இலங்கையின் பதிப்புத்துறையில் ஏற்பட்ட முக்கியமான நிகழ்வுகளைக் கவனிக்கும் போது முதலாவதாக வெளிவந்தவை எவை என்பதை அறியும் ஆர்வம் எவருக்கும் இருக்கும். அந்த வகையில் பலர் பல நூல்களின் மூலமும், கட்டுரைகளின் மூலமும் விபரங்களை வெளிக்கொணர்ந்திருக்கிறார்கள். அவ்வாறு வெளியான தகவல்களில் கணிசமானவை பிழையாகவும் இருந்துள்ளன. அவை பின் வந்த ஆய்வாளர்களால் திருத்தப்பட்டுமுள்ளன. வரலாற்றுப் பிழைகள் இப்படியான வழிகளால் தான் திருத்தப்பட்டுக்கொண்டு வந்துள்ளன.
அந்த வகையில் எனது இரண்டு கட்டுரைகளின் வாயிலாக இலங்கையில் வெளியான முதலாவது நூல், முதலாவது தமிழ் சஞ்சிகை என்பன குறித்த விபரங்கள் முதற் தடவையாக வெளிக்கொணரப்பட்டுள்ளன.
“தமிழ் வேத பிரார்த்தனை புத்தகம்” (Mallebaars Catechismus- en Gebede-Boek) (1737 இல் இலங்கையில் வெளிவந்த முதலாவது தமிழ் நூல்)
“ஞானபோதகம்” – 1831இல் வெளிவந்த முதலாவது தமிழ் சஞ்சிகை.
இவை இரண்டும் விரிவான கட்டுரைகளாக வெளிவந்துள்ளன.
உலகில் வெளிவந்த முதலாவது தமிழ் நூலாக தம்பிரான் வணக்கம் (1578) குறிப்பிடலாம். அது தமிழகத்தில் வெளிவந்ததை நம்மில் பலரும் அறிவோம்.
இலங்கையில் 1802 இல் “சிலோன் கெசட்” (Ceylon Gazzette) எனும் இதழ் தொடங்கப்பட்டதன் மூலம் சுதேசிய மொழிகளான தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளில் முப்பகுதிகளைக் கொண்டு வெளிவந்தது. தாய் மொழிகளைத் தாங்கி வந்த முதல் இதழ் இது தான்.
மீஸான் மாலை – இலங்கையில் 1868இல் வெளியான முதலாவது இஸ்லாமியத் தமிழ் நூல் எனலாம்.
இலங்கையில் வெளியான முதலாவது தமிழ் சிறுவர் சஞ்சிகையாக “பாலியர் நேசன்” என்பதைக் குறிப்படலாம். 1859 ஆம் ஆண்டு இது வெளிவரத் தொடங்கியது.
இப்படிக் கூறிக்கொண்டு போகும் போது இலங்கையில் வெளியான முதலாவது நாவல் எது என்கிற கேள்வி பல இடங்களிலும் சர்சைக்குள்ளானதாகவே இருப்பதை அவதானிக்க முடிகிறது.
வேதநாயகம் பிள்ளையின் "பிரதாப முதலியார் சரித்திரம்" தான் தமிழ் மொழியில் முதலாவதாக வெளிவந்த நாவல் என்று குறிப்பிட முடியும். அது வெளிவந்த ஆண்டு 1879 ஆகும். அதுவரை செய்யுளையே பிரதான இலக்கிய வகையாகக் கொண்டிருந்த தமிழுக்கு உரைநடையிலிருந்த புனைகதை இலக்கிய வடிவம் இந்நூலுக்கூடாகவே அறிமுகமானது. ஆனால் இந்த நூல் தமிழகத்தில் வந்தது.
அப்படிப்பார்க்கும் போது சித்திலெவ்வை மரைக்கார்' இயற்றி 1885 இல் வெளிவந்த “அசன்பே சரித்திரம்” இலங்கை நாவல் இலக்கியத்தின் முதலாவது நாவல் என்று கூறலாம்.
ஈழத் தமிழ் நாவலிலக்கியப் பாரம்பரியத்தில் தி. த. சரவணமுத்துப்பிள்ளை எழுதி 1895 இல் வெளியான ‘மோகனாங்கி’ நாவலை இலங்கையின் முதலாவது சரித்திர நாவல் என்று குறிப்பிட முடியும். இதன் கதைக் களமும் வெளியிடப்பட்ட இடமும் தமிழகமாக இருந்தபோதும் இதை எழுதிய சரவணமுத்துப்பிள்ளை இலங்கையின் திருகோணமலையைச் சேர்ந்தவர்.நாவலிலக்கிய வரலாற்றைப் பற்றி எழுதியுள்ளவர்கள் சிலர் இந்த வரலாற்றுத் தகவல்களோடு “காவலப்பன் கதை”யைக் குழப்பியுள்ளதைக் காண முடிகிறது. "காவலப்பன் கதை" தான் ஈழத்தின் முதலாவது நாவல் என்று அடித்துச் சொல்பவர்கள் இன்றும் உள்ளார்கள். அதைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.
"காவலப்பன் கதை" முதலாவது மொழிபெயர்ப்பு நாவல் யாழ்ப்பாணத்தில் 1856ம் ஆண்டில் வெளியிடப்பட்டிருப்பதாகக் குறிப்பிடப்படுகிற போதும் அப்படிப்பட்ட ஒரு நாவலை கண்ட எவரும் இப்போது இருப்பதாகத் தெரியவில்லை.
இதைப்பற்றி மு.கணபதிப்பிள்ளை சில்லையூர் செல்வராசனின் நூலில் எழுதியிருக்கிறார். ஆனால் கணபதிப்பிள்ளையோ பின்வந்தவர்களோ அந்த நாவல் குறித்த விபரங்களை சரிவர நிறுவவில்லை. மேலும் இந்த நூல்களில் பிரதிகளும் கூட கிடைக்கவில்லை. இந்நிலையில் “கைக்குக் கிடைக்காத நூல் ஒன்றினை நாவலா நாவலில்லையா என்று எப்படிக் கூறலாம்” என்று பேராசிரியர் அ. சண்முகதாஸ் எழுதிய ‘சித்திலெவ்வை மரைக்காரின் அஸன்பே சரித்திரம்” தனது கட்டுரையொன்றில் எழுதுகிறார்.
“காவலப்பன் கதை”யானது "மூர் ஹன்னாஹ்" (Hannah More) என்பவர் 1796 இல் இயற்றிய "Parley the Porter" என்னும் நாவலின் மொழிபெயர்ப்பு என்றே பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அதன் மூலப் பிரதியை இக்கட்டுரைக்காகத் தேடி எடுத்தபோது அந்த நூலானது அட்டையோடு சேர்த்து 12 பக்கங்களை மட்டுமே கொண்ட சிறு நூல் என்பதை காண முடிந்தது. 1856ஆம் ஆண்டு மூர் எழுதிய படைப்புகள் அனைத்தும் மீண்டும் ஒரே நூலாக தொகுக்கப்பட்டபோது அந்த நூலில் இந்தக் கதை வெறும் நான்கே பக்கங்களுக்குள் அடங்கிவிட்டன. (The complete works of Hannah More - 1745-1833) இன்னும் சொல்லப்போனால் மொத்தமே சுமார் 4500 சொற்களை மட்டுமே கொண்ட கதை. அதை ஒரு சிறு கதை என்று வேண்டுமென்றால் கூறலாமேயொழிய ஒரு நாவலாக எப்படி தமிழில் அடையாப்படுத்தினார்கள் என்று தெரியவில்லை. ஆங்கில உலகில் எங்குமே இக்கதையை ஒரு நாவலாக அடையாளப்படுத்தியதில்லை. குறைந்த பட்சம் ஒரு குறுநாவல் உள்ளடக்கத்தைக் கூட இது கொண்டதில்லை.
ஆகவே “காவலப்பன் கதை” என்கிற நூல் வெளிவந்திருந்தாலும் கூட அது நாவலாக இருக்க வாய்ப்பே இல்லை என்பது தெளிவாகிறது.
பார்னெட் (L.D.Barnett), போப் (G.U.Pope) ஆகியோர் தொகுத்த A Catalogue of the Tamil books of the British Museum என்கிற நூலில் "Parley the Porter" என்கிற நூலைப் பற்றிய குறிப்புகளைக் காண முடிகிறது. பிரிட்டிஷ் மியூசியம் 1909 ஆம் ஆண்டு வெளியிட்டுள்ள இந்த நூல் பட்டியல்களை இன்றும் பலரும் ஒரு முக்கிய மூலாதார நூலாக பயன்படுத்தி வருகின்றனர். இந்த நூலில் 177 ஆம் பக்கத்தில் உள்ள குறிப்பு இது தான்.
MORE (HANNAH). “Parley the Porter” காவலப்பன் கதை. [Translated into Tamil] pp. 36. Jaffna, 1856. 16°. 14170. a. 33.(3.) No. 1 of the New Series of the Jaffna Religious Tract Society.
மேலும் இந்த நூலில் கிறிஸ்தவ மதம் சம்பந்தப்பட்ட நூல்களின் கீழ் 584 ஆம் பக்கம் “காவலப்பன் கதை” பட்டியலிடப்பட்டு வகைப்படுத்தப்பட்டுள்ளதையும் காண்கிறோம். இது “யாழ்ப்பாண சன்மார்க்க புத்தக சங்கத்தால்” (J.R.T.S - Jaffna Religious Tract Society) வெளியிடப்பட்டிருக்கிறது.
இதை எழுதிய இங்கிலாந்தைச் சேர்ந்த ஹன்னா மூர் (Hannah More - 1745-1833) தனது என்கிற பெண் எழுத்தாளர் தனது இளம் வயதில் எழுதிய கதை இது. அவர் பல புனைகதைகள், கவிதைகள், நாடகங்கள் என பல படைப்புகளை எழுதி எழுதி பிரபல எழுத்தாளராக பிற காலத்தில் மிளிர்ந்தவர். ஆனாலும் ஹன்னா மூர் ஒரு ஆன்மீக எழுத்தாளராகவே பல வரலாற்றில் இடம்பிடித்துள்ளார் என்பதையும் கவனிக்க முடிகிறது.
நா. சுப்பிரமணியம் எழுதிய “ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்” (1978) என்கிற நூலில் இந்த நூலைப் பற்றி குறிப்பிடும் போது“இந்நூல் பார்லே என்ற சுமைதூக்கி (1869), பார்லே என்னும் சுமையாளியின் கதை (1876) ஆகிய தலைப்புக்களுடன் தமிழ் நாட்டில் வெளிவந்துள்ளது. இந் நூற் பிரதிகள் கிடைக்கவில்லை. இதனை 'நாவல்' என்று கொள்ளலாமா என்பது ஆய்வுக்குரியது.” என்றும் அவர் குறிப்பிடுகிறார். மேலும்
“பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தமிழில் ஐஞ்ஞூற்றுக்கும் மேற்பட்ட கதை நூல்கள் வெளிவந்துள்ளன. இதிகாச புராணக் கதைகள், நாடோடிக் கதைகள், பிறமொழிக் கதைகள், மேலைநாட்டுச் சமயக் கதைகள் முதலிய பல்வேறு வகைகளிலும் அமைந்த இக் கதைகளை நாவல் எனக் கொள்வதில்லை. காவலப்பன் கதை மேலை நாட்டுச் சமயக் கதைகளிலொன்றாகவிருக்கலாம்.” என்கிறார்.
அவரின் அந்த ஐயம் மிகவும் சரியானதே என்கிற கருத்தை அந்த கதையின் மூல ஆங்கிலப் பிரதியை நோக்கும்போது உறுதி செய்துகொள்ள முடிகிறது. கூகிள் தனது Google Books இல் இதை வகைப்படுத்தும்போது “சிறுவர்களுக்கான கதையாக” (Children's stories) வகைப்படுத்தியிருக்கிறது.
இந்த நூலை “Chapbook” என்றும் மேற்கில் வகைப்படுத்துகிறார்கள். மிகக் குறைந்த அளவிலான பக்கங்களைக் கொண்ட கதைகளுடன் பிரசுரிக்கப்படுகின்ற பிரசுரங்களையே “Chapbook” என்று அழைத்தார்கள். பல்லாண்டுகளுக்கு முன்னர் ஐரோப்பாவில் தெரு இலக்கிய (street literature) கலாசாரத்தின் அங்கமாக இந்த வகை இலக்கிய வெளியீடுகள் காணப்பட்டன. மலிவு விலையில் எளிமையான நூல்கள் தெருக்களில் விற்கப்பட்ட கலாசாரம் அது. அச்சுப் பண்பாட்டின் தொடக்கக் காலப்பகுதியில் குறிப்பாக பதினைந்தாம் நூற்றாண்டு தொடக்கம் பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை ஐரோப்பிய நாடுகளில் பிரபலமாக இருந்த வாசிப்பு கலாசாரம் இது.
இந்தக் கதை இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னரே மேற்கு நாடுகளில் சிறுவர்களுக்காக நடத்தப்படும் கிறிஸ்தவ ஞாயிறு பாடசாலைகளில் வாசிக்கப்பட்டிருக்கிறது. (Parley, the Porter. An Allegory)
மூல நூலை இங்கிலாந்தில் அன்றே வெவ்வேறு பதிப்பாளர்கள் பதிப்பிட்டிருக்கிற போதும் அமெரிக்க சமார்க்க புத்தக சங்கமும் (American Tract Society) 1825 ஆம் ஆண்டு ஆங்கிலப் பிரதியை வெளியிட்டிருக்கிறது என்பதையும் கவனிக்க வேண்டும். ஹன்னா மூரின் சுமார் 50 கதைகளை அச்சங்கம் பதிப்பித்துள்ளது.
பார்லி என்பவன் தான் பிரதான கதா பாத்திரம். Parley the Porter என்பதை நேரடியாக தமிழ்ப்படுத்தினால் “பார்லி என்கிற சுமைதூக்கி” என்று கூறலாம். ஆனால் “காவலப்பன்” என்று இலக்கிய சுவையுடன் அந்த தலைப்பை இட்டிருக்கிறார்கள்.
ஒரு காட்டிக்கொடுப்பாளனின் உதவியின்றி கொள்ளையர்கள் எப்படி ஒரு வீட்டிற்குள் நுழைய முடியாது என்பதை உணர்த்தும் கதை.
“காவலப்பன் கதை”யை நமது கதைசொல்லி இலக்கிய வரலாற்று மரபில் இருந்து நீக்கிவிட முடியாது என்பது உண்மை. அதே வேளை அதை நாவலிலக்கியத்தின் தொடக்கம் என்று பதிவு செய்ய முனைகின்ற முயற்சி வரலாற்றுத் திரிபாகிவிடும். அதை இனி நிறுத்தி விடலாம்.
நன்றி - ஜீவநதி - November - 2020