இலங்கையின் மலையகத்தில் உள்ள கொஸ்லாந்த, மீரியபெத்த ஆகிய இடங்களில் சென்ற அக்டோபர் நவம்பர் மாதங்களில் கனமழை காரணமாக ஏற்பட்ட பாரிய மண் சரிவினால் இரண்டு கிராமங்கள் முற்றாகவே அழிந்து போய்விட்டன. இதில் எத்தனை பேர் மாண்டு போனார்கள் என்ற சரியான கணக்கு இன்னும் (மண்சரிவு நடந்து 40 நாட்கள் ஆனபின்னும்) தெரியவில்லை. மீட்புப்பணிகளின்போது 32 சடலங்கள் எடுக்கப்பட்டன. இருபத்து இரண்டு நாட்கள் மீட்புப்பணிகள் நடைபெற்றன. தொடர்ந்து மீட்புப்பணியைச் செய்ய முடியாது என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
இயற்கை அனர்த்தங்களில் இத்தகைய பாதிப்புகள் ஏற்படுவது உலகெங்கும் உள்ள வழமை. ஆனால் மலையகத்தில் ஏற்பட்ட பாதிப்பில் எத்தனைபேர் பலியாகினர், என்னமாதிரியான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன என்று அறியமுடியாத நிலை, தங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பும் உயிரிழப்புகளும் என்ன என்று அந்த மக்களே சொல்ல முடியாத அவலம் உள்ளதுதான் கொடுமையானது. அந்த அளவுக்கு இந்த மக்களின் வாழ்க்கை மிகப் பின்தங்கி இருக்கிறது.
மலையக மக்கள் சுமார் 180 ஆண்டுகளுக்குமுன், தமிழ்நாட்டில் இருந்து கூலிகளாக பிரிட்டிஷ் காரர்களால் இலங்கைக்குக் கொண்டு செல்லப்பட்டவர்கள். 1844ஆம்ஆண்டு முதற் தொகுதி மக்கள் மலைப்பகுதிக்குக் கொண்டுவரப்பட்டதாக வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. முதலில் கோப்பித்தோட்டங்களில் வேலை செய்வதற்காக 14 பேரை லெப்ரினன்ட் கேர்ணல் ஹென்றி என்பவர் அழைத்து வந்தார். தொடர்ந்து படிப்படியாக லட்சக்கணக்கான மக்கள் மலைப்பகுதிகளுக்கு அழைத்து வரப்பட்டனர். இவர்கள் முதலில் கோப்பித் தோட்டங்களை உருவாக்கினர். கோப்பித்தோட்டங்கள் நோய்த்தாக்கத்துக்குட்பட்டு வீழ்ச்சியடைய, தேயிலை, ரப்பர் தோட்டங்களை வெள்ளையர்கள் உருவாக்கினார்கள். இவற்றை இந்த மக்களே பயிரிட்டனர். மலையகத்துக்கான பாதைகளை அமைப்பது, பாலங்களை நிர்மாணிப்பது, காடுகளை வெட்டிக் கட்டிடங்களை அமைப்பது, தொழிற்சாலைகளை உருவாக்குவது தொடக்கம் பல்வேறு பணிகளை இந்த மக்களே செய்தனர். மலையகத்தை செல்வம் கொழிக்கும் பூமியாக மாற்றினார்கள்.
