மனிதனுடைய நியாயமான கோரிக்கைகள் சமூகத்தினாலும், அரசினாலும் அங்கிகரிக்கம் போது அவை உரிமைகளாக பரிணமிக்கின்றன. மனிதனானவன் சமூகத்தில் வாழ்வதன் நிமித்தம் பெற்றிருக்க வேண்டிய அனைத்து வகையான உரித்துகளும் மனித உரிமைகள் எனப்படும். இவற்றில் வாழும் உரிமை, கல்வி கற்பதற்கான உரிமை, மொழியுரிமை, பாதுகாப்புரிமை, அரசியல் உரிமை , கருத்து வெளியிடும் உரிமை, , சுய கௌரவத்தைப் பாதுகாப்பதற்கான உரிமை என பல்வேறு வகையான உரிமைகள் காணப்படுகின்றன.
அந்தவகையில்இன்றைய தினம் உலக மக்களின் பல்வேறு போராட்டங்களின் வாயிலாக மனிதகுலத்தின் மகத்துவத்தை பாதுகாக்கும் நோக்கத்தோடு தோற்றுவிக்கப்பட்ட மனித உரிமைகள் தினமாகும். 1948.12.10 அன்று ஐக்கிய நாடுகளின் பொதுசபையால் அகில உலக மனித உரிமைகள் பிரகடனம் ஏற்றுக்கொள்ளம்பட்டது. அதனைத்தொடர்ந்து இப்பிரகடனத்தில் கையொப்பமிட்ட நாடுகள் தமது நாடுகளில் இவ்வுரிமைகளை மக்களுக்கு வழங்கி அவற்றைப்பாதுகாப்பதற்கு பல்வேறு பொறிமுறைகளை தோற்றுவித்துள்ளன.
அதன்படி இலங்கையைப் பொருத்தவரையில் 1972 ஆம் ஆண்டு அரசியல் திட்டத்திலேயே முதன்முதலாக உரிமைகள் தொடர்பான ஏற்பாடுகள் இடம்பெற்றிருந்தன. அதனைத் தொடர்ந்து 1978 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 2 ஆம் குடியரசு அரசியல் திட்டத்தின் கீழ் பல்வேறு வகையான மனித உரிமைகளை உள்ளடக்கிய மனித உரிமைகள் அத்தியாயம் சேர்க்ககப்பட்டது. இவ்வுரிமைகளுக்கு எமது மலையக சமூகமும் உரித்துடையதே. இவ்வுரிமைகள் சாகனத்தில் உயிர் வாழ்வதற்கான எவ்விதமான ஏற்பாடுகளும் இடம்பெறாமையால் பல்வேறு காலப்பகுதிகளில் எமது மலையக சமூகத்தின் வாழ்வுரிமை பரிக்கப்பட்டு நடைப்பிணங்களாக திரிந்த கொடுர சம்பவங்கள் எம் நினைவுகளில் இன்றும் நீங்காது காணப்படுகின்றது.
அதன்படி இலங்கையின் அரசியல் திட்டத்தில் கூறப்பட்டுள்ள உரிமைகளை மலையக சமூகம் எவ்வளவு தூரம் அனுபவித்துள்ளது? இச்சமூகத்தின் உரிமைகளை பாதுகாக்க அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகள் எவை? மலையக மக்களின் உரிமைகளை வென்றெடுக்க மலையக தலைவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் எவை,? தமக்குறிய உரிமைகள் தொடர்பாக மக்கள் எவ்வளவு தூரம் விழிப்பாக இருக்கின்றனர்? போன்ற வினாக்களுக்குரிய விடைகளை தேடுவது காலத்தின் தேவையாக உள்ளது.
எமது மலையக சமூகம் வரலாற்றிலிருந்தே ஏமாற்றப்பட்டு வந்துள்ளது. ஏமாற்றப்படுகின்றது. இதற்கு காரணம் மலையகமக்கள் தமக்குரிய உரிமைகள் பற்றி அறியாதிருப்பதே ஆகும். இலங்கையைப் பெறுத்தவரையில் சிறுபான்மை மக்களாகிய எம் மலையக சமூகத்தின் உரிமைகளை பல்வேறு சந்தர்ப்பங்களில் திட்டமிட்டு ஓரங்கட்டிய சம்பவங்கள் ஏறாளம். குறிப்பாக விரும்பிய இடங்களில் வாழ்வதற்கு,கௌரவமான வாழ்க்கை வாழ்வதற்கும் உரிமை மனிதனுக்கு காணப்பட்டபோதிலும் மலையக சமூகத்திற்கு மலையகத்தை தவிர்த்து இலங்கையில் வேறு எங்கும் வாழ முடியாத துர்ப்பாக்கியம் காணப்படுகின்றது. சிலர் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் வெளியிடங்களில் வாழ்ந்த போதிலும் அவர்கள் கௌரவமான முறையில் வாழ்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை. அவ்வாரு வழங்க எந்த அரசாங்கமும் தயாரில்லை.
மக்கள் விரும்பிய தொழிலை செய்யவும், உழைப்பிற்கேற்ற ஊதியத்தைப் பெறவும் உரிமையைப் பெற்றிருந்த போதிலும் 180 வருடங்களுக்கு மேலாக இந்நாட்டின் பொருளாதார முதுகெழும்பாக காணப்படும் எம் மலையக சமூகத்தின் வாழ்க்கையில் உழைப்பிற்கேற்ற ஊதியம் என்பது எட்டாக்கனியாகவே இருந்து வருகின்றது. இதைவிட உரிமைகளை அனுபவிப்பதில் மக்களுக்கு சமத்துவம் பேணப்பட வேண்டும் என ஐ.நா பிரகடனம் கூறிய போதும் இலங்கையில் மலையக சமூகத்தின் வாழ்வுரிமை, கல்வியுரிமை, பாதுகாப்புரிமை, தொழிலுரிமை, சுகாராதவுரிமை போன்றவற்றை நடைமுறைப்படுத்துவதில் பாரபட்சம் காட்டப்படுகின்றது. அன்று தொடக்கம் இன்று வரை எம் மலையக சமூகம் கூலிகளாகவே அடிமை வாழ்க்கை வாழ்ந்து வருகின்றது. அரசாங்கமும் எம் சமூகத்தை பஞ்சம் பிழைக்கவந்த பரதேசிகள்,, கொத்தடிமைகள் போலவே நடாத்தி வருகின்றது. இந்நிலையானது மனிதவுரிமை பிரகடனத்தில் “ எவரையும் அடிமைகளாக நடாத்த முடியாது” என்ற விதிக்கு முறணாக காணப்படுகின்றது.
பாதுகாப்பு உரிமை மனிதவுரிமை பிரகடனத்தில் வலியுறுத்தப்பட்டுள்ள போதும் மலையக மக்களின் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாக மாறியுள்ளது. ஒருபுறம் இயற்கையின் கோரத்தாண்டவத்தில் இருந்து மக்களை பாதுகாக்கவும், அரசியல்வாதிகளின் ஊழல்மிகுந்த ஆட்சியிலிருந்து மலையக மக்களை பாதுகாக்கவும் எந்தவொரு ஏற்பாட்டினையும் அரசாங்கம் மேற்கொள்ளவில்லை.
பாதுகாப்பான குடியிருப்புகளை அமைத்துக் கொடுப்பதில் அரசாங்கம் பாரபட்சம் காட்டுகின்றது. இவ்வாரான சூழ்நிலையில் 29.10.104 அன்று ஏற்பட்ட மண்சரிவினால் பாதிக்கப்பட்ட கொஸ்லந்த மீரியபெத்த மக்களுக்கு உரிய பாதுகாப்பு மற்றும் வாழ்வாதார வசதிகளை அரசாங்கமும், மலையக தலைமைகளும் பெற்றுக்கொடுக்க முன்வராமையால் அம்மக்களின் அடிப்படை உரிமைகளி இன்று கேள்விக்குரியாகியுள்ளது. சுதந்திரமாக கருத்துகளை வெளிப்படுத்தும் உரிமை மனிதனுக்கு காணப்பட்ட போதும் மலையகத்தைப் பொருத்தவரையில் மக்கள் தமது கருத்துகளை வெளிப்படுத்தும் போது பல்வேறு வழிகளில் அவர்கள் அச்சுறுத்தப்படுகின்றனர்.
சில சந்தர்ப்பங்களில் தமது குறைகளை ஊடகங்களில் வெளிப்படுத்தியமைக்காக ஆளும் வர்க்கத்தின் கைகூழிகளாக காணப்படும் பொலிசாரினால் தாக்கப்பட்டமையும் இடம்பெற்றுள்ளது. இறுதிகட்ட யுத்தத்தில் இழிக்கப்பட்டதாக கூறப்படும் மனிதவுரிமை குற்றச்சாட்டுகளுடன் இம்மலையக மக்களின் உரிமைகள் மறுக்கப்படுவதையும் சர்வதேசம் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும்.
அத்தோடு மலையக சமூகத்தினரின் அடிப்படை மனித உரிமை மீறல்களை தடுத்து அம்மக்களுக்கான பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கு பல்வேறு பரிந்துரைகள் முன்வைக்கப்படுகின்றன.
அதன்படி மக்கள் தமது உரிமைகள் தொடர்பாக விழிப்புணர்வுடன் இருத்தல் வேண்டும், அத்தோடு இலங்கையில் மனிதவுரிமைகளை பாதுகாக்கும் பொறிமுறைகயள் வினைத்திரனாக செயலாற்ற வேண்டும், மலையக தலைவர்கள் தமது மக்களின் உரிமைகளை வெண்றெடுக்க போராட வேண்டும். நீதிமன்றமும் பொலிசும் நடுநிலையுடன் செயலாற்ற வேண்டும். நியாயமான பொருளாதார நிபந்தனைகளை மலையக மக்களுக்கு அரசாங்கம் பெற்றுக் கொடுக்க வேண்டும், இவ்வாரான வழிமுறைகள் ஊடாக மலையக மக்களின் உரிமைகளை பாதுகாக்க முடியும்.
ஆகவே இந்த நாட்டில் பொருளாதாரத்தின் முதுகெழும்பாக வாழும் எம் மலையக சமூகத்தின் இழக்கப்பட்ட உரிமைகளை வென்றெடுக்கவும், இருக்கின்ற உரிமைகளை பாதுகாக்கவும் அனைத்து தரப்பினருக்கும் அறைகூவல் விடுக்கின்றோம்.
நன்றி - பசுமை மலையகம்
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...