பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு வீடமைத்துக் கொடுக்க வேண்டும் என்ற உறுதி மொழிகள் இப்போது வலுப்பெற்றுள்ளன. இவற்றினை நடைமுறைப்படுத்துவதற்கு பொருத்தமான அமைச்சும் உருவாக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் ஏன் 20 பேர்ச் காணி தோட்ட மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதையும் இதனால் மக்கள் பெற்றுக் கொள்ளக் கூடிய பலாபலன்கள் என்ன என்பதையும், இவ்வாறு காணிகள் வழங்கி தனி வீடுகள் அமைக்கப்படுமாயின் அது எந்தளவு பெருந்தோட்ட தொழில்களுக்கு அனுசரணையாக காணப்படும் என்பதையும் மேலெழுந்தவாரியாக எடுத்துக் கூறுவது இக்கட்டுரையின் பிரதான இலக்காகும்.
நாம் ஏற்கனவே அறிந்தது போல ஒரு ஹெக்டேயர் என்பது 395 பேர்ச் ஆகும். இங்கு ஒரு பேர்ச் என்பது 272 சதுர அடி என்பதும் அறிந்த விடயமாகும். ஒரு குடும்பத்திற்கு 20 பேர்ச் வழங்கப்பட வேண்டுமாயின் ஒரு ஹெக்டேயர் காணியில் சுமார் 15 முதல் 20 வீடுகளை அமைக்கலாம். இவ்வீடுகளுக்கு பாதைகள் மற்றும் பொழுதுபோக்கு மையங்கள், சேவை நிலையங்கள் என்றும் ஒரு பகுதி நிலம் ஒதுக்கப்பட வேண்டும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
பெருந்தோட்டங்களில் பதிவு செய்து கொண்டுள்ள தொழிலாளர்கள் என்று சுமார் 1,25,000 குடும்பங்கள் காணப்படுகின்றனர். இவர்களுக்கு தலா ஒருவருக்கு 20 பேர்ச் என்றவாறு 1,25,000 பேருக்கு வீடுகள் தேவைப்படும் காணியின் அளவு அண்ணளவாக சுமார் 6,500 ஹெக்டேயர் மட்டுமே என்பதும் யாவரும் அறிந்த விடயமாகும்.
இப்போது பெருந்தோட்ட கம்பனிகளின் பராமரிப்பில் சுமார் 1,18,000 ஹெக்டேயர் காணிகள் உள்ளன. இவற்றில் சுமார் 85,000 ஹெக்டேயர் காணிகள் மட்டுமே தேயிலை போன்ற பயிர்ச் செய்கைக்கு பயன்படுத்தப்படுகின்றன. இவ்வகையில் (1,18,000 – 85,000 = 33,000) சுமார் 33,000 ஹெக்டெயர் காணிகள் பயன்பாட்டில் இல்லாத காணிகளாக இருப்பது சராசரியாக ஒரு கம்பனிக்கு, 1400 ஹெக்டேயர் பரப்பளவில் காணிகள் எவ்வகையில் தேயிலை பயிர்ச் செய்கைக்கு பயன்படுத்தாமல் இருப்பதாக காணப்படலாம்.
கம்பனிகள் பயிர்செய்கைக்கு பயன்படுத்தாத காணிகளை தொழிலாளர்களின் வீடமைப்பிற்கு வழங்கலாம். இதன்போது மற்றுமொரு விடயத்தையும் கருத்திற் கொள்ள வேண்டியுள்ளது. அதாவது மேற்குறிப்பிட்டதுபோல பயன்படுத்தாத காணிகள் யாவற்றையும் வீடமைப்பதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறமுடியாது. மலையகப் பகுதிகளில் காணப்படும் மலைப்பாங்கானதும் சரிவானதுமான இடங்கள் வீடமைப்பதற்கு பொருத்தமானதல்ல . இலங்கையில் கட்டிடங்களை நிர்மாணிக்கும் வேலைத்திட்டங்களுக்காக அமைக்கப்பட்டுள்ள NBRO (National Burlding Reserch organisation) தேசிய கட்டிட ஆய்வு மையம் மலையகப் பகுதிகளில் வீடுகள் மற்றும் பயிர் செய்யக் கூடிய இடங்களை தற்போது அடையாளப்படுத்தியுள்ளது. அவர்களால் அடையாளப்படுத்தப்பட்ட இடங்களிலேயே வீடுகள் அமைப்பதற்கு அனுமதிக்கப்படும். அவ்வாறான இடங்களை தெரிவு செய்து அவற்றில் பொருத்தமாக மேற்குறிப்பிட்டது போன்று சுமார் 6,500 ஹெக்டேயர் காணிகளை வீடமைப்பதற்கு பெற்றுக்கொள்வது சிலவேளை மிகப் பெரிய பணியாகவும் இருக்கலாம்.
இலங்கையில் பெருந்தோட்டக் காணிகள் வீடமைப்பு மற்றும் மாற்று வேலைத்திட்டங்களுக்கு தொடர்ச்சியாக பயன்படுத்தப்பட்டுள்ளன. உதாரணமாக 1975 இல் காணி சீர்திருத்தத்தின் போது சுமார் 10,000 ஏக்கர் காணிகள் தேசிய மற்றும் பயிர்ச் செய்கைக்காக (NADSA) வழங்கப்பட்டது. நாவலப்பிட்டி, உலப்பனை, கம்பளை, கடுகண்ணாவை பேராதனை போன்ற இடங்களில் உள்ள தேயிலைக் காணிகள் அங்கு வாழ்ந்த கிராமிய மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டன. இக்காணிகள் பயிர் செய்கைக்காகவும் கிராம்பு, ஏலம், பாக்கு மற்றும் வீட்டுதோட்ட பயிர்ச்செய்கைக்காகவும் வழங்கப்பட்டன.
இந்நடவடிக்கைகளினாலேயே அப்பகுதிகளில் வாழ்ந்த கிராம மக்களின் வாழ்க்கையில் மறுமலர்ச்சி ஏற்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இது போன்ற பல்வேறு வகையில் வழங்கப்பட்ட பெருந்தோட்ட காணிகள், குடியிருப்பு, மாற்று வாவி ஆற்று வடிகால் அபிவிருத்தி திட்டங்கள் , காடு வளர்ப்பிற்கு வாழ்கின்ற மக்களின் வாழ்வாதாரம் போன்றவற்றிற்கு இன்று வரையும் பெரும் பங்களிப்பு செய்து வருகின்றன. இவற்றினை படிப்பினையாக கொண்டே மலையகப்பகுதிகளில் வீடமைப்புக்கு காணிகள் வழங்கப்பட வேண்டும் என்பது வலியுறுத்தப்படுகின்றன. தோட்டங்களில் 20 பேர்ச் காணி வழங்கி வீடுகள் நிர்மாணித்தால் தொழில்கள் பாதிக்கப்படுமா? என்றும் வினவலாம். உண்மையில் இன்று தேயிலை கைத்தொழில் என்பது இப்போது பெருந்தோட்டங்களை மையமாக கொண்டதாக காணப்படவில்லை. உற்பத்தி செய்யப்படும் தேயிலையில் 75 வீதமானவை இன்று கேகாலை, இரத்தினபுரி, களுத்துறை, காலி , மாத்தறை போன்ற மாவட்டங்களில் உள்ள சிறு தேயிலை உரிமையாளர்களிடம் இருந்தே பெற்றுக் கொள்ளப்படுகின்றன. சுமார் 400,000 சிறு தோட்ட உரிமையாளர்கள் இதில் ஈடுபட்டுள்ளனர்.
இங்குள்ள தேயிலைச் செடிகளில் சிறு வர்த்தகம் அதிகமானவை உயர் விளைவு தரக் கூடிய தேயிலைப் பயிர் நிலங்களாக காணப்படுகின்றது. அரசாங்கம் தமது வருடாந்த வரவு – செலவுத் திட்டத்தில் சிறு தோட்ட உரிமையாளர்களுக்கு பல நிவாரணங்கள் வழங்குகின்றன. இந் நிலையில் இலங்கையின் தேயிலை பொருளாதாரம் என்பது சிறு தோட்டங்களில் மேற் கொள்ளப்படும் உற்பத்தியாக மாற்றமடைந்து விட்டது.
பெருந்தோட்ட கம்பனிகளின் பொறுப்பில் உள்ள காணிகளில் சுமார் 60 விதமான தேயிலைப் பயிர்கள் 150 வருடம் பழைமையானதாகும். பெருந்தோட்ட கம்பனிகள் புதிதாக தேயிலை பயிரிடும் பாணியை ஏற்கனவே நிறுத்திவிட்டன. அடுத்த 20 வருடங்களில் பெருந்தோட்ட கம்பனிகள் தேயிலை செய்கையை பராமரிப்பதில் இருந்து விலகிக் கொள்ளலாம்.
அது மட்டுமன்றி மூன்று அல்லது நான்காவது தலைமுறையாக இம் மண்ணில் வாழ்ந்த மக்கள் “மலையக மக்கள்” என்ற அடையாளத்துடன் நிரந்தரமாக வாழ்கின்ற சூழ்நிலை உருவாகும். இவையாவற்றிற்கும் மேலாக இவர்கள் மத்தியில் வளர்ந்துள்ள தனித்துவமான பண்பாட்டு கலாசாரங்களை பேணி பாதுகாப்பதுடன் இம் மக்களின் அரசியல் அபிலாஷைகளையும் நிறைவு செய்வதற்கான களமாகவும் காணப்படலாம்.
காணிகள் வழங்கப்படவும் இல்லை! அவர்களுக்கு PHDI இன் படியே வீடுகள் அமைக்கலாம் தோட்டத் தொழிலாளர்களுக்கு நிரந்தர வீடுகள் இல்லை! பெருந்தோட்ட தொழில்கள் நலிவடைந்து செல்வதால் அவர்கள் தொடர்ந்து அங்கு இருக்க வேண்டிய அவசியமில்லை! என்று எவரேனும் கருதினால் இந்நாட்டில் மலையக மக்கள் என்ற வார்த்தைக்கு இடமில்லாமல் போய்விடும் காலம் அண்மித்து விட்டதாகவே கருத வேண்டும்.
நன்றி - வீரகேசரி