Headlines News :
முகப்பு » » லயத்து அமைப்புமுறை மாற்றப்படவேண்டும் – இரா. சிவலிங்கம்

லயத்து அமைப்புமுறை மாற்றப்படவேண்டும் – இரா. சிவலிங்கம்


பெருந்தோட்ட தொழிலாளர்கள் 200 வருடங்களாக குடியிருக்கும் லயன் அறைகளையும் அவர்களின் வாழ்க்கை முறைகளையும் ஆராய்ந்து பார்த்தால் அதில் பல விடயங்கள் மறைந்திருப்பதைக் காணலாம். லயத்து வாழ்க்கை முறை என்பது தொடர்ந்து இம் மக்கள் மத்தியில் பல சமூக பிரச்சினைகளை உள்ளடக்கிய ஒரு வாழ்க்கை முறையாக உள்ளது என்பதில் ஐயமில்லை.

இம் மக்களில் பெரும்பாலானோர் வறுமை, நோய் பிணி துன்பம், கலாசார, சீர்கேடுகள், சிறுவர் துஷ்பிரயோகம், மனித உரிமை மீறல்கள், போதிய வருமானமின்மை மந்த போஷணை போன்ற பல்வேறு பிரச்சினைகளையும் கொண்டுள்ளவர்களா கவே காணப்படுகின்றனர். லயன் குடியிருப்புக்களில் வாழுகின்ற குடும்பங்கள் தினமும் அனுபவிக்கின்ற பிரச்சினைகள் சொல்லில் அடங்காதவையாகும். இந்த லயன் குடியிருப்புகள் ஒற்றை வரிசை லயன் மற்றும் இரட்டை வரிசை லயன் என்ற முறையில் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு பக்கத்தில் (வரிசையில்)12 அறைகளை யும் இரண்டு வரிசையில் 24 லயன் அறைகளையும் கொண்டுள்ளன. இதில் ஒரு அறை யின் நீளம் அகலம் 12x10 (120 சதுர அடி) என்ற அளவுத் திட்டத்தில் ஆங்கிலேயர்களினால் அமைத்துக் கொடுக்கப்பட்ட தற்காலிக வாழ்விடங்கள் ஆகும்.

ஒரு லயன் அறையில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 5–7 பேர் வரை வாழ்கின்றனர். குறிப்பாக தாய், தந்தை, சிறுவர்கள், குழந்தைகள், பெரியோர்கள், பெண் பிள்ளைகள், கர்ப்பிணிப் பெண்கள், நோயாளர்கள், கல்வி கற்கும் பிள்ளைகள், திருமண வயது இளைஞர்கள், யுவதிகள், வயதுக்கு வரும் வயதிலுள்ள பெண் பிள்ளைகள் என அனைத்து உறுப்பினர்களும் இந்த சிறிய அறையில் தங்களுடைய வாழ்க் கைத் தேவைகளை நிறைவேற்றுகின்றனர் என்பது வேதனைப்பட வேண்டிய விடயமாகும்.

குடும்ப உறுப்பினர்கள் என்ற வகையில் ஒவ்வொருவரும் தங்களுடைய அன்றாட கடமைகளைச் செய்யும் போது ஏற்படும் கஷ்டங்கள் மிக மிக அதிகமாகும். இந்த 120 சதுர அடிப் பரப்பில் குடும்பத்திலுள்ள அனைவரும் உறங்குவதற்கும், உடை மாற்றுவதற்கும், குடும்பம் நடத்துவதற்கும், தங்களுடைய அத்தியாவசியப் பொருட்களை வைப்பதற்கும், விறகு சேமிப்பதற்கும் செல்ல பிராணிகள் வளர்ப்பதற்கும், வீட் டில் நடைபெறும் விழாக்களுக்கும் இந்த சிறிய இடப்பரப்பையே பயன்படுத்த வேண்டும். சர்வதேச ரீதியாக ஒரு தனி மனிதனுக்கு 46 சதுர அடி தேவையெனக் கூறப்படுகின்றது. இருப்பினும் இதில் வாழுகின்ற ஒவ்வொருவரும் தினமும் அனுபவிக்கும் பிரச்சினைகள் ஒன்றுக்கு மேற்பட்டதாக காணப்படுகின்றமையை அவதானிக்கலாம்.

உதாரணமாக ஒரு கர்ப்பிணி தாயை எடு த்துக் கொண்டால் இக் காலத்தில் மிகவும் கவனமாகவும் சுகாதாரமாகவும் ஆரோக் கியமாகவும் அவர் பராமரிக்கப்பட வேண் டும். ஆனால் அவர்களுக்கு தேவை ப்படும் எந்தவிதமான அடிப்படை வசதிகளும் லயன் அமைப்பிலே இல்லையென்பதே உண்மை. குறிப்பாக இவர்கள் குளிப்பதற்கு தங்களுடைய வீட்டு முற்றத்தையே பயன்படுத்துகின்றார்கள். குழந்தை பிறந்த பின்பும் இதே நிலைதான். எவ்வித பாதுகாப்பும் இன்றி இவர்களின் சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

தாய் கர்ப்பமாக இருக்கும் போது கருவில் இருக்கும் குழந்தைக்கு கிடைக்க வேண்டிய நல்ல ஆரோக்கியமான விடயங்கள் இவ்வீட்டுச் சூழலில் கிடைப்பதில்லை. தாயின் கர்ப்ப காலத்தில் அமைதியாக இருக்க வேண்டும், நல்ல விடயங்களை கேட்க வேண்டும், அறிவுள்ள விடயங்களை தேடி ப் படிக்க வேண்டும், போஷாக்கான உணவுகளை தினமும் உண்ண வேண்டும், கூடியளவு பராமரிப்பு வேண்டும். உறவினர்க ளின் அன்பு அரவணைப்பு வேண்டும். ஓய்வு மன நிம்மதி வேண்டும். மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என பல்வேறு விடயங்கள் சொல்லப்படுகின்றன. ஆயினும் மேற்கூறியனவற்றில் எத்தனை விடயங்கள் இவர்களுக்கு திருப்தியாக கிடைக்கின்றது என்பது இன்னமும் கேள்விக்குறியாகவே உள்ளது.

பெண் பிள்ளைகள் வயதுக்கு வந்தால் தனியான அறையில் வைக்க வேண்டுமெனக் கூறப்படுகிறது. ஆனால் இவர்களுக்கு இருக்கின்றதோ ஒரு அறை. இதில் தனி அறைக்கு எங்கே போவது? குறிப்பாக ஆண் பிள்ளைகள் அப் பெண் பிள்ளைகளை பார்க்கக் கூடாது என்பது மரபு. எனவே மறைவான இடங்களில் இவர்களை ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு நிறுத்த வேண்டிய கட்டாய நிலையில் வாழ்கின்ற னர். ஆனால் லயன் அமைப்பு முறையில் சமய சம்பிரதாயங்களுக்கு இடமில்லை. இதனால் அனைவரும் ஒன்றாக வாழ வேண்டிய ஒரு துர்ப்பாக்கிய நிலையில் வாழ்கின்றார்கள் என்பது வேதனைக்குரிய ஓர் விடயமாகும்.

கல்வி கற்கின்ற மாணவர்கள் இருக்கின்ற வீடுகளில் கற்பதற்காக பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். தொடர் லயன் அறைகள் சத்தம் படிக்கின்ற சூழலின்மை போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியிலும் ஒரு சில மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்கின்றார்கள். இவர்களை சமூகத்தில் உள்ள அனைவரும் பாராட்டி ஊக்குவிக்க வேண்டும்.
தொடர் வரிசை லயன் அறைகளில் சத் தம், படிப்பதற்கான உபகரணங்கள் வசதியின்மை, மின்சார வசதியின்மை, வறுமை காற்றோட்ட வசதியின்மை போன்ற பல பிரச்சினைகள் இருப்பினும் தற்போது படிக்கின்ற மாணவர்கள் இந்த நிலையை மாற்றியமைக்க வேண்டும். இதற்கு மாணவர்கள் அனைவரும் நன்றாக படிக்க வேண்டும். இந்த பரம்பரையிலாவது இவ்வாழ்க்கை முறையில் மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டும் என மலையகத்தில் படிக்கின்ற ஒவ்வொரு மாணவனும் உணர்ந்து இலட்சியத்தோடு படிக்க வேண்டும்.

லயன் அறைகளில் காணப்படுகின்ற கூரைகள் கதவுகள் யன்னல்கள் சுவர்கள் வாசல்கள் போன்றன பல வீடுகளில் உடைந்தே காணப்படுகின்றன. இந்நிலையினையும் மாற்றியமைக்க வேண்டும். உழைக்கின்ற மக்கள் ஓய்வாக படுத்துறங்க வேண்டும். அப்போது தான் அவர்களால் நல்ல முறையில் உழைக்க முடியும். இதன் முக்கியத்துவம் இதுவரை காலமும் பலராலும் உணரப்படாமலே இருக்கின்றது.

இச் சூழ்நிலையில் வாழ்ந்து பழக்கப்படாதவர்களுக்கு சில விடயங்கள் கூத்தாகவும் சாதாரண விடயமாகும் இருக்க முடியும். ஆனால் இச் சூழ்நிலையில் கடந்த பல தசாப்தங்களாக வாழ்கின்ற மக்களின் துன்பங்களும் வேதனைகளும் ஏராளம். இதற்கு யார் பொறுப்பு என வினா எழுப்பப்படும் போது விடைகள் மிக இலகுவாக கிடைக்காது என்பது உறுதி. இதற்கு காரண கர்த்தாக்கள் யார்? ஆங்கிலேயரா? தோட்ட நிர்வாகங்களா? அரசாங்கமா? இவர்கள் சார்ந்து இருக்கின்ற தொழில் சங்கங்களா?

இந்த லயத்து வாழ்க்கை முறையை மாற்றியமைக்க வேண்டுமானால் அங்கு வாழ்கின்ற மக்களின் பிள்ளைகள் முயற்சி செய்து ஆர்வத்தோடு படிக்க வேண்டும். இப்படி படித்தால் மட்டுமே இம்மக்களுக்கு எதிர்காலத்தில் விமோசனம் கிடைக்கும் என்பது மட்டுமே உண்மை. மேற்கூறப்பட்ட அனைத்து விடயங்களுக்கும் காரணம் நாம் கல்வியை முறையாக பின் தொடராமையேயாகும். கல்விதான் எமக்கு முதலீடு என்பதை அனைவரும் உணர வேண்டும்.

லயன் காம்பிராக்களில் வாழ்கின்ற மக்க ளில் புதிதாக திருமணம் முடித்தவர்களின் நிலையானது மிகவும் மோசமாக காணப்படுகின்றது. இவர்கள் சுதந்திரமாக பழகவும் வாழ்க்கையை சந்தோசமாக அனுபவிக்கவும் முடியாத சூழ்நிலையும் இந்த குடும்ப அமைப்பில் உள்ளது. இவர்கள் பிறந்ததற்காக வாழ்கின்றவர்களாக தங்களுடைய வாழ்க்கை கோலத்தை அமைத்துக் கொண்டுள்ளார்கள் என்பது மட்டும் தெளிவு. அனைவரும் ஒரே வீட்டில் வாழ்கின்றதால் சிறுவர்கள் மிக விரைவாகவே சில ஏற்றுக் கொள்ள முடியாத பழக்க வழக்கங்களுக்கு உட்பட வேண்டிய ஒரு கட்டாய நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

சிறுவர் துஷ்பிரயோகம் நெறி பிறழ்வான நடத்தை சிறு வயதிலேயே கூடாத பழக்கவழக்கங்கள் போன்றவற்றை பழகும் இடமாக இவ் லயத்து அமைப்பு முறை உள்ளது. இதனால் இதனை மாற்றியமைக்க வேண்டியது சம்பந்தப்பட்டவர்களின் கடமையாகும். வயது வந்த இளைஞர் யுவதிகள் தங்களுடைய நண்பர்களை அழைத்துக் கொண்டு வரும் போது அவர்களை நல்ல முறையில் உபசரிக்க முடியாத நிலையும் இடப் பிரச்சினையும் காணப்படுகின்றது. இவ்வாறான நேரங்களிலும் திருமண வைபவம் மரண வீடுகள் நிகழும் போதும் பக்கத்து வீட்டார்களின் வீடுகளை பாவிக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. இவ்வாறான சந்தர்ப்பங்களில் முழு லயமும் ஒரு வீடு போல இருக்கும். மலையக பிரதேசத்தை சொர்க்கம் என்று கூறிய வெளிநாட்டு அறிஞர்களும் இருந்தார்கள். ஆனால் இப்பிரதேசத்தில் வாழ்கின்ற மக்களின் வாழ்க்கை முறையானது அதற்கு முரணாக காணப்படுகின்றதை அவதானிக்கலாம்.

எனவே, இலங்கையின் பொருளாதாரத் தின் வளர்ச்சிக்காக உழைக்கும் இம் மக் களின் வாழ்க்கை தரத்தை தேசிய மட்ட சராசரி நிலைகளோடு ஒத்துச் செல்லக் கூடிய வகையில் வேலைத் திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.

நன்றி - வீரகேசரி 15.12.2014

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates