Headlines News :
முகப்பு » » மலையகத்திற்கு தேவை தனி மனித முன்னேற்றமல்ல சமூக விடுதலையே - விண்மணி

மலையகத்திற்கு தேவை தனி மனித முன்னேற்றமல்ல சமூக விடுதலையே - விண்மணி


எவ்வளவு மோசமான சமூகப் பகுதியினராக இருந்தாலும் மிகக் குறைந்த வீதத்தில் ஒரு குறிப்பிட்ட அளவானோர் கல்வி கற்று உயர் தொழில் பெற்று அல்லது வர்த்தகத்தில் ஈடுபட்டு நல்ல வாழ்க்கை வாழ்வதையும் செல்வந்தர்களாய் வாழ்வதையும் காண்கிறோம். இப்படி முன்னேறியவர்கள் பாராட்டப்பட வேண்டியவர்களாவார்கள். இவ்வாறு விதி விலக்காக சிலர் முன்னேறுவது இச்சமூக அமைப்பின் நியதியேயாகும்.

இவ்வாறு சிலர் முன்னேறியிருப்பதனால் ஒரு சமூகமே அபிவிருத்தி அடைந்து விட்டதாகக் கருதி விட முடியாது. இவ்வாறு முன்னேறிய சிலரும் கூட பல்வேறு காரணிகளினால் மீண்டும் தாம் இருந்த மோசமான நிலைக்கு இழுத்து விடப்படக்கூடிய ஆபத்தும் இந்த சமூக அமைப்பிலேயே அடங்கியுள்ளது.

தமது சமூகத்திற்குத் தலைமை தாங்கி வழி நடத்திச் செல்ல வேண்டிய பொறுப்பும் கடமையும் இவ்வாறு முன்னேறியவர்களுக்கே உண்டு. இதற்காக அவர்கள் தமது சமூகம் பின்னடைவு கண்டுள்ளதற்கான உண்மையான காரணங்களைப் புரிந்து கொண்டு அவற்றை நீக்குவதற்கான வேலைத்திட்டங்களுக்குத் தமது பங்களிப்பை வழங்க வேண்டும்.

ஆனால் இவ்வாறு முன்னேறியவர்களில் மிகப் பெரும்பாலானோர் தமது சமூகத்தின் உண்மையான பிரச்சினைகளைப் புரிந்து கொள்ளாது அவற்றை நீக்குவதற்கான வழி வகைகளை ஆராயாது விதிவிலக்காகத் தாம் முன்னேறியுள்ள தால் ஏனையவர்களும் இவ்வாறு முன்னேறுதல் சாத்தியமென்றும் அக்கறையும் ஆர்வமும் முயற்சியின்மையும் சோம்பலுமே ஏனையோர் முன்னேறாதிருப்பதற்கான காரணம் என்றும் மத்திய தர வர்க்கக் கருத்துக்களை வெளியிட்டு ஏனையோருக்கு அறிவுரை கூற முற்படுகின்றார்கள்.

மலையகத்தில் இன்று நடந்து கொண்டிருப்பது இதுவேதான். தனி மனித முன்னேற்றம் சமூக விடுதலைக்குக் காரண மாகாது என்கிற சமூக விஞ்ஞான உண் மையை இவர்கள் புரிந்து கொள்வதேயில்லை. அல்லது புரிந்து கொள்ள மறுக்கின்றார்கள். மலையக சமூகத்தை மோசமாக்கி வைத்திருக்கின்ற ஆதிக்க சக்திகளுக்கு இவர்கள் துணை போகின்றார்கள். விசுவாசமான ஊழியர்களாயிருக்கிறார்கள்.

ஒப்பீட்டளவில் ஏனைய சமூகங்களைப் போன்று போதுமான அளவில் மலையகத்தில் மனித வள அபிவிருத்தி ஏற்படாமைக்குக் காரணமே மலையக சமூகம் பின்னடைவு கண்ட ஒரு சமூகமாயிருப்பது தான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த பின்னடைவு கண்ட நிலையினை ஒரு சமூக மாற்றத்தினால் போக்க முடியுமே தவிர தனி மனித முன்னேற்றத்தினால் அல்ல. கால் நூற்றாண்டுக்கு முன்பு இந்த சமூகம் எப்படியிருந்தது? இன்று தனி மனிதர்கள் சிலர் முன்னேறியிருக்கின்றார்கள். சமூகத்தில் அடிப்படை மாற்றங்களேதும் ஏற்படவில்லை. சமூக மாற்றம் ஒன்று ஏற்படாவிட்டால் இன்னும் கால்நூற்றாண்டு காலத்திற்குப் பின்னும் இச் சமூகத்தின் நிலை இவ்வாறேதான் தொடரும். தனி மனிதர்கள் சிலர் முன்னேறியிருப்பார்கள் சமூகத்தில் அடிப்படை மாற்றங்களேதையும் காணக் கிடைக்காது.

தனி மனிதர்கள் முயன்று முன்னேறலாம் என்ற கிளிப்பிள்ளை பாடத்தை இச் சமூகத்தை நோக்கி இச்சமூகத்திலிருந்து வந்தவர்களே கற்றுக்கொடுக்க முயலும் போது ஒன்று மட்டும் தெளிவாகின்றது. அவர்கள் இச் சமூகத்தின் பிரச்சினைகளை ஒரு போதும் புரிந்து கொண்டவர்கள் அல்லர் என்பது தான் அது.

ஆகவே இந்த சமூகத்தின் அடிப்படைப் பிரச்சினைகள் என்னவென்று பார்ப்போம்.

அன்றைக்கும் இன்றைக்கும் இலங்கையில் ஒப்பீட்டளவில் மிகக் குறைவான வருவாய் பெறுவோர் பெருந்தோட்டத்துறைத் தொழிலாளர்களேயாவார்கள். தம்மை போஷித்துக் கொள்வதற்கும் பராமரித்துக் கொள்வதற்கும் போதுமான வருவாயை இவர்கள் ஒரு போதும் பெறுவதில்லை.

இதன் காரணமாக இவர்களிடையே போஷாக்கின்மை அதிகரித்துக் காணப்படுகின்றது. போஷாக்கின்மையினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளில் மிக அதிகளவானோர் காணப்படுவது பெருந்தோட்டத் துறையிலேயே என்பது சமீப கால புள்ளிவிபரங்களிலிருந்தும் தெரிய வந்துள்ளது.

இதனால் இவர்கள் ஆரோக்கியமான உடல் உள வளர்ச்சி உடையவர்களாய் இருப்பதில்லை. பல்வேறு உடற்குறைபாடுகள் உடையவர்களாகவும் அடிக்கடி நோயினால் பாதிக்கப்படுகிறவர்களாகவும் இருக்கின்றார்கள். போதியளவான மருத்துவ வசதிகள் இன்மையினாலும் பொருளாதார வசதியின்மையினாலும் முறையான சிகிச்சை பெற்றுக்கொள்வது இவர்களுக்கு சாத்தியமாவதில்லை.

போஷாக்கின்மை குழந்தைகளுக்குப் பார்வை குறைவு நரம்புத் தொகுதி சீர்கேடுகள்,மூளை வளர்ச்சி குறைவு, இன்னோரன்ன குறைபாடுகளை ஏற்படுத்துகின்றது. இதனால் ஏனைய சமூகப் பகுதியினரைச் சேர்ந்த குழந்தைகள் போல் இவர்களால் இயல்பாகக் கற்றல் செயற்பாடுகளில் ஈடுபட முடிவதில்லை. கல்வியில் பின்தங்கியவர்களாக இச் சமூகப் பகுதியினர் உள்ளமைக்கு இது பிரதான காரணமாகின்றது.

இந்தக் குழந்தைகளின் உண்மையான பிரச்சினைகளை உணர்ந்து மாற்றத்திற்காகத் திட்டமிடுவோர் யார்? ஒரு வகையில் ஏனைய சமூகப் பகுதியினரோடு இவர்களின் கல்வி நிலையை ஒப்பிட்டுப் பார்ப்பதே அபத்தமானது.

கல்வி கலை கலாசாரம் இலக்கியம் வர்த்தகம் ஆகிய இன்னோரன்ன துறைகளிலும் ஈடுபட்டு வளர்ச்சி காண முடியாது தமது உழைப்பையெல்லாம் தமது உணவுத் தேவைகளுக்காகவே செலவிட வேண்டிய நிலையிலுள்ள உடல் உள ஆரோக்கியம் குன்றிய நாளுக்கு நாள் கடன் சுமை ஏறி வருகின்ற சேமிப்புக்கு வாய்ப்பு வசதியற்ற ஒரு சமூகமாக இச் சமூகம் ஆக்கி வைக்கப்பட்டிருக்கின்றது.
உண்பதும் உடுப்பதும் உறங்குவதும் என மனித வாழ்வின் மகோன்னதங்கள் எதையும் காணாமலே இவர்கள் வாழ்வு கழிந்து போய் விடுகின்றது.

இந்த நிலையை மாற்றி இவர்கள் நல் வாழ்வு காண முறையான சமூக மாற்றத் திற்குத் திட்டமிட வேண்டுமே தவிர தனி மனிதர்களின் முன்னேற்றம் பயனேதும் கிடைத்துவிடப் போவதில்லை.
ஒரு கால கட்டத்தில் ஒப்பீட்டளவில் கல்வித் துறையில் பின் தங்கியிருந்த நமது சகோதர முஸ்லிம் சமூகம் இன்று முன்னேறிய சமூகமாக மாறியிருப்பதற் கான காரணம் அச்சமூகத்தினரிடையே ஏற்பட்ட தனி மனித முன்னேற்றமல்ல. அவர்கள் சமூக ரீதியாகச் சிந்தித்து செயற் பட்டதே என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.

நன்றி - வீரகேசரி
வீரகேசரி
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates