Headlines News :

காணொளி

ஜனாதிபதி விருது

ஜனாதிபதி விருது
நமது மலையகத்துக்கு

சுவடி

புதிய தளம் சஞ்சிகை வெளியீடும் ஆய்வும்
புதிய பண்பாட்டுத் தளத்தின் வெளியீடான புதிய தளம் சஞ்சிகை வெளியீடும் ஆய்வும் எதிர்வரும் 05-12-2013(வியாழக்கிழமை) அன்று கொழும்பு தமிழ் சங்கத்தின் வினோதன் மண்டபத்தில் நடைப்பெறும். மூத்த படைப்பாளி நீர்வை பொன்னையன் தலைமையில் நடைப்பெறும் இந்நிகழ்வில் திரு. லெனின் மதிவானம் வரவேற்புரை நிகழ்த்த  'புதிய பண்பாட்டுத் தளம் பற்றி" என்ற தலைப்பில் கலாநிதி ந. இரவீந்திரன் உரையாற்றுவார்.  ஸ்ரீபாத கல்வியற் கல்லூரியின் துணைப் பீடாதிபதி வ. செல்வராஜா சஞ்சிகைப் பற்றி ஆய்வுரை நிகழ்த்துவார்.தோட்டத் தொழிலாளர்களுக்கு அரசாங்கம் முன்வைத்துள்ள மாடி வீட்டுத்திட்டத்திற்கு எதிர்ப்பு


தோட்டத் தொழிலாளருக்கு 50,000 அலகுகளை கொண்ட வீட்டு தொகுதிகளை நிர்மாணிக்கும் யோசனையை முன்மொழிவதாக ஜனாதிபதி நிதியமைச்சர் என்ற முறையில் நேற்று தனது வரவு செலவு திட்ட உரையில் தெரிவித்துள்ளார். 

இந்த யோசனைக்கு சபையில் அவ்வேளையில் இருந்த மலையக பிரதிநிதிகள் கரகோஷம் எழுப்பினார்களோ தெரியவில்லை. ஆனால், இது மாடி மேலே மாடி கட்டும் தொடர் மாடி வீட்டு திட்டம் என்பதையும், தோட்ட தொழிலாளருக்கு மகிந்த சிந்தனையில் உறுதியளிக்கப்பட்ட காணி உரிமை இன்னமும் வெகு தூரத்தில் இருப்பதை இது அடையாளப்படுத்துகின்றது என்பதையும் மலையகம் உணர்ந்து கொள்ள வேண்டுமென ஜனநாயக மக்கள் முன்னணி-ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். 

வரவு செலவு திட்ட யோசனைகள் தொடர்பில் மனோ கணேசன் மேலும் ஊடகங்களிடம் தெரிவித்ததாவது, 

பெருந்தோட்ட துறையில் கல்வி, சுகாதாரம் ஆகிய துறைகள் முன்னேறியுள்ளதாக வரவு செலவு திட்ட உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சிசு மரண விகிதம், அதாவது பிறக்கும் 1000 குழந்தைகளில் முதல் மூன்று மாதத்தில் இறக்கும் சிசுக்களின் எண்ணிக்கை குறைந்து விட்டதாக சொல்லப்படுவதை ஏற்றுகொள்ள முடியாது. 

2009ம் வருடம் வரைக்கும் 32 விகிதமாக இருந்த மலையக வறுமை விகிதம் திடீரென குறைந்துவிட்டதாக ஏற்கனவே அரசாங்கம் சொல்லி வருவதை போன்றதான இந்த தரவுகளையும் நாம் ஏற்றுகொள்ள முடியாது. மலையக தோட்ட தொழிலாளர்கள் இந்நாட்டின் ஏனைய பிரிவு மக்களைவிட ஒப்பீட்டளவில் பின்தங்கிய வளர்ச்சி கட்டத்தில் இருக்கின்றார்கள் என்பது அடிப்படை உண்மை. 

காணி நிலம் மற்றும் வீடமைப்பு துறைகளில் அரசு கபட நோக்கத்துடன் நடக்கின்றது. இது தொடர்பாக கடந்த 2005/2010 ஜனாதிபதி தேர்தல் வேளைகளிலில் மகிந்த சிந்தனைகளில் சொல்லப்பட்ட மற்றும் கடைசியாக நடைபெற்ற மாகாணசபை தேர்தல் வரை வழங்கப்பட்ட வாக்குறுதிகள் இன்னமும் நிறைவேறவில்லை. 

மாடி வீடுகள் பொதுவாக நிலம் இல்லாத நகரப்பகுதிகளிலேயே கட்டப்படுகின்றன. இதுவே உலக நடைமுறை. கிராம பகுதிகளிலும், குறிப்பாக மலைப்பகுதிகளிலும் தொடர் மாடி வீடுகள் கட்டப்படுவதில்லை. ஆனால், இந்த வரவு செலவு திட்ட யோசனையின்படி அரசாங்கம் மாடி வீட்டு தொகுதிகளை மலையகத்தில் கட்ட போவதாக சொல்கிறது. 

இந்த கட்டுமான பணிகள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் வரும் நகர அபிவிருத்தி சபையின் மூலம் கட்டப்பட உள்ளன என்ற கருத்தும் வரவிருக்கும் எதிர்காலத்தை பற்றி பூடகமாக அறிவிக்கிறது. இந்த தொடர்மாடி வீடுகள் என்ற நடைமுறை, தொழிலாளர்களை தொடர்ந்தும் தொழில் செய்யும் இடத்தில் பணியாளருக்கு வழங்கப்படும் குடியிருப்புகளில் வாழும் தொழிலாளர்கள் என்ற மனநிலையிலேயே வைத்திருக்கும் என்பதை சுட்டிகாட்ட விரும்புகின்றேன். 

இதற்கு தேவைப்படும் சுமார் 750 மில்லியன் டொலர் நிதி சர்வதேச உத்தரவாதத்தின் மூலம் பெறப்பட உள்ளதாகவும் அரசு கூறுகிறது. நாட்டின் ஏனைய பிரதேச அபிவிருத்தி திட்டங்களுக்கு நிதி பெற்றுகொள்வது தொடர்பில் தெளிவான வழிமுறைகள் கோடிட்டு காட்டப்பட்டுள்ளன. ஆனால் இந்த பெருந்தோட்ட வீடமைப்புக்கான நிதி பெறுதல் தெளிவில்லாமல் பொதுப்படையாக இருக்கின்றது 

ஆகவே, தோட்ட தொழிலாளருக்கு காணிகள் பகிர்ந்து வழங்கும்படியும், தமது சொந்த நிலங்களில் அவர்கள் தமது வீடுகளை கட்டிக்கொள்ள, அவர்களது சேமலாப நிதியத்தில் இருந்து இலகு தவணை கடன் வழங்கும்படியும், அரசில் உள்ள மலையக பிரதிநிதிகள், தமது அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டும். இதன் மூலமாகவே சொந்த காணி நிலத்தில் கட்டப்பட்ட வீடுகளில் வாழும் கிராமத்தவர்கள் என்ற மனநிலையை மலையக மக்கள் பெறுவார்கள்.

நன்றி - லங்காவின்

தேசிய அடையாளமின்றி அரசியல் விபரீதங்களை சந்திக்கும் “இந்தியத் தமிழர்கள்” - மு.சிவலிங்கம்


The Indian origin Tamils in Sri lanka do not possess national identification yet. They name themselves as "Sri Lankan Tamil", "Indian Origin Tamil" and "Malayaga Tamil". This situation confuses their census statistics annually.  The present statistics say (1981-2011) that their total count is 800,000, where the actual population is supposed to be more than 1.5 million. This mess to be corrected immediately to safeguard their actual population.

Reference: http://en.wikipedia.org/wiki/Demographics_of_Sri_Lanka


இந்திய வம்சாவளித் தமிழ் மக்களின் 2011 ம் ஆண்டு குடிசனத் தொகை மதிப்பீடு பற்றி விமர்சிக்கப்பட்ட இரண்டு ஆய்வு கட்டுரைகளை கடந்த சில வாரங்களில் வெளியான தேசிய பத்திரிக்கைகளில் வாசிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. அவை பற்றிய எனது கருத்துக்கள் சிலவற்றைப் பகிர்ந்து கொள்வதற்கு இக் கட்டுரையை எழுதுகின்றேன்.

ஓன்று, ஜனவரி மாதம் 13 ம் திகதி வெளிவந்த “சன்டே லீடர் பத்திரிக்கையில் “Up  country Tamils,  The Vanishing people?” என்ற கட்டுரையாகும்.   இந்த கட்டுரை   புது டெல்லியில் செயற்படும்   Observer Research Foundation   (ORF)  என்ற நிறுவனத்தின் பணிப்பாளர் என்.சத்தியமூர்த்தி அவர்களால் எழுதப்பட்டுள்ளது.

இக் கட்டுரையைப் போன்றே 20 ம் திகதி ஜனவரி மாதம் வெளிவந்த ஞாயிறு வீரகேசரியில்  கலாநிதி எஸ்.சந்திரபோஸ் அவர்கள் எழுதிய “மக்கள் தொகை கணிப்பீடும், மறைந்து செல்லும் இந்தியத் தமிழர்களும்” என்ற கட்டுரையும் பல முக்கியமான தகவல்களை  எடுத்துக் காட்டியுள்ளன. 

குடிசனத் தொகை கணிப்பீட்டாளர்கள் இனவாரியாகத் தகவல் சேகரித்ததில், எந்த முறையைக் கையாண்டுள்ளார்கள்  என்பது முக்கிய அவதானத்துக்குரிய விடயமாகும்.  இந்தக் கணிப்பீட்டை முற்று முழுதாக ஏற்றுக் கொள்ளாத முதல் கட்டுரையாளர் புள்ளி விபரங்கள்  முற்றிலும் பொய்யானவை  என்று ஆதங்கப்பட்டு எழுதியுள்ளார். 2011 ம் ஆண்டுக்குர்pய புள்ளி விபரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. அவை  எவ்வாறு தகவல்கள் தந்துள்ளன என்பதை கவனிப்போம்.

1981 ம் ஆண்டிலிருந்து 2011 ம் ஆண்டு வரையிளான  30 ஆண்டுகளுக்குரிய விபரக் கோவையாக இந்தத் தகவல்களை நாம் அறிகின்றோம்.. இந்த முப்பதாண்டு கால வளர்ச்சியில் இலங்கையின் மொத்த சனத் தொகை 20,263723 (இரண்டு கோடியே இரண்டு லட்சத்து அறுபத்து மூவாயிரத்து எழுநூற்று இருபத்து மூன்று)  என காட்டப்பட்டுள்ளது.

இத் தொகையில் இன வாரியாகக் காட்டப்பட்டுள்ள விபரங்களை அறியும் போது, சிங்கள மக்களின் குடிசனத் தொகை  1981 ம் ஆண்டில்  10,979400 (ஒரு கோடியே ஒன்பது லட்சத்து எழுபத்தொன்பதாயிரத்து நானூறு) ஆகவும் 2011 ம் ஆண்டில்  15இ173800  (ஒரு கோடியே ஐம்பத்தொரு லட்சத்து எழுபத்து மூவாயிரத்து எண்ணூறு)    ஆக வளர்ச்சியடைந்துள்ளதாகக் காட்டப்பட்டுள்ளது.   அதன்படி கடந்த முப்பதாண்டு காலப் பகுதியில் 4,194400 (நாற்பத்தொரு லட்சத்து தொண்ணூற்று நாலாயிரத்து நாணூறு)  பேர் இயற்கை வளர்ச்சியை கொண்டுள்ளனர் எனக் காட்டப்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழர் வளர்ச்சியை 1981 ம் ஆண்டு 18,86900 (பதினெட்டு லட்சத்து என்பத்தாறாயிரத்து தொள்ளாயிரம்) ஆகவும், 2011 ம் ஆண்டு 22,70900 (இருபத்திரண்டு லட்சத்து எழுபதாயிரத்துத் தொள்ளாயிரம்)  என வளர்ச்சிப் பெற்றுள்ளதாகக் காட்டப்பட்டுள்ளது.  

அடுத்து முஸ்லிம் மக்களின் குடிசனத் தொகையைக் காட்டும் போது, 1981 ம் ஆண்டு 10,46900 (பத்து லட்சத்து நாற்பத்தாறாயிரத்து தொள்ளாயிரம்)  எனவும்  2011 ம் ஆண்டில் 18,69800 ( பதினெட்டு லட்சத்து அறுபத்தொன்பதாயிரத்து எண்ணூறு)  என்றும், அதன்படி 8,22900       (எட்டு லட்சத்து இருபத்திரண்டாயிரத்துத் தொள்ளாயிரம்)  பேர் இயற்கை வளர்ச்சி கொண்டுள்ளனர் எனக் காட்டப்பட்டுள்ளது. 

அடுத்து, இந்திய வம்சாவளி தமிழர்கள் 1981 ம் ஆண்டு 8,18700 (எட்டு லட்சத்து பதினெட்டாயிரத்து எழுநூறு) பேர் என்றும்  2011 ம் ஆண்டில்  8,42300 (எட்டு லட்சத்து நாற்பத்திரண்டாயிரத்து முந்நூறு)  என்றும், அதன்படி  23,600 (இருபத்து மூவாயிரத்து அறுநூறு) பேர்கள் மட்டுமே கடந்த முப்பதாண்டுகளில்  இயற்கை வளர்ச்சி பெற்றுள்ளனர்  என்று காட்டப்பட்டுள்ளது. இந்தக் கணிப்பீட்டை எவ்வாறு ஏற்றுக் கொள்வது..?  இக் கணிப்பீட்டின்படி முப்பதாண்டு கால இயற்கை வளர்ச்சியில் 2.8மூ வீதமாகவும், மொத்த சனத் தொகையில் 4.2மூ ஆகவும் குறைக்கப்பட்டிருப்பதைக் காண முடிகிறது.

இலங்கை வாழ் இந்திய வம்சாவளி தமிழர்களின் கடந்த கால வளர்ச்சி வீதத்தை கீழே அவதானிக்கலாம். :

 1945 ம் வருடம்  16%
 1953 ம் வருடம்  12%
 1963 – 1983 வரை 10.6% ,  9.4% ,  5.6%

இந்த வளர்ச்சியினை நோக்கும் அதே வேளை, 1953 ம் ஆண்டில் இந்திய வம்சாவளித் தமிழர்கள் இலங்கைத் தமிழர்களைவிட குடிசனத் தொகையில் அதிகமாகவிருந்தனர்  என்பதையும் கருத்திற்கொள்ள வேண்டியுள்ளது.

2011 ம் ஆண்டு குடிசனக் கணக்கீட்டின்படி கடந்த முப்பதாண்டு கால வளர்ச்சியாக இந்த “23,600 பேர்”; எவ்வாறு சேகரிக்கப்பட்டனர் என்பது வியப்புக்குரிய கேள்வியாகும். கடந்த முப்பது ஆண்டுகளில் நடந்த யுத்தத்தின் மூலம் பல ஆயிரக்கணக்கான வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். லட்சக்கணக்கானோர்; வெளி நாடுகளுக்குப் புலம் பெயர்ந்தனர். ஆயிரக்கணக்கானோர்  காணாமல் போயினர். அநேகமானோர் வசிப்பிடமின்றி எந்த வித தகவல்களுக்கும் அகப்படாமல் மறைந்து கிடக்கின்றனர்.  இந்த நிலைமையில்  இன்றைய கணக்கீட்டின்படி   22,70900 பேர் இருப்பதாகக் கொடுக்கப்பட்டிருக்கும்  தகவல்  ஏற்றுக் கொள்ள முடியாமல் இருக்கின்றது. இந்திய வம்சாவளித் தமிழர்கள் தங்களை இலங்கைத் தமிழர் என்று பதிவு செய்து கொண்டதன் காரணமாக, இலங்கைத் தமிழர் பட்டியலில் அவர்களது தொகை சேர்க்கப்;பட்டிருக்கலாம் என்றே நினைக்கத் தோன்றுகின்றது. இல்லையெனில் ஏறக்குறைய பதினைந்து லட்சம் இந்திய வம்சாவளித் தமிழர்களுள் ஏழு லட்சம் பேர் எங்கே மறைந்தனர் என்ற அதிர்ச்சிக்குரிய கேள்விக்கு விடை தேட வேண்டிய நிலைமையும் ஏற்பட்டிருக்கின்றது.

இந்த குழப்ப நிலைக்குக் காரணம், மலையகத் தமிழர் என்ற தேசிய அடையாளத்தையும், இந்திய வம்சாவளி என்ற அடையாளத்தையும், இலங்கைத் தமிழர் என்ற அடையாளத்தையும் மூன்று வௌ;வேறு நிலைப்பாட்டில் வைத்து இந்த சமூகத்தினர் தங்களை குழப்பிக் கொண்டிருப்பதேயாகும்..! இருநூறு ஆண்டுகளாகியும் தங்களது தேசிய அடையாளத்தை நிலைநாட்டிக்கொள்ள முடியாத இம் மக்களின் அரசியல் அறியாமை விசனத்துக்குரியதாகும்.

இச் சமூகத்தினர் பெருந் தோட்டத் தொழிலாளர்களாகவும், தலை நகரில் குடியேறியுள்ள வர்த்தக சமூகத்தினராகவும், ஆரம்ப காலம் முதல் கடை சிப்பந்திகளாகவும் வியாபாரத் தளங்களை அண்டியுள்ள ஊழியர்களாகவும், நகரத் தொழிலாளர்களாகவும் , பல துறைகளில்  தங்களை நிலைநாட்டிக் கொண்டவர்கள், தங்கள் விருப்பத்துக்கேற்ற தேசிய அடையாளங்களை அவ்வப்போது காட்டி வருகின்றனர். இவர்களது நிலைப்பாட்டில் எந்தவொரு அரசியல் சிந்தனை இல்லாமையும் இந்த நிலைமைக்கு காரணமாகும்.
கலாநிதி எஸ்.சந்திரபோஸ் அவர்கள் தனது கட்டுரையில் குறிப்பிட்டிருப்பது போன்று இந்தியத் தமிழர்கள் என்றதும் அவர்கள் பெருந்தோட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்ற எண்ணம் இவர்கள் மத்தியில் நிலவி வருகின்றது. பெருந் தோட்டங்களைத் தவிர்ந்து ஏனைய பிரதேசங்களில் வாழ்கின்றவர்கள் தங்களை இலங்கைத் தமிழர் என்று அடையாளம் காட்டிக் கொள்ள விரும்புகின்றனர்.

கொழும்பைப் போன்ற தலை நகரங்களில் வாழும் வர்த்தக சமூகத்தினர் இந்தியாவிலும் சொத்துரிமைகள் கொண்டு  வியாபாரத் தொடர்புகளும்  வைத்துள்ளவர்கள் தங்களை இந்திய வம்சாவளி தமிழர்கள் என்று கூறிக்கொள்ள விரும்புகின்றனர். கோபியோ (Gopio) போன்ற ஸ்தாபனத்திலும் இவர்கள் நெருக்கமான உறுப்பினர்களாகவிருப்பதையும் நாம் அவதானிக்க முடிகின்றது.  இவர்களைத் தவிர்ந்த ஏனைய நகர்ப்புறங்களில்  குறிப்பாக கொழும்பு, நீர் கொழும்பு, புத்தளம், சிலாபம், மன்னார் போன்ற பிரதேசங்களில் வாழ்கின்ற இந்திய வம்சாவளியினர் தங்களை இலங்கைத் தமிழர்கள் என்று காட்டிக் கொள்ள விரும்புகின்றனர்.
இந்த இரு சாரார்களும் எந்த வித காரணத்தையும் முன்னிட்டு மலையகத் தமிழர் என்ற தேசிய அடையாளத்தின் கீழ் தங்களை இணைத்துக் கொள்ள விரும்புவதில்லை. மலையகத் தமிழர் என்ற அடையாளம் பெருந் தோட்ட மக்களையே சார்ந்தது என்ற அபிப்பிராயத்தில் இருந்து வருகின்றனர் .பெருந் தோட்ட மக்களோ இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னா,; தாங்கள் முகங் கொடுத்த அரசியல் பிரச்சினைகளை படிப்பினையாகக்கொண்டு, தங்களை மேலும் இந்த நாட்டில் “இந்தியத்  தமிழர்”; என்ற அடைமொழியோடு அந்நியப்படுத்திக் கொண்டு வாழ விரும்ப வில்லை. 

இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேலாக  இந்த நாட்டில் வாழ்ந்துக் கொண்டு,  “இந்திய” என்ற இன்னொரு நாட்டின் பெயரை அடைமொழியாக  இணைத்துக் கொள்வதன் மூலம், தேசிய அந்தஸ்தை பெற முடியாது என்பதில் தெளிவாக இருந்து வருகின்றனர்.   சுதந்திரத்துக்குப் பின் இன்று வரை  65 ஆண்டுகளாக மலையகத் தமிழர் என்ற  தேசிய அடையாளத்தை தேசிய , சர்வதேச மட்டத்துக்கு கொண்டு சென்றுள்ளனர். சர்வதேச சமூகமும் மலையகத் தமிழர் ஒரு தனியான  தேசிய சிறுபான்மை இனம் என்பதை அங்கீகரித்துள்ளன.

இந்த நிலைப்பாட்டுக்கான சான்றுகளை  இணைய தளங்களில் பரவலாக நாம் கண்டு கொள்ளலாம். மலையகத்  தொழிற்சங்க, அரசியல் தலைமைகளும், அரச சார்பற்ற சமூக நிறுவனங்களும், மலையகம் வாழ் அனைத்து சமூகப் பிரிவினர்களும் இந்த அடையாளத்தையே தங்களது தேசிய இன அடையாளமாக ஏற்றுக் கொண்டு வருகின்றன. களுத்துறை, மத்துகம, காலி, தெனியாய போன்ற பிரதேசங்களில் வாழ்கின்ற பெருந்தோட்ட மக்களும் இந்த நிலைப்பாட்டினையே கொண்டுள்ளனர்.

அரசியலில் நேரடியாகப் பங்குகொண்டு, இரண்டாவது தேசிய சிறுபான்மை இனமாக இருந்து, பின்னர் மூன்றாவது நிலைக்குத் தள்ளப்பட்டு, இன்று நான்காவது தேசிய சிறுபான்மை இனமாக வீழ்த்தபட்டிருந்தாலும,; மலையகத் தமிழர் என்ற அடையாளம் நிரந்தரமாக்கப்பட்டிருப்பதை  நாம் எற்றுக் கொள்ள வேண்டும்.

ஆகையினால் மலையக மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள்  “இந்தியத் தமிழர்”; என்ற அடையாளத்துக்குப் பதிலாக , “மலையகத் தமிழர்” என்ற தேசிய அடையாளத்தை  கொண்டு வரும் ஒரு திருத்தப் பிரேரணையை நாடாளு மன்றத்தில் முன் வைக்க வேண்டும். இந்த தேசிய அடையாளத்தின் கீழ் தங்களையும் இணைத்துக் கொள்வதற்கு, நாட்டில் பல்வேறு பகுதிகளில் வாழும் இந்திய வம்சாவளித் தமிழர்கள் முன்வர வேண்டும் என்ற அரசியல் விழிப்புணர்வை அவர்களிடம் உருவாக்க வேண்டும். இந்திய வம்சாவளி தமிழர்களில்  பெரும்பான்மையினராக வாழ்ந்து வரும் மலையகத் தமிழரின் அரசியல் நிழலில் அண்டி வாழ வேண்டிய கட்டாய நிலைமை எதிர் காலத்தில் இவர்களுக்கு ஏற்படும் என்ற உண்மையையும் உணர்த்த வேண்டும்.

இந்த இன அடையாளத்தின் மூலம்  தேசிய  அரசியலிலும், சர்வ தேசிய அரசியலிலும் நமது உண்மையான குடிசனத் தொகை மதிப்பீட்டை காட்டிக் கொள்ள முடியும். என்றும் இல்லாதவாறு தேசிய இனவாதம் கூர்மையடைந்து வருவதையும், சிங்கள பௌத்த பேரினவாத அடிப்படைவாதிகளின்  சக்தி பல வழிகளிலும் வளர்ச்சியடைந்து வரும் பேராபத்தையும், தங்களது  தேசிய அடையாளத்தில் முரண்படும் தமிழர்கள் உணர வேண்டும்.

இந் நாட்டின் பூர்வீகக் குடிகளான வடக்குக் கிழக்கு பிரதேசங்களில் வாழுகின்ற தமிழர்கள் தங்களது பூர்வீக நிலத்தையும், வீடு, உடைமைகளையும் இழந்து, விரட்டப்பட்டு அகதி முகாம்களிலும் கூட இல்லாமல், காடுகளில்  வசிக்கும் நடைமுறை நிலைமைகளை, சொந்த காணி, நிலம், வீடு உடைமைகள் இல்லாது உதிரிகளாக சிதறி வாழும் இவர்கள், தேசிய அடையாளத்தின் முக்கியத்துவத்தை உணர வேண்டும். இல்லாது போனால்,  பர்மாவில் நடந்தது போன்று, இன்று மலேசியாவில் நடந்து கொண்டிருப்பது போன்று இந்திய எதிர்ப்புவாத நடவடிக்கைகள் எந்த சந்தர்ப்பத்திலும் இங்கே உருவாகலாம்.

குடிசன மதிப்பீட்டுத் திணைக்கள ஊழியர்களிடம் தமது தேசிய அடையாளத்தை முறையோடு வழங்கத் தவறியதால், பாதகமான முறையில் 2011 ம் ஆண்டில் எமது குடிசனத் தொகை குறைக்கப்பட்டிருப்பது, இன்றைய அரசியல் சூழலில் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தலாம். இனங்களின் சனத்தொகைக்கேற்ப பாராளுமன்றப் பிரதிநிதித்துவம், முன்னுரிமைகள், அங்கீகாரங்கள், விகிதாசாரத்துக்குரிய தொழில் வாய்ப்புகள்,  எனும் பல தேசிய நலன்களை இழக்க நேரிடலாம். இவ்வாறான  அரசியல் ரீதியிலான பாதிப்புக்கள் பற்றியே மேற் குறிப்பிட்டுள்ள கட்டுரையாளர்கள் அறியத் தந்துள்ளனர்.

இன்றைய சூழ்நிலையில் மலையகத் தமிழர்களின் இவ்வாறான சமூக, அரசியல் தகவல்களை , சமூக நலன் விரும்பிகள் பகிர்ந்து கொள்வது  மிக முக்கியமான அரசியல் பணிகளிலொன்றாகும்.

நன்றி - மு.சிவலிங்கம்

ஜெயபாலன் கைதின் அனைவருக்குமான செய்தி – என்.சரவணன்


கவிஞரும் நண்பருமான ஜெயபாலனின் கைது பற்றி இந்த மூன்று நாட்களாக பல செய்திகளும், கருத்துக்களும், விவாதங்களும் இடம்பெற்று வருகின்றன. தமிழ், ஆங்கில, சிங்கள, மற்றும் நோர்வேஜிய மொழிகளிலும் செய்திகளும், ஏனைய சமூக வலைத்தளங்களிலும் போதிய முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

ஆனால் இதன் மூலம் சகலருக்குமான செய்தி என்ன என்பது குறித்து அதே அளவு முக்கியத்துவத்துடன் உரையாடப்படவில்லை என்பதே நாம் அனைவரும் கரிசனை கொள்ளவேண்டிய விடயம்.

நோர்வேஜிய நாளிதழான VG பத்திரிகைக்கு 23 இரவு முன்னாள் சமாதான தூதுவர் எரிக் சுல்ஹைம் அளித்த பேட்டியில். 

“...15 வருடங்களாக ஜெயபாலனை நான் அறிவேன். சமரசம், சம உரிமை குறித்தே அக்கறைப்படுபவர். சிக்கலுக்குரிய கருத்துக்களை கூறியிருக்க வாய்ப்பில்லை... செய்தியை அறிந்தவுடன் நேரடியாக இலங்கைக்கான நோர்வேஜிய தூதரகத்தை தொடர்புகொண்டு மேலதிக தகவல்களை அறிந்தேன்....

...ஆனால் அரசோடு முரண்பட்டுக்கொள்பவர்களுக்கான ஒரு குறியீட்டு செய்தியே இது...”

எரிக் சுல்ஹைம் வெளியிட்ட இந்த கருத்து கவனிக்கப்படவேண்டியது மட்டுமல்ல நம் எல்லோருமே கரிசனையுடன் நடவடிக்கை எடுக்கவேண்டியதும் கூட.

ஜெயபாலன் கவிஞர் மட்டுமல்ல. தனது இளமைக்காலங்களில் சமூகப்போரட்டங்களில் பங்கெடுத்துக்கொண்டவர். யாழ் பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் தலைவராக இருந்தவர். ஈழப்போராட்டத்தில் பங்கெடுத்துக்கொண்டவர். ஒரு ஈழப்போராட்டத்தின் ஆரம்ப கட்டத்தில் இராணுவ புவியியல் (military geography) குறித்த பிரக்ஞையை போராட்ட இயக்கங்களுக்கு முதன்முதலாக வகுப்பு நடத்தியவரும் கூட.

முஸ்லிம் மற்றும் மலையக பிரச்சினைகள்பற்றி கூட பிரக்ஞையுடன் பணியாற்றியவர். முஸ்லிம்கள் குறித்த அவரது ஆய்வு அப்போதைய கால கட்டத்தில் முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. முஸ்லிம் அரசியல் சக்திகள் மத்தியில் மதிப்பு பெற்றவர்.

அதுபோல தென்னிலங்கை இடதுசாரி சக்திகள் மத்தியிலும் நன்மதிப்பை பெற்றவர். தென்னிலங்கை இடதுசாரி எழுச்சி குறித்தும் இளைஞர்கள் மீதான படுகொலை பற்றியும் அவர் புனைந்த கவிதைகளை இன்றும் பலர் கொண்டாடுகிறார்கள்.

யுத்தம் இடம்பெற்ற காலத்தில் முஸ்லிம்களின் வெளியேற்றத்தை பற்றி புலிகளை துணிச்சலாக கண்டித்து வந்த வெகுசிலரில் ஜெயபாலனும் ஒருவர்.

யுத்தம் துரத்திய இலக்கியவாதிகளில்/போராளிகளில் ஜெயபாலனும் ஒருவர். நோர்வேயில் குடியேறினாலும் தனக்கான தளம் இது அல்ல என்கிற விரக்தியில் தமிழ் சூழலை தேடி தமிழகத்தில் குடியேறினார். அங்கு கவிதை இலக்கியத்தோடு மட்டுப்படுத்திக்கொல்லாமல், அரசியல் விமர்சனம், மற்றும் நடிப்புத்துறை வரைக்கும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர்.

ஆடுகளம் திரைப்படத்துக்காக அவருக்கு கிடைத்த தேசிய விருதை அடுத்து ஒஸ்லோவில் அவருக்கு ஒரு பாராட்டு விழா ஒன்றையும் இரு வருடங்களுக்கு முன்னர் நடத்தினோம்.

பேச்சுவார்த்தை முறிவுற்ற 2006 காலப்பகுதியில் தாயகத்துக்கு திருப்பிய ஜெயபாலன் மீண்டும் இந்த மாதம் தாயகம் செல்வதற்கு முன்னர் நண்பர்களின் கருத்தறிவதற்காக தனது முகநூலில் 8ஆம் திகதியன்று  “2006 பின்னர் முதல் தடவையாக என் மண்ணுக்கு செல்ல திடீரென முடிவு செய்திருக்கிறேன். பெரும்பாலும் நாளைக் காலை கொழும்பு செல்கிறேன். இப்போ நிலமை சுமூகமாக உள்ளதாக சொல்கிறார்கள்...” என்று நிரல்தகவலிட்டு நம்பிக்கையுடன் தாயகம் சென்றார்.

அதே நாள் தனது பயணத்தின் முக்கியத்துவத்தை இப்படி குறிப்பிடுகிறார். “...இன்று என் அம்மாவின் 7வது வருட நினைவுதினம். அம்மாவின் மரணத்துக்கு முதல்நாள் தொலைபேசியில் பேசியபோது எனக்கு என்ன நடந்தாலும் வந்துவிடாதே என கத்தி சத்தியம் வாங்கினார். இன்று அம்மாவின் நினைவுதினம். அம்மாவின் சமாதிக்கு வணக்கம் செலுத்தும் ஆசை மீண்டும் மூண்டெரிகிறது. இராணுவ முகாமாக இருக்கும் எங்கள் பண்ணைக்குள் அம்மாவின் சமாதி இருக்கு. இந்த வாரம் அம்மாவின் சமாதியில் என் கண்ணீர் மலர்வளையம் சாத்தி நம் அம்மாக்களின் வாழ்வை காவியமாக எழுத ஆரம்பிப்பேன். இதை தவிர்த்திருந்து வேறு என்ன பெரிய சாதனை செய்து விடப்போகிறேன்.”

ஆம். அவர் தனது தாயின் சமாதிக்கு சென்று கண்ணீரால் கழுவிவிட்டு வர நினைத்திருந்தார்.

கூட்டங்களில் கலந்துகொண்டும், பத்திரிகையாளர் சந்திப்புகளிலும் அவர் கூறிய விடயங்கள் இலங்கையின் அமைதிக்கு ஊறுவிளைவிப்பவை என்று போலிஸ் அதிகாரிகள் குற்றம்சாட்டினார்கள். ஆனால் அப்படிப்பட்ட கருத்துக்களை வெளியிட்டதாக எங்கும் வெளியாகவில்லை.

அப்படி என்றால் ஏன் இந்த கைது. அவர் கூறியதாக கூறப்படும் கருத்துக்களுக்கள் உறுதி செய்யப்பட்டதாக கூறும் போலீசார் ஏன் அவ்வாறு உறுதி செய்யப்பட்டதும் கைது செய்யவில்லை. புலனாய்வுப்பிரிவினர் பின்தொடர்ந்துகொண்டே இருந்தது ஏன். தாயின் சமாதிக்கு போய் வணக்கத்தை செய்யவிடாத நிலையில் அங்கு வைத்து கைது செய்தது ஏன். இது குடிவரவு சட்ட மீறல் நடவடிக்கையாக இருந்தால் வெள்ளிக்கிழமை முடிக்க சந்தர்ப்பம் இருந்தும் அடுத்து வரும் இரண்டு நாட்களும் விடுமுறை தினங்கள் என தெரிந்தும் அந்த நாட்களை இந்த சர்ச்சைகளை நீடிக்கச் செய்ய வேண்டியதன் அவசியம் என்ன.

இதற்குள் இருக்கும் அரசியல் உள்நோக்கமும், அரசியல் வழிகாட்டலும் இருந்திருக்கிறது என்று கருத முடிகிறது.

10 வருடங்களின் பின்னர் சென்ற வருடம் இலங்கை சென்றிருந்த போது நான் கலந்து கொண்ட சில கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் குறித்த செய்தி, புகைப்படங்களை கண்ட குடிவரவு திணைக்களத்தில் இப்போது பணியாற்றும் என் நண்பர் என்னை உரிமையுடன் கடிந்து கொண்டார். உனக்கு இங்கு திரும்பவும் வந்து போகும் உத்தேசமில்லை என்றால் இப்படி நீ செய்துகொள். இல்லயேல் நல்லபிள்ளையாக வந்த இடத்துக்கு திரும்பிவிடு என்றார். இன்னமும் எனக்கு தெரிந்த பல புகலிட அரசியல் செயற்பாட்டாளர்கள் நல்ல பிள்ளைகளாகவே நாடு சென்று திரும்புவதையும் காணக்கூடியதாகவே இருக்கிறது.

உல்லாசபயண விசாவில் வந்தவர் உல்லாச பிராணியாக மட்டுமே இருக்க வேண்டும் என்றும் வேறு எதுவித அரசியல் கருத்தையும் வெளியிட உரிமையற்றவர் என்கிற இந்த விதிகள் இதற்கு முன்னர் இருக்கவில்லையா. இருக்கின்ற விதிகளை மேலும் இருக்குகின்ற நடவடிக்கை மகிந்த கொடுங்கோண்மை அரசில் தான் வரலாற்றில் கடுமையாக பின்பற்றத்தொடங்கப்பட்டிருக்கிறது.

இதற்கான பரீட்சையை அவர்கள் சென்றவருடம் முன்னிலை சோஷலிச கட்சியின் தலைவர் குமார் குணரத்தினத்திடமிருந்து தொடங்கினார்கள். கட்சியின் முதலாவது காங்கிரஸ் கூட்டம் முழு அளவில் ஏற்பாடாகி இருந்த நிலையில், கூடத்திற்கு முதல் நாள் அவரை அதில் கலந்துகொள்ள முடியாதபடி அவரைக் கடத்தியது அரசாங்கம். இறுதியில் பாதுகாப்பு செயலாளர் அவர் வீசா காலாவதியாகியும் இருந்தார் என்பதை சாட்டாக வைத்து நாட்டை வெளியேற்றும் நிலைக்கு தள்ளினர். அரசாங்கத்துக்கு எதிராக வேகமாக வளர்ந்து வந்த அந்த கட்சியை முலையிலேயே கிள்ளியெறிய முற்பட்டனர். 

அரசியல் பழிவாங்களையும் கடும் எச்சரிக்கைகளையும் இப்படியான நடவடிக்கைகளால், எதிர் கருத்துள்ள அனைத்து தரப்பினர்களுக்கும் செய்தார்கள்.

அடுத்ததாக தமிழ் சங்கத்தில் ஏற்பாடு செய்யப்படிருந்த தோழர் நா. சண்முகதாசனின் 20வது நினைவு தினத்தை முன்னிட்டு தோழர் அ.மார்க்ஸ் உரையாற்ற அழைக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் அங்கு புகுந்த குடிவரவு குடியகல்வு திணைக்களத்தை சேர்ந்தவர்கள், உல்லாச பிரயாண விசாவில் வந்த அவருக்கு அங்கு பேச்சாளராக கலந்துகொள்ள சட்டப்படி உரிமையில்லை என்று அவரை தடுத்துநிறுத்தி எச்சரித்து சென்றனர்.

கடந்த ஒக்டோபர் மாதம் சுதந்திர ஊடக இயக்கம் ஏற்பாடு செய்திருந்த கூட்டமொன்றில் கலந்துகொண்ட IFJ - International Federation of Journalists தலைவி ஜாக்குலின் பார்க் மற்றும் ஜென்னி வோர்திங்டன் ஆகியோர் அக்கூட்டத்தில் புகுந்த புலனாய்வுப்பிரிவினர் மற்றும் குடிவரவு திணைக்கள அதிகாரிகளால் விசாரணைக்குட்படுத்தப்பட்டு நாடு கடத்தப்பட்டார்கள்.

இந்த மாத முற்பகுதியில் நிகழ்ந்த பொதுநலவாய மாநாட்டின்போது அவுஸ்திரேலியாவிலிருந்து பசுமை கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் ஜான் லொக்கி மற்றும் அக்கட்சியை சேர்ந்த ரியொன்னன் ஆகியோர் வந்திருந்தார்கள். வடக்கில் நிகழ்ந்த அரசியல் நிகழ்வுகளில் பங்கெடுத்துக்கொண்டார்கள் என்கிற குற்றசாட்டின் பேரில் “விசா நிபந்தனை மீறல்” என்கிற குற்றச்சாட்டில் நாடு கடத்தப்பட்டார்கள்.

இலங்கைக்கு உல்லாச பிரயாண விசாவில் வருபவர்கள் அரசியல் கருத்துக்களை வெளியிடுவதும், நிகழ்வுகளில் பங்கேற்று வருவதும் புதிதாக நிகழ்ந்த ஒன்றல்ல. ஆனால் வரலாற்றிலேயே மிக மோசமான கருத்து சுதந்திர பறிப்பை சகல வழிகளிலும் துணிச்சலாக செய்துவரும் அரசாங்கம் இந்த வழியையும் விட்டுவைக்கவில்லை.

அதுவும் சமீபகாலமாக இந்த வடிவத்தினாலான வழிகளில் ருசி கண்டிருக்கிறது என்றே சொல்லலாம்.

இதன் மூலம் அரசு அனைவருக்கும் குறியீடாக உணர்த்த முற்படும் செய்தி என்னவென்றால் உள்நாட்டு இலங்கையர் மட்டுமல்ல வெளிநாட்டவர்களும், இலங்கையில் பிறந்து வெளிநாட்டிலுள்ளவர்களாயினும் எங்களுக்கு எதிராக கருது சொல்லி தப்பிவிட முடியாது என்பதே.

அதைத்தான் எரிக் சுல்ஹைம்மும் தெளிவாக குறிப்பிட்டிருந்தார்.
அது மட்டுமல்ல இவ்வாறு நாடு கடத்தப்பட்டவர்கள் மீளவும் வீசா விண்ணப்பிக்கும் பட்சத்தில் அது கிடைக்காமலும் போகலாம். அவ்வாறு நிகழ்ந்தும் இருக்கிறது. பிறந்த மண்ணுக்கு மீள போக முடியாததை எவர் தான் ஜீரணிப்பார்.

இது போன்ற ஒரு உதாரணத்தை இந்திய விடயத்தில் அவதானித்திருபீர்கள். இந்த தூதுவராலயங்கள் அனைத்தும் அந்தந்த நாடுகளில் வாழும் இலங்கையர்கள் குறித்த புலனாய்வு வேலைகளை இலங்கை அரசை விட செய்து வந்திருக்கிறது என்பதே உண்மை. அவர்களிடம் விசா விண்ணப்பிக்கும் பலரை அழைத்து அமர்த்தி தகவல்கள் புடுங்குகின்ற வேலைகளையும் அழகாக செய்துவந்திருக்கிறார்கள். அதன் அடிப்படையில் பலருக்கு விசா இரத்தாகியும் இருக்கின்றன.

யுத்தத்தின் இறுதி மாதங்களில், ஏன் அதற்கு முன்னரும் வெளிநாடுகளில் நிகழ்ந்த பல ஆர்ப்பாட்டங்கள் பல தூதரங்களுக்கு முன்னால் நடத்தப்பட்டது. சீனா, ரஷ்யா, அமேரிக்கா, ஜப்பான், நோர்வே, இன்னும்... ஆனால் இந்திய தூதரங்களுக்கு முன்னால் எதுவுமே நிகழவில்லை. கடந்த காலங்களில் இலங்கைக்கு செல்லமுடியாத நிலையில் இருந்த பலருக்கும் இந்தியா ஒன்றே தமது உறவுகளை சந்திக்க இருந்த வாய்ப்பாக கருதி வந்தார்கள். அவர்களுக்கு எதிராக கருத்து கூறவோ, ஆர்ப்பாட்டம் செய்வதனூடாகவோ இந்திய விசாவை இழக்க எவரும் தயாராக இருக்கவில்லை. ஆனால் இந்தியாவின் முகம் என்ன என்பதும் இறுதி இந்தியாவில் தலையாய பணி என்ன என்பதும் எவருக்கும் தெரியாமலிருக்கவில்லை.

ஆக அப்படிப்பட்ட ஒரு தந்திரோபாயத்தைத்தான் இலங்கை இன்று உருவாக்கத் தொடங்கியுள்ளது.

இலங்கை அரசாங்கத்தை எதிர்த்து எந்தவொரு கருத்தையும் எவரும் எங்கும் வெளியிட முடியாத நிலையை ஏற்படுத்த சகல வழிகளிலும் அரண்களை ஏற்படுத்தி வருகிறது இலங்கை அரசு.

அரசியல் செயற்பாட்டாளர்கள், மனிதவுரிமை செயற்பாட்டாளர்கள், கருத்து சுதந்திர போராளிகள், ஊடகவியலாளர்கள் எல்லோருக்குமான மிக மோசமான எச்சரிக்கை இது.

ஜெயபாலனின் இந்த கைதும், அதனை மேலும் சர்ச்சைக்குரிய செய்தியாக்கி தொடர வைப்பதிலும் அரசின் வெற்றி இந்த இடத்தில் தான் இருக்கிறது. இந்த அச்சுறுத்தல் ஜெயபாலன் ரூபத்தில் அவர்களுக்கு இப்போது கிடைத்திருக்கிறது.

எனவே அனைவரும் முழு அளவில் இப் போக்குக்கு எதிராக குரல்கொடுக்க வேண்டிய முக்கிய தருணம் இது.

தமிழகத்தில் 28500 மலையக அகதிகள்..!

ஐந்து வருடங்களுக்கு முன்னர் மு.சிவலிங்கம் அவர்களால் அனுப்பப்பட்ட கடிதம் இது.


16.10.2008

Hon. Members of Parliament

அவசர வேண்டுகோள்.

தமிழகத்தில் வாழும் மலையக அகதிகளுக்கு இலங்கை குடியுரிமை வழங்கும் சட்டமூலமும் சம்பந்தப்பட்ட மக்களின் விருப்பமறிதலும்..

Bill on granting Sri Lankan citizenship to Indian origin Tamil refugees in Tamil Nadu refugee camps.. 

இலங்கை நாடாளுமன்றத்தில் மக்கள் விடுதலை முன்னணியினர் முன் வைக்கும், தமிழகத்தில் தங்கியுள்ள 28,500 அகதிகளுக்கு குடியுரிமை வழங்கும் பிரேரணையின் சட்டமூலம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. இந்த பிரேரணையின் சட்ட மூலம் நல்ல நோக்கத்தின் பெயரில் ஏகோபித்து ஏற்றுக் கொள்ளப்படலாம்.. அல்லது வாத பிரதி வாதங்களுக்குள்ளாகலாம்.

இன்று, வட கிழக்கு யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தமிழ்நாட்டு அகதி முகாம்களில் கடந்த 30 ஆண்டுகளாக இந்திய அரசின் உதவியுடன் வாழ்ந்து வருவது பலரும் அறிந்த விடயமாகும்.;  இலங்கை அகதிகள் தமிழ் நாடு முழுவதும் பரவலாக அமைந்துள்ள அகதி முகாம்களில் சிதறி வாழ்ந்து வருகின்றனர்.. அகதிகளாகச் சென்றவர்களில் பலர் தமிழகத்திலிருந்தே வெளி நாடுகளுக்கும் சென்றுள்ளனர்.. பலர் சுமுக நிலை ஏற்பட்டதும் இலங்கை திரும்புவதென்ற மன நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.. 

இவர்களில் இன்று 28 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்திய வம்சாவளி தமிழர்களாக அங்குள்ள 118 முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர். 1977 களில் ஏற்பட்ட ஜூலை இனக் கலவரங்களில் பாதிக்கப்பட்டவர்கள் வவுனியா, கிளிநொச்சி, முல்லைத் தீவு போன்ற மாவட்டங்களில் குடியேறி வாழ்ந்தனர். இம் மக்கள் யுத்தத்தின் தாக்கத்தினால் நிர்க்கதியாகி தமிழகம் சென்றவர்களாவர்.. 30 வருடங்கள் வாழ்ந்து முடிந்த கால எல்லைக்குள் ஒரு புதிய பரம்பரை உண்டாகியுள்ளதையும் நாம் அறிதல் வேண்டும்.

எனது அவதானிப்பின்படி அங்கு வாழும் இளைய சந்ததியினருக்கு, தாங்கள் இலங்கையைச் சார்ந்தவர்கள் என்றோ, இலங்கை யுத்த அகதி என்றோ, சரித்திரப் பின்னணி எதுவும் தெரியாது. தங்களை இந்தியர்களாகவே நினைத்து வாழ்ந்து வருகின்றனர்.

 மனிதர் வாழ்வில் 30 ஆண்டுகள் என்பது ஒரு அறை நூற்றாண்டில் காலடி வைக்கின்ற காலமாகும். இங்கு பெற்றோர்கள் நிர்க்கதி நிலையோடு வந்து விட்ட பின்னர் ஏற்பட்ட இயற்கைப் பெருக்கமும், குழந்தைகளோடு வந்தவர்களின் வளர்ச்சியும் ஒன்று சேர்ந்து புதிய பரம்பரையினரின் தோற்றமும் ஏற்பட்டுள்ளது.. அகதி முகாம்களில் வாழ்கின்ற இளைய பரம்பரையினர் வளர்ந்து, கணிசமான அளவு உயர் கல்வி பட்டம் பெற்றவர்களாகவும் (M.A.,  M.Sc.)  பலர் டாக்டர்களாகவும்;> (M.B.B.S) உருவாகியுள்ள சமூக மாற்றங்களையும் காணக் கூடியதாக இருக்கின்றது.

அதிகமானோர் தனியார் வர்த்தக நிலையங்களில், தொழிற்சாலைகளில்  நிலையான உத்தியோகங்கள் செய்து வருகின்றனர். தொழிலாளர் நிலையிலுள்ளவர்கள் சென்னையைச் சார்ந்த திரிசூலம், சென். அந்தனிஸ் மலை பிரதேசங்களில் கல் உடைப்பவர்களாகவும், பெரிய நகரங்களில் பழைய கட்டிடங்களை உடைப்பதிலும், ஈயத் தொழிற்சாலைகளில் ஈய உருண்டைகள் உருட்டும் தொழில்களையும் செய்து வருகின்றனர்..  இவர்களுக்கு இலங்கைக்கு திரும்ப வேண்டிய நினைப்போ, பாரம்பரிய நிலம், வீடு, சொத்துக்களைக் கொண்ட வட கிழக்குத் தமிழர்களைப் போன்று இலங்கை திரும்ப வேண்டும் என்ற நிர்ப்பந்தமோ, லட்சியமோ கிடையாது.. இந்த புதிய பரம்பரையினரின் பெற்றோர்கள் வட கிழக்கில் குடியேறி,  வீடு, நிலம், விவசாயக் காணி என்று சொத்துடமைக் கொண்டவர்களல்ல. 

இவர்கள் 30 ஆண்டுகள் தமிழகத்தில் வேரூன்றி விட்டவர்கள். தொழிலிலும், வாழ்க்கையிலும் நிரந்தர நிலையை உருவாக்கிக் கொண்டு, தமிழக வாழ்க்கை முறைக்கு தங்களை மாற்றியமைத்துக் கொண்டவர்கள்.  இவர்களின் விருப்பு வெறுப்புக்களை தனித் தனி குடும்ப உறுப்பினர்களாக  சந்தித்து, அல்லது, ஒருமித்து அவர்களை அழைத்து,  அவர்களின் மன நிலையை  அறிந்த பின்னரே, அவர்களுக்கு இலங்கை பிரஜா உரிமை பெற்றுக் கொடுக்கும் நல்ல காரியம் ஒரு தீர்க்க தரிசனமான வேலைத் திட்டமாக அமையலாம். அதுவன்றி,  இவர்கள் நாடற்றவர்கள், இவர்களுக்கு ஏதோ ஒரு நாட்டைச் சேர்ந்த தேசிய அந்தஸ்தை பெற்றுக் கொடுத்துவிட வேண்டும் என்ற முடிவு சிக்கலை ஏற்படுத்தலாம். இந்த நோக்கம் 1964 ல் சிறிமாவும், சாஸ்திரியும் செய்து கொண்ட பிழையான வரலாற்றுத் திருப்பத்தைப் போல் அமைந்து விடக் கூடாது..! அன்று சிறிமா –  சாஸ்திரி, சிறிமா - இந்திரா ஆகிய இலங்கை, இந்திய பிhதமர்கள் தன்னிச்சையாகச் செய்து கொண்ட ஒப்பந்தங்களின் மூலம் பல விபரீதங்கள் நடந்தன. ஒப்பந்தத்துக்குள் பாதிக்கப்பட்ட இந்திய வம்சாவளி மக்களின் சமூகப் பிரதிநிதிகளிடம் இவ்விரு நாட்டுத் தலைவர்களும் கலந்தாலோசிக்க வில்லை. இந்த ஒப்பந்தமும், இந்த ஒப்பந்தத்தால் ஏற்பட்ட சட்டமும் மக்களின் மனித உரிமை பிரச்சினையாக அல்லாமல், ஒரு அரச நிர்வாக வேலையாகவே ஆகிப் போனதை நாம் அறிய வேண்டும்.

மலையகத் தமிழரின் அரசியல் வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பங்களான 1948 ல் நடந்த குடியுரிமை பறிப்பு சட்டத்தின் போதும்,  மலையகத் தலைமைகள் வாளாவிருந்தன. 1964 ல் இலங்கை - இந்திய மக்கள் பங்கு பிரிப்பு ஒப்பந்தத்தின் போதும் வாளாவிருந்தன. இன்று வரை மலையகத் தமிழர்கள் இந்திய – பாகிஸ்தானிய 1949 ம் ஆண்டு 3 ம் இலக்க குடியிருப்பாளர் சட்டத்தின் கீழ்
(The Indian  and  Pakistani Residents(Citizenship) Act No.3 of 1949)   சர்டிபிக்கேட் வைத்துக் கொண்டு குடிகளாக இன்றி(Citizen) குடியிருப்பாளராக (Tenant) ஆப்பிரிக்கர் (Mode of African Pass) “பாஸ்” முறை வைத்திருந்ததைப் போல அரசியல் பேதமையில் வாழ்;ந்து வரும்  நிச்சயமற்ற தேசியத்தை நாம் கொண்டுள்ளோம்..

ஆகவே, இந்திய அகதி முகாம்களில் வாழும் மக்களிடம் அவர்கள் இந்திய குடிகளாக விரும்புகின்றார்களா..? இலங்கைக் குடிகளாக விரும்புகின்றார்களா..? என்பதை அறிந்து கொள்வதற்கு ஒரு ஆய்வு கணிப்பீட்டை (Study survey) ஏற்படுத்திக் கொள்வதே முதல் அடிப்படை முயற்சியாகும்.. இன்றைய மலையக பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த அகதி மக்களைச் சந்தித்து, அவர்களின் நிலைப்பாட்டை அறிந்து, டெல்லி அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தினால், அந்த அரசு செவி மடுக்கலாம். 120 கோடி குடிசனத் தொகையை அடையவிருக்கும் இந்தியாவுக்கு, 28500 மக்களை ஏற்றுக் கொள்வது ஒரு பொருட்டாக இருக்காது..

இந்தச் சமயத்தில் ஏற்கனவே நாடற்றவர்களாக மிஞ்சியிருந்த மலையகத் தமிழருக்கு, மக்கள் விடுதலை முன்னணியினர் முழு ஆதரவைக் காட்டி, குடியுரிமைப் பெறுவதற்கு துணை நின்றதை வரலாறு மறுக்காது.. மறக்காது.. அது போலவே அவர்களது இன்றைய முயற்சியும், பிரேரணையும் வரவேற்க வேண்டிய இச் சமயத்தில், இந்த மக்களுக்கு இலங்கை பிரஜா உரிமை வழங்கி, இலங்கைக்கு அழைக்கும் பட்சத்தில், இவர்கள் இலங்கை அரசினால் மீண்டும் ஒரு புனர்வாழ்வு திட்டத்தின் மூலம் இலங்கையில் குடியேற்றப்படுவார்களா..? தொழில் செய்த பலருக்கு பர்மா அகதிகளைப் போல, அதே தொழில் வாய்ப்பு பிரத்தியேகமாக செய்து கொடுக்கப்படுமா..? அல்லது ஏற்கனவே இவர்கள் வட கிழக்கில் குடியேறி வாழ்ந்த இடங்களில் இன்றைய யுத்த சூழலில் நிலம் பகிர்ந்தளிக்கப்பட்டு குடியேற முடியுமா..?  அல்லது, இவர்களின் பாரம்பரிய தொழிலான பெருந்தோட்டத் தொழிலுக்குள்ளேயே மீண்டும் தள்ளப்படுவார்களா..? என்பவைகளைப் பற்றி நாம் யோசிக்க வேண்டும்..

சம்பந்தப்பட்ட மக்களின் விருப்பங்களையும். நிலைப்பாட்டையும் அறிந்துக் கொள்ளாமல்ää ஒரு நாட்டின் பிரஜையாக்கிவிடுவதுää 1964 ம் ஆண்டு நடந்துவிட்ட வரலாற்றுத் தவறை மீண்டும் செய்வதாக அமையும்.  மற்றும் ஒரு மனித உரிமை மீறல் செயலாகவும் அமையும்..

ஆகவே மக்கள் விடுதலை முன்னணியினர் கொண்டு வந்துள்ள பிரேரணையின் சட்டமூலத்தை அமுலாக்கும் நிலை ஏற்படுமாயின், அதை தற்காலிகமாக நிறுத்திவைத்து, சம்பந்தப்பட்ட அகதி மக்களின் விருப்பங்களை அறிந்த பின்னர், நமது அரசு செயல்பட வேண்டும் என்று, தங்களின் பாராளுமன்ற விவாதத்தின் போது உரையாடுவதற்கு, எனது கருத்தினையும் ஆலோசிக்கும்படி பணிவன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.


இப்படிக்கு,
Murugan Sivalingam
Ex. Councellor  & Deputy Chairman, Central Provincial Council..
Secretary, Plantation Tamils Social Forum.
No. 56, Rosita Housing Scheme, Kotagala.
T.P. &  Fax -    051 2223012
E.mail  - moonaseena@yahoo.com

மக்கள் கவிமணி - "சி.வி.வேலுப்பிள்ளை" - சுப்பையா கமலதாசன்

சி.வி.வேலுப்பிள்ளை
கவிஞர், நாவலாசிரியர், தொழிற்சங்கவாதி, பாராளுமன்ற உறுப்பினர் என பல் பரிமாணங்களை கொண்ட வட்டகொடை மடக்கொம்பரை தோட்டத்தில் பிறந்து வளர்ந்து வாழ்ந்து 1983 ஆண்டு மறைந்த  சி.வி. வேலுப்பிள்ளை அவர்களின் 29 வது நினைவு தினம் நவம்பர்  19 அனுஷ்டிக்கப்படுகின்றது.

 ஹட்டன் ஹைலன்டஸ் கல்லூரியில் தனது ஆரம்ப கல்வியினையும், கொழும்பு நாலந்தாக் கல்லூரியிலும் உயர்கல்வியையும் கற்றதன் பின் நுவரெலியா காமினி வித்தியாலயத்தில் ஆங்கில ஆசிரியராக கடமையாற்றிய சி.வி அவர்கள், மலையக மக்களை அடக்கி ஒடுக்கிய  மேலதிகார நிர்வாகத்திற்கு எதிராக தனது தொழிற்சங்க பணிகளுக்காக ஆசிரிய தொழிலை கைவிட்டார். முழுநேர தொழிற்சங்கவாதியாக மாறி தோட்ட தொழிலாளர்களின் பிரச்சினைகளை தொழிற்சங்க ரீதியாக தீர்ப்பதற்கு தன்னை அர்ப்பணித்துக்கொண்டார். 
தேயிலைத் தோட்டத்திலே

இவர் இலங்கை இந்திய காங்கிரஸின் (தற்போதைய இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்) இணைச் செயலாளராக கடமையாற்றியுள்ளதோடு அதன் பின்னரான காலகட்டத்தில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் நிர்வாக செயலாளராக இணைந்து அமரர் வி.கே.வெள்ளையன் அவர்களுடன் தோளுக்குத்  தோள் துணையாக தொழிற்சங்க பணிகளை மேற்கொண்டவர். 

இலங்கை இந்திய காங்கிரஸின் செயலாளராக இருந்த காலத்தில் ஊழபெசநளள நேறள என்ற தொழிற்சங்க பத்திரிகையின் ஆசிரியராகவும் கடைமையாற்றினார். தொழிலாளர் தேசிய சங்கத்தில் பணியாற்றிய காலத்தில் தொழிலாளர் கல்வி மற்றும் தொழிலாளர் பிரச்சினை, தொழிலாளர் இலக்கியம் என்பவற்றை தொகுத்து ‘மாவலி’ எனும் தொழிற்சங்க, இலக்கிய இதழை வெளியிட்ட பெருமைக்குரியவர். இது தவிர தனியே கதைகளை சுமந்து வரும் ‘கதை’ எனும் சிற்றிதழையும் நடாத்தியவர்.

 1947 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் தலவாக்கலை தொகுதியில் வெற்றியீட்டி மலையக மக்களின் அவலங்களை பாராளுமன்றத்திலும் ஒலிக்க செய்துள்ளார்.

 இந்திய நாளிதழுக்கு  மலையகத்தின் நாட்டுப் புறப்பாடல்களை “தேயிலை தோட்டப் பாடல்கள்” என்ற தலைப்பில் தொடராக எழுதி வந்தார். இது மலைநாட்டு மக்கள் பாடல்கள் என்ற பெயரில் (1983) நூலுருவும் பெற்றமை குறிப்பிடத்தக்கது. 
சி.வி. சில சிந்தனைகள்
1963 ஆம் ஆண்டில் ஆசிய ஆபிரிக்க கவிதைகளின் முதலாவது தொகுப்பு 70 உலக கவிஞர்களின் கவிதைகளை தேர்ந்து தொகுப்பை வெளியிட்டது. அதில் இலங்கையைச் சேர்ந்த ஆறு கவிஞர்களின் கவிதைகள் இடம்பெற்றன. அந்த தொகுப்பில் இடம்பெற்ற ஒரேயொரு தமிழ்க்கவிஞன் சி.வி அவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. Tea Plucker எனும் கவிதையினை அந்த நூலுக்காக எழுதியுள்ளார்.

In The Ceylon tea Garden என்ற புகழ் மிக்க கவிதையினை சக்தி.அ.பால ஐயா  அவர்கள் தமிழில் மொழிபெயர்த்து தமிழர்கள் மத்தியில் சி.வியினை பிரபல்யப்படுத்தியிருந்தார். இந்த “தேயிலை தோட்டத்திலே என்ற நூல் 1969 இல் கண்டி செய்தி பதிப்பகத்திலும் 2007ஆம் ஆண்டு மல்லியப்பு சந்தி திலகரின் பாக்யா பதிப்பகத்திலும் இரு பிரசுரங்கள் கண்டிருந்தன. 
வீடற்றவன்

இவை தவிர ‘விஸ்மாஜினி’ என்ற கவிதை நாடகத்தினையும், வழிப்போக்கன் (Wayfarer) என்ற வசன கவிதையினையும் “Born to Labour” (உழைக்கப் பிறந்தவர்கள்) என்ற விவரணக் கட்டுரைத் தொகுப்பையும், வீடற்றவன், நாடற்றவர் கதை, இனிப்படமாட்டேன், வாழ்வற்றவாழ்வு போன்ற நூல்களையும் எழுதி மலையக இலக்கியத்திற்கும் பெருமை சேர்த்தவர் சி.வி வேலுப்பிள்ளை அவர்கள். மலையக மக்களின் வாழ்வியலை இலங்கை சுதந்திமடைந்த காலத்திலேயே ஆங்கில மொழிமூலத்தில் எழுதிய பெருமை இவரைச் சாரும்.

இவரது இலக்கியம் மீதான பங்களிப்பைப் பாராட்டி கௌரவிக்கும் வகையில் முன்னாள் தினகரன் பிரதம ஆசிரியர் திரு.ஆர்.சிவகுருநாதன் தலைமையில் கொழும்பத் தமிழ்ச் சங்கத்தில் நடந்த இலக்கிய விழாவில் சி.வி. அவர்களுக்கு பேராசிரியர் கைலாசபதி அவர்கள் வழங்கிய “மக்கள் கவிமணி” என்ற அடைமொழியினூடு கவிஞர் சி.வி வேலுப்பிள்ளை இன்றும் இலக்கிய உலகில் குறித்துரைக்கப்படுவது மலையக இலக்கியத்துக்கு கிடைத்த கௌரவமாகும். 

பரதேசிகளைக் காண வந்த இளவரசர் சார்ல்ஸ் - என்.சரவணன்


மலையக மக்களின் துயர நிலைக்கு வித்திட்டுப்போன சாம்ராஜ்யத்தின் எதிர்கால ராசாவும் இந்நாள் இளவரசருமான சார்ல்ஸ் தங்கள் முன்நாள் அடிமைத் தேசத்தை பார்க்க வந்தார்.


பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்வதற்கு வருகை தந்திருந்த இளவரசர் சார்ள்ஸ் 16 ஆம் திகதி சனிக்கிழமை நுவரெலியாவுக்கு விஜயம் செய்து பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டதுடன் லபுக்கலை தேயிலை தொழிற்சாலையையும் பார்வையிட்டதுடன் அந்த தொழிற்சாலையில் அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தையும் திறந்து வைத்தார்.

இந்த தோட்டத்திற்கு பிரித்தானிய மகாராணி 1954 ஆம் விஜயம் செய்திருந்தார். நுவரெலியாவில் அமைந்துள்ள விசேட தேவையுடையவர்களுக்கான பாடசாலைக்கும் சென்றுள்ள சார்ள்ஸ் அந்த சிறுவர்களுடன் சிறிது நேரம் செலவு செய்ததுடன் இளவரசர் சார்ள்ஸ் மற்றும் அவரது மனைவி இளவரசி கமிலா ஆகியோர் லபுக்கலை அருகில் உள்ள தேயிலைத் தோட்டத்தை பார்வையிட்டார்.

சுவை பார்ப்பது எம் மக்களின் இரத்தமும் தான்

இந்த வார ஆரம்பத்தில் நிகழ்ந்த இளவரசரின் 65 வது பிறந்த நாளை முன்னிட்டு மேக்வூட் எஸ்டேட்டில் கேக் வெட்டி மகிழ்ந்தார்.

சார்ள்ஸின் வருகையை முன்னிட்டு அகலவத்த பெருந்தோட்ட கம்பனி லபுக்கலை தோட்டத்தில் பாரிய அளவிலான அபிவிருத்தி வேலைத்திட்டங்களை செய்து வந்தது.
நூறாண்டுகளாக பெருப்பிக்கப்படாத பாதைகள் திடீர் மாற்றம்
தயாராகும் உலங்குவானூர்தி இறங்குதளம்

இளவரசர் சார்ள்ஸின் வருகையை முன்னிட்டு உலங்கு வானூர்தி தரையிறங்குவதற்கான விசேட மேடை ஒன்றும் லபுக்கலை தோட்டம் இலக்கம் ஏழு பாடசாலைக்கு அருகாமையில் அமைக்கப்பட்டிருந்தது.

கடந்த சில நாட்களாக விசேட உலங்கு வானூர்தி பரீட்சார்த்தகரமாக தரையிறக்கப்பட்டு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டிருந்தthu. இத் தோட்டத்தில் அமைந்துள்ள பல குடியிருப்புகளின் கூரைகளுக்கு வர்ணம் பூசப்பட்டுள்ளதோடு தோட்டத்தில் சூழுவுள்ள பல இடங்கள் அபிவிருத்தி செய்யப்பட்டு அழகுமயப்படுத்தப்பட்டிருந்தது.
ஆண்டான்களின் ஒன்றுகூடல்
இளவரசர் வருகிறார் என்றவுடன் லபுகலை தோட்டம் பல கோடி ரூபாய் செலவில் தயார் செய்யப்பட்டது.

1841ஆம் ஆண்டு இலங்கையில் மெக்வூட்ஸ் என்பவரால் முதலில் தேயிலை தயாரிக்கப்பட்ட இடமான இந்த இடத்துக்கு சென்றார். இளவரசர் சார்ல்ஸ் விஜயம் செய்தது என்னவோ தனது முன்னைய சாம்ராஜ்ய நினைவுகளுடன் கூடிய சாதாரண நினைவாக வேண்டுமென்றால் இருக்கலாம்.

ஆனால் ஏறத்தாழ 190 வருடங்காளாக கொத்தடிமைகளாக வாழ நிர்ப்பந்திக்கப்பட்ட எம் மக்களுக்கு அவரது விஜயம் வெறும் செங்கம்பளம் விரித்து வரவேற்கக் கூடியதொன்றல்ல. இந்த விஜயம் கரை படிந்த பக்கங்களை திருப்பிப் பார்க்கும் ஒரு தருணமே நமக்கு. ஆண்டானை வரவேற்கும் அடிமை கூட்டமல்ல இனியும் நாங்கள் என்பது அவருக்கு விளங்கியிருக்காது.

பிரிட்டன் இளவரசர் சார்ள்ஸ் நுவரெலியாவில் தேயிலை தோட்டத்தை பார்வையிட சென்றபோது, அவருக்கு எம் மக்களை ஏதோ நிம்மதியாகவும் வசதியாகவும் வாழ வைக்கப்பட்ட கூட்டமாகவே காட்டுவதற்காக தோட்ட நிர்வாகம் ரொம்ப தான் பிரயத்தனப்பட்டது.

தொழிலாளர்களை புத்தாடை அணிந்து வேலைக்கு வருமாறு உத்தரவிட்டிருந்தது நிர்வாகம். அத்துடன், அன்றைய தினம் சலுகைகள் சிலவும் அள்ளி வீசப்பட்டுள்ளன. இதை பார்த்த இளவரசர் பிரமித்துப் போனாராம்.
இளவரசர் சார்ல்ஸ் தனது 65வது பிறந்ததின நினைவாக கேக் வெட்டுகிறாராம்

நம் தொழிலார்களின் அவல நிலையை எடுத்துக்கூற ஆங்கிலம் எங்கிருந்து வரும். மொழிபெயர்ப்புக்கு அனுப்பட்ட மொழிபெயர்ப்பாளர்கள் அதனை செய்வார்கள் என்கிறீர்களா... அவர்கள் என்ன தொழிலாளர்களின் நலன்விரும்பிகளா... நிர்வாகிகளின் விசுவாசிகள் தானே.

எம்மக்களின் தொடர் அவலநிலைக்கு தார்மீக பொறுப்பை ஏற்க வேண்டிய பிரித்தானிய அரசு என்றும், இன்றும் கரிசனை கொண்டதில்லையே. இன்று மட்டும் அக்கறைகொள்ள என்ன வழியிருக்கிறது? அதை எடுத்து சொல்லத்தான் நமக்கொரு அரசியல் தலைமை ஏது.

வந்தார்கள், வென்றார்கள், சென்றார்கள். இன்று மீளவும் தமது காலனித்துவ எச்சங்களை, காலனித்துவ பெருமிதத்தோடு கண்டுகளிக்க வந்திருக்கிறார்கள். வந்தவரிடம் நாம் எதனைத் தான் எதிபார்க்க இயலும்.

தமது தார்மீக கடமையை, தார்மீக பொறுப்பை செய்துமுடிக்க கிடைத்த அவர்களுக்கு கிடைத்த அரிய தருணங்களில் இதுவும் ஒன்று. ஆனால் குறைந்தபட்சம் உண்மை நிலையை அறியும் சிறிய அக்கறை கூட கிஞ்சித்தும் அவர்களுக்கு இந்த தடவையும் இருக்கவில்லை என்பது தான் உண்மை.

"பச்சை ரத்தம்" ஆவணப்பட இயக்குநர் தவமுதல்வன் நேர்காணல்


"பச்சை ரத்தம்" ஆவணப்பட இயக்குநர் தவமுதல்வனுடனான இந்த நேர்காணலை நமது மலையக ஆசிரியர்களில் ஒருவரான மல்லியப்புசந்தி திலகர் தமிழ்நாடு சென்று கண்டிருந்தார். இலங்கையிலிருந்து நிர்ப்பந்தமாக நாட்கடத்தப்பட்டவர்களின் இன்றைய கதி பற்றி முதற்தடவையாக ஆவணப்படமாக்கிய தவமுதல்வனை பிரேத்தியேகமாக கண்ட இந்த நேர்காணல் அங்கிருப்பவர்களின் உண்மை நிலையை தெளிவுபடுத்துகிறது.சாதாரண தர மாணவர்களுக்கு நாடகப் பயிற்சிப் பட்டறை


மலையக சமூக ஆய்வு மையம், அடையாளம் மற்றும் புதிய கலாசார தளம் ஆகிய அமைப்புக்கள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள க.பொ.த (சா/த) மாணவர;களுக்கான இலவச நாடகப் பயிற்சிப் பட்டறை ஒன்று எதிர்வரும் நவம்பர் 22ம் திகதி இடம்பெறவுள்ளது. 

டிக்கோயா கிறிஸ்து நாதர், ஆலயத்தில் (க்ரைஸ் சர்ச் ஆலய மண்டபம்) 
காலை 8.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை நாள் 22.11.2013 மற்றும் 23.11.2013 ஆகிய இரு தினங்களில் இந்த பயிற்சிப் பட்டறை இடம்பெறவுள்ளது. 

இந்நாடக பயிற்சி பட்டறை கிழக்கு பல்கலைக்கழக நுண் கலை துறை தலைவர்; கலாநிதி சி. ஜெயசங்கர் தலைமையில் இடம்பெறவிருக்கின்றது. 

இதில் சாதாரண தரத்தில் நாடகமும் அரங்கியலும் என்ற பாடத்தை தெரிவு செய்துள்ள மாணவரர்களை பங்குபெறச் செய்யும்படி பாடசாலை அதிபர் ஆசிரியர்களை வேண்டிக் கொள்கிறோம். 

சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கு இப்பயிற்சிப் பட்டறை உதவியாக இருக்கும். 

பயிற்சிப் பட்டறை தினங்களுக்கு தேவையான உணவு, உடை (ட்ரெக்கிட்-Trackit டீசேட் T-shirt) என்பனவற்றை மாணவர்களே கொண்டு வர வேண்டும். 

மேலதிக தகவல்களுக்கு: ஆசிரியர் ஆர். யோகேசன் (தொடர்பு இல.0779259835).

சி. வி. நூற்றாண்டும் மணிமண்டபமும்.

சி. வி. வேலுப்பிள்ளை
மலையக இலக்கிய முன்னோடியும் சிறந்த ஆங்கிலக் கவிஞரும் நாவல், சிறுகதை எழுத்தாளரும், சிறந்த தொழிற் சங்கவாதியும் தலவாக்கொல்லைத் தொகுதியின் முதலாவது பாராளுமன்ற உறுப்பினரும், ஈழத்தின் தாகூர் என்று அழைக்கப் பட்டவருமாகிய அமரர் சி. வி. வேலுப்பிள்ளையின் 29 வது நினைவுநாள் இன்று (19). அவருக்கு முதற்கண் நமது அஞ்சலிகள். அத்துடன் அவரது நூற்றாண்’டும் இதுவாகும். ஆம் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் 14 ம் திகதி (14.09.2014) அவரது 100 வது பிறந்தநாள் ஆகும்.

சில ஆண்டுகளுக்கு முன்பு தலங்கமையில் அவரது வீட்டுக் காணியில் அவரது நினைவிடத்தில் இருந்த அவரது அஸ்தி முதலியவற்றை அவரது பிறந்த ஊரான மடக்கொம்பரைக்குக் கொண்டுவந்து நினைவுத் தூபி எழுப்பிய இன்றைய தொழிலாளர் தேசிய சங்கத் தலைமைக்கு எனது மனமார்ந்த நன்றிகள். அதே தலைமைத்துவம் தலவாக்கொல்லையில் அல்லது மடக்கொம்பரையில் அவருக்கு மணி மண்டபம் எழுப்பி அதில் வைத்துப் பாதுகாப்பதற்காக அவரது ஆக்கங்கள், கையெழுத்துப் பிரதிகள், ஆவணங்கள், இலக்கிய சேமிப்புகள் மற்றும் நினைவுப் பொருட்கள் யாவற்றையும் எடுத்து வந்து விட்டதாக அவரது மகள் என்னிடம் கூறியிருக்கிறார். ஆனால், இன்று வரை தலவாக்கொல்லையிலோ மடக்கொம்பரையிலோ அவருக்கு மணிமண்டபம் எழுப்பப்பட்டு வருவதாகவோ அல்லது அதற்கான ஆயத்தங்கள் செய்யப்படுவதாகவோ தெரியவில்லை. இது மிகவும் கவலைக்குரியது.

எனவே, சம்பந்தப்பட்டவர்கள் மாத்திரமல்லாது அனைத்து மலையாக இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், கதாசிரியர்கள், கலைஞர்கள், தொழிற்சங்கவாதிகள், அரசியல்வாதிகள், சமூகவியலாளர்கள், கற்றோர் மற்றோர் யாவரும் தமது சித்தாந்த அல்லது தனிப்பட்ட வேற்றுமைகளை சற்று ஒதுக்கி வைத்துவிட்டு அமரர் சி. வி. வேலுப்பிள்ளைக்கு வசதியான ஓர் இடத்தில் மணிமண்டபம் அமைத்து, அவரது 100 வது பிறந்த நாளில் அதைத் திறந்து வைத்து அவரது புகழையும், நினைவுப் பொருட்களையும் பாதுகாக்க ஒன்று திரளுமாறு வேண்டுகின்றேன். இதுவே அவரது 29 வது நினைவு நாளான இன்று நாம் அவருக்குச்செயும் அஞ்சலியாக அமையட்டும்.

நன்றி. – (ச. ஜேசுநேசன், சட்டத்தரணி).

எரியும் பனிக்காடு – உண்மைச் சம்பவங்களின் தொகுப்பு - கிரி

எரியும் பனிக்காடு
இயக்குனர் பாலா படங்கள் எனக்கு ரொம்பப் பிடிக்கும் (அவன் இவன் தவிர). இவருடைய பரதேசி படம் “எரியும் பனிக்காடு” [ஆங்கிலத்தில் "Red Tea"] என்ற நூலைத் தழுவி எடுக்கப்படுவதாக கூறப்பட்டவுடன் இந்தப் புத்தகத்தைப் படிக்க வேண்டும் என்ற ஆவல் வந்தது. ஆன்லைனில் ஆர்டர் செய்து, நண்பர்களிடம் கூறி பெற்று விட்டேன் icon smile எரியும் பனிக்காடு   உண்மைச் சம்பவங்களின் தொகுப்பு 

புத்தகம் படிக்கும் ஆர்வம் சுத்தமாக குறைந்து விட்டாலும், படிக்க வேண்டும் என்று அமர்ந்தால் முடிக்காமல் விட மாட்டேன். இரண்டே நாளில் மொத்தப் புத்தகத்தையும் படித்து விட்டேன். இதற்கு புத்தகம் படிக்க நன்றாக இருந்ததும், எளிமையான மொழி நடையும் ஒரு காரணம்.

grey எரியும் பனிக்காடு   உண்மைச் சம்பவங்களின் தொகுப்பு நூலின் ஆசிரியர் பி.எச்.டேனியல் “Red Tea” என்று ஆங்கிலத்தில் எழுதிய நூலை 38 வருடங்களுக்குப் பிறகு தமிழில் இரா.முருகவேள் என்பவரால் மொழி பெயர்க்கப்பட்டு இருக்கிறது. இந்தப்புத்தகத்தை நான் விரும்பிப் படிக்க இன்னொரு முக்கியக் காரணம் உண்டு. நான் உடுமலைப் பேட்டையில் இருந்து பொள்ளாச்சி செல்லும் வழியில் உள்ள கரட்டு மடம் என்ற கிராமத்தில் உள்ள “காந்தி கலா நிலையம்” என்ற பள்ளியில் இரு வருடம் படித்தேன். இங்கே இருந்ததால், கதையில் வால்பாறை, ஆனை மலை, காடம்பாறை, அட்டகட்டி போன்ற இடங்கள் பற்றி வரும் போது எளிதாக புரிந்து கொள்ள முடிந்தது, பழக்கமான இடங்களாகவும் இருந்தது.

இது ஒரு உண்மைச் சம்பவம், உடன் கற்பனையும் சேர்த்து எழுதப்பட்டு இருக்கிறது. 1925 ம் ஆண்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் கதை [1920 - 1930] துவங்குகிறது. வேலை எதுவுமே கிடைக்காமல் சாப்பிடக் கூட எதுவும் கிடைக்காமல் சிரமத்தில் இருக்கும் கருப்பன், அடுத்த வேளை சாப்பாட்டிற்கே வழி இல்லாதவன். இவனுடைய மனைவி வள்ளி. தாழ்த்தப்பட்ட சாதியை சார்ந்தவர்கள். ஒரு வேளை சாப்பிட்டிற்கே நாய் படாத பாடு பட வேண்டிய நிலை, வயிறு நிறைந்து சாப்பிட்டே மாதங்கள் பல ஆகின்றன.

பக்கத்துக்கு சந்தைக்கு சென்று ஏதாவது வேலை கிடைக்குமா என்று கருப்பன் செல்கிறான். அங்கே டீ எஸ்டேட்டில் மேஸ்திரி வேலை பார்க்கும் கங்காணியை சந்திக்க. அவன் இங்கே இருந்து ஏன் கஷ்டப்படுகிறாய் டீ எஸ்டேட் வந்தால் அங்கே அப்படி இப்படி என்று ஆசை காட்டுகிறான்.

“சரிதாண்ணே! எனக்கும் எஸ்டேட்டுக்கு வரணும்னு ஆசயாத் தான் இருக்கு. ஆனா போகவர செலவுக்கு எங்கிட்டே காசே இல்லையே…” கருப்பன் இழுத்தான். அவன் முகத்தில் ஒரே நேரத்தில் வருத்தமும், மேஸ்திரி இதற்கும் ஏதாவது வழி சொல்லுவான் என்ற ஆசையும் ஒருங்கே இருந்தன.“

கங்காணி, கருப்பனுக்கு முன் பணம் 40 ருபாய் (இது அப்போது மிகப்பெரிய பணம் என்பது நீங்கள் அறிந்தது) கொடுத்து இதை நீ எஸ்டேட் வந்தால் சீக்கிரமே கட்டி விடலாம், அதன் பிறகு பெரும் பணம் சம்பாதித்து பணக்காரனாக திரும்பி வரலாம் என்று ஆசை காட்டுகிறான்.

கருப்பனுக்கும் சாப்பாட்டுக்கே வழி இல்லை, வேறு எந்த வேலையும் கிடைக்காததால் வள்ளியிடம் கூறி, இங்கே பசியால் சாவதை விட எஸ்டேட் சென்று கஷ்டமாக இருந்தாலும் ஏதாவது வேலை செய்து பிழைக்கலாம் என்று கூறுகிறான்.

இவர்கள் இருவரில் வள்ளி இவனை விட புத்திசாலியாக காட்டப்பட்டு இருக்கிறாள். கதை முழுக்க கருப்பன் தவறான முடிவு எடுக்கும் போதெல்லாம் வள்ளியே இவனுக்கு யோசனை கூறுகிறாள்.

“எதுக்கு காசு குடுத்து மலைக்குக் கூட்டிட்டுப் போவனும், அப்புறம் நமக்குப் புடிக்கலைனா ஏன் அவங்க காசுலேயே திருப்பி அனுப்பனும்? ஒண்ணும் புரியலயே?” வள்ளி தந்திரமாகப் பேசினாள். 

“என்னம்மா பேசாம இருக்கே, நீ என்ன சொல்லுத?” வள்ளிக்கு நேரடியாக பதில் சொல்ல முடியாமல் கருப்பன் அம்மாவை துணைக்கழைத்தான்.“

இவர்கள் ரயிலையே பார்த்து இராதவர்கள். இவர்கள் வால்பாறை எஸ்டேட் செல்ல இதன் மூலம் செல்லும் போது இதே அவர்களுக்கு மிகப்பெரிய ஆச்சர்யமாக இருக்கிறது. அங்கே கங்காணி சொன்ன வசதிகளுக்கும் அங்கே இருக்கும் நிலைக்கும் சம்பந்தமே இல்லாமல் இருப்பதை கண்டு இருவருமே அதிர்ச்சியாகின்றனர்.

உண்மையில் கருப்பனும் வள்ளியும் மட்டுமல்ல படித்த நானும் அதிர்ச்சியாகி விட்டேன். இப்படிக் கூட மோசமான மனிதர்கள் இருந்து இருக்கிறார்களா! என்று நினைக்கும் போதே பயமாக இருக்கிறது. இது போன்ற விசயங்களை எல்லாம் படிக்கும் போது ஈழம் தான் மனக்கண்ணில் வந்து செல்கிறது.

நீங்கள் இதுவரை எந்தப் படத்திலும் பார்த்து இராத அளவிற்கு இதில் மனிதர்களை மிக மோசமாக நடத்தி இருக்கிறார்கள். சுருக்கமாகக் கூறினால் அவர்கள் மனிதர்களை, விலங்குகளை விட மோசமாக நடத்தி இருக்கிறார்கள். யாராவது இறந்தால் கூட அது பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் அடுத்த வேலையை பார்க்கச் செல்ல வேண்டும்.

“விருட்டென்று கீழிறங்கிய வொய்ட் கடுங்கோபத்துடன் இளைஞனை கழுத்தைப் பிடித்து கீழே தள்ளி தடியால் கண்மூடித்தனமாக விளாச தொடங்கினார். “சக்கிலி நாய் *****, ***** ****, அட்சுரசுத்தமான தமிழில் வசவுகள் துரையின் வாயிலிருந்து மழை போல் பொழிந்தன.

“ஹீ யு” இடையிடையே துரை ஆங்கிலத்திலும் கத்திக்கொண்டிருந்தார். அவர் முகம் கோபத்தில் ரத்த சிவப்பாக மாறி விட்டது.

“எஜமானே எஜமானே” நான் அடிமை ஏழை எஜமான் கிட்டே வேலைக்கு வந்திருக்கேன்” அந்த பாவப்பட்ட இளைஞன் தரையில் ஊர்ந்து கொண்டே ஊளையிட்டான்.

“ப்ளடி பாஸ்டர்ட் செருப்பு காலோட எம்முன்னாடி நிக்கிற அளவுக்கு தைரியம் வந்திருச்சா. என் எஸ்டேட்டை விட்டு ஓடிப்போ” வொய்ட் உச்சஸ்தாயில் அலறினார்

கருப்பன் விக்கித்துப் போனான். கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்த நிகழ்ச்சி அவன் பேசும் சக்தியையே பறித்து விட்டு இருந்தது.“
பரதேசி
ஆங்கிலேயர்கள் அங்கே செய்த கொடுமைகளை படித்த போது வந்த ஆத்திரம் கொஞ்சம் நஞ்சமல்ல. நம் நாட்டில் வந்து நம் மக்களை என்ன பாடு படுத்தி இருக்கிறார்கள் என்பதை நினைக்கும் போது வெறுத்துப் போய் விட்டது. என்ன தான் வரலாற்றில் நாம் நிறையப் படித்து இருந்தாலும், இது போல ஒரு புத்தகமாக படிக்கும் போது வரும் உணர்வு வேறு மாதிரி இருக்கிறது. இது போல இன்னும் சில கிராமங்களில் நடந்து கொண்டுள்ளது என்பது இதை விடக் கொடுமையாக உள்ளது, குறிப்பாக வட மாநிலங்களில்.

சுருக்கமாகக் கூறினால் ஆங்கிலேயர்கள் சர்வாதிகார ராஜா [இடி அமீன்] போல இருந்து இருக்கிறார்கள், அது அவர்கள் இருந்தது மிகச் சாதரணமாக பதவியாக இருந்தாலும். இவர்கள் கூறுவதே தீர்ப்பு, இவர்களுக்கு கோபம் வரும் படி யாரும் நடந்தால் அவர்கள் கற்பனையிலும் நினைத்து இராத கொடுமைகள், தண்டனைகள் என்ற பெயரில் கிடைக்கும். துரைகள் என்று அழைக்கப்படும் இவர்கள் என்ன கூறுகிறார்களோ அதை மறு பேச்சு பேசாமல் யாராக இருந்தாலும் செய்தாக வேண்டும். மேஸ்திரி கங்காணி உட்பட. கங்காணிக்கே தர்ம அடி விழும் என்றால் புள்ள பூச்சி போல இருக்கும் கருப்பன் போன்றவர்களின் நிலை…!

இதோடு முடிந்து விடவில்லை. டீ இலையைப் பறிக்கும் பெண்களை பாலியல் சில்மிஷமும் துரை செய்வார். இதை அவர்கள் சகித்துக்கொள்ள வேண்டும், மறுத்தால் ஏதாவது காரணம் கூறப்பட்டு அலைக்கழிக்கப்படுவார்கள். துரைக்கு இணங்கினால் பணம் கூடுதலாகக் கிடைக்கும். இதனால் பணத்திற்காக ஒரு சில பெண்கள் இதற்கு இணங்கும் கீழ்த்தரமான வேலைகளில் நடப்பார்கள். இதற்கு சில கணவர்களும் துணையாக இருப்பார்கள்.

இதற்கு சம்மதிக்காத வள்ளி கடும் இன்னலுக்கு ஆளாவாள். இங்கே கடுமையான காலரா மற்றும் பல்வேறு நோய்கள் வரும். இதன் காரணமாக கொத்து கொத்தாக பலர் இறந்தும் போவார்கள். மழை பெய்து கொண்டே இருக்கும், குளிர் உடலை ஊசியாகக் குத்தும். இதனால் மருத்துவத்திற்கு செலவு அதிகம் ஆகும். சேமித்த பணம் கரைந்து கொண்டே இருக்கும், கடனும் ஏறிக்கொண்டு இருக்கும். கடன் கொடுத்தவர்கள் பொய் கணக்கு காட்டி ஏமாற்றுவதும் நடக்கும். கோழி, சாமிக்கு வெட்டினால் இந்த நோய் எல்லாம் வராது என்று பணம் வாங்கி, பூசை செய்கிறேன் என்று இவர்கள் அறியாமையைப் பயன்படுத்தி ஏமாற்றுபவர்களும் இருக்கிறார்கள்.

கருப்பனும் வள்ளியும் இங்கே வந்து மாட்டிக்கொண்டோமே என்று நொந்து ஊருக்கே சென்று விடலாம் என்றாலும் முடியாத நிலையில் இருப்பார்கள். இவர்கள் முன்பணமாக வாங்கிய பணத்தை கொடுத்த பிறகே இங்கே இருந்து செல்ல முடியும். இதன் காரணமாகவே இவர்களுக்கு முன்பணம் கொடுத்து சிக்க வைக்கிறார்கள். இவர்கள் வாங்கிய 40 ரூபாயை கொடுக்க மூன்று வருடம் ஆகிறது என்றால், இங்கே அவர்கள் படும் கொடுமையை உங்களால் உணர்ந்து கொள்ள முடியும். இது கதையாகக் கூறப்பட்டாலும் உண்மைச் சம்பவமே.

கருப்பன் இங்கே கொடுமை தாங்காமல் பக்கத்து எஸ்டேட் ல் வேலைக் கிடைக்குமா என்று ஞாயிறு விடுமுறையில் சென்று பார்த்து ஒரு ஏமாற்றுகாரனிடம் மாட்டிக்கொள்வான். எனக்கு உண்மையிலேயே இதைப் படிக்கும் போது செம பரபரப்பாகி விட்டது. ஐயோ! தயவு செய்து கருப்பனை காப்பாற்றி விடுங்க… என்று நினைக்கும் அளவிற்கு அவன் மீது பரிதாபம் வந்து விட்டது. இவர்களிடம் இருந்து தப்பித்து விடுவானா! என்ன ஆகும் என்று எனக்கு உண்மையில் செம பதட்டம் ஆகி விட்டது. மிகைப் படுத்தவில்லை உண்மையாகவே. இந்த புத்தகத்திலே இந்த பகுதி நான் மிக மிக டென்ஷன் ஆக படித்தேன்.

“திருட்டுபயலே, கழுதைக்குப் பொறந்தவனே, கடைசியா மாட்டிக்கிட்டியா! மூணு வாரமா உன்னைத் தேடிட்டு இருக்கேன். இப்ப இங்கன நிக்க. நான் அட்வான்ஸாக் குடுத்த பணத்தைக் குடுலே.”

கருப்பன் ஒரு வினாடி ஆடிப் போய் வாயடைத்து நின்று விட்டான். “என்ன சொல்லுத உனக்கென்ன பைத்தியமா? நான் எப்ப உங்கிட்ட பணம் வாங்கினேன்? போன ஞாயித்துக் கிழமை தானே உன்ன மொத தடவையாப் பார்த்தேன். என்னை விடு” பின்பு சமாளித்துக்கொண்டு பதிலுக்கு கூச்சலிட்டபடி திமிறினான். ஆனால் கோவிந்தசாமியின் பிடி இரும்புப் பிடியாக இருந்தது.

“திருட்டு நாயே என்னைத் தெரியாத மாதிரியா நடிக்கிற கஷ்டப்பட்டு சம்பாதிச்ச பணத்தை வாயில போட்டுட்டு இல்லைனா சொல்லுதே?”

டீ கடைக்குள்ளிருந்து இன்னும் இரண்டு பேர் ஓடிவந்து கருப்பனை பிடித்துக்கொண்டார்கள்.“

இவர்கள் வாழும் இடம் எல்லாம் நம்மால் கற்பனையில் கூட இருந்து வர முடியாது. மாட்டு தொழுவம் கூட நன்றாக இருக்கும். கங்காணி என்ன சொல்கிறானோ அதை செய்தே ஆக வேண்டும். உடல் நிலை சரியில்லை என்றாலும் வேலைக்கு வந்து தான் ஆகணும். இதை நூலின் ஆசிரியர் தத்ரூபமாக விவரித்து இருக்கிறார். நம் கண் முன்னால் இந்த இடங்கள் இருப்பது போல உள்ளது இவர் கூறுவதைப் படிக்கும் போது.

இங்கே உள்ள ஒரு கம்பவுண்டர் தான் இங்கே மருத்துவர். இவர் என்ன சொல்கிறாரோ தருகிறாரோ அது தான் மருந்து. இவர் கூறுவதே சட்டம்.

இதில் துரை காங்கிரஸ் காரர்களை கண்டபடி திட்டுகிறார். தற்போதும் திட்டிக்கொண்டு தான் இருக்கிறோம் அது வேற விஷயம் icon smile எரியும் பனிக்காடு   உண்மைச் சம்பவங்களின் தொகுப்பு  . காந்தியை எல்லாம் சகட்டு மேனிக்கு திட்டுகிறார். துரை பேசினாலே “ப்ளடி இந்தியன்” என்ற வார்த்தை தான் வருகிறது. பேச ஆரம்பித்து துவக்கத்திலும் நடுவிலும் முடிவிலும் சரமாரியாக இந்த வார்த்தை வருகிறது. ஆங்கிலேயர்கள் இந்த வார்த்தையை சாதரணமாகவே நம்மைப் பார்த்து கூறிக்கொண்டு இருந்து இருக்கிறார்கள்.

“ப்ளடி இந்தியன்” என்ற வார்த்தையை என்னுடைய சிறிய வயதில் அதிகம் விளையாட்டாக கேட்டு இருக்கிறேன். தற்போது தான் புரிகிறது இது எங்கே இருந்து வந்தது என்று. இவர்கள் இது போலத் தான் நம்மை திட்டிக் கொண்டு இருந்து இருக்கிறார்கள். இது அப்படியே பரவி நாம் விளையாட்டாக கூறும் அளவிற்கு ஊறி விட்டது. தற்போது இவை இல்லை என்றாலும் என் சிறு வயதில் இது அதிகம் கேட்டு இருக்கிறேன். நம் தமிழ் திரைப்படங்களில் கூட இந்த வார்த்தை கிண்டலாக வரும்.

காலரா மற்றும் பல நோய்களின் காரணமாக பலர் இறப்பதால், படித்த ஒரு மருத்துவர் (இந்தியர்) இங்கே வேலைக்கு அழைக்கப்படுகிறார். இதற்கு துரை வேண்டா வெறுப்பாக ஒத்துக் கொள்கிறார். இதற்கு இவர் கூறும் காரணம் “ப்ளடி இந்தியன்கள் செத்தால் என்ன? பிச்சைக்கார பயல்கள். அவர்கள் தான் பன்னி மாதிரி பெத்துப் போடுகிறார்களே! செத்தால் ஒன்றும் ஆகாது. மக்கள் எண்ணிக்கை குறையட்டுமே!” என்பது தான்.

மருத்துவராக வருபவர் தான் இந்த நூலின் ஆசிரியராக இருக்க வேண்டும். இவர் வந்து இங்குள்ள நிலையைப் பார்த்த பிறகு வெறுத்து, தான் இங்கு இருக்கப்போவதில்லை கிளம்பப் போகிறேன் என்று கூறுகிறார். பின்னர் இங்குள்ளவர்கள் சமாதானப்படுத்துகிறார்கள். தான் இங்கே இருக்க வேண்டும் என்றால் துரைக்கு சலாம் போட முடியாது (இங்கே மூச்சு முன்னூறு வாட்டி “சரி துரை அவர்களே!” என்று கூற வேண்டும்) அவர் கூறுவது படி எல்லாம் என்னால் நடக்க முடியாது, மருத்துவமனை மிக மோசமான நிலையில் உள்ளது இதை சரி செய்ய வேண்டும். இதெல்லாம் சரி என்றால் நான் தொடர்கிறேன் என்று கூறுவார்.

துரை, வேறு வழியில்லாமல் மருத்துவரின் நிபந்தனைகளுக்கு வேண்டா வெறுப்பாக ஒத்துக் கொள்கிறார். இதற்கு காங்கிரசின் வளர்ச்சியும் ஒரு காரணமாகக் கூறப்படுகிறது. ஆங்கிலேயர்கள் பெரிய ஆளாக இருந்தாலும், காங்கிரஸ் அதில் உள்ள காந்தி மற்றும் பல தலைவர்களின் போராட்டங்கள் எதிர்ப்புகளுக்கு பயந்தே இருந்து இருக்கிறார்கள் என்பதையும் காட்டுகிறது. இங்கு பலர் இறக்கிறார்கள் என்று வெளியே தெரிந்தால் காங்கிரஸ் போராட்டம் செய்யக்கூடும் என்ற பயமே காரணம்.

மருத்துவரின் அன்பான அனுசரணையான கவனிப்பு, அனைவரிடையேயும் அவரை கடவுளைப் போல நினைக்க வைக்கிறது. திட்டுகளையும் அடி உதைகளையும் மட்டுமே பார்த்தவர்களுக்கு ஆதரவான வார்த்தைகள், அன்பான கவனிப்பு எத்தகைய மகிழ்ச்சியைக் கொடுத்து இருக்கும் என்று நான் கூறித் தெரிய வேண்டியதில்லை.

இங்கு வரும் மருத்துவர் அங்குள்ளவர்களுடன் ட்ரக்கிங் செல்வார். இது தேவையே இல்லாத பகுதி. இது படிக்க நன்றாக இருந்தாலும் கதையின் வேகத்தை குறைக்கிறது / போக்கை திசை திருப்புகிறது. இதை ஒரு தனிப்பகுதியாகப் படித்தால் நன்று ஆனால், இதில் பொருத்தமில்லாதது. அதைவிட இந்தப்பகுதி முடிந்து ஒரு சில பக்கங்களிலேயே புத்தகமும் முடிந்து விடுகிறது. இதனால் ஒரு முழு மன நிறைவை இது தடுக்கிறது. இது தவிர புத்தகம் பட்டாசாக இருக்கிறது. அருமையான தமிழ் மொழி பெயர்ப்பு.

மக்களின் ரத்தங்கள் வியர்வையாக இந்த டீ எஸ்டேட்டில் இருப்பதால் தான் Red Tea என்று புத்தகத்திற்கு பெயர் வைத்ததாகக் கூறி இருக்கிறார் ஆசிரியர். இங்கு கஷ்டப்பட்ட மக்களின் நிலை உலகிற்கு தெரியாமல் போய் விடக் கூடாது என்ற எண்ணத்தில் இந்த நூல் எழுதப்பட்டு இருக்கிறது. நீங்கள் குடிக்கும் டீ யில் பல மக்களின் கடுமையான உழைப்பு அடங்கி இருக்கிறது என்பதை நினைத்துப் பாருங்கள் என்று கூறி இருக்கிறார். உண்மை தானே!

பி. எச். டேனியல்

ஆசிரியர் 1941 முதல் 1965 வரை 25 வருடங்கள் தேயிலை தோட்டங்களில் பணி புரிந்து இருக்கிறார். அந்த சமயங்களில் அங்கு பணி புரிந்தவர்கள் கூறிய தகவல்கள், அவர்கள் எழுத்துப் பூர்வமாக தெரிவித்த சம்பவங்களை அடிப்படையாக வைத்து இந்நூல் எழுதப்பட்டு இருக்கிறது. இதில் வரும் கதாப்பாத்திரங்கள் கற்பனை ஆனால் சம்பவங்கள் உண்மை. இது தேயிலை தோட்டத்தில் பணி புரிந்தவர்கள் பற்றிக் கூறினாலும் காபி மற்றும் ரப்பர் தோட்டங்களில் பணி புரிந்தவர்களுக்கும் பொருந்தும் என்று கூறி இருக்கிறார்.

இரா. முருகவேள்

ஆசிரியர் பி எச் டேனியல் அவர்களின் மகள் திருமதி பமீலா மோசஸ் மற்றும் அவரது கணவர் மோசஸ் அவர்களிடம் அனுமதி பெற்று இரா முருகவேள் அவர்கள் இதை தமிழில் மொழி பெயர்த்து இருக்கிறார். நியாயமாக இந்தப் புத்தகம் தமிழில் எப்போதோ மொழி பெயர்க்கப்பட்டு இருக்க வேண்டும். சம்பவம் நடந்த இடம் நம் தமிழ்நாடு. நாம் இவற்றை நிச்சயம் அறிந்து இருக்க வேண்டும். இதற்கான முயற்சி எடுத்தமைக்காக நான் இவருக்கு நன்றி கூறுகிறேன்.

இந்தப் புத்தக விமர்சனம் கடந்த வாரமே எழுத வேண்டும் என்று நினைத்தேன். நேரமின்மை காரணமாக எழுத முடியவில்லை. இந்த வாரம் வெள்ளிக் கிழமை “பரதேசி” வெளியாகிறது எனவே அதற்குள் எழுத வேண்டும் என்று எழுதியது. இதை எழுதியதில் எனக்கு முழுத் திருப்தி இல்லை அவசரமாக எழுதியதால் ஆனால், படம் வெளியாகும் முன்பு எழுதினால் நன்றாக இருக்குமே என்று எழுதி விட்டேன்.

புத்தகம் இங்கே வாங்கலாம்.

மொத்தப் பக்கங்கள் 336, கதை 325

விலை 150 ருபாய்

இது போன்ற உண்மைக் கதைகளில் உங்களுக்கு ஆர்வம் இருந்தால், இந்தப் புத்தகம் வாங்க உங்களுக்கு தாறுமாறாக பரிந்துரைக்கிறேன். icon smile எரியும் பனிக்காடு   உண்மைச் சம்பவங்களின் தொகுப்பு  . இது ஒரு U/A புத்தகம் என்பது என் கருத்து.

தமிழகத்தில் இலக்கிய விருதுபெறும் மலையக எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் - மல்லியப்பூ சந்தி திலகர்

தெளிவத்தை ஜோசப்
இலங்கை நாடானது கிராமிய பொருளாதார முறைமையில் இருந்து பெருந்தோட்ட பொருளாதார முறைக்கு கால் பதித்து கோப்பி, தேயிலை பயிர்செய்கைகளை ஆரம்பிக்கத் தொடங்கியவுடன் பொருளதாரத்தில் மாத்திரமின்றி சமூகக் பண்பாட்டு கலை இலக்கிய கட்டமைப்பிலும் பல மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின. அந்தவகையில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இலங்கையின் பொருளாதாரத்துக்கு வளம் சேர்ப்பதற்காக தென்னிந்தியாவிலிருந்து தொழிலாளர் மக்களும் வந்து சேர்ந்தனர். பச்சை வனங்களை பசுந்தளிர் கோப்பி, தேயிலை பயிர் நிலங்களாக மாற்றிய பெருமை இம் மக்களையே சாரும்.

வனப்பு மிக்க இலங்கையின் வளமான நீர்வீழ்ச்சிகளில் ஒன்றான துன்கிந்தை நீர்வீழ்ச்சி அமைந்துள்ள இலங்கையின் ஊவா மாகாணத்தின் பதுளை மாவட்டத்தில் பல தேயிலை தோட்டங்கள் அமைந்துள்ளன. அதில் ஊவா கட்டவளை எனும் தோட்டத்தில் அந்த தோட்டத்துக்கு வந்து சேர்ந்த தொழிலாளர்களுடன் அவர்களது பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக்கொடுக்க வந்த சந்தனசாமி ஆசிரியருக்கும் பரிபு+ரணம் அம்மையாருக்கும் 1934 ம் ஆண்டு மகனாக பிறந்தவர் ஜோசப்.

ஊவா கட்டவளை தோட்டத்துப் பள்ளியில் தனது தந்தையையே குருவாகக் கொண்டு கல்வியை ஆரம்பித்தவர் சிலகாலம் தமிழகத்திலும் பின்னர் பதுளை பீட்ஸ் கல்லூரியிலும் கல்வியை தொடர்ந்திருக்கிறார்.

கத்தோலிக்க இறைபக்தி நிறைந்த குடும்ப பின்னணியோடு இல்லறத்தில் பிளோமினா அவர்களை கரம்பிடித்திருக்கும் இவர் நான்கு பிள்ளைகளின் தந்தையாவார். இன்றும் கொழும்பில் தனியாரர் நிறுவனம் ஒன்றிற்கு கணக்காளராக தொழிலுக்கு புறப்பட்டு விடும் இவர் இலங்கையின் சாமான்ய பிரஜைகளில் ஒருவர். சக மனிதர்களோடு சக மனிதனாக சகஜமாக வாழ்ந்துவரும் இவர் பொதுப் போக்குவரத்தில் சக பயணியாக மக்களோடு மக்களாக வாழ்க்கை பயணத்தில் இணைந்திருப்பவர்.

இவர் நாளாந்த வாழ்வில் மக்களோடு பழகுகின்ற தன்மையும், அவரது சமூக பிரக்ஞையும், சமூகம் நோக்கிய அவரது வித்தியாசமான பார்வையும் அவரது படைப்புக்களில் ஒரு வித்தியாசத்தன்மையையும் யதார்த்தத்தையும் கொண்டுவந்து விடுகின்றது.

மக்களின் வாழ்க்கையை தமது எழுத்துக்களின் ஊடாக படைப்பாக்கம் செய்யும் செழுமைப் பெற்றவர் ஜோசப். அவரது ஒவ்வொரு படைப்புக்குள்ளும் சமூக வாழ்வின் பலவேறு நுணுக்கங்களையும் வெளிக் கொணர்ந்திருப்பவர்.

எப்போதும் தேடல் மிகுந்த இவரது வாசிப்புப் பழக்கம் இவரது வீட்டினை ஒரு வாசிகசாலையாகவும், பலநூறு புத்தகங்களைக்கொண்ட ஒரு நூலகமாகவும் ஆக்கிவிட்டிருக்கின்றது.


1963 இல் பதுளை தெளிவத்தை எனும் தோட்டத்தில் ஆசிரியராகவும் பகுதி நேர எழுதுவினைஞராகவும் தொழில் தொடங்கியவர் அப்போதே தமிழகத்தில் இருந்து வெளிவந்த உமா’ ‘பேசும் படம்கொழும்பில் இருந்து வெளிவந்த கதம்பம்ஆகிய இதழ்களுக்கு எழுதி தெளிவத்தை ஜோசப்எனும் இலக்கிய பெயருக்கு சொந்தகாரரானார்.


1963 ஆம் ஆண்டு வீரகேசரி பத்திரிகை நடாத்திய மலையக சிறுகதை போட்டியில் பாட்டி சொன்ன கதைஎன்ற கதையின் ஊடாக தன்னை அங்கீகாரம் பெற்ற எழுத்தாளராக மாற்றிக்கொண்டவர். தனது மனைவியின் பிளோமினா என்ற பெயரிலும், தமது பிள்ளைகளான, திரேசா, சியாமளா, ரவீந்திரன், ரமேஸ், போன்ற பெயர்களிலும் ஜேயார், ஜோரு என்கின்ற புனைப் பெயர்களிலும் சிறுகதை, நாவல், இலக்கிய கட்டுரைகள், ஆய்வுக்கட்டுரைகள், வானொலி நாடகங்கள், தொலைக்காட்சி நாடகங்கள், திரைப்பட வசனம் என பல்வேறு தளங்களிலும் தனது இலக்கிய ஆளுமையை பதிவு செய்திருப்பவர்.

 இலங்கையில் உருவான புதிய காற்றுஎன்ற திரைப்படம் இவரது திரைக்கதை வசனத்தோடு உருவானது என்பது குறிப்பிடத்தக்கது.

காதலினால் அல்ல, காலங்கள் சாவதில்லை, நாமிருக்கும்நாடே, பாலாயி, மலையக சிறுகதை வரலாறு, குடை நிழல், நாங்கள் பாவிகளாக இருக்கிறோம், இருபதாம் நூற்றாண்டின் ஈழத்து இதழியல் வரலாறு என பல்வேறு படைப்புக்களை தந்திருக்கிறார். கடந்த ஐம்பது ஆண்டுகளில் பல்வேறு சஞ்சிகைகள், பத்திரிகைகளில் அறுபதுக்கு மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார்.

மலையக சிறுகதை வரலாறு, துரைவி தினகரன் சிறுகதைகள், உழைக்கப்பிறந்தவர்கள் போன்ற படைப்புக்களின் ஊடாக மலையக இலக்கிய வரலாற்றை பதிவு செய்துள்ளார். சுதந்திர இலங்கையின் ஐம்பது சிறுகதைகள் எனும் தொகுப்பிலும் இவரது சிறுகதை இடம்பெற்றுள்ளது.


இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, கனடா, சிங்கப்பு+ர், என பல வெளிநாடுகளும் இவரை அழைத்து கௌரவித்திருப்பது இலங்கை, மலையக இலக்கியத்துக்கு கிடைத்த பெரும் கௌரவமாகவே அமைகிறது.

இலங்கையில் வெளிவரும் இலக்கிய இதழ்களான மல்லிகை, ஞானம் ஆகியன தனது அட்டைப்படத்தில் தெளிவத்தை ஜோசப் அவர்களை பதிப்பித்து கௌரவம் செய்திருக்கினறன.

அடிப்படையில் கணக்காளர் என்ற தொழிலின் ஊடகவே தனது வாழ்க்கையை நடாத்திவரும் இவர் இலக்கிய வேட்கையோடு ஆர்வமாகவும் சுறுசுறுப்பாகவும் இயங்கிக்கொண்டிருக்கும் இவர் மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தின் தலைவராக இருந்து தனது அடுத்த தலைமுறைகளுக்கு வழிகாட்டியாக திகழ்கிறார். இவரது படைப்புகள் குறித்து இலங்கையிலும் தமிழகத்திலும் பல்கலைக்கழக மாணவர்கள் ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளனர்.


தெளிவத்தை ஜோசப் அவர்கள் தனது படைப்புகளுக்காக பல்வேறு விருதுகளை வென்றவர். இலங்கை அரச சாகித்திய விருது, கலாபு+சணம் விருது, தேசிய இன ஒற்றுமைக்கான சாகித்திய விருது, கம்பன் கழக இலக்கிய விருது ஆகியவற்றோடு 2008 ம் ஆண்டு எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் வழங்கிய தமிழியல் விருதினையும் தமிழியல் வித்தகர் பட்டத்தினையும் பெற்றவர்.

அத்தோடு, மலையக சிறுகதை வரலாறு எனும் ஆய்வு நூலுக்காக 2001 ம் ஆண்டு பண்டிதமணி சி.கணபதிபிள்ளை நினைவாக வழங்கப்படும் உயர் விருதான சம்பந்தன்விருதினை பெற்றுக்கொண்ட முதல் மலையக எழுத்தாளர் என்ற பெருமை பெற்றவர். தனது குடை நிழல்என்ற நாவலுக்காக தென்னிந்தியாவின் சுபமங்களா பரிசினை பெற்றதும் குறிப்பிடத்தக்கது. அத்தோடு இவரது இலக்கிய சேவையை கௌரவித்து பேராதனை பல்கலைக்கழகம் 2007 ம் ஆண்டு உயர் விருதினை வழங்கியிருக்கிறது. 2011 ஆம் ஆண்டு கொடகே நிறுவனம் வழங்கும் வாழ்நாள் சாதனையார் விருதும், 2013 ஆம் ஆண்டு கொழும்புப் பல்கலைக்கழக தமிழச்சங்க விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தின் எழுத்தாளரான ஜெயமோகன் அவர்களின் பிரபலம் பெற்ற படைப்பான விஷ்ணுபுரம்பெயரில் நிறுவப்பெற்றுள்ள விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்இந்த (2013) ஆண்டுக்கான இலக்கிய விருதினை தெளிவத்தை ஜோசப் அவர்களுக்கு அறிவித்துள்ளது. தெளிவத்தை ஜோசப் அவர்களுக்கு இம்முறை தமிழகத்தில் வழங்கப்படவுள்ள விஷ்ணுபுரம்விருதினை இதற்கு முன்னர் அ.மாதவன், பு+மணி மற்றும் கவிஞர் தேவதேவன் ஆகிய இந்திய எழுத்தாளர்கள் பெற்றுக்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு லட்சம் இந்திய ரூபாவுடன் நினைவுச்சிற்பமும் வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு எதிர்வரும் 2013 டிசம்பர் மாதம் 22ம் திகதி தமிழ்நாடு, கோயம்புத்தூரில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது. இந்திரா பார்த்தசாரதி தலைமையில் நடைபெறவுள்ள இவ்விழாவில் தெளிவத்தை ஜோசப் அவர்கள் பற்றிய சிறு கைநூல் ஒன்றும் வெளியிடப்படவுள்ளது. இதனை மலையாளக் கவிஞர் பாலச்சந்திரன் வெளியிட்டு வைக்கவுள்ளார். அத்துடன் எழுத்தாளர் சுரேஷ்குமார் இந்திரஜித், ‘வெயில்திரைப்படப் புகழ் இயக்குனர் வசந்தபாலன் ஆகியோரும் விழாவில் உரையாற்றவுள்ளனர்.

கொடகே நிறுவனத்தினரால் 2010 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தெளிவத்தை ஜோசப் அவர்கள் எழுதிய தமிழகத்தின் சுபமங்களாபரிசு பெற்ற குடைநிழல்நாவல், மதுரை எழுத்துபதிப்பகத்தினரால் மறுபதிப்பு செய்யப்பட்டு மேற்படி விழாவில் வெளியிடப்படவுள்ளமை சிறப்பம்சமாகும்.

தலாத்துஓயா கே.கணேஷ் அவர்களுக்கு கனடா நாட்டில் வழங்கப்பட்ட தமிழியல் விருதுக்கு அடுத்ததாக இலங்கைக்கு வெளியே இலக்கிய விருது பெறும் மலையக எழுத்தாளராக தெளிவத்தை ஜோசப் அவர்கள் திகழ்கிறார்.
 

இணைந்திருங்கள்


Followers

Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates