Headlines News :

காணொளி

ஜனாதிபதி விருது

ஜனாதிபதி விருது
நமது மலையகத்துக்கு

சுவடி

மலையகத் தியாகிகளை நினைவு கூருவோம்!



இந்நாட்டின் வரலாற்றில் 1866 ஆம் ஆண்டு மாபெரும் மாற்றத்தை உண்டாக்கினார் ஜேம்ஸ் டெய்லர் என்ற ஆங்கிலேயர் கண்டி மாவட்டத்தில் ஹேவாஹெட்ட லூல் கந்துர தோட்டத்தில் முதன் முதலாக தனது காணியின் பத்து ஏக்கரில் தேயிலை பயிர்ச் செய்கையை ஆரம்பித்தார்.

இப் பயிர்ச் செய்கையை பரீட்சார்த்தமாக மேற்கொள்வதற்காக இந்தியாவின் அசாமிலிருந்து தேயிலை விதைகளை தருவித்து பயிரிட்டார். இதில் பெரிய வெற்றியையும் கண்டு பெரியதோர் மாற்றத்தையும் கொண்டு வந்தார். ஜேம்ஸ் டெய்லரின் லூல் கந்துர பங்களாவிலேயே சிறிய தொழிற்சாலையையும் உருவாக்கினார். இந்தத் தொழிற்சாலையில் தனது காணியிலிருந்து பெறப்படும் தேயிலைக் கொழுந்தை உலர்த்தி தூளாக்கி லண்டனுக்கு அனுப்பினார். இவரின் தேயிலைத் தூளுக்கு லண்டன் மாநகர வர்த்தக மையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்தது.

சிலோன் தேயிலைக்கு பெரும் வரவேற்பும், ஆதாயமும் கிடைப்பதை பலர் தெரிந்து கொண்டனர். இதன் காரணமாக பிரித்தானியர், ஸ்கொட்டிசார் ஐரிஸ்காரர்கள், வெல்ஷ்காரர்கள் உட்பட பெருந் தொகையான ஐரோப்பியர்கள் இலங்கைக்கு வரத் தொடங்கினர். இவ்வாறு வந்த இவர்கள் அன்றைய கண்டி, நுவரெலியா பிதேசங்களை பார்வையிட்டனர். பெருங்காடுகளையும், கற்பாறைகளையும் கொண்ட இப்பிரதேசத்தின் காணியில் ஒரு ஏக்கர் ஒரு பவுணுக்கு வெள்ளைக்காரர்களின் ஆட்சி வழங்கியது. இந்த விலைக்கு ஒவ்வொரு வெளிநாட்டு வெள்ளைக்கார கம்பெனிகளும் பல ஏக்கர்களை விலைக்கு வாங்கின. கமம்பெனிகாரர்களுடன், போட்டி போட்டுக்கொண்டு தனியாரும் காணிகளை கொள்முதல் செய்வதில் பெரும் ஆர்வம் காட்டினர்.

வெள்ளைக்காரர்கள் காடு நிறைந்த காணிகளை செப்பனிட முதன் முதலில் சிங்களத் தொழிலாளர்களை பயன்படுத்தினர். பெரும் காடுகளில் அட்டைகள், விஷபூச்சிகள், பாம்புகள், மிருகங்கள், தொல்லைகளாலும் கடுங்குளிரினாலும் பெரிதாகப் பாதிக்கப்பட்ட இவர்கள் வெள்ளைக்காரர்களிடம் கூலிகளாக வேலை செய்ய மறுத்தனர். அவர்களுடன் முரண்பட்டனர். முக்கியமாக சிங்களவர்களுக்கு ஆங்கிலமும், ஆங்கிலேயர்களுக்கு சிங்களமும் தெரியாதமையினால் மொழிப்பிரச்சினையும் ஏற்பட்டது.

ஏற்கனவே தென்னிந்தியாவிலிருந்து இங்கு வந்து கோப்பித் தோட்டங்களில் தொழிலாளர்களாக இருந்து வந்த பலர் தேயிலைத் தோட்டங்களில் இணைந்தனர். அப்போது கோப்பி மரங்களில் நோய் பரவவே கோப்பித் தொழிலில் மந்தநிலை நிலவியது. இலங்கையின் தேசாதிபதியாகவிருந்த சேர் ஹெர்க்குயூலெஸ் ஜோர்ஜ் றோபர்ட் ரொபின்ச (1865- 1873) னின் உதவியோடு தென்னிந்தியாவிலிருந்து தொழிலாளர்களை வரவழைக்க வெள்ளைக்கார துரைமார்கள் திட்டம் தீட்டினர். இவர்களின் முயற்சிக்கு எற்கனவே இங்கு தென்னிந்தியா விலிருந்து வருகை தந்தோரும் உடந்தையாகினர். துரைமார்களின் திட்டத்துக்கு தேசாதிபதி றோபர்ட் ரொபின்சன் பெரிதும் உதவினார்.
சிவனு லட்சுமணன்
சிவனு லட்சுமணன்
மிகவும் தந்திரவழி வகைகளை கையாண்டு தமிழ் நாட்டிலிருந்து திருச்சி, மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி, மதுரை ஆகிய மாவட்டங்களிலிருந்து தமிழ் மக்களை பாம்பன் தனுஷ்கோடியினூடே கடல் மார்க்கமாக இலங்கையின் வடபகுதி தலைமன்னாருக்கு அழைத்து வந்து மலையகத்தில் குடியேற்றம் செய்தனர். இவர்கள் கடுமையாக உழைத்தனர். காட்டில் கொடிய மிருகங்களுடன் போராடி அட்டைக் கடிக்கும், கொசுக்கடிக்கும் பயம் கொள்ளாது காடுகளை அழித்து செப்பனிட்டார்கள் எமது முதாதையர்கள். வெள்ளைக்காரர்களால் எமது மூதாதையர்கள் இந்நாட்டுக்கு வரவழைக்கப்பட்டிருக்காவிட்டால் இன்று மலையகம் எனப்படும் பிரதேசம் காடாகவும் கற்களாலுமே மூடப்பட்டிருக்கும். எமது மூதாதையர்களே காட்டையும், கற்களையும் வெட்டி ஒதுக்கி வீதிகளையும், பாதைகளையும் அமைத்து பாறை நிலத்தில் தேயிலைச் செடிகளை நாட்டி, தேயிலைச் செடிகளால் மலைகளை மூடி அழகு பார்த்தனர்.

180 வருட வரலாற்றைக் கொண்ட இம் மக்களின் துயரங்கள், அவலங்கள், இன்றும் தீர்ந்ததாக இல்லை. இம் மக்களை மலையகத்து அரசியல் தொழிற் சங்கங்கள் இன்றும் வெள்ளைக்கார துரைமார்களை விட மோசமாக ஏமாற்றி வருகிறது. இன்று மலையகத் தோட்டத் தொழிலாளிகளின் வழி நடத்துபவர்களாக அறுபதுக்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் தொழில் திணைக்களத்தில் பதிவாகியுள்ளன.

1939 முதல் 1979 வரை 36 மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் தொழிற் சங்க போராட்டங்களில் ஈடுபட்டு உயிரைத் தியாகம் செய்துள்ளனர். இவர்களின் வரலாறு எத்தனை மலையகத் தலைவர்களுக்குத் தெரியும். 1990ஆம் ஆண்டுக்குப் பின்னர் மலையகத் தலைவர்களை நாடாளுமன்ற, மாகாணசபை, நகரசபை, பிரதேச சபைகள் மீது ஆசை ஈர்த்துவிட்டது. அதனால் கிடைக்கும் வரப்பிரசாதங்களை அனுபவிக்கும் நோக்கமாக உள்ளனரே தவிர தங்களை வளர்த்துவிட்ட மக்கள் மீது எவ்வித அக்கறையும் செலுத்துவதில்லை.

எதிர்காலத்தில் மலையகத் தலைவர்கள் அம் மக்களாலேயே ஓரங்கட்டப்படுவர் என்பது உண்மையாகும். அண்மையில் இடம்பெற்ற மாகாண சபைத் தேர்தல் முடிவுகள் இதனையே எடுத்தியம்புகின்றன.

இன்று மலையக அரசியல் தொழிற் சங்கங்களின் செயற்பாடு அம் மக்களின் எழுச்சிக்கு உந்து சக்தியாக அமைய வேண்டும். அந்த நிலைமை இன்று மலையக அரசியல் தொழிற் சங்க செயற்பாடுகளில் இல்லை. இது தொடருமானால் எதிர்வரும் பொதுத் தேர்தல் பலருக்கு அதிர்ச்சித் தோல்வியைத் தரக் கூடியதாக அமையலாம்.

அரசியல் அடக்குமுறைகள், தொழிற்சங்க தலைவர்களின் கெடுபிடிகள், அந்நியப்படுத்தல், எனப் பல அடக்கு முறைகள் இன்றும் இவர்கள் மீது பலவந்தமாக திணிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் மே முதலாம் திகதி மேதினம் கொண்டாடப்படுகிறது. இது வரை காலமும் மலையகத்தில் பல போராட்டங்களில் ஈடுபட்டு உயிர் நீத்த 36 தியாகிகளுக்கு எவ்வித மரியாதையையும் மேதினத்தில் வழங்காமை மிகவும் கவலைக்குரிய விடயமாகும். மே தினத்தன்று மாபெரும் ஊர்வலமும், வெறுமனே கோஷமும், தீர்மானங்களும் நிறைவேற்றப்படுவதால் எவ்வித பயனும் மக்களை சென்றடையப் போவதில்லை. மலையக மக்களின் உரிமைக்காகப் போராடிய 36 தியாகிகளதும் வாழ்க்கை வரலாறு நூல் வடிவம் பெற வேண்டும். இன்றைய இளைஞர்களுக்கு அது முக்கியமாகும். மே தினத்தன்று 36 தியாகிகளும் நினைவு கூரப்பட வேண்டும். அவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட வேண்டும்.

  • கோவிந்தன் முல்லோயா தோட்டம், ஹேவாஹெட்ட, 1939,
  • வேலாயுதம் கந்தளா தோட்டம், புப்புரஸ்ஸ, 1942
  • வேலுசாமி கந்தனா தோட்டம், புப்புரஸ்ஸ, 19
  • வெள்ளையன் மீரியாக்கொட தோட்டம், சாமிமலை. 1950,
  • எட்லின் நோனா, என்கலவல தோட்டம், தெபுவான. 1953,
  • ஆதியப்பன், மல்கொல தோட்டம், நாவலப்பிட்டிய. 1953,
  • வேதன் லின்டல் தோட்டம், நேபொட. 1957,
  • வைத்திலிங்கம், டெவன் பனிய பத்தனை, தலவாக்கலை. 1957,
  • நடேசன் வெறேயர் தோட்டம், இரத்தினபுரி. 1957,
  • ஏப்ரஹாம் சிங்கோ, ரவுன்பங்களாத் தோட்டம், அக்கரப்பத்தனை. 1958,
  • ஐயாவு, பொகவந்தலாவ தோட்டம், பொகவந்தலாவை. 1958,
  • பிரான்சிஸ் பொகவந்தலாவை தோட்டம், பொகவந்தலாவை. 1958,
  •  கொம்பாண்டி, சென் மாக்ரட் தோட்டம், உடபுசல்லாவ. 1958,
  • பொன்னையா சென் மாக்ரட் தோட்டம், உடபுசல்லாவ. 1958,
  • கருமலை, நல்லதண்ணீர் தோட்டம், மஸ்கெலியா. 1959,
  • முத்துசாமி, காலகார, மாதென்ன தோட்டம், எல்கடுவ. 1959,
  • ஜேம்ஸ் சில்வா, கமாவளை தோட்டம், பசறை. 1959,
  • தங்கவேல், முகலாசேனை தோட்டம், இறக்குவானை. 1959,
  • சிதம்பரம், மல்வான தோட்டம், நிட்டம்புவ. 1960,
  • முனியாண்டி, வெத்திலையூர் தோட்டம், எட்டியாந்தோட்ட. 1960,
  • செல்லையா, லெட்சுமித் தோட்டம், நாவலப்பிட்டி. 1961,
  • ஆராயி, லெட்சுமித் தோட்டம், நாவலப்பிட்டி. 1961,
  • மாரியப்பன், லெட்சுமித் தோட்டம், நாவலப்பிட்டி. 1961,
  • நடேசன், லெட்சுமித் தோட்டம், நாவலப்பிட்டி. 1961,
  • விஜயசேன, எல்வதுரை தோட்டம், இங்கிரியா 1961,
  • சோலை, சின்ன கிலாபோக்கு தோட்டம், மடுல்கல. 1961,
  • அழகன், கந்தநுவர தோட்டம், எல்கடுவ. 1969,
  • ரெங்கசாமி கந்தநுரவ தோட்டம், எல்கடுவ. 1969,
  • இராமையா, சீனாக்கள தோட்டம், பதுளை. 1970,
  • அழகர் சாமி சீனாக்கல தோட்டம், பதுளை. 1970,
  • கந்தையா நாலந்த தோட்டம், மாத்தளை. 1970,
  • பார்வதி நாலந்த தோட்டம், மாத்தளை. 1970,
  • ஆறுமுகன் நாலந்த தோட்டம், மாத்தளை. 1970,
  • இராமசாமி, நாலந்த தோட்டம், மாத்தளை. 1970,
  • லெட்சுமணன் சிவனு யொக்ஸ்போர்ட் தோட்டம் வட்டகொட. 11.05.1977. 
  • பழனிவேல், பல்லேகலத் தோட்டம், கண்டி. 1979.


14-05-2005 இல் தியாகி சிவனு லெட்சுமணின் நினைவு தினத்தையொட்டி தலவாக்கலை மேல் கொத்மலைத் திட்டத்தை கைவிடுமாறு கோரி பல போராட்டங்கள் நடைபெற்றன. போராட்டத்தை தலைமைதாங்கி நடத்தியவர் இறுதியில் அதே மின்சார அபிவிருத்தித் திட்டத்தில் உயர் பதவியேற்று வாகனமும் பெற்று சுக போகங்களை அனுபவித்து வருகின்றார்.

கே.பி.பி. புஷ்பராஜா
நன்றி- தினகரன்

மலையக அரசியல் வரலாற்று வளர்ச்சியும் முன்னகர்த்த வேண்டிய பணிகளும் - சி.அ.யோதிலிங்கம்


அ.லோரன்ஸ்
மலையக அரசியலின் வரலாற்று வளர்ச்சியையும் நகர்த்த வேண்டிய பணிகளையும் பற்றி சில கருத்துக்களைக் கூறலாம் என நினைக்கிறேன்.
நான் மலையக சமூகத்தைச் சேர்ந்தவனல்ல. அதற்கு வெளியில் தனது விடுதலைக்காகப் போராடும் வட-கிழக்கு சமூகத்தைச் சேர்ந்தவன். ஆனால் மலையக மக்கள் தொடர்பாக மிகுந்த அக்கறையுடையவன். முடிந்தவரை அவர்கள் தொடர்பான தேடல்களை மேற்கொண்டு வருபவன். வடக்கில் குடியேறிய மலையக மக்கள் மத்தியில் புனர் நிர்மாண பணிகளை மேற்கொண்டவர்களில் ஒருவன். எனினும் மலையக மக்களின் அபிலாஷைகளை அவர்கள் அனுபவித்து வெளிப்படுத்துவது போல ஒரு அகநிலை நின்று ஆக்கத்தினை கொணர முடியாது. எனவே ஒரு புறநிலையாளன் என்ற வகையிலேயே எனது கருத்துக்களை பரிசீலிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

கருத்துக்கள் எப்பொழுதும் முடிந்த முடிவுகளல்ல. விவாதங்களுக்கும் கலந்துரையாடல்களுக்கும் உரியவை. கருத்துக்கள் மோதுகின்ற போதுதான் உண்மைகளை தரிசிக்க முடியும். எனவே என்னுடைய கருத்துக்களையும் விவாதத்திற்கும் கலந்துரையாடல்களுக்கும் எடுத்துக் கொள்ளுமாறும் அதேவேளை தவறுகளை மன்னிக்குமாறும் கேட்டுக் கொள்கின்றேன்.

மலையக மக்கள் வரலாற்று ரீதியாக ஒடுக்கு முறைகளுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். ஒரே தடவையில் வர்க்க ஒடுக்குமுறை, இன ஒடுக்கு முறை என்பவற்றை புற ரீதியாக எதிர் நோக்குகின்றனர். அதேவேளை மலையக மக்களில் பெரும்பான்மையினர் சாதி ரீதியான ஒடுக்கு முறை, உள்ளக வர்க்க ஒடுக்கு முறை என்பவற்றிற்கு அக ரீதியாகவும் முகம் கொடுக்கின்றனர். எனவே ஒரே சமயத்தில் இன விடுதலையையும் வர்க்க விடுதலையையும் பெற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

அதாவது தேச அரசியலை முன்னெடுக்க வேண்டிய அவர்கள் அதே தருணத்தில் சமூக மாற்றத்திற்கான அரசியலையும் முன்னெடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். ஒரே நேரத்தில் புற ரீதியான ஒடுக்கு முறைகளுக்கும் அக ரீதியான ஒடுக்கு முறைகளுக்கும் எதிராக போராடுகின்ற போது போராட்ட தந்திரோபாயங்களில் அதிக கவனம் எடுக்க வேண்டியது தேவையாயிருக்கின்றது.

ஆனால் ஒரு தேசப் போராட்டம் என்பது அந்தத் தேசம் புறநிலையிலிருந்து வருகின்ற ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டமாகும். இதனால் வர்க்க, சாதி, பிரதேச நிலைகள் கடந்து தேசத்தின் அனைத்துப் பிரிவினரையும் இணைக்க வேண்டிய கட்டாயத் தேவை இருக்கின்றது. அதுவும் சிங்கள தேசத்தினால் முற்றிலும் சூழப்பட்ட ஒரு தேசம் வெற்றியடைவதற்கு தனது முழு ஐக்கிய பலத்தையும் காட்ட வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கின்றது.

எனது இந்த உரை அக ஒடுக்குமுறை பற்றி அதிக கவனத்தினை குவிக்கவில்லை. மாறாக புற ரீதியான ஒடுக்குமுறையான இன ஒடுக்கு முறையிலேயே கவனம் செலுத்துகின்றது.

இன ஒடுக்கு முறை தொடர்பான மலையகத்தின் இன்றைய அரசியல் நிலையையும், எதிர்கால பணிகளையும் பற்றி முழுமையாக புரிந்துக் கொள்வதற்கு மலையக அரசியலின் வரலாற்று வளர்ச்சி, அது இன்று வந்தடைந்துள்ள கட்டம் என்பதை தெளிவாக விளங்கிக் கொள்வது அவசியமானதாகும்.

மலையக மக்கள் சுமார் 87 வருடங்களாக நீண்ட போராட்டத்தினை நடாத்தி வருகின்றனர். அவர்கள் அமைப்பு ரீதியாக போராட தயாரான ஆண்டாக 1919ம் ஆண்டினைக் குறிப்பிடலாம். இந்த ஆண்டே சேர். பொன்னம்பலம் அருணாசலமும், பெரிசுந்தரமும் இணைந்து தோட்டத் தொழிலாளர் சம்மேளனம் என்ற அமைப்பினை உருவாக்கி மலையக மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்காக குரல் எழுப்பியிருந்தனர். 1919ம் ஆண்டிலிருந்து 1935 வரை மலையக அரசியலின் முதலாவது கட்டம் எனக் கூறலாம். அன்றைய கால கட்டத்தில் கொடூர ஒடுக்கு முறையாக இருந்த துண்டு முறையினை ஒழிப்பதற்காக இவர்கள் குரல் கொடுத்தார்கள் எனக் கூறப்படுகின்றது.

ஆனாலும் இக்கால கட்டத்தினை நகர்த்திய பெருமை நடேசையரையே சாரும். A.E குணசிங்கவின் தொழிற் சங்கத்தில் உபதலைவராக இருந்த அவர் குணசிங்கவின் இனவாத நடவடிக்கைகளால் அதிலிருந்து விலகி தோட்டத் தொழிலாளர்களுக்கென தனியான தொழிற் சங்கமாக இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சம்மேளனத்தை உருவாக்கி செயற்பட்டார். டொனமூரின் அரசாங்க சபையில் ஹட்டன் தொகுதி உறுப்பினராக 1936 தொடக்கம் 1947 வரை கடமையாற்றியும் இருந்தார். தோட்டங்களுக்கு வெளியார் செல்லக் கூடாது என்ற கட்டளையும் மீறிச் சென்று தொழிலாளர்களுக்கு விழிப்பூட்டினார்.

1935 தொடக்கம் 1947 வரை மலையக அரசியலின் இரண்டாவது காலகட்டம் எனக் கூறலாம். இக்காலக்கட்டம் இடதுசாரிக் கட்சிகள் மலையக மக்கள் மத்தியில் ஆதிக்கம் செலுத்திய காலகட்டமாகும். இடதுசாரிகளே மலையகத்தில் வேலை நிறுத்தம் உட்பட பல போராட்டங்களை அறிமுகப்படுத்தியவர்களாவர். இவர்களால் நடாத்தப்பட்ட முல்லோயாப் போராட்டம் புகழ் பூத்த ஒன்றாகும். பிரஸ் கேடில் சம்பவமும் மலையக அரசியலை மையமாக வைத்தே நிகழ்ந்திருக்கின்றது. மலையகத்தின் முதல் போராளி கோவிந்தனும் முல்லோயாப் போராட்டத்திலேயே மரணமானார்.

1940 வரை மலையக அரசியலில் இன ஒடுக்கு முறை பெரியளவில் வளர்ச்சியடைந்திருக்கவில்லை. வர்க்க ஒடுக்கு முறையே பிரதானமாகத் தொழிற்பட்டது. இதனால் நடேசையரும், இடதுசாரிகளும் வர்க்க ஒடுக்கு முறைகளிலேயே அதிக கவனம் செலுத்தியிருந்தனர். ஆட்சி அதிகாரம் ஆங்கிலேயர் கைகளில் இருந்ததினால் இன ஒடுக்கு முறை பெரியளவிற்கு எழுச்சியடையவில்லை. ஆனாலும் கொழும்பு நகரத்தில் இந்திய வம்சாவழியினருக்கு எதிரான இனவாதம் 1920களிலேயே ஆரம்பித்து விட்டது.
அநகாரிக தர்மபால இந்திய வர்த்தகர்களுக்கு எதிரான இனவாதத்தினைத் தொடக்கி வைத்தார். A.E குணசிங்க கொழும்பில் வாழும் இந்திய தொழிலாளர்களுக்கு எதிரான இனவாதத்தினைத் தொடக்கி வைத்தார். அரச அதிகாரம் அரசாங்கத் தலைவர்களிடம் இல்லாததினால் அது பெரியளவிற்கு நடைமுறைச் செயற்பாட்டில் எழுச்சியடையவில்லை. எனினும் இந்தப் போக்கு நீண்டகாலம் நீடிக்கவில்லை.

1931இல் அறிமுகப்படுத்தப்பட்ட டொனமூர் அரசியல் யாப்புடன் இனவாத சக்திகள் அதிகாரத்தைக் கையிலெடுத்துக் கொண்டு தமது செயற்பாட்டினை முடுக்கிவிட்டனர். தமக்கு கிடைத்த அரைகுறை அதிகாரத்தை வைத்துக் கொண்டே நகரத்தில் பணியாற்றிய இந்திய வம்சாவழி அரசாங்க உத்தியோகத்தர்கள் போக்குவரத்துத் தொழிலாளர்கள் போன்றோரை பதவியிலிருந்து நீக்கினர். இந்நிலையில் இவற்றுக்கு முகம் கொடுப்பதற்காகத்தான் நேருவின் வழிகாட்டலில் இலங்கை-இந்தியர் காங்கிரஸ் 1939இல் உருவாக்கப்பட்டது. 1940இல் இதனுடைய தொழிற் சங்கம் மலையகத்தில் பணியாற்ற ஆரம்பித்தது.

இந்திய வம்சாவழியினருக்கு எதிரான இனவாதம் கொழும்பில் ஆரம்பித்தாலும் இக்காலத்தில் மலையகத்தில் முற்று முழுதாக நடைபெறவில்லையெனக் கூற முடியாது. 1937ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட உள்ளுராட்சிச் சபைச் சட்டம் இதற்கு நல்ல உதாரணமாகும். பண்டாரநாயக்கா உள்ளுராட்சி அமைச்சராக இருந்த போது கொண்டு வரப்பட்ட இச்சட்டத்தின் மூலம் உள்ளுராட்சித் தேர்தலில் வாக்களிக்கும் உரிமை மலையக மக்களுக்கு இல்லாமற் செய்யப்பட்டது. இதைவிட அரசாங்க சபைத் தேர்தல்களில் கூட மலையக மக்களின் வாக்கு வீதத்தினைக் குறைப்பதற்காக வாக்குரிமைச் சட்டத்தில் பல கட்டுப்பாடுகள் 1936 தேர்தலின் போது கொண்டு வரப்பட்டன.

மூன்றாவது காலகட்டம் 1941ஆம் ஆண்டிலிருந்து 1977ம் ஆண்டுவரை வருகின்றது. 1947 இன் சோல்பரி அரசியல் யாப்பு அதன் பின்னர் 1948ல் வழங்கப்பட்ட சுதந்திரம் என்பனவற்றின் மூலம் இலங்கையின் ஆட்சி அதிகாரம் முழுமையாக சிங்களத் தலைமைகளின் கைகளுக்குச் சென்றது. ஆங்கிலேயர்கள் இலங்கைத் தீவின் பன்முக சமூகத் தன்மை கவனத்திலெடுக்காமல் ஒற்றையாட்சி அரசியலை அறிமுகப்படுத்திவிட்டுச் சென்றனர். பல்வேறு இனங்களும் நியாயமான வகையில் அதிகாரத்தைப் பங்கிட்டுக் கொள்ளும் தன்மை அதிகார கட்டமைப்பில் இருக்கவில்லை.

சிங்கள தலைமை தென் இலங்கையில் மலையக மக்களின் அரசியல் அடையாளத்தையே இல்லாமல் செய்யும் வகையில் நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியது. இரு பிரஜாவுரிமை சட்டங்களின் மூலமும் வாக்குரிமைச் சட்டத்தின் மூலமும் மலையக மக்களின் அரசியல் அடையாளத்தை இல்லாமல் செய்தது. மலையக மக்கள் பலவந்தமாக தொழிற்சங்க அரசியலுக்குள் மட்டும் குறுக்கப்பட்டனர். மறுபக்கத்தில் அரசியல் அதிகாரத்தை முழுமையாக சிங்கள மயமாக்கும் முயற்சி நடைபெற்றது.

1950 இல் தேசியக் கொடி, 1956 இல் தனிச் சிங்கள சட்டம் என்பன சிங்கள மயமாக்கல் செயற்பாட்டில் பிரதான விடயங்களாக இருந்தன. ஏனைய இனங்களுக்கு பாதுகாப்பாக சோல்பரி யாப்பில் காணப்பட்ட 29வது பிரிவு, கோமறைக் கழகம் என்பன மலையக மக்கள் விடயத்தில் சிறிதளவு பாதுகாப்பினைக் கூட கொடுக்கவில்லை. பிரஜா உரிமைப் பிரச்சினையில் உலக நீதிக்குப் புகழ்பெற்ற கோமறைக் கழகமும் கையை விரித்திருந்தது.

இந்த அரசியல் அடையாளப் பறிப்பின் உச்சநிலை அம்சமாகவே 1964 இல் கைச்சாத்திடப்பட்ட ஸ்ரீமா-சாஸ்திரி ஒப்பந்தம் அமைந்தது. மலையக மக்களின் சம்மதமில்லாமலேயே ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு அரைவாசி இந்திய வம்சாவழி மக்கள் நாடு கடத்தப்பட்டனர். 1974ல் கைசாத்திடப்பட்ட ஸ்ரீமா-இந்திரா ஒப்பந்தமும் இந்த நாடுகடத்தலில் பங்காற்றியிருந்தது.

ஏற்கனவே டொனமூர் காலத்தில் நகர்புறங்களில் பணியாற்றியவர்கள் வேலை நீக்கப்பட்டதால் சுயமாக வெளியேறினர். பின்னர் வந்த ஒப்பந்தத்தின் மூலம் பலவந்தமாக நாடுகடத்தப்பட்டனர். இந்த இரு வகை வெளியேற்றங்களினால் 1940களில் இரண்டாவது பெரிய இனமாக 13வீதமாக இருந்த இந்திய வம்சாவழியினர் 1981இல் 5.5 வீதமாக மாறினர்.

சுதந்திரம் கிடைத்தவுடனேயே மலையக மக்களின் அரசியல் அடையாளத்தை பறித்த ஆட்சியாளர்கள் 1972இன் பின்னர் மலையக மக்களின் கூட்டிருப்பையும் இல்லாமல் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.  இதற்காக மேற்கொண்ட பிரதான நடவடிக்கையே மண்பறிப்பாகும். 1972 இன் காணி சீர்திருத்தச் சட்டம், 1975 இன் காணி உச்சவரம்புச் சட்டம் என்பன மலையக மக்களை அவர்கள் வளமாக்கிய நிலங்களிலிருந்து அப்புறப்படுத்தின. அத் தோட்டங்கள், பெருந்தோட்டத் துறையுடன் எந்தவித தொடர்புமற்ற சிங்கள கிராமவாசிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டன. இதற்கு எதிரான போராட்டத்திலேயே டெவன் தோட்டப் போராளி சிவனு லட்சுமணன் சுட்டுக் கொல்லப்பட்டான்.

இலங்கை - இந்திய காங்கிரசும் பின்னர் பெயர் மாற்றப்பட்ட இலங்கைத் தொழிலாளர் கங்கிரசும் இக்கால கட்டத்தினை நகர்த்திய முக்கிய அமைப்பாக இருந்தது. தொண்டமான் பிரதான தலைவராக விளங்கினார். ஏனைய பல தொழில் சங்கங்கள் தொழிற்பட்ட போதும் இன அரசியலை நகர்த்திய அமைப்பாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரசையே குறிப்பிடலாம். மலையக ஆய்வாளர் காதர் இலங்கை - இந்திய காங்கிரசினையே மலையகத்தின் முதலாவது தேசிய இயக்கமாகக் குறிப்பிடுகின்றார். 1947 தேர்தலில் இவ்வமைப்பின் சார்பில் 6 பிரதிநிதிகள் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.

நான்காவது கால கட்டம் 1977 தொடக்கம் 2000 வரையிலான காலகட்டமாகும். இக்கால கட்டத்தில் மலையக மக்களின் நீண்ட போராட்டத்தின் வாயிலாக மலையக மக்களுக்கு அரசியல் பிரதிநிதித்துவம் கிடைத்தது. 1977ம் ஆண்டு தேர்தலில் நுவரெலியா - மஸ்கெலியா தொகுதியிலிருந்து மூன்றாவது அங்கத்தவராக தொண்டமான் தெரிவு செய்யப்பட்டார்.

அதேவேளை இக்கால கட்டத்தில்தான் வட-கிழக்கில் தனிநாட்டுப் போராட்டமும் முனைப்புடன் தொழிற்படத் தொடங்கியது. தமிழர் விடுதலைக் கூட்டணி 1977 தேர்தலில் தமிழீழத்துக்கான சர்வஜன வாக்கெடுப்பு என பிரச்சாரம் செய்து போட்டியிட்டு வட-கிழக்கிலுள்ள 19 தமிழ்த் தேர்தல் தொகுதிகளில் 18இனைக் கைப்பற்றியது. அதேவேளை 1977, 1983 காலங்களில் இரு இன அழிப்பு சம்பவங்களும் நடைபெற்றன. இதில் வட-கிழக்குத் தமிழர்கள் மட்டுமல்ல. மலையகத் தமிழர்களும் அழிக்கப்பட்டனர். 1983ன் பின்னர் வட-கிழக்கில் பாராளுமன்ற அரசியலுக்கு முதன்மையான இடம் இல்லாமல் போனது. விடுதலை இயக்கங்கள் முதன்மையான இடத்தினைப் பெற்றுக் கொண்டன. மலையக இளைஞர்கள் பலரும் இயக்கங்களில் இணைந்து கொண்டனர்.

வட-கிழக்கு நிலைமைகள் மலையகத்திலும் விழப்புணர்வுகளைக் கொண்டு வரத் தொடங்கின. மலையகம், மலையகத் தமிழர் என்ற எண்ணக்கருக்களும் வளர்ச்சியடையத் தொடங்கின. மலையக விடுதலையை மையமாக வைத்த தீவிரவாத இயக்கங்களும் மலையகத்தில் தோன்றின. பாராளுமன்ற அரசியலில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரசுடன் போட்டிப் போடக் கூடியளவிற்கு மலையக மக்கள் முன்னணியும் எழுச்சியடைந்தது.

1978ல் மலையக அரசியல் வரலாற்றில் மலையக மக்கள் முன்னணியின் முக்கியத்துவம் தொழிற்சங்க அரசியலை இன அரசியல் தளத்திற்கு கொண்டு வந்தமையே ஆகும். 1978ல் அறிமுகப்படுத்தப்பட்ட விகிதாசாரப் பிரதிநிதித்துவம் பாராளுமன்றத்திற்கான மலையகப் பிரதிநிதிகளையும் அதிகரிக்கச் செய்தது.

மலையக மக்களையும் பாராளுமன்ற அரசியலில் ஈடுபடச் செய்தமை, வடகிழக்குப் போராட்டத்தில் மலையக இளைஞர்களும் இணைந்து விடுவார்களோ என அஞ்சியமை போன்ற காரணங்கள் மலையக மக்களின் ஒடுக்கு முறைகளில் சிறிய நெகிழ்வுகளை ஏற்படுத்தின. இதன் காரணமாக நாடற்றவர்களுக்கு பிரஜாவுரிமை வழங்கப்பட்டது. அம்பேகமுவ, நுவரேலியா பிரதேச சபைகள் மலையக மக்களின் தலைமையில் விடப்பட்டன. கிராம சேவகர், ஆசிரியர்கள் உத்தியோகங்கள் வழங்கப்பட்டன. பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு உருவாக்கப்பட்டது.

நுவரெலியா மாவட்டம் மலையக மக்களின் கூட்டிருப்பினை வன்மையாக வெளிப்படுத்தும் மாவட்டமாக வளரத் தொடங்கியது. சிறிபாத கல்விக் கல்லூரி மலையக ஆசிரிய உருவாக்கத்திலும் பெரிய பங்கினை ஆற்றத் தொடங்கியது. ஆசிரிய சமூகம் மலையக சமூகத்தில் முக்கிய சமூக சக்தியாக மாறத் தொடங்கியது.

2000க்குப் பின்னர் மலையக அரசியலின் ஐந்தாவது கட்டம் வருகின்றது. இக்கட்டத்தில் வட-கிழக்குப் போராட்டம் அரசியல் தீர்வினை நோக்கி நகரும் தறுவாயில் இருக்கின்றது. முஸ்லீம் மக்கள் தங்கள் அடையாளத்தை நிலைநிறுத்தி இனப்பிரச்சினைத் தீர்வின் போது தங்களுக்கான தீர்வினையும் வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனால் மலையகத்தைப் பொறுத்தவரை மலையக அரசியற் தலைமைகள் இனப்பிரச்சினைத் தீர்வின்போது மலையக மக்களின் தீர்வினையும் வற்புறுத்தும் முயற்சியில் இறங்கியிருப்பதாகத் தெரியவில்லை. இது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.

இந்த விடயங்களை முன்னெடுப்பதற்கு மலையகத்தில் ஒரு எதிர்கட்சி அரசியலையும் நகர்த்துவதற்கு தயாராக இருக்க வேண்டும். அரசாங்கத்தில் இணைந்திருப்பதால் எதிர்கட்சி அரசியலை நடாத்தக் கூடாது என்றில்லை. ஏற்கனவே தொண்டமானும் முஸ்லீம் காங்கிரஸ் மறைந்த தலைவர் அஸ்ரப்பும் அவ்வாறான ஒரு அரசியலை நடத்தியிருக்கின்றனர்.

மறுபக்கத்தில் இனவாத ஒடுக்குமுறை மலையகத்தில் தற்போது புது வடிவத்தினை எடுக்கத் தொடங்கியுள்ளது. மலையகத்தின் உயிர் மையமாக இருக்கின்ற நுவரெலியா மாவட்டத்தில் மலையக மக்களின் நிலத் தொடர்ச்சியை சிதைக்கும் வகையில் மேல் கொத்மலைத் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இது இன்னோர் வகை மண்பறிப்பாகும். இது மலையக மக்களின் கூட்டிருப்பின் ஆதாரத்தையே பலவீனப்படுத்தக் கூடியது. இவ்விவகாரத்தில் மலையக மக்களின் கைகள் பலவீனமடைந்து வருவது ஆரோக்கியமான ஒன்றாக எனக்குத் தெரியவில்லை.

வட கிழக்கில் குறிப்பாக திருகோணமலை மாவட்டத்தில் இந்த நீர்ப்பாசனத் திட்டங்களினால் ஏற்பட்ட சிதைவுகளை சரி செய்ய முடியாமல் தமிழர் தாயகம் இன்றும் திணறிக் கொண்டிருக்கிறது. அந்த நிலை மலையகத்தின் உயிர் மையமாக இருக்கும் நுவரெலியா மாவட்டத்திற்கும் வந்துவிடக் கூடாது என்பதில் மலையகத் தேசிய சக்திகள் மிகவும் கவனமாக இருக்கவேண்டும். அதேவேளை மலையக மக்கள் ஐதாக இருக்கின்ற இரத்தினபுரி, களுத்துறை, மாத்தளை மாவட்டங்களில் மலையக மக்களின் இருப்புக்கான அச்சுறுத்தல்கள் தொடர்ந்துக் கொண்டேயிருக்கின்றன. நுவரேலியா மாவட்டத்தைப் பாதுகாப்பதன் மூலமே ஐதாக வாழ்கின்ற மக்களின் இருப்பினைப் பாதுகாக்க முடியும் அல்லது மாற்று நடவடிக்கை எதையாவது எடுக்க முடியும்.

இதுவரை மலையக மக்களின் வரலாற்று வளர்ச்சியைப் பார்த்தோம் இந்த வளர்ச்சிகளுக்கூடாக மலையக மக்கள் புதிய கட்டம் ஒன்றுக்கு வந்திருக்கின்றனர். தங்களுக்கான தேசிய அடையாளத்தை வரையறுப்பதும் அதன் வழி தேசிய அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கான மார்க்கங்களை நாடுவதுமே இக்கட்டத்தில் அவர்களுக்கு முன்னால் உள்ள பணிகளாகும்.

இன அரசியல் பொதுவாக மூன்று கட்டங்களினூடாக வளர்வதே வழக்கமானதாகும். இன அரசியலை உருவாக்கும் கட்டம், இன அரசியலை தேசிய அரசியலாக வளர்க்கும் கட்டம், அதிகாரத்தைப் பெற்றுக் கொள்ளும் கட்டம் என்பனவே அவ் மூன்று கட்டங்களுமாகும்.

மலையக அரசியல் தற்போது இரண்டாவது கட்டத்தில் உள்ளது. ஆனால் இரண்டாவது கட்டம் இன்னமும் பூர்த்தியாக்கப்படவில்லை. நான் ஏற்கனவே கூறியது போல தேசிய அடையாளத்தை வரையறுப்பது இக்கட்டத்தில் முக்கியமானதாகும். தேசிய அடையாளத்திற்கான கோரிக்கைகளை தெளிவாக வரையறுத்து அதனைத் தொடர்ச்சியாக முன்னெடுக்கும் போதே தேசிய அடையாளம் தெளிவாக வரையறுக்கப்படும். இதற்கான பிரதான வழி எதிர்க்கட்சி அரசியலை தொடர்ச்சியாக முன்னெடுப்பதேயாகும்.

மலையக முன்னணி சக்திகள் முதலில் தமது பிரதேசத்தில் மக்களை அறிவூட்டி அரசியல் மயப்படுத்தி ஒரு சக்தியாக மாற்றிக் கொள்ள வேண்டும். மலையக மக்களின் தொழிலாளர்கள், வர்த்தகர்கள், ஆசிரியர்கள், அரசாங்க உத்தியோகத்தர்கள், புலமையாளர்கள், கலைஞர்கள், இலக்கியவாதிகள் ஆகிய ஒவ்வொரு பிரிவினரும் தங்கள் தங்கள் தளங்களில் நின்று கொண்டு மலையகத் தேசியத்திற்கான பணிகளை முன்னெடுக்க வேண்டும்.

மலையக மக்களை ஒரு சக்தியாக உருவாக்கி கொண்டபின் துணை சக்திகளையும் நட்புச் சக்திகளையும் இணைத்துக் கொள்ள வேண்டும். மலையக மக்களுக்கு பிரதான துணை சக்தியாக இருக்கப் போகின்றவர்கள் வட-கிழக்கு மக்களே. வட - கிழக்கின் புதிய தலைமுறை மலையக மக்களை மிகவும் அக்கறையோடு நோக்குகின்றது. ஒரு தரப்பினுடைய அரசியல் அபிலாஷைகளை மற்றைய தரப்பு அங்கீகரித்து பரஸ்பர ஒத்துழைப்பினை நல்கின்ற நிலையினை உருவாக்குதல் வேண்டும். வட - கிழக்கில் நீட்சியாக இருக்கின்ற புலம் பெயர் மக்கள் மலையக மக்களின் அபிலாஷைகளை சர்வதேச மயப்படுத்தும் பணியில் பயனுள்ள பங்கினை ஆற்றமுடியும்.

இரண்டாவது துணை சக்தி தமிழக மக்கள். இவர்களுடன் உயிர்த்துடிப்பான தொடர்புகளை ஏற்படுத்த மலையக தேசிய சக்திகள் முன்வர வேண்டும். ஏற்கனவே நாடு கடத்தப்பட்டு இந்தியாவில் வாழும் மலையக வம்சாவழியினர் இது விடயத்தில் பயனுள்ள பங்கினையாற்ற முடியும்.

மூன்றாவது துணைச் சக்தி உலகெங்கும் பரந்து வாழும் இந்திய வம்சாவழித் தமிழர்கள். இன்று தென்னாபிரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், மொரிசீயஸ், பிஜித் தீவுகள் என பல இடங்களில் இந்தியா வம்சாவழித் தமிழர்கள் வாழ்கின்றனர். இதைவிட பல கல்விமான்கள் ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் வாழ்கின்றனர். அவர்களுடனும் உயிர்த் துடிப்புள்ள தொடர்புகளை பேணுவது சர்வதேச மயப்படுத்துவதற்கும், பொருளாதார உதவிகளைப் பெற்றுக் கொள்வதற்கும் உதவியாக இருக்கும்.

இவர்களை விட சிங்கள முற்போக்கு ஜனநாயக சக்திகளும், உலகெங்கும் வாழும் முற்போக்கு ஜனநாயக சக்திகளும் மலையக மக்களுக்கு நல்ல நட்பு சக்திகளாக இருப்பர்.

இவ்வாறு பரந்தளவில் வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் போதே மலையக அரசியலை காத்திரமான நிலைக்கு கொண்டு வர முடியும். இவையெல்லாவற்றிற்கும் அடித்தளமாக இருப்பது முதலில் மலையக மக்கள் தங்களை சக்தியாக உருவாக்கிக் கொள்வதாகும்.

முடிவுரை
இறுதியாக மலையக அரசியல் தொடர்பாக அடிப்படையான சில கருத்துக்களை நான் முன்வைத்திருக்கின்றேன். மலையக மக்களுக்கான அரசியல் தீர்வு எவ்வாறு இருக்க வேண்டும் என்பதனை மலையக மக்களே தீர்மானிக்க வேண்டும். ஆனால் இன ஒடுக்கு முறைக்கு உள்ளான ஒரு சமூகம் ஏதாவது ஒரு வகையில் அரச அதிகார கட்டமைப்பில் சமூகமாக பங்கு பெறாமல் அச்சமூகத்தின் அரசியல் அபிலாஷைகளைப் பெற்றுக் கொள்ள முடியாது என்பது பொதுவான உண்மையாகும். அதிகார வடிவங்களை எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை அச்சமூகங்கள் தீர்மானித்துக் கொள்ளலாம்.

மற்றைய சமூகங்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் ஒவ்வொரு சமூகமும் தமக்கான அதிகார வடிவங்களை தீர்மானித்துக் கொள்வதற்கு அவற்றிற்கு மறுக்க முடியாத உரிமை உண்டு.
எனவே அந்த உரிமை மலையக மக்களுக்கும் உண்டு என்பதை எவரும் நிராகரிக்க முடியாது.

(அ.லோரன்ஸ் எழுதிய மலையகம் - சமகால அரசியல் - அரசியல் தீர்வு என்ற நூல் வெளியீட்டு விழா கொழும்பு தமிழ் சங்கத்தில் நடைபெற்றபோது ஆற்றிய உரையின் தொகுப்பு)

வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் தொகை குறைகிறது : நுவரெலியாவில் கூடுகிறது



கடந்த வருடம் புதுப்பிக்கப்பட்ட வாக்காளர் பதிவுகளின்படி, வன்னி தேர்தல் மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொகை ஆறிலிருந்து ஐந்தாகக் குறைக்கப்பட்டிருப்பதாக வவுனியா உதவித் தேர்தல் ஆணையாளர் கே.எஸ்.கருணாநிதி தெரிவித்துள்ளார். 

2001 ஆம் ஆண்டு இருந்த வாக்காளர்களிலும் பார்க்க 2012 ஆம் ஆண்டு இந்தத் தேர்தல் மாவட்டத்தின் வாக்காளர் தொகை 2213 வாக்காளர்களினால் குறைவடைந்திருப்பதையடுத்தே இந்த நிலைமை ஏற்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மூன்று மாவட்டங்களையும் உள்ளடக்கிய வன்னி தேர்தல் மாவட்டத்தில் 2011 ஆம் ஆண்டு பதிவின்படி, 2 லட்சத்து, 21 ஆயிரத்து, 409 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டிருந்தது. 2012 ஆம் ஆண்டு பதிவுகளின்போது, இது 2 லட்சத்து, 19 ஆயிரத்து, 196 ஆகக் குறைந்துள்ளது. இதனால் இந்த மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை ஆறில் இருந்து ஐந்தாகக் குறைக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை, நுவரெலியா மாவட்டத்தில் 2012 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, முந்திய வருடத்திலும் பார்க்க வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதனால் அந்தத் தேர்தல் மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கையில் ஒன்று அதிகமாகியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருககின்றனர். 

வன்னி தேர்தல் மாவட்டத்தில் வவுனியாவில் கடந்த வருடம் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்போது வாக்காளர்களின் எண்ணிககை குறைவடைந்துள்ள அதேநேரம், மன்னார் மாவட்டத்தில் சிறு அளவில் அதிகரித்திருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது. 

வவுனியாவில் குடியிருந்த பலர், வேறு மாவட்டங்களுக்கு இடம்பெயர்ந்து சென்ற காரணத்தினால் இவ்வாறாக வாக்காளர் எண்ணிக்கை குறைவடைந்திருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.

மலையக பெண்களும் அரசியலும் - பொ. லோகேஸ்வரி



இம் மாதம் மார்ச் 8ம் திகதியானது பெண்களுக்கு என ஒதுக்கப்பட்ட தினமாக உலகம் முழுவதும் பெண்கள் தமது விடுதலைக்காகவும் ஆணாதிக்கத்திற்கு எதிராகவும் போராடிய தினமாகும் இப்போராட்டத்திற்கான வெற்றிகள் மிகக்குறைவாகவே கிடைத்துள்ளது.

ஏனெனில் வளர்ந்த நாடுகளும் சரி வளர்முக நாடுகளும் சரி பெண்கள் தீர்மானம் எடுக்கும் இடத்திற்கு வருவதை அச்சமூகங்கள் தடுக்கின்றனர் அல்லது தடையாக இருக்கின்றனர் என்றே கூறவேண்டும். இது இவ்வாறாக இருக்க எமது நாட்டுப் பெண்களை சற்று நோக்குவோம்.

இன்றும் பெண் செயற்பாட்டாளர்கள் இலங்கையில் அரசியலில் 30மூ இட ஓதுக்கீடு தேவை என்று அல்லது சட்டமாக்கப்பட வேண்டுமென்று குரல் கொடுத்து வருகின்றனர். ஏனெனில் எமது அண்மைய நாடுகளான இந்தியா, நேபாலம் வங்காளதேசம், பாக்கிஸ்தான் போன்ற நாடுகளில் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவம் சட்டமாக்கப்பட்டுள்ளது. இவையெல்லா நாடுகளும் இலங்கையோடு ஓப்பிடுகையில் கல்வி அறிவில் மிகவும் பின்தங்கிய நாடுகளாக காணப்பகின்றன. ஆனால் அங்கு பெண்களுக்கான சமத்துவம், அங்கீகாரம் கௌரவம் வழங்கப்பட்டுள்ளது. அதனால் அந்த நாட்டு பெண்கள் தமக்கு அரசியலில் 50மூ ஒதுக்கீடு தேவையென குரல் கொடுத்து வருகின்றனர். 

இலங்கை கல்வியறிவில் 93மூ காணப்பட்டாலும் பெண்களுக்கான அரசில் பிரதிநிதித்துவத்துக்கான ஓதுக்கிடு இன்று வரையுமே எட்டாக்கணியாக காணப்படுகின்றது. ஆனால் இலங்கையின் பொருளாதாரத்திற்கு அல்லது மொத்த வரவு செலவு திட்டத்திற்கு வருமானத்தை இலங்கை சுதந்திர வர்த்தக வலயத்தில் தொழில் புரியும் பெண்களும், தோட்டத் தொழிலாள பெண்களும், புலம் பெயர் தொழிலாள பெண்களுமே 50மூற்கும் அதிகமான உழைப்பினை அல்லது வருமானத்தினை வழங்குகின்றனர். ஆனால் இலங்கை வரவு செலவு திட்டத்தில் இப்பெண்களின் அபிவிருத்திக்கான ஒதுக்கீடு என்ன? இவ்வாறு உழைக்கும் பெண்களின் வருமானத்திலேயே அரசியலில் ஈடுப்பட்டுள்ள அனைத்து ஆண் அரசியல்வாதிகளும் அரச அதிகாரிகளும் சம்பளம் பெறுகின்றனர். பெண்கள் உழைப்பில் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் இவர்களுக்கு தன்மானம் இருக்கின்றதா? இல்லையா? என எண்ணத்தோன்றுகின்றது.   

இவ்வாறான பிரச்சினைகள் இருப்பினும் சில பெண்கள் அரசியலில் ஈடுப்படுகின்றனர். அவர்களுக்கு ஆணாதிக்க தலைமைகளினால் ஏற்படும் தடைகளும் பிரச்சினைகளும் எண்ணிலடக்காதவை. அரசியல் கட்சிகளில் பெண்கள் எவ்வளவு உழைத்தாலும் அக்கட்சிகளின் இரண்டாம் நிலைப் பதவிகளுக்கு கூட எந்த அரசியல் கட்சியிலும் வழங்கப்படவில்லை. இதற்கு எமது சமூகத்தில் பெண்கள் சம்பந்தமான பால் நிலை சார் மனபாங்கும், பிரதிநிதித்துவ அரசியலில் ஈடுப்படுவதற்கான, தடைகள் இலங்கை அரசியல் ஆணாதிக்க அதிகார தன்மைகொண்ட கட்சி அமைப்புக்கள் போன்ற பிரதான விடயங்கள் பெண்கள் அரசியலில் சுதந்திரமாக ஈடுபடுவதற்கோ தலைமைத்துவ பொறுப்பை ஏற்பதற்கோ தடைக்கற்களாக காலம் காலமாக தொடர்கின்றன. 

இனி நமது பார்வையை மலையக பக்கம் திருப்பினால் தேசிய அரசியலிலும் சரி பிரதேச அரசியலிலும் சரி 'இராமன் ஆண்டால் என்ன? இராவணன் ஆண்டால் என்ன?' என்ற போக்கோடு மக்கள் காணப்படுகின்றனர். மலையகத்தில் அரசியல் தொழிற்சங்களில் பெண் தலைமைத்துவமோ அல்லது அரசியல் கட்சிகளில் பெண் வேட்பாளர்களின் பிரதிநிதித்துவமோ மிகக் குறைவாகவே காணப்படுகின்றது. இவர்கள் அரசியலில் ஈடுபடுவதற்கு அல்லது தலைமைத்துவத்தை பெற்றுக்கொள்ளவோ அவர்கள் வாழும் சூழல், கலாசாரம், ஆணாதிக்கம், வாழ்வாதாரம் போன்ற அனைத்துமே பெண்கள் அரசியலில் ஈடுபடுவதற்கு மட்டுமன்றி அதைப்பற்றி சிந்திப்பதற்கு சுதந்திரமோ உரிமையோ அற்று காணப்படுகின்றனர்.

ஒரு நாட்டில் மக்களுக்கான அடிப்படை உரிமை அரசியல் உரிமையாகும். அதில் பிரதானமானது வாக்குரிமையாகும். ஆனால் மலையக மக்களைப் பொறுத்தவரை ஆயிரக்கணக்கானவர்களுக்கு அவ்வுரிமையை அனுபவிக்ககூடிய சந்தர்ப்பம் அல்லது சூழ்நிலை இல்லாதவர்களாக காணப்படுகின்றனர். தோட்டத் தலைவர்கள் யாருக்கு வாக்களிக் சொல்கின்றார்களோ அவர்களுக்கே பெண்கள் வாக்களிக்க வேண்டும். பெண்கள் தாம் விரும்பும் ஒருவரை தெரிவுசெய்வதற்கு அல்லது வாக்களிப்பதற்கு ஆணாதிக்க அரசியல் கலாசார கட்டமைப்பு தடைவிதிக்கின்றது. மலையக பெண்கள், அரசியல் என்பது ஆண்களுக்குரியது என்ற மரபு வழி மனபாங்குடனேயே இன்றும் காணப்படுகின்றனர். மற்றும் அடிப்படை ஆவணங்கள் பிரச்சினையால் வாக்குபதிவு, தேர்தல் நடக்கும் போது தம்மை உறுதிப்படுத்துவதற்கான அடையாள அட்டை அல்லது வேறு ஆவணங்கள் இன்மையும் அவர்கள் வாக்களிப்பதற்கும் அல்லது அவர்களது வாக்குரிமை மீறப்படுவதற்கும் சந்தர்ப்பங்களாக அமைகின்றது. இவ்விடயத்தில் மலையக அரசியல்வாதிளோ, தொழிற்சங்கவாதிகளோ அக்கறைக் காட்டவதாக தென்ப்படவில்லை.

மலையக தோட்டத் தொழிலாளர்களிலும் 50மூற்கு மேற்பட்டவர்கள் பெண்களாக இருக்கின்றனர். வாக்காளர் தொகையிலும் 50மூற்கு மேற்பட்டவர்கள் பெண்களே. மேலதிகமான பெண்களின் வாக்குகளைப் பெற்று அரசியலுக்கு வரும் அரசியல்வாதிகள் தமக்கு வாக்களித்த பெண்களின் அபிவிருத்திபற்றியோ உரிமைகள் பற்றியோ எவ்வித கரிசனையும் காட்டுவதில்லை. 

பெற்றோர்களேஇ மலையகப் பெண்களின் அரசியல் தலைமைத்துவத்திற்கு தடையாக விளங்குகின்றனர். பெற்றோர்கள் தமது குழந்தைகளை வளர்க்கும் போது ஆண் குழந்தைகளுக்கு வழங்கும் சுதந்திரங்களை பெண்களுக்கு வழங்குவதில்லை. மரபுகள், மூடநம்பிக்கைகள் என்பவற்றை காரணம் காட்டி ஒரு பெட்டிப்பாம்மபாகவே வளர்த்தெடுக்கின்றனர். காலங்காலமாக திருமணமான பெண்கள் தனது கணவனுக்கு அடிபணிபவர்களாக இருப்பதற்கு பழக்கியுள்ளனர்.  இத்தகைய நிலையில் இருந்து விடுப்பட்டு மலையக பெண்கள் அரசியல் தலைமைத்துவத்தை பெற வேண்டும் எனில் ஒவ்வொரு பெற்றோர்களும் சிறு வயதுமுதற்கொண்டு தமது பெண்குழந்தைகளை நல்ல தலைமத்துவப்பண்புடையவர்களாக, கல்வியறிவுடையவர்களாக, துணிவுடையவர்களாக மற்றும் தன்னைத்தானே பாதுகாத்துக்கொள்ளும் திறனுடையவர்களாக வளர்க்க வேண்டும்.

மலையக் பெண்கள் வாய்மூடி மௌனிகளாக இருந்தது போதும். மூடநம்பிக்கைகளை தாழ்வு மனபான்மையை தகர்த்தெரிந்து மலையகத்தில் ஆற்றல் உள்ள பெண்கள் இருக்கின்றனர் என்பதை நாம் ஏனைய சமூகத்திற்கும் மலையக அரசியல்வாதிகளுக்கம் உணர்த்த வேண்டும். நமது உழைப்பில் தம்மை வளர்த்துக் கொண்டிருக்கும் ஆணாதிக்க அரசியல் போக்கை முறியடிக்க வேண்டும். பெண்கள் அரசியலுக்கு வந்தால் மக்கள் மயப்படுத்தப்பட்ட அரசியலை ஏற்படுத்துவதற்கும் மலையக தோட்ட தொழில் செய்யும் பெண்களுக்கு உழைப்பிற்கேற்ற ஊதியம் பெறவும் அவர்களின் சுகாதாரம் தேசிய நீரோட்டத்துடன் இணைக்கப்படுவதற்கு சக்தியும், ஆற்றலும், அறிவும், ஆர்வமும் நல்ல தலைமைத்துவ பண்புகளும் இருக்கின்றது என்பதை எடுத்துக்காட்ட வேண்டும். 

ஏனெனில் மலையகம் இன்று மாலுமி இல்லாத கப்பல் போன்று இருக்கின்றது. அரசியல் கட்சிகளும் தொழிற்சங்கங்களும் எண்ணிலடங்காத அளவிற்கு உருவாகிக்கொண்டிருக்கின்றன. ஆனால் இவற்றுக்கிடையில் பிரிவுகளும் பிரச்சினைகளும் யார் பெரியவர் என்ற ஆணவமும் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கின்றன. தமக்கு வாக்களித்த மக்களை நட்டாற்றில் விட்டு தாம் சந்தர்ப்பவாத அரசியலுக்கும் பணத்திற்கும் விலை போய்க்கொண்டிருக்கின்றனர். எனவே திராணிபிரக்ஞை உள்ள தலைமைத்துவத்தை உருவாக்கவதற்கும் மலையக பெண்களின் வாக்கு பெண்களுக்கே என்ற தூரநோக்கோடு செயற்பட ஒவ்வொரு பெண்ணும் சிந்திக்க வேண்டும்.

பெண்கள் அரசியலில் தலைமைத்துவத்தினை பெறுவதென்பது இலகுவான ஒரு விடயயம் அல்ல. அதனைப் படிபடியாயகவே ஏற்படுத்த வேண்டும். முதலில் குடும்பத்தில் பெண்கள் தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டும். தான் சார்ந்த சமூகத்தில் தலைமைத்துவ பண்புடையயவர்களாக மாற வேண்டும். பின்னர் நாட்டின் அரசியலில் தலைமைத்துவத்தினை பெற்றுக்கொள்ள வேண்டும். இதற்கு மலையகப் பெண்கள் பல கடமைப்பொறுப்புக்களளை செய்ய வேண்டியுள்ளது. அவையாவன,

  • பெண்கள் பல்வேறு துறைசார் கல்வியில் தேர்ச்சி பெற வேண்டும்.
  • சுயமாகவே தலைமைத்துவப்பண்பை, ஆளுமையை தங்களுக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
  • பெண்களுக்கு ஒரு விடயத்தை சிறப்பாக செய்ய முடியும் என்பதை பல்வேறு துறைகளிலும் நிரூபித்துக் காட்ட வேண்டும். 
  • தீர்மானம் எடுக்கும் சக்தியை வளர்க்க வேண்டும். 
  • எதிர்காலத்தில் மலையகப் பெண்கள் யாருடைய தலையீட்டினையும் கவனத்திற் கொள்ளாது சுயயமாக சிந்தித்து தேர்தல்களில் வாக்களிக்க வேண்டும்.
  • வாக்களிப்பதோடு மாத்திரம் நின்றுவிடாமல் பெண்கள் வேட்பாளர்களாகவும் போட்டியிடுவதற்கு முன்வரவேண்டும்.
  • தேர்தல் களத்தில் தமது கொள்கை பிரசாரங்களை அச்சமின்றி வெளியிடுவதற்கு முன்வர வேண்டும்.

இவ்வாறு மலையகப் பெண்கள் அரசியல் தலைமைத்துவத்தினைப் பெற்றுக்கொள்வதற்கு பெற்றோர்களும் அவர்கள் சார்ந்த சமூகமும் வழிசமைத்துக் கொடுக்க வெண்டும். அதற்கு ஆண்கள் சமூதாயம் சரியான அங்கிகாரத்தினை வழங்க வேண்டும்.

பதுளையில் லெனின் மதிவானனின் ஊற்றுக்களும் ஓட்டங்களும் வெளியீடு



பதுளை மாவட்ட கலை இலக்கிய வட்டத்தின் ஏற்பாட்டில் ஈழத்து இலக்கிய ஆய்வாளரும் விமர்சகருமான லெனின் மதிவானம் அவர்கள் எழுதிய ´ஊற்றுக்களும் ஓட்டங்களும்´ எனும் நூலின் அறிமுக விழா எதிர்வரும் மார்ச் 9 ஆம் திகதி சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு பதுளை சரஸ்வதி தேசிய கல்லூரியின் பிரதான மண்டபத்தில் அமைப்பின் தலைவர் வை.தேவராஜாவின் தலைமையில் இடம்பெறவுள்ளது. 

இந்நூலின் அறிமுகவுரையை நூலின் பதிப்பாசிரியர் பாக்யா பதிப்பகத்தின் நிறுவுனர் மல்லியப்புசந்தி திலகர் அவர்களும், நூல் நயவுரையை எஸ்.சேதுரட்ணம் அவர்களும், கருத்துரையை கலை இலக்கிய வட்டத்தின் உப தலைவர் கே.திருலோகசங்கர் அவர்களும் நிகழ்த்தவுள்ளனர். 

இவ்வறிமுக நிகழ்வில் பதுளையிலுள்ள இலக்கிய ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள், வர்த்தக பிரமுகர்கள், பாடசாலைகளின் அதிபர்கள் ஆசிரியர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர். 

இருபது இலக்கிய திறனாய்வு கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுப்பாக வந்திருக்கும் ´ஊற்றுக்ககளும் ஓட்டங்களும்´ (மீனாட்சியம்மாள் முதல் மார்க்ஸிம் கார்க்கி வரை) உயர்தரத்தில் தமிழ் மொழியை ஒரு பாடமாக கற்கும் மாணவர்களுக்கு மிகவம் பயனுள்ளது. அத்துடன் பல்வேறு இலக்கிய ஆளுமைகள் பற்றிய பதிவாகவும் இந்த நூல் அமைந்துள்ளது. 

துரைவி பதிப்பகம் 2012ம் ஆண்டு முதல் அதன் நிறுவுனர் அமரர் துரை.விஸ்வநாதன் நினைவு விருதினை அறிமுகப்படுத்தியுள்ளது. 2012 ஆம் ஆண்டுக்கான சிறந்த ஆய்வு நூலுக்கான துரைவி விருதினை லெனின் மதிவானம் எழுதிய ஊற்றுக்களும் ஓட்டங்களும் பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தின் பதுளை கிளை அங்குரார்ப்பணம்



மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தின் பதுளை கிளை அங்குரார்ப்பணம் ஞாயிற்றுக்கிழமை, 03 மார்ச் 2013 15:29 0 COMMENTS -எம்.எப்.எம். தாஹிர் மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தின் பதுளை கிளை அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று சனிக்கிழமை மாலை பதுளையில் இடம்பெற்றது. இலக்கிய எழுத்தாளர் இரா.சடகோபன் தலைமையில்; இடம்பெற்ற கிளை அங்குரார்;பன நிகழ்வில் இலக்கிய ஆர்வளரும் சட்டதரணியுமான சேனாதிராஜா மற்றும் பதுளை மாவட்ட இளம் இலக்கிய ஆர்வளர்களும் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் என பலரும் கலந்துகொண்டனர். இதன்போது மன்றத்தின் பதுளை கிளை புதிய நிர்வாக குழு உறுப்பினர்கள் தெரிவு இடம்பெற்றதோடு எதிர்கால பதுளை மாவாட்ட இலக்கிய செயற்பாடுகள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.



தேசிய அடையாளமின்றி அரசியல் விபரீதங்களை சந்திக்கும் “இந்தியத் தமிழர்கள்” - மு.சிவலிங்கம்



இந்திய வம்சாவளித் தமிழ் மக்களின் 2011 ம் ஆண்டு குடிசனத் தொகை மதிப்பீடு பற்றி விமர்சிக்கப்பட்ட இரண்டு ஆய்வு கட்டுரைகளை கடந்த சில வாரங்களில் வெளியான தேசிய பத்திரிக்கைகளில் வாசிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. அவை பற்றிய எனது கருத்துக்கள் சிலவற்றைப் பகிர்ந்து கொள்வதற்கு இக் கட்டுரையை எழுதுகின்றேன்.

ஓன்று, ஜனவரி மாதம் 13 ம் திகதி வெளிவந்த “சன்டே லீடர் பத்திரிக்கையில் “Up  country Tamils,  The Vanishing people?” என்ற கட்டுரையாகும்.   இந்த கட்டுரை   புது டெல்லியில் செயற்படும்   Observer Research Foundation   (ORF)  என்ற நிறுவனத்தின் பணிப்பாளர் என்.சத்தியமூர்த்தி அவர்களால் எழுதப்பட்டுள்ளது.

இக் கட்டுரையைப் போன்றே 20 ம் திகதி ஜனவரி மாதம் வெளிவந்த ஞாயிறு வீரகேசரியில்  கலாநிதி எஸ்.சந்திரபோஸ் அவர்கள் எழுதிய “மக்கள் தொகை கணிப்பீடும், மறைந்து செல்லும் இந்தியத் தமிழர்களும்” என்ற கட்டுரையும் பல முக்கியமான தகவல்களை  எடுத்துக் காட்டியுள்ளன. 

குடிசனத் தொகை கணிப்பீட்டாளர்கள் இனவாரியாகத் தகவல் சேகரித்ததில், எந்த முறையைக் கையாண்டுள்ளார்கள்  என்பது முக்கிய அவதானத்துக்குரிய விடயமாகும்.  இந்தக் கணிப்பீட்டை முற்று முழுதாக ஏற்றுக் கொள்ளாத முதல் கட்டுரையாளர் புள்ளி விபரங்கள்  முற்றிலும் பொய்யானவை  என்று ஆதங்கப்பட்டு எழுதியுள்ளார். 2011 ம் ஆண்டுக்குர்pய புள்ளி விபரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. அவை  எவ்வாறு தகவல்கள் தந்துள்ளன என்பதை கவனிப்போம்.

1981 ம் ஆண்டிலிருந்து 2011 ம் ஆண்டு வரையிளான  30 ஆண்டுகளுக்குரிய விபரக் கோவையாக இந்தத் தகவல்களை நாம் அறிகின்றோம்.. இந்த முப்பதாண்டு கால வளர்ச்சியில் இலங்கையின் மொத்த சனத் தொகை 20,263723 (இரண்டு கோடியே இரண்டு லட்சத்து அறுபத்து மூவாயிரத்து எழுநூற்று இருபத்து மூன்று)  என காட்டப்பட்டுள்ளது.

இத் தொகையில் இன வாரியாகக் காட்டப்பட்டுள்ள விபரங்களை அறியும் போது, சிங்கள மக்களின் குடிசனத் தொகை  1981 ம் ஆண்டில்  10,979400 (ஒரு கோடியே ஒன்பது லட்சத்து எழுபத்தொன்பதாயிரத்து நானூறு) ஆகவும் 2011 ம் ஆண்டில்  15இ173800  (ஒரு கோடியே ஐம்பத்தொரு லட்சத்து எழுபத்து மூவாயிரத்து எண்ணூறு)    ஆக வளர்ச்சியடைந்துள்ளதாகக் காட்டப்பட்டுள்ளது.   அதன்படி கடந்த முப்பதாண்டு காலப் பகுதியில் 4,194400 (நாற்பத்தொரு லட்சத்து தொண்ணூற்று நாலாயிரத்து நாணூறு)  பேர் இயற்கை வளர்ச்சியை கொண்டுள்ளனர் எனக் காட்டப்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழர் வளர்ச்சியை 1981 ம் ஆண்டு 18,86900 (பதினெட்டு லட்சத்து என்பத்தாறாயிரத்து தொள்ளாயிரம்) ஆகவும், 2011 ம் ஆண்டு 22,70900 (இருபத்திரண்டு லட்சத்து எழுபதாயிரத்துத் தொள்ளாயிரம்)  என வளர்ச்சிப் பெற்றுள்ளதாகக் காட்டப்பட்டுள்ளது.  

அடுத்து முஸ்லிம் மக்களின் குடிசனத் தொகையைக் காட்டும் போது, 1981 ம் ஆண்டு 10,46900 (பத்து லட்சத்து நாற்பத்தாறாயிரத்து தொள்ளாயிரம்)  எனவும்  2011 ம் ஆண்டில் 18,69800 ( பதினெட்டு லட்சத்து அறுபத்தொன்பதாயிரத்து எண்ணூறு)  என்றும், அதன்படி 8,22900       (எட்டு லட்சத்து இருபத்திரண்டாயிரத்துத் தொள்ளாயிரம்)  பேர் இயற்கை வளர்ச்சி கொண்டுள்ளனர் எனக் காட்டப்பட்டுள்ளது. 

அடுத்து, இந்திய வம்சாவளி தமிழர்கள் 1981 ம் ஆண்டு 8,18700 (எட்டு லட்சத்து பதினெட்டாயிரத்து எழுநூறு) பேர் என்றும்  2011 ம் ஆண்டில்  8,42300 (எட்டு லட்சத்து நாற்பத்திரண்டாயிரத்து முந்நூறு)  என்றும், அதன்படி  23,600 (இருபத்து மூவாயிரத்து அறுநூறு) பேர்கள் மட்டுமே கடந்த முப்பதாண்டுகளில்  இயற்கை வளர்ச்சி பெற்றுள்ளனர்  என்று காட்டப்பட்டுள்ளது. இந்தக் கணிப்பீட்டை எவ்வாறு ஏற்றுக் கொள்வது..?  இக் கணிப்பீட்டின்படி முப்பதாண்டு கால இயற்கை வளர்ச்சியில் 2.8மூ வீதமாகவும், மொத்த சனத் தொகையில் 4.2மூ ஆகவும் குறைக்கப்பட்டிருப்பதைக் காண முடிகிறது.

இலங்கை வாழ் இந்திய வம்சாவளி தமிழர்களின் கடந்த கால வளர்ச்சி வீதத்தை கீழே அவதானிக்கலாம். :

1945 ம் வருடம் 16%
1953 ம் வருடம் 12%
1963 – 1983 வரை 10.6% ,  9.4% ,  5.6%

இந்த வளர்ச்சியினை நோக்கும் அதே வேளை, 1953 ம் ஆண்டில் இந்திய வம்சாவளித் தமிழர்கள் இலங்கைத் தமிழர்களைவிட குடிசனத் தொகையில் அதிகமாகவிருந்தனர்  என்பதையும் கருத்திற்கொள்ள வேண்டியுள்ளது.

2011 ம் ஆண்டு குடிசனக் கணக்கீட்டின்படி கடந்த முப்பதாண்டு கால வளர்ச்சியாக இந்த “23,600 பேர்”; எவ்வாறு சேகரிக்கப்பட்டனர் என்பது வியப்புக்குரிய கேள்வியாகும். கடந்த முப்பது ஆண்டுகளில் நடந்த யுத்தத்தின் மூலம் பல ஆயிரக்கணக்கான வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். லட்சக்கணக்கானோர்; வெளி நாடுகளுக்குப் புலம் பெயர்ந்தனர். ஆயிரக்கணக்கானோர்  காணாமல் போயினர். அநேகமானோர் வசிப்பிடமின்றி எந்த வித தகவல்களுக்கும் அகப்படாமல் மறைந்து கிடக்கின்றனர்.  இந்த நிலைமையில்  இன்றைய கணக்கீட்டின்படி   22,70900 பேர் இருப்பதாகக் கொடுக்கப்பட்டிருக்கும்  தகவல்  ஏற்றுக் கொள்ள முடியாமல் இருக்கின்றது. இந்திய வம்சாவளித் தமிழர்கள் தங்களை இலங்கைத் தமிழர் என்று பதிவு செய்து கொண்டதன் காரணமாக, இலங்கைத் தமிழர் பட்டியலில் அவர்களது தொகை சேர்க்கப்;பட்டிருக்கலாம் என்றே நினைக்கத் தோன்றுகின்றது. இல்லையெனில் ஏறக்குறைய பதினைந்து லட்சம் இந்திய வம்சாவளித் தமிழர்களுள் ஏழு லட்சம் பேர் எங்கே மறைந்தனர் என்ற அதிர்ச்சிக்குரிய கேள்விக்கு விடை தேட வேண்டிய நிலைமையும் ஏற்பட்டிருக்கின்றது.

இந்த குழப்ப நிலைக்குக் காரணம், மலையகத் தமிழர் என்ற தேசிய அடையாளத்தையும், இந்திய வம்சாவளி என்ற அடையாளத்தையும், இலங்கைத் தமிழர் என்ற அடையாளத்தையும் மூன்று வௌ;வேறு நிலைப்பாட்டில் வைத்து இந்த சமூகத்தினர் தங்களை குழப்பிக் கொண்டிருப்பதேயாகும்..! இருநூறு ஆண்டுகளாகியும் தங்களது தேசிய அடையாளத்தை நிலைநாட்டிக்கொள்ள முடியாத இம் மக்களின் அரசியல் அறியாமை விசனத்துக்குரியதாகும்.

இச் சமூகத்தினர் பெருந் தோட்டத் தொழிலாளர்களாகவும், தலை நகரில் குடியேறியுள்ள வர்த்தக சமூகத்தினராகவும், ஆரம்ப காலம் முதல் கடை சிப்பந்திகளாகவும் வியாபாரத் தளங்களை அண்டியுள்ள ஊழியர்களாகவும், நகரத் தொழிலாளர்களாகவும் , பல துறைகளில்  தங்களை நிலைநாட்டிக் கொண்டவர்கள், தங்கள் விருப்பத்துக்கேற்ற தேசிய அடையாளங்களை அவ்வப்போது காட்டி வருகின்றனர். இவர்களது நிலைப்பாட்டில் எந்தவொரு அரசியல் சிந்தனை இல்லாமையும் இந்த நிலைமைக்கு காரணமாகும்.
கலாநிதி எஸ்.சந்திரபோஸ் அவர்கள் தனது கட்டுரையில் குறிப்பிட்டிருப்பது போன்று இந்தியத் தமிழர்கள் என்றதும் அவர்கள் பெருந்தோட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்ற எண்ணம் இவர்கள் மத்தியில் நிலவி வருகின்றது. பெருந் தோட்டங்களைத் தவிர்ந்து ஏனைய பிரதேசங்களில் வாழ்கின்றவர்கள் தங்களை இலங்கைத் தமிழர் என்று அடையாளம் காட்டிக் கொள்ள விரும்புகின்றனர்.

கொழும்பைப் போன்ற தலை நகரங்களில் வாழும் வர்த்தக சமூகத்தினர் இந்தியாவிலும் சொத்துரிமைகள் கொண்டு  வியாபாரத் தொடர்புகளும்  வைத்துள்ளவர்கள் தங்களை இந்திய வம்சாவளி தமிழர்கள் என்று கூறிக்கொள்ள விரும்புகின்றனர். கோபியோ (Gopio) போன்ற ஸ்தாபனத்திலும் இவர்கள் நெருக்கமான உறுப்பினர்களாகவிருப்பதையும் நாம் அவதானிக்க முடிகின்றது.  இவர்களைத் தவிர்ந்த ஏனைய நகர்ப்புறங்களில்  குறிப்பாக கொழும்பு, நீர் கொழும்பு, புத்தளம், சிலாபம், மன்னார் போன்ற பிரதேசங்களில் வாழ்கின்ற இந்திய வம்சாவளியினர் தங்களை இலங்கைத் தமிழர்கள் என்று காட்டிக் கொள்ள விரும்புகின்றனர்.
இந்த இரு சாரார்களும் எந்த வித காரணத்தையும் முன்னிட்டு மலையகத் தமிழர் என்ற தேசிய அடையாளத்தின் கீழ் தங்களை இணைத்துக் கொள்ள விரும்புவதில்லை. மலையகத் தமிழர் என்ற அடையாளம் பெருந் தோட்ட மக்களையே சார்ந்தது என்ற அபிப்பிராயத்தில் இருந்து வருகின்றனர் .பெருந் தோட்ட மக்களோ இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னா,; தாங்கள் முகங் கொடுத்த அரசியல் பிரச்சினைகளை படிப்பினையாகக்கொண்டு, தங்களை மேலும் இந்த நாட்டில் “இந்தியத்  தமிழர்”; என்ற அடைமொழியோடு அந்நியப்படுத்திக் கொண்டு வாழ விரும்ப வில்லை. 

இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேலாக  இந்த நாட்டில் வாழ்ந்துக் கொண்டு,  “இந்திய” என்ற இன்னொரு நாட்டின் பெயரை அடைமொழியாக  இணைத்துக் கொள்வதன் மூலம், தேசிய அந்தஸ்தை பெற முடியாது என்பதில் தெளிவாக இருந்து வருகின்றனர்.   சுதந்திரத்துக்குப் பின் இன்று வரை  65 ஆண்டுகளாக மலையகத் தமிழர் என்ற  தேசிய அடையாளத்தை தேசிய , சர்வதேச மட்டத்துக்கு கொண்டு சென்றுள்ளனர். சர்வதேச சமூகமும் மலையகத் தமிழர் ஒரு தனியான  தேசிய சிறுபான்மை இனம் என்பதை அங்கீகரித்துள்ளன.

இந்த நிலைப்பாட்டுக்கான சான்றுகளை  இணைய தளங்களில் பரவலாக நாம் கண்டு கொள்ளலாம். மலையகத்  தொழிற்சங்க, அரசியல் தலைமைகளும், அரச சார்பற்ற சமூக நிறுவனங்களும், மலையகம் வாழ் அனைத்து சமூகப் பிரிவினர்களும் இந்த அடையாளத்தையே தங்களது தேசிய இன அடையாளமாக ஏற்றுக் கொண்டு வருகின்றன. களுத்துறை, மத்துகம, காலி, தெனியாய போன்ற பிரதேசங்களில் வாழ்கின்ற பெருந்தோட்ட மக்களும் இந்த நிலைப்பாட்டினையே கொண்டுள்ளனர்.

அரசியலில் நேரடியாகப் பங்குகொண்டு, இரண்டாவது தேசிய சிறுபான்மை இனமாக இருந்து, பின்னர் மூன்றாவது நிலைக்குத் தள்ளப்பட்டு, இன்று நான்காவது தேசிய சிறுபான்மை இனமாக வீழ்த்தபட்டிருந்தாலும,; மலையகத் தமிழர் என்ற அடையாளம் நிரந்தரமாக்கப்பட்டிருப்பதை  நாம் எற்றுக் கொள்ள வேண்டும்.

ஆகையினால் மலையக மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள்  “இந்தியத் தமிழர்”; என்ற அடையாளத்துக்குப் பதிலாக , “மலையகத் தமிழர்” என்ற தேசிய அடையாளத்தை  கொண்டு வரும் ஒரு திருத்தப் பிரேரணையை நாடாளு மன்றத்தில் முன் வைக்க வேண்டும். இந்த தேசிய அடையாளத்தின் கீழ் தங்களையும் இணைத்துக் கொள்வதற்கு, நாட்டில் பல்வேறு பகுதிகளில் வாழும் இந்திய வம்சாவளித் தமிழர்கள் முன்வர வேண்டும் என்ற அரசியல் விழிப்புணர்வை அவர்களிடம் உருவாக்க வேண்டும். இந்திய வம்சாவளி தமிழர்களில்  பெரும்பான்மையினராக வாழ்ந்து வரும் மலையகத் தமிழரின் அரசியல் நிழலில் அண்டி வாழ வேண்டிய கட்டாய நிலைமை எதிர் காலத்தில் இவர்களுக்கு ஏற்படும் என்ற உண்மையையும் உணர்த்த வேண்டும்.

இந்த இன அடையாளத்தின் மூலம்  தேசிய  அரசியலிலும், சர்வ தேசிய அரசியலிலும் நமது உண்மையான குடிசனத் தொகை மதிப்பீட்டை காட்டிக் கொள்ள முடியும். என்றும் இல்லாதவாறு தேசிய இனவாதம் கூர்மையடைந்து வருவதையும், சிங்கள பௌத்த பேரினவாத அடிப்படைவாதிகளின்  சக்தி பல வழிகளிலும் வளர்ச்சியடைந்து வரும் பேராபத்தையும், தங்களது  தேசிய அடையாளத்தில் முரண்படும் தமிழர்கள் உணர வேண்டும்.

இந் நாட்டின் பூர்வீகக் குடிகளான வடக்குக் கிழக்கு பிரதேசங்களில் வாழுகின்ற தமிழர்கள் தங்களது பூர்வீக நிலத்தையும், வீடு, உடைமைகளையும் இழந்து, விரட்டப்பட்டு அகதி முகாம்களிலும் கூட இல்லாமல், காடுகளில்  வசிக்கும் நடைமுறை நிலைமைகளை, சொந்த காணி, நிலம், வீடு உடைமைகள் இல்லாது உதிரிகளாக சிதறி வாழும் இவர்கள், தேசிய அடையாளத்தின் முக்கியத்துவத்தை உணர வேண்டும். இல்லாது போனால்,  பர்மாவில் நடந்தது போன்று, இன்று மலேசியாவில் நடந்து கொண்டிருப்பது போன்று இந்திய எதிர்ப்புவாத நடவடிக்கைகள் எந்த சந்தர்ப்பத்திலும் இங்கே உருவாகலாம்.

குடிசன மதிப்பீட்டுத் திணைக்கள ஊழியர்களிடம் தமது தேசிய அடையாளத்தை முறையோடு வழங்கத் தவறியதால், பாதகமான முறையில் 2011 ம் ஆண்டில் எமது குடிசனத் தொகை குறைக்கப்பட்டிருப்பது, இன்றைய அரசியல் சூழலில் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தலாம். இனங்களின் சனத்தொகைக்கேற்ப பாராளுமன்றப் பிரதிநிதித்துவம், முன்னுரிமைகள், அங்கீகாரங்கள், விகிதாசாரத்துக்குரிய தொழில் வாய்ப்புகள்,  எனும் பல தேசிய நலன்களை இழக்க நேரிடலாம். இவ்வாறான  அரசியல் ரீதியிலான பாதிப்புக்கள் பற்றியே மேற் குறிப்பிட்டுள்ள கட்டுரையாளர்கள் அறியத் தந்துள்ளனர்.

இன்றைய சூழ்நிலையில் மலையகத் தமிழர்களின் இவ்வாறான சமூக, அரசியல் தகவல்களை , சமூக நலன் விரும்பிகள் பகிர்ந்து கொள்வது  மிக முக்கியமான அரசியல் பணிகளிலொன்றாகும். 


 

இணைந்திருங்கள்


Followers

Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates