“பிள்ளையான் என்னை கொல்ல விரட்டிக்கொண்டு வந்தார்.... தமிழ் தேசிய முன்னணி மூலம் எனக்கு கொலை அச்சுறுத்தல் இருக்கிறது”
இப்படி கூறியிருப்பவர் அம்பிடியே சுமனரதன தேரோ என்கிற பௌத்த பிக்கு. இவர் சமீப காலமாக சிங்கள ஊடகங்களில் ஒரு சிங்கள ஹீரோவாக ஆக்கப்பட்டுள்ளார்.
கடந்த 19 அன்று மட்டகளப்பில் ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்திற்காக ஜனாதிபதி மகிந்த சென்றிருந்தபோது சுமனரதன தேரோ சிங்களவர்களை அழைத்துக் கொண்டு சென்று கூட்டம் நடந்த இடத்துக்கு வெளியில் பெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தினார். அந்த ஆர்ப்பாட்டத்தை கலைக்க போலீசார் எடுத்த முயற்சி இறுதியில் கைகலப்பில் முடிந்தது. ஆர்ப்பாட்டாத்தில் ஈடுபட்ட ஒருவரை கட்டுபடுத்த எடுத்த முயற்சியில் அவரது உள்ளாடைகள் களைந்தது. இவை அனைத்தையும் வீடியோ எடுக்கும்படி கத்திக்கொண்டு நாளா திசைகளிலும் சுமனரதன தேரர் ஓடுகின்ற காணொளி தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தின் பதாகைகளில் சில இப்படி இருந்தன.
- “கூட்டமைப்பின் மரண அச்சுறுத்தலுக்கு பயந்தா நீங்களும் அமைதி காக்கின்றீர்கள்”
- “வாக்குரிமை இல்லை, நிலவுரிமை இல்லை! சிங்களவர்கள் நாங்கள் கள்ளத்தோணிகளா”
- “நாட்டை காப்பாற்றிய ஜனாதிபதியே உங்களுக்கு வாக்களிக்க எங்களுக்கு சந்தர்ப்பம் கொடுங்கள்”
இந்த சம்பவம் குறித்து அவர் 21ஆம் திகதி நடத்திய பத்திகையாளர் மாநாட்டில் அழுதழுது உணர்வுபூர்வமாக பேட்டியளித்தார். இந்த ஊடக சந்திப்பை ஏற்பாடு செய்தது ஜாதிக ஹெல உறுமய என்பது குறிப்பிடத்தக்கது.
“ஜனாதிபதி சென்றதன் பின்னர் பிள்ளையான் என்னை கொலை செய்வதற்காக என் பின்னால் துரத்திகொண்டு வந்தார். பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்களை இந்த கூட்டத்திற்கு கொண்டு வந்திருந்தார்கள் அவர்கள் எல்லோர் முன்னிலையில் சிங்களவர்களின் ஆடைகளை களைத்த பொலிசாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும். அம்பாறையிலிருந்து மட்டகளப்பு வரை ஒரு சிங்களவரும் இல்லை. வெலிகந்தையிலிருந்து மட்டகளப்பு வரை சிங்களவர் இல்லை. நாங்கள் அதனை செய்கிறோம். எனவே இது யாரின் நிலம், யுத்தத்தோடு தொடர்புண்டா? முன்னர் எங்கிருந்தார்கள்? போன்ற கேள்விகள் எங்களுக்கு அவசியமில்லை.” என்றார்
இவர் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரால் தனக்கு மரண அச்சுறுத்தல் இருப்பதாக சென்ற மாதம் பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு ஒன்றையும் செய்திருந்தார்.
இந்த குடியேற்றத்திற்கு வறுமையிலுள்ள சாதாரண அப்பாவி
சிங்கள மக்களே பயன்படுத்தப்பட்டுள்ளனர். இதன் மூலம் இது ஒரு மனிதாபிமான
பிரச்சினையாக புனைந்து இதன் உள்ளார்ந்த அரசியலை திசைதிருப்பும் கைங்கரியம்
நடக்கிறது. இதனாலேயே பலரால் வாய்திறந்து கதைக்க முடியாதபடி பேணுகின்றனர்.
மட்டகளப்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்திலும் பெண்கள், குழந்தைகள், வயோதிபர்களை
பயன்படித்தி இதனை ஒரு உணர்வுபூர்வமான ஒன்றாக காட்டவே முனைந்தனர். அந்த
காணொளியையும் புகைப்படங்களையும் பார்க்கும் எவருக்கும் கூட அவர்களுக்காக
பரிந்துபேசவே முனைவார்கள். பேரினவாததத்தின் இந்த கபட அணுகுமுறையால் அரசியல்
உள்ளர்த்தம் அடிபட்டுபோகும் என்பதே நோக்கம்.
யார் இந்த சுமனரதன தேரோ
1990ஆம் ஆண்டு மட்டக்களப்பு மங்களாராம விகாரைக்கு அவர் பொறுப்பேற்றார். சிங்கள குடியேற்றங்களை செய்கிறார் என்கிற குற்றச்சாட்டில் விடுதலைப் புலிகளால் வாகரைக்கு அழைக்கப்பட்டு எச்சரிக்கை செய்யப்பட்டிருந்தார். இன்று இவரால் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் மட்டக்களப்பில் மாத்திரம் குடியேற்றப்பட்டிருக்கிறார்கள். கிழக்கில் நில ஆக்கிரமிப்பை முன்னின்று நடத்துபவர் அவர்.
யுத்தம் முடிந்தபின் 2008ஆம் ஆண்டு கிழக்கில் பட்டிப்பளை பிரதேசத்தில் பல சிங்கள மக்களை கொண்டு வந்து பலாத்காரமாக குடியேற்றினார். அவர்களுக்கு அடையாள அட்டைகளையும், வாக்கட்டைகளையும் வழங்கும்படி அந்த பிரதேசத்து கிராமசேவகரிடம் சண்டையிட்டிருக்கிறார். சட்டவிரோதமாக குடியேற்றப்பட்டவர்களுக்கு இந்த ஆவணங்களை வழங்க முடியாது என்று மறுத்திருக்கிறார் கிராமசேவகர். சுமணரதன தேரர் விடாப்பிடியாக பிரதேசசபை, அரசியல் தலைவர்கள் போன்றவர்களையும் அனுகியிருந்தும் சாத்தியப்படவில்லை. ஆனாலும் குடியிருப்பை விஸ்தரிப்பது, பௌத்த விகாரை கட்டுவது என அவரது குடியேற்ற நடவடிக்கை தொடர்ந்தது. சமீபத்தில் மத்தியகிழக்கில் இயங்கும் சிங்கள அமைப்பான “ஹெலபிம இயக்க”த்தின் உதவியுடன் புதிய வீடுகளும், ஏனைய வசதிகளும் கட்டிக்கொடுக்கப்பட்டதாகவும் அதுபோல, கெவிலியாமடுவ, கொஸ்கொல்ல, போன்ற இடங்களிலும் பல வீடுகள் தடைகளுக்கு மத்தியில் புதிதாக அமைக்கப்பட்டதாகவும் சுமனரதன தேரர் தெரிவித்திருந்தார்.
இந்த இடைவெளியில் தமது குடியேற்றத்துக்கு சட்ட அங்கீகாரம் கோரி சகல முயற்சிகளையும் மேற்கொண்டு வந்தார். குடியேற்றப்பட்டவர்கள் அனைவரும் யுத்தத்திற்கு முன்னர் அங்கு வாழ்ந்தவர்கள் என்றும் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்தவர்கள் என்றும் காரணங்களை அடுக்கியபோதும் அவரால் போதிய ஆதாரங்களை முன்வைக்க முடியவில்லை. யுத்தத்தின் பின்னர் நிகழ்த்தப்படும் சகல திட்டமிட்ட குடியேற்றங்களுக்கும் இதே காரணத்தைத் தான் முன்வைத்து வருகிறார்கள் என்பது தெரிந்ததே. இப்போது இந்த பிரதேசங்களுக்கு பாடசாலையும், புதிய வீதிகளையும் அமைத்து தரும்படியும் கேட்டிருக்கிறார்.
இவர் பின்னர் தமக்கு ஆதரவு தேடி ஜாதிக ஹெல உறுமயவின் தயவை நாடினார். பின்னர் பொதுபல சேனாவின் அமைப்பாளராக ஆனார்.
சமீபத்தில் இந்த வீடுகளுக்கு சட்டவிரோதமாக மின்சாரம் களவாடி பொருத்தியதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் பொலிசார் சகிதம் சென்றிருந்த போது சுமனதேரர் அந்த அதிகாரிகளையும் தாக்கி, மோசமான தூசன வார்த்தைகளால் சகலரையும் திட்டியதுடன், மின்வலு சக்தி அமைச்சர் பவித்ரா வன்னி ஆராச்சியையும் மோசமான தூசன வார்த்தைகளால் திட்டிய காணொளி பல இணையத்தளங்களிலும் சமூக ஊடகங்களிலும் வெளியாகியிருந்தது.
பொதுபல சேனாவின் ஞானசார தேரர் ஊடக சந்திப்பொன்றில்
“இது இலகுவாக தீர்க்கப்படக்கூடிய விடயம் ஆனால் இந்த அதிகாரிகள் அதை செய்யவில்லை. சுமனதேரர் எப்படிப்பட்ட மோசமான வார்த்தைகள் பிரயோகித்தாலும் அது தகும். நானாக இருந்தால் அதைவிட மோசமாக நடந்துகொண்டிருப்பேன்.” என்றார்.
சிங்களவர்களின் நிலங்களை தமிழர்கள் கொள்ளையடிக்கிறார்கள் என்று கூறி 14.02.2012 அன்று சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தார் சுமனரதன தேரர். கருணா அம்மான் தலையிட்ட பின் அதே நாள் அது கைவிடப்பட்டது.

“தமிழர்கள் தங்கள் கிராம சேவகர்களையும், அவர்களின் இனத்தை
சேர்ந்த அதிகாரிகளையும் கைக்குள் வைத்துக்கொண்டு சிங்களவர்களின் நிலங்களை தங்கள் பெயர்களுக்கு மாற்றியுள்ளனர். நாங்கள் சிங்களவர்களை குடியேற்றும்போது; கருணா அம்மானும் சில தமிழர்களை அங்கு குடியேற்றினார். நான் அவர்களையெல்லாம் அடித்துத் துரத்தினேன். இது சிங்கள பிரதேசம். அதுமட்டுமல்ல சிங்களவர்களைக் கொன்ற புலிகளின் புகைப்படங்களை தனது அலுவலக சுவரில் சுற்றிவர வைத்து விளக்கு கொளுத்துகிறார் பிள்ளையான்.”.
இப்படிப்பட்ட ஒருவர் சிங்கள பேரினவாதம் தலையில் தூக்கி கொண்டாடும் ஒரு ஹீரோ தான். ஒருபுறம் முஸ்லிம்கள் தமது சொந்த இடங்களுக்கு மீள குடியேறிய போது பொதுபல சேனா போன்ற அமைப்புகள் எப்பேர்பட்ட களேபரங்களை உண்டாக்கியிருந்தது என்பது நாடே அறியும். வில்பத்து சம்பவம் ஒரு உதாரணம் மட்டும் தான்.
சம்பிக்கவின் பாத்திரம்
“வடக்கில் இருந்து இடம்பெயர்ந்த சிங்களவர்களின் கூட்டமைப்பு” என்கிற ஒரு அமைப்பு 06.10.2014 நடத்திய கூட்டத்தில் சம்பிக்க ரணவக்க பிரதான உரையாற்றினார். இனவாதத்தை தூண்டக்கூடிய அவரது வழமையான திரிபுபடுத்தப்பட்ட கவர்ச்சிகரமான நீண்ட நேர உரை சிங்கள குடியேற்றங்களுக்கான அவசியத்தை இப்படி வலியுறுத்துகிறார்.
“71இல் யாழ்ப்பாணத்தில் 20,402 குடும்பங்கள் வாழ்ந்தனர். ஆனால் பத்தாயிரம் அளவில் மட்டுமே வாழ்ந்த முஸ்லிம்கள் இன்று முஸ்லிம் தூதுவராலயங்களை கூட்டி யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்களை மீல்குடிஎற்றுவது குறித்து கதைக்கிறார்கள். வெளிநாட்டு உதவியுடன் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் மீள குடியேற்றப்பட்டு வருகின்றனர். ஆனால் இன்று சிங்களவர்களால் இயலாமல் போயிருக்கிறது. யுத்தத்தில் நாட்டை வென்றாலும் நம்மால் நம் நாட்டில் வாழ முடியவில்லை என்பது வெட்கப்பட வேண்டிய ஒன்று. சிலர் அப்படி குடியேற்றப்பட்டபோதும் உட்கட்டமைப்பு இல்லாததால் மீண்டும் திரும்பி வர நேரிட்டிருக்கிறது. ஆனால் புதுமாத்தளினிலும், முல்லிவாய்க்காலிலும் சிங்களவர்களின் வரியில் அபிவிருத்தி செய்யப்படுகிறது. சிங்களவராக பிறந்ததினால் இன்று நந்திக்கடலில் ஒரு சிங்களவனுக்கு இறால் பிடிக்க கூட அனுமதியில்லை. இந்த இடங்களில் நமது உரிமையை நிலைநாட்டவும், நம் பிரதேசங்களை மீட்கவும் நமது மக்கள் குடியேற வேண்டும். இதற்கு அரசின் ஆதரவு அவசியம்.
கிழக்கில் திருக்கோவில் போன்ற சிங்கள பிரதேசங்களில் வன்னியசிங்கம் தமிழ் குடியேற்றத்தை ஏற்படுத்தினார். இந்தியாவுக்கு நாடுகடத்தப்பட இருந்த இந்த நாட்டுக்கு சொந்தமில்லாத ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இந்திய வம்சாவழி தமிழர்களை வன்னியில் போய் குடியிருத்தின காந்தியம், தமிழர் புனர்வாழ்வுக் கலக்கல் போன்ற தமிழ் அமைப்புகள். எங்கள் மக்களை அங்கு வாழ விடா விட்டால் உங்கள் சொந்தங்களையும் தெற்கில் வாழ விடமாட்டோம் என்பதை கூட்டமைப்பு தலைவர்களை எச்சரிக்கிறோம்”
சிங்கள குடியேற்றங்களை ஏற்படுத்துவதற்கான சித்தாந்த பலத்தை கொடுப்பதில் கடந்த இரண்டு தசாப்தங்களாக தலைமை பாத்திரத்தை ஆற்றிவருபவர் சம்பிக்க ரணவக்க.
இன அழிப்பின் அங்கம்
இலங்கையின் இன அரசியலைப் பொறுத்தளவில் “திட்டமிட்ட குடியேற்றம்” என்பது தமிழர்களை ஒடுக்குகின்ற ஒரு ஆயுதமாகவே காலங்காலமாக சிங்கள அரசாங்கங்களாலும், பேரினவாத தரப்பாலும் பாவிக்கப்பட்டு வந்திருக்கிறது.
யுத்தம் முடிவுக்கு கொண்டுவந்ததன் பின்னர் தமிழின அழிப்பை பேரினவாதம் வேறுபல வடிவங்களில் கட்டமைத்திருக்கிறது. முக்கியமாக அரசியல் பலத்தை சிதைக்கச் செய்வதற்கான வழிமுறைகளை முன்னெப்போதும் இல்லாத அளவு மேற்கொள்ள போதிய வாய்ப்புகள் திறந்துவிடப்பட்டிருக்கின்றன. அரசியல் பிரதிநிதித்துவத்தை குறைப்பது, சிதைப்பது, பலவீனப்படுத்துவது உட்பட அரசியல் நிகழ்ச்சிநிரலையும் திசைவழியையும் திசைதிருப்புவது வரை வெற்றிகரமாக முன்னேறி வந்திருக்கிறது. இதனை பல நிகழ்வுப் போக்குக்கூடாக அவதானித்து வந்திருக்கிறோம். பேரினவாதத்தின் இன அழிப்பு நடவடிக்கையின் அங்கமான திட்டமிட்ட குடியேற்றங்களும் வரலாறு காணாத அளவுக்கு பல முனைகளில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த திட்டமிட்ட குடியேற்ற நடவடிக்கைகளில் இராணுவம், அரச அதிகாரிகள், அரசியல்வாதிகள், சிங்கள பௌத்த நிறுவனங்கள், பௌத்த பிக்குகள் என அனைத்து தரப்பினரும் களத்தில் இறக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு இடையில் ஒரு ஒருங்கிணைப்பு இருக்கவேண்டும் என்கிற அவசியம் கிடையாது. ஏனென்றால் பேரினவாதம் என்பது நிறுவனமயப்பட்டது. முழு அரச அதிகாரத்தையும் கொண்டிருக்கிறது. அரச அனுசரணை, ஆதரவு, ஆசீர்வாதம் அதற்கு தடையின்றி கிடைக்கிறது. எனவே அந்தந்த அங்கங்கள் அவரவர் வழியில் இந்த குடியேற்றங்களை மேற்கொள்ள முடிகிறது.
வடக்கு கிழக்கில் 247 நிரந்தர இராணுவ முகாம்கள் இருக்கின்றன. அவை பாதுகாப்பு வலயங்களாக ஆக்கப்பட்டுள்ளன. அதற்காக பலாத்காரமாக தமிழ் மக்களின் காணிகள் பறிக்கப்பட்டுள்ளன. இராணுவ முகாம் ஒன்று ஏற்படுத்தப்படுவதன் பேரில் பெரிய குடியிருப்பே நிறுவப்பட்டுவிடுகிறது. நிரந்த இராணுவ முகாம் என்பதால் அதற்கான உட்கட்டமைப்பு அனைத்தும் அத்தியாவசியமாகிவிடும். பாடசாலை, பௌத்த விகாரை உட்பட அவர்களின் அலுவல்களை கவனிக்கவென சிங்கள அரச அதிகாரிகளின் நியமனங்கள் மற்றும் அவர்களுக்கான இருப்பிட மற்றும் மேலும் உட்கட்டமைப்பு என ஒரு சங்கிலிபோல் தொடர் நிகழ்வாக ஆகிவிட்டிருக்கிறது. தமிழ் மக்கள் தமது சொந்த பிரதேசங்களில் தமது தேவைகளுக்காக தமிழில் அரச கருமங்களை பெற்றுக்கொள்வதற்கே ஒருபுறம் போராடிக்கொண்டிருக்கையில் எந்தவித சிக்கலுமின்றி திட்டமிட்டு குடியேற்றப்பட்டவர்களுக்கு எந்த தங்குதடையுமின்றி கிடைப்பது நம்மெல்லோருக்கும் தெரிந்த விடயம்.
இவற்றை சிங்கள பௌத்த பேரினவாத இயக்கங்களும், பௌத்த பிக்குகளும் நேரடியாக களத்தில் இறங்கி இந்த குடியேற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது தமிழ், முஸ்லிம் மக்களுக்கும், அதிகாரிகளுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் பெரும் தலையிடியாக ஆகியிருக்கிறது.
காவி உடை, பௌத்த மதம், பௌத்த மத ஸ்தலங்கள் என்பவற்றின் பேரால் இந்த குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படும் போது இந்த சட்டவிரோத குடியேற்றங்களையும், சட்டத்தை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் குடியேற்றங்களையும் எதிர்த்து நிற்பது என்பது இன-மத முறுகளுக்கு தூண்டிவிடப்பட்டுவிடுகிறது. இறுதியில் பேரினவாதிகளால் புலிகளாக சித்திரிக்கப்படுவதும், தனித் தமிழ் ஈழ முயற்சி என்றும், சிங்கள நாட்டில் சிங்களவர்களுக்கு வாழ வழியில்லை என்றும் பெரும் பிரச்சாரமாக முடுக்கிவிடப்படுகிறது. இதற்குப் பயந்தே அனைத்து தமிழ் முஸ்லிம் சக்திகளும் பின் வாங்கி பதுங்கும் போக்கை காண்கிறோம்.
சமீப காலமாக தமிழ் பிரதேசங்களில் அகழ்வாராய்ச்சி என்கிற பெயரில் அவை சிங்கள பிரதேசங்கள் தான் என்று நிறுவுவதற்கு பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. அதுபோல பல தமிழ் பிரதேசங்களின் பெயர்கள் மாற்றப்பட்டுவருகின்றன. வடக்கில் சிங்கள குடியேற்றங்களை நிறுவி அதற்கு “நாமல் கம” என்று ஜனாதிபதியின் மகனின் பெயரை இட்டது குறித்து பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவ விஜேசிங்க சமீபத்தில் கண்டித்திருந்தார். குடியேற்றங்களில் தலையிடுவது என்பது தமிழரசியல் நிகழ்ச்சிநிரலிளிருந்து எட்டாத்தூரத்துக்கு போய்க்கொண்டிருகிறது. இதன் விளைவு எப்பேர்பட்டது என்பது வரலாறு ஏற்கெனவே கற்றுத்தந்து விட்டது. இனியும் வேண்டாம்.
நன்றி - தினக்குரல்
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...