Headlines News :

காணொளி

ஜனாதிபதி விருது

ஜனாதிபதி விருது
நமது மலையகத்துக்கு

சுவடி

கொழும்பின் பெயர் எப்படி உருவானது? ( கொழும்பின் கதை - 13) என்.சரவணன்

கொழும்பின் உருவாக்கம் எங்கிருந்து தொடங்கியது, அது எத்தனை அந்நிய சக்திகளிடம் சிக்குண்டு மாற்றம் கண்டு இந்த நிலையை அடைந்தது என்பதைப் பற்றிய விரிவான ஆய்வை இத்தொடரில் இனி வரும் வாரங்களில் செய்வோம். அதே வேளை “கொழும்பு” என்கிற பெயர் உருவானதன் காரணங்களை இங்கே ஆராய்வோம்.

  • தமிழில் – கொழும்பு
  • ஆங்கிலத்தில் – கொலொம்போ
  • சிங்களத்தில் – கொலம்ப

என்று இப்போது பயன்பாட்டில் உள்ளது.

கொழும்பு என்கிற பெயர் வருவதற்கான ஏதுவான உறுதியான காரணம் என்ன என்பது தொடர்பாக இன்றும் குழப்பகரமான விளக்கங்களே நீடிக்கின்றன. அதிகமான விபரங்கள் வாய்மொழிக் கதைகளாக நீல்பவையாக்கவுமே உள்ளன. போர்த்துக்கேயரின் வருகையோடு தான் “கொழும்பு” என்கிற பதம் அறிமுகப்படுத்தப்பட்டது என்று ஒரு கருத்து இருந்து வருகிறது. அதேவேளை கொழும்பு என்கிற பதத்துக்கு ஏறத்தாள நிகரான பதங்கள் அதற்கு முன்னர் பயன்படுத்தப்பட்டுள்ளன.

எவ்வாறிருப்பினும் கொழும்பு என்கிற பெயரானது சுதேச இலங்கையரால் உருவாக்கப்பட்டதல்ல. மாறாக காலனித்துவ காலத்தில் காலனித்துவவாதிகளால் உருவாக்கப்பட்டது தான்.

இலங்கைத் தீவானது உலகின் மேற்குக்கும் கிழக்குக்குமான கடற்பயணத்தின் ஒரு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த தீவாக ஆவதற்கு அதன் அமைவிடம் முக்கியமானதொரு காரணம் என்பதை நாமறிவோம். அது தவிர்க்கமுடியாத தரிப்பிடமாக அது எப்போது உலக நாடுகளால் உணரப்பட்டதோ அப்போதிருந்தே இலங்கையின் பொருளாதார, அரசியல் கேந்திர முக்கியத்துவமும் உறுதியாயிற்ற என்றே கூறலாம்.

அந்த கேந்திர முக்கியத்துவத்துக்கு மேலும் பலமூட்டிய இடம் கொழும்பு தான். இந்துசமுத்திரத்தின் முத்து என்று இலங்கையை ஒரு குறியீடாக கூறினாலும்; இந்து சமுத்திரத்தின் அதி முக்கியமான கேந்திர மையமாக கொழும்பு அமையப்பற்றது.

13 ஆம் நூற்றாண்டில் இன்னும் சொல்லப்போனால்தம்பதெனிய காலப்பகுதியில் கொழும்பை ஒரு துறைமுகத் துறையாக பயன்படுத்தியிருக்கிறார்கள் என்கிற குறிப்புகள் உண்டு.சீனாவினூடாக இலங்கைக்கு வந்த மார்கோ போலோ இந்தியாவின் மலபார் பிரதேசங்களுக்கு செல்லுமுன் கொழும்பிலிருந்து அல்லது அதற்கு அருகாமையிலிருந்து தான் புறப்பட்டிருக்ககூடும் என்கிற ஐயங்கள் உண்டு. ஆனால் மார்கோ போலோவின் குறிப்புகளில் குறிப்பாக கொழும்பு துறைமுகம் பற்றி குறிப்பிடப்படவில்லை..

இலங்கையைப் பற்றிய வரலாற்றுப் பதிவுகளைப் பொறுத்தளவில்; 1344 இல் மொரோக்கோவிலிருந்து இருந்து இலங்கைக்கு வந்த இபன் பதூதா எழுதிவிட்டுச் சென்ற பதிவுகளையும் வரலாற்றாசிரியர்கள் முக்கிய கவனத்திற்கெடுப்பர். அவர் அன்றைய பதிவுகளில் “கலம்பு” (Kalanbu) என்றே பயன்படுத்தியிருக்கிறார். கொழும்பையும், மேற்கு  தொடர்ச்சி கப்பற்துறை பற்றிய விபரங்களையும் அவர் பல விபரங்களைப் பதிவு செய்திருக்கிறார். அவர் “ஜலஸ்தி” என்கிற முஸ்லிம் இனத்தவர் ஒருவரே இந்த கொழும்பு நகரின் ஆட்சியாளராக இருந்ததாகக் குறிப்பிடுகிறார். மலே இனத்தைச் சேர்ந்த ஒரு கடற்கொள்ளையர் அவர் என்று  இந்தக் காலப்பகுதியில் கொழும்பு கரையோரங்களில் முஸ்லிம் வர்த்தகர்களின் செல்வாக்கு அதிகம் இருந்ததை நாம் அறிவோம். முதன்முதலில் போர்த்துக்கேயர் இலங்கையின் கரையோரங்களைக் கைப்பற்றிய போது கொழும்பு போன்ற இடங்களில் அவர்கள் சண்டையிட்டது சுதேசியர்களுடன் அல்ல. முஸ்லிம் வர்த்தகர்களுடன் தான். முஸ்லிம் வியாபாரிகளை அகற்றிவிட்டுத் தான் அந்த இடத்தை அவர்கள் கைப்பற்றிக்கொண்டார்கள்.

ஏறத்தாள அதே காலப்பகுதியில் சீனப் பேரரசரின் கடற்படைத் தளபதியான வாங் - தா – யுவான் (Wang – ta - Yuan), கொழும்பு நகரத்தைப் பற்றி விவரித்திருக்கிறார். அவர் இந்த இடத்தை "கொலாப்பு" என்று குறிப்பிட்டிருக்கிறார். இபன் பதூதா அதை "கலங்பு" என்று குறிப்பிட்டார். அழைத்தார். ஆனால் அவர்களின் உச்சரிப்பு எந்த அளவிற்கு இதில் தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதைக் குறிப்பாக உறுதிசெய்துவிட முடியாது..

16 நூற்றாண்டுக்கு முன்னர் கோட்டை அரசின் ஒரு பகுதியாகவும், அதே வேளை இந்தியத் தமிழர் மற்றும் இசுலாமிய வர்த்தகர்களின் ஒரு தளமாகவும் கொழும்பு விளங்கியது. கொழும்பு இவ்வாறு வர்த்தக நடவடிக்கைகளுக்கான வரலாற்று வழித்தடங்களை கடந்து தான் வந்துள்ளது.

கொழும்பு ஒரு வர்த்தகத் தலை நகரமாகவும் நிர்வாகத் தலைநகராகவும் போர்த்துக்கேயர் காலத்துக்கு முன்னரே ஆகிவிட்டது. ஆனால் போர்த்துக்கேயர்கள் தான் அதை உறுதியாக பலப்படுத்தினார்கள். போர்த்துக்கேயரின் காலத்துக்கு அண்மைய காலத்தில் தான் சிங்கள ராஜாவலிய நூலும் எழுதப்பட்டது. மகாவம்சம், தீபவம்சம், பூஜாவலிய போன்ற இலங்கையின் வரலாற்று நூல்களின் வரிசையில் ராஜாவலியவும் முக்கியமானது. அதில் “களன் தொட்ட” என்று இந்த இடத்தைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. “களனி கம்தொட்ட” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. கொழும்பு என்கிற பெயர் நிலைபெறுவதற்கு முன்னரே களனி என்கிற பிரதேசமும், களனி அரசும், (களனியை கல்யாணி என்றும் சிங்களத்தில் அழைப்பார்கள்.) களனி விகாரையும்,  களனி கங்கையும் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே இங்கு பிரசித்தி பெற்றிருந்தது என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும்.

பழங்காலத்தில் “கொலன் தொட்ட” என்று சிங்களத்தில் அழைக்கப்பட்டு வந்தது தான் மருவி கொழும்பு என்கிற பெயர் ஆனதாகவும் கூறப்படுவதுண்டு. கொலன் தொட்ட என்றால் கெலனி (களனி) ஆற்றின் துறைமுகம் என்று பொருள். கொழும்பில் இருந்த அந்த களனி ஆறு அன்று மிகவும் பிரபல்யமானது. களனி கங்கை கொழும்பில் வந்து கலக்கும் இடங்களான இன்றைய முகத்துவாரம், காலிமுகத்திடல் போன்ற இடங்களையொட்டித் தான் அன்றைய சிறு துறைமுகம் அமைந்திருந்தது.

பிரபல வரலாற்றாசிரியர் எமர்சன் டெனன்ட் (Emmerson Tennent) கொழும்பு என்கிற பெயரின் உருவாக்கம் பற்றி குறிப்பிடும்போது; “களன் தொட்ட” என்கிற பெயரைத் தான் போர்த்துக்கேயர் தமது உச்சரிப்புக்கு ஏற்ற ஒலியுடன் “கலம்பு” என்று மாற்றினார்கள் என்கிறார். அந்த வரிசையில் நீர்கொழும்பின் பெயரையும் போர்த்துக்கேயர் தான்  “நெகம்பு” (Negombo) என்று மாற்றியதாகவும் அவர் மேலும் குறிப்பிடுகிறார். 

கொழும்பு என்கிற பெயர் எப்படி உருவானது என்கிற கதைகளில் “கொள அம்ப தொட்ட” என்ற சிங்கள மொழிப் பெயரிலிருந்து மருவியது என்கிற கருத்தும் உண்டு. (கொள-பச்சை, அம்ப-மாம்பழம், தொட்ட - துறைமுகம்). மாந்தோப்புள்ள துறைமுகம் என்கிற அர்த்தத்தை அது குறிப்பதாக பல நூல்கள் குறிப்பிடுகின்றன.

அதேவேளை சிங்கள இலக்கியங்களிலும் சிங்கள நிகண்டுகளிலும் “கொழும்பு” என்கிற பெயர் பிற்காலத்தில் இடம்பெற்றிக்கிறது. குறிப்பாக சிங்கள மொழியில் (ஹெல மொழியில்) கொழும்பு என்கிற பெயர் இடம்பெற்ற முதல் நூலாக தம்பதெனிய காலத்துக்கு உரிய பிரபல இலக்கியங்களில் ஒன்றான “சிதத் சங்கராவ”என்கிற இலக்கியத்தில் முதன் முதலாக அடையாளம் காணமுடிகிறது.

பாளி மொழியில் “கதம்ப” என்று “கொலன் மரத்தைக்” குறிப்பிடுவார்கள். அதுவே காலப்போக்கில் சிங்களத்தில் மருவி “கொலம்ப” என்று ஆகியிருக்கலாம் என்கிற கருத்தும் கூட நிலவுகிறது. இதன் பிரகாரம் கொழும்பு என்கிற சொல் போர்த்துக்கேயர் வருவதற்கு முன்னரே பிறந்துவிட்டதாக வாதிப்பவர்களும் உள்ளார்கள்.

ஒருவகை படகுக்கு “கலம்பு” என்று மலையாள மொழியில் குறிப்பிடுவதாகவும்,  அடிக்கடி இங்குள்ள துறைமுகத்துக்கு கேரளாவில் இருந்து அந்த படகு போக்குவரத்தில் இருந்ததால் “கலம்ப” என்று இந்த இடத்துக்கு பெயர் வந்திருக்கலாம் என்கிற ஒரு கருத்துமுண்டு. இதை பிரபல சிங்கள மொழிப் புலவரான முனிதாச குமாரதுங்கவும் உடன்படுகிறார்.

தமிழின் “களப்பு” என்கிற சொல்லில் இருந்து “கலம்ப” உருவாகியிருக்கலாம் என்கிற கருத்தும் உண்டு. குறிப்பாக கொழும்பு பேறை வாவி ஒரு களப்பு போன்ற தோற்றத்தில் இருந்ததால் இந்த இடத்துக்கு கலப்பு என்று அழைக்கப்பட்டு அது திரிந்து காலம்ப என்று ஆகியிருக்கலாம் என்கிற வாதமும் இருக்கிறது. ஆனால் பேறை வாவி பிறகாலத்தில் தான் திருத்தப்பட்டு இந்த வடிவத்தைப் பெற்றது என்பதால் அந்த வாதமும் அத்தனை பலமானதாக இல்லை.

90 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையின் முக்கிய இடங்களின் பெயர்களைப் பற்றி ஆராய்ந்த யூலியஸ் த லெனரோல் ராஜரீக ஆசியர் கழகத்தின் ஆய்வுச் சஞ்சிகையில் வெளியிட்ட ஆய்வுக்கட்டுரையில் கொழும்பு துறைமுகத்தை ஊடறுத்துச் செல்லும் “கொலன்னாவ நதி” கடலில் விழுந்த இடத்தைத் தான் “கொலொன்தொட்ட” என்றார்கள் என்று குறிப்பிடுகிறார். 14 நூற்றாண்டில் கம்பளை இராச்சிய காலத்தைச் சேர்ந்த “நிக்காய சங்கிரஹா” என்கிற நூலில் கோட்டை அரசன் நடத்திய பௌத்த தீட்சை (உபசம்பத்தா) நடத்திய இடத்தை”கலம்பு” என்கிறார். அது “கொலன்னாவ ஆற்றைத் தான்” குறிப்பிடுவதாக அவர் தனது ஆய்வில் தெரிவிக்கிறார். 

கொழும்பு நகரத்தின் வரலாற்றைத் தேடிச்சென்ற இன்னொரு ஆய்வாளரான எஸ்.ஜே.பெரேரா என்கிற பாதிரியாரும் இக்கருத்தை ஏற்றுக்கொள்கிறார். 

களனி ஆற்றின் நிரம்பி வழியும் நீரை எடுத்துக்கொண்டு மாளிகாவத்தை சதுப்பு நிலங்கள் வழியாக மருதானை புனித செபஸ்தியான் மேட்டுக்கடியில் ஊடுருவி புறக்கோட்டை கைமன் வாசல் (ஐந்துலாம்புசந்தி) வழியாக, ரேக்லமேஷன் வீதிக்கு சமாந்திரமாக வந்து கடலில் விழுவதாக குறிப்பிடப்படுகிறது. போர்த்துக்கேயர்கள் “புனித ஜோன்ஸ் ஆறு” என்று பெயரிட்டதுடன், பேறை வாவியை உருவாக்க இது பெரும்பங்கை வகித்ததாம். 

இதைவிட பிரசித்திபெற்ற இன்னோர் கதையுமுண்டு. மாம்பழம் இல்லாத மாமரம் ஒன்று கொழும்பு துறைமுகப்பகுதியில் (குறிப்பாக கோட்டை commissariat street பகுதியில்) இருந்ததாம். ஆனால் அதில் மாம்பழங்கள் இருந்ததில்லையாம், பதிலாக பச்சைநிற இலைகளால் பெருகிப் போய் இருந்ததாம். அந்த மரத்துக்குத் தான் “கொல – அம்ப” (பச்சை மாம்பழம்) என்று பெயரிடப்பட்டதாம். அதேவேளை கொலம்பஸின் நினைவாக போர்த்துக்கேயர் “கொலம்ப” என்கிற பெயரை இந்த இடத்துக்குப் பெயராக இட்டார்கள் என்கிற ஒரு பிரபல கதை உண்டு. கொழும்புத் துறையை அடையும் கப்பல் சிப்பாய்களுக்கு இந்த மரம் இலகுவாக தூரத்தில் இருந்து அப்போது தென்படுமாம்.


இதன் உண்மை பொய்யை நாம் உறுதிசெய்ய முடியாது போனாலும் இதற்கு கிட்டிய விபரமொன்றை இங்கே குறிப்பிட்டாக வேண்டும். ஒல்லாந்தர்கள் கொழும்பு கோட்டையைக் கைப்பற்றிய பின்னர் கொழும்பு கோட்டைக்கென ஒரு சின்னத்தை உருவாக்கினார்கள். இலங்கையில் ஒல்லாந்த கைப்பற்றிய சகல கோட்டைகளுக்கும் ஒவ்வுறு விதமான சின்னங்களை உருவாக்கிக் பேணினார்கள். கொழும்பு கோட்டையின் சின்னத்தில் மாம்பழம் இல்லாத வெறும் இலைகளை மட்டுமே கொண்ட மாமரத்தில் ஒரு புறாவொன்று வசிப்பதாக சின்னத்தை வடிவமைத்துப் பயன்படுத்தினார்கள். இன்றும் இந்த சின்னத்தை கொழும்பில் உள்ள டச்சு மியூசியத்தில் பெரிதாகக் காணலாம்.

கண்டி ராஜ்ஜியத்திலிருந்து கொழும்புக்கு தப்பிவந்த ரொபர்ட் நொக்ஸ் தனது குறிப்புகளில் போர்த்துக்கேயரால் உச்சரிக்கப்பட்டது போலவே “கொழும்பொ” என்று தான் உச்சரித்தார். அதே உச்சரிப்பு தான் ஆங்கிலேயராலும் பிற்காலத்தில் பயன்படுத்தப்பட்டு நிலைபெற்றது. 


நன்றி - தினகரன் - 30.02.2022

குற்றப் பிரதேசமாக மாறியுள்ள கும்புக்கன் ஓயா - அருள்கார்க்கி

இந்தக்கட்டுரை INTERNEWS இன்  EARTH JOURNALISM NETWORK இன் அனுசரணையில் அறிக்கையிடப்பட்டது. 

இலங்கையின் பிரதான இயற்கை வளமாக நீர்வளம்  காணப்படுவதுடன்  இது அன்று தொடக்கம் இந் நாட்டின் அபிவிருத்திக்கு அளப்பரிய பங்காற்றும் பிரதான  காரணியாகவும் விளங்குகிறது. விவசாய நாடான இலங்கையில் அன்று தொடக்கம் இன்று வரை பல்வேறுபட்ட நீர்ப்பாசன முறைகளூடாகவும் இந்நாட்டின் விவசாய பொருளாதாரத்திற்கு ஆற்றிவரும் பங்களிப்பு அளப்பரியது. இது தவிர கைத்தொழில், சேவை வழங்கல், குடிநீர் தேவை என்பன மட்டுமல்லாது பொழுதுபோக்கு நடவடிக்கைகளுக்கும், சுற்றுலா கைத்தொழிலுக்கும், நீர்மின் உற்பத்திகளுக்கும். இலங்கையின் நீர்வளம் மிகமுக்கிய மூலமாக அமைந்துள்ளது. 

இலங்கை சுமார் 103 பிரதான நதிகளை கொண்ட ஒரு நாடாகும். இவற்றுள் சுமார் 20 நதிகள் வருடம் முழுவதும் பாய்ந்தோடும் நதிகளாக இருப்பதுடன்  எஞ்சியவை பருவகாலங்களில் உயிர்ப்புடன் பெருகி பாய்ந்கோடும் நதி வகைகளுள் அடங்கும்.

விசாலத்தின் அடிப்படையில் நதிகளின் அளவும் வேறுபடுவதுடன் இவை சுமார் 10 சதுர கிலோமீற்றர் தொடக்கம் 10000 சதுர கிலோ மீட்டர் வரை வேறுபடும். பூகோள ரீதியில் நோக்கும்போது நதிகளுக்குரிய நிலத்தின் அளவானது இலங்கையின் முழு நிலப்பரப்பில் சுமார் 9 சதவீதம் ஆகும்.

அதேபோன்று உலர் வலயப் பிரதேசங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட குளங்கள் சிலவற்றை இணைப்பதன் மூலம் ஆக்கப்பட்ட அருவி தொகுதி முறைமையும் கூட இலங்கையின் நீர் வளத்தை பேணி பாதுகாப்பதில் மிக முக்கிய ஆக்ககூறாக விளங்குகிறது. இவற்றுக்கு மேலதிகமாக பெருமளவிலான நீரூற்றுக்கள் தீவு முழுவதும் பரந்து விரிந்து காணப் படுகின்றது. அதனடிப்படையில் நுவரெலியா மாவட்டத்தில் இவ்வாறான 1544 நீரூற்றுகளும், கண்டி மாவட்டத்தில் 204 நீரூற்றுகளும், குருநாகல் மாவட்டத்தில் 319 நீரூற்றுகளும், மொனராகலை மாவட்டத்தில் 210 நீரூற்றுகளும் மாத்தளை மாவட்டத்தில் 288 நீரூற்றுகளும் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. அந்த வகையில் தீவு முழுவதும் இதுவரை இனங்காணப்பட்டு உள்ள நீரூற்றுகளின் எண்ணிக்கை 3540 ஆகும். இவை தவிர இலங்கையின் உலர்வலய பிரதேசங்களில் நிலத்திற்கடியில் சுண்ணாம்பு கற்பாறைகளுக்கிடையில் அமைந்துள்ள நீர் பரப்புகளும் இலங்கையின் நீர் மூலங்களுள் முக்கிய இடம் வகிக்கின்றது. குடிநீர் தேவைக்கும், விவசாய செய்கைகளுக்கும் தேவையான நீரை பெற்றுக் கொள்வதற்கும் இந்த நிலக்கீழ் நீர் பரப்புகள் பெரும் பங்காற்றுகின்றன.

அந்தவகையில் இலங்கையின் முக்கியமான நீர் மூலங்களில் ‘கும்புக்கன் ஓயா’  பிரதானமானதாகும். இது மத்திய மலைநாட்டில் லுணுகலை பிரதேசத்தில் ஊற்றெடுத்து மொனராகலை மாவட்டத்தின் பிரதான நீர் மூலமாக திகழ்கின்றது. இலங்கையில் உள்ள ஆறுகளில் 12வது நீளமான ஆறான இது நீரோட்டத்தின் படி 18வது பெரிய ஆறாகும். இதன் நீரேந்துப் பகுதியில் சராசரியாக ஆண்டுக்கு 2115 மில்லியன் கன மீற்றர் மழை பெய்கிறது. இதில் சுமார் 12 வீதமான நீர் கடலை அடைவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்நதி  1218 சதுர கிலோமீற்றர் நீரேந்து பகுதியை கொண்டுள்ளதோடு இது இலங்கையின் 14ஆவது பெரிய நீரேந்து பகுதியாகும். 

இவ்வாறு அதி முக்கியத்துவம் வாய்ந்த ‘கும்புகன் ஓயா’. இன்று சட்டவிரோத இரத்தினக்கல் அகழ்வு, மற்றும் மணல் அகழ்வு போன்ற நாசகார மனித நடவடிக்கைகளால் சீரழிந்துள்ளது.  கும்புக்கன்,புத்தள,மதுருகெட்டிய,பாராவில, ஒக்கம்பிட்டிய  உள்ளடங்களாக சுமார் 6000 விவசாய குடும்பங்கள் இந்த ஆற்றின் மூலம் நேரடியாக நன்மை அடைகின்றனர். இவர்களின் பிரதான ஜீவனோபாயமான விவசாயத்துக்கும் இந்த ஆறு அடிப்படையாக அமைந்துள்ளது.இந்த விடயம் தொடர்பான ஆய்வை இண்டர் நியூஸ் [ INTERNEWS EARTH JOURNALISM NETWORK ] இன் புவிசார் ஊடகவியல் வலையமைப்பின்  அனுசரணையுடன் ஆரம்பித்தோம். 

பொதுவாகவே மொனராகலை மாவட்டமானது குறைந்த வருமானம் பெறும் சமூகங்களை கொண்டதாகும். எனவே இங்குள்ள மக்களின் பொருளாதாரம் கீழ் மட்டத்திலேயே உள்ளது. இது அவர்களை சட்டவிரோத தொழில்களில் ஈடுபடுத்துவதற்கு வசதியாக உள்ளது. இதில் கும்புக்கன் ஓயாவை அண்டிய பிரதேசங்களில் சட்டவிரோத இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபடுத்தப்படும் மக்கள் அதிகரித்துள்ளனர்.  இது சூழல் சார்ந்த பிரச்சினையாய அதிகரித்துள்ள அதேவேளை மறுபுறம் உயிர் அச்சுறுத்தலான இந்த சட்டவிரோத பணியில் ஈடுபடும் , ஈடுபடுத்தப்படும் மக்களின் நிலையும் ஆபத்தானதாக உள்ளது.


பிரதேசவாசிகள் இல் ஒருவரான ‘கந்தசாமி’ என்பவரின் கூற்றுப்படி ஆரம்பத்தில் பிரதேச மக்கள் சிறிய அளவில் தமது எல்லைக்குட்பட்ட ஆற்றுப் பகுதிகளில் இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்டுள்ளனர். இந்த இரத்தினக்கல் அகழ்வு சட்டவிரோதமான முறையில் இடம்பெற்றாலும் அது பாரிய அளவில் இடம் பெறாத காரணத்தினால் சூழல் பாதிப்புகள் பாரியளவில் இடம்பெறவில்லை என்பது கந்தசாமியின் கருத்து. அதேவேளை இது காலப்போக்கில் ஒரு துணிகரமாக வியாபாரமாக தோற்றம் பெற்றுள்ளது.

இன்றைய நிலையில் வெளி பிரதேசங்களில் உள்ள செல்வந்தர்களால் ஆற்றுப் பகுதியை அண்டிய நிலம் பெருமளவான விலை கொடுத்து கொள்வனவு செய்யப்படுகின்றது. இப்பிரதேசத்தில் உள்ள மக்களின் ஏழ்மை நிலையை இனங்கண்ட வியாபாரிகள் அதனை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டுள்ளனர் என கந்தசாமி தெரிவிக்கின்றார். 

மொனராகலை மாவட்டமானது இயல்பாகவே உலர்ந்த காலநிலை நிலவும் மாவட்டமாகும். இங்கு குடிநீர் பிரச்சனை நீண்ட காலமாக நிலவுகின்றது. எனவே இங்குள்ள நீர் முதல்களை பாதுகாப்பதன் அவசியத்தை உணராத சில சுயநலவாதிகள் இயற்கை வளமான கும்புக்கன் ஓயாவை இன்று ஆபத்தான பிரதேசமாக ஆக்கியுள்ளனர். 

இதுதொடர்பாக பிரதேச வாசியான மோகன் என்பவர் கூறுகையில் மொனராகலை பிரதேசமானது கும்புக்க ஓயாவின் காரணமாக நாடுமுழுவதும் அறியப்பட்ட ஒரு பிரதேசமாக ஆகியது. எமது நாளாந்த வாழ்க்கையுடன் ஏதோ ஒரு விதத்தில் இந்த நதி தொடர்புபடுகின்றது. எனவே இதனை நாங்கள் பாதுகாக்க வேண்டும். இன்று ஆற்றின் பல்வேறு இடங்களில் சட்டவிரோத இரத்தினக்கல் அகழ்வு இடம்பெறுகின்றது. இது இன்று சில பிரதேசவாசிகளாலும் ஒப்பந்தத்துக்கு அமர்த்தப்பட்ட நபர்களாலும் இடம்பெறுகிறது என்கின்றார்.  

அவர் மேலும்  மேலும் கூறுகையில். முன்பெல்லாம் கும்புக்கன் ஓயா நீரானது குடிப்பதற்கு ஏற்ற விதத்தில் இருந்தது ஆனால் இன்று சட்டவிரோத செயற்பாடுகளான மணல் அகழ்வு, இரத்தினக்கல் அகழ்வு என்பவற்றால் ஆறு சேறும் சகதியுமாக மாறி உள்ளது என்று கூறுகின்றார். 

இதனடிப்படையில் இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகளால் உயிர்ப்பல்வகைமை பெரிதும் பாதிக்கப்பட்டுகிறது. நாம் இன்று கும்புக்கன் ஓயாவின் பல பிரதேசங்களிலும் அதனை அவதானிக்க முடியும். இது ஒரு குற்றச் செயலாக இருப்பினும் அனேகமான பிரதேசவாசிகள் இதில் ஈடுபடுவதால் யாரும் பாதுகாப்புத் துறையினருக்கு தகவல் வழங்குவதில்லை. எனவே இந்த சட்டவிரோத செயற்பாடு பரவலாக இடம் பெறுகின்றது. இதனை அவ்வப்போது காவல்துறையினர் முற்றுகையிட்டும் இப்பிரச்சனைக்கு உரிய நிரந்தர தீர்வு இதுவரை கிடைக்கப்பெறவில்லை என பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர். இதேபோல் இவ்வாறு சட்டவிரோத செயற்பாடுகளால் மனித உயிர்களும் பறி போயுள்ளன என்பது இதன் ஆபத்தை புரிந்து கொள்ள நல்ல சான்றாக உள்ளது.

அதாவது இன்று நாட்சம்பளத்திற்கு ஆட்களை பணிக்கமர்த்தி இந்த சட்டவிரோத வேலையை வெளியார் செய்கின்றனர். இவர்கள்  மொனராகலைக்கு வெளியில் உள்ள வர்த்தகர்கள் ஆவர். இதேபோல் இரத்தினக்கல் அகழ்வு மேலதிகமாக சட்டவிரோத மணல் அகழ்வும் இந்த நதியை மையப்படுத்தி இடம்பெறுகிறது. இதன் மூலம் இன்று இந்த ஆறு ஆபத்து நிறைந்ததாக மாறியுள்ளது. இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபடும் நபர்கள் ஆற்றுக்குக் குறுக்காக தடுப்புகளை ஏற்படுத்துகின்றனர். அதேபோல் அவர்கள் அகழ்வுக்காக பாரிய குறிகளை தோன்றுகின்றனர். பின்னர் அவற்றை முறையாக மூடுவதில்லை இதனால் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளவரும் மக்கள் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளனர். கடந்த மாதம் குடிநீருக்காக ஆற்றுக்குச் சென்ற கால்நடை ஒன்று அவ்வாறான குழி ஒன்றில் விழுந்து இறந்து விட்டது. குளிப்பதற்காக ஆற்றுக்கு வரும் மக்களும் அபாயமாக மாறியுள்ள ஆற்றின் நிலையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆற்றின் இயற்கை அழகுக்கு கேடு விளைவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மண் அரிப்பு,பாரிய மரங்கள் சரிந்து விழுதல் போன்ற பல்வேறு சூழல்சார் பிரச்சினைகள் நதியை அண்டி  தோன்றி உள்ளன என்று பிரதேசவாசியான மோகன் கூறினார்.

இவ்விடயம் தொடர்பாக மொனராகலையில் இயங்கும் சிவில் அமைப்பான மொனராகலை சமூக பாதுகாப்பு நிலையத்தின் பிரதான செயற்பாட்டாளர் தம்மிக லக்ஷ்மன் என்பவரை தொடர்பு கொண்டு இது தொடர்பாக வினவியபோது, இப்பிரச்சினையின் மற்றும் ஒரு பக்கத்தை அவர் வெளிப்படுத்தினார்.

மொனராகலை சமூகவள பாதுகாப்பு நிலையத்தின் மூலம் கடந்த 20 வருடங்களாக நாங்கள் சமூகம் சார்ந்தும் சுற்றுச்சூழல் சார்ந்தும் நாங்கள் செயற்பட்டு வருகிறோம். அந்த வகையில் மொனராகலை ஒரு விவசாய அடிப்படையிலான சமூக பொருளாதார பின்னணியை கொண்ட மாவட்டம் ஆகும். இங்குள்ள பெரும்பாலான மக்கள் நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் பெறுபவர்கள். எனவே இங்குள்ள இயற்கை வளங்களை பயன்படுத்தி அவர்கள் தமது ஜீவனோபாய கொண்டு நடத்துகின்றனர் அதில் இம்மாவட்டத்தில் அமைந்துள்ள கும்புக்கன் ஓயா முக்கியமான ஒரு நீர் முதல் ஆகும்.

ஆனால் இன்று இந்த நதியானது சட்டவிரோத இரத்தினக்கல் அகழ்வு மற்றும் மணல் அகழ்வில் காரணமாக கடுமையான சூழல் பிரச்சினைகளுக்கு உள்ளாகியுள்ளது என்கின்றார்.தம்மிக்கவின் கருத்துப்படி இந்த சட்டவிரோத இரத்தினக்கல் அகழ்வுக்கு பின்னால் பலம் பொருந்திய அரசியல்வாதிகள் இருப்பதாக அறிய முடிகின்றது. இந்த சட்டவிரோத செயற்பாடுகள் இன்று பாரியளவில் இடம்பெறுகின்றன. இதற்கு பின்னால் உள்ளுராட்சி மன்றங்களிலும் ஏனைய பதவிகளிலும் உள்ள அரசியல்வாதிகளே உள்ளனர், ஆரம்பகாலங்களில் பிரதேச மக்கள் சிறிய அளவில் இவ்வாறு சட்டவிரோதமாக முறையில் இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்டாலும் அது ஒரு சுற்றுச் சூழல் பிரச்சனையாக உருவெடுக்கவில்லை, ஆனால் இன்று இது அரசியல்வாதிகளின் பலத்தினால் அவர்களின் உதவி உள்ளோரால் பாரிய அளவில் இடம்பெறுகின்றது. கொழும்பு,இரத்தினபுரி உள்ளிட்ட பிரதேசங்களில் இருந்து இங்கு வந்து பெரிய முதலாளிகள் மக்களிடம் உள்ள நிலங்களை கொள்வனவு செய்து இந்த சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர். தமது சொந்த நிலத்தை இந்த மக்கள் விற்றுவிட்டு இன்று அவர்களிடமே நாளாந்த கூலிக்கு இவர்கள் இரத்தினக்கல் அகழ்வு பணிக்கு  அமர்த்தப்பட்டுள்ளனர். அதேபோல் எந்த ஆட்சி வந்தாலும் இவ்வாறு அரசியல் பலம் பொருந்தியவர்கள் தமது பலத்தை துஷ்பிரயோகம் செய்து இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர் என்கின்றார் லட்சுமண்.

எமது அமைப்பின் மூலம் நாம் இந்த சட்டவிரோத இரத்தினக்கல் அகழ்வுக்கு எதிராக பல சந்தர்ப்பங்களில் எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டோம். குறிப்பாக பொதுமக்களை திரட்டி ஆர்ப்பாட்டங்களை செய்தோம் ஆனால் அது முழுமையான எமக்கு சாதகமான பலனை தரவில்லை. இந்த சட்டவிரோத செயற்பாட்டுக்கு எமது பிரதேசத்தில் உள்ள மதத் தலைவர்கள் சிவில் சமூகத்தினர் மற்றும் ஊடகவியலாளர்கள் என்போர் கடுமையான எதிர்ப்புகளைத் தெரிவித்தனர். இந்த சட்டவிரோத இரத்தினக்கல் அகழ்வு தொடர்பாக செயற்பட்ட எமது பிரதேச ஊடகவியலாளர் ஒருவர் தாக்கப்பட்டார். இது இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகளை செய்யும் கும்பலின் பலத்தை காட்டுகின்றது. இவர்கள் பெரும்பாலும் அரசியல் அதிகாரத்தை வைத்தே செய்கின்றனர். விவசாயிகளை திரட்டி நாம் இதற்கு எதிராக போராடினோம். அதேபோல் மக்களையும் இதற்கு பொறுப்பான அரச நிறுவனங்களையும் தெளிவுபடுத்தினோம், இன்று மக்கள் தெளிவாக இருக்கின்றனர் ஆனால் அரச நிறுவனங்கள் இதற்கு தகுந்த நடவடிக்கைகள் எடுக்கவில்லை அவர்கள் அந்த சமயத்தில் ஏதாவது கருத்துக்களை கூறினாலும் பின்னர் அதற்கு உரிய நியமங்களை முறையாக நடைமுறைப் படுத்துவதில்லை என்றால் என்றார் தம்மிக்க.

அனைவரும் இணைந்து இந்த சட்டவிரோத செயற்பாடுகளை தடுக்க முடியும். இரத்தினக்கல் அகழ்வுக்கு என்று உரிய நியமங்களை முறையாக பின்பற்ற வேண்டும். இதனால் சூழலுக்கு ஏற்படும் பாதிப்பு எதிர்காலத்திற்கு செய்யும் அநியாயமாகும், இதற்காக தேசிய இரத்தினக்கல் ஆபரண அதிகார சபை, பிரதேச செயலகம், வன பரிபாலன திணைக்களம், பொது மக்கள், சிவில் அமைப்புகள் என்பவற்றை இணைத்து இந்த சட்ட விரோத செயற்பாட்டுக்கு எதிரான பொறிமுறையை தயாரிக்க வேண்டும்.இரத்தினக்கல் அகழ்வின் மூலம் கிடைக்கும் வருமானம் இந்த பிரதேச மக்களுக்கு கிடைக்கவேண்டும். வெளிப் பிரதேசத்தில் இருந்து வரும் வியாபாரிகளுக்கு எமது மக்களும், சூழலும் பலியாவதை அனுமதிக்க முடியாது என்பதே சிவில் செயற்பாட்டாளர் லக்ஷ்மன் கருத்தாக உள்ளது.

அதே போல் மொனராகலை மாவட்ட சர்வமத செயற்குழுவின் தலைவர் மாரிமுத்து ஜோதிகுமார் அவர்களின் கருத்து இவ்வாறு அமைந்தது. நான் மொனராகலை கும்புக்கன் பிரதேசத்தை சேர்ந்தவன். எமது பூர்வீக நிலமாக கும்புக்கன் பிரதேசமே திகழ்கின்றது.மொனராகலை பாரம்பரியமாக விவசாய பின்னணியைக் கொண்ட ஒரு  மாவட்டம் ஆகும். இங்குள்ள மக்களுக்கு கும்புக்கன் ஓயாவனது பிரதான வாழ்வாதாரமாக திகழ்கின்றது. இன்று கும்புக்கன் ஓயா ஒரு குற்ற பிரதேசமாக மாறியுள்ளது. இதற்கு பிரதான காரணம் சட்டவிரோத இரத்தினக்கல் அகழ்வாகும்.அதேபோல் ஆற்றை  அண்டிய பிரதேசங்களில் சட்டத்துக்கு விரோதமான முறையில் மணல் அகழ்வும் இடம்பெறுகின்றது.

அழகிய கும்புக்கன் ஓயாவை நம்பி மற்றும் புத்தள பிரதேசத்தில் மட்டும் 5000 இற்கு மேற்பட்ட விவசாய குடும்பங்கள் உள்ளனர் .ஆனால் இன்று இந்த சட்ட விரோத இரத்தினக்கல் அகழ்வின் காரணமாக சூழல் மாசடைவு, மண்ணரிப்பு, பாரிய மரங்கள் சரிந்து விழுதல் போன்ற சூழல் பாதிப்புகள் இடம்பெற்றுள்ளன. இவை இன்று கணிசமான அளவுக்கு அதிகரித்துள்ளன. ஒக்கம்பிட்டிய பிரதேசத்தில் D.S.சேனாநாயக்கவின் ஆரம்பிக்கப்பட்ட நீர் முகாமை திட்டமானது முறையான கையாள்கை இன்மையால் இன்று விவசாய சமூகத்துக்கு பாரிய பிரச்சினைகளை சந்திக்க நேரிட்டுள்ளது.புத்தல ஒக்கம்பிட்டிய,அத்தரமண்டிய, மாளிகாவில, கலவில்லாருகம,போன்ற பிரதேசங்களில் பிரதான குடிநீர் மூலமாக இன்று கும்புக்கன் ஓயாவே காணப்படுகின்றது.

இன்று கும்புக்கன் ஓயாவை மையப்படுத்தி இடம்பெறும் வேலைத்திட்டங்கள் மற்றும் சட்டவிரோத இரத்தினக்கல் அகழ்வு போன்றவற்றாலும் ஆற்றை அண்டிய பிரதேசங்கள் கடுமையான சூழல் மாசடைவை சந்தித்துள்ளது. இது தொடர்பாக நாம் பொதுமக்களை திரட்டி ஏனைய சிவில் அமைப்புகளுடன் ஒன்றிணைந்து போராட்டம் ஒன்றை நடத்தினோம். இவ்விடையம் தொடர்பாக கரிசனை செலுத்த வேண்டிய அரச திணைக்களங்கள் இந்த சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பாக காட்டும் கரிசனை போதாது என்று எனக்குத் தோன்றுகிறது என்றார்.

இதனால் நாங்கள் பொதுமக்களை திரட்டி அவர்களை அறிவுட்டும் வகையில் போராட்டங்களை நடாத்தினோம் .இதன் காரணமாக இரசாயன மின் உற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகளை எம்மால் தடுக்க முடிந்நது. அதேபோல்  இந்த ஆற்றை அண்டியுள்ள இரத்தினகல் முறையற்ற விதத்தில் அகழப்படுவதன் காரணமாக ஆற்றின் இரு பக்கமும் உள்ள பாரிய மரங்கள் சாய்வடைந்து உள்ளது. இது எதிர்காலத்தில் இந்த ஆற்றின் நீர் அற்று போகும் நிலையை உருவாக்கியுள்ளது என்கிறார்.  அதேபோல் இரத்தினக்கல் என்பது இலங்கைக்கு உரிய முக்கியமான கனியவளமாகும். ஆதனை முறையாக நியமப்படுத்தி கைய்லும்போது நாட்டின் தேசிய வளமாக இரத்தினங்களை எம்மால் பயன்படுத்திகொள்ள முடியும். தேசிய இரத்தினக்கல் ஆபரண  அதிகார சபை அனுமதிபத்திரங்களை வழங்கினாலும் அனுமதி பெற்றவர்களும் அதை முறையாக பயன்படுத்துவதில்லை. அனுமதி பத்திரம் வழங்கியும் அவ்றென்றால் ; சட்டவிரோதமான முறையில் இதனை செய்பவர்களின் செயற்பாடு எவ்வாறு இருக்கும் என்று சொல்லித் தெரியவேண்டியதில்லை என்கின்றார் ஜோதிகுமார்.

இதனை அரச திணைக்களங்கள்  முறையாக கையாளவில்லையென்றால்  மொனறாகலை மாவட்டத்தில் சிறிது காலத்திற்கு  உள்ளாகவே குடிநீர் தட்டுப்பபாடு உருவாகும். இந்த அழகிய சூழல்  பாதிக்கப்படும்போது உயிர்பல்வகைமையும் இல்லாதுபோகும். இதற்காக  நாம் சர்வமத அமைப்பு சார்பாக எதிர்காலத்திலும் தொடர்சியாக செயற்பட உள்ளோம். இயற்கையை அழித்து மனிதன் வாழ முடியாது என்பதை அனைவரும் உணர வேண்டும். என்று அவர் மேலும் கூறினார். 

இவ்வாறான சிவில் அமைப்புகளின் எதிர்புகள்  காரணமாக தற்காலிகமாக  சட்டவிரோத செயற்பாடுகளை தடுக்க முடிந்தாலும் அதனை முழுமையாக தடை செய்வதற்கு முடியாமல்போய் உள்ளது என்பது சமகாலத்திலும்  கும்புக்கன் ஓயாவை அவதானிக்கும்போது தெரிகின்றது. 

எனவே இவ்விடயம் தொடர்பாக தேசிய இரத்தினக்கல் ஆபரண அதிகார சபையின் மொனராகலை மாவட்ட உதவிப்பணிப்பாளர்  திரு.சம்பிக்க கினிகம  அவர்களிடம் வினவப்பட்டது. அவரின் கருத்து ‘நாங்கள் சட்டவிரோத இரத்தினகள் அகழ்வு தொடர்பாக கடுமையான நிலைபாட்டிலேயே  உள்ளோம். இதனால் ஏற்படும் சூழல்  பாதிப்புக்கள் மற்றும் நாசாகர செயற்பாடுகள்  தொடர்பாக எமது அதிகார சபையினுடாக அவ்வப்போது  சுற்றி வளைப்புகளையும். மேற்கொள்வோம்  ஆனால் பொதுமக்களின்  சிலர்  இதற்கு உதவியாக செயற்படுகின்றனர். பிரதேச மக்களின்  ஒத்துழைப்பு இல்லாமல் எம்மால்  இதனை முழுமையாக கட்டுப்படுத்த முடியாது என்கின்றார். 

அதே போல் தேசிய இரதத்தினகல் ஆபரண அதிகார சபையின் மூலம் வருடத்திற்கு 4000 அனுமதிப்பத்திரங்கள் இரத்தினக்கல் அகழ்வுக்கு  வழங்கப்படுகின்றது.அவற்றுள் சுமார் 500 அனுமதிபத்திரங்களை மாத்திரமே   மொனராகலை காரியாலயம் வழங்குகின்றது. இவற்றை பெற்றுக்கொண்டு   நாம் வழங்கும் நியமங்களை மீறி இரத்தினகல் அகழ்வு பணிகளில் அனேகமானோர் ஈடுபடுவதாக எமக்கு முறைபாடுகள் கிடைக்கபெறுகின்றன. அதேபோல் பிரதேச மக்களும்  சட்டவிரோதமான முறையில் கும்புக்கன் ஓயாவை அண்டிய பரதேசங்களில் அகழ்வு பணிகளில் ஈடுபடுகின்றனர்.  இது இன்று  ஒரு பாரிய  ஒரு சூழல் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது என்கிறார்.  

அதேபோல் இந்த பிரதேசத்தில் உள்ள  மக்களில் அதிகமானோர் குறைந்த வருமானம் பெரும்  மக்களாவர்.எனவே இவர்களில் அதிகமானோர்  தமது பிரதேசத்திலுள்ள ஆற்றை அண்டிய பகுதிகளில் இவ்வாறு சட்ட விரோத இரத்தினகல் அகழ்வுகளில்  ஈடுபடுகின்றனர்.  இதனை தடுப்பதற்கு  விசேட அதிரடிப்படையினர் மற்றும் காவல் துறையினருடன்  நாம் ஒருங்கிணைந்து செயற்படுகின்றோம். பெரும்பாலும் இரவு வேளைகளிலேயே இவ்வாறு சட்டவிரோதமான முறையில் அகழ்வுப் பணிகளில் ஈடுபடுகின்றனர்.அதனால் எமக்குள்ள  மட்டுப்படுத்தப்பட்ட  ஆளணியினைகொண்டு இதனை கட்டுப்படுத்த முடியாதுள்ளது என்கிறார்.  அதேபோல்  பிரதேச செயலகம் ,வனப்பரிபாலன தினணக்களம் , நீர்பாசன தினணக்களம்  என்பவற்றுடன் இணைந்து  நாம் ‘சுரகிம கங்கா’ என்ற வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றோம். அந்த திட்டத்தின் மூலமும் நாம் இவ்வாறான சட்ட விரோத இரத்தினகல் அகழ்வு , மணல் அகழ்வு என்பவற்றையும்  முகாமை செய்ய திட்டமிட்டடுள்ளோம். எதிர்காலத்தில் இவ்வாறான சட்டவிரோத செயல்களை தவிர்க்க முடியும் என்று எதிர்பார்கின்றோம் என்று கூறினார்.

மேலும் எதிர்காலத்தில்  இதனால் ஏற்படும் சூழல் பாதிப்புகள்  தொடர்பாக மக்களை தெளிவூட்டுவதும் சட்டத்திற்கு உட்பட்டு செயல்படும் வகையில்  அனுமதிப்பத்திரங்கள் வழங்களை அதிகரிப்பதும்  ஒரு யோசனையாகும். என்று திரு.கினிகம கூறினார்


இவ்விடயங்களை தொகுத்து  நோக்கும் போது  இவ்வாறான சட்டவிரோத இரத்தினகல்  அகழ்வுகளை தடுப்பதற்கான  போதிய சட்ட வலிமை குறித்த அரச திணைக்களங்களுக்கு இல்லை  என்பதும் தெளிவாக  புலப்படுகின்றது. இவ்வாரான குற்ற செயல்களில் ஈடுபட்டு கைது  செய்யப்படுகின்றவர்கள் சாதாரண மக்களாகவே உள்ளனர். எனவே இவர்களை கொண்டு இந்த அகழ்வு பணிகளை மேற்கொள்ளும் அரசியல் பிண்ணனியை கொண்டவர்களும்  பணபலம் பொருந்தியவர்களும்  எப்போதுமே வெளிவருவதில்லை.  நாளாந்த கூலிக்காக வேலை செய்பவர்களே கைது செய்யப்படுகின்றனர். இவர்கள் கைது செய்யபடும் போது  விதிக்கப்படும் தண்டபணத்தில் மூன்றில் ஒரு பங்கை செலுத்தி குற்றத்தை ஒப்புகொள்வதன் மூலம் நீதிமன்றத்துக்கு செல்லாமல்  விடுதலை செய்யகூடிய வாய்ப்பு உள்ளதாகவும் அறிய முடிகிறது  எனவே தண்டப்பணத்தை செலுத்தி  இவர்களை விடுவித்து மீண்டும் அதே  தொழிலில்  ஈடுபடுத்தப்படுவதாக எமக்கு அறியக்கூடியதாக  இருந்தது. இவ்வாறான நடவடிக்கைகள் மூலம் கும்புக்கன் ஓயா  இன்று அதன் பொலிவை இழந்து வருவது  அங்கு நேரடியாக விஜயம் செய்ததன் மூலம்  அறிந்து கொள்ள முடிந்தது. பாரிய மரங்கள் சரிந்தும்  கரையை அண்டிய நிலப்பகுதிகள்  மண்சரிவு ஏற்பட்டும் ஆற்றில் பாரிய குழிகள் தோண்டப்பட்டும் காணப்படுகின்றன. முன்னர் சுத்தமான நீரோட்டமாக இருந்த ஆற்று நீறும்  இன்று வெளிர் மஞ்சள் நிறத்தில் காட்சியளிக்கின்றது ஆங்காங்கே பாரிய மரங்களும் வெட்டி அகற்றப்படுகின்றன. எனவே இந்த நாசகாம வேலையில் ஈடுபடும் கும்பல் சட்டத்தின் முன்  நிறுத்தப்படவெண்டும். நீர் வளமும் இயற்கை அழகும் கொண்ட ‘கும்புக்கன் ஓயாவின்’ பொழிவானது ஒரு தேசிய சொத்தாகும்.அதனை பாதுகாப்பது எதிர்கால சந்ததியினருக்கு செய்யும் நன்மையாகும். இயற்கையை சீரழித்து  மனிதன் வாழ முடியாது என்ற உண்மையை அரசாங்கமும், பொதுமக்களும் உணராத வரை இலங்கையின் இயற்கை வளங்களை நாம் பாதுகாக்க முடியாது.

நன்றி - தினக்குரல் 30.01.2022

கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வரலாறு (கொழும்பின் கதை - 12) - என்.சரவணன்

16ஆம் நூற்றாண்டில் போர்த்துக்கேயர் ஆட்சி செய்த போதே அந்தோனியார் வழிபாடும், அந்தோனியார் ஆலயங்களும் இலங்கையில் தோன்றிவிட்டன. 1597இல் கோட்டை இராச்சியத்தையும்,  1618இல் யாழ்ப்பாணத்தையும் கைப்பற்றிய பின்னர் இந்தப் பகுதிகளில் தேவாலயங்களைக் கட்டத் தொடங்கிவிட்டார்கள். குறிப்பாக அந்தோனியார் தேவாலயங்கள். புனித அந்தோனியார் பாதுவாவில் தனது இறுதிக் காலத்தைக் கழித்திருந்தாலும் அவர் போர்த்துக்கலின் லிஸ்பன் நகரத்தை பிறப்பிடமாகக் கொண்டவர். எனவே போர்த்துகேயர் கைப்பற்றிய நாடுகளில் புனித அந்தோனியார் வழிபாடு பிரசித்தம் பெற்றிருந்தது. கொழும்பு கோட்டைக்குள் இருந்த அந்தோனியார் தேவாலயமானது; அந்தோனியார் வழிபாட்டை இலங்கை முழுவதும் பரப்பி வந்த பிரான்சிஸ்கன் சபை மிஷனரிகளின் தலைமையகமாக இருந்தது.

1597 இல் கோட்டை அரசன் தொன் ஜூவான் தர்மபால இறந்தபோது அவரின் உடலையும் இந்த தேவாலயத்தில் தான் அடக்கம் செய்தார்கள். 1580 ஓகஸ்ட் 12 அன்று மன்னர் தொன் ஜூவான் தர்மபால போர்த்துக்கேயரின் நிர்பந்தத்தின் விளைவாக கோட்டை ராஜ்ஜியத்தை போர்த்துக்கேயருக்கு பரிசாக அளிப்பதாக உயில் (மரண சாசனம்) எழுதி கொடுத்த கதையை அறிவீர்கள். கத்தோலிக்க மதத்துக்கு மாறி கத்தோலிக்கப் பெயரை சூட்டிக்கொண்ட முதல் இலங்கை மன்னர் அவர். அது போல மன்னர் பரராஜசேகரனின் மனையையும், அவரின் மகன், இரு மகள்மாரையும், மன்னர் குடும்பத்தினர் பலரும் இந்த தேவாலயத்தில் தான் திருமுழுக்கு பெற்று கத்தோலிக்க மதத்துக்கு மாறினார்கள்.

கொழும்பு கோட்டைக்குள் இருந்த போர்த்துகேய அந்தோனியார் கோவில் தலைமையகம். 1656 ஆண்டு வரைபடம். (Changing Face of Colombo – R.L.Brohier)

ஒல்லாந்தர்கள் கத்தோலிக்க மதத்தவர்களைக் கொன்றார்கள். அவர்களிடம் இருந்து தப்பிய கத்தோலிக்கர்கள் இரண்டாம் இராஜசிங்கன் (1635 - 1687)ஆட்சி செய்த கண்டி இராச்சியத்தில் தஞ்சம் புகுந்தார்கள். வஹாகோட்டே என்கிற இடத்தில் புனித அந்தோனியாருக்கு ஒரு சிறிய சிலையை வைத்து வணங்கினார்கள். இன்றும் வஹாகொட்டேயில் அந்த அந்தோனியார் தேவாலயம் இருக்கிறது. அதன் பின்னர் கண்டி மன்னன் இரண்டாம் விமலதர்மசூரியன்; பாதிரியார் ஜோசப் வாஸ்ஸுக்கு (Joseph Vaz) அந்தோனியார் வழிபாட்டுக்கு பூரண சுதந்திரம் வழங்கினார். கண்டியில் அந்தோனியாருக்காக பாதிரியார் ஜோசப் வாஸ் எந்த கெடுபிடியுமின்றி திருவிழா நடத்தினார். அதன் பின்னர் திறைசேரியில் களவு போயிருந்தவேளை மன்னர் ஸ்ரீ வீர நரேந்திர சிங்கனும் புனித அந்தோனியாரை வழிபட்டார் என பதிவுகள் உண்டு. 

இலங்கையில் உள்ள புனிதர்களின் ஆலயங்களிலேயே அந்தோனியார் வழிபாடு தான் மிகப் புகழ்பெற்ற வழிபாடாக வளர்ந்திருக்கிறது என்கிறார்; இலங்கையில் அந்தோனியார் வழிபாடு குறித்து ஆராய்ந்த சாகர ஜயசிங்க. 

இவாறு போர்த்துகேயரிடம் இருந்து இலங்கையை ஒல்லாந்தர் கைப்பற்றிய பின்னர் போர்த்துக்கேயரின் காலத்தில் கத்தோலிக்க மதத்தையும் கத்தோலிக்கப் பாதிரிமார்களையும் தடை செய்திருந்தார்கள். அவர்களின் பிரதான வழிபாடான அந்தோனியார் தேவாலயங்களையும் கூடவே தடை செய்திருந்தார்கள். ஒல்லாந்தர்கள் (டச்சு) புரட்டஸ்தாந்து மதத்தைச் சேர்ந்தவர்கள். டச்சு ஆட்சி 1796 இல் முடிவு பெற்ற போதும் ஆங்கிலேயர்கள் 1806 ஆம் ஆண்டு தான் “கத்தோலிக்கத் தடை” யை நீக்கினார்கள். ஆளுநர் தோமஸ் மெயிற்லான்ட் மத வழிபாட்டுச் சுதந்திரத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

டச்சு ஆக்கிரமிப்பின் நிறைவுக் காலத்தில்,  கொழும்பில் கத்தோலிக்கர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருந்ததால், இலங்கை ஒராடோரியர்களின் தலைமைப்பதவியில் இருந்த ஜாகோம் கோன்சால்வேஸ், அங்கு நிரந்தரமாக வசிக்கும் ஒரு பாதிரியாரின் தேவையை உணர்ந்தார்.

கொச்சினியிலிருந்து அந்தோணி (Friar Antonio) என்ற கத்தோலிக்க ஒராடோரியன் முன்வந்து கொழும்பை வந்தடைந்தார். ஆனால் துன்புறுத்தல் காரணமாக அவரால் பாதிரியாராக செயல்பட முடியவில்லை. அதனால், வியாபாரி போல் மாறுவேடமிட்டு, பகலில் (இன்றைய மாலிபன் தெருவில் உள்ள) கடையில் மீன் விற்றார். இரவில் அவர் கத்தோலிக்கர்களை அடையாளம் கண்டு பூசைகளை செய்தார். ஒரு வருடம் கழிந்தது. இரகசிய கத்தோலிக்க பூசை நிகழ்வதை அறிந்த டச்சுக்காரர்கள் அந்தோணியைத தேடினர். மீனவ சமூகத்தினர் அதிகமாக வாழ்ந்த முஹுதுபொடவத்தை என்ற பகுதியை அவர் கடந்து சென்று கொண்டிருந்தார்.  இந்த நேரத்தில், கடல் அரிப்பு கடற்கரையை தாக்கி மீனவர்களின் இருப்பிடங்களை சுருக்கியது. வள்ளங்கள் அலையில் அடித்துச் சென்றன.

அந்தோணி பாதிரியார் அதிசயம் நிகழ்த்திய நிகழ்வு

அந்தோணியை வழியில் சந்தித்த மீனவர்கள் தமக்கு தீர்வு தேடி அந்தோணியை அணுகினார்கள். கடல் அரிப்பைத் தடுக்க பிரார்த்தனைகளை வழங்குமாறு அவர்கள் அவரிடம் கோரினார்கள்.  அந்தோணி அதை செய்துவிட்டால் டச்சு வீரர்களிடமிருந்து அவருக்கு பாதுகாப்பு அளிப்பதாகவும் அவர்கள் உறுதியளித்தனர். பின்னர் அந்தோணி  மணலில் ஒரு சிலுவையை நட்டு, மண்டியிட்டு மூன்று நாட்களாக உண்ணா நோன்பிருந்து பிரார்த்தனை செய்தார். அவர் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தபோது, கடல் பின்வாங்கத் தொடங்கி, அரிப்பைத் தடுக்கும் மணல் அணையை உருவாக்கியது. டச்சு வீரர்களும் இதைக் கண்டு பின்வாங்க வேண்டியிருந்தது. அதைக்கண்டு வியப்படைந்த மீனவர்கள் அந்தோனியைச் சுற்றித் திரண்டனர். அவர்கள் கத்தோலிக்கத்தை ஏற்றுக்கொண்டனர். அந்த இடம் தான் இன்றைய கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயம் அமைந்திருக்கும் இடம்.

"அந்தோனியின் அதிசயம்" பலராலும் அப்போது பேசப்பட்டது. டச்சு ஆளுநர் வில்லெம் மௌரிட்ஸ் ப்ரூய்னின்க் (Willem Maurits Bruyninck - 1739-1742) அந்தோணியின் பிரார்த்தனையின் சக்தியை அறிந்தார். கத்தோலிக்கர்கள் மீதும் அவர் தாராளவாத அணுகுமுறையைக் கொண்டிருந்தார். அந்த அதிசயம் நிகழ்ந்த நிலத்தை அந்தோணிக்கு வழங்கினார் அங்கே அவர் சிறு தொழிலையும் தெய்வீகப் பணியையும் மேற்கொள்வதற்கு ஆளுனரால் அனுமதி வழங்கப்பட்டது.

1656ஆம் ஆண்டிற்குப் பின்னர் கத்தோலிக்கர்கள் கொழும்பு நகரத்திற்குள் மத நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான  சுதந்திரம் வழங்கப்படுவது இதுவே முதல் தடவையாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது. தனது நன்றியை வெளிக்காட்டுமுகமாகவும் புனித அந்தோணியாருக்கு அர்ப்பணிக்கும் முகமாகவும் சிலுவையை நாட்டிய இடத்தில் சிறிய தேவாலயத்தை அமைத்தார் அந்தோணி. அந்த சிலுவை நட்டிய இடத்தில் தான் இன்றும் பலர் வரிசையாக சென்று வழிபடும் அந்தோனியாரின் நாவின் பகுதி வைக்கப்பட்டிருக்கிற “புதுமைச் சுருவம்” இருக்கிறது.

அந்தோணி முதலில் அந்த நிலத்தில் ஒரு சிறு கடையை ஆரம்பித்தார். அது கடை “கடே” என்றே அழைக்கப்பட்டது. கொச்சினில் இருந்து வந்தவரின் கடை என்பதால் “கொச்சியாகே கடே” காலப்போக்கில் “கொச்சிக்கடை” என்று நிலை பெற்றது.

டச்சு கிழக்கிந்திய கம்பனியால் அந்தோனியார் தேவாலயம் இருந்த நிலம் எழுதிக்கொடுக்கப்பட்ட ஆவணம்

இந்த நிலமனை அதிகாரப்பூர்வமாக டச்சு கிழக்கிந்திய கம்பனியால் ஜனவரி  20, 1790 அன்று, பத்திரம் இல 31  இன் மூலம் தேவாலயத்துக்கு ஒப்படைக்கப்பட்டது. இதில் கிழக்கிந்திய கம்பனியின் உத்தியோகபூர்வ இலட்சினை பொறித்திருப்பதைக் காண்பீர்கள். பின்னர் அந்தோணி இறந்தபோது அவரின் உடலும் இந்த ஆலயத்தினுள் தான் அடக்கம் செய்யப்பட்டது.

தற்போது தேவாலயத்தில் மீண்டும் வைக்கப்பட்டுள்ள புனித அந்தோனியின் புனிதச் சிலை 1822  ஆம் ஆண்டு கோவாவில் இருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட ஒன்றாகும். 1806 ஆம் ஆண்டு அடித்தளம் இடப்பட்டு 1834ஆம் ஆண்டு புதிய தேவாலயம் கட்டும் பணி  தொடங்கப்பட்டது. அந்த ஆண்டைத்தான் ஆலயத்தின் தொடக்க நாளாக இன்றுவரை கணிக்கப்பட்டுவருகிறது. 1934இல் நூற்றாண்டு கொண்டாடப்பட்டது.   1938 ஆம் ஆண்டு பெரிய ஆலயமாக பெருப்பிக்கப்பட்டது. இன்று இலங்கையில் புனித அந்தோணியார் ஆலயம் மிகப்பெரிய புனித தேவாலயமாக மாறியுள்ளது. 

பாதுவா நகரிலிருந்து கொண்டுவரப்பட்ட புனித அந்தோனியாரின் நாக்கின் ஒரு சிறிய பகுதி இங்கே விசேடமாக வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது. நாள் தோறும் ஆயிரக்கணக்கானோர் அதனை வந்து வழிபட்டுச் செல்கிறார்கள்.

1912 ஆம் ஆண்டு கவர்னர் சேர் ஹென்றி மெக்கலம் கொழும்பு துறைமுகத்திற்காக இந்த நிலத்தை கையகப்படுத்த முயற்சித்தபோது ரோமன் கத்தோலிக்க மக்களின் தெய்வீக வழிபாட்டுத் தளமெனக் கூறி அவரின் ஆலோசகர்கள் பலர் அதனை எதிர்த்ததால் அம்முயற்சி கைவிடப்பட்டது.

லலித் அத்துலத் முதலி துறைமுக அமைச்சராக இருந்த காலத்தில் துறைமுக அதிகாரசபைக்குச் சொந்தமான துறைமுகக் காணியின் ஒரு பகுதியை அந்தோனியார் தேவாலய விஸ்தரிப்புக்கு வழங்கினார். அந்தோனியார் ஆலயம் துறைமுகத்தின் எல்லையோர காப்பரண் போலவே நிலைத்து நிற்பதை நீங்கள் அறிவீர்கள்.

90 ஆம் ஆண்டு பிரேமதாசவின் ஆட்சிக் காலத்தில் அந்தோனியார் ஆலயத்தை கொழும்பு உயர் மறை மாவட்டப் பங்காக ஆக்கும்படி விடுத்த கோரிக்கை; ஆயரால் எற்றுகொள்ளப்படாத நிலையில் ஆலய நிர்வாகம் கடும் எதிர்ப்பை வெளிக்காட்டியது. முதற் தடவையாக மூன்று மாதங்கள் ஆலயம் மூடிவைத்த கதை நாட்டின் முக்கிய பேசுபொருளாக அப்போது இருந்தது. இறுதியில் 15.08.1990 அன்றிலிருந்து சுதந்திர ஆலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. அதுவரை கொட்டாஞ்சேனை புனித லூசியா தேவாலய நிர்வாகத்தின் கீழ் தான் இது இயங்கிவந்தது.

கொழும்பில் அதிகளவிலானோர் கலந்து கொள்ளும் கிறிஸ்தவ திருவிழா “அந்தோனியார் திருவிழா தான். பல தடவைகள் சன நெருக்கடியால் விபத்துக்கள் நேர்ந்திருக்கின்றன. அந்தளவுக்கு கொச்சிக்கடை, கொட்டாஞ்சேனை ஜிந்துப்பிட்டி, விவேகானந்தா மேடு, செட்டியார் தெரு, என தேவாலயத்தின் சுற்றுவட்டாரப் பகுதியெங்கும் திருவிழாக்கோலம் பூண்டு, எங்கெங்கும் விளக்கொளியில் கொண்டாட்டமாகக் காட்சித் தரும். இந்து, பௌத்த, முஸ்லிம் மக்களும் கூட ஒன்றாக கூடிக் கொண்டாடும் நிகழ்வு அது. வாரந்தோறும் செவ்வாய்க் கிழமைகளில்  பொன்னம்பலவானேஸ்வரர் கோவிலுக்கு செல்லும் இந்து பக்தர்கள் பலர் கூட அங்கே சென்றுவிட்டு அப்படியே அந்தோனியார் கோவில் தமிழ்ப் பூசையில் கலந்துகொள்வதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.

அது மட்டுமன்றி இந்தப் பகுதியில் உள்ள புனித வியாகுல மாதா, புனித வேலாங்கன்னி, புனித அந்தோனியார், புனித லூசியாஸ் ஆகிய ஆலயங்கள் 1996 இலிருந்து ஒன்றாக இணைந்து விபூதிப் புதன் நாளில் “கொழும்பு பெரிய சிலுவைப் பாதை” என்கிற ஊர்வலத்தை செய்து வருகின்றனர். இதுவும் கொழும்பில் மிகப் பெரிய அளவினர் கலந்து கொள்ளும் ஒரு நிகழ்வாக ஆகியிருக்கிறது.

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 19 ஆம் திகதி மோசமான பயங்கரவாத தற்கொலைத் தாக்குதலுக்கு அந்தோனியார் ஆலயமும் இலக்கானது. 93 பேர் இங்கே கொல்லப்பட்டார்கள். பல நூற்றுகணக்கானோர் படுகாயமுற்றார்கள். பலத்த சேதத்துக்கு உள்ளான தேவாலயம் யூன் 12 ஆம் திகதி தான் மீண்டும் திறக்கப்பட்டது.

அந்தோனியார் தேவாலயத்தின் வளவில் மிஷனரிமார்களால் கொச்சிக்கடை புனித அந்தோனியார் பாடசாலை (இப்போது கல்லூரி) 1945 இல் 40 மாணவர்களுடன் ஆரம்பிக்கப்பட்டு, பின்னர் 1958 இல் அரசாங்கத்தால் பொறுப்பேற்கப்பட்டு இன்று ஆயிரம் மாணவர்களுக்கும் மேல் கற்கும் கல்லூரியாக இயங்கி வருகிறது.

அந்தோனியார் தேவாலயத்தின் வரலாற்றைக் கூறும் சிறு நூதனசாலையொன்று 2013 ஜனவரி 13 அன்றிலிருந்து இயங்கி வருகிறது. அங்கே இந்த வரலாற்று விபரங்களை மேலும் அறியலாம்.

இந்த கட்டுரைக்காக எனக்கு உதவிய வண. அன்புராசா அடிகள், வண ஆனந்த அடிகள் உள்ளிட்டோருக்கு மனமார்ந்த நன்றிகள். மேலும் அந்தோனியார் தேவாலயத்தோடு 48 வருடங்கள் கடமையாற்றி, தமிழ் வழிபாட்டுப் பொறுப்பாளராக இருந்து  இன்று பிரான்சில் வசிக்கும் அம்புரோஸ் பீட்டர் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.

நன்றி - தினகரன் - 23.01.2022

தவேந்திரன் (1962 - 2022) - ஒரு தலை சிறந்த மானுடனின் இழப்பு - என்.சரவணன்


என் இனிய நண்பர் தவேந்திரனின் இழப்பால் சொல்லனா வேதனையில் மூழ்கியிருக்கிறேன்... இருபத்தொரு ஆண்டுகால உறவு. எனது முதற் தர நண்பர். அவர் இல்லையென்றால் எனக்கு என்ன நேர்ந்திருக்குமோ என்று நான் நினைத்ததுண்டு. எனது வளர்ச்சியில் அத்தனை பங்கு கொண்டவர்.

சுமார் பத்தாண்டுகள் நாங்கள் இருவரும் வாரத்சன்தில் தொடர்புகொள்ளாத நாட்கள் குறைவு. இருவருமே சொந்தக் காரியங்களுக்காக தொடர்புகொண்டது மிக மிக சொற்பம். பொதுக் காரியங்களை இரவு பகலாக மேற்கொண்ட காலம் ஒன்று இருந்தது. நான் சற்று ஒதுங்கி என் எழுத்தில் முழுக் கவனத்தையும் குவிக்கத் தொடங்கினாலும், அவர் இன்னும் அதிகமாக பொதுக் காரியங்களில் ஈடுபட்டார்.

எந்தவொரு பொதுப் பணிகளிலும் தன்னை முதன்மைப்படுத்தும் நபர் அல்ல... ஒருபோதும் தற்பெருமை, சுயநலம், சுயவிளம்பரம் அற்ற ஒரு மனிதர் அவர். வெற்றிகரமான பணிகளுக்கு பின்னால் அவர் இருப்பார். பின்னால் இருந்தபடி அதன் வெற்றியைக் கொண்டாடுவார். தனது பாத்திரம் இது என்று உரிமை கோரமாட்டார். அந்த வெற்றிகளுக்கு சொந்தம் கொண்டாட மாட்டார். திரையின் பின்னால் இருந்து நன்மையை செய்து மற்றவர்களின் மகிழ்ச்சியிலும், வெற்றியிலும் இன்பம் காணும் மனிதர்களைக் காண்பது அரிது. இந்த விடயத்தில் தவேந்திரனுக்கு நிகராக வேறெவரையும் நான் கண்டதில்லை.

நோர்வே – சன்விக்கா பகுதியில் தமிழ்ச் சங்கத்தை உருவாக்கியதிலும், அதன் பாடசாலையை உருவாக்கி வழிநடத்தியதிலும் முக்கிய பங்கு அவருக்குண்டு. 2001 இல் என்னையும் அதன் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி என்னை மீண்டும் ஆசிரியர் பணிக்கு தள்ளினார். கணினி வகுப்புகளை நடத்தத் தொடங்கிய போது அவரும் ஒரு மாணவர்களில் ஒருவராக என்னிடம் கற்றார். எனக்கு வகுப்பறைகளை ஒழுங்கு செய்வது, என்னை வகுப்புகளுக்கு ஏற்றி இறக்குவது என அவர் என் மூலம் பலருக்கு அந்த நன்மைகளை பெற்றுக்கொண்டுத்தார்.

அதன் பின்னர் அந்த சங்கம் அரசியல் காரணங்களுக்காக பிளவுபட்ட வேளையில் நோர்வேயிலேயே இங்கு மட்டும் தான் அரசியல் பின்னணி இல்லாமல் ஒரு தமிழ் கல்விக் கூடமும், சங்கமும் எஞ்சியிருக்கிறது. அதை பாதுகாக்கவேண்டும் என்று விடாப்பிடியாக இருந்து என்னையும் அதில் முக்கிய பாத்திரமேற்கச் செய்தததன் மூலம் அந்த சங்கமும் பள்ளிக்கூடமும் காப்பாற்றப்பட்டது. அந்த சங்கம் அப்படியே முழுக்க விழுங்கப்படுவதில் இருந்து பாதுகாத்ததுடன், பெரிய பிளவை தவிர்ப்பதற்காக போராடினோம். கல்வி நடவடிக்கைகளை மேலும் விஸ்தரிப்பதற்காக அந்த சங்கத்தில் பல நடவடிக்கைகளை அதிகரித்தோம். அதற்கு காரணமானவர்கள் பலர் இருந்த போதும் தவேந்திரனின் பாத்திரம் சொல்லித் தீராது. அவரது நேரம், உழைப்பு, சக்தி, சிந்தனை, பணம் என எதையும் அவர் அதற்காகவே செலவிட்டார்.

அச்சங்கத்துக்கு யாப்பு எழுதி முடிக்கும் பணியும் என் தலைமையில் விடப்பட்டது. அதற்கென்று இணையத்தளத்தையும் (www.abtc.no), அதற்கென்று ஒரு பத்திரிகையையும் (ஒன்றியத்தின் குரல்) ஆரம்பித்தோம். என்னை அச்சங்கத்தின் தலைமைப் பதவிக்கு கொண்டுவர அவர் ஆவல் கொண்டிருந்தபோதும் நான் கல்வி நடவடிக்கைகளை மட்டும் என்னிடம் பொறுப்பாக தந்துவிடுங்கள் என்று கோரி பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்தேன். சன்விக்கா சினிமா மண்டபத்தில் நாங்கள் நடத்திய கல்வி மாநாட்டுக்கு வெளிநாடுகளில் இருந்தெல்லாம் கலந்துனர்களையும், வளவாளர்களையும் வரவழைத்திருந்தோம்.

2000 ஆம் ஆண்டு அவருடன் சேர்ந்து "பறை" சஞ்சிகை தொடங்கிய போது அதன் ஆசிரியர்களில் ஒருவராக அவரை இணைத்துக்கொண்டேன். தனக்கு இந்தளவு எழுத்துப் பணிகள் வராது எனவே தன்னை அதில் இணைப்பதில் அர்த்தமில்லை என்று மறுத்தார். எவரும் எழுத்தாளராக பிறப்பதில்லை. உங்களை எழுத வைப்பது எனது பொறுப்பு, இப்போது சஞ்சிகையைக் கொணர்வதில் பெரும் பங்கை ஆற்றிவருகிறீர்கள்; அதுவே ஆரம்பமாக இருக்கட்டும் என்று அவரின் பெயருடன் தான் பறை சஞ்சிகையை வெளிக்கொணர்ந்தோம்.

சுனாமி பேரழிவு வந்தபோது இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக உடனடியாகவே வீடு வீடாக உதவி கேட்டு அழைந்தோம். நல்ல நிலையில் உள்ள பயன்படுத்திய உடைகளையும் வீடு வீடாக சேகரித்தோம். ஜேம்ஸ், தவநாதன், தங்கன் உள்ளிட்ட இன்னும் பல நண்பர்கள் அந்தப் பணியில் தவேந்திரனுடன் இணைந்து கொண்டார்கள். தவேந்திரனின் வீட்டில் தான் இலங்கைக்கு அனுப்புவதற்கான கொள்கலனும் நிறுத்தப்படிருந்தது. வேகவேகமாக அதனை அனுப்புவதற்கு இரவுபகல் பாராது தலைமை கொடுத்தார்.

2009 முள்ளிவாய்க்கால் பேரழிவின் போதும் அகதிமுகாம்களில் சிக்குண்டு தவித்த மக்களுக்கு உடனடியாகவே உதவிசெய்யும் பொருட்டு இதுபோன்றே சேகரித்து கொள்கலனை அனுப்பினோம். அங்குள்ளவர்களுக்கு தொடர்ச்சியாக உதவும் பொருட்டு கடனளிப்பு திட்டமொன்றையும், விவசாய நடவடிகைகளுக்கும், மீள்கட்டுமான வேலைகளுக்கு கருவிகளையும், இயந்திரங்களையும் குறைந்த வாடகைக்கு கொடுக்கக் கூடிய ஒரு திட்டத்தை ஆரம்பிப்பதற்காக நண்பர்களுடன் சேர்ந்து North Aid என்கிற அமைப்பை உருவாக்கினோம்.

2008 ஆம் ஆண்டு INSD மாநாட்டை நோர்வேயில் நடத்தினோம். அதன் ஏற்பாட்டுப் பொறுப்புகளிலும் பலவற்றை அவர் சுமந்தார். இலங்கையில் இருந்து இடது சாரித் தலைவர்களில் ஒருவரான (71 கிளர்ச்சியின் தலைவர்களில் ஒருவரான) பெட்ரிக் பெர்னாண்டோவை தனது சொந்த ஸ்பொன்சரில் அந்த மாநாட்டுக்கு அழைத்தார்.

எப்போதும் கமராவுடன் திரியும் நான் பல பதிவுகளை ஆண்டு ரீதியாகவும், தலைப்புகளிட்டும் ஒழுங்கு செய்து வைத்திருக்கிறேன். இப்போது அந்தப் படங்களில் அவரைத் தேடுகிறேன். அவரை அதிகளவு காணோம். பெரும்பாலும் படங்கள் எடுக்கின்ற சமயங்களில் நிச்சயம் சீரியஸாக வேறு பணிகளில் இருந்திருப்பார். எப்போதும் திரைக்குப் பின்னால் இருந்து அதிகப் பணிகளை ஆற்றிப் பழகியவர் அல்லவா.

2009 ஆம் ஆண்டு இலக்கிய சந்திப்பை ஒஸ்லோவில் நடத்திய போது அதன் ஏற்பாட்டுக்குழுவில் அவரையும் இணைத்துக்கொண்டதால் தான் அதை சாத்தியப்படுத்த முடிந்தது. மேலும் அந்த இலக்கிய சந்திப்புக்கு இலங்கையில் இருந்து எழுத்தாளர் ஆத்மாவை அழைப்பதற்கு அவர் தனது பொறுப்பில் ஸ்பொன்சர் செய்து வந்திறங்கும் வரை சகல பொறுப்புகளையும் செய்து முடித்தார். வெளிநாடுகளில் இருந்து வந்த தோழர்களை அவர் வீட்டில் தான் வரவேற்று ஒரு உணவு விருந்தையும் ஏற்பாடு செய்து அவரது வீட்டிலேயே சிலரை தங்க வைத்தார்.

மீண்டும் 2015 இல் இலக்கிய சந்திப்பை நடத்தியபோதும் அவர் அக்குழுவில் தனது பங்களிப்பை ஆற்றினார்.

சதா திட்டங்களைப் போட்டுக்கொண்டே இருக்கும் அபாராமான தூரநோக்குள்ள மனிதர் அவர். அதுபோல அத்திட்டங்களில் பலவற்றை தகுந்தவர்களின் ஒத்துழைப்பை பெற்று நிறைவேற்றிவிடும் வினைத்திறன் படைத்தவர் அவர்.

தனது அரியாலை ஊருக்கு அவர் பெரும் பணியாற்றியிருக்கிறார். அரியாலை சனசமூக நிலையத்தை மையமாக வைத்து பல பணிகளை அவர் நண்பர்களுடன் இணைந்து நிறைவேற்றினார். அப்படி சில நடவடிக்கைளில் என்னையும் இணைத்திருக்கிறார். தனது செலவில் ஒரு கணினி வகுப்புக்கான அறையை அரியாலையிலுள்ள சனசமூக நிலையத்தில் ஒரு அறையை திருத்தி ஆரம்பித்தார். பெரும் பொருட்செலவு உருவாகியிருந்தது. வகுப்புகளை என்னை வைத்துத் தான் தொடக்கினர். ஒன்லைன் மூலம் முதல் கூட்டத்தையும் வகுப்பையும் நானும் அவரும் சேர்ந்து தான் ஆரம்பித்தோம். ஊரில் அதை பராமரிக்காமல் நாசமாக்கிவிட்டார்கள் என்பது வேறு கதை. ஆனாலும் அரியாலைக்கான வேறும் சில திட்டங்களில் என்னை ஈடுபடுத்தியிருக்கிறார்.

யாப்பை எழுதுவது, கூட்டத்துக்கான அவர் ஆற்ற வேண்டிய உரையைத் தமிழில் தயாரிப்பது, அறிக்கை தயாரிப்பது, அறிவித்தல்கள், விளம்பரங்கள் என அனைத்துக்கும் அவர் என்னை நாடுவார. நிச்சயம் அவரின் நடவடிக்கைகளுடன் நான் மட்டுமல்ல இப்படி பலரும் சம்பந்தபட்டிருப்பார்கள். என்னோடு மட்டும் இத்தனை நடவடிக்கை என்றால் மொத்தம் அவர் ஈடுபட்டிருக்கக் கூடிய நடவடிக்கைகள் எத்தனை என்று உங்களால் ஊகிக்க முடியும்.

பெரும்பாலும் அவர் சக மனிதர்களுடன் தொடர்பு கொள்வதாயின் நிச்சயம் அது ஒரு பொது விடயத்துடன் சம்பந்தப்பட்டதாகத் தான் இருக்கும். மற்றும்படி சொந்த விடயங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.

***

சன்விக்காவுக்கு நான் குடியேறியபோது எனது முதல் விலாசம் அவரின் வீட்டு விலாசம் தான். சுமார் மூன்று ஆண்டுகள் எனக்கு வரும் கடிதங்கள் அத்தனையும் அங்கே தான் வந்தன. 2013இல் நான் ஒஸ்லோவில் ஒரு வீட்டை வாங்கியபோது பணப்பற்றாக்குறையை அவரிடம் தெரிவித்தபோது உடனடடியாகவே எனக்கு உதவி செய்தார். திருப்பி செலுத்த மூன்று வருடங்களாக ஆனது. அதற்காக என்னை அவர் நிர்பந்தித்தது இல்லை.


நாங்கள் இருவரும் சேர்ந்து பல இடங்கள் திருந்திருக்கிறோம். பல உல்லாசப் பயணங்கள், நீண்ட நடை, சைக்கிள் ஓட்டம் வசந்தகாலங்களில் அருகிலுள்ள தீவுகளுக்கு சென்று உணவு தயாரித்து உண்பது, அவரின் வீட்டு வளவில் சேர்ந்து சுத்தம் செய்வது, சரிசெய்வது என ஒன்றாக அதிக காலத்தை கழித்திருக்கிறோம். அவரும் நானும் சன்விக்கா தமிழ் சமூகத்தினர் மத்தியில் கணினி திருத்தத்தில் நன்றாக அறியப்பட்டவர்கள் என்பதால் பலரும் எங்கள் இருவரையும் தொடர்புகொள்வார்கள். தனியாகவோ இருவரும் சென்றோ திருத்தி கொடுப்பது வழக்கமாக இருந்தது. அதற்காக நாங்கள் ஒருபோதும் பணம் அறவிட்டதில்லை. அதேவளை இருவரும் ஒருவரிடம் இருந்து ஓருவர் அத்துறை சம்பந்தமான நிபுணத்துவத்தை பரஸ்பரம் பரிமாறிக்கொண்டு கற்றுக்கொள்வோம். எங்களை கணினி திருத்துவது தொடர்பான விடயங்களில் புதுப்பித்தே வந்தோம்.

இருவரும் ஒரு கணினி திருத்தும் கடையைத் திறக்கும் திட்டமும் இருந்தது. அது தொடர்பாக ஒரு விளம்பரத்தையும் ஒரு நாள் எழுதினோம். இது வெளிவந்தால் அடுத்த நாள் அதிகாலையில் அவரின் வீட்டு வாசலில் பலர் நான் நீயென வரிசையில் நின்று ஆரவாரப்படுத்துவதைப் போல கற்பனை செய்துகொண்டு இருவரும் ஒருவரையொருவர் கலாய்த்தோம். இதைப் பல சந்தர்ப்பங்களில் அவர் என்னிடம் நகைச்சுவையாக நினைவு கூர்ந்து சிரிப்பார்.

நான் மீண்டும் ஒஸ்லோவுக்கு வந்ததன் பின்னர் அவருக்கும் எனக்கும் இடையில் நேரடி சந்திப்புகள் குறைந்துபோயின எங்கள் உரையாடல்கள் தொலைபேசிவழியாகவும், மின்னஞ்சல், குறுஞ்செய்தி வழியாகவும் சுருங்கின. ஒஸ்லோ வரும்வேளையில் அவர் எப்போதாவது வீட்டுக்கு வந்து செல்வார். சில தடவைகள் எங்களை குடும்பமாக அழைத்து விருந்து கொடுத்தார். ஈராண்டுகளுக்கு முன்னர் தனது படகில் எங்களை குடும்பமாக அவரின் துணைவி மேகலாவுடன் அழைத்துச் சென்றார்.

இலங்கையில் அவர் தனிப்பட்ட ரீதியில் பெரும் செலவு முன்னெடுத்த பணிகள் பல அங்குள்ளவர்களின் அக்கரையீனத்தால் தோல்வியில் முடிந்தன. ஆனாலும் அவரின் சோர்வு சில நாட்கள் தான் இருக்கும். அடுத்த திட்டத்துக்கு தயாராகிவிடுவார். யுத்த காலத்தில் அவர் Excavator இயந்திரங்களை நோர்வேயில் இருந்து ஏற்றுமதி செய்து ஊருக்கு கொண்டு போய் சேர்த்தார் அப்போது அவர் அதற்காக இலங்கை சுங்கத்துக்கும் பாரிய வரியைக் கட்டினார். விடுதலைப் புலிகளுக்கும் ஏராளமான பணத்தை வரியாக செலுத்த வேண்டி ஏற்பட்டது. ஊரில் அவருக்கு நம்பகமானவர்களிடம் அதை ஒப்படைத்து அங்கே குறைந்த வாடகைக்கு கொடுத்து காடு மண்டிப்போன வயல்வெளிகளையும் விவசாயத்தையும் மீட்கும் பணிகளுக்கு உதவுவதே அவரின் திட்டம். கூடவே யுத்தத்தால் இடிந்துபோன கட்டிட எச்சங்களை அப்புறப்படுத்தி மீள் கட்டுமானங்களுக்கு உதவும் என நம்பி அதைத் தொடங்கினார். ஆனால் நாட்டில் அவரால் நம்பப்பட்டவர்களின் ஊழல்களின் காரணமாக இங்கிருந்து அவர் செலவுக்கு மேல் செலவு செய்துகொண்டிருந்தார். கடும் நட்டத்தில் அந்தத் திட்டத்தைக் கைவிட நேரிட்டது.

நோர்வேயிலும், மேற்கு நாடுகளிலும் அவர் வியப்பாக காணும் தொழில்நுட்பங்களை எல்லாம் நாட்டில் இவை கிடைத்தால் எப்படி இருக்கும் என்றே சிந்திப்பார். அவர் பணிபுரிந்த துறை Hydrolic துறை. இலங்கையில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் hydrolic துறை சார்ந்த கற்கை கிடையாது என்பதை அங்கு சென்று அலைந்து தேடி அறிந்து முடிவுக்கு வந்தார். ஐந்தாண்டுகளுக்கு முன்னர் அவர் யாழ் பல்கலைக்கழகம் சென்று பொறியியல் பீட மாணவர்களுக்கு அது தொடர்பில்  ஒரு உரையாடலையும் செய்தார். இதுவரை hydrolic தொடர்பான கற்கைக்கு படங்கள் மூலமும், காணொளி மூலமும் தான் விளக்கமளிக்கப்படுகின்றன என்பதையும் அவர் கண்டுகொண்டார். நோர்வே வந்ததும் தான் பணிபுரியும் கம்பனியிடம் பேசி மில்லியன் பெறுமதியான Hydrolic கருவியொன்றை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு தனது சொந்தச் செலவில் அனுப்பினார். ஆனால் பல்கலைக்கழகத்தினரின் அசட்டையால் சுங்கத்தினரிடமிருந்து அதை உடனடியாக எடுக்காமல் பல காலம் இழுபறிப்பட்டு அது கிடைக்காமல் போனதாக அறிந்தபோது இந்த மனிதன் எத்தனை ஏமாற்றங்களைத் தான் பொது விடயங்களில் எதிர்கொள்வார் என்று ஆதங்கப்பட்டேன்.

அவர் சேகரித்து வைத்திருந்த சுமார் பதினைந்து லெப்டாப் கணினிகளை எனக்குத் தந்து அவற்றை இல்லாதவர்களுக்கு என்னைக் கொடுக்கும்படி என் மூலம் அனுப்பினார். அவரின் கம்பனியில் வைத்துத் தான் அனுப்புவதற்கான பெட்டியை நிரப்பிக் கட்டினோம்.

சன்விக்காவில் எனக்கு கிடைத்த மோசமான அனுபவங்களால் நொந்து இனி இங்கே எந்த பொதுக் கருமங்களிலும் ஈடுபடுவதில்லை என்கிற முடிவுடன் தமிழ்ச் சமூகத்தின் கண்களில் படாத இடத்தில் இடத்தில் வாழவேண்டும் என்று தனித்து ஓரிடத்தில் வாழ்ந்து வந்தேன். எனது இருப்பிடத்தை தவேந்திரன் மட்டுமே அறிந்திருந்தார். என்னை தேடியவர்கள் தவேந்திரனைத்தான் தொடர்புகொண்டார்கள். அவசரமாக தொடர்பு கொள்ள முயற்சித்தவர்களின் விபரங்களை அவர் தான் என்னிடம் சேர்ப்பித்தார். அவர்க்கு அருகாமையில் நான் தனியாக வாழ்ந்துவந்த போது அடிக்கடி என்னை உணவுண்ண அழைப்பார். என் தனிமையைப் போக்கியிருக்கிறார். அவரை ஒரு அப்பாவின் ஸ்தானத்தில் வைத்து நான் பார்த்திருக்கிறேன்.

தனி வீட்டை வைத்திருப்பவர்களுக்கு உள்ள வேலைச்சுமைகளை இங்கு வாழும் பலர் அறிவர். அதைப் பாராமரிப்பதும், சரிசெய்வதும், புதுபிப்பதற்கும் தனி வசதியும், சக்தியும், நேரமும் தேவை அத்த்தனையையும் செய்து கொண்டு, ஒரு புறம் தொழில், மூன்று பெண் பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளுக்காக கூட்டித்திரிவது என்பவற்றுக்கு மேலாகத் தான் பொது வேலைகளையும் செய்து வந்தார். இதற்கிடையில் பலரும் பல தேவைகளுக்காகவும் அவரைத் தொடர்புகொள்வார்கள். ஒருபோதும் மறுக்காமல் தன்னால் இயன்றதை செய்து கொடுக்க தனது உழைப்பையும் நேரத்தையும் கொடுப்பார். அதனால் அவர் எதிரிகளை சம்பாதிக்கவில்லை. ஏராளமானோரின் இதயங்களை வென்றிருந்தார். சன்விக்காவில் பல தமிழ் குடுமபங்களின் இரண்டாந்தலைமுறையினரின் வளர்ச்சியிலும், பண்பாட்டுப் பேணலிலும் திரைமறைவில் தவேந்திரன் என்கிற மாமனிதரின் பங்கு எத்தகையது என்பதை நானறிவேன். அதை எவராலும் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது.

அவரை நோயாளியாக்கியதில் இந்தப் பொதுப் பணிகளுக்கு நிச்சயம் பங்குண்டு என்பது எனது கணிப்பு. அவரை நன்றாக அறிந்ததால் இதனை என்னால் கூற முடியும். பத்தாண்டுகளுக்கும் மேலாக அவர் ஒரு நீரிழிவு நோயாளி. பொது வேலைகளுக்காக நேரத்துக்கு உணவு, நேரத்துக்கு ஓய்வு, நித்திரை எதுவும் அவருக்கு இருக்கவில்லை. தனது மனைவியின் ஆலோசனையையும், கண்டிப்பையும் மீறி மறைவாக பல காரியங்களில் தீவிரமாக ஆகி விடுவார். தன்னைக் கவனிக்காமல் ஓய்வு ஒழிச்சலின்றி அவர் ஆற்றிய பணிகள் அவரின் துணைவியை விட வெளியார்களுக்கே அதிகம் தெரியும்.

இரண்டாண்டுகளுக்கு முன்னர் காலியில் உள்ள தமிழ்த் தோட்டத்தொழிலாளர்கள் வாழும் வறுமை மிகுந்த தோட்டமொன்றில்; ஒரு பாடசாலையின் கூரைகளும், மதில்களும் இடிந்து விழுந்தபோது அதற்கு உதவி செய்வதற்காக முகநூலில் பதினைந்து நண்பர்களைத் தெரிவு செய்து ஒரு குழுவை உருவாக்கி அவர்களிடம் உதவுமாறு கோரினேன். இரண்டே நாட்களில் ஆறு பேர் உதவியதன் மூலம் இலக்கு எட்டப்பட்டதால் அத்தோடு நிறுத்திவிட்டு அந்த கட்டிடத்தை திருத்த உதவினோம். உடனடியாக உதவியர்களில் ஒருவர் தவேந்திரன். என்னிடம் தொலைபேசியில் அவர் இன்னொன்றைக் குறிபிட்டார். நிதிப் பங்களிப்பை செய்தவர்களின் பட்டியலில் எனது பெயரைத் தவிர்த்திருக்கலாம். அப்படி செய்திருந்தால் அந்தக் குழுவில் உள்ள எனது மனைவியும் உதவியிருப்பார், நான் உதவிவிட்டதால் தானும் கொடுக்கத் தேவையில்லை என்று தன் மனைவி எண்ணியிருக்கக் கூடும் என்றார்.

சரியாக இருபது ஆண்டுகளுக்கு முன்னர் 2002 இல் எனது தகப்பனார் திடீர் என்று இருந்துபோனார். அப்போது நான் இலங்கையில் இருந்தேன். விரக்தியுடன் இனி நோர்வே திரும்புவதில்லை என்று அங்கே மீள சென்றிருந்த சமயம் தான் அந்த இழப்பு நேரிட்டிருந்தது. இந்த நிலையில் நான் என்ன செய்வேனோ என்று எண்ணி சில நண்பர்களிடம் பணம் சேர்த்து எனக்கு அந்த நேரத்தில் கிடைக்கச்செய்திருந்தார்.

என்னோடு தொடர்புடைய அனுபவங்களை மட்டும் தான் நான் இங்கே பகிர்ந்திருக்கிறேன். அவரின் பொதுநல பங்களிப்பில் நான் பகிர்ந்தது மிகச் சிறிய அளவு தான். இதற்கு வெளியில் நான் அறியாதது, அல்லது நான் இங்கே பகிராதது பல. அதை இன்னும் பல நண்பர்கள் நிச்சயம் பகிர்வார்கள்.

***

கடந்த இரண்டாண்டுகளாக எனது உடல் நலம் சற்று மோசமாகி வந்தது. மருத்துவ அறிக்கைகள் சில எனது உடல் – உயிர் பற்றிய சில ஆபத்தான சமிக்ஞைகளை தந்திருந்தார்கள். எனக்கு என்ன நேர்ந்துகொண்டிருகிறது என்பது பற்றி எனது துணைவிக்கு கூட நான் தெரிவிக்காமல் பல மாதங்கள் இருந்தேன். ஆனால் என் நண்பர் தவேந்திரனோடு பகிர்ந்துகொள்ளத் தவறவில்லை. அவர் அதைப் பற்றி அறிந்தவுடனேயே எனது வீட்டுக்கு அவரின் துணைவி மேகலாவுடன் வந்து என்னைப் பார்த்தார். அவருக்கு எதுவும் தெரியும் என்பதை என் துணைவிக்கு அவர்கள் காட்டிக்கொள்ளவில்லை. மிகச் சமீபத்தில் சில சிகிச்சைகளை முடித்துக்கொன்டதன் பின்னர் தான் எனது துணைவியோடு அவற்றைப் பகிர்ந்துகொள்ள முடிந்தது.

***

இறுதியாக அவர் கடந்த ஒக்டோபர் 8ஆம் திகதி என் வீட்டுக்கு வந்தார். ஒரு லெப்டொப் ஒன்றில் பழைய “விண்டோஸ் 7”ஐப் நிறுவ வேண்டும் என்று இருவரும் முயற்சித்தோம். இப்போதெல்லாம் “விண்டோஸ் 7” கிடைக்காது என்பதால் அதை சற்று சிர்மப்பபட்டு தேடி எடுத்து இன்ஸ்டால் செய்தோம். ஒரு கண் தெரியாத மாணவி ஒருவருக்கு அனுப்புவதற்காக அதனைக் கொண்டு வந்திருந்தார். கட்புலனற்றவர்கள் பயன்படுத்துவதற்கென்று ஒரு புரோகிராம் இருப்பதாகவும் அதை புதிய சிஸ்டத்தில் நிறுவ முடியாதென்றும், பழைய விண்டாஸ் 7 இல் தான் அதை நிறுவ முடியும் என்றும் கூறினார். அங்கு இப்படியே அனுப்விட்டால் இதை தயார் செய்வதில் அவர்களுக்கு சிரமம் ஏற்பட்டுவிடும் என்றும் நாமே அதை முடித்து அனுப்பிவிடுவோம் சரா என்றார். அப்படியே செய்தோம். அன்று என் துணைவி தயாரிக்கும் பால்சோறும் கட்டச்சமபலும் அவருக்கு வெகு பிரியம் அதை இன்னொரு நாள் வந்து சாப்பிடுகிறேன் என்றார். எதையும் உன்ன மறுத்துவிட்டார். காப்பி மட்டும் சற்று குடித்தார். 

அவருக்கு குரல் அவ்வளவாக வெளியில் வரவில்லை. கொஞ்சம் தொண்டையில் தொற்று என்றும், சரியாகிவிடும் என்றும் கூறினார். உடல் மெலிந்திருப்பதைப் பற்றி என் துணைவியும் கேட்டார். சில மருத்துவ காரணங்களால் மெலிந்திருப்பதாகச் சொன்னார். வாசலில் அவரிடம் இருந்து விடைபெற்றபோது கவனம் சேர் என்றேன். இரவு வீடு சென்று அந்த கணினி பற்றி சில விபரங்களை டெக்ஸ்ட் செய்திருந்தார்.

அதன் பின்னர் ஒக்டோபர் 17 ஆம் திகதி மதியம் 11.49 அவரும் நானும் ஒன்றாக ஒரு படகுப் பிரயாணத்தில் எடுத்த படத்தை எனது முகநூல் தகவல் பெட்டிக்கு அனுப்பியிருந்தார்.  

“Sweet 💘 memories thanks sir”

என்று நான் பதிலுக்கு பதில் அனுப்பியிருந்தேன். (தனிப்பட கதைக்கும் வேளைகளில் அவர் என்னையும், நான் அவரையும் அன்பின் நிமித்தம் அவ்வப்போது சேர் போட்டு அழைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தோம்) 

அது தான் அவர் எனக்கும் நான் அவருக்கும் அனுப்பிய இறுதி செய்திகள். இறுதிப் பரிமாறல். இறுதி விடைபெறல்.

தனது முகநூலில் அவர் இறுதியாக பகிர்ந்த படம் அது தான்.

***

சஞ்சயன் சனிக்கிழமை பின்னேரம் சரியாக 6.50 க்கு எனக்கு தொலைபேசியில் தவேந்திரன் தவறிவிட்டார் என்ற போது அந்த அதிர்ச்சியை என்னால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. தவேந்திரன் அப்படித் தவறி ஒரு மணித்தியாலத்தைக் கடந்திருந்தது.

சஞ்சயனிடம் மேலதிகமாக என்ன கேட்பது என்றும் தெரியவில்லை. அப்படியே குளிர் மேலிட இருட்டாகிவிட்டேன். என் படுக்கையறைக்குச் சென்று அழுதுகொண்டிருந்தேன். மனைவி வந்து என்னைத் தேற்றிக்கொண்டிருந்தார். என் சிறு குழந்தைகள் இருவரும் வந்து என் கண்ணீரை துடைத்துகொண்டிருந்தார்கள். அவர்கள் எவர் கேட்கும் கேள்விக்கும் என்னால் எதுவும் கதைக்க முடியாமல் இருந்தது. எட்டு நிமிடங்களின் பின் மீண்டும் சஞ்சயனுக்கு தொலைபேசி செய்து மேலதிக சுருக்க விபரங்களை அறிந்துகொண்டேன். வீட்டில் அவரின் உறவினர்கள் நிறைந்திருப்பார்கள். இன்று இரவு நீங்கள் போகத் தேவையில்லை. நாளை செல்லுங்கள் என்றார்.

ஆனால் அவரைப் பற்றிய நினைவுகளையும், அவர் இனி இல்லை என்பதையும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. சில நிமிடங்களில் ரவி மாஸ்டர் என்னோடு தொடர்புக்கு வந்தார். அவர் வேறெதையும் நீட்டவில்லை. தவேந்திரனைப் பார்க்கச் செல்கிறேன். ரெடியாக இருங்கள் இன்னும் சில நிமிடங்களில் அங்கு வந்து விடுகிறேன் என்றார்.

பயணித்துக் கொண்டிருந்தவேளை இருவருமே வெறுமையாக உளறிக்கொண்டிருந்தோம். போகும் வழியிலேயே சஞ்சயனிடம் இருந்து அழைப்பு நீங்கள் இந்த ஆஸ்பத்திரிக்கு வராதீர்கள் நேராக வீட்டுக்கு செல்லுங்கள். இங்கே எவரையும் விடமாட்டார்கள். நாங்களும் அப்படியே முடிவெடுத்தோம். ஆனால் அந்த ஆஸ்பத்திரியைத் தாண்டித் தான் தவேந்திரனின் வீட்டை அடைய வேண்டும். இடையில் ஆஸ்பத்திக்கு சென்று முயற்சி செய்து பார்ப்போம் என்று முடிவெடுத்தோம். அங்கே சென்றிருந்தபோது ஏற்கெனவே பல வந்து ஆஸ்பத்திரிக்கு வெளியில் குளிரில் காத்துக்கொண்டிருந்தார்கள். முகமூடிக் கவசமணிந்திருந்த பலரை யார் என்று அடையாளம் கூட காண முடியாமல் இருந்தது. பிரதான வாசலின் அருகில் இருந்த ஒரு தாதி அனைவரையும் வெளியே செல்லுமாறு கட்டளையிட்டுக்கொண்டிருந்தார். உள்ளே ஏற்கெனவே சுமார் பதினைந்து பேர் இருந்தார்கள். ஒருவர் தவேந்திரனுக்கு மாற்று வேஷ்டி கொண்டு வந்து கொடுத்ததை உள்ளே இருந்தவர் எடுத்துக்கொண்டு போனார்.

எங்களுக்கு முன் வந்தவர்கள் சிலர் இனி எப்படியும் எவரையும் உள்ளே அனுமதிக்கப் போவதில்லை நாங்கள் கிளம்புகிறோம் என்று திரும்பினார்கள். இன்னும் சிலர் வந்து சேர்ந்துகொண்டிருந்தார்கள். குளிரிலும், சோகத்திலும் எங்கள் நெஞ்சைக் கட்டிபிடித்தபடி மேலே தெரிந்த அஆச்பத்திரி ஜன்னல்களை பார்த்த்ககொண்டிருந்தோம். சுமார் ஒரு மணித்தியாலம் கழித்து தவேந்திரனின் சகலன் ரமேஷ் இருவர் வாருங்கள் என்று வேறு வழியில் அழைத்தார். நாங்கள் வேகமாக படிகளைத் தாண்டி ஏறி நுழைந்தோம். 

\உள்ளே அறையில் தவேந்திரன் உறங்கிக் கொண்டிருந்தார். அருகில் அவரின் துணைவி மேகலா அவரின் தலையருகில் இருந்த கதிரையிலும் இளைய மகள் திஷாந்தி காலடியில் இருந்த கதிரையிலும் சலனமில்லாமல் உறைந்திருந்தார்கள்.

என் நண்பர் அல்ல அங்கே இருப்பது. மிகவும் மெலிந்த உடலைக் கொண்ட இன்னோர் மனிதர். அடையாளம் காண முடியாத அளவுக்கு அவர் மெலிந்திருந்தார். நெஞ்சு வெடிப்பதைப் போலிருந்தது. அவரின் உருவத்தில் அவரை விரித்துப் பார்த்தபடி தேடிக்கொண்டிருந்தேன். தேம்பித் தேம்பி அழ மட்டுமே முடிந்தது. இனி என் நண்பர் இல்லை. அவர் இல்லாத பொதுவுலகை இலகுவாக வரவேற்க முடியவில்லை. ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை.

என்னோடு வந்த ரவி மாஸ்டர் ஒரு சில செக்கன்கள் மட்டுமே தவேந்திரனைப் பார்த்தார். உடனடியாகவே திரும்பிச் சென்று ஜன்னலைப் பார்த்தபடி தேம்பித் தேம்பி அழுதுகொண்டிருந்தார்.

மற்றவர்களுக்கு இடம் கொடுத்து நாங்கள் அங்கிருந்து தவேந்திரனின் வீட்டுக்கு திரும்பினோம். தவேந்திரனின் வீட்டில் அவரின் உறவினர்கள் மட்டுமே இருந்தார்கள். நாங்கள் இரவு 12.30 வரை அங்கிருந்தோம்.

அந்த வீட்டில் சில நிமிடங்கள் அந்த வீட்டுச் சுவர்களையும் மேசையையும் தொட்டுத் தொட்டு பார்த்தேன். அவரும் நானும் சந்திக்கும் வேளைகளில் கதவை மூடிக்கொண்டு உரையாடும் அவரின் கணினி அறையை கதவின் ஜன்னல் வழியே எட்டி வெறித்துப் பார்த்துக்கொண்டே இருந்தேன். அங்கு வந்திருந்த நண்பர்களின் கதைகளில் சில நிமிடங்கள் கவனம் செல்லவில்லை. எப்போதும் அமரும் வீட்டின் வராந்தாவிலுள்ள சாய்விருக்கைகளைப் பார்த்துக்கொண்டிருந்தேன். இந்த வீட்டுக்கு குடியேறிய காலத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக அதனை மாற்றி எடுக்கும் சந்தர்ப்பங்கள் பலவற்றின் போது நானும் இருந்திருக்கிறேன்.

கடைசி மகள் “துத்து” வளர்த்த அவளுக்கு பிரியமான எலி மரணித்த போது அதை முறையாக அடக்கம் செய்ய நான் இப்படி ஒரு குளிர்காலத்தில் தான் வளவில் பணியகற்றி, குழி தோண்டி புதைத்து அதற்கு ஒரு அடையாளமிட்டோம். வீட்டின் கூரையோடு ஒட்டிய மாடியை குழந்தைகளின் பொழுதுபோக்கிடமாக மாற்றுவதற்கு அவரோடு சேர்ந்து நான் தான் திட்டமிட்டேன். அதன்படி விளையாட்டிடம், சினிமா பார்க்கும் ஏற்பாடு, லைட் செட்டிங் எல்லாமே திட்டமிட்டது நினைவு. பிள்ளைகளுடன் விளையாடுவதற்கு ஒரு காலத்தில் நிறைய நேரம் செலவிட்டிருக்கிறேன். மூத்த மகள் ஜீவந்தியின் குரலிசை அரங்கேற்றத்தின் போது பல மாதங்கள் தவேந்திரனோடு அலைந்து திரிந்திருக்கிறேன். இங்கு வைத்துதான் அந்த அரங்கேற்ற மலரையும் செய்து முடித்தேன். எங்கெங்கும் அந்த வீட்டில் நினைவுகள் தேங்கிக் கிடந்தன. 

தவேந்திரன் இனி இல்லை என்பது மாபெரும் வெறுமையத் தருகிறது. இனி தொடர்புகொள்ள மாட்டார் என்பதை ஏற்க மறுக்கிறது. அவரின் குடும்பத்தினருக்கு அதனைத் தாங்கும் சக்தியைக் காலம் தரட்டும்.

என் அப்பாவின் இழப்புக்குப் பின்னர் அதிகம் நான் இடிந்து போயிருப்பது நண்பர் தவேந்திரனின் இழப்பில் தான்.

இனி போதும் ஓய்வு கொள்ளுங்கள் நண்பரே.

1883 : கொட்டாஞ்சேனையில் இலங்கையின் முதல் மதக் கலவரம் ( கொழும்பின் கதை - 11) - என்.சரவணன்

கொட்டாஞ்சேனையின் வரலாற்றைப் பேசும்போது “கொட்டாஞ்சேனை கலவரம்” பற்றி பேசாமல் இருக்க முடியாது.

சுமார் ஒரு நூற்றாண்டுக்கு முன் அதாவது 1883இல் இலங்கையில் முதலாவது வகுப்புவாத கலவரம் நடந்தது. முதலாவது மதக் கலவரமாகவும் அதனைக் குறிப்பிடுவார்கள்.

“கொட்டாஞ்சேனை கலவரம்” ஆங்கிலேய ஆட்சி கால அரச பதிவுகளில் “Kotahena Riots” என்றே அழைக்கப்படுகிறது. இந்த கலவரம் நிகழ்ந்து முடிந்த பின்னர் இதனை விசாரிப்பதற்காக ஆங்கிலேய அரசினால் அமைக்கப்பட்ட குழு “The Kotahena Riots” என்கிற ஒரு அறிக்கையையும் வெளியிட்டது.

19 ஆம் நூற்றாண்டில் வடக்கில் சைவசமயத்தினரும் தெற்கில் பௌத்த சமயத்தினரும் தமக்கெதிரான கிறிஸ்தவ பிரச்சாரங்களை எதிர்த்து எதிர்ப்ப்ரச்சாரங்களிலும், பகிரங்க விவாதங்களிலும் ஈடுபட்டார்கள். அப்படி தென்னிலங்கையில் நடந்த பஞ்சமகா விவாதங்கள் மிகவும் பிரசித்தி வாய்ந்தவை. அவற்றில் ஒன்று 1873 இல் பாணந்துறை நகரத்தில் நடந்த விவாதம். . இந்த விவாதம் பிரபல பௌத்த பிக்கு மீகெட்டுவத்தே குணானந்த தேரரின் (மொஹட்டிவத்தே குணானந்த என்றும் அழைப்பார்கள்) தலைமையில் ஹிக்கடுவ சிறீ சுமங்கல தேரர் போன்றோரும் இணைந்து கிறிஸ்தவ மதப் போதகர்களுடன் நடந்தது. அந்த விவாதத்தின் உள்ளடக்கம் பல நூல்களாக வெளிவந்துள்ளன. மிசனரி மதமாற்ற நடவடிக்கையை முறியடிக்க பௌத்த பாடசாலை இல்லாததும் பெரிய குறைபாடாக பௌத்தர்கள் கருதினர். 1880 இல் பிரம்மஞான சங்கத்தைச் (Theosophical Society) சேர்ந்த கேர்ணல் ஒல்கொட் இலங்கைக்கு வரும் வரையில் இந்த நிலைமைகளில் அதிகம் மாற்றம் ஏற்படவில்லை. "1873 இல் பாணந்துறையில் நடைபெற்ற பிரபலமான பகிரங்க விவாதமே கேர்ணல் ஒல்கொட் இலங்கை வருவதற்கான முக்கிய காரணமாக அமைந்தது. அவர் இலங்கை வந்ததும் நேராக கொட்டாஞ்சேனை தீபதுத்தமாறாமய விகாரை வந்து குணானந்த தேரரை சந்தித்தார். கூடவே அவர் பௌத்த மதத்தை தழுவவும் செய்தார்.

கிறிஸ்தவ சக்திகளை எதிர்கின்ற எதிர்ப்பியக்கங்கள் ஒருபுறம் பலமடையத் தொடங்கியது. ஆரம்பத்தில் காலனித்துவ எதிரிப்பின் சாயலைக் கொண்டிருந்தாலும் அதன் உள்ளடக்கம் பௌத்த மறுமலர்ச்சியும் கிறிஸ்தவ எதிர்ப்புமே என்று குமாரி ஜெயவர்த்தனா தனது நூலில் குறிப்பிடுகிறார். மேலும் தொழிற்சங்க ஆர்ப்பாட்டங்கள், மது ஒழிப்பு உட்பட பல்வேறு பொது பிரச்சினைகளையும் கையில் எடுத்தார்கள். சில இடங்களில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறைகளும் இடம்பெற்றன.

இலங்கையின் போக்கை இனவாத திசையில் வழிநடத்தியதில் அநகாரிக தர்மபாலாவின் வகிபாகம் என்னவென்பது அனைவரும் அறிந்ததே. அந்த அநகாரிகவை உருவாக்கிய சம்பவம் இந்த கொட்டாஞ்சேனைக் கலவரமாகும்.

இத்தகைய பின்னணியில் வளர்ச்சியடைந்த பௌத்த மறுமலர்ச்சியின் உந்துதலால் பௌத்தர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையில் விரிசல் அதிகரித்ததுடன், பரஸ்பர சந்தேக உணர்வும், ஆங்காங்கு முறுகல் நிலையும் வளரத் தொடங்கின. பௌத்த வணிகர்கள், அரச உத்தியோகத்தர்கள், எழுத்தாளர்கள் போன்றோர் பௌத்த எழுச்சியை ஆதரிக்கத் தொடங்கியதுடன் கிறிஸ்தவ மேலாதிக்கத்துக்கு எதிர்த்து செயல்பட்டனர்.

கொட்டாஞ்சேனை தீபதுத்தாமாறாமயவில் தலைமை மதகுருவாக இருந்த மீகெட்டுவத்தே குணானந்த தேரர் அந்த விகாரையில் உள்ள புத்தர் சிலைக்கு கண்களை வைப்பதற்கான வைபவத்தை 1883 பெப்ரவரி மாதம் நடத்த திட்டமிருந்தபோது பிரதான அரச வைத்திய அதிகாரி ஒரு அறிக்கையை அனுப்பி வைத்திருந்தார். அதன்படி கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் பரவி வரும் நோயொன்றின் காரணமாக இந்த வைபவத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது. மார்ச் 31 வரை நிறுத்தி வைக்கப்பதற்கு குணானந்த தேரர் ஒப்புக்கொண்டபோதும் இந்த செய்தியின் பின்னணியில் சதி இருப்பதாக சந்தேகித்தார்.

இதற்கு முன்னரும் 1872இல் கொச்சிக்கடையிலும் 1880இல் மாதம்பிட்டியிலும் பௌத்த பெரஹரவின் போது கல் எறிந்து குழப்ப முயற்சித்ததையும் முகத்துவாரத்தில் பாதையை மறித்த சம்பவத்தையும் அவர் நினைவுபடுத்தினார். சிலைகளுக்கு கண் வைக்கும் வைபவத்துக்கு ஊர்வலமாக வந்து பூஜைகளை செய்யும்படி பெளத்தர்களைக் கேட்டுக்கொண்ட குணானந்த ஹிமி அதற்கான போலிஸ் ஒப்புதலையும் பெற்றிருந்தார். அதனைத் தொடர்ந்து பலர் தீபதுத்தமாறாமய விகாரைக்கு சென்றார்கள். அந்த விகாரையின் ஒரு பகுதியில் கந்தசுவாமி கோவில் ஒன்று இருந்ததாகவும் அதற்கும் பௌத்த துறவிகள்  திருவிழா நடத்தியதாகவும் 1887இல் வெளிவந்த ரிவிரெச பத்திரிகை  கூறுகிறது.

பெளத்தர்கள் இவ்வாறு அணிதிரள்வது தம்மை சீண்டும் நடவடிக்கையாக சந்தேகித்தனர். ஏற்கெனவே பாணந்துறை விவாதத்தில் குணானந்த தேரர் தலைமையிலான பௌத்த தரப்பே வென்றிருந்ததும் அதிருப்தி நிலையை உருவாக்கியிருந்தது.

கொட்டாஞ்சேனை புனித லூசியா தேவாலயம் கட்டப்பட்டுகொண்டிருந்த காலம் அது. தீபதுத்தமாறாமய விகாரைக்கும் புனித லூசியாஸ் தேவாலயத்திற்கும் ஏறத்தாழ ஒரு கிலோமீட்டருக்கும் குறைவான தூரமே உள்ளது.

அன்றைய மிசனரி திருத்தூதர் ஜே.மாசிலாமணி இன்ஸ்பெக்டர் ஜெனரலுக்கு 6ஆம் திகதியே சில எச்சரிக்கையை எழுத்து மூலம் செய்திருந்தார்.  ஈஸ்டர் பண்டிகைக் காலத்தில் பெரிய வெள்ளி மற்றும் குருத்து ஞாயிறு ஆகிய தினங்களில் பௌத்த பெரஹரவுக்கு அனுமதி வழங்குவது முறுகலை ஏற்படுத்தும் என்றும் சில அசம்பாவிதங்கள் நடக்கவிருப்பதாக கதைகள் உலவுவதாகவும், வழமைபோல ஈஸ்டர் காலத்து புனித ஊர்வலத்தை இடையூறு இல்லாமல் நடத்திமுடிக்க ஒத்துழைக்குமாறும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த கடித விபரங்கள் “The Kotahena Riots” அறிக்கையில் இடம்பெற்றிருக்கிறன.

பெரிய வெள்ளிக்கு முன்னர் நடந்த பெரஹர நிகழ்வுகளுக்கு போலீசார் பந்தோபஸ்து வழங்கியிருக்கிறார்கள். சில கத்தோலிக்கர்கள் கல்லெறிந்தார்கள் என்கிற சந்தேகத்தின் பேரில் கைதும் செய்யப்பட்டிருகிறார்கள். இதனைத் தொடர்ந்து பெரிய வெள்ளியன்று நடத்தப்படவிருந்த புனித ஊர்வலத்துக்கான அனுமதியும் ரத்து செய்யப்பட்டது. மார்ச் 25 குருத்து ஞாயிறன்று மதியம் 12 வரை தேவாலய பூஜைகளுக்குப் பின்னர் பெரஹரவுக்கு அனுமதியளிக்கப்பட்டிருந்தது.

இந்த சமயத்தில் பல்வேறு வதந்திகள் பரப்பப்பட்டிருந்தன. இலங்கையில் எந்த மூலையிலும் எந்த நேரத்திலும் பௌத்த பெரஹர நடத்துவதற்கான அனுமதியை பிரித்தானிய இராணியிடமிருந்து குணானந்த தேரர் பெற்று வந்திருப்பதாகவும் நாடு முழுதும் வதந்தி பரப்பப்பட்டதுடன் அது பத்திரிகையிலும் வெளிவந்திருக்கிறது.

கலவரம்

அன்று இரவு பொலிஸ் பந்தோபஸ்துடன் பெரஹர பொரல்லையிலிருந்தும் கொள்ளுப்பிட்டியிலிருந்தும் வந்த ஊர்வலம் மருதானையில் இணைந்துகொண்டு கொட்டாஞ்சேனை தீபதுத்தமாறாமய விகாரையை நோக்கி நகர்ந்தது. இதனை தடுத்து நிறுத்த கத்தோலிக்க தரப்பு மேற்கொண்ட சகல முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன. பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த ஊர்வலத்தில் இருந்துள்ளனர்.

குணானந்த தேரர் இந்த பெரஹரவில் பல வித ஆட்டங்களை சேர்த்துக்கொண்டார். தாள வாத்திய அணி, சாட்டையடி, புலியாட்டம், மரபான பேயாட்டம், தீ விளையாட்டு, வில் அம்பு தரித்தவர்கள், பெரிய உருவப்பொம்மை என பலதும் சேர்த்துக்கொள்ளப்பட்டன. 

இதற்கிடையில் பெரிய உருவப்பொம்மை குறித்து மின்னல் வேகத்தில் ஒரு வதந்தி பரவியது. அதாவது ஒரு குரங்கொன்றை சிலுவையில் அறைந்து ஊர்வலமாக கொண்டு வருகிறார்கள் என்பதே அது. அன்னை மரியாளைக் கேலி செய்யும் பொம்மைகள் உள்ளன என்றும் பிழையான வதந்தி பரப்பட்டிருந்தது. அதுபோல மறுபக்கம் பெரஹரவைத் தாக்குவதற்காக கொட்டாஞ்சேனையில் கத்தோலிக்கர்கள் தயாராக நிற்கிறார்கள் என்று ஊர்வலத்தில் ஒரு புரளி கிளப்பிவிடப்பட்டிருந்தது. பெரஹரவில் இருந்து பெண்களும் சிறுவர்களும் அகற்றப்பட்டார்கள். ஊர்வலத்தில் கற்களையும். பொல்லுகளையும் தாங்கியவர்கள் இடையில் இணைந்து கொண்டார்கள்.

பெரஹர கொட்டாஞ்சேனையை நெருங்கியபோது திடீரென்று புனித லூசியாஸ் ஆலயத்தின் மணிகள் பலமாக அடிக்கத் தொடங்கியதும் அனைவரும் குழம்பிப்போனார்கள். பலர் தேவாலயத்தை சூழ்ந்தனர். அந்த மணியை யார் எதற்காக அடித்தார்கள் என்பது பற்றி போலீசாரால் இறுதிவரை கண்டுபிடிக்க முடியவில்லை. அனால் அந்த ஒலி ஒரு பெரிய கலவரத்தையே உண்டு பண்ணியிருந்தது. பரஸ்பர சந்தேகங்கள், ஊகங்கள், வதந்திகள், பய உணர்ச்சி, தூண்டுதல், எதிர்பாரா திடீர் சம்பவங்கள் எல்லாம் சேர்ந்து ஆளையால் கொலைவெறிகொண்டு தாக்கிக்கொண்டனர். கட்டுப்படுத்துவதர்க்காக அழைக்கப்பட்டிருந்த இராணுவத்தினர் வந்து சேர்ந்தபோது அனைத்தும் ஓய்ந்திருந்தது.

இந்த கலவரத்தில் பௌத்த தரப்பை சேர்ந்த ஜூவன் நைதே என்பவர் கொல்லப்பட்டார். 12 உட்பட 30 பேர் மோசமான காயத்துக்கு உள்ளானார்கள். அதே நாள் பலங்கொட, கண்டி போன்ற இடங்களிலும் அசம்பாவிதங்கள் நடந்திருக்கின்றன. அன்றைய தேசாதிபதி கொட்டாஞ்சேனை விகாரைக்கு விரைந்து குனானனந்த தேரருடன் நடத்திய பேச்சுவார்த்தையின் விளைவாக தொடர்ந்தும் 30ஆம் திகதி வரை பெரஹர நடத்த அனுமதி வழங்கினார்.  

சம்பவம் நடந்து அடுத்தடுத்த நாட்களில் நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் இருந்த சிறு தேவாலயங்கள் தீயிடப்பட்டன. அதுபோல பௌத்த பெரஹரக்களும் குழப்பப்பட்டன. தீபதுத்தமாறாமய விகாரையை கொளுத்தி குணானந்த தேரரை கொல்வதற்காக நீர்கொழும்பிலிருந்து 3000 பேர் வந்து கொண்டிருக்கிறார்கள் என்கிற வதந்தியும் வேகமாக பரப்பபட்டிருந்தது. இந்த சம்பவத்தை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட குழு அறிக்கையை வெளியிட்டதோடு சரி. இந்த சம்பவத்துக்காக எவரும் கைது செய்யப்படவோ தண்டிக்கப்படவோ இல்லை. குணானந்த தேரர் பௌத்தர்களை மத ரீதியில் தூண்டுவதற்கு எப்படிப்பட்ட பிரசாரங்களை எல்லாம் மேற்கொண்டார் என்பதற்கு அதன் பின் வெளிவந்த அவரது வெளியீடுகள் சாட்சி. 

கொட்டாஞ்சேனை சந்தியில் சில வருடங்களுக்கு முன்னர் குணானந்த தேரருக்கு சிலை கட்டப்பட்டது.

நன்றி - தினகரன் 16-012022


 

இணைந்திருங்கள்


Followers

Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates