பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்க, சீ.பீ.டீ.சில்வா, சிறிமா பண்டாரநாயக்க |
1956 தேர்தல், 1957 பண்டா-செல்வா ஒப்பந்தமும் – கிழித்தெறிப்பும், 1956, 1958 கலவரங்களும், 1959 பண்டாரநாயக்க கொலை என அடுக்கடுக்காக சிங்கள தேசியவாதம் பலமுற்ற அதே வேளை தமிழ் தரப்பு நம்பிக்கை துரோகங்களுக்கும், வன்முறைகளுக்கும், நில ஆக்கிரமிப்புகளுக்கும், அரசியல் பிரதிநித்தித்துவ குறைப்புக்கும் உள்ளானது.
பண்டாரநாயக்க கொலையை அடுத்து தஹாநாயக்க இடைக்கால பிரதமராக ஆனார். விரைவிலேயே அவரது ஆணையின்படி ஆளுநர் பாராளுமன்றத்தைக் கலைத்தார். 1960 மார்ச் தேர்தல் நடந்தது. முதன் முதலில் ஒரே நாளில் நடத்தப்பட்ட தேர்தல் அது தான். ஒரே வருடத்தில் இரண்டு பொதுத் தேர்தல் நிகழ்ந்த ஆண்டும் அது தான்.
இரு பிரதான கட்சிகளுக்கும் இடையில் ஆட்சியமைப்பதில் ஆதிகாரப் போட்டி நிகழ்ந்தது. சிறுபான்மை கட்சிகளின் ஆதரவின்றி இனி எவரும் அதிகாரத்துக்கு வரமுடியாது என்பதை தெளிவாக ஆரம்பித்து வைத்த தேர்தல் அது.
அந்தத் தேர்தலில் ஐ.தே.க -50, ஸ்ரீ.ல.சு.க – 46, ல.ச.ச.க. -10, மக்கள் ஐக்கிய முன்னணி - 10, தமிழரசுக் கட்சி 15 மற்றும் சிறிய கட்சிகள் அனைத்தும் 20 என ஆசனங்கள் பெறப்பட்டன. இந்தத் தேர்தலில் ஈழத் தமிழர் ஒற்றுமை முன்னணி என்கிற பெயரில் சுந்தரலிங்கம் தனியாக கட்சியமைத்து தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைத்து போட்டியிட்டார். அவரை தோற்கடித்து தமிழ் மக்கள் அக்கோரிக்கையை நிராகரித்தனர். ஒற்றுமையாக அரசியல் அதிகாரத்தை பகிர்வதற்கான போராட்டத்தையே தமிழர் தரப்பு கைகொண்டிருந்தது.
ஐ.தே.க அதிகளவு ஆசனங்களைப் பெற்றுக்கொண்டபோதும் அரசாங்கம் அமைப்பதற்கு பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க வேண்டிய நிலை. இடைக்கால பிரதமர் தஹாநாயக்க கூட தனது தொகுதியில் தோல்வியடைந்திருதார். தமிழரசுக் கட்சி மூன்றாவது பெரிய கட்சியாக அமைந்தது. இரண்டு பெரும்பான்மை கட்சிகளும் தமிழரசுக் கட்சியின் உதவியை நாடி வந்தன. தமிழரசுக் கட்சிக்கு அமைச்சுப் பதவிகளை கொடுத்து வழிக்கு கொண்டுவரலாம் என்று அக்கட்சிகள் நம்பின. ஆனால் தமிழரசுக் கட்சியோ தெளிவாக நிபந்தனைகளை வைத்தது. (பார்க்க பெட்டிச் செய்தி)
டட்லி சேனநாயக்க தனது ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்வதற்காக தமிழரசுக் கட்சியிடம் கோரியபோது தமிழரசுக் கட்சி கொடுத்த கோரிக்கைகளை எழுத்தில் பெற்றுக் கொண்ட டட்லி அவற்றை நிராகரித்தது மாத்திரமன்றி அவற்றுக்கு எதிராக இனவாத பிரச்சாரத்தையும் மேற்கொண்டார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் சிறிமாவோ உள்ளிட்ட கட்சித் தலைவர்களுடன் சேர்ந்து தமிழரசுக் கட்சியை சந்தித்தது. சீ.பீ.டீசில்வா, பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்க ஆகியோர் இந்த சந்திப்பை மேற்கொண்டனர். பண்டாரநாயக்கவின் கொள்கைகளை முன்வைத்துத் தேர்தலில் போட்டியிட்ட தம் கட்சி, அவர் செய்த ஒப்பந்தத்தில் உள்ளடங்கியவற்றை ஏற்பதில் எவ்வித சிக்கலும் இல்லை என்றும் கோரிக்கைகளில் பெரும்பாலானவற்றை தம்மால் ஏற்றுக் கொள்ள முடியும் என்றும் கூறினர்.
ஆனால் டட்லி அவற்றை ஏற்க மறுத்த காரணத்தினால் 22.03.1960 அன்று சிம்மாசனப் பிரசங்க விவாதத்தின் போது அரசுக்கு எதிராக வாக்களித்து அந்த அரசை தோற்கடித்தனர். ஆரம்பிக்குமுன்னமே ஆட்சி கவிழ்க்கப்பட்டது.
சேர் ஒலிவர் குணதிலக்க |
சாதி அரசியலின் சாதனை
அன்றைய ஆளுநர் சேர் ஒலிவர் குணதிலக்க ஒரு குள்ள நரி. மேலும் அவர் ஐ.தே.கவைச் சேர்ந்தவர். எனவே ஐ.தே.கவை ஏதாவது வழியில் ஆட்சியிலமர்த்த முடியுமா என்று வழி தேடினார். 1960 ஏப்ரல் 27 எதிர்க்கட்சிகளை இராணி மாளிகைக்கு தனித்தனியாக பேச அழைத்தார். செல்வநாயகம் கவர்னரை சந்திக்க செல்லு முன்னர் கொள்ளுபிட்டியிலுள்ள பீலிக்ஸ் இன் வீட்டுக்குச் சென்று சீ.பி.டீ.சில்வா, ஏ,பி.ஜெயசூரிய ஆகியோரிடம் “நான் இப்போது சேர் ஒலிவரிடம் உங்களை ஆதர்க்கப் போவதாகச் சொல்லப் போகிறேன். நீங்கள் பதவிக்கு வந்தால் எம்முடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை முழுமையாக அமுல்படுத்துவீர்களா என்பதை உறுதி செய்வதற்காக வந்தேன்” என்றார். அங்கிருந்த இருவரும் அதற்கு இணக்கம் தெரிவித்தனர். “நீங்கள் உறுதிமொழிப்படி நடப்பீர்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்” என்று செல்வநாயகம் கேட்ட போது அதற்கு சீ.பி.டி.சில்வா “நான் மிகவும் கறாராகப் பேரம் பேசுபவன். ஓர் உடன்படிக்கைக்கு வந்து விட்டால் அதனை பேணுபவன்” என்றார்.
இதன் விளைவாக செல்வநாயகம் சேர் ஒலிவரை சந்தித்தார். “தமிழரசுக் கட்சியின் ஆதரவின்றி எதிர்க்கட்சியினால் அரசாங்கம் அமைக்க முடியாது. சீ.பி.டீ சில்வா தலைமையிலான சுதந்திரக் கட்சி அரசாங்கத்தை குறைந்தது இரண்டு ஆண்டுகளுக்கு ஆதரவளிப்பீர்களா?” என்று பீடிகை போட்டார் ஒலிவர். அதற்கு பதிலளித்த செல்வநாயகம் “சுதந்திரக் கட்சியுடன் நாங்கள் ஒரு உடன்பாட்டுக்கு வந்திருக்கிறோம் எனவே இரண்டு வருடதுக்கென்னே, பாராளுமன்றத்தின் ஆயுட் காலம் முழுவதும் ஆதரிப்போம் என்றார். இந்த பதிலை எதிர்பார்க்காத சேர் ஒலிவர் அந்த சந்திப்பு நிகழ்ந்து சில மணி நேரங்களில் பாராளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலை அறிவித்தார். அதற்கு சேர் ஒலிவர் கொடுத்த காரணம் தமிழரசுக் கட்சி கொடுத்த ஆதரவு நிபந்தனையுடன் கூடியது என்பதால் அது ஸ்திரமான அரசாங்கமாக அமையாது என்றார்.
தமிழரசுக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, லங்கா சமசமாஜக் கட்சி, சுதந்திரக் கட்சி ஆகியன சேர்ந்து எஸ்.ஜே.வி.செல்வநாயகம், என்.எம்.பெரேரா, சீ.பீ.டி.சில்வா, எஸ்.ஏ.விக்கிரமசிங்க ஆகியோர் சேர்ந்து தமக்கு பெரும்பான்மை இருப்பதை சுட்டிக்காட்டி தம்மை ஆட்சியமைக்க முடியும் என்று கூறியும் கூட ஆளுநர் ஒலிவர் பிழையான முடியவை எடுத்தார்.
இப்படி சீ.பீ.டீ. சில்வாவை ஆட்சியமர்த்த விடாமைக்கு இன்னொரு காரணமுமுண்டு. “ஏன் உங்களுக்கு “கொவிகம” (வெள்ளாள) சாதியைச் சேர்ந்த எவரும் கிடைக்கவில்லையா? ஏன் ஒரு “சலாகம” சாதியை சேர்ந்த ஒருவரை பிரதமராக ஆக்க முனைகிறீர்கள்.” என்று என்.எம்.பெரேராவிடம் ஒலிவர் கேட்டதாக பிற் காலத்தில் என்.எம்.பெரேரா ஏ.ஜே.வில்சனிடம் கூறியிருக்கிறார். ஏ.ஜே.வில்சன் ஒரு சிறந்த அரசியல் ஆய்வாளர் மட்டுமல்ல எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தின் மருமகனும் கூட. இப்படி ஒலிவர் குணதிலக்கவின் சாதிவெறி எப்படி இயங்கின என்பது பற்றி விரிவான கட்டுரைகள் உண்டு.
சத்தியாக்கிரகிகள் மீது பொலிஸ் வன்முறை |
1960 யூலை தேர்தல்
இந்த சூழலைப் பயன்படுத்தி ஜூலை தேர்தலுக்கான பிரசாரத்தின் போது டட்லி தமிழரசுக் கட்சி, சுதந்திரக் கட்சி என்பவற்றுக்கு எதிராக மோசமான இனவாத பிரசாரத்தை கட்டவிழ்த்தார். நாட்டை தமிழருக்கு தாரை வார்க்கும் உடன்பாட்டை அக்கட்சிகள் இரண்டும் செய்திருக்கின்றன என்று பிரச்சாரம் செய்தார். இந்த பிரச்சாரத்தைக் கண்டு கதிகலங்கிய சுதந்திரக் கட்சியினர் “அப்படி ஒரு உடன்பாடும் இல்லை” என்று அறிக்கை விடுங்கள் என்று தமிழரசுக் கட்சியிடம் வேண்டினர். இறுதியில் தமிழரசுக் கட்சிக்கும் ஸ்ரீ.ல.சு.க வுக்கும் இடையில் அப்படி ஒரு ஒப்புமில்லை உறவுமில்லை என்கிற சாரத்தில் ஒரு அறிக்கை விட்டு தெளிவுபடுத்த வேண்டியதாயிற்று.
மார்ச் மாத தேர்தலில் 50 ஆசனங்களைப் பெற்ற ஐ,தே.க ஜூலையில் 30 மட்டுமே பெற்றது. ஸ்ரீ.ல.சு.க அமோக வெற்றியீட்டி 75 ஆசனங்களைப் பெற்று தனிக் கட்சி ஆட்சியமைக்கும் பலத்தைப் பெற்றது. தமிழரசுக் கட்சியும் 16 ஆசனங்களைப் பெற்று மூன்றாவது பெரிய கட்சியாக நிரூபித்தது. சீ.பீ.டி சில்வாவுக்கு இனி தமிழரசுக் கட்சியின் தயவும் தேவைப்படவில்லை. தமிழரசுக் கட்சிக்கும் தமக்கும் எந்த உறவுமில்லை என்று காட்டவே விரும்பினார்.
ஆரம்பத்தில் தமிழரசுக் கட்சியுடன் சுதந்திரக் கட்சி ஒரு நல்லுறவைப் பேணியது. 1957 தொடக்கம் சிங்களத்திலேயே வாசிக்கப்பட்டு வந்த சிம்மாசனப் பிரசங்கத்தை பகிஷ்கரித்து வந்த தமிழரசுக் கட்சியும் இப்போது தமிழ் மொழிபெயர்ப்புடன் வாசிக்கப்பட்ட போது கலந்துகொண்டனர்.
சுதந்திரக் கட்சிக்கும் தமிழரசுக் கட்சிக்குமிடையில் நவம்பர் 8 இல் பேச்சுவார்த்தை ஆரம்பமானது. முன்னர் செய்துகொண்ட ஒப்பந்தத்தை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு அம்சங்கள் அங்கு உரையாடப்பட்டன. ஆனால் இரண்டே மணித்தியாலங்கள் மட்டுமே நடந்த முதல் பேச்சுவார்த்தையில் தமிழ் அரசாங்க ஊழியர்களின் பிரச்சினை மட்டுமே பேச முடிந்தது. அப்பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டது.
ஆனால் அதற்கிடையில் 1961 ஜனவரி 1ஆம் திகதி முதல் மீண்டும் தனிச் சிங்கள சட்டம் வடக்கு கிழக்கு உட்பட நாடெங்கிலும் பூரணமாக அமுல்படுத்தப்போவதை அரசாங்கம் அறிவித்தது. அரசாங்கத்தின் இத்தகைய போக்கால் தமிழரசுக் கட்சி – சுதந்திரக் கட்சி உறவு முறிந்தது.
தமிழரசுக் கட்சி தமிழ் பிதேசங்களில் ஹர்த்தால், மற்றும் அறவழி சத்தியாகிரகப் போராட்டங்களை நடத்தியது. இராணுவத்தைக் கொண்டு பல இடங்களில் அடக்குமுறையைக் கட்டவிழ்த்தது அரசாங்கம். ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட பலர் இராணுவ முகாம்களுக்கு கொண்டு செல்லப்பட்டார்கள். மார்ச் 4 ஆம் திகதியன்று திருகோணமலை கச்சேரி வாயிலில் நடத்திய சத்தியாக்கிரப் போராட்டத்தின் போது பொலிசார் கொடூரமான தடியடிப் பிரயோகம் செய்ததில் சத்தியாக்கிரகிகள் பலர் படுகாயமுற்றனர். அதில் காயமுற்று ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த மூதூர் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ஏகாம்பரம் மரணமடைந்தார்.
சிங்களமயப்பட்ட அரசியல் அதிகாரம் அநீதி இழைத்தபோதேல்லாம், வாக்குறுதிகளை மீறிய போதெல்லாம் அகிம்சா வழியில் சாத்வீக போராட்டத்தின் மூலம் எதிர்ப்பை வெளியிட்ட தமிழர் தரப்புக்கு வன்முறைகளாலும், கலவரங்களாலும், படுகொலைகளாலும், அழித்தொழிப்புகளாலுமே பதில் கொடுத்தது சிங்கள அதிகார வர்க்கம். மீண்டும் மீண்டும் அதே பாணியில் தான் மிரட்டியது. எச்சரித்தது.
துரோகங்கள் தொடரும்...
எஸ்.ஜே.வி.செல்வநாயகம் |
ஐ.தே.க. நிராகரித்த, சுதந்திரக் கட்சி உடன்பட்ட வாக்குறுதி30-3-1960இல் இடம்பெற்ற பொதுத்தேர்தலின் இறுதியில், அரசமைத்தற்குரிய பெரும்பான்மை பலம் இல்லாததால், இ. த. அ. க. வின் தயவை நாடித் தந்தை செல்வாவுக்கு நேசக்கரம் நீட்டிய ஸ்ரீ. ல. சு. க., ஐ. தே.க. ஆகியவற்றின் தலைவர்களுக்கு, இ. த. அ. க. சார்பில் அதன் தலைவர் தந்தை செல்வநாயம் விடுத்த குறைந்தபட்சக் கோரிக்கைகளே இவை.
பொதுத் தேர்தல் முடிவுகள் - இலங்கை வாழ் தமிழ்பேசும் மக்கள் மிகப் பெரும்பான்மையாக எமது கட்சியின் கொள்கைகளையும் குறிக்கோள்களையும் அங்கீகரித்திருக்கின்றார்கள் - என்பதைத் தெளிவாகக் காட்டுகின்றன. சுருக்கமாகக் கூறின் அவையாவன:-
1. இன்றைய ஒற்றையாட்சி அரசியல் அமைப்புக்குப் பதிலாகத் தமிழ்பேசும் மக்களின் பிரதேச சுயாட்சியை ஏற்றுக் கொள்ளும் இணைப்பாட்சி முறை ஏற்படுத்தப் படவேண்டும்.
2. இந்நாட்டு ஆட்சி மொழியாகச் சிங்களத்துடன் சம அந்தஸ்து - தமிழ் மொழிக்கு மீண்டும் அளிக்கப்பட வேண்டும்.
3. இந்நாட்டிற் குடியேறியிருக்கும் இந்திய வம்சாவளித் தமிழ் மக்களுக்குக் குடியுரிமை அளிக்கப்படவேண்டும்.
4. தமிழ் மக்களின் பாரம்பரியப் பிரதேசத்தில் திட்டமிட்டுச் சிங்கள மக்களைக் குடியேற்றுவது நிறுத்தப்பட வேண்டும்.
ஆயினும், தங்கள் கட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு எமது கட்சிப் பாராளு மன்றக்குழு ஆதரவு அளிக்கக்கூடியதாக - எமக்கிடையே உடன்பாடு ஏற்படக்கூடிய குறைந்தபட்சக் கோரிக்கைகளைக் கூறுமாறு எம்மைக் கேட்டதற்கிணங்க தாங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியதாயிருக்குமென்று நாம் கருதும் நான்கு அம்சங்களை இங்கு சுருக்கமாகத் தருகிறேன். இவற்றை நாம் சமர்ப்பிப்பதனால், எமது அடிப்படைக் கொள்கைகள் எதையும் கைவிட்டு விட்டதாகக் கருதப்படக்கூடாது.
எமக்கிடையில் உடன்பாடு ஏற்படும் விடயங்கள் - அரியணை உரையில் குறிப் பிடப்பெற்ற சட்ட நடவடிக்கை மூலம் மூன்று மாதங்களில் நிறைவேற்றப்பட வேண்டும்:-
1. வடமாகாணத்திற்கு ஒரு பிரதேச சபையும், கிழக்கு மாகாணத்திற்கு இரண்டு அல்லது கூடிய பிரதேச சபைகளும் தமக்குள் இணைந்து கொள்ளும் உரிமையுடன் நிறுவுவதன் மூலம் - வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்குப் பிரதேச சுயாட்சி வழங்கல், விவசாயம், கூட்டுறவு, காணியும் காணி அபிவிருத்தியும், நிலப் பங்கீடும் குடியேற்றமும், நீர்ப்பாசனம், கல்வி, சுகாதாரம், கைத்தொழில்களும் மீன்பிடித் துறையும், வீடமைப்பும் சமூகசேவையும், மின்சாரம், தண்ணீர்த் திட்டங்கள், நெடுஞ்சாலைகள் ஆகியவை உள்ளடங்கக் குறிப்பிட்ட விடயங்களையொட்டி - அதிகாரங்கள் சட்ட மூலம் வழங்கப்பட வேண்டும். பிரதேச அமைப்புக்கள் ஏற்படுத்தப்படும்வரை - மேற்குறிப்பிட்ட அரசாங்க உதவியுடனான குடியேற்றத் திட்டங்கள் நிறுத்தி வைக்கப்படவேண்டும்.
2. இலங்கை வாழ் தமிழ்பேசும் மக்களின் தேசிய மொழியாகச் சட்டரீதி யாகவும் நிர்வாக ரீதியாகவும் தமிழ் ஏற்றுக் கொள்ளப்படவேண்டும். வடக்குக் கிழக்கு மாகாணங்களின் நிர்வாக மொழியாகவும், நீதிமன்ற மொழியாகவும் தமிழ் ஆக்கப்பட வேண்டும். இப்பகுதிகளில் வாழும் தமிழ் பேசுவோரல்லாத சிறுபான்மையோருக்கு - வேண்டிய ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். பல்கலைக்கழகக் கல்வி உட்பட எல்லாக் கட்டங்களிலும் - தமிழ் மூலம் கல்வி கற்கும் இலங்கை முழுவதும் வாழும் தமிழ்பேசும் மக்களின் உரிமையும - தமிழில் நடத்தப்படும் போட்டிப் பரீட்சைகளின் மூலம் அரசாங்க சேவையில் சேரும் உரிமையும் - சட்டபூர்வமாக அங்கீகரிக்கப் படவேண்டும். இலங்கையின் எப்பாகத்திலும் - எந்தத் தமிழ்பேசும் மகனும் - தமிழில் அரசாங்கத்துடன் கருமமாற்றவும், கடிதத் தொடர்புகொண்டு பதில் பெறவுமான உரிமை - சட்ட பூர்வமானதாக்கப்படவேண்டும். எல்லாச்சட்டங்களும், வர்த்தமானி அறிவித் தல்களும், அரசாங்க பிரசுரங்களும், அறிவிப்புகளும், படிவங்களும் தமிழிலும் இருத்தல் வேண்டும்.
3. 1948ஆம் ஆண்டின் 18ஆம் இலக்க இலங்கைப் பிரஜாவுரிமைச் சட்டத்தின் விதி 40) இல் - "நியமிக்கப்பட்ட திகதிக்கு முன்" என்பதும், விதி 5 (1)ம் நீக்கப்பட்டு, அதைத்தொடர்ந்து செய்யவேண்டிய திருத்தங்கள் செய்யப்படவேண்டும்.
4. தோட்டத் தமிழ் மக்களின் குடியுரிமை, வாக்குரிமைப்பிரச்சினைகள் தீர்க்கப்படும் வரை - பாராளுமன்றத்திற்கான ஆறு நியமன ஸ்தானங்களில் - நான்கிற்கு நியமிப்பதன் மூலம் - இம் மக்களுக்குப் பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் வழங்குவதுடன், அப்படி நியமிக்கப்படுவோர் - இம்மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் நிறுவனமான இலங்கை ஜனநாயக காங்கிரசினால் தெரிவுசெய்யப் படுவோராக இருக்கவேண்டுமென்ற சம்பிரதாயம் ஏற்கப்படவேண்டும்.
மேற்கண்டபந்திகளிற் குறிப்பிடப்படாத விபரங்களும் ஏனைய அம்சங்களும் - அரசாங்கத்துக்கும் கட்சிக்குமிடையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்படவேண்டும்.