Headlines News :

காணொளி

சுவடி

சுயாதீன ஆணைக்குழுக்களும் யாப்பைக் கூட்டாக புணர்தலும்! - என்.சரவணன்


இன்று 13.12.2018இல்  வெளியாகியிருக்கும் உயர்நீதிமன்றத் தீர்ப்பு 19வது திருத்தச் சட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்றும் கூற முடியும். நீதிமன்றங்களின் சுயாதிபத்தியத்தை உறுதிசெய்வதில் 19வது திருத்தச் சட்டத்தின் வகிபாகம் முக்கியம். சுயாதீன ஆணைக்குழுக்கள் பல உருவாக்கப்பட்டதும் அந்த திருத்தச் சட்டத்தில் தான்.

சிவில் சேவைத்துறை ஊழலும், அரசியல்/அதிகாரத்துவ தலையீடும், பணத் தலையீடுகளும் நிறைந்து மக்களுக்கு கிடைக்க வேண்டிய நீதி அயோக்கியர்களால் சூறையாடப்பட்டுக்கொண்டிருப்பதை தடுப்பதகாகத் தான் சுயாதீன ஆணைக்குழுக்கள் உருவாக்கப்பட்டன. இதற்கான அவசியத்தை வலியுறுத்தி பல ஆண்டுகளாக சிவிலியன்கள் தரப்பில் இருந்து பல கோரிக்கைகளும், வேண்டுகோள்களும், போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வந்திருக்கின்றன.

சமீபத்தில் குற்றப்புலனாய்வு திகாரி நிஷாந்த சில்வாவை ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் பொலிஸ் மா அதிபர் இடமாற்றம் செய்திருந்ததும் அந்த இடமாற்றத்தை தடுத்து நிறுத்தியது சுயாதீன பொலிஸ் ஆணைக்குழு தான் என்பதும் இங்கு கவனிக்கப்படவேண்டும். மகிந்த காலத்தில் இடம்பெற்ற கொலை, ஆட்கடத்தல், கொள்ளை உட்பட பல்வேறு வழக்குகளை விசாரித்து வருபவர் நிஷாந்த சில்வா. தற்போது மகிந்தவை குறுக்குவழியில் பிரதமராக்கியதும் முதலில் மகிந்த மைத்திரி கூட்டு செய்தவேளை; தங்களுக்கு எதிரான வழக்குகளிலிருந்து தம்மை மீட்பதற்கான முதல் கட்டமாக அந்த குற்றங்களை விசாரித்துவரும் அதிகாரியை அந்த விசாரணைகளிலிருந்து அகற்றியது. ஆனால் இந்த சுயாதீன ஆணைக்குழுவால் தான் ஜனாதிபதி, பொலிஸ் மா அதிபர் போன்றோரின் ஆணைகளையும் கூட தடுத்து நிறுத்த முடிந்திருக்கிறது. 

நல்லாட்சியின் 19

2015 “நல்லாட்சி” எனும் பேரில் பிரதான கட்சிகள் ஒன்றிணைந்து தேசிய அரசாங்கம் அமைக்கப்படுகையில் அவர்களின் முக்கிய வாக்குறுதிகளில் ஒன்று இந்த சுயாதீன ஆணைக்குழுக்களை அமைக்கும் யோசனையாகும். அதை அரசியலமைப்பு ரீதியில் செய்வதற்கு அதுவரை பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருக்கவில்லை. அரசியலமைப்பு மாற்றத்தை மேற்கொள்வதற்கு அதுவரை இருந்த தடையை இக்கட்சிகள் சேர்ந்து ஆட்சியமைத்தன் மூலம் சரிசெய்ய முனைந்தன. காலம் இழுபறிபட்டுக்கொண்டு போன நிலையில் புதிய அரசியலமைப்பை கொண்டு வரும் யோசனை கைவிடப்பட்டு அரசிலமைப்புக்கான 19வது திருத்தச் சட்டமாக அது சுருங்கியது. 19வது திருத்தச் சட்டம் இனப்பிரச்சினைக்கு தீர்வு தரும் எதுவித அம்சங்களும் இருக்கவில்லை. ஆனால் அத்திருத்தச் சட்டம் செய்த முக்கிய நல்ல அம்சங்களில் ஒன்று சுயாதீன ஆணைக்குழுக்களை அமைத்தது.

1978 அரசியலமைப்பை விட 2000 இல் சந்திரிகா அரசாங்கத்தின் போது (தற்போது இருப்பதை விட) முன்னேறிய அரசியலமைப்பொன்று சமர்ப்பிக்கப்பட்டது. அன்றைய எதிர்க்கட்சி ஐ.தே.க பாராளுமன்றத்திலேயே வைத்து அதனை கிழித்தும், எரித்தும் அந்த முயற்சியை கைவிடச்செயதனர்.

1978ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட குடியரசு அரசியலமைப்பின் மூலம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட கட்டற்ற அதிகாரங்களை இதுவரை வந்த அனைத்து ஜனாதிபதிகளும் துஷ்பிரயோகம் செய்திருக்கிறார்கள். அந்த நிலைமையை ஒழிப்பதாகக் கூறி வந்த சந்திரிகா, மகிந்த, மைத்திரிபால ஆகியோர் அனைவரும் அந்த அதிகாரத்தில் ருசிகண்டு அனுபவித்தார்கள். மேலதிக அதிகாரங்களைக் தமக்குக் குவித்துக்கொள்ள பேராசைப்பட்டார்கள். அவர்களிடம் குவிந்திருந்த அதிகாரங்களைக் கொண்டு சர்வாதிகாரப் போக்கைக் கடைப்பிடித்தார்கள். தான் தோன்றித்தனமாக நடந்துகொண்டார்கள்.

அந்த அதிகாரங்களைக் குறைப்பதற்காகக் கொண்டுவரப்பட்ட 19வது திருத்தச் சட்டத்தத்தால் கூட ஜனாதிபதியின் எச்சசொச்ச சர்வாதிகாரத்தையும், அதிகார பேராசையையும் கட்டுபடுத்த முடியவில்லை என்பதைத் தான் இன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நடவடிக்கைகள் வெளிப்படுத்தியிருக்கின்றன.


கடந்தகால சில உதாரணங்கள்:

78 தொடக்கம் 1994 வரையான 16 ஆண்டு காலம் நிறைவேற்று ஜனாதிபதிகளாக ஜே.ஆர்.பிரேமதாச, டி.பி.விஜேதுங்க ஆகியோர் இருந்திருக்கிறார்கள். 1994இலிருந்து இதுவரையான 24ஆண்டுகள் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவர்களே நிறைவேற்று ஜனாதிபதியாக இருந்திருக்கிறார்கள். 

1980இல் இடம்பெற்ற பொதுவேலை நிறுத்தத்தையும், தொழிற்சங்கங்களையும் அடக்கியொடுக்குவதற்கும் அது முதன்  முதலில் தான்தோன்றித்தனமாக, பயன்படுத்தப்பட்டது.

1983 கறுப்பு யூலையையும், யுத்தத்தையும் ஆரம்பிப்பதற்கு இந்த நிறைவேற்று அதிகாரம் பயன்படுத்தப்பட்டது.

இலங்கையின் இனப்பிரச்சினையைத் தீர்க்கவென 1987இல் இந்தியாவுடன் இலங்கை உடன்படிக்கையைக் கைச்சாத்திட்டு அதன் பின்னர் 13ஆவது திருத்தத்தின் மூலம் மாகாணசபைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனால், ஜனாதிபதியின் அதிகாரங்களைப் பயன்படுத்தி அந்த ஒப்பந்தம் அமுலாக்கப்படவில்லை. அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி மாகாணசபையும் கலைக்கப்பட்டது.

அதன் பின்னர் தொடர்ச்சியாக மோசமான அநீதியான அரசியல் முடிவுகள் நிறைவேற்று அதிகார ஜனாதிமுறையால் தான் மேற்கொள்ளப்பட்டுள்ளன

சுயாதீன ஆணைக்குழுக்களின் தனித்தன்மை

19ஆவது திருத்தத்தின் கீழ் மேற்குறிப்பிட்ட நடவடிக்கைகளைப் போல தொடந்தும் மேற்கொள்ள முடியாது. பாராளுமன்றத்தின் மூலம் உருவாக்கப்பட்ட “அரசியலமைப்பு பேரவை”க்கு கட்டுப்பட்டிருக்கும் இந்த ஆணைக்குழுக்கள்.

சுயாதீன ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ள பொதுநலவாய நாடுகளில் எல்லாம் அந்த ஆணைக்குழுக்களை நியமிப்பது நிறைவேற்று அதிகாரம் கொண்ட தலைவரே தவிர பாராளுமன்றமல்ல. உதாரணத்திற்கு இந்திய அரசியலமைப்பின் 316 (1) இன் படி அரச சேவை ஆணைக்குழுவுக்கும், 324 (2) இன் படி தேர்தல் ஆணைக்குழுவுக்குமான உறுப்பினர்களை இந்திய ஜனாதிபதியே நியமிப்பார். நமது நாட்டிலும் ஆரம்பத்தில் ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்ட காலத்திலிருந்தே அப்படித்தான் இருந்தது. 1972 யாப்பின் பிரகாரம் எல்லை நிர்ணய ஆணைக்குழு, அரச சேவை ஆலோசனைச் சபை, அரச சேவை ஒழுக்காற்று சபை, நீதித்துறை ஆலோசனைச் சபை என்பவற்றுக்கான உறுப்பினர்களை ஜனாதிபதியே நியமித்தார். 17வது திருத்தச் சட்டம் கொண்டுவரப்படும் வரை ஜனாதிபதியிடம் தான் அதற்கான அதிகாரம் இருந்தது.

ஜனாதிபதியின் அதிகாரம் மட்டுப்படுத்தப்பட வேண்டுமென, பரந்துபட்ட மக்களின்; கோரிக்கையின் விளைவாக 17ஆவது திருத்தம் 2001 ஒக்டோபரில் கொண்டுவரப்பட்டது ஆனால் அத்திருத்தமும் உரிய அதிகாரங்களை ஜனாதிபதியிடம் இருந்து பறிக்கவில்லை. 17 வது திருத்தச் சட்டத்திற்கு ஜே.வி.பி ஆதரவளித்திருந்தது ஜே.வி.பியின் அழுத்தத்தின் காரணமாகத் தான் முதன்முறையாக சுயாதீன ஆணைக்குழுக்கள் அத்திருத்தத்தின் மூலம் உருவாக்கப்பட்டன. ஆனால் தேர்தல் ஆணைக்குழு நியமிக்கப்படாமை மூலம் 17ஆவது திருத்தம் முதல்முறையாக மீறப்பட்டது. தான்தோன்றித்தனமான முறையில் அதிகாரம் தொடர்ந்தும் மக்கள் விரோத வழிகளுக்குப் பயன்படுத்தப்பட்டன.


ஜனாதிபதியின் தான்தோன்றித்தனம்

அரசியலமைப்பு பேரவையில் பரிந்துரையின்றி எந்த ஒரு உறுப்பினரையும் ஆணைக்குழுக்களுக்கு நியமிக்க முடியாது என்கிற விதியை மீறி ஜனாதிபதி அந்த அதிகாரங்களை தன் கையில் எடுத்துக்கொண்டு அனைத்து நியமனங்களையும் எதேச்சதிகாரமாக நியமித்தார்.

மக்களின் தொடர்ச்சியான கோரிக்கையை நிறைவேற்றுவதாகக் கூறிக்கொண்டு 18வது திருத்தச் சட்டம் 2015 ஏப்ரல் கொண்டுவரப்பட்டபோதும்; அத்திருத்தச்சட்டத்தின் மூலம் ஜனாதிபதி மேலதிக அதிகாரங்களை தனக்கு குவித்துக்கொள்வது தான் நிகழ்ந்தது. நீதிமன்றங்களின் அதிகாரங்கள் சில பறிக்கப்பட்டன. நீதிமன்றங்களின் தீர்ப்புகளின் மீது கூட தலையீடு செய்யப்பட்டன. சுயாதீன ஆணைக்குழுக்கள் இல்லாதொழிக்கப்பட்டு அதற்குப் பதிலாக கண்துடைப்புக்காக அதிகாரமற்ற சபைகள் உருவாக்கப்பட்டன. நீதிமன்றமும் பொலிசும் ஜனாதிபதியின் தேவைக்கேற்ப செயற்பட்டன. 

ஜனாதிபதி அமைச்சரவையின் பிரதானி ஆவார். பிரதம நீதியரசர், சட்டமா அதிபர், பொலிஸ்மா அதிபர், இராணுவத் தளபதிகள் ஆகிய அனைவரையும் ஜனாதிபதியே நியமித்தார். அதேசமயம் பாதுகாப்பு அமைச்சுப் பதவியையும், நிதியமைச்சுப் பதவியையும் அவரே வைத்துக்கொண்டார். முதலீட்டுச் சபை, தென்னிலங்கை அதிகாரசபை, அதிவேக நெடுஞ்சாலைகள், துறைமுகம், மின் உற்பத்தி நிலையங்கள் ஆகிய அனைத்தும் எதுவித சட்டமுமில்லாமல் ஜனாதிபதி தன்வசமாக்கிக் கொண்டார்.

18வது திருத்தச் சட்டத்தின் மூலம் ஒருவர் ஜனாதிபதிப் பதவியில் இரண்டு தடவைகள் மட்டுமே வகிக்க முடியும் என்கிற விதியை மாற்றி எத்தனை தடவை என்றாலும் வகிக்க முடியும் என்று மாற்றினார். ஏற்கெனவே ஜனாதிபதிக்கு இருந்த பெருமளவு அதிகாரங்கள் மேலும் அதிகரிக்கப்பட்டதுடன், அதுவரை இருந்த சுயாதீன ஆணைக்குழுக்கள் இல்லாது செய்யப்பட்டன.

19வது திருத்தச் சட்டம் இந்த விதிகளை மாற்றியது. இரண்டு தடவைகள் மாத்திரமே ஒருவர் ஜனாதிபதிப்பதவியை வகிக்க முடியும் என்று மாற்றியது. அத்துடன் இல்லாதொழிக்கப்பட்ட ஆணைக்குழுக்கள் மீண்டும் உருவாக்கப்பட்டதுடன் அந்த ஆணைக்குழுக்களின் சுயாதீனத்தை உறுதிசெய்யும் வகையில் மேலதிக அதிகாரங்களை வழங்கியது.

நீக்கப்பட்டிருந்த ஆணைக்குழுக்களை நியமிப்பதற்காக இருந்த அரசிலமைப்புப் பேரவை மீண்டும் உருவாக்கப்பட்டதுடன் ஆணைக்குழுக்களின் மீதான ஜனாதிபதியின் தலையீடு முறிக்கப்பட்டது.

அமைக்கப்பட்ட ஆணைக்குழுக்கள்
 • தேர்தல் ஆணைக்குழு
 • அரச சேவை ஆணைக்குழு
 • தேசிய பொலிஸ் ஆணைக்குழு
 • மனித உரிமைகள் ஆணைக்குழு
 • இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு
 • நிதி ஆணைக்குழு
 • எல்லை நிர்ணய ஆணைக்குழு
 • கணக்குச் சேவை ஆணைக்குழு
 • தேசிய பெறுகை (விலைமனுகோரல்) ஆணைக்குழு

ஆணைக்குழுக்களின் நம்பகம்

விசாரணை ஆணைக்குழுக்களுக்கும் நிரந்த ஆணைக்குழுக்களுக்கும் வித்தியாசம் இருக்கவே செய்கின்றன. இந்த சுயாதீன ஆணைக்குழுக்கள் பாராளுமன்றத்திற்கு கட்டுப்படுவதுடன் பாராளுமன்றத்துக்கு பொறுப்புக் கூறலைக் கொண்டிருத்தல் வேண்டும். இந்த ஆணைக்குழுக்களில் தேர்தல்கள் ஆணைக்குழு மாத்திரம் பாராளுமன்றத்திற்கு எவ்விதத்திலும் பொறுப்புக்கூறுவதற்கான அவசியம் கிடையாது என்ற வகையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

சுயாதீன ஆணைக்குழுக்களை அமைத்துவிட்டோம் என்று தம்பட்டம் அடித்தால் மட்டும்போதாது. அது இயங்குகிறதா? உரியவர்களுக்கு, உரிய நேரத்தில், உரிய வகையில் நீதி கிடைக்கச் செய்கிறதா என்பதை கையாளும் பொறிமுறை அரசிடம் இல்லை. அதுவே அதன் அர்த்தமற்ற தன்மைக்கு கட்டியம் கூறுகிறது.

அந்த ஆணைக்குழுக்கள் தாம் இயங்குவதற்கு போதிய வளங்களை அரசாங்கம் ஒதுக்குவதில்லை என்கிற குற்றச்சாட்டை சுமத்தி வந்திருக்கின்றன.

முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச ஆட்சியில் கொண்டுவந்த 1990/15ஆம் இலக்க சுற்றறிக்கையின் பிரகாரம், அரச நியமனங்களில் இன விகிகதாசாரத்தைப் பேணும் வழிமுறைகளை அரசாங்க சேவைகள் ஆணைக்குழுவும், தேசிய பொலிஸ் ஆணைக்குழுவும் பின்பற்றுவதற்கு ஏற்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும், இந்த ஆணைக்குழுக்களின் உறுப்பினர்கள் தெரிவிலும் இந்த இன விகிகதாசாரம் பேணப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த சுற்றறிக்கை இரத்தாக்கப்பட்டதில்லை. ஆனால் அதற்கு செயல் வடிவம் கொடுத்ததில்லை அரச நிறுவனங்கள். இந்த பாரபட்சங்களை சரி செய்வதற்கு இந்த ஆணைக்குழுக்களுக்கு இருக்கும் பொறிமுறை என்ன? இந்தக் கேள்வியை பாராளுமன்றத்தில் தொடர்ந்தும் வினவி வருபவர் டக்ளஸ் தேவானந்தா மட்டும் தான்.

கடந்த காலங்களில் அமைக்கப்பட்ட பல்வேறு ஆணைக்குழுக்களின் விசாரணைகளும், பரிந்துரைகளுக்கும் என்ன நடந்தன என்பது பற்றி நாம் அறிவோம். வெறும் கண்துடைப்பு ஆணைக்குழுக்களாக அவ்வப்போது மக்களின் கோரிக்கைகளையும், கவனத்தையும் திசைதிருப்பும் ஆணைக்குழுக்களாகவே இலங்கையின் ஆணைக்குழுக்கள் வரலாறு முழுக்க இருந்திருகின்றன. எனவே ஆணைக்குழுக்களை நம்பிக்கையுடன் பார்க்கும் காலம் கடந்துவிட்டது. சுயாதீன ஆணைக்குழுக்களின் சுயாதீனத்தை உறுதிசெய்வதும், அதற்கான வளங்களை ஒதுக்கி வேகமாக செயற்பட ஒத்துழைப்பதும், அரசியல் தலையீடற்றதாக அதனை பேணுவதற்கு உத்தரவாதமளிப்பதும் அரசின் கடமை. பாரிய பொறுப்பும் கூட. அரச அமைப்பு முறை மீது மக்கள் கொண்டுள்ள அதிருப்தியை சரிசெய்வதற்கு இருக்கின்ற முக்கிய பொறிமுறை இந்த ஆணைக்குழுக்கள். அந்த பொறிமுறை சீர்கெட்டால் மக்களின் இறுதி நம்பிக்கையும் சீர் கெட்டுவிடும் என்பது உறுதி.

நன்றி - தமிழர் தளம்


கதிர்காமரின் “தமிழ்” அடையாளம்: வென்றவையும், இழந்தவையும் - என்.சரவணன்


யார் விரும்புகிற ஒருவர் பிரதமராக நியமிக்கப்படவேண்டியவர் என்கிற சர்ச்சை இப்போது தலைதூக்கியுள்ளது. பாராளுமன்றத்தின் பெரும்பான்மை ஆதரவைப் பெற்றவரா அல்லது ஜனாதிபதியின் விருப்பைப் பெற்றவரா என்பதை சட்ட ஆராய்ச்சிக்கு உட்படுத்துமளவுக்கு பூதாகரமாகியுள்ளது இந்தப் பிரச்சினை. இந்த சர்ச்சையை உருவாக்கியிருப்பவர் ஜனாதிபதி. தான் விரும்பிய ஒருவரைத் தான் நியமிப்பேன் என்றும் அது அரசிலமைப்பின்படி சரியானதே என்றும் வாதிடுகிறார். இதே மைத்திரிபால 2005ஆம் ஆண்டு ஜனாதிபதி சந்திரிகாவால் பிரதமராக முன்மொழியப்பட்ட கதிர்காமரை நியமிக்கவிடாமல் மகிந்தவுக்குத்தான் பாராளுமன்றத்தில் ஆதரவு அதிகம் என்று வாதிட்டு மகிந்தவை பிரதமராக்க காரணமாக இருந்தவர். கதிர்காமர் போன்ற “தமிழர்களுக்கு” வரலாற்றில் நேர்ந்த கதியை நாம் சற்று திரும்பி பார்ப்போம்.

கடந்த 03.12-2018 அன்று ரணில் விக்கிரமசிங்க பொதுக்கூட்டத்தில் உரையாடிபோது இந்த கருத்தை உறுதிசெய்யும் வகையில் இப்படிக் கூறினார்.
“மகிந்த அன்று பிரதமராக நியமிக்கப்பட்டு ஒரு மாதத்தில் நான் சந்திரிகாவை சந்தித்தபோது அவரிடம் நேரடியாக கேட்டேன், ஏன் நீங்கள் மகிந்தவை நியமித்தீர்கள் என்று. அதற்கு அவர் பாராளுமன்றத்தில் அதிக ஆதரவை அவர் கொண்டிருக்கிறார் என எனக்கு பதிலளித்தார்.”
ரணில் அந்தப் பேச்சின் போது கூடவே இன்னொரு விடயத்தையும் கூறினார். “ஜாதிக ஹெல உறுமய லக்ஷ்மன் கதிர்காமர் பிரதமராவதை விரும்பவில்லை. அவர்களும் எதிர்த்து வருகிறார்கள்” என சந்திரிகா கூறியதாகக் குறிப்பிட்டார்.

ஜாதிக ஹெல உறுமய அன்று மோசமான தமிழர் விரோதப் போக்கை முன்னெடுத்த கட்சியாக வளர்ந்திருந்தது. அந்த 2004இல் தான் சிங்கள வீர விதான ஒரு இயக்கம் என்கிற நிலையில் இருந்து ஒரு கட்சியாக பரிணமித்து சிஹல உறுமய என்று பெயரை வைத்துக் கொண்டதுடன் பின்னர் ஜாதிக ஹெல உறுமய என்று பெயரை மாற்றிக்கொண்டார்கள். அந்தத் தேர்தலில் ஹெல உறுமய கட்சியானது அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் தனித்து 5.97% வீத வாக்குகளைப் பெற்று 9 உறுப்பினர்களை வென்றது. அந்தளவுக்கு பேரினவாதம் செல்வாக்குபெற்றிருந்த காலம் என்பதை இங்கு குறிப்பிட வேண்டும்.

கதிர்காமரை பிரதமராக்குவதில் அன்றைய ஜே.வி.பியும் ஆதரவு தெரிவித்திருந்தது என்று அன்றைய ஜே.வி.பியின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த நந்தன குணதிலக்க சமீபத்தில் சமூக வலைத்தளமொன்றில் தகவல் வெளியிட்டிருந்தார். தனக்கு பிரதமர் பதவி தராவிட்டால் அம்பாந்தோட்டையில் இருந்து கூட்டத்தைக் கூட்டிக்கொண்டு வந்து அலரி மாளிகையின் கூரையில் ஏறி நின்று சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக மகிந்த ராஜபக்ச ஒரு அவசரத் தகவலை ஜனாதிபதி சந்திரிக்காவுக்கு அனுப்பி வைத்ததாக அவர் அந்தக் குறிப்பில் தெரிவித்திருந்தார்.

மைத்திரிபால சொன்னது
இந்தக் கதையை உறுதிப்படுத்துகின்ற விபரங்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 16.07.2017அன்று “திவய்ன” சிங்களப் பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் இப்படிக் குறிப்பிடுகிறார்.


“மகிந்தவும் நானும் நெருங்கிய நெருங்கிய பழைய நண்பர்கள். 2000ஆம் ஆண்டு சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்வின் போது சந்திரிகா அவர்கள் எஸ்.பீ.திசநாயக்கவுக்கு வாக்களித்தபோது என் பக்கம் இருந்த முக்கியமானவர் தான் மகிந்த. 2005 தேர்தலில் நாங்கள் வென்றோம். பிரதமர் ஒருவரை தெரிவு செய்ய வேண்டிய நேரத்தில் சந்திரிகா அவர்கள் என்னைத் தொடர்புகொண்டார். “நீங்கள் பொலன்னறுவையில் இருக்காமல் உடனடியாக வாருங்கள்...” என்றார். உடனடியாக எப்படி வருவது ஐந்து மணித்தியாலங்களாவது ஆகுமே என்றேன். “அப்படியென்றால் நான் ஹெலிகொப்டரை அனுப்புகிறேன்” என்று கூறி அவர் ஹெலிகொப்டரை அனுப்பினார். நானும் வந்து சேர்ந்தேன். அங்கே லக்ஷ்மன் கதிர்காமர், எஸ்.பீ.திசாநாயக்க, பாலபட்டபந்தி போன்றோர் ஜனாதிபதியுடன் இருந்தார்கள்.

“இப்போது யார் பிரதமர்” என்று என்னிடம் கேட்டார். “ஏன் கேட்கிறீர்கள்” என்றேன். “இல்லை.. ஜே.வி.பியிடம் இருந்து ஒரு கடிதம் வந்திருக்கிறது. அவர்கள் அதிகாலை அரசியல் குழு கூட்டத்தைக் கூட்டி தீர்மானங்கள் எடுத்திருக்கிறார்கள். அவர்கள் லக்ஷ்மன் கதிர்காமரை தெரிவு செய்யும்படி கேட்டிருக்கிறார்கள். அவரை முடியாது போனால் அனுரா பண்டாரநாயக்கவை அல்லது மைத்திரிபால சிறிசேனவை பிரதமராக ஆக்கும்படி கேட்டிருக்கிறார்கள்.” என்று கூறி டில்வின் சில்வாவிடம் இருந்து வந்த கடிதத்தை என்னிடம் காட்டினார்.

“ஜே.வி.பிக்கு ஏற்றபடி நாம் நடந்துகொள்ளமுடியாது. நாம் சுதந்திரக் கட்சியின் தேவையின்படியே பிரதமரை நியமிப்போம். மகிந்தவை தெரிவு செய்வது தான் பலரின் விருப்பம்” என்று நான் கூறினேன்.

பின்னர் கதிர்காமரை சமாளித்தோம். “இனி என்ன செய்வது” என்று கேட்டார் சந்திரிகா அம்மையார்.

“மகிந்தவை பிரதமராக ஆக்குங்கள்” என்று நான் தான் கூறினேன். 2005இல் மகிந்தவை ஜனாதிபதியாக்குவதற்காக நான் பட்ட கஷ்டத்தை நான் தான் அறிவேன்.” 

ரணில் அரசைக் கவிழ்த்தது
2001 டிசம்பர் 05 நடந்த பொதுத்தேர்தலில் ரணில் தலைமையிலான ஐ.தே.க. வெற்றிபெற்று ஆட்சியமைத்தபோதும் விடுதலைப் புலிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையின் காரணமாக தென்னிலங்கையில் ரணில் அரசாங்கம் விடுதலைப் புலிகளுக்கு நாட்டை பிரித்துக்கொடுக்கப் போவதாக பெரும் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. ஜாதிக ஹெல உறுமய, இன்னும் பல சிங்கள பேரினவாத இயக்கங்களுடன் சேர்ந்து ஜே.வி.பியும் இனவாத அணியில் இருந்தபடி அந்த பிரச்சாரத்தை முன்னெடுத்தது. அந்த பிரச்சாரத்தின் விளைவு பேச்சுவார்த்தையை முற்றிலும் தோற்கடிக்கும் வரைக்கும் கொண்டு சென்றது. சந்திரிகா தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி மூன்று ஆண்டுகள் கூட கடக்காத ரணில் அரசாங்கத்தை 07.02.2014 அன்று  கலைத்தார்.


இந்த இடைக்காலத்தில் ஜே.வி.பி, ஜாதிக ஹெல உறுமய போன்ற கட்சிகளுடன் பலமான கூட்டை சுதந்திரக் கட்சி உருவாக்கியிருந்தது. அந்தக் கூட்டானது அடிப்படையில் தமிழர்களின் அபிலாஷைகளுக்கு எதிரான கூட்டாகவே உருவாகியிருந்தது. 2004 ஏப்ரல் 2 அன்று நடந்த பொதுத்தேர்தலில் ஜே.வி.பி சுதந்திரக் கட்சியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டு ஆளுங்கட்சியில் பங்கெடுத்தது. மொத்தம் 39 உறுப்பினர்களை அவர்கள் கொண்டிருந்தார்கள். எனவே அவர்களின் செல்வாக்கு அரசாங்கத்தில் ஓங்கியிருந்தது. அந்த அடிப்படையில் தான் அவர்கள் பிரதமரையும் தெரிவு செய்யும் நிர்ப்பந்தத்தை உருவாக்க முயன்றார்கள். 

கதிர்காமர் : சிங்கள விசுவாசி!?
சந்திரிகா அரசாங்கம் பதவியிலமர்ந்ததுமே லக்ஷ்மன் கதிர்காமரை பிரதமராக ஆக்கியது வெறும் தகுதிக்காக மட்டுமல்ல உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் தாம் ஒரு தமிழரை முக்கிய அரசாங்கப் பொறுப்பில் இருத்தியிருக்கிறோம் என்பதை அரசியல் பெருந்தன்மையாகக் காண்பிப்பதற்கும் தான். தேசியப் பட்டியலுக்கு ஊடாக பாராளுமன்றத்துக்குள் கொண்டுவந்து அதன் பின்னர் வெளிநாட்டலுவல்கள் அமைச்சராக ஆக்கப்பட்டார்.  கதிர்காமரும் தன்னை எவரும் தமிழர் சார்பானவர் என்று சந்தேகப்பட்டுவிடக்கூடாது என்கிற அளவில் தனது விசுவாசத்தை அளவுக்கு அதிகமாகவே காண்பித்தார். குறுகிய காலத்திலேயே விடுதலைப் புலிகளை சர்வதேச அளவில் தடை செய்விக்கும் அளவுக்கு அன்றைய சிங்கள அரசின் மீதான அவரின் தீவிர விசுவாசம் வெற்றிகண்டது. ஆட்சியில் வந்து மூன்று வருடத்துக்கு 1997ஆம் ஆண்டு புலிகள் இயக்கத்தை அமெரிக்கா தடைசெய்ய வைத்த பின்னர் சர்வதேச அளவில் ஏனைய நாடுகளும் அதையே பின்பற்றின.

தான் ஒரு தமிழர் தனக்கு இலங்கையில் எந்தவித பிரச்சினையும் இல்லையே என்கிற தொனியில் அவரது சர்வதேச பேச்சுகள் அமைந்திருந்தன. இத்தனைக்கும் அவர் தமிழர்களோடு தொடர்பில்லாத, தமிழர்களோடு அரசியல் பணிகளில் ஈடுபடாத, தமிழைப் பேச முடியாத, பல தமிழர்களால் தமிழராக அறியப்படாத ஒருவராக இருந்தார் என்பதை வெளிப்படையாக பலர் அறிந்திருந்தார்கள். அவரது “தமிழ் பூர்வீக” அடையாளம் சிங்களத் தரப்புக்கு வெற்றிகளை குவித்தது. அவர் பெளத்தர்களுக்காக களத்தில் இறங்கினார்.

லக்ஷ்மன் கதிர்காமர் 1999 இல் ஐக்கிய நாடுகள் சபையில் வெசாக் பௌர்ணமி தினத்தை சர்வதேச விடுமுறை நாளாக பிரகடனப்படுத்தும்படி கடும் முயற்சிகளை மேற்கொண்டார். அங்கிருந்த ஏனைய நாட்டு பிரதிகளைச் சந்தித்து அந்தப் பிரேரனைக்கு ஆதரவு திரட்டினார். இறுதியில் கதிர்காமரின் கடும் முயற்சியால் வெசாக் நாளை சர்வதேச விடுதலை நாளாக்கும் பிரேரணை ஐ.நா. வில் நிறைவேறியது. இந்தப் பிரேரணையின் படி விரும்பிய நாடுகள் அந்த விடுமுறையை அமுல்படுத்தலாம். இந்த வெற்றியினால் சிங்கள பௌத்தர்கள் கதிர்காமரை இன்றும் கொண்டாடுகிறார்கள்.


100 வருடங்களுக்கு முன்னர் சேர் பொன் இராமநாதன் பௌத்தர்களின் பௌர்ணமி நாளை விடுமுறை நாளாக்கும்படி இலங்கையின் அரசாங்க சபையில் போராடியதை இன்றும் பல சிங்களத் தலைவர்கள் போற்றி வருவதைக் காண்கிறோம். அன்று சிங்களத் தலைவர்கள் கூட அந்தளவு முனைப்புடன் இருக்காத நிலையில் இராமநாதன் அவர்களின் அபிலாஷைகளுக்காக இருந்தார். இராமநாதன் 1915 கலவரத்தின் போது கைது செய்யப்பட்டிருந்த சிங்களத் தலைவர்களை இங்கிலாந்துக்குச் சென்று வாதாடி விடுவித்தார். அவரை பல்லக்கில் தூக்கி வரவேற்றது சிங்களத் தரப்பு. தர்மபால ஒரு முறை தனக்கு பிறகு பௌத்த மதத்தை பாதுகாப்பதற்கு ஒருவர் நியமிக்கப்படவேண்டும் என்று நினைத்தால் நான் ஹிந்து பக்தரான இராமநாதனையே நியமிப்பேன் என்றார். ஆனால் அந்த இராமநாதனையே கொழும்பை விட்டு யாழ்ப்பாணத்துக்கு ஓடும் அளவுக்கு இனத்துவ பாரபட்சத்துக்கு உள்ளாக்கிய சம்பவங்களை இலங்கை வரலாறு கடந்து வந்திருக்கிறது.

எந்த தமிழ் அடையாளம் சிங்களத் தரப்பை மீட்க கதிர்காமரிடம் இருந்து தேவைப்பட்டதோ அந்த தமிழ் அடையாளம் அவரை பிரதமராக ஆக்குவதற்கு தடையாக இருந்ததையும் கூறித்தான் ஆக வேண்டும். எந்த சிங்கள பௌத்த தரப்பு கதிர்காமரைக் கொண்டு அரசியல் – ராஜதந்திர லாபமடைந்ததோ அதே சிங்கள பௌத்த தரப்பு கதிர்காமருக்கு நாட்டின் உயரிய பதவி போய்விடக்கூடாது என்பதில் கறாராக இருந்தது.


கதிர்காமர் கொல்லப்பட்டதனால் (12.08.2005), அதுவும் விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டதால் தான் அவர் சிங்களவர்கள் மத்தியில் வீரர் ஆனார். தியாகியானார். ஆனை செத்தாலும் ஆயிரம் பொன் என்பது போல அவரது மரணமும் பல மடங்கு சிங்களத் தரப்பின் வெற்றிக்கு உதவியது.

சிங்கள - பௌத்த - கொவிகம தவிர்ந்தவர்களையே அதிகாரத்துக்கு வருவதை சகிக்காத இந்த அமைப்புமுறை தமிழ் – கிறிஸ்தவ பின்னணியுள்ள ஒருவரை மட்டும் அனுமதிக்குமா என்ன.

ஆனால் கதிர்காமர் இறந்ததன் பின் எழுந்த அனுதாப அலை “ச்சே...பிரதமராக ஆக்கப்படவேண்டிய ஒருவர்... அதற்கு தகுதியான ஒருவர்” என்கிற குரல்கள் எங்கெங்கும் கேட்க முடிந்தது. இன்றும் கேட்க முடிகிறது.

கதிர்காமர் கொல்லப்பட்டு 8 ஆண்டுகளுக்குப் பின்னர் அன்று பிரதமர் பதவியை தட்டிப்பறித்த அதே மகிந்த ராஜபக்ஷ 2013 ஆம் ஆண்டு கதிர்காமருக்கு சிலை வைத்தார்.


சந்திரிக்காவுக்கு லக்ஷ்மன் கதிர்காமர் போல கதிர்காமரின் மூத்த சகோதரர் ராஜன் கதிர்காமர் முன்னாள் பிரதமர் சிறிமா பண்டாரநாயக்கவுக்கு நெருக்கமானவராகவும் நம்பிக்கைக்குரியாவராகவும் இருந்தார். இலங்கையின் கடற்படைத் தளபதியாக இருந்தவர். 1962ஆம் ஆண்டு சிறிமா அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்காக நடந்த இராணுவச் சதி முயற்சியின் போது சிறிமாவின் அருகிலேயே இருந்து, அவரைப் பாதுகாத்து கட்டளைகளைப் பிறப்பித்து அச் சதியை முறியடிப்பதில் முக்கிய பாத்திரம் வகித்தவர்.

"தேசபக்த தேசிய இயக்கம்" என்கிற பிரபல இனவாத அமைப்பு கதிர்காமர் கொல்லப்பட்டபோது அவருக்கு அஞ்சலி செலுத்தி வெளியிட்டிருந்த பேனர்

தமிழர்களின் எல்லை என்ன!
இலங்கையில் இரண்டு தடவைகள் இப்படி தமிழ் வம்சாவளிப் பின்னணியுள்ளவர்கள் இருவர் பிரதமர்களாக தெரிவு செய்யப்படும் வாய்ப்புகள் இல்லாமல் போயிருக்கின்றன. அந்த இருவரும் இனத்துவ, சாதிய பாரபட்சங்களால் தான் பிரதமர் பதவி கைநழுவிப் போயிருக்கின்றன. ஒருவர் கதிர்காமர் எனக் கண்டோம். இன்னொருவர் சீ.பீ.டி சில்வா.

அதே வேளை இருவருமே இலங்கைச் சமூகத்தில் தமிழர்களாக ஏற்றுக்கொள்ளப்படாதவர்கள், அல்லது அறியப்படாதவர்கள். ஆனால் ஆதிக்க இனக்குழுமத்தால் நுணுக்கமாக அவர்களின் இனத்துவ, சாதிய அடையாளங்கள் உரிய நேரத்தில் அடையாளம் காணப்பட்டவர்கள்.

வகுப்புவாதம் பார்க்காதவர்கள் என்று அறியப்படுபவர்கள் பலர்; திருமணக் கலப்பின் போது தான் அந்த அடையாளங்களை வெளிப்படுத்தி பாரபட்சம் காட்டுவார்கள் என்று அறிந்திருக்கிறோம். அதிகாரத்துக்கு வரும் போது கூட ஒடுக்கப்படும் வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்பதற்காக அந்த அதிகாரத்துக்கு வரவிடாமல் தடுக்கப்பட்டிருப்பதை வரலாறு நெடுகிலும் கவனித்திருக்கிறோம்.

மகாவம்சத்தை சுயாதீனமாகவே 2009 இல் தமிழுக்கு கொண்டுவந்த எஸ்.பொன்னுத்துரை சீ.பீ.டி.சில்வா  பற்றி சில தனது முன்னீட்டில் குறிப்பிடுகிறார்.
“சலாகம சாதியைச் சேர்ந்தவர்கள் பதினான்காம் நூற்றாண்டில் இலங்கைக்கு வந்த சேரர்களே. தனிச் சிங்களச் சட்டத்தை நிறைவேற்றிய அரசின் பிரதிப் பிரதமராக இருந்தவர் சீ.பி.டீ.சில்வா. அவருக்கு பல தமிழ் நண்பர்கள் உண்டு. ஒரு சமயம் உரையாடியபொழுது. “நான் மலையாளி வம்சம். சிங்களருடன் கரைந்து வாழ்வதினால் நான் எதையும் இழக்கவில்லையே. தமிழை இந்தியாவில் வாழும் ஐந்து கோடித் தமிழர்கள் வளர்த்துக் கொள்ளட்டும். இலங்கையில் சிங்களம் வளரட்டுமே. அது தானே நியாயம்.” என்றாராம்.
அடுத்த பிரதமராக வரக்கூடியவர் என்று சுதந்திரக் கட்சிக்குள் பேசப்பட்ட இன்னொரு தமிழர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே. கட்சிக்குள் அவர் தனது செல்வாக்கை நிலைநிறுத்த ஒரு சண்டித்தன பின்னணியுடன் தான் அவர் அரசியல் செய்ய நேரிட்டது. அவருக்கு ஆதரவு இருந்த அளவுக்கு அதிருப்தியாளர்களும் நிறையவே இருந்தார்கள். அவரும் தமிழ் கத்தோலிக்க வம்சாவளிப் பின்னணியைக் கொண்டிருந்தாலும் சிங்களவராகவே அதிகமானோரால் அறியப்பட்டிருந்தார்.

சிங்களத் தரப்பு தமது “இனத்துவ பெருந்தன்மையைக்” காட்டும் சமீபத்தேய உதாரணம் தான் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக ஒரு தமிழர் இருக்க முடியும் என்று காட்டி களிப்படைகிற போக்கு. வரலாற்றிலேயே எதிர்க்கட்சித் தலைவராக தனது கடமைகளை உரியமுறையில் செய்யாத ஒரு தலைவராக அடையாளம் காணப்பட்டும் அவரை அந்த இடத்தில் வைத்திருக்கிறார்கள் என்றால் அது அவரது இனத்துவ அடையாளத்தின் காரணமாகத் தான். ஆளும் தரப்பில் அதிக ஆதரவைக் கொண்டவர் தான் பிரதமராக ஆக முடியும் என்கிற வாதத்தை முன்வைப்பவர்கள்; எதிர்க்கட்சியில் அதிக ஆதரவுடையவர் தான் எதிர்க்கட்சித் தலைவராக ஆக முடியும் என்கிற வாதத்தை வசதியாக மறைத்துவரும் அரசியல் சூட்சுமம் இது தான்.

கதிர்காமர், சம்பந்தர் அனைவருமே இந்த சூத்திரத்துக்குள் இயக்கப்பட்டவர்களே.ஞாயிறன்று ஹட்டனில் கருத்தாடல் களம்

மானிட விடுதலைக்கான நூற்றாண்டு போர்களின் பங்காளிகளாக மலையக பாட்டாளிகளின் பாத்திரம்

16.12.2018 ஞாயிறு

டைன் என்ட் ரெஸ்ட்
(ஹட்டன் கார்கில்ஸ் புட் சிட்டி மேல்மாடியில்)

பி.ப. 1.00 மணிக்கு

தலைமை - பொன்.பிரபாகரன்


“சாதியூறிய மொழி” - என்.சரவணன்


ஆ.முத்துத்தம்பிப்பிள்ளை எழுதிய “இலங்கைச்சரித்திர சூசனம்” என்கிற நூலைக் காணக் கிடைத்தது. இந்த நூல் 1883 இல் வெளியிடப்பட்டிருக்கிறது. 1903 இல் யாழ்ப்பாணத்தில் நாவலர் பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட இரண்டாம் பதிப்பு மாத்திரம் இப்போது காணக்கிடைகிறது. ஈழத்து எழுத்தாளர், முதுபெரும் அறிஞர் வரிசையில் வைத்து போற்றப்படுபவர் அவர். பாட நூல்களிலும் கூட அவரைப் பற்றி கற்பிக்கப்படுகின்றன. சமயம், தமிழ் இலக்கியம், இலக்கணம், இலங்கை, தென்னிந்திய வரலாறு பற்றியெல்லாம் எழுதிய அவர் ஆங்கில-ஆங்கில-தமிழ் அகராதியும் எழுதியிருக்கிறார். அதுபோல அவர் “அபிதான கோஷம்” (The Tamil Classical Dictionary - 1902) ஒன்றையும் எழுதியிருக்கிறார். அதை அன்றைய தமிழ் லெக்சிகன் என்றும் கொள்ள முடியும்.

“இலங்கைச்சரித்திர சூசனம்”  ஆய்ந்துகொண்டிருந்த போது ஒரு விடயம் கண்ணில்பட்டது. அது “சாதி” என்கிற பதப்பயன்பாடு பற்றியது.
“இயக்கரும் நாகரும் தற்காலத்துச் சிங்களவரையும் தமிழரையும் போன்று இரு வேறு சாதியினராயிருந்திருக்கலாமென்றன்றி, அவர் இன்னசாதியினர், இன்னபாஷையினர் என்று துணிந்தற்கிடமில்லை.”
என்று அந்நூலின் 5 ஆம் பக்கத்தில் காண முடிந்தது. தமிழரையும், சிங்களவரையும் அவர் சாதியாகத் தான் குறிக்கிறார், சாதியாகத்தான் அடையாளப்படுத்துகிறார் என்று பொருளில்லை. ஆனால் அவருக்கு ஒரு சமூகக் குழுமத்தை அடையாளப்படுத்துவதற்கு “சாதி” என்கிற பதம் எப்படி மூளையில் நுழைகிறது என்பது தான் நமது மண்டைக்குள் குடைகிற விடயமாக இருக்கிறது.

ஆ.முத்துத்தம்பிப்பிள்ளை பல நூல்களை எழுதியிருக்கிற போதும் “இலங்கைச்சரித்திர சூசனம்” தான் அவரின் முதலாவது நூலாகக் காண முடிகிறது. இந்த வரிசையில் அவரின் “அபிதான கோஷம்” (தமிழ் கலைக்களஞ்சியம்) நூலில் “சாதி” என்பதற்கு அவரின் வரைவிலக்கணத்தை அறிய ஆவலாக இருந்தது. தமிழ் மொழியில் வெளிவந்த முதல் கலைக்களஞ்சியமாக அறியப்படுகிறது இது. அதை முடிப்பதற்கு அவருக்கு 16 ஆண்டுகள் எடுத்ததாக நூலின் முகவுரையில் குறிப்பிடுகிறார். தமிழ் எண்களின் படி தான் பக்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அந்நூலில் பல இடங்களில் அவர் “சாதி” என்றும், இன்னும் வேறு இடங்களில் “ஜாதி” என்றும் பயன்படுத்தியிருக்கிறார்.

அது மட்டுமல்ல அதில் பல தனிநபர்களைப் பற்றி அவர் சுருக்கமாக எழுதும் இடங்களிலெல்லாம் அவர்களின் சாதி இன்னது என்பதை அடையாளப்படுத்தத் தவறவில்லை. ஓரிரு வரிகளில் விளக்கும் விடயத்தில் சாதிய அடையாளம் அந்தளவு ஏன் அவசியப்படுகிறது என்கிற கேள்வி வலிமையாக எழுகிறது. உதாரணத்திற்கு

ஏகன் - ஏகம்பவாணனை அளவிறந்த திரவியத்தோடு தன்னிடத்து ஒப்பித்திறந்த ஏகமபவாணன் தந்தைசொல்லை அற்பமே னும் வழுவாமற்காத்த சிறுவனை முற்ப்படவைத்த பண்ணையாள். இவன் சாதியிலே பறையனாயினும் எசமான் பக்திற் சிறந்தவன். (பக்கம் - ௪௮  - அதாவது 48)

கணியன்பூங்குன்றனார் - பேர்யாற்றருகேயுள்ள பூங்குன்று என்னுமூரிற்பிறந்து விளங்கிய புலவர். இவர் உக்கிரப்பெரு வழுதி காலத்துக்கு முன்னுள்ளவர். இவர் சாதியிற் கூத்தர். (பக்கம் – ௫எ  - அதாவது 57)

கலியுகம்: என்பதற்கு அவர் தரும் விளக்கத்தில் “சாதியாசாரம் சமயாசாரம் தலை தடுமாறப் பெற்வர்களாய்ப் பிறந்துழல்வார்கள்” என்கிறார். (பக்கம் – ௬௬  - அதாவது 66) அந்த நூலில் அவர் எழுதிய முன்னுரையில் காலத்தைக் “கலியுகம்” என்று தான் அழைக்கிறார் என்பதையும் கருத்திற்கொள்க.

காவிரிப்பூம்பட்டினத்துக்காரிக் கண்ணனார் - இவர் கடைச்சங்கப் புலவர்களுளொருவர். .... இவர் சாதியில் வணிகர். (பக்கம் 75)

சிவப்பிரகாசசுவாமிகள் : .... சாதியில் வீரசைவர். (பக்கம் - 147)

நேசநாயனார் - சாதியிற் சாலியராகிய இச்சிவபக்தர் (பக்கம் - 281)

பெருந்தேவனார் - இவர் சாதியிலே வேளாளர் (பக்கம் - 319)

ஒட்டக்கூத்தர் - ...இவர் ஜாதியிற் கைக்கோளர். (பக்கம் - 49)

கணிகன் - ... திருதராஷ்டிரன் மந்திரிகளுள் ஒருவன். இவன் ஜாதியில் துவிஜன். (பக்கம் - 55)

காளிதாசன் - .... ஜாதியில் அந்தணன். (பக்கம் - 79)

சுப்பிரபை - முதல் நாபாகன் பாரி. இவள் ஜாதியில் வைசிய ஸ்திரி. (பக்கம் - 158)

சேனாவரையர் - ஜன்மநாடு பாண்டிநாடென்றும் ஜாதியினால் அந்தணர் என்றுங் கூறுவார்கள். (பக்கம் - 171)

ஜரிதை - மந்தபாலன் பாரி. இவள் சாரங்க ஜாதிப்பெண். (பக்கம் - 179)

பெருங்குன்றூர்கிழார் - ...ஜாதியால் வேளாளர் (பக்கம் - 318)

விசுவாமித்திரன் - ... இவர் ஜாதியில் ஷத்திரியர். (பக்கம் - 374)

இப்படியெல்லாம் சாதியை அடையாளப்படுத்துபவர் “ஜாதி” என்பதற்கு பெரிய வரைவிலக்கணம் கொடுக்கிறார். அதன் இறுதியில் “இச்சாதிக்கிரமங் கூறுமாற்றால் இவர் உயர்ந்தோர் இவர் தாழ்ந்தோரென்பது எமதுமதமன்று” என்று தப்பிவிட முயல்வதைக் காணலாம். (பக்கம் – ௧௮ ௰ - அதாவது 180).


நாவலரின் மிகப்பெரும் அபிமானியான முத்துத்தம்பிப்பிள்ளை சென்னையில் இருந்து தொழில் செய்தபடி “சத்தியாபிமானி” என்கிற பத்திரிகையையும் நடத்தி, சொந்தமாக அச்சுகூடத்தையும் தொடங்கி சில நூல்களையும் வெளியிட்டார். 1893இல் யாழ்ப்பாணம் திரும்பி ஆறுமுகநாவலர் வாழ்ந்த வண்ணார்பண்ணை வீட்டை சொந்தமாக வாங்கி அதற்கு “நாவலர் கோட்டம்” என்றும் பெயரிட்டு நாவலர் அச்சுக் கூடத்தையும் ஆரம்பிக்கிறார். அந்த அச்சுக் கூடத்தில் தான் பின்னர் அவரின் முக்கிய நூல்கள் வெளிவந்தன. முத்துத்தம்பிப்பிள்ளையின் அபிமானம் நாவலரின் மீதான அபிமானத்தையும், தமிழபிமானத்தையும் சார்ந்ததா அல்லது அது சாதியபிமானத்தையும் சார்ந்தது தானா என்கிற ஐயம் நமக்கு வரவே செய்யும். காரணம் அவரின் எழுத்தில் ஊறிப்போயிருந்த “சாதி”ய மொழி. இதை அக்காலத்து எழுத்துச் சூழலோடு ஒப்பிட்டு பார்ப்பது முக்கியம் என்கிற ஒரு வாதத்தையும் சிலர் முன்வைக்கக் கூடும். அதே காலத்தில் வாழ்ந்த பல படைப்புகளை செய்தவர்களிடத்திலும் இதைக் காண முடியும் என்கிற வாதத்தை வைக்க முடியும்.

ஆனால் ஒன்றை மறத்தலாகாது. ஓலைச்சுவடிக்கு மாற்றாக எழுத்து என்பது கடுதாசிகளில் பதியத் தொடங்கிய காலமது. அச்சு இயந்திரம் அறிமுகமாகி மெல்ல மெல்ல நூல்கள் அச்சுக்கு வந்து பரவலானவர்களின் கைகளுக்கு கிடைக்கப் பெற்ற காலமும் கூட. அப்படியென்றால்  எழுத்து, மொழி அனைத்தும் இவர்களிடத்தில் தான் இருந்தது. இவர்களால் தான் தகவல் பதிவு செய்யப்பட்டதும், கருத்து பதிவுசெய்யப்பட்டதும். இன்னொருவகையில் கூறுவதென்றால் அன்றைய கருத்துவாக்கச் செல்வாக்கும் அதனை பதிவுசெய்யும் வல்லமையும் இவர்கள் போன்றவர்களிடத்தில் தான் இருந்தது. ஆறுமுகநாவலர் மாத்திரமல்ல முத்துத்தம்பிப்பிள்ளை போன்றவர்களும் தான் சாதிய மொழிவழக்கை அன்றே எழுத்தினூடே ஜனரஞ்சகப்படுத்தியிருக்கிறார்கள் என்று புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.

இன்றும் யாழ்ப்பாண மொழிவழக்கில் சாதாரண அரிசியை தரம் பிரிக்கக் கூட

இது இன்ன சாதி அரிசி..,
என்ன சாதி மீன் இது...?
இது இன்ன சாதி கார்..,

என்றெல்லாம் சகலதுக்கும் வகைப்படுத்தும் பழக்கத்தை காண முடியும். இப்படி அவர்களின் பேச்சு வழக்கில் “சாதி” மொழி அவர்களுக்கே தெரியாமல் கொலோச்சியிருப்பதை அவர்கள் அறிந்துகொண்டதில்லை. மிகவும் அநாயசமாக, சர்வசாதாரணமாக அது இன்றும் பேச்சுமொழியில் கலந்திருப்பதை அன்றாடம் கவனிக்க முடிகிறது. ஏனென்றால் சந்ததி சந்ததியாக கடத்தப்பட்டுவரும் பேச்சுவழக்கு அது.

நமது மொழி வழக்கில் மனைவி கூட “பெண்+சாதி” தான்

இதைத் தான் பெரியார்
நம் கடவுள் சாதி காப்பாற்றும் கடவுள்,
நம் மதம் சாதி காப்பாற்றும் மதம்,
நம் அரசாங்கம் - சாதி காப்பாற்றும் அரசாங்கம்,
நம் இலக்கியம் - சாதி காப்பாற்றும் இலக்கியம்,
நம் மொழி - சாதி காப்பாற்றும் மொழி,
என்றார்.

ஜாதி என்பது சம்ஸ்கிருத சொல். சாதி என்பது அதன் தமிழ் மருவல் தான். சமஸ்கிருதத்தில் ஜாதி (Jati)  என்பதன் நேரடி பொருள் “பிறப்பு” என்கிறது ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக அகராதி. பிறக்கும் போதே ஒவ்வொருவரும் சாதியோடுதான் பிறக்கிறார்கள் என்கிறது இந்துமத வர்ணாசிரம தர்மம். சாதி பிறப்பாலேயே தீர்மானிக்கப்படுகிறது என்றும் சாதி என்பது தெரிவுக்குரிய ஒன்றல்ல என்றும் அது போதிக்கிறது. அப்படியான சாதியின் படிநிலைப்படியே ஒவ்வொருவரினதும் நிலையும், தரமும், கௌரவமும் தீர்மானிக்கப்படுவதாகவும் சொல்கிறது மனுதர்ம சாஸ்திரம்.

இந்த அடிப்படை கருதுகோளிலிருந்து தான் சாதி என்கிற பதம் மக்கள் மத்தியில் ஆற்றிவருகிற செல்வாக்கையும் புரிந்துகொள்ளவேண்டும்.

முத்துத்தம்பிப்பிள்ளை போன்றோரின் நூல்களிலும் நூற்றாண்டுக்கு முன்னர் சமூக வகைபடுத்தலுக்கும், பொருள் வகைபடுத்தலுக்கும் “சாதி” என்கிற சொல்லுக்கு ஊடாகவே அணுகியிருக்கிறார்கள், அதையே நிறுவியிருக்கிறார்கள், ஜனரஞ்சகமாக நிருவனமயப்படுத்தியிருக்கிறார்கள் சரி. இன்றும் அதை ஏன் காவ வேண்டும், ஏன் அடுத்த தலைமுறைக்கும் கடத்த வேண்டும்.

“சாதி” என்பது வெறும் சொல் மட்டுமல்ல. அடக்குமுறை வடிவத்தின் “பொருள்”, பாரபட்சத்தினதும், சமூக அநீதியினதும், அநியாயத்தினதும் குறியீடு. நமது மொழி வழக்கிலிருந்தும் சாதியை சுயநீக்கம் செய்வதும் நமக்கான பணி தான் நண்பர்களே.

டிசம்பர் 2018 - காக்கைச் சிறகினிலே சஞ்சிகையில் வெளிவந்தது.

“மகாவம்சம்” எழுதப்பட்ட வரலாறு! - என்.சரவணன்


“மகாவம்சம்” மூல நூல் இலங்கையின் பண்டைய இதிகாசம் தொடக்கம் கி.பி 301 வரையான மாகாசேனன் மன்னரின் காலப்பகுதிவரை மகாநாம தேரரால் எழுதப்பட்டது. அது; முதல் 36 அத்தியாங்களைக் கொண்டது. 37வது அத்தியாயத்தை அவர் எழுதிக்கொண்டிருக்கும் மகாநாம தேரர் போது மரணமாகிவிட்டார். அது 50 செய்யுள்களைக் கொண்டது. ஒவ்வொரு அத்தியாயத்தின் இறுதியிலும் “அத்தியாயம் நிறைவுற்றது” என்று குறிப்பிட்ட அவர் 37வது அத்தியாயத்தில் அப்படி குறிப்பிடாததால் அவர் அந்த அத்தியாயத்தை முடிக்கவில்லை என்றும் தொடரவிருந்தார் என்றும் பல ஆய்வாளர்களால் சுட்டிக்காட்டப்படுகின்றன.

2வது தொகுதி
2வது தொகுதி கி.பி  301 முதல் கி.பி 1815 வரையான ஆங்கிலேயரின் முழுக் கட்டுப்பாட்டில் வரும் வரையான காலப்பகுதியைப் பதிவு செய்கிறது. அது மூன்று பாகங்களைக் கொண்டது.
 1. முதலாவது பாகம் - மன்னர் கித்சிரிமேவன் அரசரின் காலம் தொடக்கம் மகாபராக்கிரமபாகுவின் காலம் (302-1186) வரையான 884 ஆண்டுகளைப் பதிவு செய்கிறது. மொத்தம் 42 அத்தியாயங்களைக் கொண்டது அது.
 1. இரண்டாவது பாகம் – 1186-1357 வரையான விஜயபாகு மன்னர் காலத்திலிருந்து ஐந்தாம் பராக்கிரமபாகுவின் ஆட்சிக் காலம் வரை 171 வருட காலத்தைப் பதிவு செய்கிறது.
 1. மூன்றாவது பாகம் – 1357-1815 வரையான விஜயபாகு மன்னர் காலத்திலிருந்து ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் காலப்பகுதிவரை 441ஆண்டுகளைப் பதிவு செய்கிறது. ஆட்சி முழுமையாக அந்நியர் கைகளில் சிக்கும் வரையான காலப்பகுதி இது.

“மகாவம்சம்” எனும் போதே அது வம்சவிருத்தி பற்றிய கதை என்கிற உள்ளடக்கத்தைக் கொண்டிருப்பதை கண்டிருப்போம். இலங்கையில் இருந்த ஆட்சிகளையும் அதை ஆட்சி செய்தவர்களையும் பற்றிய அந்த விபரங்களின் அடிப்படையிலேயே அது தொகுக்குப்பட்டு வந்திருக்கிறது. மகாவம்சத்தின் மூல நூலில் 33-36 வரையான அத்தியாயங்களில் முறையே 10 அரசர்கள், 11அரசர்கள், 12அரசர்கள், 13 அரசர்கள் என்கிற ரீதியில் உள்ளடக்கப்பட்டிருக்கிறது. அது போல ஒரே அரசருக்கு பல அத்தியாயங்கள் ஒதுக்கப்பட்ட சந்தர்ப்பங்களும் உண்டு. முதலாவது மூல நூலில் 37அத்தியாயங்களில் பத்து அத்தியாயங்கள் துட்டகைமுனு பற்றியே உள்ளன. அது போல இரண்டாவது தொகுதியில் 64 அத்தியாயங்களில் 18 அத்தியாயங்கள் மகா பராக்கிரமபாகு பற்றி எழுதப்பட்டிருக்கிறது.

துட்டகைமுனுவால் ஒன்றுபட்ட சிங்களவர்களின் இறையாண்மையை நிலைநாட்டியதாக கூறப்படும் அந்த முப்பத்துநான்கு ஆண்டுகளுக்கு இடையில் ஏழு தமிழர்கள் (அவர்கள் மன்னர்கள் அல்லர்) படையுடன் வந்து இலங்கையைக் கைப்பற்றி பதினைந்து ஆண்டுகள் அரசாண்டதாகவும் அறியக்கிடைக்கிறது.

இதை எழுதிய பிக்கு பற்றிய தகவல்களை பின்னைய பல ஆய்வாளர்கள் முரண்பட்ட கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார்கள். மேற்படி 2ஆம் தொகுதியின் முதலாவது பாகத்தை அதாவது 37ஆவது அத்தியாயத்தின் 51வது பகுதியிலிருந்து 79வது அத்தியாயம் வரை தம்பதெனிய பகுதியில் வாழ்ந்த தர்மகீர்த்தி என்கிற பௌத்த பிக்கு எழுதியதாக பேராசிரியர் வில்ஹைம் கைகர் குறிப்பிடுகிறார். முதலாவது பராக்கிரமபாகு காலத்தை ஆராய்ச்சி செய்த பேராசிரியர் சிறிமா விக்கிரமசிங்க போன்ற பல ஆய்வாளர்களும் அதனை ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால் பேராசிரியர் மங்கள இலங்கசிங்க போன்றோர் இதனை மறுக்கிறார்கள். 38வது அத்தியாயத்திலிருந்து 54வது அத்தியாயம் வரையான பகுதியை மகாவிகாரையைச் சேர்ந்த பிக்குகள் சேர்ந்து எழுதியதாகவும், முதலாவது பராக்கிரமபாகு காலத்தை உள்ளடக்கிய 54வது அத்தியாயத்திலிருந்து 79வது அத்தியாயம் வரையான 25 அத்தியாயங்களை பொலன்னறுவையில் வசித்த பராக்கிரமபாகு மன்னருடன் குடும்ப நட்பு கொண்டிருந்த ராஜகுரு தர்மகீர்த்தி என்கிற பிக்குவால் எழுதப்பட்டது என்றும் பேராசிரியர் மங்கள இலங்கசிங்க விபரிக்கிறார்.

79இலிருந்து 90வது அத்தியாயம் வரை அதே தம்பதெனிய தர்மகீர்த்தி தேரர் தான் எழுதியதாக பதிவுகள் இருந்தாலும் மகாவம்சத்தின் இரண்டாம் தொகுதியை சிங்களத்துக்கு மொழிபெயர்த்த ஹிக்கடுவ சுமங்கள தேரர் உள்ளிட்ட இன்னும் சிலர் அதை மறுக்கிறார்கள். 79வரையான அத்தியாங்கள் வரை எழுதப்பட்ட வடிவத்தில் அதற்கடுத்த அத்தியாயங்களில் எழுதப்படவில்லை என்றும் மொழிநடையில் உள்ள வித்தியாசத்தையும் அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

இந்த விபரங்கள் பற்றிய ஆய்வாளர்களின் முரண்பட்ட கருத்துக்கள் அத்தனையையும் இறுதியாக இந்த வருடம் வெளிவந்த மகாவம்சத்தின் 6வது தொகுதியில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

91-100 வரையான அத்தியாயங்களை கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கன் காலத்தில் கண்டி ராஜ்ஜியத்தைச் சேர்ந்த (அக்காலகட்டத்தை செங்கடகல ராஜ்ஜியம் என்று அழைப்பார்கள்) திப்பொட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த புத்தரக்கித்த மகாநாயக்க தேரரால் எழுதப்பட்டதை மகாவம்சம் தொடர்பில் நிபுணத்துவம் பெற்ற அனைவரும் ஏற்றுக்கொள்கின்றனர்.

101வது அத்தியாயம் ராஜாதி ராஜசிங்கன் மற்றும் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் ஆகிய மன்னர்களைப் பற்றி  29 செய்யுள்களில் எழுதப்பட்டபடி முடிக்காமல் இருக்கிறது. ஸ்ரீ சித்தார்த்த புத்தரக்கித்த மகாநாயக்க தேரர் கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கன் காலத்திலேயே மரணித்துவிட்டதால் இந்த 101வது அத்தியாயம் அவரால் எழுதப்பட்டிருக்காது என்பதை பலரும் ஏற்றுக்கொள்கின்றனர்.

மூன்றாவது தொகுதி

இது 1815 இல் இலங்கை முழுவதுமாக அந்நியர் வசமானது தொடக்கம் 1936 வரையான காலப்பகுதியை பதிவு செய்கிறது. இதை “மஹாவம்சோ” என்று பெயரில் யகிரல பஞ்ஞானந்தாஹிதான நாயக்க தேரோவால் 101வது அத்தியாயத்தின் 31வது செய்யுளிலிருந்து 114வது அத்தியாயம் வரையான 11 அத்தியாயங்களைக் கொண்டது. மகாவம்சத்தின் 2வது தொகுதியில் காலனித்துவ ஆக்கிரமிப்பு கால அரசியல், பொருளாதார, ஆன்மீக, மாற்றங்கள் பற்றிய விபரங்களின் போதாமையால் இந்த 3வது தொகுதியின் அறிமுகத்தில் சில மேலதிக விபரங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கிறது.

உதாரணத்திற்கு அதில் ஒரு பந்தி
“மன்னன் ஸ்ரீ விக்கிரம சிங்கவை அரியாசனத்திலிருந்து அகற்றி அன்று ஆங்கிலேயர்களின் பிடியில் இருந்த அரச உரித்துடைய இளவரசன் முத்துசாமிக்கு விசேட கொடுப்பனவுகளையும் சலுகைகளையும் வழங்கி யாழ்ப்பாணத்தில் குடியேற்றிவிட்டு அந்த அரியாசனத்தை பிலிமத்தலாவவுக்கு பெற்றுக்கொடுப்பதற்காக ஆளுனர் பிரடறிக் நோர்த்துக்கும் பிலிமத்தலாவ மகா அதிகாரத்துக்கும் இடையில் 1803 இல் உடன்படிக்கை செய்துகொள்ளப்பட்டது”
என்கிறது. இந்தப் பதிவு முக்கியமானது.

நான்காவது தொகுதி

இது 1935-1956 வரையான காலப்பகுதியை பேராசிரியர் நந்ததேவ விஜேசேகர தலைமையிலான குழு இதனை முடித்தது. 115-124 வரையான அத்தியாயங்களைக் கொண்ட இந்த தொகுதிதான் முதன்முதலில் பௌத்த பிக்குகள் தவிர்ந்த வரலாற்றாசிரியர்களின் பங்களிப்போடு எழுதப்பட்டது. மேலும் இது தான் முதன் முதலில் அரசால்  அமைக்கப்பட்ட குழுவால் எழுதப்பட்டு 1986இல் வெளியிடப்பட்ட தொகுதி. இந்தத் தொகுதியிலிருந்து தான் மகாவம்சத்தை எழுதும் நிரந்தர பொறுப்பை அரசு கையேற்கிறது.

இந்த காலப்பகுதியில் அரசாண்ட அரசத் தலைவர்களின் ஆட்சித் தலைவர்களின் வரிசையின்படியே எழுதப்பட்டிருக்கிறது இந்த தொகுதி. அப்படிப்பட்ட தலைமை ஆட்சியாளர்களாக கொள்ளப்பட்ட ஆளுநர்கள், பிரதமர்கள் என்போரின் வரிசை இது தான்.

 • 1933-37 வரை ரெஜினோல்ட் ஸ்டப்ஸ் 
 • 1937-44 வரை அன்ரூ கொல்ட்கொட்
 • 1944-48 வரை மங்க் மேசன் முவர்
 • 1948-52 வரை டீ.எஸ்.சேனநாயக்க
 • 1952-54 – வரை  டட்லி சேனநாயக்க
 • 1954-56 – வரை ஜோன் கொத்தலாவல
 • 1956-1959 – வரை  எஸ்.டபிள்யு.ஆர்.டீ.பண்டாரநாயக்க
 • 1959 செப்டம்பர் -1960 மார்ச் – வரை டபிள்யு தஹாநாயக்க
 • 1960-65 – வரை சிறிமாவோ பண்டாரநாயக்க
 • 1965-1970 – வரை டட்லி சேனநாயக்க
 • 1970-1977 – வரை சிறிமாவோ பண்டாரநாயக்க
 • 1977-1978 (செப்டம்பர் 7) – ஜே.ஆர்.ஜெயவர்த்தன


இலங்கை 1948 சுதந்திரம் பெற்றபோதும் முழு இறைமை உள்ள நாடாக இருக்கவில்லை. இலங்கையின் அரசியாக எலிசபத் மகாராணியே இருந்தார். அவரின் பிரதிநிதியாக ஆளுநர் இயங்கினார். 1972ஆம் ஆண்டு மே 22ஆம் திகதி இலங்கை குடியரசாக பிரகடனப்படுத்தும்வரை அதுவே நீடித்தது. இராணியின் இறுதித் தூதுவராக/ஆளுநராக கடமையாற்றியவர் வில்லியம் கொப்பல்லாவ. குடியரசாக ஆனதும் அவரே நாட்டின் முதலாவது ஜனாதிபதியாக ஆனார். இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசாக 08-09-1978 ஆம் ஆண்டு ஆனதும் ஜே.ஆர். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ஆனார்.

ஜே.ஆரால் தான் முதலாவது தடவை கலாசார அமைச்சின் கீழ் 30.01-1978இல் மகாவம்சத்தை தொடர்ச்சியாக பாளி, சிங்கள மொழிகளில் ஆக்கும் பணிக்கான முதலாவது கூட்டம் அமைச்சு காரியாலயத்தில் ஆரம்பிக்கப்பட்டது. அங்கு தான் பேராசிரியர் நந்ததேவ விஜேசேகர அந்தக் குழுவுக்குத் தலைவராக நியமிக்கப்பட்டார். மகாநாயக்க தேரர் உள்ளிட்ட 32 பேரைக்கொண்ட தூய சிங்கள பௌத்த குழுவொன்று இந்தப் பணிக்காக தெரிவுசெய்யப்பட்டது. அவர்கள் யார் என்பது பற்றிய பட்டியல் அந்த தொகுதியின் ஆரம்பத்தில் உள்ளது. இந்தப் பணிகளை மேற்பார்வை செய்து வழிகாட்டும் பொறுப்பு அன்றைய கலாசார அலுவல்கள் அமைச்சர் ஈ.எல்.பீ.ஹுலுகல்லேவிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஐந்தாவது தொகுதி 

இது 1956 முதல் 1978 ஜே ஆரின் இரண்டாவது குடியரசு ஆட்சி தொடங்கும் வரையான காலப்பகுதியை உள்ளடக்கிய 125-129 வரையான 14 அத்தியாயங்களைக் கொண்டது. பேராசிரியர் பெல்லன ஸ்ரீ ஞானவிமல மகாநாயக்க தேரரரின் தலைமையிலான பண்டிதர் குழுவால் தயாரிக்கப்பட்டது இது. அரச கலாசார அமைச்சின் ஏற்பாட்டில் இந்தப் பணிகள் முடிந்தன.

இதற்கிடையில் “மகாவம்ச காவியத்தை” அரசுக்கு வெளியில் பல தனியார் வெளியீட்டு நிறுவனங்களும் முன்னைய தொகுதிகளை தமது ஆய்வுரைகளுடன் நேரடியாக வெளியிட்டிருக்கின்றன. பேராசிரியர் ஆனந்த குருகே மகாவம்சத்தின் முதலாவது தொகுதியை தனது சொந்த ஆய்வுடன் சேர்த்து 1986இல் ஆங்கிலத்தில் வெளியிட்டார். அந்த தொகுதி அரசு வெளியிட்ட தொகுதியை விட பிரசித்தம் பெற்றது. 1129 பக்கங்களைக் கொண்ட அந்த முதலாவது தொகுதியில் முதல் 487பக்கங்கள் மகாவம்சம் எழுதப்பட்ட வரலாறு, அதன் மொழி, உள்ளடக்க அர்த்தப்படுத்தல், வியாக்கியானங்கள் என்பன பற்றிய விமரசனபூர்வமான பதிவுகளைக் கொண்டது.


ஆறாவது தொகுதி

இது இரண்டு பாகங்களாக 2018 ஓகஸ்டில் வெளியிடப்பட்டது. அதாவது 32வருடங்களுக்குப் பின் வெளியிடப்பட்டிருக்கிறது. 1978 – 2010 வரையான காலப்பகுதியை 130-133வது அத்தியாயம் வரை பதிவு செய்கிறது. இன்னொரு விதத்தில் சொல்லப்போனால் ஆயுத வடிவம் கொண்ட தமிழீழ விடுதலைப் போராட்டம் தோன்றி பின் நசுக்கப்பட்ட வரலாற்றைக் கொண்டது எனலாம். அதாவது வரலாற்றை பதிவு செய்யும் இலங்கை அரசின் “இனப்பிரச்சினை பற்றிய” உத்தியோகபூர்வ பார்வை/கொள்கை முடிவு என்ன என்பதை விளக்கும் ஆவணம் எனலாம்.

6வது தொகுதியின் முதலாவது பாகத்தில் 199வது பக்கத்தில் 83 யூலை கலவரம் பற்றிய விபரங்கள் தொடங்குகின்றன. அதில் உதாரணத்திற்கு ஒரு பந்தி...
“தீர்வுக்காக உருவாக்கப்பட்ட மாவட்டசபைகள் சரியாக இயங்கவில்லை. இந்த சிக்கலைத் தீர்ப்பதற்காக சர்வகட்சி மாநாட்டை 1983 யூலையில் நடத்த ஜனாதிபதி ஏற்பாடு செய்திருந்தார். இந்த மாநாடு நடப்பதற்கு முதல் தமிழர் விடுதலைக் கூட்டணி கட்சி மாநாட்டை ஏற்பாடு செய்திருந்த வேளையில் பிரபாகரனின் திட்டத்தின் படி இந்த நாட்டில் “கருப்பு யூலை” என்று அழைக்கப்படும் மோசமான நிகழ்வுக்கு காரணமாக ஆன பயங்கரவாதத் தாக்குதலை புலிகள் இயக்கம் நடத்தியது.”
இந்த 6வது தொகுதியில் 10ஆண்டுகள் வீதம் பதவி வகித்த ஜே.ஆர், சந்திரிகா ஆகியோர் ஆட்சி காலம் பற்றி தலா ஒவ்வொரு அத்தியாயங்கள் விபரிக்கப்பட்டுள்ளன. ஐந்து வருடங்கள் மட்டுமே ஆண்ட பிரேமதாச, டீ.பீவிஜேதுங்க ஆகியோரின் ஆட்சி காலம் பற்றியும் ஒரே அத்தியாயத்தில் விளக்கப்பட்டுள்ளன. இந்த தொகுதி எழுதி முடிக்கப்பட்ட 2010ஆம் ஆண்டின் போது ஐந்து வருட ஆட்சி காலத்தை முடித்த மகிந்தவுக்கும் அதே ஒரு அத்தியாயம் தான் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் இவற்றில் உள்ளடக்கம் மாறுபட்ட அளவைக் கொண்டிருக்கின்றன.


புனைவுகளாலும், புரட்டுகளாலும் திரிக்கப்பட்டு உருவாக்கப்பட்ட “இதிகாசக் காவியம்” இலங்கையின் உத்தியோகபூர்வமான வரலாற்றுப் பதிவாக அங்கீகரிக்கப்பட்டு இன்றும் எழுதப்பட்டுவருகிறது. என்றாலும் மகாவம்சத்தை விட்டால் இலங்கையின் பண்டைய வரலாற்றை அறிதல் இயலாததாகிவிடும். “இலங்கையின் வரலாறு” என்கிற பேரில் ஏனைய இனங்களுக்கு எதிராக “சிங்கள பௌத்தர்களின்” வரலாறு தொடர்ந்தும் பரப்பப்பட்டு வருகிறது. இன்றைய இலங்கையின் நாசத்தில் மகாவம்சம் பரப்பிய கருத்துருவாக்கங்களுக்கு பெரும் பங்கு உண்டு. இனப்பிரச்சினை பற்றி ஆராய்பவர்கள் தமது ஆய்வுகளுக்கு உசாத்துணையாக மகாவம்சத்தை கூடவே சமாந்திரமாக பிரயோகிக்காவிட்டால் அது ஆய்வாக அமைவதில்லை. ஆனால் அப்படி ஆய்வு செய்ய முடியாதபடி இவை சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் தான் வெளியிடப்பட்டு வருகின்றன. மூல நூலின் சில தமிழாக்க பதிப்பு மாத்திரம் பரவலாகக் கிடைக்கிறது.
பிற்குறிப்பு:
இக்கட்டுரைக்கான தகவல்களில் பெரும்பகுதி 2018 ஓகஸ்டில் இல் வெளியான மகாவம்சத்தின் 6வது தொகுதியிலிருந்தும், அதற்கு முன்னர் வெளியான 5வது தொகுதியிலிருந்தும் பெறப்பட்டவை.

சிம்மாசனப் பிரசங்கத்தால் தோற்கடிக்கப்பட்டவர்கள் - என்.சரவணன்


இந்த நாட்களில் ஆட்சிக் கவிழ்ப்பு, சதி, அரசியல் துரோகம் என்பன பற்றி அரசியல் களத்தில் காரசாமாக உரையாடப்படுகிறது. வரலாற்றில் சிம்மாசனப் பிரசங்கத்தின் போது எதிர்பாராதவிதமாக ஆட்சி கவிழ்க்கப்பட்ட சந்தர்ப்பங்கள் இரண்டு நிகழ்ந்துள்ளன. அது என்ன சிம்மாசனப் பிரசங்கள் அது பற்றிய கதை தான் இது.

பொதுத்தேர்தலொன்றின் பின் அமைக்கப்படும் அரசாங்கம் அதன் முதல் பாராளுமன்ற அமர்வில் ஆற்றப்படும் உரையைத் தான் சிம்மாசனப் பிரசங்கம் என்று அழைக்கப்பட்டது. அரசாங்கத்தின் கொள்கைகள், எதிர்கால வேலைத்திட்டங்கள் என்பன உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் ஒரு நிகழ்வு அது. அரசாங்கம் பதவிக்கு வந்தவுடனும் நாடாளுமன்றத்தின் கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் நாடாளுமன்றம் கூடும்போதும், அப்போதைய தேசாதிபதி (Governor General),  சிம்மாசன உரையை (throne speech) நிகழ்த்துவார். பின்னர், அதன் மீது வாக்கெடுப்பு நடத்தப்படும். அந்த வாக்கெடுப்பில் அரசாங்கம் தோல்வியடைந்தால், அரசாங்கம் பதவி துறப்பது மரபாகும். 1960, 1964 ஆகிய இரண்டு ஆண்டுகள் அடுத்ததடுத்து அரசாங்கங்கள் இரண்டும் தோற்கடிக்கப்பட்டு ஆட்சி கவிழ்க்கப்பட்டது அப்படித்ததான்.

ஆனால் இப்போதெல்லாம் அப்படி முதல் அமர்வில் ஆற்றப்படுவதை சிம்மாசனப் பிரசங்கமாக கருதும் மரபு வழக்கொழிந்து போய்விட்டது என்றே கூறவேண்டும். அந்த சிம்மாசன உரையின் மரபின்படி இப்போதும் பொதுத் தேர்தலுக்குப் பின்னர் - நாடாளுமன்றத்தின் கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டு, சபை மீண்டும் கூடும்போது, ஜனாதிபதியால் கொள்கை விளக்க உரையொன்று நிகழ்த்தப்படுகிறது. இப்போதெல்லாம் உரைமீதான விவாதமோ அல்லது வாக்கெடுப்போ நடத்துவது கட்டாயமல்ல. அப்படி விவாதம் நிகழ்ந்தாலும் வாக்கெடுப்பு நடைபெறுவதில்லை. அந்த பழைய மரபு, 1972ஆம் ஆண்டின் முதலாவது குடியரசு அரசியலமைப்பை அடுத்துக் கைவிடப்பட்டது.

சிம்மாசனப் பிரசங்கம் என்பது பிரித்தானிய பாராளுமன்ற மரபு. நமது ஆட்சி – நிர்வாக அமைப்பு முறை நீண்ட காலம் பிரித்தானிய மரபைப் பின்பற்றியே இருந்தது. இன்றும் அவற்றின் பல அம்சங்கள் பேணப்பட்ட வருகின்றது. சிம்மாசனப் பிரசங்கம் ஆரம்பத்தில் மேலும் அதிக சம்பிரதாயங்களைக் கொண்டிருந்தது.


சிம்மாசனப் பிரசங்கத்தின் மரபு

சிம்மாசனப் பிரசங்கம் செய்யப்படும் நாளை அரசாங்கம் தீர்மானிக்கும். அந்த அறிவித்தல் ஆளுனரால் பிரதிநிதிகள் சபை மண்டபத்தில் வைத்து வாசிக்கப்படும். சிம்பிரதாயபூர்வமான சடங்குகள் முற்பகல் பத்து மணிக்கு ஆரம்பமாகும். பாராளுமன்றப் பிரதிநிதிகள், சபாநாயகர், செனட் உறுப்பினர்கள், சபைத் தலைவர் ஆகியோர் ஒழுங்குடன் சென்று உரிய ஆசனங்களில் அமர்வார்கள். உரிய நேரத்தில் ஆளுநர் வருகை தருவார். வாசலில் வைத்து பிரதமர் அவரை மரியாதையாக அழைத்துச் செல்வார். இந்த நேரத்தில் பாராளுமன்றத்துக்கு வெளியில் இராணுவ அணிவகுப்பும், 21 தடவை பீரங்கி முழக்கமுட்டும் மரியாதை செலுத்தப்படும்.  அந்த சமிக்ஞையுடன் ஆளுநரின் செயலாளர் சபையைக் கூட்டும் அறிவித்தலைச் செய்வார். (இந்தப் பதவியில் நீண்டகாலம் என்.டபிள்யு.அத்துகோரல இருந்தார்.)

அதன் பின்னர் சிம்மாசனப் பிரசங்க உரையை ஆளுநரிடம் பிரதமர் கையளிப்பார். அது சிங்களத்திலும், ஆங்கிலத்திலும் வாசிக்கப்பட்டதன் பின்னர் மீண்டும் பிரதமரிடம் கையளிக்கப்படும். இது முடிந்ததும் சபையை ஒத்திவைக்கும் பிரேரணை கொண்டுவரப்படும். அவ்வாறு ஒத்திவைக்கப்படும் தினத்திற்குள் ஒரு நாளில் சிம்மாசனப் பிரசங்கத்தின் மீதான விவாதம் நடத்தப்பட்டு வாக்கெடுப்புக்கு விடப்படும். பாராளுமன்றத்தில் அந்த சிம்மாசனப் பிரசங்கத்திற்கு நன்றிநவிலும் ஒரு பேச்சும் இடம்பெறும். இதற்காக பெயர் குறிக்கப்படும் இருவர் தமக்கான கௌரவமாக அதனைக் கருதுவர். “நன்றிநவிலும் உரை” என்று அது அறியப்பட்டாலும் அது சிம்மாசன உரையின் மீதான விமர்சனங்களையும், பரிந்துரைகளையும் உள்ளடக்கிய உரையாகவே அமைவது வழக்கம். அந்த உரையின் இறுதியில் வாக்கெடுப்பு நடத்தப்படும். அந்த வாக்கெடுப்பில் அரசாங்கம் தோற்றால் பாராளுமன்றம் கலைக்கப்படுவது வழக்கம்.

டட்லி தோல்வி

19.03.1960 ஆம் ஆண்டு தேர்தலில் ஐ.தே.க -50, ஸ்ரீ.ல.சு.க – 46, ல.ச.ச.க. -10, மக்கள் ஐக்கிய முன்னணி - 10, தமிழரசுக் கட்சி -15, இலங்கை ஜனநாயகக் கட்சி -04,  கொம்யூனிஸ்ட் கட்சி - 03, ஜாதிக்க விமுக்தி முன்னணி -02, அகில இலங்கை ஜனநாயக சங்கம் -01, போசத் பண்டாரநாயக்க பெரமுன – 01, சோஷலிச மக்கள் முன்னணி -01, இலங்கை தேசியக் கட்சி – 01, சுயாதீன உறுப்பினர்கள் 07. ஆக மொத்தத்தில் 151 உறுப்பினர்களில் 50 உறுப்பினர்களை மட்டுமே கொண்ட ஐ.தே.க அதிக உறுப்பினர்களைக் கொண்ட கட்சி என்கிற அடிப்படையில் ஆட்சியை அமைத்துக்கொண்டது. ஆனால் டட்லி தலைமையிலான ஐ.தே.க பாராளுமன்றத்தில் பெரும்பான்மைக் காட்டியாக வேண்டும். (வரலாற்றில் முதற்தடவையாக பாராளுமன்ற சபாநாயகராக எதிர்க்கட்சியைச் சேர்ந்த (டி.பீ.சுபசிங்க தெரிவானார்) ஒருவர்.)

06.04.1960 அன்று மேற்குறிப்பிட்ட சம்பிரதாயங்களுக்கு இணங்க 10மணிக்கு ஆரம்பமாக வேண்டிய ஆரம்ப வைபவம் பி.ப 2.30க்குத் தான் ஆரம்பமானது. ஆளுநர் ஒலிவர் குணதிலக்கவின் கையில் பிரதமர் டட்லி சிம்மாசனப் பிரசங்கத்தைக் வழங்கினார். அதனை சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் ஆளுநர் வாசித்தார். தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்களும், வடக்கு கிழக்கைச் சேர்ந்த ஏனைய தமிழ் உறுப்பினர்களும் அதனை தமிழிலும் வாசிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். ஆளுநர் தனக்கு தமிழில் வாசிக்க முடியாததைக் கூறி அவர்களுக்கு தமிழில் அச்சடிக்கப்பட்ட உரையை வழங்கினார்கள்.

இந்த உரையைத் தொடர்ந்து ஒத்திவைப்பிப் பிரேரணைக்காக மீண்டும் பாராளுமன்றம் கூடியது. ஒத்திவைப்புப் பிரேரணையும், நன்றி கூறும் உரையும் அதுவரை 20 நிமிடங்களுக்கு மேல் நீண்டதில்லை. ஆனால் அன்றைய நாள் முதற்தடவையாக பிற்பகல் 3.30யிலிருந்து மாலை 8.30 வரையான ஐந்தரை மணித்தியாலங்கள் நீண்டது என்று அன்றைய லங்காதீப பத்திரிகை பதிவு செய்தது. (07.04.1960). அன்றைய தினம் 53 பேர் உரையாற்றியிருக்கிறார்கள். ஒத்திவைப்பு பிரேரனையை சபைத்தலைவர் ஜே.ஆர். ஜெயவர்த்தன (முதற் தடவையாக சிங்களத்தின்) முன்மொழிய ஜஸ்டின் சீ விஜயவர்தன அதனை ஆமோதித்திருக்கிறார்.

1960 ஏப்ரல் 22ந் திகதி சிம்மாசனப் பிரசங்க வாக்கெடுப்பு நடந்தது. அரசாங்கத்துக்கு ஆதரவாக 61 வாக்குகளும் எதிராக 93 வாக்குகளும் அளிக்கப்பட்டன. சிம்மாசனப் பிரசங்கத்துக்கு முன்னதாகவே டட்லி சேனநாயக நியமன உறுப்பினர்கள் ஆறு பேரையும் நியமித்திருந்தார். அவர்களும் சில சுயேச்சை உறுப்பினர்களும் அரசாங்கத்துக்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர். அரசாங்கம் பெரும்பானையை நிரூபிக்கத் தவறியதாலும், வாக்கெடுப்பில் தோல்வியுற்றதாலும்  பாராளுமன்றத்தைக் கலைக்கும்படி டட்லி சேனநாயக ஏப்ரல் 23ஆம் திகதி ஆளுநருக்கு ஆலோசனை வழங்கினார்.

அதே வேளை சிறீலங்கா சுதந்திரக் கட்சி தமக்கு பாராளுமன்றத்தில் ஆதரவு இருப்பதால் அரசாங்கம் அமைப்பதற்கு உரிமை கோரியது. இக் கோரிக்கை தொடர்பாக இடதுசாரிக் கட்சிகளினதும் தமிழரசுக்கட்சியினதும் நிலைப்பாட்டைக் கேட்டறியும் நடைமுறையை ஆளுநர் ஆரம்பித்தார்.

அன்றைய ஆளுநர் சேர் ஒலிவர் குணதிலக்க ஒரு குள்ள நரி. மேலும் அவர் ஐ.தே.கவைச் சேர்ந்தவர். எனவே ஐ.தே.கவை ஏதாவது வழியில் ஆட்சியிலமர்த்த முடியுமா என்று வழி தேடினார். 1960 ஏப்ரல் 27 எதிர்க்கட்சிகளை இராணி மாளிகைக்கு தனித்தனியாக பேச அழைத்தார். செல்வநாயகம் கவர்னரை சந்திக்க செல்லு முன்னர் கொள்ளுபிட்டியிலுள்ள பீலிக்ஸ் இன் வீட்டுக்குச் சென்று சீ.பி.டீ.சில்வா, ஏ,பி.ஜெயசூரிய ஆகியோரிடம் “நான் இப்போது சேர் ஒலிவரிடம் உங்களை ஆதரிக்கப் போவதாகச் சொல்லப் போகிறேன். நீங்கள் பதவிக்கு வந்தால் எம்முடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை முழுமையாக அமுல்படுத்துவீர்களா என்பதை உறுதி செய்வதற்காக வந்தேன்” என்றார். அங்கிருந்த இருவரும் அதற்கு இணக்கம் தெரிவித்தனர். “நீங்கள் உறுதிமொழிப்படி நடப்பீர்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்” என்று செல்வநாயகம் கேட்ட போது அதற்கு சீ.பி.டி.சில்வா “நான் மிகவும் கறாராகப் பேரம் பேசுபவன். ஓர் உடன்படிக்கைக்கு வந்து விட்டால் அதனை பேணுபவன்” என்றார்.

இதன் விளைவாக செல்வநாயகம் சேர் ஒலிவரை சந்தித்தார். “தமிழரசுக் கட்சியின் ஆதரவின்றி எதிர்க்கட்சியினால் அரசாங்கம் அமைக்க முடியாது. சீ.பி.டீ சில்வா தலைமையிலான சுதந்திரக் கட்சி அரசாங்கத்தை குறைந்தது இரண்டு ஆண்டுகளுக்கு ஆதரவளிப்பீர்களா?” என்று பீடிகை போட்டார் ஆளுநர் ஒலிவர். அதற்கு பதிலளித்த செல்வநாயகம் “சுதந்திரக் கட்சியுடன் நாங்கள் ஒரு உடன்பாட்டுக்கு வந்திருக்கிறோம் எனவே இரண்டு வருடத்துக்கென்னே, பாராளுமன்றத்தின் ஆயுட் காலம் முழுவதும் ஆதரிப்போம்” என்றார்.

இந்த பதிலை எதிர்பார்க்காத சேர் ஒலிவர் அந்த சந்திப்பு நிகழ்ந்து சில மணி நேரங்களில் பாராளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலை அறிவித்தார். சுதந்திரக் கட்சியை ஆட்சியில் அமர்த்துவதைவிட இன்னொரு தேர்தலை ஏற்படுத்தி ஐ.தே.க பெரும்பான்மையை பெற சந்தர்ப்பத்தை உருவாக்குவது அவரது நோக்கமாக இருந்தது. ஆனால் சேர் ஒலிவர் தான் கலைத்ததற்குக் கொடுத்த காரணம் தமிழரசுக் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவதாகக் கூறவில்லை. ஆகவே அது ஸ்திரமான அரசாங்கமாக அமையாது என்று பசப்புக் காரணங்களைக் கூறினார். இந்த இடத்தில் ஆளுநர் ஒலிவர் குணதிலக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நினைவுபடுத்திகிறாரா?

பிரதமரின் அதிகார எல்லை!?

டட்லி சேனநாயக பிரதம மந்திரியாகப் பெயர் குறிப்பிடப்பட்டவர் (Prime Minister Designate) மாத்திரமே என்றும் சபையில் நம்பிக்கை வாக்கைப் பெற்ற பின்னரே அவர் பிரதம மந்திரி என்ற சட்டபூர்வ அந்தஸ்தைப் பெறுவார் என்றும் பாராளுமன்றத்தைக் கலைக்கும்படி சிபார்சு செய்யும் அதிகாரம் அதுவரை அவருக்கு இல்லை என்றும் கலாநிதி என்.எம்.பெரேரா சுட்டிக்காட்டியதை ஆளுநர் கவனத்தில் எடுக்கவில்லை. இலங்கைப் பாராளுமன்றம் அக்காலத்தில் பின்பற்றிய பிரித்தானிய பாராளுமன்ற சம்பிரதாயத்துக்கு முரணாகவே ஆளுநர் இவ்விடயத்தில் நடந்தார்.

அரசியலமைப்பு விடயம் பற்றிய தலைசிறந்த நூலாக “Wade and Phillips - Constitutional Law” என்கிற நூல் கருதப்படுகின்றது. பாராளுமன்றத்தில் ஒருபோதும் பெரும்பான்மையைப் பெற்றிருக்காத பிரதமர் பாராளுமன்றத்தைக் கலைக்குமாறு ஆலோசனை வழங்கும் உரிமை உடையவரல்ல என்று 1965 ம் ஆண்டு வெளியாகிய இதன் ஏழாவது பதிப்பில் சொல்லப்பட்டுள்ளது. முந்திய பதிப்புகளில் இக் கருத்து இருக்கவில்லை. இலங்கையில் 1960ம் ஆண்டு இடம் பெற்ற சம்பவத்தை நினைவில் வைத்தே ஏழாவது பதிப்பில் இது திருத்தப்பட்டிருக்க வேண்டும்..

இந்த விடயத்தில் பிரித்தானிய மரபைப் பின்பற்றும் அங்கு நிகழ்ந்த ஒரு வரலாற்றுச் சம்பவத்தையும் முன்னுதாரணமாக கூறமுடியும். பிரித்தானியாவில் 1923 டிசம்பரில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் கன்சர்வேடிங் கட்சி 258இடங்களையும் தொழிற் கட்சி 191 இடங்களையும் லிபரல் கட்சி 151 இடங்களையும் கைப்பற்றின. கன்சர்வேடிங் கட்சியின்தலைவர் பால்ட்வின் (Baldwin) பிரதமராகப் பதவியேற்றார். சிம்மாசனப் பிரசங்க வாக்கெடுப்பில் அவரது அரசாங்கம் தோல்வியடைந்தது. அவர் இராஜினாமா செய்தாரேயொழியப் பாராளுமன்றத்தைக் கலைக்கும்படி சிபார்சு செய்யவில்லை. லிபரல் கட்சியின் ஆதரவுடன் தொழிற் கட்சி ஆட்சி அமைத்தது.

சீ.பீ.டிசில்வா “சாதி”க்குப் பலி

பாராளுமன்றத்தைக் கலைப்பது என்ற முன் முடிவுடனேயே ஆளுநர் சேர் ஒலிவர் குணதிலக மற்றைய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றார். இதற்கு இரண்டு காரணங்களைக் கூறலாம். அவர் ஐக்கிய தேசியக் கட்சிக்காரர் என்பது ஒரு காரணம். சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்கு அப்போது தலைமை வகித்தவர் சீ.பீ.டிசில்வா. அவர் பிரதமராக ஆவதற்கு பலர் ஆதரவுகொடுக்க தயாராக இருந்தார்கள். ஆனால் “சாதியில் குறைந்தவரான” அவர் பிரதமராக ஆவதை உயர் சாதிக்காரரான சேர் ஒலிவர் குணதிலக விரும்பியிருக்கமாட்டார் என்பது மற்றைய காரணம். இந்த காரணம் பரவலாக அப்போது பேசப்பட்டது. ஆராயப்பட்டது, உணரப்பட்டது.

1956 தேர்தலில் பண்டாரநாயக்கவின் வெற்றிக்கு கடுமையாக உழைத்தவர் சீ.பீ.டிசில்வா. 1960 ஜூலை தேர்தலில் சீ.பீ.டிசில்வா தான் பிரதமராகக் கூடிய வாய்ப்புகளை நிராகரித்துவிட்டு சிறிமா பண்டாரநாயக்கவை பிரதமராக ஆக்குவதில் முன்னின்றார். அவரின் அந்த விட்டுக்கொடுப்பால் தான் உலகின் முதலாவது பெண் பிரதமர் இலங்கையில் உருவான வரலாற்று சம்பவம் நிகழ்ந்தது. சீ.பீ.டிசில்வா “சலாகம” என்கிற பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவராக இருந்ததால் அவரை பிரதமாராக்குவதற்கு சுதந்திரக் கட்சிக்குள்ளேயே எதிர்ப்புகள் இருந்ததை அவர் அறிந்திருந்தார்.

சிறிமாவின் ஆட்சியில் ஊடகங்கள் மீதான அடக்குறையை எதிர்த்து சிறிமாவை ஆட்சியில் அமர்த்த பிரதான பாத்திரம் வகித்த சீ.பீ.டி.சில்வா அதிருப்தியுற்று அந்த நடவடிக்கைகளுக்கு எதிராக குரல் கொடுத்தார். அவருக்கு கட்சியில் இருந்த அநீதியின் காரணமாக அவர் அமைச்சுப் பதவி, சபைத் தலைவர் போன்ற பதவிகளையும் கட்சியின் உப தலைவர் பதவியையும், கட்சியையும் விட்டு விலகி ஸ்ரீ லங்கா சுந்திர சோசலிசக் கட்சி என்கிற ஒரு கட்சியையும் ஆர்ம்பித்தார். பின்னர் ஐ.தே.க வில் இணைந்து கொண்டதுடன் 1965இல் அமைக்கப்பட்ட ஐ.தே.க ஆட்சியிலும் சபைத்தலைவராக தெரிவானார்.

சிறிமா ஆட்சி

அடுத்த பாராளுமன்றத் தேர்தல் 1960 ஜூலை 20ந் திகதி நடைபெற்றது. சிறிமாவோ பண்டாரநாயக்கவின் தலைமையில் இத் தேர்தலுக்கு முகங்கொடுத்த சிறீலங்கா சுதந்திரக் கட்சி 75 ஆசனங்களைக் கைப்பற்றியது. ஐக்கிய தேசியக் கட்சிக்கு 30 ஆசனங்களும் தமிழரசுக் கட்சிக்கு 16 ஆசனங்களும் கிடைத்தன. நியமன உறுப்பினர்கள் ஆறு பேரையும் சேர்த்து ஆட்சி அமைப்பதற்கான தனிப் பெரும்பான்மையைச் சிறீலங்கா சுதந்திரக் கட்சி பெற்றது. சிறிமாவோ பண்டாரநாயக பிரதமராகப் பொறுப் பேற்றார். அவர் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடாததால் செனற் சபை உறுப்பினராக நியமனம் பெற்றே அரசாங்கத்துக்குள் கொண்டுவரப்பட்டார். இன்னொரு வகையில் கூறப்போனால் உலகின் முதலாவது பெண் பிரதமர் மக்களால் தெரிவு செய்யப்பட்டு பிரதமரானவர் அல்ல. பிரதமர் பதவி மாத்திரமின்றி தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத்துறை ஆகிய இரண்டு அமைச்சுப் பதவிகளையும் வகித்தார்.

1964 தோல்வி

சிறிமாவின் ஆட்சி ஒன்றரை வருடத்திலேயே இராணுவ சதிப்புரட்சியை எதிர்கொண்டது. அது வெற்றிகரமாக தோற்கடிக்கப்பட்டது. ஆனால் அடுத்த உட் சதியிலிருந்து அவரால் அடுத்த இரண்டு வருடங்களில் மீள முடியவில்லை.

லேக் ஹவுஸ் நிறுவனத்தை அரச உடமையாக்கும் முடிவு தனது ஆட்சிக்கே முடிவைத் தேடித்தரும் என்று சிறிமா அரசாங்கம் எதிர்பார்க்கவில்லை. ஐ.தே.க வுக்கு ஆதரவாகவும் சுதந்திரக் கட்சிக்கு எதிராகவும் தொடர்ந்து இயங்கி வருவதாக கருதியது சிறிமா அரசாங்கம். ஐ.தே.கவுக்கும் லேக்ஹவுசுக்கும் இடையில் இருந்த குடும்ப உறவும் ஒரு காரணமாக அமைந்தது. இந்த தீர்மானத்துக்கு உடனடிக் காரணமாக இருந்தது ஒப்சர்வர் பத்திரிகை வெளியிட்ட ஒரு கேலிச் சித்திரம். சமசமாஜ கட்சி அப்போது சுதந்திரக் கட்சியில் இணைவதற்கான பேச்சுவார்த்தையை நடத்திக் கொண்டிருந்த சந்தர்ப்பம் அது. அது பற்றிய கேலிச்சித்திரத்தில் என்.எம்.பெரேராவால் பிரதமர் சிறிமா  கர்ப்பிணியாக ஆக்கப்பட்டிருப்பதாக அந்தக் கேலிச்சித்திரம் அமைத்திருந்தது. இந்த கார்ட்டூன் பெரும் சர்ச்சைக்குள்ளானது.

1964 நவம்பர் மாதம் 2ஆம் திகதியன்று சபை கூடியபோது, பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க அரசாங்கத்தினது சிம்மாசன உரை ஆளுனரால் வாசிக்கப்பட்டது. அதன் மீதான விவாதம், அதே ஆண்டு டிசம்பர் மாதம் 3ஆம் திகதியன்று நடைபெற்றது. அரசாங்கத்தின் கொள்கைகளை விமர்சித்து பலர் உரையாற்றினார்கள். வாக்கெடுப்பு நடத்தப்பட்ட போது, ஆளும் கட்சியிலிருந்து சீ.பீ.டி சில்வா தலைமையிலான 14 உறுப்பினர்கள் கட்சித் தாவி சிம்மாசனப் பிரசங்கத்தை தோற்கடித்ததால் 1 வாக்கு வித்தியாசத்தால், அரசாங்கம் தோல்வியடைந்தது.

சாதி காரணமாக கட்சிக்குள் ஓரங்கட்டப்பட்டிருந்த சீ.பீ.டீ. சில்வா அன்றைய தினம் அவர் உரையாற்றும் போது. “முதுகில் குத்தி விட்டார்கள்” என்று வேதனையுடன் உரை நிகழ்த்தினார். சுதந்திரக் கட்சியில் இருந்து அவருடன் வெளியேறியவர்களில் பெரும்பாலானோர் அவரது சாதியைச் சேர்ந்த உறவினர்களும் நண்பர்களும். இதன் போது குடும்ப உறவு எவ்வாறு செல்வாக்கு செலுத்தியது என்பது பற்றி திவிய்ன (14.01.2014) பத்திரிகையில் அனுர யசமின் சுவாரசியமான கட்டுரையொன்றை எழுதியிருக்கிறார்.

இந்த வாக்கெடுப்பில் தமிழரசுக் கட்சியும் அரசாங்கத்துக்கு எதிராகத் தான் வாக்களித்தது. நிதியமைச்சராக இருந்த கலாநிதி என்.எம்.பெரேராவும் லங்கா சமசமாஜக் கட்சியின் இன்னொரு பாராளுமன்ற உறுப்பினரான பேர்னாட் சொய்சாவும் வெளிநாடு சென்றிருந்தனர். லங்கா சமசமாஜக் கட்சியிலிருந்து வெளியேறிப் புரட்சிகரப் பிரிவாகச் செயற்பட்ட எட்மன்ட் சமரக்கொடியும் மெரில் பெர்னாண்டோவும் அரசாங்கத்துக்கு எதிராக வாக்களித்திருந்தார்கள். இதன் விளைவாக அந்த அரசாங்கமும் பதவி விலக நேர்ந்தது.

சபாநாயகரின் வாக்கையும் சேர்த்தே வாக்கெடுக்கப்பட்டது. அரசாங்கத்துக்கு எதிராக 74வாக்குகளும் ஆதரவாக 73 வாக்குகளுள் கிடைத்தன. ஒரு வாக்கால் தான் அரசாங்கம் தோற்கடிக்கப்பட்டது. 1965 தேர்தல் நிகழ்ந்தது இதன் காரணமாகத்தான். 

வாக்களிப்பு நிகழ்வதற்கு சற்று முன்னர் வரை ஆட்சியைக் கவிழ்த்தி விட வேண்டாம் என்று கண்ணீர் மல்க பல உறுப்பினர்களை மன்றாடியவர் நுவரெலிய மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டி.வில்லியம் பெர்னாண்டோ. இப்படி செய்துவிட்டால் சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தத்தை நிறைவேற்ற முடியாது போய் விடும் எனவே தோற்கடித்து விடாதீர்கள் என்று கெஞ்சியவர் அவர். இந்திய வம்சாவளியினரை இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டும் என்பதில் தீவிரமாக இயங்கியவர் அவர். மலையகத்தில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை உருவாக்கி; குடியேற்றப்பட்டவர்களின் வாக்கிலேயே பாரளுமன்றம் சென்றவர் அவர்.

அரசாங்கமொன்று பாராளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மை பலம் இல்லாவிட்டால் தாமாக பதவிவிலகுவது, அல்லது பெரும்பான்மையைக் கொண்ட எதிர்த்தரப்பு வாக்கெடுப்பு நடத்தி தோற்கடிப்பது என்கிற பாராளுமன்ற ஜனநாயக மரபு கடந்த காலங்களில் கட்டிக்காக்கப்பட்டிருக்கிறது. பாராளுமன்றம் பல சதிகளையும், சூழ்ச்சிகளையும் சேர்த்துக்கொண்டு தான் தனது அரசியல் பயணத்தை நிகழ்த்தி வந்திருக்கிறது. அரசியல் தலைவர்கள் அந்த மரபை மதித்து வந்திருக்கிறார்கள். இன்றைய நிலைமையோடு அவற்றை ஒப்பீடு செய்வது தவிர்க்க இயலாது இருக்கிறது. 

இணைந்திருங்கள்


Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates