Headlines News :
முகப்பு » , » மலையகத் தமிழர்களின் உரிமைகளுக்காக தமிழகம் தொடர்ந்து பேச வேண்டும்

மலையகத் தமிழர்களின் உரிமைகளுக்காக தமிழகம் தொடர்ந்து பேச வேண்டும்


கடந்த அக்டோபர் மாதம் 29 அன்று இலங்கையின் உவா மாகாணத்தில் உள்ள பதுளை மாவட்டத்தில் மிறீயபெத்த பகுதியில் கடும் மழை காரணாமாக ஏற்பட்ட நிலச்சரிவில் மலையகத் தமிழ் தோட்டத் தொழிலாளிகளும், அவர்கள் குடும்பத்தினரும் ஏறக்குறைய 200 பேர் வரை மண்ணில் புதைந்து உயிரிழந்தனர். உயிரிழந்த மக்களுக்கு நினைவஞ்சலி செலுத்தவும் மலையகத் தமிழரின் பேசப்படாத வரலாற்றையும், பறிக்கப்பட்ட உரிமைகள் குறித்து பேசவும் இளந்தமிழகம் இயக்கம் சார்பாக கடந்த 23 நவம்பர் 2014 ஞாயிற்றுகிழமை அன்று சென்னை எழும்பூரில் அரங்க்கக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இக்கூட்டத்தில் இந்தியப் பொதுவுடமைக் கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளார் தோழர் சி.மகேந்திரன், மலையக மக்களுக்கான சனநாயக இயக்கத்தின் அமைப்பாளர் தோழர் கந்தையா, ஆவணப்பட இயக்குநர் தோழர். தவமுதல்வன், இளந்தமிழகம் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் செந்தில் ஆகியோர் கலந்து கொண்டு மலையகத் தமிழர்களின் வரலாறு மற்றும் தற்கால வாழ்நிலை குறித்து கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.

1964 ஆம் ஆண்டு இலங்கை – இந்திய அரசுகள் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தியாவிற்கு கட்டாயமாக நாடு கடத்தப்பட்டு தமிழகம், கேரளம், ஆந்திரம், அந்தமான் உள்ளிட்ட மாநிலங்களில் மலையகத் தமிழர்கள் குடியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்கள் இன்றும் அடிப்படை உரிமைகளுக்கே போராடிக் கொண்டிருப்பதை ஆவணப்படுத்தி புதிய தலைமுறை தொலைக்காட்சி அலைவரிசையில் ‘ரெளத்திரம் பழகு’ நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்பட்ட ஆவணப்படம் நிகழ்ச்சி துவங்குவதற்கு முன் ஒளிபரப்பப்பட்டது.  அடுத்ததாக பதுளை மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்த மலையக மக்களுக்கு இரு நிமிடம் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

ஈழ விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டு பல மலையகத் தமிழர் குடும்பங்கள் இன்றும் மாவீரர் குடும்பங்களாக வன்னியில் வாழ்ந்து வருகின்றனர். நாங்கள் இந்த மண்ணின் மைந்தர்களாக இருந்த பொழுதிலும் உரிமைகள் பறிக்கப்பட்டு வாழும் மலையகத் தமிழர்களாகிய தங்களைப் பற்றி விவாதிக்க தமிழக அரசியல் களத்தில் எவரும் இல்லை என தோழர் தவமுதல்வன் குறிப்பிட்டார்.
தோழர். தவமுதல்வன் உரையின் ஒலிப்பதிவு

தோழர் கந்தையா பேசியபொழுது, மலையகத் தமிழர்களாகிய நாங்கள் ஒரு பொழுதும் ஈழத் தமிழர்களுக்கோ, ஈழ விடுதலைக்கோ எதிரானவர்கள் அல்ல என்றார்.

1875 முதல் 1878 வரை தமிழ்நாட்டில் ஏற்பட்ட கொடும் பஞ்சம் காரணமாக மக்கள் பலர் செத்து மடிந்ததால் இக் காலகட்டங்களில் மக்களின் வறுமையைப் பயன்படுத்தி மிக அதிகமானவர்கள் முகவர்களால் இராமேசுவர்த்தில் இருந்து மன்னார் வழியாக இலங்கைத் தீவிற்கு தேயிலைத் தோட்ட வேலைக்கு அழைத்துச் செல்லப்படனர். இவர்கள் அங்கு குதிரை இலாயம் போன்ற ‘இலயன்’ விடுகளில் குடியமர்த்தப்பட்டு தேயிலைத் தோட்டங்களில் கூலித் தொழிலாளர்களாக பணியமர்த்தப்பட்டனர்.

பல ஆண்டுகளாக தொழிலாளார்களுக்கான எந்தவித அடிப்படை உரிமைகளும் அறியாதவர்களாக இலங்கையில் வாழ்ந்த மலையகத் தமிழர்கள் மத்தியில் தஞ்சாவூரைச் சேர்ந்த நடசேன் ஐயர் அவர்கள் தென்னிலங்கையில் தங்கியிருந்து 1931 ஆம் ஆண்டு முதல் தொழிற்சங்கம் அமைத்தார். எப்படி இலங்கையில் உள்ளாட்சி மன்றங்களில் நிதி ஒதுக்கீடுகளில் தோட்டத் தொழிலாளர்களுக்கு என தனியாக நிதி ஒதுக்கப்படும் நடைமுறையில்லையோ அதே போலத் தான் தமிழகத்திலும் உள்ளாட்சி மன்றங்களில் இங்கு வாழும் தோட்டத் தொழிலாளர்களுக்கு என தனியாக நிதி ஒதுக்கீடு செய்யபப்டுவதில்லை என்றார்.

தோழர் செந்தில் அவர்கள் காலனிய காலகட்டத்தில் மக்கள் இடம்பெயர்ந்து பிற நாடுகளுக்கு சென்றதற்கான சமுகப் பொருளாதார பின்னணி குறித்தும் காலனிய ஆதிக்கத்திற்கு எதிரான போராட்ட காலகட்டத்தில் சிங்களப் தேசியம் என்பது வரலாற்றில் எப்படி பிற்போக்கான ஒரு பாத்திரத்தை வகிக்கத் தொடங்கியதும் என்றும் மலையகத் தமிழர்கள் குறித்த சிங்களர்களின் நிலைப்பாடு குறித்தும் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.
ஆங்கிலேயர் தொடக்கக் காலத்தில், குடியேற்ற நாடுகளிலிருந்து கச்சா பொருட்களை ஏற்றுமதி செய்வதும் உற்பத்தி செய்த பொருட்களை இறக்குமதி செய்வதுமாகத் தான் இருந்தனர். இங்கிலாந்தில் தொழிற்புரட்சிக்குப் பின் தொழில் துறை வேகமாக வளர்ந்தது; மூலதனமும் வளர்ந்தது. அந்த மூலதனத்தை குடியேற்ற நாடுகளில் முதலீடு செய்யத் தொடங்கினார்கள். அதுதான் இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளில் தொடங்கட்ட தேயிலை தோட்ட தொழில்துறையாகும். அதற்கு உழைப்புச் சக்தி தேவைப்பட்டது. அதன் நிமித்தம், குடியேற்ற நாடுகளில் இருந்து மக்கள் இடம்பெயர்க்கப்பட்டனர். தமிழகத்தில் நிலவிய பஞ்சம், சாதி அடிப்படையிலான ஒடுக்குமுறைகளும் மிக மோசமான வாழ்க்கை நிலைமையும் சாதி அடிப்படையில் ஒடுக்குண்ட நிலமற்ற மக்கள் இடம்பெயர்ந்தனர்.

அப்படி தமிழகத்தில் இருந்து கொண்டு செல்லப்பட்ட மக்களில் பலர் வழியிலேயே நோய்வாய்ப்பட்டு, காயமடைந்தனர். அவர்களின் குடும்பத்தினர்களே வழியில் கைவிட்டுச் சென்று பலர் வனங்களில் விலங்குகளுக்கு உணவாக மாறினர். இப்படி இலங்கைக்கு சென்றவர்களில் மூன்றில் ஒருவர் பயண வழியிலேயே உயிரிழந்தனர் என்றார்.

பொதுவாக நம் நாட்டில் சிற்றூர்களில் வாழும் மக்கள் நகரங்களில் வாழும் மக்களை விட பலவகையிலும் பின்தங்கிய வாழ்க்கை வாழ்கின்றனர். ஆனால் தோட்டப் பகுதிகளில் வாழும் மக்கள் இலங்கையில் இருந்த சிற்றூர்களை விட மிகவும் குறைவான வசதிகளுடனே வாழ்ந்து வருகின்றனர். தற்பொழுது பதுளையில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு கூட மலையகத் தமிழரின் வாழ்நிலை இன்றும் எவ்வளவு மோசமாக உள்ளது என்பதை உலகம் உணர்ந்து கொள்வதற்கான ஒரு வாய்ப்பாகத்தான் பார்க்கமுடிகின்றது என்றார்.

தொடக்க காலத்தில் சிங்கள மக்களிடம் மலையகத் தமிழர்கள் பெருமளவில் தேயிலைத் தோட்டத்தில் குடியமர்த்தப்பட்டது குறித்து வெளிப்படையான எதிர்ப்புகள் ஏற்படவில்லை. அவர்களை வெறும் கூலிகளாக மட்டும் பார்த்தனர். நிலமுடையவர்களாகவும், சிங்கள பெளத்த பெருமிதமும் சிங்களர்கள் தேயிலை தோட்ட வேலைகளுக்கு போட்டிப் போடாமல் இருந்ததற்கான காரணங்கள். முதன் முதலில் 1902 ல் சிங்கள தேசியத்தின் தந்தை என சொல்லப்படுகின்ற அனகாரிக தர்மபால தான் தென்னிந்தியாவில் இருந்து ஆயிரக்கனக்கான கீழ் சாதி மக்கள் நம் நாட்டில் குடியமர்த்தப் படுகின்றார்கள் என்ற எரிச்சலை வெளிப்படுத்துகின்றார். 1920 தொடக்கம் இலங்கையில் மலையகத் தமிழர்களின் நிலை என்னவாக இருக்க வேண்டும் என்பது குறித்த விவாதங்கள் தொடங்குகின்றது. குறிப்பாக மலையகத் தமிழர்களுக்கும் வாக்குரிமை வழங்கப்பட வேண்டும் என சோல்பரி அரசமைப்பு சீர்திருத்தத்தில் குறிப்பிட்ட பிறகு தான் மலையகத் தமிழர்களைத் தங்களின் நேரடி எதிரியாக சிங்கள அரசியல் தலைவர்கள் அடையாளப்படுத்த தொடங்கினர். இந்த காலகட்டத்தில் அங்கிருந்த பொதுவுடமை கட்சிகள் மலையகத் தமிழர்களுக்கு ஆதரவாக நின்றனர். கடைசியில் “5 ஆண்டுகளுக்கு மேல் இலங்கையில் வாழ்ந்து வருபவர்கள், இலங்கையில்தான் வாழப்போகிறோம் என்று எண்ணம் கொண்டவர்கள் எவருக்கும் வாக்குரிமை உண்டு” என்று சோல்பரி அரசமைப்புத் திருத்தம் நடைமுறைக்கு வந்தது. மலையகத் தமிழர்களுக்கு வாக்குரிமை வந்தது.

இலங்கையின் விடுதலைக்குப் பிறகு நடைபெற்ற தேர்தலில் இலங்கை நாடாளுமன்றத்தில் 11 இடங்களைக் கொண்டவர்களாக மலையகத் தமிழர்கள் இருந்தனர். இவர்கள் பெற்றிருக்கும் வலிமையான அரசியல் உரிமையும், இடதுசாரி தொழிற்சங்கங்கள் தோட்டப் பகுதிகளில் வளர்ச்சி அடைந்துவருவதும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் அன்றைய இலங்கையின் முதன்மை அமைச்சருமான டி.என் சேனநாயக்கா  ”இலங்கைக்கு அச்சுறுத்தல்” எனக் கருதினார்.


இதன் பின்னணியில் தான் 1948 ல் மலையகத் தமிழர்களின் குடியுரிமை பறிப்பும், 1949 ல் வாக்குரிமை பறிப்பும் நடைபெற்றது என்றார்.
காலனிய ஆதிக்க காலகட்டத்தில் ஏகாதிபத்திய தொழில் வளர்ச்சிக்கு இலட்சக்கணக்கான மக்கள் இடப்பெயர்ந்து செல்ல நேரிட்டது. அதன் பின் இலங்கை, இந்தியா என்ற புதிய அரசுகளின் தோற்றத்திற்குப் பின் இவ்விரண்டின் ஆளும்வர்க்கங்கள் மலையகத் தமிழர்களைக் தங்கள் விருப்பத்திற்கு ஏற்றாற் போல் கையாளுவது நடந்துவருகின்றது.

மூலதனத் திரட்சியும் அதன் இடம்பெயர்வும் உழைப்புச் சக்திகளின் இடப் பெயர்வுக்கு இட்டுச் செல்கிறது. இதை  வரலாறு நெடுகிலும் நாம் காண்கிறோம். தொழிலாளர்களின் இடப்பெயர்வுகள் குறித்து இன்றைய சூழலிலும் நாம் விவாதிக்க வேண்டிய தேவை உள்ளது.. இன்று கூட ஒரிசா, பிகார், சத்திசுகர், மேற்கு வங்காளம் உள்ளிட்ட  இந்தியாவின் பல இடங்களில் இருந்தும் தொழிலாளிகள் மூலதனங்கள் குவியும் தமிழகத்தை நோக்கி இடம்பெயருகின்றனர். இந்த சூழலில் நம் நாட்டில் உள்ள தேசிய இயக்கங்கள் எவ்வாறான அரசியல் முழக்கங்களை முன்வைத்து செல்லப்போகின்றோம் என்ற சவால் நம்முன் உள்ளது. சிங்களத் தேசியத்தின் வளர்ச்சி காலகட்டத்தில் முற்போக்காளர்கள் வெகுசிலராக இருந்த காலத்தில் செல்வாக்குபெற்ற பிற்போக்குத்தனமான இனவாத அரசியல் கடந்த நூற்றாண்டு முழுவதும் இனப்படுகொலையைப் புரிந்து வரும் சமூகமாக காட்சி அளிக்கின்றது. சிங்கள சமூகமும், ஈழத் தமிழ்ச் சமூகமும் இன்னபிற மக்களும் சில தலைமுறைகள் பின் தங்கிப் போயுள்ளவர்களாக இருப்பதற்கு சிங்கள தேசியம் சிங்களப் பேரினவாதமாக வளர்ச்சியுற்றதுதான் காரணம் என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
எதிரி சனநாயக மறுப்பாளனாக இருப்பதாலும் அநீதி இழைப்பவனாக இருப்பதனாலும்தான் சனநாயகத்திற்கான போராட்டத்தையும் நீதிக்கான போராட்டத்தையும் நாம் முன் எடுத்து வருகின்றோம். ஆனால் அதற்கு பதிலீடாக நாமும் ஒரு அநீதியை முன்வைப்பது மாற்றாகாது. உண்மையில் அதற்கு மாற்றாகத்தான் சனநாயகத்தையும், நீதியையும், மனித மான்புகளை உயர்த்தி பிடிக்ககூடியவர்களாக நாம் இருப்பதாக கூறிப்பிட்டார்.

தோழர் செந்தில் உரையின் ஒலிப்பதிவு

கடைசியாகப் பேசிய சி.பி.ஐ இன் மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் தோழர் மகேந்திரன் அவர்கள், உண்மையாக இன்று நமக்கு தெரிந்த வரலாறு என்பது ஆதிக்க சக்திகளின் வரலாறாகத் தான் உள்ளது. ஆதிக்க சக்திகளின் வரலாறு தூக்கிப்பிடிக்கபட வேண்டும் என்றால் உண்மையான வரலாறு மறக்கடிக்கப்பட வேண்டும். அப்படி உலகம் எங்கும் மறக்கடிப்பட்ட வரலாறுகளில் மிக முக்கியமான ஒன்று தான் மலையகத் தமிழர்களின் மறக்கப்பட்ட வரலாறு. அவர்களின் வரலாற்றை முழுவதுமாக தெரிந்து கொள்வதும் அவர்களுக்கான தீர்வை முன்வைத்து எடுத்துச் செல்வதும் தான் 21 ஆம் நூற்றாண்டில் நமக்கு இருக்கும் முதன்மை கடமையாகும் என்றார்.

1988 ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் பிரிவு சார்பாக இலங்கையில் நடைபெற்ற மாநாட்டிற்கு கலந்து கொள்ள சென்ற பொழுது 15 நாட்கள்வரை மலையகத்தில் தங்கியிருந்து அம்மக்களின் வாழ்க்கை நிலையையும் வரலாற்றை அறிந்து கொண்டேன் என்றார். மலையகத் தமிழர்களின் வரலாறு என்பது எவ்வளவு பெரிய மறைக்கப்பட்ட வரலாறு என்பதையும் அவர்களின் வரலாற்றை மறந்து எந்த குற்றவுணர்வும் இன்றி நாம் இங்கு தமிழகத்திலும் இந்தியாவிலும் வாழ்கின்றோம் என்ற எண்ணம் தான் என்னை தொடர்ந்து ஈழம் குறித்தும் மலையக மக்கள் குறித்தும் அறிந்து செயல்படக் காரணமாக அமைந்தது என்றார்.

தொடக்கக் காலத்தில் படிப்பறிவு இல்லாத மக்கள் தோட்டத் தொழிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டதால் மலையக மக்களின் வரலாறு, வாழ்க்கை, அவர்கள்பட்ட துன்பங்கள் என்பது தொடக்கக் காலத்தில் நாட்டுபுறப் பாடல்களில் தான் பதிவு செய்யப்பட்டுள்ளது என

”பேரான கண்டியிலே பெத்த தாயை நான் மறந்தேன்
ஊரான ஊர் இழந்தேன்

ஒற்றைப் பனை தோப்பிழந்தேன்” என சில பாடல்களையும் குறிப்பிட்டார்.
பல போராட்டங்களின் விளைவாக ‘அடிமை ஒழிப்புச் சட்டம்’ நிறைவேற்றப்பட்டு மேற்குலகில் ஒழிக்கபப்டட பிறகு முதலாளிகள் தங்களைச் சனநாயகவாதிகள் என்று காட்டிக் கொண்டாலும் காலணி நாடுகள் முழுவதும் கூலித் தொழிலாளிகளைப் பணிக்கு அமர்த்தி அவர்களை அடிமைகளைவிட மிகவும் கொடுமையாக உலகம் முழுவதும் நடத்தினர். அப்படியான நடைமுறையைத்தான் ஆங்கிலேயர்கள் மலையகத்திலும் கடைபிடித்தனர் என்றார்.

அக்காலகட்டத்தில் மலையகத் தமிழர்கள் இலங்கைக்கு செல்ல தமிழகத்தின் ஏழு கடற்கரை நகரங்களில் இருந்து தர்மக்கப்பல் இலங்கைக்கு இயக்கப்பட்டதாகவும் இவ்வாறு சென்ற கப்பல்களில் ’ஆதிஇலட்சுமி’ என்ற நீராவிக் கப்பல் 120 பயணிகளுடன் தமிழகத்திற்கும் இலங்கைக்குமான கடற்பரப்பில் மூழ்கியது என்றார். ஏறக்குறைய இதே காலகட்டத்தில் மூழ்கிய டைட்டானிக் கப்பல் குறித்த செய்தி உலகம் முழுவதும் பரவியது. ஆனால் ஆதிஇலட்சுமி கப்பல் குறித்து தமிழக மக்களுக்கே தெரியாது எனவும் ஆங்கிலேய அதிகாரி ஒருவரின் நாட்குறிப்பில் இருந்துதான் இந்த உண்மை பின்நாட்களில் எடுக்கப்பட்டது என்றார்.

மலையகத் தமிழர்களின் உரிமைகள் பறிக்கப்பட்ட விடயத்தில் தமிழகத்தில் எந்த எதிர்ப்பும் உருவாகாத பின்னணியில் நாம் அனைவருமே குற்றவாளிகள் என்று குறிப்பிட்ட அவர் தமிழக அரசு சார்பாக வெளிநாடுகளில் வாழும் தமிழகத் தமிழர்களின் உரிமைகளுக்காக தனியாக ஒரு துறை உருவாக்கப்பட்டு அதற்கென தனியமைச்சகம் அமைக்கப்பட தமிழக அரசை வலியுறுத்த வேண்டும் என்றார். மேலும் மேற்கு வங்காளம் டார்ஜிலிங்கிற்கு இருப்பது போல் மலைப்பகுதிகளில் வாழும் மக்கள் குறிப்பாக தொழிலாளிகளுக்கு என சிறப்பு உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்றார்

நன்றியுரை வழங்கிய தோழர் இளங்கோவன், நம் எதிர்காலம் குறித்து திட்டமிட நம் வரலாற்றையும் வரலாறு தந்த படிப்பினைகளையும் நாம் முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும் என்றார். தமிழர்களின் நிகழ்கால வரலாறு என்பது சோழப் பேரரசின் பெருமை பேசும் வரலாறு அல்ல என்றும் 18ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் கூலிகளாக பல நாடுகளுக்கு ஆங்கிலேயர்களால் அழைத்துச் செல்லப்பட்டு இன்று வரை உரிமைகளுக்காக போராடி வருவதும் நம் வரலாற்றில் உண்டு என்றார். அந்த வகையில் இக்கூட்டம் மலையகத் தமிழர்களின் வரலாற்றைத் தமிழக அரசியல் வெளியில் பேசுவதற்கான சிறு முயற்சி என்றும் இனி வரும் காலங்களில் இளந்தமிழகம் இயக்கம் தொடர்ந்து மலையகத் தமிழர்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் என்று கூறி நிறைவு செய்தார்.

நன்றி - விசை
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates