சுதந்திர இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட முதல் உத்தியோர்கப்பூர்வ சட்டம் குடியுரிமைச் சட்டம் தான். 1948 இலிருந்து தான் சட்டபூர்வமாக தேசிய இன ஒடுக்குமுறை ஆரம்பிக்கப்பட்டது.
1948 ஆம் ஆண்டு இலங்கைக்கு ஒரு புறம் சுதந்திரம் கொடுக்கப்பட்ட வேளை மறுபுறம் இந்திய வம்சாவளி மக்களிடம் இருந்த சுதந்திரங்கள் அனைத்தும் பறிக்கப்பட்டு நாடற்ற அனாதைகளாக ஆக்கப்பட்டார்கள். 1948 இல் குடியுரிமை பறிப்பும், அது போல வாக்குரிமை பறிப்பும் வேக வேகமாக மேற்கொள்ளப்பட்டது தற்செயல் அல்ல. அதற்கான முன் தயாரிப்புகள் என்ன, முன்கதைச் சுருக்கம் என்ன என்பதையும், நாடற்றவர்களாக ஆக்கப்பட்ட அந்தக் கொடூரம் நிகழ்ந்த விதத்தைப் பற்றியும், அதன் விளைவுகளைப் பற்றியும் பதிவு செய்யும் முயற்சியே இக்கட்டுரை.
மேலும் குடியுரிமை பறிப்பில் சம்பந்தப்பட்டவர்கள் யார்? என்ன நடந்தது என்பது என்பது பற்றி இன்று தொடரும் குழப்பகரமான தகவல்களைக் கொண்ட விவாதங்களுக்கு ஒரு முற்றுபுள்ளி வைக்கும் நோக்கில் இது ஆக்கப்பட்டது.
இந்திய தொழிலாளர்களுக்கு எதிரான வெறுப்புணர்ச்சிக்கு ஒரு நூற்றாண்டுக்கும் மேற்பட்ட வரலாறு உண்டு. அவர்களின் மீதான இனச்சுத்திகரிப்புக்கு பின்புலமாக அமைந்த கருத்துருவாக்கச் செயற்பாடு பல வடிவங்களில் வளர்ச்சியுற்று வந்திருக்கிறது. அதன் நீட்சியாகவே சிங்கள தேசியவாத தலைவர்கள் இதற்கான சந்தர்ப்பம் பார்த்திருந்தார்கள் என்று கருத முடிகிறது.
ஆரம்பம்
இந்தியாவிலிருந்து கொண்டுவரப்படும் தொழிலாளர்களைத் தொற்றுநோய்த் தடுப்பு முகாமில் சிறிது காலம் தடுத்து வைத்திருப்பது அன்றுவழமையாக இருந்தது. இதற்கான முழுச் செலவையும் அரசாங்கமே ஏற்று வந்தது. இச் செலவை அரசாங்கம் தொடர்ந்து பொறுப்பேற்க வேண்டுமா என்பது பற்றி ஆராய்ந்து சிபார்சு செய்வதற்காகக் குழுவொன்றை 1925 ஒக்ரோபர் 3ந் திகதி அன்றைய ஆளுநர் நியமித்தார். தொற்றுநோய்த் தடுப்பு முகாமை அமைப்பதற்கும் பேணுவதற்குமான செலவை அரசாங்கமும்; தொழிலாளர்களின் உணவுக்கான செலவை அவர்களை வேலைக்கு அமர்த்தவுள்ளவர்களும் ஏற்க வேண்டும் என்று அக்குழு சிபார்சு செய்தது. டீ. எஸ். சேனநாயக்க முதன் முதலில் சட்ட நிருபண சபைக்கு 1923ம்ஆண்டு மேல் மாகாணத்திலிருந்து தெரிவு செய்யப்பட்டிருந்தார். ஆளுநர் நியமித்திருந்த மேற்படி குழுவில் சேனநாயக்காவும் ஒரு உறுப்பினர். அவர் இந்தச் சிபார்சை ஏற்கவில்லை. முழுச் செலவையும் தொழிலாளரை வேலைக்கு அமர்த்தப் போகின்றவர்களே ஏற்க வேண்டும் என்று தனியாகச் சிபார்சு செய்தார். இந்தியாவிலிருந்து வருபவர்களுக்கு வழங்கப்படும் இது போன்ற சலுகைகள் காரணமாகவே அவர்கள் கூடுதலான எண்ணிக்கையில் வருகின்றார்கள் எனத் தனது தனியான சிபார்சு அறிக்கையில் டீ. எஸ். சேனநாயக்க குறிப்பிட்டிருந்தார்.
இந்திய வம்சாவளியினர் மீது டீ. எஸ். சேனநாயக்க கொண்டிருந்த வெறுப்பைப் பற்றி தனியாக பட்டியலிட்டு பதிவு செய்ய முடியும்.
1931 ஆம் ஆண்டு டொனமூர் ஆணைக்குழு சர்வசன வாக்குரிமை இலங்கை மக்கள் அனைவருக்கும் அறிமுகப்படுத்தப்பட்ட போது மலையக மக்களும் ஏக காலத்தில் அந்த வாக்குரிமையை பெற்றார்கள். 1931 இல் வகுப்பு வேறுபாடின்றி அனைவருக்கும் வழங்கிய போதிலும் டீ. எஸ். சேனநாயக்கவின் தலைமையிலான அமைச்சரவை இந்திய வம்சாவளி வாக்காளர்களின் எண்ணிக்கையை நிர்வாக நடவடிக்கை மூலம் குறைப்பதில் ஈடுபட்டது.
ஏ.ஈ.குணசிங்கவுடன் டீ.எஸ்.சேனநாயக்க |
இந்தியத் தொழிலாளர்கள் தொடர்பாக இந்தியாவுடனான முறுகல் நிலையை தொடர்ந்து பேணி வந்த சேனநாயக்கா அந்த விவாதத்தின் போது இவ்வாறு குறிப்பிட்டார்.
"இலங்கைக்கு வரும் தொழிலாளர்கள் ஏழைகள்.. மேலும் தோட்டக்காரர்களின் அடிமைகள். அவர்களுக்கு நாளொன்றுக்கு 20, 30 அலது 40 சதங்களே ஊதியமாக வழங்கப்படுகிறது. அதுமட்டுமன்றி குழந்தைகள், மனைவிகள் அனைவரும் இங்கு அடிமையாக இருக்க வேண்டும், இவர்கள் திரும்பி செல்வதற்கென பணத்தை சேமிக்க இயலாது...
"...தங்கள் மக்களுக்கு உரிமை கோரும் மகத்தான இந்தியா. பணக்கார முதலாளிகளின் தேவைக்காக துரதிஷ்டமான முறையில் மக்களை அனுப்பிவைத்த மகத்தான இந்தியா. இந்த மக்கள் வயதான மற்றும் வேலை செய்ய முடியாத வரை தீவை விட்டு வெளியேற முடியாது. அப்படியிருந்தும் இந்த மக்களுக்கு அவர்களின் உரிமைகளை வழங்க வேண்டும் என்று இந்தியா சொல்கிறது... இந்திய வணிகர்கள் இங்கு வந்து தங்கள் விருப்பத்துக்கு வியாபாரம் செய்ய வேண்டும் என்பதற்காகவே இந்த உழைப்பாளிகள் அடிமைகளாக்கப்பட்டனர். இதுவா ஒப்பந்தம் - அவர்கள் அதை ஒப்பந்தம் என்று அழைத்தால் – சுயமரியாதையுள்ள மக்களாக அவர்களை ஆக்க முடியுமா? இதை அவர்கள் கௌரவமானது என்கிறார்களா?
இந்தியாவில் மக்கள் தொகை அதிகரித்திருப்பதால், அவர்கள் தங்கள் நாட்டவர்களை அடிமைகளாக வேறு நாடுகளுக்கு அனுப்புகிறார்கள் என்றால் அதற்கு நாமும் சம்மதிக்க வேண்டுமா...?"
என்றார்
இந்த விவாதத்தின் போது ஜீ.ஜீ.பொன்னம்பலம் ஆற்றிய உரையானது அவரின் வாழ்க்கையில் ஆற்றிய சிறந்த உரை என ராஜன் ஹூல் குறிப்பிடுகிறார்.
இம் மசோதாக்களுக்கு 29 பேர் ஆதரவாகவும் 12 பேர் எதிராகவும் வாக்களித்தனர். கே.நடேச ஐயர் (ஹற்றன்), எஸ். வைத்திலிங்கம் (தலவாக்கலை), ஜீ.ஜீ. பொன்னம்பலம் (பருத்தித்துறை), ஆர்.ஸ்ரீ.பத்மநாதன் (மன்னார்), எஸ்.நடேசன் (காங்கேசன்துறை), எச்.ஆர். பிரீமன் (அநுராதபுரம்) ஆகிய தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களும் ஆறு நியமன உறுப்பினர்களுமே எதிர்த்து வாக்களித்தவர்கள்.
இரு மசோதாக்களும் இரண்டாவது வாசிப்புக்குப் பின் நிலையியற் குழுவுக்கு அனுப்பப்பட்டன. அங்கிருந்து சபைக்குத் திரும்பவில்லை.
இருபதாம் நூற்றாண்டின் முதல் அரை நூற்றாண்டு இலங்கை - இந்திய உறவில் செல்வாக்கு செலுத்தும் தொடர் காரணியாக இந்திய வம்சாவளியினரின் பிரச்சினைகள் தான் இருந்தன என்பதை நாம் விளங்கிக் கொள்தல் அவசியம்.
மேற்படி விவகாரம் தொடர்பாக இந்தியாவில் மேல் மட்டத்தில் கடும் உரையாடல்கள் நிகழ்ந்திருப்பதை அவதானிக்க முடிகிறது. அன்றைய இந்திய வெளிவிவகாரச் செயலாளர் போஸ்மன் (G.S.Bosman) 1941 செப்டம்பரில் பர்மா, மலேசியா, இலங்கை போன்ற நாடுகளுக்கு விஜயம் செய்துவிட்டு நவம்பர் 22ஆம் திகதி சமர்ப்பித்த அறிக்கை மிகவும் முக்கியமானது. பல பக்கங்களைக் கொண்ட விரிவான அறிக்கையும் அது தொடர்பான கடிதப் பரிமாறலையும் “The council of State Debates Volume II, 1941” என்கிற அறிக்கையில் காணக் கிடைக்கிறது.
இலங்கைக்கு அவர்களின் குழு கொழும்பில் 1941ஆம் ஆண்டு செப்டம்பர் 4 முதல் செப்டம்பர் 21 வரை 17 நாட்கள் தங்கியிருந்து பதினைந்து சந்திப்புகளை மேற்கொண்டுள்ளனர். அரசாங்க தரப்பினரை மட்டுமன்றி இந்திய மக்களின் பிரதிநிதிகளையும் சந்தித்து உரையாடியதாக அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏன் இந்த பீதி
இந்திய வம்சாவளி மக்களை அநாதரவான நிலைக்குத் தள்ள அவர்களுக்கு இருந்த காரணங்கள் இவை தான்.
இந்தியத் தொழிலாளர்களின் பெருக்கம் பற்றி இனவாதிகள் கொண்டிருந்த பயத்தின் காரணமாக அரசியல் அதிகாரத்தை நோக்கி இந்திய வம்சாவளி மக்களுக்கு எதிரான அழுத்தம் பிரயோகிக்கப்பட்டது.
இடதுசாரி இயக்கங்களின் தளமாக மலையகம் ஆகியிருந்தது. இந்தியவம்சாவளி தொழிலாளர்கள் இடது சாரி இயக்கங்களின் தொழிற்சங்க நடவடிக்கைகளால் நம்பிக்கை கொண்டிருந்தார்கள். அரசாங்க சபையில் இடதுசாரிகள் இதனால் பல பிரதிநிதிகளைக் கொண்டிருந்தார்கள். இடதுசாரிகள் பிரதான எதிர்க்கட்சியாக ஆகியிருந்தார்கள். இலங்கையில் பாராளுமன்றம் “வலதும் – இடதும்” என்று வரலாற்றில் அடையாளம் காணப்பட்ட தருணம் அது. அதுபோல் இந்திய வம்சாவழித் தமிழர்களின் வாக்காளார்களின் எண்ணிக்கை வருடாந்தம் அதிகரித்து வந்தமையானது சிங்களத் தலைவர்களுக்கு மேலும் பீதியைக் கிளப்பியது. 1928 இல் வாக்காளர்களாகப் பதிவு செய்யப்பட்ட இந்தியர்களின் எண்ணிக்கை 100,000 ஆக உயர்ந்தது, 1936 இல் அது 145,000 ஆக ஆனது. 1938 இல் அதுவே 170,000 ஆக உயர்ந்தது. அடுத்த ஆண்டே 1939 இல் சுமார் 250,000 வாக்காளர்கள் மதிப்பிடப்பட்டிருந்தார்கள். பாராளுமன்றத்தில் மொத்த 95 உறுப்பினர்களில் 20 உறுப்பினர்கள் இடதுசாரிக் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்கள்.
மலையகப் பிரதேசங்கள்` இடதுசாரிகளின் களங்களாக அமைந்ததில் ஆச்சரிமில்லை அதுவரை மலையக வாக்குகளால் பெரும்பலனை அடைந்தவர்கள் இடதுசாரிகளே. 1931, 1936, 1941, 1947 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் மலையக வாக்குகளால் இடதுசாரி இயக்கங்களுக்கு பிரதிநிதிகள் தெரிவாகினர். இடதுசாரிகளின் தொழிற்சங்கங்கள் வலுவாக மலையகத்தில் தான் இயங்கின. அவர்களின் தொழிற்சங்க களமாக மட்டுமல்ல அரசியல் களமாகவும் மலையகம் தான் இருந்தது. மலையகத் தொழிலாள வர்க்கத்துடன் பணியாற்றித்தான் தம்மை உருவாக்கி, பலப்படுத்திக்கொண்டார்கள். பிரஜாவுரிமைச் சட்டம் கொண்டுவரப்பட்டபோது அதனை இடதுசாரிகள் எதிர்த்துக் குரல் கொடுத்தார்கள் என்பது உண்மை தான் ஆனால் அவர்கள் செயலில் இறங்கவில்லை. பாராளுமன்ற உரைகளுடன் தம்மைச் சுருக்கிக் கொண்டனர். அவர்கள் பாராளுமன்ற வரம்புக்குள் கூட போராடவில்லை. பிரஜாவுரிமை பறிக்கப்பட்டதன் அரசியல் நட்டத்தை உண்மையில் அவர்கள் தான் அனுபவித்தார்கள். அவர்கள் ஏற்கனவே மலையகத்தில் பெற்ற தேர்தல் வெற்றி அதன் பிறகு அவர்களால் எட்டமுடியாது போனது. வாக்குரிமை இழப்பு அவர்களைத் தான் நேரடியாகத் தாக்கியது.
எதிர்காலத்தில் இடதுசாரித் தலைமையில் ஒரு கூட்டரசாங்கம் ஆட்சியமைக்கும் சாத்தியங்கள் கூட புலப்பட்ட காலம். அப்படி ஒரு இடதுசாரி கூட்டரசாங்கம் அமைக்கப்படுவதாயின் அதில் அங்கம் வகிக்கக் கூடிய நட்பு சக்திகளாக அவர்களுக்கு மலையக மக்களின் தரப்பே இருந்தது என்றால் அது மிகையில்லை. அப்பேர்பட்ட ‘மலையகத் தொழிலாளர் வர்க்கப்’ பிரிவினரின் பலத்தை நிரந்தரமாக இல்லாது செய்துவிட்டால் நீண்ட காலத்துக்கு ஆட்சிசெலுத்தும் வல்லமையை இடதுசாரிகள் இழந்துவிடும். ஐ.தே.க வெற்றிபெற்றுவிட முடியும் என்பது டீ.எஸ்.சேனநாயக்கவின் எண்ணமாக இருந்தது இயல்பே. குடியுரிமை பறிக்கப்பட்டு மூன்றாண்டுகளில் நடத்தப்பட்ட 1952 தேர்தலில் சேனநாயக்கவின் அந்தக் கணிப்பு பலித்ததை காணலாம்.
7 இலிருந்து 2 ஆக குறைந்த பிரதிநிதித்துவம்
1938இல் தோட்டத் தொழிலாளர்களின் வாக்குரிமை மறுப்பு ஒரு சட்டமாக வந்தது. இதனால் 1939 ஆம் ஆண்டு 2,25,000 ஆக இருந்த இந்திய வாக்காளர்களின் தொகை 1943இல் 1,68,000 ஆக குறைந்தது. இலங்கையின் அரசுத் துறை ஏனைய துறையில் பணியாற்றியவர் 1936இல் 36 சதமாக இருந்தது. இது 1939இல் 19 சதமாகவும், 1941இல் 12 சதமாகவும் படிப்படியாக குறைக்கப்பட்டது.
1947 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் 225,000 இந்திய வம்சாவழித் தமிழர்கள் வாக்காளர்களாகப் பதிவு செய்யப்பட்டிருந்தனர். மலையகத்திலிருந்து வென்ற எட்டுப் பேரும் மொத்தமாக பெற்ற வாக்குகள் 78,817 வாக்குகள் தான். இந்திய வம்சாவளியினரின் மூன்றில் இரண்டு 146,183 வாக்குகளும் இடதுசாரிகளுக்கு தான் அளிக்கப்பட்டது.
1952 மே 24, 26, 28, 30ஆம் திகதிகளில் இரண்டாவது பாராளுமன்றத்துக்கான தேர்தல் இடம்பெற்றது. 1947 தேர்தலில் மலையகத்தின் தமிழ் பிரதிநிதிகளாக 7 பேர் அங்கம் வகித்தனர். ஆனால், 10 லட்சம் தமிழர்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டதால் 1952 -ம் ஆண்டு தேர்தலில் போட்டியிடுவதற்கும்,வாக்களிப்பதற்குமான உரிமையை இழந்தததனால் இருவரை மட்டுமே அனுப்பமுடிந்தது. இத்தேர்தலில் நுவரெலியா தேர்தல் தொகுதியில் இரத்தினமும் (842 வாக்குகள்), அப்புத்தலையில் கே.சிவசாமி (94 வாக்குகள்) ஆகிய இரு இந்தியத் தமிழர்கள் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டு தோல்வி அடைந்தனர். எஸ். வைத்திலிங்கம் நியமன உறுப்பினராகத் தெரிவானார்.
மலையக மக்களை அரசியல் ரீதியாக பழிவாங்கி இத்தேர்தலின் மூலம் முடக்கினர். அவர்களை அநாதரவான நிலைக்குத் தள்ளியது சிங்கள ஆளும் வர்க்கம். இலங்கையின் பொருளாதாரத்தின் பிரதான முதுகெலும்பாக பெருந்தோட்டம் இருந்தது. அதை தாங்கி, சுமந்து, பேணி தொடர் வருமானத்தை ஈட்டித் தந்த அந்தத தொழிலாளர்களின் பிரதிநிதித்துவம் இல்லாமல் செய்யப்பட்டதால் அம்மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பற்றியோ, அரசியல் அபிலாசைகள் பற்றியோ பிரநிதிநிதித்துவ சபையில் குரலெழுப்பும் வாய்ப்பற்றவர்களாக ஆக்கப்பட்டனர்.
ஒரு புறம் மலையக மக்களுக்கு ஐந்து பிரதிநிதிகள் இல்லாது போனது. அதே வேலை ஐ.தே.கவுக்கு ஐந்து ஆசனங்கள் அதிகரித்தன. அதாவது 47 இலிருந்து 52 ஆக உயர்ந்தது. சுதந்திர இலங்கையின் முதலாவது எதிர்க்கட்சித் தலைமையை வகிக்கும் வாய்ப்பை இலங்கையின் இடதுசாரித் தலைமைகளுக்கு இருந்தது. ஆனால் இடதுசாரிகள் எதிர்க்கட்சித் தலைமையை ஏற்க உடன்படவில்லை. முதலாளித்துவ அரசாங்கத்தில் பணியாற்ற மாட்டோம் எனவும் அதற்கு விளக்கமளித்தனர். ஆயினும் ஒரு முற்போக்கான மாற்று அரசாங்கத்தை அமைப்பவர்களுக்கு உதவி செய்யத் தாம் தயாராக இருப்பதாக அறிவித்திருந்தனர். அதன் பின்னர் 1950 யூன் மாதம் கலாநிதி என்.எம்.பெரேரா எதிர்க்கட்சித் தலைவராக தெரிவானார்.
அதுபோல மலையக மக்களுக்கான பிரதிநிதிகளும் கணிசமான அளவு பாராளுமன்றத்தில் இடம் பிடித்திருந்தார்கள். அவர்கள் வலதுசாரி தலைவர்களை சார்ந்திருப்பதை விட இடதுசாரிகளுக்கே நெருக்கமானவர்களாக இருந்தார்கள். இந்த கூட்டு ஐ.தே.க உள்ளிட்ட வலதுசாரி தேசியவாத சக்திகளுக்கு சவாலானதாகவே இருந்தது. வளர்ந்து வந்த சிங்கள தேசியவாத சக்திகளால் பெருந்தோட்டப் பகுதிகளில் செல்வாக்கு செலுத்த முடியவில்லை. அவர்கள் தேர்தல்களும் வெற்றி பெற முடியவில்லை.
மத்திய மலைநாட்டுக் காடுகளை வளமாகவும், இலங்கையின் பொருளாதாரத்துக்கான அடிப்படைகளும் மலையக மக்களால் ஆக்கப்பட்டுவிட்டது. இனி புதிதாக அதனை வளப்படுத்தத் தேவையில்லை. இனி வளப்படுத்தியவற்றை ஆக்கிரமித்து, அவர்களை விரட்டிவிட்டு அந்த இடத்துக்கு சிங்களவர்களை நிரப்புவது தான் ஒரே தேவை.
1946 ஆம் ஆண்டு மலையகத்தில் 400 ஏக்கர் காணியை இனவாதிகள் பலாத்காரமாக பறிக்க எடுத்த முயற்சியின் விளைவாக நேவ்ஸ்மியர் (KINAVESMIRE) போராட்டம் ஆரம்பமானது. அது இந்தியாவில் இருந்து நேரு தலையிடுமளவுக்கு பெரிதானது. இங்கிலாந்தின் கோமறைக் கழகம் (Privy council) இறுதியில் மலையகத் தொழிலாளர்களுக்கு சாதகமாக தீர்ப்பளித்திருந்தது. 01.07.1947 அன்று அரச சபையில் நேவ்ஸ்மியர் சிக்கல் குறித்து உரையாற்றிய சேனநாயக்க “இது பத்தாண்டுகளாக இழுபறிபட்டுவரும் பிரச்சினை” என்றார். இந்தியாவில் இருந்து வந்து குடியேறியவர்கள் அந்த நிலத்திற்கு உரித்துடையவர்கள் அல்லர் என்றும் அவர்களுக்கு உள்ளூர் கிராம சபைகளின் உறுப்பினர்களை தெரிவு செய்வதற்குக் கூட வாக்குரிமை அற்றவர்கள்” என்றும் வாதிட்டார். இறுதில் இதே சேனநாயக்க தான் பிரதமரானதும் முதலில் ஒட்டுமொத்த மக்களின் குடியுரிமையை பறித்தெடுக்கின்ற கைங்கரியத்தை செய்து முடித்தார்.
பிரித்தானிய குடியுரிமைச் சட்டம்
பிரித்தானியர் சுதந்திரம் வழங்குவதற்கான தீர்மானத்தை எட்டியவேளை அதற்கான பல தரப்பட்ட முன்னேற்பாடுகள் நிகழ்ந்தன. நாட்டின் நிர்வாக, சட்ட முகாமைத்துவ விடயங்களிலும் அவர்கள் முன்னேற்பாடான மாற்றங்களைக் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டார்கள். அரசியலமைப்பு சீர்திருத்தம் அதில் முக்கியமானது. அதுபோல அடிப்படைச் சட்டங்களிலும் மாற்றங்களைக் கொண்டு வந்தார்கள். பிரித்தானியாவிடமிருந்து இலங்கையை பூரணமாக விடுவிக்கத் தயாராக இருக்கவில்லை. டொமினியன் அந்தஸ்துள்ள ஒரு நாடாகவே பேணுவதற்கான ஏற்பாடு தான் அது.
காலனித்துவ காலத்தில் இலங்கையர்கள் அனைவரும் பிரித்தானிய முடிக்குரிய பிரஜைகள் தான். பிரித்தானிய முடிக்கு கீழ் இருந்த கனடா 1946 இல் தனியான கனேடிய குடியுரிமையை அறிமுகப்படுத்தியது. 1947 ஆம் ஆண்டு பொதுநலவாய மாநாட்டு முடிவின் பிரகாரம் பிரித்தானிய முடியின் கீழ் இருந்த அவுஸ்திரேலியா, கனடா, இலங்கை, இந்தியா நியூஃபவுண்ட்லாந்து, நியூசீலண்ட், பாகிஸ்தான், தெற்கு ரொடீசியா (Southern Rhodesia), தென்னாபிரிக்க யூனியன் என்பவற்றுக்கு சுயாட்சி டொமினியன் அந்தஸ்தை வழங்க தீர்மானித்தது.
1948 ஆம் ஆண்டு பிரித்தானிய குடியுரிமைச் சட்டம் (British Nationality Act of 1948) பிரித்தானியாவில் கொண்டுவரப்பட்டது. பிரித்தானியா உள்ளிட்ட அதன் காலனித்துவ நாடுகளுக்கும் அமுலாகும் வகையில் அச்சட்டம் கொண்டுவரப்பட்டது. 1947 -1951 க்கு இடைப்பட்ட காலப்பகுதிக்குள் மேற்படி நாடுகள் தமது நாடுகளில் குடியுரிமைச் சட்டங்களை அமுல்படுத்தின.
- ஆஸ்திரேலியா - 26 ஜனவரி 1949
- கனடா - 1 ஜனவரி 1947
- இலங்கை - 1 ஜனவரி 1949
- இந்தியா - 26 ஜனவரி 1950
- நியூஃபவுண்ட்லாந்து - 31 மார்ச் 1949
- நியூசிலாந்து - 1 ஜனவரி 1949
- பாகிஸ்தான் - 13 ஏப்ரல் 1951
- தென்னாப்பிரிக்கா - 2 செப்டம்பர் 1949
- தெற்கு ரொடீசியா - 1 ஜனவரி 1950
- இங்கிலாந்து - 1 ஜனவரி 1949
மேற்படி காலனித்துவ நாடுகளில் இந்த குடியுரிமைச் சட்டத்தின் படி பிறப்பால் ஒருவர் குடியுரிமை பெற முடியும் என்கிற சட்ட விதி அறிமுகப்படுத்தபட்டாலும் 5(1)(d) விதியின் பிரகாரம் அது மட்டுபடுத்தப்பட்டது. பிறப்பால் குடியுரிமையாதல் என்பது இலங்கைக்கு மாத்திரம் விதிவிலக்கானது. அது வேறெதற்காகவும் இல்லை, இந்திய வம்சாவளியினரை இலக்காக வைத்து மேற்கொள்ளப்பட்ட அரசியல் நெருக்கடிகளின் விளைவே.
வேறெந்த நாட்டிலும் இல்லாத கடுமையான பிரஜாவுரிமைச் சட்டம் இலங்கையில் கொண்டுவரப்பட்டது. சில நாடுகளில் அந்நாடுகளில் பிறந்தவர்களுக்கு கிடைத்து விடுகிறது. சில நாடுகளில் குறிப்பிட்ட சில காலம் வாழ்ந்தாலே கிடைத்துவிடுகிறது. சில நாடுகளில் தாம் குடியேறிய நாட்டின் சட்டதிட்டங்களுக்கு கட்டுப்பட்டு வாழ்வதாக ஒப்புதல் அளித்துவிட்டாலே கிடைத்துவிடுகிறது. ஆனால் இரண்டு தலைமுறைகளுக்கும் மேலாக வாழ்ந்து, எப்போதோ இந்தியாவுடன் தொடர்பிழந்துபோய்விட்ட லட்ச்சக்கணக்கான மக்களுக்கு, அதுவும் ஏற்கெனவே இதே நாட்டில் பிரஜாவுரிமை அனுபவித்தவர்களிடம் இருந்து அந்த உரிமை வலுக்கட்டாயமாகப் பறிக்கப்பட்டது.
ஒருவர் தன்னை இலங்கைப் பிரஜை என்பதை நிரூபிக்க தனது தந்தை அல்லது தந்தைவழிப் பாட்டன் இலங்கையில் பிறந்தவரென்பதை நிரூபித்தாக வேண்டும். அவர் இலங்கைக்கு வெளியில் பிறந்திருந்தால் தந்தையும், தந்தையின் தந்தையும், முப்பாட்டனும் இலங்கையில் பிறந்ததற்கான சான்றுகளை சமர்ப்பித்தாக வேண்டும். இந்திய வம்சாவளியினர் பலர் அப்போது பிறப்புப் பதிவை மேற்கொள்ளும் வழக்கத்தைக் கொண்டிருக்கவில்லை. ஏன் இலங்கையில் கூட 1895இலிருந்து தான் பரப்பைப் பதிவு செய்வது கட்டாயமாக ஆக்கப்பட்டது. அதுவரை பிறப்புப் பதிவு அந்தளவு முக்கியமாக கருதப்பட்டதில்லை.
இந்த நிலையில் இலங்கை உள்ளிட்ட நாடுகள் சுதந்திரமடையும் வாய்ப்புகள் நெருங்கிக்கொண்டிருந்தன. எதிர்கால டொமினியன் இலங்கையின் பிரஜைகள் யார் என்பதை வரையறுக்கும் தேவை பிரித்தானியருக்கு அவசியப்பட்டது. அது போல இலங்கையின் சுதேசிய தலைவர்களும் அப்படி பிரஜைகளை வரைவிலக்கணப்படுத்தும் போது இந்திய வம்சாவளியினரை இலங்கையில் இருந்து விரட்டியடிக்கும் வேலையையும் செய்யத் துணிந்தார்கள். இதன் விளைவு தான் பிரஜாவுரிமைச் சட்டம்.
குடியுரிமைச் சட்டத்தின் உள்ளடக்கம்
20 ஓகஸ்ட் 1948ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பிரஜாவுரிமைச் சட்டம், 15 நவம்பர் 1948இல் இது சட்டமாக அமுலுக்கு வந்தது.
இதன்படி வம்சாவழி சட்டம், பதிவு சட்டம் என 2 முறையை வைத்தனர். வம்சாவழியாக பல நூற்றாண்டுகளாக இங்கேயே உள்ளோம் என்பதை தமிழர், சோனகர்கள் ஆதாரங்களுடன் நிருபித்தால் அவர்களுக்கு வம்சாவழி சட்டம் பொருந்தும். பதிவு சட்டம் என்பது இந்தியாவிலிருந்து வந்து தோட்டத்தொழிலில் ஈடுபட்டுள்ள மக்களுக்கானது. அவர்கள் 1948 நவம்பர் 15க்குள் இலங்கையில் பிறந்திருக்க வேண்டும், அதற்கு முன்பு இரண்டு தலைமுறையினர் இலங்கையில் வாழ்ந்திருக்க வேண்டும் அதற்க்கான சான்றுகளை காட்டி பதிவுக்கு மனு செய்யவேண்டும். அரசாங்கம் முடிவு பண்ணினால் மட்டுமே அவர்களுக்கு குடியரிமை வழங்கப்படும் என்று வரையறுக்கப்பட்டது.
1928 டொனமூர் கமிஷன் இலங்கையில் வாழும் இந்தியர்களில் 50 வீதமானோர் இலங்கையில் பிறந்தவர்கள் என்கிறது. அன்று இலங்கையில் 626,123 பேர் இந்தியர்களாக பதிவு செய்யப்பட்டிருந்தார்கள். 1938 ஜாக்சனின் அறிக்கைப்படி 60 வீதமானர்கள் இலங்கையில் பிறந்தவர்கள் என்றது. 1946இல் சோல்பரி அறிக்கை 80 வீதமான இந்தியவம்சாவளியினர் இலங்கையில் பிறந்தவர்கள் என்றது. இந்த மூன்று அறிக்கைகளும் இந்திய வம்சாவளியினர் இலங்கையில் பூரண உரிமைகள் அனுபவிக்க உரிமையுடையவர்கள் என்பதை உறுதிப்படுத்தியிருந்தன.
இந்திய வம்சாவளித் தமிழர்களில் பலர் தமக்கு முன் இரண்டு மூன்று தலைமுறையினர் இலங்கையில் பிறந்திருந்தாலும் கூட அதை நிரூபிப்பதற்கான ஆவணங்கள் அவர்களிடம் இருக்கவில்லை. பெரும்பாலானவர்கள் ஆஸ்பத்திரிகளில் பிறந்ததில்லை. அப்படியான கிட்டிய ஆஸ்பத்திரிகள் கூட தோட்டங்களில் இருக்கவில்லை. அத்தாய்மாரை லயன்களில் இருந்து தூர இடங்களுக்கு அழைத்துச் சென்று மகப்பேறு பார்க்கும் அளவுக்கு வசதியான பாதைகளோ, போக்குவரத்து வசதிகளோ கூட கிடையாது. ஆகவே அன்று லயன்களில் பிறந்தவர்களே பலர். அப்படிப் பிறந்தவர்களுக்கு சரியான பதிவுகள் கூட இருக்கவில்லை. சுதந்திரத்துக்குப் பின்னர் வரை சில தசாப்தங்களுக்கு இத்தகைய நிலை தான் நீடித்திருந்தன. பதிவுகளை உருதிசெய்யாததனால் 7 லட்சம் வரையான இந்திய வம்சாவழித் தமிழர் நாடற்றவர் என்னும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். 1949 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்கள் திருத்தச் சட்டம் இல. 48 இன் மூலம் அவர்களது வாக்குரிமையும் பறிக்கப்பட்டது.
இந்தச் சட்டத்தின் பிரகாரம் 5,000 பேர் மட்டுமே குடியுரிமைக்குத் தகுதி பெற்றார்கள். ஏழு லட்சம் பேருக்கும் மேற்பட்டோர் அதாவது சனத்தொகையில் 11 வீதத்தினருக்கு குடியுரிமை புறக்கணிக்கப்பட்டு நாடற்றவர்களாகினர். இது இலங்கையின் சிறுபான்மை இனத்தவர்களில் மூன்றில் ஒரு பங்கினர். தமிழர்களின் சனத்தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள்.
டீ.எஸ்.சேனநாயக்க : பிரதான சூத்திரதாரி
சுதந்திரத்துக்கு முதல் ஆண்டு அதாவது 1947 ஆம் ஆண்டு. இலங்கையில் பொதுத்தேர்தல் நடந்தது. ஆங்கிலேயர்கள் இலங்கையை விட்டுப் போவதற்கு தயார் ஆவதற்கு முன்னர். இலங்கைக்கு. ஒரு நிலையான ஆட்சியை நிறுவி விட்டு போவதற்காக அந்த தேர்தல் நடத்தப்பட்டது.
இந்த காலப்பகுதியில். ஒரு கட்சி அரசியல் என்பது அவ்வளவு பலமாக இருக்கவில்லை. இலங்கைக்கான ஒரு தேசிய கட்சியின் தேவை அப்போது உணரப்பட்டது இந்த தேவையை உணர்ந்ததே சேனநாயக்க அப்போதைய முக்கியமான. அரசிய கட்சிகளை ஒன்றிணைத்து ஒரு கட்சியை உருவாக்க முயற்சித்தார்.
இதன்படி டி எஸ். சேனநாயக்க பல அமைப்புகளையும் கட்சிகளையும்; குறிப்பாக இனக் கட்சிகளையும், பிரதேச கட்சிகளுக்கும்; இந்த புது கட்சியை தொடங்குவதற்கு அழைப்பு விடுத்தார். பல கட்சிகள் இவ்வழைப்பை ஏற்றுக்கொண்டன.இதைப் பற்றி பிற்காலத்தில் ஜே ஆர் ஜெயவர்த்தனவின் ஊடக செயலாளராக இருந்த எஸ்.பியசேன தனது “மூன்று நாடுகளில் ஏழு தசாப்தகால ஊடக அனுபவம் " என்கிற சிங்கள நூலில் இப்படி குறிப்பிடுகிறார்.
“1946 டி டி.எஸ். சேனாநாயக்க தனிக் கட்சியொன்றை ஆரம்பிபதர்காக சிங்கள மகா சபைத் தலைவர் எஸ்.டப்லியு.ஆர்.டி. பண்டாநாயக்கவுக்கும், தேசிய காங்கிரசின் தலைவர் ஜார்ஜ் ஈ. த சில்வாவுக்கும், வடக்கு மாகாணத்தை சேர்ந்த அருணாச்சலம் மகாதேவா, எஸ். நடேசன், மற்றும் ஜெகநாதன் தியாகராஜா ஆகிய அரசாங்க சபை உறுப்பினர்களுக்கும் முஸ்லிம் லீக்கின் தலைவர் டீ.பி. ஜாயா சோனகர் சங்கத்தின் தலைவர் ஏ.ஆர்.ஏ. ராசிக் போன்றோருக்கு விடுத்த அழைப்பை அனைவரும் ஏற்றுக்கொண்டனர் அதன் பிரகாரம் ஐக்கிய தேசியக் கட்சியை அவர்கள் தோற்றுவித்தனர்.”
அதற்கடுத்த 1947 ஆம் ஆண்டு யூலை மாதம் 23ஆம் திகதி சோல்பரி திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட முதலாவது இலங்கை பாராளுமன்றத் தேர்தல் 1947 இல் நடத்தப்பட்டது. ஜூலை 23 முதல் ஆகஸ்ட் மாதம் 20ஆம் திகதி வரையில் 19 தினங்கள் இந்நாட்டின் முதலாவது பாராளுமன்றத்துக்கான தேர்தல் இடம்பெற்றது. ஐக்கிய தேசியக் கட்சிக்கு மிகப் பெரும் சவாலாக இருந்த சக்தி இடதுசாரிக் கட்சிகளே.
அப்போது டீ.எஸ்.சேனநாயக்க பற்றிய பெரிய அளவில் தனிநபர் பிம்பம் ஊதிப் பெருபிக்கபட்டு இருந்த சூழல் என்பதால் அவர் தலைமையிலான ஐ.தே.கவுக்கு பெரும் ஆதரவு கிடைக்கும் என்று நம்பப்பட்டது. அன்றைய லேக் ஹவுஸ் பத்திரிகைகள் ஐதேகவுக்கு ஆதரவாகவும், இடதுசாரிகளுக்கு பாதகமாகவும் செய்திகள் வெளியிட்டன.
ஆனால் அது பலிக்கவில்லை. யூலை 23 அன்று முதல் பத்து தொகுதிகளில் நடந்த தேர்தலில் இரண்டு தொகுதிகளில் மட்டுமே ஐ.தே.க வென்றது. நான்கு தொகுதிகளில் லங்கா சமசமாஜக் கட்சி வென்றது. கொம்யூனிஸ்ட் கட்சி ஒரு தொகுதியிலும் சுயேச்சை வேட்பாளர்கள் எஞ்சிய மூன்று தொகுதிகளில் வென்றார்கள். முதலாவது நாள் தேர்தலிலேயே ஐ.தே.கவின் கனவு கலைந்தது. ஏனைய தொகுதிகளின் வெற்றி வாய்ப்பு குறித்து கலக்கமுற்றது.
1947 ஆகஸ்ட் 26 தினமின பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கத்தில் இப்படி குறிப்பிடபடுகிறது...
“இதுவரை வெளியான முடிவுகளின் படி இடதுசாரிக் கட்சிகள் நான்கு அல்லது ஐந்து ஆசனங்களை கைப்பற்றிய போதும் பாராளுமன்றத்தில் ஆளும் கட்சிக்கு எதிரான பலமான கூட்டை உருவாக்க இயலும் எனக் கருத முடியாது. அதுபோல அவ்வாறு தெரிவு செய்யப்பட்ட இடதுசாரிகளும் அரசியலில் ஆளுமை மிக்கவர்களாகவோ, மக்கள் சேவையில் பிரசித்தி பெற்றவர்களாகவோ இல்லை. முதல் நாள் தேர்தல் முடிவுகளை வைத்து இத்தகைய கணிப்பை கூற முடியாவிட்டாலும் இனி வரும் தேர்தல் முடிவுகளும் இதுபோன்றே இருக்குமாயின் எதிர்காலத்தைப் பற்றி கணிப்பது ஒன்றும் கடினமில்லை....”
தேர்தல் காலத்தில் இத்தகைய ஒரு பீதியைக் கிளப்பி விடுவதன் மூலம் இடதுசாரிகளின் வெற்றி வாய்ப்பின் மீதான எச்சரிக்கையை அப்பத்திரிகை செய்தது.
இறுதியில் 95 ஆசனங்களில் ஐ.தே.கவால் வேல முடிந்தது 42தொகுதிகளில் மாத்திரம் தான். இன்னும் சொல்லப்போனால். இத்தேர்தலில் ஆட்சி அமைக்கும் அளவுக்கு அறுதிப் பெரும்பான்மையை ஐ.தே.க பெறத் தவறி இருந்தது. இன்னும் சொல்லப் போனால் மொத்தத்தில் எதிர்க்கட்சிகளே அதிக ஆசனங்களைக் கொண்டிருந்தன. இதோ தேர்தல் முடிவுகள்.
- ஐக்கிய தேசிய கட்சி - 42
- லங்கா சமசமாஜ கட்சி - 10
- தமிழ் காங்கிரஸ் - 07
- இலங்கை இந்தியர் காங்கிரஸ் - 06
- போல்ஷெவிக் லெனினின்ஸ்ட் கட்சி - 05
- இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி - 03
- தொழிலாளர் கட்சி - 1
- சுயேச்சை – 21
இந்தத் தேர்தல் முடிவுகள் டீ.எஸ்.சேனநாயக்கவுக்கு பேரிடியாக இருந்தது. அது மட்டுமன்றி வென்ற 42 ஆசனங்களில் 8 பேர் பண்டாரநாயக்கவின் சிங்கள மகா சபையைச் சேர்ந்தவர்கள்.
இந்த நிலையைப் பற்றி கலாநிதி கே.எம்.டி.சில்வா இப்படி குறிப்பிடுகிறார்.
டீ.எஸ்.சேனநாயக்கவுக்கு அன்று இருந்த செல்வாக்கு காரணமாக சிங்கள மக்கள் அதிகமாக ஐ.தே.க.வுக்கே ஆதரவு வழங்குவார்கள் என்று நம்பிய போதும் அக்கட்சிக்கு பலமாக இருந்தது எஸ்.டபிள்யு.பண்டாரநாயக்கவும் அவரின் சிங்கள மகாசபையுமே. 95 ஆசனங்களில் 42 ஆசனங்கள் ஐ.தே.க வென்றாலும் அதில் அதிகமானோர் பண்டாரநாயக்கவின் சிங்கள மகா சபையை சேர்ந்தவர்களும் அவருக்கு கிட்டிய ஆதரவாளர்களுமே.
இந்த நிலையில் ஒரு அரசாங்கத்தை அமைப்பதற்கு பெரும்பான்மை பலத்தை திரட்ட வேண்டிய நிர்ப்பந்தம் டீ.எஸ்.சேனநாயக்கவுக்கு ஏற்பட்டது.
ஆட்சி அமைப்பதற்கு வேறு தரப்புகளும் இதே வேளை முயற்சிகளை செய்தன. அப்படி முயற்சி செய்தவர்களில் ஒருவர் குருநாகலை தொகுதியில் தெரிவான எச்.ஸ்ரீ.நிஸ்ஸங்க. கொழும்பில் இருந்த அவரின் ‘யமுனா இல்லத்தில்’ இதற்கான ஒரு சந்திப்பை அவர் ஒழுங்கு செய்தார். அங்கு தேர்தலில் தெரிவான பலர் ஒன்று கூடினார்கள். இறுதியில் அவர்கள் எஸ்.டபிள்யு.ஆர்.டி பண்டாரநாயக்கவை பிரதமராகக் கொண்ட அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என்று ஏகோபித்த முடிவை எடுத்தார்கள். இதில் தமிழ் உறுப்பினர்கள் உடன்படவில்லை.
இந்தக் குழுவினர் பண்டாரநாயக்கவை சென்று சந்தித்து; உங்களுக்கு ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு இருக்கிறது என ஆளுநரிடம் சென்று தெரிவியுங்கள் என்று கோரினார்கள். இடதுசாரிகளின் ஆதரவையும் அவருக்காக திரட்டித் தருவதற்கான வேலைகளை தாம் செய்வதாகவும் அவர்கள் தெரிவித்தார்கள். ஆனால் பண்டாரநாயக்க எடுத்த எடுப்பில் இந்த யோசனையை நிராகரித்தார். எனது கட்சி ஐ.தே.க. எனது தலைவர் சேனநாயக்க; அவர் அரசாங்கத்தை அமைப்பதற்கான பணிகளை மேற்கொண்டு வருகையில் நான் அவரை மீறி அரசாங்கத்தை அமைக்க வேண்டிய அவசியம் இல்லை என அந்த யோசனையை மறுத்து விட்டார். அந்தக் குழு பெரும் ஏமாற்றத்துடன் வெளியேறி பண்டாரநாயக்கவை திட்டித் தீர்த்தது.
இதனைத் தொடன்று சேனநாயக்க கட்சிகளையும் சுயேட்சை உறுப்பினர்களையும் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். தமிழ் காங்கிரசையும் அழைத்தார். தமிழ் காங்கிரஸ் அவ்வழைப்பை நிராகரித்து விட்டது. அடுத்ததாக அவர் இலங்கை இந்தியர் காங்கிரசை பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். தொண்டமானும், ஜோர்ஜ் மோத்தாவும் இணைவது குறித்து பரிசீலிக்கத் தயார் என்று கூறிய போதும் ஐ.தே.க வில் இருந்த ஏனைய உறுப்பினர்கள் இலங்கை இந்தியர் காங்கிரசை இணைத்துக் கொள்வதற்கு மறுப்பு தெரிவித்தன. அது ஒரு கட்சி இல்லை என்றும், தொழிலாளர்களின் சங்கம் மட்டுமே என்று அவர்கள் வாதிட்டார்கள். (மலல்கொட)
அடுத்ததாக வடக்கை சேர்ந்த சுயாதீன தமிழ் உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அந்த பேரம் பேசலின் படி சி.சுந்தரலிங்கம், சிற்றம்பலம் ஆகியோருக்கு அமைச்சுப் பதவிகள் தருவதாக ஒப்புக்கொள்ளப்பட்டது. மேலும் சில தமிழ் உறுப்பினர்களையும் சிங்கள உறுப்பினர்களையும் இணைத்துக் கொண்டார், மேலும் சோல்பரி திட்டத்தின் பிரகாரம் ஆளுனரால் நியமிக்கப்பட்ட 6 உறுப்பினர்களையும் சேர்த்துக் கொண்டு அரசாங்கத்தை அமைத்தார் சேனநாயக்க. ஏ.ஈ.குணசிங்கவும் இணைந்துகொண்டார். இணைந்து சுயாதீன உறுப்பினர்கள் இவர்கள் தான்.
- சீ. சுந்தரலிங்கம் (வவுனியா)
- சீ. சித்தம்பலம் (மன்னார்)
- ஆல்ஃப்ரட் தம்பியா (ஊர்காவற்துறை)
- வீ. நல்லையா (கல்குடா)
- எஸ். யூ. எதிரிமன்னசிங்கம் (பத்திரிப்பு)
- விக்டர் ரத்தநாயக்க (தெணியாய)
- எச்.ஆர்.யூ. பிரேமச்சந்திர (கடுகண்ணாவ)
- கே.வி.டி. சுகததாஸ் (வேலிமட)
இவ்வாறு ஆட்சி அமைத்துக் கொண்ட போதும் டீ.எஸ்.சேனநாயக்கவுக்கு எதிர்கால அரசியல் குறித்த பீதி கலையவில்லை. எதிர்கால ஐதேகவின் இருப்புக்கு சவாலாக இருக்கக் கூடிய சக்திகள் குறித்து கணிக்கத் தொடங்கினார் சேனநாயக்க.
இந்தத் தேர்தலில் இடதுசாரிக் கட்சிகளுக்கு 18 ஆசனங்கள் கிடைத்திருந்தன. இலங்கை இந்தியர் காங்கிரஸ் 6 ஆசனங்களை வென்றிருந்தது. அது மட்டுமன்றி இலங்கை இந்தியர் காங்கிரஸ் இருபது தொகுதிகளில் விரிவடைந்திருந்தது. அந்தத் தொகுதிகள் வர்த்தகத் தோட்டங்களைக் கொண்டவை. எதிர்காலத்தில் இந்த இரு சக்திகளும் ஒன்று சேர்ந்தால் அது ஐ.தே.கவின் இருப்புக்கு பெரும் சவாலாக அமைந்து விடும் அபாயம் உண்டென கருதினார் சேனநாயக்க.
இந்த இரு சக்திகளின் பலத்தை உடைக்கும் உடனடித் தேவை இங்கிருந்து தான் தொடங்கியது. இதற்காக சேனநாயக்க அதே வருடம் 28,29,30 மார்ச் 1947 இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கும் இலங்கைப் பிரதமர் டீ.எஸ்.சேனநாயக்கவுக்கும் இடையில் இந்திய வம்சாவளியினர் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நிகழ்ந்தன. அது தோல்வியில் முடிந்தது. இப்பேச்சுவார்த்தையின் போது ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவும் உடன் இருந்தார். இலங்கையில் இருக்கும் இந்தியர்களில் எவருக்கு குடியுரிமை வழங்குவது, என்ன தகுதிகளின் அடிப்படையில், அவர்களில் கணிசமானோரை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப இயலுமா? அது எவ்வாறு என்பது குறித்து பேசப்பட்டன. ஆனால் இந்த பேச்சுவார்த்தை வெற்றியளிக்கவில்லை,.
இதற்கிடையில் தேர்தல் முறைப்பாடு காரணமாக கண்டி, கம்பளை ஆகிய இரு தொகுதிகளில் இடைத்தேர்தல்கள் நடத்த வேண்டி ஏற்பட்டது. இந்த இரு தொகுதிகளிலும் ஐ.தே.க தோல்வியைத் தழுவியது. இந்த இரு தொகுதிகளிலும் ஐ.தே.க தோல்விக்கான பிரதான காரணம் இந்த இரு தொகுதிகளையும் சேர்ந்த இந்திய வம்சாவளியினர் ஐதேகவுக்கு எதிராக வாக்களித்தது தான் என்பதை விளங்கிக் கொள்கிறார் சேனநாயக்க. எனவே இனி ஒரு முடிவெடுத்தாக வேண்டும் என்கிற முடிவுக்கு வருகிறார் சேனநாயக்க. இதைப்பற்றி கே.எம்.டி.சில்வா இப்படிக் குறிப்பிடுகிறார்.
“1947 தேர்தல் முடிவுகளின் மூலம் இடதுசாரிகள் குறித்து தனக்கு இருந்த சந்தேகத்தை உறுதி செய்து கொண்டார் சேனநாயக்க. அத்தேர்தலில் தோட்டத் தொழிலாளர்களும் ஐதேகவுக்கு எதிராகவே வாக்களித்திருந்தார்கள். இலங்கை இந்தியர் காங்கிரஸ் போட்டியிடாத இடங்களில் இடதுசாரிகளுக்கோ அல்லது இடதுசாரி சாய்வுள்ளவர்களுக்கோ அவர்கள் வாக்களித்து இருக்கிறார்கள். எதிர்க்கட்சி ஆசனங்களில் அமர்ந்துகொண்ட இலங்கை இந்தியர் காங்கிரஸ் உறுப்பினர்கள் எப்போதும் இடதுசாரிகளுக்கே ஆதரவளித்தார்கள்.”
இடதுசாரிகளின் பலத்தை ஒரேயடியாக பலவீனப்படுத்துவதற்கு இந்திய வம்சாவளியினரின் இருப்பை அசைத்தாலே போதும் இந்த இரு சக்திகளும் வீழ்ந்து விடுவார்கள் என்று கணித்தார் சேனநாயக்க. இதற்காக அவர் கையாண்ட முக்கிய உத்திகளில் ஒன்று தேர்தல் தொகுதி எல்லைகளை மறுநிர்ணயம் செய்வது. குறிப்பாக தொழிலாளர் வர்க்க வாகுகளைக் கொண்ட கொழும்பில் உள்ள தொகுதிகளின் எல்லைகளை மாற்றி தொழிலாளர்களின் தெரிவுப் பலத்தை பலவீனப்படுத்தல். இரண்டாவது வழிமுறை தான் குடியுரிமை சட்டத்தைக் கொண்டு வந்து இந்தியத் தொழிலாளர்களை மைய அரசியலில் இருந்து நீக்கம் செய்வது.
1947 தேர்தலில் மலையகத்திலிருந்து வெற்றி பெற்றவர்கள்
அத்தேர்தலின் மூலம் கீழ்வருவோர் மலையகத்திலிருந்து தெரிவானார்கள்.
- நுவரெலியா எஸ்.தொண்டமான் (9386),
- தலவாக்கலை சி.வி.வேலுப்பிள்ளை (10645),
- கொட்டக்கல தொகுதி கே.குமாரவேல் (6722),
- நாவலப்பிட்டி தொகுதி கே.ராஜலிங்கம் (7933),
- மஸ்கெலியா தொகுதி ஸ்ரீ.ஆர்.மோத்தா (9086),
- அலுத்நுவர தொகுதி டீ.ராமனுஜம் (2772),
- பதுளை (இரட்டையர் தொகுதி) எஸ்.எம்.சுப்பையா (2,7121)
மத்துரட்ட தொகுதியில் இலங்கை இந்தியர் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட எஸ்.சோமசுந்தரம் 3,572 வாக்குகளைப் பெற்று தோல்வியடைந்தார். ஹப்புத்தளைத் தொகுதியின் வாக்காளர்களில் 57% வீதத்தினர் தமிழர்கள். இலங்கை இந்திய காங்கிரஸ் வேட்பாளர் ஆர்.ஏ.நடேசனும் சுயேச்சை வேட்பாளர் ஏ.ஆர்.செங்கமாலியும் ஒரே தொகுதியில் போட்டியிட்டு தமிழ் வாக்குகளை பிளவடையைச் செய்ததால் இறுதியில் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர் ஜே. ஏ. ரம்புக்பொத தெரிவாகினார். அதன் பின்னர் 11.31.1950இல் நடைபெற்ற மஸ்கெலியா தொகுதிக்கான இடைத்தேர்தலில் இ.இ.காங்கிரஸ் வேட்பாளராகக் களம் இறங்கிய ஏ.அஸீஸ் 11,343 வாக்குகளால் பாராளுமன்ற உறுப்பினரானார்.
சோல்பரி
18.12.1944 பிரித்தானிய அரசாங்கம் சோல்பரிப் பிரபுவின் தலைமையில் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான விசாரணை ஆணைக்குழுவை இலங்கைக்கு அனுப்பியது. 07.04.1945 வரை அவர்கள் இலங்கையில் இருந்து விசாரணைகளை மேற்கொண்டார்கள்.
சோல்பரி யாப்பை 1945 ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் திகதியன்று அரசாங்க சபையில் நிறைவேற்றப்பட்டது. எதிர்ப்பே இல்லாமல் அதனை நிறைவேற்றிவிடவேண்டும் என்று டீ.எஸ்.சேனநாயக்க மிகவும் பிரயத்தனப்பட்டார். எப்படியும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அது நிறைவேற்றபாட்டாக வேண்டும். குறிப்பாக சிறுபான்மை இனங்களின் தலைவரை அவர் சரிகட்ட அதிக பேராசை கொண்டிருந்தார்.
இறுதியில் 57 பேரில் 51 பேரின் ஆதரவுடன் சோல்பரி யாப்பு நிறைவேற்றப்பட்டது. தமிழ், சிங்கள, முஸ்லிம், பறங்கி, மலே, ஐரோப்பியர் என அனைவரும் இதற்கு ஏகோபித்த ஆதரவைக் கொடுத்தனர். இதில் சிறுபான்மை இனத்தவர்கள் “எனக்கு ஒரு வாய்ப்பைத் தாருங்கள் நான் உங்களுக்கு நல்லது செய்கிறேன்” என்கிற டீ.எஸ்.சேனநாயக்கவின் உத்த்தரவாதத்தை நம்பினர். ஆனால் அதை எதிர்த்து மூவர் வாக்களித்திருந்தனர். அதில் இருவர் இந்திய வம்சாவளியினர். ஒருவர் நடேசய்யர், மற்றவர் ஐ.எக்ஸ்.பெரைரா. வைத்தியலிங்கம் இந்தியாவில் இருந்தார். எதிர்த்த மூன்றாவது நபர் சிங்களவர். அவர் விஜயானந்த தஹாநாயக்க (பிற்காலத்தில் சிறிது காலம் இலங்கையின் பிரதமராக பதவி வகித்தவர்.).
இங்கிலாந்துக்கு சோல்பரி யாப்பு தொடர்பான பரிந்துரைகளைப் பற்றி உரையாடப் போயிருந்த ஜி.ஜி.பொன்னம்பலம் திரும்பி வருமுன்னரே இது நிறைவேற்றியாகிற்று. ஜி.ஜி.யின் தமிழ் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களும் கட்சியின் முடிவுக்கு எதிராக சோல்பரி யாப்பை ஆதரித்திருந்தனர். அப்படி ஆதரித்த மூவரை கட்சியை விட்டு விலக்குவதாக காங்கிரஸ் அறிவித்திருந்தபோதும் அது சுத்த பம்மாத்து என்கிற அர்த்தத்தில் அன்றைய ஈழ கேசரி “கீழ்படியாத மூவர் : தமிழ்க் காங்கிரஸின் நடவடிக்கை!” என்கிற தலைப்பில் ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது.
“... ஸ்ரீ நடேசன் இப்போது சில மாதங்களுக்கு முன்னதாகவே தமிழ்க் காங்கிரஸை விட்டு விலகி விட்டார். ஸ்ரீ தியாகராஜா இம்மாதம் 13ந் திகதி ராஜினாமாச் செய்துவிட்டார். ஸ்ரீ இராஜகுலேந்திரனின் இராஜினாமாக் கடிதம் ஆங்கிலத் தினசரி ஒன்றில் காணப்பட்டது. இந்த அழகில் நேற்று முன் தினம் கூடிய காங்கிரஸ் நிர்வாகசபை குறித்த மூவரையும் நீக்கியிருப்பதும் ஒரு புதுமை தான்.”
சோல்பரி யாப்பை எதிர்த்த இந்தியர் பிரதிநிதிகள் இருவரும் இந்தியத் தோட்டத் தொழிலாளிகளின் நலன்களின்பால் இருந்து தான் இதை எதிர்த்தார்கள் என்பது ஒரு வரலாற்றுப் பதிவு தான். அதை டீ.எஸ்.சேனநாயக்காவும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளவில்லை.
சோல்பரி யாப்பை நிறைவேற்றிய பின்னர் இந்திய வம்சாவளி மக்களை விரட்டும் பணிகள் ஆரம்பமாகும் என்று அன்றைய அரசியலை உணர்ந்த பலரும் அறிந்தே வைத்திருந்தார்கள்.
சோல்பரி பிற்காலத்தில் வருந்தி எழுதிய கடிதம்
குடியுரிமை பறிப்பின் பின் பத்தொன்பது ஆண்டுகளுக்குப் பின்னர் அதாவது 30.04.1964 திகதியிடப்பட்ட செ.சுந்தரலிங்கத்துக்கு சோல்பரி ஒரு ஒரு கடிதத்தை எழுதினார். பிற்காலத்தில் அக்கடிதம் செ.சுந்தரலிங்கம் எழுதிய “ஈழம்: சுதந்திரப் போராட்டத்தின் ஆரம்பம்” (“Eylom: Beginning of the Freedom Struggle; Dozens Documents” by C Suntherlingham) என்கிற நூலில் வெளியிடப்பட்டது. அதில்
“நான் முன்மொழிந்த அரசியல் யாப்பில் சிறுபான்மையினருக்காக போதுமான பாதுகாப்பு இருப்பதாகவே தெரிந்தது. ஆனால் அரசியல் யாப்பின் 29வது சரத்து எதிர்பார்த்தளவு பலனளிக்கவில்லை என்பதும் உண்மையே...
இந்திய வம்சாவளி தமிழ் தொழிலாளர்களின் நிலைமை கவலையைத் தருகிறது. இந்தளவு பெருந்தொகையான ஆண்களுக்கும் பெண்களுக்கும் வாக்குரிமையை இல்லாது செய்தது வருந்தத்தகது. தமது பிரதேசத்தில் நிரம்பியிருக்கிற மக்கள் கூட்டத்தினருக்கு வாக்குரிமை இருப்பது கண்டி பிரதேச மக்களுக்கு பெறும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது என்பதையும் அறிய முடிகிறது. ஆனால் அந்த தமிழ் மக்களுக்காக மட்டும் நான்கு அல்லது ஐந்து தனி ஆசனங்களை ஒதுக்கியிருந்தால் இன்னும் நியாயமான தீர்வாக இருந்திருக்கும். அவர்கள் எந்த பிரதேசங்களில் வாழ்கிறார்கள் என்பது முக்கியமல்ல. எப்படியிருந்தபோதும் நான் குறிப்பிடுவது வடக்கு கிழக்குக்கு வெளியில் வாழும் தமிழ் மக்கள் பற்றியதே...
உங்களுக்காகவும் உங்கள் இனத்தவர்களுக்காகவும் நான் மிகவும் வருந்துகிறேன். எற்றுக்கொள்ளக்க்கூடிய ஒரு தீர்வை என்னால் வழங்க முடியுமென்றால் நான் மகிழ்ச்சியடைவேன்.”
இது ஒரு முக்கியமான படம். இலங்கை பல்கலைகழக நிகழ்வில் சோல்பரி பிரபு, சேர் ஐவர் ஜென்னிங்ஸ் ஜவஹர்லால் நேரு, லெஸ்டர் பியர்சன் ஆகியோரைக் காணலாம் |
இந்திய தோட்டத்தொழிலாளர்களின் எண்ணிக்கை:
Source: Economic Review (Colombo), Vol. V, March 1980; Fries and Bibin (1984: 195).
* (1978): Statistical Abstract of Ceylon 1970-71/ Statistical Pocket Book of DSRSL (1978). என்பவற்றை அடிப்படையாகக் கொண்டது
இதில் உள்ள கொடுமை என்னவென்றால் சக சிறுபான்மை மக்களான முஸ்லிம் இனத் தலைவர்களும் வாக்குரிமையை பறிப்பதற்கு ஆதரவாக வாக்களித்தார்கள். இதேவேளை இதனை எதிர்த்து வாக்களித்த 32 பேரில் 21 பேர் சிங்களவர்கள் என்பதையும் இங்கே பதிவு செய்ய வேண்டும். இதைப் பற்றி செல்வநாயகம் தமிழரசுக் கட்சியின் முதலாவது மாநாட்டில் உரையாற்றியபோது இப்படிக் கூறினார்.
“பல தமிழ்ப் பிரதிநிதிகளும் முஸ்லிம் பிரதிநிதிகளும் மலைநாட்டுத் தமிழ் மக்களின் உரிமைகளைப் பறித்த, சிக்னலா அரசாங்கத்தின் கொடிய சட்டத்தை, ஆதரித்து வாக்களித்தார்கள். நாம் கூறிய தீர்க்கதரிசன வாக்குப்போல, இன்று கல்லோயாவின் கீழ் – கல்முனைப் பகுதியில் – முஸ்லிம் - தமிழ் மக்களுக்கு அடி விழுகின்றது. இது நிற்க, இந்த ஏழு, எட்டு லட்சம் தமிழ் மக்களின் பிரஜா உரிமை பறிபோனதுடன் நிற்கவில்லை. இன்று அவர்க்களின் வாக்குரிமையும் பறிபோய்விட்டது. மத்திய, ஊவா மாகாணங்களில் தற்போது தயாரித்த வாக்குரிமை இடாப்புகளில், மலைநாட்டுத் தமிழ் – முஸ்லிம் மக்களின் பெயர்களெல்லாம் அகற்றப்பட்டுள்ளன. வரப்போகும் தேர்தலில், தற்போது மத்திய - ஊவா மாகாணங்களிலிருந்து ஜனப்பிரதிநிதிகள் சபைக்கு வந்திருக்கும் தமிழ் – முஸ்லிம் பிரதிநிதிகள் எட்டுப்பேரில், ஒருவரும் தெரிந்தெடுக்கப் படமாட்டார்கள். இதுவா ஜனநாயகம்? இதுவா அரசாங்க நீதி?”
இந்திய, பாகிஸ்தானிய குடியுரிமை சட்டம்
இந்திய, பாகிஸ்தானிய குடியுரிமை சட்டம் (Indian Residents Citizenship Act) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டபோது இச்சட்டத்தில் தலைப்பில் பாகிஸ்தான் என்பது இருக்கவில்லை. இந்த மசோதா அதன் மூல வடிவத்தில் “இந்திய குடியிருப்பளார் மசோதா என்றே அறியப்பட்டது. பிரதமர் டி.எஸ். சேனாநாயக்க அதன் பின்னர், ஜனவரி 20, 1949 அன்று பாராளுமன்றத்தில் சட்டமூலத்தில் "இந்தியன்" என்ற வார்த்தையின் பின்னர் "பாகிஸ்தானி" என்ற வார்த்தையைச் சேர்த்துக்கொள்வதற்கான திருத்தத்தை முன்வைத்தார். "பாகிஸ்தானி" என்ற வார்த்தையைச் சேர்த்ததற்கு சேனநாயக்க அளித்த விளக்கம் என்னவென்றால், இந்திய பாகிஸ்தானியப் பிரிவினைக்குப் பிறகு மசோதா நிறைவேற்றப்பட்டதால், "பாகிஸ்தானி" என்று வகைப்படுத்தப்படும் எந்தவொரு நபரையும் இந்த சட்டத்துக்குள் சேர்க்க வேண்டியது அவசியம் என்பதால் நான் இந்த சட்டத்தை "இந்திய, பாகிஸ்தானிய குடியுரிமை சட்டம்" என்று குறிப்பிடுவேன். என்றார்.
இந்த நிகழ்வு நிகழ்ந்து சுமார் 70 ஆண்டுகள் கடந்தும் கூட இன்னமும் இச்சட்டத்தை யார் ஆதரித்தார்கள் எதிர்த்தார்கள் என்கிற சர்ச்சை தொடர்ந்துகொண்டே இருக்கிறது. குறிப்பாக தமிழ்க் காங்கிரஸ் தலைவர் ஜி.ஜி.பொன்னம்பலம் ஆதரித்தார் என்கிற வாதமும், அவர் ஆதரிக்கவில்லை எதிர்த்தார் என்கிற வாதமும் தொடர்ந்து வருகிறது. இக்கட்டுரையின் பிரதான நோக்கங்களில் ஒன்று அந்த சர்ச்சைக்கு ஆதாரபூர்வமாக முடிவுக்கு கொண்டுவருவது என்பது.
முடிச்சு அவிழ்ப்பு : ஜி.ஜி.பொன்னம்பலத்தின் வகிபாகம்
ஜி.ஜி.பொன்னம்பலத்தின் வகிபாகம் பற்றி இன்று வரை பெருத்த விவாதம் தொடர்ந்து வருகிறது. அவர் இந்திய வம்சாவளியினருக்கு ஆதரவாகவா அல்லது எதிராகவா இயங்கினார் என்பதே இந்த இரு பக்க வாதங்களின் சாராம்சமாக இருக்கிறது.
இந்த விவாதத்தை முடிவுக்கு கொண்டு வருவதாயின் 1948 / 1949க்குள் இயற்றப்பட்ட நான்கு சட்டங்களையும் இறுதி வரை ஜி.ஜி யின் வகிபாகத்தையும் ஈற்றில் எதில் இது நிறைவானது என்பது வரை நோக்குவது அவசியம்.
த.இளங்கோவன் “மலைநாட்டுத் தமிழருக்கு துரோகம் இழைத்தது யார்?” என்கிற தலைப்பில் 1970 இல் எழுதிய நூல் பல பொய்களையும் திரிபுகளையும் கொண்ட ஒரு நூல். மலயகத்துக்காக ஜி.ஜி.பொன்னம்பலம் நிறையவே பாடுபட்டதாகவும், பிரஜாவுரிமைச் சட்டத்தை ஆதரித்து வாக்களிக்கவில்லை என்று புனைகிற ஒரு சிறு நூல். 1970 ஜனவரியில் அது வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் இருந்த திரிபுகளை அதற்குப் பின்னர் பலரும் அம்பலப்படுத்திவிட்டார்கள். ஆனாலும் இன்றும் ஜி.ஜி.பொன்னம்பலத்தை பாதுகாக்க முனைகிற பலரை நாம் கண்டு கடந்துதான் வருகிறோம்
அதன் பின்னர் மிகச் சமீபத்தில் ஜி.ஜியின் பேரனும் தமிழ் தேசியமக்கள் முன்னணி தலைவரும் பாராளுமன்ற கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை , அதே கருத்தை அவர் தொலைகாட்சி நேர்காணல்களிலும் வெளிப்படுத்தியிருந்த இக்கருத்துக்கள் எல்லாமே ஜி.ஜி குற்றமற்றவர் என்று நிரூபிப்பதற்கான எத்தனங்களே. ஆனால் அச்சட்ட மூலங்களில் உள்ள சாதகமான அம்சங்களை மாத்திரம் எடுத்து மற்ற உண்மைகளை மூடி மறைக்கும் கைங்கரியத்தையும் நம்மால் காண முடிகிறது.
.சாராம்சத்தில் மூன்றாவதாக கொண்டு வரப்பட்ட இந்திய பாகிஸ்தானிய குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவாக அரசாங்கத்துக்கு சாதகமாக வாக்களித்தமைக்கு காரணம் அது குறைந்தபட்சமென்றாலும் அம்மக்களுக்கு குடியுரிமையை வழங்கிவிடும் என்று கருதினதால் தான் என்று வாதிடுகின்றனர்.
உண்மையில் என்ன நடந்தது?
“சிங்கத்தின்” கால்களில்
ஜே..எல்.பெர்னாண்டோ “மூன்று பிரதமர்கள்” என்கிற தனது நூலில் தனது நேரடி சாட்சியமாக சொல்வதென்ன?
“பொன்னம்பலத்துக்கு அமைச்சுப் பதவியின் மூலம் அரசாங்கத்துக்குள் கொண்டு வருவதற்கு அப்போதைய இளம் அரசியல் தலைவர்களாக இருந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தன, டட்லி ஆகியோர் மிகுந்த ஆர்வமாக இருந்தனர். பொன்னம்பலம் போன்ற பேச்சாற்றல் மிக்க ஒருவர்; அன்றைய இடதுசாரி சக்திகளை எதிர்கொள்ளும் முதல்தர விவாதக்காரராக இருப்பார் நம்பினர். இதைப் பற்றி டீ.எஸ்.சேனநாயக்க்கவிடம் இவர்கள் பரிந்துரைத்தபோதும் அவர் அதனை செவிசாய்க்கவில்லை. பொன்னம்பலத்திற்கு அமைச்சரவை பதவியை வழங்குவதற்கு மேற்கொள்ளப்பட்ட எந்த முயற்சிகளுக்கும் டி.எஸ்.சேனாநாயக்க செவிசாய்க்கவில்லை. சேனநாயக்கவிடம் மன்றாடுமாறு என்னை அந்த இளைய குழுவினர் கேட்டது எனக்கு நினைவிருக்கிறது. சேனநாயக்கவும் இவ்வாறான முயற்சிகளை அனுமதித்தார். ஆனால் இறுதிவரை அதற்கான கதவுகளை திறக்கவில்லை.
பத்திரிகைகளும் இதனை மோப்பம் பிடிப்பதில் மும்முரமாக இருந்தன. ஒரு பிற்பகல் பிரதமர் சேனாநாயக்கவைச் சந்திக்கும்படி எனக்கு கூறப்பட்டது. அலரிமாளிகைக்கு சென்று பிரதமரைக் கண்டேன். பொன்னம்பலத்துக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்கப்படவிருக்கிறதா என்று நான் கேட்டதற்கு, சேனாநாயக்கவின் மறைமுகமான பதில் "நீங்கள் உட்காருங்கள், பார்க்கலாம்" என்றார். சில நிமிடங்கள் கழிந்தன, முன் வாசலுக்கு ஒரு மோட்டார் கார் வரும் சத்தம் கேட்டது. எங்களைக் கண்டுகொள்ள வேண்டாம் என்று எச்சரித்து சேனநாயக்கா தனது அறையை விட்டு வெளியே சென்றார். காரின் கதவு மூடப்பட்டதையும், கார் விலகிச் செல்வதையும் கேட்டதும் நானும் என்னோடு வந்திருந்த எனது நண்பரும் வராண்டாவுக்கு வந்து பிரதமரின் விசுவாசியான கரோலிஸைப் பார்த்து, "என்ன நடந்தது?" என்று கேட்டேன். அந்த பதில் வரலாற்று முக்கியத்துவம் கொண்ட பதில். "சேர், அந்தத் தமிழன் ‘சிங்கத்தை’ விழுந்து கும்பிட்டுச் சென்றான்" என்று கரோலிஸ் கூறினார். சேனநாயக்கா வராந்தாவிற்கு வெளியே வருவதைப் பார்த்த பொன்னம்பலம், கீழே குனிந்து உள்ளூர் பாணியில் பிரதமருக்கு வணக்கம் செலுத்தியதையே அவர் விவரித்தார்.
சமகால அரசியல் விவகாரங்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த கரோலிஸின் பார்வையில், "சிங்கையா" (சிங்கம்) இறுதியில் வெற்றிபெற்றது.
பின்னர் புதிய அமைச்சரின் பதவிப் பிரமாணத்திற்காக சேனநாயக்காவும் பொன்னம்பலமும் கவர்னர் இல்லமான இராணி மாளிகைக்கு சென்றிருந்தார்கள் என்று நான் யூகித்தேன், மேலும் செய்தியாளர்களையும் பத்திரிகை புகைப்படக் கலைஞர்களையும் இராணி மாளிகையின் வளாகத்திற்கு விரைந்து செல்லும்படி லேக் ஹவுஸுக்குத் தகவல் கொடுத்தேன்.
பின்னர், சேனநாயக்காவை நான் சந்தித்தபோது, அவரின் முன்னாள் அரசியல் எதிரியான பொன்னம்பலம் எப்படி வணங்கினார் என்பதை நானும் எனது நண்பரும் பார்த்த கதையைப் பற்றி கூறினேன். அந்த சம்பவத்தை நான் செய்தித்தாள்களில் விவரிக்க மாட்டேன் என்று என்னிடம் வாக்குறுதி வாங்கிக்கொண்டார் சேனநாயக்கா. பொன்னம்பலம் தனக்கு பக்கபலமாக இருந்தவேளை, அவரது அந்த நடத்தை பற்றி அவருக்கு நம்பிக்கையாக இருக்க வேண்டும் என்று சேனநாயக்க கருதினார்...”
குடியுரிமைச் சட்டத்தின் மீதான விமர்சனங்களைத் தொடர்ந்து அதன் எதிர்ப்பைக் குறைப்பதற்காக மேலும் அடுத்த இரண்டு சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. அதில் ஒன்று தான் இந்திய - பாகிஸ்தான் குடியுரிமை சட்டம். இந்த சட்டத்தின் பிரகாரம் ஏழு ஆண்டுகளுக்கு மேல் வசித்திருப்பவர்களுக்கு குடியுரிமை பெற விண்ணப்பிக்கலாம் என்று மாற்றப்பட்டது உண்மை தான். அப்படி மாற்றப்பட்டது சாதகமான விடயம் என்பதால் தான் அதற்கு ஆதரவாக ஜி.ஜி பொன்னம்பலம் வாக்களித்தார் என்பது தான் பொன்னம்பலம் தரப்பில் இன்றும் வைக்கப்படும் ஒரே ஒரு வாதம். ஆனால் வாய்ப்பைக் கூட அம்மக்கள் மேற்கொள்ள முடியாதபடி அதை வரையறுத்ததை பொன்னம்பலம் தரப்பு வசதியாக மறைத்து விடுகிறது.
அதாவது இந்த விண்ணப்பங்கள் இரு வருடங்களுக்குள் செய்தால் மாத்திரமே அவர்கள் பிரஜாவுரிமை பெற முடியும். அதற்குப் பின்னர் எந்த விண்ணப்பமும் செல்லுபடியாகாது. நினைத்துப் பாருங்கள் 70 ஆண்டுகளுக்கு முன்னர் லயன் காம்பராக்களிலேயே குழந்தையைப் பெற்றுக்கொண்டு பிறப்பு அத்தாட்சியைக் கூட ஒழுங்காக பதியாத பேண இயலாத ஒரு சமூகம்; குடியுரிமை விண்ணப்பத்துக்கான தஸ்தாவேஜூக்களை இத்தனை வேகமாக எவ்வாறு சமர்ப்பித்துவிட முடியும். அவற்றை அத்தனை இலகுவாக பெறுவதற்கான உட்கட்டமைப்பு வசதிகள் தான் அவர்களுக்கு இருந்ததா?
அதுமட்டுமன்றி 1949ஆம் ஆண்டு ஓகஸ்ட் 5 ஆம் திகதியிலிருந்து இரண்டாடுகளுக்குள் என்று தீர்க்கமான திகதியை நிர்ணயித்தது அந்த சட்டம்.
அப்படிப்பட்ட ஒரு சட்டத்தை எதிர்க்க வேண்டாமா? ஆனால் அதனை ஆதரித்து விட்டு அதனை இன்றும் நியாயப்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள் பொன்னம்பலம் தரப்பினர்.
அவ்வாறு அவர்கள் அதனை விண்ணப்பிக்க முடியாத நிலையில்; இறுதியில் எட்டு லட்சம் பேர் தமது குடியுரிமையை இழந்தார்கள். உலக வரலாற்றில் இத்தகைய ஒரு அவலம் எங்கும் நடந்து இருக்காது.
செல்வநாயகம், வன்னியசிங்கம், சிவபாலன் ஆகியோர் தமிழ் காங்கிரசிலிருந்து வெளியேறியது ஜி.ஜி.பொன்னம்பலத்தின் முதல் இரு சட்டமூலம் தொடர்பான நிலைப்பாட்டோடு அல்ல. மாறாக ஜி.ஜி பொன்னம்பலம் அதன் பின்னர் டிசம்பர் 10 அன்று நிறைவேற்றப்பட்ட இந்திய (பின்னர் பாகிஸ்தானியும் சேர்த்துக்கொள்ளப்பட்ட) குடியுரிமை சட்டம். அதன் பின்னரான சட்டங்கள் மற்றும் அரசாங்கத்துடனான அமைச்சுப் பதவிக்கான பேரம்பேசல் போன்ற செயல்களால் தான் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.
தமிழ் காங்கிரஸ் உறுப்பினர்கள் நான்கு பேரும் சேர்ந்து அச்சட்டத்தை எதிர்த்து வாக்களித்திருந்தாலும் அந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டுத்தான் இருந்திருக்கும். ஏனென்றால் அச்சட்டம் 20அதிகப்படியான வாக்குகளால் நிறைவேற்றப்பட்டிருந்தது. ஆனால் மலையகத் தமிழர்களால் அதிக நம்பிக்கை வைக்கப்பட்டிருந்த ஒரு கட்சி தமது அமைச்சு பதவிக்காக ஒரு இனத்தின் நாசத்துக்கு துணைபோனது வரலாற்றின் கருப்பு பக்கங்களில் ஒன்று. மேலும் தமிழ் காங்கிரஸ் அந்த அநீதியை எதிர்த்து மலையக சக்திகளுடன் சேர்ந்து ஒரு அழுத்தக் குழுவாக இயங்கியிருக்க முடியும். அதைச் செய்யவில்லை.
இந்திய பாகிஸ்தானிய குடியுரிமை சட்டமானது முன்னைய குடியுரிமை சட்டத்திலிருந்து பெரிதாக எந்த வேறுபாடும் இல்லை என்று ஆய்வாளர் எல்.எல்.டீ.பீரிஸ் தனது நூலில் நிறுவுகிறார்.
இதன் மூலம் அம்மக்கள் ஒரு சான்றிதழை எங்கும் எடுத்துச் செல்ல வற்புறுத்தப்படுகின்றனர். அதை அவர்கள் அடிக்கடி வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். இத்தகைய சான்றிதழ்கள்; வேலை, நேர்காணல் மற்றும் கடன்கள், வீட்டுத் திட்டங்கள், அடையாள அட்டைகள் போன்றவற்றுக்கு விண்ணப்பிக்கும் போது சமர்ப்பிக்கப்பட வேண்டும். பெரும்பாலும், இந்தச் சான்றிதழ்கள் இந்தியத் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் நேர்மையான குடிமகனா அல்லது “கள்ளத்தோணியா” (சட்டவிரோதமாக குடியேறியவர்) என்பதை உறுதிப்படுத்தப் பயன்படுத்தப்படுகின்றன.
பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மூன்றாவது சட்டம் இலங்கை (பாராளுமன்றத் தேர்தல்கள்) திருத்தச் சட்டம், எண். 1949 ஆம் ஆண்டின் 48. பிரஜைகளாக இல்லாத நபர்கள் எந்தவொரு வாக்காளர் பதிவேட்டிலும் தங்கள் பெயரை உள்ளிடவோ அல்லது தக்கவைக்கவோ முடியாது என்று இந்தச் சட்டம் வகுத்தது, இலங்கைக் குடியுரிமையைப் பெறுவதில் வெற்றிபெறாதவர்களும் திறம்பட உரிமையற்றவர்கள் என்ற யதார்த்தத்தை உறுதிப்படுத்துகிறது.
இந்த பாராளுமன்ற விவாதம் ஒன்றல்ல மூன்று விவாதங்களை நோக்க வேண்டும்
- 20.08.1948 குடியுரிமை சட்டம் (Citizenship Bill) – ஜீ.ஜீ. பொன்னம்பலம், எஸ்.ஜே.வி.செல்வநாயகம் உள்ளிட்ட தமிழ் காங்கிரஸ் உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களிக்கிறார்கள். மொத்தம் 53 பேர் ஆதரவாகவும் 35 பேர் எதிராகவும் வாக்களித்திருந்தனர். ஆனால் அடுத்த இரண்டைப் பாருங்கள்
- 25.08.1948 குடிவரவு குடியகல்வு சட்டம் (The Immigrants and Emigrants Bill) – இதில் எஸ்.ஜே.வி செல்வநாயகம் உள்ளிட்ட காங்கிரஸ் உறுப்பினர்களும் மலையக உறுப்பினர்களான தொண்டமான், சி.வி.வேலுப்பிள்ளை உள்ளிட்டோரும் எதிர்த்து வாக்களிக்கின்றனர். இதிலும் மொத்தம் 53 பேர் ஆதரவாகவும் 35 பேர் எதிராகவும் வாக்களித்திருந்தனர்.
- 10.12.1948 இந்திய பாகிஸ்தான் குடியிருப்போர் சட்டம் (Indian and Pakistani Residents Citizenship Bill) – இந்த இறுதி சட்டத்தைத் தான் ஜி.ஜி.பொன்னம்பலம் அரசாங்கத்துடன் சேர்ந்து ஆதரவு வழங்கி அதனை நிறைவேற்ற உதவுகிறார். மொத்தம் 52 பேர் ஆதரவாகவும் 32 பேர் எதிராகவும் வாக்களித்திருந்தனர்.
இது மட்டுமன்றி 20.10.1949 இல் பாராளுமன்ற தேர்தல் திருத்தச் சட்டத்துக்கு (Parliamentary Elections Amendment (Franchise)) இடதுசாரிக் கட்சிகள், மலையகக் கட்சிகள், எஸ்ஜே.வி செல்வநாயகம் உள்ளிட்டோர் எதிர்த்து வாக்களித்திருக்க ஜி.ஜி.பொன்னம்பலம் அரசாங்கத்துக்கு ஆதரவாக வாக்களித்திருந்தார். குடியுரிமை உள்ளவர்களுக்கே தேர்தலில் வாக்களிக்கும் உரிமை உண்டு என்பது சட்டமாக்கப்பட்டது. தேர்தலில் குடியுரிமையை இழந்திருந்த மக்கள் இந்த சட்டத்தின் மூலம் வாக்குரிமையையும் இழந்தார்கள் என்பதையும் கவனியுங்கள்.
இடதுசாரிகள்
இந்த மசோதாவை கடுமையாக எதிர்த்த சக்திகள் இடதுசாரிகள் தான். கலாநிதி என்.எம்.பெரேரா தலைமையிலான ரொஸ்கியவாத லங்கா சமசமாஜக் கட்சி, கலாநிதி கொல்வின் ஆர்.டி.சில்வா போல்ஷ்விக் லெனினிஸ்ட் கட்சி, பீற்றர் கெனமன் தலைமை தாங்கிய கொம்யூனிஸ்ட் கட்சி என்பன இதனை எதிர்த்து பாராளுமன்றத்தில் வாதிட்டன. சட்டத்தின் முதலாவது கோட்பாட்டையே மீறி உதாசாசீனம் செய்கிற ஒரு சட்டம் என்று கூறி மிகப் பிரபலமான சிங்கள தேசியவாதியாக அறியப்பட்ட எச்.ஸ்ரீ.நிசங்க இம்மசோதாவை எதிர்த்தார்.
இந்த வாக்களிப்பை இன்னோர் வகையில் சொல்வதாயின் வர்க்க அடிப்படையில் அளிக்கப்பட்டன என்றால் அது மிகையில்லை என்று குமாரி கலாநிதி ஜெயவர்த்தன குறிப்பிடுகிறார்.
கலாநிதி என்.எம்.பெரேராவின் உரையில் இப்படிக் கூறினார்
“இந்த இனவாதம், ஹூஸ்ரன் சாம்பலினுடனும், அடொல்ப் ஹிட்லருடனும் இறந்துவிட்டதாகவே நான் நினைத்திருந்தேன். தீர்க்கதரிசனம் வாய்ந்த அரசியல்வாதி எனத் தம்மைக் கூறிக்கொள்ளும் எவரேனும் இந்த வகையான ஒரு மசோதாவை ஆதரிக்க வேண்டுமென எங்களைக் கேட்பார்கள் என நான் நம்பவில்லை. மீதி உலகத்திலிருந்து ஒதுங்கி நாம் கடவுளாற் தேர்ந்தெடுக்கப்பட்ட இனம், நாங்கள் மாத்திரமே இந்த நாட்டின் பிரஜைகளாக இருக்க உரிமை உடையவர்கள் என்று கருதுவோமானால் நாம் முன்னேறவே முடியாது.”
இந்த விவாதத்தின் போது பீட்டர் கெனமன் இப்படி ஒரு வேடிக்கையான விபரத்தையும் வெளிபடுத்தினார்.
“இதில் கோரப்படும் சான்றுகளின் அடிப்படையில் பார்க்கப்போனால் மதிப்புக்குரிய பிரதமர் திரு டீ.எஸ்.சேனநாயக்க அவர்கள் கூட இலங்கைப் பிரசையாக ஆக முடியாது. ஏனெனில் அவரது தந்தை இலங்கையில் பிரந்ததர்கான சான்றை அவரால் கூட சமர்ப்பிக்க முடியாது.” என்றார்.
குடியுரிமைப் பிரச்சினையிலிருந்து ஆரம்பமான தமிழ்த் தேசிய அரசியல்
இலங்கையின் தேசிய பிரச்சினையாக தேசிய இனப்பிரச்சினை ஆனதை நாமறிவோம். ஆனால் தமிழ்த் தேசியப் பிரச்ச்சினைகளுக்கு முத்தாய்ப்பாக இருந்த பிரச்சினை குடியுரிமை பிரச்சினை தான். இலங்கையின் தமிழ்த் தேசியவாதத்துக்கு சுமார் மூன்று தசாப்தங்களுக்கு மேல் தலைமை தலைமை தாங்கிய தமிழரசுக் கட்சியின் தோற்றமும் இங்கிருந்து தான் ஆர்மபமானது. அதுபோல இலங்கையின் தமிழ்த் தேசியத் தலைவராக அக்காலத்தில் தலைமை கொடுத்த எஸ்.ஜே.வி.செல்வநாயகமும் அத்தகைய தலைவராக உருவானது இந்த குடியுரிமைப் பிரச்சினைக்கு ஊடாகத் தான்.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் ஆரம்ப மாநாடு மருதானையிலுள்ள அரசாங்க லிகித சேவையாளர் சங்க மண்டபத்தில் 18-12-49 அன்று நடந்தபோது கட்சியின் ஸ்தாபக தலைவர் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் கியூ.ஸி. அவர்கள் அதன் முதல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த அவ்வாரம்ப மாநாட்டில், செல்வநாயகம் அவர்கள் ஆற்றிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உரையில் தெட்டத் தெளிவாக தமிழ் காங்கிரசிலிருந்து விலகியதற்கான காரணம் பிரஜாவுரிமைச் சட்டத்தை அது ஆதரித்தது தான் என்று விளக்குகிறார். அது மட்டுமன்றி இந்திய வம்சாவளி மக்களின் பிரச்சினையை தமிழ் மக்களின் மையப் பிரச்சினையாக எடுத்தியம்புகிறார். அவர்களுக்கு ஏற்பட்ட இன்னல்கள் நமக்கு ஏற்பட்ட இன்னல்களே என்கிறார். இந்தியா வந்து உதவும் என்று அம்மக்கள் எதிர்பார்க்கவில்லை. அவ்வுதவியை நாம் தான் செய்ய வேண்டும். அது இக்கட்சியின் அடிப்படைக் கொள்கைகளில் இடம்பெறுதல் வேண்டும் என்றார். “இன்று அவர்களுக்கு நாளை எங்களுக்கு” என்று அவர் நாடாளுமன்றத்தில் குடியுரிமை சட்டம் கொண்டுவரப்பட்டபோது தனது உரையில் அழுத்தமாகக் கூறினார். அதே கோஷத்தை தீர்க்கதரிசனமாக அவர் இந்த காலத்தில் பல இடங்களில் தெரிவித்து வந்தார். இதோ அப்பேச்சில் இந்திய வம்சாவளி மக்கள் பற்றிய பகுதிகள்.
1948ஆம் ஆண்டு டிசெம்பர் மாதத்தில், அரசாங்கம் இந்தியப் பிரஜா உரிமைச் சட்டமொன்றைப் பிரதிநிதிகள் சபையிற்கொண்டுவந்தது இச்சட்டத்தை இலங்கை, இந்தியக் காங்கிரசும் புதுடெல்லியிலுள்ள இந்திய அரசாங்கமும் எதிர்த்து வந்தன. இது, தமிழ்க் காங்கிரசின் அமைப்பு விதிகளிலும் அதன் மகாநாடுகள் பலவற்றிலும் வற்புறுத்தப்பட்ட - அடிப்படையான கொள்கைகளுக்கு முரண்பட்டதாயிருந்தது. அன்றியும், ஐந்து வருஷங்கள் இலங்கையில் வசித்த இந்தியர்களுக்குப் பிரஜாவுரிமை பெறுவதற்காகவும், அவர்களுடைய பிறவுரிமைகளை நிலைநாட்டுவதற்காகவும் உழைப்பதற்காக, இலங்கை, இந்தியக்காங்கிரசுக்குத் தமிழ்க்காங்கிரஸ்த் தலைவர் கைச்சாத்திட்டுத், தேர்தற் காலத்தில் வாக்களித்திருந்தார். எதைப்பெறுவதற்கு உழைப்பதாக இவர் வாக்களித்திருந்தாரோ, அதைப் பாராளுமன்றத்திற் கொண்டுவரப்பட்ட இச்சட்டம் மறுத்தது. அவரும் தமிழ்க் காங்கிரஸ் பிரதிநிதிகள் சிலரும் இதனை ஆதரித்தனர். இதிலிருந்து தமிழ்க்காங்கிரஸ் தலைவரும் பிரதிநிதிகள் சிலரும் உரிமைப் போரைக் கைவிட்டுவிட்டன ரென்பது தெட்டத்தெளிவாக விளங்கிவிட்டது. இதன் பயனாக , தமிழ்க் காங்கிரஸ் பாராளுமன்ற அங்கத்தவர்கள், இரு கட்சியினராகப் பிரிந்தனர். முன்கூறியபடி, ஒரு பகுதியினர் - தங்கள் தேர்தற்காலக் கொள்கையைக் கைவிட்டுவிட்டனர். மற்றப் பகுதியினராய - உங்கள் முன்நிற்கும் நாங்கள் - தேர்தற்காலக் கொள்கையைக் கடைப்பிடித்து. உரிமைப் போரைத் தொடர்ந்து நடத்தத் தீர்மானித்திருக்கின்றோம்....
இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்களில், அரைப் பங்கினரைப் பிரஜாவுரிமை யற்றோராகச் செய்யும் ஒரே நோக்குடன், அரசாங்கம் பிரஜாவுரிமைச் சட்டங்களை நிறைவேற்றியிருக்கின்றது. அந்நியர்களுக்கு எதிராகவே இச்சட்டங்கள் கொண்டுவரப்பட்டிருக்கின்றனவென்று வெளிக்குக் கூறிக்கொள்கின்றனர். இது ஒரு போலி நியாயமாகும். இலங்கையின் மத்திய பாகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் ஏழு லட்சம் தமிழ்த் தொழிலாளர்களுடைய பிரஜாவுரிமையைப் பறிப்பதே இச்சட்டங்களின் உண்மை நோக்கமாகும். இவர்களுள்ளே பெரும்பாலானோர் வேறு நாட்டையே அறியமாட்டார்கள், அவர்களெல்லோரும் இந்தியர்களல்லர்; இலங்கையர்களே. தமிழ்பேசும் மக்களாக இருப்பதே அவர்களுடைய ஒரே ஒரு குற்றம். அரசியல் அதிகாரம் எண்ணுத் தொகையினையே பொறுத்திருக்கின்றது. இந்த மலைநாட்டுத் தமிழர்களைச் சேர்த்து எண்ணினாலும், இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்கள் அரசியலதிகாரம் அற்றவர்களாக இருக்கின்றார்கள்.
இவர்களுள் மலைநாட்டுப் பிரதேசத்தில் வசிக்கும் தமிழ் மக்களை நீக்கிவிட்டால் எஞ்சியிருக்கும் தமிழ் பேசும் மக்கள், தொகையில் மிகவும் குறைந்த அரசியல் அநாதைகளாய் விடுவார்கள். இது போதாதென்று, இந்த மலைநாட்டுத் தமிழ்த் தொழிலாளர்களின் வாக்குரிமையைப் பறிப்பதற்குச் சட்டம் இயற்றிவிட்டார்கள். இது கொடுமையிற் கொடுமையாகும். அரசாங்கத்தின் நோக்கம், இந்நாட்டில் வசிப்பதற்குப் பூரண உரிமையுடைய இம்மக்களை இந்நாட்டைவிட்டுத் துரத்துவது; அல்லது அவர்களைப் பலவந்தமாகத் துரத்துவது; அல்லது அவர்களைப் பலவந்தமாகச் சிங்களம் பேசும் மக்களாக மாற்றுவதுதான் என்பது எவருக்கும் எளிதிற்புலனாகும்....
மலைநாட்டில் வாழும் தமிழ்த் தொழிலாளர்களுடைய நிலைமையானது, இங்கு கூறிய தாழ்த்தப்பட்டோருடைய நிலையிலும் பார்க்கக் கேவலமானதாய் இருக்கின்றது. அவர்கள் அரசியலில் தீண்டாதவர்களாய் விட்டார்கள். அவர்களுக்குப் பிரஜாவுரிமை இல்லாமலிருப்பது மாத்திரமன்றி, தமக்கென ஒரு நாடுமற்ற அகதிகளாகவு மிருக்கின்றார்கள். ஏனைய தமிழ் பேசும் மக்கள் இவர்களுக்கு வந்திருக்கும் இன்னலைத் தங்களுக்கு வந்ததாகவே கருதுதல் வேண்டும். அவர்கள் உதவிக்கு எதிர்பார்ப்பது இந்தியாவையல்ல ; சுதந்திரம் விரும்பும் இலங்கை வாழ் மக்களிடமிருந்தே அவ்வுதவி வருதல் வேண்டும். இவ்விரண்டு விஷயங்களும் - நீங்கள் ஆரம்பிக்க வந்திருக்கும் இக்கட்சியின் அடிப்படைக் கொள்கைகளில் இடம் பெறுதல் வேண்டும்....
ஏழு லட்சம் தமிழ் பேசும் மக்கள் அரசியலில் பகுபற்றுவதற்கு வழியில்லை. இதுவுமின்றி, இப்பிரிவிவினருக்குக் கல்வி வசதியில்லை. தம்மைச் சுற்றிலுமிருக்கும் கிராமத்திற் குடியேறுவதற்கு உரிமையில்லை. இன்னும் பல இடையூறுகளுக்குட்பட்டு வாழும் இம்மக்கள், உண்மையாய் அரசியல் அனாதைகள்.
எதற்காக இப்படியெல்லாம் அரசாங்கம் செய்கிறது? தமிழ் மக்களின் அரசியல் பலத்தைக் குறைப்பதற்காகவல்லவா? அவர்களின் எண்ணிக்கையை அறுக்கச் செய்வதற்காகவல்லவா? எம்மினம் இப்படி அழிந்து போவதற்கு மாற்று மருந்து உண்டா? இல்லையா?...
அரசியற் துறையில் ஓர் இனம் அழியாமலிருப்பதற்குப் பல ஏதுக்கள் தேவை. இவற்றுள் ஒன்று, அந்த இனத்தின் எண்ணுந் தொகை குன்றாமலிருப்பது. இன்னுமொன்று, அந்த இடம் வசிக்கும் புரதேசம் பறிபோகாமலிருப்பது...
இங்கே இன்னொன்றையும் கவனத்திற் கொள்ளவேண்டும். செல்வநாயகம் தேர்தல் வெற்றியை இலக்கு வைத்து இந்த பிளவை மேற்கொள்ளவில்லை. வைத்து, அல்லது வாக்கு வங்கியை இலக்கு வைத்து இந்திய வம்சாவளி மக்களுக்காக குரல் கொடுத்தார் என்றோ கூட கூற முடியாது. ஏனென்றால் அவரின் தேர்தல் களமோ, வாக்குக் களமோ மலையகம் இல்லை. அவரும் அவரின் கட்சியும் வடக்கு கிழக்கில் தான் களமமைத்து இருந்தது என்பதையும் நாம் இங்கு கவனிக்க வேண்டும். இந்திய வம்சாவளி மக்களின் பால் வடக்கு கிழக்கு மக்களின் சிரத்தையையும், அக்கறையையும் குவிக்கவைத்தன் பின்னால் உள்ள நேர்மையான பிரக்ஞையை எவரும் சந்தேகித்து விட முடியாது.
தமிழரசுக் கட்சி தொடக்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகளின் பின்னர் அதாவது 1951 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழரசுக் கட்சியின் முதலாவது மாநாடு திருகோணமலையில் நடத்தப்பட்டபோது அங்கே பிரதான உரையாற்றிய செல்வநாயகம் அவர்கள் இந்திய வம்சாவளி மக்கள் பற்றி இப்படித் தொடக்குகிறார்...
“இவ்விஷயத்தில், நடப்பது என்னவென்று ஆராய்வோம். கடந்த ஒரு நூற்றாண்டில், இலங்கையில் சுமார் 7, 8 லட்சம் தமிழ் மக்கள் வந்து குடியேறினார்கள். சர்வதேச அரசியல் நீதியின்படி, இந்த 7, 8 லட்சம் தமிழ் மக்கள், இங்கு நிரந்தரமாய் இருக்கும் தமிழ் மக்களோடு ஒன்றுகூடி வாழ்வதற்கு உரிமையுண்டு. சிங்கள அரசாங்கம் இதற்கு முக்கு விரோதமான சட்டங்களையும் நடைமுறைகளையும் நடாத்தி வருகிறது. சிங்கள ஆட்சி உற்பத்தியான 1947 ஆம் ஆண்டின் பின், இந்த 7,8 இலட்சம் மலைநாட்டுத் தமிழ் மக்களின் பிரஜா உரிமை பரிபோகச் சட்டங்கள் ஏற்பட்டன. இச்சட்டங்களில் முதலாவதை, ஜனப்பிரதிநிதிகள் சபையில் விவாதிக்கும் நேரத்தில் நான் கூறினேன் : ‘குடியேறிய இந்தியத் தமிழ் மக்களுக்கல்ல, நிரந்தரமாய் வாழும் இலங்கைத் தமிழ் மக்களாகிய எங்களுக்கே இந்த அடி. இன்று அவர்களுக்கு நாளை எங்களுக்கு.”
இந்த உரையில் முழுக்க முழுக்க இந்திய வம்சாவளி மக்களின் குடியுரிமை, வாக்குரிமை பற்றியதாகத் தான் இருக்கிறது. அதை ஒட்டுமொத்த தமிழ் மக்களின் பிரச்சினையாக அவர் பார்க்கிறார். அது எதிர்காலத்தில் நிகழக்கூடிய அனைத்து தமிழ் மக்களின் மீதான அநியாயங்களுக்கான ஒத்திகையாகப் பார்க்கிறார். எச்சரிக்கிறார். தமிழரசுக் கட்சியின் ஆரம்பகால வருடாந்த மாநாட்டுத் தீர்மானங்களும் இந்திய வம்சாவளி மக்களின் பிரச்சினைகளைத் தாங்கித் தான் தீர்மானங்களாகவும், தலைமை உரைகளாகவும் இருந்திருக்கின்றன. தமிழரசுக் கட்சியின் மாநாட்டு மலர்களும் இதற்கு சிறந்த சாட்சிகள். மாநாட்டுத் தீர்மானங்களில் இந்திய வம்சாவளி மக்களின் பிரச்சினைகளுக்கான கோரிக்கைகள் பிரதான இடத்தைப் பிடித்திருந்தன. அதன் பின்னர் தான், மொழிப் பிரச்சினை, குடியேற்றப் பிரச்சினை, அதிகாரப் பரவலாக்கம் போன்ற கோரிக்கைகள் சேர்ந்துகொண்டன.
மஸ்கெலியா நாடாளுமன்ற உறுப்பினர் கடுமையான வாதப் பிரதிவாதங்களை முன்வைத்தார். அவரது வாத பிரதிவாதங்கள் அன்றைய இந்திய வம்சாவளி மக்களின் வாழ்வியலை, இந்திய வம்சாவளி மக்களின் அறியாமையை, இலங்கை சட்டம் என்றாலே என்னவென்று புரியாத நிலையை, சட்டப்பதிவுகள், நிர்வாக நடைமுறைகள் என்றால் என்னவென்றே அறியாத நிலையை எடுத்து இயம்பியது. அத்துடன் கல்வி கற்காத இந்திய வம்சாவளி மக்களின் நிலையையும், இந்திய வம்சாவளி மக்கள் தொழில் அடிமைகளாக வைத்துக்கொள்ளப்பட்டு இருந்தார்கள் என்பதையும் தெளிவாக எடுத்து இயம்பியது.
மஸ்கெலியா நாடாளுமன்ற உறுப்பினர் மோத்தா மேலும் சில கேள்விகளை சபையில் உள்ளவர்களிடம் கேட்டிருந்தார்.
இந்த சபையில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாம் இலங்கை இலங்கையின் பூர்வீக குடிகள் என்பதை உறுதிப்படுத்த முடியுமா? என்பது முக்கியமான மஸ்கெலியா நாடாளுமன்ற உறுப்பினரின் வாத பிரதிவாதமாக அமைந்தது.
அத்துடன் சேனநாயக்க அவர்களின் இரட்டை வேடத்தை துயிலுரிக்கும் முகமாக கடந்த 1930 களின் பிற்பகுதியிலும், 1940 களின் முற்பகுதியிலும் இந்திய மக்களை ஆவலாக அழைத்து வந்ததையும் இந்த மக்களை கொண்டு இறப்பர் தொழிலுக்கு பயன்படுத்தியதையும் சுட்டிக்காட்டி பேசினார்.
1928 களில் இந்திய மக்களை இங்கே அழைத்து வரவேண்டாம் என்று தாம் முரண்பட்டு நின்றதையும் மஸ்கெலியா நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காடினார்.
அத்துடன் இந்த சபையில் உள்ள இந்திய வம்சாவளி மக்களின் மீதான இனவாதத்தை தூண்டும் பேச்சுக்களை பேசும் நபர்கள் அனைவரும் தென்னிந்திய நாட்டில் இருந்து வந்தவர்களே என்ற வாதத்தையும் மஸ்கெலிய உறுப்பினரால் சுட்டிக் காட்டப்பட்டதுடன் நீங்கள் வங்காள நாட்டை சார்ந்தவர்கள் இல்லை என்றும் வாதிட்டார்.
மகாவம்சத்தில் இந்நிகழ்வு பற்றி
இலங்கையின் வரலாற்றை நீண்ட காலமாக; உத்தியோகபூர்வமாக பதிவு மரபை உலகில் இலங்கை மட்டுமே கொண்டிருக்கிறது. இதுவரை கி.மு ஐந்தாம் நூற்றாண்டு தொடக்கம் கி.பி 2010 வரை சுமார் இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கும் மேல் எழுதப்பட்டு வந்திருக்கிறது. இவை அனைத்தும் மொத்தம் 6 தொகுதிகளைக் கொண்டது. இதில் நான்காவது தொகுதி 1936 முதல் 1956 வரையான காலப்பகுதியின் வரலாற்றை பதிவு செய்திருக்கிறது. 1948 ஆம் ஆண்டு குடியுரிமை பறிப்பு நிகழ்வும் இந்த நான்காம் தொகுதிக்குள் தான் அடங்கியிருக்கிறது. அந்தத் தொகுதியில் இதைப் பற்றி அதிகளவு விபரங்கள் தரப்படவில்லையாயினும்; சொல்லப்பட்டவை என்ன என்பதையும் இங்கே பதிவு செய்தல் இந்த நூலுக்கு வலுச் சேர்க்கும்.
“1948 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட குடியுரிமைச் சட்டத்தின் விளைவாக இந்திய வம்சாவளியினரின் வாக்குரிமை பறிபோனதுடன் தமக்கான பிரதிநிதிகளை தெரிவு செய்யும் உரிமையும் அவர்களுக்கு இல்லாது போனது.”
அதே நூலில் இன்னொரு இடத்தில்...
“அமைச்சர்கள் தமது கொள்கைகளை செயற்படுத்தும் போது ஏற்கெனவே ஒப்புக்கொண்ட அமைச்சரவை சம்பிரதாயங்களுக்கு புறம்பாக நடந்துகொண்ட சந்தர்ப்பங்களும் ஏற்பட்டன. கொள்கை ரீதியான சிக்கல் ஏற்படின் கூட்டுப்பொறுப்பு கொள்கையின் படி அமைச்சரொருவர் அப்பொறுப்பில் இருந்து விலகி விடுவதே இந்த நாட்டின் அமைச்சரவை முறையின் படி ஆரம்பத்திலேயே ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது. அதன் பிரகாரம் டீ.எஸ்.சேனநாயக்கவின் அமைச்சரவையில் முதன் முதலாக விலகியவர் வர்த்தக அமைச்சராக இருந்த சீ.சுந்தரலிங்கம். குடியுரிமைச் சட்டம் பற்றி அவர் கொண்டிருந்த கொள்கையே இதற்கு காரணமாக இருந்தது. ஆனாலும் அமைச்சரவையில் இருந்து இவ்வாறு விலகியதால் சேனநாயக்க அரசாங்கத்தின் நிலைப்பாடுகளில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.”
மகாவம்சத்தின் இந்த பதிவின் படி தமிழர் தரப்பின் எந்த நிர்பந்தத்தாலும் குடியுரிமைபறிப்பது என்கிற அரசின் கொள்கையை மாற்ற முடியாமல் போனது என்று திட்டவட்டமாகக் கூறுகிறது. சுதந்திர இலங்கையின் அமைச்சரவையில் இருந்து முதலாவது விலகல் குடியுரிமைப் பிரச்சினையால் தான் நிகழ்ந்தது என்பதை மகாவம்சம் பதிவு செய்கிறது.
குடியுரிமை அடிப்படை உரிமை
முடிவாக, “குடியுரிமை என்பது அடிப்படை உரிமை” என்று உலக அளவில் ஐ.நா.வின் மனித உரிமைகள் சாசனம் அதே 10.12.1948 அன்று பாரிஸ் நகரில் பிரகடனப்படுத்தப்பட்டுக் கொண்டிருந்த அதே நாள் இங்கே எட்டு லட்சம் மக்கள் குடியுரிமை பறிக்கப்பட்டு நாடற்றவர்களாக ஆக்கப்பட்டுக்கொண்டிருந்தார்கள். அந்த மனித உரிமைகள் சாசனத்தின் 15வது பிரிவில் தான் “குடியுரிமை என்பது அடிப்படை உரிமை” என்று பிரகடனப்படுத்தியது.
குடியுரிமைப் பறிப்பின் மூலம் இம்மக்கள் நாட்டையும் இழந்தார்கள், குடியுரிமையையும் இழந்தார்கள், வாக்குரிமையை இழந்ததன் மூலம் தமது பிரதிநிதிகளைத் தெரிவு செய்யும் வாய்ப்பையும், உரிமையையும் இழந்தார்கள். பெரும்பாலான தோட்டத்தொழிலாளர்களை நாடற்றவர்களாகவும் வாக்குரிமையற்றோராகவும், ஈற்றில் சட்டவிரோதக் குடியேறிகளாகவும் மாற்றிவிட்டன இச்சட்டங்கள். அவர்கள் தொழில் நிமித்தம் இலங்கையில் வந்து தங்கி தொழில் பார்த்துவிட்டு நாடு திரும்பலாம் என்கிற நிலைக்கே ஆளாக்கப்பட்டார்கள். அடிப்படை உரிமைகளை பலவற்றை தொடர்ந்தும் அனுபவிப்பதற்கான கதவுகள் இதனூடாக அடைக்கப்பட்டன.
வாக்களிக்கும் தகைமை இல்லாத ஒரு சமூகத்தின் நலனுக்காக எந்தவித சமூகநலத் திட்டங்களையும் முன்னெடுக்கும் தேவை அரசியல்வாதிகளுக்கு இருக்கவில்லை. எனவே இந்திய வம்சாவளி மக்களிடம் இருந்து பறிக்கப்பட்ட அந்த உரிமை வென்றெடுப்பதற்கு போராடுவதற்குப் பதிலாக, ஆதரவளிப்பதற்கு பதிலாக அதையே வசதியாக தமது அரசியல் நலனுக்காக திருப்பிக் கொண்டனர். பாரபட்சங்களை எளிமையாக மேற்கொண்டனர்.
- Rajan Holle & Kirupaimaar Holle, Democracy Stillborn, Lanka’s Rejection of equal rights at Independence?, an imprint ofthe Perera Hussein Publishing House, 2022.
- The council of State Debates Volume II, 1941, (10th November to 22 November, 1941) Government of India Press, simla. 1942.
- A. Jeyaratnam Wilson, Electoral Politics in an Emergent State: The Ceylon General Election of May 1970, Cambridge University Press, 1975
- ராஜனி திராணகம, ராஜன் ஹூல், தயா சோமசுந்தரம், கே. ஸ்ரீதரன், முறிந்தபனை - இலங்கையில் தமிழர் பிரச்சனை: உள்ளிருந்து ஒரு ஆய்வு – மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள் (யாழ்ப்பாணம்) 1996
- BRITISH DOCUMENTS ON THE END OF EMPIRE - Series B Volume 2, Sri Lanka - Editor KM DE SILVA - Part 11 - TOWARDS INDEPENDENCE - 1945--1948, Published for the Institute of Commonwealth Studies in the University of London (P-220)
- மலல்கொட பந்துதிலக்க, இலங்கையின் தேர்தல் புராணம், Colombo Shega Enterprises, 2002
- K.M.De Silva and Howard Wriggins - J.R.Jayawardena of Sri Lanka A Political Biography, 1906-1956, Univ of Hawaii Press, 1988)
- ஜவஹர்லால் நேருவின் இலங்கை விஜயத்தின் போது இந்தியத் தோட்டத் தொழிலாளர்களை அரசியல் ரீதியில் அணிதிரட்டுவதற்காக உருவாக்கிய இலங்கை இந்தியர் காங்கிரஸ் என்கிற கட்சி ஐ.எக்ஸ்.பெரைரா, ஜீ.ஆர்.மோத்தா ஆகியோரின் தலைமையில் தான் ஆரம்பிக்கப்பட்டது.
- ஈழகேசரி, 18.11.1945
- Ce Cuntaraliṅkam, Eylom: beginnings of freedom struggle;: Dozen documents, – Arasan Printers, Sri Lanka, 1967
- த.இளங்கோவன், மலைநாட்டுத் தமிழருக்கு துரோகம் இழைத்தது யார்?, தமிழன் வெளியீடு, 1970.
- இலங்கை பாராளுமன்றத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆற்றிய உரை. 10/08/23.
- ஜே..எல்.பெர்னாண்டோ இலங்கை சுதந்திரம் அடைகின்ற காலப்பகுதியில் லேக் ஹவுஸ் நிறுவனத்தில் பணியாற்றிய பத்திரிகையாளர். மேலும் அவர் அபோதைய அரசியல் தலைவர்களோடு நெருங்கிய தொடர்புகளை பேணிவந்ததுடன், அவர்களின் ஊடக தொடர்பாளராகவும் இருந் து வந்தவர். அவர் எழுதிய இலங்கையின் மூன்று பிரதமர்கள் (உட் கதைகள்) (Three Prime Ministers of Ceylon-An 'Inside Story') என்கிற நூல் மிகவும் பிரபல்யமானது. இதுவரை வெளிவராத பல உள் கதைகளைக் கொண்ட அவரின் நேரடி அனுபவங்களை அவர் அந்த நூலில் பதிவு செய்திருக்கிறார்.
- Pieris, L. L. T. The Citizenship Law of the Republic of Sri Lanka. (Ceylon) (Colombo: Own Publication. 1974).
- ராஜனி திராணகம, ராஜன் ஹூல், தயா சோமசுந்தரம், கே.ஸ்ரீதரன், முறிந்தபனை, UTHR, 1996
- திருகோணமலையில் 14.04.1951 ஆம் ஆண்டு நடந்த தமிழரசுக் கட்சியின் முதலாவது மாநாட்டில் சா.ஜே.வே.செல்வநாயகம் ஆற்றிய உரையிலிருந்து.
- மகாவம்சம் – 1935 – 1956 (தொகுப்பு - கலாநிதி நந்ததேவ விஜேசேகர) –(இரண்டாம் பதிப்பு 1996), கொடகே சகோதரர்கள், கொழும்பு. (சிங்களப் பதிப்பு)