Headlines News :

காணொளி

ஜனாதிபதி விருது

ஜனாதிபதி விருது
நமது மலையகத்துக்கு

சுவடி

கம்பளை வழக்குகள்! (1915 கண்டி கலகம் –18) - என்.சரவணன்

குடபண்டா நுகவெல நிலமே
19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் நாடெங்கிலும் பல்வேறு மதப் பதட்ட நிலையைத் தோற்றுவித்திருந்தன. 1883இல் கொட்டாஞ்சேனையில் கத்தோலிக்க – பௌத்த கலவரம், 1886 இல் கத்தோலிக்க – முஸ்லிம் கலவரம், 1896 இல் களுத்துறை “அரச மரக் கலவரம்” என்று இது தொடர்ந்தது. குறிப்பாக பௌத்தர்களின் பெரஹர ஊர்வல நிகழ்வுகள் இந்த பதட்ட நிலமைகளை அதிகரித்துக்கொண்டிருந்தன.

கம்பளை வளஹாகொட தேவாலயம் பற்றிய சர்ச்சைகளே கண்டி கலவரத்துக்கு தூண்டுகோலாக அமைந்தது.

தென்னிந்தியாவிலிருந்து வந்து குடியேறி வியாபாரமும், வட்டிக் கடன் கொடுப்பவர்களாகவும் இருந்த   கரையோர முஸ்லிம்கள் குறித்து அப்போதைய சட்டசபையில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக உறுப்பினராக இருந்த எஸ்.சீ.ஒபேசேகர தனது சாட்சியத்தில் கூறும் போது.

“அவர்கள் எப்போதும் புதியவர்களாகவே காணபட்டார்கள். மக்களை தொந்தரவு செய்பவர்கள். அவர்களிடம் கொஞ்சம் பணம் இருக்கும். அது கூட இல்லாத நம் நாட்டின் சாமான்யர்களின் நிலங்கள் சில காலத்தில் அவர்களின் நிலங்களாக மாறிவிடும். எனக்கு தெரிந்தவர்கள் சிலர்,  சில நெல் மூடைகளை கடன் வாங்கி பின்னர் தமது முழு நிலத்தையும் பறிகொடுத்த கதையை நான் அறிவேன்.” என்கிறார்.

அன்றைய ஆளுநர் ரொபர்ட் சாமஸ் கூட்டுறவு கடன் வழங்கும் சங்கத்தை ஆரம்பித்ததும் கூட இந்த வியாபாரிகளிடமிருந்து மக்களை மீட்பதற்காகவே என்கிறார் ஆர்மண்ட் டி சூசா தனது நூலில்.

1914 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கண்டி தலதா மாளிகையின் முன்னால் இந்த கூட்டுறவு சங்கத்தை தொடக்கி வைத்த விழாவில் பெத்தேவல என்பவர் இந்த “ஹம்பயாக்களால்” பாதிக்கப்பட்ட விவசாயிகள் கதைகள் பலவற்றை விபரித்துள்ளார்.

பல கத்தோலிக்க பெண்களைக் கடத்திச் சென்றார்கள், வல்லுறவுக்கு உட்படுத்தினார்கள் என்கிற கதைகள் அப்போது பரவலாக பேசப்பட்டன. கத்தோலிக்க பாதிரிமார் இவற்றிலிருந்து போதுமான அளவு பல குடும்பங்களை பாதுகாத்து இருக்கிறார்கள் என்றும் கொழும்பு தொடக்கம் சிலாபம் வரை இந்த கரையோர முஸ்லிம்களின் கடைகளை பல காலமாக அனுமதிக்கவில்லை என்றும் தெரிகிறது.
சேர் ஜோன் அன்டர்சன்
முதலாவது உலக யுத்தம் ஆரம்பமானபோது இந்த நிலைமை மேலும் மோசமானது. பலர் வேலையிழந்தார்கள். அல்லது வேளை நேரம் குறைக்கப்பட்டதால் சம்பளம் குறைந்தது. அப்போது அன்றாட பலசரக்குப் பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவிய நிலையில் சாதாரண பொருட்களை பதுக்கி வைத்து அதிக இலாபத்துடன் ஏழைகளுக்கு விற்று அவர்களின் வெறுப்புக்கும் சாபத்துக்கும் இலக்கானார்கள். உள்ளூர் முஸ்லிம்களில் இருந்து இவர்கள் வேறுபட்டவர்களாகவே இருந்தார்கள்.

கம்பளை என்பது பல வர்த்தக நிலையங்களைக் கொண்ட நகர். பல முஸ்லிம் கடைகளையும் கொண்ட ஒரு இடம். சூழ பல முஸ்லிம்களும் வாழ்ந்து வந்தார்கள். 1880 களில் பல புதிய பள்ளிகளின் கட்டப்படத் தொடங்கின. வளஹாகொட விகாரையின் பெரஹர வழமையாக செல்லும் அம்பேகமுவ பாதையிலும் புதிய பள்ளி கட்டப்பட்டது. அந்த பள்ளியைக் கட்டியவர்கள் “கரையோர முஸ்லிம்கள்” என்று அப்போது அறியப்பட்டவர்கள். அவர்கள் ஏற்கெனவே வெறுப்புணர்வுக்கு ஆளாகி வந்தவர்கள். இவர்களைத் தான் பொன்னம்பலம் இராமநாதன் தனது நூலில் ஹம்பயாக்கள் சம்மாங்காரர் என்றும் குறிப்பிடுகிறார்.

பௌத்தர்களுக்கு பெரஹர என்பது ஒரு முக்கிய மத நிகழ்வு. பெரஹர என்றால் யானைகள், மேள இசை வாத்தியங்கள், தீவட்டி விளையாட்டுகள், பாரம்பரிய நடனம் என அனைத்தும் இடம்பெறும். 1815 இல் ஆங்கிலேயர்களோடு செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் பௌத்த மதத்தை பேணிப்பாதுகாப்பதாகவும், பெரஹர போன்றவற்றை தங்குதடையின்றி நடத்துவதற்கு வழிவகுப்பதாகவும் கையெழுத்து வாங்கிவிட்டனர்.  வளஹாகொட விகாரை 900 வருடங்களுக்கு முன்னர் பராக்கிரமபாகுவால் கட்டப்பட்ட பிரசித்திபெற்ற விகாரை. கண்டி கைப்பற்றப்பட்ட காலத்திலிருந்தே பெரஹர நடத்துவதற்கு ஆங்கிலேயர்களால் எந்த இடைஞ்சலும் இருந்ததில்லை. பெரஹர ஊர்வலமாக செல்லும் பாதையை வழமையாக வரையறுப்பவர் கண்டி பஸ்நாயக்க நிலமே உள்ளிட்ட தேவால பொறுப்பாளர்களுமே. பிரித்தானிய ஆட்சியாளர்கள் அந்தப் பாதைகளின் போக்குவரத்தை நிறுத்தி பொலிஸ் பாதுகாப்பு வழங்குவதும் வழக்கம்.

ஆனால் வழமையாக அரசாங்க அதிபரிடம் இருந்து  சம்பிரதாயபூர்வ அனுமதி பெற்றுக் கொள்வது வழக்கம். வளஹாகொட தேவாலயத்திலிருந்து கங்காதிலக்க விகாரை வரை பெரஹர செல்லும் பாதையில் இரு முஸ்லிம் பள்ளிகளும் ஒரு கிறிஸ்தவ தேவாலயத்தையும் கடந்து செல்ல வேண்டும். இதில் ஒரு பள்ளி மெக்கன் சொஹொங்கே (meccon Sohonge) என்று அழைக்கப்படுகிறது. அது ஆங்கிலேயர்கள் வருமுன்பு கண்டி ராஜ்ஜிய காலத்தில் நிரந்தமாக வாழும் உள்ளூர் முஸ்லிம்களால் கட்டப்பட்டிருக்கிறது. அதுவரையான பெரஹர ஊர்வலத்துக்கு இவற்றால் எந்த வித சிக்கல்களும் ஏற்பட்டதில்லை. அன்றைக்கு 30 வருடங்களுக்கு முன்னர் கரையோர முஸ்லிம்களால் ஆரம்பிக்கப்பட்ட பள்ளிவாசலால் தான் இந்த பெரும் கலவரத்துக்கு வித்திடப்பட்டுள்ளது.

முதன் முதலில் 1907 ஆம் ஆண்டு இந்த சர்ச்சை தொடங்கியிருக்கிறது. அதன் காரணமாக பள்ளியின் இரு  மருங்கிலும் 100 யார் தூரத்தில் தூண்கள் எழுப்பப்பட்டு அந்த பகுதியில் பெரஹர வரும்போது தமது தாள வாத்தியங்களை நிறுத்திவைக்க வேண்டும் என்று எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளார்கள். ஆனாலும் 1911 வரை இந்த எச்சரிக்கையை பொருபடுத்தாமல் வழமைபோல தமது பெரஹர ஊரவலத்தை நடத்தி வந்தார்கள் ஏற்பாட்டாளர்கள்.

அன்றைய கண்டி தலதா மாளிகை  குடபண்டா நுகவெல நிலமே  (தேவாலய தர்மகர்த்தா) இந்த தூண்களை அகற்றி 1912 இல் நடத்தப்போகும் பெரஹரவை தங்கு தடையின்றி செல்ல வழிசெய்யவேண்டும் என்று அரசாங்க அதிபரிடம் கோரிக்கை விடுத்திருக்கிறார். ஆனால் அரசாங்க அதிபர் ஜி.எஸ்.செக்ஸ்டன் 100 யார் தூரத்தை 50 ஆக குறைத்து தீர்ப்பு சொன்னார். இத்தனைக்கும் பல தசாப்தங்கலாக இருக்கும் மெக்கன் சொஹொங்கே பள்ளி வாசல் பெரஹரவுக்கு ஒருபோதும் தடையாக இருந்ததில்லை.

அரசாங்க அதிபரின் முடிவால் இரு தரப்பும் திருப்தியடையவில்லை. இந்த முடிவை எதிர்த்து நிலமே நுகவெல வரலாறு தொட்டு நிகழ்ந்துவரும் தமது பெரஹரவுக்கு இப்பேர்பட்ட தடை விதிப்பது பௌத்தர்களின் மனங்களைப் புண்படுத்தகூடியது என்று கடிதம் எழுதினார். இதனை அமைதியான முறையில் தீர்த்துக்கொள்ள; அந்த பள்ளியின் மத நடவடிக்கைகளுக்கு இடைஞ்சல் இல்லாதவாறு பெரஹர செல்லக்கூடிய ஒரு நேரத்தை தெரிவிக்குமாறும் செக்ஸ்டனிடம் அவர் கேட்டுக்கொண்டார். அந்த கடிதத்தின் இறுதியில் அவர். இந்த பாதையில் ஒரு கிறிஸ்தவ பள்ளிவாசலும், இன்னுமொரு கிறிஸ்தவ தேவாலயமும் இருந்த போதும் அவை ஒரு போதும் இப்படிப்பட்ட இடைஞ்சலை செய்ததில்லை என்றும் “மரக்கல முஸ்லிம்களின்” ஹவுசேன் ஜவுசேன் (Haussan Jausein) விழா நடத்தப்படும்போது பெரும் சத்தங்களை வெளிபடுத்தி வருகின்றபோதும் ஒருபோதும் தாம் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததில்லை என்று சுட்டிக்காட்டினார்.

ஆனால் அரசாங்க அதிபர் இதனை மேலும் சிக்கலுக்குள் தள்ளிவிட்டார். அவர் அந்த பெரஹரவை முழுமையாக தடை செய்தார். இந்த தடையை எதிர்த்து தமது உரிமைகளை உறுதிபடுத்தக்கோரி பஸ்நாயக்க நிலமே கண்டி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கில் 1815 ஒப்பந்தத்தையும் சுட்டிக்காட்டி பௌத்த மதத்தை பாதுகாப்பதாகவும் பெரஹரக்களை தடையின்றி செய்வதற்கும் ஆங்கிலேயர்கள் தந்த உறுதிமொழியை சுட்டிக்காட்டினார். அதனைத் தொடர்ந்து தீர்ப்பு நிலமேவுக்கு சாதகமாக அமைந்தது. ஆனால் இந்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் 15.02.1915 அன்று நிராகரித்து செல்லுபடியற்றதாக்கியது.  மீண்டும் பௌத்தர்கள் தரப்பில் பிரிவிக் கவுன்சிலுக்கு மேன்முறையீடு செய்தனர்.

இந்த நிலையில் இலங்கைக்கு புதிய ஆளுநராக சேர்.ஜான் அண்டர்சன் நியமிக்கப்பட்டார். தனது முதல் கடமையாக இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவரும் எண்ணத்துடன் கமபளைக்கு வந்து சேர்ந்தார். சம்பந்தப்பட்ட இரு தரப்பையும் ஒன்று கூட்டி இரு தரப்புக்குமிடையில் பரஸ்பர நல்லெண்ணத்தை ஏற்படுத்துவதே தனது நோக்கம் என்றார். பெரஹரவுக்கு இடைஞல் செய்ய வேண்டாம் என்று பள்ளிவாசல் தலைவர்களிடமும், ஊர்வலத்தின் போது பள்ளிவாசலுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்த வேண்டாம் என்று பௌத்த தரப்பிடமும் கேட்டுக் கொண்டு முடிவுக்கு கொண்டு வந்தார்.

உச்ச நீதிமன்றம் தமக்கு எதிராக அளித்த தீர்ப்பு குறித்து பௌத்தர்கள் மத்தியில் அதிருப்தியும், சலசலப்பும் காணப்பட்டது. அதேவேளை கரையோர முஸ்லிம்கள் கண்டி, குருநாகல், பதுளை போன்ற இடங்களில் பௌத்தர்களை மட்டுமல்ல, இந்துக்களையும் தாக்கும் பணியில் ஈடுபட்டதில் ஆங்காங்கு பிரச்சினைகள் உறுவாகின. புத்தர் சிலைகளையும் உடைத்தனர். இத்தகைய தாக்குதல்கள் 1915 ஜனவரி, பெப்ரவரி மாதங்களில் நிகழ்ந்தன என்று பொன்னம்பலம் இராமநாதனின் நூலில் விபரிக்கிறார்.

தொடரும்

இக்கட்டுரையாக்கத்துக்கு உசாத்துணைக்கு பயன்பட்டவை
  • Riots and Martial Law in Ceylon - 1915 Hardcover – P. Ramanathan (St.Martins Press, 15 Craven Street, Strand, 1916)
  • Hundred days in ceylon under martial law 1915 - Armand de Souza (The Ceylon Morning Leader - 1916)
  • “Hobgoblins, Low-Country Sinhalese Plotters or Local Elite Chauvinists?: Directions and Patterns in the 1915 Communal Riots”, Roberts, Michael (Sri Lanka Journal of the Social Sciences 1981)
  • “The Rev.A.G.Fraser and the Riots of 1915”, James Rutnam,  (Ceylon Journal of Historical and Social Studies, Vol.1 No. 2 (July-December 1971))
  • “අනගාරික ධර්මපාල” - ඩේවිඩ් කරුණාරත්න (M.D.Gunasena & Co. (Pvt.) Ltd, 2012)
  • ධර්මපාල ලිපි අනගාරික ධර්මපාලතුමාගේ ලිපි සංග්‍රහයකි ආචාර්ය ආනන්ද ඩබ්ලිව්. පී. ගුරුගේ සංඥාපනය –(Department Of Government Printing-1991)
  • ශ්‍රී ලංකාවේ ගැටුම් නිරාකරණය සහ සාමය ගොඩනැංවීම : බෞද්ධ පර්යාලෝකය - Nirmanee Circle (Social scientists Association, 2008)

எல்லை மீள்நிர்ணய முன்மொழிவுகள் ஆணைக்குழுவிடமும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது!



வடக்கு கிழக்கு தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் வாழும் தமிழர்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்துகொள்ளும் நோக்கில் உள்ளுராட்சி வட்டார தேர்தலுக்கான எல்லை மீள் நிர்ணயம் தொடர்பான முன்மொழிவுகளை வரைவதற்காக அமைச்சர் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணி ஐவர் கொண்ட நிபுணர் குழுவை நியமித்திருந்தது.

இந்தக் குழு கண்டி சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் அனுசரணையுடன் கடந்த மாதம் நியமிக்கப்பட்டது.

இந்தக் குழுவில் பேராதனைப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் எஸ்.விஜேசந்திரன், விரிவுரையாளர் ஆர்.ரமேஸ், சமூக ஆய்வாளர் எ.ஆர்.நந்தகுமார், சமூக ஆய்வாளர் டி.துரைராஜ் ஆகியோர் இந்தக் குழுவில் நியமிக்கப்பட்டனர்.

இந்த நிபுணர் குழு கண்டி, மாத்தளை, நுவரெலியா, பதுளை, இரத்தினபுரி, கேகாலை, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த அரசியல், சிவில் பிரதிநிதிகளைச் சந்தித்து இன விகிதாசாரத்திற்கேற்ப அரசியல் பிரதிநிதித்துவத்தை உறுதிபடுத்திக் கொள்ளும் வகையில் விரிவான முன்மொழிவுகளை கடந்த வெள்ளிக்கிழமை (29.01.2016) அன்று அமைச்சர் மனோ கணேசனிடம் கையளித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து தேசிய எல்லை மீள்நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் அசோகா பீரிஸ் தலைமையிலான ஆணைக்குழுவிடம் இந்த முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டன.

நிபுணர் குழுவைப் பிரதிநிதித்துவப்படுத்தி பெ.முத்துலிங்கம், ஏ.ஆர்.நந்தகுமார், தமிழ் முற்போக்குக் கூட்டணியைப் பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்தக் கலந்துரையாடலில் ஆணைக்குழுவின் அங்கத்தவரான பேராசிரியர் பாலசுந்தரம், காலி, மாத்தறை, மொணராகலை ஆகிய மாவட்டங்களில் வாழும் தமிழர்களுக்கான முன்மொழிவுகளையும் ஒருவார காலத்தில் சமர்ப்பிக்குமாறு கோரினார்.

அத்தோடு மேற்குறிப்பிடப்பட்டுள்ள 13 மாவட்டங்களுக்கான முன்மொழிவுகள் தொடர்பான முன்வைப்பினை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார்.


நன்றி - மலையக குருவி

இலவச கல்வியில் மாணவர்களின் பாடசாலை கல்வி நடவடிக்கைகள் - இரா. சிவலிங்கம்


நாட்டில் ஆட்சிக்கு வருகின்ற ஒவ்வொரு அரசாங்கமும் மாணவர்களுக்கான இலவச பாடநூல், சீருடைகள், பயணச்சீட்டு, பாதணிகள், மதிய உணவு போன்றவற்றை வழங்கி வருகின்றது. அத்துடன், புலமைப்பரிசில்கள், ஆசிரியர்கள், பாடசாலைக்கான ஆளணி பெளதீக வளங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் போன்ற அனைத்தையும் பெற்றுக்கொடுக்கின்றன.

தரமான கல்வியினூடாக தரமான சமூகம் என்பதுதான் இன்றைய கல்விக் கொள்கையின் நோக்கமாக உள்ளது. இதனை நடைமுறைப்படுத்துவதற்காக நாட்டின் கல்விக் கொள்கை வகுப்பாளர்கள் ,பாடசாலை மேம்பாட்டு வேலைத்திட்டம், பூரண கலைத்திட்டம் போன்ற செயற்றிட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

இருப்பினும், இந்த இலவச கல்வியின் ஊடாக தரமான கல்வியை அடைந்து கொள்வதற்காக பாடசாலை மாணவர்களுக்கு பல்வேறு பணச்செலவுகளும் தொடர்ச்சியாக ஏற்படுவதை அவதானிக்கலாம். குறிப்பாக, க.பொ.த உயர்தரத்தில் கல்வி கற்கும் இன்றைய மாணவர்களுக்கு அப்பியாச கொப்பிகள் (கிழமைக்கு 2) பாடப்புத்தகங்கள், பயிற்சிப் புத்தகங்கள், பேனை, பென்சில், மேலதிக வாசிப்பு நூல்கள், போக்குவரத்துச் செலவுகள், பாடசாலை சீருடைகள், பாதணிகள், அன்றாடத் தேவைகளுக்கான பொருட்கள் போன்றவற்றைப் பெற்றோரின் மாத வருமானத்தில் இருந்து செலவு செய்ய வேண்டியுள்ளதை அவதானிக்கலாம்.

இதற்கு மேலதிகமாக பாடசாலையில் நடைபெறும் பரிசளிப்பு விழா, விளையாட்டுப் போட்டி, நவராத்திரி விழா, நத்தார் விழா, கல்விச் சுற்றுலாக்கள், கலை விழா, தமிழ் மொழித்தினம், ஆங்கில தினம், சமய தினம் போன்ற பல்வேறான விடயங்களுக்கு பணத்தை செலவு செய்ய வேண்டியுள்ளது. இதனை விட பாடசாலை அபிவிருத்தி சங்கத்திற்கான பணம், பாடசாலை வசதிகள் சேவைகள் கட்டணம், வருட ஆரம்பத்தில் வகுப்பறையை அழகுபடுத்துவதற்கான செலவு, உயர்தர மாணவர்களுக்கான தனியாள் செயற்றிட்டம், குழுச் செயற்றிட்டம் போன்றவற்றுக்கும் ஒரு தொகை பணம் செலவு செய்யப்படுகின்றதை அவதானிக்கலாம்.

மேலும் க.பொ.த உயர்தர மாணவர்கள் தனியார் வகுப்புக்களுக்காக மாதாந்தம் பாரியளவு தொகையை செலவு செய்கின்றார்கள். ஒரு சில விடயங்களுக்காக பெற்றோர்களிடம் பணத்தை பெற்றுக்கொள்ள வேண்டியவர்களாக உள்ளனர்.

குறிப்பாக, பெருந்தோட்டப் பிரதேசத்திலிருந்து உயர்தரத்திற்கு தெரிவாகி பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு மேற்கூறிய செலவுகளை தாங்கிக் கொள்ள முடியாத நிலையில் பெற்றோர்களின் மாத வருமானம் மிகக் குறைவாக இருப்பதை அவதானிக்கலாம்.

இன்று உயர்தரத்தில் கல்வி கற்கின்ற மாணவர் ஒருவர் விடுதியில் தங்கி படிப்பதற்கு விடுதிக் கட்டணம், மேலதிக வகுப்பு கட்டணம், போக்குவரத்து செலவு உட்பட தனிப்பட்ட செலவுகளையும் சேர்த்து மாதாந்தம் குறைந்தது 12,000 ரூபா தேவைப்படுகின்றது. இதனை பெற்றோர்களே கொடுக்க வேண்டிய நிலையில் உள்ளனர்.

தோட்டத்தில் வேலை செய்கின்ற பெற்றோரின் பிள்ளைகள் உயர்தரத்தில் விஞ்ஞான, கணித, வர்த்தக கலைப் பிரிவில் கல்வி கற்பதை எடுத்துக் கொள்வோமாயின் அப்பிள்ளைக்கான மாதாந்த கல்விச் செலவை குறிப்பிட்ட பெற்றோர்களால் கொடுக்க கூடிய வாய்ப்புள்ளதா? என தேடிப்பார்க்க வேண்டிய தேவை இன்று எழுந்துள்ளது.

ஒரு புறம் மலையக மாணவர்கள் உயர்தரப் பரீட்சையில் சித்தி பெறுவது குறைவு, பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகின்ற மாணவர்களின் எண்ணிக்கை குறைவு மற்றும் பொதுப் பரீட்சைகளில் சித்தி பெறுவது குறைவு என வாதிடப்படுகின்றது. ஆனால், இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு தங்களுடைய கல்விச் செலவை ஈடு செய்யக்கூடிய அளவிற்கு பெற்றோர்களின் மாத வருமானம் மிகவும் குறைவாக உள்ளமையேயாகும்.

தற்போதைய விலைவாசி உயர்வில் இவர்களுடைய அன்றாட அடிப்படை தேவைகளைக்கூட பூர்த்தி செய்ய முடியாதளவிற்கு அவர்களுடைய மாத வருமானத்தில் பற்றாக்குறை காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

பெருந்தோட்டப் பிரதேசத்திலிருந்து க.பொ.த. உயர் கல்வி கற்கும் தோட்டத் தொழிலாளர்களுடைய பிள்ளைகளுக்கு தனவந்தர்கள் உதவ முன்வரவேண்டும். உயர்தரத்தில் கற்கும் மாணவர்கள் இடைவிலகுவதற்கும் கற்றலில் ஆர்வம் குறைவதற்கும் இவர்களுடைய பொருளாதார பற்றாக்குறை பாரிய ஒரு பிரச்சினையாக காணப்படுகின்றது.

மலையகத்தில் உள்ள தொழிற்சங்கங்கள் தமக்குக் கிடைக்கும் சந்தாப்பணத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை அந்தத் தொழிலாளர்களின் பிள்ளைகளின் கல்விச் செலவிற்காக கொடுப்பதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.

தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு கல்விக்கான செலவுகளை வருடாந்தம் சேகரித்து கொடுப்பதற்கு நம்பிக்கை நிதியம் ஒன்றை உருவாக்க வேண்டும். மிகவும் சிறப்பாக படிக்கின்ற பிள்ளைகளை தெரிவு செய்து உதவி செய்ய வேலைத்திட்டத்தை உருவாக்க வேண்டும்.

உயர்தர மாணவர்கள் பாடசாலையில் படிக்கும் போதே ஏதாவது சுயதொழிலை செய்து கொண்டு அவர்களுடைய கல்விச்செலவை ஈடு செய்து கொள்வதற்கான சூழலையும் செயற்றிட்டங்களையும் தொழிற்சங்கங்களும் அரச சார்பற்ற நிறுவனங்களும் இணைந்து தோட்டவாரியாக உருவாக்க வேண்டும்.

பெருந்தோட்டப் பிள்ளைகளுக்கு சிறு வயது முதலே சேமிக்கும் பழக்கத்தை பழக்க வேண்டும். பாடசாலை கல்வியை பெருந்தோட்ட மாணவர்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

பெருந்தோட்டப் பிரதேசத்தில் உயர்தரத்தில் கற்பிக்கும் ஆசிரியர்கள் தங்களுடைய சேவையை முழுமையாக பெருந்தோட்ட மாணவர்களுக்கு செய்வதற்கு முன்வர வேண்டும். கூடியளவு பாடசாலையிலேயே மாணவர்களுக்கான பாடத்திட்டத்தை முறையாகவும் முழுமையாகவும் முடிப்பதற்கு முயற்சிக்க வேண்டும்.

குறிப்பாக, மேலதிக வகுப்பிற்கு செலவு செய்ய முடியாத மாணவர்களுக்கு ஆசிரியர்கள் முடிந்தளவு இலவசமாக கற்றுக்கொடுக்க வேண்டும். பாடசாலையில் ஒரு பாடத்தையும் மேலதிக வகுப்பில் (டியூசன்) இன்னொரு பாடத்தையும் படிக்கலாம் என்பதையெல்லாம் ஆசிரியர்கள் விட்டு விட முயற்சிக்க வேண்டும். வகுப்பறையில் கற்பித்தலை வினைத்திறனாக செய்ய வேண்டும். டியூசன் வகுப்பிற்கு வந்தால் மட்டுமே படிக்கலாம் விளக்கமாக இருக்கும். குறிப்பிட்ட வகுப்பிற்கு மட்டுமே வரவேண்டும். என்னிடம் மட்டுமே படிக்க வேண்டும். அவ்வாறு இல்லா விட்டால் பாடசாலையில் அனுமதி கிடைக்காது. நான் தான் எல்லாம் என்ற வார்த்தைகளை சொல்லக்கூடாது. மாணவர்கள் விரும்பிய வகுப்பில் விரும்பிய ஆசிரியர்களிடம் படிப்பதற்கு உரிமையுண்டு.

உயர்தர வகுப்பாசிரியர்கள் ஒரு சிலர் வற்புறுத்தல்கள், கட்டளைகள், பாடத்திட்டத்தை முழுமையாக முடிக்காமை, விளக்கமாக படிப்பிக்காமை, தேவையற்ற விதத்தில் தண்டனைகள் வழங்குகின்றமை, மிகக் கடுமையாக நடந்து கொள்ளல், மாணவர்களை உதாசீனம் செய்தல், அலட்சியப்படுத்தல், பிள்ளைகளையும் குடும்பப் பின்னணியையும் புரிந்து கொள்ளாமை, தான்தோன்றித்தனமாக மாணவர்களை நடத்துதல் போன்ற விடயங்களை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

மாணவர்களுக்கு தகுதியான துறையில் கற்பதற்கு ஆசிரியர்கள் உற்சாகப்படுத்த வேண்டும். சில மாணவர்களை துரத்தக்கூடாது. ஆசிரியர்கள் தனக்கேயுரிய சில விடயங்களை வைத்துக்கொண்டு பெறுவதே ஒரு சிறந்த ஆசிரியருடைய பண்பாகும்.

தன்னை நம்பி உயர்தர வகுப்பிற்கு வரும் மாணவர்களை முடிந்தளவு கற்பித்து அவர்களை கரை சேர்ப்பதே பாடசாலையினதும் ஆசிரியர்களினதும் கடமையும் பொறுப்புமாகும்.

கல்வி எங்கு விற்பனை செய்யப்படுகின்றதோ அங்கு கல்வி மட்டுமே விற்கப்படும். தொழிலாளர்களின் வியர்வை, செலவழித்த பணத்திற்கான பயன், பெறுமதி, பெற்றோர்களின் கனவு, நம்பிக்கை, சந்தோசம், எதிர்பார்ப்பு, அவர்களின் முயற்சி, சிந்தனை, செயல் எல்லாவற்றிற்கும் அர்த்தமுள்ளது என்பதை ஆசிரியர்கள் உணர்ந்து தனது ஆசிரியர் தொழிலை புனிதமாகவும் நேர்மையாகவும் அர்ப்பணிப்போடும் சேவை மனப்பான்மையுடனும் சமூகப்பற்றுடனும் சமூக நோக்கத்துடனும் பிள்ளைகளின் எதிர்கால வாழ்க்கையை எண்ணி தனக்கு சம்பளத்தைப் பெற்றுக்கொடுக்கும் இத்தொழிலை சரிவர இதய சுத்தியுடன் செய்வதற்கு ஒவ்வொரு ஆசிரியரும் முன்வர வேண்டும். கல்விதான் மலையக சமூகத்தின் முதலீடு என்பதை உணர வேண்டும்.

நன்றி - veerakesari

முன்பள்ளி ஆசிரியர் பயிற்சிநெறி தொடர்ந்து இடம்பெறுவது அவசியம் - எஸ்.வடிவழகி


தரமான முன்பள்ளிக் கல்விப் பயிற்சியை அதாவது முன்பள்ளிக் கல்வி டிப்ளோமாவை இலகுவாகப் பெறக்கூடிய ஒரே இடமாக விளங்கியது திறந்த பல்கலைக்கழகம் மட்டுமே. மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை ஆகிய பகுதிகளிலுள்ள திறந்த பல்கலைக்கழக கற்கை நிலையங்களில் தமிழ் மொழி மூலமான முன்பள்ளி ஆசிரியைகளுக்கான டிப்ளோமா பயிற்சி கள் பல வருடங்களாக நடத்தப்பட்டு வந்தாலும் பெருந்தோட்டப் பகுதிகளில் இந்தப் பயிற்சிநெறி ஆரம்பிக்கப் படவேயில்லை

இந்த நாட்டில் முன்பள்ளிக் கல்வி ஆரம்பித்து எழுபத்தைந்து ஆண்டுகள் கடந்திருந்தாலும் சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர்தான் பெருந்தோட்டப் பகுதிகளில் முன்பள்ளிகள் ஆரம்பிக்கப்பட்டன.

ஆனாலும் அதற்கு முன்னர் பெருந்தோட்ட பகுதியிலும் முன்பள்ளிகள் உள்ளன என்ற அங்கீகாரத்தைப்பெற பல வருடங் கள் போராடவேண்டியிருந்தது.

இன்னும் கூட நூற்றுக்கணக்கான தோட்டங்களிலுள்ள பாலர்களுக்கு இதுவரை முன்பள்ளிக் கல்வி கிடைக்கவில்லை.

பெருந்தோட்டங்களில் முன்பள்ளிகள் ஆரம்பிக்கப்பட்டாலும் கூட முன்பள்ளி ஆசிரியைகளுக்கு பயிற்சி வழங்குவது என்பது பாரதூரமான சவாலாக மாறியது. அதற்கான வசதி வாய்ப்புகளும் இருக்கவில்லை.

தரமான முன்பள்ளிக் கல்விப் பயிற்சியை அதாவது முன்பள்ளிக் கல்வி டிப்ளோ மாவை இலகுவாகப் பெறக்கூடிய ஒரே இடமாக விளங்கியது திறந்த பல்கலைக்கழகம் மட்டுமே.

மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை ஆகிய பகுதிகளிலுள்ள திறந்த பல்கலைக்கழக கற்கை நிலையங்களில் தமிழ் மொழி மூலமான முன்பள்ளி ஆசிரியைகளுக்கான டிப்ளோமா பயிற்சி கள் பல வருடங்களாக நடத்தப்பட்டு வந்தாலும் பெருந்தோட்டப் பகுதிகளில் இந்தப் பயிற்சிநெறி ஆரம்பிக்கப் படவேயில்லை.

இதற்குக் காரணம், பெருந்தோட்டப் பகு திகளிலும் முன்பள்ளிகள் நடத்தப்படுகின்றன என்பது தேசிய அளவில் அறியப்படாமலும் அங்கீகரிக்கப்படாமலும் இருந்தமையே ஆகும்.

இந்தப் பின்னணியிலேயே பெருந்தோட் டப்பகுதிகளிலுள்ள திறந்த பல்கலைக்கழக கற்கை மண்டபங்களில் இந்தப் பயிற்சி நெறியை ஆரம்பிக்குமாறு ஆறு வருடங் களுக்கும் மேலாக பிரிடோ நிறுவனம் தொடர்ச்சியாக பரிந்துரைகளை முன்னெடுத்தது.

இந்த கோரிக்கைக்கு இலங்கை திறந்த பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி சந்திரபோஸ், பேராசிரியர் தனராஜ் ஆகியோர் மேல்மட்டத்தில் ஆதரவு வழங்கினர்.

இந்த பரிந்துரையின் விளைவாக 2010ஆம் ஆண்டில் ஹட்டனிலும் அதன் பின்னர் கண்டியிலும் இந்தப் பயிற்சிநெறி ஆரம்பிக்கப்பட்டது.

இது பெருந்தோட்ட முன்பள்ளிக் கல்வி தொடர்பாகப் பெறப்பட்ட பாரிய வெற்றியாகும். கடந்த 5 வருடங்களில் சுமார் 150 முன்பள்ளி ஆசிரியைகள் இந்தப் பயிற்சியினை பெற்றுள்ளனர்.

இந்த டிப்ளோமா பயிற்சிநெறியை நிறைவு செய்தவர்களுக்கான தமிழ் மொழி மூலமான உயர் டிப்ளோமா பயிற்சிநெறியும் தற்போது ஹட்டன் திறந்த பல்கலைக்கழக கற்கை நிலையத்தில் இந்த வருடம் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை இந்த முயற்சிகளுக்கு கிடைத்த மேலும் ஒரு வெற்றியாகும்.

உயர் டிப்ளோமா பயிற்சி நெறியை நிறைவு செய்த பின்னர் முன்பள்ளிக் கல் வித்

துறையில் பட்டம் பெறுவதற்கான வாய்ப்பும் தற்போது ஏற்பட்டுள்ளது.

இந்த பின்னணியில் 2015/2016ஆம் ஆண்டுக்கான முன்பள்ளி ஆசிரியைகளுக்கான ஆரம்ப டிப்ளோமா பயிற்சி நெறிகளுக்கான விண்ணப்பம் திறந்த பல்கலைக்கழகத்தால் கோரப்பட்டுள்ளது.

விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் இறுதித் திகதி ஜனவரி 29 ஆகும். ஆயினும் ஹட்டன் கற்கை நிலையத்தில் போதியளவு விண்ணப்பதாரிகள் இருந்தால் மட்டுமே பயிற்சிநெறி ஆரம்பிக்கப்படும் என்று அறிவித்தலில் கூறப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு ஒரு அபாய எச்சரிக்கையாகும். இந்தப் பயிற்சி ஆரம்பித்த காலத்திலிருந்து விண்ணப்பதாரிகளின் எண்ணி க்கை படிப்படியாகக் குறைந்து வந்தது. இந்த அபாய அறிவிப்புக்கு காரணமாக இருக்கலாம்.

ஏற்கனவே இந்த பயற்சி நெறியை பது ளை, பண்டாரவளை, இரத்தினபுரி போன்ற மலையகப் பகுதிகளில் ஆரம்பிக்குமாறு பிரிடோ பரிந்துரை செய்து வந்தபோதும் இப்பகுதிகளிலுள்ள அரசியல் தலைவர்கள், கல்விமான்கள் ஆகியோர் தரமான முன்பள்ளி

ஆசிரியைகளாக வரவிரும்பும் இளம் பெண் களோ இது விடயத்தில் எதுவித அக்கறை யும் காட்டாததால் இந்த முயற்சி இதுவரை வெற்றிபெறவில்லை.

பிரிடோ பணிசெய்யும் பகுதிகள் தவிர மற்றெந்த பெருந்தோட்டப் பகுதிகளிலும் தரமான முன்பள்ளிகளை ஆரம்பிக்க எவரும் அக்கறை காட்டாதிருப்பதும் பெரிதும் கவலைக்குரிய விடயமாகும்.

பெருந்தோட்டப் பகுதிகளில் அதிலும் விசேடமாக, நுவரெலியா மாவட்டத்தில் தரமான முன்பள்ளிகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னரே கல்வியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பது எல்லோ ராலுமே ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்தா கும். முன்பள்ளிகள் இல்லாத இடத்தில் முன் பள்ளிகளை ஆரம்பிக்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதனால் பெருந்தோட்டப் பகுதிகளில் தரமான முன்பள்ளி ஆசிரியைகளுக்கான கேள்வி அதிகரித்து வருகிறது. எனினும் பயிற்சிபெற்ற தரமான முன்பள்ளி ஆசிரியைகளுக்கு சிறப்பான சுயதொழில் வாய் ப்பு முன்பள்ளிகள் மூலமாக ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை பலர் இன்னும் புரிந்துகொள்ளவில்லை.

தற்போது முன்பள்ளி ஆசிரியைகளுக்கான தரமான பயிற்சிக்கான வாய்ப்பை ஏற்படுத்தியிருக்கும் திறந்த பல்கலைகழக கற்கை நெறியை பெருந்தோட்ட பகுதிக ளில் தக்க வைத்துக் கொள்வது மிகவும் அவசியமாகிறது.

ஆகவே கோரப்பட்டுள்ள கல்வித் தகமை களை கொண்டுள்ள இளம் பெண்கள், இந்தப் பயிற்சிநெறிக்கு விண்ணப்பித்து இந்த பாடநெறியை கற்பதன் மூலம் நல்லதொரு சமூக அந்தஸ்துள்ள தொழில் வாய்ப்பை பெறுவதுடன், மலையக பெருந் தோட்ட மக்களின் கல்வித் தரத்தை உயர்த்துவதில் பாரிய பங்களிப்பை செலுத்தலாம்.

அது மட்டுமல்ல, மலையகப் பெருந்தோட்ட மக்கள் சார்பில் கடும் பிரயத்தனத் தின் பின்னர் பெறப்பட்ட இந்த உரிமையை தக்க வைத்துக் கொள்ள முடியும்.

திறந்த பல்கலைக்கழகத்தால் நடத்தப்ப டும் இப் பாடநெறி, விண்ணப்பதாரிகளின் எண்ணிக்கையில் ஏற்பட்ட குறைவு காரண மாக பெருந்தோட்ட பகுதிகளில் நடத்தப்ப டுவது நிறுத்தப்பட்டால் அதனை மீண்டும் பெற்றுக் கொள்வது மிகவும் சிரமமான விடயமாக அமையும்.

எனவே இந்தப் பயிற்சிநெறிக்கு விண் ணப்பிக்குமாறு இளம் பெண்களை கேட் டுக் கொள்வதுடன் சமூக அமைப்புக்களும் பெருந்தோட்ட கல்வி வளர்ச்சியில் ஆர்வ முள்ள சமூக ஆவலர்களும் இது விடயத் தில் மக்களை ஊக்கு வித்து பெறப்பட்ட இந்த உரிமையை தக்கவைத்துக் கொள்ள முன்வர வேண்டும்.

நன்றி - வீரகேசரி

வீதி அபிவிருத்தி கைவிடப்படல் : பஸ் கட்டணமும் இரு மடங்காக உயர்வு - பா.திருஞானம்


புசல்லாவை நகரிலிருந்து பெரட்டாசி தோட்டத்திற்கு செல்லும் 26 கிலோமீற்றர் பிரதான வீதி சுமார் 15 வருட காலமாக புனரமைக்கப்படாமல் குன்றும், குழியுமாக காணப்படுகின்றது. இதனால் இவ்வீதியை பயன்படுத்தும் பதினைந்து தோட்ட பிரிவுகளைச் சேர்ந்த மக்களும், இப்பகுதியிலுள்ள ஒன்பது பாடசாலைகளுக்கு செல்லும் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஏனைய அரச ஊழியர்களும் பெரிதும் பாதிப்புக்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

அத்துடன், இங்குள்ள விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களை தம்புள்ள, கொழும்பு போன்ற பகுதிகளுக்கு கொண்டு செல்வோரும், தேயிலை உற்பத்திகளை கொழும்பு போன்ற நகரங்களுக்கு கொண்டு செல்லும் தோட்ட நிர்வாகத்தினரும் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

இவ்வீதி திருத்தப்படாமையினால் சேவையில் ஈடுபடுத்தப்பட்டு வந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் சேவை சுமார் 05 வருட காலமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது. பருவகால சீட்டைப் பெற்ற பாடசாலை மாணவர்கள் கூட குறிப்பிட்ட தூரம் நடந்து சென்று தனியார் வாகனங்களிலேயே புசல்லாவையில் உள்ள பாடசாலைக்கு செல்கின்றனர்.
இப் பிரதேசத்திலுள்ள 09 பாடசாலைகளின் ஆசிரியர்கள் போக்குவரத்து வசதியின்மையால் பாடசாலைகளுக்கு காலை 09, 10 மணியளவிலேயே செல்கின்றனர். காலை புசல்லாவை நகரத்திலிருந்து பெரட்டாசி பிரதேசத்திற்கு 08.15 மணியளவிலேயே தனியார் பஸ் சேவை ஆரம்பிக்கின்றது. அதே வேளை, இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் சேவை சுமார் 05 வருட காலமாக சேவையில்லை.

இதனால் இப்பிரதேசத்தில் வாழும் தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுடைய கல்வியில் பாரிய வீழ்ச்சி ஏற்படுவதுடன் ஆசிரியர்கள், அதிபர்கள் என அனைவரும் பல இன்னல்களை எதிர்நோக்கியும் வருகின்றனர். இதற்கு பொறுப்பான அதிகாரிகள் எவரும் இவ் விடயத்தைக் கண்டு கொள்வதில்லை.

வீதியின் இந்நிலை காரணமாக தனியார் பஸ் வண்டிகளும் அடிக்கடி பழுதடைகின்றன. சில நாட்களில் குறித்த நேரத்திற்கு பஸ் சேவையில் ஈடுபடுவதில்லை. பஸ் கட்டணங்களை பொறுத்தவரையில் இரு மடங்கான கட்டணம் அறவிடப்படுகின்றது.

அதாவது குறித்த தூரத்திற்கு செலுத்த வேண்டிய பஸ் கட்டணத்தில் இன்னு மொரு பங்கு சேர்த்தே அறவிடப்படுகின்றது. இதற்கும் வீதியின் மோசமான நிலையே காரணமாக இருக்கின்றது. இதனால் போக்குவரத்தை மேற்கொள்வதில் பெரும்பாதிப்புகளை எதிர்நோக்க வேண்டியுள்ளதாக இப்பகுதி மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். பாடசாலை மாணவர்களுக்கும் இந்நநிலையே காணப்படுகின்றது. சிங்களம் மற்றும் தமிழ்மொழி மூலமாக கல்வியை தொடரும் மாணவர்கள் இப்பிரதேசத்திலிருந்து நகர பாடசாலைகளுக்கும் வருகின்றனர்.

இதனால் மாணவர்களின் கல்வி நிலை பாதிப்புக்குள்ளாகின்றது. இதற்கு முன்னர் இரண்டு அரச இ.போ.ச வண்டிகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தன. அவை தற்போது சேவையிலில்லை. வீதியின் மோசமான நிலைமையே இப் பஸ் சேவை இடை நிறுத்தப்பட்டமைக்கும் பிரதான காரணம் என சுட்டிக்காட்டப்படுகின்றது.

இந்நிலைமை குறித்து கம்பளை பஸ் டிப்போ முகாமையாளரை தொடர்பு கொண்டு கேட்ட போது, சேவையில் ஈடுபட்டு வந்த இரண்டு பஸ் வண்டிகளும் பழுதடைந்து விட்டன. புதிய பஸ் வண்டிகளை பெற்றுக் கொள்ளும் வரை காத்திருக்கின்றோம். அத்துடன், வீதி பழுதடைந்ததால் பஸ் சேவையை முன்னெடுக்க முடியாமல் உள்ளதது என அவர் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் இப்பகுதியிலுள்ள வீதிகளில் நான்கு முறை பஸ் விபத்துக்கள் இடம்பெற்றன. இவ் விபத்துக்களில் பாதிப்புக்குள்ளான நூற்றுக்கு மேற்பட்டோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதில் பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.
அக்காலப் பகுதியிலும் இவ் வீதியை புனரமைப்பதற்கான வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்ட போதும் முறையாக அவை முன்னெடுக்கப்பட வில்லை. இதனால் இங்குள்ள மக்கள் சுமார் 15 கிலோ மீற்றர் தூரம் நடந்து புசல்லாவை பிரதேசத்திற்கு வந்து நுவரெலிய பிரதான வீதியில் ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டனர். ஆனால் அதற்கு சரியான தீர்வு எட்டப்படவில்லை.

கடந்த அரசாங்கத்தினால் வீதி அபிவிருத்தி திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன. அதன் மூலம் இந்த வீதி ஒரு காபட் பாதையாக மாற்றப்படும் என்ற எண்ணத்தில் மக்கள் இருந்தனர். ஆனால், தேர்தலுக்கு முன்னரே 03 கிலோ மீற்றர் மாத்திரம் இவ் வீதிக்கான திருத்தம் மேற்கொள்ளப்பட்டு வேலைத்திட்டம் கைவிடப்பட்டுவிட்டது. வீதி திருத்தத்திற்கான கற்கள் கொண்டுவரப்பட்டு அவையும் கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகின்றன. இந் நிலையில் இந்த வீதியின் மிகுதியான தூரத்தை சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக திருத்தி தருமாறும் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இங்கு வாழும் மக்களின் பிரதான பிரச்சினைகளில் வைத்திய சேவையும் ஒன்றாகும். அவசர சேவையின் போது 20 கிலோ மீற்றர் தூரத்திற்கப்பால் உள்ள புசல்லாவை மாவட்ட வைத்தியசாலையை நாட வேண்டியுள்ளது. கர்ப்பிணிப் பெண்கள் வைத்தியசாலைக்கு கொண்டு வரும் முன்னர் முச்சக்கர வண்டி, தோட்ட லொறி போன்றவற்றில் இடையிலேயே குழந்தைகளை பிரசவிக்கின்றனர்.

சிலர் இறந்தும் உள்ளனர். விபத்துக்களுக்குள்ளானோரை நேரத்திற்கு வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முடியாமையினால் சிலர் இறந்தும் உள்ளனர். இம் மக்களின் தேவைக்காக கட்டப்பட்ட பல இலட்சம் பெறுமதியான வைத்தியசாலையில் முறையான வைத்தியர்கள் இல்லை. வைத்தியசாலையில் நோயாளர்கள் தங்குவதற்கு கட்டில் கூட இல்லை. வைத்தியர் தங்குவதற்கு விடுதி கட்டப்பட்ட போதும் அவை இடை நடுவில் கைவிடப்பட்டுள்ளது. இதற்கும் வீதியின் மோசமான நிலையே காரணமாக இருக்கின்றது.

மேற்படி வீதி உடைந்துள்ளமையால் மக்கள் தங்கள் பிள்ளைகளின் கல்வி, வைத்தியசேவை மற்றும் பொருளாதார ரீதியில் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். இவ்வாறான நிலையில் இவர்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு காண சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன் வருவார்களா?

நன்றி - veerakesari

தொழிற்சங்க அசமந்தம்: கம்பனிகளின் புறக்கணிப்பு


தோட்டத்தொழிலாளரின் சம்பள உயர்வு உட்பட அவர்களின் நலன்புரி விடயங்கள் அனைத்தையும் கூட்டு ஒப்பந்தமே தீர்மானிக்கின்றது. பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனமும் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் மூன்று தொழிற்சங்க அமைப்புக்களுமே தோட்டத்தொழிலாளரின் சம்பள உயர்வு மற்றும் நலன்புரி விடயங்களை பேசித் தீர்மானித்து, அது தொடர்பான கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுகின்றன.

இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை செய்துகொள்ளப்படும் கூட்டு ஒப்பந்தம் இறுதியாக 2013–2015 ஆண்டு காலப்பகுதிக்கு செய்து கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தம் 2015 மார்ச் 31 ஆம் திகதியுடன் காலாவதியாகி விட்டது. எனவே, புதிய கூட்டு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டு, அது கடந்த வருடம் ஏப்ரல் முதலாம் திகதியுடன் நடைமுறைக்கு வந்திருக்க வேண்டும். சுமார் 10 மாதங்களாகியும் இதுவரை புதிய கூட்டு ஒப்பந்தம் செய்து கொள்ளப்படவில்லை.

கூட்டு ஒப்பந்தம் செய்து கொள்ளப்படாததால் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு உள்ளிட்ட விடயங்கள் முன்னெடுக்கப்படாது, கிடப்பில் உள்ளன. இது தொழிலாளர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, கடந்த வருடம் தொழிலாளருக்கு 1000 ரூபா சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டுமென்று கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்க அமைப்புக்களில் ஒன்றான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கோரிக்கை ஒன்றை முன்வைத்தது.

முதலாளிமார் சம்மேளனமோ, தோட்டங்கள் நட்டத்தில் இயங்குவதாகவும் 1000 ரூபா சம்பள உயர்வு தரமுடியாதெனவும் கூறி வருகிறது.

இது தொடர்பாக இரு தரப்பினருக்குமிடையில் இடம்பெற்ற பல பேச்சு வார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்தன. தற்போது இது தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்காது கிடப்பில் உள்ளது.

எனவே, இதுபற்றி தோட்டத்தொழிலாளர்கள் பலரிடம் நாம் வினவியபோது அவர்கள் தமது கருத்துக்களை பின்வருமாறு விளக்கமாக முன்வைத்தனர்.

இந்நிலையில், டயகம அக்கரப்பத்தனையைச் சேர்ந்த என். இராஜமாணிக்கம் பின்வருமாறு கூறினார். தோட்டங்கள் நட்டத்தில் இயங்குவதாகக் கூறும் கம்பனிகள் தொடர்ந்தும் தோட்டங்களைக் கட்டிப்பிடித்துக்கொண்டிருப்பதேன்? நட்டத்தில் இயங்கும் எந்தவொரு நிறுவனத்தையும் அதன் நிருவாகிகள் தொடர்ந்தும் செயற்படுத்துவதில்லை.

அதனை மூடி விட்டு வேலையைப் பார்த்துக்கொண்டு போய்விடுவார்கள். வேறு ஏதாவது தொழிலைச் செய்வார்கள். ஆனால், தோட்டக் கம்பனிகள் மட்டும் தோட்டங்களைவிட்டு வெளியேறாமல் இருக்கின்றன.

இலாபம் இல்லாமலா தொடர்ந்தும் தோட்டங்களை வைத்திருக்கின்றனர் ? தோட்டங்களை நடத்த முடியா விட்டால் உடனடியாக அரசாங்கத்திடம் அவற்றை கையளித்து விட்டு வெளியேற வேண்டும். கம்பனிகள் உடனடியாக அதனைச் செய்ய வேண்டும். இதனை தொடர்ந்து புஸல்லாவையை சேர்ந்த கே. ராமராஜ் கருத்து தெரிவிக்கையில், தொழிற்சங்கங்களும் முதலாளிமார் சம்மேளனமும் இறுதியாக செய்துகொண்ட கூட்டு ஒப்பந்தம் காலாவதியாகி சுமார் 10 மாதங்களாகி விட்டன.

ஆனால், இதுவரை புதிய கூட்டு ஒப்பந்தம் செய்து கொள்ளப்படாமல் இழுத்தடிக்கப்படுகின்றன. இதுவரை காலமும் இவ்வாறு இடம்பெற்றதில்லை. எனவே, கூட்டு ஒப்பந்தம் குறித்த காலத்தில் கைச்சாத்திடப்படாமை பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது. ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் இரு தரப்பினரும் திட்டமிட்டே இதனை ஒத்திப்போடுகின்றனரா? எனவும் சந்தேகம் எழுகிறது.

கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் இவ்விடயத்தில் எந்தவிதமான அக்கறையும் காட்டாமல் இருக்கின்றன.


கம்பனிகள் சம்பளத்தை உயர்த்திக்கொடுக்க மறுப்பதாகக்கூறும் சங்கங்கள் கம்பனிகளுக்கு அழுத்தம் கொடுப்பதுமில்லை, மாற்று நடவடிக்கைகளை எடுப்பதுமில்லை. இவர்கள் தொடர்ந்தும் மௌனம் சாதிப்பது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது. கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் இதுபற்றி உடனடியாகத் தெளிவுபடுத்த வேண்டும். தொழிலாளர்களிடத்தில் ஏற்பட்டுள்ள சந்தேகத்தை உடனடியாக தீர்த்து வைக்க முன்வர வேண்டும் என்றார்.

மேலும், தோட்டத்தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படாமல் பெரும் அநீதி இழைக்கப்பட்டு வருகிறது. நாட்டிலுள்ள ஏனைய தொழிலாளர்கள், ஊழியர்கள் அனைவரும் சம்பள உயர்வு பெற்றுக்கொள்ளும் நிலையில் தோட்டத்தொழிலாளர்களுக்கு மட்டும் தோட்டக்கம்பனிகள் சம்பள உயர்வு வழங்காமல் இழுத்தடிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.

தொழிலாளரின் சம்பள உயர்வு கூட்டு ஒப்பந்தம் மூலமாகவே தீர்மானிக்கப்படுகிறது. எனவே, கூட்டு ஒப்பந்தம் உரிய காலத்தில் செய்து கொள்ளப்படாமல் இழுத்தடிக்கப்படுகிறது. நாட்டில் உணவுப் பொருட்கள் முதல் ஏனைய அனைத்தும் விலையுயர்ந்து காணப்படுகிறது.

வாழ்க்கைச்செலவு அதிகரித்துக்காணப்படுகிறது. வாழ்க்கைச்செலவு உயர்வுக்கேற்ப தோட்டத்தொழிலாளரின் சம்பளம் மட்டும் உயர்த்தப்படாமலிருக்கிறது. அந்த வகையில் தோட்டத்தொழிலாளர்களை இரண்டாந்தரப் பிரஜைகளாகவே கருதுகின்றனர். இது மேலும் நீடிக்கக்கூடாது என பசறை பிரதேசத்தை சேர்ந்த நந்தகுமார் கணேஷன் தெரிவித்தார்.

இது தொடர்பில் பொகவந்தலாவையை சேர்ந்த வே. சபாரட்ணம் கூறுகையில், தோட்டங்கள் நட்டத்தில் இயங்குகின்றன. தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்க முடியாது என்று கூறும் கம்பனிகள், தோட்டங்களை அரசாங்கத்திடம் கையளித்து விட்டு வெளியேறலாம் என்று அமைச்சர் ஒருவர் பகிரங்கமாக அறிவித்தும் எந்தவொரு கம்பனியும் தோட்டங்களை அரசிடம் கையளிக்க இதுவரை முன்வரவில்லை. நட்டத்தில் இயங்குவதாகக் கூறும் கம்பனிகள் அரசிடம் தோட்டங்களைக் கையளித்து விட்டு வெளியேறலாம் அல்லவா? மெளனமாக இருப்பது ஏன்? உண்மையாகவே நட்டத்தில் இயங்கும் கம்பனிகள் ஒரு நாளும் தோட்டங்களை வைத்துக்கொண்டிருக்காது.

இதிலிருந்து தோட்டங்கள் நட்டத்தில் இயங்கவில்லை, இலாபத்தில்தான் இயங்குகின்றன என்பதை அனைவரும் இலகுவாகப் புரிந்து கொள்ள முடியும். எனவே, தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள உயர்வைப் பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் கம்பனிகளுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். அரசாங்கத்திலிருக்கும் மலையக அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் சம்பள உயர்வை வழங்குமாறு கம்பனிகளை வலியுறுத்த வேண்டும். மெளனமாக இருப்பதால் எதுவும் நடைபெறப்போவதில்லை. இதனால் பாதிக்கப்படுவது எங்களைப் போன்ற அப்பாவி தோட்டத் தொழிலாளர்கள்தான் என்பதை மறந்து விடக்கூடாது எனத் தெரிவித்தார்.

தனியார் துறை ஊழியர்களுக்கு வரவு  செலவுத்திட்டத்தில் அறிவிக்கப்பட்ட 2500 ரூபா சம்பள உயர்வு, தோட்டத்தொழிலாளர்களுக்கும் வழங்கப்பட வேண்டுமென்று தொழிலமைச்சர் கூறியிருப்பது பெரிதும் வரவேற்கத்தக்க விடயமாகும். இதைப்போன்று தோட்டத்தொழிலாளர்களின் சம்பளம் உள்ளிட்ட அனைத்துக் கொடுப்பனவுகளும் மற்றும் சேமநலன்கள் அனைத்தையும் அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும். அவ்வாறு செய்வதானால் மட்டுமே தொழிலாளர்கள் நன்மையடைவார்கள். இல்லையென்றால், தோட்டத்தொழிலாளர்களின் வாழ்க்கையில் ஒரு போதும் விடிவு ஏற்படப் போவதில்லை.

இல்லாவிட்டால் தோட்டங்களை தோட்டத் தொழிலாளர்களிடமே கையளிக்க வேண்டும். தொழிலாளர்கள் நல்ல அனுபவமுடையவர்கள். தோட்டங்களை எவ்வாறு நடத்த வேண்டுமென்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும். அவர்கள் தோட்டங்களை நல்ல இலாபத்தில் நடத்திக் காட்டுவதற்குத் தயாராகவே இருக்கின்றனர். எனவே, தோட்டங்களைக் கையளிக்கத் தயாரா ? என வட்டவளை எம். தங்கராஜா கேள்வி எழுப்பும் வகையில் தனது கருத்தை தெரிவித்திருந்தார்.

தொடர்ந்து லிந்துலை எஸ். நடராஜா தெரிவிக்கையில், தோட்டத் தொழிலாளர்கள் கடுமையான உழைப்பாளிகள். ஆனால், அவர்களின் உழைப்புக்கேற்ற ஊதியம் வழங்கப்படுவதில்லை. எங்களது உழைப்பின் மூலம் அதிக இலாபத்தை பெற்றுக்கொள்ளும் தோட்டக் கம்பனிகள் தொழிலாளர்களைப் பற்றி சிந்திப்பதில்லை. தொழிலாளர்கள் வேலைக்கு செல்லாமல் பகிஷ்கரித்தால் கம்பனிகளின் நிலைமை என்னவாகும். சிறிதும் சிந்திப்பதில்லை. தொழிலாளர்கள் பிரச்சினையின்றி இருந்தால்தான் தேயிலை உற்பத்தி அதிகரிக்கும். தொழிலாளர்களை பகைத்துக் கொண்டால் எல்லாமே வீணாகிவிடும் என்பதை கம்பனிகள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். எனவே, தொழிலாளர்களின் நிலைமையை யோசித்துப் பார்த்து சம்பளத்தை அதிகரித்துக் கொடுப்பதற்கு கம்பனிகள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

அக்கரப்பத்தனை ஹோல்புறூக் கே. குமரகுருபரன் தெரிவிக்கையில், தொழிலாளர்களுக்கு சம்பளத்தை அதிகரித்துக் கொடுக்க முடியாமைக்கு தோட்டங்கள் நட்டத்தில் இயங்குவதே காரணமென்று கம்பனிகள் கூறுவதில் எந்தவிதமான உண்மையும் இல்லை. எல்லா தோட்டங்களும் இலாபத்திலேயே இயங்குகின்றன. தோட்டங்களின் நிருவாகங்கள் செய்யும் அநாவசிய செலவுகள் காரணமாகவே நட்டங்கள் ஏற்படுகின்றன. அதேவேளை, தோட்ட முகாமையாளர்கள், நிர்வாகிகள் ஏனைய உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் அதிக சம்பளம் வழங்கப்படுகிறது. இது போன்ற செலவுகளை குறைத்தால் நட்டம் ஏற்படுவதற்கு இடமிருக்காது.

தோட்ட உத்தியோகத்தர்களுக்கு சம்பளத்தை அள்ளிக்கொடுக்கும் கம்பனிகள் தேயிலை உற்பத்திக்கு பிரதான காரணிகளாக விளங்கும் தோட்டத்தொழிலாளர்களுக்கு சம்பளத்தை உயர்த்திக் கொடுப்பதற்கு தயக்கம் காட்டுவது ஏன் ? அதற்கான காரணத்தை கம்பனிகள் விளக்க வேண்டும். ஆனால், அதைப்பற்றி கம்பனிகள் வாய்த்திறப்பதில்லை.

நன்றி - veerakesari
பசறை, நுவரெலியா, இரட்டைப்பாதை நிருபர்கள் 

ஆங்கிலேயர்களைக் கலக்கிய அந்த இரு நூல்கள் (1915 கண்டி கலகம் –17) - என்.சரவணன்


மதுவொழிப்பு இயக்கத்தில்  அப்போது வெளிநாடுகளில் உயர்கல்வி கற்று நாடு திரும்பிய புதிய மத்திய தர வர்க்கத்தை சேர்ந்த இளைஞர்கள் தீவிர ஈடுபாடு காட்டினர். எப்.ஆர்.சேனநாயக்க, டீ.பீ.ஜயதிலக்க, மார்கஸ் பெர்னாண்டோ, ஜேம்ஸ் பீரிஸ், ஜோன் கொத்தலாவல, டபிள்யு,ஏ.டி.சில்வா, ஜேகப்.டி.சில்வா, பெர்னாண்டோ விஜேசேகர, ஹென்றி அமரசூரிய போன்றார் அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். அவ்வியக்கத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்தச் சென்றவர்கள் அவர்கள். கிராமம் கிராமமாக பிரசாரங்களை முன்னெடுத்ததன் விளைவாக 1915 அளவில் 24033 அங்கத்தினர்களையும், 220 கிளைகளையும் கொண்டிருந்தனர்.

1910 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட குறூ-மக்கலம் சீர்திருத்தத்தம் புதிய மேட்டுக்குடி வர்க்கத்தினரை திருப்திபடுத்தவில்லை. அவர்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்துவதற்கான தளமாக மதுவொழிப்பு இயக்கத்தைப் பயன்படுத்திகொண்டார்கள். மதுவொழிப்பு பிரச்சாரக் கூட்டங்களில் அன்றைய ஆளுநர் மக்கலத்துக்கு எதிரான துண்டுப் பிரசுரங்களையும் பகிரங்கமாக வெளியிட்டார்கள். தமது அரசியல் சீர்திருத்த கோரிக்கைகளை வென்றெடுப்பதற்கான பிரச்சார களமாக இவ்வியக்கத்தை ஆக்கிக்கொண்டார்கள்.

1072 இடங்களில் புதிதாக ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த கள்ளுத் தவறணைகளை எதிர்த்து நின்றது இவர்கள் மட்டுமல்ல, ஏற்கெனவே வளர்ந்து வந்த சாராய வியாபாரிகளும் மதுவொழிப்பு இயக்கத்திற்கு ஆதரவளித்தது தான் வேடிக்கை. மதுவொழிப்பு இயக்கத்தில் தலைமை பாத்திரம் ஏற்றவர்களில் கணிசமானோர் இப்படி சாராய வியாபார பின்னணியை உடையவர்களாக இருந்தனர் என்று ஒரு பட்டியலையே விக்டர் ஐவன் தனது “விகாரைப் புரட்சி” என்கிற நூலில் விளங்கப்படுத்துகிறார். தலைமை செயற்பாட்டாளர்களாக இருந்த டீ.எஸ்.சேனநாயக்க சகோதரர்கள் போன்றோர் கூட இந்த பின்னணியையுடயவர்கள் தான். 

இந்த சூழலில் கண்டி ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டு நூற்றாண்டு நினைவையொட்டி தேசிய உணர்வை வலுப்படுத்தும் வெகுஜன பிரசாரங்கள் இணைந்துகொண்டன. இவை இலங்கை தேசியம் என்கிற உணர்வுக்குப் பதிலாக சிங்கள பௌத்த தேசியத்தை முன்னிறுத்தியே முடுக்கிவிடப்பட்டன. பிரித்தானிய ஆட்சியாளர்களை இவ்வாறு “சீண்டுகின்ற” தொடர்ச்சியான நிகழ்வுகள் பிரித்தானிய தரப்பின் வெறுப்பை அதிகரிக்கச் செய்துகொண்டிருந்தன.

அப்படிப்பட்ட சூழலில் தான் கண்டி கலவரத்துக்கு பின்புல காட்சிகள் நடந்தேறின.

கண்டி கலவரம் குறித்த ஆவணங்கள், நூல்கள், ஆய்வுகள் போதுமான அளவு தமிழில் வெளிவந்ததில்லை. அதே வேளை சிங்களத்தில் ஏராளமாக வெளிவந்துள்ளன. அவ்வாறு வெளிவந்துள்ள நூல்கள் பெரும்பாலும் பக்க சார்பான தகவல்களையும் கருத்துக்களையுமே கொண்டிருப்பதால் காலப்போக்கில் அவற்றை மூலாதாரமாகக் கொண்டு திரிக்கப்பட்ட பல ஆவணங்களே இன்று எஞ்சியிருக்கின்றன. இந்த சூழலில் உண்மையைத் தேடி வரலாற்றைப் பதிவு செய்வது என்பது எவருக்கும் சிரமமான பணியே. ஆங்கிலத்தில் கூட கணிசமான நூல்கள் வெளிவந்துள்ளன. அவற்றில் முதன்மையானதும், முக்கியமானதுமான இரு நூல்கள் குறித்து வாசகர்கள் அறிந்திருப்பது அவசியம். 
ஆர்மண்ட் டி சூசா
அந்த நூறு நாட்கள்
“இராணுவச் சட்டத்தின் கீழ் இலங்கையில் 100  நாட்கள்” (Hundred days in ceylon under martial law 1915- Armand de Souza) என்கிற நூல் முதன்மையான நூல். இந்த நூலை எழுதிய  ஆர்மண்ட் டி சூசா (1874 – 1921) அன்று பிரபல பத்திரிகையாளர். மோர்னிங் லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர். இலங்கை தேசிய காங்கிரசின் ஸ்தாபக உறுப்பினர்களில் ஒருவர். அவரது மகன் டொரிக் டீ சூசா ஒரு இரண்டாம் உலக மகா யுத்த காலத்தில் தலைமறைவு அரசியலில் ஈடுபட்ட லங்கா சமாஜ கட்சியைச் சேர்ந்த ட்ரொஸ்கிஸ்ட். செனட்டராகவும் இருந்தவர்.

சூசா எழுதிய நூல் வெவ்வேறு நபர்களால் சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்டு இரண்டு நூல்கள் வெளிவந்திருக்கின்றன. அது எப்பேர்பட்ட திரிபை கொண்டிருக்கிறது என்பதை நிரூபிக்க இரண்டு மொழிபெயர்ப்புக்கும் உள்ள வித்தியாசங்களே போதும். இந்த இரு நூல்களின் முன் அட்டை தலைப்பைக் கூட “சிங்கள - மரக்கல கலவரம்” என்றே தலைப்பிட்டிருக்கிறார்கள். இன்றுவரை சிங்களத்தில் வெளிவந்துள்ள சகல ஆய்வுகளும், கட்டுரைகளும் கூட அப்படித்தான் இந்த கலவரத்தை அழைக்கின்றன. இலங்கையின் இனச்சிக்கல் குறித்து ஆராய்பவர்கள் எவரும் இந்த நூலை தவிர்த்திருக்க மாட்டார்கள். அத்தனை முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நூல்.

விரிவான ஆதாரங்களுடனும், தகவல்களுடனும் கலவரம் நிகழ்ந்து சரியாக ஒரே வருடத்தில் 369 பக்கங்களில் இல் இந்த நூல் வெளியாகிவிட்டது. 
நூலின் முன்னுரையை அவர் தொடக்கும் போது “இராணுவச் சட்டம் அமுலிலிருந்த போது ஒடுக்குமுறைக்கு உள்ளான இலங்கையர்களுக்கு நீதி கிடைக்கச் செய்வதற்காக பிரித்தானியாவின் மனசாட்சியை தட்டியெழுப்புவதற்கு விரும்புகிறேன். இலங்கையில் பிறக்காதபோதும் நான் வாழ்வதற்கான நாடாக இலங்கையைத் தெரிவு செய்தேன். கடந்த மூன்று தசாப்தகாலமாக நான் இலங்கையர்களோடு ஒன்று கலந்து வாழ்கிறேன். நான் இந்த நாட்டின் எந்தவொரு இனத்துக்கோ, வேறு வகுப்பினருக்கோ, குழுக்களுக்கோ பாரபட்சமுடையவன் அல்ல... இந்த கலவரத்தின் ஒரு சாட்சியாகவே இதனைப் பதிவு செய்கிறேன்.” என்கிறார்.
பிரித்தானிய அரசுக்கு உண்மையை விளக்கும் நோக்குடனும், நீதி கோருவதற்காகவுமே இந்த நூலை அவர் சிரமப்பட்டு தொகுத்திருப்பது தெரிகிறது. குறிப்பாக அவர் அன்றைய ஆளுநர் ரொபெட் சால்மஸ் (Robert Chalmers) மீது பல குற்றச்சாட்டுக்களை முன் வைக்கிறார். இந்த கலவரத்தின் போது முறைகேடாக நடந்துகொண்டதற்காக பிரித்தானிய அரசு ஆளுநர் ரொபெட் சால்மசை நீக்கி விட்டு இலங்கைக்கான புதிய ஆளுனரை நியமித்தது இன்னொரு கதை. இலங்கை வரலாற்றில் அப்படிப்பட்ட நீக்கம் எந்த ஒரு ஆளுநருக்கும் நிகழ்ந்ததில்லை.

ஆர்மண்ட் டி சூசா பிரித்தானிய அதிகாரிகளோடு தொடர்ச்சியாக பரிமாறிக்கொண்ட பல கடிதங்கலும் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன. விசாரணை ஆணைக்குழுவின் அவசியத்தை வலியுறுத்துவதே அந்த கடிதங்களின் அடிப்படை சாராம்சமாக இருக்கிறது.

கலவரமும் இராணுவச் சட்டமும்
பொன்னம்பலம் இராமநாதன் எழுதிய “கலவரமும் இராணுவச் சட்டமும்” (Riots and Martial Law in Ceylon – 1915 – P.Ramanathan) என்கிற நூல். இந்த நூலும் மேற்கூறிய நூலும் 1916 வெளிவந்தவையே. 314 பக்கங்களைக் கொண்ட இந்த நூலும் நீதி கேட்டு பல சம்பவங்களையும் ஆதாரங்களையும் பதிவு செய்யும் ஒரு ஆவணமாகவே இராமநாதன் வெளியிட்டுள்ளார். சட்டம் படித்த ஒருவர் என்பதாலேயோ என்னவோ இந்த நூலின் அமைப்பு ஒரு சட்டப் புத்தகத்தைப் போன்ற அமைப்புடன் உள்ளடக்கத்தை சுருக்கமாக விளக்குகின்ற ஓரத் தலைப்புகளை ஒவ்வொரு பக்கங்களிலும் கொண்டிருக்கிறது. பல கடிதங்கள், அறிக்கைகள் உள்ளிட்ட ஆவணங்களும் இந்த நூலில் இணைக்கப்பட்டுள்ளன. மேலதிக விளக்கங்களுக்காக புகைப்படங்கள், வரைபடங்கள் போன்றனவும் உள்ளடங்கிய விரிவான நூல் அது.

அன்றைய சட்டசபைப் பிரதிநிதியான பொன்னம்பலம் இராமநாதன் இந்த கலவரத்தின் பின்னர் கைது செய்யப்பட்ட சிங்களத் தலைவர்களை பிரித்தானிய சென்று முறையிட்டு விடுவித்த கதையை பின்னர் விரிவாகப் பார்க்கலாம். இதுவரையான தமிழ் அரசியல் தலைவர்கள் அனைவரையுமே தமிழ் இனவாதிகளாக சித்திரிக்கும் சிங்கள பேரினவாத தரப்பு பொன்னம்பலம் இராமநாதன் குறித்து எப்போதும் ஒரு மென்போக்கைக் கடைப்பிடிப்பதன் பின்புலம் இது தான்.

சட்ட சபையில் 14.10.1915 அன்று இராமநாதன் நிகழ்த்திய உரையில் இப்படிக் குறிப்பிடுகிறார். 
“ஐயகோ... எங்களுக்கு என்ன நடந்திருக்கிறது. எங்கள் மாட்சிமை தங்கிய அரசருக்கு என்ன நடந்திருக்கிறது. இந்த சட்ட சபைக்கு என்ன நடந்திருக்கிறது. எங்களைக் காக்க இந்த உலகில் எவரும் இல்லையோ...
...பொதுப்பணியில் தனிப்பட்ட நட்புக்கு இடமில்லை. இன்று மிகவும் சங்கடமான ஒரு நாள். இதுவரை சட்டசபைக்கு சராசரி 350 முறைப்பாடுகள் கிடைத்திருக்கிறது. இந்த முறைப்பாடுகளைக் கண்டு மிகவும் வருந்தேனேன். செய்யாத குற்றத்துக்கு துரதிர்ஷ்டவசமாக தண்டனை அனுபவிக்கும் இவர்களுக்காக ஏதாவது பரிகாரம் காண வேண்டும் என்பதை உணர்ந்தேன். இராணுவச் சட்டத்தைப் பயன்படுத்தி கூறமுடியாத அளவுக்கு நடந்தேறியுள்ள சட்டவிரோத அநியாயங்களுக்கு நீதி  கிடைக்கசெய்யவேண்டும்...”
இந்த சட்டசபை உரையாடலின் சிறு பகுதியை இந்த நூலின் முன்னுரையில் சேர்த்திருக்கிறார் இராமநாதன்.

முஸ்லிம்கள் பற்றிய அறிமுகம்
ஆர்மண்ட் டி சூசாவின் நூலில் கலவரத்துடன் சம்பந்தமுடயவர்கள் குறித்து விபரிக்கையில் முஸ்லிம்களை தனியாக இனம்பிரிக்கிறார்.
“இலங்கையின் இராணுவச் சேவையில் பணியாற்ற வந்த மலே இனத்தவர்கள் குறிப்பிடத்தக்க அளவு நிரந்தரமாக வசித்து வருகிறார்கள். அவர்கள் ஏனைய இனத்தவர்களுடன் எந்த சர்ச்சையும் இல்லாது சிங்கள, தமிழ் சமூகங்களோடு கலந்து அமைதியாக வாழ்ந்து வருகிறார்கள். மேற்கு இந்தியாவிலிருந்து வியாபாரம் செய்வதற்காக வந்த போறா இனத்தவர்களும், ஆப்கானிஸ்தானிலிருந்து வந்த ஆப்கான் இனத்தவர்களும் சிறிய எண்ணிக்கையில் உள்ளனர். இந்த இரு பிரிவினரும் அடகு வைத்தல், கடன் வட்டி வசூலித்தல் போன்றவற்றால் மக்களாலும் பொலிசாராலும் அதிருப்திக்கு உள்ளானவர்கள்.  
இலங்கையின் மூன்றாவது பெரிய ஜனத்தொகையைக் கொண்டவர்கள் 283,000 பேரைக்கொண்ட முஸ்லிம்கள். வெவ்வேறு காலங்களில் அரபு நாட்டிலிருந்து வியாபாரத்துக்காக வந்து கரையோரங்களில் குடியேறி பெருகியவர்கள். குறிப்பிட்ட இன அடையாளத்தை குறிப்பிடமுடியாத நிலையில் அவர்கள் பொதுவில் “இலங்கை மரக்கல” என்றும் அழைக்கபடுகிறார்கள். 
இந்தியாவில் மலபார் கரையோரங்களிலிருந்து வந்த சிறு வியாபாரம் செய்து இங்கு நிரந்தர குடியிருப்பாளர்களாக ஆன முஸ்லிம்கள் (ஹம்பயா) இருக்கின்றனர். இவர்களே கலவரத்தில் சம்பந்தப்பட்டவர்களாக உள்ளனர். பொதுவில் இவர்கள் விரும்பத்தகாதவர்களாக இருந்ததால் உள்நாட்டு முஸ்லிம்களுடன் தம்மை அடையாளப்படுத்திக்கொள்ள முயற்சித்தனர்  என்று கலவரம் பற்றிய விசாரணைகளில் தெரியவருகிறது. கலவரத்தின் போது மலே, போறா, ஆப்கான் போன்ற எந்த முஸ்லிம் பிரிவினருக்கும் பிரச்சினை ஏற்படவில்லை. இந்த ஹம்ப மரக்கல பிரிவினரிடமிருந்து ஆரம்பித்து பின்னர் ஏனைய முஸ்லிம்களை நோக்கி அது விரிவுபெற்றது. இந்த கரையோர முஸ்லிம்களால் உள்நாட்டிலுள்ள ஏனைய இனத்தவர்களை வென்றெடுக்க முடியவில்லை. “ஐரோப்பாவில் தனித்து வாழும் அந்நிய யூதர்களைப் போல வாழ்ந்தார்கள்.” என்று டேவி தனது நாட்குறிப்பில் தெரிவித்திருக்கிறார்.”
ஆக மொத்தத்தில் இந்த இரு நூல்களின் உள்ளடக்கமும் முஸ்லிம்களுக்கு சாதகமானது அல்ல. பெரும்பாலும் சிங்களவர்களுக்கு நேர்ந்த அநீதிகளையே விளக்கிக் கொண்டு போகிறது. அவை ஆதாரத்துடன் முன்வைக்கப்படுகின்றன.

முஸ்லிம்கள் குறித்த அதிருப்தி எப்படிப்பட்டதாக இருந்தது. அப்படியான ஐதீகத்தை பரவலாகக் கொண்டிருப்பதற்கு எதுவாக முஸ்லிம்களின் (“மரக்கல”) நடைமுறை எவாறு இருந்தது என்பது குறித்து அந்த நூலில் மேலதிகமாக விபரித்துக்கொண்டு செல்கிறார் சூசா. 
(தொடரும்...)


இக்கட்டுரையாக்கத்துக்கு உசாத்துணைக்கு பயன்பட்டவை
  • Riots and Martial Law in Ceylon - 1915 Hardcover – P. Ramanathan (St.Martins Press, 15 Craven Street, Strand, 1916)
  • Hundred days in ceylon under martial law 1915 - Armand de Souza (The Ceylon Morning Leader - 1916)
  • “Hobgoblins, Low-Country Sinhalese Plotters or Local Elite Chauvinists?: Directions and Patterns in the 1915 Communal Riots”, Roberts, Michael (Sri Lanka Journal of the Social Sciences 1981)
  •  “The Rev.A.G.Fraser and the Riots of 1915”, James Rutnam,  (Ceylon Journal of Historical and Social Studies, Vol.1 No. 2 (July-December 1971))
  • “අනගාරික ධර්මපාල” - ඩේවිඩ් කරුණාරත්න (M.D.Gunasena & Co. (Pvt.) Ltd, 2012)
  • ධර්මපාල ලිපි අනගාරික ධර්මපාලතුමාගේ ලිපි සංග්‍රහයකි ආචාර්ය ආනන්ද ඩබ්ලිව්. පී. ගුරුගේ සංඥාපනය –(Department Of Government Printing-1991)
  • ශ්‍රී ලංකාවේ ගැටුම් නිරාකරණය සහ සාමය ගොඩනැංවීම : බෞද්ධ පර්යාලෝකය - Nirmanee Circle (Social scientists Association, 2008)


உலக மரபுரிமைச் சொத்தாக அங்கீகரிக்கப்பட்டுள்ள மலையகம் - விண்மணி



மலையகத்தின் மலைச்சிகரங்களில் அமைந்துள்ள பாதுகாக்கப்பட்டுள்ள கானகங்கள், ஹோர்டன் சமவெளி தேசியப் பூங்கா மற்றும் நக்கிள்ஸ் பாதுகாக்கப்பட்டுள்ள காடுகள் ஆகியன யுனெஸ்கோ அமைப்பினால் உலக மரபுரிமைச் சொத்துக்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

உலக ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த இக்காடுகள் அபூர்வமான எண்ணிக்கையிலான இயற்கைத் தாவரங்களுக்கும் உயிரினங்களுக்கும் இயல் வாழிடமாக உள்ளன. மிக அபூர்வமாகவே மனிதர்கள் பிரவேசித்துள்ள மலையுச்சியிலும் அடிவாரத்திலுமுள்ள குளிர் வலயக் காடுகளும் இதில் அடங்கியுள்ளன. இது நாம் பெருமைப்பட வேண்டிய விடயமல்லவா? இவற்றைத் தொடர்ந்து பாதுகாத்து வர அரச மற்றும் சர்வதேச நிறுவனங்களின் அனுசரணை மாத்திரம் போதாது. பொதுமக்களின் ஒத்துழைப்பும் தேவை. இவற்றைப் பற்றி நாம் தெரிந்து கொள்வதன் மூலமே நமது பங்களிப்பை எப்படி வழங்கலாம் என்பதைப் பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

அபூர்வ உயிரினங்கள் மற்றும் தாவரங்கள்

பல்லுயிர்த்தன்மை ஹொட்ஸ்பொட் என்றழைக்கப்படுகின்ற இப்பிரதேசத்தில் இலங்கையின் அரைவாசிக்கும் மேற்பட்ட வட்டாரத்திற்குள் முதுகெலும்புடைய உயிரினங்கள் மற்றும் மலரினங்கள் 34 விதமான வட்டாரத்திற்குரிய தாவரங்கள், புதர்ச்செடிகள் மற்றும் மூலிகைகள் ஆகியன பல்லுயிரித்தன்மை கொண்ட இக்குளிர் வலயக் காடுகளிலும் அதனோடிணைந்துள்ள புல்வெளிப் பிரதேசங்களிலும் அடங்கியுள்ளன. இப்பிரதேசங்களின் தாவரங்களின் பரிமாணம் மற்றும் அபிவிருத்தி சம்பந்தமான உறுதியான புவிச்சரிதவியல் மற்றும் உயிரியல் செயன்முறைச் சான்றுகளை இப்பிரதேச விலங்குகள் வழங்குகின்றன.

இப்பிரதேசத்திற்குரிய ஊதா நிறத்தை உடைய நீண்ட வால் குரங்கு (Semnopithecus vetulas) தாவரங்கள் மற்றும் விலங்கினங்களுக்குரிய அமைப்பியல் ரீதியான இன்று அடையாளம் காணப்பட முடியாத பல்வேறு விதமான பரிமாணங்களைக் கடந்து வந்துள்ளது.

இலங்கையில் காணப்பட்ட ஜெனஸ்பந்தேரா (Genus Panthera) வகையில் எஞ்சியுள்ள ஒரே இனமான இலங்கைச்சிறுத்தைப் புலி 1.8 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூனை வகை உயிரினங்களிலிருந்து விரிவடைந்து பந்தேரா பார்டஸ் கொட்டியா (Panthera Pardus Kotiya) என்னும் ஒரு விசேட உப பிரிவாக வளர்ச்சியடைந்தது. இலங்கைக்கே உரிய உயிரினமான இச் சிறுத்தைப் புலிகளின் ஒரே வாழ்விடமாக அமைந்துள்ளது மேற்குறிப்பிட்ட மலையகப் பிரதேசங்களேயாகும்.

நீண்ட தனிமைப்படுத்தலும் தொடர்ச்சியான பரிமாணமும் தெற்காசியப் பிராந்தியங்களுக்கேயான மெல்லுடலிகளை (முதுகெலும்பற்ற உயிரினங்கள்) இலங்கையில் தோற்றுவித்துள்ளது.

மலையகக் குளிர்வலயக் காடுகள் பல அழிந்து வரும் தாவரங்களுக்கும் உயிரினங்களுக்குமான ஒரேயொரு வாழிடமாக இருந்து வருவதனால் ஸ்தல சூழல் பாதுகாப்பில் மிக முக்கிய இடம் வகிக்கின்றன. இத்தகைய ஏனைய பிரதேசங்களையும் விட அதிகளவான உயிரின மற்றும் தாவர இனங்கள் இப்பிரதேசத்தில் உள்ளதாக அறியப்பட்டுள்ளது. பிரதேசத்திற்குரிய உயிரினங்கள் மற்றும் தாவர வகைகள் என்ற அளவிலும் உயர்தரத்திலுள்ளது. 408 வகையான முள்ளந்தண்டுடைய விலங்குகள் 83 வீதமான நன்னீர் மீனினங்கள் 81 வீதமான நிலநீர் வாழ்வன ஆகியன மலையுச்சிக் கானகங்களுக்கே உரியனவாகும். இதில் 91.1% நிலநீர் வாழ்வனவும் 89 வீதமான ஊர்வனவும் ஹோட்டன் சமவெளிக்கும் 64 வீதமான நிலநீர் வாழ்வனவும் 51 வீதமான ஊர்வனவும் பாதுகாக்கப்பட்டுள்ள நக்கிள்ஸ் காடுகள் விசேடமானவையாகும்.

பயனுறுதி மிக்க பாதுகாப்பு ஏற்பாடுகள்

இச் சொத்தின் பாகங்கள் இலங்கையில் எஞ்சியுள்ள முக்கியத்துவம் வாய்ந்த குளிர்வலயக் காடுகளின் வரையறுக்கப்பட்ட நீட்சி ஆகும். இப்பிரதேசம் பயனுறுதி மிக்க வகையில் பாதுகாக்கப்பட்டும் முகாமைத்துவம் செய்யப்பட்டும் வருகின்றன. பாதுகாக்கப்பட்டுள்ள மலையுச்சிக் காடுகள் பல பாதுகாப்பு வலயங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. ஹோர்டன் தேசிய பூங்கா உள்ளிட்ட ஒரு பொது எல்லை இப்பிரதேசத்திற்காக வகுக்கப்பட்டுள்ளது. சூழவுள்ள நிலப்பாவனையிலிருந்து பாதுகாப்பு பெற பொருத்தமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இடைப்பிரதேசங்களினால் ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்களுக்குட்பட்ட ஏனைய பல அச்சுறுத்தல்களும் இனங்காட்டப்பட்டுள்ளன.

இச் சொத்து அரச உடமையாக உள்ளது. இது தொடர்பில் பல்வேறு பாதுகாப்புச் சட்டங்களும் இயற்றப்பட்டுள்ளன. இதனால் இப்பிரதேசம் வலிமையானதும் பயனுறுதி மிக்கதுமான சட்ட ரீதியான பாதுகாப்பைக் கொண்டுள்ளது. தொடர்ச்சியாக மீளாய்வு செய்யப்படுவதும் இற்றைப்படுத்தப்படுவதுமான மனிதன் ஒன்றுடன் ஒன்று இசைவான வெவ்வேறு திட்டங்களின் மூலமாகவே ஒவ்வொரு பாகமும் முகாமைத்துவம் செய்யப்பட்டு வருகின்றது. இந்நிலை மாறி முழுச் சொத்திற்குமான பொதுவான முகாமைத்துவ முறையின் தேவை உணரப்பட்டுள்ளது. போதுமான அளவிலான நிதியொதுக்கீடுகளும் தேவையாகவுள்ளன.

பாதிப்புகளும் இனங்காணப்பட்ட

அச்சுறுத்தல்களும்

தற்பொழுது பாதிப்பை ஏற்படுத்தி வருவதும் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதுமென இனங்காணப்பட்ட அச்சுறுத்தல்களின் தன்மையும் அளவும் ஒவ்வொரு பகுதிக்கும் வேறுபட்டதாகவுள்ளது. மலையுச்சிக் காடுகளைப் பொறுத்த வரையில் சிவனொளிபாதமலைக்கு வருடாந்தம் வருகை தரும் இரண்டு மில்லியன் யாத்திரிகர்கள் காட்டிற்கும் சூழலுக்கும் வழிநெடுகிலும் மலையுச்சியிலும் குறிப்பிடத்தக்க அளவான பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றார்கள். சட்ட விரோத இரத்தினக்கல் அகழ்வுகளும் ஒரு அச்சுறுத்தலாகவேயுள்ளன.

மேலும், ஆக்கிரமித்துப் பரவும் தாவர மற்றும் விலங்கினங்களால் தாவரங்கள் பட்டுப் போதல் அவ்வப்போது ஏற்படும் காட்டுத்தீ அழிவுகள் மற்றும் ஏலக்காய் பயிரிடுதல் போன்ற அச்சுறுத்தல்களுமுள்ளன.

இவ்வச்சுறுத்தல்கள் உலகச் சிறப்பு வாய்ந்த இச் சொத்துக்களின் பெறுமதிக்கு ஊறிழைக்கா வண்ணம் பாதுகாப்பதற்கான பயனுறுதிமிக்க வேலைத்திட்டங்கள் தேவையாயுள்ளன. இப்பிரதேசத்தை சூழ வாழும் மக்கள் முகாமைத்துவத்திற்கு பங்களிப்புச் செய்யக் கூடியதான ஒரு உறுதியான வேலைத்திட்டத்தின் அவசியம் குறித்து சூழலியலாளர்கள் வலியுறுத்தி வருகின்றார்கள்.

இதில் அடங்கியுள்ள மூன்று பகுதிகளுக்கும் மேலதிகமாக இலங்கையின் தென்பகுதியில் அமைந்துள்ள உலகப் பாரம்பரிய சொத்தாக அங்கீகரிக்கப்பட்டுள்ள பாதுகாக்கப்பட்ட சிங்கராஜ வனத்திற்கும் இச்சொத்துக்கும் உறுதியான தொடர்பு உண்டு. இவ்விரண்டு சொத்துக்களும் ஒரே நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும் என்ற கருத்து இப்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.


நன்றி - veerakesari

போலி வாக்குறுதிகளை நம்பி ஏமாறும் தோட்டத் தொழிலாளர்கள் - சிலாபம் திண்ணனூரான்


மலையக தோட்டத்தொழிலாளர்கள் இந்த நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு இரண்டு நூற்றாண்டுகளாக பாரிய பங்களிப்பை வழங்கி வருகின்றனர் என்பது அனைவரும் அறிந்ததாகும். ஆனால், இந்த மக்களின் வாழ்க்கை இன்னும் அபிவிருத்தியடையாமல் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது. அரசியல், சமூக, பொருளாதாரம், கல்வி உள்ளிட்ட அனைத்து வகையிலும் நசுக்கப்பட்ட மக்களாகவே காணப்படுகின்றனர்.

இம்மக்கள் வாழ்வில் மறுமலர்ச்சி என்பது வெறும் கண்துடைப்பாகவே இருக்கிறது. அரசியல் ரீதியான உரிமைகளும் பொருளாதார நலன்களும் ஏனைய விடயங்களும் கிடைப்பதாக இல்லை. அனைத்தையும் போராடியே பெற்றுக்கொள்ள வேண்டியதாக இருக்கிறது.

கடந்த வருடம் ஜனவரி 8 ஆம் திகதி இந்நாட்டில் ஏற்பட்ட ஜனநாயக ரீதியிலான அரசியல் மாற்றத்திற்கு மலையக சமூகம் வழங்கிய பங்களிப்பை குறைவாக மதிப்பிட முடியாது.

மலையக சமூகத்தின் பிரதி நிதிகளாக பாராளுமன்றத்திற்கும் மாகாண சபை உள்ளூராட்சி சபைகளுக்கும் பல உறுப்பினர்கள் அனுப்பப்பட்டும் இது காலம் வரையில் இச்சமூகத்தின் பல தேவைகள் கிடப்பிலேயே உள்ளன இம்மக்கள் அரசியல் ரீதியாக பேரினவாதிகளாலும் தமது சமூக அரசியல்வாதிகளாலும் ஏமாற்றப்பட்டே வருகின்றனர்.

இவ்வாறான ஏமாற்று வார்த்தைகளை தேர்தல் மேடைகளில் இம்மக்களிடம் தெரிவித்து வாக்குகளை கொள்ளை அடிப்பதில் அனைவரும் திறமைகளைக்காட்டி வருகின்றனர்.

2015 இல் ஏற்பட்ட நல்லாட்சியில் பெரும் மாற்றத்தை இம்மக்கள் எதிர்பார்த்து இன்று தோற்றுப்போய்விட்டனர். இவர்களின் சம்பளப் பிரச்சினைக்குக்கூட இன்று தீர்வு காண முடியாது அனாதைகளாக்கப்பட்டுள்ளனர். மலையகத்தில் ஒரு இலட்சத்து 60 ஆயிரம் தொழிலாளர் குடும்பங்கள் வாழ்வதாக தகவல்கள் வெளி வந்துள்ள நிலையில் இச்சமூகத்தின் அடையாளச் சின்னமாக காணப்படும் குடியிருப்பு இன்னும் அகற்றப்படாது இருப்பது கவலைக்குரிய விடயமாகும்.

கடந்த ராஜபக் ஷ ஆட்சிக்காலத்தில் (2006 இல்) தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சினால் பெருந்தோட்ட மக்களின் சமூக அபிவிருத்திக்கான தேசிய நடவடிக்கைத்திட்டம் 2006 – 2015 என்ற பத்தாண்டு திட்டம் முன்வைக்கப்பட்டது. 82 பக்கங்களைக் கொண்ட ஆலோசனைகள் 54 பக்கங்களை கொண்ட பின்னிணைப்புக்கள் (136 பக்கங்கள்) ஆலோசனைகள் என்பனவற்றை உள்ளடக்கிய இத்திட்டம் பற்றிய விளக்க நூலும் வெளியிடப்பட்டது. இப்பத்தாண்டு விளக்கத்திட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள சுகாதாரம், கல்வி, தொழிலும், தொழிற்பயிற்சியும், வீடமைப்பு, நீர் விநியோகம் மற்றும் கழிவகற்றல், உட்கட்டமைப்பு, சமூக அபிவிருத்தி, பால் நிலை சமத்துவமும் மனித உரிமைகளும் ஆகிய திட்டங்கள் 2006 முதல் 2015 வரையிலான பத்தாண்டு காலத்தில் முன்னெடுக்கப்பட்டு இருந்திருந்தால் மலையக மக்களின் வாழ்வில் பெரும் மறுமலர்ச்சி ஏற்பட்டிருக்கும்.

மலையக சமூகத்தை பொறுத்தவரை சமூக பிரதிநிதிகள் முன் வைக்கும் திட்டங்கள் வெறும் ஏட்டு சுரைக்காயைப்போன்றே உள்ளதை அவதானிக்கலாம்.

ஒரு சமூகத்தின் மறுமலர்ச்சி அல்லது எழுச்சி அச்சமூகத்திலுள்ள கல்விச்சமூகத்தால்தான் ஏற்படுத்த முடியும் என மார்ட்டீன் லூதர்கிங் கூறியதை நினைத்துப் பார்க்க வேண்டும்.

2015 ஆம் ஆண்டு மார்ச் 31 உடன் செயலிழந்து விட்ட கூட்டு ஒப்பந்தத்தை மீண்டும் செய்வதற்கு மலையகத் தலைமைகள் முன்வராமை அவர்களின் இயலாமையைக் காட்டுகின்றது. வெள்ளையர்கள் எந்தெந்த நாட்டை கைப்பற்றி விவசாய தொழிலாளர்களை உருவாக்கினரோ அந்நாடுகளில் எல்லாம் இன்றுவரை மாத சம்பளம் வழங்கப்படுவதில்லை. அனைவரையும் பல நூற்றாண்டுகளாக முதலாளி வர்க்கத்திற்கு அடிமைகளாகவும் கூலிகளாகவுமே பதிவு செய்தும் சட்டம் இயற்றியும் வைத்து விட்டனர். அவர்களால் எழுதப்பட்ட பல ஆங்கில நூல்கள் இதை தெளிவாக தெரிவிக்கின்றன.

1970 ஆம் ஆண்டு இ.தொ.கா. சிறிமாவோ அரசிடம் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஏனைய துறையைச் சேர்ந்த ஊழியர்களுக்கு வழங்குவது போன்று மாதச் சம்பளம் வழங்குமாறு கோரிக்கையை முன்வைத்தது. அன்றைய நிதி அமைச்சராக இருந்த டாக்டர் என்.எம்.பெரேரா இக் கோரிக்கையை நிராகரித்து விவசாயத் தொழிலாளர்களுக்கு மாதச் சம்பளம் வழங்க முடியாது. அது செயற்படுத்த முடியாத ஒரு நடைமுறை என தெரிவித்து விட்டார்.

இதை மலையக தொழிற்சங்கங்கள் உணர வேண்டும்.

1865 இல் ஆங்கிலேயரால் இலவசமாக அரிசியும் மாவும் தொழிலாளருக்கு வழங்கப்பட்டதுடன் ஆண் தொழிலாளர்களுக்கு 33 காசுகளும், பெண் தொழிலாளர்களுக்கு 25 காசுகளும் நாள் சம்பளமாக (கூலியாக) வழங்கப்பட்டது. 1930 இல் ஆணுக்கு 41 சதமும் பெண்ணுக்கு 33 சதமும் வழங்கப்பட்டுள்ளது. 1967 இல் நாள் ஒன்றுக்கு ஆணுக்கு 1 ரூபா 35 சதமும் பெண் தொழிலாளருக்கு 1 ரூபா 15 சதமும் வழங்கப்பட்டுள்ளது. 1979 இல் ஆணுக்கு 2ரூபா 51 சதமும் பெண்ணுக்கு 2 ரூபா 32 சதமும் 1988 இல் 31 ரூபா 76 சதமாக உயர்வடைந்தது. 1998 இல் அறிமுகப்படுத்தப்பட்ட கூட்டு ஒப்பந்தம் மூலமாக அடிப்படை நாட்சம்பளம் 95 ரூபாவாக உயர்த்தப்பட்டது. 2013 இல் ஏற்படுத்தப்பட்ட கூட்டு ஒப்பந்த சம்பளமாக 450 ரூபாவும் வரவுக் கொடுப்பனவு இதர கொடுப்பனவுகளாக 170 ரூபாயுமாக உயர்வடைந்தது.

இன்று மலையகத்தில் மக்களின் சக்தியாக விளங்க வேண்டிய தொழிற்சங்கங்களும் அரசியல் கட்சிகளும் குரோத அரசியலில் இறங்கியுள்ளமையால் ஒற்றுமை பிளவடைந்து தொழிலாளர் வர்க்கத்தின் கூட்டு ஒப்பந்தம் கூட சின்னா பின்னமாகி விட்டது. கடந்த காலத்தில் சம்பள உயர்வு கோரிக்கையை முன்வைத்து தொழிற்சங்க போராட்டத்தில் குதித்த தொழிலாளர் வர்க்கம் இன்று முறையான தலைமைகள் இன்றி தடுமாறுகின்றனர்.

28.12.1939 இல் ஹேவாஹெட்ட முல்லோயா தோட்டத்தில் பதினாறு சதம் சம்பள உயர்வுக்காக போராட்டம் நடத்தி கோவிந்தன் என்ற தொழிலாளி பொலிஸாரின் துப்பாக்கிக் குண்டுக்கு பலியானார். இன்று அதே தொழிலாளர் வர்க்கம் அரசியல் விளம்பரதாரர்களால் மழுங்கடிக்கப்பட்டு விட்டனர். நாடு முழுவதும் தோட்டத்தொழிலாளரின் சம்பளப் பிரச்சினை பேசப்படுகின்றது.

மலையக மக்கள் மத்தியில் ஒரு ஸ்திரமற்ற குழப்ப நிலை காணப்படுகின்றது. முதலாளிமார் சம்மேளனமும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்க பிரதிநிதிகளும் திறந்த மேடையில் வெளிப்படையாகப் பேச வேண்டும். அப்பேச்சு வார்த்தையின் போது எவ்வாறான நிலையில் பேச்சு இடம்பெறுகிறது என்பதை உலக மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இதுவே மக்களின் கோரிக்கையாக உள்ளது.

வாக்குறுதிகளை நம்பி ஏமாந்து போன மலையக மக்கள் 2016 ஆம் ஆண்டில் எவ்வாறு இருக்கப் போகிறார்கள் என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்.


நன்றி - veerakesari

உள்ளூராட்சி மன்ற சட்ட ரீதியான தடை நீக்கப்பட்டமை தோட்டங்கள் கிராமமாவதன் முதற்படியாகும் - துரைசாமி நடராஜா


உள்ளூராட்சி முறைமையை கீழ் மட்டக் குடியரசு என்று கூறுகிறார்கள். இந்த வகையில் உள்ளூராட்சி முறைமை முக்கியத்துவம் பெற்று விளங்குகின்றது.

எனினும் உள்ளூராட்சி மன்றங்களின் ஊடாக பெருந்தோட்ட மக்கள் சேவைகளை பெற்றுக்கொள்வதில் இது வரை காலம் கதவடைப்பு நிலையே இருந்து வந்துள்ளது. இந்தக் கதவடைப்பு நிலைமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு உள்ளூராட்சி மன்றங்களின் ஊடான சேவையை பெருந்தோட்ட மக்களும் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பினை தமிழ் முற்போக்கு கூட்டணி உருவாக்கிக் கொடுத்துள்ளது என்று மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் ஏ. லோறன்ஸ் தெரிவித்தார். வீரகேசரி வாரவெளியீட்டுக்கு

இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்:  உள்ளூராட்சி நிறுவனத்துக்கு நீண்ட வரலாறு காணப்படுகின்றது. நாட்டின் நிர்வாக முறைக்கு வலுச்சேர்த்து அபிவிருத்திக்கு இந்நிறுவனங்கள் வித்திடுகின்றன. இந்நிலையில் 1937 ஆம் ஆண்டில் உள்ளூராட்சி திருத்தச்சட்டம் ஒன்று கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்தின் ஊடாக தோட்டத்தில் இருக்கின்ற மக்களுக்கு வாக்குரிமை இல்லாது ஒழிக்கப்பட்டது. பாராளுமன்ற தேர்தலில் மலையக மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டதே முதல் சந்தர்ப்பம் என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

எனினும் இது உண்மையல்ல. உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் எம்மவர்கள் ஏற்கனவே வாக்களிக்க முடியாத நிலைமை ஏற்படுத்தப்பட்டதே முதலாவது சந்தர்ப்பமாகும்.

இந்நிலைமை பிற்காலத்தில் மாற்றம் பெற்ற போதிலும் கூட இது காலவரை எமது மக்கள் உள்ளூராட்சி நிறுவனங்களின் பயன்களையும் சேவைகளையும் மு.ைறமையாகப் பெற்றுக்கொண்டு முன்னேறுகின்ற ஒரு நிலை ஏற்படவில்லை. 1987 ஆம் ஆண்டின் உள்ளூராட்சி மன்ற திருத்தச்சட்டமானது பெருந்தோட்ட மக்கள் இந்நிறுவனங்கள் ஊடான சேவையினை பெற்றுக்கொள்வதற்கு முட்டுக்கட்டையாக விளங்கியது என்பது யாவரும் அறிந்த விடயமாகும். தோட்டங்கள் தனியார் துறையினரை சார்ந்த ஒரு விடயமாக கணக்கிலெடுக்கப்பட்டது.

எனவே, அரசாங்க நிதியை பயன்படுத்தி தோட்டங்களில் அபிவிருத்தி சேவைகளை செய்யக்கூடாது என்றும் கருதப்பட்டு வந்தது. 1987 ம் ஆண்டின் 15ம் இலக்க திருத்தச்சட்டம் பெருந்தோட்ட மக்களைப் பொறுத்த வரையில் ஓர் இருண்ட சட்டமாகவே கருதப்படுகின்றது.

ஏனைய பகுதிகளுக்கு எவ்விதமான தடைகளும் இல்லாத நிலையில் தோட்டப்பகுதிகளுக்கு மாத்திரம் உள்ளூராட்சி நிதிகளை பெற்றுக்கொள்வதில் தடை இருந்தமை பிழையான ஒரு செயலேயாகும்.

உடபளாத்த பிரதேச சபையானது கலைக்கப்பட்ட சம்பவம் உங்களுக்கு நன்றாக நினைவில் இருக்கக்கூடும். இது ஒரு மறக்க முடியாத நிகழ்வாகும்.

மலையகத்தைச்சேர்ந்த ஒருவர் உடபளாத்த பிரதேச சபை தலைவராக அப்போது இருந்தார். அந்தப் பிரதேச சபையின் தலைவர் பிரதேச சபையின் நிதியினை பயன்படுத்தி தோட்டப்பகுதிகளில் பல்வேறு அபிவிருத்திப் பணிகளில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டு வந்தது. இதனை அடிப்படையாக வைத்து உடபளாத்த பிரதேச சபையினை கலைக்கும் நடவடிக்கைகளும் அப்போது மேற்கொள்ளப்பட்டமையும் தெரிந்த விடயமாகும்.

எனினும், நுவரெலியா மாவட்டத்தைப் பொறுத்தவரையில் இம்மாவட்டத்தில் எம்மவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாகவும் அமைச்சர்களாகவும் இருந்து வருகின்றார்கள். இவர்களின் மூலமான நிதிகள் தோட்ட அபிவிருத்திக்கும் பயன்படுத்தப்படுகின்றது. எனவே, நுவரெலியா மாவட்டத்தை பொறுத்தவரையில் இது ஒன்றும் பெரிதாகத் தெரியவில்லை.

உள்ளூராட்சி மன்றங்கள் இம்மாவட்டத்தில் சில சந்தர்ப்பங்களில் தோட்டப்புறங்களின் அபிவிருத்திக்கு பங்களிப்பு செய்த போதும் அது பூதாகரம் எடுக்கவில்லை.

ஆனால், நுவரெலியா மாவட்டத்துக்கு வெளியே பதுளை, கண்டி, மாத்தளை என்று எம்மவர்கள் செறிந்து வாழும் எந்த ஒரு மாவட்டமாக இருந்தாலும் பெருந்தோட்டப்பகுதிகள் உள்ளூராட்சி மன்றங்களின் ஊடாக உரியவாறு நிதியினை பெற்றுக்கொள்வதில் முற்றிலும் தடையான ஒரு நிலையே காணப்பட்டமை யாவரும் அறிந்த குறிப்பிடத்தக்க ஒரு விடயமாகும். இதனை யாரும் மறுப்பதற்கில்லை.

உள்ளூராட்சித் தேர்தல்களில் எமது மக்கள் வாக்களிக்கின்றார்கள். எமது பிரதிநிதிகளையும் வெற்றிபெறச் செய்கின்றார்கள். ஆனால் இதனால் பூரணமான பலன் எதுவும் இதுவரையிலும் கிடைக்கவில்லை. வெறுமனே வாக்களித்து பிரதிநிதிகளை தெரிவு செய்வது மட்டும்தான் மிச்சம்.

இவர்களால் தோட்டப்புறங்கள் எழுச்சி பெறுவதற்கு தடைக்கற்கள் இருந்தன. இந்நிலையில் இதனை மாற்றியமைத்து உள்ளூராட்சி நிதியினை எமது தோட்டப்புற சகோதரர்களும் பெற்றுக்கொள்ள மலையக பாராளுமன்ற உறுப்பினர்கள் அண்மையில் ஒருமித்து குரல் கொடுத்தனர். இது பாராட்டத்தக்க காலத்திற்குத் தேவையான ஒரு விடயமாக அமைந்தது.

இத்தோடு நகல் யாப்பு ஒன்றையும் இது தொடர்பில் எம்மவர்களே தயாரித்து அழுத்தம் கொடுத்தமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும். இதன் அடிப்படையில்தான் அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு உள்ளூராட்சி நிதியினை தோட்டங்கள் பெற்றுக்கொள்வதை சட்டமாக்குவதற்கான ஒரு அனுமதியும் கிடைத்திருக்கின்றது.

விரைவில் பாராளுமன்றத்தில் இது சட்டமாக கொண்டு வரப்படுவதோடு 1987 உள்ளூராட்சி திருத்தச் சட்டத்தில் இருந்து அந்த தடை நீக்கப்படும் வாய்ப்பு கிட்டியுள்ளது.


இது மிகப்பெரிய ஒரு வெற்றி என்றே கூறுதல் வேண்டும்.

இதன் மூலமாக தோட்டங்கள் பல வழிகளிலும் மறுமலர்ச்சி பெறும் நிலைமை ஏற்படும். உள்ளூராட்சி மன்றங்களின் சேவை தோட்டங்களுக்கு விஸ்தரிக்கப்படுவது ஒரு வரலாற்று நிகழ்வாகும். கிராமங்களை போன்று சேவைகளை எமது பெருந்தோட்ட மக்கள் பெற்றுக்கொள்ளக்கூடிய ஒரு உரித்து நிலையும் ஏற்படும். இதனால் தோட்டங்கள் ஒரு தனியார் துறையைச் சார்ந்த விடயமாக கணிக்கப்படாமல் தோட்டங்கள் கிராமங்களைப் போன்று புது வடிவம் பெறும். பெருந்தோட்டக் கைத்தொழிலும் தோட்டமும் இப்போது உள்ள நிலையில் ஒன்றாக இருக்கின்றது. எனினும் இனிமேல் தோட்டக்கைத்தொழில் என்பது தனியாகவும் தோட்ட மக்கள் அரசாங்கத்தின் ஊடான சேவைகளை பெற்றுக்கொள்வது என்பது பிறிதொன்றாகும். இனிமேல் நிலைமைகள் மாறுபடும்.

தோட்டங்களை கிராமங்களாக மாற்றியமைக்கும் நிலைமை தொடர்பில் தற்போது அதிகமாக பேசப்பட்டு வருகின்றது. தோட்டங்களை கிரமமாக மாற்றியமைக்கப்படும் பட்சத்தில் இம் மக்கள் பல்வேறு நன்மைகளையும் பெற்றுக்கொள்வர் என்பது உண்மையே. இதன் முதற்கட்டமாக உள்ளூராட்சி மன்றங்களின் நிதி தோட்டங்களுக்கு விஸ்தரிக்கப்படுவதனை எம்மால் அடையாளப்படுத்தப்பட முடியும். தமிழ் முற்போக்கு கூட்டணி மக்களின் தேவையறிந்து காத்திரமான காய்நகர்தல்களை மேற்கொண்டுள்ளமை வரவேற்கத்தக்கதாகும். உள்ளூராட்சி மன்றம் குறித்த தடைகள் நீக்கப்பட்ட போதும் கூட உள்ளூராட்சி மன்றங்களின் எண்ணிக்கை எமக்கு போதாதுள்ளது. சுமார் 15 இலட்சம் இந்திய வம்சாவழி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். எனினும் நுவரெலியா, அம்பகமுவ, தலவாக்கலை, ஹட்டன் என்ற ரீதியில் இரண்டு பிரதேச சபைகளும் இரண்டு நகர சபைகளும் மட்டுமே எமக்குள்ளன. சனத்தொகைக்கேற்ப சுமார் முப்பது உள்ளூராட்சி நிறுவனங்களாவது இருக்க வேண்டும் என்பதே உண்மை நிலையாகும். எனவே உள்ளூராட்சி மன்ற சேவையினை பெருந்தோட்டங்கள் பெற்றுக் கொள்வதில் இருந்த தடையினை நீக்குவதற்கு மலையக கட்சிகள் எவ்வாறு ஒன்றிணைந்து குரல் எழுப்பி அதே போன்று உள்ளூராட்சி நிறுவனங்களின் தொகையினை அதிகரிப்பதற்கும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என்பதே பலரினதும் எதிர்பார்ப்பாக உள்ளது.

புதிய எல்லை மீள் நிர்ணயத்தின் ஊடாக வட்டாரங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதே தவிர உரியவாறு உள்ளூராட்சி நிறுவனங்கள் உருவாக்கப்படாமை பெரும் குறையாகும். கம்பகமுஸவினை மூன்று பிரதேச சபைகளாக பிரிக்கக் கூடிய வாய்ப்புள்ளது. நுவரெலியாவையும் மூன்றாக பிரிக்கலாம். வலப்பனை கொத்மலை என்பவற்றை தலா இரண்டு பிரதேச சபைகளாக பிரிக்க முடியும். திருகோணமலை மாவட்டத்தில் பத்தாயிரம் வாக்காளர்களுகக்கு ஒரு பிரதேச சபை உள்ளது. ஆனால் நுவரெலியாவில் ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட வாக்காளருக்கே ஒரு பிரதேச சபை உள்ளது. இந்நிலை கருத்தில் கொள்ளப்பட்டு உள்ளூராட்சி நிறுவனங்களின் தொகை மலையகத்தில் அதிகரிக்கப்பட வேண்டும். இதன் மூலம் அரசாங்க நிதியினை அதிகமாகப் பெற்று பெருந்தோட்டங்களின் அபிவிருத்திக்கு வித்திட முடியும். எனவே உள்ளூராட்சி நிறுவன அதிகரிப்புக்கு சகலரும் குரல் கொடுக்க வேண்டியது மிகவும் முக்கியமாகும்.




வெளிநாடு செல்லும் மலையகப் பெண்கள் தெளிவூட்டல் பெற்றிருப்பது அவசியம் - எஸ் கே. சந்திரசேகரன்


வெளிநாடுகளுக்குப் பணிப்பெண்களாக வேலைவாய்ப்பு பெற்றுச் செல்லும் பெண்கள், குறிப்பாக மலையகப் பெண்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். அந்த நாடுகளில் ஏமாற்றப்பட்டு பிரச்சினைகளுக்கு உள்ளாகின்றனர்

லெபனான், ஜோர்தான் உட்பட பல்வேறு நாடுகளுக்குச் செல்லும் ஒரு சில இலங்கையர்கள் அந்த நாடுகளிலுள்ள சில உள்ளூர்வாசிகளோடு தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டு பின்னர் பல்வேறு மோசடி நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இவ்வாறு மோசடிகளில் ஈடுபடுபவர்கள் ஆண்களாகவோ அல்லது பெண்களாகவோ இருக்கலாம்.

ஆனால், மோசடிக்காரர்களில் அநேகமானவர்கள் இலங்கையர்கள்தான் என்பது உண்மை. இந்த மோசடிக்காரர்களில் சிலர் பெண்களாக இருப்பதுதான் அதிக கவலைக்குரிய விடயம்.

வீட்டுப் பணிப்பெண்களாக வேலைசெய்யும் பெண்களோடு இவர்கள்; தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டு அவர்களுக்கு அதிக சம்பளத்தோடு வேறு வீடுகளில் நல்ல வேலை பெற்றுத்தருவதாக அல்லது வேறுவிதமான பொய் வாக்குறுதிகளை அளித்து ஆசைகாட்டி அவர்களை, அவர்கள் வேலை செய்யும் வீடுகளிலிருந்து சட்டவிரோதமாக வெளியேறச் செய்கிறார்கள்.

அதன் பின்னர் அவர்களை வேறு வீடுகளுக்கு அழைத்துச் சென்று, அங்கு அத்தகையோரை வேலைக்கு அமர்த்துவதன் மூலம் அந்த வீட்டு சொந்தக்காரர்களிடமிருந்து தரகுப் பணத்தைப் (கமிஷன்) பெற்றுக் கொள்கின்றனர்.

சில சந்தர்ப்பங்களில் அவர்களை வாடகை வீடுகளில் தங்க வைத்து மாறிமாறி வெவ்வேறு வீடுகளுக்கு வேலைக்கு அனுப்பி அதிலும் தரகுப்பணத்தைப் பெற்றுக்கொள்கின்றனர்.

இதுபோன்ற மோசடிக்காரர்களை நம்பி வீடுகளிலிருந்து வெளியேறும் இலங்கைப் பணியாளர்கள் அந்நாடுகளில் சட்டவிரோதமாகப் பணியாற்றும் பணியாளர்களாகின்றனர். அவர்கள் பொலிஸாரிடம் சிக்கும்போது சிறை செல்ல நேரிடுகிறது. சில சந்தர்ப்பங்களில் அவர்கள் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கும் உள்ளாக்கப்படுகின்றனர் அல்லது விபசாரம் செய்ய நிர்ப்பந்திக்கப்படுகின்றனர்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில் இந்தப் பெண்கள் வேறு ஆண்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டு பிள்ளைகள் பெற்ற நிலையில் கைவிடப்பட்டு, பாரிய பிரச்சினைகளில் சிக்கிக்கொண்டிருந்ததையும் காணக்கூடியதாக இருக்கின்றது. சிலவேளைகளில் ஒரு நாட்டிலிருந்து வேறொரு நாட்டுக்கு ஆட்கடத்தல் செய்யப்படுகிறார்கள்.

இந்த மோசடி நபர்களின் செயற்பாடுகள் குறித்து வீட்டுப் பணிப்பெண்களாக செல்லும் நமது பெண்கள் அறியாமல் இருப்பாதால் இவ்வாறான அனர்த்தங்கள் ஏற்படுகின்றன. எனவே, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுச் செல்கின்றவர்கள் வேலை செய்யும் வீடுகளிலிருந்து வெளியேறக் கூடாது.

·தாங்கள் வேலை செய்யும் வீடுகளில் பிரச்சினைகள் ஏற்பட்டால் அவர்கள் எப்பொழுதும் அந்த நாட்டிலுள்ள இலங்கை தூதரகத்திற்கே செல்ல வேண்டும்.

·ஏற்கனவே வெளிநாடுகளிலுள்ள தங்கள் உறவினர்களோடு தொடர்பு கொண்டும், இவ்வாறான மோசடி நபர்களை நம்பியும் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறக்கூடாது என்று அறிவுறுத்தவேண்டும்.

பல சிரமங்களுக்கு மத்தியில் தங்கள் குடும்ப நலன்கருதி வெளிநாடு செல்லும் எமது பெண்களை பாதுகாப்பதற்கு முடிந்தவற்றைச் செய்வது அனைவரினதும் கடமையாகும். நீண்ட காலமாகக் காணாமல் போனவர்கள். வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்று சென்ற சிலர் வெவ்வேறு வீடுகளுக்கு மாறியதன்மூலம் அல்லது சிறையிலோ அல்லது மேற்கூறியதுபோன்று ஏமாற்றுப் போவழிகளிடம் ஏமாந்து வேறு நாடுகளுக்கு கடத்தப்பட்டிருக்கக்கூடும். அவர்களால் தங்களது குடும்பங்களோடு தொடர்புகொள்ளமுடியாத நிலை ஏற்பட்டிருக்கலாம். இதனால் இவர்கள் காணமற்போனவர்கள் எனக் கருதப்படுகிறார்கள். மேற்கூறிய காரணத்தினால் மட்டுமல்ல, சொந்த விருப்பத்தின் பேரில் தங்கள் குடும்பங்களோடு தொடர்புகளை சிலர் துண்டித்துக்கொண்டிருக்கிறார்கள்.

ஒருசிலர் நீண்டகாலம் வெளிநாடுகளில் இருப்பதால் தவறான உறவுகளை ஏற்படுத்திக்கொண்டு சட்டபூர்வமான அல்லது சட்டவிரோதமான முறையில் குடும்பமாகி அங்கு நிரந்தரமாகத் தங்கியிருக்கிறார்கள். இவர்கள் இவ்வாறு தங்களுக்கெனக் குடும்பங்களை ஏற்படுத்திக் கொண்டிருப்பதன் காரணமாக இலங்கையிலுள்ள தங்களது குடும்பங்களோடு தொடர்புகளை துண்டித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஜோர்தானில் இவ்வாறானவர்களுக்கென மணிலா குடியிருப்பு' என்ற பெயரில் ஒரு தனியான இடமே ஒதுக்கப்பட்டிருக்கிறது. லெபனானில் இவ்வாறானவர்கள் தனியான ஒரு பகுதியில் வசித்து வருகிறார்கள். இந்தப் பின்னணியில் நீண்ட காலமாகத் தங்கள் குடும்பங்களோடு தொடர்பு கொள்ளாமல் இருப்பவர்கள் இப்படி தங்களுக்கென அங்கு குடும்பங்களை ஏற்படுத்திக்கொண்டு அங்கேயே நிரந்தரமாகத் தங்கிவிட்டவர்களாக இருக்கலாம்.

இந்த உண்மையை நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும். ஆயினும் காணமற்போனவர்களைத் தேடும் முயற்சிகளை சம்பந்தப்பட்ட குடும்பங்கள் கைவிட்டுவிடக் கூடாது. அவர்களின் தகவல்களை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் வழங்கியோ அல்லது இந்த விடயத்தில் உதவி செய்யும் நிறுவனங்களை நாடியோ அவர்களை தேட முயற்சிக்கலாம்.

எவ்வாறெனினும், வேண்டுமென்றே தங்கள் குடும்பத்தவரோடு தொடர்புகளை அறுத்துக்கொண்டவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்துவது சிரமமான காரியந்தான். இவ்வாறான நிலையை தவிர்ப்பதற்காக ஒருசில உத்திகளைப் பயன்படுத்தலாம். வெளிநாட்டிலுள்ள தங்களது குடும்ப அங்கத்தவர்களோடு எப்போதும் தொடர்புகளை பேணவேண்டும். வசதி கிடைக்கும் போதெல்லாம் அவர்களோடு தொலைபேசியிலோ வேறு தொழில் நுட்பங்களை பயன்படுத்தியோ (ஸ்கைப்) பேசவேண்டும். அவர்கள் பிள்ளைகளோடு தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ள வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும். பிள்ளைகளின் முன்னேற்றம் குறித்து அவர்களுக்கு தொடர்ந்து அறியத்தரவேண்டும்.

வெளிநாட்டிலுள்ள தங்கள் உறவினர் அனுப்பும் பணம், பொருள் என்பவற்றைவிட அவர்மீது நீங்கள் அதிக அக்கறை உள்ளவர்களாகவும் அன்புள்ளவர்களாகவும் இருக்கிறீர்கள் என்பதை அவர் உணரச் செய்யவேண்டும். அவர் குடும்பத்திற்காக செய்யும் தியாகங்களுக்காக அவர்களுக்காக குடும்பத்திலும், கோயில்களிலும் பிரார்த்தனை செய்து, அவ்வாறு செய்வதாக அவர் அறியச் செய்யவேண்டும். அவர் எந்த நோக்கத்திற்காக வெளிநாடு சென்றாரோ அந்த நோக்கத்தை முடியுமானவரை நல்ல முறையில் நிறைவேற்றி வருமாறு எப்போதும் அவருக்கு உணர்த்துவது நல்லது.

முடியுமானவரை இரண்டு ஆண்டுகள் வேலை ஒப்பந்தம் முடிந்தவுடன் தொடர்ந்தும் வேலை செய்வது என்று தீர்மானித்தால் வேலை ஒப்பந்தத்தை நீடித்து அந்த நாட்டில் இருப்பதை தவிர்த்து நாட்டுக்கு திரும்பி வந்து குடும்பத்துடன் உறவுகளை புதுப்பித்து, அவசியமானால் மீண்டும் செல்லுமாறு வலியுறுத்துவது நல்லது. பணம், தொழில் என்பவற்றைவிட உறவுகளை பேணுவது மிகவும் முக்கியம் என்பதை நீங்கள் உணரவேண்டும். வெளிநாட்டில் உங்கள் குடும்ப அங்கத்தவருக்கும் இந்த விடயத்;தை உணர்த்துங்கள்.

நன்றி - veerakesari

தேசபக்தியின் குறுக்குவழி! (1915 கண்டி கலகம் –16) - என்.சரவணன்


உலகம் முழுவதும் தேரவாத பௌத்தத்தை பரப்புவதிலும் நிலைநாட்டுவதிலும் பாரிய பங்களிப்பை செய்த தர்மபால; தூர நோக்கில் இலங்கை தூய சிங்கள பௌத்த நாடாக ஆக வேண்டும் என்பதற்காக அதிக சிரத்தை எடுத்துக்கொண்டார். அதற்காக பௌத்தர்களை இனவாத மனநிலைக்கு தூண்டினார். அதனை பௌத்தத்தின் பேரால் செய்தார். இன்றல்ல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே நிறுவப்பட்ட வெறுப்புணர்ச்சி மேலிட்ட புனைவுகளை மேலதிக சேர்ப்புக்களுடன் புதுப்பித்து இன்று வலிமையாக நிறுவப்பட்டுள்ளது. தர்மபாலாவுக்கு பௌத்த வழிகாட்டிகளாக இருந்தவர்கள் ஆங்கில, கத்தோலிக்க எதிர்ப்புடன் நின்றுவிட்டார்கள். ஆனால் தர்மபாலாவின் வெறுப்புணர்ச்சி பட்டியலில் ஏனைய இனங்களும் சேர்த்துக்கொள்ளப்பட்டது.
“உங்கள் வளவில் உள்ள மரத்தில் ஒரு சோளக்காட்டு பொம்மையை கட்டிவைத்து “வெள்ளையனை அடிப்பேன்...! வெள்ளையனை அடிப்பேன்...! என்று கூறி தினசரி காலையிலும் மாலையிலும் உங்கள் பிள்ளைகளை அடிக்கச் சொல்லுங்கள்!” என்று கிராமம் கிராமமாக சென்று கூறினார்.
அநகாரிக தர்மபால அளவுக்கு வேறெவரும் ஆங்கிலேயர்களை அவமானத்துக்கும், திட்டுதலுக்கும் உள்ளாக்கியவர்கள் வரலாற்றில் இருக்க மாட்டார்கள்.

தனது பேச்சாலும், போதனைகளாலும், எழுத்தாலும் சிங்கள பௌத்தர்கள் தவிர்ந்த ஏனைய அனைவரையும் வெறுக்க கற்றுக்கொடுத்தவர் அவர். ஏனைய இனங்களின் வளர்ச்சி குறித்த உதாரணங்களை சிங்களவர்கள் அவர்கள் மீது எரிச்சலூட்டும் பாணியில் பிரச்சாரம் செய்தார்.

அதுபோல பேச்சாலும் எழுத்தாலும் வரலாற்றில் தனது சொந்த மக்களை மிகக் கேவலமாக திட்டி, அவர்களின் சுயமரியாதையைச் சீண்டி சிங்கள பௌத்த உணர்வை மேலிடவைத்ததில் அவருக்கு நிகர் அவர் மட்டும் தான். அவரது ஆத்திரமூட்டலிலிருந்து எந்த தரப்பும் தப்பவில்லை. அப்பேர்பட்ட ஆத்திரப்படுத்தலுக்கு கௌரவம் கிடைத்த ஒருவரும் அவர் தான். ஒரு சிங்களவர் கூட அவரின் இந்த சீண்டலை எதிர்த்து நிற்கவில்லை.  “சிலர் அவரைப் பார்த்து மதவெறிப் பிடித்த பைத்தியம் என்றார்கள்” என்று விளக்குகிறார் அவரைப் பற்றிய நூலில் எழுதுகிறார் கனேகம சரணங்கர தேரர்.

பின் அவர் வழிவந்தவர்களும் அவரின் போதனைகளை அவரின் வெறுப்புணர்ச்சியை தொடர்ச்சியாக தலைமுறைகளுக்கும் கடத்தி வந்திருக்கிறார்கள். அந்த வகை இனவாதத்தை மேலும் கவர்ச்சிகரமாக விரிவாக்கி, சித்தாந்தமயப்படுத்தி, ஜனரஞ்சகப்படுத்தி அதற்கு நிறுவன வடிவம் கொடுத்திருக்கிறார்கள். அதன் விளைவையே இன்று இலங்கை தேசம் அனுபவிக்கிறது.

மதுவொழிப்பு இயக்கத்தின் பாத்திரம்
அனகாரிக்க தர்மபால தனது பிற்காலங்களில் ஆங்கிலேயர்களை விட அதிகமாக வெறுத்தது உள்நாட்டிலுள்ள ஏனைய இனத்தவர்களையே. தமிழர், மலையாளிகள், முஸ்லிம்கள், பறங்கியர் என அவரின் இனவெறுப்புணர்ச்சி என்பது இனவெறுப்போடு மட்டும் நிற்கவில்லை அது மோசமான மதவெறுப்பையும் இணைத்தே இருந்தது. ஆகவே தான் அவர் “சிங்கள கிறிஸ்தவர்களுக்கு” எதிராக அதிகமாக பிரச்சாரம் செய்தார். 

1911இல் “மதுவொழிப்பு, மாட்டிறைச்சி உண்ணாதீர்” என்கிற பிரச்சாரத்தை நாடு பூராவும் கொண்டு சென்றார். இந்த இயக்கத்தை முன்னின்று தீவிரமாக வழிநடத்திய தர்மபாலாவுக்கு ஆதரவாக பல சிங்கள தலைவர்கள் ஒன்றிணைந்தனர். இந்த ஒன்றிணைவு காலப்போக்கில் இலங்கை தேசிய காங்கிரஸ் உருவாவதற்கான காரணிகளில் ஒன்றாக தொழிற்பட்டது. “சிங்கள பௌத்தயா” பத்திரிகை இந்த பிரசாரத்தின் முக்கிய ஆயுதமாக பயன்படுத்தப்பட்டது. இந்த இயக்கத்தோடு சம்பந்தப்பட்ட தலைவர்களே 1915 கலவரத்தின் போது அதிகமாக கைது செய்யப்பட்டார்கள். சேனநாயக்க சகோதரர்கள், டீ.பி.ஜயதிலக்க, வலிசிங்க ஹரிச்சந்திர, ஆதர வீ டயஸ், பியதாச சிறிசேன, போன்ற பலரை அடுக்கிக்கொண்டு போகலாம். கலவரத்தின் பின் சிங்கள பௌத்தயா பத்திரிகை தடை செய்யப்பட்டு அதன் காரியாலயத்தில் இருந்த அத்தனையையும் அள்ளிக்கொண்டு போனது ஆங்கிலேய அரசு. அநகாரிக தர்மபாலாவை சிறை வைப்பதற்கு ஆதாரமாக காட்டப்பட்ட விடயங்களும் இந்த காலத்தில் சிங்கள பௌத்தயா பத்திரிகையில் வெளிவந்தவற்றின் உள்ளடக்கங்கள் தான்.

மதுவொழிப்பு மற்றும் மாடுகளை அறுப்பதற்கு எதிரான பிரச்சாரம் முதன் முதலில் பெருமளவு மேற்கொள்ளப்பட்டது இந்த காலத்தில் தான். தனது இந்திய பயணங்களின் போது இந்து சமயத்தவர்களால் கடைபிடிக்கப்பட்டு வந்த மாட்டிரைச்சி உண்ணாமை என்பவற்றால் அவர் மேலும் கவர்ந்திருக்க வேண்டும். பௌத்தம் போற்றும் தம்மபதம் கூறும் ஐம்பெரும் குற்றங்களில் உயிர்களைக் கொல்லாமை முக்கிய அங்கம். ஆனால் அது மாடுகளுக்கு மட்டும் வரையறுக்கப்படவில்லை. சகல உயிர்களுமே அதில் அடக்கம்.

இலங்கையில் முதன்முதலில் சாராயம் விற்பதற்கான அனுமதிப்பத்திரத்தை 1837இல் ஆங்கிலேயர்கள் அறிமுகப்படுத்தினர். 1912இல் இலங்கை முழுவதும் கள்ளுத் தவறணைகளை திறப்பதற்கான தயாரிப்புகளை அன்றைய சேர் ஹென்றி மெக்கலம் மேற்கொண்டார். இலங்கை முழுவதையும் குடிகாரர்களின் நாடாக ஆக்குவதற்கான சதி என்று அநகாரிக தர்மபால உறுதியாக பிரச்சாரம் செய்தார். கள்ளுத் தவறணைகளை திறப்பதற்கான முயற்சிகளை ஆதரித்து இருந்தவர் ஆங்கிலேயர்களின் பரம விசுவாசியான கரைநாட்டு சிங்களவர்களை பிரதிநிதித்துவப்படுத்திய சார் சாலமன் கிரிஸ்டாப்பல் ஒபயசேகர (Solomon Christoffel Obeyesekere). இதற்கு நேரெதிராக ஆங்கிலேயர்களுடன் இந்த விடயத்தில் முரண்பட்டுக் கொண்டு கள்ளுத் தவறணைகளை எதிர்த்து நின்றவர் சேர் பொன்னம்பலம் இராமநாதன் என்று சிங்கள நூல்கள் பல பாராட்டுவதையும் காண முடிகிறது.

பொன்னம்பலம் இராமநாதன் 1879 ஆண்டு இலங்கையின் சட்டசபைக்கு உத்தியோகபற்றற்ற உறுப்பினராக ஆளுனரால் நியமிக்கப்பட்டார். ஆனால்  1911 ஆம் ஆண்டில் நடைபெற்ற இலங்கையின் சட்டசபைக்கான முதலாவது தேர்தலில் முழு இலங்கையரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரே உறுப்பினராக இராமநாதன் தெரிவு செய்யப்பட்டார். கேணல் ஒல்கொட்டுடன் சேர்ந்து பரம விஞ்ஞான சங்கத்துடன் சேர்ந்து பல மாநாடுகளில் பங்குபற்றியதாக பதிவுகள் கூறுகின்றன. பௌத்த-இந்து உறவை பலப்படுத்தும் நோக்குடன் பௌத்த-இந்து பாடசாலைகளை அமைப்பதற்காக ஒல்கொட்டோடு சேர்ந்து பொன்னம்பலம் இராமநாதன் பணியாற்றியிருக்கிறார். இப்பேர்பட்ட உறவுகளும் பொன்.இராமநாதன் 1915 கலவரத்தின் போது சிங்கள பௌத்த தரப்பை பாதுகாக்க காரணிகளாக தொழிற்பட்டிருக்கிறது.

மாட்டிறைச்சி குறித்த பிரச்சினை காலப்போக்கில் முஸ்லிம்களுக்கு எதிரான ஒன்றாக உருமாற்றமடைந்த பின்னணி தனியாக பார்க்க வேண்டிய ஒன்று.

முஸ்லிம்கள் மீதான வெறுப்பலை
முஸ்லிம்களின் மீதான இனவாத பிரசாரத்தின் பின்னணி வர்த்தகத்தை மையப்படுத்தியே தொடங்கப்பட்டது என்பது இங்கு கவனிக்கப்படவேண்டியது.

இந்தியாவிலிருந்து இலங்கை வந்து ஏற்றுமதி வியாபாரம் செய்து ஆங்கிலேயர்களுடனும் பங்குதாரர்களாகி வளர்ந்துவந்த முஸ்லிம் வியாபாரிகளுக்கு எதிரான பகைமையை சிங்கள வியாபாரிகள் இனவாத ரீதியில் திசைதிருப்பினர். அதற்கு “மண்ணின் மைந்தர்”,“தேசபக்தி”, “சுதேசம்” போன்றவற்றையும் கருத்தேற்றி பரப்பினர். அனகாரிக்க தர்மபால இந்த “அந்நியவியாபாரிகளை” “தென்னிந்திய தெருப்பொறுக்கிகள்” என்றே அழைத்தார்.

அவர் எழுதிய ஒரு குறிப்பில் இப்படி குறிப்பிடுகிறார்.
“அந்நியரான முககதியர் ஷைலோக்கிய வழிமுறைகளால் யூதர்கள் போன்று செல்வந்தர்களாக மாறினார்.... தென்னிந்திய முகமதியர் இலங்கைக்கு வந்து வியாபாரத்தில் எத்தகைய அனுபவமுமற்ற, உதாசீனம் செய்யப்பட்ட கிராமத்தவனைக் காண்கிறான். இதன் விளைவு முகமதியன் முன்னேறுகிறான். மண்ணின் மைந்தன்’ பின் தள்ளப்படுகிறான்...”
1915 ஆம் ஆண்டு கலவரம் முடிந்த பின் 15.06.1915இல் அவர் எழுதிய குறிப்பில் (தர்மபால கடிதங்கள் – குருகே வெளியீடு) இப்படி குறிப்பிடுகிறார். (கவனிக்க: முதலாம் உலக யுத்த காலம் இது)
“...பிரித்தானியர்களுக்கு ஜெர்மானியர்கள் எவ்வாறோ சிங்களவர்களுக்கு முஸ்லிம்களும் அவ்வாறே. சிங்களவர்களைப் பொறுத்தவரை முஸ்லிம்கள் சமயத்தாலும், இனத்தாலும், மொழியாலும் அந்நியர்களே., பௌத்த சமயம் இல்லாவிடின் சிங்களவர்களுக்கு மரணமே மிச்சம். முழுத் தேசமும் முஸ்லிம்களுக்கு எதிராக எழுச்சியுற்றுவிட்டது. இதற்கு பொருளாதாரம், ஆன்மீகம் என்பனவே காரணங்கள்...”
ஒருபுறம் தர்மபாலாவின் “சிங்கள பௌத்தயா” இத்தகைய பிரசாரங்களை செய்ய அதற்கு நிகராக இன்னும் சில பத்திரிகைகளும் தமது பங்குக்கு முஸ்லிம் எதிர்ப்பை வெளியிட்டன. “சிங்கள ஜாத்தி” (சிங்கள இனம்) எனும் பத்திரிகை
“...கரையோர முஸ்லிம்களிடமும், கொச்சியர்களிடமும், அந்நியர்களிடமும் கொடுக்கல் வாங்கல் வைத்திருக்க வேண்டாம்...” என்று எழுதியது.
குர் ஆனில் இருந்த கதைகளையும் கடுமையாக விமர்சித்திருக்கிறார். ஒரு இடத்தில் மனித இனத்தின் தோற்றம் குறித்து குர் ஆனில் குறிப்பிட்டுள்ளவற்றை எடுத்துக்காட்டாக எடுத்து கேலிசெய்திருக்கிறார். 

தர்மபால சித்தாந்தத்தின் வகிபாகம்
இலங்கையில் சிங்கள பௌத்த பேரினவாத சித்தாந்தமயமாக்கள் ஏறத்தாழ ஒரு நூற்றாண்டு வயதைத் தாண்டிவிட்டது. சிங்கள பௌத்த பேரினவாத கருத்துக்களை ஆங்காங்கு இலங்கை வரலாற்றில் காணக்கிடைத்த போதும் அது சித்தாந்தமயப்படுத்தப்பட்டது ஒரு நூற்றாண்டுக்குள் தான். அது நிறுவனமயப்பட்டது அதன் பின்னர் தான். அதன் பின்னர் தான் சிங்கள பௌத்த அரசுருவாக்கம் நிகழ்ந்தது. சிங்கள பௌத்த பேரினவாத செயற்பாடுகளை சம்பவங்களாக இதன் வழி வரிசைப்படுத்தி, கோர்த்துப்பார்த்தால் இதன் தொடர்ச்சியையும் போக்கையும் எவராலும் இனங்கண்டுகொள்ள இயலும். அதன் நீட்சியாக இலங்கையின் இனப்பிரச்சினை, இனப்போராட்டம் வரை இட்டுச்சென்று ஈற்றில் சிறுபான்மை இனங்களும் மதங்களும் மோசமான முறையில் நசுக்கப்பட்டன.

தமிழ் மக்களுடன் சேர்த்து இன்று முஸ்லிம் மக்களின் மீதும் மலையக மக்கள் மீதும் விஸ்தரிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக சமகாலத்தில் முஸ்லிம் சமூகத்தின் மீது மோசமான இனவாதம் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது. இலங்கை தேசியம், பின்னர் சிங்கள தேசியவாதமாகவும், பின் இனவாதமாகவும், பேரினவாதமாகவும் பரிணாமமுற்று ஈற்றில் அது பாசிச வடிவத்தை எட்டிவருவதை அதற்கு சமீபமாக இருந்து கவனித்து வருகிறோம்.
சிங்கள பௌத்த உணர்வுகளால் தூண்டப்பட்ட சாதாரண மக்கள் அந்நிய மக்களை வெறுக்க கற்றுகொடுகப்பட்டார்கள். எந்த இன, மத சிறு சலசலப்பும், சர்ச்சைகளும் அடுத்தடுத்த அடுத்தடுத்த பரிணாமத்தையும், பரிமாணத்தையும் எட்ட தயார் நிலையில் இருந்தது. அப்படி நிகழ்ந்தது தான் 1915 கலவரம். அந்த சிறு பொறி எங்கு பற்ற வைக்கப்பட்டது என்பதை அடுத்த இதழில் பாப்போம்.
தொடரும்

நன்றி - தினக்குரல்

இக்கட்டுரையாக்கத்துக்கு உசாத்துணைக்கு பயன்பட்டவை
  • “අනගාරික ධර්මපාල” - ඩේවිඩ් කරුණාරත්න (M.D.Gunasena & Co. (Pvt.) Ltd, 2012)
  • ධර්මපාල ලිපි අනගාරික ධර්මපාලතුමාගේ ලිපි සංග්‍රහයකි ආචාර්ය ආනන්ද ඩබ්ලිව්. පී. ගුරුගේ සංඥාපනය –(Department Of Government Printing-1991)
  • ශ්‍රීමත් අනගාරික ධර්මපාල චරිතාපදානය : නත්ථි මේ සරණං අඤ්ඤං (මට අන් සරණක් නැත) - ආර්. ජේ.ද සිල්වා, (Dayawansa Jayakody & company - 2013)
  • මොහොට්ටිවත්තේ ශ්‍රී ගුණානන්ද අපදානය -  විමල් අභයසුන්දර (Godage publication, 1994)
  • “යටත් විජිත බුදු දහම” -  ප්‍රේමකුමාර ද සිල්වා - (විජේසුරිය ග්‍රන්ථ කේන්ද්‍රය, 2009)
  • ශ්‍රී ලංකාවේ ගැටුම් නිරාකරණය සහ සාමය ගොඩනැංවීම : බෞද්ධ පර්යාලෝකය - Nirmanee Circle (Social scientists Association, 2008)
  • “ජාතියේ පියා හෙවත් අනගාරික ධර්මපාල” - ගණේගම සරණංකර නාහිමි (M.D.Gunasena & Co. (Pvt.) Ltd - 2012)
  • “දැනගත යුතු කරුණු” - අනගාරික ධර්මපාල (විසිදුනු ප්‍රකාශකයෝ, 1930)
  • “අනගාරික ධර්මපාල - සත්‍ය සහ මිථ්‍යාව” - එස්.පී.ලංකාපුර රත්නකුමාර (Nuwanee printers and publishers, 2014)
  • இலங்கையின் அரசியல் திசைவழியை தீர்மானித்ததில் தர்மபாலவின் வகிபாகம்! - என்.சரவணன் (21.09.2014 தினக்குரல்)
  • மாடுகளின் அரசியலும் – அரசியலில் மாடுகளும் - என்.சரவணன்  (17.05.2015 தினக்குரல்)


 

இணைந்திருங்கள்


Followers

Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates