Headlines News :

காணொளி

ஜனாதிபதி விருது

ஜனாதிபதி விருது
நமது மலையகத்துக்கு

சுவடி

தமிழர் அரசியலில் தலைமைகளின் அரசியல் போதாமையும், தலைமைத்துவ தோல்வியும் - பா.நடேசன்


ராஜபக்ச அரசினை வீட்டுக்கு அனுப்புவதையே தலையாய கடமையாக தூக்கி திரிந்த அமைப்புகளும், தலைவர்களும் தற்போது கள்ள மௌனம் காக்கிறார்கள். இறுதி கட்ட போரின் இராணுவ தளபதியாக இருந்த சரத் பொன்சேகா, முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் மைத்திரிபால சிறிசேன என எல்லோருக்கும் வாக்கு கேட்டார்கள். இலங்கையின் பெரும் வலதுசாரிய கட்சியான ஐக்கிய தேசிய கட்சிக்கே (ஐ.தே.க) பெரும்பாலும் ஆதரவு அளித்து வந்த தமிழ் தலைமைகள், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஒரு பிரிவின் தலைமைத்துவத்திலான கூட்டணிக்கு ஆதரவு வழங்கினர். தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இலங்கை சுதந்திர தின விழாவில் கலந்து கொண்டு சிங்க கொடியை ஏந்தினார். அரசு கொண்டு வந்த,மக்களின் வயிற்றில் அடிக்கும் திட்டங்கள் அனைத்திற்கும் இணக்க அரசியல் என்று ஆதரவளித்தது தமிழ் தேசிய கூட்டமைப்பு. இவை அனைத்திற்கும் அவர்கள் கூறிய காரணங்கள் இரண்டு. 

  1. தமிழ் மக்களுக்கு திரும்ப பெறமுடியாத அதிகார பகிர்வினை பெறுதல்.
  2. ராஜபக்ச மீண்டும் ஆட்சிக்கு வருவதை தடுத்தல்.

இவை இரண்டும் நடைபெறவே இல்லை. ஆனால் இன்று ராஜபக்ச அரசு மீதான வெகு மக்களின் எதிர்ப்பு தெற்கில் மக்களையும் இளைஞசர்களையும் வீதிக்கு கொண்டு வந்திருக்கிறது. தன்னெழுச்சியாக இடம்பெறும் இந்தப் போராட்டங்கள் மூலம் ராஜபக்ச தரப்பினை முடிவுக்கு கொண்டு வரும் எண்ணம் தமிழர் தரப்புக்கோ அல்லது அவர்கள் ஆதரவு அளித்த தெற்கின் ஆளும் தரப்புகளுக்கோ அறவே இல்லை.

தெற்கில் ஏற்பட்டிருக்கும் வெகு மக்கள் எதிர்ப்பில் சிறு பகுதியினர் தமிழ்பேசும் மக்களின் பிரச்சனைகளை ஆதரிக்க முன்வந்துள்ளனர். இந்த சூழ்நிலையை கையாண்டு அனைத்து மக்களையும் திரட்டுவதன் ஊடாக  இனவாத சக்திகளை விரட்ட முடியும். இதன் மூலம் உண்மையான நல்லிணக்கத்தினை நாட்டில் ஏற்படுத்த முடியும். ஆனால் நல்லிணக்க வேடம் போட்ட  யாரையும் இப்போது காணவில்லை. அரசுக்கு எதிராக மக்கள் தன்னெழுச்சியாக அணிதிரள்வது எந்த ஆளும் தரப்புக்கும் உவப்பானது இல்லை. அதுவும் வடக்கு, கிழக்கு, தெற்கு, மலையகம் என நாட்டின் பலபாகத்தினரும் திரள்வது  இலங்கையை ஆளும் தரப்புக்கு ஏற்புடையது அல்ல.SLPP,UNP, SLFP என அனைத்து தரப்புகளும் இனவாதத்தின் அடிப்படையில் தான் தமது அதிகாரத்தை தங்கவைத்து வைத்து வருகின்றன. இடதுசாரி கட்சியாக கூறி கொள்ளும் JVP யும் இதற்கு விதிவிலக்கல்ல. 24மணி நேரமும் தமிழ் பேசும் மக்களின் பிரச்சனையே எமது சித்தம் எனக் காட்டி கொள்ளும் தமிழ் தலைமைகளது நிலைப்பாடு, அவர்களின் ஆளும் தரப்பு நட்பு சக்திகளின் நிலைப்பாட்டில் இருந்து எவ்வித மாற்றமும் இல்லாமல் தொடர்கிறது. 

 இந்த இணக்க அரசியலின் நோக்கம், "எண்ணிக்கையில் பெரும்பான்மையாக இருக்கும் மக்களிடம்  நல்லிணக்கத்தை ஏற்படுத்தி தமிழ் பேசும் மக்களுக்கு தீர்வினைப் பெறுவதே" என தாம் செய்த சகல செயல்களுக்கும் வியாக்கியானம் கொடுத்து வந்தார்கள் தமிழ் பேசும் மக்களின் தலைமைகள். அவர்கள் செய்து வந்த நல்லிணக்க அரிசியல் ஏற்படுத்தாத விளைவினை தற்போது உள்ள ஏற்படுத்தி உள்ளது. தமிழ் தலைமைகள் இத்தருணத்தில் தமது முழு ஆதரவையும் வழங்க மறுப்பதோடு அல்லாமல், பிரதான கூட்டணியான தமிழ் தேசிய கூட்டமைப்பபுக்குள் (TNA) சில பிரிவினர் தமிழர்களை போராட்டத்தில் பங்கேற்க வேண்டாம் என்று தீவிரமாக பிரச்சாரமும் செய்கிறார்கள். ‘இது சிங்கள மக்களின் அரசாங்கத்தை மாற்றுவதற்கான போராட்டம், தமிழர்கள் இதில் ஈடுபட வேண்டியதில்லை. ‘தமிழர்கள் கொல்லப்பட்ட போது ஒரு சிங்களவர் கூட எதிர்ப்பு தெரிவிக்கவில்லை அதனால் தமிழர்கள் வீதிக்கு வரமாட்டார்கள்’ என்பதையே இவர்களை போன்றோர் மக்களிடம் திரும்ப திரும்ப முன்வைக்கிறார்கள்.

இனப்படுகொலைக்கு உள்ளான சமூக மக்கள் அனுதாபத்திற்கு உள்ளாகுவதும், அவர்கள் கசப்புணர்வை வெளிப்படுத்துவதும் இயல்பானது. நாம் கொல்லப்படும் போது நமக்கு உதவவோ, குரல் கொடுக்கவோ யாரும் முன்வரவில்லை.இங்கிலாந்து உட்பட பல புலம் பெயர்நாடுகளில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் வீதிக்கு வந்தபோது, பெரும்பான்மை சிங்கள மக்கள் இந்தப் போராட்டங்களில் பங்கேற்கவில்லை. மார்க்சிஸ்ட் கட்சி என்று கூறிக்கொள்ளும் ஜே.வி.பி, ராஜபக்சே ஆட்சியுடன் இணைந்து செயல்பட்டது. விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் போரை மறைமுகமாக ஆதரித்தன. தமிழ் சமூகத்தினுள் இருந்த பல புலிகளுக்கு எதிரான பிரிவுகளும் மௌனம் காத்ததுடன், போராட்டக்காரர்களை புலி ஆதரவாளர்கள் எனக் கூறி ஒதுக்கிவிட்டனர். 

உலகெங்கிலும் உள்ள வெகுஜன ஊடகங்கள் இலங்கையில் நடைபெற்றுக் கொண்டிருந்த படுகொலைகளை கண்டும் காணாமல்  புறக்கணித்தன. இந்தப் பிரச்சினையில் ஐநா நிறைவேற்றிய முதல் தீர்மானம் போரை முடிவுக்குக் கொண்டு வந்த இலங்கைக்கு வாழ்த்து தெரிவிப்பாதக இருந்தது. பிரித்தானியாவில் போருக்கு எதிரான கூட்டமைப்பு கூட தனது மாநாட்டில் போருக்கு எதிராக ஒரு வலுவான சாதாரண தீர்மானத்தை நிறைவேற்றுவதை மறுத்தது. இலங்கை அரசு போர் பகுதியில் தமிழர்களை சுற்றி வளைத்து சிறு நிலப்பகுதிக்கு அடக்கி கொன்று குவித்த நேரத்தில், ஈழ தமிழ் மக்கள் இவ்வாறான கையறு நிலையில் இருந்தனர்.  ஆனால் புலம்பெயர் தேசங்களிலும், இலங்கையிலும் தம்மை தலைவர்களாகவும், அடுத்த புலிகளாகவும்  பிரகடனப்படுத்திக் கொண்டோர் அப்போது தோன்றிய வெகு மக்கள் போராட்டத்தை ஆதரிக்கவில்லை. பிரித்தானிய பாராளுமன்றமும் ஐ.நாவும் தீர்க்கமான நடவடிக்கை எடுக்கும் என்று பலர் போராட்டக்காரர்களுக்கு எதிராக வாதிட்டனர். போர் முடிவடைந்த பின்னர், அவர்கள் ஐ.நா மற்றும் மேற்கு பாராளுமன்றங்களின் லாபியை மட்டுமே ‘போராட்டத்தின்’ வழிமுறையாகக் அறிவித்துக் கொண்டனர்.

இலங்கையில் உள்ள தமிழர் பகுதிகளில் எதுவித போராட்டத்தையும் நடத்த இலங்கையில் யாரும் முன்வரவில்லை. அவர்களைத் தடுத்து நிறுத்தியது இராணுவ அடக்குமுறை பயம் அல்ல - மாறாக அவர்களின் போராட்ட மறுப்பு அரசியல். போருக்கும் இடம்பெற்ற இனப்படுகொலைக்கும் எதிராக இலங்கையில் பேராட்டத்தை இயக்கமாக முன்னெடுத்துச் செல்ல முன்வந்த ஒரே அமைப்பு  USP (ஐக்கிய சோசலிசக் கட்சி)  என்பதை இங்கே குறிப்பிட வேண்டும்.  தற்பொது தமிழ் சொலிடாரிட்டி என்ற பெயரில் இயங்கும் அமைப்பு, 2009 காலகட்டங்களில் "தமிழர்கள் மீதான படுகொலையை நிறுத்து" என்ற பிரச்சார இயக்கத்தின் தொடர்ச்சியாகும். இந்த இயக்கத்தை அமைத்து செயலாற்றியதில் USP முக்கிய பங்காற்றியது. இன்னும் சில சிறிய ட்ரொட்ஸ்கிச அமைப்புக்கள் போர் மற்றும் படு கலைக்கு எதிராக வலுவாக நின்றன, ஆனால் எந்த நடவடிக்கையும் அவர்கள் எடுக்கவில்லை.

தமிழ்த் தலைவர்கள் மற்றும் பிற வலதுசாரி நபர்களும் போரில் பாதிக்கப்பட்டவர்களுக்காக விடும் நீலிக்கண்ணீருக்கும் மக்கள் உணர்வுகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை.  தற்போதைய நெருக்கடியால் அதிகம் பாதிக்கப்படுவது தமிழ் மக்கள் தான் என்பதை இந்த அறிவிலிகள் மக்களிடம் விற்றுக் கொண்டு இருக்கிறார்கள். எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்களின் விலையேற்றத்தை தமிழர்கள் ஏற்று பட்டினியால் வாட வேண்டுமா? இந்த நெருக்கடியால் தமிழர்கள் பாதிக்கப்படவில்லையா? தற்போதைய பொருளாதாரச் சீரழிவு பற்றிக் குரல் கொடுக்கக் கூடாது என்று தமிழர்களுக்கு உபதேசம் செய்வது ஏன்? பிறகு எப்படி அடுத்த தேர்தலில் வாக்களிக்கச் செல்வார்கள் என்று எதிர்பார்க்க முடியும்? அத்தியாவசிய சேவைகள் மற்றும் தேவைகள் அரசின் திட்டமிடல்கள் மூலம் மீது ஏற்கனவே நிகழ்த்தப்பட்டு கொண்டிருக்கும் தாக்குதல் இன்னும் அதிகரிக்க போகிறது என்பது இவர்களுக்கு தெரியாத? ஏற்கனவே போரின் கோர தாண்டவத்தால் மீள முடியாமல் அழிந்து போய் கிடக்கும் வடக்கு, கிழக்கு மக்களின் வாழ்வாதரம் இன்னும் மோசமடைய போவதை இவர்கள் அறியவில்லையா? ஏற்கனவே இலங்கையிலையே மிக வறிய பகுதிகளாக தமிழர் வாழும் பிரதேசங்களே காணப்படுவதாக வெளிவந்த சர்வதேச அறிக்கைகளை அவர்கள் பார்க்கவில்லையா? இல்லை இவை யாவும் தெரிந்தும் மக்கள் புலம் பெயர் தேசத்துவர் புண்ணியம் தேட செய்யும் தொண்டு உதவிகளை இரந்த வண்ணம் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்களா?

மக்கள் இவ்வாறு இரந்து வாழ, சிங்கள தேசம் என்று இவர்களே அழைக்கும் தேசத்து நாடாளுமன்ற உறுப்பினர்களாக தொடரும் தமிழ்த் தலைவர்கள் ஏன் இன்னும் அங்கு சம்பளம் வாங்குகிறார்கள்? "தெற்கு அரசியலில்" தமிழர்களுக்கு வியாபாரம் இல்லை என்று வாதிடுபவர்கள் இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டும். தமிழ் அரசியல் பிரதிநிதித்துவம் என்பது ஐக்கிய தேசியக் கட்சியை ஆதரிப்பதற்காக இலங்கை நாடாளுமன்றத்திற்கு உறுப்பினர்களை தெரிவு செய்வதை மட்டும் குறிக்குமா? நாடாளுமன்றத்தில்  முன்னெடுக்கப்படும் எந்தவொரு கொள்கையிலும் தமிழ் அரசியல் பிரதிநிதித்துவம் எந்தக் கருத்தையும் கொண்டிருக்கக் கூடாதா? கூடாது என்றால், சிங்கள தேசத்து தேர்தலில் பங்குகொள்ள ஏன் உங்களுக்கு தேர்தல் கட்சி?  தமிழ் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ‘தலைவர்களில்’ மிகச் சிலரைத் தவிர, பெருபான்மையானவர்களுக்கு ஒரு பொது தன்மை ஒன்று உண்டு . அது அவர்கள் தொடர்ந்து தெற்கில் தங்களுடைய பாரம்பரிய வலதுசாரி கூட்டாளிகளுடன் நின்று தொழிலாள வர்க்கம் மற்றும் ஏழைகளைத் தாக்கும் கொள்கைகளுக்கு வாக்களித்தனர். அதனை தமிழர்களுக்கு தீர்வு வாங்கி வரும் இராஜதந்திர நடவடிக்கை என இன்னமும் வக்காலத்து வாங்குகிறர்கள். சமீப காலமாக சில மாற்றங்கள் ஏற்பட்டாலும், இதுவே பல தசாப்தங்களாக தமிழ் நாடாளுமன்றவாதிகளின் வரலாறாக  இருந்து வருகிறது. அவர்களுக்கான தமிழ்த் தேசியச் சொல்லாடல்கள் அவர்தம் வலதுசாரி அரசியல் நிலைப்பாடுகளை மறைப்பதற்கு ஒரு திரைச் சீலையாக மட்டுமே பயன்படுத்தபடுகின்றன. 

போராட்ட திட்டமிடல்கள் 

வல்லரசுகளை வளைத்து கொண்டிருக்கும் புலம்பெயர் தமிழர் இராஜதந்திரிகள் ஒன்றும் இதற்கு விதிவிலக்கல்ல. எந்தவொரு போராட்டத்தையும் ஆதரிப்பதை விட - அல்லது உண்மையான எதிர்ப்பைக் கட்டியெழுப்புவதைக் விட மேற்கத்தைய அரசாங்கத்தின் ஒரு அங்கமகா இருப்பதில் இவர்கள் பெருமை கொள்கின்றனர். தமிழகம் ஈழ போராட்டத்தின் ஆதரவு பின்தளமாக தொடக்க காலம் முதல் இயங்கிவருகிறது. ஈழப் போராட்டத்தின் பெரும் தோழமை சக்தியாக விளங்கும் தமிழகம், மோடியும், பாஜக வும் தமிழர்களின் எதிரிகளாகவே கருதுகிறது. ஆனால் புலத்தின் so called தலைமைகள் பாஜக வுக்கு வாழ்த்து செய்தி அனுப்புகிறர்கள். அர்ஜுன சம்பத்தை அழைத்து வந்து கூட்டம் போடுகிரார்கள். டொனால்ட் ட்ரம்ப் சனாதிபதியாக இருந்த போது சிலர் ட்ரம்புக்கான தமிழர்கள் என ஓர் பிரச்சார அமைப்பை தொடங்கி வேலை செய்ய கூட இவர்கள் தயங்க வில்லை. ஈழத் தமிழர்கல மத்தியில் செயற்படும் அரசியல் போதாமை கொண்ட தலைமைத்துவத்தின் வெளிப்பாடு தான் இவை.

தமிழ் மக்களின் அரசியல் விடயத்தில், புலம்பெயர் தேசத்தில் பலர் கற்பனை உலகிலேயே வாழ்கிறர்கள். இந்த கற்பனாவாத அரிச்சுவடி அரசியலை, கொஞ்சம் வசதி படைத்த குடும்ப பின்னணி கொண்ட, சில மத்தியதர வர்க்க இளையோரும் தொடர்கிறார்கள். மக்களின் பிரச்சனைகளுக்கு சரியான திட்டமிடல்களுடன் தலைமைத்துவம் கொடுக்கவேண்டிய புலம்பெயர் இளையோர்களின் இடத்தை இத்தரப்பு ஆக்கிரமித்து கொள்கிறது. இதனால் பெருபான்மையாக இருக்கும் உழைக்கும் வர்க்க இளையோர் அரசியல் களங்களில் புறம் தள்ளப்படுகிறார்கள்.  ஆனாலும் தமிழ் சமூகத்தில் சாதராண மக்கள் மத்தியில் உள்ள போராட்ட உணர்வினால் போராட்ட அரசியலுக்கு எதிரான நிலைப்பட்டை இவர்கள் வெளிப்படையாக பேச மாட்டர்கள். ஏற்கனவே 2009ற்கு பின்னர் மக்களின் ஆதரவை பெரிதும் இழந்து நிற்கும் இந்த தரப்புகள் இருக்கும் மிச்ச சொச்சத்தையும் இழக்க வழியில்லை. அதானல் எஜமான்களுக்கு வலிக்காமல் போராட்டங்களின் பக்கம் நிற்பது போல் காட்டி கொள்வார்கள். இவர்களின் செயற்பாடுகளையும் , கருத்துகளையும் ஆழமாக நோக்கினால், 2009 ற்கு பின்னர் போராட்ட அரசியலை தமிழ் சமூகத்தில் இருந்து அகற்ற இவர்கள் மேற்கொள்ளும் வேலைத்திட்டம் தெளிவாகும்.

தமிழ் பேசும் மக்கள் வாழும் பகுதிகளில் போராட்டங்கள் பெரிதாக இடம்பெறவில்லை. அடையாள போராட்டங்களும் பல்கலைகழக மாணவர்களும் செய்த போராட்டங்ளும் ஆங்காங்கே நிகழ்ந்தன. தமிழ்த் தலைவர்கள் என்று கூறிக்கொள்பவர்கள இதுவரை கோட்டாபய ஆட்சிக்கு எதிராக போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கவோ அல்லது மக்களை திரட்டுவதற்கான முயற்சி எடுக்கவோ இல்லை. இவர்களில்  பெரும்பாலானோர்  வெகுமக்கள் இயக்கத்தை ஒருபோதும் நம்பியதில்லை.  எந்தவொரு கோரிக்கைகள் தொடர்பாகவும் தமிழர்கள் மத்தியில் வெகு மக்கள்  இயக்கத்தைக் கட்டியெழுப்ப இந்த தரப்புகள் எதையும் செய்ததில்லை. தற்போதும் இவர்களின் இந்த நிலையில் எவ்வித மாற்றமும் இல்லை. 

தமிழ் மக்கள் தற்போதைய இந்த போராட்டங்களை கண்டும் காணாமலும் கடந்து போகும் இந்த நிலை சரியானது என வாதிடவும் இவர்கள் தயங்கவில்லை. தமிழ் மக்களின் பொதுவான இந்த அரசியல் பிரக்ஜையை பற்றி அவர்களுக்கு எவ்வித பிரச்சனையையும் இல்லை. தமக்கு வாக்களித்து விட்டு இவ்வாறு தான் மக்கள் இருக்கவேண்டும்  என்பதே இவர்களின் எதிர்பார்ப்பு. “தமிழர்கள் சந்தேக கண்ணோடு தான் இந்த போராட்டதை பார்க்கிறர்கள்”  என்று புழகாங்கிதப்பட்டு எழுதுகிறது வலதுசாரிகள் ஆதிக்கம் கொண்ட ஊடகமான தமிழ் கார்டியன். தமிழ் பகுதிகள் அமைதியாக உள்ளது சரி என பெருமிதத்துடன் ஆய்வு காணொலிகளும், கட்டுரைகளும் வெளிவந்த வண்ணம் உள்ளன. ராஜபக்ச தரப்புக்கு எதிரான இந்த போராட்டத்தில், தமிழ் மக்கள் இணைய தேவை இல்லை எனக்கூறும் இந்த தரப்பு, இந்த போராட்டதிற்கு ஆதரவாகவோ  அல்லது இந்த எதிர்ப்பு இன்னும் வலுப்பட வேண்டும் என்றோ வாதிடுவதும் இல்லை. 

தமிழர் பிரதேசங்களில் ராஜபக்ச தரப்புக்கு  எதிராக பாரிய கோபம் நிலவுகிறது. இந்தக் கட்டத்தில் இந்த கோபம் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி  நிலைமைகளால் இன்னும் வலுபெறுள்ளது. இந்த கோபம்  இதுவரை மக்களிடம் இருந்து வெளிப்பட தொடங்கவில்லை. விரைவில் வெளிவரும் சாத்தியம் உள்ளது. போராட்டத்தை தடுக்க இந்த தலைமைகள் முயற்சிகள் செய்த  போதிலும், பலர் இந்த தலைவர்கள்  என அழைக்கப்படுபவர்களின் கட்டுப்பாட்டைத் தாண்டி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.  தமிழ் பேசும் மக்கள் மீதான தாக்குதலின்றி இந்த இயக்கம் மேலும் வளர்ச்சியடையும் பட்சத்தில், இது வடக்கு கிழக்கு முழுவதும் பரவ வாய்ப்புள்ளது (மலையகப் பகுதிகளில் பாரிய போராட்டங்கள் இடம்பெற்றன). இலங்கையில் எழுந்துள்ள எதிர்ப்பு அலையானது ஒரு வலுவான இயக்கமாக மாற இன்னும் வெகுதூரம் செல்ல வேண்டும். இதுவரை இந்த போராட்டங்களின் மையமாக தலைநகர் கொழும்பு இருந்தது. வடக்குப் பகுதி மட்டுமல்ல, நாட்டின் பல பிராந்தியங்களில் குறிப்பிடத்தக்க மக்கள் திரட்சி இல்லை.  தலைநகரில் வசிக்கும் தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் கணிசமான அளவில் போராட்டத்தில் கலந்து கொள்கின்றனர். இந்த இயக்கம் வளர்ச்சியடையும் போது, வடக்குப் பகுதியிலும் எதிர்ப்பு நடவடிக்கைகள் இடம்பெறலாம். 

அவசியமான நடவடிக்கைகள் 

எவ்வாறாயினும், தமிழ் பிரதேசம் அமைதியாக இருப்பதைக் கண்டு குதூகலிக்காமல், தமிழ் மக்களை எவ்வாறு இந்த வெகு மக்கள் எதிர்ப்பு இயக்க நோக்கி அழைப்பது என்பதே முக்கியமானது. தமிழ்த் தலைமைகள் என்று அறிவித்து கொண்டவர்கள் மக்களை வழிநடத்தத் தவறியுள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகள் காலத்தில் இருந்த பலமனா தமிழ் இளைஞர் குழுவான தமிழ் இளையோர் அமைப்பு (TYO), சமீபத்தில் அரசியல் உள்ளடக்கம் எதுவும் அற்ற அறிக்கை ஒன்றை வெளியிட்டது. தமிழர் தாயகத்தை அங்கீகரிக்க வேண்டும் என்ற வழமையான கோரிக்கையைத் தவிர வேறு எதுவும் அவர்களின் அறிக்கையில் இல்லை. எல்லோருக்கும் வாய்ப்பட்டு ஆகிப்போன சர்வதேச சமூகம் நீதி வழங்க,  அழைப்பு விடுக்கவும்  அவர்கள் மறக்கவில்லை. வடக்கில் உள்ள இளைஞர்கள் பல விடயங்களில் தலைமையற்றவர்களாக உள்ளனர். அவர்களில் சிலர், வெளியில் வந்து போராட்டம் நடத்தினால், இலங்கை அரசுக்கு ஆதரவானவர்களாக - சிங்களர்களுக்கு ஆதரவானவர்களாக முத்திரை குத்தப்பட்டு விடுவோம் என்று நினைக்கும் அளவுக்கு மிரட்டப்படுகிறார்கள். இதற்கிடையில்,  இது தான் சாட்டு என இலங்கை தேசிய விசுவாச புலி எதிர்ப்பு கும்பல் மீண்டும ஸ்ரீலங்கா கொடியை தூக்குகின்றனர். 2009 இல் ‘போரை முடித்து வைத்தற்கு நன்றி’ என கூட்டம் போட்ட இந்த கும்பல், இப்போது ராஜபக்ச தரப்பினை வீட்டிற்கு அனுப்ப ஒரு கூட்டமும் போடவில்லை. 

இந்த நிலைமை இலங்கையில் நிலவும் தேசிய பிரிவினையின் உச்சத்தையும் பிரதிபலிக்கிறது. முற்போக்குவாதிகள் என்று அழைக்கப்படுபவர்கள், கொழும்பு மேல்தட்டு வர்க்கங்கள் மற்றும் மார்க்சிஸ்ட் அமைப்பு என்று தம்மை அடையாள படுத்தி கொள்பவர்கள் என பலரும் ஒத்த குரலில் தற்போது ஒற்றுமை மற்றும் சமத்துவத்தை போதிக்கின்றனர். ‘நாங்கள் தமிழர்கள், முஸ்லிம்கள் அல்லது சிங்களவர்கள் அல்ல, நாங்கள் இலங்கையர்’ என்ற முழக்கம் அவர்களில் பலருக்கு மிகவும் முற்போக்கானதாகத் தெரிகிறது. ‘அபி ஸ்ரீலங்கன்’ (நாங்கள் இலங்கையர்கள்) என்பது சிங்கள தேசியவாதிகளிடமிருந்து உருவான ஒரு முழக்கம். 2009ற்கு பின்னர் இது ராஜபக்சே தரப்பால் தமிழ் பேசும் மக்கள் மத்தியிலும் அதிகம் பயன்படுத்தப்பட்டது. ஆனால் உண்மை நிலை வேறு. இலங்கையில் அத்தகைய சமத்துவம் இல்லை. முழு நாடும் ராஜபக்ச தரப்பை வெறுக்கும் போது கூட, "முற்போக்குவாதிகள்"  என்று அழைக்கப்படுபவர்கள் ராஜபக்ச தரப்பு இனப்படுகொலையாளிகள்  என்று கூறுவதைத் தடுப்பது எது? தேசிய உரிமைக் கோரிக்கையை இப்போது பேசாது விட்டாலும் ,  இன்னும் ஏன் பலர் தமிழ் பேசும் மக்கள் மீது கண்முன்னே மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளை ஏற்றுக்கொள்ள  மறுக்கிறார்கள்? தமிழர்களின் முக்கிய கோரிக்கைகள் ஏன் கவனமாக தவிர்க்கப்படுகின்றன? 

முன்னோக்கு அரசியலுக்கான கோரிக்கைகள் 

போராட்டகாரர்கள் இதுவரை தமிழர்கள், முஸ்லிம்கள் என்ற பாகுபாடு தன்மையை காட்டவில்லை. போராட்ட களங்களில் இருக்கும் முஸ்லிம்கள்  ரமலான் நோன்பினை கடைபிடிக்க உதவுவது.  போராட்டங்களில் இருக்கும் மக்களுக்கு உணவுகள் மற்றும் பானங்களை வழங்கி உதவுவது என பல விடயங்களை குறிப்பிட்டு சொல்லலாம். ஒவ்வொரு வெகு மக்கள் இயக்கமும் மேன்மையான மனித தன்மையை இந்த சமூகத்திற்கு கொடுக்கின்றது.  சூடான் , சிலி,  மியான்மர் ஈறாக பல இடங்களில் சுய-ஒழுங்கமைத்தல், ஒருவரையொருவர் பாதுகாத்தல், சமூகத் தேவைகளை ஒழுங்கமைத்தல் போன்ற பல உதாரணங்களை நாம் காண்கிறோம்.  இவை  முன்னோக்கு அரசியலை நோக்கிய முக்கிய செயற்பாடுக்கள்தான், ஆனால் இவை மட்டும் போதாது. 

அந்தத் தருணம் முன்வைக்கப்படும் கோரிக்கைகள் மற்றும் எவ்வாறான அமைப்பியல் ரீதியான நடவடிக்கை எடுக்கிறது என்பது, இந்த  இயக்கத்தின் நீட்சிக்கும் வலிமைக்கும் முக்கியமானது. அனைவரையும் உள்ளடக்கிய கோரிக்கைகள் மற்றும் திட்டங்களுடன் முன்வருவதன் மூலம் மட்டுமே ஒற்றுமையை உருவாக்க முடியும். முரண்பாடுகளுடன் கூடிய உடன்படே சாத்தியம்.  இளைஞர்கள் மத்தியில் இது போன்ற விவாதம் உடனடியாக தொடங்க வேண்டும். துரதிருஷ்டவசமாக, சில பெரிய "மார்க்சிச" அமைப்புக்கள் ஒரு தடையாக மத்தியில் நிற்கின்றன. எடுத்துக்காட்டாக ஜே.வி.பி. அதன் பழைய வழியில் இருந்து மாற மறுக்கிறது. ஒற்றையாட்சி இலங்கை அரசைப் பாதுகாக்கும் அதேவேளை, அவர்களின் பெரும்பாலான பிரச்சாரங்கள் பெளத்த தேசியவாத உணர்வுகளுக்கு இணங்குவதை மையமாகக் கொண்டுள்ளன. இலங்கை இடதுசாரிகளில் பெரும்பான்மையினர் தமிழ் போராளிகளை (குறிப்பாக விடுதலைப் புலிகளை) "பயங்கரவாதிகள்" அல்லது "பாசிசவாதிகள்" என்று கருதுவதுடன், கடந்த காலப் போராட்டத்தின் மீதான எந்தவொரு அனுதாபத்தையும் சகித்துக் கொள்ள மாட்டார்கள். இதன் விளைவாக, தமிழர்கள் மத்தியில் JVP யால் மக்களிடம் செல்ல முடியவில்லை .  பொதுவாக தமிழ் மக்களால் மிக அதிகமாக வெறுக்கப்படும்  சிறு சமூக விரோத குழுவின் ஆதரவினையே இவர்கள் பெற முடிந்துள்ளது. 

முன்னாள் போராட்ட இயக்கங்களில் இருந்தோர,  'புத்திஜீவிகள்' என்று அடையாளபடுத்தும் போலிகள்,  கலைஞர்கள் என்று விடுதலைப் புலிகள் எதிர்ப்பை முன்னிறுத்தும் இந்த சிறிய தரப்புகளே தமிழ் சமூகத்தில் இவர்களின் ஆதரவு தளம்.  இந்த குறுங்குகுழுவாத புலியெதிர்பு தரப்புகள், மக்களால் வெறுக்கப்படுவதற்கு காரணம் அவர்கள் கொள்ளும் அரசியல் கூட்டும் தம்மை முதன்மை படுத்தி இயங்குதலும் ஆகும். ஆனால் பிற்போக்கு தமிழ் தேசியவாதிகள் இவர்களை “தூரோகிகள்” என்று சொல்வதிலேயே தாம் வெறுக்கப்படுவதாக இவர்கள் கதை அழப்பார்கள். தம்மை முற்போக்குவாதிகளாக கட்டிக்கொள்ள இந்த வாதம் அவர்களுக்கு உதவுவதாக அவர்கள் நம்புகிறார்கள். 'சிங்கள இடது' இந்த சிறிய மற்றும் மோசமான கூறுகளைத்தான் தனது ஆதரவு தளமாக நம்புகிறது. மேலும் தமிழ் குட்டி முதலாளித்துவ கூட்டமும் இவர்களுக்கு பெரும் தலைஇடியாக இருக்கிறது. இவை அனைத்தையும் தாண்டி, தமிழ் சமூகத்திற்க்குள் இருக்கும் வினைத்திறன் கொண்டவர்களை நோக்கி நகர சிங்கள இடதுசாரிகளுக்கு முடியவில்லை. 

விடுதலைப் புலிகளின் கொடி இரத்தம் தோய்ந்து என்று   தீண்டாமையைக் கடைப்பிடித்து வருவோர் இலங்கைக் கொடியைப் பிடிப்பதில் (இந்த சிங்கள இடதுசாரிகள்) மிகுந்த மகிழ்ச்சி அடைந்துவருகின்றனர்.  போருக்குப் பிறகு பிறந்த பல இளைய தலைமுறையினரால் போராட்டத்தின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது புலிக்கொடி. போரின் முடிவில் விடுதலைப் புலிகளை இலங்கை ராணுவம் எப்படி கொன்று குவித்தது என்பது இதற்கு மேலும் வலு சேர்க்கிறது. இந்தக் கொடி கடந்த காலத்தில் சிங்கள மக்களுக்கு எதிரான தாக்குதல், நாட்டைப் பிளவுபடுத்துதல் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு எதிரான தாக்குதல்கள் போன்றவற்றுடன் தொடர்புடையது. ஆனால் இலங்கையின் தேசியக் கொடியின் வரலாறு மிக கேவலமான ஓன்று. 

உண்மையில், சிங்கள பௌத்த தேசியவாதிகளின் தலைமையில் உருவாக்கிய வெறுப்பு தான்,  தமிழ் போராளிகளுக்கு எதிராக இத்தகைய வெறுப்பை உருவாக்கியது. இந்தக் காயங்கள் ஆற்றுப்படுத்த பட வேண்டும். தமிழ் இளைஞர்கள் கடந்த கால இராணுவவாதம் மற்றும் தவறுகளுக்கு எதிராக இருக்கும் முரண்பாடுகளுக்கான கலந்துரையாடல்களுக்கு தயராக இருக்கவேண்டும். கடந்த கால தவறுகளை ஒப்புக்கொள்ளாமல் முன்னேற முடியாது. அதேபோன்று, சிங்கள இளைஞர்கள் தமிழர்களின் அவலநிலையையும் அவர்களின் கோரிக்கைகளையும் புரிந்துகொள்வதற்கு முன்வர வேண்டும். மற்றும் கடந்த கால போராட்டங்களின் சில மரபுகளை இன்னும் பேணுவது ஏன் முக்கியம் என்பதை தமிழ்  மக்களின் நிலையில் இருந்து புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழ் சமூகத்தில் வர்க்க அடிப்படை பற்றிய நிலைப்பாடு இன்றி, சமரச அரசியல் செய்யும் தரப்புகளை நோக்கியே JVP இன் செயற்பாடுகள் இருக்கிறது.  இவ்வாறு சமரச அரசியல் செய்யும் தரப்புகள் மக்களின் அபிலாஷைகளுக்கும், போராட்டங்களுக்கும் எதிராக நின்றதே வரலாறு. அந்த வரலாறு இன்னமும் தொடரவே செய்கிறது. தங்களை மார்க்சியவாதிகள் அல்லது இடதுசாரிகள் என பலர் சொல்லிக்கொள்வர். ஆனால் அதற்கும் அவர்கள் செயற்பாடுகளுக்கும்  இம்மியளவும் தொடர்பு இல்லை. சொல்லபோனால் மார்க்சிஸத்தை இவர்களிடிடம் இருந்து காத்துக் கொள்ளவேண்டி இருக்கிறது. 

எந்த ஒரு தேசிய கொடியை ஏந்தும் போதும் அது உண்டாக்கும் முரண்பாட்டை புரிந்து கொள்ளவேண்டும்.  இடதுசாரிகள் , முற்போக்குவாதிகள் என தம்மை அடையாளம் இட்டு கொள்பபவர்கள் எல்லோரும் இந்த முரண்பாட்டை விளங்கிக்கொள்ள வேண்டும்.  மார்க்சிச கட்சி என்று கூறிக்கொள்ளும் ஒரு கட்சி, தமது நிகழ்வுகள் மற்றும் போராட்டங்களில் தேசிய கோடியை ஏந்தி செல்வது இலங்கையில் மட்டுமே எனலாம். பௌத்த பிக்குகளுக்கு முன்னுரிமை தந்து, ஸ்ரீலங்கா தேசிய கொடியையும் ஏந்திய வண்ணம் இருந்தால் எப்படி தமிழ் இளையயோர்களை வெல்ல முடியும்? JVPா இன்னும்  சிங்கள தேசியத்தில் இருந்து தன்னை முற்று முழுதாக விடுவித்து கொள்ளவில்லை. JVP உருவாக்கி வைத்துள்ள இந்த நடைமுறை முழுவதுமாக உடைக்கப்பட வேண்டும்.

தமிழ் சொலிடாரிட்டி அமைப்பின்  செயற்பாடுகளும் நிலைப்பாடும் 

கடந்த காலத் தவறுகள், கொடிப்பிரச்சினைகள்,  சிங்கள இடதுசாரிகள் மற்றும் முற்போக்கு சக்திகளுடன் இணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தைப் பற்றி தமிழ் சொலிடாரிட்டி (TS)  பல திறந்த விவாதங்களை செய்துவந்திருக்கிறது. நாம் இன அடிப்படையில் யாருடனும் வேலை செய்யவதிலை. மாறாக அவர்களின் அரசியல் கண்ணோட்டத்தின் அடிப்படையில் தான் இணைவு சாத்தியமாகும் என தொடர்ந்து பேசி வருகிறோம்.  TS முக்கியமாக தமிழ் பேசும் மக்கள் மத்தியில் தான் அதிகமாக இயங்கினானலும் , பல சிங்கள செயற்பாட்டாளர்களுடன் மிக நெருக்கமான தொடர்பை ஏற்படுத்தியுள்ளது. TS ஒரு சோசலிச அமைப்பு அல்ல, ஆனால் அது இங்கிலாந்து, வேல்ஸில் உள்ள சோசலிஸ்ட் கட்சி, இலங்கையில் ஐக்கிய சோசலிஸ்ட் கட்சி மற்றும் பல்வேறு நாடுகளில் உள்ள பல சோசலிச அமைப்புகளுடன் நெருக்கமாக செயல்படுகிறது. தமிழ் பேசும் மக்கள் மத்தியில்   ஒருங்கிணைந்த போராட்டத்தின் அவசியத்தை பிரச்சாரபடுத்தும் அதே வேளை  அரசியல் ஒற்றுமையைக் கட்டியெழுப்பும் போது  கொண்டிருக்க வேண்டிய நெகிழ்வு தன்மையின் முக்கியத்துவத்தையும் TS தீவிரமாக பிரச்சாரம் செய்கிறது.

ஜே.வி.பி போன்ற அமைப்புகளால் சிங்கள தொழிலாள வர்க்கத்தினரிடையே தமிழர் உரிமைகளுக்காக ஒருபோதும் வாதிட முடியவில்லை. ஒரு சிறிய மாவோயிஸ்ட் அமைப்பு உட்பட, இந்த மார்க்சிய அமைப்புகள் என்று அழைக்கப்படுபவை எதுவும், தேசியப் பிரச்சினையில் லெனினிசக் கருத்துக்களையும் கொள்கைகளையும் ஏற்கத் தயாராக இல்லை. தமிழர் உரிமைகள் அங்கீகரிக்கப்பட்டால் சிங்கள தொழிலாள வர்க்கத்தை இழக்க நேரிடும் என்ற ஒரு போலியான அச்சத்தாலும்  சாக்கு போக்குகள் சொல்கிறார்கள்.  இந்த அமைப்புகள் நோக்கி திரும்பும் இளைஞசர்கள் இன்னும் உரையாடல்களுக்கு தயாராகவே உள்ளனர்.  இளைஞர்கள் இவர்களின் வழிமுறைகளை  நிராகரித்து, தெளிவான கண்ணோட்டத்துடன் தொலை நோக்குடைய  மார்க்சிய அமைப்பை உருவாக்க முன்வர வேண்டும்.  

இலங்கையில் நடைபெற்று வரும் போராட்டத்திற்கு தமிழ் சொலிடாரிட்டி முழு ஆதரவு அளிக்கிறது.  இனவாத கூறுகள் இருந்தாலும்,  அனைத்து தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கும் மற்றும் ராஜபக்ச அரசிற்கு எதிரான போராட்டங்களிற்கும் ஆதரவளிப்போம் என நாம் வாதிட்டோம். இந்த ஆட்சியை முடிவுக்கு கொண்டு வரகூடிய தூய்மையான போராட்டங்களை கட்டுவது கடினம் என்பதை நாம் புரிந்துகொண்டோம். போராட்டத்தில் இலங்கை கொடியை தாங்கி வருபவர்கள் இந்த போராட்டத்தில் மற்றவர்கள் இணைந்து கொள்ள தடையாக பார்க்க படக்கூடாது. உதாரணமாக  தேசிய கோடியை ஏந்தி வந்தாலும்  விவசாயிகள், தொழிலாளர்கள்,  மற்றும் ஏழைகளுக்கு மீதான  எந்தத் தாக்குதலையும் TS ஆதரித்ததில்லை. மாறாக ஒன்றிணைந்த போராட்டத்தை கட்டியெழுப்புவதற்கு முயற்சி எடுக்கிறது. 

கோட்டவை வீட்டுக்கு அனுப்பிய பின்னர் என்ன செய்வது 

கோட்டாவின் ஆட்சியையும் அவரது குடும்ப ஆதிக்கத்தையும்  முடிவுக்குக் கொண்டுவரவேண்டும் என்ற முக்கிய கோரிக்கையானது,அனைத்து மக்களுக்கும்  சிறந்த வாழ்வாதாரத்தை கொண்டு வருவதுடன் தொடர்புபட்டுள்ளது. இது IMF, உலக வங்கி, இந்திய மற்றும் சீன அரசுகள் அல்லது எந்த வலதுசாரி எதிர்ப்பு சக்திகளுக்கும் ஆதரவாக எழுப்பப்பட்ட கோரிக்கை அல்ல. மக்கள் அதிகாரம் கொண்ட,  தொலைநோக்கு திட்டங்களுடன் கூடிய புதிய வெகுஜன சக்திகள் கட்டமைக்கப்பட வேண்டும் என்று TS உறுதியாக நம்புகிறது, அதற்காக நாங்கள் தொடர்ந்து வாதிடுகிறோம். 

இதனை இடதுசாரிகளின் ஒன்றிணைவு மூலம் மட்டும் கட்டமைக்க முடியாது. இது பரந்த எண்ணிக்கையிலான உழைக்கும் மக்கள் ஒன்றிணைந்து சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளில் இருந்தும் ஏற்படும் பிரதிநித்துவத்தின்  அடிப்படையில் கட்டமைக்கப்பட வேண்டும்.  இந்த கட்டமைப்பு அனைத்து மக்களினதும் கோரிக்கைகளுக்கும் செவிசாய்ப்பதாகவும்  தீர்வு திட்டங்களை முன்னெடுப்பதாகவும் இருக்க வேண்டும். சாதி, பாலினம், மதம் மற்றும் இன அடிப்படையிலான அனைத்து வகையான ஒடுக்குமுறைகளும் எதிர்க்கப்பட வேண்டும் என்ற உடன்படிக்கை எட்டப் படவேண்டும். தமிழ் பேசும் மக்கள் மீது, சிங்கள மக்களின் பெயரால் , இலங்கை பேரினவாத அரசு மேற்கொண்ட படுகொலைகளுக்கு இலங்கை அரசே சகல விதங்களிலும் பொறுப்பேற்க வேண்டும்.

வலதுசாரிகள் தமது ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்ள, உழைக்கும் சிங்கள மக்களின் வாழ்வாதாரம் சிதைவடைந்து போவதற்கு, தமிழ் பேசும் மக்களே காரணம் என்ற விஷம பிரச்சாரத்தை நம்பி சிங்கள மக்கள் பலர் ஏமாந்து போயுள்ளனர். வெகுஜன இயக்கங்கள் இந்த அரசாங்கங்களின் கடந்தகால குற்றங்களில் இருந்து விலகி செயற்ப்பட வேண்டும்.   ராஜபக்சக்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ராஜபக்சக்களின் அனைத்து சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டு ,  அவர்கள் செய்த மனித குலத்திற்கு எதிரான குற்றம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்பட வேண்டும்.

எந்தவொரு தீவிரமான இயக்கமும் அனைத்து சனநாயக உரிமைகளையும் ஆதரிக்க வேண்டும். உழைக்கும் மக்களால் வழிநடத்தப்படும் ஒரு சோசலிச அரசாங்கத்தால் மட்டுமே இதை வழங்க முடியும். ஆனால், ஒரு தொடக்கமாக, உழைக்கும் மக்கள் மற்றும் வெகுஜன இயக்கத்தின் பிரதிநிதித்துவ அரசாங்கம், நாட்டின் அனைத்து பகுதிகளிலிருந்தும் சனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் புரட்சிகர அரசியலமைப்பு பேரவையை கூட்டப்பட்டு,  அனைவருக்கும் அனைத்து உரிமைகளையும் சிறந்த நிலைமைகளையும் வழங்குவதற்கான வேலை திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். 

முஸ்லிம் மக்களின் சிறப்பு (அல்லது தேசிய) உரிமைகள் உட்பட தேசிய உரிமைகளுக்கான கோரிக்கைகள் கட்டுப்படுத்தப் படக்கூடாது. தமிழர்கள் தாமாக முன்வந்து இலங்கையின் அங்கமாக இருக்குமாறு கோரலாம். ஆனால் அவர்கள் மீது அதனை திணிக்க முடியாது. கூட்டாட்சி அல்லது சுயாட்சி உரிமைகள் மட்டுமல்ல, தமிழர்களின் சுயநிர்ணய உரிமையும் மதிக்கப்பட வேண்டும்.

ஒரு ஒருங்கிணைந்த போராட்டத்தின் இயக்கத்தின் அடிப்படையில், அனைத்து உரிமைகளும் வழங்கப்பட்ட நிலையில், தமிழர்கள் தானாக முன்வந்து அனைவருக்கும் வளங்களைப் பயன்படுத்துவதை  திட்டமிட கூட்டமைப்பில் அங்கம் வகிக்க முடியும். அத்தகைய ஒற்றுமையைக் கொண்டு வருவது முற்றிலும் சாத்தியம் மட்டுமல்ல, முழு தெற்காசியப் பிராந்தியத்திலும் இந்த கட்டமைப்பு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். இதுதான்  தெற்காசிய சோசலிச நாடுகளின் கூட்டமைப்பு திட்டமிடலை நோக்கி நகர வழிவகுக்கும். 

விமானக் கூடாரம் சுதந்திர சதுக்கமாக ஆன கதை (கொழும்பின் கதை - 22) - என்.சரவணன்

1948 பெப்ரவரி 4 ஆம் திகதி இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டாலும். 1948 ஆம் ஆண்டு பெப்ரவரி 10 ஆம் திகதி தான் உத்தியோகபூர்வ அறிவிப்பு ஒரு சடங்காக நிகழ்த்தப்பட்டது. சுதந்திர சதுக்கத்தில், (Torrington Square, டொரிங்டன் சதுக்கத்தில்) க்ளூசெஸ்டர் பிரபுவும், ஆறாம் ஜார்ஜ் மன்னரின் சகோதரருமான இளவரசர் ஹென்றி (Prince Henry, Duke of Gloucester) சம்பிரதாயபூர்வமாக பாராளுமன்றத்தை முறைப்படி இந்த சுதந்திர சதுக்கத்தில் வைத்துத் தான் விழாக்கோலமாக கூட்டி பிரித்தானிய ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற்றதாக அறிவித்து இலங்கை முதல் அமர்வை ஆரம்பித்து வைத்தார்.

இந்த நிகழ்வு அவசரமாக ஏற்பாடு செய்ய வேண்டி இருந்தது. உரிய இடத்தைத் தெரிவு செய்வதில் பல சுற்று உரையாடல்கள் நிகழ்ந்தன. இறுதியில் டொரிங்டன் சதுக்கத்தில் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. அடுத்ததாக குறுகிய காலத்தில் மிகப் பெரிய விழாவை உள்ளக உற்சவமாக நிகழ்த்துவதற்கு ஒரு மண்டபம் தேவைப்பட்டது.

டொரிங்டன் சதுக்கத்தில் அப்போது விமானங்களை உள்ளே வைத்து பாதுகாக்கும் பெரிய விமானக் கூடாரங்கள் (Hanger) இரண்டு இருந்தன. அது கற்களால் கட்டப்பட்ட ஒரு கட்டிடமாக இருக்கவில்லை. இரண்டாம் உலக யுத்த காலத்தில் விமானப்படை இதனை பயன்படுத்தியிருந்தது. சுதந்திர சதுக்கத்தின் முன்னால் இன்றும் இருக்கின்ற “சுதந்திர அவேனியு” (Independence Avenue) ஒரு விமான ஓடுப்பாதையாக அன்று இருந்தது.

அந்த விமானக் கூடாரத்தையே சுதந்திர விழாவை நடத்துவதற்கான கம்பீரமான ஒரு மண்டபமாக ஆக்குவதென தீர்மானிக்கப்பட்டது. அந்த மகா பணி எச்.ஆர்.பிரேமரத்ன (Hapugoda Rankothge (H R) Premaratne) என்கிற பிரபல கட்டிடக் கலைஞரிடம் ஒப்படைக்கப்பட்டது.

சேதமடைந்திருந்த அந்த விமான கூடாரத்தைத் தான் பெரிய மண்டபமாக ஆக்கினார் பிரேமரத்ன. இரும்புப் பாலங்களால் ஆன கூரையை இருபதினாயிரம் யார் வெள்ளைத் துணியால் போர்த்தியும் வர்ண நிறங்களில் சோடனைகளை செய்து, சிங்களவர்களின் சிங்கக் கொடி, தமிழர்களின் நந்திக் கொடி, முஸ்லிம்களின் அலங்கார ஓவியங்களையும் (motifs) அதற்குப் பயன்படுத்தினார். மிகப் பிரமாண்டமான அந்த கட்டிடத்தில் நிகழ்ந்த வரலாற்று முக்கியத்துவமான நிகழ்வை பிரேமரத்ன வரைந்தார். அந்த ஓவியம் தான் நமக்கு முக்கிய சான்றாக இன்றும் எஞ்சியிருக்கிறது.

பிற்காலத்தில் பிரேமரத்னவின் மகனும் பிரபல வழக்கறிஞரும் எழுத்தாளருமான சந்திரசிறி செனவிரத்ன தனது தந்தை பற்றிய எழுதிய “பாத்திரமான பாத்திரம்”   நூலில் இப்படிக் குறிப்பிடுகிறார்.

“பொதுப்பணித்துறை இயக்குநராக அவர் எதிர்கொண்ட சவாலான கடமைகள் குறித்து அப்பா என்னிடம் நிறைய பகிர்ந்திருக்கிறார். அந்த பொறுப்பை அவர் கையாண்ட விதம் குறித்து சேர் ஜோன் கொத்தலாவல மிகவும் மகிழ்ச்சியடைந்தார். அப்போது சேர் ஜோனின் அமைச்சரவையில் தான் அப்பா பணியாற்றியிருந்தார்.. அப்பாவின் அத்தகைய பங்களிப்பு அவர்கள் எதிர்பார்க்காத ஒன்று என்று நினைக்கிறேன்.

மூன்று மாதங்களே அவருக்கு இருந்தன. அதுமட்டுமன்றி காலனித்துவ செயலாளரின் வாசஸ்தலத்தை பிரதமர் வாசஸ்தலமாகவும், பழைய தபால் நிலையக் கட்டிடத்தொகுதியை செனற்சபை கட்டிடமாகவும் மாற்றும் பொறுப்பும் அப்பாவிடம் தான் வழங்கப்பட்டிருந்தது.

டொரிங்டனில் இருந்த விமானக் கூடாரத்தை கண்டி ராஜ்ஜிய கலைநுட்பத்துடன் சுதந்திர விழா மண்டபமாக மாற்றினார். அப்பாவின் அந்த திட்டத்தை நிறைவேற்ற இலங்கையின் க்கிதேர்ந்த கலைஞர்கள் பலர் திரண்டு வந்து ஒத்துழைத்தார்கள்.

அந்த இரும்புத் தூண்களின் கூடாக இருந்த hanger ஐ ஒரு பெரிய மண்டபமாக மாற்றினார் அப்பா.”

என்கிறார்.

"அந்த மண்டபம் எப்படி இருந்தது என்பதை நினைவாக ஆக்குவதற்கு வர்ணப் படங்கள் அப்போது இல்லை. புகைப்படங்கள் கருப்பு வெள்ளையில் தான் இருந்தன. எனவே அந்த நிகழ்வு பற்றி வெளிவந்த புகைப்படங்கள் அத்தனையும் கருப்பு வெள்ளையில் தான் இருந்தன. எனவே அப்பா கருப்பு வெள்ளைப் புகைப்படமொன்றை பிரதி செய்து மீண்டும் வர்ணங்களால் வரைந்தார். அந்த ஓவியத்தை ஜே.ஆர்.ஜெயவர்தன அப்பாவிடம் பணம் கொடுத்து வாங்கி ஜனாதிபதி மாளிகையில் காட்சிக்கு வைத்தார்."


முதலாவது சுதந்திர தினப் பிரகடன நிகழ்வு

சுதந்திர தினப் பிரகடன நிகழ்வின் போது இங்கே முதலில் இளவரசர் ஹென்றி அமர்ந்ததன் பின்னர் இலங்கைக்கான ஆங்கிலேய ஆளுநரின் வரவேற்பு உரையைத் தொடர்ந்து, பிரதமரும் உரையாற்றினார்கள். விழாவானது புதிதாக கட்டப்பட்ட இந்த சதுக்கத்தில் சுமார் 20,000 பேர் கலந்து கொண்டிருக்கிறார்கள். சுமார் 5000 பேர் சுதந்திர மண்டபத்திலேயே அமர்ந்திருந்தனர். இதன் போது அரசரின் பிரதிநிதியாக கலந்துகொண்ட இளவரசரால் அங்கிருந்த உயர்ந்த கொடிமரத்தில் இங்கிலாந்தின் யூனியன் ஜேக் கொடி இறக்கப்பட்டு சிங்கக் கொடி ஏற்றப்பட்டது. இலங்கைக்கான புதிய ஆளுநரும் அங்கே பதவிப் பிரமாணம் செய்தார்.

சுதந்திர இலங்கையின் முதலாவது பிரதம மந்திரியான சேனநாயக்க இலங்கை சுதந்திரம் பெற்றதன் நினைவாக இங்கே ஒரு நினைவுச் சின்னத்தை எழுப்பியாக வேண்டும் என்று தீர்மானித்து அப்பொறுப்பை போக்குவரத்து அமைச்சராக இருந்த ஜோன் கொத்தலாவலவிடம் ஒப்படைத்தார். ஆனால் அந்தக் காணி குதிரைப்பந்தய கழகத்துக்கு சொந்தமாக இருந்தது. அதில் ஒரு பகுதியைத் தான் விமானப்படையும் தற்காலிகமாக பயன்படுத்திவந்தது. இறுதியில் ஐந்து லட்சம் ரூபாவை செலுத்தி அக்காணியை அரசாங்கம் வாங்கியது.

இதனை அலங்காரபூர்வமாகவும், பண்பாட்டு கலையம்சம் கொண்டதாகவும் அமைக்கவேண்டும் என்று எட்டு பேர் கொண்ட கட்டுமானக் கலைஞர்களைக் கொண்ட ஒரு குழு உருவாக்கப்பட்டது. டீ.  என். வினே ஜோன்ஸ் அந்தக் குழுவின் தலைவராக இயங்கினார். எஃப். எச்.  பிலிமோரியா, ஷர்லி த அல்விஸ், ஒலிவர் வீரசிங்க, எச்.  ஜே. பிலிமோரியா, ஜே.சமரசேகர, எம்.  பி.மோரேனா ஆகியோர் அந்தக் குழுவில் செயற்ப்பட்டனர். அவர்கள் உத்தேச மாதிரி வரைபடத் திட்டங்களைக் கையளித்தனர். டீ.எஸ்.சேனநாயக்கவைக் கவர்ந்த அமைப்பு தான் கண்டி “மகுல் மடுவ”வை ஒத்த கலைத்துவமான அமைப்பு.

கண்டியின் கடைசி மன்னன் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கனின் சிம்மாசனம் அமைக்கப்பட்டிருக்கும் “மகுல் மண்டபய” என்கிற மண்டபத்தின் வடிவத்தை நினைவுபடுத்தும் கட்டிட அமைப்பு இது. ஆங்கிலேயர்கள் 1815இல் இலங்கையை தமது கட்டுபாட்டுக்குள் கொண்டுவரும் கண்டி ஒப்பந்தத்தை “மகுல் மண்டபய” வில் தான் செய்தார்கள்.

1949 ஆண்டு முதலாவது சுதந்திர தின நிகழ்வை இங்கு கொண்டாடிய போது தான் பிற்பகல் 4.30க்கு இந்த மண்டபத்துக்கான அடிக்கல்லும் நாட்டப்பட்டது. ஆரம்பத்தில் இது “டொரிங்டன் சதுக்கம்” என்கிற பெயர் கொண்டு தான் அழைக்கப்பட்டது. இதைப் பற்றி பதிவு செய்த பத்திரிகைகள் அப்படித்தான் குறிப்பிட்டுள்ளன. அழைப்பிதழிலும் அப்படித்தான் குறிப்பிடப்பட்டுள்ளது.


1949ஆம் ஆண்டு இலங்கையின் முதலாவது சுதந்திர தினத்தைக் கொண்டாடியது எப்படி என்பது பற்றி அடுத்த நாள் 05.02.1949 சிங்கள தினமின பத்திரிகை இப்படி எழுதியது.

“மாலை 4 மணிக்கு பிரதமர் வந்தடைந்ததும் தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டது... நாட்டின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து வந்த இளைஞர்கள் சிங்களத்திலும், அரபி மொழியிலும், ஆங்கிலத்திலும், தமிழிலும் தேசத்தின் செய்தியை வாசித்தார்கள். அதன் பின்னர் சுதந்திர சதுக்கத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. 133 வருட காலனித்துவத்தை நினைவுபடுத்தும் வகையில் 133 புறாக்கள் பறக்கவிடப்பட்டன. பின்னர் பிரதமர் டீ.எஸ்.சேனநாயக்கவின் உரையைத் தொடர்ந்து அணிவகுப்புகள் நிகழ்ந்தன. பிற்பகல் 5.15க்கு சிங்களத்தில் தேசிய கீதம் பாடி நிறைவு செய்யப்பட்டது.”

ஆனால் அந்த கட்டிடத்தை பிரதமர் சேனநாயக்க காண முதல் திடீர் என இறந்தார். ஆனால் அதன் பின்னர் 1956 ஆம் ஆண்டு பண்டாரநாயக்க அந்தப் பணியை பூர்த்தி செய்தார். 1956 ஆம் ஆண்டு புத்தரின் 2500 புத்தஜயந்தி விழா கோலாகலமாக அரசாங்கத்தில் கொண்டாடப்பட்டது. வெசாக் தினத்தன்று பண்டாரநாயக்கவின் பிரதான அந்த முக்கிய உரை இங்கு தான் நிகழ்த்தப்பட்டது. 2007 ஆம் ஆண்டு யூலை மாதம்  கிழக்கை கைப்பற்றி அரச கட்டுப்பாட்டுக்கு கீழ் கொண்டு வந்துவிட்டதை பெரிய விழாவாக மகிந்த கொண்டாடியதும் இங்கே தான்.

“மகுல்மடுவ”வை விட பிரமாண்டமாக  கருங்கற்களாலும் கொங்கிரீட்டாலும் பலமாக கட்டப்பட்டது. சுதந்திர மண்டபத்தின் தரைத் தளத்தின் பரப்பளவு மாத்திரம் 10,000 சதுர அடிகளைக் கொண்டது. அதுவும் சுவர்கள் இல்லாமல் சுற்றிவர திறந்த வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளது. பல பாரம்பரிய சிற்ப வேலைப்பாடுகளுடன் 30அடி உயரத்தைக் கொண்ட பல கருங்கற் தூண்கள் உள்ளே உள்ளன. வெளியில் சிங்கச் சிலைகளும் உள்ளன. அது 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த யாப்பஹுவ ஆட்சிக்காலத்து கலை நுட்பத்தைக் கொண்டவை. மிக உயரமான கொடிக்கம்பமும் அருகில் “தேசபிதா” டீ.எஸ்.சேனநாயக்கவின் பெரிய சிலையும் உள்ளதைக் காணலாம்.


இம்மண்டபத்துக்கு அருகிலேயே ஒரு பெரிய மைதானமும் கட்டப்பட்டது. மண்டப நிகழ்வுகள் பெரிய அளவில் நிகழ்கிற போது கலாசார பண்பாட்டு நிகழ்வுகளை நடத்துவதற்கு அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்கிற நோக்கத்தில் அன்று அது கட்டப்பட்டது. பிற்காலத்தில் அந்த மைதானம் விளையாட்டுத்துறை அமைச்சின் தேசிய ஓட்டப்பந்தய பயிற்சிக்கான மைதானமாக மாற்றப்பட்டது. ஆரம்பத்தில் மண்டபமும், மைதானமும் ஒன்றாகத் தான் இருந்தது. பிற்காலத்தில் தான் இடைநடுவில் பாதை போடப்பட்டதில் இரண்டும் தனியாக ஆகின. தற்போதுள்ள பூரணப்படுத்தபட்ட அமைப்பு 1957 இல் தான் பிரதமர் பண்டாரநாயக்கவால் திறக்கப்பட்டது. அந்த நிகழ்வுக்கு அன்றைய நிகழ்வில் சீனப் பிரதமர் சௌ என் லாய் ( Chou En-lai) கலந்து கொண்டு உரையாற்றினார். அவரின் உரையை மழையில் நனைத்தபடி பேராசிரியர் மலலசேகர மொழிபெயர்த்ததை இன்றும் பலர் நினைவுகூருவர்.

ஸ்ரீ ஜெயவர்த்தனபுர கோட்டேவில் புதிய பாராளுமன்றக் கட்டிடம் திறக்கப்படும் வரை இது தான் செனட் சபை, அரசாங்க சபை என்பவற்றின் சம்பிரதாயபூர்வமான நிகழ்வுகளை நடத்தும் மண்டபமாக திகழ்ந்தது.

ஆண்டுதோறும் இலங்கையின் சுதந்திர தின வைபவங்கள் பிரதானமாக மூன்று இடங்களில் கொண்டாடப்படும் வழக்கம் இருந்து வந்துள்ளது. பழைய பாராளுமன்றத்தின் அருகில் உள்ள காலிமுகத்திடல், சுதந்திர சதுக்கம், கண்டி தலதா மாளிகை பட்டிருப்பு. அதிக தடவைகள் சுதந்திர சதுக்கத்தில் நிகழ்ந்ததாகக் கொள்ளலாம்.

கலாசார திணைக்களம் தரும் இணையத்தள தகவலின் படி. பிரதான சுதந்திர மாளிகையானது பிரதமர் அமைச்சர்கள், மேற்சபை, கீழ்சபை ஆகியவற்றின் உறுப்பினர்கள் என 224 பேர் உள்ளே இருக்கக் கூடிய வகையிலும் திறந்த வெளியில் சுமார் 25,000 பேர் அமர்ந்திருந்து பார்க்கக் கூடியவகையிலும், சூழ ஒரு லட்சம் பேர் கூடியிருக்கக் கூடிய வகையிலும் இந்த சுதந்திர சதுக்கம் நிர்மாணிக்கப்பட்டது என்கிறது. உள்ளே மேற் சுவரில் இலங்கையின் முக்கிய வரலாற்று நிகழ்வுகளை வெளிப்படுத்தும் சித்திரங்கள் வரிசையாக இருப்பதை இன்றும் காணலாம். விஜயனின் வருகையிலிருந்து சுதந்திரம் வரையிலான ஓவியங்கள் அவை.

20 ஏப்ரல் 1983 ஆம் ஆண்டு ஜே.அரசாங்க அமைச்சரவை எடுத்த முடிவின் பிரகாரம் இது கலாசார அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டு இன்று நகர அபிவிருத்தி அதிகாரசபையின் பராமரிப்பில் அது இருக்கிறது. உல்லாசப் பிரயாணிகளை கவரும் கொழும்பின் முக்கிய தேசியச் சின்னங்களில் ஒன்றாக இதனைக் கூற முடியும்.

பின்னேரங்களில் இளைப்பாறிச் செல்லவும், அமைதியாக தியானம், உடல் அப்பியாசம் செய்வதற்கும் நாளாந்தம் பின்னேரங்களில் பலர் கூடிச் செல்வதைக் காணலாம். இலங்கையின் செல்வந்த பிரதேசமாகவும் பல முக்கிய சின்னங்கள், அடையாளங்கள், காரியாலயங்கள் அமைந்திருக்கிற கறுவாத் தோட்ட பகுதியில் (கொழும்பு 7இல்) அமைந்திருப்பது அதன் இன்னொரு சிறப்பு எனலாம்.

1988 ஆம் ஆண்டு விஜயகுமாரணதுங்க கொல்லப்பட்டவேளை அவரின் இறுதிச் சடங்கு இங்கே தான் நிகழ்ந்தது. அது தான் சுதந்திர சதுக்கத்தில் நிகழ்ந்த முதலாவது இறுதிச் சடங்கு. அதன்போது சந்திரிகா இடதுசாரித்தலைவர்களுடன் சேர்ந்து வெகுஜன அரசியலுக்கான சத்தியப்பிரமாணத்தையும் செய்துகொண்ட வரலாற்று நிகழ்வும் நடந்தது.

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக சத்தியப்பிரமாணம் இங்கே எடுத்துக் கொண்டார். ரணசிங்க பிரேமதாச, காமினி திசாநாயக்க, லக்ஷ்மன் கதிர்காமர், டபிள்யு.டீ.அமரதேவ, விஜயகுமாரதுங்க, லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ், கங்கொடவில சோம ஹிமி போன்றோரின் இறுதிச் சடங்கு நிகழ்வுகள் இங்கே நிகழ்த்தப்பட்டுள்ளன.

இம்மண்டபத்தின் கீழ் மண்டப உள் அறை ஒரு நூதனசாலையாக இயங்கிவருகிறது. வார நாட்களில் வேலை நேரத்தில் அதனை பார்வையிட முடியும்.

நன்றி - தினகரன் - 10.04.2022



கொட்டாஞ்சேனை கொட்டங்காய் தோட்டமா? ( கொழும்பின் கதை – 21) - என்.சரவணன்

இன்று கொழும்பின் பதினைந்து வலயங்களில் 13 வது வலயமாக கொட்டாஞ்சேனையும், கொச்சிக்கடையும் சேர்த்து அழைக்கப்படுகிறது. சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள், பறங்கியர் என பல்லின மக்கள் கலந்து வாழும் இந்தப் பகுதியில்; பரதவர், மலையாளிகள், கொழும்பு செட்டி போன்ற சமூகங்களும் குறிப்பிடத்தக்க செல்வாக்கையுடைய சமூகமாக வாழ்ந்து வருகின்றனர். கொழும்பில் தமிழர் செறிவாக வாழும் வாழிடங்களில் கொட்டாஞ்சேனை முக்கியமானது. தமிழ் தியேட்டர்கள், கோவில்கள், தமிழ் பாடசாலைகள், தமிழில் பெயரிடப்பட்ட கடைகள் போன்றவற்றை சான்றுகளாகக் கூறலாம்.

1856 The Ceylon Almanac and Annual Register for the Year of our lord, ஆண்டறிக்கையில் 49 வது பக்கத்தில் கொழும்பு நகரத்தில் இருந்த இடங்களின் விபரங்களையும், அங்கே இருந்த வீடுகளின் எண்ணிக்கையையும் பட்டியலிட்டிருக்கிறது. அதன் பிரகாரம் கொட்டாஞ்சேனையில் அன்று 253 வீடுகள் இருந்ததாக தெரிவிக்கிறது. அதேவேளை அன்றும் அதன் பெயர் கொட்டஹேன அல்ல. அதில் Cotanchina என்று தான் இருக்கிறது என்பதையும் இங்கே கவனிக்க வேண்டும். கொட்டாஞ்சேனையில் கொட்டாஞ்சினா மில்ஸ் (Cottanchina Mills) என்கிற பெயரில் ஒரு ஆலையும் john F.Baker, T.W.Hall ஆகியோரால் நடத்தப்பட்டிருப்பதை 1887 இல் வெளியான சிலோன் டிரெக்டரி குறிப்பிடுகிறது.

கொட்டாஞ்சேனையை இப்போது Kotahena என்று அழைத்தாலும்  சுமார் ஒன்றரை நூற்றாண்டுக்கு முன் கொட்டாஞ்சினா “Cottanchina” என்றே அரச பதிவுகளிலும் காணப்படுகின்றன.  1866 இல் வெளியான The Ceylon Directory ; Calender என்கிற நூலில் கொழும்பில் உள்ள பிரதேசங்களின் எல்லைகளைப் பற்றிய விபரங்களைக் காண முடிந்தது. அதில்

“கொட்டாஞ்சினாவின் மேற்கில் கடல் எல்லையில் உள்ளது; வடக்கில், கடல், களனி கங்கை, நதி; கிழக்கு மற்றும் தென்கிழக்கு, களனி ஆற்றின் மூலம், ஆற்றில் இருந்து ஏரிக்கு செல்லும் கால்வாய் வழியாக, வேந்தர்மெய்டன் போல்டரில் (Vandermeyden's Polder) உள்ள கால்வாயிலிருந்து புனித ஜோசப் தெருவுக்குச் செல்லும் வீதி வழியாக; தெற்கில், பார்பர் வீதி, ஆண்டர்சன் வீதி என்பவற்றை எல்லையாகக் கொண்டிருந்தது.” என்று குறிப்பிடுகிறது.

Twentieth century impressions of Ceylon நூலில் இருந்து

சிங்கள மொழியில் கொட்டாஞ்சேனையை “கொட்ட + ஹேன” என்பார்கள். அதாவது “கட்டையான மரங்கள்”  என்று பொருள் படலாம். அதேவேளை தமிழிலும் “கொட்டான் + சேனை” என்பதற்கு நேரடி தமிழ் வடிவம் அசல் அர்த்தத்தை தருகிறது. 1690களில் வரையப்பட்ட டச்சு வரைபடமான Kaart van het Kasteel De Stad en omstreken van Colomboகொழும்பு கொட்டாஞ்சேனை Coutenchene என என்று குறிப்பிடுகிறது. ஆங்கிலேயர் கால குறிப்புகளில் கொட்டான் சீனா (Cottan China) என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன.

அது மட்டுமன்றி டச்சு மொழியில் “Korteboam” என்றால் கட்டையான மரங்கள் என்று அர்த்தம். கொட்டாஞ்சேனையில் தற்போதைய இராமநாதன் வீதியின் முன்னைய பெயர் “Korteboam Street” என்பதையும் கருத்திற் கொள்க.

இந்தப் பிரதேசம் கொட்டாங்காய் மரத்துக்கு பிரபலமாக இருந்ததாலும், கொட்டாங்காய் உள்ளே இருந்து எடுக்கப்படும் கொட்டை உள்ளூர் “பாதாம் பருப்பு” போல பயன்படுத்தப்பட்டதாகவும் அதன் காரணமாக கொட்டாஞ்சேனை என்று பெயர் வந்திருக்கக் கூடுமென்றும் சில குறிப்புகள் கூறுகின்றன.  எனக்கு விபரம் தெரிந்த காலத்தில் கொட்டாஞ்சேனையின் பொன்ஜீன் வீதி சந்தியில் அப்படி கொட்டாங்காய் மரமொன்று இருந்ததைக் கண்டிருக்கிறேன். கொலேஜ் வீதியிலும், இன்னும் பல இடங்களிலும் சிறு வயதில் கொட்டங்காய் பறித்திருக்கிறோம். அவை அந்த மரங்களின் எஞ்சிய எச்சமா என்கிற சந்தேகமே எழுகிறது.

1868 இல் வெளியான Medical Times and Gazette இல் புனித லூசியாஸ் தேவாலயம் “கொட்டன் சீனா” (CottonChina) வில் இருப்பதாகக் குறிப்பிடுகிறது. 

கொட்டாஞ்சேனை சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் மிகவும் பரபரப்பான பிரதேசங்களில் ஒன்றாக இருந்தது. மேலும் மிகவும் பழமையான வரலாற்றையும் கொண்டது.

1618இல் வெளியான “Conquista temporal, e espiritual de Ceylão” என்கிற நூலில்  குவேரஸ் (Fernaõ de Queyroz) கொட்டாஞ்சேனையில் அன்று இருந்த கத்தோலிக்க தேவாலயங்களைப் பற்றியும், பிரபலம் பெற்றிருந்த கிறிஸ்தவப் பணிகளைப் பற்றியும் குறிப்பிடுகிறார். 

இயேசுநாதரின் 12 சீடர்களில் ஒருவரான புனித தோமஸ் இந்தியாவுக்கும், இலங்கைக்கும் வந்ததாக பிரபலமான கதையுண்டு. அவர் 2000 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கை வந்திருந்தபோது இந்தப் பகுதியில் பிரசங்கங்கள் நடத்தியதாக சில ஆய்வாளர்கள் நம்புகின்றனர். அந்த இடத்தில் தான் இன்றைய ஜிந்துபிட்டி புனித தோமஸ் தேவாலயம் இருப்பதாக பல நூல்களிலும் கூறப்படுகின்றன. புனித தோமஸ் பின்னர் சென்னை மயிலாப்பூரில் இறந்ததாகவும் அந்தக் கதை தொடர்கிறது. இதன் நம்பகத்தன்மைக்கப்பால் இந்த விபரம் பல நூல்களிலும் பதிவு பெற்றிருப்பதைக் குறிப்பிட்டாக வேண்டும். மேலும் இந்தப் பிரதேசம் அப்போது மீனவர்கள் வாழ்ந்த பிரதேசமாக இருந்திருக்க வாய்ப்புண்டு. போர்த்துக்கேயர் ஐநூறு வருடங்களுக்கு முன் வந்த போது இங்கே மிகப் பழமையான நெஸ்டோரியன் சிலுவையை (Nestorian Cross) கண்டெடுத்ததாக கூறப்படுகிறது.

1855 இல் வெளியான The Ceylon Almanac அறிக்கையில் அன்று கொழும்பில் இருந்த முக்கிய வீதிகளில் இருந்த வீடுகளின் எண்ணிக்கை பட்டியலிடப்பட்டுள்ளது. அதில் கொட்டாஞ்சேனையில் 253 வீடுகள் மட்டுமே இருந்ததாகக் குறிப்பிடுகிறது.

கொட்டாஞ்சேனை - தீபதுத்தமாறாமய விகாரை பல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விகாரை. பௌத்த மறுமலர்ச்சியின் தோற்றம் இந்த விகாரையிலிருந்து தான் தொடங்கியது. இலங்கையின் முதலாவது கலவரத்துக்கு காரணமான விகாரையும் இது தான். இலங்கையில் பௌத்த மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர்களில் முக்கியமானவர்களில் ஒருவரான கேர்னல் ஒல்கொட் முதலில் வந்தது குணானந்த தேரரை சந்திக்கத்தான். அது இங்கு தான் நிகழ்ந்தது. அநகாரிக தர்மபாலவை கவர்ந்த பல நிகழ்வுகள் இங்கு தான் நிகழ்ந்தன. இலங்கையின் பௌத்த கொடி உருவானதும் இங்கு தான். அந்த கொடி முதலில் ஏற்றப்பட்டதும் இங்கு தான். வெசாக் தினம் விடுமுறை தினமாக ஆக்குவதற்காக போராடியதும் இங்கிருந்து தான் அதனை முதலில் அறிவித்ததும் இங்கு தான். தாய்லாந்து இளவரசர் பௌத்த மத பிக்குவாக ஆனதும் இங்கு தான். இப்படி பல பௌத்த வரலாற்று சம்பவங்களுக்கு சொந்தம் இந்த விகாரை.

கொச்சிக்கடை

கொழும்பானது ஐந்தாம் நூற்றாண்டிலிருந்தே ஒரு துறைமுகமாக பலரால் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

1874 ஆம் ஆண்டு கொழும்புத் துறைமுகம் விரிவாக்கப்பட்டது. ஐம்பதுக்கும் மேற்பட்ட நீராவிக் கப்பல்கள் நங்கூரமிடும் அளவுக்கு இட வசதி பெருப்பிக்கப்பட்டது. கொழும்பின் அமைப்பையே மாற்றும் வல்லமையை துறைமுகம் பெற்றது. 1890 இல் கப்பல்கள் தரித்து நின்று பழுதுபார்த்து செல்லும் இடமாகவும் மாறியது. எனவே துறைமுகத் தொழிலுக்கு ஆளணியின் அவசியம் உணரப்பட்டது. துறைமுகத்துக்கு வெளியில் கோட்டையில் வட பகுதியில் துறைமுகத்தோடு அண்டிய பகுதியான கொச்சிக்கடையில் தொழிலாளர்களைக் குடியேற்றினார்கள். ஆங்கிலேயர் மேற்கொண்ட நகர்ப்புற தொழிலாளர் குடியேற்றங்களில் மிகப் பழமையான குடியேற்றமாக கொச்சிக்கடைக் குடியேற்றத்தைக் குறிப்பிடலாம். கொச்சிக்கடை என்கிற இடப்பெயர் ஆங்கிலேயர்களுக்கு முன்னரே வந்துவிட்டதை அறிவீர்கள்.

அந்த கோட்டையின் வடக்குப் பகுதியில் அமைந்திருந்த கொச்சிக்கடை பல தொழிலாளர்கள் குடியேற்றப்பட்டார்கள். இந்தக் குடியேற்றம் கொச்சிக்கடை, கொட்டாஞ்சேனை, ஜிந்துபிட்டி, ஆட்டுப்பட்டித் தெரு வரை நீண்டது. 

கொச்சிக்கடை குடியேற்றம் மட்டுமல்ல கொழும்புத் துறைமுகத்தின் அன்றைய திடீர் கட்டமைப்பால் தான் இலங்கையின் முதலாவது “இலங்கை வங்கி” (Bank of Ceylon) 1841 இல் உருவாக்கப்பட்டது. அதுமட்டுமன்றி கொழும்பு நகரின் மையமான கோட்டைப் பகுதி இலங்கையின் பொருளாதார மையமாக மாறியதும் துறைமுகத்தை மையமாக வைத்துத் தான்.

கொட்டாஞ்சேனை, கொச்சிக்கடைப் பகுதிகளில் நெடுங்காலமாக தமிழர்கள் செறிவாக வாழும் பகுதி. அதுபோல புறக்கோட்டைப் பகுதியில், நகை வியாபாரம், புடவை வியாபாரம், பலசரக்கு மொத்த விற்பனை, இரும்புகே கடைகள் உட்பட பெரிய கம்பனிகள் வரை தமிழர்களிடம் இருந்தது. 1983 கலவரத்தின் போது இதனால் தான் இந்தப் பகுதிகள் கொள்ளையர்களின் இலக்காக மாறியது. தமிழர்கள் அதிக சொத்திழப்பை எதிர்கொண்ட பிரதேசங்கள் இவை. ஆனால் இனவாதக் காடையர் கும்பல் இலங்கையிலேயே அடிவாங்கி பின்வாங்கி ஓடியதென்றால் அது கொச்சிக்கடையில் தான். கொச்சிக்கடையில் பாதிப்பு மிகவும் குறைவாகவே இருந்தது.

கொட்டாஞ்சேனை இலங்கையின் வரலாற்றில் முக்கிய பதிவுகளை வலுவாக பதித்த இடங்களில் ஒன்று. குறிப்பாக காலனித்துவ கால வரலாற்றுப் பதிவுகளைக் குறிப்பிடலாம். இத்தொடரில் வேறு பல இடங்களில் அவை பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

நன்றி - தினகரன் 03.04.2022



70களில் சபிக்கப்பட்ட சிறிமாவின் தன்னிறைவுப் பொருளாதார முயற்சி! - என்.சரவணன்

‘பருத்தித்துறையிலிருந்து தேவேந்திர முனை வரை விவசாய நிலங்களாக்குவதே எமது அரசாங்கத்தின் இலக்கு’

என்று சொன்னவர் சிறிமா. பிரதமர் சிறிமா பண்டாரநாயக்க 1974ஆம் ஆண்டு ஒக்ரோபரில் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த வேளை ஒரு புறம் அவருக்கு எதிரான பலத்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நிகழ்ந்தன. அதே வேளை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் திறப்புவிழாவுக்காக வந்திருந்த சிறிமாவின் பேச்சில் இருந்த தேசிய விவகாரங்கள் கவனிக்கத்தக்கவை.

இலங்கையின் வரலாற்றில் பொருளாதார தன்னிறைவுக்காக அதிகபட்ச முயற்சியைச் செய்த அரசாங்கமாக 1970ஆம் ஆண்டு ஆட்சியமைத்த சிறிமா பண்டாரநாயக்கவின் தலைமையிலான ஆட்சியைக் குறிப்படலாம். சிறிமாவின் சுதந்திரக்கட்சி, இடதுசாரிக்கட்சிகளின் கூட்டு முன்னணி என்பது 1960 ஆம் ஆண்டு சிறிமா முதற் தடவையாக ஆட்சியமைத்தபோதும் இருந்த அதே இடதுசாரிக் கூட்டு தான். அதுபோல 1960ஆம் ஆண்டு அரசாங்கத்தில் நிதி அமைச்சராக இருந்த லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவர் என்.எம்.பெரேரா தான் 1970 அரசாங்கத்திலும் நிதி அமைச்சராக இருந்தார்.

பொருளாதாரமே அனைத்தினதும் அடித்தளம் என்கிற அடிப்படையைக் கொண்டவை இடதுசாரிக் கட்சிகள். கியூபப் புரட்சி நடந்து முடிந்தம் சேகுவேரா தனக்கு நிதி அமைச்சைத் தாருங்கள் என்று கூறி அந்த கியூபப் புரட்சியின் வெற்றிக்கு அர்த்தம் சேர்க்கும் முகமாக ஏற்படுத்திய பொருளாதார மாற்றங்கள் அந்த நாட்டின் செழிப்புக்கும், தன்னிறைவுக்கும் வழிவகுத்ததை மறந்திருக்க மாட்டோம். 

இலங்கையிலும் ஆளும் கூட்டணியில் இடதுசாரிக் கட்சிகள் பொருளாதார மாற்றத்தைத் தான் பிரதான பொறுப்பாக ஆக்கிக்கொண்டார்கள். 1960, 1970 அரசாங்கங்களில் அப்படித்தான் என்.எம்.பெரேரா நிதி அமைச்சராக ஆனார். 1960 அரசாங்கத்தில் ஐந்து தடவைகள் நிதி அமைச்சர்கள் மாற்றப்பட்டனர். அந்த ஐவரில் டீ.பி.இலங்கரத்னவைத் தவிர மற்ற ஐவரும் இடதுசாரிப் பின்னணியைக் கொண்டவர்கள். இறுதியாகத் தான் என்.எம்பெரேரா நிதி அமைச்சராக ஆனார். அந்த ஆட்சி நிறைவுற சில மாதங்களே இருக்கும் நிலையில் தான் அவர் அப்பதவியை வகித்தார். ஆனால் 1970 ஆம் ஆண்டு அரசாங்கத்தின் போது பெரிய மாற்றங்களை செய்வதற்கான ஆதரவு சிறிமாவிடம் இருந்தும் அமைச்சரவையிடம் இருந்தும் கிடைத்தது. 

1970 அரசாங்கம் அமைக்கப்பட்டதன் பின்னர் 1972 இல் இலங்கை பிரித்தானியாவின் டொமினியன் தன்மையிலிருந்து முழுமையாக விடுவிக்கப்பட்டு குடியரசாக பிரகடனப்படுத்தப்பட்டது மட்டுமன்றி அது சோஷலிச ஜனநாயக குடியரசாக பெயர் மாற்றப்பட்டது. பிரித்தானியர் கால அரசியலமைப்பும் அகற்றப்பட்டு புதிய அரசியலமைப்பும் உருவாக்கப்பட்டது. ஜே.ஆர் ஜெயவர்தன 1978இல் மூன்றில் பெரும்பான்மையோடு அந்த அரசியலமைப்பை மாற்றியபோதும் ‘இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசு’ என்பதை மட்டும் மாற்ற முடியவில்லை என்றால் அதற்கு 1972இல் போடப்பட்ட அத்திவாரம் முக்கியமானது. அதுவே இன்றும் தொடர்கிறது.


1972 பொருளாதார சீர்திருத்தக் காலத்தில் உயர் தட்டு வர்க்கத்திலிருந்து சாமான்யர்கள் வரை இடைக்கால நெருக்கடிகளை அனுபவிப்பார்கள் என்பதை அரசும் அறிந்திருந்தது. மக்களுக்கும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால், நீண்ட கால பொருளாதார விளைவைத் தரப்போகும் அந்த சீர்திருத்தத்தை மக்களால் வரவேற்க முடியவில்லை. ‘தற்காலிக நெருக்கடிகளை’ அது தற்காலிகம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் திண்டாடினார்கள். பீதியுற்றார்கள். அதன் விளைவு அரசு கடும் மக்கள் எதிர்ப்பை எதிர்கொள்ள நேரிட்டது. முதலாளித்துவ சார்பு ஐக்கிய தேசியக் கட்சியும் இதனை நன்றாக பயன்படுத்திக்கொண்டு வரலாறு காணாத வெற்றியை தமதாக்கிக் கொண்டதுடன், வரலாறு காணாத தோல்வியை சுதந்திரக் கட்சிக்கும், இடதுசாரிக் கட்சிகளுக்கும் ஏற்படுத்தியது.

தேசிய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்காக தேர்ந்த இடதுசாரித் தலைவரான நிதி அமைச்சர் என்.எம். பெரேரா பல திட்டங்களை சிறிமாவின் அந்த ஆட்சி காலத்தில் கொண்டுவந்தார். பண வீக்கம் குறைந்தது. வெளிநாடுகளில் இருந்து அத்தியாவசியமான பல பொருட்கள் இறக்குமதி செய்வதுகூட தடை செய்யப்பட்டது.

அவசியமான மருந்துகள், எரிபொருள் போன்ற சில பொருட்களைத் தவிர ஏனைய அனைத்தின் மீதும் இறக்குமதிகள் நிறுத்தப்பட்டன. வருவாய் சமநிலையைப் பேணுவதற்காக சொத்துக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதேவேளை இலங்கையில் இருந்து ஏற்றுமதி அதிகரிக்கப்பட்டன.

இந்த காலப்பகுதியில் உணவுத் தட்டுப்பாட்டை கட்டுப்படுத்தி அனைவருக்கும் சமமாக கிடைக்கச் செய்வதற்காக கூட்டறவுச் சங்கங்களும், கூப்பன் முறையும் அறிமுகப்படுத்தப்பட்டது. குறிப்பாக உணவு, உடை போன்றவற்றுக்கு இந்தக் கூப்பன் முறை பயன்படுத்தப்பட்டது. சுதந்திரக் கல்வி, மருத்துவம் என்பவை இடையூறின்றி கிடைக்கச் செய்வதற்காக அவை தேசியமயமாக்கப்பட்டு விரிவுபடுத்தப்பட்டது.

தொழிற்சாலைகளை ஏற்படுத்தி விரிவுபடுத்துவதன் மூலம் தொழிற்சாலைகள் பல ஆரம்பிக்கப்பட்டன. கந்தளாய், செவனகல சீனித் தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்டன. காங்கேசன்துறையை விட புத்தளம், காலி ஆகிய இடங்களில் சீமெந்துச் தொழிற்சாலைகள் மேலதிகமாக ஆரம்பிக்கப்பட்டன. களனி ரயர் கூட்டுத்தாபனத்திலிருந்து இந்தியாவுக்கு ரயர்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. வாழைச்சேனை காகித தொழிற்சாலை தேசியமயமாக்கப்பட்டது. துள் டெக்ஸ், வே டெக்ஸ், டெக்ஸ் போன்ற நிறுவனங்கள் தொடங்கப்பட்டன.

அரச கூட்டுத்தாபனம் அமைக்கப்பட்டது. தனியார் தொழிற்துறைகள் பல அரசமயப்படுத்தப்பட்டன. உதாரணத்துக்கு 1970இல் கனியவள நிலக்கரி சுரங்கத் தொழில், 1977இல் பெருந்தோட்டங்கள் போன்றன இவ்வாறு அரசமயப்படுத்தப்பட்டன. மலையகத்தில் பல தோட்டங்கள் வெளிநாட்டவர்கள் வசம் இருந்தன. அவற்றை அரசு சுவீகரித்து மக்கள் மயப்படுத்தியது. பெருந்தோட்டங்களை நிர்வகிப்பதற்காக அரச பெருந்தோட்ட கூட்டுத்தானமும் அமைக்கப்பட்டது. 1973இல் இவ்வாறு பத்து கூட்டுத்தாபனங்கள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

வெளிநாட்டு நிறுவனங்களின் வசம் இருந்த தனியார் பாடசாலைகள், கல்லூரிகள் அத்தனையும் கூட அரசாங்கம் சுவீகரித்துக்கொண்டது. அப்பாடசாலைகள் அரச பாடசாலைகள் ஆகின.


1971ஆம் ஆண்டு கொடுவரப்பட்ட, நிறுவனங்களை கையகப்படுத்தும் சட்டத்துக்கு ஊடாக 1971-1976 காலப்பகுதிக்குள் 24 தனியார் நிறுவனங்களை அரசு சுவீகரித்துக்கொண்டது.

1974 மே மாதாமளவில் சிறு காணி வைத்து உற்பத்தியில் ஈடுபடுபவர்களுக்காக ‘தென்னை புனர்வாழ்வு நிவாரண முறை’ என்கிற ஒரு திட்டத்தை ஆரம்பித்து இருபது ஏக்கருக்கு குறைவான நிலத்தை வைத்து உற்பத்தி செய்யும் முனைஞர்களுக்கு உதவித் தொகை வழங்கி ஊக்குவித்தது. அதுபோல சிறுபோக செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கான குறைந்த வட்டிக் கடனையும் அறிமுகப்படுத்தியது.

இரத்தினக்கல் தொழிற்துறையை பலப்படுத்துவதற்காக அரச இரத்தினக்கல் கூட்டுத்தாபனம் ஆரம்பிக்கப்பட்டது.

டச்சு காலத்துப் பயிரான புகையிலை உற்பத்தியில் தங்கியிருந்த யாழ் விவசாயிகள் மிளகாய், வெங்காயம் முதலானவற்றை பயிரிட்டு வரலாற்றில் முதன் முறையாக இலாபமீட்டினர். யாழ்ப்பாண விவசாயிகளின் செழிப்பான, வளமான காலமாக இன்றும் குறிப்பிடுவதை நாம் கவனித்திருப்போம். இந்தியாவில் இருந்து இறக்குமதியான பம்பாய் வெங்காயம் மிளகாய் போன்றவை நிறுத்தபட்டிருந்தது அல்லது குறைக்க பட்டிருந்தது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி குறைந்ததன் மூலம் பணம் இலங்கையை விட்டுச் செல்வது குறைக்கப்பட்டது. உள் நாட்டுக்குள்கூட ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்துக்கு சில அத்தியாவசிய விவசாயப் பொருட்கள் சென்றடைவது தடுக்கப்பட்டது. உதாரணத்துக்கு வன்னி, மட்டகளப்பில் உற்பத்தியான அரிசி போன்றவை யாழ் குடாவிற்குள் செல்வதுகூட வரையறுக்கப்பட்டதால் அங்கேயே உற்பத்தி செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டனர். வேலையற்றிருந்த பட்டதாரிகள்கூட தமது பிரதேசங்களில் காடுமண்டிப்போயிருந்த நிலங்களில் விவசாயம் செய்ய ஆரம்பித்தார்கள்.

தமிழ் நாட்டிலிருந்து இலங்கை வந்து சேர்ந்து கொண்டிருந்த சினிமாக்கள், சஞ்சிகைகள், ஆடைகள்கூட இறக்குமதிகள் வரையறுக்கப்பட்டன. சிங்களவர்களுக்கு இது பாதிக்கவில்லை. அவர்கள் இந்தியாவை நம்பியிருக்கவில்லை. ஆனால் தமிழர்கள் அதுவரை இதில் தங்கியிருந்தார்கள். இதனால் ஈழத் தமிழர்கள் மத்தியில் சொந்தமாக பல சஞ்சிகைகள் தோன்றின, உள்நாட்டு நெசவு வளர்ந்தன. இது போலத்தான் தமிழில் சுதேசிய திரைப்படங்களை உருவாக்கும் வாய்ப்புகள் திறந்தன.

தமிழ் நாட்டிலிருந்து வெளியான கல்கண்டு, அம்புலிமாமா, ராணி போன்ற பல சஞ்சிகைகள் நிறுத்தப்பட்டதால் உள்நாட்டில் பல இலக்கிய சஞ்சிகைகள் வெளிவர வழிதிறந்தது. கொழும்பில் மெய்கண்டான் அச்சாக நிறுவனம் அம்புலிமாமா பாணியில் ‘நட்சத்திரமாமா’ என்கிற பெயரில் ஒரு சஞ்சிகையை வெளியிட்டதாக நினைவு. மல்லிகை ஜீவா இந்தக் காலத்தில் தான் தமது ‘மல்லிகைக்கு’ அதிக மவுசு இருந்ததாகக் கூறுவார்.

அதுபோல இந்த காலத்தில் இந்திய திரைப்படங்களுக்கு இருந்த தடை காரணமாக உள்நாட்டில் பல ஈழத்து திரைப்படங்கள் வெளிவரத் தொடங்கின. ஈழத்துத் திரைப்படங்களின் பொற்காலமாக இக்காலத்தைக் குறிப்பிடலாம். சுதேசிய திரையங்குகளில் ஈழத்துத் திரைப்படங்களுக்கான வாய்ப்பு அதிகரித்தது.

உபாலி விஜேவர்தன போன்ற சுதேசிய தொழிற்துறையாளர்கள் எழுச்சி பெற்றது சிறிமா காலத்தில் தான். யுனிக், கெண்டோஸ், மெஸ்டா பியட், டெல்டா போன்ற இலங்கை பிராண்டுகளை வெளிநாடுகளுக்கு கொண்டு போக காரணமாக இருந்தார்.

துவரம் பருப்பு, பாசிப்பயறு போன்றவை உள்ளூரிலேயே உற்பத்தி செய்யப்பட்டு தன்னிறைவை எட்டிக்கொண்டிருந்தன. தீக்குச்சியிலிருந்து மோட்டார் இயந்திரம் வரை இலங்கையில் உற்பத்தி செய்யும் நிலை மாறியது.

இலங்கையில் மகாவலித் திட்டத்தை ஆரம்பித்ததும் சிறிமா தான். அது நிகழ்ந்தது 1960ஆம் ஆண்டு அவர் ஆட்சிக்கு வந்தபோது. ஆனால் 1970 அரசாங்கத்தின் போதுதான் அதன் பூரண பலனை நாடு அனுபவித்தது. மகாவலித் திட்டம் மட்டும் உரிய நேரத்தில் ஆரம்பிக்கப்பட்டிருக்கவில்லை என்றால் இலங்கையின் விவசாயம் கண்டிருக்கக் கூடிய பாரதூரமான விளைவை எண்ணிப் பாருங்கள். விவசாயிகள் மட்டுமல்ல அதன் பின்னர் மின்சார உற்பத்திக்கும் மகாவலித் திட்டம் முக்கிய பங்காற்றியது. 

நீண்ட காலமாக இலங்கையிக்கு எண்ணையை இறக்குமதி செய்து மொத்த எரிபொருள் துறையை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டிருந்தவர்கள் மொபில் (MOBIL) கெல்டெக்ஸ் (CALTEX) ஷெல் (SHELL) எஸ்ஸோ  (ESSO) போன்ற பல்தேசிய நிறுவனங்கள் தான். இலங்கையின் பெட்ரோல் நிலையங்கள் இந்த நிறுவனங்களின் பெயர்களில் தான் இயங்கின.

ஒபெக் நிறுவனம் தோற்றம் பெறும்வரை உலக எண்ணெய் சந்தையை கையகப்படுத்தி வைத்திருந்தவர்கள் அமெரிக்காவும் இங்கிலாந்தும் தான். அவர்களிடம் தான் எண்ணெயின் ஏகபோகம் இருந்தது. கொல்வின் ஆர்.டி. சில்வா நிதி அமைச்சராக இருந்த போது எண்ணையை இனி சோவியத் யூனியன், எகிப்து ஆகிய நாடுகளில் இருந்து பெறுவதன் மூலம் இந்த ஏகபோகத்தையும், விலை அதிகரிப்பையும் கட்டுக்குள் கொண்டுவரலாம் என்று சிறிமாவிடம் முன்மொழிந்திருந்தார். உள்ளூரில் இருந்த எண்ணெய் இறக்குமதிக் கம்பனிகளை அழைத்து இனி சோவியத் யூனியன், எகிப்து என்பவற்றிடம் இருந்து கொள்வனவு செய்யும்படி கோரியதற்கு அந்த நிறுவனங்கள் ‘எமது கொள்கலன்களில்’ சிகப்பு எண்ணையை விநியோகிக்க முடியாது என்று மறுத்திருந்தனர். அப்படி செய்யாவிட்டால் அந்த நிறுவனங்களை அரசு சுவீகரித்துக்கொள்ளும் என்று சிறிமா எச்சரித்தது மட்டுமன்றி அதற்கான சட்ட ரீதியான ஒழுங்குகளையும் செய்து முடித்தார். சகல எண்ணெய் கம்பனிகளுக்கும் நட்டஈட்டுத் தொகையை வழங்கும்படி கட்டளை இட்டார்.

அதில் ஒரு அமெரிக்க நிறுவனம் கடுமையாக இந்த திட்டத்தை எதிர்த்து. அதுமட்டுமன்றி அமெரிக்காவும் இலங்கைக்கு வழங்கி வந்த உதவிகளை நிறுத்தப்போவதாக மிரட்டியது. அன்றைய அமெரிக்க தூதுவர் திருமதி வில்ஸ் நேரடியாக சிறிமாவுடன் இது தொடர்பான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார். அப்படி பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும் போதே, இலங்கைக்கான உதவிகளை நிறுத்தியதாக அமேரிக்கா அறிவித்தது. அமெரிக்காவுடன் இருந்த வர்த்தக ஒப்பந்தத்தையும் இரத்துச் செய்தது. இலங்கைக்கு வழங்கி வந்த புலமைப் பரிசில்களைக்கூட நிறுத்தியது அமெரிக்கா.

சோவியத், எகிப்து ஆகிய நாடுகளில் இருந்து சில காலம் எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டுக்கொண்டிருந்து. அதன் பின்னர் 1969 ஓகஸ்டில் ஈரான் தேசிய எண்ணெய் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் இலங்கையின் தேசிய பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (Ceypetco) ஆரம்பிக்கப்பட்டது.

ஆனால் இன்று, இலங்கையின் எண்ணெய் ஏகபோகம் இந்திய நிறுவனமான IOC நிறுவனத்திடம் பறிபோய் சில வருடங்கள் ஆகின்றன. இன்று முழுவதுமாக பறிபோகும் நிலைமை உருவாகி இருப்பதை பல பொருளியல் வல்லுனர்கள் எச்சரிக்கிறார்கள். எப்போதும் எண்ணெய், எரிசக்தி, வலு என்பன அரசின் கட்டுப்பாட்டில் இல்லை என்றால் ஒரு நாட்டின் ஸ்திரத்தன்மையையே நெருக்கடிக்கு உள்ளாக்கிவிட முடியும் என்கிற ஒரு விளக்கம் உண்டு.

சிறிமாவின் ஆட்சியில் 1964ஆம் ஆண்டு அவ்வாறான மொத்தம் 13 கம்பனிகளை நாட்டை விட்டுத் துரத்தினார் சிறிமா.

நில உச்ச வரம்புச் சட்டம் கொண்டு வரப்பட்டு அளவுக்கதிகமான நிலங்களைக் கொண்டிருந்தவர்களிடம் இருந்து நிலங்கள் அரசால் சுவீகரிக்கப்பட்டு, நிலமற்றவர்களுக்கு கொடுக்கப்பட்டன. உள்நாட்டு விவசாயிகள், வளம் கொழிக்க வளர்ந்தெழுந்தார்கள்

சிறிமா என்கிற இரும்புப் பெண்ணின் அரசாங்கத்திடம் இருந்த தூர நோக்கு அதன் பின்னர் வந்த எந்த அரசாங்கத்திடமும் இருந்ததில்லை என்று உறுதியாக கூறமுடியும். அதன் பின் வந்த அனைத்து தலைவர்களும் நாட்டை விற்றோ, அல்லது அடைவுவைத்தோ அவரவர் அரசாங்க காலத்தை அலங்காரமாக காட்டி, அவர்கள் வேண்டிய கடன்களை அடுத்த அரசாங்கத்திடம் சுமத்திவிட்டு ஓடுவதும், புதிய அரசாங்கம் மேலும் நாட்டை ‘ஏலம்’ போட்டு விற்றுவிட்டு மேலும் மேலும் புதிய கடன்களுடன் அடுத்த அரசாங்கத்திடம் சுமத்தி விட்டு கடப்பதுமாக தொடர்ந்ததன் விளைவு தான்... இன்றைய ‘இலங்கையின் திவால் நிலை’.

கடனைக் கட்ட கடன் வாங்குவது போய், கடனைக் கட்ட கந்துவட்டிக்கு கடன் வாங்கி நாசப்படுத்தும் அளவுக்கு இன்று கொண்டு போனவர்களின் கணக்கு என்னவாக இருந்திருக்கும் என்று எண்ணிப் பாருங்கள்.

பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் பல கறுப்புப் பணத்தை வெளிக்கொணர்வதற்காக, பழைய பணத்தாள்கள் செல்லுபடியற்றதென அறிவித்தார் ணினி அமைச்சர் என்.எம்.பெரேரா. அதேவேளை மக்களிடம் உள்ள பணத்தை பெற்றுக்கொண்டு புதிய பணத்தாள்களை பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. பணமதிப்பிழப்பு (Demonetization) நடவடிக்கையின் மூலம் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கள்ளப்பணம் அத்தனையும் செல்லுபடியற்றதாகின. 


கறுப்புப் பணத்தை வெளியே எடுக்கவும், இந்தப் பொருளாதார முறை குறித்து மக்களுக்கு போதிய விளக்கம் இருக்கவில்லை. நாட்டில் நிலவிய உணவுத் தட்டுப்பாடு, வரிசையில் நிற்றல், கூப்பன் முறை போன்ற கடும் வழிமுறைகளால் மக்களின் அதிருப்தியும், வெறுப்பும் அரசின் மீது திரும்பியது.

கிழங்கு, சீனிக் கிழங்கு, மரவள்ளிக் கிழங்கு என்பன அடிப்படை உணவாகின. இன்றும் அக்காலத்தை வெறுக்கும் பலரை நாம் காண முடியும்.

இன்றைய ராஜபக்ஸ சகோதரர்களின் ஆட்சியிலும் அதே நிலை உருவாகியிருக்கிறது. ஆனால் இவை இரண்டுக்கும் இடையில் தலைகீழ் வித்தியாசங்கள் உள்ளன. அன்று நாடு எவரிடமும் கையேந்தாது தன்னிறைவோடும், வளமான வருமானத்தோடும் வாழ்வதற்கான பொருளாதாராக கட்டமைப்பை ஏற்படுத்துவதற்கான குறிப்பிட்ட கால திட்டத்துக்காக கஷ்டங்களை பொறுத்துக் கொள்ள கோரப்பட்டது. ஆனால் இன்று, அடுத்தடுத்த சந்ததியினரின் எதிர்காலத்தையும் சேர்த்து விற்று, மொத்தமாக நாட்டை தாரைவார்த்துக்கொண்டே மக்களுக்கு கடும் நெருக்கடியை கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

இலங்கையை மீண்டும் சோஷலிச பொருளாதாரத்திலிருந்து மீட்டு முதலாளித்துவ சந்தை பொருளாதாரத்துக்குள் இழுத்து விடவேண்டும் என்று உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம், அமெரிக்க தலைமையிலான ஏகாதிபத்திய தரப்பு எல்லாமே 1977ஆம் ஆண்டு தேர்தலை உன்னிப்பாக கவனித்தது மட்டுமன்றி, இடதுசாரி கூட்டு அரசாங்கமான சிறிமா அரசாங்கத்தை எப்படியும் கவிழ்த்து தமது செல்லப்பிள்ளையான ஜே.ஆரை பதவியில் அமர்த்த முழு வேலையையும் செய்தன. அதன் விளைவு தான், 1977ஆம் ஆண்டு சிறிமா அரசாங்கத்தின் படு தோல்வியும் ஜே.ஆரின் வரலாறு காணாத வெற்றியையும். 

இத்தேர்தலில் ஐ.தே.க மொத்தம் 168 ஆசனங்களில் 140ஐ பெற்று 83 வீத அதி பெரும்பான்மையைப் பெற்றுக்கொண்டது. 147 தொகுதிகளில் போட்டியிட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வெறும் 8 ஆசனங்களை மட்டுமே பெற்று படுதோல்வியடைந்தது. எதிர்க்கட்சியாகும் தகுதியைக்கூட இழந்தது.

ஜே.ஆர். திறந்த பொருளாதாரக் கொள்கையை அறிமுகப்படுத்தி, அந்நிய முதலீடுகளை தாராளமாக அனுமதித்தார். உள்ளூர் வளங்களையும், உள்ளூர் உழைப்பையும் சுரண்டுவதற்கு தாராளமாக அனுமதித்தார். மீண்டும் விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் வேகமாக சரியத் தொடங்கின.

பல அரச நிறுவனங்களை மீண்டும் வெளிநாடுகளுக்கு விற்கும் பணிகள் அவரால்த்தான் தொடங்கப்பட்டன. தேசிய வளங்கள், சொத்துக்கள், உற்பத்திகள் எல்லாமே அரச கட்டுப்பாட்டிலிருந்து தளர்த்தி தனியார்களுக்கு விற்றுத் தீர்க்கும் திட்டம் ஜே.ஆரால் தான் மீண்டும் தொடங்கப்பட்டன.

திறந்த பொருளாதாரக் கொள்கை அறிமுகமாகி இந்த 45 வருட வரலாற்றில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கையின் ரூபா 4285% வீதத்தால் வீழ்ச்சியடைந்திருக்கிறது. அதன்படி ஜனவரி 1, 1977இல் அமெரிக்க டொலர் மாற்று வீதம் 7.27 இலங்கை ரூபாயாக இருந்தது. ஆனால் இப்போது 2022 மார்ச் மாதம் அது 300 ரூபாவைத் தாண்டியிருக்கிறது. அதாவது 1977இல் ஜே.ஆர். இலங்கையின் அரச தலைமையை ஏற்ற போது 1000 ரூபாவின் பெறுமதியானது, 2022 மார்ச் 26 திகதியன்று பெறுமதி 42,850 ரூபாவுக்கு சமம்.

சிறிமா ஒரு இரும்புப் பெண்ணாக உலக நாடுகளால் பார்க்கப்பட்டார். அதே போல, இந்த முயற்சிகளின் பெறுபேற்றை அனுபவிக்குமுன் ஆட்சி மாறியதால், திட்டங்கள் அனைத்தும் தவிடுபொடியாகின. மக்களால் வெறுக்கப்படும் சிறிமா ஆனார். படுதோல்வியை தழுவினார். ஆனால் அத்தோல்வியை இன்று மக்கள் அனுபவிக்கின்றனர்.

அன்று இன்னும் சில ஆண்டுகள் பொறுமை காத்திருந்தால், இலங்கை தன்னிறைவுக்கு உதாரணமான நாடாக உலகில் பேசப்பட்டிருக்கும். பாரிய ஸ்திரத்தன்மையான பொருளாதார மாற்றம் நிகழ்ந்திருக்க வாய்ப்புகள் நிறையவே இருந்தன.


 

இணைந்திருங்கள்


Followers

Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates