இந்த வீடியோவைப் பாருங்கள். தொல்லியல் பணிப்பாளர் இராஜினாமாவுக்கு தள்ளப்பட காரணமாக இருந்த சர்ச்சைக்குரிய சந்திப்பு இது தான். அதில் உள்ளபடியே மொழிபெயர்த்திருக்கிறேன். இன்று 12ஆம் திகதி தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் அனுரா மனதுங்க தனது இராஜினாமா கடிதத்தை ஒப்படைத்துவிட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவரால் கடமையை செய்ய முடியாவிட்டால் விலகும்படியும் வேறு ஒருவரை அந்த இடத்துக்கு நியமிக்க முடியுமென்றும் ஜனாதிபதி கடந்த மே 10ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் நில முகாமைத்துவம் தொடர்பாக நடந்த கூட்டத்தின் போது தெரிவித்திருந்ததை அறிவீர்கள்.
முதல் தடவை ஒரு இலங்கையின் ஒரு ஜனாதிபதி வடக்கில் இருப்பவை தமிழ் பௌத்தர்களது என்று அறிவித்திருக்கிறார். அதுவும் இனவாத சக்திகளுக்கும், தொல்லியல் தலைமைகளுக்கும் கொடுத்திருக்கும் பதிலடி. ஒரு ஜனாதிபதியே இவ்வாறு நம் நிலத்தில் இருக்கும் பௌத்த சான்றுகள் தமிழகளுக்கு உரியவை என்று கூறும்போது; இன்னும் அது “சிவபூமி” என்று போலித்தனமாக உளறிக்கொண்டு இருக்கப்போகிறோமா?
முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு நிலத்தில் 229 எக்கரை யூன் 30க்கு முன்னர் விடுவிப்பது பற்றிய கடிதத்தை வழங்குதற்கு அமைச்சரும். பணிப்பாளரும் உறுதியளித்தார்கள். (இப்படி ஆர்ம்பிப்பவரின் பெயர் தெரியாது சிங்களம் தெரிந்த தமிழர் என்று நினைக்கிறேன்)
தொல்லியல் பணிப்பாளர் மனதுங்க : அதில் ஒரு பிரச்சினை இருக்கிறது சேர் அந்த நிலத்தை விடுவிப்பது சிரமம். அது சிக்கலாக ஆகிவிடும்.
ஜனாதிபதி ரணில் : நீங்கள் அமைச்சரவை முடிவை ஏற்றுக்கொள்ளவேண்டும். இன்னொருதடவை நீங்க இவ்வாறு தேசிய கொள்கையை ஏற்க மறுத்தால் அது ஒரு பிரச்சினையாகிவிடும்.
சுமந்திரன் : அந்த நிலத்தில் நூற்றாண்டுகளாக விவசாயம் செய்துவருகிறார்கள்.
ரணில் : சரி இப்போது எத்தனை ஏக்கர்கள் வேண்டும்? (ஆணையாளரைப் பார்த்து)
பணிப்பாளர் : தற்போது 72ஏக்கர்கள் உண்டு. இன்னும் 270 ஏக்கர்கள் எங்களுக்கு வேண்டும் என கேட்டிருக்கிறோம் சேர். இவற்றில் விவசாயம் மேற்கொள்ளும் நிலம் 5 ஏக்கர் மட்டுமே.
ரணில் : சரி அந்த 5 ஏக்கரை திருப்பிக் கொடுக்க முடியுமா?
பணிப்பாளர் : அந்தக் காணி எங்களிடம் இல்லை. அது வன இலாக்காவிடமே இருக்கிறது.
ரணில் : சரி நீங்கள் 270 ஏக்கர்களை எடுத்தால், இந்த விகாரை மகாவிகாரையை விட பெரிதென்கிறீர்களா? மகாவிகாரை, ஜேதவனாராமய, அபயகிரி அனைத்து விகாரைகளையும் சேர்த்தால் கூட நூறு ஏக்கர் வராதே. அவற்றை விட பெரிய விகாரை என்றா எனக்கு நீங்கள் கூறுகிறீர்கள்?
(இடையில் சுமந்திரன் குறிக்கிடுகிற போது. இருங்கள். ஒரு நிமிடம் பொறுங்கள் என்கிறார் ஜனாதிபதி)
இல்லை சேர். அங்கே போய் ஆய்வு செய்து இரண்டு ஆண்டுகளாகின்றன. அவர்கள் அடையாளம் கண்டு குறிப்பிட்ட நிலங்கள் தான் இவை. மீண்டும் அங்கே சென்று அவற்றை மீளாய்வு செய்யலாம்.
ரணில் : நீங்கள் எனக்கு வரலாறு கற்றுக் கொடுக்கிறீர்களா? அல்லது உங்களுக்கு நான் வரலாற்றைக் கற்றுத் தரவா?
பணிப்பாளர் : மகாவிகாரை அளவுக்கு அது பெரிதில்லை தான்....
ரணில் : அப்படியென்றால் அது சிறியதாக அளவா இருக்க வேண்டும். அது முக்கிய இடம். தமிழ் பௌத்தர்கள் வாழ்ந்த இடம். எனவே அதில் பிரச்சினை இல்லை. ஆனால் 275 ஏக்கர்கள் இருக்க முடியாது.
மற்றவர் : பணிப்பாளர் தான் 270 ஏக்கர் நிலத்தில் ஆராயுமாறு பணித்தவர். அதன் பின்னர் அந்த கடிதத்தை மீளப்பெறுவதாக பணிப்பாளரும், அமைச்சரும் தெரிவித்திருந்தார்கள். இங்கே அவர் அப்படி மீளப் பெற முடியாது என்கிறார். அது எங்கள் பிரதேசத்தில் பெரும் பிரச்சினையாக இருக்கிறது...
ரணில் : ஆம் இது முக்கிய தொல்லியல் இடம். இங்கு தான் தமிழ் பௌத்த விகாரை இருந்திருக்கிறது. இதைப் பற்றிய வரலாற்று சான்றுகள் உள்ளன. இதைப் பற்றி கொத்குக என்கிற ஒரு மந்திரி ஒருவரால் ஆக்கப்பட்டது. அவரைப் பற்றிஅறிந்திருக்கிறீர்களா? (பணிப்பாளரைப் பார்த்து) எப்படியோ... 200 ஏக்கர்கள் இருக்கும் என்றெல்லாம் நான் கருதவில்லை. அந்த இடம் பாதுகாக்கப்படவேண்டும். ஆனால் இவ்வளவு நிலம் அதற்குத் தேவையா என்பது தான் பிரச்சினை.
இந்த சம்பாசனையில் இராச மாணிக்கம் சாணக்கியன்
இப்படித்தான் திரியாயவில் பறிக்கப்பட்ட 3000 ஏக்கர் காணி இப்போது தொல்லியல் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் இல்லை பனாமுரே திலகவன்ச என்கிற பிக்கு கையகப்படுத்தி அதனை மீண்டும் பறிக்கப்பட்ட மக்களுக்கே விவசாயம் செய்வதற்கு குத்தகைக்கு கொடுக்கிற நிலமை உருவாகியிருக்கிறது.
என்றுதொடர்கிறது.
ஜனாதிபதி ரணில்,தொல்லியல் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் இல்லாதவை மீண்டும் மக்களுக்கே கொடுக்கப்படவேண்டும். திரியாயவில் 3000 ஏக்கர் ஏன் தேவைப்பட்டது. இனியாவது அவற்றை மீளக் கொடுப்பீர்களா இல்லையா? இதைத் தீர்ப்பீர்களா இல்லையா? நேரடி பதிலைத் தாருங்கள். திரியாய என்பது என்ன?
பணிப்பாளர் :அந்த இடத்தைச் சுற்றித்தான் சேர்....
ரணில் : அங்கே ஒரு பன்சலை அல்லவா இருந்தது.
பணிப்பாளர் :ஓம். ஒரு விகாரை
ரணில் : விகாரை.. ஆனால் அங்கே 3000 ஏக்கர் இருக்க வாய்ப்பு இல்லை அல்லவா? அது மட்டுமல்ல திரியாய என்பது ஒரு பன்சலையாக இருக்கவில்லை. அது முன்னொரு காலத்தில் ஒரு கலங்கரை விளக்கமாக (Light house) இருந்தது. முதுமாவிகாரை, யாலவில் உள்ள ஆகாச சைத்திய போன்றவை எல்லாம் உண்மையில் வழிகாட்டும் ஒரு கலங்கரை விளக்கமாக இருந்தவையே. அதன் பின்னர் அங்கே சென்று பிக்குமார் தங்கிக் கொண்டார்கள்.
மேலும் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் என தொல்லியல் திணைக்களம் கண்டுபிடிக்கிற இடங்களை தொல்லியல் திணைக்களம் பொறுப்பெடுத்து பாதுகாக்காமல்; அவற்றை ஏன் பௌத்த பிக்குகளிடம் ஒப்படைக்கிறார்கள். சுற்றி உள்ள தமிழர் நிலங்களையும் சேர்த்து அந்த பிக்குகளுக்கு வழங்கி புதிய விகாரைகளையும் அமைக்க வழிஏற்படுத்திக் கொடுக்கிறார்கள். அதன் பின்னர் அந்த பிக்குமார் அந்த விவசாய காணிகளை அங்கிருக்கும் மக்களுக்கே குத்தகைக்கு கொடுக்கிற அநியாயமும் நடக்கிறது. இது கேலிக்கூத்து மட்டுமல்ல மோசமான மீறல்.
தொல்லியல் இடங்களாக அடையாளம் கண்டால் அவை மேலும் சிதைவடையாமல் பாதுகாப்பதற்கான (Restoration) செய்யலாமே ஒழிய அங்கே புதிய கட்டுமானங்களை செய்ய முடியாது என்பது தொல்லியல் விதி.
இலங்கையின் அரசியல் வரலாற்றில் ரணில் அளவுக்கு வரலாற்று அறிவைக் கொண்டவர்கள் இருந்ததில்லை என்பதும் இங்கே கவனிக்க வேண்டும். ரணில் பல கூட்டங்களில் இதனை மெய்ப்பித்து இருபதைக் காணலாம். அதுபோல இலங்கையின் அரசியல் தலைவர்களிலேயே பௌத்த மரபுரிமைக்காக சொத்துக்களை அதிகம் தானம் செய்த குடும்பமும் ரணிலின் குடும்பம் தான் என்பதும் வரலாறு. இந்தப் பின்னணியால் தான் ரணிலோடு மோத விளையும் பிக்குமார் தரப்பு குறிப்பிட்ட எல்லையை தாண்ட முடிவதில்லை. ரணிலிடம் இருக்கும் லிபரல்வாத சிந்தனையும் சேர்ந்து தொல்லியல் சிக்கலில் இந்தப் போக்கைக் கடைபிடிக்க முடிகிறது. ஆனால் மறுபக்கம் ரணில் ஒரு தனித் நபர் அல்ல நிறுவனமயப்பட்ட சிங்கக பௌத்த பேரினவாத அரசின் தலைவர். ரணிலிடம் போய் பிரபாகரனிடம் எதிர்பார்த்ததைதை கோர முடியாது.
தற்போது இந்த உரையாடலைத் தொடர்ந்து ரணிலுக்கு எதிராக பிக்குமார்களும் இனவாத அமைப்புகளும் களத்தில் இறங்கத் தொடங்கி இருப்பதைக் காண முடிகிறது. ஊடக சந்திப்புகள், கண்டன அறிக்கைகள் எல்லாம் ஏற்கெனவே தொடங்கியாயிற்று. சமூக வலைத்தளங்கள் எங்கும் சிங்களத்தில் ரணிலுக்கு கொடுத்து வரும் தாக்குதல்களும், பேச்சுக்களும் ரணில் மீது கடும் எதிர்ப்பலை தொடங்கப்பட்டுவிட்டதை உறுதிபடுத்துகின்றன.ரணிலின் இந்த கருத்துக்கள் இனவாத சக்திகளுக்கு ஒரு பேரிடி தான் என்பதை கவனிக்க முடிகிறது.