Headlines News :
முகப்பு » » தலைவர்கள் தீர்மானித்தது அன்று! மக்கள் தீர்மானிப்பது இன்று! - இரா சந்திரமோகன்

தலைவர்கள் தீர்மானித்தது அன்று! மக்கள் தீர்மானிப்பது இன்று! - இரா சந்திரமோகன்


இலங்கை அரசியலில் எப்போதும் எதுவும் ஏற்படலாம் என்ற நிலையே இப்போது காணப்படுகின்றது. குறிப்பாக அரசாங்கத்திலிருந்து எதிர்க்கட்சிக்கும் எதிர்க் கட்சியிலிருந்து அரசாங்கத்திற்குமான கட்சித் தாவல்கள் பற்றிய செய்திகளை ஒவ்வொரு நாளும் பத்திரிகைகள் மூலம் அறியக் கூடியதாக உள்ளன.

இதில் ஆளுங்கட்சியிலுள்ள சிறுபான்மை கட்சி உறுப்பினர்கள் பல்வேறு நிபந்தனைகளை வைத்து கட்சித் தாவல்களை செய்கின்றனர். 2014.12.11 ஆம் திகதி மலையகத்தின் இரு பிரதான கட்சிகளான தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் மலையக மக்கள் முன்னணி ஆகியவை மலையக மக்களின் அபிலாசைகளை வெற்றி கொள்வதற்காக எதிர்க்கட்சி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்க தீர்மானித்திருப்பதாக அறிவித்து விட்டு ஆளுந்தரப்பிலிருந்து வெளியேறியுள்ளன.

இவர்களின் இந்த முடிவினால் மத்திய மாகாண சபையில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இதன் மூலம் மத்திய மாகாணத்தின் ஆளுங்கட்சி தரப்பில் நான்கு ஆசனங்கள் குறைவடைகின்றன. இதனால் அரசாங்கத்திற்கு பெரும் சங்கடமொன்றை இவர்கள் ஏற்படுத்தி இருக்கின்றனர்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸைப் பொறுத்தமட்டில் மத்திய அரசுக்கு பெரும் சவாலான நிலையினை எடுக்கக் கூடிய பாரிய பலத்தைக் கொண்டிருக்கிறது. குறிப் பாக மத்திய அரசில் இரண்டு உறுப்பினர்கள் அமைச்சராகவும், பிரதி அமைச்சராகவும் பதவி வகிப்பதோடு மத்திய மாகாணத்தில் சுமார் 08 உறுப்பினர்களும் ஊவா மாகாண சபையில் மூன்று உறுப்பினர்களும் சப்ரகமுவ மாகாணத்தில் 2 உறுப்பினர்களும் என சுமார் 13 மாகாண சபை உறுப்பினர்களையும் பிரதேச சபைகளை பொறுத்தமட்டில் அம்பகமுவ, நுவரெலியா, கொத்மலை, நுவரெலியா மாநகர சபை, தலவாக்கலை லிந்துலை நகரசபை, பதுளை மாவட்டத்தில் சில பிரதேச சபைகளில் இவர்கள் பலமிக்கவர்களாக இருக்கின்றனர்.

எனவே, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆட்சி அதிகாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருக்கிறது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை எனலாம்.

வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள சிறுபான்மை கட்சிகள் தம்முடைய பலத்தினை அந்த சமூகம் சார்ந்து பயன்படுத்தியுள்ளமையை வரலாற்றில் காணலாம். அது வெற்றியளித்ததாகவோ அல்லது தோல்வியடைந்தாகவோ இருக்கலாம். ஆனால் அவர்களின் நிலைப்பாடு அந்த சமூகம் சார்ந்ததாகவே இருந்தது. இருக்கும். குறிப்பாக 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் அவர்கள் தற்போதைய ஜனாதிபதிக்கு எதிராகவே தமது வாக்குகளை பயன்படுத்தியிருந்தனர். எனினும் அவர்கள் செல்வாக்கு குறையவில்லை. குறிப்பாக இன்று வரையும் இலங்கை அரசாங்கம் அவர்களை தமது அரசாங்கத்தின் பங்காளியாக்கிக்கொள்ள பாரிய முயற்சிகளை எடுத்து வருகின்றது என்பதோடு யுத்தத்திற்கு பின்னர் வடக்கு, கிழக்கு மாகாண அபிவிருத்திக்காக சுமார் 6,800 கோடி ரூபாக்களை செலவிட்டுள்ளது. எனினும் இவர்கள் ஆளுங்கட்சியில் இல்லை. 1978 ஆம் ஆண்டு முதல் இன்று வரை எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கிறார்கள் என்பது முக்கியமானது.

ஆனால், மலையகத்தின் அரசியல் இதற்கு எதிர்த்திசையிலே உள்ளது. குறிப்பாக 1972 ஆம் ஆண்டு முதல் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் எந்தக் கட்சி ஆட்சி அமைக்கிறதோ அதனோடு ஒட்டிக்கொண்டு அரசியல் நடத்தி வருவதோடு, கட்சி மாறுதல்களையும் செய்து வருகின்றது. இது மலையகத்தின் ஏனைய கட்சிகளுக்கும் பொருந்தும். அவர்களும் இதே பாணியையே பின்பற்றுகின்றமையை காணலாம்.

இதற்கு இவர்கள் சொல்லும் காரணம் என்னவெனில், அரசாங்கத்ததோடு இருந்தால் மாத்திரமே மலையக மக்களுக்கு அபிவிருத்திகளை செய்ய முடியும் என்பதாகும்.

தற்போதைய நிலையில் மலையக மக்கள் முன்னணி தொழிலாளர் தேசிய சங்கம் என்பன ஆளுங்கட்சியில் இருந்து எதிர்க்கட்சிக்குத் தாவி தற்போது அரசாங்கத்தை தூற்றத் தொடங்கி விட்டன.

அதேநேரம் மலையக மக்கள் முண்ணனியின் தலைவர் திருமதி சாந்தினிதேவி யார் எதிர்த்தாலும் தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கே ஆதரவு வழங்கப்போவதாக 19.12.2014 அன்று அறிவித்துள்ளார். இவருக்கு பலம் இருக்கிறதா இல்லையா என்பது வேறு விடயம். அமரர் சந்திரசேகரனின் மறைவுக்குப் பின்னர் அவரை கெளரவப்படுத்தும் முகமாகவே இவருக்கு கட்சி தலைவர் பதவி வழங்கப்பட்டது. அவ்வேளையில் கட்சி அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கியதால் ஜனாதிபதியின் ஆலோசகராக அவருக்கு பதவி வழங்கப்பட்டு சில சலுகைகளும் வழங்கப்பட்டன. வழங்கப்படுகின்றன. இதனை இழக்க இவர் விருப்பம் இல்லாதவராகவே காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

மறுப்புறம் தொழிலாளர் தேசிய சங்கத்திற்கு திடீர் ஞானம் பிறந்தது. முந்தியவாரம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஹவுக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்து விட்டு அடுத்த வாரம் எதிரணிக்கு ஆதரவு வழங்குவதாக கூறி கட்சித் தாவல் செய்து இருக்கிறார்கள். எனினும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இதுவரை மஹிந்த ராஜபக்ஷவுக்கே ஆதரவு வழங்குவதாக குறிப்பிட்டுள்ளதோடு மக்கள் மத்தியில் பாரிய பிரச்சாரங்கள் எதனையும் மேற்கொள்ளாமல் மோட்டார் சைக்கிள் பவனிகளை மட்டும் முன்னெடுத்து வருகின்றது.

மலையக மக்கள் முன்னணியும் தொழிலாளர் தேசிய சங்கமும் மலையக மக்களுக்கு காணி மற்றும் வீட்டுரிமை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற தமது கோரிக்கையை எதிரணி ஏற்றுக்கொண்டுள்ளது. இதனால் எதிரணி பொது வேட்பாளருக்கு ஆதரவை வழங்க முன்வந்தோம் என குறிப்பிட்டமையை ஊடகங்கள் வெளிப்படுத்தியிருந்தன. சரியோ தவறோ ஒப்பீட்டளவில் மலையகத்தில் தமக்கு இருக்கும் செல்வாக்கை பயன்படுத்தியுள்ளனர்.

ஆனால் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பலத்தினை பார்த்தால் மூன்று மாகாண சபைகளையும் (மத்திய ஊவா சப்பிரகமுவா) 05 வரையான உள்ளூராட்சி கபைகளினதும் ஆட்சி அதிகாரத்தை தீர்மானிக்கும் சக்தி காணப்படுகிறது என்பது மேலுள்ள அட்டவணையை அவதானிக்கும் போது தெளிவாகும். இந்நிலையில் அரசாங்கம் எதிர்கொள்ளும் சவாலுக்கு இவர்கள் பிரதமர் பதவியை கேட்டாலும் கொடுக்கக்கூடிய நிலையே காணப்படுகின்றது. இவர்களின் முடிவு அரசாங்கத்தின் எதிர்காலத்தையே ஆட்டிப்படைக்கும் அளவுக்கு வலுவானது என்பதை இவர்களும் நன்கு அறிவார்கள். ஆனால் இவர்கள் அரசாங்கத்திற்கு எவ்வித நிபந்தனைகளும் இன்றி ஆதரவளிப்பானது மக்களின் நலன் மீது அக்கறை கொள்ளவில்லை என்பதையே காட்டுகிறது.

அது மட்டுமின்றி எந்த கட்சி ஆட்சி அமைத்தாலும் அவர்கள் பக்கம் சார்ந்து தொழிற்படுவது இவர்களின் எழுதப்படாத சட்டமாகவும் உள்ளது. இதற்கு கடந்த காலம் சான்று பகரும். எனவே மக்களை பகடைக்காய்களாக பயன்படுத்தும் இந்நிலை மாறவேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும். தேர்தலுக்கு இன்னும் இரண்டு வாரங்கள் இருப்பதால் மக்கள் நலனில் அக்கறை கொண்டு மலையக மக்களின் உரிமை சார்ந்த விடயங்களுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலான நிபந்தனைகளை முன்வைக்க முடியும்.

2014 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் மலையக இளைஞர் யுவதிகளுக்கு ஆசிரியர் உதவியாளர் தொழிலை பெற்றுக்கொடுப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டதோடு அதற்கான பரீட்சைகளை 28.12.2014 அன்று நடத்தவுள்ளதாக தெரிய வருகிறது. இதுவும் ஒரு அரசியல் நாடகமா என்றே கேட்க தோன்றுகிறது. ஏனெனில் அடுத்த வருட வரவு செலவு திட்டத்தில் 50000 ஆசிரியர் உதவியாளர்களை சேர்த்துக்கொள்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதோடு அவர்களுக்கு மாதாந்தம் 9500 மாதாந்த கொடுப்பனவாக வழங்கப்படவும் முன்மொழியப்பட்டுள்ளது. எனினும் மலையக இளைஞர் யுவதிகளுக்கு வெறும் 6000 கொடுப்பனவாக வழங்ப்பட உள்ளது என்பதை கருத்திற் கொள்ள வேண்டும்.

இதன்மூலம் எமது இளைஞர், யுவதிகளை குறைந்த ஊதியத்திற்கு உழைப்புச் சுரண்டலை செய்ய இவர்கள் முற்படுகின்றார்கள். மேலும் தற்போதைய ஜனாதிபதி தோல்வியடைந்தால் இந்த தொழில்வாய்ப்பு எமக்கு கிடைக்காது என்ற பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது.

அண்மையில் நடந்த கருத்தரங்குகளில் இதனை வலியுறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. எனினும் இது பெரும் தவறான கூற்று. காரணம் ஜனாதிபதி பதவி விலகினாலும் பாராளுமன்றம் தொடர்ந்தும் இரண்டு வருடங்களுக்கு செயற்பட உள்ளதோடு வரவுசெலவு திட்டத்தை பாராளுமன்றமே ஏற்றுக்கொண்டுள்ளதே தவிர ஜனாதிபதி அல்ல என்பதை இளைஞர் யுவதிகளும் புரிந்து கொள்ள வேண்டும்.

மேலும் தற்போதைய நிலையில் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள மொத்த வாக்குகளில் 1.5 மில்லியன் வாக்குகளை ம.ம.மு. மற்றும் தொ.தே.ச. உள்ளிட்ட ஏனைய சிறுபான்மைக் கட்சிகள் கொண்டுள்ளதோடு நடுநிலையான வாக்குகள் என்று சுமார் 50000 வரை காணப்படுகின்றது. இந்நிலையில் நுவரெலியா மாவட்டத்தில் பொது எதிரணி வேட்பாளருக்கு அதிகளவிலான வாக்குகள் கிடைக்கக்கூடிய சாத்தியக்கூறுகளே காணப்படுவதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதேவேளை சில மலையகத் தலைமைகள் மக்களை மிகவும் கீழ்த்தரமாக பேசுவதோடு எதிர்த்தரப்பு கட்சித் தலைமைகளையும் தகாத வார்த்தைகளால் விமர்ச்சிக்கின்ற போக்கையே கடைப்பிடிக்கின்றன.

இது மலையக மக்களின் நாகரீக அரசியலுக்கு பெரும் பின்னடைவையே ஏற்படுத்தும். எதிர்காலத்தில் இவ்வாறான தலைமைகளை வெளியேற்றவும் மக்கள் தயங்கமாட்டார்கள் என்பதையும் இங்கு குறிப்பிடுவது பொருத்தமாகும்.
இரா சந்திரமோகன்.


Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates