வாசிப்பு மனிதனை பூரணமாக்குகின்றது. வாசிப்பு பழக்கம் ஒவ்வொருவரி-டமும் இருக்க வேண்டியது அவசியமாகும் வாசிப்பு மூலம் தகவல்களை அறிந்து கொள்ளவும். அறிவை வளர்த்துக் கொள்ளவும் முடியும். இதற்கு வசதியாகவே நாட்டின் பல பிரதேசங்களிலும் பொது நூலகங்கள் அமைக்கப்பட்டு இயங்கி வருகின்-றன.
ஆனால், இன்று தமிழ் மக்களைப் பொருத்தவரையில் குறிப்பாக, களுத்துறை மாவட்டத்தை எடுத்துக் கொண்டால் மக்கள் மத்தியில் வாசிப்பு பழக்கம் மிகவும் அரிதாகவே காணப்படுகின்றது. ஏன் பாடசாலை மாணவர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள் என பலரிடம் கூட இது மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது.
பாடசாலைகளில் நூலகங்கள் அமைக்கப்பட்டுள்ள போதிலும் அவை முறை-யாக இயங்குவதில்லை. இன்று சிறுவர் முதல் பெரியோர் வரையில் பல தரப்பி-னரும் தொலைக்காட்சி மோகத்திலும், கையடக்கத் தொலைபேசி புழக்கத்திலும் மூழ்கிக் கிடக்கின்றனரே தவிர, பத்திரிகை வாசித்து, நாட்டு நடப்பு, உலக நடப்புக்-களை அறிந்துகொள்வதிலும் நூல்களை வாசித்து அறிவுத்திறனை விருத்தி செய்து கொள்வதிலும் ஆர்வமற்றவர்களாகவே இருந்து வருகின்றனர்.
பாடசாலை மாணவர்கள் மத்தியில் நூல்களை வாசிக்கும் பழக்கம் அற்றுப் போய்விட்டதென்றே கூற வேண்டும். மாறாக, அவர்களின் கைகளில் கையடக்கத் தொலைபேசி வைத்திருப்பதையே காணமுடிகிறது.
பொது நூலகங்களில் இயங்கிவரும் தமிழ்ப் பிரிவுகளில் தினசரிப் பத்திரிகை மற்றும் நூல்கள் வைக்கப்பட்டுள்ள போதிலும் தமிழ் வாசகர்கள் அங்கு சென்று வாசித்தலில் ஈடுபடுவதைக் காணமுடிவதில்லை.
இதன் காரணமாகவே பொது நூலகங்களில் இயங்கிவரும் தமிழ்ப் பிரிவுகள் எவ்வித அபிவிருத்தியும் காணாது கவனிப்பாரற்ற நிலையிலேயே இருந்து வருகின்-றமை குறிப்பிடத்தக்கதாகும். நேரத்தை ஒதுக்கி நூலகத்துக்குச் சென்று வாசித்து, வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்திக் கொள்வதிலும் பத்திரிகை வாசித்து நாட்டுலக நடப்புக்களை அறிந்து கொள்வதிலும் ஆர்வமற்றவர்களாக தோட்ட மக்கள் தோட்-டங்களுக்குள்ளேயே முடங்கிக்கிடக்கும் நிலையிலேயே இருந்து வருகின்றனர்.
இந்த நிலையை மாற்றியமைத்து தமிழ் மக்கள் வாழும் தோட்டப்பகுதிகளி-லேயே தமிழ் நூலகம் அமைத்துக் கொடுத்து, அவர்கள் வாசித்தலில் ஈடுபட்டு பயன் பெறுவதற்கான ஒரு வசதியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என கடந்த காலத்தில் ஹொரணை பிரதேச சபையினால் ஒரு திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
சபையின் முன்னாள் தலைவர் யாமித் சந்தன ஹத்துருசிங்க மேற்கொண்ட முயற்சியினால் இங்கிரிய, றைகம் தோட்டம், கீழ்ப்பிரிவில் தோட்ட பாடசாலை அமைந்திருந்த காணியைப் பெற்று களுத்துறை மாவட்டத்தில் தோட்டமொன்றில் உருவாகப் போகும் முதலாவது தமிழ் நூலகம் எனக் கூறி 2013.05.22 இல் அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.
இந்து சமய ஆசாரப்படி கிரியைகள் மேற்கொள்ளப்பட்டு முன்னாள் அமைச்சர் நிர்மல கொத்தலாவ தலைமையில் கோலாகலமான முறையில் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. அப்போதைய அமைச்சராக இருந்த ஆறுமுகன் தொண்ட-மானின் அமைச்சினூடாக உதவியைப் பெற்று நூலகம் அமைக்கப்பட்டு யாழ்ப்-பாணம் மற்றும் இந்தியாவிலிருந்து நூல்கள் பெற்றுக்கொள்ளப்படும் என சபையின் முன்னாள் தலைவர் யாமித் சந்தன ஹத்துருசிங்க தெரிவித்திருந்தார்.
ஆனால், அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டு மூன்று வருடங்கள் கடந்துவிட்டபோ-திலும் இன்று வரையில் அந்த இடத்தில் உறுதியளித்தவாறு தமிழ் நூலகம் ஒன்று உருவாக வில்லை. அங்கு எந்த ஒரு பணியும் கூட ஆரம்பிக்கப்படாததுடன், அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டமைக்கான எந்த ஒரு அறிகுறியுமே காணாது காணியில் புல் பூண்டுகள் வளர்ந்து வெறும் காணி மட்டுமே காட்சியளித்த வண்ண-மாக உள்ளது.
தமிழ் நூலகம் உருவாகப் போகின்றது என சந்தோஷத்தில் இருந்த தமிழ் மக்-களின் எதிர்பார்ப்பை நிறைவேறாமல் வைக்காமல் போனமை குறித்து மிகுந்த அதி-ருப்தியும், கவலையும் அடைந்துள்ளனர். அரசியல்வாதிகள் தோட்ட மக்களுக்கு வழங்கும் வாக்குறுதிகள் அனைத்துமே நிறைவேற்றி வைக்கப்படுவதில்லை. அத்த-கைய வாக்குறுதிகளில் ஒன்று தான் இதுவும் என மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை அடிக்கல் நாட்டி வைக்கப்பட்ட மறுதினமே அங்கு நாட்டி வைக்-கப்பட்டிருந்த நினைவுப் பலகை இனந்தெரியாத சிலரினால் உடைத்து சேதப்படுத்தப்-பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும். அடிக்கல் நாட்டி வைக்கப்பட்ட அன்றைய தினத்தில் இங்கிரிய நகரில் உலக வங்கியின் உதவியுடன் சுமார் 3 ½ கோடி ரூபா செலவில் சகலவசதிகளுடன் அமைக்கப்பட்ட பொது நூலகக் கட்டடம் திறந்து வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
அடிக்கல் நாட்டி வைக்கப்பட்ட நூலகம் குறித்து ஏற்கனவே சுட்டிக் காட்டப்-பட்டிருந்ததையடுத்து அமைச்சர் மனோ கணேசன் கடந்த ஜுலை 19 அன்று குறித்த தோட்டத்துக்கு வருகை தரவிருப்பதாக மேல் மாகாணசபை உறுப்பினர் கே.ரீ.குரு-சாமி பத்திரிகைச் செய்தி மூலம் அறிவித்திருந்தார்.
இதனையடுத்து, அமைச்சரின் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்திருந்த தோட்ட மக்கள் அமைச்சர் வருகை தராமற்போனமை குறித்து மிகுந்த ஏமாற்றம-டைந்துள்ளனர்.
இதேவேளையில் நூலகம் அமைப்பதற்கென ஒதுக்கப்பட்ட காணி சுமார் ஆறு பேர்ச் அளவில் இருப்பதால் நூலகம் அமைப்பதற்கு போதுமானதாக இல்லையென்பதுடன், நூலகம் அமையப் பெறுவதற்கு பொருத்தமான சூழலைக் கொண்டிருக்கவில்லையெனத் தெரிவிக்கும் தோட்ட மக்கள், றைகம் கீழ்ப்பிரிவில் நூலகத்தை அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்குமாறும் அதற்கான காணியை அங்கு பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவித்துள்ளனர்.
எனவே, அமைச்சர் மனோ கணேசன் இது குறித்து கவனம் செலுத்த வேண்டும் என தோட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நன்றி - வீரகேசரி