Headlines News :

காணொளி

சுவடி

"நவீன சேரி": கொழும்பின் தொடர்மாடி வீடுகள் - என்.சரவணன்

“நிலம் உங்களுக்கு அதிகாரம்; எங்களுக்கு வாழ்க்கை”
“காலா” திரைப்படத்தின் தாரகச் சுலோகம் அது. காலா திரைப்படத்தைப் பார்வையிட்ட கொழும்பு வாழ் அடித்தட்டு மக்கள் (குறிப்பாக “சேரி” வாழ் மக்கள் மற்றும் அரசாங்க தொடர்மாடிகளில் வாழ்பவர்கள்) அந்த திரைப்படத்தில் காண்பிக்கப்படும் பல முகங்களில் தங்கள் முகங்களைப் பொருத்திப் பார்த்திருப்பார்கள். அத்திரைப்படத்தில் பேசப்படும் பிரச்சினைகள் பல தமது பிரச்சினைகளும் தான் என்பதை அடையாளம் கண்டிருப்பார்கள்.

கொழும்பில் உள்ள சேரிகளில் பல தாராவியை விட மோசமான நிலையில் பல இடங்கள் உள்ளன. இவர்கள் மொத்த கொழும்பு வாழ் மக்களில் 51% வீதத்தினர் என்கிறார் துஷார சமரதுங்க (Thushara Samaratunga - High Density High Rise Vertical Living for Low Income People in Colombo, Sri Lanka: Learning from Pruitt-Igoe) தனது ஆய்வில். பெரும்பாலான இம்மக்கள் தாம் வாழும் இடங்களை அப்படிப்பட்ட “சேரி” என்று இனங்கான்பதில்லை. தாம் வாழும் இடங்கள் அப்படி அழைக்கப்படுவதை விரும்புவதும் இல்லை. பெரும்பாலான தமது வாழ்விடங்களை “தோட்டம்” என்று அழைத்துக் கொள்வார்கள். வசதி குறைந்த இடத்தில்,  மக்கள் திரள் நெரிசலாக வாழும் இடங்களைத் தான் சேரி என்று அழைக்கிறார்கள். அதன் படி கொழும்பில் அப்படி பல வாழ்விடங்களை அடையாளம் காணலாம்.

அடித்தட்டு தொழிலாளர்களும், மத்தியதர வர்க்கத்துக்கு கீழே உள்ளவர்களும் சாதாரண மத்திய வர்க்கத்தினரும், பெரும்பாலான ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த விளிம்பு நிலையினரும் வாழும் இடங்கள் இவை.

“நகராக்கம்” நிகழ, நிகழ மக்கள் செறிவு அதிகரிக்கப்படுவதும், அவர்களுக்கான தேவைகளும், வளங்களும் கூடவே அதிகரிக்கப்படுவதற்கான போக்கு நிகழவே செய்யும். இதை உலகெங்கும் காணலாம்.

பொதுவாக பெருமளவு மக்கள் தொகையைக் கொண்டிருக்கும் நகரங்களில் சனத்தொகை பெருக்க விகிதாசாரமும் அதிகம். அதாவது ஏனைய பிரதேசங்களை விட இயல்பாக அங்கே சனத்தொகை பெருக்கவீதம் அதிகமாகவே இருக்கும்.

கொழும்பைப் பொறுத்தளவில் வெளி மாவட்டங்களில் இருந்து கொழும்பை நோக்கி படையெடுத்து  பெருகுவது என்பது எங்கும் போல இங்கும் நிகழ்ந்திருக்கிறது. அடுத்ததாக யுத்தத்தின் காரணமாக இடம்பெயர்ந்தவர்கள் பெருவாரியாக கொழும்பை நோக்கியே கடந்த தசாப்தங்களில் பெருகினார்கள். யுத்தம் முடிந்த பின்னர் தமது பிரதேசங்களுக்கு திரும்பியவர்கள் குறைவே. அவர்களில் பெரும்பாலானோர் கொழும்புவாசியாகவே ஆனார்கள்.ஆக கொழும்பின் சனநெரிசல் என்பதை இந்தப் பின்னணியுடன் தான் பார்க்க வேண்டியிருக்கிறது.

யுத்தத்தின் காரணமாக குடியேறி நிரந்தவாசியாக ஆனவர்களில் பெரும்பாலானோர் இந்த சேரி வாழ்க்கைக்குள் அகப்படவில்லை. அவர்களில் பெரும்பாலோனோரின் பொருளாதார காரணிகள் அந்த இடத்துக்கு அவர்களைத் தள்ளவில்லை. ஆனால் சேரி வாழ்க்கைக்குள் தள்ளப்பட்டவர்களும் கணிசமானவர்களும் உளர்.

கொழும்பு என்பது இலங்கையின் வர்த்தகத் தலைநகரம். அந்த வகையில்  பல்வேறு தொழில்துறையை நிரப்பும் பெருமளவு தொழிலாளர் வர்க்கத்தினர் இங்கே தான் வாழ்கிறார்கள். உழைப்புச் சுரண்டலுக்கு அதிகமாக ஆளாகும் அவர்களின் வாழ்விடங்கள் இந்த சேரிகளும், அதை அண்டிய பகுதிகளுமாகத் தான் இருக்கமுடியும். அப்படித் தான் இருக்கிறது.

1978 இல் திறந்த பொருளாதாரக் கொள்கையின் வரவோடு இந்த வர்த்தகத் தலைநகருக்குள் பல்தேசிய கம்பனிகளினதும், கார்ப்பரேட் நிருவனங்களினதும் செயற்பாடுகள் அதிகரிக்கத் தொடங்கின. அந்நிய முதலீடுகளாலும் தொழிற்துறை பெருக்கத்தாலும் நிலம் அதிகளவு தேவைப்பட்டன. அதன் விளைவு கொழும்பின் மையத்திலிருக்கும் முக்கிய சேரிகளில் இருந்து மக்கள் அகற்றப்பட்டு தொடர்மாடிக் கட்டடங்களுக்குள் புகுத்தப்பட்டார்கள்.

இலங்கையின் 1953ஆம் ஆண்டு முதன் முதலில் தேசிய வீடமைப்புத் திணைக்களம் ஆரம்பிக்கப்பட்டது. இதுவே படிப்படியாக வீடமைப்புத் திட்டங்களை அறிமுகப்படுத்தியது. 1978க்குப் பின்னர் தான் இதன் வேகம் அதிகரிக்கப்பட்டது. இதெற்கென தேசிய வீடமைப்பு அதிகார சபையும் நிறுவப்பட்டது. ஐ.நா சபையும் இந்தத் திட்டத்துக்கு உதவியளித்தது. 1982ஆம் ஆண்டை “வீடற்றவர்களுக்கு வீடு” என்று ஐ.நா பிரகடனப்படுத்தியது. ஐ.நா சபையின் திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் வீடுகள் அப்போது கட்டப்பட்டன. வீடமைப்பு அமைச்சராக இருந்த பிரேமதாசவின் திட்டத்தில் 1984-1988 காலப்பகுதிக்குள் மாத்திரம் “பத்து லட்சம் வீடுகள்” திட்டம் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டன.  பிரேமதாச ஜனாதிபதியாக பதவி வகித்த 1989-1993 காலப்பகுதிக்குள் 1.5 மில்லியன் வீடுகள் திட்டம் தொடங்கப்பட்டது.

இந்த திட்டங்களில் மக்கள் நலன் நிச்சயம் இருந்தாலும் காலப்போக்கில் பெறுமதியான நிலங்களை அரசு கையகப்படுத்தும் திட்டத்தின் அங்கமாக பரிமாற்றப்பட்டது. இதன் விளைவாக கொழும்பு சேரிப்புறங்களில் வாழ்ந்த மக்களின் நிலங்கள் பெறுமதி உயர்ந்திருந்த நிலையில் மகிந்த ராஜபக்சவின் ஆட்சி காலத்தில் அங்கு வாழ்ந்த மக்களை வலுக்கட்டாயமாக இராணுவத்தைக் கொண்டு அகற்றி வீதியில் விட்டார்கள். அவர்களுக்கு பின்னர் வழங்கப்பட்ட வீடுகள் அவர்களின் வாழ்ந்த நிலங்களுக்கும், வீடுகளுக்கும் பெறுமதியானவை அல்ல.

நிலத்தோடு வாழ்ந்த மக்கள் வசதிகள் குறைவாக இருந்தாலும் அந்த சிறு குடில்களில் மாடிகளைக் கட்டி பல குடும்பங்களும் வாழ்ந்தார்கள். ஆனால் அவர்களின் நிலங்களைப் பறித்த அரசு அவர்களை வீடமைப்புத் திட்டம் என்கிற பேரில் சிறு கூடுகளுக்குள் அடைத்தது. அதிகாரிகள், அரசியல்வாதிகள், தனியார் கொன்ராக்டர்களும், இடைத்தரகர்க்களுமாக நிதியின் பெரும்பகுதியை ஊழல்களால் பிரித்தெடுத்ததன் பின்னர் எஞ்சிய பணத்தைக் கொண்டு கட்டப்பட்டிருக்கும் இன்றைய தொடர்மாடிகள் தரத்தால் மிகவும் மோசமானவை. வீடுகள் வழங்கப்பட்டு ஒரு சில வாரங்களிலேயே அவற்றின் பராமரிப்புகள் கூட மோசமாக ஆகிவிடுகின்றன. வீடமைப்பு அதிகார சபையும், அமைச்சும், திணைக்களங்களும், உள்ளூராட்சி நிறுவனங்களும் மாறி மாறி ஒருவருக்கொருவர் பழியைப் போட்டு தப்பி விடுகின்றன.


இம்மக்களில் கணிசமானோர் தமது சொந்தத் தேவைகளை ஈடு செய்வதற்காகவும் தொழிலுக்காகவும் முச்சக்கர வண்டிகளை வைத்திருப்பவர்கள். அவற்றை நிறுத்துவதற்கும் எந்த வசதிகளும் இல்லை. சிறுவர்கள் ஒன்று கூடுவதற்கு போதிய வசதிகள் கிடையாது. பாடசாலை முடிந்து திரும்பும் சிறுவர்கள் வீடுகளுக்குள் அடைவதைத் தவிர அவர்களுக்கு தெரிவில்லை. வளர்ந்தவர்கள், வயோதிபர்கள் ஒன்று கூடுவதற்கான வசதிகளும் கூட உரிய முறையில் இல்லை. ஏன் வீட்டில் துவைக்கின்ற உடைகளைக் காயவைக்கக் கூட வசதிகள் கிடையாது. புதிய சீமெந்து தொடர்மாடி வீடு கச்சிதமான தோற்றத்துடன் காட்சியளித்தாலும் ஒன்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் சிறு வீட்டுக்குள் அடைக்கப்பட்டுள்ளனர்.

சிலர் கிடைத்த வீட்டை வாடகைக்கு கொடுத்துவிட்டு வசதி குறைந்தாலும் - இட வசதி அதிகமுள்ள இடங்களுக்கு மீண்டும் வாடகைக்குச் சென்றுவிட்டதையும் அவதானிக்க முடியும்.

இம்மக்கள் இருந்த நிலங்களை அரசு கையகப்படுத்தி மீண்டும் வேற்று முதலீட்டாளர்களுக்கு விற்றுவிடவோ, வாடகைக்கு விடவோ செய்கின்றனர். கட்டிக்கொடுக்கப்பட்ட வீடுகளும் இலவசமாக வழங்கப்படவில்லை மீண்டும் அவர்களிடம் பணம் அறவிடப்படுகிறது. நிலம் மக்களின் கைகளில் இருந்தவரைக்கும் வானமே எல்லை என்று அவர்களால் மேலே பெருப்பித்து வாழ முடிந்தது. ஆனால் இப்போது நிலம் அவர்களிடம் இருந்து பறிக்கப்பட்டுவிட்டது. இனி அது கிடைக்கப்போவதுமில்லை.

கொழும்பின் தொடர்மாடிக் காட்டிடங்களுக்குப் போய்ப் பார்த்தால் தெரியும் அவை நவீன சேரிகளாக எப்படி உருவெடுத்திருக்கின்றன என்பது.

அவர்களின் வாழ்க்கையை தரமுயர்த்துவதாக சொல்லிக்கொண்டு தொடர்மாடி வீடுகளை கட்டிகொடுக்கும் அரசு குறைந்தபட்சம் அங்குள்ள  அவர்களின் சுற்றுச் சூழலையும், சுற்றாடல், உட்கட்டமைப்பு விடயத்தில் கூட உரிய காட்டியதாகத் தெரியவில்லை. கட்டிட மலைகளுக்குள் அவர்களைத் திணித்துவிட்டால் மாத்திரம் அவர்களின் வாழ்க்கைத் தரம் உயரப் போவதில்லை. அவர்களின் அடிப்படை வாழ்க்கை வசதிகளும் சரி செய்யப்படவேண்டும்.

கொழும்பில் இன்னும் பல நிலங்களில் இருந்து மக்களை அப்புறப்படுத்த தயாராகி வருகிறார்கள். அவர்களுக்கு விழிப்புணர்வு அளிக்கப்படவேண்டும். ஏற்கெனவே தொடர்மாடி குடியிருப்புகளில் வாழ்பவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான பலமான அமைப்பு இதுவரை இல்லை.

நிலம் நமதுரிமை.

நன்றி - அரங்கம்


இயற்கை அனர்த்த காலத்தில் கண்டு கொள்ளப்படாத பெருந்தோட்டத் தொழிலாளர்கள் - சி.சி.என்


இலங்கையில் ஏற்பட்ட காலநிலை மாற்றம் மலையகப்பிரதேசங்களை பாதித்தது மட்டுமல்லாது, இப்பிரதேச மக்களின் தற்கால வாழ்வியலை வெளிச்சம் போட்டுக்காட்டியது எனலாம். குறிப்பாக, இம்மக்களின் குடியிருப்புகள் அவர்கள் வாழ்ந்துவரும் பிரதேசங்களின் உட்கட்டமைப்பு வசதிகள் எந்தளவிற்கு இன்னும் சீர்செய்யப்படாது இருக்கின்றன என்பதை வெளிப்படுத்தின. இது இம்மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி வருபவர்களுக்கு தர்மசங்கடங்களைக் கொடுத்திருக்கும் என்பது மட்டும் நிச்சயம்.

ஏனென்றால், இந்த மக்கள் இன்னமும் நூறு வருட லயன் குடியிருப்புகளிலும், உட்கட்டமைப்புகள் இல்லாத வெள்ள அனர்த்தம் ஏற்படும் இடங்களிலுமே வாழ்ந்து வருவதை அறிந்தும் தெரிந்தும் இவர்கள் மௌனம் காத்து வருவதை எந்த மக்கள் தான் பொறுத்துக்கொள்வர்?

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களை காணச்சென்ற பிரதிநிதிகள் அவர்களை சந்தித்து ஆறுதல் கூறி விட்டு மட்டும் திரும்பி விட்டனர். வேறு சிலரோ தாம் அவ்விடம் சென்றால் கேள்விகளுக்கு பதில் கூற வேண்டி வரும் என செல்வதை தவிர்த்துக்கொண்டனர். இதே வேளை இம்மக்களின் உழைப்பை பெற்று வரும் தோட்ட நிர்வாகங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்தவித நிவாரணங்களையும் வழங்க முன்வரவில்லை. சேதங்களை பார்வையிட்டதோடு சரி. கடந்த காலங்களில் ஏற்பட்ட அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட லயன் குடியிருப்புக்களையே திருத்திக்கொடுக்காத தோட்ட நிர்வாகங்கள் ஒவ்வொரு வருடமும் இது வழமையாக ஏற்படும் சம்பவம் தானே என மௌனம் காக்கின்றன.

இப்படியும் ஒரு வாழ்க்கை

நுவரெலியா மாவட்டத்தின் பல பெருந்தோட்டப்பகுதிகள் கடந்த வாரமளவில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டன. கடும் காற்றுடன் கூடிய மழை காரணமாக பல பல தொழிலாளர் குடியிருப்புகளின் கூரைகள் காற்றினால் அள்ளுண்டு போயின இவை 50 வருடங்களுக்கும் பழைமையானவை. பல கூரைத்தகரங்கள் பல வருடகாலமாக மாற்றப்படாதிருப்பதால் அதன் மீது கறுப்பு இறப்பர் சீட்கள் மற்றும் நகராதபடி கற்களை அடுக்கி வைத்து மழையினால் பாதிக்கப்படாது தமது வாழ்க்கையை முன்னெடுக்கின்றனர். பல குடியிருப்புகள் அவ்வாறு இருந்தாலும் அக்கரபத்தனை ஊட்டுவள்ளி பச்சை பங்களா தோட்டப்பிரிவில் உள்ள சில குடியிருப்புகளின் நிலைமை இன்னும் மோசமாகவே உள்ளது.

இவர்கள் வாழும் வீட்டுக்கூரைகளுக்கு மேல் தகரத்திற்கு பதிலாக பொலித்தீன்களும் கற்களுமே காணப்படுகின்றன.இது குறித்து தோட்ட நிர்வாகத்திற்கு தெரிவித்தால் 500 கிராம் கறுப்பு பொலித்தீன் மட்டுமே தரப்படுவதாக இவர்கள் விசனம் தெரிவிக்கின்றனர். இந்த கூரைத்தகரங்களை மாற்றிக்கொள்ள கூடிய அளவுக்கு தங்களுக்கு வருமானம் இல்லாததால் வேறு வழியின்றி பழுதடைந்த கூரைகளின் வழியே தண்ணீர் குடியிருப்புக்குள் வராதிருக்க மானா புற்களை பரப்பியுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். இந்த குடியிருப்பின் மற்றுமொரு தொகுதியோ பல தசாப்தங்களாக மாற்றப்படாதிருக்கும் தகரங்களைக்கொண்டிருக்கின்றது. இவற்றை மாற்றும்படி கேட்டால் தோட்ட நிர்வாகமோ கறுப்பு பொலித்தீனை தருகிறது. அரசியல் பிரமுகர்களும் எட்டிப்பார்ப்பதில்லை. அப்படியானால் இந்த மக்களின் நிலை தான் என்ன?

வீட்டுத்திட்டங்களின் பயனாளிகள் யார்?

இந்திய அரசாங்கத்தினாலும் இலங்கை அரசாங்கத்தினாலும் முன்னெடுக்கப்பட்டு வரும் பெருந்தோட்டப்பகுதி வீட்டுத்திட்டங்கள் யாருக்கு வழங்கப்படுகின்றன என்ற கேள்வி இங்கு எழுகிறது. மிக மோசமான குடியிருப்புகளில் வாழ்ந்து வரும் தொழிலாளர்கள் இந்த திட்டத்திற்குள் உள்வாங்கப்படவில்லையா? இவர்கள் இந்தத்திட்டத்திற்கு அடையாளம் காணப்படவில்லையா ? இதற்கு பதில் கூறத்தக்கவர்கள் யார்? ஏற்கனவே முன்னெடுக்கப்பட்ட வீட்டுத்திட்டங்களில் தொழிற்சங்க பாரபட்சங்கள் காணப்படுகின்றன என்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. இவ்வாறு குற்றச்சாட்டுக்களை சுமத்தியே காலத்தை கடத்துவது தான் அரசியல் பிரமுகர்களின் பணியா?

அக்கறையின்மை

இதே வேளை பல தொழிலாளர் குடியிருப்புகளுக்கு அருகாமையிலுள்ள ஆபத்தான மரங்களைப்பற்றியும் தோட்ட நிர்வாகங்கள் கண்டு கொள்வதில்லை. கடந்த சில வாரங்களாக பெய்த கடும் மழை மற்றும் காற்றின் காரணமாக தொழிலாளர் குடியிருப்புகளின் மீது பாரிய மரங்கள் சரிந்து விழுந்த சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.

இப்படியான சம்பவங்களில் உயிர்ச்சேதங்கள் ஏற்படவில்லை என்பது ஆறுதல் அளிக்கும் விடயம். ஆனால் மழைக்காலம் ஆரம்பித்தவுடன் குறித்த ஆபத்தான பகுதியிலிருக்கும் தொழிலாளர்களுக்கு அறிவுறுத்தல் செய்தல் அல்லது அவர்களை வேறு இடங்களில் குடியமர்த்தல் போன்ற விடயங்களில் தோட்ட நிர்வாகங்கள் அக்கறை காட்டுவதில்லை. அது குறித்து நிர்வாகங்களுக்கு பிரதிநிதிகளும் எடுத்துக்கூறுவதில்லை. ஒவ்வொரு வருடமும் பருவ காலத்தில் மழை பெய்கிறது ஆனால் பெருந்தோட்டப்பகுதிகளில் பாதிப்பு இருக்கக்கூடிய இடங்கள் அடையாளம் காணப்பட்டும் கூட எவருக்கும் அக்கறையில்லாத நிலைமைகளே காணப்படுகின்றன.

சேதமடையும் பாலங்கள்

தோட்டக்குடியிருப்புகளை கடக்கும் பாலங்கள் குறித்து எவருமே அக்கறை கொள்வதில்லை. ஏனென்றால் ஆற்றின் குறுக்கே அமைக்கப்படும் பாலங்கள் யாருக்கு சொந்தம் என்ற குழப்பம் இன்றும் பலருக்கு நிலவுகிறது. தோட்ட நிர்வாகமா அல்லது உள்ளூராட்சி சபைகளா இவற்றை பராமரிக்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. ஒவ்வொரு தடவையும் கடும் மழை பெய்யும் போது மழை வெள்ளம் குறித்த பாலங்களை சேதமாக்கி விட்டுச்செல்கின்றன. பிறகு அவை தற்காலிகமாக மனித செயற்பாடுகளுக்கு சீர் செய்யப்படுகின்றன.

அவற்றை நிரந்தரமாக அமைக்கவோ அதற்கு நிதி ஒதுக்கவோ எவரும் முன்வருவதில்லை. கடந்த வாரம் பெய்த மழை மற்றும் வெள்ளம் காரணமாக இப்படியானதொரு பாலம் சேதமுற்றது. வட்டவளை லோனக் தோட்டத்தில் அமைக்கப்பட்ட பாலமே இவ்வாறு அடித்துச்செல்லப்பட்டது.

இப்பாலத்தின் வழியே பாடசாலை செல்லும் மாணவர்கள், தொழிலுக்கு செல்வோர் மிகவும் பாதிப்பை எதிர்நோக்கினர். லொறி மூலம் பலர் இந்த ஆற்றைக் கடந்தனர். மிக ஆபத்தான நிலையிலேயே வாகனங்களும் ஆற்றைக் கடந்தன என்பது முக்கிய விடயம்.

மண் சரிவு அபாயம்

 மண் சரிவு அபாயம் இருக்கக்கூடிய பல தோட்டப்பிரதேசங்கள் அடையாளம் காணப்பட்டும் அபாய எச்சரிக்கை வழங்கினாலும் குறித்த பிரதேசத்தின் குடியிருப்புகளில் வாழ்ந்து வருபவர்கள் தமக்கு வேறு பாதுகாப்பான இடத்தை எவரும் பெற்றுக்கொடுக்காத காரணத்தினால் உயிரையும் துச்சமெனக் கருதி ஆபத்தான குடியிருப்புகளில் தமது வாழ்க்கையை கொண்டு நடத்துகின்றனர்.

நாட்டின் பொருளாதாரத்திற்கு பங்களிப்புச் செய்யும் இவர்களை எந்த அரசாங்கமும் கண்டு கொள்ளவில்லை. அதே வேளை இவர்களிடம் வாக்குகளைப்பெற்றுக்கொள்ளும் பிரதிநிதிகள் சுகபோக வாழ்க்கையை அனுபவிக்கின்றனரே ஒழிய இவ்வாறான காலகட்டத்தில் இவர்களின் துன்பங்களில் பங்கு கொள்வதில்லை. இந்நிலையில் அனைவராலும் கைவிடப்பட்ட ஒரு மக்கள் கூட்டமாகவே தோட்டத்தொழிலாளர்கள் உள்ளனர். இது மட்டுமன்றி இந்த நவீன காலத்திலும் இம்மக்களின் வாக்குகளைப்பெற்றுக்கொண்டும் இச்சமூகத்தை இன்னும் லயன் குடியிருப்புகளில் வாழ வைத்துக்கொண்டும் வேறு அடிப்படை வசதிகளைக் கூடப் பெற்றுக் கொடுக்காது அவர்களின் மத்தியிலேயே வாழ்ந்து வரும் அரசியல் பிரதிநிதிகள் அனைவரும் இந்நிலை கண்டு வெட்கித் தலை குனிய வேண்டும்.

நன்றி - வீரகேசரி

மலையகமும் மறுவாழ்வும் - மல்லியப்பு சந்தி திலகர்ஶ்ரீமா - சாஸ்திரி ஒப்பந்ததின் கீழ் இந்தியா தமிழகம் நோக்கி தாயகம் திரும்பியவராக சென்ற எமது மலையக உறவுகள் இன்று உணர்வோடு தாங்கள் பிறந்து வளர்ந்த மண் நோக்கி திரும்பி வருவது மகிழ்ச்சி அளிக்கின்றது. தலைமுறைகள் கடந்து மீளபுதுப்பிக்கப்படும் இந்த உறவு உணர்வு ரீதியாக மக்களை ஒன்றிணைத்து அடுத்த கட்ட நகர்வுக்கு அழைத்துச்செல்லும் என்ற நம்பிக்கை எனக்குள் எழுகிறது .

கேகாலை மாவட்டத்தின் முக்கியமானதொரு  தமிழ் பாடசாலையான கந்தலோயா தமிழ் வித்தியாலயத்துக்கு இல்ல விளையாட்டுப்போட்டிகளின் போது விருந்தினராக கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அங்கே மாணவர்கள் தமது இல்லங்களை மலையக தொழிற்சங்க, அரசியல், இலக்கிய, ஊடக, நாடக முன்னோடிகளான கோ.நடேசய்யர், சி.வி.வேலுப்பிள்ளை ஆகிய பெயர்களை தமது இல்லங்களுக்கு இட்டிருந்தனர்கள்.  

மாணவர்கள் ஓர் இல்லத்தை மலையக மக்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட "ஆதிலட்சுமி கப்பல்" போன்றும், மற்றைய இல்லத்தை மலையக மக்கள் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்ப்பட்ட "ஒப்பாரிக் கோச்சி" போன்றும் அமைத்திருந்தனர். அந்த இரண்டையும் அன்று உணர்வு பூர்வமாக தரிசித்தேன். அந்த கற்பனைக் கப்பலின் மேல் தளத்திற்கும், அந்த ரயில் பெட்டியிலும் ஏறி இறங்கினேன். என் முன்னைவர்கள் அனுபவித்த அவல உணர்வை அப்படியே அனுபவிக்க கிடைத்த நாள் அது. 

விளையாட்டுப்போட்டிக்கு இல்லத்தை அலங்கரித்ததோடு நின்று விடாமல் " ஆதிலட்சுமி " மூழ்கும் காட்சியையும் "ஒப்பாரிக் கோச்சியில்" மக்கள் அழுது புலம்பும் காட்சியையும் குறுந்திரைப்படமாக்கி தற்போது இணையத்தில் வெளியிட்டுள்ளார்கள் கந்தலோயா பாடசாலை சமூகத்தினர். 

அன்று ஒப்பாரிக்கோச்சியில் அழுது புலம்பி சென்ற உறவுகள் இன்று தமிழகத்தில் உயர் தொழில் புரிபவர்களாக, ஓய்வு பெற்றவர்களாக தமது மண்ணையும் மக்களையும் பார்க்க வருகை தந்திருந்தனர்.  இரத்தினபுரியில் இருந்து சென்ற தமிழகன் எனும் ராமச்சந்திரன் ஒரு சட்டத்தரணி, ஆகரப்பத்தனையில் இருந்து சென்ற செவந்தி நீதிமன்ற நிர்வாக அதிகாரி, வரக்காப்பொலயில் இருந்து தம்பிராஜா கிராம நிர்வாக அதிகாரி. 

தம்பிராஜா தனது மாவட்ட பாடசாலைக்கு மலையக பாரம்பரிய இசைக்கருவிகளை அங்கிருந்து அன்பளிப்பாகக் கொண்டுவந்திருந்தார். அவர்கள், என்னையும் இந்த விழாவில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்தனர் அதன் நிமித்தம்  மூன்றாவது தடவையாகவும் கந்தலோயா போனேன்.

தமிழக உறவுகளுடன் பாடசாலை மண்டபத்தை அடைந்தபோது அங்கே ஆதிலட்சுமி மூழ்கும் காட்சியும், ஒப்பாரிக் கோச்சியில் உறவுகளைப் பிரியும் ஓலமும் கண்ணீரைக் கசியச் செய்தது. கடைசிக் காட்சியில் ஒரு சிறுவனைக் கட்டியணைத்து அழுது ஓர் ஆண்மகன் விடைபெறும் காட்சி. அதில் எங்கே இருக்கிறது கற்பனை.? 80களில் எனது குருநாதரும் சிற்றப்பாவுமான மெய்யன் மேகராஜா சிறுவனான என்னைக் கட்டி அணைத்து விடைபெற்ற உண்மைக் காட்சியல்லவா அது. இந்த சித்தப்பாவைத் தேடி நான் பெரியவனாகி தமிழ் நாட்டில் அலைந்த கதையை "மல்லியப்பு சந்தியில் " பதிவு செய்துள்ளேன். ( ஐயா மேகராஜா வின் அன்றைய உணர்வுப்பதிவுதான் மல்லியப்பு சந்திக்கு முன்னுரை). 

இப்போது தமது உறவுகளைத் தேடி இங்கே வந்துள்ள உறவுகளை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும். "குறும்படத்தில் ஒப்பாரிக் கோச்சிக்கு வெளியே பிளட்போரத்தில் நின்று கதறி அழுகிறார்களே  அது நாம். ஐய்யோ என கதறி அழுது கொண்டு கைகாட்டி போனார்களே அவர்கள் தான் இவர்கள் " என அறிமுகம் செய்தேன். அந்த மண்டபத்தின் ஒவ்வொரு கண்ணும் கண்ணீரை காணிக்கையாக்கியது. எனக்கு குரல் கரகரத்தது. 

மலர்மன்னன் தம்பிராஜா திண்டுக்கல் சக்தி கலைக்குழுவினரிடம் இருந்து விலைக்கு வாங்கிவந்த "தப்பு" முதலான பாரம்பரிய இசைக்கருவிகளை அன்பளிப்பு செய்தார். தனது கட்டுரைகளுடன் எமது கட்டுரைகளும் அடங்கியதாக வழக்கறிஞர் தமிழகன் தொகுத்தளித்திருக்கும் நூலான "மலையகமும் மறுவாழ்வும்" தமிழகத்தில் பதிப்பிக்கப்பட்டாலும் இலங்கையிலேயே முதல் வெளியீடு செய்யப்பட வேண்டும் என தமிழகன் எண்ணியிருந்தார்.

அதற்காக கொழும்புத் தமிழ்ச்சங்கத்தில் 13-05-2018 விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தபோதும்,  எதிர்பாராதவிதமாக அன்று கந்தலோயா தமிழ் வித்தியாலயத்தில் நூல் வெளியிட்டு வைக்கப்பட்டது. அவரிடம் இருந்து பாடசாலை அதிபர் கருணாகரன் பாடசாலைக்கான பிரதியைப் பெற்றுக் கொண்டார். ஒப்பாரிக் கோச்சியில் சென்றவர்களை காட்சிப்படிமாக்கிய கந்தலோயா பாடசாலையில் இந்த நிகழ்வு அரங்கேற்றம் கண்டது உணர்வுபூர்மானது.

இந்த நூலின் தலைப்பு பற்றி வீரகேசரி "சங்கமம்" இலக்கிய இணைப்பிதழுக்காக நடைபெற்று இருந்த உரையாடலில் தொகுப்பாசிரியர் தமிழகன் அளித்திருந்த பதில் இங்கே பதிவு செய்யப்படவேண்டிது. 

(உரையாடல் ஆரம்பம் )

ஜீவா சதாசிவம் : மறுவாழ்வு எனும் போது ஒருவாழ்வு இழக்கப்பட்டிப்பது போன்ற தோற்றப்பாடு காணப்படுகின்றதே..

வழக்கறிஞர் தமிழகன் : நிச்சயமாக. மலையக மக்கள் எல்லா காலப்பகுதியிலும் அவர்களது வாழ்வை இழந்து மறுவாழ்வைத்தேடிக் கொண்டிருப்பவர்களாகவே நான் உணர்கிறேன். 200 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழக கிராமப்புற வாழ்வை  இழந்துதான் அவர்கள் இலங்கையில்  வெள்ளைக்காரர்களால்  குடியமர்த்தப்பட்டார்கள்.   அப்போது  அவர்கள்  தமிழகக் கிராமங்களில்  வாழ்ந்த வாழ்ககையை  இழந்து  இங்கு மறுவாழ்வைத் தேடினார்கள். 

இங்கு நூறு வருடங்கள் ஓர் அடிமை வாழ்வை எதிர்கொண்ட அந்த மக்கள் வாக்குரிமை பெற்று இலங்கை நாட்டின் பிரஜைகளாக வந்ததன் பின்னர் சுதந்திர இலங்கையில் வாக்குரிமை பறிக்கப்பட்டவர்களாக மறுவாழ்வு தேடும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். 

இந்த கட்டத்தில் 1964 ஆம் ஆண்டு இலங்கை - இந்திய அரசுகள் செய்துகொண்ட ஸ்ரீமா - சாஸ்திரி ஒப்பந்தம் இலங்கையில் வாழ்ந்த மலையகத் தமிழ் மக்களை இருகூறுகளாக்கியது. அந்த ஒப்பந்தத்தின் பிரகாரம் தமிழகம் சென்ற மக்கள் அங்கு மறுவாழ்வு தேட நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். 

இவ்வாறு வாழ்வதும் பின்னர் மறுவாழ்வு தேடுவதுமாக சுமார் இருநூறு வருடகாலமாக வாழ்ந்துவரும் மலையக மக்களின் வாழ்வியலை விளக்குவதாகவே இந்தத் தொகுப்பில் உள்ள கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன. 

இரா.சடகோபன், இலங்கையில் சட்டத்தரணியாக, பத்திரிகையாளராக, மொழிபெயர்ப்பாளராக, வரலாற்று விடயங்களைக் கொண்ட புனைவுக்கட் டுரைகளை எழுதுபவராக அறியப்படுகின்றார். எனவே அவரது பார்வையில் மலையக மக்களின் வருகை, வாழ்க்கை வரலாற்றுக்குறிப்பை வெளிப்படுத்தும் கட்டுரையை சேர்த்துள்ளேன். உண்மையில் இந்த நூலுக்காகவே எழுதப்பட்ட கட்டுரை இது. எம்.வாமதேவன் மலையகத் தமிழ் சமூகத்தில் பொருளாதார திட்டமிடல் துறையில் கல்விகற்று இலங்கை அரச நிர்வாக துறையில் உயர் பதவிகளை வகித்து வருபவர். 

கடந்த முறை எனது பயணத்தின்போது அவரது ‘மலையகம் - சமத்துவ அபிவிருத்தியை நோக்கி’ எனும் நூல் கிடைக்கப்பெற்றது. அந்த நூலில் இருந்து எனது தொகுப்புக்கு பொருத்தமான கட்டுரை ஒன்றை தெரிவு செய்து இணைத்துள்ளேன். அதேபோல, அ.லோரன்ஸ், இலங்கை மலையக அரசியல் செயற்பாட்டாளர்களில் தவிர்க்க முடியாத ஆளுமை.  அவரது மலையகம்: 

சமகால அரசியல், அரசியல் தீர்வு என்ற நூலில் இருந்து மலையக மக்களின் அரசியல் கோரிக்கைகள் தொடர்பான பக்கத்தைப் பிரதிபலிக்கும் கட்டுரைகளை தெரிவு செய்து இணைத்துள்ளேன். இவற்றுக்கு மேலதிகமாக அரசியல், இலக்கியம், பத்திரிகை, அரசியல் ஆய்வு எனும் பன்முகத்தளங்களில் இயங்கும் மல்லியப்புசந்தி திலகரின் சிறப்புக்கட்டுரை இந்த நூலில்தான் முதல் அறிமுகம் காணுகின்றது. 

அவரது எந்த உரை மலையகம் தொடர்பான, இலங்கையில் தமிழர்கள் தொடர்பான எனது பார்வையை மாற்றியமைத்ததோ அந்த உரையினைக்கட்டுரையாக்கித் தருமாறு நான் கேட்டுக்கொண்டதற்கு  இணங்க எழுதித்தந்தார். ஒரு விஞ்ஞான பூர்வ ஆய்வுக்கட்டுரையாக அதனை நான் பார்க்கிறேன். 
( உரையாடல் முடிவு) 

தமிழகன் கூறும் மலையகத்தின் மறுவாழ்வு நுணுக்கமான பார்வை விரிவாக ஆராயப்பட வேண்டியது. அவர் கூறும்  எனது ஆய்வு கட்டுரை 2011 அளவில்  தமிழ் நாட்டில் நடைபெற்ற உலகத் தமிழர் மாநாடு ஒன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. அந்த மாநாட்டுக் குழுவினர் என்னை "மல்லியப்புசந்தி" ஊடாக அறிந்திருந்தனர்.
அத்தகைய அறிமுகத்தைப் பெற்றுக் கொடுத்திருந்தவர் மலையகத் தமிழராக இந்திய (சிவகாசி) அகதிமுகாமில் வாழ்ந்து மறைந்த அந்தோனி ஐயா. அவர் மலையக மக்களின் இலங்கைக் குடியுரிமை பெறுதலின் இறுதிப்போராளி. அது பற்றியும் அவர் பற்றியும் ஏற்கனவே சில இடங்களில் பதிவு செய்திருந்தாலும் "மலைகள் பேசும்" இந்தத் தொடரில் பொருத்தமான இடம் ஒன்றில் பதிவு செய்கிறேன். ஏனெனில் அந்தோனி ஓர் அறியப்படாத ஆளுமை. அறியப்படவேண்டிய ஆளுமை. 

இவர் முயற்சியால்தான் இலங்கை மலையகத் தமிழ் மக்களின் குடியுரிமையின் எஞ்சியிருந்த பிரச்சினை 2009 ல் தீர்க்கப்பட்டது. இலங்கைத் தமிழரின் 40 ஆண்டுகால ஆயுதப் போரும், மலையகத் தமிழரின் இலங்கைக்  குடியுரிமைக்கான 60 ஆண்டுகால அகிம்சைப் போரும் முடிவுக்கு வந்த ஆண்டு 2009. 

இலங்கையிலும் இந்தியாவிலும் வாழ்வை இழப்பதும் தேடுவதுமான மலையகமும் மறுவாழ்வும் பற்றி அறிந்து கொள்ள அந்த நூலில் அடங்கிய எனது "இலங்கை(யில்) தமிழர்கள்" எனும் கட்டுரை கூறும் விடயங்கள் இங்கே பேசப்பட வேண்டியது அவசியம் என எண்ணுகிறேன். மலைகளைப் பேசவிடுங்கள்.

நன்றி அரங்கம்


நிலவுடைமை சமூகமாவது எப்போது? - துரைசாமி நடராஜா


மலையக மக்களை நிலவுடைமைச் சமூகமாக மாற்றியமைக்கும் முனைப்புகள் நீண்டகாலமாகவே இடம்பெற்று வருகின்றன.மலையக அரசியல் தொழிற்சங்கவாதிகள் இது குறித்த அழுத்தங்களை தொடர்ச்சியாகவே வழங்கி வருகின்றனர்.எனினும் இதன் சாதக விளைவுகள் எதிர்பார்த்தவாறு அமையவில்லை. நாட்டில் நிலம் இல்லாதவர்களுக்கு நிலம் வழங்கும் திட்டங்கள் பல முன்னெடுக்கப்பட்டுள்ளன.எனினும் இத்திட்டங்கள் எதுவும் மலையக மக்களுக்கு கை கொடுக்கவில்லை.இத்திட்டங்களில் இம்மக்கள் உள்வாங்கப்படாமை குறித்து பலரும் தமது விசனத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.இந்நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு அம்மக்களின் நிலவுடைமைக் கனவு நனவாக்கப்படவேண்டும் என்றும் இவர்கள் வலியுறுத்தியுள்ளமையும் நோக்கத்தக்கதாக உள்ளது.

மலையக மக்களுக்கு இந்த நாட்டில் மிக நீண்டதொரு வரலாறு காணப்படுகின்றது.பத்தொன்பதாம் நூற்றாண்டில் பல இலட்சக்கணக்கான தமிழ்த் தொழிலாளர்கள் இலங்கையில் மட்டுமின்றி நூற்றுக்கணக்கான, பல்லாயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் உள்ள நாடுகளுக்கும் தீவுகளுக்கும் கொண்டு சென்று குடியமர்த்தப்பட்டனர். இவ்வாறு குடியமர்த்தப்பட்டவர்கள் அரசியல், பொருளாதார, சமூக ரீதியாக அடக்கி ஒடுக்கப்பட்டு முதலில் பிரித்தானிய,பிரான்ஸிய ஆட்சியாளர்களாலும், பின்பு சுதேச ஆட்சியாளர்களாலும், அந்த நாடுகளையும் தீவுகளையும் சேர்ந்த சுதேச இனத்தவர்களாலும், தொழிலாளர்கள் அல்லாத ஏனைய தமிழர்களாலும், ஏனைய இந்தியர்களாலும், வணிகர்கள், அதிகாரிகள், தோட்ட உத்தியோகத்தர்கள், பிற அலுவலர்களாலும் கொடூரமாக சுரண்டப்பட்டதாகக் கலாநிதி க.அருணாசலம் தனது நூல் ஒன்றிலே தெளிவுபடுத்தி இருக்கின்றார். இவ்வாறாக தமிழகத்தில் இருந்து அழைத்து வரப்பட்டு இலங்கையின் மலையகப் பகுதிகளில் குடியேறிய அல்லது குடியேற்றப்பட்ட தமிழ்த் தொழிலாளர்கள் தனிமைப்படுத்தப்பட்ட ஒரு சமூகமாக நீண்டகாலமாக வாழ நேர்ந்தது.பல இனத்தவர்களினதும் அலட்சியத்திற்கு உள்ளானவர்களாகவே இவர்கள் விளங்கினர். கூலிகள், கள்ளத்தோணிகள், வடக்கத்தையான்,தோட்டக்காட்டான் என்று பல பெயர்களில் இவர்கள் அழைக்கப்பட்டு அவமதிக்கப்பட்டதோடு இம்சிக்கவும் பட்டனர்.

உலகில் வஞ்சிக்கப்பட்ட ஒரு சமூகமாக இவர்கள் இருந்து வந்ததாக புத்திஜீவிகள் தமது நிலைப்பாட்டை பல சந்தர்ப்பங்களில் தெளிவுபடுத்தி இருக்கின்றனர். மலையக சமூகம் நாட்டின் ஏனைய சமூகத்தினரைப் பொறுத்தவரை ஒரு தாழ்த்தப்பட்ட கேலிக்குரிய சமூகமாகவே கணிக்கப்படுகிறது.உதாரணமாக மலையக சமூகம் வெறும் சோற்றுப்பிண்டங்கள், கல்வி அறிவற்ற சமூகம் இன்னும் கொஞ்சம் பச்சையாக சொல்லப்போனால் “தோட்டக்காட்டான்” இப்படி பல பட்டப்பெயர்களை எமது மலையக சமூகம் ஏனைய சமூகத்தின் கணிப்பின் மூலம் சூட்டிக்கொள்கிறது. இதற்குக் காரணம் இந்த மக்கள் மொழி ரீதியாக, இன ரீதியாக, கலை, கலாசார ரீதியாக சரித்திர பாரம்பரியங்களைக் கொண்டதோர் அறிவுள்ள ஆற்றல் உள்ள சமூகம் என்ற யதார்த்த ரீதியான உண்மையை இவர்கள் உணர்ந்து கொள்ளாததேயாகும் என்று ஒரு மூத்த எழுத்தாளர் ஒரு சமயம் வலியுறுத்தி இருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கதாகவுள்ளது.

வேரறுப்பு

மலையக சமூகத்தை வேரறுக்கும் முயற்சிகள் இன்று,நேற்று ஆரம்பமானவை அல்ல. இதனை ஒரு திட்டமிட்ட செயற்பாடாக நீண்ட காலமாகவே இனவாதிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதற்கான தெளிவான அட்டவணைகள் இனவாத சிந்தனையாளர்களிடம் காணப்பட்டன. இப்போதும் காணப்படுகின்றன. இதனடிப்படையில் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. நாடு சுதந்திரமடைவதற்கு முன்னதாயினும் சரி அல்லது நாடு சுதந்திரமடைந்த பின்னராயினும் சரி மலையக மக்கள் மீதான நெருக்கீடுகளுக்கு குறைவில்லை என்றே கூறுதல் வேண்டும். இவர்களுக்கான பல வாய்ப்புகள் பல சந்தர்ப்பங்களில் மறுக்கப்பட்டிருக்கின்றன. “தாம் இடும் பிச்சையைப் பெற்றுக்கொண்டு இவர்கள் மௌனமாக இருக்க வேண்டும். உரிமைக்காக குரல் எழுப்புதல் கூடாது” என்று பேரினவாதிகள் எண்ணம் கொண்டிருந்தனர். சில பெரும்பான்மை அரசியல்வாதிகள் கூட இம்மக்களைப் புறக்கணித்து செயற்படுவதையே நோக்கமாகக் கொண்டிருந்தனர்.

சமூக நிலை, கல்வி நிலை தொழில் வாய்ப்புகள் உள்ளிட்ட பல விடயங்களிலும் முடக்கி இம்மக்களை அடிமை நிலையில் வைத்திருப்பதே இவர்களின் எண்ணமாக இருந்தது. வீடமைப்பிலும் புறக்கணிப்பு நிலைமைகளே மேலோங்கின. வீடமைப்பு நடவடிக்கைகளில் கிராமத்தவர்கள் மீது காட்டிய ஆர்வத்தினை மலையக மக்கள் தொடர்பில் ஆட்சியாளர்கள் காண்பிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாகவே இருந்து வருகின்றது. தேர்தல் கால வாக்குறுதிகளிலும் வரவு – செலவுத் திட்ட முன்மொழிவுகளிலும் எமது மக்களை திருப்தியடையச் செய்த ஆட்சியாளர்கள் செயல் வடிவில் உருப்படியான முன்னெடுப்புக்களை மேற்கொள்ளவில்லை. “யானைப்பசிக்கு சோளப்பொரி” என்பதன் அடிப்படையிலேயே காரியங்கள் இடம்பெற்றுக்கொண்டிருந்தன. பின்தங்கிய நிலையில் உள்ள மலையக சமூகத்தை முன்னேற்ற உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளும் கோஷங்களும் ஆட்சியாளர்களின் காதுகளுக்கு ஏறவில்லை. சிறுபான்மையினர் என்ற ரீதியில் இம்மக்கள் செல்லாக்காசாக இருந்தனர். பிரஜாவுரிமையும் வாக்குரிமையும் பறிக்கப்பட்ட சம்பவம் இந்நிலைமைக்கு மேலும் வலுசேர்த்தது. இச் சம்பவம் மலையக மக்களின் சரித்திரத்தில் பல்வேறு தாக்க விளைவுகளையும் ஏற்படுத்தியது.

நிலவுடைமை இல்லை

நிலவுடைமை என்பது மிகவும் முக்கியத்துவம் மிக்க ஒரு விடயமாக உள்ளது. நிலவுடைமையானது சமுதாயங்களில் மக்களுக்கு அந்தஸ்து, அதிகாரம், செல்வாக்கு என்பவற்றை அளிக்கின்றது என்பார்கள். ஆனால் மலையக மக்களை பொறுத்தவரையில் அவர்கள் இந்த நாட்டில் சுமார் இருநூறு வருட கால வரலாறு எனக்கொண்டுள்ள போதும் இன்னும் நிலவுடைமை இல்லாத ஒரு சமூகமாகவே வாழ்ந்து வருகின்றனர். ஆனால் நாட்டில் ஏனைய இனத்தவர்கள் நிலவுடைமைச் சமூகமாக இருந்து வருவது தெரிந்த விடயமாகும். பெருந்தோட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து அது எந்த நிறுவனத்தின் முகாமையின் கீழ் இருந்தாலும் மலையகத் தமிழ் மக்களின் பெரும் பகுதியினர் அச்சமூகத்தில் இருந்து இன்று கைத்தொழிலதிபர்கள், ஆசிரியர்கள், தோட்ட உத்தியோகத்தர்கள் இப்படி பல தரங்களுக்கு மாற்றமடைந்திருந்தாலும் இந்த லயன் காம்பராக்களைத்தான் தமது வசிப்பிடமாகவும் தமது காணியாகவும் கொண்டு வாழ்ந்துள்ளனர். ஒப்பந்த கூலிகளாகக் கொண்டு வந்த காலத்தில் இருந்து இந்நாள் வரை அடிப்படை லயன் முறையில் இன்னும் முழுமையாக மாற்றம் வரவில்லை. லயன் குடியிருப்புகள் கட்டப்பட்டிருக்கும் நிலம்தான் இச்சமூகத்திற்குரிய காணி. அந்த லயம்தான் இவர்கள் வாழ்விடம். அல்லது வீடாக அமைந்துவிட்டது என்று மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் ஏ.லோரன்ஸ் தனது நூல் ஒன்றில் (2006) எடுத்துக்காட்டி இருக்கின்றார்.

கடந்த 2001ஆம் ஆண்டு தகவல் ஒன்றின்படி தோட்டக் கம்பனிகள், ஜனவசம மற்றும் அரச பெருந்தோட்ட கூட்டுத்தாபனத்தின் கீழ் இரண்டு இலட்சத்து 56 ஆயிரத்து 963 ஹெக்ரேயர் காணிகள் பொறுப்பில் இருந்தன. தொழிலாளர்களின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்து 78 ஆயிரத்து 357 ஆக இருந்தது. உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 965 ஆகும். 1972ஆம் ஆண்டின் நிலச் சீர்திருத்தச் சட்டம் இலக்கம் ஒன்றின் மூலம் நிலச்சீர்திருத்த ஆணைக்குழு அமைக்கப்பட்டது. மேலும் தனியார் உரிமை கொண்டிருக்கும் நிலங்களுக்கு உச்ச வரம்பு கொண்டு வரப்பட்டது. இதனடிப்படையில் பெருந்தோட்ட நிலங்களாக இருந்தால் ஐம்பது ஏக்கரும் மற்றைய நிலங்களாக இருந்தால் 25 ஏக்கர்களும் மட்டுமே தனிப்பட்ட ஒருவர் வைத்திருக்கலாம் என்பது உச்ச வரம்பாக நிர்ணயிக்கப்பட்டது. இச்சட்டத்தினை விட 1950ஆம் ஆண்டின் நில சுவீகரிப்பு சட்டம் 1972ஆம் ஆண்டின் பெருந்தோட்ட சட்டம் (இலக்கம் இரண்டு), 1972ஆம் ஆண்டின் நாட்டின் விவசாய கூட்டுத்தாபன சட்டம், 1973ஆம் ஆண்டின் விவசாய நிலச்சட்டம் இலக்கம் 42 ஆகிய சட்டமூலங்களை பயன்படுத்தியும், பின்னர் உருவாகிய 1975ஆம் ஆண்டு நிலச்சீர்திருத்தச் சட்டத்தை (திருத்தப்பட்டது) பயன்படுத்தியும் இலங்கையில் கடந்த காலத்தில் நிலச் சீர்திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட்டதாக தகவல்கள் (1995) வலியுறுத்தியுள்ளன. இதேவேளை 1972ஆம் ஆண்டின் நிலச் சீர்திருத்த சட்டத்தின் கீழ் தோட்டங்கள் இரு கட்டங்களாக அரசினால் கையேற்கப்பட்டன. முதலில் ரூபா நிறுவனங்கள் எனப்பட்ட இலங்கையருக்கு சொந்தமான பெருந்தோட்டங்களும் அடுத்து வெளிநாட்டு ஸ்டேர்லிங் நிறுவனங்களுக்கு சொந்தமான பெருந்தோட்டங்களும் கையேற்கப்பட்டன. இவ்வாறு கையேற்கப்பட்ட பெருந்தோட்டங்களில் இலாபகரமாக இயங்கும் தோட்டங்கள் என அரசினால் இனம் காணப்பட்ட தோட்டங்களை நிர்வகிக்க அரசு இவ்வகை அரச பெருந்தோட்ட யாக்கம், மக்கள் தோட்ட அபிவிருத்திச்சபை என்ற இரு முகவர் நிறுவனங்களை நிறுவியது. ஏனைய நட்டத்தில் இயங்குவதாக அடையாளம் காணப்பட்ட தோட்டங்களை மலைநாட்டு தோட்ட அபிவிருத்தி சபையிடமும், வேறு சில இடைக்கால நிர்வாக முகவர்களிடமும் அரசு ஒப்படைத்தது.

இதன் விளைவுகளை கலாநிதி ஏ.எஸ்.சந்திரபோஸ் தனது நூல் ஒன்றில் தெளிவாக சுட்டிக்காட்டி இருக்கின்றார். இவ்வாறாக பிரஸ்தாப நிர்வாக முகவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட தோட்டங்களை பிற்காலத்தில் கிராமத்தவர்கள் மத்தியில் சிறு நிலத்துண்டுகளாக பகிர்ந்தளிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. எனினும் தோட்டங்களில் பிறந்து தோட்டங்களுக்கே தம்மை அர்ப்பணித்த தொழிலாளர்கள் நிலப்பகிர்வின்போது கருத்தில் கொள்ளப்படவில்லை.நில விடயத்தில் இவர்கள் புறக்கணிக்கப்பட்டனர். இவர்களுக்கான நிலவுரிமையானது மறுக்கப்பட்ட ஒன்றாகவே காணப்பட்டது. இது ஒரு மோசமான நிலைமையாகும். மலையகத்தில் காணப்படும் நிலப்பயன்பாடும் காணி உரிமையும் ஒரு இனப்பாரபட்சத்தை காட்டி நிற்பதாக புத்திஜீவிகள் ஏற்கனவே சுட்டிக்காட்டி உள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்திய வம்சாவளி மக்களுக்கு தங்கியிருக்கும் வீடு,காணி என்பவற்றுக்கு உரித்துடைமையை பெற்றுக்கொடுப்போம் என்று ஆட்சியாளர்கள் அடிக்கடி கூறி வந்த போதும் எதுவித காத்திரமான பணிகளும் இடம்பெறவில்லை.மலையக சமூகம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் பிற சமூகங்களினால் பாரபட்சத்துக்கு உள்ளாகியும் உள்ளது. இச்சூழ்நிலைகளையும் இப்பாரபட்சத்தையும் நீக்குவதற்கு அரசு உரியவாறு நடவடிக்கைகளை மேற்கொள்ளாமை தோட்டங்களுக்கு வெ ளியே இந்திய வம்சாவளியினர் சுதந்திரமாக தமது வதிவிடங்களை தேடிக்கொள்ள முடியாமல் செய்துள்ளன. சட்ட ரீதியாக தமது தேசத்திற்குள் வாழ்பவர்கள் அனைவரும் வசிப்பிடத்தை தெரிந்துகொள்ளும் சுதந்திரத்தைக் கொண்டவர்கள். இந்திய வம்சாவளியினர் வீடமைப்பு திட்ட சலுகைகளில் இருந்து விலக்கி வைக்கப்படுகின்றனர். ஆகவே பெருந்தோட்டங்களில் காணப்படும் காணியுரிமையும் நிலப்பயன்பாடும் தெளிவாக பௌதீக ரீதியாக ஒரு இனப்பாரபட்சத்தை காட்டி நிற்கின்றது என்றும் பல்வேறு வலியுறுத்தல்கள் இடம்பெற்றுள்ளன. தேசிய கட்சிகள் மலையக மக்களை இந்நாட்டின் பிரஜைகளாக எந்தளவுக்கு ஏற்றுக்கொண்டுள்ளன என்பதனை அவற்றின் போக்குகளும் கட்சி கொள்கைகளும் படம்பிடித்துக் காட்டுவதாக உள்ளன. ‘இலங்கையர்’ என்ற பொது வரையறைக்குள் மலையக மக்கள் உள்வாங்கப்படவில்லை என்ற விசனம் மேலோங்கி காணப்படுகின்றது.

அபிவிருத்தி போர்வையில் நிலம் சுவீகரிப்பு

தோட்டப்புற காணிகளின் அளவு இன்று வேகமாக குறைவடைந்து வருகின்றது. தேயிலை விளை நிலங்கள் பாதிப்படைந்துள்ளன. அபிவிருத்தி என்கிற போர்வையில் தேயிலை விளை நிலங்கள் சுவீகரிக்கப்பட்டு வருகின்றன. இந்நடவடிக்கை இனவாதத்தின் பின்னணியாகுமென்று மலையக மக்கள் விசனம் தெரிவிக்கின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கதாக உள்ளது. பெருந்தோட்ட தமிழர்களின் காணிகள் பலவந்தமாக அபகரிக்கப்படுவதாகவும் இந்நடவடிக்கைகளுக்கு அரச உத்தியோகத்தர்களும் உடந்தையாக உள்ளதாகவும் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் அண்மையில் ஒரு குற்றச்சாட்டினையும் முன்வைத்திருந்தமை உங்களுக்கு நினைவிருக்கலாம். இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பதாக பெருந்தோட்ட காணியினையும் அதற்குரிய குடியுரிமையினையும் உறுதி செய்வதாக வாக்களித்திருந்தது. அதற்கேற்ப ஆங்காங்கே அவர்களுக்குரிய காணி உரிமைகளை வழங்கிக் கொண்டிருக்கின்ற சூழ்நிலையில் பெருந்தோட்டங்களை சூழ இருக்கின்ற அரசாங்க காணிகளை நிச்சயமாக பெருந்தோட்ட மக்களுக்கே உரித்துடையதாக வழங்க வேண்டும் என்பதில் நான் தெளிவாக இருக்கின்றேன். ஆகவே தோட்ட தொழிலாளர்களுக்கு சொந்தமான காணியிலோ தோட்டத்துக்கு அண்மித்த காணியிலோ கிராமத்தவர்களை குடியமர்த்துவதை உடன் நிறுத்த வேண்டும்.

அரச அதிகாரிகள்,பிரதேச செயலாளர்கள் இவ்வாறு நடந்து கொள்வதை உடனடியாக தவிர்த்துக் கொள்ளவேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் மேலும் தெரிவித்திருந்ததை இங்கு நினைவுப்படுத்த விரும்புகின்றேன். தோட்டப்புற காணிகள் அபிவிருத்தி என்னும் போர்வையில் சுவீகரிக்கப்படுவதால் பாதக விளைவுகள் பலவும் மேலோங்குகின்றன. மலையக மக்களின் இருப்பு பல இடங்களில் கேள்விக்குறியாகி இருக்கின்றது. இம்மக்கள் சிதறி வாழும் நிலைமை மேலோங்குகின்றது. இதன் காரணமாக மலையக மக்களின் அரசியல் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படும் நிலையும் ஏற்படுகின்றது. சமூக அபிவிருத்திக்கு அரசியல் ஆதிக்கம் மிகவும் அவசியமாகும் என்று கருதப்படும் நிலையில் அரசியல் பிரதிநிதித்துவத்தின் பாதிப்பு பாதக விளைவுகள் பலவற்றுக்கும் இட்டுச் செல்லும் என்பதனை மறுப்பதற்கில்லை.தோட்டப்புற நிலங்கள் பல தேவை கருதியும் சுவீகரிக்கப்படுவதன் காரணமாக தொழிலாளர்களின் வேலை குறைவடையும் அபாய நிலை காணப்படுகின்றது. அண்மைக்காலமாக கம்பனியினரின் பொறுப்பில் உள்ள பல தோட்டங்களில் தொழிலாளர்களுக்கு குறைந்தளவிலான வேலை நாட்களே வழங்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் இருந்து வருகின்றன. இந்நிலையில் நிலச் சுவீகரிப்பு நிலையானது இதனை மென்மேலும் உக்கிரமடையச் செய்வதாகவே அமையும். இது பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகின்ற தோட்டப்புற மக்களின் குரல்களை மேலும் நெருக்குவதாகவே அமையும் என்பதனையும் மறுப்பதற்கில்லை.

1972 இல் காணியமைச்சர் ஹெக்டேர் கொப்பேகடுவ தலைமையில் காணி சீர்திருத்தம் இடம்பெற்றது. 1975 ஆம் ஆண்டு ரூபா, ஸ்டேர்லிங் கம்பனிகளுக்கு சொந்தமாக இருந்த காணிகள் அரசுடைமையாக்கப்பட்டன. இந்நிகழ்வும் இதனைத் தொடர்ந்து இடம்பெற்ற இன்னும் பல நிகழ்வுகளும் மலையக மக்கள் வாழும் பகுதிகளில் இருந்து திட்டமிட்ட அடிப்படையில் அவர்களை வெளியேற்றும் நடவடிக்கையாகும் என்றும் வலியுறுத்தல்கள் இடம்பெற்றுள்ளன. உசலசம, ஜனவசம கமிஷன் போன்ற தோட்டங்களில் மாற்றுப் பயிர்ச்செய்கை, பன்முகப்படுத்தல் என்ற போர்வையில் திட்டமிடப்பட்ட குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனால் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தோட்டக்காணிகளில் இருந்தும் லயன்களில் இருந்தும் வெளியேற்றப்பட்டனர். ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக் காலத்தில் நட்சா திட்டம், மகாவலி குடியேற்றம் மற்றும் தோட்ட கொத்தனி முறை தோட்டப் பகுதிகளில் மலையக தமிழ் மக்களின்பலத்தை குறைக்கும் திட்டமிட்ட குடியேற்றம் போன்றன தீவிரமாக இடம்பெற்றுள்ளன. இதேவேளை நிலச்சீர்திருத்தம், தோட்டக்காணிகளை அரசு பொறுப்பேற்று பல்வேறு குடியேற்றத் திட்டங்கள் மூலம் மலையக தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலை நடத்தப்பட்டு அவர்கள் காணியுரிமையும் வீட்டுரிமையும் பறிக்கப்பட்டதாக ஏ.லோறன்ஸின் கருத்து அமைந்திருக்கின்றது.

டெல்டா, சங்குவாரி போன்ற இடங்களில் உள்ள லயன்கள் தாக்கப்பட்டு எரிக்கப்பட்டன. டெவன் காணி சுவீகரிப்பில் சிவனு லெட்சுமணன் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிர் துறந்துள்ளார். இத்தகைய சம்பவங்கள் திட்டமிட்ட இனக்கலவரம், திட்டமிட்ட குடியேற்றங்கள் எல்லாம் ஒன்றுக்கொன்று தொடர்பானவை என்பதை புலப்படுத்துவதாகவும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.

காணித்துண்டுகள்

 இலங்கையின் வரலாற்றில் முதல் தடவையாக மலையக காணி உரிமையை வழங்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் இதனடிப்படையில் இருபதாயிரம் காணித்துண்டுகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் லக் ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் கடந்த 07 ஆம் திகதி இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். நல்லாட்சி அரசாங்கத்தில் 100 நாள் வேலைத்திட்டத்தில் நான் மலையக தோட்ட மக்களுக்கு 07 பேர்ச்சஸ் காணியை வழங்குவது குறித்து அமைச்சரவை பத்திரம் ஒன்றை முன்வைத்தேன். தற்போது நான் அமைச்சர் என்ற வகையில் அந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளேன். இலங்கை வரலாற்றில் முதற் தடவையாக மலையக மக்களுக்கு சொந்தமாக தோட்டக் கம்பனிகளில் தோட்ட மக்களுக்கு இருபதாயிரம் காணித்துண்டுகள் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தனியார் தோட்ட நிறுவனங்களும் இந்த நடவடிக்கையை பின்பற்ற வேண்டும். 2015 ஆம் ஆண்டு எம் அரசாங்கம் பதவிக்கு வந்தபோது அரசுக்கு சொந்தமான தோட்ட நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கான ஊழியர் சேமலாப நிதியும் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் என்பவற்றுக்கான கொடுப்பனவுகள் இருபது வருடங்களாக வழங்கப்பட்டிருக்கவில்லை. அதன் பெறுமதி ஆயிரத்து 900 மில்லியன்களாகும். நான் இதற்கான அமைச்சரவை பத்திரத்தை முன்வைத்து படிப்படியாக அவற்றை செலுத்திவந்தேன். தற்போது ஆயிரத்து 900 மில்லியன் ரூபாவை முந்நூறு மில்லியனாக குறைத்துள்ளேன் என்றும் கிரியெல்ல தெரிவித்திருக்கிறார். வாக்குறுதிகள் காற்றில் கடந்த காலங்களைப் போன்று பறந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.

பாராளுமன்ற உறுப்பினர் திலகர்

தோட்ட தொழிலாளர்களுக்கு நிலங்களைப் பெற்றுக்கொடுத்து நிலவுடைமை சமூகமாக மாற்றியமைக்க வேண்டியதன் அவசியத்தையும் சவால்களையும் பாராளுமன்ற உறுப்பினர் திலகராஜ் சிறப்பாக எடுத்துக் கூறினார். அவரது கருத்தின் ஊடாக பல்வேறு விடயங்களை அறிந்து கொள்ளக்கூடியதாக இருந்தது. கம்பனிகள் இன்று தோட்டங்களை கொண்டு நடத்துவதில் சிக்கல்களை சந்தித்து வருகின்றன. இதனால் வெளியார் உற்பத்தி முறையினை அமுல்படுத்துவதில் ஈடுபாடு காட்டிவருகின்றன. இந்நடவடிக்கை சில தோட்டங்களில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மரக்கன்றுகளின் அடிப்படையில் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது. இது குறித்து பெருந்தோட்ட அமைச்சிடம் நாம் பேச்சுவார்த்தை நடத்தினோம். கம்பனிகள் முன்வைத்த முன்மொழிவுகளில் நிலம் குறித்து எவ்விடத்திலும் குறிப்பிடப்படவில்லை. தேயிலை மரங்களை அடிப்படையாகக் கொண்ட முன்மொழிவுகளே இடம்பெற்றன.எனினும் நான் இங்கு மரங்கள் என்பதற்கு பதிலாக நிலம் குறித்து குறிப்பிடப்பட வேண்டும் என்று வலியுறுத்தினேன். இது ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த நிலம் குத்தகையா? அல்லது சொந்தமா? என்பது குறித்து பேசித்தீர்க்க வேண்டியுள்ளது. நிலம் குறித்த விடயத்தினை பிரதமரும் ஏற்றுக்கொண்டார். நிலத்தை சொந்தமாக வழங்குகையில் பல சிக்கல்கள் ஏற்படும் என்றும் தொழிலாளர்கள் நிலத்தை கைமாற்றி விடுவர் என்றும் கருத்துக்கள் பலவும் தெரிவிக்கப்பட்டன. இது குறித்தும் நாம் ஆராய்ந்து வருகின்றோம். இது நமது நிலம். இதில் நாம் பயிரிட வேண்டும் என்பது குறித்த சிந்தனையை சமூக மட்டத்தில் ஏற்படுத்த உள்ளோம். மலையக மக்களிடையே நிலம் குறித்த உணர்வு இப்போது அதிகரித்து வருவதையும் நாம் கூறியாதல் வேண்டும். இது எமக்கு மகிழ்ச்சியை தருவதாக உள்ளது. ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கும் நிலத்தை பெற்றுக்கொடுக்கின்ற நடவடிக்கையை நாம் முன்னெடுத்து வருகின்றோம். வீடமைப்புக்காக பல திட்டங்களை வகுத்து செயற்படுத்துகின்றோம்.

கூலிச்சமூகமாக சுமார் இருநூறு வருடங்களாக வாழ்ந்த சமூகம் உடனடியாக நிலவுடைமை சமூகமாக மாறுவதென்பது இலகுவான காரியமல்ல. இதற்கான தயார் நிலைகளை நாம் ஏற்படுத்த வேண்டியுள்ளது. இந்த தயார் நிலைகள் இருபக்கமும் ஏற்படுத்தப்பட வேண்டும். நிலத்தை பாதுகாக்க வேண்டியது ஒரு சமூகப் பொறுப்பு ஆகும். இதனை அரசி யல்வாதிகள் மட்டுமல்லாது பல்துறை சார்ந்தவர்களும் மக்களிடம் ஏற்படுத்த வேண்டும். வெளியார் உற்பத்தி முறை குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படல் வேண்டும். தேயிலை உற்பத்தித் துறையில் எமது மக்கள் ஈடுபட்டுள்ள நிலையில் இத்துறையில் மேலும் பலரும் மறை முகமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்கள் அனைவரும் ஒன்றிணைக்கப் பட்டு எவருக்கும் பாதிப்பு ஏற்படா வண் ணம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இத்தொழிற்றுறை தூக்கி நிறுத்தப்படுதல் வேண்டும். தேயிலை நிலத்தை பெற்றுக்கொடுப்பதோடு பொரு ளாதார உறுதிப்பாட்டினை ஏற்படுத்த வேண்டிய தேவையும் காணப்படுகின்றது. மாற்றுப்பயிர் குறித்தும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. கூட்டு ஒப்பந்தம் குறி த்து கவனம் செலுத்தி வருகின்றோம். நிலத்துடன் கூடியதாக பயிரிடும் முறை ஏற்படுத்தப்பட வேண்டும் என்கிறார் திலக ராஜ்.

 மலையக சமூகம் நிலவுடைமை சமூக மாக தலைதூக்க வேண்டும் என்பதே சகல ரதும் எதிர்பார்ப்பாகும்.

துரைசாமி நடராஜா

நன்றி - வீரகேசரி

ஜனாதிபதி ஆணைக்குழு - மல்லியப்புசந்தி திலகர்மலையக மக்களின் பிரச்சினைகளை பதிவு செய்ய ‘ஜனாதிபதி ஆணைக்குழு’ ஒன்று அமைக்கப்படல் வேண்டும் என்பது எனது அண்மைக்கால கோரிக்கைகளில் ஒன்று. உண்மையில் இது அண்மைக்கால கோரிக்கை என்று கூட சொல்ல முடியாது. 2016 ஆண்டிலேயே இந்த கோரிக்கையை விடுத்திருந்தேன்.

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் தொடர்பில் சர்வதேச நீதி விசாரணை வேண்டும் என்பது ஒவ்வொரு ஆண்டும் ஜெனீவா மனித உரிமை கூட்டத் தொடரின் போது இலங்கை அரசியல் நிகழ்ச்சி நிரல்களில் சேர்ந்து விடும் ஒன்று. 2015 ஆம் ஆண்டு  ஆட்சி மாற்றம் வந்ததும், ‘இந்த முறை சர்வதேச நீதி விசாரணையும் வந்தே தீரும்’ என்ற நம்பிக்கையும் பலருக்கு இருந்தது. 

அந்த எதிர்பார்ப்பைப் போலவே 2016 ஆம் ஆண்டு ஜனாதிபதியும் சின்னதாக ஒரு சர்வகட்சி மாநாடு போன்ற ஒன்றை நடாத்தி சர்வதேச நீதிமன்ற விசாரணை அல்லது அப்போது பேசப்பட்ட ‘ஹைபிரிட்’ நீதிமன்ற விசாரணைகள் தொடர்பில் ஒவ்வொரு கட்சியினதும் நிலைப்பாடுகளைக் கேட்டறிந்தார். வடக்கு, கிழக்கு தமிழ் கட்சிகள், முஸ்லிம் கட்சிகள், தென்னிலங்கை சிங்கள கட்சிகள், பெருந்தேசிய கட்சிகள் என்பவற்றோடு மலையகக் கட்சிகளும் பிரசன்னமாகி கருத்துக்களைத் தெரிவித்தன.

சிங்கள கட்சிகள் சர்வதேச நீதிமன்ற விசாரணையை அனுமதிக்க முடியாது என்ற கருத்தையே பரவலாக தெரிவித்த நிலையில் தமிழ் முஸ்லிம் கட்சிகள் விசாரணை வேண்டும் என்ற தோரணையில் கருத்துக்களைப் பகிர்ந்தன. 

குறிப்பாக வடக்கு கிழக்கு சார்ந்த தமிழ்க் கட்சிகள் 2009 இறுதி யுத்தம் தொடர்பில் சர்வதேச நீதிமன்ற விசாரணை வேண்டும் என்ற கருத்தை பரவலாக முன்வைத்தன. அப்போது முஸ்லிம் கட்சிகள் அத்தகைய விசாரணையானது 1990 களில் வடக்கில் இருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்ட காலத்தில் இருந்தே நடாத்தப்படல் வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தின.

மலையக அரசியல் கட்சியொன்றின் செயலாளர் என்ற வகையில் நானும் எனது கருத்துக்களைப்பதிவு செய்தேன். அப்போது நான் முன்வைதத கோரிக்கைதான் இந்த ‘ஜனாதிபதி ஆணைக்குழு’.

இலங்கையில் மலையகத் தமிழ் மக்கள் என அழைக்கப்படுவோர் இன்னும் இந்திய தமிழர் என்றே சட்ட ரீதியாக பதிவு செய்யப்படுகின்றனர். அதாவது சனத்தொகை கணக்கெடுப்பின்போது, இலங்கையில் வாழும் சனத்தொகையை இன அடிப்படையில் மத அடிப்படையில் கணக்கெடுப்பு செய்கிறார்கள். அப்போது மலையகப் பெருந்தோட்டத் தொழில் துறையை மையப்படுத்திய தமிழ் மக்களை இந்தியத் தமிழர் (இந்தியானு தெமல) என்ற வகையறாவில் கணக்கெடுக்கிறார்கள். 

அவர்களைப் (அரசை) பொறுத்தவரையில் ‘இலங்கைத் தமிழர்’ என்போர் இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களை மையப்படுத்தி வாழும் பூர்விகத் தமிழர்கள். இந்திய தமிழர் என்போர் இந்தியாவில் இருந்து பெருந்தோட்டக் கைத்தொழிலுக்காக அழைத்து வரப்பட்டவர்கள். மற்றப்படி இலங்கைத தமிழர்கள் தங்களை ‘ஈழத் தமிழர்கள்’ என அழைத்துக்கொள்வதோ, இந்தியத் தமிழர்கள் தங்களை ‘மலையகத் தமிழர்கள்’ என அழைத்துக்கொள்வதோ அரசியல், பண்பாட்டு நிலையிலானது. சட்ட பதிவுகளுடனானது அல்ல. மலையகத் தமிழரை ‘இந்திய வம்சாவளி தமிழர்’ என்பதும் கூட ஒரு சமூகச் சொல்லாடல் மட்டுமே. 

இனி இவர்களை மலையகத் தமிழர் என்றே இந்தப் பத்தியில் விளித்துக் கொள்வோம். இந்த மலையகத் தமிழர்களுக்கு பிரித்தானிய காலனித்துவ ஆட்சியாளர்கள் வழங்கியிருந்த இலங்கைக் குடியுரிமையை 1948 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றதும்  சுதேச அரசாங்கம் பறித்தது முதலே இவர்களின் அடையாளம் மாத்திரமல்ல அரசியல் இருப்பே கேள்விக்குரியானது. அப்படியே ஒரு 15 வருடங்கள் கழிந்து 1964 ஆம் ஆண்டு ஸ்ரீமா - சாஸ்திரி ஒப்பந்தம் மூலம் இந்த நாடற்ற மக்களை அவர்களின் பூர்விக நாடான இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என தீர்மானம் போட்டதும், ஒரு பகுதி அனுப்பப்பட்டதும் மலையகத் தமிழ் மக்களுக்கு இலங்கையில் இழைக்கப்பட்ட பெரு அநீதி. 

இந்த அநீதிகளின் விளைவாக இடம்பெற்றதெல்லாம் அவர்கள் இந்த நாட்டுக்கு உரியவர்கள் அல்லாது போனார்கள். இந்த நாட்டின் நிர்வாக முறைமையில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார்கள். இந்த மக்களின் சரிபாதி இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டதால் இலங்கை சனத்தொகையில் இரண்டாம் நிலையில் இருந்தவர்கள் நான்காம் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள், அதனால் இன்றைய நிiலையில் இவர்களின் அரசியல் பலம் குறைக்கப்பட்டுள்ளது. இனி, இவற்றைப் பேசுவதனால், திருப்பி அனுப்பப்பட்ட மக்களை மீள அழைக்கப்போதில்லை. அவர்கள் இப்போதும் ‘தமிழ்நாட்டின் சிலோன்காரர்களாக’ வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இங்கிருப்போர் இலங்கையில் ‘இந்திய தமிழர்களாக’ வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். 

இலங்கையில் மலையகத் தமிழர் வாழ்ந்துகொண்டிருக்கும் வாழ்க்கை என்பது அவர்கள் வாழ்ந்திருக்கவேண்டிய வாழ்க்கை அல்ல. இவ்வாறு இந்த வாழ்க்கை ஏனைய மக்களிடம் இருந்து திரிபுபட்டிருப்பதற்கு, அவர்கள் விருப்பத்திற்கு மாறாக நிறைவேற்றப்பட்ட மேற்படி அரசியல் தீர்மானங்களே காரணம் என்பதுதான் உண்மை. இதற்கிடையில் இலங்கையில் அவ்வப்போது இடம்பெறும் இனவன்முறைகளில் இவர்கள் தாக்கப்படுவதும் இந்த நாட்டில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்த்தில் குறிப்பாக இறுதி யுத்தத்தில் இந்த மலையக மக்கள் பாதிப்படைநதுள்ளார்கள் என்பதனால் அது சர்வதேச நீதிமன்றமாக இருந்தால் என்ன? ஹைபிரிட் நீதிமன்றமாக இருந்தால் என்ன அங்கே பேசப்படல் வேண்டும் என்பது எனது வாதமாக அமைந்தது. அமைகிறது.

திம்பு பேச்சுவாரத்தை முதல் 2002 சமாதான பேச்சுவார்த்தை வரை  இலங்கைப் பிரச்சினைக்கு தீர்வு காண சர்வதேச நாடுகளுக்கு (நோர்வே, ஜப்பான், இப்படி..பல) தூக்கிக்கொண்டுபோன   வரலாறு நம்முடையது. அதில் இலங்கை அரசும், தமிழர் தரப்பும் இணைந்தே செயற்பட்டு இருக்கிறது. எனவே, இலங்கை நீதிமன்ற முறைமையும் சர்வதேச நீதி விசாரணையும் அல்லது மேற்பார்வையும் இணைந்த ‘ஹைபிரிட்’ முறைமை ஒன்றும் ஆச்சரியமான ஒன்று அல்ல. அதற்கு நாம் போகலாம் என்றே அன்று என் கருத்தைச் சொன்னேன். மேலதிகமாக,  இந்த ஹைபிரிட் அமையுதோ இல்லையோ எங்கள் மக்களின் பிரச்சினைகள் பற்றி பேசியே ஆக வேண்டும். அதற்கு உள்ளுரில் ஒரு ஆணைக்குழு அமைத்தல் அவசியம் அது ஜனாதிபதி ஆணைக்குழுவாக இருப்பது சிறப்பு எனவும் வேண்டுகோளை முன்வைத்தேன்.அந்த ஜனாதிபதி ஆணைக்குழு சுதந்திர இலங்கையான 1948 ல் இருந்தே ஆரம்பிக்கப்படல் வேண்டும்  என்றேன். 

1990, 2009 கோரிக்கை வைத்த தலைவர்கள் என்னைக் கொஞ்சமாக எட்டிப்பார்த்தார்கள். ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்தக் கூட்டம் நிறைவடைந்ததும் என்னைப் பார்த்த பெரிய அரசியல் தலைவர்கள் எல்லாம் ‘தம்பி’ என்ன செய்கிறீர்கள் என்று கேட்டார்கள். நான் நுவரெலியா ‘எம்பி’யாக இருக்கிறேன் என்றேன். ஓ.. அப்படியா என்றார்கள் அந்த இந்நாள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள். 

எனது கோரிக்கை ஒரு வாய்மொழி மூலமானது என்கின்றதன் அடிப்படையில் உடனே அதனை எழுத்துமூல கோரிக்கையாகவும் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தேன். அதற்கு அவரும் உங்கள் கோரிக்கை கவனத்pல் எடுக்கப்பட்டுள்ளது என பதில் அனுப்பியிருந்தார். இவரது இரண்டாவது கொள்கை விளக்கவுரையில் அவரது கவனம் ஏதும் சென்றிருக்கிறதா என்ற எதிர்பார்ப்பில் அதனை வாசித்தபோது அது பொருளாதார நிலைமைகளை மேம்படுத்தல் என்ற ஒற்றை வரிக்குள் சுருங்கியிருந்தது. 

எனவே விவாதத்தில் கலந்துகொண்டு ஹன்சாட் பதிவுகளுக்காக முன்னைய ‘மலையக மக்களின் பிரச்சினைகளைப் பதிவு செய்ய ஜனாதிபதி ஆணைக்குழு அவசியம்’ என்ற கருத்தை வலியுறுத்தினேன். அதில் ஒரு வரி இப்படி வந்து விழுந்தது…. மலையக மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பது பற்றி பின்னர் யோசிக்கலாம். இப்போதைக்கு அவர்களின் பிரச்சினைகளை உத்தியோகபூர்வமாக பதிவு செய்ய ஒரு ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமியுங்கள் என்பதுதான் அந்த கோரிக்கை. 

ஏனெனில் மலையக மக்களின் பேசப்படாத பிரச்சினைகள் பல பேச வேண்டியுள்ளது. அதனை அந்த மக்களே பேச அனுமதி வழங்கப்படல் வேண்டும். மலைகளின் மௌனத்துக்கு கீழே பல குமுறல்கள் புதைந்து கிடக்கின்றன. மலைகளைப் பேசவிடுங்கள். 

நன்றி அரங்கம்

“சாவின் விளிம்பில் உலகம்” - என்.சரவணன்

செம்பனை: உயிர்க்கொல்லி! உலகக்கொல்லி! -2


செம்பனை உயிர்க்கொல்லி, உலகக்கொல்லி என்கிற தலைப்பிட்டது அது ஏற்படுத்தும் ஆபத்து சகலவகையைச் சார்ந்தது என்பதால் தான். 

இலங்கையில் செம்பனைக்கு எதிரான மக்கள் போராட்டங்கள் சிங்கள மக்கள் மத்தியில் எப்போதோ ஆரம்பிக்கப்பட்டுவிட்டன. சிங்கள மகள் மத்தியில் செம்பனைக்கு எதிரான விழிப்புணர்வும் எப்போதோ ஆரம்பிக்கப்பட்டுவிட்டது. பல போராட்டங்களும் கூட தொடர்ந்தவண்ணம் இருகின்றன.

முதற் தடவையாக தமிழ்ச்சூழலில் அப்படியொரு எதிர்ப்பியக்கம் தோற்றுவிக்கவிருப்பதை கடந்தவாரம் வெளியான ஒரு செய்தி மகிழ்ச்சியைத் தருகிறது. செம்பனையின் ஆபத்து பற்றிய விழிப்புணர்வுக்காக கண்டி மனித அபிவிருத்தி தாபனம் கடந்த ஏப்ரல் 10 அன்று ஒழுங்கு செய்திருந்த ஒரு கூட்டத்தின் இறுதியில் ஒரு எதிர்ப்பியக்கத்திற்கான அத்திவாரம் இடப்பட்டிருக்கிறது. இந்த முயற்சி இனத்துவ அடிப்படையில் சுருங்கி விடாமல், தென்னிலங்கையில் ஏற்கெனவே இயங்கிகிற அமைப்புகளின் வலைப்பின்னலுடன் இணைந்தால் பலமும், பாதுகாப்பும் அதிகம்.

சரி, ஏன் இந்த எதிர்ப்பு. நேரடியாக பாதிக்கப்படும் மக்களே தற்போது களத்தில் இறகியிருக்கிறார்கள் என்பது கவனிக்கப்படவேண்டியது. இதில் ஏனைய சமூக விடுதலை சக்திகளையும் காலப்போக்கில் இணைத்துக் கொள்ளப்பட வேண்டும்.

ஆக இந்த இதழில் இந்த உலகு இப்போது எதிர்கொண்டிருக்கும் மையப் பிரச்சினை பற்றியும் அந்த ஆபத்தின் பின்னணியில் இயங்கும் சக்திகள் குறித்தும் சுருக்கமாக பார்ப்போம்.

செம்பனையை எதிரான உலகளாவிய எதிர்ப்பே; முதலில் அது ஏற்படுத்தும் சூழலியல் சார் பிரச்சினைகளைப் பற்றித் தான்.


உலகன்றி உயிரேது…?

உலகைக் காப்பாற்றாமல் உயிர்களைக் காத்துவிட முடியாது. பெருகும் ஜனத்தொகையின் உணவு தேவை, உறைவிடத் தேவை இன்னும் பல்வேறு அத்தியாவசித் தேவையின் காரணமாக நுகர்வு பெருகியிருக்கிறது. ஆனால் அதற்காக எஞ்சியிருக்கின்ற வளங்கள் பெருகப் போவதில்லை. மாறாக சுருங்கிக் கொண்டே செல்கின்றன.  யுனிசெப் நிறுவனத்தின் கருத்தின்படி நாளொன்றுக்கு சராசரி 353,000 குழந்தைகள் பிறக்கின்றன. ஆக நுகர்வுத் தேவை பல மடங்குகள் நாளாந்தம் பெருகுகின்றன.

செகண்டுக்கு ஒருவர் என்கிற விகிதத்தில் உலகில்  பசியால் அல்லது பசியோடு தொடர்புபட்ட பிரச்சினைகளாலும் மரணிக்கிறார்கள். இந்த வருடம் 36 மில்லியன் மக்கள் அப்படி இறக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

சுத்தமான குடிநீரின்றி 10 செகண்டுக்கு ஒருவர் மடிகிறார் என்று உலகக் கணிப்பு குறித்து கணக்கிடும் நிறுவனம் (The world counts) கூறுகிறது. ஆண்டுக்கு சராசரியாக 3,575,000 இறப்பதாக அது குறிப்பிடுகிறது. இதில் அதிகமானோர் சிறுவர்களும், குழந்தைகளுமே.

“உலக மாசடைதலும் சுகாதாரமும்” பற்றி ஆராய்ந்த ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் ப்ரூஸ் லன்பியர் (professor Bruce Lanphear) சென்ற ஆண்டு வெளியிட்ட அறிக்கையில் உலகின் 16% வீத மரணங்கள் சுற்றுச் சூழல் மாசடைவதால் நிகழ்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.

இன்றைய நமது உலகம் அழிந்தது போக 30% காடுகளால் ஆனது. ஆண்டுதோறும் 18.7 மில்லியன் ஏக்கர் காடுகள் அழிக்கப்படுகின்றன. என்றும் “உலக வனஉயிர் நிதியம்” (World Wildlife Fund (WWF)  எச்சரித்திருக்கிறது. உலகின் மிகப் பெரும் காடான அமேசன் காடு கடந்த 50 வருடங்களுக்குள் 17% வீத காட்டை இழந்திருக்கிறது.

வன அழிப்பினால் பாரிய அளவில் உயிரினங்கள் அழிந்து போயுள்ளன. எஞ்சிய உயிரினங்களின் இடப்பெயர்வுகளால் வனசமநிலை நாளாந்தம் சீர்குலைந்து வருகிறது. 

இந்த அழிவுகளால் பெரிதும் பாதித்துக்கொண்டிருக்கும் நாடுகள் ஏழை – மூன்றால் உலக நாடுகளே. மூன்றாம் உலக நாடுகள் நூற்றாண்டுகளாக காலனித்துவத்தால் சுரண்டப்பட்டு; இன்று நவகாலனித்துவத்தின் சுரண்டலுக்கு ஆளாகி அழிந்து வருகின்றன என்பது கண்கூடு. மூன்றாம் உலக நாடுகளின் வளங்களை ஈவீரக்கமின்றி சுரண்டிச் செல்லும் உலக தரகு முதலாளித்துவ கார்ப்பரேட் கம்பனிகள் பாரிய அளவில் இந்த அழிவில் சம்பந்தப்பட்டுள்ளன.

வன அழிப்பு என்பது வெறும் மாரங்களை அழிப்பது மட்டுமல்ல. அது மரங்களுடன் அந்த காடுகளுக்குச் சொந்தக்காரர்களான பாரம்பரிய உயிரினங்களும்,  அதை நம்பி வாழ்ந்த மக்களின் வாழ்வாதார அழிப்பும் தான். கூடவே மண்ணின் வளம் குன்றி, உலக உயிரினங்கள் சுவாசிக்க ஒட்சிசனை உற்பத்தி செய்தவற்றை அழித்து வந்ததினால் நமக்கு கிடைக்கும் ஒட்சிசனின் அளவும் சுருங்கிக் கொண்டு வருகிறது. மாற்றுப் பயிரிடலின் பேரில் நிகழும் செம்பனை போன்றவை வெளியிடும் கரியமில வாயு (CO2 - carbon dioxide) மிகவும் அதிகமானது. இன்று உலகம் வெப்பமடைதலை (Global Warming) வேகப்படுத்துவதில் கரியமில வாயுவின் பங்கு மிகப் பெரியது. உலகம் முழுவதும் இந்தக் கரியமில வாயுவின் உற்பத்தியைக் குறைப்பது பற்றி தீவிரமாக ஆராய்ந்து வருகிறார்கள்.

1959ஐ விட 2017ஆம் ஆண்டில் கரியமில வாயு  வெளியேற்றம் 28 சதவீதத்தால் உயர்ந்துள்ளது என்று “Union of Concerned Scientists” என்கிற விஞ்ஞானிகள் சங்கம் அறிவித்திருக்கிறது. கரியமிலத்தை வெளியிடும் முதல் இரண்டு நாடுகளாக சீனாவையும், அமெரிக்காவும் விளங்குகிறது.

உலகம் வெப்படைவதால், பனி உருகி, கடல் மட்டம் உயர்ந்து, உலகின் நிலப்பரப்புகள் சுருங்கி வருகிறது. மழையின் அளவு குறைந்து வருகிறது. மனித பயன்பாட்டுக்கான நீரின் அளவு அருகி வருகிறது, வரட்சி அதிகரித்து விவசாயம் அழிந்துவருகிறது. எதிர்கால உணவுத்தேவையை ஈடு செய்ய என்ன செய்யலாம் என்று உலகத் தலைவர்கள் மாநாடு கூடி தலையைப் பிய்த்துக் கொள்கிறார்கள்.

இன்று மேற்கொள்ளப்பட்டுவரும் வன அழிவுகளில் பெரும்பங்கை ஆற்றிவருகிறது செம்பனைக்காக மேற்கொள்ளப்படும் அழிப்புகள்.

இயற்கைச் சமநிலையை குழப்பிவிட்டதால் இயற்கைச் சீற்றங்களின் அளவு அதிகரித்துக் கொண்டே செல்வதைக் காண முடிகிறது. இயற்கை நமக்குத் தந்த நிலம், நீர், காற்று, உணவு அனைத்தையும் கெடச்செய்துவிட்டோம். இந்த நாசத்தில் சாதாரணர்களின் பங்கு குறைவே. இன்னும் இந்த ஆபத்தை உணரும் விழிப்புணர்வு அம்மக்களுக்குப் போய்ச் சேரவில்லை. ஆனால் நாசத்தில் பெரும்பங்கை உலக முதலாளித்துவ கூட்டு ஆற்றிவருகிறது.

உலகிலுள்ள 70 சதவீதத்துக்கு அதிகமான மக்களிடம் உலகின் 3 வீத செல்வமே இருக்கிறது. உலகின் 8.6. சதவீதமானோரிடம் தான் உலகின் 85.6% சதவீத செல்வங்கள் குவிந்துள்ளது. “சமத்துவமின்மை” (Inequality.org) என்கிற அமைப்பு இது பற்றிய துல்லியமான தரவுகளை வெளியிட்டுள்ளது. இதை உறுதிபடுத்தும் வகையில் ஒக்ஸ்பாம் நிறுவனம் கடந்த பெப்ரவரி மாதம் வெளியிட்ட தரவுகளில் உலகின் 82% செல்வம் 1%வீதத்தினரிடம் தான் புழங்குகிறது என்று அறிவித்தது. இந்தக் கொள்ளையர்களே தமது மூலதனத்தை பெருப்பிப்பதற்காகவும், லாபத்தை பன்மடங்கு உயர்த்துவதற்காகவும் எஞ்சிய 99% சதவீத மக்களின் தலையெழுத்தைத் தீர்மானிக்கிறார்கள்.

அவர்களே உலக அழிவுக்கான வழிவகைகளையும் ஈவிரக்கமின்றி மேற்கொண்டு வருகிறார்கள். பெருமளவு அதிகாரத்தையும், நிதி மூலதனத்தையும் கொண்டிருக்கும் இந்த சிறிய சக்திகள் தான் ஏனைய மக்களின் தலைவிதியை நிர்ணயிக்கும் பலத்தைக் கொண்டிருக்கிறார்கள். அவர்களே நுட்பமாக நமது கண்களில் மண்ணைத் தூவி விட்டு நம்மை அதலபாதாளத்துக்கு அழைத்துச் சென்றுகொண்டிருக்கிறார்கள்.

நிதிமூலதனத்தைப் பாதுகாக்க அப்பாவி மக்களின் உயிர்களைக் குடித்துக் கொண்டிருக்கிறார்கள். செம்பனை உற்பத்தி செய்யும் நாடுகள் பலவற்றில் அவை ஆயுத பலம் கொண்ட மாபியாக்களால் தான் நிர்வகிக்கப்படுகின்றன என்கிற உண்மைகளை பின்னர் பார்ப்போம். சென்ற ஆண்டு மாத்திரம் பிரேசில் நாட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு மட்டும் செம்பனைக்கு எதிரான 70 சூழலியல் செயற்பாட்டாளர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். ஐக்கிய நாடுகள் சபையின் சூழலியல் திட்டத்தின் தலைவராக இருக்கும் எரிக் சுல்ஹைம் (நமது முன்னாள் சமாதானத் தூதுவரே தான்) இது பற்றி வெளியிட்டுள்ள கண்டனங்களையும் அறிக்கைகளையும் இணையத்தளங்களில் காணலாம். 2015 ஆம் ஆண்டு அங்கு 50 பேர் கொல்லப்பட்டிருந்தார்கள்.

கடந்த ஏப்ரல் மாதம் பிரேசிலில் செம்பனைக்கு எதிரான முக்கிய போராளியாக கருதப்பட்ட பிரிட்டோ (Nazildo dos Santos Brito) சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் சடலத்தைக் கண்டெடுத்தார்கள். உலகளவில் கண்டனங்கள் வெளிவந்திருந்தன.

இலகு பணம் (easy money) சம்பாதிப்பதற்காக மக்களுக்கு உண்மை நிலை தெரியாதபடி வைத்திருப்பதற்கென நேரெதிரான பிரச்சாரங்களைச் செய்வதற்காகவே பல கோடிகளை செலவிடுகின்றன. மூளைச்சலவை செய்வதற்காகவே பெருமளவு ஊடகங்களை தமது கைப்பிள்ளையாக வைத்திருக்கின்றன. அல்லது தமது மூலதனப் பங்குடன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றன.

உலகில் இன்று எந்த நாட்டை உதாரணத்திற்குக் கொண்டாலும் அங்கெல்லாம் பல்வேறு தொழில்களில் தமது மூலதனத்தைக் கொண்டிப்பவர்களின் கைகளில் தான் ஊடகங்களும் உள்ளன. ஊடகங்களில் அவர்கள் இடும் முதலீடுகவனிக்கப்படவேண்டியது. ஊடகங்கள் அவர்களைப் பாதுகாக்கும் ஆயுதம். சிலவேளை அவர்களுக்கு ஊடகங்கள் சிறு லாபத்தையும் அள்ளித் தரக்கூடும். பெருமுதலாளிகளுக்கு அடுத்ததாக இன்று அதிகாரத்தில் இருப்பவர்களும், அதிகாரத்துக்காக எத்தனிப்பவர்களும் ஊடகங்களை உருவாக்கி, இயக்குவதை காணமுடியும். இந்த உதாரணத்தை இலங்கைப் பின்னணியில் ஆராயும் பொறுப்பை உங்களிடமே விட்டுவிடுகிறேன்.

அமெரிக்காவில் மாத்திரம் 6 கார்ப்பரேட் நிறுவனங்களின் கைகளில் 90% வீதமான ஊடகங்கள் இருக்கின்றன. அதாவது கிட்டத்தட்ட அங்குள்ள மொத்த மக்களின் சிந்தனையை வழிநடத்தும் சக்தி இந்த 6 நிறுவனங்களிடம் தான் இருக்கின்றன. உலக மக்களின் சிந்தனைத் தீர்மானிப்பதில் அமெரிக்காவின் வகிபாகம் என்ன என்பதைப் பற்றி இங்கு நான் புதிதாகச் சொல்லப்போவதில்லை.

இப்பேர்பட்ட நிலையில் அரசாங்க தென்னை ஆராய்ச்சி நிறுவனம் (CRI - Coconut Research Institute) செம்பனை உற்பத்தியை விரிவாக்குவதை வருடாந்தம் ஊக்குவிக்கிறது என்பதை அவர்களின் அறிக்கையிலிருந்து அறிய முடிகிறது.

செம்பனை உற்பத்திக்காக இதுவரை ஏற்படுத்தியிருக்கிற அழிவுகளைப் பற்றி அடுத்த இதழில் பார்ப்போம்.

நன்றி - தினக்குரல்

காவிக்குள்ளிருந்து கம்பிக்குள்! - என்.சரவணன்


கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஹோமாகம நீதிமன்றத்தால் ஓராண்டு கடூழிய சிறைத்தண்டனையை வழங்கி அதை ஆறு மாதத்திற்குள் கழிக்கலாம் என்றும் நீதவான் 14ஆம் திகதியன்று உத்தரவிட்டதுடன், சந்தியா எக்னெலிகொடவிற்கு அச்சுறுத்தல் விடுத்தமைக்காக ஐம்பது ஆயிரம் ரூபா நஷ்டஈடு வழங்குமாறும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கடந்த 24ஆம் திகதி அவர் குற்றவாளி என்பதை ஹோமாகம நீதிமன்ற நீதவான் உதேஷ் ரணசிங்க  உறுதிசெய்திரருந்தார்.

சந்தியா எனும் பெண் போராளி

மஹிந்த ராஜபக்சவின் போது 2010 ஆம் ஆண்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளரும், கேலிச் சித்திரக் கலைஞருமான பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொடவுக்கு நீதிமன்ற வளாகத்தில் வைத்து 25.01.2016 அன்று மரண அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பில் பொதுபலசேனா அமைப்பின் கலபொட அத்தே ஞானசார தேரர் மீது சுமத்தப்பட்டிருந்த  வழக்கு விசாரணை முடிவுக்கு வந்துள்ளது.

பிரகீத் எக்னெலிகொட ஒரு நேர்மையான சிரேஷ்ட ஊடகவியலாளர். இறுதி யுத்தத்தின் போது யுத்த களத்தில் சர்வதேச ரீதியில் தடைசெய்யப்பட்ட இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தி அரசாங்கம் மக்களைக் கொன்றொழித்தது  என்பதை கண்டறிந்தார். அதற்கான ஆதாரங்கள் பலவற்றை இரகசியமாக திரட்டியிருந்தார். அது பற்றிய விபரங்கள் சிறிதாக கசிந்தபோது அவரை வெள்ளை வேனில் கடத்திச் சென்று சித்திரவதை செய்து பின்னர் விடுவித்தனர். ஆனாலும் அவர் தனது பணியைத் தொடர்ந்தார். தான் கண்டுபிடித்திருந்த ஆதாரங்களைப் பற்றி சர்வதேச மனித உரிமை சக்திகளுக்கு தெரியப்படுத்தத் தொடங்கினார்.

25.01.2010 அன்று பிரகீத் கடத்தப்பட்டார். அதன் பின் இன்று வரை அவருக்கு என்ன ஆனது என்பது யாருக்கும் தெரியாது. இந்த 8 ஆண்டுகளாக நீதி கோரி போராடி வருகிறார் அவரது மனைவி சந்தியா. அவர் தினசரி காலை ஆகாரம் செய்து விற்று அதில் வரும் பணத்தைக் கொண்டுதான் அவரது அன்றாடச் செலவையும் பிள்ளைகளை வளர்ப்பதற்காகவும் தனது போராட்டங்களுக்காகவும் செலவுகளை சமாளித்து வருகிறார். பிரகீத் இன்று உயிருடன் இல்லை என்பதை பிரகீத்தின் நண்பர்களும் மற்றோரும் நம்புகிற போதும் இன்றும் பிரகீத் உயிருடன் தான் இருக்கிறார் என்று நம்பி அவரை திருப்பித் தரும்படி போராடி வருகிறார் சந்தியா. தென்னிலங்கையில் நடக்கும் பல்வேறு ஜனநாயகப் போராட்டங்களிலும் தொடர்ச்சியாக பங்குபற்றிவருகிறார்.

பிரகீத் தொடர்பான வழக்கில் சந்தேகநபர்களாக புலனாய்வுப் பிரிவைச்சேர்ந்த 8 பேர் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வந்தார்கள். அந்த வழக்கில் பிரகீத்தை விடுதலைப் புலிகளுடன் தொடர்புள்ளவர் என்று நிரூபிப்பதற்கு புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் எத்தனித்தார்கள். பிரகீத் விடுதலைப் புலிகளிடமிருந்து பணம் பெற்றார் என்றும், தற்கொலைப் போராளிகளின் தற்கொலை அங்கிகளை மறைத்து வைக்க உதவி புரிந்தார் என்பது போன்ற ஆபத்தான குற்றச்சாட்டுகளை புலனாய்வுப் பிரிவு சுமத்தியது. ஆனால் அவர்களால் அதை நீதிமன்றத்தில் நிரூபிக்க முடியவில்லை.  பிரகீத்தை கடத்தியது, காணாமல் போகச் செய்து போன்ற குற்றச்சாட்டுகளின் பேரில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களை முன்னால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கூட சிறையில் சென்று சந்தித்து வந்தார்.

அவர்களின் மீது 25. ஜனவரி 2016 அன்று ஹோமாகம நீதிமன்றத்தில் விசாரணை நடந்தபோது குற்றப்புலனாய்வுத் திணைக்களம் “பிரகீத்துக்கு; புலிப் பயங்கரவாதத்துடன் தொடர்போ, அவர்களுக்கு ஆதரவளித்ததோ கிடையாது” என்று நீதிமன்றத்துக்கு உறுதிப்படுத்தினார்கள்.

அந்த 8 பேருக்கும் பிணை வழங்காது தடுப்புக்காவலை நீடிப்பு செய்தார் நீதவான். அந்த விசாரணையன்று நீதிமன்றத்துக்கு ஞானசாரருடன் பொதுபலசேனா இயக்கத்தவர்களும் கூடினார்கள். தீர்ப்பால் ஆத்திரமுற்ற அவர்கள் நீதிமன்ற வளாகத்தில் வைத்து சந்தியாவை மிரட்டினர். பிரகீத் விடுதலைப் புலிகளின் உறுப்பினர் என்றும், தனக்கும் இங்கு கருத்து கூற அன்மதிக்க வேண்டும் என்றும் கத்தினார். அன்று சந்தியாவுக்கு ஞானசாரர் விடுத்த உயிரச்சுறுத்தல் தொடர்பில் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு தான் இப்போது வழங்கப்பட்டிருக்கிறது.

ஞானசாரர் மீது "நீதிமன்றத்தை அவமதித்தல்" தொடர்பில் சாட்சிகளை பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் இந்த வழக்கு தொடரப்பட்டிருந்தது. ஞானசாரரால் இதனை மறுத்து வாதிட முடியாது. ஏனென்றால் அங்கு கூடியிருந்த பலர் முன்னிலையில் அப்படி நண்டந்து கொண்டார். சாட்சியளிக்க பார் இருந்தனர். வீடியோக்களும் கூட உள்ளன.

நீதிமன்றத்தில் உறங்கினாலோ, சத்தமிட்டு தும்மினாலோ கூட நீதிமன்றத்தால் தண்டனைக்குள்ளாக்க முடியும்.


இந்த வழக்கில் அரச தரப்பு சிரேஷ்ட வழக்கறிஞர் ஜனக பண்டார நீதிமன்றத்தில் முன்வைத்த கருத்துக்கள் முக்கியமானவை.
"இந்த சட்டத்தில் குறைகள் இருக்கக்கூடும், பிழைகள் இருக்கக்கூடும், இது வெள்ளைக்காரர்களின் சட்டமாகக் கூட இருக்கக்கூடும். ஆனால் இது நமது நாட்டில் நடைமுறையில் உள்ள சட்டம். அதன்படி சட்டத்தை காக்கும் இந்த நீதிமன்றத்துக்குள் வந்து நீதிபதிக்கு சத்தமிடுவது, சாட்சியளிப்பவர்களுக்கு சத்தமிட்டு மிரட்டுவது என்பதை எப்படி எடுத்துக்கொள்வது. ஒழுங்கு என்கிற ஒன்று உண்டு.

எப்போது ஒழுக்கம் இல்லாது போகுதோ அன்று சாசனமும் அழிந்து விடும் என்று புத்தர் கூறினார்.

இந்த நீதிமன்றத்துக்கு வந்து சண்டியனைப் போல நடந்துகொண்டால் நீதிமன்றத்தின் நிலை என்ன? நீதிமன்றத்தில் தமக்கு நீதி கோரி வரும் ஒரு பெண்ணை நீதிமன்றத்திலேயே மிரட்டல் விடுக்கிறார்கள். இதை சாதரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. இப்படிப்பட்ட குற்றத்தைப் புரிந்த ஒரு பிக்குவை விடுவித்தால் நாளை நீதிமன்றத்தின் முன்னால் லுங்கியை அணிந்துகொண்டு வரும் இன்னொருவர் நீதிமன்றத்தை திட்டினால் தண்டிப்பது எப்படி.

இது ஹோமாகம நீதவான் ரங்க திசானாயக்கவுக்கோ சந்தியா எக்னெலிகொடவுக்கோ இழைக்கப்பட்ட குற்றமல்ல முழு நீதித்துறைக்கும், நீதித்துறையிடம் நீதி வேண்டி வரும் அனைவருக்கும் இழைக்கப்பட்ட குற்றம்.

நீதிமன்றத்தில் சத்தமிடுபவரை கூட்டில் அடைப்பது எதற்காக? சேர்ட்டில் பட்டனை பூட்டவில்லை என்பதற்காக கூட்டில் அடைப்பது எதற்காக? நீதிமன்றத்தின் கௌரவத்தைப் பாதுகாக்கவே அப்படி செய்யப்படுகிறது. நீதிமன்றத்துக்கு வருபவர்களின் ஒழுக்கத்தை சரி செய்வதற்காகவே அப்படி செய்யப்படுகிறது. அப்படி இருக்கும் பொது நீதிமன்றத்துக்கு நீதி கோரி வந்த பெண்ணொருவரை மிரட்டிய ஒருவரை விடுவித்தால் நீதிமன்றத்தின் நிலை என்னாவது? அதன் ஒழுக்கம் என்ன ஆவது?"
மகிந்த ஆட்சியின் இனவாதத் தளபதி ஞானசார்
மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் கிட்டத்தட்ட சிங்கள பௌத்த சக்திகளை பலப்படுத்துகின்ற உசுப்பேத்தி கொதிநிலையில் வைத்திருக்கும் மறைமுக ரெஜிமென்டாக போதுபல சேனாவும், ஞானசார தேரரும் இயங்கினார்கள். சிங்கள பௌத்த சித்தாந்த தளத்துக்கு காலத்துக்கு காலம் தலைமையேற்று நடத்த அவ்வப்போது தலைவர்கள் தோன்றி மறைவார்கள். மகிந்த காலத்தில் அந்தப்பணிக்கு தெரிந்தோ, தெரியாமலோ தலைமை கொடுத்தவர் ஞானசார தேரர்.

அரசாங்கம் பகிரங்கமாகவே ஞானசாரருக்கு ஆதரவையும், அனுசரணையும் வழங்கியது. ஞானசார தேரர் அரச ஆதரவுடன் மேலும் பலமடைந்தார். அவரின் அடாவடித்தனங்கள் நாளுக்கு நாள் அதிகரித்தன. அரச அதிகாரிகளுடனும், பொலிஸ் படையினருடனும் கூட அநாயசமாக வன்சொல் பயன்படுத்தி சண்டித்தனம் செய்தார். பொலீசார் அவரைக் கண்டு நெளிந்து வளைந்தார்கள். பொலிசாரின் கண் முன்னாலேயே நிகழ்த்தப்பட்ட சண்டித்தனங்களின் போது தலைசொரிந்து கொண்டு “அபே ஹாமுதுருனே” என்றார்கள். அது “அளுத்கம கலவரம்” வரை கொண்டுசென்றது. மகாசங்கத்தினர் கூட அவரைக் கண்டிக்கவும்,  விமர்சிக்கவும் தயங்கினார்கள். ஒதுங்கியே நின்றார்கள்.

இந்த இடைக்காலத்தில் அவரின் அடாவடித்தனங்களுக்கு எதிராக பல வழக்குகள் தொடரப்பட்டன. மகிந்த ஆட்சி காலத்தில் பல வழக்குகளில் இருந்து இலகுவாக அவரால் தப்பிக்க முடிந்தது. அப்போது நீதிமன்றத்தின் சுயாதீனம் எந்தளவு சீரழிந்திருந்தது என்பது நாட்டவர்களுக்கு நன்றாகவே தெரியும்.

அளுத்கம கலவரத்திற்கு பொறுப்பான எவரும் மகிந்த அரசாங்கத்தால் தண்டிக்கப்படவில்லை. நான்கு வருடங்கள் கழிந்தும்; இன்றுவரை எவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை.


தற்போதைய “நல்லாட்சி” அரசாங்கம் ஆட்சியமர்ந்த போது இனி இனவாத சக்திகளின் கொட்டம் அடக்கப்படும் என்கிற நம்பிக்கை ஜனநாயக சக்திகளிடமும், சிறுபான்மை மக்களிடமும் இருந்தது. ஆனால் ஞானசார போன்றோரின் பலம் எத்தகையது என்பது அவர்களின் இருப்பும், தொடர் நடவடிக்கைகளும் மெய்ப்பித்தன. ஆனால் நீதித்துறையின் சுயாதீனம் மக்களுக்கு சற்று ஆறுதலைத் தந்தது. நீதிமன்றம் காலத்தை இழுத்தடித்தேனும் இப்போது இந்த வழக்குத் தீர்ப்பை வழங்கியிருப்பது ஆறுதலைத் தந்திருக்கிறது. ஞானசாரருக்கு எதிரான நூற்றுகணக்கான வழக்குகளில் முதல் தடவையாக தண்டனை நிறைவேற்றப்பட்ட வழக்கு இது. தனது காலம் முழுவதும் நீதிமன்றங்களுக்கு அலைந்து திரிவதிலேயே கழிகிறது என்று சில மாதங்களுக்கு முன்னர் ஞானசார தேரர் நொந்துகொண்டதும் நினைவுகொள்ளத்தக்கது.

சமீபத்தில் கண்டி கலவரத்துடன் தொடர்புடையவர் என்று கைது செய்து தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற அமித் வீரசிங்க கூட ஞானசாரவால் உருவாக்கப்பட்டவர் என்பதை அனைவரும் அறிவர். அமித் வீரசிங்கவை அனுராதபுர சிறைச்சாலைக்கு அடிக்கடி சென்று பகிரங்கமாக சந்தித்து வருபவர் ஞானசாரர்.

வரலாற்றில் எந்த பிக்குமாரும் செய்யாத அடாவடித்தனகளையும், மிரட்டல்களையும் பகிரங்கமாக அரசாங்க அனுசரணையுடன் நிகழ்த்தியவர் ஞானசாரர். இந்த தீர்ப்பு அவருக்கு மட்டுமல்ல இனி காவியுடையை அசைக்கமுடியாத அதிகாரக் கவசமாக கருதி இயங்குகிற அனைவருக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.  படிப்பினையாக இருக்கவேண்டும்.

ஞானசார தேரரை விடுவிப்பதற்காகாக ஜனாதிபதியை அணுகி “ஜனாதிபதி மன்னிப்பின்” பேரில் விடுவிப்பதற்கான முயற்சிகள் திரைமறைவில் மேற்கொள்ளப்பட்டுவருவதாக பரவலான கதையுண்டு. அது நிகழ்ந்தால் நீதியின் மீது மக்களுக்கு இருக்கும் கடைசி நம்பிக்கையும் செத்துவிடும் என்பது உறுதி.

நன்றி - தினக்குரல்

மறக்கடித்தலுக்கு எதிரான போர்! -என்.சரவணன்


மக்களின் சிந்தனையைத் தீர்மானிக்கின்ற அதிகாரமும், ஆற்றலும் இன்று அடக்கப்படும் மக்களின் கைகளை விட்டு நழுவியுள்ளது. அவர்களால் சிந்தனைத் தீர்மானிக்க முடிவது போல், சிந்தனையை மறக்கடிக்கவும் திசைதிருப்பவும் பொறிமுறையைக் கொண்டுள்ளார்கள். நமக்கு வெளியில் நமக்கான நிகழ்ச்சிநிரல் தீர்மானிக்கப்படுகிறது.

வேகமாக மாறிவரும் உலகில் நினைவுகளும் கூட ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு வேகமாக தாவி விடுகிறது.

யுத்த காலத்தில் நிகழ்ந்த ஒன்றை இங்கு நினைவூட்டவேண்டும்.

முன்னை நாள் இறந்தவருக்காக அழுது ஆறுவதற்கு முன், நேற்றைய சாவு அந்த நினைவை மூடி விடுகிறது. நேற்றைய இழப்பை இன்று நிகழ்ந்த அவலம் மறைத்து விடுகிறது. நாளை வரப்போகும் அழிவை இன்றைய துயரமும் அடித்துச் செல்லக் கூடும் என்கிற நிலை இருந்தது.

இதையே அதிகார வர்க்கம் செயற்கையாகவும் நிகழ்த்தலாம். ஒன்றை மறக்கடிக்க இன்னொன்றை அந்த இடத்துக்கு நிறுவும் கைங்கரியம் அது.

ஆக... ஒன்றை மேவும் இன்னொன்று தொடர்ச்சியாகவும், இயற்கையாகவும், செயற்கையாகவும் நிகழ்ந்துகொண்டு தானிருக்கிறது. சமகாலத்தில் முனைப்பு பெரும் பேசுபொருளை அதிகார சக்திகளால் செயற்கையாகவும் திட்டமிட்டும் திசைதிருப்பிவிட முடியும். அது எங்கெங்கும் நிகழ்கிறது.

அரசியல் வாதிகள், வியாபாரிகள், பெருமுதலாளிகள், கார்ப்பரேட் கம்பனிகள், மாபியாக்கள், இன்னும் சமூக விரோத சக்திகள் இதனை தமது தந்திரோபாய வழிமுறையாகவே நுட்பமாகக் கையாண்டு வருகின்றன.

நினைவில் உள்ளவற்றை மறக்கடிப்பது என்பது இந்த நுட்பத்தின் அங்கம் தான். ஆதிக்க இனம், மதம், சாதி, நிறம், வர்க்கம் என இன்ன பிற சக்திகளும் “இவை அடக்கப்படும் சக்திகளை பலப்படுத்தும்” என்று நம்புகிற அடையாளங்களையும், நினைவுச் சின்னங்களை இல்லாது ஒழிக்கும் பணி வரலாறு நெடுகிலும் உலகம் முழுவதும் நிகழ்கிற ஒன்று தான். தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் பௌத்த தொல்பொருள்களை அழித்தது, இந்துத்துவத்தின் பேரால் இந்தியாவில் முஸ்லிம் சின்னங்களை இந்துத்துவ தீவிரவாதக் கும்பல்கள் அழித்து வருவது, பிரபாகரன் பிறந்த வீடு கூட இருக்கக் கூடாது, போராளிகளை நினைத்து அழுவதற்கு கூட எச்சம் இருக்கக் கூடாது என்று மாவீரர் துயிலும் இல்லங்களை தரைமட்டமாக்கியது என்பன இந்த நினைவழித்தல் செயற்பாட்டின் அங்கம் தான். இன்றும் இலங்கையின் தொல்பொருள் துறை தமிழ் இன அடையாளங்களைத் திட்டமிட்டு அழித்து வருகின்ற பல செய்திகளை நாம் அறிந்துள்ளோம்.

மறக்கடிக்கச் செய்வது என்பது ஒரு அரசியல் தந்திரோபாயமாகவும், அரசியற் செயற்பாட்டாகவும் காலங்காலமாக நிகழ்ந்துவரும் ஒரு செயன்முறை. காலத்துக்கு காலம் அது வெவ்வேறு வடிவங்களை எடுத்து வருகிறது. வெவ்வேறு அளவுகளில் இயக்கப்பட்டுவருகிறது.

போராட்டங்களில் போர்த்தந்திரமாகவும் “மறக்கப்பண்ணுவது”, “நினைவுகளை அகற்றுவது”, “புதிய நினைவுகளை அந்த இடத்துக்கு பிரதியீடு செய்வது” என்கிற உபாயம் கைக்கொள்ளப்படுகின்றன.


ஒரு நினைவை மறக்கடிக்கச் செய்வது என்பது இலகுவானதல்ல. அதற்கான பிரதான வழிமுறையாக ஏற்கெனவே “நினைவு” இருந்த இடத்துக்கு இன்னொன்றை பிரதியீடு செய்தாக வேண்டும்.

சமீபத்தேயே நமக்குத் தெரிந்த உதாரணமாகக் கொண்டால்; தமிழ் நாட்டில் மே 22 நிகழ்ந்த தூத்துக்குடி படுகொலைச் சொல்லலாம். தமிழகத்தில் வரலாறு காணாத மோசமான அரச பயங்கரவாத சம்பவமாக கருதப்பட்டது அது. அது பற்றிய விவாதங்களும், உரையாடலும் நடந்துகொண்டு இருக்கும் போதே ரஜினி நடித்து ஜூன் 6 அன்று  வெளியான “காலா” திரைப்படம் மொத்த உரையாடலையும் விழுங்கி ஏப்பமிட்டு திசைதிருப்பிவிட்டது. அது எப்படி ஒரு சமூகம் இத்தனை வேகமாக ஒரு பெரும்சோகத்தை பகிர்வதையும், பேசுவதையும் மறந்து ஒரு பொழுதுபோக்கு சினிமா ரசனைக்குள் வீழ்ந்தது என்பது ஆச்சரியமாகத்தான் இருந்தது.

ஒன்றை நினைவுக்கு கொண்டுவரவும், அதனை மறக்கச் செய்வதற்கும், அதற்குப் பதிலாக வேறொன்றை பிரதியீடு செய்வதற்கும் இன்று பேராயுதமாக பயன்படுத்தப்படுவது ஊடகங்களும், பொழுதுபோக்குச் சாதனங்களும் தான்.

முக்கியத்துவமில்லாத ஒன்றை முக்கியத்துவப்படுத்தி வைரலாக்கி பிரதான பேசுபோருளாக்குகின்ற பணியை ஊடகங்கள், சமூக ஊடகங்களுக்கூடாக கச்சிதமாக மேற்கொள்வதற்கான முறையியலை நுட்பமாக ஆளும் வர்க்கங்கள் பயன்படுத்துகின்றன. ஊடகங்களை, ஊடகவியலாளர்களை அதிகாரத்தாலும், பணத்தாலும் ஆட்டுவிக்கின்றன. இதனால் இந்த “மறக்கடித்தல்” செயல்பாடு அவர்களுக்கு இலகுவாகக் கைகூடுகிறது.

இன்றைய ஊடகச் சந்தையில் தம்மீது கவனத்தை ஈர்க்கச் செய்வதற்கு வாரத்திற்கொரு செய்தியை உற்பத்தி செய்து, வைரலாக்குவதை ஒரு வியாபார தந்திரமாக ஆக்கி வைத்திருக்கிறார்கள்.  அவர்கள்  செய்தி உற்பத்தியாளர்கள். கதை உருவாக்கிகள். பரபரப்பு ஆக்கிகள்.

சமீபத்தில் முகநூலைப் பயன்படுத்தி கேம்ப்ரிட்ஜ் அனலிட்டிகா திரிபுபடுத்துதலையும், திசைதிருப்புதலையும் எப்படி செய்தது என்பது அம்பலத்துக்கு வந்தது. முகநூலுக்கு அடிமையாகி இருக்கின்ற ஒரு பெரும் சமூகம் ஏற்கெனவே உருவாக்கப்ப்ட்டிருகிறது. அவர்களின் சிந்தனையை வழிநடத்தும் ரிமொட்கொன்ரோல் யாரிடமெல்லாம் இருக்கிறது பாருங்கள். எப்படி குறிப்பிட்ட செய்திகளை வைரலாக்கி, எதை கொடுக்க வேண்டும், எதைத் தடுக்க வேண்டும், யாருக்கு சேரவேண்டும், யாருக்கு தடுக்க வேண்டும் என்பவற்றை அவர்கள் தீர்மானித்தது எப்படி என்பது அம்பலத்துக்கு வந்தல்லவா?

இந்தப் போக்கைப் பற்றி ஆழமாக விளக்குகின்ற ஒரு ஆங்கில நூல் சென்ற ஆண்டு வெளியானது. (Hit Makers: The Science of Popularity in an Age of Distraction – Derek Thompson). சமூக செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்களுக்கு மிகவும் பிரயோசனப்படகூடிய நூல் அது.

நீளமான ஒரு குச்சியின் அருகில் அதைவிட நீளமான குச்சியை வைப்பதன் மூலம்; முன்னைய குச்சி அதன் “அதிக நீளம்” என்கிற தகுதியை இழக்கிறது. அதே பொறிமுறை தான் இங்கும். ஒன்றுக்கு இன்னொன்றை பிரதியீடு செய்வது.

பல வருடங்களுக்கு முன் ஜே.வி.பி யின் சிங்களப் பத்திரிகையொன்றில் வெளியான கட்டுரையொன்றில் ஒரு அட்டவணையை வெளியிட்டிருந்தார்கள். அதாவது இலங்கையில் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் கிரிக்கெட் போட்டி நடந்த நாட்களெல்லாம் பாண் விலையேற்றம் எப்படி நிகழ்ந்தது என்பது பற்றியது அது.

பெருவாரி மத்தியதர வர்க்க மக்கள் கிரிக்கெட் போதையேறி, கவனம் முழுவதும் ஒன்றில் குவிக்கப்பட்டிருக்கும் போது அரசாங்கம் நுட்பமாக விலையை ஏற்றியிருக்கிறது.

அரசு குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் சந்தர்ப்பத்தில், அந்த அரசு இன்னொரு விடயத்தை பேசுபொருளாக்கி செயற்கையாக கவனத்தை திசைதிருப்பிவிடுகிறது. அல்லது இன்னொரு பரபரப்பான விடயத்தில் மக்கள் மூழ்கியிருக்கையில் திரைமறைவில் தமது மக்கள்விரோத பணியை கச்சிதமாக முடித்து விடுகிறது.


பெருவாரி மக்களை ஓரிடத்தில் இருந்து ஒரு விடயத்தை வைரலாக்கி தொலையியக்க இன்றைய ஸ்மார்ட் போன்களின் வலைபின்னல் போதும். இதே வலைப்பின்னலை அடக்கப்படும் மக்களும் தமக்கான போராட்டத்துக்கான ஒரு ஆயுதமாகப் பயன்படுத்திக்கொண்டாலும் கூட; அந்த இணையத்தை தடுத்து வைக்கும் பலம் அதிகார வர்க்கத்திடம் தான் இருக்கிறது என்பதை மறந்துவிடமுடியாது.

ஒரு பிரச்சினை தீர்க்கப்படாமலே மறு பிரச்சினை வந்து அதை பின்னே தள்ளி விடுகிறது. அளவில் சிறிய பிரச்சினையை புதிய - பெரிய பிரசினையொன்று பின் தள்ளினாலும் பரவாயில்லை. ஆனால் சிறிய பிரச்சினைகள் கூட பெரும்பிரச்சினைகளை பின் தள்ளுமளவுக்கு சில நேரங்களில் நிகழ்கின்றன.

அடக்கப்படும் சக்திகள் எப்போதும் இந்த போக்குக்குப் (Tendency) பலியாகாமல் தாக்குப்பிடிப்பது இன்றைய நவீன உலகத்தில் அவ்வளவும் எளிதான காரியமில்லை. ஏனென்றால் இவற்றை இயக்கும் சக்தி அதிகார வர்க்கத்திடமே இருக்கிறது. இவற்றை உணர்ந்துகொண்டு விழிப்புணர்வுடன் பயணிப்பதே அடக்கப்படும் மக்களின் முதல் கட்டப் பணியாக இருக்கிறது.
 

இணைந்திருங்கள்


Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates