Headlines News :
முகப்பு » , , » மலையக தேசியத்தை வரையறுப்பதில் ஏற்படும் பிரச்சனைகளும் சவால்களும்-IV லெனின் மதிவானம்

மலையக தேசியத்தை வரையறுப்பதில் ஏற்படும் பிரச்சனைகளும் சவால்களும்-IV லெனின் மதிவானம்


மலையக தேசிய வரையறையும் அதன் எல்லையும்

கடந்த காலங்களில் மலையக தேசியம் பற்றிய ஆய்வுகளை, முன்மொழிவுகளை முன் வைத்தவர்கள் பின்வரும்; மக்கள் பிரிவினரையே கருத்திற் கொண்டிருந்தனர்.

1. பெருந்தோட்டத் துறையுடன் சம்பந்தப்பட்ட தோட்ட தொழிலாளர்கள், கங்காணிமார்கள் என்ற வகையினர்.

2. பெருந் தோட்டத்துறையுடன் சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர்கள்

3. பெருந் தோட்டத் துறையை அண்மித்துள்ள நகரங்களில் வாழும் வியாபாரிகள்.

 இந்தவகையில் மலையக தேசியம் பற்றிய முன்மொழிவுகள்- ஆய்வுகள் மலையக சமூகத்தின் ஒரு பிரிவினருக்குரியதாகவே நோக்கப்பட்டு வந்தது.   காலப்போக்கில் ஏற்பட்ட சமூகவுருவாக்கமும் புதிய சிந்தனைப் போக்குகளும் மலையகத் தமிழர் எனும் கருத்து பரவல் அடைந்து வருவதை காணக்கூடியதாக உள்ளது. அவ்வகையில்; மலையகத் தேசியத்திற்குள் உள்ளடக்கபட  வேண்டியவர்கள் பின்வருவோராவர்:

1. மலையகத்தை நிரந்தர வசிப்பிடமாக கொண்டவர்கள். தோட்டத் தொழிலாளர்கள், உத்தியோகத்தர்கள், நகர்ப்புற வியாபாரிகள், நகர்சார் தொழிலாளர்கள், ரெயில்வே பாதை திருத்தும் பணியில் ஈடுபடும்  தொழிலாளர்கள்.

2. மலையகத்தை வசிப்பிடமாகக் கொண்ட அதே சமயம் தொழில் நிர்ப்பந்தம் காரணமாக மலையகத்திற்கு வெளியில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்.

3. மலையக அடையாளத்தைக் கொண்டிருக்கின்ற அதே சமயம். மலையகத்திற்கு (அடையாளப்படுத்தப்பட்ட பிரதேச எல்லைக்குள்) திரும்ப முடியாத அல்லது திரும்ப விருப்பம் இல்லாதவர்கள்.

4. மலையகத்திலிருந்து வெளியேறி வடக்கி பெரும்பாலும் எல்லைப் புறங்களில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்.

5. தென்பகுதியில் வாழும் தமிழர்கள். இவர்கள் தங்களை தமிழர்களாக அடையாளம் காட்ட விரும்பாத அதே சமயம் மலையக தலைமைகளும் கவனத்திலெடுப்பதில்லை . ஒரு இனவாத அரசியல் சூழலில் தாங்கள் தமிழர்களாக அடையாளம் காட்டப்படுவோமாயின் பல்வேறு ஆபத்துக்களை சந்திக்க நேரும் என்ற அச்ச உணர்வுகள் இவர்களிடத்தில் உள்ளதை அவதானிக்க முடிகின்றது. இனவாதத்திற்கு அப்பாற்பட்ட இடதுசாரி தலைமைகள் முன்னணிக்கு வருமாயின் இம்மக்கள் தங்களது இன அடையாளத்தை காட்டுவதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.

6. மலையகத்திற்கு வராத அதேசமயம் மலையக தேசிய அடையாளத்துடன் பெரிதும் ஒற்றுமையுடைய மக்கள் பிரிவினர்.

இவ்வகையில் நோக்குகின்ற போது மலையக தேசியத்தை வெறும் புவியல் எல்லைக்குள் அல்லது பெருந்தோட்டத்துறை சார்ந்த தொழிலோடு மட்டும் குறுக்கி விட முடியாது. மேற்குறித்த பட்டியலில் சுட்டிக்காட்டப்பட்ட சில பிரிவினர் சிறு சிறு குழுக்களாக காணப்படுகின்றனர். அவ்வாறு சிறு குழுக்களாக காணப்படுகின்றார்கள் என்பதற்காக அவர்களது தேசிய சுயநிர்ணய உரிமைக்கான போராட்டங்களை நிராகரிக்க முடியாது. அவ்வாறே அப்போரட்டங்களை சிறுசிறு குழுக்களுக்கான போராட்டங்களாகவும் முன்னெடுக்க முடியாத நிலை காணப்படுகின்றது. இந்நிலையில் இவர்கள் அனைவரையும் மலையக தேசியத்திற்குள் கொண்டு வருவதே முற்போக்கான அம்சமாகும்.  மலையகத்திலே பொருந்தோட்டத் தொழிலாளர்கள் கவனத்தில் கொள்ளப்பட்ட அளவு கூட நகர்சார் தொழிலாளர்கள் கவனத்தில் கொள்ளப்படவில்லை. ஓப்பீட்டளவில் பெருந்தோட்டத் தொழிலாளர்களை விட நகர்சார் தொழிலாளர்கள் அனுபவிக்கின்ற கொடுமைகளும் சுரண்டலும் கொடுமையானது. மலையக கட்சிகளும் இவர்களில் அக்கறையெடுத்தது குறைவென்றே கூற வேண்டியுள்ளது.  மலையகத்தில் நகர்சார் சேரிகளில் சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் வாழ்கின்றனர் என்ற போதிலும் மிக கீழ் மட்ட வாழ்க்கை தரத்தை கொண்டிருப்பவர்கள் தமிழர்களே.  இவர்களிடையான திருமண உறவுகள் கூட இந்த சமூகத்தவரிடையே (ஒரு சேரியில் உள்ளவர் அந்த சேரியிலோ அல்லது இன்னொரு பிரதேச சேரியிலோ வாழ்கின்ற  ஒத்த சமூத்தினரிடையே தான் அத்தகைய திருமண உறவுகளை வைத்துக் கொள்கின்றனர்). இச்சேரிகளில் மிக குறைந்தளவில் தான் கலப்பு திருமணங்கள் நடக்கின்றன. இக்கலப்பு திருமணங்களில் முஸ்லிம்களை விட சி;;ங்களவர்களுடனேயே (அவர்களும் சாதிய ரீதியாக தாழ்த்தப்பட்டவர்களாகவே  -ரெடியா சாதியினராகவே உள்ளனர்) அத்ததைய திருமண உறவுகள் நடைபெறுகின்றன. இவர்கள் வாழும் பிரதேசம்  சுகாரதார ரீதியில் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதளவிற்கு பின்தங்கிய பிரதேசமாகும். எடுத்துக்காட்டாக கண்டியில் அமைந்துள்ள மகியாவ எனும் இடத்தைக் குறிப்பிடலாம்.  பிரதான பொது மயானத்திற்கும் சாக்கடை கால்வாய்க்கும், கழிவுகள் கொட்டப்படும் மைதானத்திற்கும் அருகாமையில் அப்பிரதேசம்  அமைந்துள்ளது. தொழிலாளர்களின் குடியிருப்புகள் செங்குத்தான மலைச்சரிவில் அதிலும் மிக சிறிய இடத்தில் காணப்படுகின்றது. அதிக எண்ணிக்கையினர் இ;ங்கு வாழ்கின்றனர். அடிப்படை வசதியோ, சுகாதாரமோ அற்ற நிலையிலேயே  இம்மக்கள் வாழ்கின்றனர். பொதுவாக இவர்களது வாழ்முறை தொழில் என்பனவற்றை வைத்துப் பார்க்கின்ற போது இம்மக்கள் மலையக தேசியத்துடன் இணைக்கப்பட வேண்டியவர்களே. அவ்வாறு மலையக தேசியத்துடன் இணைக்கின்ற போது இவ்விரு மக்கள் பிரிவினரது அபிலாஷைகள் - நலன்கள்  பாதிக்காதவகையில் முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியமானதாகும்.

 மலையக தேசியமும் சமூக விடுதலையும்

 மலையக தேசியத்தை வரையறுக்கின்ற போது இனம், தேசியம், மதம், மொழி ஆகியவற்றில் ஒரு மக்கள் கூட்டம் ஏனைய மக்கள் கூட்டத்தினரிலிருந்து வேறுபடுத்தி பார்க்கக் கூடிய தன்னடையாளங்களை கொண்டிருப்பார்களாயின் அத்தொகுதியினரை தேசிய இனமாக கொள்ளலாம் என்ற அடிப்படையிலான கோட்பாடுகள் - சிந்தனைகள் தோன்றியுள்ளன. எனவே "மலையகத் தமிழர் என்பது வெறும் சொற்பதம் மாத்திரமல்ல. அது வரலாற்றின் ஓர் உருவாக்கம். இந்த நாட்டின் முதலாளித்துவப் பொருளாதாரத்தின் தோற்றத்துடன் தோற்றுவிக்கப்பட்ட பொருளாதாரத்தின் விளைவு. இன்று இந்தியத் தமிழன் என்பதை விட, மலையகத் தமிழன் என்றழைப்பது  சர்வசாதாரணமான வழக்காறாகிவிட்டது. ஆகவே தோட்டத் தொழிலுக்காக இங்கு வந்து, இலங்கையில் பல பகுதிகளில் ஒன்றறை நூற்றாண்டுகளுக்கு மேல், ஒன்றாக வாழ்வதன் பயனாக ஏற்பட்ட உணர்வே, மலையகத் தமிழர் என்ற உணர்வாகும் 10. மறுபுறத்தில் இந்த உணர்வு பேரினவாத நடவடிக்கைகளால் சிதைக்கப்படுகின்றபோது முனைப்பு பெறுகின்றது.

 இன்று மலையகத்தில் தோற்றம்பெற்று வருகின்ற மத்திய தர வர்க்கம் தளமற்றதொன்றாகவே காணப்படுகின்றது. மலையக தேசிய உணர்வு பிரதேசவாதமாக அதன் குறுகிய அர்த்தத்தில் வெளிப்படுவதற்கான வாய்ப்புகளும் உண்டு. மலையகத்தில் இன்று படித்தவர்களிடையே வடகிழக்கு சார்ந்த எதிர்ப்பும் வெறுப்பும் பதவி போட்டிகளினூடாக எழுகின்றவையாகும். பின் அம்முரண்பாடு சமுதாய முரண்பாடாக திசை திருப்பக் கூடிய அபாயமும் உள்ளது. எனவே மலையக தேசியத்தின் சமூக வேர்களைக் கண்டு விபரிப்பதில் மட்டும் தமது செயற்பாடுகளை மட்டுப்படுத்திக் கொள்வதாக கொள்வது ஆரோக்கியமானதல்ல. கடந்த கால - நிகழ்கால மற்றும் புதிய வளர்ச்சிப் போக்குகளையும் இயங்கியல் கண்ணோட்டத்தில் நோக்கி - இனங்கண்டு செயற்படல் காலத்தின் தேவையாகும். சோசலிசத்தை நிராகரிக்கும் தேசியவாதமோ அல்லது தேசியத்தை நிராகரிக்கும் சோசலிசமோ மலையகத்தில் நடைமுறை சாத்தியமற்றது என்பதை இதுவரைக்கால வரலாற்று படிப்பினைகளிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது. காப்ரால் கூறுவது போல:

“அன்னிய ஆட்சியிலிருந்து தன்னை உண்மையிலே விடுவித்துக் கொள்கின்ற ஒரு சமூகம் தனது சொந்தப் பண்பாட்டின் மேல் நோக்கிய வளர்ச்சிப் பாதைக்கு திரும்புவதாலும், சூழலின் வாழும் யதார்த்தத்தால் வளர்க்கப்படுவதாலும், அன்னியப் பண்பாட்டின் செல்வாக்குகளையும் அவற்றுக்கு இரையாவதையும் நிராகரிப்பதாலும், விடுதலைப் போராட்டமானது அதற்கு மேலாக ஒரு பண்பாட்டு செயற்பாடாகும் 11.” தேசியம் குறித்த அரசியலானது தனியே ஒரு இனத்தை மட்டும் முதன்மைப்படுத்தி பிற ஒடுக்கு முறைகளைப் புறக்கணிக்கும் என்றால் அது ஆதிக்க அரசியலாக மாறி சீரழிய வேண்டிய நிலையேற்படும். இடதுசாரி தாக்கங்களினால் எழுந்த தேசிய விடுதலைப் போராட்டங்கள் ஏனைய அடக்கியொடுக்கப்பட்ட மக்களின் போராட்டங்களுடனும் அது தன்னைப் பிணைத்துக் கொண்டதால்; அவை சமூக ஒடுக்கு முறைகளை களைவதற்கான வழிவகைகளை முன் வைத்தன. இத்தகைய பின்புலத்தில் நாம் மலையக தேசியம் பற்றிய பார்வையை முன்வைக்கின்ற போது முற்போக்கு மார்க்ஸிய அடிப்படையில் நோக்குதல் அவசியமானதாகும். இந்நிலையில் நோக்குகின்ற போது குறுகிய வரம்பினின்றும் சிறையினின்றும் தேசியம் குறித்த சிந்தனையை விடுவித்து சமூக விடுதலைக்கான பிற போரட்டங்களுக்கும் வழிக்காட்டும் தன்மையை அது பெற முடியும். இவ்வகையில் நோக்குகின்ற போது மலையக தேசியம் எழுச்சி பெற்று வலுவோடு வீறுநடை போடுவதற்கான சாத்தியக் கூறுகளும் இன்றுள்ளன. சுதந்திரக் காற்றை சுவாசிக்க முற்பட்ட இவர்களின்  தேற்றம் - இருப்பு மலையகத்தில் கம்பீரமாகவே இருக்கின்றது.

முடிவாக நோக்குகின்ற போது  சகல ஜனநாயக மார்க்சிய சக்திகளும் ஒன்றிணைந்து மலையக தேசியம்  குறித்து சிந்திக்க வேண்டியுள்ளது. ஒன்றிணைவது என்பது ஒரு அமைப்பு அல்லது கட்சி சார்ந்த உணர்வை மற்றக் குழுக்களின் மீது திணிப்பதல்ல, மாறாக ஒவ்வொரு அணியிலும் காணப்படக் கூடிய சமூகம் சார்நத கூறுகளை சாதகமாக பயன்படுத்தி ஒன்றாக செயற்பட வேண்டும் என்பதே அதன் பொருள்.  

அடிக்குறிப்புகள்

1. குமாரி ஜெயவர்தனா, (1995), (மே.கோ) இலங்கையில் இனவர்க்க முரண்பாடுகள்,   பாரிநிலையம், சென்னை,

2. மே.கு.நூ. பக். 64,65.


3. சுப்பிரமணியம் சிவா, (2013), இலங்கை அரசியல் வரலாறு ஒரு நோக்கு,
   பூபாலசிங்கம்  பதிப்பகம், கொழும்பு ப.24.

3A. விஜயசந்திரன் எஸ்., ரமேஷ். இரா. 2013, இலங்கையில் உள்ளுராட்சி அதிகார   சபைகளும் பெருந்தோட்ட சமூகமும் - ஒரு மனிதவுரிமை நோக்கு, தோட்ட சமூக தோழமைத்துவம்(ECS), டிக்கோயா, பக். 109,110.

4. சுப்பிரமணியம் சிவா,, மே.கு.நூ, ப. 59


5. காதர். பி.ஏ, 1981, பெருந்தோட்ட தொழிலாளர்களின் எதிர்காலம்?, தொழிலாளர் கல்வி வெளியீடு, கொழும்பு, பக்.35,36.

6. தர்மலிங்கம். வி.ரி. 2013. மலையகம் எழுகிறது, எழுநா ஊடக நிறுவனம், சென்னை,

7. தம்பையா.இ. 1995, மலையக மக்கள் என்போர் யார்? புதிய ப+மி வெளியீட்டகத்துடன் இணைந்து சவுத் ஏசியன் புக்ஸ், சென்னை, ப.99.
8. லோரன்ஸ்.ஏ. 2006, மலையகம்-சமகால அரசியல்-அரசியல் தீர்வு, மலையகம்    வெளியீட்டகம், தலவாக்கெல்லை, ப.xix

9. லெனின் மதிவானம் 2010, மலையகம் தேசியம் சர்வதேசம் குமரன் புத்தக இல்லம், சென்னை, முன்னுரையில் இரவீந்திரன்.ந.

10. லோரன்ஸ்.ஏ. 2006, மலையகம்-சமகால அரசியல்-அரசியல் தீர்வு, மலையகம்    வெளியீட்டகம், தலவாக்கெல்லை, ப.21

11. இரவீந்திரன்.ந.(மே.கோ), 2013, சாதி தேசம் பண்பாடு, முகம் பதிப்பகம், தமிழ்நாடு.

  முற்றும்

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates