Headlines News :

காணொளி

ஜனாதிபதி விருது

ஜனாதிபதி விருது
நமது மலையகத்துக்கு

சுவடி

கொஸ்லந்தையில் அவலமும் அகழ்வும் தொடர்கிறது

கொஸ்லந்தையில் அவலமும் அகழ்வும்  தொடர்கிறது
மண்ணுள் புதைந்த உறவுகளுக்காகவும் தரையில் தவிக்கும் பிஞ்சுகளுக்காகவும் இரங்குவோம்

ஒரு சில கணங்களுக்குள் இலங்கை வரைபடத்திலிருந்து காணாமல் போயுள்ள கிராமம் - - எம்.ரிஷான் ஷெரீப்


இலங்கை, பதுளை மாவட்டத்திலுள்ள கொஸ்லந்தை, ஹல்தும்முல்லை, மீரியபெத்த தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் வசித்து வந்த ஒரு முழுக் கிராமமே நேற்று (29.10.2014) மண்ணுக்குள் புதையுண்டு போயுள்ளது. கிட்டத்தட்ட இருநூறுக்கும் அதிகமான மக்களை, அவர்கள் நேசித்த மண்ணே உயிருடன் விழுங்கிக் கொண்டுள்ளது. சடலங்கள் மீட்கப்படுகின்றன. 2004 இல் ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்திற்குப் பிறகு, இலங்கையில் பல நூறு உயிர்களைக் காவுகொண்ட இயற்கை அனர்த்தம் இதுவாகும். அதே போல இலங்கை, மலையக வரலாற்றில் இதுவரை இடம்பெற்றுள்ள மண் சரிவு அனர்த்தங்களில், இப்போது நிகழ்ந்துள்ள இந்த அனர்த்தத்தை மிகவும் மோசமான ஒன்றாகவும், பாரிய அழிவுகளை ஏற்படுத்தியதாகவும் குறிப்பிடப்படலாம். 

இக் கிராமத்தில் குறைந்தபட்சம் ஐம்பத்தேழு தமிழ்க் குடும்பங்களைச் சேர்ந்த முந்நூற்றைம்பது நபர்களாவது வசித்திருக்கலாம் என நம்பப்படுவதோடு, இந்த அனர்த்தம் நிகழ்வதற்கு முன்னர் வெளிப் பிரதேச பாடசாலைக்குச் சென்ற சிறுவர்,சிறுமியர்,வேலைகளுக்காகச் சென்ற சில தொழிலாளர்கள் என ஒரு சிலரே அனர்த்தத்தில் சிக்கிக் கொள்ளாமல் காப்பாற்றப்பட்டுள்ளனர். இழப்புக்கள் சம்பந்தமாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சரும், போலிஸ் ஊடகப் பேச்சாளரும் ஆளாளுக்கு ஒவ்வொரு கருத்துச் சொல்லி தப்பித்துக் கொள்ள முற்படுகின்றனர். என்ற போதிலும், பல நூற்றுக்கணக்கான மக்களை நேற்று முதல் காணவில்லை. மண்ணுக்குள் புதையுண்டவர்களை மீட்கும் முயற்சி, நேற்று காலநிலையைக் குறிப்பிட்டு கைவிடப்பட்டதோடு, இன்று ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. நேற்றே முழுமையாக நடந்திருந்தால் ஒருவேளை சிலரையாவது உயிருடன் காப்பாற்றியிருந்திருக்கலாம்.

மலேசிய விமானம் காணாமல் போனபோது, அதில் பயணித்த உயிர்களுக்கு என்னவானது எனக் கேட்டு உலகமே ஆர்ப்பரித்தது. அவர்களுக்காகப் பிரார்த்தித்தது. Facebook, Twitter, Google plus போன்ற சமூக வலைத்தளங்களில் கூட, திரும்பிய பக்கமெல்லாம் அவர்களுக்கான பிரார்த்தனைகளும், உதவிகளும் பரந்திருந்தன. ஆனால், அதே போன்ற, கிட்டத்தட்ட அதே எண்ணிக்கையான உயிர்கள் இங்கும் காணாமல் போயிருக்கின்றன. மீட்கப்பட்டு, நிர்க்கதியான நிலையிலும் பல நூறு பேர் இருக்கின்றனர். ஆனால் மேற்சொன்ன சமூக வலைத்தளங்களிலோ, இணையத்தளங்களிலோ அவர்களுக்கான உதவிகளோ, பிரார்த்தனைகளோ கூட பரவலாக இல்லை. ஏனெனில், இவர்கள் இலங்கையின் ஒரு மலைக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள். தமிழ்மொழி பேசும் ஏழைகள். பூர்வீக நாடற்றவர்கள். வந்தேறு குடிகள். விரல் முனையில் உலகைச் சுற்றிவரும் மேற்தட்டு மக்களுக்கு, இவர்கள் இருந்தாலும் ஒன்றுதான். இவர்களை இழந்தாலும் ஒன்றுதான்.

யார் இவர்கள்? ஒரு பக்கம் இவ்வாறான இயற்கை அனர்த்தங்களோடும், மறுபக்கம் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலாவணி, மிகக் குறைந்த ஊதியம், பாதுகாப்பற்ற குடிசைகள், நோய்நொடிகள், வறுமை எனப் பலவற்றோடும் போராட வேண்டியிருக்கும் இம் மக்கள் தென்னிந்தியாவிலிருந்து ஏமாற்றி அழைத்து வரப்பட்ட அப்பாவி மலையகத் தோட்டத் தொழிலாளர்கள். நூற்றாண்டுகளாக இலங்கையின் ஏற்றுமதி அபிவிருத்திக்காக, எந்த அடிப்படை வசதிகளுமற்று அடிமைகளாக உழைக்கும் தமிழ் மக்கள் இவர்கள். எந்த அரசியல்வாதிகளாலும் கண்டுகொள்ளப்படாத ஏழைக் கூலி மனிதர்கள். யார், யாருக்காகவோ உழைத்துத் தேய்ந்து, தேயிலைச் செடிகளுக்கே உரமாகிப் போகும் அப்பாவி ஆண்கள், பெண்கள், குழந்தைகள்.

எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், தேர்தல்கால வாக்குகளுக்காகவும், ஏற்றுமதி வர்த்தகத்துக்கான உழைப்பாளிகளாகவும் மாத்திரமே இலங்கை அரசாங்கம் இவர்களைப் பார்க்கின்றது. இவர்கள் இந்திய வம்சாவளியினர் என்றபோதும், இந்திய அரசியல்வாதிகள் கூட இவர்களது உரிமைகளுக்காகவோ, இவர்களைத் தமது நாட்டில் மீள்குடியேற்றச் செய்யவோ எந்த முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை. ஆனால் அவர்கள் எல்லோரும் இலங்கைத் தமிழர்கள், ஈழத் தமிழர்களென மேடைகளில் கூச்சலிடுகிறார்கள். ஆர்ப்பாட்டங்கள் செய்கிறார்கள். அவர்கள் செய்வதுவும், இந்த அப்பாவிகளை வைத்து, தமது ஆதரவாளர்களை உசுப்பி விடும் பம்மாத்து அரசியலன்றி வேறென்ன?

இலங்கை அரசு, உலகத்துக்கு தனது பகட்டையும், ஆடம்பரத்தையும் காண்பிப்பதற்காக நீரில் மிதக்கும் நகரங்களை நிர்மாணிக்கிறது. அதிவேகப் பாதைகளை அமைக்கிறது. இவற்றின் செலவுக்கான பணம், மேற்குறிப்பிட்ட ஏழை மக்களின் உழைப்பிலிருந்துதான் கிட்டுகிறது என்ற போதிலும், நான் மேலே சொன்ன எந்த வசதிகளையும் அனுபவிக்கும் வாய்ப்பு இவர்களுக்கில்லை. அதிவேகப் பாதைகளை, பல மாடிக் கட்டிடங்களை, அதி நவீன ஹோட்டல்களை நிர்மாணிக்க முன்பு, தனது நாட்டிலுள்ள எல்லா மக்களுக்கும் எல்லா அடிப்படை வசதிகளும் கிட்டுகின்றனவா எனப் பார்க்க வேண்டியது ஒரு அரசாங்கத்தின் கடமை. ஆனால் 'இவர்களை முன்பே இங்கிருந்து போகச் சொல்லிவிட்டோம்' எனச் சொல்லி இன்று அரசாங்கம் தப்பிக் கொள்ளப் பார்க்கிறது. 

அரசாங்கமானது, வீடுகளைக் கட்டிக் கொடுத்து பாதுகாப்பாகக் குடியேற்ற வேண்டியது இவ்வாறான ஏழை மக்களைத்தானே தவிர, வசதியானவர்களையல்ல. வீண் ஆடம்பர அலங்காரங்களுக்காகவும், கிரிக்கட் வீரர்களுக்கும், நடிகர்களுக்கும் வீடு, வாகனம், காணிகளென பல கோடி ரூபாய்களைச் செலவழிக்கும் அரசாங்கம், இவர்களைக் கண்டுகொள்ளாமல் விட்டுள்ளதை என்னவென்பது?

 உலகிலுள்ள எந்த மனிதரிடத்திலும், திடீரென எவரும் வந்து அவர்கள் பரம்பரையாக வாழ்ந்துவரும் இடத்திலிருந்து வெளியேறி 'நீ வேறெங்காவது போ' எனச் சொன்னால் அவர்கள் எங்குதான் செல்வர்? ஒருவரது இருப்பிடமென்பது பூமி மாத்திரமல்ல. அது அவர்களது உணர்வுகளோடும், வாழ்க்கையோடும் சுற்றிப் பிணைக்கப்பட்ட ஆன்மா. அந்த ஏழைகளை ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்திற்குப் புலம் பெயரச் சொன்னால், அகதியாய் அலையச் சொன்னால், அதை விட்டும் அவர்களைத் தடுப்பது எது? ஜீவனோபாய வழி முறைகள். 

காலம், காலமாக தோட்டங்களையே நம்பி வாழும் ஏழைக் குடிகளுக்கு, அவர்களுக்கேற்ற ஜீவனோபாய வழிமுறைகளை அமைத்துக் கொடுத்து, தண்ணீர், மின்சார, கழிவறை வசதிகளோடு முறையான குடியிருப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து, அரசாங்கமே குடியேற்றி வைப்பதுதானே முறை? அதை ஒருபோதும் செய்யவில்லை. இப் பிரதேசத்தில் மண் சரிவு அபாயம் இருப்பதாக பல தடவைகள் எச்சரிக்கப்பட்ட போதிலும், இங்கு வாழும் அப்பாவித் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களை இடம் மாற்றிக் குடியமைக்க அரசாங்கம் எந்த ஏற்பாடும் செய்யவில்லை. அண்மையில் நடைபெற்ற ஊவா மாகாண சபைத் தேர்தலுக்காக, இம் மலையகப் பிரதேசங்களில் போட்டியிட்ட வசதிபடைத்த அரசியல்வாதிகள் ஒவ்வொருவரும் செலவிட்ட பணத்தில் ஒன்றிரண்டு சதவீதங்களைச் செலவழித்திருந்தால் கூட, இம் மக்களுக்கு ஆபத்தற்ற குடியிருப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்திருக்க முடியும்.

இவ்வாறான ஆபத்தான பல பிரதேசங்கள் மலையகத்தில் உள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. எல்லாவற்றிலுமே குடியிருக்கச் செய்யப்பட்டிருப்பது அப்பாவி ஏழைத் தோட்டத் தொழிலாளர்கள். இனியாவது அரசாங்கம் இவர்களைக் கருத்திற்கொண்டு உடனடியாக பாதுகாப்பான இடங்களில் இவர்கள் பத்திரமாகக் குடியேற ஏற்பாடு செய்ய வேண்டும். கேமராக்களின் முன்பும், ஊடகங்களின் முன்பும் இன்று பாய்ந்து பாய்ந்து உதவி செய்யும் அரசியல்வாதிகளும், தலைவர்களும் ஒரே நாளில் தமது தாய் தந்தையரை, சொந்தங்களை, இருப்பிடங்களை இழந்து நிற்கும் ஐம்பதிற்கும் மேற்பட்ட எல்லா சிறுவர், சிறுமிகளதும் எதிர்காலம் சிறப்பாக அமையவும் உதவ வேண்டும். மீட்கப்பட்டவர்கள் உடல் காயங்களைப் போலவே, மனதளவிலும் அதிர்ந்து போயுள்ளனர். அவர்களுக்கான தக்க சிகிச்சைகள் உடனடியாக வழங்கப்பட வேண்டும்.

நேற்றைய அனர்த்தத்தைப் பார்வையிட, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று அங்கு பூஞ்சிரிப்போடு வருகை தந்திருக்கிறார். கேமராக்களின் முன்னர் பரிசுகள் போலச் சுற்றிய பார்சல்களை யார் யாருக்கோ அள்ளி வழங்குகிறார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் திரும்பவும் போட்டியிடவிருக்கும் ஜனாதிபதிக்கு இந்த அனர்த்தத்தில் உதவிய புகைப்படங்களைக் காட்டியே வாக்குகளை அள்ளி விடலாம். அரசியல்வாதிகளுக்கு இவர்களது தேர்தல் கால வாக்குகள் மட்டும் போதும். இப்போதும் கூட அவர்கள், பல நூற்றுக்கணக்கான வாக்குகளை இழந்துவிட்டோமே என்றுதான் கவலைப்பட்டுக் கொண்டிருப்பார்களே தவிர, பாவப்பட்ட இந்த உயிர்களுக்காகவல்ல !







30.10.2014

மறைந்து போன மலையக மக்கள்!



இலங்கை வரலாற்றில் மலையக மக்கள் ஒரு பாரிய சக்தி என்றே சொல்ல வேண்டும்.
தோட்ட வீடமைப்பில் உள்ள குறைபாடுகளே பதுளை மாவட்ட கொஸ்லந்தை நிலச்சரிவின் போது அதிகமான லயன்கள் புதையுண்டு போனதற்கான காரணம் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.

வெள்ளையர் ஆட்சியில் ஏற்படுத்தப்பட்ட இந்த லயன்களில், மோசமான சூழ்நிலையில்  தோட்டத் தொழிலாளர் குடும்பங்கள் வைக்கப்பட்டிருந்ததை பல மலையக ஆய்வாளர்களும்,  மனித உரிமை ஆர்வலர்களும் கண்டித்திருக்கிறார்கள்.

இந்த நிலச்சரிவு ஏற்பட்ட பகுதி, அபாயப் பகுதியாக முன்னரேயே எச்சரிக்கப்பட்டிருந்த போதிலும், அங்கு தொடர்ந்தும் மக்கள் வசித்ததற்கு, அவர்களுக்கு வேறு உரிய குடியிருப்பு வசதிகள் இல்லாமையே காரணம் என்று அவர்கள் கூறுகிறார்கள்.

இவர்கள் இந்திய வம்சாவளிகள் என்பதனால் அரசு இம் மக்களை இது வரைக்கும் சரியான முறையில் கையாளவில்லை என்ற பாரிய மறைமுகமான கேள்வி ஒன்று எழுகின்றது.

இந்த மக்களின் பிரச்சனை இன்று நேற்றல்ல இவர்கள் பரம்பரை பரம்பரையாக இருந்து வருகின்றது.

இந்த மக்களின் பாரிய மனை பிரச்சனைக்கு ஒரு தீர்வு எடுப்பதற்கு இன்னும் அரசுக்கு நேரம் கிடைக்க வில்லை என்பதே உண்மை.

காரணம் இவர்களை வைத்து அரசாங்கம் பிழைப்பு நடத்துவது இந்த மக்களுக்கு தெரியாததன் காரணமே. 

இன்று இலங்கை அரசாங்கம் வெளிநாடுகளில் ஏற்றுமதி துறையில் பாரிய பணத்தை சம்பாதிக்கும் ஒரே இடம் மலையகம்.

அரசுக்காக உழைத்து தேய்ந்து போன இம் மக்கள் ஒரு காலமும் தங்களைப் பற்றி கவலைப்பட்டதே இல்லை.

அது போன்று அரசாங்கமும் இவர்களை அடிமை போன்றே பார்த்து வந்துள்ளது.

தற்போது அரசியல்வாதிகள் கூறுகின்றனர் அவர்களுக்கு ஏற்கனவே வேறு இடத்துக்கு செல்லும் படி கூறியதாக கூறுகின்றனர்.

இன்று இலங்கை வரலாற்றில் பாரிய பொருளாதார சக்தியாக இருக்கும் மக்களுக்கு சரியான மனை ஏற்பாட்டை செய்து கொடுக்க வேண்டிய அரசு, அவர்களை கைவிட்டதன் விளைவே இது.

அது போன்று கல்வி வளர்சியிலும் இன்று நல்ல நிலையில் உள்ள மக்கள் ஏன் இதுவரைக்கும் மாயாஜால அரசியல்வாதிகளை நம்புகின்றார்கள் என்பது புரியவில்லை. 

இன்று மிருகங்களுக்கு இருக்கின்ற மதிப்பு கூட மனிதர்களுக்கு இல்லாமல் போகும் நாடாக இலங்கை மாறி வருகின்றது.

இனி வரும் காலங்களில் இந்த மக்கள் தாங்கள் ஏமாறும் மக்களாக இல்லாமல் சிந்திக்க கூடிய மக்களாக மாற வேண்டும்.

தற்போது அனர்த்தம் வந்ததும் ஓடி வரும் அமைச்சர்களை சரியான மரியாதை கொடுத்து திருப்பி அனுப்ப வேண்டும்.

ஒவ்வொரு அரசியல்வாதிகளையும் சிந்திக்க வைக்க வேண்டும் உழைத்து தேய்ந்து போன மக்களுக்கு சொந்த வீடு இல்லை.

உழைக்காமல் அரசியல்வாதி என சொல்லும் சோம்பேறிகளுக்கு ஆடம்பர வீடு, அடுக்கு மாடி, வெளிநாட்டு வங்கிகளில் பணம், சொகுசு வாகனம், மனிதர்களை வித்து அரசியல் நடத்தும் அரசியல்வாதிகளே! இது உங்களது குடும்பத்துக்கு நடந்தால் எப்படி இருக்கும். 

இவர்கள் உங்களை கடவுளாக மதிக்கின்றார்கள் ஆனால் நீங்கள் அவர்களை அவமதிக்கின்றீர்கள்.

இன்று நீங்கள் வெளிநாடுகளில் சென்று எம்மிடமும் பாரிய ஏற்றுமதி உள்ளது என்று பேசுவதற்கு இவர்களே காரணம்.

இது போன்ற சம்பவங்களுக்கு அரசியல்வாதிகளை விட இந்த மக்களின் தவறே காரணம்.

உங்களது கிராமங்களில் உங்களுக்கு உண்மையாக பணியாற்ற மனித நேயம் உள்ளவர்களை தேர்ந்தெடுத்தல் உங்களது கஷ்டம் அவர்களுக்கு புரியும்.

இன்று இந்த துன்பகரமான சம்பவம் இனி மேலும் நடக்காமல் இருக்க வேண்டுமாயின் உங்களது கோரிக்கைகள் சரிவரும் வரைக்கும் உங்களது தொழிலை புறக்கணியுங்கள்.

தமிழ் இனம் இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் அடிமை வாழ்க்கை வாழ்வது.

நன்றி - தமிழ்வின்

நரியூரிலிருந்து புலியூருக்கு... ஸ்ரீமாவோ - சாஸ்திரி ஒப்பந்தத்தின் 50வது ஆண்டு - ஆதவன் தீட்சண்யா


‘எவரொருவரது குடியுரிமையினையும் தன்னிச்சையாக மாற்றிவிடவோ மறுத்து விடவோ கூடாது’ என்கிறது உலகளாவிய மனிதவுரிமைப் பிரகடனம். ஆனால், இலங்கைவாழ் இந்திய வம்சாவளித் தமிழர்களின் குடியுரிமை அவர்களது கருத்தறியாமலே தீர்மானிக்கப்பட்டது. 1964ஆம் ஆண்டு இதே அக்டோபர் 30ஆம் நாளில்தான் அந்த அநீதி ‘ஸ்ரீமாவோ- சாஸ்திரி ஒப்பந்தம்’ என்னும் பெயரால் இழைக்கப்பட்டது. பிரிட்டனும் பிரான்சும் இந்தியாவை ஆண்ட காலத்தில் தமது காலனி நாடுகளுக்கு இந்தியர்களை ஒப்பந்தக்கூலிகளாக வாரிச்சென்றன. சட்டப்பூர்வமாக ஒழிக்கப்பட்ட அடிமை வணிகத்திற்கு மாற்றாக ஐரோப்பிய முதலாளிகள் உருவாக்கிய இந்த ஒப்பந்தக்கூலி முறைக்கு பெரிதும் பலியானவர்கள் தமிழர்கள்.

1796- 1815க்குள்ளாக முழு இலங்கையையும் பிரிட்டன் கைப்பற்றியது. அதன் முதல் கவர்னரான பிரடெரிக் நார்த் (1798), ஓர் அரசாங்கத்தை நிறுவிடும் தொடக்கநிலைப் பணிகளுக்காக தமிழர்களை அங்கு அழைத்துப் போனார். 1821ல் இந்தியாவிலிருந்து இலங்கைக்குப் போன பயோனியர் ஃபோர்ஸ் படையின் அநேகரும் தமிழர்கள். அங்கு மலைகளைச் சரித்தும் காடுகளை அழித்தும் தார்ச்சாலைகள் மற்றும் ரயில்பாதைகளை அமைத்ததும் பாலங்கள், பாசனத்திட்டங்களை உருவாக்கியதும் இவர்கள்தான். 1824ல் அங்கு பிரிட்டிஷார் காபித்தோட்டங் களை அமைத்தனர். அது தொடர்பான வேலைகளுக்காக அந்தந்த பருவத்தில் தமிழகத் தொழிலாளர்களை அழைத்துப்போய் திருப்பியனுப் பினர். ஒருவகையான பெருங்கொள்ளை நோயினால் அங்கு காபி அழிந்ததும் பிரிட்டிஷார் தேயிலை, சின்கோனா, ரப்பர், தென்னை விளைவிப்புக்கு மாறினர்.

இவை தொடர் பராமரிப்பை கோருவதால் அங்கு நிரந்தரமாக தங்கியிருந்து உழைக்கும் விதமாக தொழிலாளர்கள் குடும்பங்களாக அழைத்துச் செல்லப்பட்டனர். இவர்கள்தான் இலங்கையின் இந்திய வம்சாவளித் தமிழர்கள். இவர்களில் சிறுபகுதியினர் ஊரில் வாழும் சாதியரில் அடிநிலையினர், பெருவீதமானோர் ஊரிலிருந்து ஒதுங்கி வாழும் சேரியர். தமிழ்ச்சமூகம் இவர்களுக்கு வழங்கியிருந்த இந்த இடம்தான் இவர்களை புலம்பெயர்த்திக் கொண்டு போவதற்கு ஏதுவாய் அமைந்தது. துண்டுச்சீட்டு மற்றும் கங்காணி முறையில் திரட்டப்பட்ட தொழிலாளர்கள் தனுஷ்கோடியிலிருந்து மன்னாருக்கும், தூத்துக்குடி யிலிருந்து கொழும்புக்கும் கடல் மார்க்கமாக அழைத்துச் செல்லப்பட்டனர்.

அங்கிருந்து அவர்கள் அதுகாறும் மனிதக்காலடியே பட்டிராத மலைக்காடுகளுக்கு நூற்றுக்கணக்கான மைல்கள் நடந்தனர். புறப்பட்டவர்களில் பாதிப்பேராவது கடலிலும் காட்டிலும் நோயிலும் செத்தழிந்தார்கள். லயன்வீடு எனப்படும் சிறுகொட்டிலே வசிப்பிடம். சூரியன் உதிப்பதிலி ருந்து அஸ்தமிக்கும் வரை வேலைநேரம். அவர்களது உற்பத்தியின் அளவைக் குறைத்தும் வாங்கும் தொகையைக் கூட்டியும் கள்ளக்கணக்கு எழுதப்பட்டதால் தீராது வளர்ந்தன கடனும்வட்டியும். முதலாளிகளுக்கும் கங்காணிகளுக்கும் சற்றும் குறையாமல் அட்டைகள் அவர்களது ரத்தம் குடித்தன. தப்பிப்போக முடியாதபடி முள்வேலி. தப்பியோடி சிக்கிக்கொண்டாலோ கொடிய தண்டனைகள்.

மனிதவுரிமை காக்கவே பிறப்பெடுத்தாற்போன்று பீற்றிக்கொள்கிற பிரிட்டிஷார் தொழிலாளர்களது மனவுறுதியைக் குலைப்பதற்காக நடத்திய சித்ரவதைகள் மனித மாண்புகளுக்குப் புறம் பானவை. இந்தக் கொடுமைகளுக்கு தாக்குப்பிடிக்கும் போராட்டத்திலேயே நூறாண்டுகளாக மூழ்கடிக்கப்பட்டிருந்த இந்தியத் தமிழர்களில் இந்தியாவின் திசையைக்கூட அறிந்திராதபுதிய தலைமுறையினர் உருவாகிவிட்டிருந் தனர். ஆனாலும் அவர்களை இலங்கைச் சமூகம் வெளியேதான் நிறுத்திவைத்திருந்தது. இலங்கையின் அரசுப் பணிகளில் ஓரளவு இந்தியர் வசமிருந்தது. இலங்கைச்சந்தையும் இந்திய வர்த்தகர்களின் ஆக்கிரமிப்பிலிருந்தது. தமிழகத்தின் வட்டிக்கடைக்காரர்களோ அதீதமான வட்டிக்கு கடன் கொடுத்து அதற்கீடாக சிங்களவர்களின் வருமானத்தையும் சொத்துக்களையும் அபகரித்துவந்தனர்.

சிங்களவர்களி டையே இந்திய எதிர்ப்பு மனோபாவம் உருத்திரள்வதற்கான காரணங்கள் இவையென்றா லும் அதற்கு வடிகாலாகச் சிக்கியவர்கள் அதிகாரமற்ற தோட்டத் தொழிலாளர்கள். முதலாம் உலகப்போருக்குப் பிந்தைய பொருளாதாரப் பெருமந்தத்தால் அங்கு ஏற்பட்டநெருக்கடிகளுக்கு இந்தியத் தொழிலாளர்க ளின் பெருக்கமே காரணம் என்கிற திசை திருப்பலும் இதற்கு உதவியது.கல்வி, சொத்து அடிப்படையிலிருந்த வாக்குரிமையை, தொடர்ந்து ஐந்தாண்டுகள் அங்குவசிக்கும் வயதுவந்தோர் அனைவருக்குமான தாக டொனமூர் கமிஷன் பரிந்துரைத்தது. தோட்டத்தொழிலாளர்கள் வாக்குரிமை பெறுவதற்கு வழிவகுத்தது என்கிற வகையில் இப்பரிந்துரை முன்பிருந்ததைவிட ஜனநாயகத்தன்மை கொண்டது.

ஆனால் ‘தோட்டக்காட் டான்களிடம் இலங்கையை சிக்கவைக்கும் இந்தப் பரிந்துரையை’ இலங்கை மேட்டுக் குடியினர் ஏற்காததால் தகுதிபெற்ற மூன்றுலட் சம் இந்தியத் தொழிலாளர்களில் 1,00,574 பேர் மட்டுமே வாக்குரிமை பெற்றனர். 1931 பொதுத்தேர்தலிலிருந்து பங்கெடுத்த இவர்களிடையே இடதுசாரி கட்சிகளின் செல்வாக்கை மட்டுப்படுத்தவும், பிரதிநிதி களைக் குறைக்கவும் இவர்களது வாக்குரி மையை பறிக்கும் முயற்சி முனைப்படைந்தது. 4.2.1948 அன்று சுதந்திரமடைந்த இலங்கையில் எதிரும்புதிருமாக எண்ணற்றகட்சிகள் இருந்தாலும் தோட்டத்தொழிலாளர் களை வெளியேற்றும் விசயத்தில் அவை ஒரே கட்சிதான்.

அங்கு நிறைவேற்றப்பட்ட குடியுரிமைச் சட்டம், இந்திய, பாகிஸ்தானிய வசிப்போர் (குடியுரிமை) சட்டம், பிரதிநிதித்துவச் சட்டம் ஆகியவை பெரும்பாலான தோட்டத்தொழிலாளர்களை நாடற்றவர்களாகவும் வாக்குரிமையற்றோராகவும் சட்டவிரோதக் குடியேறிகளாகவும் மாற்றிவிட்டன. இதன் தொடர்ச்சியில் உருவான நேரு - கொத்லாவல ஒப்பந்தப்படி (1954) குடியுரிமை கோரிய விண்ணப்பங்களோ சாரமற்றக் காரணங்களின் பேரில் இலங்கை அரசால் நிராகரிக்கப்பட்டன. இவர்களனைவரையும் இந்தியாவுக்கு திருப்பியனுப்பிவிடும் கெடுநோக்கத்தை சட்டப்பூர்வமாக நிறைவேற்றிக்கொள்ள இலங்கை அரசு தொடர்ந்து செய்துவந்த நச்சரிப்பில் ஸ்ரீமாவோ- சாஸ்திரி ஒப்பந்தம் உருவானது. யாரையும் கட்டாயப்படுத்தி இந்தியாவுக்கு திருப்பியனுப்பக்கூடாது என்கிற நிலைப்பாடு கொண்டிருந்த நேரு 1964ல் காலமானதையடுத்து இந்தியப் பிரதமராக லால் பகதூர் சாஸ்திரி பொறுப்பேற்றார்.

சீனாவுடனான எல்லைப்போருக்குப் பிறகு, அண்டை நாடுகளை தனக்குச் சாதகமாக திரட்டிக் கொள்ளும் தேவையும் இந்தியாவுக்கு ஏற்பட்டிருந்த காலமது. எனவே வம்சாவளித்தமிழர்களின் குடியுரிமை மீது ஓர் இறுதி முடிவுக்கு இந்தியாவை நெட்டித்தள்ள உகந்த தருணம் எனக் கணித்து அக்டோபர் 22 அன்று தில்லி வந்திறங்கினார் இலங்கைப் பிரதமர் ஸ்ரீமாவோ. இலங்கைத்தரப்பு உண்மையில் சிங்களத்தரப்பே. ஆனால் சாஸ்திரியும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஸ்வரன் சிங்கும்சம்பந்தப்பட்ட தோட்டத் தொழிலாளர் களையோ தமிழ்நாட்டின் தலைவர்களை யோ கூட்டிப்போகவில்லை, கலந்தாலோ சிக்கவுமில்லை. இந்தியக் குழுவில் சென்னையிலிருந்து முதல்வரது பிரதிநிதியாக பங்கெடுத்த ஒரே தமிழரான வி.ராமையா வாய் திறக்கவேயில்லை.

இலங்கையில் நாடற்றவர்களான 9,75,000 பேரில் 5.25 லட்சம் பேருக்கு இந்தியாவும், மூன்று லட்சம் பேருக்கு இலங்கையும் குடி யுரிமை வழங்குவது, மீதமுள்ள 1.5 லட்சம் பேரின் நிலையை பிற்பாடு முடிவெடுப்பது என்கிற ஒப்பந்தம் 1964 அக்டோபர் 30 அன்று கையெழுத்தானது. உயிரும் உணர்வும்மிக்க மனிதர்கள் வெறும் எண்களாக பங்கிடப்பட்டனர். (இந்த 1.5 லட்சம் பேரை இருநாடுகளும் சமமாக பங்கிட்டுக் கொள்ளும் ஸ்ரீமாவோ- இந்திரா ஒப்பந்தம் 1974ல் கையெழுத்தாகியது). 1967 முதல் அமலாகத் தொடங்கிய இந்த ஒப்பந்தம் அவர்களை இந்தியக் குடியுரிமை பெறுவோர், இலங்கை குடியுரிமை பெறுவோர், நாடற்றவர்கள் என மூக்கூறாகபிரித்து வீசியது.

அவர்கள் இலங்கையில் உழைத்து ஈட்டியவற்றை இழந்துவரச் செய்தது. 150 ஆண்டுகளாக தொடர்பற்றுப் போன தாயகத்திற்குத் திரும்பி அநாதைகளாக தவிக்கச் செய்தது. புதிய சூழலுக்குள் பொருந்தவியலாத உளவியல் சிக்கலுக்கும் ஆட்படுத்தியது. மறுவாழ்வுக்கான உதவித்தொகையையும் சுயதொழிலுக்கான கடனையும் பெறுவதற்கு மல்லுக்கட்டி மனவுறுதி குலைந்த அவர்களை மீண்டும் தோட்டத்தொழில் தேடி நீலகிரி, கொடைக்கானல், வால்பாறை, கர்நாடகா, கேரளா என்று அலைய வைத்தது. இலங்கையில் தமிழர்கள் என்கிற பாகுபாட்டுக்கு ஆளானவர்களை இங்கு சிலோன்காரர்கள் என்கிற பாகுபாட்டுக்கு ஆளாக்கியது.

ஒப்பந்தப்படியும், இனக்கலவரங்களால் பாதிக்கப்பட்டும் தாயகம் திரும்பிய அந்த தமிழர்களின் வாழ்க்கை அப்படியொன்றும் மெச்சத்தக்கதாக இல்லை. நரியூரிலிருந்து புலியூருக்கு வந்து சிக்கிக்கொண்டதாக அவர்கள் மருகிக்கிடக்கிறார்கள். நாடற்றோர் என்னும் அவலம் தீர்க்கப்பட்டிருந்தாலும் இருநாடுகளிலும் அவர்களை இரண்டாம்தர குடிமக்களாக நடத்துவது தொடர்கிறது. டாலரோ பவுண்ட்ஸோ இல்லாத- லேபர் டஸ்ட் என்கிற மட்டரகமான தூளில் தயாரித்த தேநீரை தருவதற்கு மட்டுமே சாத்தியப்பட்ட - பெரும்பாலும் தலித்துகளாகிய அந்தத் தமிழர்களுக்காக இங்கு குரலெழும்பாமல் இருப்பதில் அதிசயமென்ன?

நன்றி - தீக்கதிர்

சிறிமா - சாத்திரி ஒப்பந்தம்


சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தம் என்பது, இலங்கையில் நாடற்றவர்களாக இருந்த 975,000 இந்திய வம்சாவளித் தமிழர்களின் எதிர் காலம் தொடர்பாக, அப்போதைய இலங்கைப் பிரதமராக இருந்த சிறிமாவோ பண்டாரநாயக்காவுக்கும், இந்தியப் பிரதமரான லால் பகதூர் சாஸ்திரிக்கும் இடையில் 1964 ஆம் ஆண்டில் அக்டோபர் 30 இல் கையெழுத்தான ஒப்பந்தத்தைக் குறிக்கும். இந்த ஒப்பந்தத்தின்படி மேற் குறிப்பிட்டவர்களில் 525,000 பேரை இந்தியா ஏற்றுக்கொள்வதெனவும், 300,000 பேருக்கு இலங்கைக் குடியுரிமை வழங்குவதெனவும் முடிவானது. மீதி 150,000 பேர் விடுபட்டுப் போயினர். 1967 முதல் அமலாகத் தொடங்கிய இந்த ஒப்பந்தம் அம்மக்களை இந்தியக் குடியுரிமை பெறுவோர், இலங்கை குடியுரிமை பெறுவோர், நாடற்றவர்கள் என மூன்று கூறாகபிரித்தது.

பிரித்தானிய இலங்கை
இலங்கையைப் பிரித்தானியர் ஆண்ட காலத்தில், 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதியில் 1820 ஆம் ஆண்டுக்கும் 1840 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப் பகுதியில், இலட்சக்கணக்கான இந்தியத் தமிழர் தமிழ் நாட்டிலிருந்து ஒப்பந்தத் தொழிலாளர்களாக இலங்கைக்குக் கூட்டிவரப்பட்டு இலங்கையின் மலையகப் பகுதிகளில் தொடங்கப்பட்ட கோப்பி, தேயிலை, இறப்பர்த் தோட்டங்களில் பணி புரிவதற்காக அமர்த்தப்பட்டனர். கடுமையான சூழ்நிலைகளில் வேலை வாங்கப்பட்ட இவர்களில் உழைப்பினால் உருவான பெருந்தோட்டங்கள் இலங்கையின் வெளிநாட்டு வருமானத்தின் பெரும்பகுதியை ஈட்டிக்கொடுத்தன. ஆனால் அவர்களின் சமூக பொருளாதார சூழ்நிலை கேள்விக்குறியாகவே இருந்தது .டொனமூர் அரசியலமைப்பு தோட்டத்தொழிலாளர்கள் வாக்குரிமை பெறுவதற்கு வழிவகுத்தது . ஆனால் தகுதிபெற்ற மூன்று லட்சம் தொழிலாளர்களில் 1,00,574 பேர் மட்டுமே வாக்குரிமை பெற்றனர். 1931 இலங்கை அரசாங்க சபைத் தேர்தலில் பங்கெடுத்த இவர்களிடையே இடதுசாரி கட்சிகளின் செல்வாக்கை மட்டுப்படுத்தவும், பிரதிநிதி களைக் குறைக்கவும் இவர்களது வாக்குரிமையை பறிக்கும் முயற்சியாக இது பார்க்கப்பட்டது.

இலங்கை
பிரித்தானியர் இலங்கையை விட்டு வெளியேறிய போது, சிங்களத்தேசிய வாதிகள், மலையகத் தமிழர்களை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர். இவர்களது நெருக்குதல்களினால் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கடுமையான எதிர்ப்புக்கு மத்தியில் 1948 ஆம் ஆண்டு நவம்பர் 15 ஆம் தேதி இலங்கைக் குடியுரிமைச் சட்டம் இல. 18 நிறைவேற்றப்பட்டது. இச் சட்டத்தின் படி 1948 ஆம் ஆண்டு நவம்பர் 15 ஆம் திகதிக்கு முன் இலங்கையில் பிறந்திருப்பதுடன் அவருடைய இரண்டு தலைமுறையினரும் இலங்கையில் பிறந்திருந்தால் மட்டுமே இலங்கைக் குடியுரிமைக்கு ஒருவர் உரித்துடையவர் என்று வரையறுக்கப்பட்டது. இது மலையகத் தமிழ் மக்களுக்குப் பாதகமாக அமைந்தது. இவர்களில் பலர் தமக்கு முன் இரண்டு தலைமுறையினர் இலங்கையில் பிறந்திருந்தாலும் கூட அதை நிரூபிப்பதற்கான ஆவணங்கள் அவர்களிடம் இருக்கவில்லை. இதன் காரணமாகச் சுமார் 7 இலட்சம் மலையகத் தமிழர் நாடற்றவர் என்னும் நிலைக்குத் தள்ளப்பட்டதுடன், 1949 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்கள் திருத்தச் சட்டம் இல. 48 இன் மூலம் அவர்களது வாக்குரிமையும் பறிக்கப்பட்டது.

நாடற்றவர்கள் பிரச்சினை தொடர்பாக 1949 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட இந்திய, பாகிஸ்தானியர் குடியுரிமைச் சட்டமும், 1954 ஆம் ஆண்டில் கையெழுத்தான நேரு - கொத்தலாவலை ஒப்பந்தமும் இப் பிரச்சினையைத் தீர்ப்பதில் அதிகம் பயன்படவில்லை. இலங்கைக் குடியுரிமைக்குத் தகுதியற்றவர்கள் எல்லோரையும் இந்தியா ஏற்றுக்கொள்ள வேண்டும் என்னும் இலங்கையின் நிலைப்பாட்டை இந்தியா ஏற்றுக்கொள்ளவில்லை. இந்தியக் குடியுரிமை கோருபவர்களை மட்டுமே ஏற்றுக்கொள்ள இந்தியா சம்மதித்தது. நாடற்றவர்களில் பெரும்பாலானோர் இலங்கையிலேயே வாழ விரும்பியதால் இப் பிரச்சினை தீராமலேயே இருந்தது. இந்தப் பின்னணியிலேயே சிறீமா - சாஸ்திரி ஒப்பந்தம் ஏற்பட்டது.

இந்தியாவில் நிலவிய சூழல்
இலங்கையில் இருந்து யாரையும் கட்டாயப்படுத்தி இந்தியாவுக்கு திருப்பியனுப்பக்கூடாது என்கிற நிலைப்பாடு கொண்டிருந்த நேரு 1964ல் காலமானதையடுத்து இந்தியப் பிரதமராக லால் பகதூர் சாஸ்திரி பொறுப்பேற்றார். சீனாவுடனான எல்லைப்போருக்குப் பிறகு, அண்டை நாடுகளை தனக்குச் சாதகமாக திரட்டிக் கொள்ளும் தேவையும் இந்தியாவுக்கு ஏற்பட்டிருந்தது.

ஒப்பந்தம் குறித்த கருத்துக்கள்
இலங்கையும், இந்தியாவும் தமது முன்னைய நிலைப்பாடுகளை ஓரளவுக்கு விட்டுக்கொடுத்து ஒரு இணக்கப்பாட்டுக்கு வந்தது சிறீமா - சாஸ்திரி ஒப்பந்தத்தின் ராஜதந்திர வெற்றியாகச் சிலரால் கருதப்பட்டது. ஆனாலும், தமிழர் தரப்பினர் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்தியக் குழுவில் சென்னையிலிருந்து முதல்வரது பிரதிநிதியாக பங்கெடுத்த ஒரே தமிழரான வி.ராமையா எவ்வித கருத்துகளையும் முன்வைக்கவில்லை.[1] 1964 ஆம் ஆண்டில் இது குறித்துப் பேசிய இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவர் எஸ். ஜே. வி. செல்வநாயகம், இதை அதிகார அரசியலுக்காக அரை மில்லியன் மக்களைப் பகடைக் காய்களாகப் பயன்படுத்திக் கொண்டது பன்னாட்டு அரசியலில் முன்னெப்பொழுதும் இல்லாத நடவடிக்கை என விபரித்தார்.

ஒப்பந்த அம்சங்கள்
இலங்கைக் குடியினராகவோ இந்தியக் குடியினராகவோ ஏற்றுக்கொள்ளப்படாமல் இலங்கையில் உள்ள அனைவரும் இலங்கையின் அல்லது இந்தியாவின் குடிமக்கள் ஆகவேண்டும் என்பதே இவ்வொப்பந்தத்தின் வெளிப்படுத்தப்பட்ட நோக்கம்.

இவ்வாறானவர்களின் எண்ணிக்கை தற்போதைய நிலையில் 975,000 ஆகும். இது, சட்டவிரோதமாகக் குடியேறியவர்களையும், இந்தியக் கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களையும் உள்ளடக்கவில்லை.

இவர்களில் 300,000 பேருக்கு அவர்களுடைய இயற்கையான அதிகரிப்பையும் சேர்த்து, இலங்கை அரசாங்கத்தால் இலங்கைக் குடியுரிமை வழங்கப்படும்; 525,000 பேரையும், அவர்களுடைய இயற்கையான அதிகரிப்பையும் சேர்த்து, இந்தியாவுக்குத் திருப்பி அனுப்புவதை இந்திய அரசு ஏற்றுக்கொள்ளும். இந்திய அரசு இவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கும்.
மீதமாக உள்ள 150,000 பேர் தொடர்பாக இரு அரசாங்கங்களாலும் இன்னொரு ஒப்பந்தம் செய்யவேண்டும்.

திருப்பி அனுப்பப்பட உள்ளவர்கள், 15 ஆண்டு காலத்துள், கூடிய வரையில் சமநிலை ஒழுங்குக்கு உட்பட்ட வகையில் அனுப்பப்படுவதை இந்திய அரசு ஏற்கும்.

ஒப்பந்த நிறைவேற்றம்
இந்த ஒப்பந்தம் மற்றும் இதன் பின்னர் 1974 இல் நிறைவேற்றப்பட்ட சிறீமா - காந்தி ஒப்பந்தங்களின் அடிப்படையில் 506,000 பேர் இந்தியக் குடியுரிமைக்கும், 470,000 பேர் இலங்கைக் குடியுரிமைக்கும் விண்ணப்பித்தனர். விண்ணப்பித்தவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்குவதில் மிகுந்த தாமதம் நிலவியது. ஆனாலும், 1982 இல், 86,000 விண்ணப்பங்கள் இந்திய உயர்தானிகரகத்தில் முடிவு எதுவும் இன்றியும், இந்தியக் கடவுச் சீட்டு வழங்கியோரில் 90,000 பேர் இன்னும் இலங்கையில் தங்கியிருந்த நிலையிலும், நிறைவேற்றுக்காலம் கழிந்துவிட்டதால், இவ்வொப்பந்தங்கள் இனிச் செல்லுபடியாகாது என இந்தியா அறிவித்தது. 1984 இல் இலங்கையில் இன முரண்பாடுகள் உச்சக்கட்டத்தை அடைந்த நிலையில், தலைமன்னார் - இராமேஸ்வரம் படகுச் சேவையும் நிறுத்தப்பட திருப்பியனுப்பும் நடவடிக்கைகள் முற்றாகவே நிறுத்தப்பட்டன. தமிழ்நாட்டுக்கு வந்த அவர்களுக்கு தினப்படி 39 காசு. விருப்பப்படி வெளியூருக்கு வேலைக்குப் போக முடியாது. தினம் காலை, மாலை ஆஜர்பட்டியல் எடுக்கிறார்கள்.

தனித்தனி வீடுகள் அமைத்து கொடுப்பதுதான், இதற்கான நிரந்தர தீர்வாக அமையும் - ம.ம.மு செயலாளர் லோறன்ஸ்


பதுளை மாவட்டத்தில் கொஸ்லாந்த பகுதியில் மீரியாபெத்த தோட்டத்தில் 300க்கும் மேற்பட்ட, தோட்டத் தொழிலாளர் குடும்பத்தை சேர்ந்தவர்கள் மண்சரிவு அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டு, உயிரிழந்துள்ளமை மிகவும் மனதை உருக்கின்ற சோகமான நிகழ்வு என மலையக மக்கள் முன்னணி செயலாளர் நாயகம் அ.லோறன்ஸ் தனது ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தனது அறிக்கையில், இந்த மண்சரிவு அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள தோட்ட தொழிலாளர்களுக்கும், அவர்களது குடும்பங்களுக்கும் பாதிக்கப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை மலையக மக்கள் முன்னணி, மலையக தொழிலாளர் முன்னணி சார்பாக தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளதோடு, அரசாங்கமும், சம்பந்தப்பட்ட தோட்ட நிருவாகமும் பாதிக்கப்பட்ட, குடும்பங்களுக்கு தேவையான சகல நடவடிக்கைகளையும் காலம் தாழ்த்தாது விரைவாக மேற்கொள்ளப்பட வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.

தோட்டத் தொழிலாளர்கள் தொடர்ச்சியான லயன் அறைகளில் குடியிருப்பதால், இவ்விதமான வெள்ளம், மண்சரிவு, இயற்கை அனர்த்தங்களில் பாதிக்கப்படும் போது, பொதுவாக ஏற்படும் பாதிப்புக்களை விட பன்மடங்கு அதிகமாகும். தனித்தனி வீடுகளில் வாழும் போது அனர்த்தங்கள் ஏற்படும் பட்சத்தில், பாதிப்புக்கள் மிகக் குறைவாகவே இருக்கும். இவ்விதமான லயன் அறைகளில் 20, 30 குடும்பங்கள் வாழும் போது, அருகருகே லயன்கள் காணப்படும் போது, அதனால் ஏற்படும் பாதிப்புக்கள் பாராதுாரமானதாகும்.

கொஸ்லாந்த மீரியபெத்த தோட்டத்தை பொறுத்தவரையில், ஒரு மலைப்பகுதி முழுமையாக பாதிக்கப்பட்டிருப்பதால், ஒரே நாளில் ஒரே நேரத்தில், இந்த நாட்டுக்கு உழைத்த பல நுாற்றுக்கணக்கான தொழிலாளர்களை பரிகொடுக்க வேண்டிய மிக பரிதாபகரமான நிலைமையை அந்த தோட்டத்தில், பாதிக்கப்பட்டவர்கள் எதிர்நோக்க வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளதாக ம.ம.மு செயலாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே, இவ்விதம் அபாயகரமான மலைப்பகுதிகளில் அதுவும் மண்சரிவு அபாயமுள்ள மலைச்சரிவுகளில் காணப்படும், லயன்களை மாற்றி அவர்களுக்கு வாழ்வதற்கு பொறுத்தமான இடங்களில், லயன் முறைக்கு பதிலாக தனித்தனி வீடுகள் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்விதம் செய்தாலும் கூட, மாண்டவர்கள் மீளப் போவதில்லை. ஆனால் எதிர்காலத்திலாவது இவ்விதமான மண்சரிவு அபாயமுள்ள பகுதிகளில் உள்ள, லயன்களை மாற்றி பொறுத்தமான இடத்தில், தனித்தனி வீடுகள் அமைத்து கொடுப்பதுதான், இதற்கான நிரந்தர தீர்வாக அமையுமென அவர் மேலும் மீரியாபெத்த மண்சரி அனர்த்தம் பற்றி கருத்து தெரிவிக்கும் போது குறிப்பிட்டுள்ளார்.

மண்சரிவு காவுக் கொண்ட தமிழர்கள் ..! சண்முகநாதன் சபேசன்


யமனே நீ காவுகொண்டது மீண்டும் தமிழனையோ
வேறு யாரும் உன் கையுக்கு 
எட்டவில்லையோ !

எட்டிப்பிடிப்பதற்கு ஈழத்தமிழன்தான்
கிடைத்தானோ!!
மனித இனம் கூடுகிறது என்று
மலையகத்தில் கை வைத்தாயோ!!
கெட்ட குடியே கெடும் என்றால்
எம் குடி கெடுப்பதை விட்டு
வேறிடம் போகாயோ!!

மழையாலும் வெயிலாலும் மெதுவாக
சாகும் எம்மை
மலைச்சரிவாலும் வெள்ளத்தாலும்
சட்டென்று சாய்க்கிறியே!!

சாவென்றால் சாதரணமா
பட்டென்று முடிப்பதற்கு்
நாம் என்ன கிள்ளுக்கீரையா
எல்லோரும் கிள்ளி எடுப்பதற்கு்
எம்மை இத்தோடு விட்டுவிடு
உம்மை மன்றாடிக் கேட்கிறோம்!!

ஹல்துமுல்ல மண்சரிவில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கற்றல் சாதனங்களை வழங்க இலங்கை கல்விச் சமூக சம்மேளனம் நடவடிக்கை....!



பதுளை ஹல்துமுல்ல  கொஸ்லந்த மிரியபெத்த எனும் இடத்தில் நடைப்பெற்ற இயற்கை அனர்த்ததில்- மண்சரிவில் 300க்கும் அதிகமானவர்கள் சிக்குண்டிருப்பதாக அறிய முடிகின்றது. இதுவரை,  உயிரிழந்த 10 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த விபத்தில் இருந்து தப்பியிருப்பவர்களில் மாணவர்களும் அடங்குவர். பாதிக்கப்பட்டவர்களின் சுக துக்கங்களில் எம்மால் முடிந்ததை செய்வதே மனித நாகரிகமாகும் என்றவகையில் சகலவற்றையும் இழந்த நிலையிருக்கும் அவர்களுக்காக குறைந்த பட்சம் கற்றல் சாதனங்களையாவது வழங்க
முற்படுவது அவசியமானதாகும். இலங்கை கல்விச் சமூக சம்மேளனம் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதற்கான பொருட்களையும் நன்கொடைகளையும் வழங்க விரும்புவோர் இம்வமைப்பின் நலன்புரி குழுத் தலைவர் என். சந்திரனிடம் (தொலைபேசி இல. 0777518974) ஒப்படைக்கவும் அல்லது  ஹட்டனில் இலக்கம் 18, ஹட்டன் ஹவுஸ் வீதியில் அமைந்துள்ள அறிவொளி கல்வியத்தில் ஒப்படைக்குமாறு சம்மேளனத்தில் தலைவர் லெனின் மதிவானம் அவர்களும் பொதுச் செயலாளர் ஆர். சங்கரமணிவண்ணன் அவர்களும் கேட்டுக் கொள்கின்றனர்.

அழுத மலை..! - மல்லியப்புசந்தி திலகர்


அங்கோர் கூட்டம் தன்னில்
அன்றொருநாள் பேசுகையில்
 ‘ஹல்துமுல்லைஎன்றாலும்
அழுத மலைஇது என்றேன்..
‘’கூனியடிச்ச மலை
கோப்பிக் கன்னு போட்ட மலை
அண்ணனை தோத்த மலை
அந்தா தெரியுது பார்…’’
என்று அழுதமலை இதுவென்றேன்.
இன்று அழுதழுதே எழுதுகின்றேன்….

இன்னல் செய்ய பலருண்டு
இன்செய்ய யாருமில்லை
வன் செயல்கள் பல கண்டு
நாம் வாடிய நாள் பலவுண்டு

செயற் கைதானே எங்களை
சீண்டி வந்தது
இயற்கையே நீயுமா இன்று
ஏம்மீது விழுந்தது..

வன்முறைகளலால் தானே
பன்முறைகள் காவுகொண்டோம்
இம்முறை  இயற்கையும் கூட
எங்களை விட்டுவைக்கவில்லையே..
ஏனிந்த விந்தை
எதனால் இந்த சோதனை

மலையே…!
உன்னை உரமாக்கி, உரமாக்கி
உயர்த்திய அண்ணனை..


உன்மீது வலம் வந்தே
நிறம் மாறிய எங்கள் அன்னையை..

அள்ளிக் கொண்டு போக
அத்தனை சீற்றமென்ன..?
அள்ளிக் கொன்;று போக
அத்தனை சீற்றமென்ன..?


என்தம்பிகள்
தும்பிகளாய் பறந்த வெளிகளை..
என் தங்கைகள்
மணல்வீடு கட்டி மேடுகளை..

உன் மண்மேடு கொண்டு
கண் மூட செய்த கயவனா நீ…?

மூடிய மலைகளுக்குள்
முணங்கள் கேட்டாயோ
விம்மும் நெஞ்சங்களின்
விசும்பல் கேட்டாயோ

இறந்தபின் எரிப்பதுதான்
எங்கள் மரபென்றபோதும்
சுடுகாட்டை
இடுகாட்டாக்கி
எங்கள் எலும்புகளை
புதைத்து வைத்தோம்

உழைத்துக் களைத்த
பலநூறு உடம்புகளை
இருநூறு வருடங்களை
எச்சங்களாய் சேர்த்து வைத்தோம்..

அத்தனையும் போதாதென்றா
அள்ளிக் கொண்டுபோனாய்.
தாரை..தாரையாய் - எங்களை
தள்ளிக் கொன்று போனாய்..

ஏழு மணியானதும்….
பிரட்டுத்தப்பு சத்தம் என்று
புறப்பட்டுப் போகும்
என் அண்ணனை
புரட்டிப்போட்ட கோபம் என்ன…?

ஏழு மணியானதும்….
சங்குசத்தம் என்று..- உனை
நோக்கி ஓடிவரும்
எங்கள் அன்னையர்க்கு
நீயே சங்காகி
நீர் ஊற்றி போனதென்ன

ஏழு மணியானதும்
இஸ்கூல்மணிச்சத்தம் என்று
என் தம்பி, தங்கை
எழுந்திருப்பான்….
இன்று ஹெலி கோப்டர்
சத்தம் என்று
எழும்பி வந்தவர்க்கு நீ
எமனாகிப் போனதென்ன..?

ஏழு மணிதானே
எங்களை எட்டுத்திக்கும்
அனுப்பிவைக்கும் ..!
-இன்று
ஏழரைச் சனியாகி எம்மை
அள்ளிக்கொண்டுப் போனதென்ன..?

உன்னை மிதித்தேறி
உழைத்தது தவிர
உரம் கொண்ட மேனி கொண்டு
உன்னை உழுதது தவிர..

அவர் செய்த காயமென்ன - நீ
அவர்களை அள்ளிய மாயமென்ன?

மண்வெட்டி தோள் கொண்டு
மலை மண்ணை வெட்டியது
உன்னைப்
பண்;படுத்தத்தானே நீ
அவர்களை
புண்படுத்தி போனதேன்ன?

மலையே !
யாரும் அடித்தால்
ஓடிவந்தோம் உன்னிடம் - இன்று
நீPயே எட்டி உதைத்தால்
நாங்கள் ஓடுவது யாரிடம்…?

மீறிய பெத்தையில் - எல்லை
மீறிய இயற்கையே
எழுதி வை..!
இதுவும் என் வரிதான்:

மேலே குந்தும் மலை வீழ்வேன் என
எச்சரித்து நின்றபோதும்
மேல் கொத்(து)மலை எங்களை
குடைந்துகொண்டு சென்றபோதும்
இந்த மண்ணிலேயே மாள்வோம்
இந்த மண்ணிலேயே மீள்வோம்;’


இது
மடகொம்பரைக்கு மட்டுமல்ல
மண்மூடிய
மீறியபெத்தைக்கும் எட்டும்…! கிட்டும்.!

மண் அள்ளிப் போட்டுத்தானே
அஞ்சலி செய்வோம்
மண்ணே அள்ளிப்போட்டால்
மானுடர் நாம் என்ன செய்வோம்..?

மண்மூடி
கண்மூடிய என்
மலைத் தேச மாந்தருக்கு
சீனத் தேசத்தில் இருந்து
செய்தேன் செவ்வணக்கம்!!

(கண்ணீர் சிந்திய காலை குவாங்சோ (சீனா) 30-10-2014)

பதுளையில் பாரிய மண்சரிவு 400 பேர் காணவில்லை.. பல சடலங்கள் மீட்பு


பதுளையில் பாரிய மண்சரிவு இடம்பெற்றுள்ளதாகவும் இதில் பலர் கொல்லப்பட்டிருக்கலாம் என அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது. 
பெருந்தோட்ட தமிழ் மக்கள் அதிகமாக வாழும் கொஸ்லந்த மீரியாவத்த என்னும் இடத்தில் இன்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சிக்குண்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.

மீட்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் ஒரு பகுதியில் மண்சரிவு தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சுமார் நான்கு லயன்கள் முற்றாக மண் சரிவினால் மூடப்பட்டுள்ளது.

மண் சரிவில் சிக்குண்டவர்களில் பலர் உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.


இதுவரை பத்து சடலங்கள் மீட்பு

பதுளை ஹல்துமுல்ல கொஸ்வத்த மிரியாபெத்த என்னும் இடத்தில் இடம்பெற்ற மண் சரிவில் இதுவரை,  உயிரிழந்த 10 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

உயிரிழந்தவர்களின் ஆள் அடையாள விபரங்கள் வெளியிடப்படவில்லை. சடலங்கள் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பெரும் எண்ணிக்கையிலான பெருந்தோட்டத் தொழிலாளர்கள் இந்த சம்பவத்தில் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகின்றது.

இராணுவத்தினரும் பொலிஸாரும் தொடர்ந்தும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்துங்கள்! ஜனாதிபதி உத்தரவு

பதுளையில் மண் சரிவில் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.

மேலும் அவசர கால நடவடிக்கை ஒழுங்கு விதிகளின் பிரகாரம், அப்பகுதி பேரிடர் முகாமைத்துவ அதிகாரியை மீட்புப் பணிகளுக்கான தலைமை அதிகாரியாக செயற்படுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் பிரதேசத்தின் பொலிஸ், இராணுவம் மற்றும் அனைத்து அரச அலுவலகங்களும் அவரது பணிப்புரையின் பிரகாரம் செயற்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே மண் சரிவில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் நடவடிக்கையில் இராணுவ கமாண்டோக்கள் தற்போது ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி பகுதிகளில் நிலைகொண்டிருந்த இராணுவத்தின் விசேட கமாண்டோ படைப்பிரிவின் இரண்டு பட்டாலியன்கள் விசேட ஹெலிகொப்டர்கள் மூலமாக பதுளைக்குத் தருவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.




ஹல்துமுல்ல மண்சரிவில் 250 பேரைக் காணவில்லை

பதுளை ஹல்துமுல்ல மண்சரிவில் 250 பேரைக் காணவில்லை என அனர்த்த முகாமைத்துவ நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஹல்துமுல்ல கொஸ்லந்த மீரியாபெத்த என்னும் இடத்தில் பெரும் எண்ணிக்கையிலான பெருந்தோட்டத் தொழிலாளர்களின் லயன் வீடுகள் மண் சரிவில் மூழ்கியுள்ளன.



இதுவரையில் நான்கு பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

மண் சரிவில் புதையுண்ட பலர் உயிரிழந்திருக்கக் கூடும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

மீட்புப் பணிகளுக்காக இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் அழைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிறுவனம் தெரிவித்துள்ளது.

மண்ணில் புதையுண்டவர்களின் எண்ணிக்கைகள் வெளியிடப்படவில்லை.








நன்றி : லங்காஸ்ரீ - தினக்குரல்

தேயிலை : பெருந்தோட்டங்களின் வீழ்ச்சியும், சிறு தோட்டங்களின் வளர்ச்சியும் - கலாநிதி ஏ.எஸ். சந்திரபோஸ்


இலங்கையின் பொருளாதாரத்தில் தேயிலையின் உற்பத்தியும் ஏற்றுமதி வருமானமும் பெருமளவு செல்வாக்கினை கொண்டிருந்தாலும், அவற்றில் பெரும்பாலான பங்களிப்பினை இப்போது சிறு தோட்டங்களே செய்கின்றன. சிறு தோட்டங்களின் உற்பத்தியாகும் தேயிலை நாட்டில் வருமானத்திற்கு போதுமானதென இப்போது உணரப்பட்டுள்ளது. சிறு தோட்டங்கள் பெருமளவில் இலங்கையில் தாழ்நிலப் பகுதிகளில் பரந்தளவில் வளர்ச்சி பெற்றுள்ளதன் காரணமாக சூழல் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் பெருமளவில் இல்லை என்று உணரப்படுகின்றது.

ஆனால், சரிவுமிக்க மலைப்பாங்கான பகுதிகளில் கடந்த 140 வருடங்களாக மேற்கொள்ளப்பட்டு வரும் தேயிலைச் செய்கை பெருமளவில் பெருந்தோட்டங்களாக கம்பனிகளின் நிர்வாகத்தின் கீழ் காணப்படும் தோட்டங்கள் சூழல் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலானதென அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன் இதனைப் பின்னணியாகக் கொண்டு எதிர்கால பொருளாதாரத் திட்டங்களும் வகுக்கப்பட்டுள்ளன.

2030ஆம் ஆண்டில் இலங்கை எவ்வாறு இருக்க வேண்டுமென்று அரசாங் கத்தின் தேசிய பௌதீக திட்டத்தில் மலையகப்பகுதிகளில் தேயிலை வளர் ப்பு என்பது மிகச் சிறிய பரப்பில் பாதுகாப்பான சூழலில் மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டதாகக் காணப்படும் என்பதை யாவரும் அறிவர்.

இந்நிலையில் 1992இல் இலங்கையில் குறிப்பாக, மத்திய மலை நாட்டுப் பகுதி யில் பரந்துள்ள தேயிலைப் பெருந்தோட்டங்களை பொறுப்பேற்றுக் கொண்ட பெருந்தோட்டக் கம்பனிகளின் இப்போதைய நிலைவரங்கள் என்ன? பெருந்தோட்டங்கள் என்னென்ன வகையில் வீழ்ச்சியடைந்தன என்பவற்றினை அவதானிப்பதும், பெருந்தோட்டங்களின் உற்பத்திக்குப் பதிலீடாக வளர்ந்து வருகின்ற சிறு தோட்டங்களின் இன்றைய நிலைமையை பார்ப்பதும் இக்கட்டுரையின் பிரதான இலக்காகும்.

முதலில் கம்பனிகள் கைவசம் காணப்பட்ட தேயிலைக் காணிகளில் ஏற்பட்ட மாற்றங்களை அவதானிப்போம்.

1992இல் பெருந்தோட்டகளை கம்பனிகள் கையேற்றபோது தேயிலை, இறப்பர் உட்பட சுமார் 160,000 ஹெக்டேயர்களை கைவசப்படுத்தினர். இதன்போது சிறுதோட்டங்களாக சுமார் 68,000 ஹெக்டேயர்கள் மட்டுமே காணப்பட்டன. ஆனால், இப்போது 20 வருடங்களின் பின்னர் கம்பனிகளிடம் இருப்பதுவோ சுமார் 1,23,000 ஹெக்டேயர் காணிகளாகும். இதில் தேயிலை செய்கை மேற்கொள்ளும் காணியின் பரப்பு சுமார் 86,000 ஹெக்டேயர்களாகும். இறப்பர் காணியின் அளவு 47,000 ஹெக்டேயர் காணிகளாகவும் காணப்படுகின்றன.

ஒப்பீட்டளவில் 1992ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது கம்பனிகளின் தேயிலை செய்கைக்காக பயன்படுத்தும் நிலம் சுமார் 20 வீதத்தால் வீழ்ச்சியுற்று இப்போது 86,000 ஹெக்டேயர்களாக காணப்படுகிறது.

2005 – 2011 இடைப்பட்ட காலப் பகுதியில் சுமார் 6 வருடங்களில் 10,000 ஹெக்டேயர் காணிகளை பெருந்தோட்ட கம்பனிகள் இழந்துள்ளன. 2011ஆம் ஆண்டு தகவல்களின்படி 23 கம்பனிகளும் 86,000 ஹெக்டேயர்களை தமது கை வசம் வைத்திருப்பினும் சுமார் 71,000 ஹெக்டேயர்களில் மட்டுமே பயிர் செய்யப்படுகின்றன. இதைவிட 1992ஆம் ஆண்டளவில் எல்கடுவ பிளான்டேசன் லிமிடட், 'ஜனவசம' மற்றும் அரச, பெருந்தோட்ட யாக்கம் போன்றவற்றிற்கு 14,000 ஹெக்டேயர் காணிகள் வழங்கப்பட்டபோதும் அதன் பரப்பளவு 35 வீதமாக வீழ்ச்சியடைந்து. இப்போது சுமார் 9,000 ஹெக்டேயர் காணிகள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன.

இவ்வாறு கம்பனிகளால் கைவிடப்பட்ட காணிகள் வேறு தேவைகளுக்குப் பயன்படுத்தப்படலாம். குறிப்பாக அண்மையில் ஏற்பட்ட இறப்பர் கைத்தொழில் வளர்ச்சி காரணமாக பொருத்தமான இடங்களில் இறப்பர் செய்கையும் விஸ்தரிக்கப்பட்டது. ஆனாலும் கம்பனிகள் இறப்பர் செய்கையை நிறுத்தியதால் சடுதியான வீழ்ச்சியை கண்டது. உதாரணமாக 2005 இல் 58,900 ஹெக்டேயர் காணிகளில் கம்பனிகள் இறப்பர் செய்கையை மேற்கொண்டன. ஆனால் இப்போது அப்பரப்பு 47,000 ஹெக்டேயராக சுமார் 18வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.

பெருந்தோட்டக் கம்பனிகள் காணி கள் வருடாந்தம் சராசரியாக 1,650 ஹெக்டேயர் (2005 – 2011) வீழ்ச்சியடைந்து செல்கின்றன. இவ்வாறான நிலைவரம் நீடிக்குமாயின் அடுத்து வரும் 30 ஆண்டுகளில் சுமார் 50,000 ஹெக்டேயர் காணிகள் பெருந்தோட்ட செய்கையில் இருந்து நீக்கப்பட்டு விடும்.

சிறு தோட்டங்களின் நிலை மற்றுமொரு வகையில் வளர்ச்சியடைந்த வண்ணம் உள்ளன. சிறு தோட்டங்கள் பெருமளவில் இரத்தினபுரி, களுத்துறை, காலி, மாத்தளை மாவட்டங்களில் செறிவாகக் காணப்படுகின்றன. சுமார் 120,000 ஹெக்டேயர் காணிகளில் தேயிலை மேற்கொள்ளப்படுகிறது.

இப்பயிர்ச் செய்கையில் ஈடுபடுபர்வர்களின் எண்ணிக்கை இப்போது 400,000 பேராக காணப்படுகிறது. உண்மையில் 1995இல் இலங்கையில் சிறு தோட்டங்களில் உடைமையாக சுமார் 82,000 ஹெக்டேயர் காணிகளே காணப்பட்டன. சராசரியாக வருடாந்தம் சுமார் 2,300 ஹெக்டேயர் காணிகளாக விஸ்தரிக்கப்பட்ட தேயிலை சிற்றுடைமைகள் இன்று மொத்த உற்பத்தியில் 70 வீதத்தினை பங்களிப்பு செய்வதுடன் மொத்த நிலப்பரப்பில் 58 வீதமான பரப்பில் தேயிலைச் செய்கை மேற்கொள்ளப்படுவதையும் காணலாம்.

சிறு தோட்டங்கள், காணிகள் மட்டுமல்லாது உற்பத்தியிலும் பெருமளவு பங்களிப்பினை மேற்கொள்கின்றன. 1990 களில் சுமார் 113 மில்லியன் கிலோகிராமாக உற்பத்தி செய்யப்பட்ட தேயிலையின் அளவு இப்போது (2012) சுமார் 230 மில்லியன் கிலோகிராமாக, 117 மில்லியன் கிலோ கிராமினால் அவர்களின் உற்பத்தி அதிகரித்துள்ளது.

1990களில் ஒப்பிடும் போது சிறு தோட்டங்களில் உற்பத்தி வளர்ச்சி சுமார் 70% ஆகும். ஆனால் கம்பனி தோட்டங்களோ 1995இல் 98 மில்லியன்களிலிருந்து இப்போது (2012இல்) 94 மில்லியன் கிராமாகத் தமது உற்பத்தியை மட்டுப்படுத்திக் கொண்டுள்ளதையும் காணலாம்.

தொழிலாளர்களின் எண்ணிக்கையை பொறுத்தவரையில் 1995களில் சுமார் 300,000பேர் பதிவு செய்துக் கொண்ட தொழிலாளர்கள் கம்பனி தோட்டங்க ளில் காணப்பட்டனர். இப்போது அவர்களில் எண்ணிக்கை 20,5000 பேராக, அதாவது, 33 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. பெருமளவிலான பழைய தேயிலைச் செடிகளைக் கொண்டிருக் கும் கம்பனி தோட்டங்களை வேகமாக சுருங்கிக் கொண்டுவருவதையும் அங்கு ள்ள தொழிலாளர்கள் கணிசமாக வெளி யேறுவதும் தோட்டங்களில் இப்போது நிலைவரமாகும்.

மறுபுறம் சிறுதோட்டங்கள் வளர்ச்சி, இலங்கையின் தேயிலையை நின்று நிலை த்திருக்ககூடிய பொருளாதாரமாக மாற் றியமைத்துள்ளதாகக் காணப்படுகிறது. உண்மை யில் இலங்கையின் பொருளாதா ரத்தில் தேயிலை நிலைத்திருக்கும். ஆனால், மலை நாட்டின் இரம்மியமான குளிர், இதமான காற்றின் சுகபோகத்தில் தேயிலை இருக்கப்போவது இன்றும் சில வருடங்களுக்கு மட்டுமே ஆகும்.

குளிரில், குறைந்த வருமானத்தில், உடைந்த லயக்காமராக்களில் இதமான வாழ்க்கையை மலையக மக்கள் என்ற வரையறையில் தொடர்ந்து வாழ்வதற்கு தேசிய பொருளாதார திட்டத்தில் போது மான ஒழுங்குகள் இல்லை என்பது வேதனைமிக்க விடயமாகும்.

நன்றி - வீரகேசரி

காவலூர் ராஜதுரைக்கு இலங்கை கல்விச் சமூக சம்மேளனத்தின் அஞ்சலி


இலங்கைத் தமிழ் இலக்கியத்தின் பொதுவான வளர்ச்சியையும், குறிப்பாக அவ்விலக்கியத்தின் மக்கள் சார்பு ஆழ அகலப்பாட்டை வற்புறுத்தி அதற்காக செயற்பட்டதில் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திற்கு முக்கிய இடமுண்டு. அவ்வகையில் இலங்கையில் முற்போக்கு இலக்கியத்தின் பரிணாமத்திலும், அப்பரிணாமம் ஆழமாகவும் அகலமாகவும் வளத்தெடுக்கப்பட வேண்டும் எனச் செயற்பட்டவர்களில் காவலூர் ராஜதுரை முக்கியமானவர். வாழ்விலிருந்து அந்நியப்படாமல் இவர் தீட்டிய சிறுகதைகள் சமூக முக்கியத்துவம் உடையவைகளாகும். யாழ்பாணத்தில் ஊர்காவற்துறையில் கரம்பன் என்னுமிடத்தில் பிறந்த இவர் தமது சமூகம் சார்ந்த செயற்பாடுகளினூடாக முழு இலங்கை சார்ந்த புத்திஜீவியாக ஆளுமையாக திகழ்ந்தார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுதாபனத்தில் நீண்டகாலம் பணியாற்றிய இவர் தமக்கு கிடைத்த வாய்ப்பையெல்லாம் முற்போக்கு இலக்கியத்தின் செழுமைக்காக பயன்படுத்தியவர். இவரது கதைகள் நாடகங்களாகவும் தொலைக்காட்சி நாடகங்களாகவும் தயாரிக்கப்பட்டுள்ளன. இவரது காலங்கள் என்ற தொலைக்காட்சி நாடகம் மலையக மக்களின் வாழ்வை பின்னணியாகக் கொண்டது. பொன்மணி என்ற இலங்கைத் திரைப்படத்திற்கு வசனம் எழுதியதுடன் அதன் நிர்வாகத் தயாரிப்பாளராகவும் பணியாற்றியிருக்கின்றார்.

அன்னாரின் மறைவையொட்டி, அவரது படைப்புகள் மீள் பதிப்புகள் செய்யப்பட்டு அவை மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்படல் வேண்டும். அதற்கு அப்பால் அவர் பற்றிய ஆய்வுகள் காய்த்தல் உவத்தலற்ற நிலையில் வெளிவர வேண்டியுள்ளது. அவ்வாய்வுகள் பின்வரும் நான்கு நிலைககளில் இடம்பெறல் காலத்தின் தேவையாக உள்ளது. பண்பாட்டுத் தளத்தில் அவரது செயற்பாடுகள் வியப்பை அளித்த போதினும் அவர் மீதான வழிபாட்டுணர்வுக்கு இடந்தராமல் விமர்சித்து விளக்குவதே சமூக பயன்மிக்க அம்சமாக காணப்படும். அதேசமயம் அன்னாரின் ஒவ்வொரு துறைசார்ந்த பங்களிப்புகளும் பண்முக நோக்கில் வெளிக் கொணரப்படல் அவசியமானதாகும். அவ்வாய்வுகள் பின்வரும் நான்கு நிலைகளில் இடம்பெற வேண்டும். முதலாவது, காவலூர் ராஜதுரையை பல்துறைநோக்கில் அணுகி ஆராய்பவையாக இருத்தல் வேண்டும். சமூகவியல் நோக்கில் காவலூர் ராஜதுரையின் சமூக முக்கியத்துவம் வரலாற்றுக் கதியில் அவரது சிந்தனைகளும், போதனைகளும் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்பது குறித்து ஆராய்தல் இதன் பாற்படும். இரண்டாவது, காவலூர் ராஜதுரையை பின்பற்றி எழுந்த மரபு அவரை பின்பற்றியும் அவரை மீறியும் எவ்வாறு வளர்ந்துள்ளது என்ற நோக்கில் ஆராயப்படல் வேண்டும். மூன்றாவது, வரலாற்றுப் பின்னணியில் காவலூர் ராஜதுரையை மதிப்பிடுதல் முக்கியமானவையாகும். நான்காவதாக காவலூர் ராஜதுரைகுறித்து வெளிவந்த ஆய்வுகள், மதிப்பீடுகள் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்பது பற்றியதாக இருத்தல் வேண்டும். இதுவே இறந்த மனிதருக்காக நாம் ஆற்றும் உண்மையான அஞ்சலி என இலங்கை கல்விச் சமூக சம்மேளனத்தின் தலைவர் லெனின் மதிவானம் அவர்களும். பொதுச் செயலாளர் ஆர். சங்கர மணிவண்ணன் அவர்களும் தெரிவித்துள்ளனர்.
     

தமிழோவியன் கவிதைகள் : விளிம்புநிலை மக்களின் அனுபவத்தெறிப்பு - யமுனா ராஜேந்திரன்


அறியப்பட்ட தமிழ் இலக்கியத்தை மன்னராட்சி இலக்கியம் நிலப்பிரபுத்துவ இலக்கியம் மற்றும் சமகால இலக்கியமாக நடுத்தரவர்க்க இலக்கியம் என வரையறுக்கலாம். சமகாலத்தில் நிறுவப்பட்ட உன்னத இலக்கியமாகக் கருதப்படுவது ஐரோப்பிய மத்தியதரவர்க்கத்தவரின் வாழ்நிலை நெருக்கடியையும் அவர்தம் பார்வையையும் உள்வாங்கிய இந்திய-தமிழக-ஈழ மத்திதரவர்க்கத்தவரின் இலக்கியம்தான். இலக்கியத்தில் தமிழக இலக்கிவாதிகள் வலியுறுத்திக் கொண்டிருக்கும் மதிப்பீடுகளும் ஐரோப்பிய மத்தியதர வர்க்கத்தவரின் மதிப்பீடுகள்தாம். இந்த மதிப்பீடுகள் இவர்களின் வாழ்க்கை அனுபவம் தோற்றுவிக்க இவர்கள் கண்டடைந்த அறவியல் மதிப்பீடுகளாகும். இந்த மதிப்பீடுகளுக்கு மாற்றாக நாடோடி மக்களின் கலை இலக்கிய வெளிப்பாடுகளையும் விளிம்புநிலை மக்களுடையதும் ஒடுக்கப்பட்ட மக்களுடையதுமான வெளிப்பாடுகளை ஐரோப்பிய மார்க்சீயர்களான ரேமான்ட் வில்லியம்சும் டெர்ரி ஈகிள்டனும் தமது விமர்சன மதிப்பீடுகளில் முன்னிறுத்தி வந்திருக்கிறார்கள். தமிழகத்திலும் இவ்வகையில் தமிழக மார்க்சீயவாதியான நா.வானமாமலையும் அவர்களது மாணவர்களான நெல்லை ஆய்வு வட்டத்தினரும் இம்மதிப்பீடுகளை முன்னிலைப்படுத்தி வந்திருக்கிறார்கள்.

மொழி சார்ந்த கலை உணர்வென்பது அதிகமும் பயிற்சி சார்ந்ததும் பிரக்ஞைபூர்வமான சிந்தனை சார்ந்ததும்தான். நாடோடிப் பாடல் மரபுகளிலும் விளிம்புநிலை மக்களின் கலை இலக்கிய வெளிப்பாடுகளிலும் இந்த மொழி சார்ந்த பயிற்சி அல்லது பிரக்ஞை என்பது அவர்களின் வாழ்பனுபவங்களைப் பொறுத்து இரண்டாம் பட்சமானவையாகும். விளிம்பு நிலை மக்களின் கோபமும் துயரமும் சந்தோஷமும் கரையுடைத்த வெள்ளம் போல் பெருகி வருபவையாகும் அவர்களது கவிதைகள் என்பது தமது மரபில் வெகுமக்கள் பிரக்ஞையாகச் செயற்பட்ட நாட்டார் பாடல்களை தமது ஆதார ஊற்றாக எடுத்துக் கொள்கிறது. இவ்வகையில் மலையகத்தைச் சேர்ந்த தமிழோவியனின் கவிதைகளும் நாட்டுப்பாடல்களின் சந்த லயத்தையும் எளிமையையும் நேரடித் தன்மையையும் தனது ஆதார ஊற்றாகக் கொள்கின்றன.

தமிழோவியன் கவிதைகள் மலையக மக்களின் கூட்டு அரசியல் பிரக்ஞையின் அங்கமாக ஒலிக்கிறன.

‘தமது கோபத்தையும் உரிமை வேட்கையையும் அரசியல் உணர்வுகளையும் பிரதிநிதித்துவப்படுத்த சரியான அரசியல் அமைப்புக்கள் கட்சிகள் நிறுவனங்கள் போன்றன இல்லாதபோது அல்லது அத்தகைய நிறுவனங்களின் தோற்றம் அடக்குமுறைக்கு ஆளாகியபோது அந்த அரசியல் பிரக்ஞையின் இடத்தைக் கலை இலக்கிய வெளிப்பாடுகள் எடுத்துக் கொள்கிறன ‘ எனும் ரேமான்ட் வில்லியம்சின் ஆய்வு நோக்கை மிகச் சரியாகவே மு.நித்தியானந்தன் தனது முன்னுரையில் மலையகத்துக்குப் பொருத்திக் காட்டுகிறார். மலையக மக்களின் எதிர்ப்புக் குரல்களின் இருமுனைக்கத்தியைப் போன்று திகழ்ந்தவை அவர்தம் தொழிற்சங்கங்களும் அவர்களது இளைஞர் சங்கங்களும் ஆகும். தொழிற்சங்கங்களின் வர்க்க சமரசம் சில வேளை கோபம் கொண்ட மலையக இளைஞர்களைச் சோர்வுறச் செய்தாலும் அவர்கள் அமைத்த இளைஞர் சங்கங்கள் படிப்பகங்கள் கலை இலக்கிய அமைப்புக்கள் அவர்களது ஆன்மாவை வெளியிடுவதில் அவர்களை ஏமாற்றவில்லை. அத்தகைய இளைஞர் அமைப்புக்களில் தோன்றி வளர்ந்தவர் தான் இப்போது தனது முதுமை நாட்களில் கரைந்து கொண்டிருக்கும் தமிழோவியன்.

தமிழோவியனின் கவிதைகளில் பெரும்பாலுமானவை 1983 ஆடிக்கலவரத்தில் மூண்ட சிங்களப் பேரினவாதத் தீயில் கருகிப்போன பின் எஞ்சிய கவிதைகளே தற்போது தொகுப்பாசிரியர் மு.நித்தியானந்தனின் முன்முயற்சியில் வெளியாகியிருக்கிறன. தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் வெளியான மலையகப் பரிசுக் கதைகள் தொகுப்பையடுத்து வெளிியாகியிருக்கும் குறிப்பிடத்தக்க கவிதைத்தொகுப்பு இந்நுால். மலையகப் பரிசுக் கதைகளின் அட்டைப்படம் மலையக மனிதனொருவனின் துயரத்தைச் சித்தரித்தது. டென்மார்க் செளந்தர் தீட்டிய ‘தமிழோவியன் கவிதைகள் ‘ புத்தக அட்டைப்படத்தில் மலையக முதிர் மனிதனுக்கு உடல் தளர்ந்து போயினும் அவன் நெஞ்சில் மூண்ட வெஞ்சினம் தளர்ந்து போய்விடவில்லை எனும் படியில் ஓவியம் சித்தரிப்புப் பெறுகிறது.

தமிழோவியனின் கவிதைகளை இந்தத் தொகுப்பின் வழி ஒரு சேரப்பார்க்கிறபோது மூன்று வகையான பண்புகளைக் காணமுடிகிறது.

முதலில் மலையக மக்களின் துயர் பற்றிய கவிதைகள், இரண்டாவதாக மலையகப் பெண்களின் தியாகமும் காதல் மனமும் குறித்த கவிதைகள், மூன்றாவதாக மலையக மக்களின் அரசியல் குரலாகவிருந்த அவர்தம் உணர்வுகளின் பிரதிநிதிகளாகவிருந்த தொழிற்சங்கவாதிகள் அரசியல் தலைவர்கள் போன்றவர்களுக்கான மனம் நெகிழ்ந்த அஞ்சலிகள். அஞ்சலிகள் கவிதைத் தன்மையைப் பெறுவது என்பது பெரும்பாலும் கடினம். மறைந்தவரின் பிறப்பு இறப்பு மற்றும் இடைநாள் குறிப்பு பற்றிய விதைந்துரைப்பு தவிரவும் அதில் தேர்ந்து கொள்ள எதுவுமிருப்பதில்லை என்பதால் சம்பந்தப்பட்ட மக்களது விருப்புக்கே அதைவிட்டு நகர்வது நல்லது. தமிழோவியன் அன்றைய மலையக இளைஞர் பெரும்பாலுமானவர்கள் போலவே திராவிட இயக்க அரசியலுக்கும் அவர்தம் கலை இலக்கிய வெளிப்பாடுகளுக்கும் மனம் பறிகொடுத்தவர் . நாட்டுப்பாடல் மரபையடுத்து தமிழோவியனை பாரதிதாசனும் கண்ணதாசனும் அதிகம் பாதித்திருக்கிறார்கள். தமிழோவியனின் பல்வேறு கவிதைகளில் பாரதிதாசனின் கவிதைக்கதை சொல்லும் பாணியை நாம் பார்க்கமுடியும். பெண்கள் குறித்த தமிழோவியனின் கவிதைகளில் பெயர்கள் கொண்ட காதலனும் காதலியும் தம் வாழ்வுத்துயரையும் சந்தோசத்தையும் பகிர்ந்து கொள்கிறார்கள்.

ஜீவநாளங்கள் எனும் கவிதையொன்றில் மலையகப் பெண்களின் மீதான அவரது காதல் உணர்ச்சிமீதுற வெளிப்படுகிறது :

கொழுந்து கிள்ளும் கோதையர்க்கே மாலைசூடுங்கள்-அவர்கள்
கோடி செல்வம் தேடித்தரும் திறனைப்பாடுங்கள்.
விழுந்தெழுந்து தளர்ந்திடாமல் மலைச்சரிவிலே-கொழுந்தை
விரைந்தெடுக்கும் விரலசைவின் அழகைக் கூறுங்கள்

மலையகப பெண்களின் துயர்சுமந்த வாழ்வுக்கான ஆராதனையாகத்ததான் அவரது காதல் கவிதைகள் வேர்கொள்கின்றன. தொடர்ந்து பெண்கள் படும் வேதனையை ‘சிறிய வெளிச்சம்’ கவிதையில் இவ்வாறு சொல்லிச் செல்கிறார் :

பச்சிளங் குழந்தைகள் பிள்ளைகள்
பாதுகாக்கு மகத்தில் நிறுத்தி
உச்சிமலை முகடுகளில் கொழுந்தை
உடல் வியர்க்கப்பறித்து-நிறுத்தே:
ஓட்டமும் நடையுமாய் பிள்ளைகள்
உறங்கிடும் காப்பகம் வந்தே
ஊட்டுவார் பாலை! அரைவயிறாய்
ஓடுவார் மீண்டும் மலைக்கே

அரைவயிறு உண்டவர்கள் முழு வயிறு உண்ணும் கனவோடுதான் தமிழகத்திலிருந்து இலங்கை மலைக் காடுகளுக்குத் தமிழகத் தமிழர்கள் சென்றார்கள். தேயிலையும் காப்பியும் வளர்க்க அவர்களது இரத்தத்தை உறிஞ்சிய புிரிட்டாஷ் ஏகாதிபத்தியம் அவர்களைக் கூலிகள் என்றது. இலங்கையர் அவர்களை ‘கள்ளத் தோணிகள் ‘ என்றார்கள். மேட்டுக் குடித்தமிழர்கள் அவர்களை ‘தோட்டக் காட்டான் ‘ என்றார்கள். அவர்களுக்கு பிரஜா உரிமையை மறுத்தது இலங்கை அரசு. இந்திய அரசு திரும்பிவர அவர்களை அனுமதித்தபோதும் அவர்கள் தமிழக கிராமங்களில் நிராகரிக்கப்பட்டு ஒதுககப்பட்டு வாடும் தலித்மக்களோடு சேர்த்து புறக்கணிக்கப்பட்டார்கள்.. நாள் தோறும் லயன்களில் மிருகங்கள் போல் வாழ நிர்ப்பந்திக்கப்பட்ட இம்மக்கள் தமது கடந்த கால தமிழக நினைவுகளில் நொடிதோறும் வாழ்ந்தார்கள். தமிழகத் தெய்வங்கள் அவர்களது காவல் தெய்வங்களாகத் தொடர்ந்தன. தமது துன்பங்களை அவர்கள் தெய்வங்களிடம் சொல்லித்தான் ஆறதல் தேடிக் கொண்டார்கள். கலைவாணியைப் பார்த்து தமிழோவியன் இவ்வாறாக இறைஞ்சுகிறார்.:

வறுமையும் கவலையும் நோயும்
வாட்டுமென் குடும்ப நிலையில்
பொறுமை நீ காட்டாது நல்ல
பொருள் வளஞ்சேர்த்து நீ
இனியன நிலைக்க வைத்து
இன்னலில் தவிக்கும் என்றன்
பணிகளும் வெல்ல நித்தம்
பக்க பலமாய நிற்பாயம்மா

வறுமையிலும் காதல் கனிந்தது. மழலைகள் மலர்ந்தன. நம்பிக்கையும் அவர்களது வாழ்வின் சங்கல்பமாக தொடர்ந்து வந்தது. மனிதரெனும் பெருமிதம் உழைப்பவரெனும் பெருமிதம் திராவிட இயக்கம் ஊட்டிய சுயமரியாதை உணர்வு அவர்களது வாழ்வின் அங்கமாக ஆகியது. தமிழோவியனின் இரண்டு கவிதைகள் அவர்தம் அவநம்பிக்கையையும் உடனே அதைச் சாடி எழும் நம்பிக்கையையும் காட்டப் போதுமானதாகும். ‘வெளியில் வந்து ‘ எனும் கவிதையில் இவ்வாறு சொல்கிறார் :

தொன்று தொட்டு இலங்கை நாட்டில்
வாழ்ந்த கூட்டம் நாம்
இன்றுமிங்கே குடியுரிமை
வாக்குரிமை இழந்து நிற்கிறோம்!
நன்றி கெட்டோர் நாடற்றவர்
என்று கெடுத்ததால்
குன்றுகளில் உழைப்பவராய்
தின்று பிழைக்கின்றோம்.

ஈனப்பிழைப்பு பற்றிய கோபத்தினின்று நம்பிக்கையும் காதலும் உழைப்பின் பயனாாய் விளைந்த சிருஷ்டிப் பொருளும் அதன் மீதான நேசமும் அடுத்த நொடியில் பீறிட்டு வருகிறது :

உழைக்கவே பிறந்த தமிழர்
உதிரத்தில் வளர்ந்து நன்கு
தழைக்கும் தேயிலையே! நாட்டை
தற்காக்கும் கற்பகத் தருவே!
பிழைக்கப்பாடுபடும் தமிழ்ப்
பாட்டாளி மக்கள் தினம்
செழிக்கவே நல்ல நிலையைச்
சேர்ந்திட வழியும் செய்வாய்!
தோட்டக்காட்டான்! ஏதும்
தெரியாத தொழிலாளி!-என்று
வாட்டியே வதைக்க நினைத்தோர்
வலிமையும் ஒடுங்க சட்டம்
ஆட்டிப் படைக்கும் நிலையால்
ஆதிக்கமடங்க நீதியை
நாட்டினாய் தேயிலையே!
உன்னை நாவாறப் போற்றி வாழ்வோம்.

வுிளிம்பு நிலை மக்களின் கவிதைகளிள் உயிராய் உறைந்திரக்கும் ஒரு அம்சம் அவர்களது இயற்கை சார்ந்த வாழ்வு. தேயிலையை நேசிக்கிற மாதிரித்தான் அவர்தம் குழந்தைகளையும் மனைவியரையும் காதலியரையும் அவர்கள் நேசிக்கிறார்கள். அகப்படாத நேசிக்கிற வாழ்வு கையகப்படாத போதுதான் அவர்களது துயரம் கோபமாக வெஞ்சினமாகப் பீறிடுகிறது.

மலையகத் தமிழர்தம் வாழ்வும் அரசியலும் அவர்தம் கலை இலக்கிய முயற்சியும் குறித்த வரலாற்று ஆவணங்களாக இரண்டு கட்டுரைகள் இந்நுாலில் டம் பெறகிறது. மலையகக் கல்வியாளரும் அறிஞருமான காலஞ்சென்ற ஆர் சிவலிங்கம் அவர்களின் அணிந்துரை ஒன்று. பிறிதொன்று மலையகக் கலாச்சார தளத்தில் ஒரு எதிர்ப்புக் குரல் எனும் இலக்கிய விமர்சகர் மு.நித்தியானந்தனின் மிக விரிவான ஒரு கோட்பாட்டுக் கட்டுரையாகும். இந்த நுாற்றாண்டு அக்டோபர் புரட்சியையும் காலனிய ஆதிக்க எதிர்ப்பு தேச விடுதலை யுத்தங்களையும். மட்டும் காணவில்லை. மக்களின் மாபெரும் இடப் பெயர்வுகளை எல்லைகள் துண்டாடப்பட்டதை தேசப்பிரிவினைகளை சோசலிச அமைப்பின் வீழ்ச்சியை அறிவுத்துறைக் காலனியாதிக்கப்பரவலைக் கண்ணுற்றது. இன்று பொருளியல் சுரண்டலின் நவீன ஏகாதிபத்திய வடிவமாக உலக மயமாதலையும் கண்டு வருகிறது. பல்வேறு நாடுகள் சுதந்திரம் பெற்றதாகத் தோன்றினாலும் கூட அது விளிம்பு நிலை மக்களுக்கு எந்தவிதமான சுதந்திரத்தையும் சுபிட்சத்தையும் கொண்டு தரவில்லை. ஐரோப்பாவிலே ஜிப்ஸி மக்கள் அமெரிக்காவில் ஆப்பிரிக்க மக்கள் இந்தியாவில் தலித் மக்கள் போன்று இலங்கையின் கடைக் கோடி விளிம்புநிலை மக்களாக இன்றும் கூட வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் மலையகத் தமிழர்கள். இந்த மலையகத்தமிழர்களில் அறிவுஜீவிகளும் தோன்றினார்கள். அவர்களில் தலையாயவர்தான் ர.சிவலிங்கம். அதற்கடுத்த தலைமுறையைச் சார்ந்த மலையக அறிவாளிவர்க்கத்தைச் சார்ந்தவர் மு.நித்தியானந்தன். மலையக மக்களின் இலக்கிய முயற்சிகள் பற்றிப் பேசவரும் சிவலிங்கம் இம்முயற்சிகளை இவ்வாறாகக் காண்கிறார்:

எல்லா ஒடுக்கப்பட்ட இனங்களும் மக்கள் சமுதாயங்களும் எழுத்தை ஒரு கருவியாகவே பயன்படுத்தியிருக்கின்றன. அமெரிக்காவில் கறுப்பு மக்கள் தமது உணர்வுகளை வெளிப்படத்துவதற்கும் சமுதாய மறுமலர்ச்சிக்கும் எழுத்தைக் கருவியாக உபயோகித்துள்ளனர். தமிழகத்திலேயே கூட திராவிட யக்கங்கள் பாரப்பன சக்திகளை முறியடிக்க எழுத்தை ஓர் ஆயதமாகப் பயன்படுத்தியுள்ளன. இன்று கூட தலித் இலக்கியம் ஓங்கிவரும் தலித் சக்திகளுக்கு வலிவூட்டும் ஒரு கருவியாக ஆகிவருகிறது. முக்கியமாக கவிதைகள் இந்த உணர்வுப்பிழம்புகளுக்கு உருவம் கொடுப்பதில் முதலிடத்தை வகிக்கின்றன.

தமிழோவியன் கவிதைகளில் ஆரம்பத்தில் தோன்றிய அதே உணர்ச்சிபபாங்காண பண்புதான் இன்றைய கவிதைகள்வரை அவரிடம் தொடர்ந்து வருகிறது. பாரதிதாசன் பாணியும் சந்த லயமும் கவிதைக் கதைப் பண்பும் மலையாக நாட்டார் பாடல் மரபும் தான் தமிழோவியன் கவிதைகள். தமிழகத்தில் தோன்றிய வானம்பாடி வகை சமஸ்கிருதத்தமிழ் மணிப்பிரவாள மொழி அவரது கவிதைகளில் இல்லை. எழுத்து மரபில் தோன்றிய அகவிசாரணைக் கவிதைகளின் மொழிப்படிமங்கள் அவரது கவிதைகளில் இல்லை. அவரது கவிதைகளை மொழித்தேர்ச்சி, படிமங்கள், தத்துவதரிசனம் போன்ற நவீன மதிப்பீடுகளை வைத்துக் கொண்டு அணுகமுடியாது. அவரது கவிதைகள் செயல்படும் பிரதேசங்களாக இந்தத்தளங்கள் இல்லாததற்காண காரணம் அவரிடம் தேடல்களோ யத்தனங்களோ இல்லை என்பதல்ல. மாறாக இத்தகைய கவிதைப் பாணிகளை முன் வைத்தவர்களின் சிந்தனைப் பிரதேசத்தக்குள்ளோ அவர்தம் வாழ்க்கைத் தேடல்களுக்குள்ளோ மலையகத் தமிழர்களும் அவர்தம் துயர வாழ்வும் இடம்பெறவில்லை என்பதுதான்.யா ழ்ப்பாண அவலம் குறித்து அக்கறைப்பட்ட தமிழ்ப்படைப்பாளிகள் எவரும் மலையகத் தமிழர் குறித்த தீவிர அக்கறையைக் காட்டவில்லை. தம்மைப் புறக்கணித்த இடதுசாரிக் கவிதை மொழியையும் தமிழ் அகக் கவிதை மொழியையும் தமிழோவியன் நிராகரித்திருப்பது அவரது வாழ்வு அவர்முன் வைத்த தேர்வுதான்.

தமிழகலக்கிய உன்னதர்களின் ஐரோப்பிய மத்தியதரவர்க்க இலக்கியமதிப்பீடுகளின் அடிப்படையில் தமிழோவியன் கவிதைகள் உணர்ச்சிவசமான பிரச்சாரக்கவிதைகள் தான். மாயக்காவ்ஸ்க்கியை கவிஞனாக ஒப்புக் கொள்ள- கார்க்கியை தீவிர இலக்கிவாதியாக ஒப்ப தர்மூ சிவராமுவுக்கு இயலவில்லை. ஆனால் E=mc2 எழுதிய அதே சிவராமுவின் தமிழீழ தேசிய கீதத்தை எவரேனும் வாசித்துக் கவிதையாக ஒப்புக் கொள்ள முடியுமானால் அதைவிடவும் ஆயிரம் மடங்கு கவித்துவம் கொண்டவை மாயக்காவிஸ்க்கியின் கவிதைகள் என்பதை மிகச் சாதாரணமாக அறிந்து கொள்ளமுடியும். ஜெயகாந்தன் கூறுவதைப் போல் எல்லாக் கலைகளும் பிரச்சாரம் தான். ஆனால் எல்லாப் பிரச்சாரங்களும் கலையாகிவிடுவதில்லை. தமிழோவியன் கவிதைகளிள் அஞ்சலிகள் அரசியல் அறைகூவல்கள் போன்றவற்றையும் தாண்டி கலைத் தன்மை கொண்ட கவிதைகளாக அவரது மலையக வாழ்வு மற்றும் பெண்கள் பற்றிய கவிதைகளையும் மலையகத் தமிழர்தம் துயரம் பற்றிய கவிதைகளையும் அவரது நாட்டார்பாடல் மரபு வழிக் கவிதைகளையும் நிச்சயமாகக் குறிப்பிடமுடியும். சாட்சியமாகச் சில கவி வரிகள்

நாட்டார்பாடல் மரபு வழிக் கவிதை இது

பாதையிலே வீடிருக்க
பழனிச்சம்பா சோறிருக்க
எருமே தயிரிருக்க
ஏண்டி வந்தே கண்டிச்சீமை ?

தமிழோவியனின் கவிதையொன்று :

கூடை சுமந்து மலை மலையாய்
கொழுந்து எடுத்தே
பாடுபட்ட பெண்களது
பத்துவிரல் சுழற்சியினால்
நாடு செழிக்க வெளிநாட்டு
நாணயத்தைத் தேயிலையால்
கோடிக் கணக்கில் அன்று
தேடிக் கொடுத்த பரம்பரையும்
நாடற்ற மக்களாக இன்று
நாதியற்று நிக்கலாமோ?

*

தமிழோவியன் கவிதைகள்.
டிசம்பர் 2000
வெளியீடு :
கலை ஒளி முத்தையா பிள்ளை நினைவுக்குழு
கொழும்பு : 13
100 இலங்கை ரூபாய்

இந்திய விநியோகம் :
குமரன் பதிப்பகம்
சென்னை: 600 026
40 இந்திய ருபாய்

 

இணைந்திருங்கள்


Followers

Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates