மீரியபெத்தையில் மண்சரிந்து மாதம் ஒன்று உருண்டோடி விட்டது. மண்சரிந்த அன்று குறித்த சில பாடசாலைகளில் அகதிகளின் தொகை அதிகரித்துள்ளனவே தவிர மாற்றம் ஒன்றும் நடக்கவில்லை.
மீரியபெத்தையில் நேரடியாக பாதிக்கப்பட்ட 57 குடும்பங்கள் கடந்த இரண்டு வாரத்திற்கு மேலாக பாழடைந்த தேயிலை தொழிற்சாலை ஒன்றில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மண்சரிந்தபோது இலங்கை, உலகம் என பலரும் மீரியபெத்தை என்ற நாமத்தையே சொல்லிக்கொண்டிருந்தனர். ஆனால் இன்று தேர்தலில் கவனம் செலுத்திவிட்டு மீரியபெத்தையை மறந்துவிட்டனர்.
தற்காலிக தொழிற்சாலை
மீரியபெத்தையில் ஏற்பட்ட மண்சரிவினால் நேரடியாக பாதிக்கப்பட்ட 57 குடும்பங்களைச் சேர்ந்தவர்களை பாழடைந்த தேயிலை தொழிற்சாலையில் தங்கவைத்துள்ளனர்.
நிரந்தர வீடுகள் கட்டித்தரமட்டும் இந்த தொழிற்சாலையில் குறித்த மக்கள் தங்கவைக்கப்படுவர் என்று கூறினார்கள். ஆனால் தற்போதைய நிலையில் இந்த தொழிற்சாலைதான் அவர்களின் நிரந்தர தங்குமிடமாக மாற்றப்பட்டு விடுமோ என்று தோன்றுகிறது.
காரணம், மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கென நிரந்தர வீடு கட்டித்தருவதற்காக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் காண்பிக்கப்பட்ட மூன்று இடங்களுமே வீடுகள் அமைக்க பொருத்தமில்லாதவை. இதனை மக்கள் தெரிவித்ததும் வீடுகள் கட்டித்தருவதாக கூறிய கதைகள், நடவடிக்கைகள் எல்லாமே நின்றுவிட்டன. இது தொடர்பில் வீடுகளை கட்டித்தருவதாக கூறி பொறுப்பேற்ற வீடமைப்பு நிதியத்தின் பணிப்பாளர் நலின் த சில்வாவிடம் கேட்டபோது, "இன்னும் வீடு கட்டுவது தொடர்பில் முடிவெடுக்கப்படவில்லை எனவும் ஆறுமுகன், மகிந்த அமரவீர ஆகிய அமைச்சர்களின் கட்டளையின் பின்னரே முடிவெடுக்கப்படும் என்றார்.
குறித்த பகுதியில் மீட்புப்பணியில் ஈடுபட்டு இடையில் அப்பணியை மேற்கொள்ளமுடியாது என இடைநிறுத்திக் கொண்ட மத்திய மாகாணத்தின் இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மனோ பெரேராவிடம் கேட்டபோது அமைச்சர் ஆறுமுகன், மகிந்த அமரவீர ஆகிய இருவருமே மீரியபெத்தை மக்களுக்கு வீடு கட்டுவது தொடர்பாக முடிவெடுக்கவேண்டும். அவர்கள் உத்தரவிட்டதன் பின்னரே நாம் வீடுகட்டமுடியும். மூன்று மாதத்தில் வீடுகளை எம்மால் கட்டமுடியும். இரண்டு தனிவீடுகள் ஓரிடத்தில் அமைப்பதற்கே திட்டமிடப்பட்டுள்ளது. மாடிவீடுகள் கட்டப்படாது. மேலும், மண்சரிந்த இடத்தில் உள்ள பிரதான வீதியை மக்கள் தேவைக்காக சீர்செய்து கொடுத்துள்ளோம் என்றார்.
உணவுக்காக போராட்டம்
நிரந்தர வீடுகள் கட்டித்தரும்வரை தொழிற்சாலையில் தங்கவைக்கப்பட்டுள்ள மீரியபெத்தை மக்களுக்கு கடந்த வியாழக்கிழமை வரை இராணுவத்தினரே உணவுகளை வழங்கிவந்தனர். ஆனால் வியாழக்கிழமை இரவு முதல் உணவு சமைப்பதற்கான பொருட்கள் அனைத்தையும் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சென்ற இராணுவம் இனி சமைத்து உண்ணுமாறு கூறினார்கள் என தொழிற்சாலையில் தற்காலிகமாக தங்கியுள்ள மீரியபெத்தையைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்தார்.
அத்துடன் மக்கள் அன்று முதல் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்த பின்னர் வெள்ளிக்கிழமை நண்பகல் சமைப்பதற்கான உணவுப் பொருட்களை அந்த தொழிற்சாலையில் இறக்கிவிட்டுச் சென்றுவிட்டனர் எனவும் அவர் தெரிவித்தார்.
உணவு சமைத்து உண்பதற்கான வசதிகள் இல்லாத அந்த தொழிற்சாலையில் இனி மக்களே உணவை சமைத்து சாப்பிடவேண்டும். இனி உணவுக்கும் போராட்டமே என்கின்றனர்.
குளிரால் அவதி
மீரியபெத்தை மலைச்சரிவின் பள்ளத்தில் இருந்தாலும் அது சூடான காலநிலை கொண்ட இடம். ஆனால் தற்போது தொழிற்சாலையில் தங்கவைத்துள்ள இடம் மலையுச்சி. அந்த பகுதியில் குளிர், பனி, இருக்கின்றமையால் தகரத்தினால் அமைந்த தொழிற்சாலை எந்நேரமும் குளிராகவே இருக்கிறது.
கதவுகள் போடப்பட்ட அறையாக இராணுவத்தினர் தொழிற்சாலையை மீரியபெத்தை மக்களுக்கு வழங்கினாலும் குளிர் தாங்கமுடியாமல் இருக்கிறது என சிலர் தெரிவிக்கின்றனர்.
சிறுவர், குழந்தைகள், வயோதிபர்கள் பெரும் கஷ்டப்படுகின்றனர். அத்துடன் இந்த தொழிற்சாலை அமைந்துள்ள இடத்திற்கு அருகில் எந்தவொரு அடிப்படை வசதியும் இல்லை. வைத்தியசாலை,போக்குவரத்து என்பவற்றுக்காக பல மைல்கள் நடந்து செல்லவேண்டும் என்கின்றனர்.
பாடசாலையில் மீண்டும் தஞ்சம்
பூனாகலை தமிழ் வித்தியாலயம் மற்றும் சிங்கள வித்தியாலயம் என மொத்தமாக நான்கு பாடசாலைகளில் மண்சரிவு அபாயம் ஏற்படும் என்ற அச்சத்திலுள்ள மக்கள் தஞ்சமடைந்து உள்ளனர். இதில் பூனாகலை தமிழ் வித்தியாலயத்தில் 400 பேர் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர்.
மீரியபெத்தையைச் சேர்ந்த 200பேரும் ஏனைய தோட்டங்களைச் சேர்ந்த 200 பேரும் இங்கு உள்ளனர். இவர்களின் பிள்ளைகளின் கல்வி நிலை கேள்வியாகவுள்ளது.
பாதுகாப்புக்காக ஒதுங்கியுள்ள மக்களை என்ன செய்வதென்று அறியாமல், கஷ்டத்திற்கு மத்தியில் மாணவர்களுக்கு பாடம் கற்பித்து கொடுக்கின்றனர். மீரியபெத்தையைச் சேர்ந்த சுமார் 80 பிள்ளைகள் பூனாகலை தமிழ் வித்தியாலயத்தில் மட்டும் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனால் இடநெருக்கடியும் ஏற்பட்டுள்ளது.
நிவாரணத்தில் மோசடி
மக்களின் பிரச்சினையை தமக்கு சாதகமாக்கி கொண்ட சிலர் மோசடியில் ஈடுபடுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக நிவாரணமாக வந்த சில உணவுப் பொருட்கள் இரவிரவாக அரச அதிகாரிகளின் வாகனங்களில் ஏற்றிச்செல்வதாகவும் தெரிவிக்கின்றனர்.
அத்துடன், வடக்குகிழக்கிலிருந்து வந்த நிவாரணங்களை இராணுவமே பொறுப்பேற்றன எனவும், அவை தமக்கு வழங்கப்படவில்லை எனவும் தெரிவிக்கின்றனர்.
வடக்கிலுள்ள ஒரு எம்.பி. பண உதவி வழங்க முன்வந்த போது அதிபர் ஒருவர் குறித்த பணத்தை மாணவர்களின் பெயருக்கு வங்கிக் கணக்கொன்றை ஆரம்பித்து அதில் பணத்தை வைப்பிலிடுமாறு கூறியுள்ளார்.
அவர் அவ்வாறு கூறவில்லை என்றால் அரசாங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கும் என்கின்றனர் மக்கள். 125 மாணவர்களுக்கு வங்கி கணக்கு ஆரம்பிக்கப்படவுள்ளது என்பதையும் மக்கள் சுட்டிக்காட்டினர்.
மண்சரிந்த இடத்தில் துர்நாற்றம்
மண்சரிந்து ஒருமாதம் ஆகிவிட்டது. விடாமல் பெய்யும் அடைமழையில் மண்ணுக்குள் புதைத்த மனித உயிர்களின் உடல்கள், ஆடு, மாடு, கோழி, நாய் என்பவற்றிலிருந்து துர்நாற்றம் கிளம்பியுள்ளது.
இதனால் அந்த பகுதிக்கு மக்கள் செல்வதையும் குறைத்துக்கொண்டுள்ளனர். அத்துடன் அந்த பகுதியில் ஊற்று நீரும் பெருக்கெடுத்து வருவதால் மணசரியும் அபாயமும் ஏற்பட்டுள்ளது என்கின்றனர்.
மண்சரிவுக்கு காரணம்?
மீரியபெத்தை மண்சரிவுக்கு காரணம் பூனாகலை மாபிட்டிய தோட்டம், புறோட்டன் தனியார் தோட்டம் உட்பட்ட தோட்டங்களில் உள்ள கற்குழிகளே என அரச அதிகாரிகளில் ஒருவர் தெரிவித்தார். தனது பெயரை கூறவிரும்பாத அவர் குறித்த பகுதியில் பத்து கற்குழிகள் இருப்பதாக தெரிவித்தார்.
நாட்டின் அபிவிருத்தி தேவைக்காக மலையகத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள கற்பாறைகளை வெடிவைத்து தகர்த்தி கற்களை எடுத்துச்செல்கின்றனர்.
பாறையை தகர்ப்பதால் நிலம் அதிர்கிறது. இந்த நில அதிர்வினால் நிலச்சரிவு ஏற்படுகிறது. மீரியபெத்தைக்கு எதிர்ப்புறத்தில் மாபிடிய பிரதேசத்தில் உள்ள கற்குழிகளே மண்சரிவுக்கு காரணம் என்கிறார்.
அத்துடன் உமா ஓயாத்திட்டமும் காரணமாக இருக்கலாம் எனவும் அவர் தெரிவித்தார். பூனாகலை முதல் சுரங்கப்பாதை ஒன்று செல்கிறது. பண்டாரவளை வெல்லவாக காத்தகொல்ல என பல இடங்களைத் தாண்டி இச்சுரங்கப்பாதையூடாக உமா ஓயாவை கொண்டு செல்கின்றனர்.
தொழில் இல்லை
நிரந்தர வீடுகள் கட்டிக்கொடுக்கும் வரை தொழிற்சாலையில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு தொழில் இல்லை. அதற்காக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
கொழும்பு நகரில் வேலைசெய்த மக்களும் இன்று முடங்கிப்போய் இருக்கின்றனர். ஆனாலும், தொழிற்சாலையில் மாலையானதும் மது அருந்திவிட்டு புலம்பும் ஆண்களினால் ஆபத்து என ஒரு பெண்மணி கூறினார்.
மீரியபெத்தை ஓர் பாடம்
மண்சரிந்ததால் 39 உயிர்கள் மண்ணில் புதைந்த செய்தியால் மழைபெய்தாலே அச்சத்தில் பாதுக்காப்பை தேடவேண்டிய ஒரு நிலைக்கு மலையக மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இது ஒரு பாடமாக இருப்பினும் பாதுகாப்பை வழங்கவேண்டியது சந்தாவை பெற்றுக்கொண்டு அரசியல் நடத்தும் அரசியல் தலைவர்களே என மக்கள் தெரிவிக்கின்றனர். இதுவரை பகுதிக்கு பொறுப்பான முதலமைச்சர் என்ற வகையில் ஊவாமாகாண முதலமைச்சர் சஷிந்திர ராஜபக்ஷ இன்று வரை முகாம் மக்களை சந்திக்கவில்லை என மக்கள் ஆதங்கப்படுகின்றனர். அதேநேரம் செந்தில் தொண்டமான் இரண்டு தடவை வந்தபோது மக்களுக்கு என்னதேவை என்று கேட்காமல் தாங்கள் செய்வதை மட்டுமே கூறிச்சென்றார் என்று மக்கள் கூறினர்.
அரச சார்பற்ற தொண்டு நிறுவனம் முதல் அரச நிறுவனம் வரை அனைவருமே ஊழல் விடயத்தில் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் எனவும் மீரியபெத்தையை அடிப்படையாக கொண்டு பல லட்சம் கொள்ளை அடித்திருப்பதாகவும் மக்கள் கூறுகின்றனர். இதற்கு மலையக அரசியல் தலைவர்களும் உடந்தையாக இருக்கலாம் எனவும் பாதிக்கப்பட்ட மக்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
காலம் கடந்தாலும் மலையக மக்களின் பாதுகாப்பான உறைவிடத்திற்கு எவருமே உறுதி வழங்கப்போவதில்லை என்ற விடயத்தில் மீரியபெத்தை ஓர் எடுத்துக்காட்டாக இருக்கிறது. இதில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பேசுபொருளாகவும் மீரியபெத்தை உருவாகப் போகிறது. அதற்கு முதல் எப்படியாவது ஜனாதிபதியை சந்திக்கவேண்டும் என்று ஓர் அமைப்பு முனைப்புடன் செயற்படுகிறது என்ற தகவல்களும் கிடைத்துள்ளன.
நன்றி - தினக்குரல்
+ comments + 1 comments
ok
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...