தமிழகத்தில் மதுரை, திருநெல்வேலி, இராமநாதபுரம், தஞ்சாவூர் போன்ற மாவட்டங்களில் அப்போது நிலவிய கடுமையான பஞ்சத்தினால் வறுமையில் வாடிய மக்களையே இவ்வாறு கூலிகளாக பிரிட்டிஷ்காரர்கள் இலங்கைக்கு அழைத்து வந்தனர். பர்மா, மலேசியா, மேற்கிந்தியத் தீவுகள், பிஜித்தீவுகள் போன்ற இடங்களுக்கும் இவ்வாறு பிரிட்டிஷ்காரர்களால் பலர் கொண்டு செல்லப்பட்டனர். இலங்கைக்குக் கொண்டு வரப்பட்ட மக்களில் 40 சதவீதமான மக்கள் வரும்வழியிலேயே மலேரியா உட்பட பல்வேறு தொற்றுநோய்க்கும் பசிக்கும் ஆளாகி மடிந்தனர். ஏனையோர் பிரிட்டிஷாரின் தோட்டங்களில் அடிமை நிலையிலேயே வைக்கப்பட்டனர். தொழிலாளர்களுக்கான உரிமைகள் எதுவும் முறையாக வழங்கப்படவில்லை. தொழிலாளர்களின் உரிமைகளுக்காகத் தொழிற்சங்கங்கள் உருவாக்கிப் போராட்டங்களை நடத்தியபோதும் அந்தப் போராட்டங்கள் மிக மோசமான முறையில் ஒடுக்கப்பட்டன. இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி 1827 ஆம் ஆண்டு 10,000 ஆக இருந்த தொழிலாளர் தொகை 1877ஆம் ஆண்டு 1,45,000 ஆக அதிகரித்தது. 1933 இல் மேற்கொள்ளப்பட்ட திரட்டில் பல லட்சக்கணக்கானவர்கள் இவ்வாறு வந்து சேர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்குப் பிறகு இலங்கைக்குத் தொழிலாளர்கள் அனுப்பப்படுவதை இந்திய அரசு தடைசெய்தது. இதேவேளை 1931 இல் 1,00,000 மலையக மக்கள் வாக்குரிமையைப் பெற்றிருந்தனர்.
அப்பொழுது இந்த மக்களின் பிரதிநிதியாக இவர்களுடைய முதற் தொழிற்சங்கத்தலைவரான மு. நடேசய்யர் தெரிவு செய்யப்பட்டார். நடேசய்யர் இந்த மக்களின் அடிப்படை உரிமைகளுக்காகவும் அடையாளத்துக்காகவும் மிகக் கடுமையாக உழைத்தார். இலங்கையின் சுதந்திரத்துக்குமுன் 1947 இல் நடத்தப்பட்ட முதலாவது பாராளுமன்றத் தேர்தலில் 7 மலையகத் தமிழ்பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டனர். அத்துடன் பிற 20 தொகுதிகளில் இடதுசாரிகள் வெற்றியீட்டுவதற்கும் இந்த மலையக மக்களின் வாக்குகளே காரணமாக அமைந்தன; அல்லது கூடுதலாகப் பங்களித்தன. இதனால் இலங்கை முழுவதும் உள்ள 93 இடங்களில் 42 இடங்களில் மட்டுமே ஐக்கிய தேசியக் கட்சி வெற்றியீட்டியது. இது மலையக மக்களைக் குறித்த அச்சத்தை ஐதேகவுக்கு ஏற்படுத்தியது. இதன்விளைவாக 1948 ஆம் ஆண்டு ஆகஸ்டில் ஐதேக அரசாங்கம் பிரஜா உரிமைச்சட்டத்தைக் கொண்டு வந்து மலையக மக்களின் வாக்குரிமையைப் பறித்தது. இதற்கு இலங்கையின் தமிழ் சிங்கள வலதுசாரிக்கட்சிகள் அத்தனையும் முழுமையான ஆதரவை வழங்கியிருந்தன. எஸ்.ஜே.வி. செல்வநாயகம் இதனை மறுத்து இந்தச் சட்டத்தை ஆதரித்த அகில இலங்கை காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறினார்.
இந்த வாக்குரிமைப் பறிப்பின் உள்நோக்கங்களில் ஒன்று தோட்டங்களில் ஆட்குறைப்பைச் செய்ய வேண்டியிருந்ததுமாகும். இவ்வாறு வாக்குரிமையைப் பறிப்பதன் மூலமாக இவர்களில் கணிசமானோரை மீண்டும் இந்தியாவுக்குத் திரும்பச் செய்யும் உள்நோக்கம் இருந்திருக்கிறது. எனினும் இதை எதிர்த்து 1952இல் இலங்கை இந்திய காங்கிரஸ் பெரியதொரு சத்தியாக்கிரகப் போராட்டத்தை முன்னெடுத்தது. இந்தப் போராட்டத்தில் மலையகத்தின் தொழிற்சங்கச் செயற்பாட்டாளரும் இலக்கியப் படைப்பாளியுமான சி. வேலுப்பிள்ளை முக்கிய பாத்திரத்தை வகித்தார். இந்தப் போராட்டம் இலங்கை பிரதமராக இருந்த டி.எஸ். சேனநாயக்கவின் பணிமனைக்கு முன்பாக சுமார் 142 நாட்கள் நடந்தது. பல்வேறு சிரமங்களின் மத்தியில் மலையகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானவர்கள் கொழும்புக்குச் சென்று இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர். பொலிஸ் கெடுபிடிகள், கைதுகளின் மத்தியிலும் போராட்டம் தொடர்ந்தது என்றபோதும், வாக்குரிமை கிடைக்கவில்லை. இதனால் இந்த மக்கள் ‘நாடற்றவர்’களாகவே இருந்தனர்.
இந்த நிலை இந்த மக்களை இந்தியத் தமிழர் என்றும் இந்திய வம்சாவழித்தமிழர் என்றும் மலையகத்தமிழர் என்றும் ஆக்கியது. ஆனால் இவர்களில் ஒரு சிலரைத்தவிர, அநேகர் இந்தியாவில் உள்ள தமது உறவுகளுடனான உறவு துண்டிக்கப்பட்ட - கைவிடப்பட்ட நிலையில் இருந்தனர். இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட குடியுரிமைச் சட்டத்தின்படி தகப்பன் அல்லது தகப்பனின் தகப்பனாகிய பாட்டன் இலங்கையில் பிறந்திருக்க வேண்டும். அப்படிப் பிறந்தவர்களுக்கே குடியுரிமை வழங்கப்பட்டது. இலங்கையின் பிறப்பு அத்தாட்சிப் பத்திரங்கள் அத்தனையும் இந்த அடிப்படையிலேயே உருவாக்கப்பட்டன. இப்பொழுதும் இதுதான் பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்தில் உள்ள கேள்விகளாக உள்ளன. ஆகவே, இந்த மக்கள் இந்தக் கேள்விகளுக்கான பதிலளித்தலில் தோற்றுத் தங்கள் குடியுரிமைகளை இழந்து கொண்டிருந்தார்கள். இந்த நிலைமையைப் பதிவு செய்து அ.செ.மு. ‘காளிமுத்துவின் பிரஜா உரிமை’ என்ற கதையை எழுதினார். (அ.செ.மு ஈழத்தின் முக்கியமான சிறுகதை எழுத்தாளர்களில் ஒருவர்) பிரஜா உரிமைக்கு விண்ணப்பித்த காளிமுத்துவிடம் “உன்னுடைய குடியுரிமைக்கான ஆதாரங்களை அத்தாட்சிப்படுத்து’’ என்று அதிகாரிகள் கேட்கும்போது, அவன் தன்னுடைய பாட்டனின் புதைகுழியைத் தோண்டி, அந்த எலும்புகளை எடுத்து, “இதோ இது என் பாட்டனின் எலும்பு. அவனை இங்கேதான் புதைத்தோம். இங்கே, இந்த மண்ணில்தான் அவன் உழைத்துக் களைத்துப் புதைந்தான். ஆகவே நான் இந்த மண்ணுக்குச் சொந்தக்காரன்’’ என்று சொல்வதாக இருந்தது அந்தக் கதை.
மலையக மக்களின் இன்னொரு மிகக் கொடுமையான துயரம் ‘லயன் வாழ்க்கை’. வீடில்லாத மக்கள் இவர்கள். நூற்றாண்டுகளாகவே வீடற்றிருக்கிறார்கள். வீடு மட்டுமல்ல, நிலமும் இவர்களுக்கில்லை. சி. வேலுப்பிள்ளையின் ‘வீடற்றவன்’ இந்த நிலைமையை விவரிக்கும் மிக அருமையான கதை. தெளிவத்தை யோசப்பின் ‘மீன்கள்’ என்ற சிறுகதையும் வீடற்றவர்களின் - லயன்வாசிகளின் கதையைச் சிறப்பாக எடுத்துரைக்கிறது.
இப்படி குடியுரிமையும் இல்லாமல், நிலமும் இல்லாமல், நாடும் இல்லாமல் (இலங்கையில் இருந்த மக்களுக்கு இலங்கைக் குடியுரிமை இல்லை. இந்திய மக்கள் என்று சொல்லப்பட்டாலும் இவர்கள் இந்தியாவிலும் இல்லை. ஆகவே நாடற்றவர்களாக) இருந்த மக்களை 1964 அக்டோபர் 30 ஆம் நாள் சிறிமாவோ - சாஸ்திரி ஒப்பந்தம் பகிரங்கமாக நிர்க்கதிக்குள்ளாக்கியது. ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டபோது இந்த மக்களின் பிரதிநிதிகளாக இருந்த எவருடைய ஒப்புதலும் பெறப்படவில்லை. அதைப்போல தமிழ்நாட்டில் எவருடனும் கலந்தாலோசிக்கப்படவுமில்லை. இலங்கை பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவும் இந்தியப் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியும் மட்டுமே இந்த ஒப்பந்தத்தைத் தீர்மானித்தனர்.
இந்த ஒப்பந்தத்தின்படி இலங்கையில் நாடற்றவர்களாக இருந்த 975,000 இந்திய வம்சாவழித் தமிழர்களில் 525,000 பேரை இந்தியா பொறுப்பெடுப்பது என்றும் மீதி 300,000 பேரை இலங்கை ஏற்றுக்கொள்வதாகவும் முடிவானது. 150,000 பேர் விடுபட்டுப்போனார்கள். இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்ட மக்கள் போகும் வழியெங்கும் கண்ணீர் வெள்ளமே என்னும் அளவுக்கு அவர்களுடைய துயரம் இருந்தது. இதைப்பற்றி ஏராளம் நாட்டுப்புறப்பாடல்கள்கூட உருவாகின. புலியூரில் இருந்து நரியூருக்கு வந்த கதையாக தமிழகத்துக்கு வந்த மக்களின் நிலை இருந்தது. ஆகவே இந்தத் துயரம் நிறைந்த நிலையை எண்ணி இப்பொழுதும் இதைப் பாடிக்கொண்டிருக்கிறார்கள்.
அப்பொழுது இலங்கையில் குடியுரிமை பெறுவோர், இந்தியாவுக்குத் திரும்பிச் செல்வோர், நாடற்றவர்கள் என மூன்று வகையினர் உருவாகினர். இலங்கையில் தங்கியிருந்த மக்களுக்கு உணவுக் கூப்பன் கூட வேறு நிறத்தில் வழங்கப்பட்டது. கள்ளத்தோணி என்று வடபகுதி ஊர்களில் அவர்களை அழைத்தார்கள். கள்ளத்தோணிகள் குடியுரிமை இல்லாத மக்கள் - இந்திய மக்கள் என்ற அடையாளத்துக்காகவே இந்த நிறக்கூப்பன் வேறுபடுத்தல். இந்த மக்கள் இந்தியர்கள், இந்திய வம்சாவழியினர் என்று சிங்களவர்களாலும் தோட்டக்காட்டார், வடக்கத்தையார், இந்தியாக்காரன், கள்ளத்தோணியள் (இலங்கைக்கு வடக்கே உள்ள இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்டவர்கள் என்பதால் இப்படிக் குறிப்பிடப்பட்டனர்) என யாழ்ப்பாண தமிழர்களாலும் மலையகத்தமிழர்கள் என்று பொதுவாகவும் அடையாளப்படுத்தப்பட்டனர். இலங்கையின் தேசிய வருமானத்திலும் ஏற்றுமதிப்பொருளாதாரத்திலும் 60, 65 சதவீதமான வருவாயைப் பெற்றுக்கொடுத்த இந்த மக்கள் அனைத்துத் தரப்பினராலும் ஒடுக்கப்பட்டவர்களாகவும் சுரண்டப்பட்டவர்களாகவும் இருந்தனர். உரிய மதிப்பைப் பெறாதவர்களாகவே விடப்பட்டிருந்தனர். ஆனால் இவர்கள்தான் இலங்கை முழுவதுக்குமாக உழைத்துக்கொண்டிருந்தனர் என்பது மறைக்கப்பட்ட உண்மை. மறைக்க முடியாத உண்மையும்கூட என்றபோதும் எல்லோரும் இந்த மக்களைத் தயவு தாட்சணியமில்லாமல் அடிமைப்படுத்தினர்; சுரண்டினர்; அவமானப்படுத்தினர். சிங்களவர்கள், இந்த மக்கள் குடியிருந்த நிலங்கள் தமக்குரியது என்றும் பிரிட்டிஷார் தமது ஆட்சியின்போது இவற்றைப் பறித்து தோட்டங்களாக்கி, இந்த மலையக மக்களைக் குடியேற்றினார்கள் என்றும் ஆகவே இந்த நிலத்தைத் தாம் திரும்பப் பெறவேண்டும், மலையகத்திலிருந்து இந்தியர்கள் வெளியேறி விடவேண்டும் என்றும் கூறி இவர்களை அச்சுறுத்தினர். இப்பொழுதும் இவர்களுக்கான நிலத்தை வழங்க அரசும் முதலாளிகளும் சிங்கள சமூகத்தினரும் மறுத்து வருகின்றமையை நாம் அவதானிக்கலாம். தோட்டங்கள் தனியார் மயமாகியதால் இவர்கள் தொடர்ந்தும் லயன் என்ற சிறுகுடிசைகளிலேயே வாழ வேண்டியதாயிற்று. சிங்களச் சமூகத்தின் இந்தக் கூற்று அப்பட்டமான பொய் என்றும் இதை ஏற்க முடியாது என்றும் சி. வேலுப்பிள்ளை வலுவான ஆதாரங்களோடு எடுத்துரைத்தார். என்றாலும் நிலைமையில் பெரிய மாற்றங்கள் ஏற்படவில்லை. இதேவேளை மலையகப்பகுதிகளுக்கு ஆசிரியப்பணி, தோட்ட மேற்பார்வையாளர் உட்பட பல்வேறு உத்தியோகங்களைப் பார்க்க வந்த யாழ்ப்பாண தமிழர்கள் இந்த மக்களைத் தமது வீட்டுப்பணிக்காகவும் தோட்ட வேலைகளுக்காகவும் வைத்துக்கொண்டார்கள். இதற்காக மிகச் சிறிய வயது ஆண், பெண் சிறார்கள் மலைப்பகுதிகளில் இருந்து வடக்கு நோக்கி அழைத்துச் செல்லப்பட்டனர். ஒரு காலம் பெரும்பாலான யாழ்ப்பாண தமிழர்களின் வீடுகளில் மலையகச் சிறுவர்களும் சிறுமிகளும் வீட்டு வேலைக்காரர்களாக இருந்தனர். மட்டுமல்ல தோட்ட வேலை, வளவு வேலைகள் உட்பட அனைத்து வேலைகளுக்குமான அடிமட்டத் தொழிலாளர்களாக மலையகத் தமிழர்களே அமர்த்தப்பட்டிருந்தனர். அடிமாடாக இவர்கள் யாழ்ப்பாணத்து மத்தியதர, உயர்தரத்தினரின் வீடுகளில் உழைத்துக் களைத்தனர்.
இலங்கை இனப்பிரச்சினையின் விளைவுகள் வன்முறையாகி வெடித்தபோது இந்த மக்கள் செறிவாக இருந்த மலையகப் பகுதிகள் கடுமையான வன்முறைக் களங்களாகின. இதனால் இங்கிருந்த மக்களில் ஒரு தொகுதியினர் பாதுகாப்புதேடி வெளியேறினர். இந்தச் சந்தர்ப்பத்தில் இந்த மக்கள் மூன்று விதமான தெரிவைச் செய்யும் நிர்ப்பந்தம் உண்டாகியது. ஒன்று மலையகத்தில் தொடர்ந்தும் இருப்பது; இரண்டாவது இந்தியாவுக்குச் சென்று விடுவது; மூன்றாவது தமிழர்கள் செறிவாக உள்ள இலங்கையின் வடக்கு கிழக்குப் பகுதிகளுக்குச் செல்வது. பெரும்பாலானவர்கள் அப்போது இந்தியாவுக்குத் திரும்பிச் செல்ல விரும்பியிருந்தாலும் அது சாத்தியமாகவில்லை. எனவே ஒரு தொகுதியினர் வடக்கே சென்றுவிட, ஏனையவர்கள் மலையகத்திலேயே தங்கி விட்டனர்.
வடக்கு கிழக்கில் வடபகுதிக்கே அதிகமானவர்கள் வந்து சேர்ந்தனர். இவர்கள் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா ஆகிய மாவட்டங்களில் தங்க வைக்கப்பட்டனர். இதற்குப் போதுமான நிலம் அங்கேதான் உண்டென்று கூறப்பட்டது. யாழ்ப்பாணத்தில் இந்த மக்களைக் குடியமர்த்துவதற்குப் போதிய நிலம் இல்லை என்றனர். ஆனால் உண்மை அதுவல்ல. யாழ்ப்பாணத்தவர்களுடன் இவர்கள் கலந்து விடக்கூடாது என்ற எச்சரிக்கை உணர்வே இப்படி யாழ்ப்பாணத்துக்கு வெளியே இவர்கள் நிறுத்தப்படக் காரணம். கிளிநொச்சி, முல்லைத் தீவு, வவுனியா, மன்னார் போன்ற வன்னி மாவட்டங்களில் இந்த மக்கள் குடியமர்த்தப்பட்டாலும் அங்கே இவர்களுக்கு வழங்கப்பட்ட காணிகள் நீர்ப்பாசனத்துக்கோ விவசாயத்துக்கோ உரியதாக இருக்கவில்லை. நீர்ப்பங்கீட்டிலும் இவர்கள் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. இங்கும் இவர்கள் ஒதுக்கப்பட்டவர்களாக, கூலிகளாகப் பயன்படுத்துவதற்கேற்ற மாதிரியே கையாளப்பட்டனர். அந்த நாட்களில் (1958 தொடக்கம் பின்னர் வந்த காலம் முழுவதும்) வன்னியில் இவர்களே விவசாயக் கூலிகளாக இருந்தனர். அதுவும் யாழ்ப்பாணத்தார் வன்னியில் செய்யும் விவசாயச் செய்கைக்கான கூலிகளாகப் பயன்படுத்தப்பட்டனர்.
ஆகவே, வடக்கிலும் (தமிழ்ச் சமூகத்தினாலும்) இவர்கள் ஒடுக்கப்பட்டவர்களாக, புறக்கணிக்கப்பட்டவர்களாக, அநீதி இழைக்கப்பட்டவர்களாக உள்ளனர். “வயிற்று வலியை நம்பினாலும் வடக்கத்தையானை நம்பக் கூடாது’’, “தோட்டக்காட்டான் நடுக்காட்டில் கைவிடு வான்’’ என்று இந்த மக்களை விளித்து வடக்குத் தமிழர்கள் இவர்களை அவமானப்படுத்தினர். இப்படி விளித்ததில் இருந்தே இவர்களை எவ்வாறு வடக்குத்தமிழர்கள் நடத்தியிருக்கிறார்கள் என்று புரிந்து கொள்ளலாம். இப்பொழுது 2014இல் கூட இந்த மக்கள் புறக்கணிக்கப்பட்ட நிலையில், வளமும் வசதிகளும் குறைந்த நிலையில்தான் உள்ளனர். வடமாகாணத்தில் உள்ள மிகப்பெரிய நீர்த்தேக்கமான இரணைமடுக்குளத்தின் தண்ணீர்ப்பங்கில் இவர்களுக்கு ஒரு துளி நீர்ப் பகிர்வும் கிடையாது. இதுபோலத்தான் வன்னியின் ஏனைய இடங்களில் உள்ள நீர்ப்பங்கீட்டிலும் இவர்களுக்கு உரிமையில்லை.
ஆனாலும் 1980களில் வடக்கு கிழக்குப் பகுதிகளில் உருவாகிய ஆயுதப்போராட்ட இயக்கங்களில் சில இந்த மக்களைக் குறித்து கூடுதலான கரிசனையைக் கொண்டிருந்தன. ஈழப்புரட்சி அமைப்பு (ணிஸிளிஷி) ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ணிறிஸிலிதி) தமிழீழ விடுதலைக்கழகம் (றிலிளிஜி) போன்ற இயக்கங்கள் இதில் முக்கிய பங்களிப்பைச் செய்தன. ஈரோஸ் மலையகத்திலும் கூடுதலான வேலைகளைச் செய்தது. வடக்கில் நிலமற்றிருந்த மலையத்தமிழர்களுக்கு பல கிராமங்களை உருவாக்கி அங்கே இந்த மக்களைக் குடியேற்றியது. ஈ.பிஆர்எல்எவ், புளொட் ஆகியவையும் இத்தகைய பணிகளில் ஓரளவுக்கு பங்காற்றியிருக்கின்றன. வவுனியாவில் உள்ள மலையக மக்களுக்குப் புளொட்டின் பங்களிப்பு அதிகம்.
இதேவேளை மலையகத்தில் இருந்த மக்களுக்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைமை தாங்கியது. இந்த மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி இதொகாவின் தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமான் இலங்கை அரசில் 1960 களில் இருந்து நீண்டகாலமாக அமைச்சராக இருந்தார். தொண்டமானுக்குப் பின்னர் அவருடைய வாரிசுளாகப் பல தொண்டமான்கள் இன்னும் அரசாங்கத்தின் அமைச்சர்களாகவே இருக்கிறார்கள்.
மலையக மக்களின் அடையாளங்களோடு வேறுபல கட்சிகளும் உருவாகி அரசாங்கத்தோடும் எதிர்நிலையிலும் செயற்பட்டு வருகின்றன. என்றாலும் மலையக மக்களின் துயரம் தீரவில்லை. அவர்கள் இன்னும் நிலமற்றோராக, வீடற்றோராக, ஒழுங்கான கழிப்பறையோ நல்ல குடிநீரோ இல்லாதவர்களாக, முறையான வாழ்க்கை வசதி கிடைக்கப்பெறாதவர்களாக, லயன்கள் என்ற புறாக்கூட்டு வீடுகளில் ஒடுங்கி வாழ்கின்றவர்களாக, குறைந்த கூலியைப் பெறுகின்றவர்களாக, அடிப்படை உரிமைகளையே இழந்தவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அதேசமயம் கொஸ்லாந்த, மீரியபெத்த மண்சரிவு தொடர்பாக அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் பி.பி.ஸி தமிழோசை நேர்காணலின்போது சொன்ன பொறுப்பற்ற பதில்கள் அவர்களுடைய மிக மோசமான நடவடிக்கைகளுக்குச் சான்று.
தொண்டமானின் அரசியலில் இந்த மக்கள் பெற்ற நன்மைகள், நடந்த இன யுத்தத்தில் இவர்கள் சிக்கிக் கொள்ளாமல் பாதுகாக்கப்பட்டதும், யாழ்ப்பாணத்தாரின் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டதுமே முக்கியமானவை. அத்துடன் மலையக மக்களை அவர்களுடைய சொந்தக் காலில் நிற்க வைத்ததில் சௌமியமூர்த்தி தொண்டமானுக்கு ஒரு முக்கிய பங்களிப்பு இருக்கிறது. இப்பொழுது மலையத்தமிழரை நினைத்த மாத்திரத்தில் யாழ்ப்பாணத்தாரோ வடபகுதி மக்களோ கையாள முடியாது. மற்றபடி இவர்கள் நூற்றாண்டு அடிமைகள்தான். வீடும் நிலமும் அற்றவர்கள்தான்.
மலையகத்திலிருந்து வெளியேறிய இன்னொரு தொகையினர் கொழும்பில் வாழ்கிறார்கள். இவர்களுடைய வாக்குகளை ஐதேகவும் சிறிலங்கா சுதந்திரக்கட்சியும் ஒவ்வொரு தடவையும் கொள்ளையடிக்கின்றனவே தவிர, இவர்களுக்கான அங்கீகாரத்தையும் வாழ்க்கைக்கான உயர்ச்சியையும் இவை கொடுக்கவில்லை. இப்பொழுது மனோ கணேசன் இந்த வாக்குகளைப் பெறும் ஒருவராக உள்ளார். ஆனாலும் இவர்களைக் குறித்து அவரிடம் எத்தகைய தீர்க்கதரிசனமான நடவடிக்கைகளும் இல்லை.
இலங்கையின் பொருளாதாரத்தில் பெரும்பங்களிப்பை வழங்குகின்ற இந்த மக்களை இலங்கை அரசாங்கமும் கவனிக்கவில்லை. இவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகிற மலையக்கட்சிகளும் தலைவர்களும் தொழிற்சங்கங்களும் கூடக் கவனிக்கவில்லை. தமிழ்த்தேசியவாதிகளும் இவர்களை மதிக்கவில்லை. வடக்குத் தமிழர்களும் நியாயமாக நடந்து கொள்ளவில்லை. இடதுசாரிகளும் இவர்களுடைய உரிமைகளுக்காகத் தீர்க்கமான போராட்டங்களை முன்னெடுத்து மாற்றங்களை உண்டாக்கவில்லை. பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து இன்றைய மகிந்த ராஜபக்ஷ ஆட்சிவரை இவர்கள் துயரத்தில் உழல்வோராகவும் நெருப்பைத் தின்போராகவுமே உள்ளனர்.
கொஸ்லாந்த, மீரியபெத்தையில் ஏற்பட்ட மண்
சரிவின்போது தங்கள் குடும்பத்தில் யார் யார் இறந்தார்கள், யாரைக் காணவில்லை என்றே தெரிந்து கொள்ள முடியாத அளவுக்கு இவர்களுடைய வாழ்க்கை நிலைமை இருந்திருக்கிறது என்றால் அதற்கு யாரெல்லாம் பொறுப்பு? தங்களையே மதிப்பிட முடியாத மக்களாக இருக்கும் நிலை இந்த 2014 இலும்.
பாதிக்கப்பட்ட மக்கள் அரசியல் தேவைக்காக ஒவ்வொரு தரப்பினாலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உடனடியாக அந்த இடத்துக்கு விரைந்து நேரிலே நிலைமைகளைப் பார்த்தது நல்ல விசயம். ஆனால் அங்கே அந்த மக்கள் பட்ட, பட்டுக்கொண்டிருக்கின்ற, இன்றும் அந்த மக்களைப்போல பட்டுக்கொண்டிருக்கின்ற பல லட்சம் மக்களின் நீண்டகாலத் துயரத்துக்கும் அவலத்துக்கும் எத்தகைய முடிவையும் அவர் காணவில்லை. அப்படிக் காண்பதற்கு அவர் தயாரும் இல்லை. அனைத்தையும் செய்யக் கூடிய, சர்வ வல்லமை கொண்ட, நிறைவேற்று அதிகாரத்தையுடைய ஜனாதிபதி, மலையக மக்களின் நூற்றாண்டுத் துயரத்தைப் போக்குவதைப்பற்றிச் சிந்திக்கவில்லை. பதிலாக அவரும் தன் பங்குக்கு இந்தத் துயரத்தை வளர்க்கவே பங்களிக்கின்றார். இவர்களுடைய துயரத்தை வைத்து வடக்கு மாகாணசபையும் தன் பங்குக்கு அரசியல் ஆதாயம் தேடியிருக்கிறது. வடக்கில் தமது பகுதியில் நிலவுகின்ற நீதியின்மையைப் பற்றிக் கவனம் செலுத்தாத இந்த மக்களை மாற்றான்தாய் மனப்பாங்குடன் நடத்துகின்ற மாகாணசபையினரும் தமிழரசுக்கட்சியும், கொஸ்லாந்தவுக்குப் போய் நடந்த அனர்த்தத்தைப்பற்றிப் பேசி, அரசைக் கண்டித்திருக்கின்றன. அரசாங்கத்தைக் கண்டிப்பதும் விமர்சிப்பதும் நியாயமானதாக இருப்பினும் இதன் பின்னாலுள்ள அரசியல் வடக்கிலுள்ள மலையக வம்சாவழி மக்களின் வாக்குகளைக் கவர்வதே. நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக வடபகுதியில் வாழ்கின்ற நான்கு லட்சத்துக்கு மேலான மலையக மக்களைப்பற்றி தமிழரசுக் கட்சியோ தமிழ்த்தேசியக் கூட்டமைப்போ, தமிழ் காங்கிரசோ உருப்படியாக எந்தத் தீர்மானத்தையும் எடுக்கவில்லை. இந்த மக்களுக்கு எந்த நன்மைகளையும் செய்யவும் இல்லை. மலையகக் கட்சிகளில் இருந்து மனோ கணேசன்வரையில் இதுதான் நடந்து கொண்டிருக்கிறது. மலையகத் துயரம் எல்லோருக்குமான கச்சாப்பொருளே தவிர, மனிதாபிமானத்துக்கான விசயமாக மாறவில்லை. நூற்றாண்டு கால அடிமைகளைக் குறித்து இந்தியாவுக்கும் அக்கறையில்லை. இலங்கை இந்திய உறவிலும் அரசியலிலும் இவர்கள் பொருட்படுத்தப்படுவதில்லை. தமிழகத்திலும் இந்த மக்களைக் குறித்தும் இவர்களுடைய துயரத்தைக் குறித்தும் எவரும் அக்கறைப்படுவதில்லை.
மண்சரிவினால் ஏற்பட்ட பாதிப்பும் இழப்பும் சிறியது. இந்த மக்கள் தங்கள் வாழ்விலும் வரலாற்றிலும் சந்தித்துக் கொண்டிருக்கிற தாங்கிக் கொண்டிருக்கிற பாதிப்பும் இழப்புமே பெரியது.
நன்றி - காலச்சுவடு
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...