Headlines News :
முகப்பு » » தேசிய கட்சிகளின் அரசியலும் மலையக கட்சிகளின் மன மாற்றமும் - பானா. தங்கம்

தேசிய கட்சிகளின் அரசியலும் மலையக கட்சிகளின் மன மாற்றமும் - பானா. தங்கம்


அரசியல்வாதிகள் கூறுகின்ற பொய்யான வாக்குறுதிகளை நம்பி இனிமேலும் மக்கள் ஏமாறுவதற்குத் தயாராக இல்லை. தலைவர்கள் முடிவெடுப்பதற்கு முன்னரே மக்கள் முடிவெடுக்கும் நிலை உருவாகி வருகின்றது. தலைவர்கள் மக்கள் சொல்வதற்கு செவிமடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதை அண்மைக் கால அரசியல் நகர்வுகள் உணர்த்துகின்றன. யாரும் யாரையும் இப்படித்தான் செய்ய வேண்டும் என்று நிர்ப்பந்திக்க முடியாது.


ஜனாதிபதித் தேர்தல் எதிர்வ ரும் ஜனவரி மாதம் 8 ஆம் திகதி நடைபெறவுள்ளது. அதற்கான வேட்பு மனுக்கள் இம்மாதம் 8ஆம் திகதி ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதி பதியாக ஒருவர் இரண்டு முறை மாத்திரமே பதவி வகிக்கலாம் என்ற அரசியலமைப்புச் சட்டம் திருத்தம் செய்யப்பட்டதன்படி, ஒருவர் இரண்டு தடவைகளுக்கு மேல் ஜனாதிபதித் தேர்தலில் போட்டி யிடக் கூடிய நிலை உருவாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இரண்டு முறை பதவி வகித்து பதவியிலிருந்து கொண் டே மூன்றாவது முறையாகப் போட்டியி டும் முதலாவது ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக் ஷ விளங்குகின்றார்.

அவரை எதிர்த்து அவரது கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த மைத்திரிபால சிறிசேன எதிரணியின் பொது வேட்பாளராகப் போட்டியிடுகின்ற வரலாற்று நிகழ்வும் அரங்கேறியுள்ளது.

1977ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்த ஐக்கிய தேசியக் கட்சி, 1994ஆம் ஆண்டு வரை தொடர்ந்து 17 ஆண்டுகள் யாராலும் அசைக்க முடியாதபடி ஆட்சியில் வீற்றிருந்தது. வாக்கெடுப்பும் அதற்கு சர்வஜன வாக்கெடுப்பும் துணையாக இருந்தது.

எனினும், 1994ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, லங்கா சமசமாஜக் கட்சி மற்றும் சிறுபான்மைக் கட்சிகள் ஒன்றிணைந்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை உருவாக்கி தேர்தலில் போட்டியிட்டதன் விளைவாக 17 ஆண்டு காலம் கோலோச்சிய ஐக்கிய தேசியக் கட்சி தோல்வியை எதிர்கொண்டது. அதன் பயனாக கடந்த 20 ஆண்டுகளாக ஐக்கிய மக்கள் சுதந்தி ரக் கூட்டமைப்பு அரசாங்கம் பதவியில் இருந்து வருகின்றது.

2004ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் முதன்முறையாக ஜனா திபதி வேட்பாளராகப் போட்டியிட்ட மஹிந்த ராஜபக் ஷவுக்கு மலையக மக் கள் வாக்களித்திருக்கவில்லை. இலட்சக்கணக்கான வாக்குகளை அன்று போட்டி யிட்ட ரணில் விக்கிரமசிங்கவுக்கே வழங்கியிருந்தார்கள். எனினும் வட பகுதி மக்கள் வாக்களிக்கத் தவறியதால் ரணில் விக்கிரமசிங்க தோல்வியடைய மஹிந்த ராஜபக் ஷ ஜனாதிபதியானார். அந்த நேரத்தில் சிறுபான்மை மக்களின் வாக்குகள் இல்லாமல் பெரும்பான்மை இனத்தவர் ஆட்சிக்கு வரமுடியும் என்ற இனவாதக் கரு த்து முன்வைக்கப்பட்டது. இருந்தும் இன்று சிறுபான்மை மக்களின் வாக்கு களே அரசியலைத் தீர்மானிக்கும் சக்தி யாக விளங்குகின்றது.

ஜனாதிபதித் தேர்தலும் மலையகக் கட்சிகளும்
2009ஆம் ஆண்டு விடுதலைப் புலி களை யுத்தத்தில் வெற்றிகண்ட பின்னர் தமது பதவிக் காலம் முடிவதற்கு ஒரு வருட காலம் இருக்கும்போதே யுத்த வெற்றியின் சூட்டோடு சூடாக ஜனாதிபதித் தேர்தலை நடத்தி அதில் வெற்றி பெற்று ஒரு வருடத்தின் பின்னர் இரண்டாவது முறையாக மஹிந்த ராஜபக் ஷ ஜனாதிபதியாகப் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். அதற்கு உறுதுணையாக ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த பல உறுப்பினர்கள் அரசாங்கத்தோடு இணைந்து கொண்டார்கள்.

இப்போது அவரது பதவிக் காலம் முடிவதற்கு இன்னும் இரண்டு வருடங்கள் இருக்கின்ற போதிலும் அதற்கு முன்னதாகத் தேர்தலை நடத்தி இன்னும் ஒரு வருடத்தைப் பூர்த்தி செய்த பின்னர் மூன்றாவது முறையாகப் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். எனவே, நிறைவேற்று அதிகாரம் கொண்ட பலம் பொருந்திய இன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவை வெற்றி கொள்வதற்காக ஐக்கிய தேசியக் கட்சி, ஹெல உறுமய உட்பட பல அமை ப்புகள் ஒன்றிணைந்து பொதுவான எதிரணி வேட்பாளரை நிறுத்தியுள்ளன.

இந்த நிலையில் பாராளுமன்றத்தில் 13 ஆவது திருத்தத்துக்கு ஆதரவு தெரிவித்து நுவரெலியா மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்களான பி.திகாம்பரம், வீ.இராதாகிருஷ்ணன், ஜே.ஸ்ரீரங்கா மற்றும் கொழும்பு மாவட்டப் பாராளுமன்ற உறு ப்பினர் பிரபா கணேசன் ஆகியோர் அரசாங்கத்துடன் இணைந்து கொண்டிருந் தார்கள். அவர்களுக்கு உடனடியாக பிரதியமைச்சு பதவிகள் கிடைக்கும் என்று எதிர்பார்த்தும் நான்கு வருடங்கள் இழுத்தடிக்கப்பட்டு கடந்த ஓகஸ்ட் மாதம் ஊவா மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னர் பாராளுமன்ற உறுப்பினர்களான பி.திகா ம்பரம், பிரபா கணேசன் ஆகியோர் பிரதியமைச்சர்களாக நியமிக்கப்பட்டார்கள். அதற்குப் பின்னர் ஒக்டோபர் மாதத்தில் வீ.இராதாகிருஷ்ணன் பிரதியமைச்சர் ஆனார்.

இவர்களுக்கான பிரதியமைச்சுக்கள் வெறும் அந்தஸ்த்துக்காக வழங்கப்பட்டனவே அன்றி, அந்த அமைச்சுக்களின் ஊடாக மலையக மக்களுக்கு எந்தவிதமான நன்மைகளும் கிடைக்கவில்லை. நாட்டில் ஒருமைப்பாட்டை ஏற்படுத்த முடியாத அமைச்சில் திகாம்பரம் தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட் டுபிரதி அமைச்சராகவும் வீ.இராதாகிருஷ் ணன் தாவரவியல் பூங்கா மற்றும் பொழு துபோக்கு பிரதியமைச்சராகவும் பதவி வகித்து பொழுதைப் போக்க வேண்டி யிருந்தது. இந்த அமைச்சுக்கள் ஜனாதிப தித் தேர்தலை மையமாக வைத்து அவர் கள் மலையக மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொடுப்பார்கள் என்ற எதிர்பார்ப் போடு வழங்கப்பட்டதாகவே இருந்தன.

மலையக மக்களுக்கான வீடமைப்புத் திட்டம்?
சுமார் 200 வருடகால வரலாற்றைக் கொண்ட மலையக இந்திய வம்சாவளி மக்களின் வீட்டுப் பிரச்சினைக்கு இன்று வரை தீர்வு காணப்படவில்லை. காலத்து க்கு காலம் பதவிக்கு வந்த அரசாங்கங்கள் வாக்குறுதிகளை அள்ளி வீசினவேயன்றி முறையான திட்டங்கள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. 2014ஆம் ஆண்டு க்கான வரவு–செலவுத் திட்டத்தில் 50 ஆயிரம் வீடுகள் கட்டுவதற்கான ஆலோசனை முன்வைக்கப்பட்டிருந்தது.

எனினும் நிதி ஒதுக்கீடு எதுவும் இடம்பெறவில்லை. 2015ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் வீடமைப்பு சம்பந்தமாக எதுவுமே குறிப்பிடப்பட வில்லை.

இந்நிலையில் தோட்டத் தொழிலாளர்க ளின் வீடமைப்புக்காக ஆகக் குறைந்தது 7 பேர்ச் காணி வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக முன்வைக்கப்பட்டு வந்தது. இதை வழங்க முன்வருகின்ற ஜனாதிபதி வேட்பாளருக்கே மலையக மக்கள் வாக்களிக்க முன்வருவார்கள் என்று பாராளுமன்ற உறுப்பினர்கள் திகா ம்பரம், இராதாகிருஷ்ணன் ஆகியோர் தெரிவித்து வந்தார்கள்.

இருந்தும் எந்தவிதமான நிபந்தனையும் இன்றி ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவு க்கு ஆதரவு தெரிவிப்பதாக இ.தொ.கா. பொதுச் செயலாளர் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்திருந்தார். அதற்கமைய மூன்று நான்கு தடவைகள் ஜனாதிபதியைச் சந்தித்து உறுதிப்படுத்தியும் உள்ளார்கள். அதேபோல் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பி.திகாம்ப ரம், மலையக மக்கள் முன்னணியின் தலைவர் சாந்தினிதேவி சந்திரசேகரன், அரசியல் துறைத் தலைவர் வீ.இராதாகிருஷ்ணன் தலைமையிலான தூதுக் குழுவி னர் ஜனாதிபதியைச் சந்தித்து தமது ஆத ரவை வழங்கவுள்ளதாகத் தெரிவித்திருந் தார்கள்.

ஆனால் இம்மாதம் 8 ஆம் திகதி வேட்பு மனுத் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் 10 ஆம் திகதி அரசாங்கத்திலிருந்து விலகு வதாக பாராளுமன்ற உறுப்பினர்கள் பி. திகாம்பரமும் வீ.இராதாகிருஷ்ணனும் ஜனாதிபதிக்கு கடிதங்களை அனுப்பி வைத்துள்ளார்கள். அத்தோடு ஜனாதிபதித் தேர்தலில் எதிரணியின் பொது வேட்பாளராகக் களம் இறங்கியுள்ள மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்கத் தீர்மானித்துள்ளதாக ஊடகவியலாளர் சந்திப் பில் தெரிவித்துள்ளார்கள். இது மலையக அரசியலில் பெரிய மாற்றத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்துவதாகவும் அமைந்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் இணைந்து கொண்ட நேரத்தில் அங்கு உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, தோட்டத் தொழிலா ளர்களுக்கு ஏழு பேர்ச் காணியில் தனி வீடுகள் அமைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.

மலையகக் கட்சிகளின் அரசியல் பலம்
மலையகத்தைப் பொறுத்தவரையில் இ.தொ.கா. சார்பில் தற்போது இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்கள். அவர்களில் ஒருவர் அமைச்சரவை அந்தஸ்து பெற்ற அமைச்சராகவும் மற்றவர் பிரதியமைச்சராகவும் இருக்கின்றார்கள். அத்தோடு மத்திய, ஊவா மாகாண சபைகளில் தலா ஒவ்வொரு அமைச்சரும் இருக்கின்றார்கள். மாகாண சபை உறுப்பினர்களாக நுவரெலியா மாவட்டத்தில் 6 பேரும், கண்டி மாவட்டத்தில் ஒருவரும், மாத்தளை மாவட்டத் தில் ஒருவரும், பதுளை மாவட்டத்தில் 3 பேரும், சப்ரகமுவ மாகாணத்தில் 2 பேரும் இருக்கின்றார்கள். அம்பகமுவ பிரதேச சபையின் நிர்வாகம் இ.தொ.கா. விடம் உள்ளது. பிரதேச சபைகளில் 15 க்கும் மேற்பட்ட உறுப்பினர்களும் இருக்கின்றார்கள்.

தொழிலாளர் தேசிய சங்கத்தின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரும் மத்திய மாகாண சபை உறுப்பினர்களாக 3 பேரும், பிரதேச சபைகளில் உறுப்பினர்களாக 12 பேரும் இருக்கின்றார்கள்.

மலையக மக்கள் முன்னணியின் சார் பில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரும் மாகாண சபை உறுப்பினர் ஒருவரும் இருக்கின்றார்கள். நுவரெலியா பிரதேச சபையின் நிர்வாகம் மலையக மக்கள் முன்னணியின் கையில் இருக்கின்றது. பிரதேச சபை உறுப்பினர்களாக சுமார் 10 பேர் இருக்கின்றார்கள்.

மலையக மக்கள் முன்னணிக்கு இழப்பு
இன்று தோன்றியுள்ள அரசியல் நெருக்கடியில் மலையக மக்கள் முன் னணிக்கே பெரும் பாதிப்பு ஏற்பட்டு ள்ளது என்றுதான் கூற வேண்டும். கார ணம், மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபகத் தலைவர் பெ.சந்திரசேகரனின் மறைவுக்குப் பிறகு அவரது துணைவியார் சாந்தினிதேவி சந்திரசேகரன் ஜனாதிபதியின் இணைப்பாளராகவும் ஆலோசகராகவும் இருந்து வருகின்றார். அதேபோல் கடந்த ஊவா மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு, தோல்விகண்ட முன் னாள் உறுப்பினர் ஏ. அரவிந்த் குமாருக்கு போனஸ் உறுப்பினர் கிடைக்கும் என்று எதிர்பார்த்தும் ஏமாற்றமே மிஞ்சியது. ஊவா மாகாண சபையில் அரசாங்கம் வெற்றிபெறக் காரணமாக இருந்த அவர், தற்போது ஜனாதிபதியின் இணைப்புப் பணிப்பாளராகவும் போக்குவரத்து அமை ச்சின் பணிப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். எனவே, மலையக மக்கள் முன்னணி எதிரணியின் பொது வேட்பாளரை ஜனாதிபதித் தேர்தலில் ஆதரிக்கும் பட்சத்தில் அரசாங்கத்தின் வரப்பிரசாதங்களை இழக்க வேண்டிய நிலைமையே உருவாகும். எனினும் கட்சியின் உயர்பீட ம் எடுத்துள்ள முடிவுக்கு அனைவரும் கட்டுப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மலையக மக்களின் நிலைப்பாடு?
மலையக மக்கள் தமது காணியுரிமை மற்றும் வீட்டுரிமை பற்றி சிந்திக்கத் தொடங்கியுள்ளார்கள். அண்மையில் கொஸ்லந்தை மீரியபெத்தை தோட்டத் தில் ஏற்பட்ட மண்சரிவு அனர்த்தத் தின் பின்னர் தனிவீடு கட்டித் தரப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்து வருகின்றது. அதை வலியுறுத்தி கவன ஈர்ப்பு போராட்டங்களும் நடத் தப்பட்டு வருகின்றன. எனவே, அரசி யல்வாதிகள் கூறுகின்ற பொய்யான வாக் குறுதிகளை நம்பி இனிமேலும் மக்கள் ஏமாறுவதற்குத் தயாராக இல்லை. தலை வர்கள் முடிவெடுப்பதற்கு முன்னரே மக்கள் முடிவெடுக்கும் நிலை உரு வாகி வருகின்றது. தலைவர்கள் மக்கள் சொல்வதற்கு செவிமடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதை அண்மைக் கால அரசியல் நகர்வுகள் உணர்த்துகின் றன. யாரும் யாரையும் இப்படித்தான் செய்ய வேண்டும் என்று நிர்ப்பந்திக்க முடியாது.

நன்றி - வீரகேசரி
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates