Headlines News :

காணொளி

ஜனாதிபதி விருது

ஜனாதிபதி விருது
நமது மலையகத்துக்கு

சுவடி

தமிழர் வரலாறு ஆதாரபூர்வமாக வெளிப்படுத்தப்பட வேண்டும் - த.மனோகரன்


போலி வரலாற்றில் மிதக்கும் தமிழர் அரசியல் என்ற தலைப்பில் எச்.எல்.டி.மஹிந்தபால என்பவரால் எழுதப்பட்ட கட்டுரையின் தமிழாக்கம் வீரகேசரியில் வெளிவந்துள்ளது. அக்கட்டுரை நமது சிந்தனையைத் தூண்டுவதாயுள்ளது. அத்துடன் கல்வித்துறையில், வரலாற்று ஆய்வுத்துறையில் இதுவரை நாம் விட்ட அல்லது கண்டுகொள்ளாத பலவற்றைச் சுட்டிக்காட்டுவதாயுமுள்ளது. முதலிலே பல்கலைக்கழகங்கள் கற்பிப்பதுடன் ஆய்வுகள் செய்து உண்மையை வெளிக்கொண்டுவந்து அடுத்த தலைமுறைக்கு ஆறிவூட்டவேண்டும் என்ற கருத்துடைய கூற்றைக்கவனிப்போம். ஆனால் பெரும்பாலான பல்கலைக்கழக சமூகத்தினர் அரசியல் கருத்துகளைக்கூறுவதுடன் வரலாற்று உண்மைகளை ஆராய்வதில்லை. அதுமட்டுமல்ல பக்கச்சார்பான கருத்துகளை வெளிப்படுத்தி நாட்டில் பிரச்சினைகளையும் ஏற்படுத்துகின்றனர். இந்நாட்டின் சீரழிவுக்கு அதுவே காரணமுமாகின்றது.

தமிழர்களுக்கெதிரான கருத்தை, எதிர் ப்பை முன்னிலைப்படுத்துவது சிங்கள வரலாறாகக் கொள்ளப்படுவது போன்று சிங்களவருக்கெதிரான கூற்றுகள் தமிழர் வரலாறாகவும் கொள்ளப்படுகின்றது. இது ஆரோக்கியமான ஒன்றல்ல. திருவாளர் மஹிந்தபால அவர்கள் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ள பின்வரும் பந்தி கவனத்திற்குரியதாகின்றது. அப்பந்தியில் யாழ்ப்பாணத்தின் வரலாற்றை விரிவானதும், அதிகாரபூர்வமானதுமான எவரும் ஒருபோதும் முன்வைத்ததில்லை. ஆனால் அதேவேளை அவர்களால் கண்டுபிடிக்கக் கூடிய அழுக்குகளுக்கான சிங்கள பௌத்தர்களின் வரலாற்றைத் துருவுவதில் மனச்சாட்சியின் உறுத்தலுக்கு உள்ளாவதில்லை. புராண, வரலாற்று காலக்குறிப்புகளில் இலங்கையில் இந்து சமயத்தின் இருப்பு வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறுள்ள நிலையில்,1505 இல் போர்த்துக்கேயர் இலங்கைக்குள் புகுந்தபோது இத்தீவில் மூன்று பிரதான இராச்சியங்கள், தனி அரசுகள் இருந்தன என்பது வரலாற்றுக்கூற்று. வடக்கே யாழ்ப்பாண அரசு என்ற தமிழரசு, மத்திய மலைநாட்டில் கண்டி அரசு, மேற்குப்பகுதியில் கோட்டை அரசு என்பன அவை. நாம் பண்டைய வரலாற்றை நோக்கும்முன் போர்த்துக்கேயர் மற்றும் ஆங்கிலேயர் ஆட்சிக்கு இடைப்பட்ட நிலைமைகளை அறிந்துகொள்வோம்.

சிங்கள அரசு என்று கொள்ளப்படும் கோட்டை அரசு அதன் அரசனான தர்மபாலனால்1580 ஆகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி போர்த்துக்கேய அரசுக்கு எழுத்துமூலம் கையளிக்கப்பட்டது. அடிமையாக்கப்பட்டது. போர்த்துக்கேயருக்கு அடுத்து ஒல்லாந்தர் இலங்கைக்குள் புகுந்தனர். அதன்பின் 1782 இல் ஆங்கிலேயர் புகுந்தனர். அதற்கிடைப்பட்ட காலத்தில் 1630 அளவில் போர்த்துக்கேயர் பலத்த போராட்டத்தின் பின்னர் யாழ்ப்பாணத் தமிழரசை கைப்பற்றினர்.

1792 இல் நாட்டுக்குள் புகுந்த ஆங்கிலேயர் 1815 இல் கண்டிய சிங்களப் பிரதானிகளின் உதவியுடன் கண்டி அரசைக் கைப்பற்றினர். அதாவது கண்டி அரசுகாட்டிக்கொடுக்கப்பட்டது. இலங்கையின் மூன்று பிரதான அரசுகளும் அந்நியர் வசமாகின. இவற்றில் சிங்கள அரசு எனப்பட்ட இரண்டும் அந்நியருக்குக்காட்டிக்கொடுக்கப்பட்டும், கையளிக்கப்பட்டும் தமது சுதந்திரத்தை தாமே அந்நியருக்கு அடகு வைத்தன. இது வரலாற்றுப்பதிவு. ஆனால், யாழ்ப்பாணத் தமிழரசு அந்நியருக்குப் பணியாது இறுதிவரை போரிட்டது என்பது வரலாறு. அதேபோல் வன்னியிலிருந்த தமிழ்ச்சிற்றரசும் அந்நியருக்கு அடங்காது இறுதிவரை போரிட்டு ஆங்கிலேயரின் ஆட்சிக்குட்பட்டது.

அண்மைய ஐந்து நூற்றாண்டுகளுக்குள் இடம்பெற்ற இலங்கைத்தீவின் வரலாற்றைக்கூட உரியபடி சரியான முறையில் வெளிப்படுத்த எவரும் முன்வரவில்லை. பாடசாலை மாணவ, மாணவியருக்கான கல்விப் பொதுத்தராதரப்பத்திர சாதாரண தர வகுப்புவரை வரலாறு ஒரு கட்டாயபாடமாகவும் அதேபோல் குறித்த தரப்பொதுப்பரீட்சைக்கும் உரிய கட்டாய பாடங்கள் ஆறில் ஒன்றாகவும் உள்ளது. ஆனால், அண்மைய அதாவது ஐந்து நூற்றாண்டுகளுக்குட்பட்ட வரலாறு கூட முழுமையாகக் கற்பிக்கப்படுவதில்லை. பாடத்திட்டங்களும் பாடநூல்களும் கல்வி அமைச்சால் தயாரிக்கப்பட்டாலும் அது குறைபாடுடையதாகவேயுள்ளது. யாழ்ப்பாண மற்றும் வன்னித்தமிழ் அரசுகள் பற்றி விபரம் அற்ற வரலாற்றுப்பாடமே இன்று பாடசாலையில் கற்பிக்கப்படும் வரலாறாகவுள்ளது.

இது தொடர்பாக அதாவது பாடப்புத்தகங்களில் தமிழர் வரலாறு மறைக்கப்படுவதாக புறக்கணிக்கப்படுவதாகப் பலமுறை பத்திரிகையூடாகச் சுட்டிகாட்டினேன். வீரகேசரியும் அவற்றைப் பிரசுரித்திருந்தது. இக்குறைபாடு தொடர்பாக யாழ்.மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பியதன் பலனாகக் கல்வி அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலில் அமைச்சின் உயர் அதிகாரிகள், தேசிய கல்வி நிறுவன வரலாற்றுப்பாட அதிகாரிகள், கல்வி வெளியீட்டுத் திணைக்கள அதிகாரிகள், பல்கலைக்கழகப் பேராசிரியர் உட்பட நாமும் கலந்துகொண்டோம்.

அக்கூட்ட கலந்துரையாடல்களில் தமிழர் தரப்பு இதுவரை வரலாற்றுப்பாடத்திலுள்ள குறைகளைச் சுட்டிக்காட்ட முன்வரவில்லையென்று குறைகூறப்பட்டது. தமிழர் வரலாறு இடம்பெறாமைக்கு தமிழர் தரப்பே காரணம் என்று கூறப்பட்டது. தமிழ் வரலாற்றுத்துறைசார்ந்தோர் அக்கறை காட்டுவதில்லையென்றும் சுட்டிக்காட்டப்பட்டது. அதில் உண்மையில்லாமலுமில்லை. வரலாற்றுப்பாடத்தில் தமிழர் வரலாறு இடம்பெறவேண்டும் என்று அழுத்திக்கூறி அதனை இடம்பெறச்செய்ய வேண்டும் என்ற ஆர்வமோ, துணிவோ அற்றவர்களா நமது தமிழ் வரலாற்றுத்துறையினர் என்று வேதனைப்படவேண்டியுள்ளது.

தமிழர் தரப்பு தமிழர் வரலாற்றை எடுத்துக்கூறத்தயங்கினாலும், திறந்த மனதுடன், நேர்மையாகத் தமிழர் வரலாற்றை வரலாற்றுப்பாடநூலில் இடம்பெற சிங்கள வரலாற்றாசிரியர்களுக்கும் உரிமை உண்டு. அது கல்வி நாகரிகம். தமிழர் வரலாற்றில் இருதரப்பினரும் தவறுவிட்டுள்ளனர்.

இலங்கை வரலாற்றில் ஐரோப்பியர் ஆட்சிக்கால நிகழ்வுகளை உரியபடி வெளிப்படுத்த பாடநூல் தயாரிக்கும் சிங்கள வரலாற்று ஆசிரியர்கள் தயங்குவதற்கு பின்வாங்குவதற்கு மூன்று காரணங்களை முன்வைக்க முடிகின்றது. இதை கல்வியமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதும் எடுத்துரைத்தேன்.

முதலாவது பண்டைய இலங்கையின் எல்லை அநுராதபுரத்திற்கு அப்பால் இருக்கவில்லை என்ற வரலாற்று நம்பிக்கையானதாயிருக்கலாம். நாட்டுக்கு உரித்தற்ற வெளிநாட்டின் வரலாற்றை நமது நாட்டின் வரலாற்றில் எவ்வாறு இணைப்பது என்ற சரியான நோக்காக இருக்கமுடியும்.

இரண்டாவதாக இனவாத சிந்தனை; அதாவது தமிழர்களும் இந்நாட்டை ஆட்சி செய்துள்ளார்கள். பண்டைய இருப்பைக்கொண்டவர்கள், ஒரு நிலப்பரப்பில் இருப்பைக்கொண்டவர்கள். பழைமையான வரலாற்றை, பண்பாட்டைக்கொண்டவர்கள் என்ற உண்மையை வெளியிடக்காட்டும் தயக்கம் உண்மையை வெளிப்படுத்தவுள்ள வெறுப்பு.

மூன்றாவது தாழ்வுச்சிக்கல். சிங்கள அரசு எனப்படும் கோட்டை அரசு அதன் அரசனால் சுயவிருப்பின் பேரில் போர்த்துக்கேயரிடம் கையளிக்கப்பட்டு தானே அந்நியருக்குத்தன்னை அடிமைப்படுத்திக்கொண்டது. கண்டி இராச்சியம் அங்கிருந்த சிங்களப்பிரதானிகளால் ஆங்கிலேயருக்குக் காட்டிக்கொடுக்கப்பட்டது. ஒப்பந்தம் மூலம் சரணடைந்தது. இருந்த ஆட்சியைப் பறித்து ஆங்கிலேயரின் காலடியில் வைத்த வரலாறு கொண்டது.

ஆனால், யாழ்ப்பாணத் தமிழ் அரசு அந்நியரான போர்த்துக்கேயரை எதிர்த்து இறுதிவரை போர் செய்தது. இறுதியில் தோல்வியடைந்தாலும் பணியவில்லை. சரணடையவில்லை. அதேபோல் வன்னியின் தமிழ்ச்சிற்றரசும் ஆங்கிலேயருக்கு அடிமைப்படாமல் இறுதிவரை வீரப்போர் செய்தது என்பது வரலாறு. இவ்வாறு தமிழர்கள் அந்நியருக்கு எதிராக இறுதிவரைபோரிட்ட வரலாறு கற்பிக்கப்படுமானால் அது இரு இனங்களின் நாட்டுப்பற்றின் ஏற்றத்தாழ்வுகளை வரலாற்றில் பதித்துவிடும் என்ற தாழ்வுச்சிக்கலால்தான் தமிழர் வரலாறு தவிர்க்கப்படுகின்றதா என்று கேள்வியெழுப்பினேன்.

விடப்பட்ட தவறுகள் திருத்தப்படும். தமிழர் வரலாறு வரலாற்றுப் பேராசிரியர்கள், கல்விமான்களின் உதவியுடன் இடம்பெறச்செய்யப்படும் என்று உறுதியளிக்கப்பட்டு மாதங்கள் பல கடந்துவிட்டன. எதுவும் நடக்கவில்லை. இக்கூட்டங்களுக்கு கல்வி இராஜாங்க அமைச்சர் வே. இராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினாரென்பதும் குறிப்பிடத்தக்கது. இக்கலந்துரையாடலில் பங்குபற்றிய யாழ்ப்பாண பல்கலைக்கழக வரலாற்றுத்துறை பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் ஆர்வம் செலுத்தவேண்டும். கவனம் செலுத்தவேண்டும்.

போர்த்துக்கேயரின் வருகைக்கு முற்பட்ட அதாவது 1505 க்கு முற்பட்டகால இலங்கைத்தீவின் வரலாற்றில் தமிழர் இருப்பு தொடர்பான வரலாற்றுப்பதிவுகள் இடம்பெறவில்லை. அதுவும் வரலாற்றுப்பாடக்குறைபாடாகும். கி.மு. 543 ஆம் ஆண்டில் இலங்கைத்தீவில் விஜயன் ஒதுங்கினான். அவனுடன் எழுநூறு தோழர்களும் வந்தனர். அவர்களில் ஒருவனாகவிருந்த உபதிஸ்ஸன் என்ற பிராமணன் இலங்கையின் நாலாபக்கங்களிலுமிருந்த ஐந்து சிவாலயங்களைச் சென்று வழிபட்டதாக மகாவம்சம் போன்ற நூல்களில் கூறப்பட்டுள்ளன. அதை சேர்.போல்.ஈ.பீரிஸ் என்ற வரலாற்றாசிரியரும் உறுதிப்படுத்தியுள்ளார்.

குறித்த ஐந்து சிவாலயங்களும் விஜயன் வருகைக்கும் முற்பட்டது. அதாவது 2561 ஆண்டுகளுக்கு முற்பட்டது. விஜயன் வருகைக்கு 236 ஆண்டுகளுக்குப் பின்பே அதாவது 2325 ஆண்டுகளுக்கு முன்பே தேவநம்பியதீசன் காலத்தில் மஹிந்ததேரரினால் பௌத்தசமயம் முதன்முதல் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டது. பௌத்த சமயம் இலங்கையில் அறிமுகப்படுத்தப்படும் முன்பே இலங்கையில் இந்து சமயம் சிறப்புற்றிருந்தது என்பதற்கு உபதிஸ்ஸனின் யாத்திரையே சான்று பகர்கின்றது.

குறித்த உபதிஸ்ஸன் என்ற பிராமணன் வடக்கே யாழ்ப்பாணத்திலிருக்கும் நகுலேஸ்வரம், கிழக்கே திருகோணமலையிலுள்ள கோணேஸ்வரம், மேற்கே மன்னாரிலுள்ள கேதீஸ்வரம் மற்றும் சிலாபத்திலுள்ள முன்னேஸ்வரம் என்பவற்றுடன் இன்று விஷ்ணு கோயிலாக மாற்றமடைந்துள்ள தெவிநுவரவில் உள்ள தொண்டீஸ்வரத்தையும் சென்று வழிபட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. இது இலங்கைத்தீவில் இந்துத்தமிழர்களின் பண்டைய அதாவது விஜயன் இலங்கைத்தீவில் அடியெடுத்துவைத்த போதிருந்த நிலைமையை தெளிவாக வெளிப்படுத்துகின்றதல்லவா?

குறித்த ஐந்து சிவாலயங்களையும் தமிழர்களின் வரலாற்றை உறுதிப்படுத்தும் சான்றுகளாகக் கொள்வதில் ஏன் தயங்க வேண்டும்? ஏழாம் நூற்றாண்டில் திருக்கோணேஷ்வரம் மீதும் திருக்கேதீஸ்வரம்மீதும் பாடப்பட்ட தேவாரத்திருப்பதிகங்கள் பதிநான்கு நூற்றாண்டுகளுக்கு முன் இலங்கையின் இந்துத்தமிழர்களின் வரலாற்று இருப்பை வெளிப்படுத்துகின்றது.

அனுராதபுரத்தைத் தலைநகராகக் கொண்டு கி.மு. 205 கி.மு.161 வரை ஆட்சி செய்த எல்லாளன் தமிழன் என்று ஏற்றுகொள்ளும்போது அவனின் வரலாற்றை தமிழர் வரலாற்றிலிருந்து ஒதுக்கமுடியுமா? எல்லாளனுக்கு முற்பட்ட பந்துகாபயன், மூத்தசிவன், தேவநம்பியதீசன், உத்திகன், மகாசிவன் போன்றவர்கள் தமிழர்கள் இல்லையா? அண்மையில் பேராசிரியர் புஞ்சிபண்டா ஏக்கநாயக்க என்பவர் சிங்கள மொழி உருவாகி ஆயிரத்து முந்நூறு ஆண்டுகளே ஆகின்றன என்று கூறியிருந்தார். அவ்வாறாயின் சிங்களமொழி உருவாவதற்கு முற்பட்ட காலத்தின் இலங்கையரின் மொழி எது என்ற கேள்வி யெழுகின்றது. இதை விதண்டாவாதம் என்று எவரும் கூறமுடியாது. உண்மையை ஆராய வேண்டும்.

ஏழு நூற்றாண்டுகளுக்கு முன் தம்பதெனிய இராச்சியத்தை கி.பி.1236 முதல் கி.பி.1273 வரை ஆட்சி செய்த நான்காம் பராக்கிரமபாகுவின் அரசசபையில் தேநுவரப்பெருமாள் என்ற தமிழ்ப்பண்டிதரால் “சரசோதிமாலை” என்ற வெண்பா வடிவிலான தமிழ்நூல் அரசன் முன்னிலையில் அரங்கேற்றப்பட்டுள்ளது. இதன்மூலம் இன்றைய குருநாகல் மாவட்டத்தில் தமிழ்மொழியும், தமிழர்களும் பெற்றிருந்த சிறப்பு வெளிப்படுவதுடன் அரசனும், அரசசபையிலிருந்தோரும் தமிழ்ப்புலமை பெற்றவர்களாக இருந்துள்ளனர் என்பது வெளிப்படுகின்றது.

கொழும்பு மாவட்டத்தின் தென்பகுதி யில் இரத்மலானை என்ற இடத்தில் திருநந்தீஸ்வரம் என்ற சிவாலயம் உள்ளது. அதன் வரலாறு மேற்கிலங்கையில் தமிழரின் இந்துக்களின் பண்டைய இருப்பை, சிறப்பை பெருமையை, வளத்தைக் கட்டியம்கூறி நிற்கின்றது. கி.பி.1518 இல் போர்த்துக்கேயரால் சிதைக்கப்பட்ட இவ்வாலயம் பற்றி தனது சிங்கள மொழியிலான காவியமான “சலலிஹினி சந்தேசய” என்ற நூலில் தொட்டகமுவே ராகுல தேரர் என்ற பிக்கு இவ்வாலயத்தில் ஈஸ்வரனுக்குச் செய்யப்படும் பூசைகள் பற்றிக்குறிப்பிட்டுள்ளதுடன் மக்கள் விரும்பும் இனிய தமிழ் மொழியில் தோத்திரம் பாடுவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். குறித்த காவியநூல் கி.பி.1454 இல் ஆக்கப்பட்டது.

தோண்டத்தோண்டப் புதையல் கிடைப்பதுபோல் இலங்கையின் தமிழர் வரலாற்றை ஆழமாக ஆராயும் போது பல விடயங்கள் வெளிவரும். தமிழர்களின் பண்டைய வரலாறும் உறுதிப்படுத்தப்படும்.

ஆனால், அதற்கான முயற்சியில் வரலாற்றை கற்று பல்கலைக்கழகங்களில் துறைசார் அறிஞர்களாகவுள்ளோர் துணிந்து ஈடுபடாமலிருப்பது வேதனையானது. மஹிந்தபால கூறுவதுபோல் பெரிய வரலாற்று இடைவெளியொன்றை எதிர்நோக்கியுள்ள தமிழ் வரலாற்றியலாளர்கள் தங்களது அகம்பாவமான அரசியலையும், சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையையும் செல்லுபடியானதாக்குவதற்கு தமிழ் வரலாறு ஒன்று இல்லையென்பது குறித்து மனம் நொந்து கொண்டார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழருக்கென்று இந்தநாட்டில் தெளிவான இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாறு உள்ளபோது தமிழர் தரப்பினர் மனம் நோவது ஏன்? சிந்திக்கவேண்டும். நம்மை, நமது வரலாற்று இருப்பை, வளத்தை, பெருமையை நாம் வரலாற்று ரீதியாக அறியத்தடையேன்? தயக்கமேன்?

நன்றி - வீரகேசரி

“மலையகமக்கள் கவிமணி” சி.வி.வேலுப்பிள்ளை (1914 -1984) நினைவுகள் - லெ.முருகபூபதி


ஆரம்பத்தில்   ஆங்கிலத்தில் எழுதி,  காலப்போக்கில்  தமிழில் எழுதத்தொடங்கிய ஆளுமை

“பிள்ளைகளுக்கு கதை கேட்பதில் எத்தனை இன்பம். கதை சொல்லுவதில் பாட்டிக்குத் தனி இன்பம். பாட்டி தான் கண்டதையும் கேட்டதையும் தன்னைப்பற்றியும் தன் குடும்பம் தன் பந்துக்கள், தன் கிராமம், தன் ஊர், தன் இன்ப துன்பம் இவைகளைப்பற்றியும் கதை கதையாகச்சொல்லுவாள். பேரன் பாட்டியை கதைசொல்லும்படி கேட்டபோது, அவள் நான் பிறந்த கதைசொல்லுவேனா? நான் பட்ட கதைசொல்லுவேனா? என்ற கேள்வியைச்சொல்லி கதையை ஆரம்பித்தாளாம்.

பலவருடங்களுக்குப்பின் மலைநாட்டில் பிறக்கும் ஒரு பேரன் தன் பாட்டியிடம் கதைசொல்லும்படி கேட்டால், அநேகமாய் பழைய பாட்டி சொன்ன பதிலையே சொல்லுவாள். அது நாம் பிறந்த கதையாகவும் பட்ட கதையாகவும்தான் இருக்கமுடியும். இந்தக்கதை நாடற்றவர், வீடற்றவர் கதை.” இவ்வாறு தொடங்குகிறது அமரர் சி. வி. வேலுப்பிள்ளையின் நாடற்றவர் கதை.

இதன் முதல் பதிப்பு 1987 இல் தமிழகத்தில்தான் வெளிவருகிறது. அவருடைய வாரிசுகளில் ஒருவரான இர. சிவலிங்கம் அதனை தமிழகத்தில் வெளியிடுகிறார்.

உலகின் பலபாகங்களில் இன்றும் நாடற்றவர்கள், வீடற்றவர்கள் பரதேசிகளாக ஓடிக்கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் இயக்குநர் பாலாவும் பரதேசி என்ற பெயரிலே அவர்களின் கதையை படமாக்கினார்.

பேரக்குழந்தைகளுக்கு கதை சொல்லக்கூடிய பாட்டிமாரின் நேரத்தை தற்காலத்தில் மெகா சீரியல்கள, தொலைக்காட்சிகள் ஊடாக ஆக்கிரமித்துள்ளன. அதனால் கதைசொல்வதற்கு பாட்டிகளும் இல்லை. கேட்பதற்கு பேரர்களும் இல்லை. பாட்டிகள் வேறு உலகத்திலும் பேரர்கள் வேறு உலகத்திலும் இருக்கும் இக்காலத்தில் இலங்கையில் வெள்ளையர்களினால் இழுத்துவரப்பட்டு மலையக காடுகளை பசுமையாக்கிய கறிவேப்பிலைகளாக தூக்கியெறியப்பட்டு ஒப்பாரிக்கோச்சிகளில் ஏற்றப்பட்டவர்களின் கதையை சி.வி. வேலுப்பிள்ளையின் நூலிலிருந்து தெரிந்துகொள்கின்றோம்.

கறிவேப்பிலைகள், ஒப்பாரிக்கோச்சி என்ற தலைப்புகளிலும் இலங்கை மலையக எழுத்தாளர்கள் கதைகள் எழுதியிருக்கிறார்கள்.

சி.வி. என்று இலக்கியஉலகில் அறியப்பட்ட வேலுப்பிள்ளை அவர்கள் மலையகத்தில் தலவாக்கொல்லையில் மடக்கொம்பரை என்ற கிராமத்தில்  1914 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 14 ஆம் திகதி பிறந்தவர். அவருடைய நூற்றாண்டு கொண்டாடப்பட்டு, மூன்று வருடங்கள் கடந்த நிலையில் அவர் பற்றி எழுதுகின்றேன்.

இவரை கொழும்பில் ஒரே ஒரு தடவைதான் சந்தித்துபேசியிருந்தாலும் அன்றைய தினத்தை என்னால் மறக்கமுடியாது.  1982 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் வெள்ளவத்தையில் இலக்கிய ஆர்வலர் நண்பர் ரங்கநாதன் அவர்களின் இல்லத்தில் ஒரு இனிய மாலைப்பொழுதில் நடந்த சந்திப்பில்தான் அவரை முதல் முதலில் கண்டேன்.

அவ்வேளையில்  எமது இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் பாரதி நூற்றாண்டு கொண்டாட்டங்களை நாடளாவிய ரீதியில் தொடக்கிவைத்திருந்தது. தமிழகத்திலிருந்து எழுத்தாளரும் அவ்வேளையில் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளரும் கட்சியின் ஏடு ஜனசக்தியின் ஆசிரியருமான தோழர் த. பாண்டியனை அழைத்திருந்தது.

அவர் தமிழகம் திரும்புவதற்கு முதல் நாள் ரங்கநாதன் இல்லத்தில் நடந்த சந்திப்பு தேநீர் விருந்துபசாரத்திற்கு சி. வி. வேலுப்பிள்ளையும் வருகை தந்திருந்தார். பேராசிரியர் கைலாசபதி, சோமகாந்தன், மாணிக்கவாசகர், பிரேம்ஜி ஞானசுந்தரன், அந்தனி ஜீவா, தெளிவத்தை ஜோசப், மேமன்கவி, நீர்வை பொன்னையன் உட்பட பலர் வருகை தந்திருந்தனர்.

சி.வி.வேலுப்பிள்ளையின் உறவினரான ஸி. எஸ். காந்தி என்ற பத்திரிகையாளர் வீரகேசரியில் உதவி ஆசிரியராக இருந்தார். அங்கு நானும் பணியாற்றியதனால் அடிக்கடி சி.வி. அவர்கள் பற்றி கலந்துரையாடுவோம். சி.வி. எழுதிய தொடர்கதைகளை வீரகேசரியிலும் தினகரனிலும் ஏற்கனவே படித்திருக்கின்றேன். அப்பொழுது நான் பாடசாலை மாணவன்.

பின்னாளில் நானும் சி.வி. போன்று எழுத்தாளனாவேன் என்று கனவும் காணாத பருவத்தில் அவருடைய கதைகளைப்படித்து மலையக  மக்களின் ஆத்மாவைத் தெரிந்துகொண்டேன்.

1982 இல் அவரைச்சந்தித்தவேளையில் தமிழகத்தின் மூத்த எழுத்தாளரும் பாரதி இயல் ஆய்வாளருமான தொ.மு. சி. ரகுநாதனின் பேரன் முறையானவன் என்று என்னை அறிமுகப்படுத்தியதனால் தனது நெஞ்சத்திற்கு நெருக்கமானவன் என்ற ரீதியில் என்னை அணைத்துக்கொண்டார்.

அதன் பின்னர் 1983 இல் இலங்கையில் நடந்த பாரதி நூற்றாண்டு  நிகழ்ச்சிகளுக்காக தமிழகத்திலிருந்து ரகுநாதனையும் பேராசிரியர் எஸ். ராமகிருஷ்ணனையும் படைப்பாளி ராஜம் கிருஷ்ணனையும் எமது முற்போக்கு எழுத்தாளர் சங்கம் அழைத்திருந்தது. அச்சமயம் மீண்டும் ரகுநாதனுடன் சி.வி. அவர்களுக்கு நெருக்கம் வந்தது.

சி.வி.யின் இனிப்படமாட்டேன் நாவலின் மூலப்பிரதியை ரகுநாதன் தமிழகத்தில் வெளியிடுவதற்காக எடுத்துச்சென்று சென்னையில் பதிப்பித்தார். குறிப்பிட்ட நூல்  1984 இல் அச்சகத்தில் தயாராகும்போது நான் ரகுநாதன் அவர்களுடன் சென்னையில் நின்றேன்.

ரகுநாதனும் அந்த நாவலை சிலாகித்து பேசியிருக்கிறார்.

சி.வி.  1984 இல்  மறைந்த வேளையில் அந்தத் துயரமான செய்தி பரவலாக அறியப்படவில்லை என்பது வருத்தமானது.

நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலையும் அதற்கு முக்கிய காரணம்.

சி.வி. அவர்கள் கொழும்பில் நாலந்தா கல்லூரியில் கற்றவர். 1934 ஆம் ஆண்டு ரவீந்திரநாத தாகூர் இலங்கைவந்தசமயத்தில் அவரை நேரில் சந்தித்து, தான் எழுதிவைத்திருந்த விஸ்மாஜினி என்னும் இசைநாடக நூலை அவரிடம் வழங்கி ஆசிபெற்றிருக்கிறார்.

இலங்கை வானொலி  Voice of lanka  நிகழ்ச்சியில்  இவரது Tea Pluckers என்ற கவிதை அறிமுகமானதையடுத்து வானொலி நேயர்கள் மத்தியிலும் அறிமுகமானவர். ஆங்கிலப்புலமை மிக்க சி.வி, ஆங்கிலத்தில் பல படைப்புகளை தந்திருப்பவர். இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உத்தியோகபூர்வ ஏடான Congress News  என்னும் ஏட்டிலும் ஆசிரியராக இருந்தார்.

கதை என்னும் இலக்கிய இதழ், மாவலி என்ற மாத இதழ் ஆகியனவற்றினதும் ஆசிரியராக இயங்கினார் என்பதை அறிகின்றோம். கைலாசபதி தினகரன் பத்திரிகையில் ஆசிரியராக பணியாற்றிய காலத்தில், கொழும்பில் வசித்த சில எழுத்தாளர்களுக்கு முக்கிய பொறுப்புகளை வழங்கியிருந்தார்.  பிறநாட்டு இலக்கியவாதிகளை அறிமுகப்படுத்தி அவர்தம் படைப்புகளையும் தினகரனில் வெளியிடச்செய்வதற்கு அவர் சிலருடன் தொடர்புகளை பேணிவந்தார்.

அக்காலப்பகுதியில் இலக்கிய ஆர்வலரும் சிறந்த மொழிபெயர்ப்பாளருமான பொன். கிருஷ்ணசாமி  அவர்களைக்கொண்டு சி.வி.யின் ஆங்கிலப்படைப்புகளை தினகரனில் மொழிபெயர்த்து வெளியிடுவதற்கு ஆவனசெய்தார். சி.வி.யின்  மனைவி இலங்கையில் பெரும்பான்மை இனத்தைச்சேர்ந்தவர் என்பதும், அவரும் கவிதைகள் எழுதுவார் என்பதும் நம்மால் அறியக்கூடிய தகவல்கள்.

1947 இலிருந்த சோல்பரி அரசியலமைப்பின் பிரகாரம் நடந்த சட்டசபைத்தேர்தலில் மலையகத்திலிருந்து தெரிவான ஏழு பிரதிநிதிகளுள் சி.வி.யும் ஒருவர். தலவாக்கலை தொகுதியிலிருந்து தெரிவாகியிருக்கும் சி.வி. பின்னர் அன்றைய ஐக்கிய தேசியக்கட்சி பதிவியிலிருந்த காலத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமைச்சட்டத்தால் அந்த வாய்ப்பையும் இழக்கநேர்ந்தது.

அந்தச்சட்டம்தான் மலையக தமிழ் தோட்டத்தொழிலாளர்களை நாடற்றவர்களாக்கியது. அதன்பின்னர் சி.வி.யின் தொழிற்சங்க நடவடிக்கைகள் தீவிரமடைந்தன. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சௌமியமூர்த்தி தொண்டமான் தலைமையில் வலதுசாரிப்போக்குள்ள தொழிற்சங்கமாக இயங்கியதனால் சி.வி. வெள்ளையன் முதலானவர்களிடமிருந்து முற்போக்கான தொழிற்சங்கமாக தொழிலாளர் தேசிய சங்கம் உருவானது.  மீண்டும் புதிய அரசியலமைப்பின் பிரகாரம் 1977 இல் நடந்த நாடாளுமன்றத்தேர்தலில் நுவரெலியா தொகுதியில் போட்டியிட்டு தோல்வி கண்ட சி.வி. அரசியல், தொழிற்சங்கம், இதழியல், படைப்பிலக்கியம், மற்றும் சமூகப்பணிகளில் தமது ஆளுமையை வெளிப்படுத்தி வாழ்ந்தவர்.அவருடைய In Ceylon’s Tea Garden நூலை கவிஞர் சக்தி பாலையா இலங்கை தேயிலைத்தோட்டத்திலே என்ற பெயரில் மொழிபெயர்த்துள்ளார். வாழ்வற்ற வாழ்வு, எல்லைப்புறம், நாடற்றவர் கதை ஆகியனவற்றை பொன். கிருஷ்ணசாமி மொழிபெயர்த்திருக்கிறார்.

சி.வி. அவர்களின் நூற்றாண்டு காலத்தில்  இலங்கையில் அவரது நினைவாக முத்திரையும் வெளியிடப்பட்டது. சி.வி.  ஆரம்பத்தில் தொடர்ச்சியாக ஆங்கிலத்தில் எழுதியிருந்தாலும் மலையக மக்களைப்பற்றித்தான் எழுதிவந்தவர்.

பின்னாளில் அவர் தமிழிலேயே சில நவீனங்களை படைத்தார். அவ்வாறு வெளியானவைதான் பார்வதி, இனிப்படமாட்டேன் முதலானவை. சி.வி. தமது இலக்கியப்பிரவேசகாலத்தில் முதலில் ஆங்கிலத்தில் எழுதியதன் மூலம் மலையக மக்களின் வாழ்வை பரவலாக அறியச்செய்தவர்.

” ஆங்கிலத்தின் எழுதியதன் மூலம் துயரம் தோய்ந்த இம்மக்களின் வாழ்வை, தமிழின் எல்லைகளுக்கப்பாலும்  கொண்டுசென்ற பெருமைக்குரியவர் சி.வி. என்பது ஒருபுறமிருக்க, ஆங்கிலத்தில் எழுதிய ஒரே காரணத்தால் மலையகம் அல்லாத மற்றைய இலக்கியகாரர்கள் மத்தியில் ஒரு பரவலான அறிமுகத்தையும் எழுத்தாள அந்தஸ்தையும் சி.வி. பெற்றிருந்தார். ஆனால், மலையகத்தமிழ் எழுத்து, இலக்கியத்தைப்பொறுத்தவரை ஓர் அந்நியராகவே இருந்திருக்கின்றார். அறுபதுக்குப்பின் சிலிர்த்துக்கொண்டெழுந்த மலையக இலக்கியம் கண்டு பூரித்துப்போன சி.வி. புதியவர்களுடன் தன்னைப்பரிச்சியம் செய்துகொண்டார். புதுமை இலக்கியம் என்று அதற்குப்பெயரிட்டுப்போற்றினார். தன்னுடைய எழுத்துக்கள் தமிழில் வரவேண்டிய அவசியத்தை உணர்ந்தார்.”  என்று மலையகத்தின் மூத்த எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் தமது மலையகச்சிறுகதை வரலாறு என்னும் நூலில் பதிவுசெய்துள்ளார்.

இந்தியாவில் தோன்றிய ரவீந்திரநாத்தாகூர் ஆங்கிலத்தில் எழுதியமையால் உலகெங்கும் அறியப்பட்டார். கொண்டாடப்பட்டார். அவருக்கு ஈடாக மட்டுமன்றி அவரையும் விட  மேன்மையாக மக்களைப்பற்றி எழுதியவரும் தீர்க்கதரிசியுமான மகாகவி பாரதி தமிழில் அதிகம் எழுதியதனால், அவர் பற்றிய புகழ்  குறிப்பிட்ட  தமிழ் எல்லைக்குள் நின்றது. அவரது நூற்றாண்டுக்குப்பின்னர் அந்த எல்லைகளையும் கடந்து பேசப்பட்டார்.இலங்கையில் ஆங்கிலத்திலேயே எழுதிவந்திருக்கும் எங்கள் சி.வி. அதனால் தமிழ் வாசகர்களிடம் செல்லமுடியாது என்று கருதியதனாலோ என்னவோ தமது  ஆங்கில மூலப் படைப்புகளை தமிழில் வெளிவரச்செய்தார். அவருக்கு இதுவிடயத்தில் பெரிதும் உதவியவர்களாக சக்தி பாலைய்யாவும் பொ. கிருஷ்ணசாமியும் போற்றப்படுகின்றனர்.

காலப்போக்கில் தாம் ஆங்கிலத்தில் எழுதியவற்றை தாமே தமிழில் மொழிபெயர்க்கத் தொடங்கிய சி.வி. அவர்கள் பின்னர் தமிழிலேயே எழுதத்தொடங்கிவிட்டார்.

சி. வி.யின் எழுத்துலகம் இவ்வாறுதான் பரிமாணம் பெற்றிருக்கிறது. பரிமளித்திருக்கிறது.

சி.வி பற்றி திருச்செந்தூரன், இர. சிவலிங்கம், மு.நித்தியானந்தன்,  சாரல்நாடன், லெனின் மதிவானம், கார்மேகம், மல்லியப்பு சந்தி திலகர், தெளிவத்தை ஜோசப், அந்தனிஜீவா, தங்கத்தேவன் உட்பட பலர் ஏற்கனவே தனித்தனி ஆய்வுக்கட்டுரைகளும் சில நூல்களும் எழுதியிருக்கின்றனர்.

மலையக கலை இலக்கியப்பேரவையின் ஸ்தாபகர் அந்தனிஜீவா, கவிஞராகவும் அறியப்பட்ட சி.வி. அவர்களுக்கு  ‘ மக்கள் கவிமணி’ என்ற பட்டத்தையும் வழங்கியிருக்கிறார்.

மலையக நாட்டார் பாடல்களை தேடிச்சேகரித்து தொகுத்திருக்கும் பாரிய பணியையும் சி.வி. செய்திருக்கிறார். (அமரர்) துரைவிஸ்வநாதனின் துரைவி பதிப்பகத்தின் வெளியீடாக வந்திருக்கும் மலையகச்சிறுகதைகளின் இரண்டாம் பாகத்தின் பெயர் உழைக்கப்பிறந்தவர்கள். இதனைத்தொகுத்திருக்கும் தெளிவத்தை ஜோசப், சி.வி. அவர்களின் கதையையே இத்தொகுப்பில் முதலாவதாக இடம்பெறச்செய்து பாராட்டி கௌரவித்திருக்கிறார்.

ஆனால், அந்த அரிய தொகுப்பினை பார்க்காமலேயே சி,வி. 19-11-1984 இல் மறைந்துவிட்டார். அவர் மறைந்தவேளையில்  அரசியல் காரணங்களுக்காக ஊரடங்குச்சட்டம் பிறப்பிக்கப்பட்டிருந்தது. அதனால் அவரையும் அவரது படைப்புகளையும் நேசித்த பலருக்கும் அவரது மரணச்செய்தி தாமதமாகவே கிடைத்தது.

சி.வி.யின் கல்லறை தலவாக்கொல்லை மடக்கும்பரவில் தரிசனத்திற்குரியதாகியிருக்கிறது. அவர் கல்லறையில் உறங்கினாலும் அவர் பற்றிய நினைவுகள் எங்கள் நெஞ்சறைகளில் உயிர்வாழ்ந்துகொண்டிருக்கின்றன.

நன்றி "நடு" இணைய சஞ்சிகை

மலையகத் தமிழரின் : இந்திய அடையாளம் - மல்லியப்புசந்தி திலகர்


இலங்கை வாழ் மலையகத் தமிழ் மக்களை 'இந்திய வம்சாவளி தமிழர்'  என அழைத்துக்கொள்வது கூட ஒரு கற்பிதம்தான். ஏனெனில்  இலங்கையின் சட்டத்தின் பார்வையில் அதாவது சனத்தொகைக் கணிப்பீடுகளின்போது இவர்கள் 'இந்தியத் தமிழர்' (இந்தியானு தெமல) என்றே பதிவு செய்யப்படுகின்றனர், அழைக்கப்படுகின்றனர். பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் இந்தியாவில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு இந்தியர்கள் அவர்களின் உழைப்பைப் பெறும் நோக்கத்தோடு அழைத்துச்செல்ல ப்பட்டபோது தமிழர்களும் அடங்கினர்.

அவர்கள் மலேசியா (சிங்கப்பூர் சேர்ந்த), கயானா உள்ளிட்ட மேற்கிந்தியத் தீவுகள், தென் ஆபிரிக்கா, பர்மா, பிஜித்தீவுகள், மடகஸ்கர், மொறீஷியஸ், பர்மா, கம்போடியா  போன்ற பல நாடுகளுக்கு சென்று நிலைகொண்ட பின்னர் அந்தந்த நாட்டின் பெயரையே அடைமொழியாகக் கொண்டு தமிழர்களாக அடையாளப்படுத்தப்பட்டு வருகின்றனர். 

உதாரணமாக 'மலேசிய தமிழர்கள்' (மலாய தமிழர்கள்), 'பர்மா தமிழர்கள்' போன்றவர்களைச் சுட்டிக்காட்டலாம்.  இருப்பினும்  இலங்கையில் குடியம ர்த்தப்பட்ட இந்தியத் தமிழர்கள் தொடர்ந்தும் இந்தியத் தமிழர்கள் என்றே பதிவு செய்யப்பட்டும் அழைக்கப்பட்டும் வருகின்றனர். காரணம், இலங்கையில் ஏற்கனவே 'இலங்கைத் தமிழர்கள்' என்னும் தனியான அடையாளத்துடன் தமிழர்கள் வாழ்ந்துவருவதாகும். இந்தியாவில் இருந்து புலம்பெயர்ந்து சென்ற தமிழர்களுள் ஏனைய நாட்டிற்கு சென்றவர்களில் இருந்து இந்திய அடையாளத்தை தமது இனத்தின் அடைமொழியாக சுமக்கும் தேவை மலையக தமிழர்கள்  மீது இயல்பாகவே சுமத்தப்பட்டுள்ளது. 

 எனினும் இலங்கை வாழ் இந்திய தமிழர்களான தமிழர்கள் தம்மை 'மலையகத் தமிழர்' எனும் தனித்துவமான அடையாளத்துடன் தம்மை பண்பாட்டு ரீதியாக நிறுவிக்கொண்டுள்ளனர். 'மலையகத் தமிழர்' என்னும் இன அடையாளம் இலங்கையில் இன்னும் சட்டரீதியாக அங்கீகரிக்கப்படவில்லை. ஆயினும் 'மலையகத் தமிழர்' என்னும் பதம் சர்வதேச ரீதியாக இலங்கையில் வாழும் ஒரு இன அடையாளத்துக்கு உரியது எனும் நிலையை அடைந்துள்ளது என்பதனை மறுப்பதற்கில்லை.

 மலையகத் தமிழரிடையேயும் தாங்கள் இந்திய தமிழரா? இந்திய வம்சாவளி தமிழரா?  மலையகத் தமிழரா? என்னும் அடையாளம் தொடர்பான வாத விவாதங்கள் தொடர்ந்து கொண்டிருந்தாலும் 'மலையகத் தமிழர்' எனும் அடையாளம் குறித்த பிரக்ஞையும் வேட்கையும் அதனை சட்டரீதியாக உறுதிப்படுத்தப்படல் வேண்டும் என்னும் எதிர்பார்ப்பும் உயர்வாகவே உள்ளது. 

கடந்த இரண்டு ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட இலங்கைக்கான புதிய அரசியலமைப்பாக்க செயற்பாட்டு வழிமுறைகளின் ஒரு அம்சமான மக்கள் கருத்தறியும் குழுவிடம் தம்மை 'மலையகத் தமிழர்' என்னும் கோரிக்கையே  பரவலாகவும் அழுத்தமாகவும் அவர்களால் முன்வைக்கப்பட்டுள்ளமை ஆய்வின் மூலம்  கண்டறியப்பட்டுள்ளது. (பி.கௌதமன் - பதுளை, இர.சிவலிங்கம் நினைவுப்பேருரை 2016). எனவே மலையகத் தமிழர் எனும் சொற்பதம் அங்கீகரிக்கப்பட்டதாக மாற்றப்படும் வரை  இலங்கைத் தமிழர்களிடம் இருந்து மலையகத் தமிழர்களை வேறுபடுத்தி அறிவதற்கு இந்திய வம்சாவளி எனும் சொற்பதங்கள் அவசியப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. 

இந்திய நிலையில், இந்தியாவில் இருந்து புலம்பெயர்ந்த இந்தியர்களை அவர்கள் இனத்துவ அடையாளங்களுக்கு அப்பால் இந்தியர்கள் எனும் 'தேசிய' அடையாளத்துடன் நோக்கி வருகின்றனர். அந்த வகையில் இந்திய அரசாங்கத்தால் அவர்கள் தொடர்பான ஒரு அமைச்சும் கூட இயங்கியது. தற்போது வெளிவிவகார அமைச்சே மேற்படி இந்திய வம்சாவளியினரான மக்கள் தொடர்பான விடயங்களையும் கையாண்டு வருகின்றது. 

பாரத தேசத்தின் தந்தை என போற்றப்படும் மகாத்மா காந்தி இந்த 'இந்திய வம்சாவளி' எண்ணக்கருவினதும்  தந்தையாக பார்க்கப்படுகின்றார். இந்திய சுதந்திர தாகத்துடன் அவர் தென்னாபிரிக்காவில் இருந்து இந்தியா திரும்பிய ஜனவரி 9 ஆம் திகதியை இந்திய அரசாங்கம் 'இந்தியவம்சாவளியினர்' தினமாக அங்கீகரித்து அனுஷ்டித்து வருகிறது. 'புரவாசி பாரதீய திவாஸ்' (PBD) எனும் ஹிந்திச் சொற்களிலான இயக்கம்  அதன் அர்த்தத்தையும் விளக்குவதாக உள்ளது. 

ஒவ்வொரு ஆண்டும் இந்திய தூதரகங்கள் உள்ளநாடுகளில் இந்த தினம் கொண்டாடப்படுவதோடு அந்தந்த நாடுகளின் பிரதிநிதிகளைக்கொண்டதான ஒரு மாநாடும் அன்றைய தினம் நடாத்தப்படுவதுண்டு. பெரும்பாலும் அது இந்தியாவில் நடைபெற்றாலும் இந்தியாவுக்கு வெளியேயும் நடத்தப்பட்டுள்ளது.

 இந்த 2018 ஆம் ஆண்டு இன்னுமொரு கட்டத்தை அடைந்ததாக இந்திய வம்சாவளியினரான பாராளுமன்ற உறுப்பினர்களின் சர்வதேச மாநாடு ஒன்றை முதன் முறையாக டெல்லியில் நடத்தியுள்ளார்கள். சுமார் 24 நாடுகளில் இருந்து 150 க்கு மேற்பட்ட மக்கள் பிரதிதிநிகளான பாராளுமன்ற உறுப்பினர்கள், மேயர்கள் இந்தியாவுக்கு வெளியே உள்ள நாடுகளில் இருந்து கலந்துகொண்டுள்ளனர். இதில் அமைச்சர்கள், உயர்மட்ட தலைவர்கள் அடங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல சட்டசபைகள், மாகாணசபைகள் போன்ற கீழ் மட்ட  சபைகளும் அடங்கவில்லை. அவர்களும் சேருமிடத்து இந்த எண்ணிக்கை 300 ஐ தாண்டுவதற்கான வாய்ப்பு உள்ளது. 

வெளிநாட்டில் வாழும் இந்தியர்களை அல்லது இந்திய வம்சாவளியினரை இந்திய அரசாங்கம் மூன்றாக வகைப்படுத்தியுள்ளது. ஒன்று, வதிவற்ற இந்தியர்கள் ( Non Resident Indians – -NRI) இரண்டு வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் (Overseas Citizen of India- –OCI) மூன்றாவது (People of Indian Origin –- PIO)  முதலாம் பகுதியினரான வதிவற்ற இந்தியர்கள் (NRI) முழுக்க முழுக்க இந்திய குடிமக்கள். தொழில் நிமித்தமாகவோ அல்லது கல்வித்தேவைகளுக்காகவோ தற்காலிகமாக வெளிநாடுகளில் தங்கியிருப்போர். இவர்கள் இந்திய வாக்குரிமையுடைய இந்திய பிரஜைகள். இவர்கள் தற்காலிகமாக இந்தியாவுக்கு வெளியே தங்கியிருக்கின்றார்கள் எனும் பொருள்படவே அவர்கள் வகைப்படுத்தப்பட்டிருக்கின்றார்கள். 

இரண்டாவது பகுதியினரான வெளிநாடு வாழ் இந்தியர்கள் (OCI) இவர்கள் இந்தியர்கள் தான். ஆயினும் இந்திய பிரஜைகளாக அல்லாதவர்கள். வெளிநாட்டு பிரஜைகளான இவர்கள் (OCI) எனப்படும் விசா அனுமதியைப் பெற்றுக்கொள்வதன் ஊடாக இரட்டை பிரஜாவுரிமைக்கு நிகரான ஓர் அந்தஸ்தினை இந்தியாவில் அனுபவிக்க முடியும். இது இரட்டைக் குடியுரிமையும் இல்லை. வாக்களிக்க முடியாது, விவசாய காணிகளை இவர்கள் கொள்வனவு செய்ய முடியாது. தவிர ஏனைய உரிமைகளை இவர்கள் இந்தியாவில் அனுபவிக்க முடியும். 

இந்த அட்டை (OCI) வைத்திருக்கும் ஒருவர் தனியான விசா அனுமதிகளின்றி இந்தியாவுக்கு சென்று வரமுடியும். இந்த (OCI) அனுமதி அட்டையை  பெறுவதற்கு ஒருவர் தான் அல்லது தனது மூதாதையர் இந்தியாவில் வாழ்ந்ததற்கான ஆதாரங்களை இந்தியாவில் உறுதிப்படுத்த வேண்டும். தான் வாழுகின்ற நாட்டில் உள்ள இந்திய அடையாளங்கள் இதற்கு ஏற்புடையதாகாது. அவரது இந்தியாவுடனான வழிவந்த தலைமுறைத் தொடர்புகள் சொத்துகள் பற்றிய உறுதிப்படுத்தலை இந்திய அரச நிர்வாக மட்டம் உறுதி செய்கின்ற பட்சத்திலேயே இவர்கள் (OCI) அட்டையை அந்தந்த நாட்டு இந்திய உயர்ஸ்தாணிகரங்கள், தூதரகங்கள் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும். 

மூன்றாவது வகைப்படுத்தலான இந்திய வம்சாவளி மக்கள் (PIO)  முழுக்க முழுக்க வெளிநாட்டவர். ஆனால் இந்திய வம்சாவளியினர். இவர்கள் இந்தியாவுக்கு செல்வதற்கு விசா அனுமதி பெறவேண்டும். (OCI) பகுதியினர் பெறும் சலுகைகளை அனுமதிக்க முடியாது. எனினும் வியாபாரநடவடிக்கைகளுக்கோ அல்லது உயர்கல்வி வாய்ப்புகளுக்கோ இந்த (PIO) தகுதி ஒரு சந்தர்ப்பத்தை வழங்கும். இதற்கு (PIO) எனும்  அட்டையினை இந்திய அரசாங்கத்திட்டம்  விண்ணப்பித்து பெற்றுக்கொள்ள முடியும். 

இலங்கை வாழ் மலையகத் தமிழ் மக்கள் இந்திய வம்சாவழியினராக உள்ள போதும் கூட அவர்கள் மேற்கூறிய எந்த வகைப்படுத்தலுக்கும் உள்ளானவர்கள் இல்லை. முதல்  வகைப்படுத்தலில் (NRI)  அவர்கள் வருவதற்கான வாய்ப்புகள் இல்லை.

இரண்டாவது வகைப்படுத்தலான (NRI) இல் இவர்கள் இடம்பெற வாய்ப்புண்டு. எனினும் தற்போது ஐந்தாவது தலைமுறையினர்களாக வாழும் மலையகப்பெருந்தோட்ட மக்கள் தமது மூதாதையர்  தமிழ்நாட்டில் வாழ்ந்ததற்கான ஆதாரங்களை  சமர்பிப்பதும் அந்த OCI அனுமதியைப்பெறுவதற்காக பெருந்தொகை பணத்தை செலுத்த வேண்டியிருப்பதும் நடைமுறைச்சாத்தியமற்ற விடயமாகவே அமைந்து காணப்படுகின்றது. 

இதனால் இன்றுவரை தமது தலை முறைத்தொடர்புகளைப் பேணிவருகின்ற மேற்தட்டு இந்திய வம்சாவழியினரே OCI அனுமதியைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.  சிலர் வியாபார நோக்கத்திற்காகவும் பெற்றுக்கொண்டுள்ளனர். இந்திய வம்சாவளி அல்லாதவர்களும் கூட குறுக்குவழியில் OCI அனுமதியைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.   ஆக இலங்கை வாழ் மலையக மக்கள் குறிப்பாக பெருந்தோட்டத் தொழிலாளர்களும் அவர்களில் தங்கிவாழ்வோரும் தம்மை அடக்கிக்கொள்ளக்கூடிய ஒரே வகைப்படுத்தல் PIO எனப்படும். 

'இந்திய வம்சாவளியினரான மக்கள்' என்பதைப் பெறுவதுதான். உண்மையில் அவர்கள் அப்படித்தான் இலங்கையில் பார்க்கப்படுகின்றார்கள், பதியப்படுகின்றார்கள். ஆனால் இந்திய மட்டத்தில் இந்திய வம்சாவளியினராக மலையகத் தமிழ் மக்களை ஏற்றுக்கொள்ளும் எந்த ஆவணமும் வழங்கப்படவில்லை.

 சுருங்கச்சொன்னால் மலையகத் தமிழ் மக்கள் இந்திய வம்சாவளியினர் என்பது இலங்கையில் ஏற்றுக்கொள்ளபட்டு இருக்கின்றதே தவிர இந்தியாவில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இந்த வாய்ப்பு அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் பட்சத்தில் குறைந்த பட்சம் ஆண்டுதோறும் வழங்கப்படும் 50 புலமைப்பரிசில் வாய்ப்புகளை பெற்று திரும்பியிருந்தால் பத்து வருடங்களில்  இந்திய பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்ற 500 பட்டதாரிகள் மலையகம் பெற்றுக்கொண்டிருக்கும். அவர்களில் 100 பேர் விஞ்ஞான பட்டதாரிகளாக இருந்திருக்கும் பட்சத்தில் மலையகத்தில் விஞ்ஞான பட்டதாரி ஆசிரியர்கள் கிடைத்திருப்பர். 

இந்திய நிலையில் ஆவண மட்டத்தில் இந்த தடை இருந்ததன் காரணமாக இந்த அரிய வாய்ப்பினை மலையக பெருந்தோட்ட மாணவர்கள் கடந்த காலங்களில் பெற்று க்கொள்ள முடியாதவர்க ளாகவே ஆனார்கள். இதற்கு பதிலாக OCI அட்டை வைத்திருக்கும் குறிப்பிட்ட வட்டத்தினர் இந்த வாய்ப்புகளை அனுபவித்து வருகின்றனர். அவ்வாறு சலுகைகளை அனுபவிப்பவர்கள் மலையகப் பாடசாலைகளில் ஆசிரியர்களாக வரும் அளவுக்கு இறங்கி வரக்கூடியவர்களாகவும் இல்லை. அவர்கள் , உயர்தொழில் செய்வோராக இந்தியாவிலேயே தங்கிவிட்டவர்களாக அல்லது வெளிநாடுகளுக்கு சென்று விட்டவர்களாக அல்லது தலைநகரைத் தளமாகக் கொண்டவர்களாகவே இருந்துவிடுவதுண்டு. 

இந்திய அரசாங்கம் வழங்கும் புலமைப்பரிசில் வாய்ப்புகளுக்காக விண்ணப்பிக்கும் விண்ணப்பப் படிவத்தில்  முதலாவது கேள்வியாக நீங்கள் எந்த வகையான இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் எனும் கேள்வி அமைந்திருக்கும். அதில் NRI , OCI,  PIO எனும் எந்தவொரு தெரிவையும் மேற்கொண்டு அதற்குரிய ஆவணத்தை காட்டும் சந்தர்ப்பம் மலையக பெருந்தோட்ட மாணவர்களுக்கு இல்லாமல் போக இந்திய அரசாங்கம் இந்திய வம்சாவளியினருக்காக வழங்கும் இந்த அரிய வாய்ப்பினை பெருந்தோட்டப்பகுதி மாணவர்கள் பெற்றுக்கொள்வது மிக மிக அரிதாகவே அமைந்துவிட்டது. 

உண்மையில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் காலத்துடன் ஒப்பிடும்போது இந்த விடயம் முறையாக மேலே கொண்டு செல்லப்பட்டிருக்கும் பட்சத்தில்  மலையகத்தில் பட்டதாரிகளின் எண்ணிக்கையும் தேவையான பட்டதாரி ஆசிரியர்களின் எண்ணிக்கையும் இப்போதைய தேவைக்கு போதுமானதாக இருந்திருக்கும். 
இங்கே புலமைப்பரிசில் விடயம் விபரிக்கப்பட்டது, இந்திய வம்சாவளி எனும் அடையாளத்தை இலங்கையில் சட்டரீதியாக சுமக்கும் மலையகத் தமிழ் மக்கள் உண்மையில் அந்த அடையாள சுமப்பினால் இந்தியாவில் இருந்து கிடைக்கப்பெறும் நன்மைகள், அடைந்துகொண்டிருக்க வேண்டிய நன்மைகள் என்ன என்பதை தெளிவுபடுத்துவதற்கே. 

இதற்குமப்பால் இவர்கள் பெற்றுக்கொண்ட நன்மைகள் 'இலங்கை தோட்டத் தொழிலாளர்கள் கல்வி நம்பிக்கைப்பொறுப்பு' (Ceylon Estate Workers Education Trust Fund – CEWET)  எனும் நிதியத்தின் ஊடாக இலங்கையில் உயர்தரத்திலும் பல்கலைக்கழகத்தில் கற்கும்போது வழங்கப்படும் சிறு உதவி தொகையாகும். இது இருபது வருடங்களுக்கு  முன்பு மாதாந்தம் 300 ரூபா என்ற நிலையில் இருந்து தற்போது 750 ரூபாவை எட்டியிருப்பதாக அறிய முடிகின்றது. இவை தவிர கலாசார மண்டபங்கள், கலாசார உபகரணங்கள், புத்தகங்கள், பாடசாலை அபிவிருத்தி நிதிகள் எனும் உள்ளார்ந்த விடயங்களுக்கே மலையக மக்களின் இந்திய அடையாளம் பயன்பட்டுவருகின்றது.  

இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தின் பின்னர் அங்கு மக்களின் சாதாரண வாழ்க்கையைக் கட்டியெழுப்புவதற்காக ஐம்பதினாயிரம் வீடுகளை இந்திய அரசு நன்கொடையாக வழங்கியபோது யுத்தத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்கும் அது வழங்கப்படவேண்டும் எனும் கோரிக்கையின் அடிப்படையில் அவர்களுக்கு 6000 வீடுகள் ஒதுக்கப்பட்ட நிலையிலேயே 4000 வீடுகள் மலையகப் பெருந்தோட்டப் பகுதிகளுக்கு என ஒதுக்கப்பட்டன. 

அதனைக் கட்டுமானம் செய்வதில் இலங்கைத் தமிழ், முஸ்லிம் மக்களின் நிலையில் இருந்து வேறுபட்ட ரீதியான காணிப்பிரச்சினைகளைக் கொண்டிருக்கின்ற சமூகமான மலையகத் தமிழர் சமூகம் நீண்ட இழுபறிகளுக்கு பின்னரே நான்காயிரம் இந்திய வீட்டுத்திட்டத்தை நடைமுறைக்கு கொண்டுவரமுடிந்தது. கடந்த ஆண்டு இந்திய பிரதமர் இலங்கை வந்ததோடு மட்டுமல்லாமல் மலையகத்துக்கும் விஜயம் செய்தமை ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது.  

தற்போது இந்திய வீடமைப்புத்திட்டத்தின் எண்ணிக்கை பதினான்காயிரமாக உயர்ந்துள்ளது. இவையெல்லாம் மலையக மக்கள் கொண்டிருக்கும் இந்திய அடையாளத்தினால்தான் என்று சொல்லிவிடவும் முடியாது. ஏனெனில் இந்திய அரசாங்கம் இலங்கை மக்களுக்கு வடக்கு,  கிழக்கு , தெற்கு என பல்வேறு விதமான உதவிகளை செய்து வருகின்றது. அதில் ஒன்றாகவே இந்த அபிவிருத்தி உதவிகளைக் கருத முடியும்.

 எனவே இந்த அபிவிருத்தி உதவிக நன்கொடைகளுக்கு அப்பால் மலையகத் தமிழ் மக்கள் சுமக்கும் 'இந்திய அடையாளம்' ஒரு அரசியல் பரிமாணத்தை பெறவேண்டியதன் அவசியம் உணரப்படுகின்றது. உலகெங்கும் வாழும் இந்திய வம்சாவளியினர் தமது இந்திய அடையாளத்தை தத்தமது நாடுகளில் தமது இருப்புக்கான அரசியல் பரிமாணத்துடன் கையாள்வதை அவதானிக்க முடிகின்றது.

இலங்கை மலையகப் பக்கத்தில் இருந்து அந்த பரிமாணம் அடையப்பெற்றிருக்கின்ற பட்சத்தில் மலையகத் தமிழ் மக்களின் இலங்கை இருப்பு என்பது இன்னுமொரு கட்டத்தை அடைந்திருக்கும். இலங்கைத் தமிழர்கள் அறியப்பட்டதன் அளவுக்கு இந்தியாவில் இந்திய வம்சாவளியினரான மலையகத் தமிழர்கள் அறியப்படவில்லை என்பது பலரும் அறிந்ததே. இலங்கையில் முஸ்லிம் மக்களின் குறிப்பாக முஸ்லிம் ராமங்களின் அபிவிருத்தி விடயங்களில் அவர்கள் முன்னெடுக்கும்அ ரசியல் நகர்வின்  ஊடாக வளைகுடா நாடுகளின் உதவியுடன்  மேற்கொள்ளப் பட்டுவரும் பிவிருத்தியுடன் ஒப்பிடும் போது மலையக மக்கள் அடைந்துகொண்ட அபிவிருத்தி சொற்பமே.

இந்தியாவிடம் இருந்து பாரிய நன் கொடைகளை எதிர்பார்க்க முடியாத போதும்கூட புலமைப் பரி சில் முதலான கல்விசார் விடயங்களில் அதிக கவனத்துடன் ஈடுபட் டிருக்கும் பட்சத்தில் தற்போதைய நிலைமையைவிட கல்விமட் டத்தில் மலையகம் இன்னுமொர் பரிணாம த்தை அடைந் திருக்க முடியும். அதனை வழங்குவதற்கு இந்திய தயாராக இருக்கின்ற நிலையிலும் மலையகம் தன்னை அதற்கு தயார் செய்து கொண்டிருக்காத அரசியல் நிலைமையே இருந்து வந்துள்ளது. 

தற்போது PIB முறைமைக்கு மாறாக OCI முறைமையைக் கடைபிடிக்கவும் நடை முறைகளை தளர்த்தவும்  இந்தியா முன்வந்துள்ள நிலையில் இலங்கை வாழ் மலையகத் தமிழ் மக்கள், தமது 'மலையகத் தமிழர்' எனும் தனித்துவ, இனத்துவ அடையா ளத்தை இலங்கை அரசியலில் உறுதிபடுத்தமுனையும் அதேவேளை இந்திய வம் சாவளியினர் எனும் சர்வதேச அடை யாளத்தின் ஊடாக தமது அரசியலை சர்வதேசத்தின் பார்வைக்கு முன்கொண்டு செல்ல வேண்டிய காலம் எழுந்துள்ளது.

(நன்றி - வீரகேசரி, 13.01.2018)

மலையகத்தின் பெண் எழுத்துக்களும் இருப்பும் - எஸ்தர் விஜிநந்தகுமார்


மலையக மக்கள் என்போர் அந்நிய  இந்தியத் தமிழர் என்ற ஒரு பிரிவினைக்குட்பட்ட  மக்களாகக் கணிக்கப்பட்டது ஒரு வரலாற்றுண்மை. ஆரம்பத்தில் “கொழுந்து  பறிப்பதற்கு  எதற்கு கல்வி?” என்ற நிலையிலிருந்தது. மலையக மக்களைக்  கருத்தியல் ரீதியில் “கள்ளத்தோணிகள்”,”தோட்டக்காட்டான்” ,”கூலிகள்”,”தோட்டத்தொழிலாளர்கள்” என்று அவர்களைப்  பலவித செல்லமில்லாத பெயர்களால்  அழைக்கப்பட்டனர்.

தனிப்பட்ட இலாபம் சேர்க்கும் தோட்டச்  சிங்கள துரைமார்களும் ஆரசும் இவர்களைத் “தொழிலாளர்கள்” என்ற நிலையில் வைத்திருப்பதற்கு எப்போதும் கண்ணும் கருத்துமாகவே  இருக்கின்றார்கள். மலையகப் பெண்கள் காலை முதல் மாலை வரை தேயிலைத்தோட்டத்தில் குறைந்த மிகக்குறைந்தக் கூலியில் வேலை செய்கிறார்கள்.இவர்களின் வேலைப்பளுவும் வீட்டுப்பளுவும் சொல்லெண்ணா துன்பம் கொண்டவை.வெளியில் கொழுந்துப் பிடுங்கவும் இரவு வீடு சென்று வீட்டு வேலைகளான  சமையல், கூட்டுதல், கழுவுதல் என்று பலதரப்பட்ட குடும்பச்  சுமைகளுடன் போராடிக்கொண்டிருக்கின்றார்கள். இந்நிலையில் “மலையக மக்கள்” என்ற சொற்றொடரே மிகவும் பிரச்சனையாகவுள்ளது.மலையகம் என்பது மலை சூழ்ந்த இடத்தை அவர்கள் வாழ்விடமாக கொண்டது என்றக் காரணத்தாலே அவர்களுக்குப் பல  காரணப்பெயர்கள் உருவாகியுள்ளன.

தென்இந்தியாவில் இருந்து  வந்ததே வந்தோம் எமக்குத்தான் எத்தனைப் பெயர்கள்? குழந்தை பிறந்ததும்  ஒரு பெயரும் அத்துடன் இன்னுமொரு செல்லப்பெயரும்  இருக்கும். ஆனால் எமக்கு எத்தனைப் பெயர்கள்!!பிரஜாஉரிமைகூட  இன்றுமே  பிரச்சனையாகவேயுள்ளது. இவைகளே  மக்களின் அரசியல் நிலைமைகளை நிர்ணாயிப்பதாகவுள்ளது.”மலையக மக்கள்” என்றப்பதத்தை மக்கள் விரும்புவதில்லை. “இந்திய வம்சாவழி” என்றப்பதம் எந்தவகையிலும் இழிவானதல்லவே. இந்தப்பதமே உண்மையை உரக்க சொல்வதுப்போலவும்  உள்ளது.1920 களிற்கு பின்னால் மலையகத்தில் பெருந்தோட்டங்களில் நிலையான குடியிருப்புத்தன்னைமை ஏற்பட்டது.1931 இல் இலங்கை அரசியல் யாப்பில் ஏற்பட்ட மாற்றங்களின் பொழுது  30 களில் அரசியலில் மலையக பிரதிநிதித்துவம் உருவானது. மேலும் அரசியலுடனான தொழிற்சங்க நடவடிக்கைககள் இடம்பெற்றன. தென்னிந்தியாவில் தஞ்சாவூரில் அரச உத்தியோகாத்தரான இங்கு வந்த நடேசையரினால் தொழிற்சங்க  நடவடிக்கைககளும் உருவானது.அவர் “தேசநேசன்” என்ற பத்திரிகை மூலம் தமது  கருத்துக்களை வெளியிட்டார் .மேலும் “சிட்டிசன்” என்ற ஆங்கிலப்பத்திரிகையையும் இவர் பயன்படுத்திக்கொண்டார்.இவரும் இவரது மனைவியான மீனாட்சியம்மையும்   இணைந்து சில விடியல்களை தேடினார்கள். தொழிலாளரை கடன் தொல்லையிலிருந்து விடுவித்தல், தொழிலாளரிடையே கல்வியறிவை உருவாக்குதல், அவர்களிடையே பொருளாதார அந்தஸ்த்தை உயர்த்துதல், அரசியல் அறிவினை உருவாக்குதல்,போன்றவை  முக்கிய  நோக்கங்களாக இருந்தன.

பெண்களை வலுப்படுத்தவும் அவர்களை அரசியல்  நீரோட்டத்தில் இணைக்கவும் எழுத்தறிவை விதைக்கவும்  மீனாட்சியம்மை அவர்கள் கடுமையாகப் பாடுபட்டார். 95%பெண்கள் தொழிற்சங்கங்களில்  அங்கத்துவம் வகிப்பதுடன் சாந்தா செலுத்துபவர்களாகவும் உள்ளனர். தொழிற்சங்க நடவடிக்கைகளில்  பங்குபற்றும் பெண் தொழிலாளர்களை எடுத்துக்கொண்டால், தோட்டமட்டங்களில் மாதர்சங்கத் தலைவி கமிட்டியில் உள்ளப்பெண்கள் ஆவார்கள். பெண்களினது  தொழில் தொடர்பானப்பிரச்சினைகள்  மாதர்சங்கத்தலைவியினூடாகவே தொழில்சங்கத்தலைவருக்கு அறிவிக்கப்படும். மாதர் சங்கத்தலைவி தோட்டமட்டத்தில் உள்ள பெண்களின் பிரச்சினைகளை முன்னெடுத்து சொல்பவராக இருப்பாள். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இவ்வாறு மாதர் அணியை எல்லா தோட்டங்களிலும் உருவாக்கி உள்ளது.பெரும்பாலும் தோட்டக்கமிட்டித் தலைவர் ஆணாகவே இருப்பார். சில தோட்டங்களில் பெண்களும் தோட்டக்கமிட்டித் தலைவியாக உள்ளனார்.

நான் ஏலவே  சொன்னது போல்  தொழிற்சங்க வரலாற்றில் முதன் முதலாகச் செயற்பட்ட பெண்ணாக நடேசையரின் துணைவியார் மீனாட்சியம்மாளைத் தான்  முக்கியமாகக் குறிப்பிடவேண்டும்.இவர் பொதுவாக தொழிலாளருக்கும் பெண்காளுக்காககவும் தனது செயற்பாடுகளை ஆற்றியுள்ளார்.

பெண்களது  கல்வி:

1920 கல்விச்சட்டம் அமுல்படுத்தப்பட்டதனூடாக தோட்டங்களில் பாடசாலலைக்குச் செல்வது கட்டாயமாக்கப்பட்டது.இது எழுத வாசிக்க பழகுவதற்காக மட்டுமே இருந்தது.1904 இல் 2000 பிள்ளைகள் பாடசாலையில் இருந்ததாகவும்,1930-களில் 26000 பிள்ளைகள் இருந்ததாகவும்,18% கல்வியறிவு பெருந்தோட்டங்களில் நிலவியதாகவும், அதில் 7.1% பெண்கள் இருந்ததாகவும் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

1972 இல் அரசாங்கம் தோட்டங்களைப் பொறுப்பெடுக்கும் வரை தோட்டங்களில் உள்ளவர்களின் சமூகநலன், கல்வி,சுகாதாரம் தொழில் நிலமைகள் எல்லாம் இலங்கை அரசாங்கத்திற்குரிய பொறுப்புக்களாகக்  கொள்ளப்படவில்லை. மேலும்1972 ம் ஆண்டு சில மாற்றம் ஏற்படத்தொடங்கியது. 1970-ற்குப்  பின் பல தமிழ் பாடசாலைகளை  மூடியதுடன் மலையகத்தின் கல்வி நிலைகளில்  இனத்துவரீதியான சிங்களாமக்களுக்குக்  கூடுதல் முன்னுரிமைகளைக் கொடுத்து வாந்திருக்கின்றது. 1970-களுக்கு  முன்பும் பின்பும் சரி நிர்வாகமும் அரசும் தோட்ட வேலைகளுக்கு கல்வி அவசியமில்லை என்ற கருத்தைக் கொண்டுள்ளதுடன் அதற்கான  வழிவகைகளை எடுக்கத்தேவையில்லை என்றப்போக்கையே காட்டி வருகின்றது. இதனால் ஆகக்கூடிய ஐந்தாம் தரம் மட்டும் உள்ள பாடசாலைகளே இயங்கி வந்தன. 13 வாயதில் தோட்டத்தில் வேலை செய்யப்  பெயரைப்  பதிவு செய்யவேண்டியிருந்தது. எனது தாயார் வெறும் 50 சதங்களுக்காகத் தனது  10 ஆவது வயதில் தோட்டத்தில் வேலைக்குச்  சேர்ந்தாகச் சொன்னார். அம்மாவைப்போல ஏனைய சிறார்களும் குறைந்த கூலிக்காக வேலைக்கமர்த்தப்பட்டனர்.இது லாபகராமானதாகவும் இருந்தது. பிள்ளைகளும்  தொழில் செய்வதையே விரும்பினார். காரணம் அவர்களது தலைவிரித்தாடும் பட்டினி. அதிகமாகக்  கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை.

85/86 மேற்க்கொள்ளப்பட்ட சமூகபொருளாதார ஆய்வில், 10-14 வயதெல்லைக்கு உட்பட்டவர்களின்   கல்வியறிவு வீதம் 54.73%ஆகவும், 50-54 வயதெல்லைக்கு உட்பட்டவர்களின் கல்வியறிவு வீதம்  27.28%ஆகவும் இருந்தது. மலையகத்தில் இன்றுக்காணப்படும் சிறீபாதக்கல்லூரியானாது சிறீபாத என்ற சிங்களப் ப்பெயருடன் மலையக மக்களிடையே கல்வியைக்  கருத்தில் கொண்டு கட்டப்பட்டது.மலையகத்  தமிழரை விட சிங்களவார்களும் வெளியாருமே இங்கு கூடுதலாகப்  படிக்கிறார்கள். தொழில் புரிகின்றார்கள்.

மலையகத்தில் மீனாட்சியம்மைக்குப் பின்னர்தான் கல்வி மற்றும் அரசியலில் பெரும் மாற்றங்கள் உருவானது.பெண் எழுத்துக்கள் அங்கொன்றும் இங்கொன்றுமான வளரத்தொடங்கின. எழுதப் படிக்க பெண்களையும் ஈடுபடுத்தும் நிலை உருவானது. முறையான பாடசாலைச்  சீருடைக்கூட இல்லாமல் மாணவிகள் அணிந்த ஆடையுடனேயே அருகில் இருந்த ஐந்தாம் தரம் வரையிலான பள்ளிக்கூடங்களுக்கு சென்றதாகவும்  “யாழ்ப்பாணத்து மாஸ்டர்” என்பவர்களே இவர்களுக்கு எழுத்துச் சொல்லிக்கொடுத்ததாகவும் எனது தாயார் கூறுகிறார். பாடசாலை முடிந்ததும் இந்த  “யாழ்ப்பாணத்து மாஸ்டர்” வீடுகளில் பின்னேரங்களில் மாஸ்டரின் மனைவிக்கு எடுபிடிகளாகவும், விறகு சேகரித்து உதவியதாகக் கூறினார். நீண்டக்காலமாக “யாழ்ப்பாணத்து மாஸ்டர்களே” அதிகமான மலையகத்  தோட்டப்புற பாடசாலைகளில் கற்பித்தனர். அங்கே எமது மக்கள், யாழ்ப்பாணத்து மாஸ்டர்  மீன்களை  அதிகமாகச்  சாப்பிடுவதாலே நல்ல மூளைசாலிகள்  என்றெல்லாம் அவர்களைப்பற்றிக்கதைப்பார்கள்.அது உண்மைதான். அவர்கள் நிறையவே  எமது மக்களின் கற்றலுக்கு உதவினார்கள். கணக்கு, தமிழ், சமயம் முதலான பாடங்களை படிப்பித்தனர்.இந்த நிலமை இவ்வாறாக இருக்கும் பொழுது  சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்கள் மலையக அரசியலுக்குள் உள் வாங்கப்பட்டார்.

சௌமியமூர்த்தி தொண்டமானின் வருகையின் பின்னார் பல்வேறு அரசியல் நகர்வுகளும் மாற்றங்களும் உருவானது.சாதாரணதரம் மற்றும் ஆகக்கூடிய உயர்தரம் கற்ற மாணவர்களை அவர் ஆசிரியர் தொழிலுக்கு இணைத்து “சிறிபாதக்கல்லுரி”, “தன்சைட் கொட்டக்கல” முதலான ஆசிரியர் கலாசாலைகளை கொண்டு வந்தார். ஆக சௌமியமூர்த்தி தொண்டமானின் செயற்பாடுகள் இவ்வாறு செயல்பட ஆரம்பித்தது.தற்பொழுது  தமிழ்நாட்டில் அமரர் ஜெயலலிதாவைமக்கள் எவ்வாறு அவர்களின் கதாநாயகியாகப் பார்த்தார்களோ அவ்வாறே  மலையகத்தில் தொண்டமான் மக்களின் கதாநாயகனாகப் பார்க்கப்பட்டார்.தரம் ஐந்தில் பெயிலாகும் பிள்ளைகள் தேயிலைத்தோட்டத்தில் பெயரைப்பதிந்து வேலை செய்யப் போய்விடுவார்கள்.என்னுடன் கற்ற மூன்றே மூன்று மாணவிகளைத்தவிர மற்றைய பிள்ளைகள்  யாவரும் தோடட்டத்தில் கொழுந்தெடுக்கப் போனார்கள். காரணம் அவர்களுக்கு வேறுத்தெரிவென்பது இல்லை. சில ஆண்கள் புலிகளின் இயக்கத்தில்  ஈர்க்கப்பட்டு சதா அதைபற்றியே  கதைத்து கேட்டும் ஆண்மாணவர்கள் சிலர்  கடனுக்கு பணம் வாங்கிக்கொண்டு கிளிநொச்சிக்கு பயணமானதாக நினைவிலுண்டு.

கல்வி வளர்ச்சியின் பின்னரான கால கட்டத்தில் மலையகத்தில் தெளிவத்தை ஜோசப் டொமினிக் ஜீவா  மல்லிகை சிவா, அந்தனி ஜீவா முதலானோர் முக்கியமானவர்கள். மொழிவரதன் (தர்மலிங்கம்), சாரல்நாடன், சண்முகம் சிவலிங்கம் போன்றவர்களும் முக்கியமானவர்களே.

பெண் எழுத்தாளர்களில்  பெயரிடும்படி பத்மாசோமகாந்தனை குறிப்பிட முடியும். அதிகமாகப்  பெண் எழுத்தாளர்கள் என்ன  எழுதினாலும் அவர்களைத்  தொடர்ந்து ஊக்குவிக்கும் செயற்பாட்டுத்தளம்  என்பது மிகவும் அருந்தலாகவே இருந்தது  என்பதைக்  கவனத்தில் கொள்ளப்படல்  வேண்டும். ஆக மலையகத்தில் இன்னும் 200 வருடங்கள் சென்றதன் பின்னும் மீனாட்சியம்மையையே நாங்கள் இன்றும் பெண் எழுத்துக்களுக்காக  நினைவுக்கூருகின்றோம். அதேபோல  பெண் எழுத்துக்களையும் நினைவுக்கூறுமளவுக்கு மலையகப்பெண்கள்  தமெக்கென்ற ஒரு அடையாளத்தை  முன் வைக்க எழுதிட வேண்டும்.மலையகத்தின் இலக்கிய செழிப்புக்கு பணியாற்றுதல் காலத்தின் அவசியமாகவும் உள்ளது.இப்போது நிறைய இளம் படைப்பாளிகள் தங்களின் எழுத்து வெளியை விரிவாக்கிக் கொண்டு வரும் நிலையினைக் காண்பதும் மனதுக்கு சிறு ஆறுதலாகவும் உள்ளமை குறிப்பிடத்கக்கது.

உச்சாந்துணை: மலையக மக்களுடைய இனத்துவ இருப்பில் பால்நிலை.

நன்றி - "நடு" இணையச் சஞ்சிகை

வாக்காளர்களின் கைகளில் புதிய தேர்தல் முறையின் வெற்றி - மொழிவரதன்


புதிய தேர்தல் மறுசீரமைப்பின் மூலம் நுவரெலியா மாவட்ட மக்கள் குறிப்பாக, இந்திய வம்சாவளியினர் சற்று மன ஆறுதலுடன் உள்ளனர் எனின் தவறில்லை.

மிக நீண்டகாலமாக பேசப்பட்டும், எழுதப்பட்டும், பல சந்தர்ப்பங்களில் செயற்பாடுகளில் ஈடுபட்டும்தான் இன்று இச்சீரமைப்பு வெளிவந்துள்ளது. இவ்விடத்தில் அனைத்துக் கட்சிகளுக்கும், தொழிற்சங்கங்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் நன்றி கூறவேண்டும்.

ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் அமையும் வட்டாரங்கள் மக்களிடம் நெருங்கிச் சேவையாற்றி வழிவகைசெய்யும் எனலாம். இலங்கையில் மொத்தமாக 4486 வட்டாரங்கள் அமையப்பெற்றுள்ளன. நகர, பிரதேச சபைத் தெரிவு உட்பட விகிதாசார தெரிவுடன் மொத்த உறுப்பினர்கள் 8356 பேர் தெரியப்பட உள்ளனர்.

குறித்ததொரு பிரதேச கலாசாரம், இருப்பு, மொழி என்பனகூடப் பாதுகாக்கப்பட இதனால் வழியேற்படலாம்.

பொதுவாக இலங்கையில் தேசிய சிறுபான்மை இனத்தவர்கள் இப்புதிய முறைமை பற்றி மிகத்தெளிவு பெற வேண்டியவர்களாகவும், விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டியவர்களாகவும் உள்ளனர். பெரும்பான்மை இனத்தவர்களுக்கும் இவ்வட்டார முறைமை பாதகமாதெனக் கூறமுடியாது அதேவேளை சில வட்டாரங்களில் அவர்கள் சிறுபான்மை ஆகிவிடுவார்களோ என்றொரு பயம் அவர்களுக்கு உள்ளது.

விருப்பத் தேர்வுக்கு இப்புதிய முறை சாவுமணி அடித்துள்ளமையால் குறிப்பிட்ட ஒரு கட்சியின் அல்லது ஒரு குழுவினரின் பிரதிநிதிக்கு வாக்களித்திட வாய்ப்பேற்பட்டுள்ளது. இதேவேளை விருப்பத் தெரிவில் பலர் போட்டியிட இருந்த வாய்ப்பு கை நழுவி உள்ளமையால் கட்சிக்குள் பலரை சமாதானப்படுத்திட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. அதேவேளை உள்ளதில் நல்லதை தெரிவு செய்ய வேண்டிய கட்டாயம் கட்சிகளுக்கு ஏற்பட்டுள்ளது.

கட்சிக் கொள்கை, தனி நபர்கள் என்று பார்க்கும்பொழுது புதிய தேர்தல் மறுமீரமைப்பு கட்சிக்கும் அப்பால் தனி நபர்களைப் பற்றியும், வாக்காளர்களையும் சிந்திக்க வைத்துள்ளது எனலாம்.

எது எவ்வாறெனினும் தனி அங்கத்தவர் வட்டாரம் பல அங்கத்தவர் வட்டாரம் போன்ற அறிமுகமும் சிலரை கட்டாயம் கட்சிகள் தெரிந்திட வழிவகுத்துள்ளது எனலாம்.

அதிமான வாக்குகளை பெற்றவரே வெற்றி பெறுவார். இதுவே ஜனநாயகம் இதுவே இறுதியானதாக இருக்கும். இது ஒருவகையில் சரி. அதாவது ஜனநாயக தர்மப்படி அதிக வாக்குகளை பெற்றவர் வெற்றிபெறுவார். இதேவேளை 1200 வாக்குகளைபெற வேண்டியவர் 1199 வாக்குகளை பெற்று ஒரு வாக்கால் தோல்வி அடைவதென்பது மற்றொரு வகையில் ஜனநாயக கட்டமைப்பில் உள்ள ஒரு பாரிய குறைபாடாகும். ஆனால் சுவிஸ், ஜேர்மன் போன்ற நாடுகளில் தோல்வியிலும் "நல்ல தோல்வி"யை இவர் அடைந்ததாக கருதி அவருக்கும் ஓரிடம் கொடுக்கப்பட அரசியல்/ தேர்தல் சீர்திருத்தத்தில் இடம் உள்ளதாக பேராதனை பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் ஆ.ரமேஷ் குறிப்பிடுகிறார்.

இவ்வட்டார முறையினால் தேசிய சிறுபான்மை இனத்தவர்கள் பரவலாக வாழும் இடங்களில் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. இதற்கான மாற்றொழுங்கு அல்லது பாதுகாப்பு இச்சிறுபான்மை இனத்தவர்களுக்கு புதிய தேர்தல் மறுசீரமைப்பில் ஏதாவது சரத்துகள் உள்ளதாக தெரியவில்லை.

டொனமூர் அரசியல் சீர்திருத்தத்தில் காணப்பட்ட 29 ஆவது சிறுபான்மை இனத்தவர்களுக்கான யாப்பு 1972 ஆம் ஆண்டு அரசியல் யாப்பில் நீக்கப்பட்டமையும் தொடர்ந்து 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பிலும்கூட தேசிய சிறுபான்மை இனத்தவர்களுக்கு பெரிய அளவில் ஏதும் நடக்கவில்லை. எனவே தென் மாகாணங்களிலும் சப்ரகமுவ பிரதேசங்களிலும் மேலும் இந்திய வம்சாவளித் தமிழர்கள் குறைவாக காணப்படும் இடங்களிலும் இவ்வட்டார முறைமை பாதிப்பை ஏற்படுத்திட வாய்ப்புள்ளது.

இதேபோன்று ஊவா மாகாணத்திலும் மத்திய மாகாணத்தின் சில பிரதேசங்களிலும்கூட இந்திய வம்சாவளி மலையக மக்களின் வாக்குகள் வீணடிக்கப்பட அரசியல் கட்சிகளின் போட்டா போட்டி தேசிய அல்லது மலையகத் தொழிற்சங்கங்களின் செயற்பாடுகள், சுயேச்சைக் குழுக்களின் பெருக்கம் குறித்ததொரு வட்டாரத்தின் ஒரு சிறுதொகையான வாக்குகளை சிதறடித்திட வாய்ப்புள்ளது.

பெண்களுக்கான 25 வீத கட்டாய ஒதுக்கீடு இதன் மற்றொரு சிறப்பம்சமாகும். வேட்பு மனுவில் 25 வீத ஒதுக்கீடு என்பது பெரிதான ஒன்றல்ல என விமர்சனங்கள் இருந்தாலும் எல்லா சமூகங்களிலும் இதனைத் தேடுவதே சிரமமாக உள்ளதாக கட்சிகள் கூறுகின்றன. பெருந்தோட்டத் துறைகளில் மாத்திரமல்ல தேசிய ரீதியாகவே இந்நிலைமை உள்ளது.

இதற்கான பிரதான காரணம் பெண்கள் முன்வந்து அரசியலில் ஈடுபடாமை அல்லது அவ்வாறு ஈடுபட்டாலும் ஆணாதிக்க சமூகத்தில் அவர்களுக்கான “இடத்தை” ஆணோடு சமமாக வழங்காமை, சரியான ஒரு கணிப்பை அவர்களுக்கு வழங்காமை இப்படி பலவற்றைக் கூறலாம். ஆனால் தற்பொழுது தொழிற்றுறைகளில் பெண்கள் உள்வாங்கப்படுவது போல அரசியலிலும் ஈடுபடலாம். இதற்கு இன்றைய ஆசிரியர் தொழிலே உதாரணமாகலாம். இவைகளுக்கு காலம் பதில் சொல்லுதல் வேண்டும். பெண்கள் மீதான ஓரங்கட்டலை நீக்கிடவும் சமூகத்தின் அந்தஸ்தில் தனக்கென ஓரிடம் பெறவும் இப் பெண்களுக்கான 25 ஒதுக்கீடு ஒருவகையில் வழிவகை செய்துள்ளது.

எவ்வகையான அரசியல் மறுசீரமைப்புகள் தேர்தல் முறைகளில் வந்தாலும் ஒற்றுமையுடன் வாக்குகளை பயன்படுத்துவதிலேயே அதன் பயன் தங்கி உள்ளது.

செல்வாக்கான கட்சிகள், தொழிற்சங்கங்கள் இதனால் பயன்பெற வாய்ப்புள்ள அதேவேளை சிறுசிறு குழுக்களான சுயேச்சை தரப்பினர் கடும் பிரயத்தனங்களை செய்ய வேண்டிவரும். மறுபுறம் கூறுவதனால் சிறுதொகையினரின் ஜனநாயக பங்கேற்பு, அபேட்சகராகும் எண்ணம், உரிமை இழக்கப்படலாம். எல்லாம் இப்புதிய முறை தேர்தலின் பின்னரே வெளிச்சத்திற்கு வரும் பொறுத்திருப்போம்.

நன்றி - வீரகேசரி

ஊடக கார்ப்பரேட்டுகளின் அடிமைகளும், குடிமைகளும் - என்.சரவணன்


ஈஸ்வரன் பிரதர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் தெ.ஈஸ்வரன் காலமானார். அது ஒரு செய்தி. நமக்கு அது ஒரு செய்தி மாத்திரமல்ல. இப்போது தமிழ் ஊடகங்களைச் சேர்ந்தவர்களும், இலக்கியவாதிகளும் சேர்ந்து கூட்டு ஒப்பாரி வைக்கும் நிகழ்வை இந்த நாட்களில் சமூக வலைத்தளங்களில் கணிசமான இடத்தை ஆக்கிரமித்திருந்ததைக் கண்டு அயர்ச்சியும், சலிப்பும் தான் எஞ்சுகிறது.

இழப்பு என்பது கொண்டாடத் தக்க ஒன்றில்லைதான். உரிய அனுதாபத்தையும் செலுத்தவேண்டிய ஒன்றும் தான். ஆனால் ஒருவரின் இறப்பின் பாத்திரம் அத்தோடு சுருங்கிவிடக் கூடிய ஒன்றில்லை. குறிப்பாக ஈஸ்வரன் போன்றோரின் இறப்பு.

பெரும் செல்வந்தர்கள், அரசியல் வாதிகள் தமது அக்கிரமம் மிக்க சுரண்டலை மறைக்க ஊடகங்களை தமது கைக்குள் வைத்திருப்பது ஒன்றும் இரகசியமல்ல. அந்த வரிசையில் ஈஸ்வரன் பிரதர்சுக்கு சொந்தமான பல தொழிற்சாலைகளில் பணி புரியும் தொழிலாளர்கள் எந்தளவு, சுரண்டலுக்கும், நசுக்குதலுக்கும் பல்லாண்டுகளாக இலக்காகி வருகிறார்கள் என்பதை நான் தனிப்பட்ட ரீதியில் அறிவேன். நான் இலங்கையில் இருந்த போது எனது அண்ணன் ஒருவர் அங்கு ஒரு சாதாரண தொழிலாளியாக எதிர்கொண்ட பிரச்சினைகளை தினசரி அறிந்து ஆத்திரப்பட்டிருக்கிறேன். ஆமர் வீதியில் உள்ள அவர்களின் தொழிற்சாலையில் தொழிலின் போது கைகளையும், விரல்களையும் மெசினுக்கு பறிகொடுத்து, அவர்கள் இழப்பீடு கூட மறுக்கப்பட்ட சேதியை அறிந்திருக்கிறேன். அங்கு தொழிற்சங்கங்களுக்கு அனுமதி இருக்கவில்லை. தொழிலாளர்கள் தமது சம்பளம், போனஸ், இழப்பீடு, காப்பீடு, தொழிற் காப்புறுதி உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் எதுவும் கோர முடியாத அடிமைகளாக பணிபுரிவதை அறிந்த போது நானும் அங்கு ஒரு தொழிலாளியாக உள்ளே நுழைந்து விபரங்களை வெளியே கொணர முயற்சித்திருக்கிறேன். அது சில காரணங்களால் சாத்தியப்படவில்லை.

அப்பேர்பட்ட ஈஸ்வரன் பிரதர்ஸ் நிறுவனம் சகல ஊடகங்களிலும் தமது ஆட்களை வைத்திருந்தது. தமது விருந்துகளுக்கு அழைப்பது, பரிசுகளை வழங்குவது, சலுகைகளை வழங்குவது, தமது பொருளாதார அரசியல் செல்வாக்கை இத்தகைய ஊடகர்களுக்கும் பிரயோகிப்பது என்பது சாதாரணமாகிவிட்டது. எழுத்தாளர்கள், ஊடகர்கள், இலக்கியவாதிகள் என்போர் தமது நிகழ்வில் இவர்கள் போன்றவர்களை அழைப்பது இப்போது நிகழ்வுகளில் அங்கமாகப் போய்விட்டது. விழாவில் இவர்களுக்கு முன்னுரிமை, அல்லது முதற் பிரதி வழங்குவதன் மூலம் கணிசமான பணவரவும் வைத்துவிடும் என்பதும் இத்தகையவர்களின் எதிர்பார்ப்பு. வசதி குறைந்த படைப்பாளர்கள், இலக்கியவாதிகள் இதற்குள் சிக்கவைக்கப்படுகிறார்கள்.

இத்தகைய கறைபடிந்த முதலாளிகளை புனிதர்களாக வெகுஜன மக்கள் மத்தியில் நிலைநிறுத்தும் பணியை ஊடகங்கள் கச்சிதமாக ஆற்றிவருகின்றன.

ஈஸ்வரன், மகாராஜா போன்ற இன்னோரன்ன பெருமுதலாளிகள் ஊடகங்களால் வள்ளல்களாக ஆக்கப்பட்டுவிடுகிறார்கள். வள்ளல், புரவலர் என்கிற பட்டங்களை வேறு அளித்து விடுகிறார்கள். அவர்கள் கலந்துகொள்ளும் நிகழ்வுகளில் பொன்னாடை போர்த்தல் என்பது சம்பிரதாயமாகவும் கட்டாய சடங்காகவும் ஆக்கப்பட்டுவிட்டன.

ஆக இந்த வள்ளல்களினால் பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களைப் பற்றி இதுவரை எந்த ஊடகங்களும் ஒரு..... ஒரேயொரு சம்பவத்தைக் கூட வெளியிட்டது கிடையாது என்பதை அறிவீர்களா? அப்படியான சுரண்டலும், அநீதியும் இழைக்கப்படுவதை அறிந்திருக்கிறீர்களா? அறிய முற்பட்டிருக்கிறீர்களா? கிடையவே கிடையாது.

இலங்கையில் “வெகுசன ஊடகவியல்” என்பது வெகுசனத்துக்கான ஊடகமாக இல்லை. அது முதலாளித்துவ வர்க்க நலன் பேணும் ஊடகமாக பரிணமித்து எவ்வளவோ காலமாகிவிட்டது. குறிப்பாக உழைக்கும் மக்களின் பிரச்சினைகளை தேடி ஆராயும் ஊடகவியல் தமிழ்ச் சூழலில் கிடையவே கிடையாது என்பதை அடித்துக் கூற முடியும். தேடி வரும் செய்திகளைத் தாண்டி; செய்திகளைத் தேடிச் செல்லும் ஊடகவியல் செத்துப் போய்விட்டது என்றே கூறவேண்டும். இணைய செய்திகளை தேடித் தேடி வெட்டி ஓட்டும் ஊடகவியல் எங்கெங்கும் ஆக்கிரமித்து விட்டிருக்கிறது என்பதை கவலையோடு சொல்லியாக வேண்டியிருக்கிறது.

ஈஸ்வரனுக்காக கண்ணீர் விடும் ஊடகங்கள் ஈஸ்வரனின் கம்பனியால் பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்காக ஒரு சொட்டு கண்ணீரும் விட முடியாததன் அரசியல் இது தான்.

மலையகத்தில் பல தோட்டங்களையும், இலங்கையில் பல தொழிற்சாலைகளையும் தன்னகத்தே கொண்டிருக்கும் ஈஸ்வரன்; பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் இரத்தத்தை உறிஞ்சி பெற்ற இலாபத்தின் ஒரு சிறு பகுதியைக் கொண்டு எலும்புத் துண்டுகளாக ஊடகங்களுக்கும், இலக்கிய உலகுக்கும், கோவில்களுக்கும் எறிவதன் மூலம், பொன்னாடைகளையும், வள்ளல் பட்டங்களையும், வெளிநாட்டு தூதுவர் பட்டத்தையும், தேசபந்து பட்டத்தையும் பெற்றுவிட்டார். எப்பேர்பட்ட ஊடகங்களையும், அறிவுசார் செயற்பாட்டாளர்களின் கண்களிலும் மண்ணைத் தூவிவிட்டு இந்த அடைவை பெற்றிருக்கிறார் என்பதை நாம் அறியாதபடி செய்த அந்த அரசியல் என்ன என்பதை நேர்மையாக நமக்கு நாம் கேள்வி கேட்போமா நண்பர்களே.

இந்த வர்க்கக் குருட்டுத் தனத்தின் மீது ஒரு சுயவிசாரணையை செய்யும் துணிச்சல் உங்களுக்கு உண்டா ஊடகத் தோழர்களே. நேர்மையுடன் கூறுங்கள்.

தமது மூலதன நிகழ்ச்சிநிரலில் அவர்கள் வெற்றியை ஈட்டிக்கொண்டே செல்கிறார்கள். அவர்களின் அடிமைச் சேவகர்களான நாம் பகுத்தறிவுக் குருட்டுத்தனத்தில் சிக்கியிருக்கிறோமா இல்லையா? அல்லது நமது ஏழ்மையின் மீது குந்தி நின்று அவர்கள் நடத்தும் நாடகத்தில் இயலாமையால் பீடிக்கப்பட்ட அரங்காடிகளா நாம்?

தமது மூலதனத்தை தற்காத்துக்கொள்ளவும், பெருப்பிக்கவும் கால் நூற்றாண்டுக்கு முன்னரே ஊடக ஆக்கிரமிப்பை செய்த  மகாராஜா நிறுவனம் இன்று ஊடக ஏகபோக நிறுவனமாக பெரு ஆலமரமாக வளர்ந்து விட்டிருக்கிறது. ஊடக ஏகபோகத்தை மட்டுமல்ல, தமது வியாபார ஏக போகத்தையும் பேணிக்கொண்டு அரசியல் அதிகாரத்தை ஆட்டுவிக்கின்ற ஒரு முக்கிய சக்தியாக இன்று இலங்கையில் உருவெடுத்திருப்பது தற்செயல் என்று நினைக்கிறீர்களா?

மகாராஜா நிறுவனம் போன்றவை இலங்கையின் பெரும் ஊடக ஜாம்பவான். பெருமளவு இலங்கை மக்களின் சிந்தனைப் போக்கை தீர்மானிக்கும் முக்கிய சக்தி. வானொலி, தொலைகாட்சி போன்ற முக்கிய இலத்திரன் ஊடகங்களில் சிங்களம், ஆங்கிலம், தமிழ் ஆகிய மும்மொழி ஊடக நுகர்வோரில் கடந்த கால் நூற்றாண்டாக பெருமளவு செல்வாக்கை செலுத்திவரும் பேராபத்து மிக்க சிந்தனைக் கொடுங்கோல் ஜாம்பவான்.

இன்று அரசியல் அதிகார மையத்தை போட்டு ஆட்டுவிக்கின்ற சக்தியாக அது ஆகியிருப்பதை பார்த்து வியக்கின்றோம். அதை எதிர்த்து கருத்து சொல்ல எந்த அரசியல் சக்தியும் தயாரில்லை. அதை விமர்சிக்க எந்த ஆய்வாளர்களும் இல்லை. அதை அம்பலப்படுத்த எந்த ஊடகங்களுக்கும் திராணியில்லை.

இலங்கையில் சுரண்டலின் மூலமும், சட்டவிரோதமாகவும் சேர்த்த கறுப்புப் பணத்தை வெள்ளையாக ஆக்குவதற்காகவும் ஊடகத் தொழிலை ஒரு சிறந்த முதலீடாக கருதி பெருமளவு ஊடகங்கள் வெளிக்கிளம்புவதை காண முடிகிறது. இறுதியாக தற்போது மத்திய வங்கி “பணமுறி” விடயத்தில் நேரடியாக தொடர்புபட்ட அர்ஜூன் அலோசியஸ் புதிய பத்திரிகைகளை மும்மொழியிலும் கொணர களம் இறங்கியுள்ளார். ஏற்கெனவே “ஜனயுகய” என்கிற சிங்கள பத்திரிகை தொடங்கியாயிற்று, இந்த மாத இறுதியில் இருந்து தமிழ் பத்திரிகையும் வெளிவர இருக்கிறது. வானொலி மற்றும் தொலைக்காட்சி சானலுக்கான அனுமதிப் பத்திரத்தையும் அவர்கள் ஏற்கெனவே பெற்றுவிட்டார்கள். எனவே வானொலி, தொலைகாட்சி சானல்கள் கூட ஆரம்பிக்கப்படவிருக்கின்றன.

ஊடகங்கள் எங்கே ஊடகர்களின் கைகளில் இருக்கிறது? ஒட்டுமொத்தமாக பெரும் மூலதன முதலாளிகளிடம் அல்லவா இருக்கிறது. நாம் எல்லோரும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ அவர்களின் அடிமைச் சேவகர்கள் அல்லவா?

தலைமைகளின் சுகபோகத்துக்காக தொண்டர்கள் மோதுவதா? - எம்.என்.எம்


தேர்தல் ஒன்று வந்தாலே பலருக்கு கொண்டாட்டமாகவும் சிலருக்கு திண்டாட்டமாகவும் இருப்பது வழக்கமாகும். அரசியல் என்பதே சூதாட்டம் நிறைந்த ஒன்றாகும். ''சின்ன மீனைப்போட்டு பெரியமீனைப் பிடிப்பதே'' தலைமைகளின் எண்ணமாக இருக்கும். ஏற்படப்போகும் செலவுகளை எப்படிச் சமாளிப்பது, எங்கிருந்து பணத்தைத் தேடுவது என்ற கவலையில் தலைமைகள் தூக்கத்தை மறந்துவிடுவார்கள். நாட்டில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளுக்குக் கைகொடுக்க பலர் தாமாகவே முன்வருவார்கள். பாரிய வர்த்தகர்கள் இருசாராருக்குமே உதவி வழங்குவார்கள். யார் பதவிக்கு வந்தாலும் தங்கள் லாபம் குறைவடைந்து விடக்கூடாது என்று நினைப்பவர்கள் இவர்கள்.

சிறிய கட்சிகளே தடுமாற்றங்களை எதிர்நோக்கும். கட்சி ஆதரவாளர்கள் விசுவாசிகள் என்பவர்களை பின்தள்ளி பணம் படைத்தவர்களை வேட்பாளர் பட்டியலை நிரப்பி விடுவார்கள். இந்தக் கட்சியிலிருந்து அந்தக் கட்சிக்குத் தாவுவதும், அந்தக் கட்சியில் இருந்து இந்தக் கட்சிக்குத் தாவுவதும் சர்வ சாதாரணமாக இடம்பெறும். நேற்று வரை வேறு ஒரு மேடையில் இருந்து ஒரு தலைவரை வாயில் வந்தபடி திட்டித்தீர்த்தவர்கள் இன்று திட்டப்பட்ட தலைவரிடம் வந்து சேர்ந்து கட்டவுட்டில் சிரிப்பார்கள். அந்தத் தலைவரும் பணத் தேவைக்காக அவருக்கு வேட்பாளர் பட்டியலில் இடம் கொடுத்து விடுவார்.

கட்சியை வளர்க்க தியாகம் செய்து சித்திரவதைப்பட்டு சிறைக்கெல்லாம் சென்ற தொண்டன் வீதியில் நிற்க வேண்டியதுதான். பொதுவாக நாட்டில் நடைபெறும் இந்த நிலைமை மலையகத்திலும் சர்வ சாதாரணமாக இடம் பெறுகிறது. 'அரசியலில் இது எல்லாம் சகஜமப்பா' என்று ஆறுதலடைய வேண்டியதுதான்.

தலைமைகளுக்கு வேறு வழியில்லை. கொள்கை பேசிக் கொண்டு பரதேசியாகத் திரியும் தொண்டனை அரசியலில் நிறுத்தி வெற்றி பெற வைக்க முடியாது என்பதே நிதர்சனம் என அவர்கள் எண்ணுகிறார்கள். தேர்தல் நேரத்தில் தொண்டர்களின் வாழ்க்கைச் செலவுகளை சமாளிக்க வழி செய்து கொடுத்து ஆதரவை திரட்டிக் கொள்வதிலேயே அவர்களது நாட்டம் இருக்கும்.

தலைமைகள், வாக்காளர்களிடம் நேரடித் தொடர்பு இல்லாத காரணத்தால் அடியாட்களாக தொண்டர்களை அமர்த்திக் கொண்டு வெற்றி பெறுகிறார்கள். எதிர்வரும் ஐம்பது நாட்களும் தங்கள் வாழ்வாதாரத்தை இந்த வகையில் தேடிக் கொள்வதே பெரிய விசயம் என தொண்டர்களும் மௌனமாக தலைமைகள் சுட்டிக்காட்டுவோருக்கு வாக்குகளை திரட்டுவதில் இறங்கி விடுகிறார்கள். கடந்த தேர்தல்களில் எதிரணியில் இருந்தவர்களுக்கு எல்லாம் இப்போது வேலைசெய்ய வேண்டியதாக இருக்கிறதே என்று நொந்து கொள்வதைத் தவிர கட்சி விசுவாசிகளுக்கு வேறு போக்கில்லை.

ஆதரவாளர்களைத் திரட்டுவது, பிரசாரக் கூட்டங்களை ஒழுங்கு செய்வது, மேடை அமைப்பது, ஊர்வலம் பேரணிகளை ஒழுங்கு செய்வது, போஸ்டர் ஒட்டுவது, துண்டுப் பிரசுரங்களை விநியோகிப்பது, பணப்பட்டுவாடா செய்வது, உணவுப் பொதிகள், சாராய விநியோகம் என அடியாட்களுக்கு ஏகப்பட்ட வேலைகள் காத்திருக்கின்றன. கூட்டத்தில் குழப்பம் விளைவிக்கும் மாற்று அணியினரோடு அடிதடியில் இறங்குவது, போலிஸுக்கு செல்வது, விபரீதமானால் சிறைக்கு அல்லது மருத்துவமனைக்குப் போவது என பல்வேறு சவால்களையும் இவர்கள் சந்திக்க வேண்டும்.

வாக்குரிமை எமக்கு மறுக்கப்பட்டிருந்த காலத்தில் வெறும் பார்வையாளர்களாகவே தேர்தல் களத்தில் நாம் இருந்தோம். இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தனிப்பெரும் தொழிற்சங்கமாக அன்று இருந்தது. இ.தொ.காவிலிருந்து ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் உருவாகிய பின் இரு தொழிற்சங்கங்களுக்கிடையில் பலத்த போட்டி இருந்தது.

இதன் காரணமாக தோட்ட சேவையாளர்கள் மற்றும் நிர்வாகிகள் தொழிலாளர்கள் இரண்டுபடுவதில் சந்தோசமடைந்தனர். தொழிலாளர்களில் ஒரு சாரார் வேலை நிறுத்தத்தில் இறங்கினால் மற்றவர்கள் தொழிலுக்கு செல்வார்கள். 'ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்' என்பதற்கிணங்க தோட்ட நிர்வாகங்கள் பிளவுகளினால் லாபம் கண்டன.

இ.தொ.காவில் மீண்டும் பிளவேற்பட்டு வீ.கே வெ ள்ளையன் தலைமையில் தொழிலாளர் தேசிய சங்கம் உருவாகியது. பின்னர் மலையக மக்கள் முன்னணி சந்திரசேகரனால் ஆரம்பிக்கப்பட்டது. ம.ம.முன்னணி தலைவர் வடகிழக்கு மற்றும் உலக தமிழர்களோடு தொடர்புகளை பேணி வந்தார். ஓரளவு அரசியல் விழிப்புணர்ச்சி மலையகத்தில் இதனால் ஏற்பட்டது. ஒரு காலகட்டத்தில் சந்திரசேகரனும் அமைச்சரானார். ஈரோஸ் சார்பில் இராமலிங்கம் பாராளுமன்றம் சென்றார். இன்று தொழிலாளர் தேசிய சங்கம், மலையக மக்கள் முன்னணி, ஜனநாயக மக்கள் முன்னணி ஆகியன சார்பில் மூன்று அமைச்சர்களும் இ.தொ.கா சார்பில் மாகாண அமைச்சர் ஒருவரும் எமக்குக் கிடைத்திருக்கின்றார்கள்.

இ.தொ.கா முதற்கொண்டு ஏனைய அத்தனை தலைவர்களும் மலையக மக்களின் கல்வி மேம்பாட்டுக்கு தம்மாலான அனைத்தையும் செய்திருக்கிறார்கள், செய்து வருகிறார்கள். இதன் காரணமாக கணிசமான மலையகத்தவர்கள் பட்டதாரிகளாகவும், சட்டத்தரணிகளாகவும், மருத்துவர்களாகவும், பொறியியலாளர்களாகவும் வளர்ச்சி அடைந்துள்ளார்கள். தோட்டத்துக்கு ஒரு பட்டதாரி, லயத்துக்கு ஒரு ஆசியர், வீட்டுக்கு ஒரு உயர்தர மாணவன் என்ற நிலை இன்று உள்ளது. எனவே, ஏமாற்று அரசியல் இனியும் எடுபடாது. அடிதடியில் இறங்க தமது பெற்றோரை இவர்கள் அனுமதிக்கப் போவதில்லை.

மேலும் மலையகத்தின் பிரதான கட்சிகள் ஆளும் அரசின் பங்குதாரிகளாகவே இருக்கின்றன. எவரும் அரசின் செயற்பாடுகளைக் குறை சொல்ல முடியாது. எனவே தனிப்பட்ட முறையில் வசை பாடுவது குழப்பம் ஏற்படுத்துவற்கான நோக்கமாக இருக்கும். நாகரிகமான சமூகம் நாம் என்பதை நிரூபிக்க பல்வேறு தரப்பினரும் சுமுகமான தேர்தலுக்கு வழிகாண வேண்டும். வன்முறைகளை தவிர்த்துக் கொள்ளவேண்டும்.

நன்றி - வீரகேசரி

முக்கியத்துவம் வாய்ந்த உள்ளூராட்சித் தேர்தல் - என்னேஸ்லி


இன்றுடன் நிறைவுக்கு வருகிறது 2017 ஆம் வருடம். நாளை புதுவருடம் 2018 பிறக்கிறது. வழமைபோல் புதுவருடம் நல்லவைகளைக் கொண்டு வரக்கூடியதாக அமைய வேண்டுமென்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பாக அமைந்திருப்பது இயல்பு.

பிறக்கும் புதுவருடம் சுபீட்சம் நிறைந்ததாகவும் பிரச்சினைகள், துன்பங்கள் ஒழிந்ததாகவும் இருக்க வேண்டுமென்று நினைப்பதில் தவறில்லை.

ஒவ்வொரு வருடமும் வருட பிறப்பின் போது இதனையே நினைக்கின்றோம்; பிரர்த்தனை செய்கின்றோம். ஆனால் நாம் நினைத்தபடி பிரச்சினைகள் தீர்ந்ததா? சுபீட்சம் மலர்ந்ததா? என்பது ஆராயப்பட வேண்டிய விடயமாகும்.

சிலர் இவ்விடயத்தில் வெற்றிபெற்றிருக்கக் கூடும். பலர் வெற்றி பெறாமல் போயிருக்கக் கூடும். ஆனால் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்திக் கொள்கின்றோம். அந்த நம்பிக்கைதான் மனிதனின் ஆதாரம். அந்த நம்பிக்கையுடன் தான் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம்.

இந்த வருடத்தில் நடந்தவைகளையும் பெற்ற வெற்றிகளையும் நினைத்துப் பார்ப்பதுடன் 2018 இல் செயல்படுத்த வேண்டியவற்றைத் திட்டமிட்டு இலக்கை எட்ட நம்பிக்கையுடன் முயற்சி செய்ய வேண்டும்.

2018 ஆம் ஆண்டின் முற்பகுதியில் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நடைபெறவுள்ளமை ஒரு முக்கிய விடயமாகும். இந்தமுறை நடைபெறப்போகும் உள்ளூராட்சித் தேர்தல் மலையக மக்களுக்கு ஒரு முக்கியமான தேர்தலாக அமையப்போகின்றது.

அரச நிர்வாக அமைப்பின் ஆரம்பப்படி உள்ளூராட்சி சபைகளாகும். ஜனநாயக அமைப்பில் சகல மக்களும் ஆட்சியில் பங்கேற்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி சபைகளின் பங்கு மிகவும் முக்கியமானதாகும். உள்ளூராட்சி சபைகளிலிருந்தே மாகாண சபை, பாராளுமன்றம் என மக்களின் பங்களிப்பு விரிவடைகின்றது. எனவே தான் உள்ளூராட்சி சபைகளில் மக்களின் பங்களிப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

இலங்கையில் உள்ளூராட்சி சபைகளின் பங்களிப்பு நீண்ட வரலாற்றைக்கொண்டதாகவும், வளர்ச்சியடைந்தும் காணப்பட்டாலும் அந்த சபைகளில் இந்திய வம்சாவளியினரின் குறிப்பாக பெருந்தோட்ட மக்களின் பங்களிப்பு குறைவாகக் காணப்பட்டதுடன் அதன் மூலம் அவர்களுக்குக் கிடைக்கும் சேவைகளும், வரப்பிரசாதங்களும் குறைவாகவே இருந்தன என்பதை மறுக்க முடியாது.

இதற்குக் காரணங்கள் பல. அதில் முக்கியமானதுதான் உள்ளூராட்சி மன்ற கட்டமைப்புக்குள் தோட்டப் பிரதேசங்கள் உள்ளடக்கப்படாமையாகும். தோட்டங்கள் ஒரு தனியான தீவு போன்ற கட்டமைப்புக்குள் தோட்ட நிர்வாகங்களுக்குக்கீழ் இருந்தன. எதற்கெடுத்தாலும் தோட்ட நிர்வாகி, முகாமையாளர் போன்றவர்களையே நாட வேண்டியதொரு நிலைமை இருந்தது. இதிலிருந்து விடுபடுவதற்கான சட்டவிதிகளும் இருந்திருக்கவில்லை.

இந்த சட்ட விதிகளைத் திருத்துவது பற்றியோ அல்லது மாற்றங்களைக் கொண்டு வருவதுபற்றியோ அப்போதிருந்த அரசியல் தலைமைகள் அக்கறையின்றியே இருந்தன. அதாவது அரசியல் ரீதியான உரிமைகளைப் பெற்றுக் கொடுப்பதற்கான பல சந்தர்ப்பங்கள் கிடைத்த போதும் அதனை மலையக அரசியல் தலைமைகள் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றே கூற வேண்டும்.

இதன் காரணமாக உள்ளூராட்சிச் சபைகளின் மூலம் எந்தவொரு சேவைகளையும் பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டதுடன் அதில் பிரதிநிதிகளாக இடம்பெறுவதற்கும் போதிய சந்தர்ப்பங்கள் இல்லாமல் போனது. எனினும் கால மாற்றத்திற்கேற்பவும், கற்ற சமூகத்தின் வளர்ச்சிக்கேற்பவும் மலையக மக்களுக்கான உரிமைகளும், அடிப்படைத்தேவைகளும் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டுமென்ற உத்வேகம் எழுந்தது.

கல்வியில் இன்று ஒரு வளர்ச்சி நிலை காணப்படுகிறது. அதேபோல் தோட்ட மக்களுக்கான காணி உரிமை, தனி வீடு, அடிப்படை வசதிகள், சுகாதாரம் உள்ளிட்ட தேவைகளைப் பூர்த்திசெய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மலையக அரசியல் தலைவர்களால் முன்வைக்கப்பட்ட நுவரெலியா மாவட்ட பிரதேச சபைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டுமென்ற கோரிக்கைக்கு ஓரளவு வெற்றி கிடைத்திருக்கிறது. அதன்படி நுவரெலியா மற்றும் அம்பகமுவ பிரதேச சபைகளின் எண்ணிக்கை ஆறாக உயர்த்தப்பட்டிருக்கிறது. அவை நுவரெலியா, கொட்டகலை, அக்கரப்பத்தனை, அம்பகமுவ, நோர்வூட் மற்றும் மஸ்கெலியா என்பனவாகும்.

இந்த ஆறு பிரதேச சபைகளிலும் பெரும்பாலும் (இரண்டைத் தவிர) பெருந்தோட்டத் தமிழ் மக்களே அதிகமாக வாழ்கின்றனர். எனவே அனைத்து சபைகளையும் கைப்பற்றக்கூடிய சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இந்தப் பிரதேச சபைகளைக் கைப்பற்றுவதற்கு அனைத்து தமிழ் மக்களும் உணர்வுடனும் அர்ப்பணிப்புடனும் வாக்களிக்க வேண்டும்.

இம்முறை போட்டிகளும் அதிகரித்துக் காணப்படுகின்றன. சகல தேசிய கட்சிகளும் மலையகக் கட்சிகளை பங்காளிகளாக இணைத்துக்கொண்டு தேர்தலில் குதித்துள்ளன. ஒரு சில கட்சிகள் சொந்தச் சின்னத்தில் போட்டியிடுகின்றன.

அதேவேளை நகர சபைகள் மற்றும் மாநகர சபை என்பனவற்றை தேசிய கட்சிகளுக்கே விட்டுக் கொடுக்கும் உடன்பாடுகளும் எட்டப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது

பிரதேச சபைகளை மலையக தமிழ் கட்சிகளுக்கும் நகர சபைகள் மற்றும் மாநகர சபைகளை தேசிய கட்சிகளுக்கும் விட்டுக்கொடுக்கும் அடிப்படையில் ஒரு சில மலையகக் கட்சிகள் உடன்படிக்கை செய்து கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறெனினும் மலையக மக்கள், சிறந்த சேவை செய்யக்கூடிய நேர்மையான, அர்ப்பணிப்புடன் செயல்படக்கூடிய வேட்பாளர்களைத் தெரிவுசெய்ய வேண்டிய நிலையிலேயே இருக்கின்றனர். கடந்தகாலங்களில் உள்ளூராட்சி சபைகளுக்குத் தெரிவு செய்யப்பட்டவர்கள் பொதுமக்களுக்கு எவ்வாறான சேவை செய்துள்ளார்கள், என்னென்ன நன்மை செய்தார்கள் என்பதைச் சிந்தித்துப்பார்க்க வேண்டும்.

சிலர் பெரும் சொத்துக்களைச் சேர்த்துக் கொண்டவர்களாகவும், காணிகளை கைப்பற்றியவர்களாகவும், ஆடம்பரமாக வாகன வசதிகளுடன் வாழ்பவர்களாகவும் இருக்கின்றனர். சிலர் சுயநலன்களுக்காக கட்சிமாறிகளாகவும் உள்ளனர்.

இவர்களை அடையாளம் கண்டு ஒதுக்கவேண்டும்.

இவர்களைப் போன்ற சமூக விரோதிகளுக்கு இந்தத் தேர்தலின் மூலம் பாடம் கற்பிக்க வேண்டும். அதேவேளை, சேவை செய்யக்கூடிய சமூக சிந்தனையுடைய புதிய யவர்களைத் தெரிவு செய்து சபைகளுக்கு அனுப்ப வேண்டும்.

இந்த உள்ளூராட்சிச் சபைகளுக்கான தேர்தலில் மலையக மக்களின் ஒற்றுமை வெளிப்படுத்தப்படும் வகையில் வாக்களிக்க வேண்டும். அதுவே எதிர்காலத்தில் மேலும் உரிமைகளைப் பெற்றுக்கொடுக்கக் கூடியதாக இருக்கும் என்பதை ஒவ்வொருவரும் மனதில் வைத்து கொண்டு செயல்பட வேண்டும்.

நன்றி - வீரகேசரி


என்.சரவணனின் "அறிந்தவர்களும் அறியாதவையும்" - தெளிவத்தை ஜோசப்

என் சரவணன் என்னும் அந்தப் பெயரிலேயே ஒவ் வொரு வாசகனுடனுமான ஒரு அன்னியோன்ய உறவின் ஊடாட்டம் இருக்கிறது. அவருடைய எல்லா வாசகர்க ளுக்கும் அவர் என் சரவணன் தான். நடராஜா (தந்தை), சரவணன் என்பதில் வருகின்ற என் (N) அது என்பதெல்லாம் அப்புறம்தான் அந்த உறவின் தன்மையை மேலும் தீர்க்க மாக்குகிற வல்லமை இந்த நூலுக்குமிருக்கிறது. முதலில் அறிந்தவர்கள் அடுத்தது அறியாதவைகள் 

அறிந்தவர்கள் ஒரு சிலரைப் பார்ப்போம் ஹியுநெவில் ரொபட்நொக்ஸ், மெயிட்லண்ட் புல்ஜன்ஸ், பெர்கி யூசன், ஒல்கொட் பிரஸ்கேர்டல், ஜேம்ஸ் டெய்லர், நடே சய்யர், ஆர்த்தர் சி.கிளார்க் என்று செல்கிறது. இந்த நூல் கொண்டுள்ள 25 அறிந்தவர்கள். இவர்களை நாம் ஏதோ ஒருவகையில் அறிந்துவைத்துள்ளோம். அவர்களது செயற்பாடுகள் மூலம் வகித்த பதவிகள் மூலம் அல்லது பெயரளவிலாவது ஆனால் இந்த பிரபலங்கள் பற்றி நாம் அறிந்திராத பல விஷயங்கள் பற்றி இந்த நூல் விரிவாகவும் வரலாற்றுணர்வுடனும் பேசுகிறது.

வரலாற்றை அதனுடைய உள்ளோட்டங்களான சமூக, அரசியல் பண்பாட்டுத்தளங்களின் வழியே அறியத்தரும் இந்த நூல் சரவணனின் ஆழமான வாசிப்புக்கும், வரலாற்று ஆய்வுக்கும், சலிப்புறாத தேடுதலுக்கும் சிறந்த உதாரணமாகத் திகழ்கின்றது.

"ஏற்கனவே அறியப்பட்ட விடயங்களை மீண்டும் அறியச் செய்வதற்காக என்னை நான் விரயப்படுத்தத் துணிந்ததில்லை. எனது எழுத்துகள் அனைத்துமே எனக்கு அடுத்ததாக வரும் தேடுபவர்களுக்கு தகவல் கருத்து வழிகாட்டியாக இருக்கவேண்டும் என்பதே எனது நோக்கம் என்று குறிக்கும் சரவணன் ஆங்கிலம், மற்றும் சிங்கள மொழியிலிருந்து அறியக்கிடைக்காத அரிய பல தகவல்களை - தமிழுக்கும் புதிதாக தகவல்களை இந்தக் கட்டுரைகள் மூலம் தருகின்றார். வீரகேசரியின் சங்கமம் பகுதியில் பிரசுரமான கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல்.
"எழுதி முடிப்பதற்காக நான் திட்டமிட்டிருக்கும் பட்டியல் மிக நீண்டது. அதற்காக என்னை நிர்ப்பந்திக்க ஒரு வழி வேண்டும். சங்கமம் பகுதியின் ஆசிரியர் என் நட் புக்குரிய ஜீவா சதாசிவம், என்னை சங்கமத்துக்கு எழுதக் கோரியபோது இதுவரை பெரிதாக அறியப்படாதவர்கள் பற்றியும் தமிழில் அறியப்படாத தகவல்களைக் கொண்ட ஒரு பத்தியை வாரா வாரம் எழுத முன் வந்தேன். இந்தக் கட்டுரைகளை வாசித்த பல நண்பர்கள் தங்கள் கருத்துகளை எனக்கு எழுதினார்கள் என்மீது அவர்கள் கொண்டிருந்த நம்பிக்கைகள் எனக்கு ஊக்கியாக இருந்ததுடன் எனது பணியின் அவசியத்தையும் எனக்கு அதிகமாக உணர்த்தியது"
என்று தனதுரையில் பதிக்கின்றார் நூலாசிரியர் சரவணன்.

70 கள் அல்லது 80 களில் தமிழகத்துத் தீபம் இதழ் முழுமையைத்தேடும் முழுமையற்ற புள்ளிகள் என்னும் தொடரை வெளியிட்டது. ஒரு மலையாள நூலின் மொழி பெயர்ப்பு இந்தத் தொடர் தகழி பொற்றேக்காட் பொன்குன்னம் போன்ற உலகப்புகழ் பெற்ற எழுத்தாளர்கள் பற்றிய பரவலாக அறியப்படாத தகவல்கள் நிறைந்த தொடர் இது அண்மையில் வெளிவந்த முருக பூபதியின் சொல்ல மறந்த கதைகளும் இந்த வகையானதுதான் என்றாலும் சரவணனின் இந்த நூல் உச்சம் தொட்டு நிற்கும் ஒரு வரலாற்று ஆவணம். அவரது சிங்கள மொழி ஆற்றல் அவர் எடுத்துக் கொள்ளும் விடயம் தொடர்பான சிங்கள மொழி நூல்களை நுணுகி ஆராயும் சக்தியைத் தருகின்றது. அவரது வரலாற்று ஆய்வாளப்புலமை அதற்கான வழித்துணையாக இணைந்து செயற்பட்டு உச்சம் தொட வைக்கிறது.

இந்த நூல் இறுதிப்பக்கங்களில் வந்திருக்கும் வாசகக் குறிப்புகளின் கடைசிக்குறிப்பான கலாநிதி சி. ஜெயசங்கரின் குறிப்பு இந்த இடத்துக்கு அவசியமாகிறது.
"21ஆம் நூற்றாண்டின் சமூக அரசியல் உருவாக்கத்தில் அதற்கு முந்திய நூற்றாண்டுகளிள் சமூக, அரசியல் நிலைமைகள் பற்றி மீள் பார்வைகள் மிகவும் அவசியமானவை. பெருமளவிற்கு வெற்றிடமாக இருந்துவரும் இவ்விடயத்தின் முக்கியத்துவம் உணர்ந்து ஆழ்ந்தகன்ற ஆய்வுகளை பொதுமக்களுக்குரிய விதத்தில் கட்டுரைகளாகவும் பத்தி எழுத்துகளாகவும் கொண்டு வரும் சரவணனின் பணி ஒரு நிறுவனப்பணி. இதற்கான ஆற்றலையும் ஆளுமையையும் அவர் எங்கிருந்து எப்படிப் பெற்றார் என்பதனையும் ஏன் இவ்வாறு இயங்குகிறார் என்பதையும் அறிவுலகம் குறிப்பாக உயர்கல்வி சூழல் அறிந்துகொள்ள வேண்டிய விடயங்களாகும். படிப்பும் ஆய்வும் பட்டம் பெறுவதற்கும் பதவி உயர்வு பெறுவதற்குமான தாகச் சுருங்கி விட்டுருக்கின்ற உயர்கல்வி ஆய்வறிவுச் சூழலின் சரவணனின் அறிவியல் இயக்கம் முன்மாதிரியானது...."
இந்த நூலின் முதல் கட்டுரை பல்துறை ஆய்வாளர் ஹியுநெவில் பற்றியது. இலங்கையின் வரலாற்றை மீள் கண்டுபிடிப்பு செய்ததில் காலனித்துவ ஆங்கிலேயருக்கு பெரும்பங்குண்டு தொல்பொருள் ஆவணப்படுத்தல் என்பவற்றை ஒரு முறையியலுக்கு கொண்டுவந்து அவற்றைப் பேணிகாத்துவைப்பது பற்றிய பிரக்ஞையும் ஏற்பாடுகளையும் ஆரம்பித்துக் கொடுத்ததில் அவரின் வகிபாகம் மறுக்க முடியாதது என்று ஆரம்பித்து இன்று இலங்கையின் வரலாற்றை சிங்கள பெளத்த வரலாறு நிறுவும் இனவாத போக்கிற்கு ஆதாரங்களைக்கூட பொறுக்கி எடுப்பதற்கு ஆங்கிலேயர்கள் தேடிவைத்த ஆதாரங்களில் இருந்துதான் புனைகின்றனர். என்று செல்கிறது. ரொபட் நொக்ஸ், ஹென்றிமார்ஷல் மெயிட்லண்ட் என்று ஒவ் வொன்றும் தோண்டித் தோண்டி காட்டும் சுரங்கங்கள் வைத்து வைத்துப் படிக்க வேண்டிய ஒரு அறிவியல் ஆய்வு நூல் இது இந்த அரிய நூலை பூபாலசிங்கம் உட்பட நாடளாவிய ரீதியில் உள்ள புத்தக சாலைகளில் பெற்றுக்கொள்ளலாம்.

நன்றி - வீரகேசரி
 

இணைந்திருங்கள்


Followers

Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates