இதனாலேயே பொது வேட்பாளருக்கு ஆதரவு என்கிறார் வே.இராதாகிருஷ்ணன் எம்.பி
மலையக மக்கள் முன்னணி முன்வைத்த 10 கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க எமக்கு வாக்குறுதி அளித்துள்ளார். இத்தீர்மானங்களில் முக்கிய மூன்று தீர்மானங்களான மலையக தோட்டப்புற மக்களுக்கு தனித்தனி வீடுகள், மலையகத்தின் கல்வி வளர்ச்சிக்கான உடனடி நடவடிக்கைகள் மற்றும் மலையகத்தில் வேலையற்று இருக்கும் இளைஞர், யுவதிகளுக்கு தொழில் வழங்குவது குறித்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் வாக்குறுதி அளித்துள்ளார். இதன் பின்னரே நாம் பொது வேட்பாளர் மைத்திரி பால சிறிசேனவை ஆதரிக்க தீர்மானித்தோம் என்று மலையக மக்கள் முன்னணி அரசியல் பிரிவு தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வே.இராதாகிருஷ்ணன் வீரகேசரி வாரவெளியீட்டிற்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்தார்.
அவர் வழங்கிய செவ்வி முழுமையாக கீழே தரப்படுகின்றது...
கேள்வி: நீங்கள் பிரதியமைச்சராகப் பதவியேற்று இரண்டு மாதங்களே கடந்துள்ள நிலையில், அரசிடமிருந்து விலகவேண்டும் என்று ஏன் முடிவு செய்தீர்கள்?
பதில்: எனது நோக்கம் பிரதியமைச்சர் ஆகவேண்டும் என்பதல்ல. மலையக மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்பதேயாகும். நான் பிரதியமைச்சராக இருந்தாலோ இல்லாவிட்டாலோ மக்களுக்கு உதவி செய்யக்கூடிய வாய்ப்பு எனக்கு கிடைத்திருந்தால், நான் அந்த உதவியைச் செய்திருப்பேன். ஆனால் அதற்கான வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. எனக்கு பிரதியமைச்சராக வழங்கப்பட்ட அமைச்சின் மூலமும் மலையக மக்களுக்கு சேவை செய்யக்கூடிய வாய்ப்பு இருக்கவில்லை. ஆகவே, இந்த நாட்டில் தேசிய அளவில் ஓர் மாற்றம் ஏற்படுகின்ற சந்தர்ப்பத்தில், நாங்களும் அதற்கு உதவ வேண்டும். எங்களுடைய தனிப்பட்ட இலாபத்துக்காக நாங்கள் அதனைப் புறக்கணிக்க முடியாது. எனவே நாங்கள் நாட்டின் தேசிய மாற்றத்திற்கு எதிராக நிற்க முடியாது.
கேள்வி: பிரதியமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் நீங்கள் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்குவதாக தெரிவித்திருந்தீர்கள். பின்னர் திடீரென உங்கள் மனநிலையில் ஏன் இந்த மாற்றம் ஏற்பட்டது?
பதில்: ஜனாதிபதிக்கு நாங்கள் ஆதரவு தருவதாக தெரிவித்தபோது, எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யார் என்று அறிவிக்கப்படவில்லை. மேலும் பத்து நிபந்தனைகளை முன்வைத்தே நாங்கள் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்திருந்தோம். அதனை நாங்கள் இப்பொழுதும் மறுக்கவில்லை. எமது கோரிக்கை தொடர்பில் காலக்கிரமத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி தெரிவித்திருந்தார். தோட்டப் புறங்களில் மாடி வீடு கட்டப்போவதாகவும் அவர் எம்மிடம் தெரிவித்தார். அதற்கு நாங்கள் எதிர்ப்புத் தெரிவித்தோம். அதாவது மாடிவீட்டு நடைமுறை தோட்டப்புறங்களுக்கு பொருத்தமற்ற ஒன்று என்றும் தனி வீடுகளை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவரிடம் கோரியிருந்தோம். அனைத்துப் பேச்சுக்களும் நிறைவடைந்துள்ளன. மாடிவீடுகளே வழங்கப்படும் என்று அவர் எம்மிடம் கூறினார். இதிலிருந்து எங்களுக்கும் ஜனாபதிக்கும் இடையில் ஓர் முரண்பாடு இருந்தே வந்தது. இந்த அரசாங்கம் மலையக மக்களுக்கு வழங்கிய எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை.
கேள்வி: பொது வேட்பாளருக்கு நீங்கள் ஆதரவு வழங்கும் போது என்னென்ன நிபந்தனைகளை முன்வைத்துள்ளீர்கள்?
பதில்: அரசாங்கத்திடம் முன்வைத்த அதே நிபந்தனைகளை பொது வேட்பாளரிடமும் முன்வைத்துள்ளோம். எதிர்க்கட்சியின் முக்கிய தீர்மானமே, மலையக மக்களுக்கு காணி வழங்குவதும், தனி வீடு வழங்குவதுமாக உள்ளது. இதனை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க பலமுறை தெரிவித்துள்ளார். அத்துடன், மலையகத்தின் கல்வி வளர்ச்சியிலும் அக்கறை செலுத்துவதாகவும் அவர் உறுதியளித்துள்ளார். இந்த மூன்று விடயங்களையும் எதிர்க்கட்சி தனது கொள்கையில் பிரதானமாகக் கொண்டுள்ளது.
கேள்வி: தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பில் இரு தரப்பினரிடமும் கோரிக்கைகளை முன்வைத்துள்ளீர்களா?
பதில்: அது தொடர்பில் நாங்கள் பேச்சு நடத்தவில்லை. தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயம் ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்படுவதால், அதனை நாங்கள் எமது கோரிக்கைகளுக்குள் உள்ளடக்கவில்லை. காலக்கிரமத்தில் சம்பள விவகா ரங்கள் தொடர்பிலும் நாங்கள் பேச்சுக்களை மேற்கொள்வோம்.
கேள்வி: மலையகத்தில் மண்சரிவு அபா யம் காரணமாக வெளியேற்றப்பட்ட மக்க ளுக்கு முழுமையாக யாரும் இதுவரை உதவவில்லை என்ற குற்றச்சாட்டு நிலவுகின்றது. இது தொடர்பில் நீங்கள் என்ன கூறுகின்றீர்கள்?
பதில்: இது தொடர்பில் அனர்த்த முகாமை த்துவ அமைச்சரிடம் நாங்கள் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றோம். அத்துடன், இந்தியத் தூதுவரிடமும் இது தொடர்பில் நாங்கள் வலியுறுத்தியுள்ளோம். அதற்கு இந்திய அரசாங்கம் உதவி செய்வதாக உறுதியளித்துள்ளது. ஆனால் அரசாங்கம் தாங்கள்தான் இதனை செயற்படுத்தப்போவதாக தெரிவிக்கின்றது. இந்தியா உட்பட வெளிநாடுகள் மலையக மக்களுக்கு உதவ தயாராக இருக்கின்றது. ஆனால் அரசாங்கம் அதற்கு அனுமதிப்பதும் இல்லை, அந்த உதவியை செய்து கொடுப்பதும் இல்லை.
கேள்வி: நீங்கள் தொடர்ச்சியாக ஆதரவு வழங்கி வந்த அரசாங்கங்கள் மலையக மக்களின் வீட்டுப் பிரச்சினைகளுக்கு இதுவரை தீர்வினைப் பெற்றுக் கொடுக்கவில்லை. எனவே எவ்வாறு எதிர்வரும் அரசாங்கத்தின்மீது நீங்கள் நம்பிக்கை கொண்டுள்ளீர்கள்.?
பதில்: தொடர்ச்சியாக வந்த அரசாங்கங்கள் மலையக மக்களின் முக்கிய பிரச்சினைகளைத் தீர்க்கவில்லை என்பதனை நான் ஏற்றுக் கொள்கின்றேன். இருந்தாலும், ஒரு கட்சி பத்து வருடங்களுக்கு மேல் ஆட்சி செய்துள்ளது. அந்தக் கட்சியின் அரசாங்கம் செய்யாததை புதிய அரசாங்கம் செய்யும் என்ற நம்பிக்கை எமக்கிருக்கின்றது.
கேள்வி: தோட்டத் தொழிலாளர்களுக்காக புதிய அமைச்சு ஒன்றை அமைக்க வேண்டும் என்று நீங்கள் எதிரணியிடம் கோரிக்கை விடுத்துள்ளீர்களா?
பதில்: சந்திரிகா பண்டாரநாயக்காவின் ஆட்சிக் காலத்தில் தோட்டப்புற மக்களுக்கென தனியான அமைச்சு ஒன்று இருந்தது. எனவே இந்தக் கோரிக்கையினை நாங்கள் தற்போது ஆதரவளிக்கும் எதிரணியிடம் முன்வைத்துள்ளோம். மேலும், தேசிய வீடமைப்புக் கொள்கையில் மலையக வீட்டுத் திட்ட அதிகார சபை ஒன்றை நிறுவி அதன்மூலம் மலையக மக்களின் வீட்டுப் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும் என்ற கோரிக்கையினையும் முன்வைத்துள்ளோம்.
கேள்வி: பொது வேட்பாளருக்கு மலையகத்தில் வெற்றி வாய்ப்புக்கள் எவ்வாறு அமைந்துள்ளன?
பதில்: மிகவும் சுபீட்சமாக உள்ளன. எமது ஆதரவாளர்களைத் திரட்டி அதன் மூலமாக பொதுவேட்பாளருக்கு மலையக மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டு வருகின்றோம். பொதுவாக, மலையகத்தில் ஓர் மாற்றம் வேண்டும் என்று அனைவ ரும் எதிர்பார்க்கின்றார்கள். அந்த மாற்றத் திற்கு நாங்கள் ஓர் உந்து சக்தியாக இருக் கின்றோம்.
நன்றி - வீரகேசரி 15.12.2014
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...