்கவுடன் இணைந்து 1889 இல் பாளியில் இருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்து இரண்டு தொகுதிகளாக வெளியிட்டார். முதலியார் விஜேசிங்கவுடன் சேர்ந்து மொழியாக்கத்தில் உதவியவர் தான் ஜோர்ஜ் டேர்னர். 1889இல் அது வெளிவந்த போது அன்றைய இலங்கை தேசாதிபதி ஆர்தர் ஹமில்டன் கோர்டன் (Arthur Hamilton Gordon) இன் ஒப்புதலுடன் வெளியிடுவதாக முதல் பிரதியில் மொழிபெயர்ப்பாளர்கள் குறிப்பிட்டிருப்பதைக் காண முடிகிறது.
அந்த மொழிபெயர்ப்பிலும் போதாமை இருந்ததை சுட்டிக்காட்டித் தான் 1912ம் ஆண்டு வில்ஹெய்ம் கெய்கர் (Wilhelm Ludwig Geiger) ஜெர்மன் மொழிக்கு மொழிபெயர்த்தார். மாபெல் ஹெய்னஸ் போட்
(Mabel Haynes Bode) என்பவரின் உதவியுடன் அது ஆங்கில மொழிக்கு மொழிமாற்றம் செய்யப்பட்டது. வில்ஹெய்ம் கெய்கர் அதன் ஆங்கில மொழிபெயர்ப்பை சரி பார்த்து வெளியிட்டார். கெய்கர் மகாவம்சத்தை பாளி மொழியிலிருந்து வெளிக்கொணர்ந்தவர் என்று மட்டும் தான் பலர் அறிந்திருப்பார்கள். ஆனால் அது மட்டுமன்றி மகாவம்சத்தின் இரண்டாம் பாகமாக கொள்ளப்படும் “சூளவம்சம்” (ஜெர்மன், ஆங்கிலம் இரு மொழிகளிலும்), ரசவாகினி, சங்யுக்த நிக்காய, சிங்கள அகராதி உட்பட இன்னும் பல மொழிபெயர்ப்புகளையும், நூல்களையும் கொண்டுவந்திருகிறார். இன்றும் கெய்கரின் மொழிபெயர்ப்பையே ஆய்வுகளுக்கு பயன்படுத்தப்படும் முக்கிய பிரதியாக காண முடிகிறது. வெறும் மொழிபெயர்ப்பாளராக மட்டுமன்றி அவர் ஒரு வரலாற்று அறிஞராக அதனை விமர்சனபூர்வமாகவும் ஆய்வுபூர்வமாகவும் வரலாற்றுப் புலமைத்துவத்துடன் அணுகியதும் ஒரு காரணமாக இருக்கலாம்.
இதுவரை மகாவம்சத்தின் முதலாவது தொகுதி தவிர எதுவும் தமிழில் வெளிவந்ததில்லை. அந்த மகாவம்ச மொழிபெயர்ப்புகள் கூட தனியாரால் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளே. தமிழில் சுமார் ஐந்துக்கும் மேற்பட்டவர்கள் முதலாவது தொகுதியை மாத்திரம் மொழிபெயர்த்திருக்கிறார்கள். இவை எதுவுமே கூட; சிங்கள மகாவம்சத்தில் இருப்பதை அப்படியே மொழிபெயர்க்கப்பட்டவை அல்ல. சொல்லப்போனால் மொழிபெயர்த்தவர்களின் சுருக்கமான - சொந்த விளக்கவுரை / பொழிப்புரை தான். இந்த ஐந்தையும் எடுத்து மூலத்துடன் பரிசீலித்தால் அந்த வித்தியாசங்களை அப்படியே உணர்வீர்கள்.
ஈழப்போராட்டம் பற்றி மகாவம்சம்?
மகாவம்சத்தை எழுதவதற்காகவே அரச கலாசார அமைச்சின் கீழ் ஒரு தனித்துறை பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது. அதற்கான வலுவான குழுவும் இதில் ஈடுபட்டு வருகிறது. அந்த குழுவில் அங்கம் வகிக்கும் 15 புலமையாளர்களைக் கொண்ட பட்டியலில் உள்ளவர்களைப் பற்றி தேடிப்பார்த்தபோது சிங்கள பௌத்தர்கள் தவிர்ந்த எவரும் அந்தக் குழுவில் இல்லை என்பதை அறிய முடிகிறது. ஏன் சிங்கள கத்தோலிக்கர்கள் கூட கிடையாது. இலங்கையில் ஆட்சி செய்தவர்கள், அந்த ஆட்சிகாலங்களின் போது அரசியல், சமூக, பொருளாதார, பண்பாட்டு, களை இலக்கிய, விஞ்ஞான, கல்வி, மத நிலைமைகளை பதிவு செய்வது அந்தக் குழுவின் பணி.
இதைத் தவிர மகாவசத்தை “மஹாவம்ச கீதய” என்கிற தலைப்பில் செய்யுள் வடிவிலும் தயாரிக்கப்பட்டு வருகிறது. இது வரை 1815 வரையான காலப்பகுதி வரை பாளி, சிங்கள ஆகிய மொழிகளில் செய்யுளாக தயாரிக்கப்பட்டிருக்கிறது. எஞ்சிய தொகுதிகளுக்கான பணிகள் பேராசிரியர் மென்டிஸ் ரோஹனதீர என்பவரின் தலைமையில் தனியான குழு மேற்கொண்டு வருகிறது.
2015 ஜனவரி ரணில் – மைத்திரிபால அரசாங்கம் பதவியேற்றதன் பின்னர் மகாவம்ச உருவாக்கப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டது. 2016 ஆம் ஆண்டு கலாசார விவகார திணைக்களம் தமது புதிய திட்டத்ததை பாராளுமன்றத்தில் சமர்பித்தது. அதில் மகாவம்ச உருவாக்கத்தை துரிதப்படுத்தும் பரிந்துரைகள் காணப்படுகின்றன. அதன் விளைவாகவே இப்போது 6வது தொகுதி வெளியிடப்பட்டிருக்கிறது.
இதுவரை தமிழ் மக்களின் உரிமைப்போராட்டம் குறித்து அரசாங்கங்களின் கருத்துக்களை நாம் அறிந்திருக்கிறோம். ஆனால் “இலங்கை அரசின்” உத்தியோகபூர்வ விளக்கத்தை அறிந்துகொள்ள தற்போது வெளிவந்திருக்கும் 2010 வரையிலான மகாவம்சத்தின் 6வது தொகுதியை நாம் கவனத்துக்கு எடுப்பது அவசியம்.
சிங்கள பௌத்தர்களால் வரலாற்றைத் திரித்து, தமிழ் மக்களை புறமொதுக்கி, புனைவுகளை தொகுத்து சிங்கள மக்களுக்கு மட்டுமே ஊட்டிவரும் ஆபத்தான சிங்கள பௌத்த ஆயுதமாக மகாவம்சம் திகழ்கிறது.
இதுவரையான மகாவம்சத் தொகுதிகள்
இதுவரை சிங்களத்திலும் பாளி மொழியிலும் மட்டுமே அரசால் வெளியிடப்பட்டுள்ள மகாவம்ச தொகுதிகள்.
- தொகுதி 1 - இலங்கையின் பண்டைய இதிகாசம் கி.பி 301 வரை - மகாநாம தேரரால் (37வது அத்தியாயம் வரை) எழுதப்பட்டது
- தொகுதி 2 - கி.பி 301 முதல் கி.பி 1815 வரையான (100வது அத்தியாயம் வரை) ஆங்கிலேயரின் முழுக் கட்டுப்பாட்டில் வரும் வரை (இதைச் “சூளவம்சம்” என்றும் அழைப்பர்)
- தர்மகீர்த்தி (I) தேரரால் 37-79 வது அத்தியாயம் வரை
- தர்மகீர்த்தி (II) தேரரால் 79-90 வது அத்தியாயம் வரை
- திப்பட்டுவாவே சுமங்கள தேரரால் 90-100 வது அத்தியாயம் வரை
- ஹிக்கடுவே ஸ்ரீ சுமங்கள தேரர், பட்டுவந்துடாவே பண்டிதர் ஆகியோரால் 101 வது அத்தியாயம் எழுதப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது
- தொகுதி 3 - 1815 முதல் 1936 வரை. (114 வரை வது அத்தியாயம் வரை) யகிரல பஞ்ஞானந்த தேரரால் எழுதப்பட்டது
- தொகுதி 4 - 1936 முதல் 1956 பண்டாரநாயக்க ஆட்சியேரும் வரை. (124வது அத்தியாயம் வரை) கலாநிதி நந்ததேவ விஜேசேகர தலைமையிலான குழுவால் இயற்றப்பட்டது.
- தொகுதி 5 - 1956 முதல் 1978 ஜே ஆரின் இரண்டாவது குடியரசு ஆட்சி தொடங்கும் வரை. (129 வது அத்தியாயம் வரை) பெல்லன ஸ்ரீ ஞானவிமல தேரரின் தலைமையிலான குழுவால் இயற்றப்பட்டது.
- தொகுதி 6 – 1978 முதல் 2010 தமிழீழ விடுதலைப் போராட்டம் முடிந்து மகிந்த மீண்டும் ஆட்சியேரும் வரை. (133 வது அத்தியாயம் வரை) அரசின் கீழ் அமைக்கப்பட்ட மகாவம்சக் குழுவால் திருமதி மாலினி எந்தகம தலைமையில் இயற்றப்பட்டது.
- 130 வது அத்தியாயம் - ஜே, ஆர் ஜெயவர்த்தனவின் ஆட்சிக்காலப்பகுதி (1978-1989)
- 131 வது அத்தியாயம் - ஆர்.பிரேமதாச, டி.பி.விஜேதுங்க ஆட்சிக் காலப்பகுதி (1989-1994)
- 132 வது அத்தியாயம் - சந்திரிகா பண்டாரநாயக்க ஆட்சி காலப்பகுதி (1994-2005)
- 133 வது அத்தியாயம் - மகிந்த ராஜபக்ச ஆட்சிகாலப்பகுதி (2005-2010)
எந்த “சிங்கள பௌத்தத்தின்” பேரால் ஏனையோரை அந்நியர்கள் என்கிறார்களோ அந்த சிங்களத்துக்கும் பௌத்தத்துக்கும் இலங்கையின் எந்தவித பூர்விகத் தொடர்புமில்லை. பௌத்தமும் இந்தியாவில் இருந்து தான் வந்தது. சிங்கள மொழியின் உருவாக்கத்தின் உள்ளடக்கமாக இருக்கும் பாளி, சமஸ்கிருதமும் இந்தியாவில் இருந்து தான் வந்தது. சிங்கள இனமும் இந்தியாவில் இருந்து தான் வந்தது என்பதை மகாவம்சம் உள்ளிட்ட சிங்கள பௌத்த புனித வரலாற்று நூல்களில் இருந்தே ஆதாரங்களை முன்வைக்க முடியும். ஆனால் இலங்கைத் தீவு சிங்களவர்களின் தீவு, சிங்கள மக்களே மண்ணின் மைந்தர்கள், 5000 வருடங்களுக்கு பௌத்தத்தை காக்க புத்தர் அருளிச் சென்ற தீவே இலங்கைத் தீவு என்கிற தம்மதீப சித்தாந்தத்தை வளர்த்தெடுக்கவும் இதே மகாவம்சத்தைத் தான் இதுவரை பயன்படுத்தி வந்திருகிறார்கள். இன்றும் தொடர்கிறார்கள்.
எனவே தமிழில் மகாவம்சம் பற்றிய விரிவான ஆய்வுகள் அதி அவசியமானவை. அத்தகைய ஆய்வுகளுக்கு “மூலம்” அவசியம். அந்த “மூலத்தை” தமிழில் ஒப்படைக்கும் முயற்சியே இந்த மொழிபெயர்ப்புத் தொடர். இத்தொடர் மொழிபெயர்ப்புக்கப்பால்; தேவைப்படும் இடங்களில் மேலதிக விளக்கங்களுக்காக அடிக்குறிப்புகளோடு வெளிக்கொணர்வது எமது நோக்கம். மற்றும்படி மூலமொழியில் உள்ளபடி அப்படியே வழங்குவதே எமது இலக்கு.
(தமிழன் பத்திரிகையில் மார்ச் 3 தொடக்கம் தொடராக வெளியாகும் மகாவம்சம் 6வது தொகுதியின் மொழிபெயர்ப்புக்கான மொழிபெயர்ப்பாளர் குறிப்பு இது)
+ comments + 1 comments
மிக்க நன்றி. தொடராக வாசிக்க ஆர்வமாக உள்ளேன்.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...