மலையகப் பெருந்தோட்ட இந்திய வம்சாவளித் தமிழர்க ளின் வரலாற்றுத் தடங்களில் பெரும் மாற்றம் இன்று நிகழ்ந்து வருகின்றது. மீரியபெத்த அனர்த்தத்தின் பின்னர் மலையகத்தின் அனைத்து தோட்டங்களிலும் வீட்டுரிமையை வலியுறுத்தி மக்கள் சுயமாகப் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
தொழிற்சங்க, அரசியல் கட்சி பேதங்களுக்கு அப்பால் தங்களின் வீட்டுரிமைக்காக ஐக்கியப்பட்டு ஜனநாயக ரீதியில் போராடி வருகின்றனர். அரசியல் அறியா மை கொண்ட மக்கள் எனப் பலரால் விமர்சனம் செய்யப்பட்ட சமூகத்தினர் தங்களின் உரிமைக்கான போராட்டத்தை தாங்களே தலைமை தாங்கி அமைதியாக முன்னெடுத்து வருகின்றனர். இதுவே சமூக மாற்றத்திற்கான வெளிச்சமாகும்.
1978ஆம் ஆண்டில் ஐ.தே. கட்சி அரசு டன் இணைந்த அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் மலையக இந்திய வம்சா வளித் தமிழர்களின் நாடற்றவர் பிரச்சி னையை தீர்க்கப் பல முறை ஜே.ஆர்.ஜய வர்தனவுடன் பேச்சுவார்த்தையை மேற் கொண்டார். அன்று ஐ.தே. கட்சியில் தமி ழர் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த முன்னாள் அமைச்சர் சிறில் மத்தியூ தலைமையிலான குழு எதிர்ப்பு தெரிவி த்து வந்தது. பல வருடங்கள் கடந்தும் நாடற்றவர்களுக்கு பிரஜாவுரிமை வழங்க ஐ.தே. கட்சி இழுத்தடித்துக் கொண்டே வந்தது.
'மயிலே மயிலே இறகைப் போடு' என்றால் மயில் இறகு போடாது. மயி லின் இறகைப் பிடுங்கியே எடுக்க வேண்டும். எத்தனை பேச்சுவார்த்தைக ளை மேற்கொண்டாலும் பிரஜாவுரிமை விடயம் இழுத்தடிக்கப்படுகின்றது. நாம் அஹிம்சை வழியில் போராட்டங்களை முன்னெடுப்போம் என அன்று தோட்டக் கூட்டங்களில் அவர் மக்களிடம் தெரிவித்தார். பெருந்தோட்ட மக்களின் உதவி யோடு வேலை நிறுத்தப் போராட்டங்களை முன்னெடுத்தார். அன்று சிங்கள, ஆங்கிலப் பத்திரிகைகள் அமரர் சௌமிய மூர்த்தி தொண்டமானை பெரும் விமர்சனம் செய்தது. இறுதியில் மக்கள் போரா ட்டத்தால் பிரஜாவுரிமை கிடைத்தது.
இன்று மலையகப் பிரதிநிதிகள் மௌ னம் சாதிக்கையில் பல தோட்டங்களில் மக்கள் அஹிம்சை வழியில் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இந்நாட்டின் பெரும்பான்மை இன அர சாங்கங்கள், பெருந்தோட்ட மக்களும் நாட்டின் தொழில் வர்க்கத்தின் பங்காளி கள் என்பதை மறந்து அவர்களுக்கு உரி மைகளை வழங்கத் தயங்குகின்றன. ஆனால் இவர்களின் வாக்குகளை தேர் தல் காலத்தில் பெறுவதில் பெரும் ஆர்வ த்தை காட்டுகின்றன.
1994 ஆம் ஆண்டு முதல் பெருந்தோட்ட மக்களின் வீட்டுரிமை பற்றி பேசப்படுகின்றது. இது காலம் வரை வீட்டுரிமை பற்றி அரசியல்வாதிகளால் மேடைகளில் ஏற்றப்பட்ட நாடகங்கள் பற்றிய தகவல்களை மக்கள் தெரிந்து கொண்டுள்ளனர். இன்று மலையக மக்கள் விழிப்புடன் வாழ்கின்றனர். பெருந்தோட்டத் தொழிலாளர் வர்க்கம் நாடு கேட்கவில்லை. உரிமையையே கேட்கின்றனர். இருநூறு வருட வரலாற்றைக் கொண்ட சமூகம் வாழ்வதற்கான வீட்டுரிமை இல்லாதுள்ளது. அரச நிர்வாக இயந்திரத்தின் அமைவும் வலைப்பின்னலும் பெருந்தோட்ட சமூகத்தை புறக்கணித்தே வருகின்றன. இதை தட்டிக் கேட்க ஆள் இல்லாது உள்ளது.
பெருந்தோட்ட மக்களும் இந்நாட்டின் மக்களே. இந்நாட்டில் இடம்பெறும் அனைத்து தேர்தல்களிலும் வாக்களிக்கும் உரிமையைப் பெற்றவர்கள். மலையகச் சமூகமும் இந்நாட்டின் தேசிய இனங்களில் ஒரு பிரிவாகும். மலையக பெருந் தோட்டச் சமூகமும் இந்நாட்டின் இதர தேசிய இனங்கள் அனுபவிக்கும் சகல உரிமைகளையும் சமமாக அனுபவிக்க வும் உரிமைகளைப் பெறவும் தகுதி கொண்டவர்களேயாகும். ஒவ்வொரு அர சும் மாறுகையில் பொதுவாக நோக்குமிடத்து இந்நாட்டு மக்களின் பழக்கவழக்கங்களும் பொருளா தார நிலையும் புதிய நிர்வாகத்தின் கீழ் மாற்றம் பெறுகின்றன. ஆனால் பெருந்தோட்ட மக்களின் வாழ்வியலில் எவ்வித மாற்றமும் இதுவரை ஏற்படவில்லை. ஒரு தேசிய இனம் தம க்குரியதான நாட்டில் சுதந்திரமாக வாழ வேண்டும். அது ஒரே அரசாங்கத்திற்கு கட்டுப்பட்டிருக்க வேண்டும் என 'பிரின்ஸ்' என்ற நூலில் மாக்ஸியவெல்லி போதித்துள்ளது போன் றே மலையக சமூகம் பூரண சுதந்திரம் இல்லாது அரசாங்கத்துக்கு கட்டுப்பட்டே வாழ்கின்றது.
இதற்கான காரணம், மலையக சமூகத் தின் அரசியல் பிரதிநிதிகள்தான். இந்த மலையக அரசியல்வாதிகள் பெரும்பான் மை இன அரசுகளுக்கு சேவை செய்வதையே கடமையாகக் கொண்டுள்ளனர். இதனால் மாறி மாறி வரும் ஒவ்வொரு அரசாங்கத்தினதும் கொள்கைகள், திட்டங்கள் தோட்டப் பிரதேசங்களுக்கு கிடைப்பதில்லை. அனைத்து திட்டங்களும் மலையக மக்களைக் கவனத்தில் கொள்ளாத திட்டங்களாகவே உள்ளன. வீடுகள் இல்லாத சமூகத்திற்கு கூரைத் தகடுகள் வழங்குவதும், கொங்கிறீட்டு வீதிகள் அமைப்பதுமே இச்சமூகத்தின் பிரதிநிதிகள் அபிவிருத்தி என்கின்றனர்.
மலையக சமூகம் பற்றிய பாரம்பரிய ஆய்வுகளை மேற்கொள்வது போல் இம் மக்கள் வாழ்நிலை, பொருளாதார நிலைக்கல்வி, சுகாதாரம், குடியிருப்பு, சம்பளம் உள்வாங்கப்பட்ட வகையில் தேசிய அரசியல் உரிமை, கலாசார உரிமை, பண்பா ட்டு சுதந்திர உரிமை பற்றிய ஆய்வு இன்று அவசியமாகும்.
இந்த நாட்டில் ஒதுக்கப்பட்ட சமூக மாக இந்த 21ஆம் நூற்றாண்டிலும் மலையக சமூகம் வாழ்கின்றது. இச்சமூகமானது 2015ஆம் ஆண்டு 8ஆம் திகதி இந்நாட்டின் 6 ஆவது ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கத் தயாராகி வருகின்றது. இத் தேசிய தேர்தல் மிகவும் முக்கியமானதா கும். முழு உலகின் பார்வையும் இன்று எமது நாட்டின் மீது விழுந்துள்ளது. இதுவரை இன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவோ அல்லது பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவோ பெருந்தோட்ட தொழிலாளர் வர்க்கம் பற்றி எவ்வித கருத்துக்களையும் முன்வைக்கவில்லை. இம்மக்கள் மறக்கப்பட்டு விட்டனர். யார் மறந்தாலும் மலையக பெருந்தோட்ட மக்களின் வாக்குகளும் இந்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியாளர் தெரிவாக பெரும் பங்கு வழங்கப்போகின்றது. இதை அனைவரும் உணர வேண்டும்.
இன்றைய அரசியல் சூழலின் அடிப்படையில் மலையக சமூகத்தின் பிரச்சினைகளை இந்நாட்டின் ஏனைய சமூ கங்களுக்கும் உலகத்திற்கும் வெளிப்படுத்தும் சந்தர்ப்பமாக இந்த ஜனாதிபதித் தேர்தலை மக்கள் சிந்தித்துப் பயன்படு த்திக்கொள்ள வேண்டும். எமது சமூகத் தின் பிரச்சினைகளை ஆழமாகப் புரிந்து கொள்பவர்கள் மூலமாகவே அரசியல் உரிமைகள், வீட்டுரிமைகள் உட்பட ஏனையவைகளையும் பெறலாம். உண்மையான நம்பகத்தன்மை கொண்டவரே தேவை. எமது சமூகம் கடந்த காலங்க ளில் கற்றுக்கொண்ட பாடங்கள் மிக நேர்த்தியானவை. மலையகப் பிரதிநிதி கள் தங்களுக்கு வாக்களித்த மக்களின் வாழ்வாதார, உட்கட்டமைப்பு விடுதலை க்கு முறையான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.
இன்று பெருந்தோட்ட சமூகம் வீட்டு ரிமை கோரிக்கையை முன்வைத்து உண் ணாவிரதம் மற்றும் அமைதியான போரா ட்டங்களில் ஈடுபட்டு வருகின்றது. இதை எவராலும் தடுக்க இயலாது. மழுங்கடிக்கவும் முடியாது. மலையகப் பிரதிநிதிகள் இச்சமூகத்தின் பிரச்சினைகளை தேசிய பிரச்சினையாக முன்னெடுத்துச் செல்ல முயலுவதில்லை என வாக்களித்த மக்கள் குறை தெரிவிக்கின்றனர். மலையக இளம் சமூகத்தின் குரல் இன்று ஒலிக்கத் தொடங்கி விட்டது.
2005 – 2010 ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தில் முன் மொழியப்பட்ட வேலைத்திட்டங்களை பெருந்தோட்டங்கள் அமுல்படு த்தவில்லை. வீடைமைப்பு, பொறியியல், நிர்மாணத்துறை அமைச்சு அண்மையில் வெளியிட்ட தேசிய வீடமைப்புக் கொள்கை (ஜாதிக்க நிவாச பிரதிபத் திய) நூலின் 7ஆம் பக்கத்தில் 'மிக அவ தானம் செலுத்த வேண்டிய சமூகம்' பகு தியில் பெருந்தோட்ட மக்களின் லயன் வாழ்க்கை பற்றி தெளிவாகத் தெரிவித் துள்ளதுடன், லயன் வீடைமைப்பு அழி க்கப்பட்டு சுகாதார, ஏனைய வசதிகளு டன் இணைந்த வீடுகளின் தேவை உணர் த்தப்பட்டுள்ளது.
இவ்வாறு மலையக சமூகத்தின் தேவை கள் ஏடுகளில் எழுத்துக்களாகவும் தேர்தல் பிரசார மேடைகள், மேதின மேடைகள் என்பவற்றில் பேச்சுக்களிலுமே நிற்கின் றன. செயற்பாட்டுக்கு நகர மறுக்கின் றது. வீட்டுரிமை, காணியுரிமை, இத்தேர் தல் மூலமாக எமது சமூகத்துக்கு கிடை க்குமா? கடந்த காலங்களிலும் ஏமாற்றப் பட்டுள்ளோம். அதேபோன்று இம்முறை காணியுரிமை வீட்டுரிமை ஒரு தேர்தல் கால சடங்காக இருந்து விடக்கூடாது.
– சிலாபம் திண்ணனூரான்
நன்றி - வீரகேசரி - 15.12.2014
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...