Headlines News :
முகப்பு » » மலையகத்தில் தொடர்கிறது அடை மழை

மலையகத்தில் தொடர்கிறது அடை மழை


கண்டி, கம்பளையில் 265 குடும்பங்களைச் சேர்ந்த 962பேர் பாதிப்பு; மூவர் மரணம், போக்குவரத்தும் ஸ்தம்பிதம் 


நாடு முழுவதும் நிலவி வரும் சீரற்ற காலநிலை மலையகத்தை பெரிதும் பாதித்துள்ளது. பதுளை, மொனராகலை, நுவரெலியா, மாத்தளை, கண்டி, இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய ஏழு மாவட்டங்களிலும் பெய்து வரும் அடை மழை காரணமாக இதுவரையில் கண்டி, டெல்மார் மற்றும் கம்பளை ஆகிய பகுதிகளில் மாத்திரம் 265 குடும்பங்களைச் சேர்ந்த 965பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை பேராதனை பிரதேசத்தில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் 44 வயது நிரம்பிய ஒருவர் மண்ணில் புதையுண்டு பலியானதுடன் இதுவரை இவ்வாறு சீரற்ற காலநிலையால் மூவர் மரணித்துள்ளதாக கண்டி அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. சிறுவர்கள் இருவர் காயமடைந்துள்ளனர். நுவரெலியா மாவட்டத்தில் பெய்து வரும் அடை மழை காரணமாக இங்கு அதிகரித்துள்ள குளிர்நிலை மற்றும் சீரற்ற தன்மை காரணமாக இயல்பு நிலை முற்றாக பாதித்துள்ளது.

மரக்கறி பயிர்ச்செய்கை முற்றாக பாதித்துள்ள அதேவேளை நாட்கூலித் தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மண்சரிவு அபாயங்கள், போக்குவரத்து தடைகள், வெள்ளப்பெருக்கு ஆகியவற்றுடன் அணைக்கட்டுக்கள் திறந்து விடும் தேவையும் ஏற்பட்டுள்ளது. சீரற்ற காலநிலை நீடித்துக் கொண்டிருப்பதால் பொது மக்கள் அவதானமாக செயற்படுமாறும் எந்த நேரத்திலும் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் கோரப்பட்டுள்ளது. பெய்து வரும் மழையினால் பதுளை, நுவரெலியா மாவட்டங்களின் பல பகுதிகளில் ஆங்காங்கே ஏற்பட்டுள்ள மண் சரிவு காரணமாக புகையிரத வீதிப் போக்குவரத்துக்கள் பாதிப்படைந்துள்ளன.

தியத்தலாைவ –பண்டாரவளை புகையிரத வீதியில் உள்ள சுரங்கம் ஒன்றிற்கு அருகில் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக புகையிரத போக்குவரத்து தடைப்பட்டதோடு இரவு நேர ரயில் தடம் பாய்ந்துள்ளது. இதன் காரணமாக நேற்று வியாழக்கிழமை அதிகாலை கொழும்பு நோக்கி செல்லவிருந்த புகையிரதம் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டது.
அத்தோடு நுவரெலியா – பதுளை பிரதான வீதியில் ஹக்கலை பூங்காவிற்கு அருகில் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக போக்குவரத்து பல மணி நேரம் தாமதம் ஏற்பட்டிருந்தது. மேலும் இவ்வீதியில் மண் அகற்றும் பணி நடைபெற்று வருவதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் டி.பி.ஜி. குமாரசிறி தெரிவித்தார்.

பதுளை மாவட்டத்தில் பல பகுதிகளில் மண்சரிவு, வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் குடியிருக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும் மண்சரிவு அபாயம் உள்ளதாக அடையாளங்காணப்பட்ட இடங்களைச் சேர்ந்த மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் அடை மழையினால் பதுளை  கொழும்பு பிரதான வீதியில் அப்புத்தளையிலிருந்து ஹல்தும்முல்லை மரங்காவளை வரை வீதியில் பல இடங்களில் ஆங்காங்கே சிறிய அளவிலான மண் சரிவுகள் ஏற்பட்டுள்ளன. அத்தோடு பெரகலை – கொஸ்லந்தை வீதியிலும் சிறிய அளவிலான மண் சரிவுகள் ஏற்பட்டுள்ளன. எனினும் மழை நீடித்தால் பாரிய அளவிலான மண்சரிவுகள் ஏற்படலாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. மேக மூட்டம் பரவிக் காணப்படுவதால் பகல் வேளைகளிலும் வாகனங்களின் மின் விளக்குகளை ஒளிரவிடுமாறும் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதேவேளை காகொல்ல – தியத்தலாவை வீதியில் பள்ளிவாசலுக்கு அருகிலும் கொஸ்லந்தை  – தியத்தலாவை வீதியிலும் பண்டாரவளை   – பூனாகலை வீதியிலும் தெல்தென – மஹியங்கனை வீதியிலும் மண் சரிவுகள் ஏற்பட்டுள்ளன. அத்துடன் பண்டாரவளை – பூனாகலை வீதியில் ஏற்பட்ட மண் சரிவில் வேன் ஒன்று முற்றாக மூடப்பட்டுள்ளது.

பசறை, ஹொப்டன், லுணுகலை, நமுனுகுல, பதுளை ஆகிய பகுதிகளிலும் பண்டாரவளை, ஹப்புத்தளை, பெரகலை, கொஸ்லந்தை, தியத்தலாவை உள்ளிட்ட பிரதேசங்களிலும் தொடர்ந்தும் அடை மழை பெய்து வருவதால் இயல்பு நிலை முற்றாக பாதித்துள்ளது. அத்துடன் இப்பகுதிகளில் குளிர்நிலை மிகவும் அதிகரித்துக் காணப்படுகிறது.

இதேவேளை கண்டி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் அடை மழையினால் 173 குடும்பங்களை சேர்ந்த 590 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அலுவலகம் தெரிவித்துள்ளது. கண்டி மாவட்டத்தில் அமைந்துள்ள 17 பிரதேச செயலகப் பிரிவுகளை சேர்ந்த குடும்பங்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளன. இதன்படி கம்பளையில் 34 குடும்பங்களைச் சேர்ந்த 104 பேரும் உடதும்பர பிரதேசத்தில் 40 குடும்பங்களைச் சேர்ந்த 103 பேரும் மற்றும் உடுநுவர ,யட்டிநுவர, பூஜாபிட்டிய,மினிப்பே ஆகிய பகுதிகளையும் சேர்ந்த மொத்தமாக 590 பேர்பாதிக்கப்பட் டுள்ளனர். இதேவேளை பூஜாபிட்டிய, மினிப்பே, யட்டிநுவர போன்ற பகுதிகளில் நான்கு வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன் 63 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

கண்டி மாவட்டத்தில் இடை விடாது பெய்து வரும் கடும் மழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் விவசாயிகள், அன்றாட வேலை செய்வோர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை பன்வில,  ரங்கல, தெல்தெனிய , கலஹா போன்ற பிரதேசங்களில் அமைந்துள்ள தோட்டப்பகுதிகளில் மலையடி வாரங்களிலும் தாழ்வான பகுதிகளிலும் வசித்து வரும் மக்கள் மண் சரிவுகள் ஏற்படலாம் என்ற அச்சத்திலிருந்து வருகின்றனர்.

இரவு வேளைகளில் இவர்களில் குழந்தைகள், வயோதிபர்களை பொது இடங்களில் தங்க வைத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை கண்டி யாழ்ப்பாணம் ஏ  9 வீதியில் அக்குறணை ஆறாம் மைல்கல் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு எட்டு மணி அளவில் நீரில் மூழ்கின. இதன் காரணமாக ஏ  9 வீதியில் வாகன போக்குவரத்து தடைப்பட்டதுடன் நூற்றுக்கணக்கான வியாபார நிலையங்களும் நீரிழ் மூழ்கிக்காணப்பட்டன. அக்குறணை பிரதேச சபை மற்றும் பிரதேச செயலகம், அலவத்துகொடை பொலிஸார் உட்பட அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் இணைந்து நிவாரணப் பணிகளை மேற்கொண்டனர்.
இது இவ்வாறிருக்க மலையகத்தில் பெய்யும் கன மழையினால் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் 3 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இதனால் அதன் அண்மையில் உள்ள மக்களை மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு நுவரெலியா மாவட்ட செயலாளர் டீ.பீ.ஜீ. குமாரசிறி தெரிவித்துள்ளார்.

அதிக மழை காரணமாக சென்கிளாயர் நீர்வீழ்ச்சியில் நீரின் மட்டம் அதிகரித்துள்ளது.

மலையகத்தில் உள்ள ஏனைய நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அட்டன் – கொழும்பு பிரதான வீதியிலும் அட்டன் – நுவரெலியா பிரதான வீதியிலும் மண்சரிவு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் இவ்வீதி வழுக்குவதற்கான அபாயம் இருப்பதாகவும் இதனால் வாகன சாரதிகளை அவதானமாக வாகனங்களை செலுத்துமாறும் பொலிஸார் கேட்டுக்கொள்கின்றனர்.

காசல்ரீ நீர்த்தேக்கத்திலும் நீரின் மட்டம் உயர்ந்துள்ளது. அட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் சென்கிளாயர் பகுதியில் நேற்றுக்காலை 6 மணியளவில் பாரிய மரத்தின் கிளை ஒன்று முறிந்து வீழந்ததால் போக்குவரத்து தடைப்பட்டிருந்தது.இதேவேளை உடபுஸ்சல்லாவை – டெல்மார் தோட்ட கீழ்பிரிவு பகுதியில் லயன் குடியிருப்பு பகுதியில் நிலம் தாழ் இறங்கியுள்ளமையினால் அங்கு வசித்த 20 குடும்பங்கள் சூரியபத்தன தமிழ் வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளன.

எலமுள்ள கபரகல தோட்ட பகுதியிலுள்ள 4 லயன் குடியிருப்பு பகுதிகளில் ஆற்று நீர் உட்புகுந்துள்ளதால் அம்மக்கள் கபரகல தோட்ட தொழிற்சாலையிலும் சிறுவர் பராமரிப்பு நிலையத்திலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இராகலை டியனல்ல கீழ் பிரிவு பகுதியில் நிலம் தாழிறங்கியுள்ளமையால் அத்தோட்ட லயன் குடியிருப்புக்களில் வசித்து வந்த 100 க்கும் மேற்பட்ட மக்கள் அரஸ்பெத்த தமிழ் வித்தியாலயத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.

கண்டி, தெல்தோட்டை பிரதேச செயலா ளர் பிரிவுக்குட்பட்ட தெல்தோட்டை பட்டியகம மேற்பிரிவு பகுதியில் லயன் குடியிருப்புப் பகுதிகளில் நீர் உட்புகுந்து ள்ளதால் அம்மக்கள் தெல்தோட்டை மலைமகள் இந்து மத்திய கல்லூரியில் தஞ் சமடைந்துள்ளனர்.
மேலும் ஹங்குராங்கெத்த பிரதேச செயலாளர் பிரிவின் கடுகஸ்ஹின்ன அதிகாரிகம பகுதிகளில் வீதி அபிவிருத்தி சபையினரால் மண் குவியல்கள் அகற்ற ப்பட்டு வருகின்றன.
நன்றி - தமிழ்வின்
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates