மலையகக் கல்வியின் வரலாற்றைப் பார்க்கும்போது அது பெருந் தோட்டத்துறையைச் சார்ந்த ஒன்றாக இருந்து வந்துள்ளது. மற்றது இப்பெருந்தோட்டங்களைச் சார்ந்து வளர்ச்சிபெற்ற சிறிய, பெரிய நகரங்களி லும் பாடசாலைகள் தோற்றம் பெற்றிருந்தன. இவைகள் தனியார், அரச பாடசாலைகளாக வளர்ச்சிபெற்றன.
பெருந்தோட்டத்துறை சார்ந்த பாடசாலைகள் பற்றி பார்க்கும்போது, பிரித்தானியர் பெருந்தோட்டங்களை உருவாக்கிய வேளையில் இங்கு வேலை செய்த தொழிலாளர்களின் பிள்ளைகள் தேயிலைக் கன்றுகளை நாசஞ்செய்துவிட க்கூடாது என்பதற்காகவும், தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கான ஒரு காப்பகம் தேவை என்பதற்காகவுமே ஆரம்பக்கல்வி பாடசாலைகள் பெருந்தோட்டத்திற்குள் ஏற்படுத்தப்பட்டன. அவை ஆரம்பத்திலி ருந்து எண், எழுத்து, வாசிப்பு என்ற குறுகிய வட்டத்திற்குள் மாத்திரமே இருந்துவந்தது என்பதனையும் நாம் காணலாம்.
மலையக கல்வி வரலாற்றின் ஆரம்ப காலங்கள் மிகவும் சோகம் நிறைந்தவை என்பதில் சந்தேகமில்லை. மிக ஆரம்பத்தில் கங்காணியே மிகப் பிரதானமானவராகத் தோட்டத்தில் காணப்பட்டார். தோட்டங்களில் கல்வி தொடர்பான ஏற்பாடுகளை செய்வதிலும் அவரது பங்கு பெறப்பட்டது. எனவே மிக ஆரம்பத்தில் இரண்டு வகையான பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டன.
1.கங்காணி, பிற உத்தியோகத்தர்களான கிளாக்கர், கண்டக்டர், கணக்குப்பிள்ளை போன்றவர்களின் பிள்ளைகளுக்கான பள்ளிக்கூடம்.
2.மற்றது ஏனைய சாதாரண பிள்ளைகளுக்கான பள்ளிக்கூடம்.
மேலும், கங்காணி மற்றும் உத்தியோகத்தர்கள் தத்தமது பிள்ளைகளுக்கு மேலதிகமாக ஆங்கிலம் போன்ற பாடங்களை யும் கற்பித்தனர்.
இந்தப் பின்னணியிலேயே மலையகக்கல்வி தோட்டத்துரைமாரின் மேற்பார்வையின் கீழும், நிருவாகத்தின் கீழும் தரம் 1முதல் 5வரை நடத்தப்பட்டுவந்தது.
காலப்போக்கில் சிற்சில மாற்றங்கள் ஏற்பட்டன. மனிதாபிமானம் கொண்ட தோட்ட முதலாளிகள் சிலராலும், கல்வி நலன் பற்றி சிந்திக்கப்பட்டு பங்களிப்பு செய்யப்பட்டுள்ளதைக் காணலாம்.
ஜோர்ஜ்பேர்ட் (George Bird), ஏ.எம்.பேர்குஷன் (A.M.Bergusion) போன்றோரை உதாரணத்திற்கு கூறலாம். இது தொடர்பாக G.A. ஞானமுத்து ''Education and the Indian Plantation Wor ker in Sri Lanka'' என்ற தனது ஆய்வு நூலில் விரிவா கக் கூறிச்செல்கின்றார்.
அரசாங்கம் தோட்டப் பாடசாலைகளை பொறுப்பேற்றதிலிருந்து ஏற்பட்ட மாற்றங்கள், தேசிய கல்விக் கொள்கை, பாடத்திட்டம் என்பனவற்றோடு இயைபான கற்பித்தல் முறைமைகளும் பெருந்தோட்டப் பாடசாலைகளுக்குள்ளும் வரத் தொடங்கின எனலாம்.
பெருந்தோட்ட ஆசிரியர்களை பயிற்று விப்பதற்கான ஆசிரிய கலாசாலைகள், நிலையங்கள் தோற்றம்பெற்றன. கொட்ட கலை அரசினர் ஆசிரியர் கலாசாலை, பத்தனை ஸ்ரீபாத கல்வியியற் கல்லூரி மேலும் தொலைக்கல்வி போதனா நிலையங்கள் போன்றன தோன்றின. இவை தவிர, பிற மாகாண ஆசிரிய கலாசாலைகளிலும் எமது ஆசிரிய மாணவர்கள் பயிற்சிபெறத் தொடங்கினர்.
பலாலி ஆசிரியர் பயிற்சிகலாசாலை, பேராதனை ஆங்கில ஆசிரியர் பயிற்சி கலாசாலை, மட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலை போன்றனவற்றை உதாரணத்திற்காகக் கூறலாம்.
இவ்வாறான பின்னணியில் கணித, விஞ்ஞான பாடங்கள் தொடர்பாக விசேடமாகவும், தனித்துவமாகவும் நாம் பார் க்க வேண்டியுள்ளது. இவ்விரு பாடங்களுக்கான அடைவு மட்டம் பெருந் தோட் டப் பாடசாலைகளில் குறைவாகவே காணப்பட்டுவந்தது. ஏனைய பாடங்க ளில் தேசிய ரீதியான அடைவு மட்டங்களோடு மலையக மாணவர்கள் பெற் றுக்கொண்ட அளவுக்கு கணித, விஞ் ஞான பாடங்களில் அவர்களால் புள்ளிகளையோ, அடைவு மட்டங்களையோ ''பாரிய அளவில்'' அடைய இயலவி ல்லை எனலாம். இதற்கும் பல காரணங் கள் உள்ளன.
கணித, விஞ்ஞான ஆசிரியர்கள் மலையகத்தில் பெரிய அளவில் தோற்றம் பெறவில்லை. அடிப்படையில் விஞ்ஞான, கணித பாடப்பரப்புக்களை வகுப்புகளில் போதிக்க ஆரம்ப காலங்களிலிருந்தே ஆசிரியர்கள் எம்மத்தியிலிருந்து தேவை க்கு ஏற்பத் தோற்றம் பெறவில்லை. ஆரம்பத்தில் பிற மாகாணங்களிலிருந்து ஆசிரியர்கள் பலர் காணப்பட்ட காலம் ஒன்றிருந்தது. அவ்வேளையில் ஓரளவு இத்துறை ஒருபடி உயர்ந்தது. எனினும், நாட்டின் இனக்கலவரம், மாகாண சபை முறைமை, வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் போன்றன பிற மாகாண இவ்வாசிரியர்களை அந்தந்த மாகாணங்களுக்குள்ளேயே உள்வாங்கிட வழிவகை செய்தது எனலாம். இதில் மாகாண ரீதியான நியமனங்களும் ஒன்றாகும். இந்நிலைமை இத்துறையில் பின்னடைவை மலையகத்தில் ஏற்படுத்தியது எனலாம்.
சில மாற்று ஒழுங்குகள் அவ்வப்போது செய்யப்பட்டன. அதாவது, வெளி மாகாண கணித, விஞ்ஞான ஆசிரியர்களை மலையகப் பிரதேசங்களுக்குள் உள்வாங்கலாகும். பலர் இதில் நியமனம் பெற்றனர். சிலர் மாத்திரமே தொடர்ந்து மலையகப் பிரதேசங்களில் நீடித்திருந்தனர். ஏனையோர் பிற தொழில்களுடன் வெளியேறிவிட்டனர்.
இந்நிலையில் தொடர்ந்தும் விஞ்ஞான, கணித பாடத்துறை சவால்களையே எதிர் நோக்கிவருகின்றமையால் மலையக மாணவர்கள் இத்துறையில் ஒரு தேக்க நிலையிலேயே இருந்து வருகின்றனர் என்பது ஒரு யதார்த்தமாகும்.
க.பொ.த. உயர்தரத்தின் கணித, விஞ்ஞான பிரிவு தொடர்பாக பார்ப்பின் இது துலாம்பரமாகும்.
ஊவாவில் பல பாடசாலைகளில் விஞ்ஞான கூடங்கள் காணப்பட்டாலும் மாணவர்கள் அட்டன் ஹைலேண்ட்ஸ் கல்லூரி, நாவலப்பிட்டி கதிரேசன் கல்லூரி, தலாவக்கலை த.ம.வி., கொட்டகலை த.ம.வி., கேம்பிரிட்ஜ் கல்லூரி போன்றவ ற்றை ''நாடி'' வரும் ஒரு போக்கே காணப்படுகின்றது.
ஆயிரம் பாடசாலைகள் அபிவிருத்தி வேலைத்திட்டம் இன்று 1500 திட்டமாக உருமாறி வருவதாகக் கூறப்படுகின்றது. எது எவ்வாறெனினும் ஒரு தேசிய ரீதியான (Trend) போக்கோடு மலையகப் பாடசாலைகளும் பயணிப்பதே காலத் தின் தேவை என்பதனை மலையக கல்வியியலாளர்கள் அறிவர். அரசின் செயற்றிட்டங்களுக்குள் எமது பாடசாலைகள் உள்வாங்கப்படுவது காலத்தின் தேவையாகும். குறிப்பாக கணித, விஞ்ஞானப் பாட அபிவிருத்தி தொடர்பாக மகிந்தோதய விஞ்ஞானகூடங்கள் எமக்கு கிடைத்திருக்கும் வரப்பிரசாதம் எனலாம்.
இந்த எத்தனங்களை மலையகப் பாடசாலைகள் எந்தளவில் பயன்படுத்திக் கொள்ளப்போகின்றன என்பது எம்முன் உள்ள வினாவாகும். ஆசிரியர் இன்மை, மாணவர் கணிதம், விஞ்ஞானம் பயி லாமை, க.பொ.த. சாதாரண தரத்தில் இப்பாடத்தில் சித்தியின்மை, இதனால் க.பொ.த. உயர்தரத்தில் இப்பிரிவுகளுக்கு மாணவர் இன்மை என்ற ''நச்சுவட்டம்'' என்று உடைக்கப்படும்.
இதுவரை நாம் பார்த்ததில் எல்லாத் தர ப்பினரும் நாம் காலத்துக்கு காலம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டனர். மேற்கொண்டு வருகின்றனர் என்பதனை பார்க்கலாம். தொடர்ந்தும் நீடிக்கின்ற கணித, விஞ்ஞான பாடப்பிரிவின் பின்ன டைவு எமது கல்வி அபிவிருத்திக்கு ஒரு சவாலாகும்.
அண்மைக்கால கணித, விஞ்ஞான பெறுபேறுகள் பற்றி சிலர் சிலாகித்துப் பேசினாலும், மலையகத்தில் க.பொ.த. உயர்தரத்தில் கணித, விஞ்ஞானப் பிரிவு தொடர்பான பல சிக்கல்கள் இன்னுமே முழுமையாக ''முடிச்சவிழ்க்கப்படவி ல்லை'' என்பதே உண்மையாகும்.
நன்றி - வீரகேசரி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...