Headlines News :

காணொளி

ஜனாதிபதி விருது

ஜனாதிபதி விருது
நமது மலையகத்துக்கு

சுவடி

மலையக மக்கள் - வாழ்வும் இருப்பும் - திலகர்மூன்று தசாப்த கால யுத்தத்துக்குப் பின்னான இலங்கையின் அரசியல் சூழல் பல மாற்றங்களைக் காண விழைகின்றது. இதில் உள் - புற நோக்கங்கள் பல இருக்கலாம். எது எவ்வாறெனினும் அவரவர் அவரவருக்கு இயன்ற முறைகளிலும்  வழிகளிலும் தமது இருப்பை உறுதி செய்வதற்கான முனைகளில் ஈடுபாடு காட்டவேண்டியது அவசியமாகின்றது.

இந்த யுத்தம் இலங்கையின் வடகிழக்குப் பிரதேசத்தையும் அங்கு வாழ்கின்ற தமிழ் மக்களையும் மையப்படுத்தியிருந்தாலும் அது சர்வதேசரீதியாக தமிழர், தமிழ் மொழி பேசுவோர், தமிழ்மொழி எனும் பரப்புகளுக்குள் தாக்கத்தை செலுத்தியுள்ளது. வடகிழக்கு வாழ் இலங்கைத் தமிழ் மக்களிலிருந்து தமிழ்த்தேசியத்துக்கான போர் தொடங்கியிருந்தாலும் வடகிழக்குக்கு உள்ளேயும் வெளியேயும் வாழ்ந்த- வாழ்கின்ற தமிழ் பேசும் மக்கள் அனைவரும் போருக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ பங்களிப்பும் செய்துள்ளார்கள், பாதிக்கப்பட்டுமிருக்கிறார்கள். தமிழ்த்தேசியப் போராட்டத்தின் தாற்பரியங்களை தேடியறியாது அது தமக்கானதும்தானா என்பதையும் அறியாது அந்த களத்திலும் உணர்வுரீதியாகவும் பங்கேற்றவர்கள்  இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்கள். இதனால் போரினாலான பாதிப்புகளில் ஏனையோர் போன்றே மலையக மக்களும்  பெரும் துன்பப்பட்டுள்ளார்கள். 

வடக்கில் இருந்து முஸ்லிம்கள் தமிழ்த் தேசியப் போராட்டத் தரப்பினரால் வெளியேற்றப் பட்டதன் பின்னர் தமக்கும் தமிழ்த்தேசியத்துக்கான  விடுதலையில் பங்குண்டு என்கிற மனநிலை முஸ்லிம்களிடத்தில் மறைந்துவரத் தொடங்கியதையே அரசியல் சூழலில் அவதானிக்க முடிகின்றது. மறுபுறத்தில் மலையக அரசியல் செயற்பாட்டுத்தளத்தில் உள்ள தலைவர்கள் தமிழ்த்தேசியத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்தும், தன்னை தமிழ்த் தேசியவாதிகளாகக் காட்டிக் கொண்டும், தமிழ்த்தேசியப் போராட்ட அமைப்புகளுடன் இணைந்து அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்தும் மலையக மக்களை தமிழ்த்தேசிய கருத்தியலில் மூழ்கடித்து வைத்திருந்தனர்.இதற்கு பல ஆதாரங்களைச் சொல்லலாம்.

ஞாபகமூட்டலுக்காக, ஈரோஸ் தமது 13 அங்கத்தவர் கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் ஒன்றை மலையக மக்களுக்காக ஒதுக்கியமை (அமரர் இராமலிங்கம் பாராளுமன்ற உறுப்பினர் - ராகலை), திம்பு கோட்பாட்டில் மலையக மக்களின் பிரஜாவுரிமை பற்றிய ஒரு அத்தியாயம் உள்வாங்கப்பட்டமை, அமரர் சந்திரசேகரன் (மலையக மக்கள் முன்னணியின் தலைவர்) தமிழ்த்தேசிய வடகிழக்கு அமைப்புகளுடன் இணைந்து ஆரம்பகால அரசியல் நடவடிக்கைகளில் செயற்பட்டமை, பின்னாளில் விடுதலைப்புலிகள் அமைப்புடன் நேரடியாக  தொடர்பு வைத்திருந்தமை, உதவி செய்தமை, சிறை சென்றமை, தவிரவும் அமரர் சந்திரசேகரன் மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் போன்றோர் பொங்குதமிழ் நிகழ்வின் பிரதானமானவர்களாக கலந்துகொண்டமை, 2002ல் போர்நிறுத்த உடன்பாடு நிலவிய காலத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகம் தொண்டமான் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் படத்தையும் தனது படத்தையும் ஒரே சுவரொட்டியில் சேர்த்து மலையகம் உட்பட கொழும்பு நகரங்களில் ஒட்டியதோடு பொங்குதமிழுக்கு சமனான ஒரு நிகழ்வை நுவரெலியாவில் நடாத்தியமை போன்றவற்றை இப்போதைக்கு கூறிக்கொள்வோம்.

இத்தகைய உந்துதல்களினால் மலையக இளைஞர்கள் பலரும் தமிழ்த் தேசியப் போராட்டத்தில் தம்மை இணைத்துக் கொண்டு உயிரிழப்பு, சிறைவாசம், எவ்விதத் தொடர்புமில்லை எனினும் தன்னை உறுதிப்படுத்த அடையாள அட்டை இல்லாத காரணத்தால் வருடக்கணக்கில் சிறைவாசம் என  தமிழ்த் தேசியப் போராட்டத்தில் மலையக மக்கள் விரும்பியோ விரும்பாமலோ  பங்காளிகளாகிவிட்டனர்.

இவர்களின் அரசியல் தொழிற்சங்கத் தலைமைகள் தம்மையும் தமிழ்த்தேசிய ஆதரவாளர்களாக காட்டிக்கொண்டதன் மூலமும் தமிழ்த் தேசியப் போராட்டத்தலைமைகள் அந்த ஆதரவை ஏற்றுக்கொண்டதன் மூலமும் மலையக மக்கள் தமது உண்மையான பிரச்சினைகளைப்பற்றி அக்கறை கொள்ளாது போனார்கள். நாளை உருவாகப் போகும் தமிழருக்கான நாட்டில் தமக்கும் பங்குண்டு என்ற கனவிலேயே அவர்கள் வாழ்ந்துவிட்டதாகத் தோன்றுகிறது. அந்த அப்பாவி மக்களின் கனவுகளுக்கு அவர்களது தலைவர்களும் ஏட்டிக்குப்போட்டியாக தீனி போட்டிருப்பதை மேற்சொன்ன நிகழ்வுகளால் விளங்கிக் கொள்ளலாம்.  

இன்று தமிழ்த் தேசியத்துக்கான ஆயுதப்போராட்டம் அதன் முன்னெடுப்பாளர்களுக்குச் சாதகமாக அமையாத முடிவினை தந்திருக்கிற ஒரு சூழலில், ஆயுதப்போராட்டத்தின் பின்னான அரசியல் தலைமைகள் ஆளும் பெரும்பான்மை சிங்களத் தலைமைகளிடம் பேச்சுவார்த்தை நடாத்தித்தான் தீர்வுகளைக் காணவேண்டும் என்கிற நடைமுறை நிலவுகின்ற சூழலில் மலையக மக்களின் இருப்பு, வாழ்வு குறித்து யார் எத்தகைய முடிவை நோக்கி நகர்த்துவது என்பது இப்போது எழுந்திருக்கும் வினா.

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட மலை யக மக்களின் 250 ஆண்டுகால இலங்கை வாழ் வரலாற்றில் 70 வருடகால அரசியல் தொழிற்சங்க வரலாறும் அடங்குகின்றது.  1947களில் இவர்கள் இலங்கை நாடாளுமன்றத்தில் 7 அங்கத்தவர்களைக் கொண்டிருந்தனர். அது இனவாதிகளின் கண்களை உறுத்தவே மலையக மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டது. பின்னர் 1977 வரை நியமனத் தெரிவின் மூலம் அரசியல் காலம் தள்ளியமையும் 1977க்குப்பின் இன்றுவரை அவர்களின் அபிவிருத்திப் பணிகள் என்ற போர்வையில்  அரசாங்கத்துடனான கைகோர்ப்புடனும் அரசியல் நகர்ந்து செல்ல இன்னும் அடிப்படை பிரச்சினைகளில் இருந்து முழுமையாக விடுபடாத மக்கள் கூட்டமாகவே வாழ்ந்து வருகின்றனர். 

எவ்வகையிலேனும் ஏற்பட்டிருக்கும் அபிவிருத்திகளை புறந்தள்ளிப் பார்க்காது இவர்களது அடிப்படை பிரச்சினைகள் குறித்து பார்வையை செலுத்துவது பொருத்தமானது. இன்னும் மலையகத் தமிழர்களில் பலருக்கு பிறப்பு அத்தாட்சிப் பத்திரங்கள் இல்லை அல்லது முறையாகப் பதியப்படுவதில்லை. இன்னும் மலையகத் தமிழர்களில்  பலருக்கு தமது அடையாளத்தை உறுதிப்படுத்தும் தேசிய அடையாள அட்டை  இல்லை. தமது ஜனநாயக உரிமையைப் பாதுகாக்கும் வாக்குரிமை முழுமையாக இல்லை அல்லது வாக்காளர் இடாப்புகளில் அவர்களை பதிவு செய்துகொள்வதில் திட்டமிட்ட புறக்கணிப்பு இடம்பெறுகின்றது. ஏன் இவர்கள் இலங்கை நாட்டின் பிரஜைகள் என்றுகூட இன்னும் முழுமையாக பிரகடனப்படுத்தப்படவில்லை. இந்த நிலைமைக்கு காரணம் என்ன?

1948ல் குடியுரிமை பறிக்கப்பட்டதன் பின்னர் அதனை மீளப் பெறுவதில் ஏற்பட்ட அரசியல் புறப்படுகைகள் 1960களில் பெருவாரியாக இருந்ததும் 1977க்குப்பின் வாக்குரிமை சிறுகச்சிறுக கிடைக்கத் தொடங்கியதும் மந்தமானது. வாக்குரிமையைப் பெற்றுக்கொண்டதன் பின்னர் அதனாலான அறுவடைகளை சிலர் தமது குடும்பம் சார்ந்த அரசியலுக்குப் பயன்படுத்திக் கொள்ள, மற்றையோர் அவர்களிடம் பிழைப்பு நடாத்தும் ஒரு போக்கு வளரத் தொடங்கியது. இந்தப்பட்டியலுக்குள் படித்தவர்கள் என சொல்லிக்கொள்ளும் பலர் அதிகாரி பதவிகளில் ஒட்டிக் கொண்டமை அரசியல் வறட்சிநிலைக்கு ஒரு காரணம் என்பதை ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும்.

1977க்குப் பின் தமிழ்த் தேசியப் போராட்டம் வெகுஜனமயப்பட்டதோடு, தாம் தெரிவு செய்த தலைவர்கள் அமைச்சர்களாவ தற்கே என்றும் தமது உரிமைக்கான போராட்டம் தமிழ்த் தேசியப் போராட்டத்துடன் இணைந்தது என்றும்  அது இறுதியில் கிடைக்கும் என்ற மனப்பாங்கிலும் மலையக மக்கள் இருந்துவிட்டனர் அல்லது அவ்வாறான மனப்பாங்கை தமிழ்த்தேசிய ஆதரவு ஊடகங்கள் தோற்றுவித்தன. எனவே தாம் வாக்களித்தவர்கள் அமைச்சுப் பதவிகளுடாக தமக்கு அபிவிருத்திப் பணிகளை பெற்றுக் கொடுப்பதையே அரசியல் உபாயமாக காட்டிக் கொள்ள மக்களும் அந்த கலாசாரத்திற்கு பழக்கப்பட்டுவிட்டனர். தமது அடிப்படை உரிமைகளான பிரஜாவுரிமை, பிறப்புப்பதிவு, தேசிய அடையாளம், வாக்குரிமை போன்ற விடயங்களை மானசீகமான தலைவர்கள் பெற்றுத்தரப் போகும் பெருந்தீர்வில் அடைந்துவிட முடியும் என வாளாவிருந்துவிட்டார்கள் அல்லது அது குறித்து சிந்திக்காமலேயே இருந்துவிட்டார்கள்.

ஒருபுறம் 1977 முதல் அமைச்சுப்பதவிசார் அரசியற்தலைமைகளுக்கு பழகிப்போன இந்த மலையக மக்களை மறுபுறம்  தமிழ்த் தேசியத்தலைமைகள் எவ்வாறு அணுகின என்பதும் ஆராயப்பட வேண்டியது. திம்பு கோட்பாட்டில் மலையக மக்களின் பிரஜாவுரிமை பிரச்னை முன்வைக்கப்பட்டமையை மறுப்பதற்கில்லை. எனினும் 2002ம் ஆண்டு போர்நிறுத்த உடன்பாடு அமுலிலிருந்த காலத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் சார்பில் நடாத்தப்பட்ட நேரடி பத்திரிகையாளர் மாநாட்டில் வே.பிரபாகரன் தெரிவித்த கருத்துகள் மலையக மக்கள் குறித்த தமிழ்த்தேசிய போராட்டத் தலைமையின் உண்மையான பக்கத்தைக் காட்டியது. மலையக மக்கள் குறித்து அவரிடம் கேட்கப்பட்ட போது அவர்கள் தமது  பிரச்சினைகளைத் தாமேதான் பார்த்துக்கொள்ள வேண்டும் எனக் கூறினார். அந்த மக்கள் யாருக்கு வாக்களித்தார்களோ அவர்களிடம்தான் தமது  பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள வேண்டும் எனும் தொனிப்பட கருத்துத் தெரிவித்தார். 

ஒட்டுமொத்த தமிழ்த்தேசிய விடுதலை என உயிர் கொடுக்க முன்வந்த, யுத்த சூழ்நிலையினால் தமிழர்கள் என்ற பொது அடையாளத்தில் வாழ்வைத் தொலைத்த மலையக மக்கள் தமது மானசீகமான தலைமை தம்மைப்பற்றி கொண்டிருக்கும் கருத்து குறித்து மீள்பரிசீலனை செய்ய வேண்டிய காலம் அப்போதே தோன்றியிருந்தது. ஒருவேளை யுத்த நிறுத்த உடன்பாடு தொடர்ந்து சமாதான உடன்பாடுகள் தமிழ்த் தேசியத்துக்கு சாதகமாக எட்டப்பட்டு வடகிழக்குவாழ் தமிழ் மக்களின் நிலைமை இன்றைய நிலைமையைப் போலல்லாது இருந்திருப்பினும்கூட மலையக மக்களின் நிலை இப்போதுள்ள நிலையிலிருந்து  மாற்றத்தையேனும் கண்டிருக்காது என்பதுதான் யதார்த்தம். எனவே தமிழ்த்தேசியப் போராட்டத் தலைமைகளாலும் அதனைப் போற்றிப் புகழ்ந்த தமது தலைமைகளாலும் பௌதீக அபிவிருத்திக்கு அப்பால் அரசியல் மட்டத்தில் கைவிடப்பட்டுள்ள மலையக மக்களின் அடிப்படை தேவைப்பாடுகள் குறித்த கவனம் செலுத்துதல் இப்போது இன்றிமையாததாகின்றது.

மலையக மக்களின் அடிப்படை பிரச்சினைகளான பிறப்புச் சான்றிதழ், அடையாள அட்டை, வாக்குரிமைப் பதிவு போன்றன யாரால் நிறைவேற்றப்படுதல் வேண்டும்? படித்தவர் முதல் பாமரர் வரை தேர்தல்களில் தெரிவு செய்யப்படும் அரசியல்வாதிகளிடம் இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வை வேண்டி நிற்கின்றனர். அவர்களும் தமக்குப் போதுமான அதிகாரத்தை வழங்குவதன் மூலம் (தமக்கு அளிக்க வேண்டிய வாக்குகளைத்தான் அப்படி சொல்கிறார்கள்) இந்த உரிமைகளைப் பெற்றுக் கொள்ளலாம் என ஒவ்வொரு தேர்தலிலும் வாக்குறுதியளித்து தமது வெற்றியை உறுதிப்படுத்திக் கொள்வதுமே இடம் பெற்று வருகின்றது. மாறாக உண்மையாகக் கேட்டுப் பெறவேண்டிய தேவைப்பாடுகள் மறைக்கப்பட்டுள்ளன அல்லது தெரியாமலிருக்கின்றன. 

மேற்படி அடிப்படை விடயங்களை மக்கள் அடைந்து கொள்ளும் அரச நிர்வாக பீடம்  கிராமமட்ட அரச நிர்வாகியான கிராம உத்தியோகத்தர் எனும் கிராம நிலதாரி கையிலேயே உள்ளது. இவரே அரசாங்க நிர்வாகப் பொறிமுறையின் கடைசி நிலை அதிகாரி. மக்களுடன் நேரடியாக தொடர்புகளை  மேற்கொள்பவர். மலையகத்தமிழர் செறிந்து வாழும் நுவரெலியா, பதுளை மாவட்டங்களில்  மாத்திரமே இவர்களுக்காக இவர்களில் இருந்தே ஏறக்குறைய 100 பேர் கிராம உத்தியோகத்தர்களாக கடமையாற்றுகின்றனர். இந்த நியமனத்தைப் பெற்றுக் கொடுத்தது  யார் என வீராப்பு காட்டுவதிலேயே தலைவர்களின் காலம் கழிகின்றது. நுவரேலியா, பதுளை, மாத்தளை, கண்டி, கேகாலை, இரத்தினபுரி, களுத்துறை மாவட்டங்களிலும் கொழும்பிலுமாக சுமார் 15 லட்சம் மலையகத் தமிழர் வாழ்கின்றனர். ஆக 15 லட்சம் பேருக்கு 100 கிராம சேவகர்களைக் கொண்டதாக மாத்திரமே இந்த மக்கள் நிர்வாகக் கட்டமைப்பில் பங்கு பெறுகின்றனர் என்பதே உண்மை. மலையக மக்கள் செறிவாக உள்ள பிரதேசங்களில் 120 சிங்களர்களுக்கு ஒரு  கிராம அதிகாரி என்றிருக்கையில் 9000 மலையகத் தமிழர்களுக்கு ஒரு கிராம அதிகாரியே இருப்பதாக  புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.

இலங்கை அரசாங்கம் தற்போது நிர்வாக எல்லையை மீள் நிர்ணயம் செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்துவருகிறது. இந்த மீள்நிர்ணயத்தில் அரசத் தரப்பு தமக்கே உரிய பாணியில் செயற்படும் என்பதில் எவ்வித மாற்றுநிலையும் இருக்கப்போவதில்லை. அதற்காக மலையக மக்கள் தமது தேவைகள் குறித்து கொடுத்ததைப் பெற்றுக்கொள்ளும் கையறு நிலையிலிருப்பதா அல்லது தமது தேவைப்பாடுகள் குறித்து காரணகாரியங்களுடன் வாதங்களை முன்வைத்து அதனை நிறைவேற்ற முயற்சிப்பதா? நிர்வாக எல்லை மீள்நிர்ணயம்தான் அதிகாரப்பகிர்வின் மறைமுகமான வடிவம். அரச நிர்வாகப் பொறிமுறையில் மலையக மக்கள் எவ்வாறு உள்வாங்கப்படப் போகிறார்கள்  என்பதில்தான் அவர்களது எதிர்கால இருப்பு குறித்த கேள்வி தங்கியுள்ளது.

மலையக மக்களின் பலம் அவர்கள் இலங்கையில் 15 லட்சம் பேர் வாழ்கின்றனர் என்பதாகும். ஆனால் இந்த 15 லட்சம் பேரும் நிலத்தொடர்பற்ற வகையில் தமது வாழ்விடங்களைக் கொண்டுள்ளது இவர்களின் பலவீனமாகும். வடகிழக்கு வாழ் இலங்கைத் தமிழர் போன்று இவர்கள் குறித்த ஒரு நிலத் தொடர்புள்ள பிரதேசத்தில் வாழவில்லை. பல்வேறு மாவட்டங்களில் சிங்கள மக்களுடன் இணைந்ததான பிரதேசங்களில் வாழ் கின்றனர். எனவே அரசநிர்வாக விடயங்களில் சிங்கள கிராம நிலதாரிகள் இவர்களை புறக்கணிப்பது இலகுவாகிவிடுகின்றது. இவர்கள் செறிவாக வாழும் நுவரெலியா பதுளை மாவட்டங்க ளிலேயே புறக்கணிப்பு பரவலாக இருக்கும்போது செறிவு குறைவாகவுள்ள மாவட்டங்களில் நிலை படுமோசமாகவே இருக்கும்.

பெருந்தோட்டங்களில் கூலித்தொழிலாளர்களாக  வேலை செய்யும் மலையகச் சமூகத்தின் பெரும்பகுதியினர் குடியிருப்பு அடிப்படையில் தோட்டங்களில் (மறுவடிவில் கிராமத்துக்குரிய சில பண்புகளுடன்) வாழ்கின்றனர். அந்த தோட்டப்பிரிவுகள் சில ஒன்றாக இணைக்கப்படுவதன் மூலம் ஒரு கிராமமாக கணிக்கப்பட்டு அதற்குரிய அதிகாரியாக மலையகத்தமிழர் ஒருவரை நியமிப்பது அவசியம். ஆகக் குறைந்தது மக்கள் தமது அரச நிர்வாகப் பொறிமுறைக்கு உட்பட்ட தேவைகளை நிறைவு செய்துகொள்ள வழிமுறை இதுவொன்றேயாகும்.

அதேபோல மலையக மக்கள் வாழ்கின்ற பிரதேசங்களில்  அவர்களிலிருந்தே கிராம நிலதாரிகள்  நியமிக்கப்பட வேண்டும். அதுவே இப்போதைய அரசியல் கோரிக்கை. மலையக மக்களின் பாராளுமன்ற அங்கத்துவ எண்ணிக்கையின் குறைவு பற்றிக் கவலைப்படும் பலர் அந்த தெரிவுக்கு அடிப்படையான வாக்குரிமை விடயத்தை நிர்வாகரீதியாக செயலாற்றக்கூடிய அதி காரிகள் அதிகரிக்கப்பட வேண்டும் என்று குரல் எழுப்பாமை முட்டாள்தனமானது எனச் சொல்வது தவறில்லை. ஒரே தடவை 11  உறுப்பினர்கள் மலையக மக்களின் சார்பாக பாராளுமன்றத்தில் இருந்தபோதும்கூட இந்த அடிப்படை பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. ஏனெனில் பாராளுமன்றம் அதில் பேச்சு என்பன உணர்ச்சிப்பூர்வமான செய்திகளை பத்திரிகைகளில் படிக்கத் தரலாமே தவிர உண்மையான பணியை ஆற்ற உதவப் போவதில்லை என்பதுதான் யதாரத்தம்.

மலையக மக்களுக்கு ஆகக்குறைந்தது அவர்கள் வாழ்கின்ற கிராமத்தின் அதிகாரியாக அவர்கள் சார்ந்த ஒருவரை  நியமிக்கக் கோரும் அரசியல் முன்னெடுப்பே இங்கு மிகமிக அவசியம். சில மேதாவிகளுக்கு இது அற்ப கோரிக்கையாகக்கூட தெரியலாம். ஆனால் இந்த அதிகாரி மட்டத்தில்தான் இந்த மக்களின் எதிர்கால இருப்பு இருக்கின்றது. இந்த அதிகாரிகள் இவர்களை புறக்கணிக்கின்றபோது தேசிய நீரோட்டத்தில் இருந்து இவர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். அதன் தொடர்ச்சியாக இவர்கள்  வாழ்வு பண்பாட்டு மாற்றம் மொழிமாற்றம் என தமது இருப்பை இழந்து பின்னோக்கிச் செல்லும் பண்பை பல பிரதேசங்களில் அவதானிக்க முடிகின்றது. இது சில வருடங்களுக்குள்ளாகவே நிலத்தொடர்பற்ற வகையில் பரந்து வாழும் தமது  சகமக்களிடம் இருந்து சிறுகச்சிறுக இவர்களை துண்டித்து  இந்த மக்களின் செறிவு மிகமிக தாழ்ந்த நிலைக்கு தள்ளிவிடுவதற்கான வழியாகி விடும். இது இப்போதைக்கு நடைபெற்றுக்கொண்டிருக்கிற நிலை.

சிங்கள மக்கள் பெரும்பான்மையாக உள்ள மாவட்டங்களில் வாழும் மலையக மக்கள் தமது மொழி அடையாளத்தை முதலாவதாக இழந்து வருகிறார்கள். அதேநேரம் இனரீதியாக தொடர்ந்தும்  தமிழர்களாகவே காட்டப்படுகின்றனர். இது இவர்களை தோட்டக்கம்பனிகளுக்கு அடிமைத் தொழிலாளியாக மட்டுமல் லாது உள்ளுர் மக்களுக்கே அடிமையாக்கும் நிலைக்குத் தள்ளிவிடும் அபாயத்தைக் கொண்டுவந்துள்ளது. தமிழ் பேசும் தமிழராகவே தமது உரிமைகளை பெற்றுக்கொள்ள சிரமப்படும் நிலையில் சிங்களம் பேசும் தமிழராக எந்தளவுக்கு இது சாத்தியப்படும் என சிந்திக்க வேண்டும். ஏனெனில் இவர்கள் நிலவுடமையாளரல்ல. இன்றும் கூலித்தொழிலாளர்களே. எனவே அடிமைப் போக்கு விரைவாக வளர்ந்துவிடும். சிலசமயம் இவர்கள் அழகாக உடுத்தக்கூடாது, தங்களுக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்றெல்லாம் சிங்கள கிராம இளைஞர்களினால் அசுசுறுத்தப்படும் நிகழ்வுகள் இடம் பெற்று வருகின்றன.

நிலத்தொடர்பற்ற வகையில் வாழும் இம்மக்களுக்கு தனியான மாவட்டம், மாகாணம் அல்லது தனியான அலகு கேட்பது  ஒற்றையாட்சி உக்கிரமடைந்து வரும் இலங்கை அரசியலில் எந்தளவு சாத்தியமானது என்பது சிந்திக்க வேண்டியுள்ளது. அதேநேரம் மனப்பாங்கு ரீதியாகவும் குடியிருப்பு ரீதியாகவும் (10- 20 குடும்பங்களைக் கொண்ட ஒரு லயம். அவ்வாறு 10-15 லயங்களைக்கொண்ட ஒரு தோட்டம்) குழுமமாக வாழுவது மாத்திரமே இப்போதைக்கு மலையக மக்களின் பலம். இவ்வாறு குழுமமாக வாழும் இவர்கள் மொழி அடிப்படையில் ஓர் அடையாளத்தைப் பெறுகின்றனர். பல இடங்களில் சகோதர முஸ்லிம் மக்களுடன் இந்த அடையாளம் வலுப்பெறுகிறது. இதைவைத்து அந்த கிராமத்தின் அதிகாரியை தமதாக்கிக் கொண்டு தமது இருப்பைத் தக்கவைத்துக் கொள்வதற்கான வழியை காணுதல் வேண்டும்.

இது பின்னாளில் கிராமப்பிரிவுக்கு அடுத்ததான பிரதேச செயலகப்பிரிவுகளையும் இப்போதைக்கு இவர்களை உள்வாங்காத உள்ளூர் ஆட்சிமன்ற நிர்வாகத்தையும் இவர்களுக்கு பெற்றுக் கொடுப்பதற்கான அடிப்படையாக அமையும். அவ்வாறில்லாது அவர்களின் பாராளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரிக்கத் திட்டம் போடுவது அத்திவாரமில்லாத கட்டிடத்தில் எத்தனை மாடிகள் கட்டுவது எனும் சிந்தனைக்கு ஒப்பானதாகவே அமையும். 

அரசாங்கம் இப்போதைக்கு வடகிழக்குக்கு வெளியே 28 பிரதேச செயலகங்களின் அரசப்பணிகளை இருமொழிகளிலும் (சிங்களம், தமிழ் )  ஆற்றவேண்டும் என உத்தியோகபூர்வ அறிவித்தல் மூலம் பிரகடனப்படுத்தியுள்ளது. இதில் 20 பிரதேச செயலகங்கள் மலையக மக்களின் செறிவு கூடியவை. இந்த திட்டத்திற்கான புள்ளிவிபர அடிப்படையில் இன்னும் 60 பிரதேச செயலகங்களை இவ்வாறு மாற்றிப் பெறமுடியும். அப்போது மலையக மக்கள் வாழும் பிரதேசம் அதிகம் உள்வாங்கப்படும். சிங்களப் பிரதேசத்தில் வாழ்கின்ற மலையக மக்கள் தமக்கான பணியை தமது மொழியில் ஆற்றும் வசதியை இது பெற்றுக் கொடுக்கும். அதேநேரம் அந்த பிரதேச செயலகப்பிரிவுகளுக்கு கீழாக வரக்கூடிய கிராம நிலதாரி பிரிவுகள் மலையக மக்களுக்கானதாக அமையும்போது இப்போதைய புள்ளிவிபரங்களின்படி 700 முதல் 800 கிராம சபை பிரிவுகள் மலையக மக்களுக்கானதாக அமையும் வாய்ப்புள்ளது. 

தமிழ்மொழியில் நிர்வாகச் செயலாற்றக்கூடியதான பிரதேச செயலகப்பிரிவுகளிலும் கிராமசபை பிரிவுகளிலும் அதிகாரிகளாக மலையகத்தமிழர்களே நியமிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையே இப்போதைக்கு வலுவாக முன்வைக்கப்படுதல் வேண்டும். வடகிழக்கு வாழ் தமிழ் அரசியல் தலைமைகள் இந்த கோரிக்கையை முன்னெடுக்கப் போவதில்லை. ஏனெனில் இதெல்லாம் அங்கு ஏற்கனவே உண்டு. எனவே மலையக மக்களுக்கான கோரிக்கைகள் மலையகத்தில் இருந்தே எழும்ப வேண்டும். அதற்காக அரசியல்வாதிகள் தான் இந்த குரலை எழுப்ப வேண்டும் என்று மௌனித்து  இருப்பது தவறு. அவர்கள் அறியாததையெல்லாம் அவர்களிடம் எதிர்பார்த்து  நிற்பது மகா தவறு. மலையக மக்களுக்கான குரல் மலையக மக்கள்சார் அக்கறையுள்ள அனைத்துத்தரப்புக்களினாலும் எழுப்பப்படுதல் வேண்டும்.  இதுவே எதிர்கால மலையக மக்களின் இருப்பைத் தீர்மானிக்கும்.

திலகருடனான நேர்காணல்: இந்திய வம்சாவழி தமிழர்களைப்பற்றி...வலை நண்பர் சேவியர் இன் மல்லியப்பூசந்தி திலகருடனான நேர்காணலை தமிழோசை பத்திரிகை பிரசுரித்திருந்தது ஈழத்து இலக்கிய ஆர்வலர்களில் ஒருவர், சமூக ஆர்வலர், சிறந்த நண்பர் என நிறைய விடயங்களை திலகர் பற்றிக் கூறலாம்। சேவியருடானான பதிவுத் தகவல் பரிமாற்றங்கள் தான் இந்த நேர்காணலுக்கு வழிவகுத்தது எனலாம்.
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட,அநேக இந்தியர்களால் அறியப்படாத ஒரு சமுதாயம் பற்றிய குறிப்பாகவும் அவருடைய நேர்காணல் அமைந்துள்ளது। அந்த நேர்காணலை இங்கு தருகிறேன்। படத்தை சொடுக்கியும் பார்க்கலாம்।

உங்கள் ‘மல்லியப்பு சந்தி’ கவிதை நூலின் பாடுபொருள் என்ன?

ஒரு உழைப்பாளர் வர்க்கத்தின் வாழக்கைப்பரிமாணத்தையும் அதன் வலிகளையும், அவலங்களையும் பாடுபொருளாகக் கொண்டதே ‘மல்லியப்பு சந்தி’ ஆகும்। இதில் முக்கிய விடயம் இந்த உழைப்பாளர் வர்க்கம் யார் என அடையாளம் கண்டு கொள்வதில்தான் இருக்கிறது।இலங்கையில் மத்திய மலைநாட்டுப் பகுதிகளிலும் தென்பகுதியிலும் தேயிலை இறப்பர் தோட்டங்களில் ‘தினக்கூலிகளாக’ வேலைசெய்யும் தொழிலாளர்களும் அவர்கள் சார்ந்த சமூகமும்தான் ‘மல்லியப்பு சந்தி’ எடுத்துக்காட்டும் மக்களாகும். இவர்கள் ஏறக்குறைய 220 ஆண்டுகளுக்கு முன்பு தெனிந்தியாவிலருந்து குறிப்பாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இருந்து (திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர்) ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் இந்திய அரசாங்கத்தின் ஒப்புதலோடு அழைத்துவரப்பட்டு கூலிகளாக அமர்த்தப்பட்டுள்ளனர். 

என் பாட்டனார் இவ்வாறு வந்தவராவார். இவர்கள் இலங்கைக்கு நடக்கவைத்தே அழைத்துவரப்பட்டனர் என்றும் அவ்வாறு வருகையில் பசியினாலும், நோயினாலும் பாதைகளிலேயே செத்து மடிந்ததைச் சொல்லும் சோக வரலாறும் உண்டு. (பதிவு- மரணத்தில் தொடங்கும் வாழ்வு- மல்லியப்பு சந்தி). இவர்கள்தான் இலங்கையில் பெருந்தோட்டங்களை உருவாக்குவதற்கு உதிரத்தைக் கொடுத்துள்ளனர். இவர்களின் வாழிடமாக 10 ஒ 12 அடிகள் பரப்பளவான அறைகளைக் கொண்டதான தொடர் ல(h)யங்கள் வழங்கப்பட்டன. இன்றும் கூட ழுழு குடும்பமுமே அந்த அவலம் நிறைந்த லைன் அறையில் வாழந்து கொண்டு ( பதிவு – வரையப்படாத லைன்கள் - மல்லியப்பு சந்தி) தினக்கூலிகளாக இருக்கிறார்கள் என்பது அங்கே நிகழ்ந்து கொண்டிருக்கிற மிகப்பெரிய மனித அவலமாகும்.

இந்த மக்கள் எல்லோரும் தமிழர்களா? அவர்களின் இலங்கையின் குடியுரிமை நிலை என்ன?

இவர்களுள் 99வீதமானோர் தென்னிந்திய தமிழர்களே. ஏனையோர் மலையாளிகள் மற்றும் தெலுங்கர் ஆவர். இலங்கையில் அரசியலமைப்பின் பிரகாரம் அங்கு வாழும் மக்கள் தொகையினரின் அளவின்படி இனங்களுக்கு இலக்கம் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தவகையில் சிங்களவர் (01), இலங்கை தமிழர் (2), முஸ்லீம்கள் (3), இந்திய தமிழர் (4) ஏனையோர் (5) எனவும் பாகுபடுத்தப்பட்டுள்னர். அரச பொது படிவங்களில் ‘இனம்’ என ஒதுக்கப்ட்டிருக்கும் கூட்டில் நாம் (4) என பதிதல் வேண்டும். அந்தளவுக்கு இந்திய வம்சாவளி தமிழர்கள் தனியொரு இனமாக தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளோம். இதேநேரம் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பூர்வீகமாக வாழும் இலங்கை தமிழர்கள் (2) என குறிப்பிடுதல் வேண்டும். இவர்களை மையப்படுத்தியே ஈழப்போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. இலங்கைத் தமிழர்கள் பொதுவான வழக்கில் “ஈழத்தமிழர்கள்” என்றும் இந்திய வம்சாவளி தமிழர்கள் “ மலையகத் தமிழர்கள்” என்றும் அழைக்கப்படுகிறார்கள். இனத்தால், மொழியால், பண்பாட்டினால், மதவழிபாடுகளால் (பெருமளவில் இந்துக்கள், அடுத்து கிறிஸ்தவர்கள்) இவர்கள் ஒட்டுமொத்தமாக தமிழர்களே. ஆனால் இவர்கள் வேறுபடுவது “இலங்கையின் குடிமக்கள்” என்ற விடயத்தில்தான்.

இலங்கையில் உள்ள ஏனைய இனங்களில் இருந்து மலையகத்தமிழர்கள் வேறுபடுவது இவர்கள் இன்றும் குறித்த ஒரு சட்டத்தின் கீழ் இலங்கையில் வதிவிட பிரஜைகளாக ( By Registration) பதியப்பட்டிருப்பதுதான். குடியுரிமை (By Decent) உள்ளவர்களாக இல்லை. இவர்களின் பதிவுக்காக இவர்களுக்கு ஒரு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அது கிழிந்தாலோ, தொலைந்தாலோ இம்மக்கள் கிழிந்த அல்லது தொலைந்த பிரஜைகள்தான். அதன் பின் தங்களை அடையாளப்படுத்த பல பிரயத்தனங்களை செய்யவேண்டியிருக்கும். அந்த பிரயத்தனங்களில் தோற்றுப்போன எத்தனையோ பாமரமக்கள் அவர்களின் பிள்ளைகள் அநாதைகளாக வாழ்கின்றனர். அண்மையில் (ஆகஸ்ட் 23 2008) நடந்த மாகாண சபை தேர்தலில் கூட ஏறக்குறைய 10000 பேர் வாக்களிக்க முடியாமல் போன துரதிஸ்டமெல்லாம் நடந்துகொண்டுதான இருக்கிறது. தவிர அபிவிருத்தித்திட்டங்கள் எனும் போர்வையிலும், கட்டாய குடும்பக் கட்டுப்பாட்டுத்திட்டங்கள் மூலமும் மலையக மக்களின் செறிவைக் குறைக்கும் அடக்குமுறைகளும் ஒருபுறம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். (பதிவு: கூடைபுராணம், நமது கதை, விடிவு, மரணத்தில் தொடங்கும் வாழ்வு – மல்லியப்பு சந்தி)

மலையக மக்கள் குடியுரிமை பெறுவதற்கான வழிகள் உண்டா?

நிச்சயமாக உண்டு. இந்தியாவிலிருந்து இந்த மக்கள் இந்திய அரசின் உடன்பாட்டோடுதான் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டார்கள். பின்னர் 1948ம் ஆண்டு இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்த அதேவருடத்தில் மலையக மக்களுக்கான இலங்கை குடியுரிமை சட்டம் இயற்றப்பட்டு பறிக்கப்பட்டது. இவர்கள் நாடற்றவர்களாயினர். பின்னர் அப்போதைய இந்நதிய பிரதமர் சாஸ்திரி அவர்களுக்கும் இலங்கை பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கா அவர்களுக்கும் செய்யப்பட்ட “சிறிமா- சாஸ்திரி” ஒப்பந்தம் மூலம் ஒரு தொகுதி மக்கள் இந்தியாவுக்கு மீண்டும் திருப்பிப் பெற்றுக்கொள்ளப்பட்டனர். 

இவர்கள் இன்று தமிழகத்தின் தென்மாவட்டங்களிலும் ஊட்டி, கொடைக்கானல் பகுதிகளில் தேயிலைத் தோட்டங்களிலும் வாழ்கிறார்கள். அதேநேரம் மலையக மக்களின் ஒரு தொகுதியினரும் இந்தியாவில் அகதியாக முகாம்களில் வாழ்கின்றனர் என்பது ஈழத்தமிழ் அகதிகள் பற்றி தெரிந்த பலரும் அறியாத செய்தி. இந்தியா திருப்பி;பெற்றுக்கொண்டாலும் இந்த மக்களுக்கான புனர்நிர்மாண பணிகளை மேற்கொள்ளாமையினாலேயே இவர்கள் அகதியாக வாழ்கின்றனர்.
நான் இந்தியா வரும்போதெல்லாம் இவ்வாறு திரும்பி வந்த எங்கள் உறவுகளை பார்க்கத் தவறுவதில்லை. என் “மல்லியப்பு சந்தி” தொகுதிக்கான முன்னுரையைக்கூட இவ்வாறு இந்தியா வந்து சேர்ந்த என் உறவுக்காரரான என் குருவிடமே பெற்றுக்கொண்டுள்ளேன் என்பதை குறிப்பிட விரும்புகிறேன். அத்துடன் இந்த உறவுகள் இலங்கையிலிருந்து திரும்பி வருகையில் இந்தியாவை தமது தாய்நாடாக கருதி பெற்றதாயைக் கூட அங்கே தவிக்கவிட்டு வந்த அவல நிலையும் உண்டு.(பதிவு- பொட்டு, மீண்டும் குழந்தையாகிறேன்- மல்லியப்புசந்தி).
மலையக மக்கள் குடியுரிமை பெறுவதற்கான ஒரே வழி அவர்கள் இலங்கையின் குடியுரிமையாளர்களாக பிரகடனப்படுத்தப்படவேண்டியதுதான். இதற்காக சான்றிதழ் வழங்கப்படகூடாது. இதனை இலங்கை அரசாங்கமே செய்யவேண்டும். இதற்காக இந்திய அரசு தனது அழுத்தத்தைக் கொடுக்கவேண்டும். அதனைச் செய்யவேண்டிய கடப்பாடு இந்தியாவுக்கு உண்டு. இப்போது இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மலையக மக்கள் 15 லட்சம் பேறும் இலங்கையின் வதிவிடபிரஜைகளாகவும் இந்திய பிரஜையாக அல்லாமலும் இந்து சமுத்திரத்தில் தத்தளிக்கும் “பார்க்கு நீரிணை”பிரஜைகளாகவுள்ளனர். இந்தியா எங்களைத் திருப்பிப்பெறவேண்டாம். குறைந்த பட்சம் இலங்கை குடியுரிமையாளர்களாக பிரகடப்படுத்துவதற்கான ஏற்பாடுகளையாவது செய்யவேண்டும் என்பதுதான் இந்த மக்களின் எதிர்பார்ப்பாகும்.
இலங்கை எழுத்தாளர்கள் என்றாலே “ஈழப்பிரச்சினையையும்” அதன் பாதிப்புக்களையும் தான் எழுதுவார்கள் எனும் நிலை தமிழகத்தில் உண்டு. அதன் காரணம் என்ன நினைக்கிறீர்கள்?
நான் மேலே சொன்ன விடயங்கள் பற்றிய தெளிவின்மை ஒரு காரணமாக இருக்கலாம். அல்லது ஈழப்பிரச்சினையின் வியாபகமாக இருக்கலாம். 

அதேநேரம் மலையக மக்களுக்கும் ஈழப்பிரச்சினைக்கும் தொடர்பில்லை என சொல்லிவிடமுடியாது. ‘தமிழர்கள்’ என்ற பொது அடையாளத்தினால் ஈழப்பிரச்சினையின் பாதிப்புக்களில் மலையக மக்களும் அடங்குகின்றனர். மலையகத் தமிழர்களில் ஒரு பகுதியினர் 1970களில் இலங்கையின் வடகிழக்குப் பகுதிகளில் குடியேறிவாழ்கின்றனர். 

அவர்கள் நேரடியாக யுத்தத்தினால் பாதிப்படைகின்றனர். தவிர நான் சொன்ன பிரஜாவுரிமை பிரச்சினை காரணமாக ஆள் அடையாள அட்டை வழங்கப்படாத அல்லது அடையாள அட்டை இருந்தாலும் தமிழர்களென்ற காரணத்தினால் சந்தேகத்தின் பேரிலும் ஏராளமான மலையக இளைஞர் யுவதிகள் ஈழப்பிரச்சினையின் பெயரில் கைதுசெய்யப்பட்டு சிறையிலடைக்கப்படுகின்றனர்.

மலையக மக்களின் வாழ்க்கையைபற்றி மட்டும் பாடுவது ஈழம் என்ற முதன்மை பிரச்சினையின் தீவிரத்தை நீர்க்கச்செய்யாதா?

நிச்சயமாக இல்லை. பாரதி சாதியத்துக்கு எதிராகவும் பெண்விடுதலைக்காகவும் பாடியதனால் அதேகாலத்தில் அவனது சுதந்திரத்துக்கான பாடுகை நீர்த்துப்போனதா என்ன? முதலில் ஈழத்து தமிழ் இலக்கியம் பற்றி புரிந்துகொள்ளுதல் வேண்டும். பேராசியர் கா.சிவத்தம்பி அவர்கள் இப்படி கூறுகிறார். ‘ஈழத்து இலக்கிய நதி என்பது பல ஓடைகளின் சங்கமிப்பாகும். இதில் யாழப்பாணம் வரும், மட்டக்களப்பு வரும்,( வடக்கு, கிழக்கு) கொழும்பு வரும், இஸ்லாமிய வாழ்க்கை வரும், மலையக வரும். இந்த எல்லா ஓடைகளினதும் சங்கமிப்புதான் ஈழத்து தமிழ் இலக்கிய நதியின் பிரவாகமாகும்’.(மூலம்- ‘மல்லியப்பு சந்தி’ இறுவட்;டு அறிமுக உரை).எனவே ஈழத்து இலக்கியப்பபரப்பில் மலையக இலக்கியத்துக்கு தனியான ஒரு இடமுண்டு. மலையக இலக்கியம் என்று வரும்போது மலையக மக்களின் வாழ்க்கையையும் வலிகளையும் பாடுவதுதான பொருந்தும். அதுதானே சரியானதும் கூட. 

அதனையே மல்லியப்பு சந்தி யும் செய்கிறது. அதே நேரம் பொதுப்படையான அடக்குமுறைகளுக்கு எதிராகவும் நாம் பாடாமலில்லை. (பதிவு:- வேள்வி தீயொன்று வேண்டும், பிரிவு, - மல்லியப்பு சந்தி)அடிப்படையில் குடியுரிமை என்ற கோவணத்தடனாவது வாழும் இலங்கைத் தமிழர்கள்களோடு வாழும் மலையக மக்கள் அந்;த குடியுரிமை என்ற கோவணம் கூட இல்லாமல் நிர்வாணமாக நிற்கையில் அதுபற்றி தனியாக பேசுவது, பாடுவது எந்தவகையிலும் ஈழப்பிரச்சினையை நீர்க்கச்செய்யாது என நினைக்கிறேன். ஈழப்பிரச்சினைக்கு தீர்வாக முன்வைக்கப்பட்ட ‘திம்பு கோட்பாட்டில்’ (பூட்டான் நாட்டில் நடைபெற்றது) இந்தியா வம்சாவளி மக்களுக்கு குடியுரிமை வழங்கப்படவேண்டும் எனும் கோரிக்கை தமிழர் தரப்பில் முன்வைக்கப்பட்டமையை நன்றியுடன் நினைவு கூரக்கடமைப்பட்டுள்ளேன்.

இலங்கையில் மலையக மக்களின் நாட்கூலி 170 ரூபா அரிசி 65 ரூபா என்று அறிகிறோம். இந்த நிலை தமிழர்களுக்கு மட்டும் தானா?

இல்லை. விலைவாசி உயர்வு என்பது எல்லோருக்கும் பொதுவான பிரச்சினைதான். ஆனால் மலையக மக்களுக்கான பிரச்சினை வருவாய் சம்பந்தப்பட்டதுதான். ஏனைய சமூகங்களைவிட இந்த மக்களின் வருவாய் அளவு மிகக்குறைவாகும். மலையகத்தமிழர் பதினைந்து லட்சம் பேரில் 90 வீதமானோர் தொழிலாளர் சார்ந்த குடும்பங்களாகும். ஏனையோர் அரச, தனியார் துறைகளிலும் வியாபாரத்துறையிலும் ஈடுபட்டுள்ளனர். தொழிலாளி ஒருவருக்கான நாளொன்றுக்கான அடிப்படை சம்பளம் 170 ரூபா. சராசரியாக ஒரு குடும்பத்தில் ஐந்துபேராகும். குடும்பத்தலைவன், தலைவி இருவரினதும் உழைப்பு ஒருநாளைக்கு 340 ரூபா (இந்திய மதிப்பில் 125ரூபா). இப்போது இந்த குடும்பத்தின் உணவு கல்வி, சுகாதாரம் ஏனைய நலன்களின் நிலையை நீங்களே புரிந்துகொள்ளலாம். (பதிவு – ஒப்பந்தம்- மல்லியப்பு சந்தி)

இலங்கைத் தமிழர்களுக்காக தமிழகமக்கள் சட்டத்திற்கு உட்பட்ட வகையில் என்ன செய்யலாம் என நினைக்கிறீர்கள்?

இலங்கைப்பிரச்சினை தொடர்பாக தமிழகத்தில் சிலரினது அரசியல் விளையாட்டுக்களை தவிர்த்து விட்டுப்பாரத்தால் தமிழக மக்களிடையே இருக்கும் ஆத்மார்த்தமான ஆதரவினையும் பற்றுதலையும் எந்த வகையிலும் குறைத்து மதிப்பிடமுடியாது. அதனையும் தாண்டி உங்கள் சட்டவரையறைக்குள் என்ன செய்யலாம் என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும். ஆனால் மலையக மக்கள் தொடர்பில் தமிழக மக்கள் அறிந்து கொள்ளவேண்டும் என எதிர்பாரக்கிறோம். நாங்கள் நேரடியாக தமிழகத்தில் உறவுகளைக் கொண்டுள்ளதோடு இன்றும் கூட இந்திய வம்சாவளியினர் என்றே பதியப்பட்டும் அழைக்கப்பட்டும் வருகிறோம். இந்தியாவின் ஆதரவை நாங்கள் எதிர்பார்ப்பதில் நியாயம் இல்லாமலில்லை. 

தமிழக வணிக சஞ்சிகை ஒன்று 10 வருடங்களுக்கு முன்பு ஒரு குறிப்பு எழுதியிருந்தது. அதில் ‘இலங்கையில் மலைசாதி மக்கள் ஒரு தொகுதியினர் வாழ்கின்றனர். அவர்களும் தமிழ்தான் பேசுகிறார்கள்’ என குறிப்பிடப்பட்டிருந்தது கண்டு மனம் நொந்துபோனேன். இந்திய வம்சாவளி தமிழர்களாக மலையக மக்கள் என தமது தேசியத்தை வலியுறுத்தி நிற்கும் ஒரு சமூகத்தை இது கேவலப்படுத்தும் செயலாகும். நடைமுறையில் தங்கள் வீட்டுசுவரில் காந்தி முதல் எம்.ஜி.ஆர் வரை படமாக தொங்கவிட்டுக்கொண்டும் ‘வடிவேலு’வின் பேச்சு நடையை ஒப்புவித்துக்கொண்டும், மலையக தமிழரான முரளிதரன் பந்து வீசும்போது கூட அதற்கு டெண்டுல்கர் சிக்ஸர் அடிக்கவேண்டும் என ஆசைப்பட்டுக்கொண்டிருக்கும் இந்திய வம்சாவளி தமிழர்களை இந்தியா அடையாளம் காணாமல் இருப்பது துரதிஸ்டமே. இந்தியாவில் மலையக தமிழர்கள் இன்றும் ‘அகதியாக’ வாழ்கிறார்கள் என்பதை நீங்கள் அறிவீர்களெனில், இலங்கையில் எமக்கு குடியுரிமை கிடைக்கவேண்டும் என வலியுறுத்துவீர்களெனில் அதுவே நீங்கள் எமக்கு தரும் தார்மீக ஆதரவாகும். 
இந்தியா மீது நாம் வைத்திருக்கும் நம்பிக்கையின் எதிர்பார்ப்பும் இதுவேயாகும்.

ஒட்டுமொத்தமாக மலையக மக்களின் வாழ்க்கை தரம் உயர என்ன செய்யலாம் என நினைக்கிறீர்கள்?

இயல்பான போக்கில் அயராத முயற்சியினால் இந்த மக்கள் தமது வாழக்ககைத் தரத்தை உயர்த்த முயற்சித்துக்கொண்டுதான இருக்கிறார்கள். இப்போது கணிசமான அளவில் படைப்பாளிகள், பட்டதாரிகள், ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள்,ஒரு சில பேராசியர்கள் என விரிந்து செல்கிறார்கள். இலக்கியதுறையில் காத்திரமான வளர்ச்சியை பதிவு செய்துள்ளனர். ஆனால் அரசியல் ரீதியாக காத்திரமான தலைமைத்துவத்துக்கான தேவை நிலவுகிறது. அரசியல் ரீதியாக பலம் உறுதிப்படுத்தப்படுகின்றபோது வாழ்க்கைத்தரம் உயர வாயப்புகள் இருக்கின்றன. அதற்கு ‘குடியுரிமை’ என்கிற பிரகடனம் இன்றியமையாதது. இல்லாத பட்சத்தில் இந்த வளர்ச்சி இரட்டிப்பாக இன்னும் இருநு}று ஆண்டுகள் தேவைப்படலாம்.

சந்திப்பு: சேவியர்

இந்திய வம்சாவளி மலையகத் தமிழ் மக்கள் - மல்லியப்பு சந்தி திலகர்மல்லியப்பூ சந்தி திலகர் மலையக மக்களின் பிரச்சினைகளை வெளியுலகுக்கு கொண்டுவருவதில் பெரும் பங்காற்றிக்கொண்டிருப்பவர்। தன்னலம், அரசியல்அடிபணிவுகள் இல்லாமல் சுயமாக இயங்கும் திலகர் புதிய மலையகத்துக்கு எழுதிய பின்னூட்டம் ஒன்றை பதிவாக இங்கு தருகிறேன்।


"..................... மலையக மக்களின் போராட்டங்கள், அவர்களின் அன்றாட வாழ்வியல் பிரச்சினைகள் குறித்துப் பதிவாவதென்பது குதிரைக் கொம்பாகத்தானிருக்கின்றது। இன்று இலங்கையில் வெளிவரும் ஒரு சில பத்திரிகைகளின் வாயிலாக கிடைக்கின்ற செய்திகளைத் தவிர வேறு வழியில் மலையக தேசத்தின் பிரச்சினைகள் வெளிவருவதில்லை. இலங்கைக்கு வெளியே சொல்லவே வேண்டாம். எத்தனைபேருக்கு ஈழப் பிரச்சினை குறித்து தெரிந்திருக்குமளவுக்கு மலையகப் பிரச்சினை பற்றித் தெரிந்திருக்கிறது ? ......................"

"..................... அவர்களை கடுமையாக சுரண்டிக் கொழுக்கும் வர்த்தக சமூகத்தினர், அவர்களின் பிரச்சினைகளை வெறும் தமது பிழைப்பு அரசியலுக்கு பயன்படுத்திவரும் அரசியல் சக்திகள், சாதியக் கட்டமைப்பை நிலைநிறுத்துவதில் போட்டியிடும் ஆதிக்க சாதிக் குழுக்கள், பேரினவாத மயப்படுத்தப்பட்டுள்ள சிங்கள சிவில் சமூகத்தவரால் எதிர்கொண்டு வரும் வன்முறைகள் என எத்தனை எத்தனையோ கொடுமைகள் தினந்தோறும் நடக்கையில் அவர்களுக்காக பேசுவதையோ போராடுவதையோ அல்லது தார்மீக ஆதரவையோ தாம் தர வேண்டாம் அவர்களின் பிரச்சினைகளை வெளி உலகுக்கு கொணர்வதில் எமது பங்களிப்பு என்ன? ............"

"..................... இந்த சைபர் ஸ்பேஸ் என்று நாம் கூறுகின்ற வெட்டவெளிக்குள் சகல கொடுக்கல் வாங்கல்களையும் செய்து இன்று பெரும் மாநாட்டையே நடத்துகின்றோம். ................."

"..................... ஆனால் இன்று மின்சார வசதிகளைக் கூட அடையாமல், கல்வி ரீதியில் வளாச்சியடைய விடாமல், வெறும் 1 ரூபா சம்பள உயர்வுக்காக போராடிக் கொண்டிருக்கும் மலையக மக்கள் குறித்து எந்தவித விபரங்களையும் உலகமறியாத வண்ணம் உள்ளன. ........."

"..................... ஈழத் தமிழர்கள் கொண்டுள்ள வளங்கள், ஆற்றல்கள், வாய்ப்புக்கள் மலையக மக்களுக்கு இல்லை. சக தேசத்தை சேர்ந்தவர்களின் பிரச்சினைகளை வெளிக்கொணர்கின்ற போக்கை ஈழப் போராட்ட சார்புத் தகவல் தொட்பூடகங்களில் கூட காணமுடிவதில்லை. அப்படியும் வெளிவந்து விட்டால் அவை எதிரியை அம்பலப்படுத்துவதற்கான வழிமுறையாகத் தான் இருக்கின்றதே ஒழிய, மலையக தேசத்தின் பிரச்சினையில் கொண்டுள்ள பிரக்ஞையால் அல்லவென்றே கூறலாம். ........."

"..................... தமிழகத்தை மையமாகக் கொண்டும் சிங்கப்பூர், மலேசியா மற்றும் வேறு புகலிட நாடுகளில் இருந்தும் பல இணையத்தளங்கள் கூட அதிகரித்தவண்ணம் உள்ளன. ஆனால் இதில் எத்தனை தூரம் மலையகத்தவர் பற்றிய குறைந்தபட்ட போராட்டங்கள், கோரிக்கைகள் கூட பதிவாகின்றன?..................."

"..................... நிச்சயமாக மலையகத்தவர் பற்றி எமது அக்கறையின்மையையும், அசட்டையையும் நாம் ஒப்புக் கொண்டாக வேண்டும். ................"

"..................... இத்தகைய பின்னணியில் இருந்து மலையக மக்களின் இன்றைய நிலைமைகள் பதிவாகாததையும் நோக்க வேண்டும். இன்று தமிழ் தேசப் பிரச்சினையை சர்வதேச அளவில் கரிசனைக்குரியதாக்கிய தகவல் தொழிநுட்பத்தின் பங்கை நோக்க வேண்டும். இன்று தமிழர்களுக்கெதிராக மேற்கொள்ளப்படும் இன அழிப்புக் குறித்த செய்திகள் வேகமாக உலகெங்கும் சென்றடைகின்றன. உலகின் பலமான நாடுகளின் உதவியுடனும் ஒரு அரசையும் கொண்டிருக்கின்ற சிங்கள பேரினவாதம், தமிழரின் தகவல் தொழிநுட்ப ஆற்றல், வளங்கள் என்பவற்றை எதிர்கொள்ளமுடியாத அளவிற்கு, தடுமாறி நிலைகுலைந்து போகும் அளவிற்கு, தமிழர்கள் தகவல் தொழிநுட்பத்தை அடைந்திருக்கின்றார்கள் ................."

"..................... தமிழ் தேச போராட்ட சக்திகளால் அல்லது அவர்களது ஆதரவாளர்களால் நடத்தப்படுகின்ற ஆயிரக்கணக்கான இணையத்தளங்களிலும் மலையக மக்கள் குறித்த எந்தவித பதிவுகளும் இடம்பெறாதது மிகவும் கவலை தரும் விடயமாகும். சக தேசம் ஒன்று தமது எதிரிகளாலேயே ஒடுக்கப்பட்டுக் கொண்டிருப்பதைக் கரிசனை கொள்ளாததை நாம் குறித்துக் கொள்ளுதல் அவசியம்............"

"..................... மலையக தேசத்தவரைப் பொறுத்தவரை அவர்கள் ஏலவே எதிர்கொள்ளும் அடிமை வாழ்க்கையை விட தமிழ் தேசப் போராட்டத்தின் விளைவாக ஒட்டுமொத்த தமிழர்கள் மீதும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அரச பயங்கரவாதத்திற்கும் பலியாகிவரும் தேசமாக மலையக தேசம் உள்ளாவதைக் கவனித்தாதல் வேண்டும். இந்தியாவின் மீதும் இவர்கள் நம்பிக்கை இழந்து பல வருடங்கள் ஆகி விட்டது. ........"

"..................... இலங்கையில் செயல்படும் தமிழ் தொடர்பூடகங்கள் அனைத்திலும் மலையக மக்களுக்கு எதிரான பாரபட்சங்கள் நிலவுவதை காணமுடியும். மலையக மக்களின் பிரச்சினை குறித்த பிரக்ஞை என்பதை விட மலையக சந்தையை இலக்காகக் கொண்டு தான் இருக்கும். .........."

-திலகர்
(நன்றி திலகர்)


  1. இரண்டாயிரமாம் (2000) ஆண்டு செப்டெம்பர் மாதம் சென்னையில் இடம்பெற்ற தமிழினி மாநாட்டில் இலங்கை பத்திரிகையாளர் 'சரிநிகர்' என். சரவணன் (தற்போது புலம்பெயர்ந்து ஐரோப்பிய நாடொன்றில் வாழ்வதாக அறிகிறேன்). அவர்களால் வாசிக்கப்பட்ட மலையகத்தவர் பற்றிய ஒரே ஒரு கட்டுரையின் மேற்கோள்களே மேலே காட்டப்பட்டன. (விரிவான கட்டுரையை தொடர்ச்சியாக வரும் பதிவுகளில் தர முயற்சிக்கிறேன்)


மலையக நாட்டார் பாடல்கள்மலையக நாட்டார் பாடல்களை கொஞ்சம் இங்கு அறிமுகப்படுத்தலாம் என நினைக்கின்றேன் நண்பர்களே.

உங்கள் கருத்துக்கள் முக்கியம்.

மலையக நாட்டார் பாடல்கள் தமிழகத்திலிருந்து மக்கள் கூலிகலாக இலங்கைக்கு இடம் பெயர்ந்த போது அம்மக்கள் கொணர்ந்தவைகள் தான் இந்த நாட்டார் பாடல்கள். அம்மக்கள் இலங்கையில் பணிபுரியும் காலத்தில் அவர்களுக்கு ஏற்ப்பட்ட‌ அநீதிகள், இன்னல்களை வெளிப்படுத்தும் முகமாகவே அனேகமான மலையக நாட்டார் பாடல்கள் காணப்படும்.

இப்பாடல்கள் யாவும் எங்கும் எழுதப்பட்டவை அல்ல அவர்கள் வாழ்வோடு பின்னி பினைந்தவை என்றால் மிகையாகாது. இப்பாடல்களை அலைசிபார்தோமானல் அவர்களின் இன்னல்களும் அநீதிகள் , இவர்களுக்கு எத்தரப்பிடமிருந்து கொடுமைகள் இழைக்கப்பட்டன என்பது வெளிச்சமாகும்.

மலையக நாட்டார் பாடல்களில் பபூன் பாடல்கள், நாடகப் பாடல்கள், சமூக எழுச்சிப் பாடல்கள், வீதிப் பாடலகள், பஜனை பாடல்கள், நாட்டுப்புற பாடல்கள், கேலிப் பாடல்கள், கோலாட்டப் பாடல்கள், கூத்துப் பாடல்கள் என ஏராளமான வகைகள் உண்டு.

1972 -‍‍ 1976ம் ஆண்டுகளில் சிறிமாவோ பண்டாரநாயக்க ஆட்சியின் போது ஏற்ப்படுத்தப்பட்ட சுய உற்பத்திக் கொள்கையினால் (உள்நாட்டு உற்பத்தி) அதிகமாக மலையக மக்கள் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. சொந்த விவசாய நிலமற்ற தோட்ட தொழிலாளர்கள் உணவுப்பொருட்களை உற்பத்தி செய்வதற்க்கு வழியிலாம் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள். அந்த வேதனை எடுத்து கூறும் பாடலே இது!


பண்டாவின் ஆட்சியிலே.. - நாங்கள்
பட்டினியில் வாடலானோம்...
அதை நினைத்துப் பார்க்கையிலே நெஞ்சம்
பதை பதைத்து துடிக்குதடீ தங்கமே தங்கம்

அரிசியில்ல மாவுமில்ல தங்கமே தங்கம் - நமக்கு
ஆட்டா மாவும் பஞ்சமாக்கி தங்கமே தங்கம்
சோறுயில்ல ரொட்டியில்ல தங்கமே தங்கமே - நமக்கு
சோளம் மாவும் பஞ்சமாச்சி தங்கமே தங்கம்

மலைநாட்டு மக்கள்ளெல்லாம் தங்கமே தங்கம் - நாங்க‌
மாண்டு மடியலாமோ தங்கமே தங்கம் - நாங்க‌
மரவள்ளியைத் தேடலாமோ தங்கமே தங்கம்

சேந்து மடியலாமோ தங்கமே தங்கம் - நமக்கு
சேமங்கீரை பஞ்சமாச்சி தங்கமே தங்கம்

தட்டு முட்டுச் சாமானெல்லாம் தங்கமே தங்கம் - இங்கே

தவிடு பொடியாச்சுதடி தங்கமே தங்கம்
தவிடு பொடியாச்சுதடி தங்கமே தங்கம் - நம்ம‌
தாலிமணி பறிபோச்சு தங்கமே தங்கம்..!

ஒரு ராத்தல் பானுக்குத்தான் தங்கமே தங்கம் - நாம‌
ஓடி யலைஞ்சோமே தங்கமே தங்கம்
ஓடி யலைஞ்சோமே தங்கமே தங்கம் - நாம‌
ஒரு யாரு சீத்தைக்குதான் தங்கமே தங்கம்.

(அரிசியில்ல)

பின் குறிப்பு: மலைக நாட்டார் பாடல்கள் பெரும்பாலானவைகள் பேச்சு வழக்கு மொழியிலே காணப்படும். எழுதிவைக்கப்படாத காவியங்கள் நிலைப்பதற்கில்லை எனவே இங்கு சேமித்து வைப்பது பொருத்தமாகும்.

நன்றி - கலை இராகலை

தெணியானின் “ஒடுக்கப்பட்டவர்கள்” ஒரு சுருக்கமான விமர்சனக் குறிப்பு - லெனின் மதிவானம்

தெணியான்

தெணியான் இலங்கை தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடத்தக்க முற்போக்கு எழுத்தாளர்களில் ஒருவர். கடந்த நான்கு தசாப்தங்களுக்கு மேலாக முற்போக்கு இலக்கியத்தின் பரிமாணத்திலும், அப்பரிமானம் ஆழமாகவும் அகலமாகவும் வளத்தெடுக்கப்பட வேண்டும் என்பதிலும் ஆழ்ந்த அக்கறையுடன் செயற்பட்டுவருபவர். கலை இலக்கிய அரசியல் துறைகளில் இன்று முனைப்புற்றுவருகின்ற குழு இழுபறிநிலை கலையப்படவேண்டும் என்பதிலும் அதற்கு மாறாக மார்க்சிய முற்போக்கு அணிகள் யாவருக்கும் பொதுவான எதிரிக்கு எதிராக அனைத்து ஜனநாயக முற்போக்கு சக்திகளும் ஐக்கியப்பட வேண்டும் என்பதிலும் உறுதியாக நின்று செயற்பட்டு வருகின்றவர். யாழ்பாண சமூகச் சூழலில் வேதனைமிக்க அனுபவங்களால் சுட்டுப் பொசுக்கப்பட்டது தான் தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கை. அத்தகைய குருரமும், கொடுமையும் நிறைந்த ஒரு சமுகச் சூழலின் நடுவே- தாழ்த்தப்பட்டவர்களின் மீது கருணைக்காட்டாத சமூகச் சூழலின் நடுவே தோன்றியவர்  தெணியான். மனித குல விடுதலைக்கான இடையாறாத போராட்டத்தில் இலக்கியத்திற்கும் முக்கிய பங்குண்டு என்ற நம்பிக்கையில் கடந்த நான்கு தசாப்தங்களாக எழுதிய சிறுகதைகளின் கதம்பமாக அவரது “ஒடுக்கப்பட்டவர்கள்” என்ற தொகுப்பு வெளிவந்தள்ளது. 
யாழ்பாண சமூகவமைப்பானது இந்துமத செல்வாக்கிற்குட்பட்டதொன்று என்ற வகையில் சதுர்வர்ண வேறுபாட்டினை கொண்டுள்ள போதும், சதுர்வர்ண வேறுபாட்டின் ஆதிக்க சக்தியான பிராமணர்கள் இங்கு இல்லை. மாறாக யாழ்பாணத்தில் வாழ்ந்து வருகின்ற வேளாளர் என்ற சாதியினரே பொருளாதார ஆதிக்கமும் அதனூடான சமூக ஆதிக்கமும் கொண்டவர்களாக விளங்குகின்றனர். இவ்விடத்தில் யாழ்பாண சமூகவமைப்பில் நிலவுகின்ற சாதிய அடக்கு முறையை இந்திய சாதிய அடக்கு முறையுடன் ஒப்பு நோக்குகின்ற போது யாழ்பாணத்தில் நிலவுகின்ற சாதிய அடக்கு முறையே கொடுமையானதாக காணப்படுகின்றது. யாழ்பாண வேளாளர் என்ற சாதியினர் பொருளாதார ஆதிக்கம் கொண்டவர்களாக காணப்படுகின்ற அதே சமயம் சதுர்வர்ண அடிப்படையில் அவர்கள் பிராமணர்களை விட கீழானவர்களாகவே கணிக்கப்படுகின்றனர். இந்த தாழ்வு மனப்பான்மையும் யாழ்பாண சமூகவமைப்பில் சாதியம் இறுக்கமடைவதற்கு முக்கிய காரணமாகும்.

பொருளாதார ஆதிக்கம் பெற்றிருந்த வேளாளர் சாதியினர் தமக்கு தேவையான அடிமைகளை தென்னாட்டிலிருந்து இறக்குமதி செய்ததுடன் தத்தமது கிராமங்களில் வாழ்ந்து வந்த அடக்கியொடுக்கப்பட்ட மக்களையும்; தமக்கு அடிமைகளாக்கி கொண்டனர். அவர்களின் உழைப்பை ஈவிரக்கமின்றி சுரண்டினர். இதற்கு மாறாக பெண்களை திருமணம் செய்து கொடுககின்ற போதும் தமக்கு அடிமைகளாக வாழ்ந்த அடக்கியொடுக்கப்பட்ட மக்களை சீதனப் பொருட்களுடன் சேர்த்து வழங்குகின்ற முறையும் நிலவியது. இத்தகைய சமூகப் பின்புலத்தில் தன் பெண்சாதியின்ர தீட்டுத் சீலையை இன்னும் வெளுத்துக் கொண்டு வரவில்லை என்தற்காக முதியோருவரை தாக்கும் இடிமாடு போல நிற்கும் தடியன். அந்த கொடுமையை பார்த்து கைகட்டி நிற்கும் மக்கள். எதனையுமே கேட்கவிடாது தடுக்கும் குடிமை முறை இவற்றையெல்லாம் உணர்வு குன்றாத வகையில் சித்திரிப்பதாக “குடிமை” என்ற கதை அமைந்துள்ளது. அவ்வாறே பொருளாதார அதிக்கம் இல்லாத பிரமணர்களின் வாழ்வு எத்தகைய துயரகரமானது என்பதையும் அவர்களின் வாழ்வாதாரத்தை பயன்படுத்தி அதிக்க சக்திகள் எவ்வாறு தமக்கு சாதகமான வகையில் அவர்களைப் பயன்படுத்திக் கொள்கின்றார்கள் என்பதையும் “காவல் அரண்கள்” என்ற கதையில் பதிவாக்கிருக்கின்றார். தமிழகத்தில் பிராமணர்களை வர்க்க எதிரியாக காட்டுவது போல   யாழ்பான சமூகத்தில் காட்டமுடியாது என்ற வகையில்  கோயில் முகாமையாளரான  வெள்ளாளருடன் தாழ்த்தப்பட்ட மக்களுடனான  மோதலை காட்டியமை இக்கதையாசிரியரின் தெளிந்த பார்வையை காட்டுகின்றது.  

மேலும், சாதியத்தின் முக்கிய குணாதியங்களில்;; ஒன்று தான் ஆதிக்க சாதி காரரொருவருக்கு தன்னை உயர்ந்தவனாக கருதும் பண்பையும்; அவ்வாறே தாழ்த்தப்பட்ட சாதிகாரரோருவருக்கு தன்னை தாழ்வவராக கருதும் பண்பையும்; வழங்கியதாகும். இரண்டாயிரம் ஆண்டுகளாக செல்லரித்துப் போன இக்கலாசார ஆதிக்கம் சமூகத்தில் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்துகின்றது என்பது முக்கியமாக கவனத்தில் எடுக்கப்பட வேண்டிய தொன்றாகும். “உயர் மானம்” என்ற கதையில் தன மகள்; பாலியல் தேவையை ப+ர்த்தி செய்வதற்காக தாழ்த்தப்பட்ட இளைஞன் ஒருவருடன் உடலறவு கொண்டதை அறிந்த ஆசார சீலரான அவளது தந்தை “சீ ..உனக்கு எங்கடை ஓராள் கிடைக்கவில்லையா?” என தன்மகள் பாலியல் சோரம் போனாலும் அது சாதி புனிதத்தை பாதித்து விடக் கூடாது என ஏங்குவதைக்  காண்கின்றோம். அவ்வாறே காலக்கிரகத்தில் ஏற்பட்ட சமூகமாற்றங்கள் சாதிய சமூகத்தில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கின்றது என்பதை “சமூகங்கள் மாறும் போது…..” என்ற கதையில் தமது குடிமையான நல்லானை பார்த்து காறித்துப்பும் கமக்காரர் சிதம்பரபவ்பிள்ளையாரை பார்த்து அவனும் காறித்துப்பும் கலக உணர்வு படைப்பாக்கப்பட்டுள்ளது. அவ்வாறே “தொழும்பு” என்ற கதையில் உயர்சாதியினர் தமக்கு கையாளாக்கி பிரேதம் சுடுவதற்காக நியமிக்கப்பட்ட சிவலையன் பல சமயங்களில் தம் வர்க்கத்தினருக்கே துரோகியாக இருக்கின்றான். பின் தனக்கு வழங்கப்பட்டது அரசாங்க வேலை இல்லை என்பதை- தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து சிதம்பரபிள்ளையாரை ஏசுகின்ற போது அவர் அவனை அடிக்க உலக்கையை தூக்கிகொண்டு ஆவேசமாக வர சிவலையன் தன் இடுப்பிலிருந்த கத்தியை எடுத்து நீட்ட சிதம்பரபிள்ளளையார் பின்வாங்கும் காட்சி தாழ்த்தப்பட்ட மக்களின் கலக உணர்வுகளை பிரதிப்பலிப்தாகவே உள்ளன.   இக்கதைகளில் பழிவாங்குகின்ற உணர்ச்சிக்கு பதிலாக இரு சாதிகளின் வர்க்கங்களின் பகையுணர்வ காட்டப்படுகின்றது. அந்தவகையில் இக்கதைகள் சோகத்தை இசைத்hதலும்  அவைக் கூட தாழ்த்தப்பட்ட மக்களின் ஒற்றுமையையும் போராட்டத்தையும் சமூமாற்றச் சக்திகளை நோக்கி கொண்டு செல்வதாகவே படுகின்றது. 

சாதிய உணர்வுகளும் வர்க்க வேறுபாடுகளுமே யதார்த்தமாகிவிட்டதோர் நசிவு தரும் சூழலில் நைந்து போன பரிமாணங்களையும் கல்வித் துறைச் சார்ந்தவர்களும் சந்திக்க தவறவில்லை. இத்தகைய சிதைவுகளின் பின்னணியில் மனித ஆளுமைகளின் கம்பீரமும் பங்களிப்பும் காலத்திற்கு காலம் வேறுப்பட்டும் மாறுப்பட்டும் வந்துள்ளது. அதிகார பீடங்களை சேர்ந்தவர்களுக்கு சௌகாரியங்களை ஏற்படுத்தும் புனிதங்களிலிருந்து வழியும் சீழினை நக்கி பிழைப்போட்டும் கல்வியலாளர்கள் இங்கே குறைந்தபாடில்லை. இந்த பின்னணியில் ”இனினொரு விதி செய்வோம் ” என்ற பாரதியின் நாகரிகத்தில்; கால் பதித்து – தம் கரங்களை உயர்த்தி கலகக் குரலை ஒலிக்க நிர்ப்பந்திக்கப்பட்ட எழுத்தாளர்கள் ஒடுக்குமுறையைஇ ஆதிக்கத்தை எதிர்த்து அம்பலப்படுத்துகின்ற எழுத்துக்களை வெளிக் கொணரத்தவறவில்லை.   தாழ்த்தப்பட்ட மக்கள் கல்வி பெறுவதற்கு எதிரான சூழலையும் அனைவரக்கும் கல்வி நாகரிகம் என்றெல்லாம் புலம்ப்pத் திரியும் கல்வி துறைசார்ந்தவர்களிடமும் சாதிய உணர்வுகள் எவ்வாறு முனைப்புற்றிருந்தது என்பதனையும் இவ்வாசிரியர் அம்பலபடுத்த தவறவில்லை. “அவர்கள் விழித்துக் கொண்டார்கள்”, “ பொருந்தாத தீர்மானங்கள்”, “மாற்றம் வந்து விட்டது”, “இவன் மிச்சம் நல்லவன்” “எப்டியும் பெரியவன்தான்’ முதலிய கதைகள் இதற்கு தக்க எடுத்துக்காட்டுகளாகும்.

யாழ்பாண சமூகவமைப்பில் நிலவிய சாதியத்திற்கு எதிரான போராட்டங்கள் ஆங்காங்கே இடம்பெற்று வந்துள்ளன என்ற போதிலும் அதன் ஆரம்பபால போராட்டங்கள் யாவும் ஸ்தானப மயமாக்கப்பட்டவையாக அமையவில்லை. 1910 ஆம் ஆண்டளவில் தோற்றம் பெற்ற வட இலங்கை தொழிலாளர்கள் சங்கம் இத்துறையில் தோன்றிய முதலாவது ஸ்தாபனமாகும். அவ்வாறே சிறுபான்மை தமிழர் மகாசபை நடத்திய சாதிய எதிர்ப்பு போராட்டங்களும் வரலாற்று முக்கியத்துவம் உடையவையாக காணப்படுகின்றன. இவை அடக்கியொடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்கான போராட்டங்களை நடாத்தி சிறுசிறு வெற்றிகளை பெற்றிருந்தாலும் சாதிய ஒடுக்கு முறையின் ஆணிவேரை தொடமுடியாமல் போய்விட்டமை துரதிஸ்டவசமானதொன்றாகும்.

இதன் அடுத்தக்கட்ட நகர்வான தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்கப் போராட்டமானது மக்களின் யதார்த்த வாழ்க்கையுடன் ஒட்டியதாக இருந்தமை அதன் பலமான அம்சமாகும். சாதிய அமைப்பு முறையின் பிரதான மையங்களாக பெரும் ஆலயங்களும் தேனீர் கடைகளும் திகழ்கின்றன என்ற அடிப்படையில் அவற்றினுள் அடக்கி ஒடுக்கப்பட்ட மக்கள் தமக்கான சமத்துவத்தை நிலை நாட்டுவதற்கான போராட்டங்களை முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதில் தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்கம் தெளிவான நிலைபாட்டினை கொண்டிருந்தது. அதனை தலைமை தாங்கிய கம்யூனிஸ்ட் கட்சியும் ~~அடிமை குடிமை முறை ஒழியட்டும், ஆலய தேநீர்க்கடை பிரவேசம் தொடரட்டும்|| என்ற நிலைபாட்டை முன்வைத்தது. மார்க்சியர்களாலும் ஜனநாயக சக்திகளாலும் முன்னெடுக்கப்பட்டபட்ட தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்கப் போராட்டமானது சாதியையும் தீண்டாமையையும் குறி வைத்தே முன்னெடுக்கப்பட்ட போதினும் அப்போராட்டம் சகல விதமான ஒடுக்குமுறைகளுக்கும் எதிரான வர்க்கப் போராட்டம் என்ற விஞ்ஞான தளத்துடன் இணைக்கப்பட்டிருந்தமை அதன் பலமான அம்சமாகும்.  அவ்வகையில் அக்காலக்கட்டத்தில் தோன்றிய கலை இலக்கிய வடிவங்களும் புரட்சிகரமான உள்ளடங்கங்களை கொண்டிருந்த அதே சமயம் மக்களை ஒட்டிய கலை வடிவில் அவை படைப்பாக்கி தரப்பட்டன.  

இந்தச் சூழலில் தாழ்த்தப்பட்ட மக்கள் கோயிலுக்குள் செல்லும் உரிமை என்பது தாழ்த்தப்பட்ட மக்களும் அவர் சார்ந்த ஜனநாயக சக்திகளினதும் போராட்டத்தின் வெளிப்பாடாகும். இக்கதையாசிரியரின் பல கதைகளில் கோயில் நூழைவுப் பற்றி பதிவாக்கப்பட்டுள்ளன .”எல்லைக் கோடுகள்”, “காவல் அரண்கள்” முதலிய கதைகள் இதற்கு தக்க எடுத்துக்காட்டுகளாகும்.

அவ்வாறே இன்று சாதி ஒழிந்து விட்டதாகவும் அத்தகைய சமூவமைப்பை மாற்றியர்கள் தமிழ் தேசியர்கள் என்ற கருத்தும் நிலவுவதைக் காணலாம். சாதியின் பரிமாணங்கள் வெளிப்படையாகவே தொழிப்படுவதை அவதானித்தால் இன்றும் சாதியின் தாக்கம் எந்தளவு தமிழர் சமூவமைப்பில் தாக்கம் செலுத்தி ஒடுக்குமறைகளுக்கு காரணமாக அமைந்திருக்கின்றது என்பதை அவதானிக்க முடியும். அதேசமயம் குறுந் தமிழ் தேசியம் வேர் விட்டு கிளைப்பரப்பியிருந்த காலத்திலும் சாதியத்தின் மோசமான பரிமாணங்கள் எப்படியிருந்தது என்பதை “இன்னுமா” என்ற கதை சிறப்பாக எடுத்துக் காட்டுகின்றது. இக்கதை இவரது பரந்துப்பட்ட இதயத்தை மட்டுமல்ல நேர்மையையும் எடுத்துக் காட்டுகின்றது.  

தாழ்த்தப்பட்ட மக்கள் மத்தியில் ஏற்பட்டு வருகின்ற சமூகப் பெயர்ச்சியையும் அவவ்வாறே அதிக்க சாதியினரிடையே ஏற்;பட்டு(மிக குறைந்த வீதம்) வந்த பொருளாதார விழ்ச்சியையும் இவர் சுட்டிக்காட்டத்தவறவில்லை. “மூன்று தலைமுறைகள்”, “எப்படியும் பெரியவன் தான்”, “கரையை நோக்கி”, “சன்மானம்”, “அசல் யாழ்பாணத்து மனிதன்”, “வரப்புகள் உயர” முதலிய கதைகளில் இவ்வம்சத்தை காணலாம். ஐரோப்பிய சமூகச் சூழலைப் போல தாழ்த்தப்பட்ட ஒருவர் கல்விக் கற்று விட்டாலோ அல்லது வர்க்கநிலை மாற்றத்தை அடைந்து விட்டடாலோ அவருடைய சாதிய இழிவு மாறாது என்பதை எமது சாதிய சமூகத்தின் வரலாறு உணர்த்தி நிற்கின்றது. அப்படியாயின் இத்தகைய அமைப்பை மாற்றி நாகரிகமானதொரு சமூகவமைப்பை ஏற்படுத்துவதற்க  செய்ய வேண்டியவை யாவை என்ற வினா எழுகின்றது. தலித்தொருவரின் சுயசரிதையாக அமைந்த ஜூதான்(எச்சில்) என்ற நூலில் அந்நூலாசிரியர் ஓம்பிரகாஷ் வான்மீகியின் பின்வரும் கூற்று அவதானத்திற்குசியதாகும். 

“ ஒரு நீடித்த போராட்டம், உணர்வுப+ர்வமான போராட்டம், வெளிஉலகிலும், நம் உள்ளங்களிலும் புரட்சிகர மாற்றத்தைக் கொண்டு வரபோகின்ற ஒரு போராட்டம், சமூகமாற்றத்திற்கு வழிகாட்டுகின்ற உணர்வை நோக்கி நம்மை இட்;டுச் செல்கின்ற ஒரு போராட்டம் நமக்க தேவைப்படுகின்றது.” 

மேற்குறிப்பிட்ட இரத்தின சுருக்கமான வரிகளில் வெளிப்பட்டிருக்கும் பண்பாட்டுக்கான போராட்டத்தை வலியுறுத்தி நிற்பதில் இக்கதையாசிரின் கதைகளுக்கு முக்கிய இடமுண்டு எனத் துணிந்துக் கூறலாம்.

இவ்வருடத்தில் இவ்வெழுத்தாளர் மீது சில விமர்சனங்களும் எழுவது தவிர்க்க முடியாததொன்றாகும். சிறுபாண்மை தமிழர் மகாசபை சாதியத்திற்கு எதிராக முன் வைத்த சாத்வீக போராட்டங்களை படைப்பாக்கியதில் வெற்றிப் பெற்ற இக்தையாசிரியர் அதன் அடுத்தகட்டப் போராட்டமான தீண்டாமை வெகுசன இயக்கப் போராட்டத்தை படைப்பாக்க தவறிவிடுகின்றார். அவ்வாறே சாதிய எதிர்ப்பு போராட்டத்தில் தாழ்த்தப்பட்ட சாதியினர் மட்டுமன்று ஜனநாயக நல்லெண்ணங் கொண்ட ஆதிக்க சாதியினரும் தம்மை இணைத்துக் கொண்டதை  இவரது சிறுகதைகளில் காணமுடியாமை துரதிஸ்டவசமானதொன்றாகும். மேலும் தாழ்த்தப்பட்டவர் ஒருவர் முதலாளியானால் அல்லது தாழ்த்தப்பட்ட முதலாளியை எந்த வர்க்கத்தனுள் அடக்குவது. சாதி ஒழிப்பு போராட்டத்தில் மத்தியதர வர்க்க குணாதியம் கொண்டவர்களும், பொருளாதார வசதி வாய்ப்புகளுடன் இருந்தவர்கள் சிலரும் அப்போராட்டத்தை இழிவுப்படுத்தவும் தவறவில்லை. இத்தகையோரை தான் அம்பேத்கர் “தலித் பார்பனர்கள்” என விமர்சனத்திற்குட்படுத்தினார். இவைக் குறித்த பதிவுகளையும் இவரது கதைகளில் காண முடியாதுள்ளது. இவ்வம்சங்களை இக்கதையாசிரியர் கவனத்தில் கொண்டிருப்பாராயின்; சாதிய சமூகத்தின் பன்முகத் தன்னையை வெளிக் கொணர்ந்திருக்க முடியும் என்பது எனது தாழ்மையான விமர்சனமாகும்.

ஆக இக்கதையாசிரியரில்; வெளிப்பட்டு நிற்கும் அரசியல் பண்பாட்டுப் போராட்டம் என்பது தமது கை விலங்கைப் பார்த்து அழுது புலம்பிக் கொண்டிருக்கும் மனிதர்களின் குரலாக அமையவில்லை. சற்றே அந்நியப்பட்டு, உலக அரங்கில் வெற்றிபெற்று வரும் சக்திகளின் குரலாகவும் அமைந்திருக்கின்றது. சமூகத்தில் புறநிலைப்பட்ட வாழ்க்கை மட்டங்களிலுள்ளவர்கள் பற்றிய ஒரு புதிய தரிசனை தான் தமிழ் சிறுகதை இலக்கியத்தில் தெணியானின் வரவைப் பதிவு செய்தது. 

நன்றி: ஜீவநதி


மடகொம்பரை மண்ணும் ஆளுமைகளும்--உபாலி லீலாரத்ன - ஐந்து நூல்கள்

பெஸ்தியன் மாமா

மடகொம்பரை மண்ணும் ஆளுமைகளும் எனும் என் ஊர் சார்ந்த தொடர் குறிப்பொன்றை சில மாதங்களுக்கு முன் முகநூலில் எழுத ஆரம்பித்தேன். சி.வி.வேலுப்பிள்ளை, மேகராஜா(நீலகிரி) ஆகிய ஆளுமைகள் பற்றி இதுவரை எழுதியிருக்கிறேன். இன்னும் பல ஆளுமைகள் பற்றி எழுத எண்ணியுள்ளேன். மடகொம்பரை எனும் எங்கள் ஊர் நிர்வாக ரீதியில் சற்றே குழப்பமான இடஅமைவைக் கொண்டது. அமைந்துள்ள மாவட்டம் நுவரெலியா. ஆனால் ஊரின் கிழக்குப் பக்கம் மிகவுயர்ந்த மலைத்தொடர். இதோ விழுந்துவிடுவேன் என எச்சரித்து நிற்பதுபோல் நிற்கும். ஆனால் ஒரு போதும் எங்கள் மீது வீழந்ததில்லை. அதேபோல் மேற்குப்;பக்கம் பெரும் தாழ் நிலம். பெரும்பாலும் சிங்கள கிராமங்களைக்கொண்டது.

என் ஆரம்பக்கல்வி (சிங்கள மொழிமூலம்) ஆசிரியையான திருமதி.அமரக்கோன் அவர்களின் வீடு, எங்கள் தாத்தாவின் நண்பரான அப்புகாமி சீயா (தாத்தா) வின் வீடு, தோட்டப்பகுதிக்கான கிராம சேவகர் நியமிக்கப்பட்ட அண்மைக்காலத்துக்கு முன்பு வரை இருந்த எங்களுர் கிராம சேவகர் திரு.கோணாரத்ன அவர்களது வீடு என்பன இந்த தாழ்நிலப்பிரதேசத்தில்தான் அமைந்துள்ளன. அந்தப் பகுதியை எங்களுர் பாஷையில் ‘நாடு’ என்று அழைப்போம். கிழக்கே உள்ள மலைப்பகுதியை ‘காடு’ என அழைப்போம். அந்த மலைப்பகுதி பீதுருதலாகலை மலைத்தொடரின் ஒரு பக்கச்சரிவு. ஆக கிழக்கே காடும், மேற்கே நாடும் அமைய இடையே உள்ளதுதான் மடகொம்பரைத் தோட்டம். இந்த தோட்டத்துக்கு கீழாகத்தான் ‘மேல்கொத்மலை நீரத்தேக்கத்திட்டத்தின் நிலக்கீழ் நீர்சுரங்கம் குடைந்தெடுக்கப்பட்டுள்ளது’ தலவாக்கலையில் மறிக்கப்படும் தண்ணீர் இந்த நிலக்கீழ் சுரங்கவழி ஓடி கீழ் கொத்மலை (கடதொரபிட்டிய) பகுதியில் மின் உற்பத்திக்கு வழிகோலும் என்பது திட்டவரைபு.

எங்களுர் மடகொம்பரை பற்றி எழுதிவைத்துள்ள ஒரு கவிதையில் இவ்வாறு சில வரிகளை அமைத்துள்ளதாக இப்போது என் நினைவுக்கு வருகிறது. ‘மேலே குந்தும் மலை வீழ்வேன் என எச்சரித்து நின்றபோதும், மேல் கொத்(து)மலை எங்களைக் குடைந்து கொண்டு சென்றபோதும் இந்த மண்ணிலேயே வாழ்வோம் இந்த மண்ணிலேயே மாள்வோம் இந்த மண்ணிலேயே மீள்வோம் (என தொடர்ந்து செல்லும் வரிகள்) இந்த மண்ணில் ஏதோ ஒரு போராட்ட குணாம்சம் இருந்து வருகின்றமையை தொடர்ச்சியாக அவதானிக்கலாம்.

 இப்போது எங்கள் ஊருக்கு வடக்கே என்ன உள்ளது என்று பார்க்கலாம். வடக்கு –தெற்கே ஓடுவதுதான் 704 ம் இலக்க வீதி. இந்த வீதி தெற்கே தலவாக்கலை நகரையும் வடக்கே பூண்டுலோயா நகர் ஊடாகச் சென்று தவலந்தன்னை எனும் இடத்தையும் இணைக்கிறது. விரிவாகச் சொன்னால் கொழும்பில் இருந்து அவிசாவளை ஹட்டன் வழியாகச் நுவரெலியா செல்லும் வீதியையும், கொழும்பில் இருந்து பேராதெனிய புசல்லாவ வழியாக நுவரெலியா செல்லும் பாதையையும் குறுக்காக இணைக்கும் பாதை. தலவாக்கலை, ஹொலிரூட், வட்டகொடை, மடகொம்பரை, பூண்டுலோயா, சங்கிலிப்பாலம், கொத்மலை (புதிய நகரம்) தவலந்தனை ஆகிய ஊர்கள்தான் இந்த 704 வீதி ஊடறுத்துச்செல்லும் ஊர்கள்.

நாங்கள் நுவரெலியாவுக்கோ அல்லது கொழும்புக்கோ இந்த இரண்டு முனை வழியாகவும் அடைந்துவிடலாம். கொழும்புக்கென்ன? 1980 காலப்பகுதியில் தவலந்தன்னையில் இருந்து யாழ்ப்பாணம் நகருக்கே ஒரே பஸ்ஸில் சென்ற ஞாபகம் (பழம்பிள்ளையார் பஸ்) இன்றும் இருக்கிறது எனக்கு. நுவரெலியா – யாழ்ப்பாணம் பஸ் அந்த வழியாகத்தான் கண்டி (ஏ9) ஊடாகச் செல்லும். ஆனால் இப்போது? எங்களுக்கு கிராம சேவகர்; பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபை போன்ற நிர்வாக பகுதிகள் வடக்கே உள்ள பூண்டுலோயா கொத்மலைப் பக்கம். ரயில்போக்குவரத்து, தபால் நிலையம் மற்றும் பொலிஸ் பிரிவு தெற்கே உள்ள தலவாக்கலைப்பக்கம் (நுவரெலியா பிரதேச செயலகம்). நான் பாலர் வகுப்பை ஆரம்பித்து கொத்மலைப்பக்கம் உள்ள மடகொம்பரை தோட்டத்துப்பாடசாலை. ஆரம்பித்த அடுத்த வருடமே 1980 ல் நாட்டு சூழலை கருத்தில் கொண்டு அப்பா என்னைச் சேர்த்துவிட்டது தெற்கே உள்ள வட்டகொடை சிங்கள வித்தியாலயம். 1983 ல் பாடசாலை சூழ்நிலை சரியில்லாமல் வட்டகொடை தமிழ் வித்தியாலயம். பின்னர் ஊர் சூழலே சரிவராது என நினைத்து வடமாகாண - கிளிநொச்சி (கரடிபோக்கு) சென்.திரேசா (மகளிர்) பாடசாலை. உடனே சந்தேகம் வருமே. மகளிர் பாடசாலையா என ஆம் ஆண்டு ஐந்து வரை அங்கு ஆண்பிள்ளைகளும் படிக்கலாம். சகோதரிகளுடன் என்னையும் சேர்த்து விட்டார்கள். அப்போது அப்பா யாழப்பாணத்தில் தொழில் பார்த்ததனால் இந்த எற்பாடு. பின்னர் 1986 ல் மழை வெள்ளம், யுத்தம் மீண்டும் மலையகம். இப்போது மீண்டும் வடக்கு திசை பூண்டுலோயா பாடசாலை (சாதாரண தரம்), உயர்தரம் மீண்டும் தெற்கு திசை (ஹட்டன் ஹைலன்ஸ்).. உங்களுக்கு வாசிக்கவே ச்சீ…என போயிருக்கும் இப்போது. அப்படியாயின் இந்தப்பள்ளிப் படிப்பை முடிப்பதற்குள் எத்தனை ச்சீ..ப்பட்டிருப்பேன் நான்...

சரி, வடக்கு-தெற்கு பயணத்துடன் தொடர்புடைய விடயத்துக்கு வருவோம். வடக்கே வட்டகொடை தலவாக்கலை நகரத்துக்கு இடையே ஹொலிரூட் எனும் ஒரு தோட்டம் உண்டு. இந்த ஹொலிரூட் தோட்டத்திற்கும் டெவன் தோட்டத்துக்கம் இடையே கொத்மலைஓயா ஆறு ஓடும். ஹோலிரூட் பக்கத்திலே உள்ள யொக்ஸ்போட் தோட்டத்தைச் சேர்ந்தவர்தான் சிவனு லட்சுமணன். டேவன் தோட்டத்தை பகிரந்தளிக்கும் திட்டத்தின்போது டெவன் தோட்டத்தில் போராட்டம் நடந்தது. டெவன் தோட்டத்தை படைகள் சூழந்திருக்க ஆற்றுக்கு அந்தப்பக்கம் இருந்து ஆற்றைக்கடந்து டெவன் தோட்டப்போராட்த்துக்கு வந்தபோதுதான் சிவனு லட்சுமணன் ஆயுத படைகளால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இன்று சிவனு லட்சுமணன் வாழ்ந்த அந்த யொக்ஸ்போட் மண்ணில்தான் இராணுவமுகாம் அமைக்க திட்டமிடப்படுகின்றது. லட்சுமணா?????

இந்த ஹொலிரூட் தோட்டத்திலே நீண்ட காலம், கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்கள் வாழ்ந்தவர்தான் உபாலி லீலாரத்ன. தற்போது கொழும்பு-கொடகே புத்தக நிறுவனத்தில் பதிப்புத்துறையில் கடமையாற்றும் இவர் முன்பு தலவாக்கலை ‘லயன்’ அச்சகத்தில் வேலை செய்துள்ளார். அங்கு பணி புரிந்த காலத்தில் மலையகத்தமிழ் மக்களோடு இணைந்து வாழ்ந்த அனுபவம் அவரை தமிழ் மொழிக்கு பரீட்சயமாக்கியுள்ளது. நன்றாக தமிழில் உரையாடக்கூடிய இவர் அச்சகத்தில் பணிபுரிந்ததனால் தமிழ் வாசிக்கவும் கற்றுக்கொண்டுள்ளார். உபாலி லீலாரத்ன ஒரு அமைதிப்பேர்வழி. ஒரு மொழி தெரிந்த சிலரே துள்ளிக்குதிக்கும்போது இரு மொழி தேர்ச்சி பெற்றும் எளிமையாக இருப்பவர். 
இதுவரை 35 நூல்களை எழுதியுள்ள எழுத்தாளர். அவற்றுள் ஏறக்குறைய 30 நூல்கள் மொழிபெயர்ப்பு நூல்களாம். அதாவது தமிழ் நூல்களை சிங்களத்துக்கு மொழி பெயர்த்துள்ளார். நேற்று (17 சனவரி 2013) கொழும்பு தேசிய நூலக, ஆவணமாக்கல் நிலைய கேட்போர் கூடத்தில் 5 நூல்களை ஒருசேர வெளியிட்டு அசத்தினார் உபாலி லீலாரத்ன. ஐந்து நூல்களும் கொடகே வெளியீடுகள். 5 நூல்களில் மூன்று நூல்கள் தமிழில் இருந்து சிங்களத்துக்கு மொழிபெயர்க்கப்பட்டவை. தமிழ்நாடு கு.சின்னப்பபாரதியின் - சர்க்கரை (சீனி என்ற பெயரிலும்), வவுனியூர் உதயணனின் -பனி நிலவு (சந்த சிசில என்ற பெயரிலும்), மன்னார் எஸ்.ஏ உதயணின் - லோமியா என்ற நாவலை அதே பெயரிலும் மொழிபெயர்த்திருக்கிறார். அது மட்டுமல்லாது ‘பெஸ்தியன் மாமா’ எனும் நையாண்டி கதை ஒன்றையும், ‘தே கஹட்ட’ (தேயிலைச்சாயம்) எனும் மலையக தேயிலைத் தொழில் துறைசார்ந்த நாவல் ஒன்றையும் சுயமாக எழுதி (சிங்கள மொழியில்) வெளியிட்டுள்ளார். வெளியீட்டு விழா எளிமையாகவும், சிறப்பாகவும் நடைபெற்றது.

தே கஹட்ட- எனும் நூலை வாசிக்கத் தொடங்கியுள்ளேன். வாசித்து முடித்ததும் அது பற்றிய குறிப்பை எழுதி பதிவிடுகிறேன். உபாலி லீலாரத்னவின் நூல் வெளியீடுகள் பற்றி சொல்ல வந்த நான் எங்கள் ஊர் பற்றியும் அதன் அருகாமையில் வசித்தவரான உபாலி பற்றியும் சொல்லவந்தது ஏன் என புரிந்திருக்கும். நாங்கள் அந்த ஊரில் ஒற்றுமையாகத்தான் வாழ்ந்திருக்கிறோம். என் தாத்தாவுக்கு சிங்கள நண்பர்கள் இருந்திருக்கிறார்கள், நான் சிங்கள மொழியில் கல்வி கற்றிருக்கிறேன், உபாலி சிங்களவரானபோதும் எங்கள் ஊருக்கு வேலைநிமித்தம் வந்தவர் தமிழ் மொழியைக் கற்றிருக்கிறார். கற்றது மட்டுமல்ல இன்று ஒரு சிங்கள எழுத்தாளராக மட்டுமல்லாது தமிழ் மொழி இலக்கியங்களை சிங்களத்துக்கு மொழிபெயர்த்தும் வழங்குகின்றார். புத்தக வெளியீட்டு விழாவுக்கு தலைமை வகித்து உரைாயற்றிய எழுத்தாளர் திரு.குடகல்ஹார தனதுரையின்போது குறிப்பிட்ட விடயம், இரு மொழியல்ல பன்னிரு மொழிகள் தெரிந்த பலரும் இந்த நாட்டில் பெரும் பதவி வகித்துள்ளனர்.

எத்தனைபேருக்கு திரு.உபாலி லீலாரத்ன போன்று தமிழ் நூல்களை சிங்களத்துக்கு மொழி பெயர்த்து வழங்கவேண்டும் எனும் எண்ணம் உதித்தது. அந்த வகையில் உபாலி லீலாரத்ன உண்மையான அர்ப்பணிப்புடன் சக இனங்களுக்கிடையிலான பாலமாக திகழ்கிறார் என்று குறிப்பிட்டார். உபாலி லீலாரத்னவை தனிப்பட்ட ரீதயிலும் அறிந்தவன் என்றவகையில் எனக்கும் திரு.குடகல்ஹார அவர்களின் கருத்தோடு ஒத்துப்போக முடிகிறது. என்னூர் பக்கத்தில் வாழ்ந்த ஒரு சகோதரர் இலக்கியத்தில் இத்தகையதோர் பணிக்கு தன்னை அர்ப்பணித்திருக்கிறார் என்பதில் பெருமை கொள்ளவும் முடிகிறது.

வாழ்த்துக்கள் உபாலி….. உங்கள் போன்றவர்களால்தான் சிங்கள மக்கள் புடைசூழ வாழும் மலையக மக்களினால் இன்னும் நம்பிக்கையை நிலைநிறுத்த முடிகின்றது. 704 இலக்க வீதி இரண்டு பெரும்பாதைகளை இணைத்தது போல் அந்த பாதையில் வாழந்து வந்த நீங்கள் இரண்டு சமூகங்களை இணைக்க எடுக்கும் முயற்சி வெற்றிபெற வாழ்த்துக்கள்.(மடகொம்பரை மண்ணும், ஆளுமைகளும்- தொடரும். மண்ணையும் அருகேயுள்ள ஊர்களின் ஆளுமைகளையும் அரவணைத்துக்கொண்டே….உபாலி லீலாரத்னவும் எங்களுர் ஆளுமை ஒன்றே….)

கொழும்பில் புதிய பண்பாட்டுத்தளம்புதிய பண்பாட்டுத்தளம் தனது கொழும்புக்கான முதற்கூட்டத்தை அண்மையில் (06.01.2013) கொழும்பு தமிழ்ச் சங்க வினோதன் மண்டபத்தில் நடாத்தியிருந்தது. அதன் அமைப்புக்குழுவில் ஒருவரான ந.இரவீந்திரன் தலைமையில் இந்தப் பகிரங்கக் கருத்தாடல் நிகழ்வு இடம்பெற்றிருந்தது. மண்டபம் நிறைந்த உற்சாகம் மிக்க பல்வேறு தரத்தினரான பங்கேற்பாளர்கள் முன்னிலையில் மல்லியப்பூ சந்தி திலகர், சிறீதரன், பாபு ஆகியோர் உரையாற்றியதைத் தொடர்ந்து சபையோர் கருத்துரை இடம்பெற்றிருந்தது. முன்னதாக தலைமையுரையில் இரவீந்திரன், "பண்பாட்டில் புதிய-பழைய பண்பாடுகள் உண்டா எனக் கேட்கப்படுகிறது, அவ்வாறு உள்ளது என்பதே உண்மை. ஏற்கனவே கடவுளால் அருளப்பட்டது பண்பாடு என்கிறவர்கள் கூட பண்பாட்டின் பேரால் காலந்தோறும் ஏற்படுகிற ஒடுக்குமுறைகளும், அதனை மாற்றுவதற்காக முன்னெடுக்கப்படும் போராட்டங்களும் குறித்து விவாதித்து வருகிறார்கள்.
சில மாதங்களுக்கு முன்னர் இந்தியாவின் கன்னட மாநிலத்தில் இளம் ஆண்களும் பெண்களும் கலந்துகொண்ட நிகழ்வொன்றினுள் அத்துமீறி நுழைந்த இந்துத்துவவாதிகள் மணமுடிக்காத ஆணும் பெண்ணும் ஒன்றுகூடி இருப்பது இந்துப்பண்பாட்டுக்கு விரோதமானது எனக்கூறிப் பலமாகத் தாக்கி, பொலீசிலும் அந்த இளைஞர் இளைஞிகளை ஒப்படைத்திருந்தனர்.
இன்று பெண்கள் வெளியே பணியாற்ற வேண்டியுள்ள நிலையில் இவ்வாறுபேச இயலாது எனக் கூறிய இந்துக்கள் பலரும் இந்துப் பண்பாட்டில் இடையிட்டு வந்த இதுபோன்ற மரபுப்பாரம்பரிய வழக்காறுகள் காலமாற்றத்தோடு மாறவேண்டும் என்றனர். இதுபோன்றே இஸ்லாமியப் பெண்கள் படிப்புக்கென்று கிளம்புவது தவறு எனக்கூறி முஸ்லிம் தீவிரவாதக் குழுவினால் இஸ்லாமியச் சிறுமி சுடப்பட்ட போது முஸ்லிம் நண்பர்கள், இஸ்லாம் பெண்களின் கல்வியைத் தடுக்கவில்லை என்று கருத்துரைத்து அந்தச் சிறுமியையும் கல்வியையும் புதிய பண்பாட்டு எழுச்சியையும் ஆதரித்து நின்றனர். எண்பதுகளில் இருந்து பெரியாரை முன்னிறுத்திய எதிர்ப் பண்பாடு பற்றிய அக்கறை எம்மத்தியில் மேற்கிளம்பியிருந்தது. மரபு மற்றும் எதிர் பண்பாடுகளில் ஏற்புக்குரியனவும் நிராகரிக்க வேண்டியனவும் உள்ளன. அவற்றை உழைக்கும் மக்களின் பார்வையில் மக்கள் விடுதலைத் திசைமார்க்கத்தில் முன்னேறும் மக்கள்சக்தி கையேற்றுப் புடமிட்டு தனக்கானதாக உருவாக்குவதே புதிய பண்பாடு" எனக்கூறினார்.
"இன்றைய சமூக-பண்பாட்டு நெருக்கடிகளும் செல்நெறி குறித்த தேடல்களும்" எனும் தலைப்பிலான இந்தக் கருத்தாடல் அரங்கில் மல்லியப்பூசந்தி திலகர் முதலில் தனது கருத்துரையை வழங்கினார். "மலையகப் பண்பாட்டில் கோயில்களின் பங்கு நிராகரிக்க இயலாவகையில் வளர்ந்து வருகிறது. தோட்டத் தொழிலாளர்கள் நகரக் கோவில்களில் இருந்து தூரப்பட்டு இருந்து தத்தமது தோட்டங்களின் கோயில்களை நிர்மாணிப்பதில் முழுமூச்சாக இறங்கியிருக்கிறார்கள். ஒவ்வொரு கோவிலையும் கட்டிமுடிக்க ஒன்பது பத்து வருடங்களும் எண்பது லட்சத்துக்குக் குறையாத பணமும் செலவாகிறது. மாதச் சம்பளப் பணத்திலிருந்து கழித்து எடுத்து ரொக்கமாக்கித்தர நிர்வாகத்தைத் தொழிலாளர்கள் கேட்டிருப்பதால், இதன்வாயிலாகவும் தனக்கு கணிசமான காலத்துக்குப் புழங்கும் மூலதனம் ஒன்றைப் பெறும் நிர்வாகம் கோயில் கலாசாரத்தைத் தூண்டி வருகிறது. இன்னொரு வகையில் மலையக நிதர்சனம் வெளிப்படுவதில் குறைபாடு காணப்படுகிறது. ரப்பர் தோட்டத்தொழிலாளர்கள் பற்றிப் பேசப்படுவதில்லை. அந்தத் தொழில்துறை ஏற்கனவே நலிந்து போன நிலையில் அந்தமக்கள் அனுபவிக்கும் கொடுமைகள் அனந்தம். இன்று தேயிலைத்தொழிலும் நலிவடைகிற நிலையில் தோட்டத் தொழிலாளர்கள் பெரும் புறக்கணிப்புக்கு ஆளாகிறார்கள். ஏனைய பகுதிகளில் அரசியல் கட்சிகளுக்கு தொழிற்சங்கம் இருக்கும், மலையகத்தில் தொழிற்சங்கம் ஒவ்வொன்றும் கட்சிகளைக் கட்டமைத்து வேறுபட்ட அரசியல்களுக்கு போகிறார்கள் என்கிறவகையிலும் தொழிலாளர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள்.
மலையக மக்கள் எனும்போது தோட்டத் தொழில்சார்ந்து இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட தனிச் சமூகம்; ஏறக்குறைய இருநூறு ஆண்டு வரலாற்றால் தனித் தேசிய இனப் பிரிவினராகக் கணிக்கப்படுகின்றனர். இன்று புவியியல் வேறுபாடுகளுடன் கொழும்பு, வடக்கு-கிழக்கு எனப் பல்பிரதேசங்களுக்கும் சிதறியுள்ள போதிலும் மலையக மக்களாகத் தம்மை இனங்காண்கின்றனர். ஆயினும் பதிவுகளில் இந்திய வம்சாவழியினர் எனப் பதிய நிர்ப்பந்திக்கப் படுகின்றனர். அதனை விரும்பாமல் பலர் இலங்கைத் தமிழர் எனப் பதிகின்றனர். தமது சுய லாபத்துக்காக இந்திய வம்சாவழியினர் என்ற அடையாளத்தைக் கோருகிறவர்களும் உள்ளனர். பலதசாப்தங்களாக போராடிப்பெற்ற மலையக மக்கள் என்று அவர்கள் அனைத்து இடங்களிலும் பதிவு செய்யப்படும் உரிமைக்காக் இன்று குரல் எழுப்பவேண்டியுள்ளது" எனத் திலகர் கூறினார்.

தொடந்து உரையாற்றிய சிறீதரன்(சுகு தோழர்) " இலங்கையில் சமூகப் பிரச்சனைகள் எதிர்கொள்ளப்படுகிற விதம் விரக்தியளிக்கக்கூடிய வகையில் அமைந்துள்ளது. இதனின்றும் மீண்டு மக்கள் போராட்டங்கள் மேற்கிளம்பி வர நாம் புதிய பண்பாட்டு அணியைக் கட்டியெழுப்ப வேண்டும். இந்தியாவில் எந்தவொரு கொடுமைக்கும் எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்து போராடுவதைக் காண்கிறோம். அணு உலைப் பிரச்சனையாக இருக்கலாம், சாதி ஒடுக்குமுறைத் தாக்குதலாக இருக்கலாம், சமூக அக்கறையாளர்கள் மக்களை அணிதிரட்டிப் பல்வேறு போராட்டங்களை முன்னெடுக்க முடிகிறது. அண்மையில் தலைநகர் டில்லியில் ஓடும் பஸ்ஸில் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கி, பாதிக்கப்பட்ட பெண் இருவாரங்களின் பின்னர் இறந்துவிடக் காரணமாக இருந்த கொலைபாதகச் செயலுக்கு எதிராக இந்தியா முழுமையிலும், குறிப்பாக டில்லியில் தொடர்ந்து மக்கள் போராட்டங்கள் கிளர்ந்து எழுந்துள்ளதைக் காண்கிறோம்.
பெண்மீதான இத்தகைய மிருகத்தனமான தாக்குதல்களுக்கு அவர்கள் அணியும் ஆடையைக் குறை கூறுகிறவர்கள் இருக்கிறார்கள். இந்துப் பண்பாட்டின்படி உடை அணிய வேண்டுமாம். பண்பாடு உடையில் இல்லை. மன்னர்கள் மகாராணிகள் உடைகளைப் பழைய சிற்பங்களில் பார்க்கிறோம். அப்போதெல்லாம் பெண்கள் மேலாடை அணிந்ததில்லை. ஆயினும் அப்போதெல்லாம் இவ்வளவு மிருகத்தனங்கள் இடம்பெற்றதில்லை. இப்போது எல்லாமே பணம் என்றாகி மனித உறவுகள் கொச்சைப்படுத்தப்படுகிறது. வைத்தியம், சுகாதாரம், போக்குவரத்து போன்ற சேவைத் துறைகள் முழுதாக வணிகமயப் பட்டுள்ளன. பணத்துக்காக அலையும் அவலத்தில் பண்பாடு அல்லோலகல்லோலப்பட்டுள்ளது. மாறுவது பண்பாட்டின் ஒரு தவிர்க்க இயலாத பண்பு. மனிதகுல வளர்ச்சியோடு பண்பாடும் விருத்தியடைந்து வரும். சுதந்திரமான உரையாடலைச் சாத்தியமாக்கும் புதிய பண்பாட்டுத் தளம் கட்டியெழுப்பப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். அதனை இந்தப் புதிய பண்பாட்டுத் தளம் நிறைவு செய்யும் என நம்புகிறேன்" என்றார் .

சிறுகதைப் படைப்பாளி கொ.பாபு "சாதி இழிவுகளைச் சுமக்கும் நோய்க்கூறுடைய சமூகமாக எமது அமைப்புமுறை நீடிக்கும் வகையில் எமது பண்பாட்டுச் சூழல் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகிறது. தொழில் மகத்துவத்தை மதிக்காமல் உடல் உழைப்பை இழிவாக நோக்கும் பழைய பண்பாடு நீடிக்கும்வரை நாம் ஒன்றுபட்ட ஒரு இனம் என்று கூறத் தகுதியற்றவர்களாகவே இருப்போம். சவரத் தொழில்புரியும் ஒரு பெரியவர் எனக்கு ஒரு விடயத்தைக் கூறினார். அந்தக்காலத்தின் மருத்துவர் என்பது உள்ளிட்ட ஐந்து பட்டங்கள் உடைய தங்களை அச்சொல்லின் இழிவு தோன்றும்வகையில் அழைப்பது கொடுமையானது என்றார். நாம் புதிய பண்பாட்டைப் படைக்கவேண்டும். புதிய பண்பாட்டுத் தளம் முன்னிறுத்துகின்ற புதிய பண்பாடு என்பது எத்தகையது என்பது கோட்பாட்டு ரீதியிலும் நடைமுறை ரீதியிலும் தெளிவுபடுத்தப்பட வேண்டும். முன் முடிவுகளைத் திணிப்பாதாக அல்லாமல் சுதந்திரமான உரையாடல் அனுமதிக்கப்பட வேண்டும்; பூரணமான ஜனநாயகம் பேணப்பட வேண்டும்; விமரிசனம்-சுயவிமரிசனம் அர்த்தமுள்ளவகையில் உயிர்ப்போடு முன்னெடுக்கப்படுவது அவசியம்; மக்களையும் உழைப்பையும் போற்றும் மனப்பாங்குடனான புதிய பார்வையும் விளக்கமும் வெளிப்பட ஏற்றதான சூழலை வளர்ப்போம். இவற்றைப் புதிய பண்பாட்டுத் தளம் சாத்தியமாக்கும் என்ற நம்பிக்கை உள்ளது" என்றார்.
கருத்துரைகளைத் தொடர்ந்து சபையோரின் கருத்துரைக்கு அழைப்புவிடுக்கப்பட்டது. முன்னதாக கணேஸ், மலையகம் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டிருப்பதைக் கூறினார்; தமிழ் இனம் என்பதற்குள் அவர்களும் உள்வாங்கப்பட வேண்டும் என்றார். பொத்துவில் சம்சூன், இந்தக்கருத்தரங்கில் கலந்துகொள்ள வேண்டும் என்பதற்காகப் பொத்துவிலில் இருந்து வந்துள்ளேன்; இந்த அமைப்புப் பற்றிப் பேட்டி ஒன்றைப் பார்த்து நானாகத் தொடர்புகொண்டேன்; முன்னர் தமிழர்-முஸ்லிம் என்ற பேதமில்லாமல் பல நண்பர்கள் எனக்கு இருந்தார்கள்; அதுபோன்ற ஒரு இணக்கமான வாழ்வைக் கட்டியெழுப்பப் புதிய பண்பாட்டுத் தளம் களம் அமைக்கும் என்பதால் சேர்ந்து உழைக்க முன்வந்திருக்கிறேன் என்றார். தினகரன் விசு கருணாநிதி இன்னமும் எங்கடை ஆட்கள் உங்கடை ஆட்கள் என்று பிரித்துப் பேசுவதை விடுத்து தமிழ் பேசும் மக்கள் அனைவரையும் ஓரினம் என்று ஒன்றிணைக்க இதுபோன்ற அமைப்பு பாடுபட வேண்டும் என்றார். ஞானசக்தி, இதுபோன்ற புதிய பண்பாட்டு நிகழ்வில் பெண்கள் உரையாற்ற ஏற்பாடு செய்யாமை கண்டிக்கப்பட வேண்டியதாயுள்ளது; முன்னர் ஒரு பேரனால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சிறுமி குறித்து போராட்டத்தை முன்னெடுத்தபோது - இது குடும்ப விடயம், பெரிதுபடுத்தாமல் விடுங்கோ என்றார்கள்; இதுவே ஆமி என்றால், தமிழுக்கு கொடுமை நேர்ந்தது என்கிறோம்; பெண் எவரால் கொடுமைக்கு உள்ளாவதையும் தகர்ப்பதற்காகப் போராடும் மனமாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய நடைமுறைகளை இந்த அமைப்பு முன்னெடுக்க வேண்டும் என்றார். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரசேகரன், வெளிநாட்டிலிருந்து நண்பர்கள் வலியுறுத்திய நிலையில் இங்கு கலந்துகொண்டது பயனுள்ளதாக அமைந்தது; தமிழ்பேசும் மக்கள் அனுபவிக்கும் கொடுமைகள் பற்றிப் பேசப்பட்டது, அவை கவனிப்புக்குரியன; அதேவேளை, இன்னொன்றைக் கவனம் கொள்ளவேண்டும்; அதிக வறுமைக்கான பிரதேச சபை, மிகப்பின்னடைவான கல்வி வலயம் என்பனவாக சிங்களப் பிரதேசங்களே உள்ளன - பாலியல் தொழில், பாதாள உலக பாதிப்புகள் போன்றன விகிதாசாரத்துக்கும் மேலாக சிங்களவர்களையே அதிகம் பாதித்துள்ளன என்ற உண்மைகளையும் கவனம்கொள்ள வேண்டும் என்றார்.
முடிவுரையாக இரவீந்திரன் தொகுப்புரையை வழங்கினார். "ஏற்றத்தாழ்வுமுறை தோன்றியபோதே பெண் ஒடுக்குமுறை தொடங்கிவிட்டுள்ளது. ஐரோப்பாவில் போலன்றி இங்கு முன்னேறிய இனமரபுக்குழுவால் ஏனையவை ஒடுக்கப்படுவதாக அமைந்த சாதிமுறை இருப்பதால் பிரத்தியேகமான வரலாற்றுப்போக்கு எமக்கு உண்டு. சாதி ஒடுக்கு முறைக்கு எதிரான அறுபதுகள் வரையான போராட்டம் வாயிலாக இலங்கை அனுபவம் முழுச் சாதிமுறை குறித்த கற்றலுக்கு மகத்தான பங்களிப்பை வளங்கியிருந்தது. பின்னர் இன ஒடுக்குமுறையைச் சந்தித்தோம். இன்று முழு இலங்கையும் இந்திய மேலாதிக்கத்துக்கு ஆட்பட்டுள்ளது. இதற்கும் மேலாக உலக மேலாதிக்கம்.
ஆக, பல்வேறு தளங்களிலான போராட்டங்களை எவ்வகையில் முன்னெடுப்பது என்பது குறித்து அரசியல்-சமூக-பண்பாட்டு பேதங்கள் கடந்து சுதந்திரமாக விவாதித்து விரிந்த தளத்தில் முடிவை வந்தடைய வேண்டியவர்களாக இருக்கிறோம். நாம் மட்டுமே சரி என்று முடங்காமல், மற்றவர் கருத்தை மதித்து பொது முடுவுக்கு வருவோம். எந்த ஒரு அமைப்பினரும் தமக்கான வெகுஜன அமைப்பக இதனை மாற்ற எத்தனிக்காமல் இங்கு முழு அளவில் இணைந்து இயங்க இயலும்" என இரவீந்திரன் குறிப்பிட்டார். அமைப்புக்குழு சார்பில் நிகழ்வின் அழைப்பாளராகவும் உள்ள லெனின் மதிவானம் நன்றியுரை வளங்கினார்.டாக்டர் முருகானந்தம்,தர்மலிங்கம் சித்தார்த்தன்,வீரகத்தி தனபாலசிங்கம் ,ரகுநாதன் ,சுப்பையா மதுசூதனன் போன்றோரும் கலந்துகொண்டனர்.
நன்றி - முச்சந்தி

'நோ இந்தியா' திட்டத்தினை மலையக மாணவர்கள் தவற விடுகின்றனர் -மொஹொமட் ஆஸிக்'இந்திய அரசு அறிமுகம் செய்துள்ள 'நோ இந்தியா' என்ற திட்டத்தின் மூலம் நூறு சதவீத நிதியுதவிகளை பெருந்தோட்டப் பகுதி மாணவர்கள் இந்தியாவிடமிருந்து பெற்றுக்கொள்ள முடியும். 

ஆனால் அதற்கு தகுதியானவர்கள் அனேகமானோர்  அது பற்றி அறிந்திராத காரணத்தால் அதனை தவறிவிடுகின்றனர்' என இந்திய பிரதி உயர் ஸ்தானிகர் ஆறுமுகன் நட்ராஜன் தெரிவித்தார். 

கண்டி உண்ணஸ்கிரிய சிவனேஸ்வரா தமிழ் வித்தியாலயத்தில் நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

மலையக மாணவர் கல்வி மேம்பாட்டு அமைப்பு ஒழுங்கு செய்த இந்நிகழ்வில் மாணவர்களுக்குப் பாடப் புத்தகங்கள், பாடசாலை உபகரணங்கள், மூக்குக் கண்ணாடி உற்பட பல்வேறு பொருட்கள் இலவசமாகக் வழங்கப்பட்டன.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்.

'மலையக மக்களுக்கு சேவை செய்வதற்கென்றே நிறுவப்பட்டுள்ள கண்டி இந்திய உதவித் தூதுவராலயத்தை இந்தியாவின் சகோதர உறவைக் கொண்ட எம்மவர்கள் பயன்படுத்தாமை கவலைக்குறியது. ஆனால் மலையக மக்களுக்காக வழங்கப் படும் இத்தகைய சலுகைகளை இந்திய வம்சாவழி மலையக மக்கள் தவிர்ந்தவர்கள் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

உயர்கல்வியைப் பொறுத்தவரை அது எத்தகைய துறையாகிலும் இந்தியாவில் மலையக மக்களுக்காகக திறந்து விடப்பட்டள்ளது. 
மலையக மக்கள் அதனைப் பயன்படுத்தி பலனடைய வேண்டும் என வேண்டுகிறேன்' என்றார்.

மலையகத்தில் மீண்டும் நிலச்சுரண்டல் ஆரம்பம்


மலையகத்தில் தேர்தல் வரை அமைதியாக இருந்த சிங்கள காடையர் குழு மீண்டும் தமிழ் மக்கள் மீதான தமது நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.  கேகாலை மாவட்டம் தெரணியகலை தொகுதியைச் சேர்ந்த தமிழ் தோட்டத் தொழிலாளர்கள் பெருவாரியாக வாழும் மாலிபொட தோட்டத்தில் பெரும்பாண்மை இனத்தவர்கள் அத்துமீறி பிரவேசித்து தோட்ட நிலங்களை ஆக்கிரமித்துக் கொண்டதாக தொழிலாளர்கள் தெரணியகலை ஜனநாயக மக்கள் காங்கிரஸ் பணிமனையில் தொழிற்சங்க பொருப்பாளர் ஆர். மேகநாதனிடம் முறையிட்டதாக ஜனநாயக மக்கள் காங்கிரஸ் நிர்வாக செயலாளர் என்.ரவிகுமார் தெரிவித்தார்.

இது குறித்து ஜனநாயக மக்கள் காங்கிரஸ் விடுத்துள்ள ஊடக அறிக்கையில்,

ஏற்கனவே பல பெரும்பாண்மை இனத்தைச் சார்ந்தவர்கள் இத்தோட்டத்திற்குள் பிரவேசித்து நிலங்களை ஆக்கிரமிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இருப்பினும் இம்முறை பெருவாரியான பெரும்பான்மை இனத்தவர்கள் தோட்டத் தொழிலாளர்கள் குடியிருப்புகளுக்கு அருகாமையிலுள்ள நிலங்களை ஆக்கிரமித்ததை தொடர்ந்து தமிழ் தோட்டத் தொழிலாளர்கள் மத்தியிலே பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இது சம்பந்தமாக தோட்ட நிர்வாகத்தின் மூலம் பொலிஸாரிடம் முறையிட்டும் காவல்துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கு காரணம் அப்பகுதியிலுள்ள ஆளும் அரசாங்க தரப்பு அரசியல் வாதிகளே என அறியமுடிகிறது.

இது இவ்விததம் இருக்க கடந்த திங்கட்கிழமை முதல் நடவடிக்கை எடுக்ககோரி தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர். இது சம்பந்தமாக எமது ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் கொழும்பு மாவட்ட பாராடாளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசனின் கவனத்திற் கொண்டுவரப்பட்டு உடனடியாக கேகாலை மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் உபாலி குமாரசிறியிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பிரதி பொலிஸ் மா அதிபர் உடனடி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார். இது சம்பந்தமாக எமது தொழிற்சங்க பொறுப்பாளர் ஆர்.மேகநாதன் பெருந்தோட்ட தொழில் அமைச்சர் மஹிந்த சமரசிங்கவிற்கு அனுப்பிய கடிதத்திற்கும் உடனடி நடிவடிக்கை எடுப்பதாக பதில் அனுப்பப்பட்டுள்ளது.

இதேவேளை, கொழும்பு கொச்சிக்கடை ஜம்பட்டா வீதியிலுள்ள 151,155ம் இலக்க தோட்டத்திலுள்ள அரச குறைந்த வாடகை வீட்டு உரிமையாளர்களுக்கு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை வீடுகளை தங்களது பெயரில் மாற்றுவதற்கு பல கெடுபிடிகளை விடுத்துள்ளதாக ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைமை காரியாலயத்தில் வைத்து பிரபா கணேசன் எம்.பியிடம் முறைபாடு செய்துள்ளது.

இவ்வீட்டு குடியிருப்பாளர்கள் பல வருட காலமாக இவ்வீடுகளில் வசித்து வருகின்றனர். அரசாங்கத்தால் வழங்கப்பட்ட நபரிடமிருந்து இவ்வீடுகளை நேரடியாக வாங்கியவர்களும் அதே நேரம் பல உரிமையாளர்களுக்கு கைமாற்றப்பட்டு வீடுகளை வாங்கியவர்களும் உள்ளடங்குகிறார்கள்.

இன்று குடியிருப்பவர்களுக்கு இவ்வீடுகளை அவர்களது பெயரில் மாற்றிக் கொடுப்பதற்கு ரூபாய் 25,000.00 கட்டணப் பணமாக செலுத்த வேண்டும் என்றும் அது மட்டுமின்றி அரசாங்கத்தால் முதலில் வழங்கப்பட்ட நபரிடமிருந்து ஒப்புதல் கடிதத்தை பெற்று வருமாறும் கேட்கப்பட்டுள்ளனர். 25,000 ரூபாயை உடனடியாக இம்மாத இறுதிக்குள் செலுத்துமாறும் உத்தரவிடப்பட்டுள்ளதாக இக்குடியிருப்பாளர்கள் எமது அலுவலகத்திற்கு வந்து முறையிட்டுள்ளனர்.

இது சம்பந்தமாக நாடாளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் செயற்பாட்டு பணிப்பாளர் பத்ம உதய சாந்த குணசேகரவுடன் தொடர்பு கொண்டு இவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை எடுத்துரைத்துள்ளார்.

மாதாந்தம் சிறு வருமானத்தை ஈட்டும் இவர்களால் 25,000 ரூபாயை உடனடியாக செலுத்த முடியாமையை எடுத்துக் கூறப்பட்டது. இது சம்பந்தமாக புதன்கிழமை 13ம் திகதி மாளிகாவத்தை வீடமைப்பு அதிகாரசபை கட்டிடத்தில் நடைபெறும் கூட்டத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் சார்பாக இப்பிரச்சினையை முன்வைக்குமாறு செயற்பாட்டு பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இப்பகுதியில் வாழும் ஏழை எளிய குடியிருப்பாளர்களுக்கு சாதகமான முறையில் தீர்வினை பெற்றுக் கொடுப்போம் என என் ரவிகுமார் தெரிவித்தார்.
நன்றி - ஈழநாதம்

"மலையகத்தின் மூத்த எழுத்தாளர் கே. கணேஷ்" - தெளிவத்தை ஜோசப்

கே.கணேஷ்

தமிழ் இலக்கியத்துடன் ஒரு எழுபது வருடத் தொடர்பும், அனுபவமும், ஆற்றலும் மிக்கவரான திரு. கே. கணேஷ் அவர்களைப் பற்றி எழுதுவதில் இந்த வார இலக்கியக்களம் பெருமையும் பூரிப்பும் கொள்கிறது.

எழுபது வருட இலக்கியத் தொடர்பு என்பது எத்தனை பெரிய விஷயம்! இலக்கிய உலகுடனான அவருடைய அனுபவங்களை தெரிந்து கொள்வதே இளம் எழுத்தாளர்களுக்கு ஒரு இலக்கிய அனுபவமாகும். அவர் வாழ்ந்த காலத்திலேயே வாழ்ந்து, அவருடன் பேசவும் பழகவும் வாய்ப்புக் கொள்வதே ஒரு இலக்கியக் கொடை. மேதைகளுக்கேயுரிய அவரது தோற்றமும், எளிமையாகப் பழகும் இனிய பண்பும் அவருடன் பழகும் எவரையும் ஈர்த்துக் கொள்வது ஒன்றும் வியப்புக்குரியது அல்ல.

ஆயிரத்து தொளாயிரத்து இருபதில் கண்டி அம்பிட்டியாவில் பிறந்தவர். கண்டி புனித அந்தோனியார் கல்லுாரியிலும் பிறகு தமிழ் நாட்டிலும் கல்வி பயின்றவர். இவரை ஒரு தமிழ் பண்டிதராக்கும் நோக்கத்துடன் இளம் வயதிலேயே மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் தமிழ் படிக்க அனுப்பிவிட்டனர் பெற்றோர். திரு. வி.க. விடம் தமிழ் படிக்கச் சென்ற இவருக்கு பண்டிதராவதை விடவும், தமிழ் இலக்கியத்தில் கருத்துப் புரட்சியைக் காண விரும்பிய ப. ஜீவானந்தம், மாயாண்டி பாரதி போன்ற இடதுசாரி எழுத்தாளர்களுடன் தோழமை கொள்வதே மிகவும் பிடித்திருந்தது.

சக்திதாசன் சுப்பிரமணியம், கே ராமநாதன், மாயாண்டி பாரதி ஆகியோர் சேர்ந்து சென்னையில் இருந்து வெளியிட்ட 'லோகசக்தி ' என்னும் முற்போக்கு இதழின் வெளியீட்டில் இவரும் பங்கு பற்றினார். முதல் இதழிலேயே இவருடைய முதல் படைப்பும் வெளிவந்தது. அப்போது இவருக்கு வயது பன்னிரண்டு.

முல்க்ராஜ் ஆனந்த், பிரேம் சந்த், கே.ஏ. அப்பாஸ், வெங்கடாசாரி, தமிழ் ஒளி, குயிலன், புதுமைப்பித்தன், தி.க.சி. என்று நாம் பெயரளவில் அறிந்து வைத்துள்ள இலக்கியக்காரர்களுடன் அவர் நண்பராயிருந்து பழகிய அனுபவங்களை அவர் வாயிலாகக் கேட்கையில் பிரமித்துப் போகிறோம். அவர்கள் எழுதிய சில கடிதங்களைக் காட்டுகிறார். நாம் பூரித்துப் போகிறோம்.

பன்னிரண்டு வயதில் எழுதத் தொடங்கி, பதினாறு வயதில் இளைஞுர் காங்கிரஸ் என்னும் அமைப்பை உருவாக்கி, பத்திரிகை வெளியிட்டு, எழுத்தாளர்களுடன் பழகி இலக்கியத்தைத் தன் இரத்தத்தில் ஏற்றிக் கொண்டவர் இந்த முதுபெரும் இலக்கியவாதி. அந்த இரத்த உறவும் இலக்கிய உணர்வுமே இந்த எழுபத்தேழு வயதிலும் இவரை இயங்க வைத்துக் கொண்டிருக்கிறது. 1936ல் இவர் தனது எழுத்துலக நண்பர்களுடன் இணைந்து வெளியிட்ட லோகசக்தியே முற்போக்குக் கருத்துக்களை வெளிக்கொண்டு வந்த முதல் பத்திரிகையாகும். இவ்வாறான அனுபவங்களே முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை ஸ்தாபித்து முற்போக்கு எழுத்தாளர்களை ஒன்றிணைக்கும் ஒரு எண்ணத்தை இவருக்கு தந்துள்ளது. கே.ஏ. அப்பாஸ், வெங்கடாசாரி, குயிலன், தமிழ் ஒளி, தி.க. சிவசங்கரன் ஆகிய முற்போக்கு சிந்தனையாளர்களை ஒன்றிணைத்து முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை தமிழகத்தில் ஸ்தாபித்தார்.

இலங்கை திரும்பியதும் இவரால் சும்மா இருக்க முடிந்திருக்குமா ? படிக்கச் சென்ற ஊரிலேயே அத்தனை செயலாற்றியவர் சொந்த ஊரில் சும்மாவா இருப்பார்! அகில இலங்கை எழுத்தாளர் சங்கம் என்று ஒரு அமைப்பை அவர் முன்னிலையில் உருவாக்கினார். இலங்கையின் சகல எழுத்தாளர்களையும் ஒன்றிணைக்க வேண்டும் என்னும் அவரது ஆவல் போற்றுதற்குரியது. இந்த அகில இலங்கை எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக சுவாமி விபுலாந்தரும், உபதலைவராக மார்ட்டின் விக்கிரமசிங்காவும் இருந்தார்கள். கணேஷும், கலாநிதி சரத்சந்திரவும் இணைச் செயலாளர்களாக இருந்து பணியாற்றினார்கள். ஈழத்தின் சகல எழுத்தாளர்கள் மட்டுமன்றி இந்தியா மற்றும் உலக எழுத்தாளர்கள் சகலருடன் தொடர்புள்ளவர் இவர். ஆகவே ஆங்கில, தமிழ் இதழ்கள் அவரைத் தேடி தலாத்துஓயாவுக்கு வந்த வண்ணமாயிருக்குமாம்.

தமிழ் இலக்கியத்தில் வரலாறு படைத்த மணிக்கொடி, கிராம ஊழியன், ரகுநாதனின் சாந்தி, விஜயபாஸ்கரனின் சரஸ்வதி, வரதரின் மறுமலர்ச்சி என்று நாம் கண்டேயிராத இதழ்கள் சிலவற்றை ஒவ்வொன்றாகக் காட்டுகிறார். சில்லிட்டுப் போகிறோம்.

1946ல் இவரும் கே. ராமநாதனும் சேர்ந்து நடத்திய 'பாரதி ' நினைவுக்கு வருகிறது. பாஸிஸ எதிர்ப்பு பிரசாரத்தை முன் வைத்து வந்து கொண்டிருந்த 'பெங்குவின் ' வெளியீடான 'நியூரயிட்டிங்ஸ் ' என்னும் ஆங்கில இதழைக் காட்டுகின்றார். இத்தாலிய எழுத்தாளர் இக்னேஷியஸ் சிலோனி, பஞ்சாபி முல்க் ராஜ் ஆனந்த் ஆகியோரின் படைப்புகள் நியூரைட்டிங்ஸ் சில் வந்திருந்தன.

இப்படி ஒரு இதழை ஏன் நாமும் வெளியிடக்கூடாது என்ற எண்ணமே 'பாரதி ' யின் தோற்றத்திற்கு வித்தாயிற்று. 1946 ஜனவரியில் பாரதி முதல் இதழ் வெளிவந்தது. ஈழத்தின் முற்போக்கு இலக்கிய இயக்கத்துக்கு வித்திட்ட ஏடாகத் திகழ்ந்தது இந்த பாரதி. 1948 ஜனவரியில் மார்க்ஸிம் கோர்க்கியின் அட்டைப் படத்துடன் வந்த ஏழாவது இதழுடன் பாரதியின் இலக்கியப் பயணம் முடிவு பெற்றுள்ளது. நியூரைட்டிங்ஸும் ஏழு இதழ்களே வந்ததாக தெரிவிக்கிறார்.

கணேஷ் ஒரு கவிஞர். தன் சொந்தப் பெயரிலும் கலாநேசன் என்னும் பெயரிலும் நிறையக் கவிதைகள் எழுதியுள்ளார். உலகக் கவிதைப் போட்டியில் பங்குபற்றி ஜப்பான் சக்கரவர்த்தி ஹிரோ ஹிட்டோவிடம் விருது பெற்ற கவிஞுர் இவர். பரிசு பெற இவர் ஜப்பான் சென்ற செய்தியைப் படத்துடன் முதல் பக்கத்தில் வெளியிட்ட டெய்லி நியூஸ் உள்ளே ஒரு பக்கக் கட்டுரையும் எழுதியிருந்தது அன்று.

இவர் ஒரு சிறுகதையாசிரியரும் கூட. மணிக்கொடியில் கூட ஒரு சிறுகதை எழுதியுள்ளார். ஆசாநாசம் என்னும் பெயரில், சத்திய போதிமரம், பால்காரப் பழனி, சட்டமும் சந்தர்ப்பமும் ஆகிய சிறுகதைகளை வீரகேசரியிலும் ஆகஸ்ட் தியாகி ஆறுமுகம் என்னும் கதையை தேசாபிமானியிலும் எழுதியுள்ளார்.

இந்தியாவில் உருவாக்கிய முற்போக்கு எழுத்தாளர் சங்கம் போல இலங்கையிலும் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை 1946ல் தோற்றுவித்த பெருமை இவருக்குண்டு.

வீரகேசரியில் 40களிலும் சுதந்திரனில் 50களிலும் பணியாற்றி இருக்கின்றார் .

இவருடைய இலக்கியப் பணிகளிலெல்லாம் முக்கிய பணியாக நிற்பது இவருடைய மொழி பெயர்ப்புப் பணிகள்.

முலக்ராஜ் ஆனந்தின் 'அன்டச்சபிள்ஸ் ' நாவலை 'தீண்டாதான் ' என்று 1947ல் தமிழில் மொழி பெயர்த்தார். 1956ல் கே. ஏ. அப்பாஸின் சிறுகதைகளை எகுங்குமப்பூஎ என்னும் பெயரில் மொழிபெயர்த்து வெளியிட்டார். மறுபடியும் அப்பாஸின் 'அஜந்தா ' என்னும் நுாலை மொழி பெயர்த்தார். குயிலன் பதிப்பகம் 1964ல் இதை வெளியிட்டது. ஹோசிமின் சிறைக் குறிப்புகள் அஸர்பைஜானிய எழுத்தாளர் அல்தாய் முஹம்மத்தோவின் த ஸோங் (அந்த கானம்) சீன இலக்கிய மேதை 'லுாசுன் ' சிறுகதைகள், பல்கேரிய ஹங்கேரிய, வியட்நாமிய, உக்ரேனிய, ரஷ்ய கவிதைகள, சீனக் குறுநாவல்கள் என்று இருபதுக்கும் மேற்பட்ட மொழிபெயர்ப்பு நுால்களை அளித்திருக்கின்றார்.

என்.சி.பி.எச்., சென்னை புக்ஸ், தேசிய கலை இலக்கியப் பேரவையுடன் இணைந்து சவுத் ஏசியன் புக்ஸ் ஆகிய வெளியீட்டு நிறுவனங்கள் கே கணேஷின் பெரும்பன்மையான மொழி பெயர்ப்பு நுால்களை வெளியிட்டு இலக்கியப் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒரு அறுபதாண்டு கால இலக்கிய அனுபவங்களை தன்னுள் ஆழ்த்திக் கொண்டிருக்கும் இவரின் எழுத்துலக அனுபவங்கள் வெளிக் கொண்டுவரப்படல் வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் ஆசை. ஆரவாரங்களுள் அகப்படாமல் அமைதியாக இருக்கும் அவரே அதைச் செய்ய வேண்டும். இல்லையெனில் நாம் யாராவது அதைச் செய்ய வேண்டும். எண்பது வயதை அண்மித்துக் கொண்டிருக்கும் திரு. கே. கணேஷின் எழுபதாண்டு இலக்கிய அனுபவங்கள் முழுமையாக எழுதப்படாவிட்டால் அது நமக்கெல்லாம் ஒரு இலக்கிய இழப்பேயாகும்.

விளம்பரம் விரும்பாத இவருக்கு கிடைத்துள்ள விருதுகள் பற்றிக் கேட்டால் சிரிப்பார். பதில் சொல்லமாட்டார். எனவேதான் நானே கூறிவைக்கிறேன். 1991 ல் இலக்கிய செம்மல் விருது. (கலாசார அலுவல்கள் ராஜாங்க அமைச்சு) 1992 வியட்நாமிய சிறுகதைகள்-சிறந்த மொழிபெயர்ப்பு நுாலுக்கான சுதந்திர இலக்கிய விழா (விபவி) விருது. 1993ல் இதே விருது உக்ரேனிய கவிதைகள் மொழிபெயர்ப்பிற்காக. 1995ல் கலாசார அமைச்சு-கலாபூஷண விருது.

எழுபத்தேழு வயதிலும் ஒரு இளைஞுராகப் பணிபுரியும் திரு கே. கணேஷ் அவர்களுக்கு நமது வாழ்த்துக்கள்! பாராட்டுக்கள்!

Works Published

Translation in Tamil of:-

1. Untouchable (தீண்டாதான்) - Mulkraj Anand 1947, 1970 (Puthumai Pathipaham. Karaikudi, Madras- India)

2. Saffron Blossoms (குங்குமப்பூ) - K.A. Abbas 1956, 1963 (Inba Nilayam, Madras-India)

3. Ajantha (அஜந்தா) - K.A. Abbas 1964 (Kuyilan Pathipakam, Madras-India)

4. Prison Dairy (சிறைக்குறிப்புகள்) - Ho Chi Min - 1973, 1985 (New Century Book House, Madras-India)

5. The Song (அந்த கானம்)- Azerbaijanian Writer Altai Mahamedov 1974 (Self- Sri Lanka)

6. Call to Arms (போர்க்குரல்) - Lu Xun 1981 (Pothumai Publishers. Madras-India)

7. Bulgarian Poems - Hristo Botev. Ivan Vazov, Geo Milev, Vapstarov, Penyo etc., (New Century Book House, Madras-India)

8. Happy Children - Jushi 1986 (Foreign Language Publishing House, Beijing. China)

9. Wanderings - Lu Xun 1986 (New Century Book House, Madras-India)

10. Hungarian Poems (சந்தோர் பெட்டோவ்பி- எத்தனை நாள் துயின்றிருப்பாய் என்னருமைத் தாய்நாடே) - Sander Petofi 's Poems 1988 (Chennai Book House, Madras - India)

11. Poems of Parpara (பார்பரா - கவிதைகள்)- Russian Poet 1989 (Writers Cooperative Publishers, Colombo. Sri Lanka)

12. Soviet Poems (குப்பிரியானோவ் - சோவியத் புதுக்கவிதைகள்) - Kubrianov 's Poems 1989 (Writers Cooperative Publishers, Colombo. Sri Lanka)

13. Erhai 's Wedding (இளைஞன் ஏர் கையில் திருமணம்) - Jou Shu Li 1990 (Chennai Book House, Madras - India)

14. Crescent Moon (Fiw gpiw) - Lao She 1990 (Chennai Book House, Madras - India)

15. My Duties Today - Yang Ya Liang Ti 1990 (Foreign Language Publishing House, Beijing. China)

16. Pleasure in One 's Work - Yang Yi 1990 (Foreign Language Publishing House, Beijing. China)

17. Shihan and the Snail - Chinese Folk Story 1991 (Dolphin Books. Beijing, China)

18. Bamboo Valley - Vietnamese Short Stories 1992 (South Asian Books, Madras, India)

19. Body and Soul & Bitter Springs (உடலும் உணர்வும்) - Zhang Xiang Liang 1992 (South Asian Books, Madras, India)

20. Ukranian Poems (உக்ரேனியக் கவிதைகள்) - Poems of National Poet Taras Shevchenko 1993 (New Century Book House, Madras-India)

21. Poems of Ivan Franko 1994 (Elavizhagan Publishers. Madras, India)

22. Complete Short Stories of Luxun 1995 (South Asian Books, Madras, India and National Art and Literary Association, Sri Lanka)

In Preparation:

1 Ashokamala & Other Poems (Kurinji Pathipakam, Colombo, Sri Lanka

****

muttu@earthlink.net

நன்றி - திண்ணை
 

இணைந்திருங்கள்


Followers

Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates